Friday, June 22, 2007

சத்தம் போடாதே - இசை வெளியீட்டு விழா

வழக்கமாக இந்த மாதிரி பைத்தியக்காரத்தனத்தையெல்லாம் நான் செய்வதில்லை. அதாவது போட்டிகளுக்கு SMS அனுப்புவது. "நீங்கள் சிறுநீர் கழிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?... ஆப்ஷன் A, 2 நிமிடங்கள், ஆப்ஷன் B, 2-1/2 நிமிடங்கள், ஆப்ஷன் C, 3.35 நிமிடங்கள். உங்க மொபைல் போனை எடுத்து URINE அப்படின்னு டைப் பண்ணி ஒரு ஸ்பேஸ் விட்டு .............." என்று கூட SMS போட்டிகள் அபத்தமாய் போய்விடுமோ என்னுமளவிற்கு ரேடியோவையும், டி.வியையும் இயக்கினால் கணக்கில்லாத, வணிக உள்நோக்கமுள்ள போட்டிகள். செல்போன் வாங்கின புதிதில் 10 பைசாதானே என்று தெரியாமல் ஒரு போட்டிக்கு அனுப்பினதில் சுளையாக ஐந்து ரூபாய் செலவானதிலிருந்து ஜாக்கிரதையாக இருக்கிறேன். போட்டி நடத்துநர்களுக்கும் நெட்வொர்க் ஆப்ரேட்டர்களுக்கும் இருக்கிற வணிக ஒப்பந்தம் குறித்து பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.

என்றாலும் சமீபத்திய ஆனந்தவிகடனில் குறுஞ்செய்தி அனுப்பும் முதல் 500 நபர்களுக்கு இயக்குநர் வசந்தின் வெளிவரப்போகிற படமான "சத்தம் போடாதே" திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றிருந்தது. அது மட்டும் காரணமில்லை. விழாவில் பங்கேற்கும் வாசகர்களுக்கு சம்பந்தப்பட்ட படத்தின் பாடல்களின் குறுந்தகடு அன்பளிப்பாக அளிக்கப்படும் என்றுமிருந்தது. ஓசி என்றால் ஓட்டை விழுந்த ஆணுறையைக் கூட வாங்கிக் கொள்கிற பாராம்பரியம் மிக்க தமிழ இனம்தானே நானும்! இலவசம் என்றால் ஆட்சிப் பொறுப்பையே ஒப்படைக்கிற பெரும்பான்மையான ஆட்டுமந்தைகள் மத்தியில் நான் எம்மாத்திரம். குறுஞ்செய்தி அனுப்பியதில் அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம். ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டிற்கு இத்தனை பேர் மெனக்கெட்டு வந்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. sms அனுப்பச் சொல்லியது கூட கூட்டம் சேர்க்க ஒரு வழி என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஆ.வி. வாசகர்கள் தவிர மற்றவர்கள் சுமார் 1500 பேர் வந்திருந்தனர். பக்கத்தில் அமர்ந்திருந்த ஆஜானபாகுவரின் பிரம்மாண்ட கையை தாண்டி என்னுடைய கையை இருக்கையின் கைப்பகுதியில் வைத்துக் கொள்வதற்கு நான் சிரமப்பட வேண்டியதாயிருந்தது.

ஆ.வி. வாசகர்களுக்கு மாத்திரம் முதலில் skc வழங்கினர். இந்திய வழக்கப்படி விழா ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. படவா கோபி நிகழ்ச்சியை திறமையாக தொகுத்தளித்தார். பார்வையாளர்களிடம் எப்படி உற்சாகமாக intereact செய்வது என்பது அவருக்கு தெளிவாக தெரிந்திருந்தது. அசட்டு ஜோக்குகள் சிலவற்றின் உதவியுடன் கூட்டத்தை அவ்வப்போது ஆர்வரிக்க வைத்தார். படத்தின் பாடல்கள் மேடையில் ஒவ்வொன்றாக இசைக்கப்பட்டன. பாடகர் குரல் தவிர மற்றவை sound track-ல் இருந்து இசைக்கப்பட்டதா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. live orchestra என்றால் இயல்பாக அதன் வித்தியாசத்தை உணர முடியும். பெரும்பாலான திருமண ரிசப்ஷன்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் இவ்வாறுதான் ஏமாற்று வேலை நடைபெறுகிறது.

யுவுன் மேடைக்கு வந்த போது அப்படி ஒரு வரவேற்பு. இளைஞர்கள் மத்தியில் யுவனுக்கு மிகுந்த வரவேற்பு இருந்ததை உணரமுடிந்தது. பாலச்சந்தர் வெளியிட ராமநாரயணன் முதல் தகட்டை பெற்றுக் கொண்டார்.

யுவன்:

வழக்கமாக நான் பாடல்களுக்கு இசையமைப்பு பணி முடிந்தவுடன் அந்த பாடல்களை முற்றிலுமாக மறந்த அடுத்த வேலையை கவனிக்க போய்விடுவேன். ஆனால் இந்த படத்தின் பாடல்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் மனதிற்கு மிக நெருக்கமாக இசையமைப்பு செய்ய முடிந்தது.

ராமநாராயணன்:

வசந்த் படங்கள் பொதுவாக நன்றாக இருக்கும். இந்தப்படத்தில் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் சிறப்பாக உள்ளன. வாலியையும் வைரமுத்துவையும் கலந்தது போல் உள்ளது அவரது எழுத்து.

