Friday, December 14, 2018

Shoplifters (2018) - உதிரிகளின் குடும்பம்


சென்னை சர்வதேச திரைவிழாவில் துவக்க நாளன்று பார்த்த ஜப்பானிய திரைப்படம் இது.

குடும்பம் என்கிற அமைப்பிற்குள் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது ரத்த சம்பந்தமில்லாத மனிதர்கள் இணைந்து வாழ்வதால் ஓர் அழகான குடும்பம் உருவாகிறதா என்கிற ஆதாரமான விஷயத்தை, சமகால ஜப்பானிய விளிம்புநிலை மனிதர்களின் பின்னணியில் இத்திரைப்படம் உரையாடுகிறது.

கேனஸ் திரைவிழாவில் அதன் மிக உயரிய விருதான ‘தங்கப் பனையோலை’ விருதைப் பெற்றிருக்கிறது. சற்று மெதுவாக நகர்வதால் சிலர் சலிப்படைந்திருக்கலாம். ஆனால் ஒரு நிலையில் படம் தன்னியல்பாக நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. தவறவிடக்கூடாத திரைப்படம்.

**

டோக்கியோ நகரம். நடுத்தர வயதுள்ள அந்த ஆசாமியும் ஒரு சிறுவனும் விற்பனை அங்காடியில் பொருட்களை வாங்குவது போல் பாவனை செய்து கொண்டிருக்கிறார்கள். காவலாளிக்குத் தெரியாத படி அந்த ஆசாமி மறைத்துக் கொள்ள பின்புறமுள்ள பையில் சில பொருட்களை திணித்துக் கொள்கிறான் சிறுவன். இருவரும் உல்லாசமாக சிரித்தபடி வெளியே வருகிறார்கள். சிறுவனுக்கு பிரியமாக தின்பண்டம் வாங்கித் தருகிறார் அவர்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் அழுது களைத்தபடி அமர்ந்திருக்கும் ஒரு சிறுமியைக் காண்கிறார்கள். குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டிருக்கும் அவளைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. அவளுடைய கையில் காயங்கள். அவளையும் இணைத்துக் கொண்டு புறாக்கூண்டு போன்ற தங்களின் குறுகிய வீட்டிற்குத் திரும்புகிறார்கள்.

திருடி வந்த பொருட்களை குடும்பமே ரசித்து உண்கிறது. “யாரு..இந்தப் பொண்ணு.. ஏன் கூட்டி வந்தே.. நமக்கு ஏதாவது பிரச்சினை வந்துடப்போகுது” என்று எவரோ எச்சரித்தாலும் பிறகு அந்தச் சிறுமியும் மெல்ல அந்தக் குடும்பத்துடன் ஒன்றிப் போகிறாள்; அதன் செல்ல உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்படுகிறாள்.

பென்ஷன் வாங்கும் பாட்டி, சலவையகத்தில் பணிபுரியும் பெண், சிறுவனுடன் இணைந்து பொருட்களை திருடும் நேரம் போக கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஆசாமி, பாலியல் தொழிலில் ஈடுபடும் ஓர் இளம்பெண் ஆகியோரோடு புதிய உறுப்பினரான இளம் சிறுமியும் சேர்ந்தது அந்தக் குடும்பம் என்பது பிறகு பயணிக்கும் கவித்துவமான காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. வறுமை ஒருபுறம் இருந்தாலும் மகிழ்ச்சிக்கும் பரஸ்பர மதிப்பிற்கும் குறைவில்லாத குடும்பம். சில செல்லச் சிணுங்கல்கள், விரோதங்கள் துவக்கத்தில் இருந்தாலும் சிறுமியை தன் சகோதரியாக ஏற்றுக் கொள்கிறான் சிறுவன்.

ஆனால் அது ரத்த உறவுள்ள குடும்பம் அல்ல, ஒவ்வொருவருமே வெவ்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்பட்டு தற்செயலாக ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பவர்கள் என்பது மெல்லத் தெரிய வருகிறது.

மகிழ்ச்சிகரமான தருணங்களாகவே இருந்தாலும் அவற்றிற்கும் ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி உண்டுதானே? கடையில் திருடும் சிறுவன் காவல்துறையினரிடம் பிடிபட, அவர்கள் சிறுமியை ‘கடத்தி’ (?!) வைத்திருக்கும் குற்றத்தை காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்கள். கிழவி இறந்து போயிருந்தாலும் அவளுடைய பிணத்தை வீட்டிலேயே புதைத்து வைத்து பென்ஷன் பணத்தை தொடர்ந்து வாங்கும் குற்றம் வேறு பட்டியலில் இணைகிறது. குடும்பத்தின் தலைவி அனைத்தையும் ஒப்புக் கொண்டு சிறைக்குப் போகிறாள். கைவிடப்பட்ட சிறார்களின் முகாமில் சிறுவன் சேர்க்கப்பட நடுத்தரவயது ஆசாமி தனியனாகிறான். அன்பும் அரவணைப்பும் நிலவிய அந்தக் குடும்பம் சிதறிப் போகிறது.

**

திருமணம் எனும் நிறுவனத்தின் வழியாக உருவாகி வரும் அமைப்பைத்தான் குடும்பம் என்று சட்டமும் சமூகமும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்ட சில தனிநபர்கள், பரஸ்பர அன்பினால் தற்செயலாக ஒன்றிணைவதை ‘குடும்பமாக’ சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த ஆதாரமான முரணே படத்தின் மையம் என்பதாக உணர்கிறேன்.

