Monday, December 31, 2018

ரஜினி: ‘சந்திரமுகி’ முதல் ‘பேட்ட’ வரை (இந்தியா டுடே கட்டுரை)

திரைப்பட நடிகர் என்றால் சிவந்த நிறமும் வசீகரமான முகத்தோற்றமும் இருக்க வேண்டும் என்றிருந்த காலத்தில் அவை சார்ந்த தடைகளை உடைத்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின்  சினிமா பயணத்தில் ஆச்சரியமான பல மேடுகளும் அதிர்ச்சிகரமான சில பள்ளங்களும் உண்டு. இந்த நோக்கில் ‘சந்திரமுகி’ திரைப்படம் முதல் வெளிவரவிருக்கிற ‘பேட்ட’ வரையான ரஜினி சினிமாக்களின் சுருக்கமான வரலாற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ரஜினியின் சினிமா பயணத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 2005-ல் வெளிவந்த ‘சந்திரமுகி’யை சொல்லலாம். அந்த வருடத்திய நிலைமையின் படி ஒரு திரையரங்கில் அதிக நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்த தென்னிந்திய திரைப்படமாக ‘சந்திரமுகி’ இருந்தது. சென்னை, சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் தொடர்ந்து ஓடி, தியாகராஜ பாகவதர் நடித்த ‘ஹரிதாஸின்’ முந்தைய சாதனையை முறியடித்தது.

இந்த வெற்றி ரஜினியின் தரப்பிற்கு வழக்கத்தை விடவும் கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கக்கூடும். ஏனெனில், பலத்த எதிர்பார்ப்பிற்குப் பிறகு வெளியான முந்தைய திரைப்படமான ‘பாபா’ (2002) மோசமான தோல்வியைச் சந்தித்திருந்தது. ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் சிம்மாசனத்தில் ரஜினி அழுத்தமாக உட்கார்ந்த பிறகு அவருடைய அகராதியில் தோல்வி என்பதே பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. ஹாலிவுட் திரைப்படமான ‘பிளட் ஸ்டோன் (1988), ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்” (1991), சொந்த தயாரிப்பான வள்ளி (1993) போன்று அரிதான சில திரைப்படங்கள் முன்பு தோல்வியைச் சந்தித்திருந்தாலும் உச்ச நட்சத்திரமாக ரஜினியின் பிம்பம் உறுதிப்பட்ட பிறகு அவருடைய வணிகச் சந்தை பெரும்பாலும் ஏறுமுகமாகவே இருந்தது. ஒரு ரஜினி திரைப்படத்தின் வசூல் சாதனையை அவரது அடுத்த திரைப்படமே முறியடிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மிகப் பெரிய கரும்புள்ளி என்று ‘பாபா’வைச் சொல்லலாம்.

வழக்கமான வணிக அம்சங்கள் பெரும்பாலும் இல்லாதது, அந்த திரைப்படம் விவரித்திருந்த ‘ஆன்மீகம்’, சுவாரசியமற்ற திரைக்கதை போன்ற காரணங்களால் ‘பாபா’ திரைப்படத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை. மட்டுமல்லாமல் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றிய உறுதியான சமிக்ஞை இந்த திரைப்படத்தில் இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தது மீண்டும் நிகழாததால் மனதளவில் சோர்ந்து போனார்கள். இந்த திரைப்படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி ஈடுகட்டும்படியான சூழல் உருவாயிற்று.

தனது வணிக பிம்பத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டையை சரிக்கட்டுவதற்காக அடுத்த காலடியை கவனமாக எடுத்து வைத்தார் ரஜினி. 1993-ல் வெளியாகிய ‘மணிச்சித்ரதாழு’ என்கிற திரைப்படத்தையொட்டி ‘ஆப்தமித்ரா’ என்கிற கன்னட திரைப்படத்தை அப்போதுதான் இயக்கி முடித்திருந்தார் இயக்குநர் வாசு. அதை தமிழில் கொண்டு வருவதற்காக திட்டமிட்டார் ரஜினி. ஒவ்வொரு வணிக அம்சமும் இதில் மிக கவனமாக சேர்க்கப்பட்டன.

நகைச்சுவை நடிகர் வடிவேலு அப்போது உச்சத்தில் இருந்தார். ‘வடிவேலுவின் கால்ஷீட்டை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ரஜினி சொன்ன தகவல், ‘சந்திரமுகி’ வெற்றி விழா மேடையில் தெரிவிக்கப்பட்டிருந்ததில் இருந்து, இந்த திரைப்படத்தின் வெற்றியில் ரஜினி மிக ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி’ என்னும் உளக்குறைபாட்டை வைத்து உருவாக்கப்பட்ட மலையாள சினிமாவின் ஆன்மாவை கொன்று புதைத்தாலும் ‘சந்திரமுகி’யில் இருந்த வணிக அம்சங்கள், ஜோதிகாவின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அருமையான பாடல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. ‘வேட்டையன்’ என்கிற எதிர்மறையான பாத்திரத்தில் பழைய ‘ரஜினி’யை பார்க்க முடிந்தது.

இதற்குப் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ (2007)  திரைப்படம், ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது. இதன் பின்னர் மீண்டும் இன்னொரு ரீமேக் முயற்சியில் இறங்கினார் ரஜினி. ‘கதபறயும் போள்’ என்கிற மலையாள திரைப்படத்தை தமிழில் கொண்டு வரத் திட்டமிட்டார். ‘சந்திரமுகி’ போலவே இதுவும் வெற்றியடையக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். மலையாளத்தில் சீனிவாசன் ஏற்றிருந்த பாத்திரத்தில் பசுபதி நடித்தார். புகழ்பெற்ற நடிகராக மம்முட்டி ஏற்றிருந்த பாத்திரத்தை தமிழில் ரஜினி ஏற்றார். இந்தத் திரைப்படம், அடிப்படையில் ஒரு சராசரி நபருக்கும் அவரது இளமைப்பருவ நண்பராக இருந்து பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகராக ஆனவருக்கும் இடையிலான உறவின் தத்தளிப்பைச் சித்தரிக்கும் திரைப்படம். சராசரி நபரின் கோணத்திலேயேதான் பெரும்பாலான திரைப்படமும் நகரும். மலையாளத்தில் மம்முட்டி சில காட்சிகளில் மட்டுமே வருவார். ஆனால் இது தமிழில் உருவாக்கப்படும் போது ரஜினிக்காக பல காட்சிகளும் வணிக அம்சங்களும் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக இன்னொரு மலையாள சினிமாவை கொத்து பரோட்டா போட்ட புகழ் இயக்குநர் வாசுவிற்கு கிடைத்தது.

இந்தத் திரைப்படமும் தோல்வியடையவே மீண்டும் ஷங்கரிடம் அடைக்கலம் புகுந்தார் ரஜினி. துவக்கத்தில் கமலுக்காக உருவாக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படம் சாத்தியமாகாமல் போகவே ரஜினிக்காக மாற்றங்கள் செய்யப்பட்டன. பொதுவாக ஒரு வெகுசன திரைப்படத்தை உயர்தரத்தில் உருவாக்க விரும்பும் ஷங்கர், அதே சமயத்தில் சராசரி ரசிகனுக்குரிய பல அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். ஹாலிவுட்டிற்கு பழைய சமாச்சாரம் என்றாலும், ஒரு ரோபோட்டிற்கும் பெண்ணிற்கும் இடையிலான காதல் என்பது தமிழ் சினிமாவிற்குப் புதியது என்பதாலும் ஷங்கரின் திறமையான இயக்கம் காரணமாக ‘எந்திரன்’ வணிகரீதியாக வெற்றி பெற்றது.

அடுத்ததாக மீண்டும் இன்னொரு தோல்விப்படம். ரஜினியின் மகள் செளந்தர்யாவின் இயக்கத்தில் ‘சுல்தானாக’ துவங்கி பிறகு கைவிடப்பட்டு ‘ராணா’வாக பரிணமித்து ரஜினியின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அதுவும் கைவிடப்பட்டு பிறகு ‘கோச்சடையனாக’ உருவானது. ஹாலிவுட்டைப் போன்று அனிமேஷன் திரைப்படங்களுக்கென்று பிரத்யேகமான ரசிகர்களோ, வணிகச்சந்தையோ இந்தியாவில் இல்லை. சரியாக திட்டமிடப்பட்டிருந்தால் ‘கோச்சடையான்’ இந்தப் போக்கின் துவக்கப் புள்ளியாக அமைந்து ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஆகியிருக்கக்கூடும். வெற்றிப்பட இயக்குநரான ‘கே.எஸ்.ரவிக்குமார்” பிறகு வந்து இந்தத் திட்டத்தில் இணைந்தாலும், பல்வேறு குழப்பங்களால் ‘கோச்சடையான்’ தோல்விப்படமாக அமைந்தது. ரஜினியின் குடும்பம் நிதி சார்ந்த சில வழக்குகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது.

தனது பிம்பத்தின் சரிவை சரிக்கட்டும் நெருக்கடியில் இருந்த ரஜினி, தனது அடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தனது ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணைந்தார். விளைவாக ‘லிங்கா’ உருவானது.  இந்தியாவிலுள்ள நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்கிற தம் விருப்பத்தை காவிரி நீர் விவகாரம் பற்றியெரிந்த ஒரு கணத்தில் தெரிவித்த ரஜினி, அந்தத் திட்டத்திற்காக கணிசமான நிதியை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ‘லிங்கா’ திரைப்படமும் இது தொடர்பாக அமைந்தது. முல்லை பெரியார் அணை உருவானதற்கு பிரதான காரணமாக இருந்த ஜான் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேயப் பொறியாளர் தொடர்பான வாழ்க்கைச் சம்பவங்களின் சாயல் இதன் திரைக்கதையில் இணைக்கப்பட்டது.

ஒரு வெகுசன திரைப்படத்திற்குரிய அம்சங்கள் ‘லிங்கா’வில் இருந்தாலும் தேய்வழக்கு பாணியில் அமைந்த காரணத்தினாலேயே வணிகரீதியான வெற்றியை அடையவில்லை. இந்தத் தோல்விக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. உலக சினிமா உள்ளிட்ட மாற்று முயற்சிகளை பார்த்து வளர்ந்திருந்த இளைய தலைமுறை அப்போது பெருகி வந்திருந்தது. வெகுசன திரைப்படமென்றாலும் கூட அது வித்தியாசமாகவும் தரமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனோபாவம் அவர்களிடம் அதிகரித்தது. இதனாலேயே தேய்வழக்கு பாணியில் அமைந்த சினிமாக்களையும் அதன் காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து தீர்க்கும் பழக்கமும் பெருகியது. மேலும் திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களின் பெரும்பான்மை சதவீதமாக இளைஞர்களாக இருப்பதால் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாகவும் அவர்களே இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் வணிகரீதியான தோல்வி காரணமாக விநியோகஸ்தர்களின் கசப்புகளையும் ரஜினி தரப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.

ரஜினி தன் வயதை விட மிகக்குறைந்த நாயகிகளுடன் டூயட் ஆடுவதை அவரது ரசிகர்களில் சில சதவீதத்தினரே கூட விரும்பவில்லை. அமிதாப்பச்சனைப் பின்பற்றி ரஜினியும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் கதைகளிலும் நடிக்க வேண்டும் என்கிற விருப்பமும் எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது. இதுவும் ‘லிங்கா’வின் தோல்விக்கு ஒருவகை காரணமாக இருக்கக்கூடும்.


இந்தச் சூழலை ரஜினியும் உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. அவரது அடுத்த திரைப்படமான ‘கபாலி’யில், வழக்கமான போக்கை கைவிட்டு வயதான டானாக நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல், பல வெற்றிப்பட இயக்குநர்கள் அவரது கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த போது ‘இரஞ்சித்’ என்கிற இளம் இயக்குநரிடம் ரஜினி தன்னை ஒப்படைத்துக் கொண்டது புதிய மாற்றங்களை தேடி அவர் நகர்கிறார் என்பதை உணர வைத்தது. இதில் முக்கியமானதொரு மாற்றமும் உண்டு. ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூச வேண்டும்’ என்று நிலவுடமைச் சமுதாய பெருமிதங்களைப் பேசும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ரஜினி, ‘தலித்’ அரசியலை பிரதானமாக முன்வைக்கும் படத்தில் நடித்தது, அவரின் திரை பிம்பத்தில் உருவான முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான அம்சங்களும் இருந்தன. இந்தச் சவாலை ரஜினி வெற்றிகரமாக தாண்டி வந்தார்.

‘கபாலி’யின் வெற்றியால் உற்சாகமடைந்த ரஜினி அடுத்த திரைப்பட வாய்ப்பையும் இரஞ்சித்திற்கே அளித்தார். ஒரு பெருநகரின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக ஆக்கி நகருக்கு வெளியே அப்புறப்படுத்தும் ‘தூய்மை அரசியலை’ காலா மையப்படுத்தியது. ஆனால் இது ரஜினியின் திரைப்படமாகவும் அல்லாமல் இரஞ்சித்தின் அரசியல் சினிமாவாகவும் அல்லாமல் இருந்ததால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்கிற குழப்பம் ரசிகர்களிடையே இருந்ததால் அதிக வெற்றியை அடையவில்லை.

தனது சமீபத்திய திரைப்படத்தை, கார்த்திக் சுப்பராஜ் என்கிற இளம் இயக்குநரிடம் ஒப்படைத்ததில் இருந்து இளம் இயக்குநர்களின் மூளைகளையே ரஜினி அதிகம் நம்ப விரும்புகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தானொரு தீவிரமான ரஜினி ரசிகன் என்பதை ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்பராஜ் நெடுங்காலமாகவே கூறி வருகிறார். ஒரு நடிகரின் தீவிரமான ரசிகருக்கு சம்பந்தப்பட்ட நடிகரையே இயக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது சுவாரசியமான திருப்பம். ஒரு சராசரி ரஜினி ரசிகன் எதிர்பார்க்கும் விஷயங்களோடு, இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் போக்குகளின் கலவையாக ‘பேட்ட’ இருக்கக்கூடும்.

ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான பார்வையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் 2.0. நீண்ட கால தயாரிப்பில் உள்ள இந்த திரைப்படம் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக வெளியாவதில் தாமதம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் வணிகம் பல கோடிகளைத் தாண்டி சாதனை புரிவதற்கும் அதன் சந்தை வெளிநாடுகளில் வளர்ந்து விரிந்து கொண்டே போவதற்கும் ரஜினியின் திரைப்படங்களே பிரதான காரணமாக இருக்கின்றன என்பதை சில புள்ளிவிவரங்களின் மூலம் அறிய முடிகிறது.

**

ரஜினியின் அரசியல் நுழைவின் வரலாறு என்பது ஓர் அவல நகைச்சுவை நாடகத்திற்கான சிறந்த உதாரணம். ‘வரும்.. ஆனா வராது..’ என்கிற வசனத்திற்கேற்ப தன் அரசியல் வருகையை இத்தனை வருடங்களுக்கு இழுத்திருக்கக்கூடிய ஒரே நபராக ரஜினி மட்டுமே இருப்பார் என்று தோன்றுகிறது. அண்ணாமலை திரைப்படத்தில் இருந்த சில வசனங்கள், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவை கடுப்பேற்றதியதில் துவங்கிய உரசல், பா.ம.க.தலைவர் ராமதாஸூடன் தொடர்ந்து பற்றியெரியத் துவங்கியது. மாறி மாறி ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதான அதிருப்தியும் மக்களிடம் பெருகியது. இதன் காரணமாக ரஜினி அரசியலில் நுழைந்து ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுசமூகத்தில் ஏற்பட்ட நம்பிக்கைத் தீயில், தனது நீண்ட கால மெத்தனத்தின் மூலம் ரஜினியே நீர் ஊற்றி அணைத்தார். இன்னமும் கூட இந்த அபத்த நாடகத்தை அவர் தொடர்ந்து கொண்டேயிருப்பது துரதிர்ஷ்டமானது.  தன் அரசியல் பிரவேசத்தின் மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதையும் தனது திரைப்படங்களில் காட்சிகளாகவும் வசனங்களாகவும் பயன்படுத்தி அதையும் ஒரு முதலீட்டாக்கிக் கொண்ட சாமர்த்தியம் ரஜினிக்கு இருந்தது.

சில பல விமர்சனங்கள் இருந்தாலும் ரஜினி ஒரு கவர்ச்சிகரமான ஆளுமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு சராசரி நபருக்கான முகத்தோற்றத்தைக் கொண்டவர், சினிமாத்துறையின் உச்சத்தை அடைந்து அதில் நீண்ட காலம் தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கான வாழும் உதாரணமாக இருப்பவர் ரஜினி. இன்னமும் கூட ரஜினி என்கிற பிம்பத்தின் மீதாக கவர்ச்சி பெரிதும் மங்கவில்லை. அவரது ஒவ்வொரு புதிய திரைப்படத்திற்கும் மீதும் எழும் எதிர்பார்ப்பு இன்னமும் குறைந்து விடவில்லை. காலத்தின் போக்கிற்கு ஏற்ப சினிமாவில் தன்னை தகவமைத்துக் கொள்வதில் ரஜினியின் தொலைநோக்கு திறமையை பல சமயங்களில் பிரமிக்க முடிகிறது.

மாறி வரும் போக்குகளினாலும் ரஜினி என்கிற குதிரையின் வேகம் சற்று சுணங்கினாலும் அது முற்றிலுமாக குறைந்து விடவில்லை. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை ஆமை வேகம் கூட இல்லை. நிஜத்திற்கும் நிழலிற்கும் வேறுபாடு அறியாத ரசிகர்கள் இருந்த காலக்கட்டங்கள் முடிந்து விட்டன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சினிமா, அரசியல் என்கிற இரட்டைச் சவாரியை கை விட்டு, தன்னுடைய பலமான சினிமாவில், பொருத்தமான பாத்திரங்களை ஏற்று நடித்தால் எஞ்சியிருக்கும் ரஜினியின் பிம்பம் மேலும் சேதமுறாமல் தப்பிக்கும். 

(இந்தியா டுடே - தமிழ் - ரஜினிகாந்த் சிறப்பிதழில் வெளியான கட்டுரையின் எடிட் செய்யப்படாத வடிவம்) - நன்றி: இந்தியா டுடே


Image Courtesy: original uploader

suresh kannan

Friday, December 14, 2018

Shoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்


சென்னை சர்வதேச திரைவிழாவில் துவக்க நாளன்று பார்த்த ஜப்பானிய திரைப்படம் இது.

குடும்பம் என்கிற அமைப்பிற்குள் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது ரத்த சம்பந்தமில்லாத மனிதர்கள் இணைந்து வாழ்வதால் ஓர் அழகான குடும்பம் உருவாகிறதா என்கிற ஆதாரமான விஷயத்தை, சமகால ஜப்பானிய விளிம்புநிலை மனிதர்களின் பின்னணியில் இத்திரைப்படம் உரையாடுகிறது.

கேனஸ் திரைவிழாவில் அதன் மிக உயரிய விருதான ‘தங்கப் பனையோலை’ விருதைப் பெற்றிருக்கிறது. சற்று மெதுவாக நகர்வதால் சிலர் சலிப்படைந்திருக்கலாம். ஆனால் ஒரு நிலையில் படம் தன்னியல்பாக நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. தவறவிடக்கூடாத திரைப்படம்.

**

டோக்கியோ நகரம். நடுத்தர வயதுள்ள அந்த ஆசாமியும் ஒரு சிறுவனும் விற்பனை அங்காடியில் பொருட்களை வாங்குவது போல் பாவனை செய்து கொண்டிருக்கிறார்கள். காவலாளிக்குத் தெரியாத படி அந்த ஆசாமி மறைத்துக் கொள்ள பின்புறமுள்ள பையில் சில பொருட்களை திணித்துக் கொள்கிறான் சிறுவன். இருவரும் உல்லாசமாக சிரித்தபடி வெளியே வருகிறார்கள். சிறுவனுக்கு பிரியமாக தின்பண்டம் வாங்கித் தருகிறார் அவர்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் அழுது களைத்தபடி அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியைக் காண்கிறார்கள். குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கும் அவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவளுடைய கையில் காயங்கள். அவளையும் இணைத்துக் கொண்டு புறாக்கூண்டு போன்ற தங்களின் குறுகிய வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

திருடி வந்த பொருட்களை குடும்பமே ரசித்து உண்கிறது. “யாரு..இந்தப் பொண்ணு.. ஏன் கூட்டி வந்தே.. நமக்கு ஏதாவது பிரச்சினை வந்துடப்போகுது” என்று எவரோ எச்சரித்தாலும் பிறகு அந்தச் சிறுமியும் மெல்ல அந்தக் குடும்பத்துடன் ஒன்றிப் போகிறாள்; அதன் செல்ல உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்படுகிறாள்.

பென்ஷன் வாங்கும் பாட்டி, சலவையகத்தில் பணிபுரியும் பெண், சிறுவனுடன் இணைந்து பொருட்களை திருடும் நேரம் போக கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஆசாமி, பாலியல் தொழிலில் ஈடுபடும் ஓர் இளம்பெண் ஆகியோரோடு புதிய உறுப்பினரான இளம் சிறுமியும் சேர்ந்தது அந்தக் குடும்பம் என்பது பிறகு பயணிக்கும் கவித்துவமான காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. வறுமை ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சிக்கும் பரஸ்பர மதிப்பிற்கும் குறைவில்லாத குடும்பம். சில செல்லச் சிணுங்கல்கள், விரோதங்கள் துவக்கத்தில் இருந்தாலும் சிறுமியை தன் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறான் சிறுவன்.

ஆனால் அது ரத்த உறவுள்ள குடும்பம் அல்ல, ஒவ்வொருவருமே வெவ்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்பட்டு தற்செயலாக ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பவர்கள் என்பது மெல்லத் தெரிய வருகிறது.

மகிழ்ச்சிகரமான தருணங்களாகவே இருந்தாலும் அவற்றிற்கும் ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி உண்டுதானே? கடையில் திருடும் சிறுவன் காவல்துறையினரிடம் பிடிபட, அவர்கள் சிறுமியை ‘கடத்தி’ (?!) வைத்திருக்கும் குற்றத்தை காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்கள். கிழவி இறந்து போயிருந்தாலும் அவளுடைய பிணத்தை வீட்டிலேயே புதைத்து வைத்து பென்ஷன் பணத்தை தொடர்ந்து வாங்கும் குற்றம் வேறு பட்டியலில் இணைகிறது. குடும்பத்தின் தலைவி அனைத்தையும் ஒப்புக் கொண்டு சிறைக்குப் போகிறாள். கைவிடப்பட்ட சிறார்களின் முகாமில் சிறுவன் சேர்க்கப்பட நடுத்தரவயது ஆசாமி தனியனாகிறான். அன்பும் அரவணைப்பும் நிலவிய அந்தக் குடும்பம் சிதறிப் போகிறது.

**

திருமணம் எனும் நிறுவனத்தின் வழியாக உருவாகி வரும் அமைப்பைத்தான் குடும்பம் என்று சட்டமும் சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட சில தனிநபர்கள், பரஸ்பர அன்பினால் தற்செயலாக ஒன்றிணைவதை ‘குடும்பமாக’ சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த ஆதாரமான முரணே படத்தின் மையம் என்பதாக உணர்கிறேன்.

நடுத்தரவயது ஆசாமி, சிறுவன் ஒருமுறையாவது தன்னை ‘தந்தை’ என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக தொடர்ந்து முயல்கிறான். ஆனால் உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அதைச் சொல்ல விடாதவாறு ஏதாவொன்று சிறுவனைத் தடுக்கிறது. நிரந்தரமான பிரிவு ஏற்படும் இறுதிக்காட்சியில், பேருந்தின் பின்னாலேயே ஓடிவரும் அவரைக் கண்டு கலங்கி ‘அப்பா’ என்று அவன் மனதுக்குள் முனகிக் கொள்வதில்தான் அது நிறைவேறுகிறது. என்றாலும் அவர் அதை அறிந்தாரா என்று தெரியவில்லை.

இதைப் போலவே புதிய உறுப்பினரான சிறுமியை தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறாள் வீட்டின் மூத்த பெண். குடும்ப வன்முறைக்குள் சிக்கி மனக்காயமும் உடல் காயங்களும் ஏற்பட்டிருக்கும் அந்தச் சிறுமியை அந்தக் குடும்பமே ஒன்றிணைந்து தேற்றி தூக்கி நிறுத்துகிறது. ஆனால் சட்டத்தின் பார்வையில் இவர்கள் ‘கடத்தல்காரர்களாக’ தென்படுகிறார்கள்.

படத்திற்குள் சில அபாரமான தருணங்கள் உள்ளன. முன்னாள் கணவனின் மூலம் பெண்ணின் கையில் ஏற்பட்ட காயத்தையும், தந்தையால் சிறுமியின் கையில் ஏற்பட்ட காயமும் ஒரே பிரேமில் காட்டப்படும் போது அவை பெண்ணினம் எதிர்கொண்டிருக்கும் பல்லாண்டு கால அவலத்தின் சாட்சியமாக நிற்கின்றன.

இது விளிம்புநிலை மனிதர்களின் பின்னணியுடன் கூடிய கதை என்றாலும் எந்தவொரு இடத்திலும் மிகையான அழுகையாய், ஓலமாய் ஆகிவிடவில்லை என்பதே பெரும் சமானத்தை தருகிறது. அது போன்ற விகாரங்கள் எங்கும் இல்லை. அவர்களின் கொண்டாட்டங்களும் பரஸ்பர அன்பு வெளிப்படும் காட்சிகளும் மிகையின்றி கலையமைதியுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கடற்கரையில் அவர்கள் பொழுதைக் கழிக்கும் காட்சியும், வீட்டின் அந்தரத்திற்கு மேலே எங்கோ பொங்கிச் சிதறும் வாணவேடிக்கையின் வெளிச்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் கொண்டாடும் காட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

வீட்டின் மூத்த பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. பணியாளர்களில் இருவரில் ஒருவரை மட்டுமே பணியில் வைத்திருக்க முடியும் என்கிற அசந்தர்ப்பமான சூழல். ‘தனக்கு ஏன் இந்தப் பணி அவசியம்’ என்பதை இருவரும் விவாதிக்கிறார்கள். “நீ அந்தச் சிறுமியை வீட்டில் வைத்திருப்பதை வெளியே சொல்லி விடுவேன்” என்கிற வெடிகுண்டை வீசுகிறாள் இன்னொருத்தி. அந்தச் சம்பளம் கிடைக்காவிட்டால் நிதிச்சுமை அதிகரிக்கும்தான். இருந்தாலும் சிறுமியை பாதுகாப்பதற்காக தன் பணியை தியாகம் செய்கிறாள் அவள்.

ஆசிய நாடுகள் என்றாலே பிச்சைக்காரர்களும் பாமரர்களும் நிறைந்திருப்பார்கள் என்கிற மேலைய நாட்டினரின் பொதுப்புத்தியைப் போலவே, உழைப்பிற்குப் பெயர் போன ஜப்பான் போன்ற முன்னேறிய நாட்டில் பிச்சையெடுப்பவர்களும் உதிரித் திருடர்களும் இருப்பார்களா என்பது நம்மிடையே சிலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவிலும் மாடமாளிகைகளுக்கு இடையே சேரிகளும் இருக்கிற முரண்கள் எப்போதும் இருக்கின்றன. உலகமயமாக்கத்திற்குப் பிறகு இந்தப் பொருளாதார இடைவெளிகள் இன்னமும் அகன்றபடி பயணிக்கின்றன.

படத்தின் சிறப்பான ஒளிப்பதிவு, எங்கு சாவகாசமாக நீள வேண்டுமோ அங்கு நீண்டும் சுருக்கமான நகர வேண்டிய இடங்களில் தவளைப் பாய்ச்சலுடன் குறுகியும் நகர்கிற எடிட்டிங், உறுத்தாத பின்னணி இசை போன்ற நுட்பங்கள் இந்த திரைப்படத்திற்கு சிறப்பைச் சேர்க்கின்றன.

Nobody Knows, Like Father, like Son போன்ற சிறப்பான திரைப்படங்களை இயக்கிய Hirokazu Kore-eda இதை அற்புதமாக இயக்கியிருக்கிறார். குழந்தைகளின் அக உலகமும் குடும்ப உறவுகளின் சிக்கல்களும் அதன் சுவாரசியங்களும் இவருடைய திரைப்படங்களின் நிரந்தர கருப்பொருளாக இருக்கும். Shoplifters-ம் அந்தப் பாதையில் அபாரமாக பயணிக்கிறது.
suresh kannan

Thursday, December 13, 2018

இரு தந்தைகள் - Toni Erdmann (2016)தந்தை - மகளைப் பற்றிய திரைப்படம். விநோதமான திரைக்கதையைக் கொண்டது. ஜெர்மனி-ஆஸ்ட்ரியா தயாரிப்பு. ஆஸ்கர் விருதிற்காக நாமினேஷன் ஆனது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது  நம்முடைய இயந்திர வாழ்வின் பரபரப்பிற்கு இடையில்  நெருங்கிய உறவுகளை மட்டுமல்லாது  நகைச்சுவை உணர்வையும் கூட தொலைத்து விடுகிறோம் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டும் திரைப்படம்.


***

Winfried Conradi ஓய்வு பெற்ற இசை ஆசிரியர். விவாகரத்து ஆனவர். தன் வயதான தாயுடன் தனிமையில் வாழ்பவர். விநோதமான குணாதிசயத்தைக் கொண்டவர். பொய்ப்பல் மாட்டிக் கொண்டு, விசித்திரமான ஒப்பனை அணிந்து கொண்டு மற்றவர்களை விளையாட்டாக பயமுறுத்துவது வழக்கம். நல்லவர்தான். ஆனால் சமயம் சந்தர்ப்பமில்லாமல் வெள்ளந்தியாக இவர் சொல்லும் 'ஜோக்'  விவஸ்தையற்று இருக்கும். மற்றவர்கள் அதை தவறாக எடுத்துக் கொள்ளவே வாய்ப்பு அதிகம்.

ஊரில் இருந்து வந்திருக்கும் தன் மகள் இனஸை காணச் செல்கிறார் கிழவர். அவளோ மொபைல் போனில் பேசிக் கொண்டே இருக்கிறாள். 'அடுத்த வாரம் உன் ஊருக்கு வருகிறேன். அங்கு சந்திக்கிறேன்' என்று கிளம்பி விடுகிறார். இனஸ் ஓர் ஆலோசனை நிறுவனத்தில் பணிபுரியும் பொறுப்பான அதிகாரி. எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவள். அவளுடைய அலுவகத்தின் வாசலிலேயே காத்திருக்கிறார் கிழவர். சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகே மகள் வருகிறாள். அவள் பார்வையில் படுவது போல செல்கிறார். கோக்குமாக்கான கோலத்தில் நின்று கொண்டிருக்கும் இவரை அவள்  பாராதது போல் சென்று விடுகிறாள்.

ஏமாற்றமடையும் கிழவர்  வெளியே போகும் போது மகளுடைய உதவியாளினி ஓடி வருகிறாள். மகள் செய்திருக்கும் ஏற்பாட்டின் படி ஹோட்டலில் தங்குகிறார். மாலையில் மகள் வந்து  கேட்கிறாள். "காலைல ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா?". கிழவர் தன் வழக்கப்படி 'நீ ஒரு  மனுஷிதானா?" என்று கேட்க மகளுக்கு முகம் சுருங்கிப் போகிறது. 'சும்மா தமாசுக்கு சொன்னேன்' என்று அவர் சொன்னாலும் அந்த உறவிற்குள் சிறிய நெருடல் நுழைகிறது.

'இப்ப நான் ஒரு முக்கியமான மீட்டிங்கிற்கு போறேன். என் வாழ்க்கையோட எதிர்காலமே இதுல இருக்கு. தயவு செய்து அங்க வந்து எதையும் சொல்லித் தொலைக்காதீங்க" என்கிறாள் இனஸ். மண்டையை ஆட்டிய படி வரும் கிழவர், அந்த முக்கியமான அதிகாரியிடம் வழக்கம் போல் எதையோ சொல்லி விட்டு பின்பு விழிக்கிறார். ஆனால் அந்த அதிகாரிக்கு கிழவரை பிடித்துப் போகிறது என்பது ஆச்சரியம்.  'கிழவர் எப்போது ஊருக்கு கிளம்புவார்' என்று மகளுக்கு எரிச்சலாகிறது.

மறுநாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மகளை எழுப்புகிறார் தந்தை. பதறிப் போய் எழுந்திருக்கும் அவள் 'ஏன் முன்னமே எழுப்பவில்லை' என்று கத்துகிறாள். அன்று அவளுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது. அவள் கத்துவதை திகைப்புடன் பார்க்கும் கிழவர் அன்றே ஊருக்கு கிளம்புகிறார். உள்ளூற எழும் நிம்மதியுடன் தந்தையை அனுப்பி வைத்தாலும் குற்றவுணர்வினால் அழுகிறாள் மகள்.

***

ஹோட்டலில் தன் தோழிகளுடன் இனஸ் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நபர் அந்த உரையாடலில் குறுக்கிடுகிறார். அவரைப் பார்த்து இனஸ் திகைத்துப் போகிறாள். அது அவளது தந்தையேதான். ஊருக்கு அனுப்பி வைத்த ஆசாமி, கோட், சூட் போட்டுக் கொண்டு தலையில் கருப்பு விக்கை மாட்டிக் கொண்டு விநோதமான தோற்றத்தில் இருக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் காட்டிக் கொள்வதில்லை. 'ஏன் இப்படிச் செய்கிறார்' என்று இனஸூக்கு குழப்பமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது.

இனஸின் பணியில் சில சிக்கல்கள் நேர்கின்றன. அதையெல்லாம் அவள் சமாளித்தாக வேண்டும். இதற்கு நடுவில் கிழவர் வேறு இவள் எங்கெல்லாம் செல்கிறாளோ தானும் அங்கெல்லாம் வருகிறார். இவளுடைய தோழிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ஏதேதோ பேசுகிறார். அவரை தனிமையில் மடக்கும் இனஸ் "அப்பா.. ஏன் இப்படிச் செய்யறீங்க?' என்று கேட்க 'ஸாரி.. நீங்க யாருன்னு தெரியல' என்று நழுவுகிறார். அவருடைய வழியிலேயே சென்று தானும் அந்த ஆட்டத்தை ஆடிப் பார்ப்பது என்று இனஸ் தீர்மானிக்கிறாள்.

தன்னுடைய அலுவலக பணிக்காக செல்லும் போது கிழவரையும் அழைத்துக் கொண்டு போய் நாடகமாடுகிறாள். பிறகு அவளுக்கே அது குறித்து சிரிப்பு வருகிறது. அந்த இடத்தில் கிழவர் ஜபர்தஸ்தாக ஒருவரை விசாரிக்க அவருடைய பணியே பறிபோகும் ஆபத்து ஏற்படுகிறது. மகளை திடீரென்று அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்கு செல்லும் கிழவர் அவளை 'தன்னுடைய உதவியாளினி' என்று சொல்கிறார்.  இப்படியொரு இருவருக்குள்ளும்  பரஸ்பர கண்ணாமூச்சி விளையாட்டு நடக்கிறது.


***

இனஸின் அலுவலக விஷயமாக அவளுக்கு சிக்கல்களும் மனஉளைச்சல்களும் ஏற்படுகின்றன. தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டியில் அவள் விநோதமாக நடந்து கொள்கிறாள். பிரம்மாண்டமான விசித்திர உருவம்  ஒன்று வீட்டுக்குள்  நுழைவதைக் கண்டு இனஸ் முதலில் பயந்தாலும் அது தன் தந்தையின் விளையாட்டுத்தனம் என்று பிறகு தெரிகிறது. அந்த நேரத்தில் அந்தக் குறும்பு அவளுக்கு தேவையாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. கண்ணீருடன் தன் தந்தையைக் கட்டியணைத்துக் கொள்கிறாள்.

சில நாட்கள் கழித்து தன்னுடைய பாட்டியின் மரணத்தின் போது தந்தையை சந்திக்க நேர்கிறது. 'வாழ்வின் ஒவ்வொரு சாத்தியமான நொடியையும் நகைச்சுவையுடன் கழிக்க முயல்வதுதான் இந்த பரபரப்பான உலகத்தை எதிர்கொள்வதற்கு அவசியமானது' என்கிற படிப்பினை அவளுக்கு கிடைக்கிறது. தனது தந்தையைப் போல தானும் ஒரு குறும்பை இனஸ் செய்வதுடன் படம் நிறைகிறது.


ஜெர்மனியைச் சேர்ந்த பெண் இயக்குநரான Maren Ade உருவாக்கிய இந்த திரைப்படத்தில் கிழவராக Peter Simonischek மற்றும் மகளாக Sandra Hüller அற்புதமாக நடித்திருக்கிறார்கள். 


suresh kannan