பாலச்சந்தர்:

வசந்த் என்றாலே MP, அதாவது Master Pefection. அவர் படங்களுக்கு நான் விசிறி. எனக்கு வயதாகிவிட்டது. யுவனைப் போன்ற இளைஞர்களிடம் பணிபுரியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. யுவன் அவரது அப்பாவையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

()

த்ரிஷா, சிநேகா, சந்தியா போன்ற நடிகைகள் மேடையேறும் போது விசிலும் சத்தமுமாக கூட்டம் ஆர்ப்பரித்ததை கவனிக்கும் போது தமிழர்களின் ரசனை போதாமை குறித்து சிரிப்பாக வந்தது. தொகுத்தளித்த படவா கோபி "நிகழ்ச்சி முடியும் போது சூப்பரான ஒரு அயிட்டம் இருக்கு. அதனால காத்திருந்து பாருங்க" என்று தொகுப்பாளர்களுக்கேயுரிய சாமாத்தியத்துடன் சொல்லிக் கொண்டிருந்ததை மீறி மணியாகிவிட்டதால் புறப்பட்டு விட்டேன். ("உங்களுக்காக இன்னும் ரெண்டு நடிகைகங்களை வரவெச்சிருக்கோம். நல்லா கைத்தட்டுங்க" என்று ஏற்பாடு செய்கிறவர் மாதிரியே பேசிக் கொண்டிருந்ததை தவிர்த்திருக்கலாம்)

மறக்காமல் ஆ.வி கொடுத்த ஓ.சி சி.டியை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.

()

வீட்டிற்கு சென்றதும் பாடல்களை ஒலிக்க விட்டேன். யுவனுக்கு தற்போதைய இசை சம்பந்தமாக தொழில்நுட்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொள்ள தெரிந்திருக்கிறது. ரகுமான் போட்டுக் கொடுத்த பாதையிது. இப்போதைய இசையமைப்பாளர்களில் பலர் notation எழுதி orchestra மூலமாக compose செய்வதை விட ரெடிமேடாக கிடைக்கும் சில லூப்களை வைத்து சமாளிக்கின்றனர். என்னதான் தொழில்நுட்பம் பயன்படுத்த எளிமையாகிக் கொண்டிருந்தாலும் சுயதிறமை இல்லாமல் நீடித்த புகழும் பாராட்டும் கிடைக்காது. நான் கேட்டவரையில் பாடல்களை compose செய்வதில் இளையராஜாவைப் போல் ஒழுங்குணர்ச்சியுடனும் சீரான தாளலயத்துடனும் செய்பவர்கள் அரிதானவர்கள். ராஜாவின் பாடல்களை கேட்கும் போது பாதுகாப்பான மடியில் படுத்திருக்கிற உணர்வை அடைய முடிகிறது. நான் மனஉளைச்சலாக உணரும் போதெல்லாம் ராஜாவின் மெலடி பாடல்களின் மூலம் என்னை மீட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போதைய பாடல்களில் அதன் ஆன்மா இழந்து கதறுவதை வருத்தத்துடன் கவனிக்க முடிகிறது.

இந்தப்படத்தின் 5 பாடல்களில் 4 பாடல்கள் சிறப்பாகவே இருக்கின்றன. "அம்முகுட்டி செல்லம்" என்று குழந்தையின் இயல்புகளை கூறுகிற பாடலின் வரிகள் சிறப்பாக உள்ளன. "எப்போதும் ஓயாத அழுகை / ஏனிந்த முட்டிக்கால் தொழுகை / எப்போதும் இவன் மீது பால்வாசனை / என்ன மொழி யோசிக்கும் இவன் யோசனை... போன்ற வரிகளில் நா.முத்துக்குமாரின் கவித்துவம் தெரிகிறது. ஆனால் இந்தப்பாடலை கொஞ்சம் fast number-ஆக இல்லாமல் மெலடியாக போட்டிருக்கலாம்.

"ஓ.. இந்த காதல் என்ற பூதம்" என்கிற பாடலில் என்னுடைய அபிமான பாடகர்களில் ஒருவரான அத்னான் சாமி பாடியிருக்கிறார். ஆனால் கூடவே யுவனின் குரலும் இணைகோடாக ஒலிப்பது இடையூறாக உள்ளது. கேட்பதற்கு நன்றாக உள்ளது இந்தப்பாட்டு.

"காமம் பெரியதா, காதல் பெரியதா" என்ற பாடலை சுதா ரகுநாதன் பாடியிருக்கிறார். "இவன்" படத்தில் சுதாவை, ராஜா கர்நாடக சங்கீத அடிப்படையில் அமைந்த பாடலுக்காகவே பயன்படுத்தியிருந்தார். அப்படியில்லாமல் ரெகுலரான பாடல்களுக்கு உபயோகித்தால்தான் சுதாவின் மற்றுமொறு பக்க திறமையை உணரமுடியும் என்று "மதன்" விமர்சித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் fast number-ஆன இந்தப்பாடலில் சுதாவின் குரல் மிக திறமையாக இயைந்தோடுகிறது. நிச்சயம் ஹிட்டாகக்கூடிய பாடல் இது என்று நம்புகிறேன்.

()

அலுவலக தளையில் இருந்து விடுபட்டு வித்தியாசமான ஒரு சூழலையும் பரிசையும் அளித்த ஆனந்த விகடனுக்கு நன்றி.