நடுத்தரவயது ஆசாமி, சிறுவன் ஒருமுறையாவது தன்னை ‘தந்தை’ என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதற்காக தொடர்ந்து முயல்கிறான். ஆனால் உள்ளுக்குள் பாசம் இருந்தாலும் அதைச் சொல்ல விடாதவாறு ஏதாவொன்று சிறுவனைத் தடுக்கிறது. நிரந்தரமான பிரிவு ஏற்படும் இறுதிக்காட்சியில், பேருந்தின் பின்னாலேயே ஓடிவரும் அவரைக் கண்டு கலங்கி ‘அப்பா’ என்று அவன் மனதுக்குள் முனகிக் கொள்வதில்தான் அது நிறைவேறுகிறது. என்றாலும் அவர் அதை அறிந்தாரா என்று தெரியவில்லை.

இதைப் போலவே புதிய உறுப்பினரான சிறுமியை தன் மகளாகவே ஏற்றுக் கொள்கிறாள் வீட்டின் மூத்த பெண். குடும்ப வன்முறைக்குள் சிக்கி மனக்காயமும் உடல் காயங்களும் ஏற்பட்டிருக்கும் அந்தச் சிறுமியை அந்தக் குடும்பமே ஒன்றிணைந்து தேற்றி தூக்கி நிறுத்துகிறது. ஆனால் சட்டத்தின் பார்வையில் இவர்கள் ‘கடத்தல்காரர்களாக’ தென்படுகிறார்கள்.

படத்திற்குள் சில அபாரமான தருணங்கள் உள்ளன. முன்னாள் கணவனின் மூலம் பெண்ணின் கையில் ஏற்பட்ட காயத்தையும், தந்தையால் சிறுமியின் கையில் ஏற்பட்ட காயமும் ஒரே பிரேமில் காட்டப்படும் போது அவை பெண்ணினம் எதிர்கொண்டிருக்கும் பல்லாண்டு கால அவலத்தின் சாட்சியமாக நிற்கின்றன.

இது விளிம்புநிலை மனிதர்களின் பின்னணியுடன் கூடிய கதை என்றாலும் எந்தவொரு இடத்திலும் மிகையான அழுகையாய், ஓலமாய் ஆகிவிடவில்லை என்பதே பெரும் சமானத்தை தருகிறது. அது போன்ற விகாரங்கள் எங்கும் இல்லை. அவர்களின் கொண்டாட்டங்களும் பரஸ்பர அன்பு வெளிப்படும் காட்சிகளும் மிகையின்றி கலையமைதியுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. கடற்கரையில் அவர்கள் பொழுதைக் கழிக்கும் காட்சியும், வீட்டின் அந்தரத்திற்கு மேலே எங்கோ பொங்கிச் சிதறும் வாணவேடிக்கையின் வெளிச்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு அந்தக் குடும்பம் கொண்டாடும் காட்சியும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

வீட்டின் மூத்த பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. பணியாளர்களில் இருவரில் ஒருவரை மட்டுமே பணியில் வைத்திருக்க முடியும் என்கிற அசந்தர்ப்பமான சூழல். ‘தனக்கு ஏன் இந்தப் பணி அவசியம்’ என்பதை இருவரும் விவாதிக்கிறார்கள். “நீ அந்தச் சிறுமியை வீட்டில் வைத்திருப்பதை வெளியே சொல்லி விடுவேன்” என்கிற வெடிகுண்டை வீசுகிறாள் இன்னொருத்தி. அந்தச் சம்பளம் கிடைக்காவிட்டால் நிதிச்சுமை அதிகரிக்கும்தான். இருந்தாலும் சிறுமியை பாதுகாப்பதற்காக தன் பணியை தியாகம் செய்கிறாள் அவள்.

ஆசிய நாடுகள் என்றாலே பிச்சைக்காரர்களும் பாமரர்களும் நிறைந்திருப்பார்கள் என்கிற மேலைய நாட்டினரின் பொதுப்புத்தியைப் போலவே, உழைப்பிற்குப் பெயர் போன ஜப்பான் போன்ற முன்னேறிய நாட்டில் பிச்சையெடுப்பவர்களும் உதிரித் திருடர்களும் இருப்பார்களா என்பது நம்மிடையே சிலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படும் அமெரிக்காவிலும் மாடமாளிகைகளுக்கு இடையே சேரிகளும் இருக்கிற முரண்கள் எப்போதும் இருக்கின்றன. உலகமயமாக்கத்திற்குப் பிறகு இந்தப் பொருளாதார இடைவெளிகள் இன்னமும் அகன்றபடி பயணிக்கின்றன.

படத்தின் சிறப்பான ஒளிப்பதிவு, எங்கு சாவகாசமாக நீள வேண்டுமோ அங்கு நீண்டும் சுருக்கமான நகர வேண்டிய இடங்களில் தவளைப் பாய்ச்சலுடன் குறுகியும் நகர்கிற எடிட்டிங், உறுத்தாத பின்னணி இசை போன்ற நுட்பங்கள் இந்த திரைப்படத்திற்கு சிறப்பைச் சேர்க்கின்றன.

Nobody Knows, Like Father, like Son போன்ற சிறப்பான திரைப்படங்களை இயக்கிய Hirokazu Kore-eda இதை அற்புதமாக இயக்கியிருக்கிறார். குழந்தைகளின் அக உலகமும் குடும்ப உறவுகளின் சிக்கல்களும் அதன் சுவாரசியங்களும் இவருடைய திரைப்படங்களின் நிரந்தர கருப்பொருளாக இருக்கும். Shoplifters-ம் அந்தப் பாதையில் அபாரமாக பயணிக்கிறது.
suresh kannan

No comments: