Monday, December 30, 2019

‘ஆவியுலகத்திற்குள் மாட்டிக் கொள்ளும் ‘கிட்டார்’ சிறுவன் (Coco) 2017


..


.இந்த திரைப்படத்தின் பல சிறப்புகளில் ஒன்று, ‘சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான பிரிவில்’ ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது’ என்பதுதான். பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோவின் தரமான உருவாக்கமும் சுவாரசியமான திரைக்கதையும் இத்திரைப்படத்தை மறக்கவியலாத அனுபவமாக மாற்றுகின்றன.

மெக்ஸிகோவைச் சேர்ந்த கோகோ என்கிற 12 வயது சிறுவனுக்கு இசை என்றால் பிரியம். எர்னஸ்டோ என்கிற பிரபலமான இசைக்கலைஞர்தான் அவனுடைய ஆதர்சம். ஆனால் கோகோவின் வீட்டில் ‘இசை’ என்கிற சொல்லைக் கேட்டால் கூட கொலைவெறியாகி விடுகிறார்கள். கோகோ ஒரு முறை கிட்டார் வாத்தியத்தை தொட்டுப் பார்த்தற்கே அவனுடைய பாட்டி விரட்டி விரட்டி அடிக்கிறாள்.

இதற்கான பின்னணிக் காரணம் இருக்கிறது. கோகோவின் தாத்தாவுடைய தாத்தா இசை மீதுள்ள பிரியத்தால் வீட்டை விட்டுப் போய் விடுகிறார். அவருடைய மனைவி மிகச் சிரமப்பட்டு காலணி தயாரிக்கும் வேலையைக் கற்றுக் கொண்டு குடும்பத்தை வளர்த்தெடுக்க வேண்டியதாக இருந்தது. எனவே கோகோவின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக காலணி தயாரிக்கும் தொழிலைச் செய்கிறது. தங்களின் பரம்பரையை இப்படி ஆக்கியவர் மீதும் அதற்குக் காரணமான இசை மீது அவர்கள் கடும் வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

ரத்தத்திலேயே இசை ஊறியிருப்பதால் கோகோவினால் தன் இசை தாகத்தை தவிர்க்க முடியவில்லை. ஓர் இசைப் போட்டியில் கலந்து கொள்ள முயல்கிறான்.  வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, கோபத்துடன் வீட்டை விட்டு ஓடுகிறான். போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் சொந்த கிட்டார் வேண்டும். என்ன செய்வது என்று தவிக்கிறான் கோகோ. தன் ஆதர்ச இசைக்கலைஞரான எர்னஸ்டோவின் அருங்காட்சியகத்திலிருக்கும் கிட்டாரை எடுக்க முடிவு செய்கிறான் கோகோ.

மெக்ஸிகோ கலாசாரத்தின் படி அன்றைய தினம் முன்னோர்களை நினைவுகூரும் நாள். அவர்களுடைய புகைப்படத்தையும், அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளையும் வைத்து வழிபட்டால் மேல்உலகிலிருந்து அவர்கள் ஆவி வடிவத்தால் வருவார்கள் என்றொரு நம்பிக்கை.

கிட்டாரைத் திருடப் போகும் கோகோ தற்செயலாக தடுக்கி விழுந்து ஆவிகளின் உலகத்திற்குள் சென்று விடுகிறான். கூடவே அவனது செல்ல நாயான ‘டாண்டே’வும். சில பல நகைச்சுவையான சம்பவங்களுக்குப் பின் அவன் ஒரு விஷயத்தை அறிய நேர்கிறது. ‘புகழ்பெற்ற இசைக் கலைஞரான எர்னஸ்டோதான் அவனுடைய கொள்ளுத்தாத்தா’ என்கிற விஷயம். தானொரு இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறியும் கோகோ வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறான்.

எர்னஸ்டோவின் ஆசியை வாங்கிக் கொண்டு நம்முடைய உலகத்திற்கு திரும்பி விட வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். ஆனால் அதிலொரு சிக்கல். சூரிய உதயத்திற்குள் அவன் திரும்பாவிட்டால் அவன் ஆவியுலகத்திலேயே இருக்க வேண்டியதுதான்.

கோகோ தந்தையின் ஆசியைப் பெற்றானா, பூமிக்குத் திரும்பினானா என்பதையெல்லாம் மிக மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். வண்ணமயமான சித்திரங்களும் வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் அற்புதமான பாடல்களும் கற்பனை வளத்துடன் கூடிய திரைக்கதையும் என இத்திரைப்படம் காட்சிக்கு காட்சி பிரமிப்பூட்டுகிறது.

Lee Unkrich அபாரமாக இயக்கியிருக்கும் திரைப்படம் இரண்டு விஷயங்களை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது. ‘உன் மனம் உணர்த்தும் விஷயத்தை நோக்கி செல்’ மற்றும் ‘முன்னோர்களை மறவாதே’(SRV டைம்ஸில் பிரசுரமானது) 

..suresh kannan

Friday, December 27, 2019

என் அருமை கன்னுக்குட்டி (Ferdinand - 2017)ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டை பற்றி நமக்குத் தெரியும். மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் நடக்கும் போட்டியின் இறுதியில் விலங்கு கொடூரமாக கொல்லப்படும். மனிதர்களின் மகிழ்ச்சிக்காக நிகழும் இந்த வன்முறை விளையாட்டு கூடாது என்பதை இந்த திரைப்படம் சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

அதுவொரு காளைப் பண்ணை. சண்டைக்காக வளர்க்கப்படும் காளைகள் நிறைய உண்டு. அங்கு வளரும் கன்றுக்குட்டியான Ferdinand இயல்பிலேயே சாதுவான சுபாவத்தைக் கொண்டது. மலர்களின் வாசத்தை முகர்வது என்றால் அதற்கு அலாதியான பிரியம். ‘காளை என்றால் சண்டை போட வேண்டும். அதற்குத்தான் நாம் இருக்கிறோம்” என்று இதர கன்றுகள் இதை அவ்வப்போது சீண்டுகின்றன. ஆனால் ‘அன்பே சிவம்’ என்று நல்ல பிள்ளையாக இருக்கிறது Ferdinand.

Ferdinand-ன் தந்தை வீரம் மிகுந்த காளை. ஒருமுறை சண்டைக்குச் செல்லும் அது திரும்பி வராததால் துயரமடையும் Ferdinand எப்படியோ பண்ணையிலிருந்து தப்பிச் செல்கிறது. நினா என்கிற சிறுமியிடம் அடைக்கலம் புகுகிறது. இந்தக் கன்றுக்குட்டியை அன்பும் பாசமுமாக வளர்க்கிறாள் நினா. வருடங்கள் கடக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது Ferdinand. என்றாலும் அதனுடைய குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது.

நினாவும் அவளுடைய தந்தையும் மலர் திருவிழாவிற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். ‘நானும் வருவேன்’ என்று அடம்பிடிக்கிறது Ferdinand. ‘நீ இப்போது பெரிதாக வளர்ந்து விட்டதால் சரிவராது. ஏதேனும் ஆபத்து வரலாம்’ என்று இதனை விட்டு விட்டு அவர்கள் கிளம்புகிறார்கள். மலர்களின் மீது பிரியமுள்ள Ferdinand பிறகு தானும் செல்ல முடிவெடுத்து ஊருக்குள் நுழைகிறது. ஒரு வண்டு துரத்த அதனிடமிருந்து தப்பிக்க முயலும் Ferdinand-ன் ஜாலியான கலாட்டாவினால் ஊர் அமர்க்களப்படுகிறது. மக்கள் மிரள்கிறார்கள். சில ஆட்கள் Ferdinand-ஐ பிடித்துச் செல்வதை சோகத்துடன் பார்க்கிறாள் நினா.

தான் பிறந்து வளர்ந்த காளைப் பண்ணைக்கே திரும்பும் சோகம் Ferdinand-க்கு ஏற்படுகிறது. “நீ பெரிதாக வளர்ந்தாலும் அப்படியேதான் இருக்கிறாய்” என்று இதர காளைகள் கிண்டலடிக்கின்றன. El Primero என்கிற புகழ்பெற்ற வீரன் அங்கு வருகிறான். வீரமுள்ள காளையை தேர்ந்தெடுப்பது அவனுடைய நோக்கம். இந்த தேர்வில் தோற்று விட்டால் நேரடியாக கசாப்புக்கடைதான்.

வாழ்வா, சாவா என்கிற நிலை ஏற்பட, இதர காளைகளை சம்மதிக்க வைத்து அங்கிருந்து தப்பிக்க முயல்கிறது Ferdinand. பிறகு என்னவாயிற்று என்பதை ஜாலியான கலாட்டாக்களுடன் விவரிக்கிறது திரைப்படம்.

பீங்கான் பாத்திரங்கள் கடையில் மாட்டிக் கொண்டு Ferdinand வெளியே வர தத்தளிப்பது, காளைகளுக்கும் குதிரைகளுக்கும் நடக்கும் நடனப்போட்டி, கசாப்புக்கடையில் இருந்து தப்பித்தல், இறுதிப் போட்டியில் காளைக்குப் பதிலாக மனிதன் தப்பித்து ஓடுதல் போன்ற சுவாரஸ்யமான காட்சிகள் சுவையைக் கூட்டுகின்றன.

The Story of Ferdinand என்கிற குழந்தைகள் நூலில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் வண்ணமயமான மற்றும் அபாரமான கற்பனை வளத்துடன் கூடிய காட்சிகள் உண்டு. Carlos Saldanha இயக்கியுள்ள இந்த திரைப்படம் குழந்தைகள் கண்டு களிப்பதற்கான அருமையான சித்திரம்.
 
 
(SRV டைம்ஸில் பிரசுரமானது) 


suresh kannan

Thursday, December 26, 2019

Capernaum | 2018 | முட்களின் பாதை


இளமைப் பருவம் என்பது உலகில் எல்லோருக்கும் இயல்பானதாகவும் சுகமாகவும் அமைந்து விடுவதில்லை.  கணிசமான சதவீதத்தினருக்கு அது தினசரி போராட்டமாகவும் சகிக்க முடியாத அவலமாகவும் அமைந்து விடுகிறது.

போர், வறுமை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவற்றின் பின்னணியில் வாழும் சிறார்களின் வாழ்க்கை என்பது கொடுமையானதாக இருக்கிறது. அப்படியொரு சிறுவனின் வாழ்க்கையை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமானதாகவும் உண்மையாகவும் பதிவாக்கியிருக்கிறது இந்த லெபனான் தேசத்து திரைப்படம்.

ஜெயின் என்கிற பன்னிரெண்டு வயது சிறுவன், தன் பெற்றோர்களின் மீது வழக்குத் தொடர்கிறான். அவன் சொல்லும் காரணம் “அவர்கள் ஏன் என்னைப் பெற்றார்கள்?”. சற்று விசித்திரமாக இருந்தாலும் அதன் துயரமான பின்னணிக் காரணங்களை அறிய நேரும் போது அந்தக் கேள்வியின் அழுத்தம் நமக்குப் புரிகிறது.

**

லெபனானின் தலைநகரம் பெய்ரூட். அங்குள்ள சேரியில் வாழும் சிறுவன் ஜெயின். வதவதவென்று நிறைய குழந்தைகளைப் பெற்றுப் போட்டிருக்கும் அவனுடைய பெற்றோர் சிறையில் போதை மருந்துகளை விற்கும் தொழிலைச் செய்கிறார்கள். தகப்பன் பெரும்பாலும் குடி போதையில் இருக்கிறான். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரான அஸாத் என்பவரின் கடையில் வேலை செய்கிறான் ஜெயின். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களை ஏக்கத்துடன் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பார வண்டியை இழுத்துச் செல்கிறான்.

அவனுடைய சகோதரி ருதுவாகிறாள். பெற்றோர்களிடமிருந்து இந்த விஷயத்தை மறைத்துக் கொள்ளச் சொல்லி அதற்காக உதவுகிறான் ஜெயின். அவள் ருதுவாகிய விஷயத்தை அறிந்தால், சிறுமியான அவளை கடை உரிமையாளரான அஸாத்திற்கு திருமணம் வைத்து விடுவார்கள் என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் அவன் பயந்தது போலவே ஆகி விடுகிறது. அந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் சண்டையிடுகிறான். ஆனால் சிறுவனால் என்ன செய்ய முடியும்? இவனை அடித்து அப்புறப்படுத்தி விட்டு தன் பெண்ணை தானே இழுத்துச் செல்கிறான் தகப்பன்.

இதனால் கடும் கோபமும் வெறுப்பும் அடையும் ஜெயின், வீட்டை விட்டு வெளியேறுகிறான். பேருந்தில் ஏறி பயணித்து வழியில் தென்படும் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் இறங்கி விடுகிறான். அங்கு துப்புரவு பணியாளராக இருக்கும் ரஹில் என்கிற பெண்மணியிடம் ‘வேலை கிடைக்குமா?” என்று கேட்கிறான்.

ரஹில் எத்தியோப்பிலிருந்து புலம் பெயர்ந்திருக்கும் பெண்மணி. போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு சட்டவிரோதமாக லெபானனில் தங்கியிருப்பவள். தன் குழந்தையை பணியிடத்தில் மறைத்து வளர்க்கிறாள். அவளால் ஜெயினுக்கு உதவ முடிவதில்லை. பசியுடன் பரிதாபமாக சுற்றித் திரியும் சிறுவனின் மீது இரக்கம் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். தன்னுடைய குழந்தையை ஜெயினிடம் விட்டு விட்டு அவள் பணிக்குச் செல்வாள். குழந்தையை ஜெயின் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஏற்பாடு. சிறுவனாக இருந்தாலும் பொறுப்புள்ள தந்தையைப் போல குழந்தையை கண்ணும் கருத்துமாக பராமரிக்கிறான் ஜெயின்.

பணிக்குச் செல்லும் ரஹில் ஒருநாள் திரும்பி வருவதில்லை. போலி பர்மிட் காலம் முடிந்து விடுவதாலும் அவற்றைப் புதுப்பிப்பதற்காக ஏஜெண்ட் அநியாயமாக கேட்கும் பணத்தை அவளால் தயார் செய்ய முடியாததாலும் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறாள். ரஹில் திரும்பி வராததால் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சமாளிக்கிறான் ஜெயின். சமாளிக்க முடியாத நிலையில், சம்பாதிப்பதற்காக தனக்குத் தெரிந்த போதை மருந்து விற்பனையையும் செய்கிறான். இதனால் சிக்கல்களையும் அவன் எதிர்கொள்ள நேர்கிறது.

குழந்தையை வைத்துக் கொண்டு சாலையெங்கும் சுற்றுகிறான். ஒரு நிலையில் அவனால் நிலைமையைச் சமாளிக்க முடிவதில்லை. அவர்கள் தங்கியிருக்கும் வீடும் பறிபோகிறது. ரஹிலின் ஏஜெண்டைச் சந்திக்கிறான். குழந்தையை தத்து கொடுத்து பணம் சம்பாதிப்பதற்காக நீண்ட காலமாக திட்டமிடுபவன் அந்த ஏஜெண்ட். “நீ ஏன் குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாய்? அவனை நான் நன்கு பார்த்துக் கொள்கிறேன். நீ விரும்பும் நாட்டிற்கு உன்னை அனுப்புகிறேன். என்னிடம் ஒப்படைத்து விடு” என்கிறான் ஏஜெண்ட். வேறு வழியில்லாமல் அரைமனதாக அதற்கு சம்மதிக்கிறான் ஜெயின்.

ஆனால் வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் ஏதாவது ஒரு ஆவணம் தேவை. அதை எடுப்பதற்காக தன் வீட்டிற்குத் திரும்பச் செல்கிறான் ஜெயின். திருமணம் செய்யப்பட்ட இளம் சகோதரி, கர்ப்ப காலத்தில் இறந்து விட்டிருக்கும் அதிர்ச்சியான செய்தியை அப்போது அறிகிறான். ஆத்திரம் கொள்ளும் ஜெயின், பெற்றோர்களிடம் பயங்கரமாக சண்டையிட்டு விட்டு கத்தியை எடுத்துக் கொண்டு கடைக்காரன் அஸாத்தைக் கொல்வதற்காக ஓடுகிறான். அவனைக் காயப்படுத்தி விடும் நிலைமையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

அதே சிறையின் இன்னொரு பக்கத்தில் ரஹில் அடைக்கப்பட்டிருக்கிறாள். தன் குழந்தை என்னவானதோ என்கிற பதட்டத்திலும் அழுகையிலும் அவள் இருக்கிறாள். ஜெயினின் தாய் அவனைப் பார்க்க சிறைக்கு வருகிறாள். அவள் சொல்லும் தகவல் அவனை மிகவும் கடுப்பேற்றுகிறது. ‘மகனே.. நான் கர்ப்பமுற்றிருக்கிறேன். இறந்து போன உன் சகோதரி மீண்டும் வந்து பிறப்பாள். நீ வெளியே வந்தவுடன் அவளுடன் விளையாடலாம்” என்கிறாள். அவள் கொண்டு வந்த இனிப்புகளை குப்பையில் எறிந்து விட்டு வெறுப்புடன் சிறைக்குச் செல்கிறான் ஜெயின்.

ஒரு நாள், சிறையில் இருக்கும் தொலைபேசியின் மூலம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேசுகிறான் ஜெயின். பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடி ஒளிபரப்பாக விசாரணை செய்யும் நிகழ்ச்சி அது. அதன் மூலம் ஒரு கோரிக்கையை வைக்கிறான் ஜெயின்.

“என் பெற்றோர்களின் மீது வழக்குப் போட வேண்டும்”

**

புலம் பெயர்ந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவள் ரஹில். ‘அங்கிருந்து எந்நேரமும் வெளியேற்றப்படலாம்’ என்கிற பதட்டமான சூழலில் வாழ்பவள். தன் குழந்தையைப் பற்றிய விவரம் வெளியே தெரிந்தால் அதை இழக்க நேரிடும் என்பதால் மிகவும் ரகசியமாக வளர்க்கிறாள். இப்படி நெருக்கடியானதொரு பின்னணி இருந்தாலும் தன் குழந்தையின் மீது பாசத்தையும் அன்பையும் பொழிகிறாள் ரஹில். இது மட்டுமல்லாமல், கூடுதல் சுமையாக இருந்தாலும் சிறுவன் ஜெயினையும் அவள் அன்போடு ஏற்றுக் கொள்கிறாள்.

இதற்கு நேர்மாறான சூழல் ஜெயினின் வீட்டில் இருக்கிறது. திட்டமிடாமல் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அவனுடைய பெற்றோர், தங்களின் தேவைகளுக்காக பிள்ளைகளை சிரமமான சூழலில் தள்ளுவதற்கும் தயாராக இருக்கிறார்கள். அப்போதுதான் ருதுவாகியிருக்கும் இளம் சிறுமியை, வயது வித்தியாசம் அதிகமுள்ள நபருக்கு திருமணம் செய்து தர தயாராக இருக்கிறார்கள்.

இப்படி நேர் எதிரான இரண்டு பெற்றோர்களைச் சித்தரிப்பதின் மூலம் பொறுப்புள்ள பெற்றோர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை இயக்குநர் சுட்டிக் காட்டுகிறார். “எங்களின் அவலமான வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று அழுகையும் சீற்றமுமாக நீதிமன்றத்தில் கேட்கிறார்கள், ஜெயினின் பெற்றோர்.

ஒரு கோணத்தில் அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். கல்வியறிவு, விழிப்புணர்வு இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற சூழலில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கடுமையான வறுமையிலும் தங்களின் பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். ரஹில் அதற்கு சிறந்த உதாரணம்.

இது தவிர, போர் உள்ளிட்ட காரணங்களால் புலம் பெயர்ந்திருக்கும் அகதிகளின் அவலமான வாழ்க்கையையும் இந்தத் திரைப்படம் அழுத்தமாகச் சித்தரிக்கிறது. ‘உயிரோடு இருந்தாலே போதும்’ என்று இதர பிரதேசங்களுக்கு  இடம் பெயர்பவர்கள், உழைப்புச் சுரண்டல், ஏஜெண்ட்களின் பிடுங்கல், தாம் வெளியேற்றப்பட்டு விடுவோமோ என்கிற பதட்டம் உள்ளிட்ட காரணங்களால் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள்.

குழந்தையுடன் சாலையில் சுற்றித் திரியும் போது ‘மேசெளன்’ என்கிற சிறுமியைச் சந்திக்கிறான் ஜெயின். அவள் சாலையில் பூக்களை விற்பனை செய்பவள். சிரியாவிலிருந்து வந்திருக்கும் அகதி. “பணம் சேர்த்து தந்தால் தன்னை ஏஜெண்ட் ஸ்வீடனுக்கு அனுப்பி வைப்பார். அங்கு நான் நிம்மதியாக வாழ்வேன்” என்று கண்களில் கனவு பொங்க ஜெயினிடம் விவரிக்கிறாள் மேசெளன். ஆனால் அது அத்தனை எளிதான காரியமா, அவள் எங்கு சென்று மாட்டிக் கொள்வாளோ என்று நமக்குத்தான் பதட்டமாக இருக்கிறது.

எத்தியோப்பிய அகதியான ரஹில் தன் குழந்தையிடம் வைத்திருக்கும் அன்பு பல்வேறு நெகிழ்வான காட்சிகளால் பார்வையாளர்களுக்கு உணர வைக்கப்படும் அதே சமயத்தில், ஜெயினுக்கும் குழந்தைக்குமான காட்சிகள் மிக அற்புதமாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. ரஹில் திரும்பி வராத காரணத்தால் குழந்தைக்கான உணவை தேடி அலைகிறான் ஜெயின். அவன் கொண்டு வரும் பாலின் அந்நிய வாசனை காரணமாக அதைக் குடிக்காமல் திரும்பி படுத்துக் கொள்கிறது குழந்தை. ஏக்கத்துடன் ஜெயினின் மார்பை அது தடவும் காட்சி நெகிழ்வுபூர்வமானது. ஒரு கட்டத்தில் குழந்தையும் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழகி விடுகிறது.


**

இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கும் நாடின் லபாகி அடிப்படையில் ஒரு நடிகையாவார். லெபனானில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் வாழ்ந்தவர் என்பதால் போரினால் எளிய மனிதர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போகும் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார். தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகும் நாடின் லபாகி இயக்கிய முதல் திரைப்படம் Caramel (2006). அழகு நிலையத்தில் பணிபுரியும் ஐந்து பெண்களின் பிரச்சினைகளை சித்தரிப்பதின் மூலம் லெபனான் பெண்களின் வாழ்வியல் பிரச்சினைகளையும் அந்தப் பிரதேசத்தின் அரசியலையும் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். பரவலான கவனத்தையும் விருதையும் தன் முதல் திரைப்படத்தில் பெற்ற நாடின் லபாகி இயக்கிய நான்காவது திரைப்படம்தான் Capernaum. இந்தத் திரைப்படத்தில் ஜெயினின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞராக சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று ஜெயினாக நடித்திருக்கும் சிறுவனின் அபாரமான பங்களிப்பு. படம் முழுக்க சோகமும் இறுக்கமும் முதிர்ச்சியும் தென்படும் முகபாவத்துடன் நடித்துள்ளான். படத்தில் அவன் புன்னகைப்பது இரண்டே இடங்களில்தான். குழந்தைக்கு பிறந்த நாள் கேக்கை ரஹில் வெட்டும் போது தன்னிச்சையாக சிரிக்கிறான். இரண்டாவதாக, அவன் படிப்பிற்காக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கப்படும் போது வலுக்கட்டாயமாக புன்னகைக்க வைக்கப்படுகிறான். சோகமும் புன்னகையும் கலந்த அவனுடைய உறைந்த முகத்துடன் படம் நிறைவுறுகிறது.

சிறுவனாக நடித்திருக்கும் ஜெயின் அல் ரபியா, ஒரு சிரிய அகதியாவான். சிரியாவில் நிகழும் போர் காரணமாக அவனது குடும்பம் 2012-ல் லெபனானிற்கு இடம் பெயர்ந்தது. அங்குள்ள சேரியில் வாழ்ந்து கொண்டிருந்த சிறுவனை இனங்கண்டு இந்தப் பாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். தன்னுடைய அசலான வாழ்க்கையையே திரைப்படத்தில் பிரதிபலிக்கச் செய்திருக்கிறானோ என்று எண்ண வைக்குமளவிற்கு அத்தனை இயல்பான நடிப்பை வழங்கியுள்ளான் ஜெயின். இந்தத் திரைப்படத்தில் அவன் வழங்கியுள்ள நேர்த்தியான நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ள ஜெயின், இதன் மூலம் பெற்றுள்ள கவனத்தினால் இப்போது நார்வேயில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான்.

ஜெயின் மட்டுமல்ல, இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள பெரும்பாலான இதர நடிகர்களும் தொழிற்முறையற்ற நடிகர்கள். ‘மிக இயல்பான நடிப்பை கொண்டு வர வேண்டும் என்பதற்காக சாதாரண நபர்களையே தேர்ந்தெடுத்தேன்’ என்கிறார் இயக்குநர் நாடின் லபாகி. ஆவணத் திரைப்படத்தின் பாணியை பெரும்பாலான காட்சிகளில் பின்பற்றியிருக்கும் இந்தத் திரைப்படம் ‘பார்வையாளர்களின் அனுதாபத்தை பல காட்சிகளில் கோரிக் கொண்டேயிருக்கிறது’ என்பது போன்ற விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.

2018 கான் திரைப்பட விழாவில், ‘நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரிவு’ ‘சுயாதீன திரைப்பட பிரிவு’ ஆகியவற்றில் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட Capernaum, அதிகம் வசூலித்த அரபுத் திரைப்படம் என்னும் பெருமையையும் பெற்றிருக்கிறது. ‘சிறந்த  அயல்நாட்டுத் திரைப்படம்’ என்னும் பிரிவிற்காக லெபானின் சார்பில் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டது.

‘நமது சமூக அமைப்பு, அரசுகள், முட்டாள்தனமான முடிவுகள், போர்கள் ஆகியவற்றினால் குழந்தைகள் அதிக விலையைத் தர வேண்டியிருக்கிறது. அவர்களால் பேச முடியாது. எனவே அவர்களின் துயரங்களையும் சிக்கல்களையும் திரைப்படத்தின் வழியாக பேச நான் முடிவு செய்தேன்’ என்கிறார் இயக்குநர் நாடின் லபாகி.

போர், வறுமை உள்ளிட்ட பல்வேறு புற அழுத்தங்கள் இருந்தாலும், தங்களின் குழந்தையை பொறுப்பில்லாமல் வளர்த்தால் அது எவ்வாறான அவலங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஜெயினின் வாழ்க்கை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. வறுமையான சூழலிலும் குழந்தையின் மீது அன்பை செலுத்த முடியும் என்கிற ரஹிலின் வாழ்க்கையின் மூலம் பெற்றோர்களின் ஆதாரமான கடமையையும்  நமக்கு நினைவுப்படுத்துகிறது.

இது குழந்தைகளை பிரதானமாக வைத்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் என்றாலும் பெற்றோர்கள் அவசியம் காண வேண்டிய படைப்பாக இருக்கிறது.(குமுதம் தீராநதி -  DECEMBER  2019 இதழில் பிரசுரமானது)
 
suresh kannan

Tuesday, December 24, 2019

Uncut Gems (2019) - வைரத்துடன் ஒரு சூதாட்டம்உண்மையில் எரிச்சலூட்டும் திரைப்படமாகத்தான் துவக்கத்தில் இது எனக்குத் தோன்றியது. ஆனால் பிறகு மெல்ல மெல்ல என்னை உள்ளே இழுத்துக் கொண்டதற்குக் காரணம் இதன் அபாரமான திரைக்கதையும் ஆடம் சாண்ட்லரின் அட்டகாசமான நடிப்பும். அவரது தொழில் வாழ்க்கையிலேயே ‘இதுதான் அவரது மிகச்சிறந்த நடிப்பு’ என்று விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தில் அவரது தோற்றத்தையும் உடல்மொழியையும் முதலில் கவனிக்கிற போது எனக்கு சற்று குமட்டுவது போல் கூட இருந்தது. ஆனால் ஹோவர்ட் என்கிற அவரின் கதாபாத்திரத்துடன் நெருக்கமாக பயணிக்கிற போது மெல்ல மெல்ல அவர் சுவாரசியமான மனிதராக தென்படத் துவங்கி விடுகிறார்.

உண்மையில் ஹோவர்ட் எப்படிப்பட்டவர்? நகைச்சுவை நடிகர் வடிவேலுவை யாராவது நாலைந்து நபர்கள் நன்றாக மொத்தி விட்டு மூச்சு வாங்க நிற்கும் போது ‘அடிச்சுட்டிங்க இல்லை. இனி ஒருத்தன் என் முன்னால நிக்கக் கூடாது. Be careful’ என்று அவர்களிடம் வடிவேலு கெத்துடன் சொல்வார் அல்லவா? ஏறத்தாழ அப்படியொரு பாத்திரம்தான் ஹோவர்ட். அவமானத்திற்கு அசிங்கப்படாத சிங்கம்.

சிலர் தங்களுக்கு ஆதாரமாக, நன்கு தெரிந்த வணிகத்தில் நிலைக்க மாட்டார்கள். பேராசையுடன் வெவ்வேறு தொழில்களில் விழுந்து எழுந்து கொண்டே இருப்பார்கள். பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்யாமல் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு, மாட்டைத் தூக்கி கழுத்தில் போட்டு என்று சகலவிதமான குளறுபடிகளையும் செய்து கொண்டே ஒரு நாள் பொத்தென்று வீழ்வார்கள்.

இப்படியான மனிதர்கள் சிலரை என் வாழ்விலேயே நெருக்கமாக பார்த்திருக்கிறேன். அவர்களிடம் மெல்ல பணம் பெருகும் போது அசட்டுப் பெருமிதமும் அலட்டலும் உயர்ந்து கொண்டே போகும். அப்படியான ஒருவரிடம் எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை நான் பெறச் சென்ற போது பணக்கட்டை சற்று அலட்சியமாக மேஜையில் எறிந்தார். அது என்னை மட்டுமல்லாமல் பணத்தையுமே மரியாதைக் குறைவாக கையாண்டது போல் தெரியவே, சற்று கோபத்துடன் அவரிடம் இது குறித்து எச்சரித்தேன். சுதாரித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார். பின்பு அவரின் திடீர் வளர்ச்சி, சொந்த செலவு சூன்யம் போல பல வணிகக் குளறுபடிகளால் குழம்பி தடுமாறி மெல்ல மெல்ல வீழ்ந்த போது குடும்பச் செலவிற்குக் கூட பணமில்லாமல் பல நாள் தாடியுடன் நின்று கொண்டிருந்த அவரை ஒரு நாள் பார்த்த போது பரிதாபமாக இருந்தது.

ஹோவர்ட்டும் இப்படித்தான்.  நியூயார்க் நகரில் நகைக்கடை வைத்திருக்கிறார். ஆனால் தொழிலில் கவனம் செலுத்த விடாமல் அவரைப் பிடித்திருப்பது சூதாட்டம் என்னும் பூதம். அந்தப் பூதம் அவரின் மண்டையைத் தொடர்ந்து பிறாண்டிக் கொண்டே இருக்கிறது. மற்ற எதைப் பற்றியும், எவரைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பூதம் அழைக்கும் திசையெல்லாம் நகர்ந்து கொண்டே இருக்கிறார். குடும்பம், உறவு, நிறுவனம், நட்பு என்று பல விதங்களில் அவமானப்பட்டாலும் எதுவுமே அவருக்கு உறைப்பதில்லை.

**

எத்தியோப்பியாவிலுள்ள ஒரு சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, வைரங்கள் அடங்கிய பாறைத் துண்டு ஒன்று ஹோவர்டிற்கு வந்து சேர்கிறது. தன் கடைக்கு வரும் கூடைப்பந்து விளையாட்டு வீரனான ‘கெவினுக்கு’ அந்தப் பாறைத் துண்டை ‘பல மில்லியன் மதிப்புள்ளது’ என்கிற பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறான் ஹோவர்ட். கெவின் கருப்பினத்தைச் சேர்ந்தவன். அந்தப் பாறைத் துண்டைத் தொட்டவுடன் நேர்மறையான அதிர்வுகளை அடைகிறான். தன்னிடம் அது இருந்தால் ‘ராசி’யாக இருக்கும் என நம்புகிறான். அதன் மூலம் விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிக்க முடியும் என்று கருதுகிறான்.

எனவே ‘நாளை காலையில் இதைத் தருகிறேன்’ என்று எடுத்துச் செல்ல முயல்கிறான். அந்த வைரத்தை ஏலத்தின் மூலம் விற்று பெரும்பணம் அடைய திட்டமிட்டிருக்கும் ஹோவர்ட் இதை ஆட்சேபிக்கிறான். எனவே கெவின் தான் அணிந்திருக்கும் சாம்பியன்ஷிப் மோதிரத்தை அடமானமாக வைத்து வைரத்தை எடுத்துச் செல்கிறான்.

ஹோவர்ட் அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு போய் அடமானமாக வைத்து பணம் பெற்று கூடைப்பந்து விளையாட்டு தொடர்பாக நிகழும் சூதாட்டத்தில் வைக்கிறான். முன்னாள் கடன்தாரர்கள் அவனை நிழலாகத் துரத்திய போதும் அவர்களுக்கு டிமிக்கி தந்து இதனைச் சாதிக்கிறான். எரிச்சலுறும் அவர்கள் இவனை நன்றாக மொத்தி ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். தன் மனைவியின் முன்னால் அசடு வழிய நிற்கிறான் ஹோவர்ட்.

இப்படியே பல தகிடுதத்தங்களை அவன் செய்து கொண்டே, தன் அலுவலக உதவியாளினியும் விசுவாசமான காதலியுமான ஒருத்தியின் மூலம் பெரும் பணத்தை சூதாட்டத்தில் சம்பாதிக்கிறான். ஆனால்.. ஹோவர்டிற்கு என்ன நிகழ்ந்தது என்பதை ‘டார்க் ஹியூமரோடு’ இறுதிக்காட்சிகள் விவரிக்கின்றன.

வைரத்தின் தரத்தைப் பொறுத்து அது அதிர்ஷ்டத்தை அள்ளியும் கொட்டும், அழித்தும் போடும்’ என்று உலகமெங்கிலும் ஒரு நம்பிக்கையுண்டு.அதை மெய்ப்பிக்கும் விதமாக இதன் திரைக்கதை அமைந்துள்ளது.

**

ஹோவர்ட் ஆக ‘ஆடம் சாண்ட்லர்’ ரகளையாக நடித்திருக்கிறார். சுற்றியுள்ள பாத்திரங்கள் மட்டுமல்லாது பார்வையாளர்களின் எரிச்சலையும் ‘என்னடா ஆள் இவன்’ என்கிற எள்ளலையும் அதே சமயத்தில் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொள்ளும் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். படத்தின் காட்சிகள் பெரும்பான்மையும் இவரது ஆக்கிரமிப்பில்தான் உள்ளது.

விளையாட்டு வீரன் கெவின் மற்றும் அவனது ஆட்களுக்கு இடையே ஹோவர்ட் நிகழ்த்தும் குழப்பமான உரையாடல்கள் மற்றும் உரசல்களுடன்தான் படம் துவங்குகிறது. ஹோவர்ட்டின் பாத்திரத்தைப் பற்றி நாம் உணர்ந்து கொள்கிற போது, சரவெடி போல படம் மெல்ல மெல்ல வேகம் கொள்ளத் துவங்குகிறது.

ஆடம் சாண்ட்லர் பிறப்பால் ஒரு யூதர் என்பதால் திரைப்படத்திலும் இவை தொடர்பான காட்சிகள், கிண்டல்கள் வருகின்றன. இவர் அடிப்படையில் ஒரு நகைச்சுவை நடிகர் என்றாலும், அதன் சாயல் இதில் பெரிதும் வெளிப்படாதவாறு தீவிரத் தொனியில் நடித்துள்ளார்.

Safdie சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தை 2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.


suresh kannan

Monday, December 23, 2019

The BFG - சோஃபியின் ராட்சத நண்பன்

ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்பீல்பெர்க்கை நமக்குத் தெரியும். சுறாமீன்கள், டைனோசர்கள் போன்றவைகளை வைத்து பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கியவர். அவருடைய சமீபத்திய திரைப்படமான 'The BFG' -ம் ஒருவகையில் பிரம்மாண்டமான திரைப்படம்தான்.

ஆம். இதிலும் பெரிய பெரிய உருவங்கள் வருகின்றன. மனிதர்களை தின்னும் அரக்கர்கள் அவர்கள்.  அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல, வயதான விஸ்வரூபனும் இருக்கிறார். சோஃபி எனும் சிறுமிக்கும் அவருக்கும் இடையே நிகழும் நகைச்சுவையான, நெகிழ்வான சம்பவங்களை விவரிக்கும் ஜாலியான திரைப்படம் இது.


***


பத்து வயதான சோஃபி எனும் சிறுமி அநாதை விடுதியில் இருப்பவள். தூக்கம் வராத குறைபாடுள்ள அவள் ஒரு நாள் நள்ளிரவில் ஜன்னலின் வழியே சாலையில் ஒரு பிரம்மாண்டமான உருவம் உலவுவதைப் பார்த்து திகைத்துப் போகிறாள். தன்னைப் பார்த்து விட்டதால் 'இவள் ஊர் முழுக்க சொல்லி விடுவாள்' என்கிற காரணத்திற்காக அவளை  தன்னுடைய இடத்திற்கு தூக்கிச் செல்கிறது அந்த உருவம். கடல், மலையைக் கடந்த, பிரம்மாண்டமான அரக்கர்கள் வாழும் பிரதேசம் அது. அந்தப் பிரதேசத்திற்கேயுரிய விநோதமான பழக்க, வழக்கங்கள்.

சோஃபி மிகவும் பயந்து போய் விடுகிறாள். ஆனால் அவளைத் தூக்கிச் சென்ற உருவம் ஒரு வயதான கிழம். அவளிடம் சகஜமாக உரையாடுகிறது. 'நீ  இனி வாழ்நாள் முழுவதும் என்னிடம் இருக்க வேண்டும்' என்கிறது.  சோஃபிக்கு இன்னமும் பயம் தெளியாவிட்டாலும், அநாதை விடுதியில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு இந்த  விநோதமான சூழல் கவர்கிறது. கிழத்துடன் வம்பளக்க ஆரம்பித்து விடுகிறாள். வார்த்தைகளை தப்பும் தவறுமாக உச்சரிக்கும் கிழத்தைக் கண்டு  சோஃபிக்கு சிரிப்பு வருகிறது.

ஆனால் அந்தப் பிரதேசத்தில் 'மனிதர்களை அப்படியே  விழுங்கி விடும் பெரிய பூதங்கள் இருக்கின்றன' என்று எச்சரிக்கிறார் கிழவர். 'அவர்களிடம் மாட்டிக் கொள்ளாதே'

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கிழவரின் வீட்டிற்குள் ஒரு ராட்சச உருவம் உள்ளே நுழைகிறது. கிழவரை விடவும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது அது.  மனித வாடையை முகர்ந்து விட்டு எங்கே என்று தேடுகிறது. சோஃபியை கிழவர் சாமர்த்தியமாக உயிர் தப்ப வைக்கிறார்.

***

கிழவர் வெளியே கிளம்புகிறார். 'எங்கே?' என்று கேட்கிறாள் சோஃபி. விதம் விதமான கனவுகளை பாட்டில்களில் பிடித்து சேகரிப்பது கிழவரின் பொழுதுபோக்கு. நீல வண்ணம் என்றால் சந்தோஷமான கனவுகள். சிவப்பு நிறம் என்றால் பயமுறுத்தும், மோசமான கனவுகள். 'தானும் வருவேன்' என்று அடம்பிடிக்கிறாள் சோஃபி. 'வெளியே ராட்சசர்கள் இருப்பார்கள்' என்று எச்சரிக்கிறார் கிழவர். சோஃபி பிடிவாதம் பிடிப்பதால் அழைத்துச் செல்கிறார்.

மனித வாசனையை உணர்ந்து ராட்சசர்கள் விழித்துக் கொண்டு சோஃபியை தேடுகிறார்கள். அவர்களிடமிருந்து இருவரும் எப்படியோ தப்புகிறார்கள். விதம் விதமான கனவுகளைக் கண்டு மகிழ்கிறாள் சோஃபி. அவற்றுடன் துரத்தி விளையாடுகிறாள்.

அந்தக் கனவுகளை ஊருக்குள் எடுத்துச் சென்று மனிதர்களுக்குள் செலுத்துவது கிழவரின் வேலைகளுள் ஒன்று. 'சிறுவர்களுக்கு நல்ல கனவுகளை மட்டும் செலுத்து' என்கிறாள் சோஃபி. கிழவரும் அப்படியே செய்கிறார்.


சோஃபியை ஊருக்குள்ளே விட்டு விட்டு கிழவர் மறைகிறார். ஆனால் அவருடன் மறுபடியும் ராட்சச பிரதேசத்திற்கு செல்ல வேண்டுமென்று சோஃபி துடிக்கிறாள். கிழவர் தன்னை மறைந்திருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். எனவே மாடியின் மேலேயிருந்து கீழே விழுகிறாள். கிழவரின் கை  அவளைத் தாங்கிப் பிடிக்கிறது.

'இதற்கு முன் உன்னைப் போலவே என்னை பார்த்து விட்ட ஒரு சிறுவனை எங்கள் பிரதேசத்திற்கு தூக்கிச் சென்றேன். பாவி, ராட்சசர்கள், அவனைத் தின்று விட்டார்கள். உனக்கும் அந்தக் கதி வர வேண்டாம்' என்கிறார் கிழவர். சோஃபி பிடிவாதம் பிடிக்க தன்னுடன் அழைத்துச் செல்கிறாள்.


***

சோஃபியின் போர்வை தவறுதலாக ராட்சசர்களிடம் சிக்கிக் கொள்கிறது. அதிலிருக்கும் வாசனையை  வைத்து கிழவர், சிறுமியை வீட்டிற்குள் ஒளித்து வைத்திருக்கிறார் என்று அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். கிழவரின் வீட்டிற்குள் நுழைந்து எல்லாவற்றையும்  கலைத்துப் போட்டு தேடுகிறார்கள். பாட்டில்கள் உள்ள கனவுகள் உடைந்து சிதறுகின்றன. அவர்களை விட உருவத்தில் சிறியதாக இருக்கும் கிழவரால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சில பல போராட்டங்களுக்குப் பிறகு இருவரும் உயிர் தப்புகிறார்கள்.


தன்னுடைய புத்திசாலித்தனத்தை வைத்து கிழவரை தப்ப வைக்க வேண்டும்,  ராட்சசர்களை தண்டிக்க வேண்டும் என்று சோஃபி திட்டமிடுகிறாள். அதன்படி அந்த ஊரின் ராணியின் கனவில் ஒரு பயங்கரமான கனவை கிழவரின் மூலம் வரவழைக்கிறாள். ராட்சசர்களின் கொடுமை பற்றி ராணியால் உணர முடிகிறது. பின்னர் கிழவரும் சோஃபியும் ராணியிடம் சென்று தங்களின் பிரச்சினையைச் சொல்கிறார்கள்.

தன்னிடமுள்ள படைகளை அனுப்புகிறாள் ராணி. அவர்கள் ராட்சசர்களையெல்லாம் பிடித்து கடலில் போட்டு விடுகிறார்கள். கிழவர் தன்னுடைய பிரதேசத்தில் ஜாலியாக இருக்கிறார். தன்னை  அவர் எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பார் என்கிற நினைவில் சோஃபி சந்தோஷமடையும் விஷயத்தோடு படம் முடிகிறது.

***

கிழவரின் வீடு, வண்ண வண்ண கனவுகள், ராட்சசர்களின் அட்டகாசங்கள் போன்ற காட்சிகளும் சம்பவங்களும் கிராஃபிக்ஸில் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. ராணியின் உபசரிப்பில் கிழவர் விருந்துண்ணும் காட்சிகள் சிரிப்பை வரவழைப்பவை.

ஒரு ஜாலியான, வண்ணமயமான  ஃபேண்டஸி திரைப்படம் - The BFG. (SRV டைம்ஸில் பிரசுரமானது) 


suresh kannan

Sunday, December 22, 2019

Spider-Man: Into the Spider-Verse (2018)


சிலந்தி மனிதர்களின் பிரபஞ்ச சாகசங்கள்


‘ஸ்பைடர் மேன்’ என்கிற சிலந்தி மனிதனைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். காமிக்ஸ் உலகின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர். ஸ்டேன் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் இந்தப் பாத்திரத்தை உருவாக்கினர். காலத்திற்கேற்ப ஸ்பைடர் மேனின் தோற்றமும் மாறிக் கொண்டே வருகிறது.

அவ்வாறான நவீன ஸ்பைடர் மேனைப் பற்றிய திரைப்படம்தான் Spider-Man: Into the Spider-Verse. இதில் ஒன்றல்ல,  குட்டி உருவம் முதற்கொண்டு பல ஸ்பைடர் மேன்கள் வந்து சாகசம் புரிகிறார்கள் என்பதுதான் ஆச்சரியமும் சுவாரசியமும்.

**

Miles Morales பதின்ம வயதில் உள்ள பள்ளி மாணவன். சராசரித்தனமான பள்ளி மற்றும் மாணவர்களோடு பழக விரும்புகிறவன். ஆனால் காவல்அதிகாரியான அவனது தந்தைக்கு ஸ்பைடர்மேன் என்றாலே பிடிக்காது. அவர் மைல்ஸை உயர்தர பள்ளியில் சேர்க்கிறார். வேண்டாவெறுப்பாக செல்கிறான் மைல்ஸ்.

தனது குறைகளை, தனது மாமாவான ஆரோனிடம் சென்று புலம்புகிறான் மைல்ஸ். அவர் ரயில் சுரங்கப்பாதையின் பின்னால் இருக்கும் ரகசிய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு இருவரும் சுவர் ஓவியம் தீட்டி மகிழ்கிறார்கள். அப்போது இயந்திர சிலந்திப்பூச்சி ஒன்று மைல்ஸை கடித்து விடுகிறது. அப்போதைக்கு அலட்சியப்படுத்திச் சென்றாலும் தன் உடம்பில் ஸ்பைடர்மேனின் தன்மைகளைப் போன்று உருவாகும் மாற்றங்களைக் கண்டு திகைக்கிறான் மைல்ஸ்.

தன்னை எது கடித்தது என்று அறிவதற்காக மறுபடியும் அங்கு செல்கிறான். ஆனால் அவன் அங்கு காண்பது ஆபத்தான விஷயம். ஸ்பைடர்மேனின் பிரதான வில்லன்களில் ஒருவனான கிங்பின், விபரீதமானதொரு ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் இறந்து போன தன் மனைவி மற்றும் மகனைப் போன்றவர்கள் வேறு இணை பிரபஞ்சங்களில் (parallel universes) இருக்கிறார்களா என்பதை துகள் முடுக்கியின் மூலம் (Particle accelerator) தேடுகிறான். அப்போது சீனியர் ஸ்பைடர்மேனுக்கும் கிங்பின்னின் அடியாட்களுக்கும் உக்கிரமான சண்டை நடக்கிறது. இந்த சாகசத்தில் இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுவதோடு சீனியர் ஸ்பைடர்மேனும் இறந்து போகிறார்.

அவர் இறப்பதற்கு முன் மைல்ஸிடம் பென்டிரைவ் ஒன்றைத் தந்து அதன் மூலம் இயந்திரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அது மீண்டும் செயல்பட்டால் நகரமே அழிந்து விடும் என்றும் கோரிக்கை விடுக்கிறார்.

தன்னால் இதைச் சாதிக்க முடியுமா என்று பெரிதும் தயங்குகிறான் மைல்ஸ். இணைப்பிரபஞ்சங்களில் உள்ள வெவ்வேறு ஸ்பைடர்மேன்கள் இவனுடைய உதவிக்கு வருகிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை பிரமிக்கத்தக்க வரைகலை உத்தி, அட்டகாசமான பின்னணி இசை மற்றும் சாகசங்களின் மூலம் விவரித்திருக்கிறார்கள்.

**

ஒரு கருப்பின சிறுவனை ஸ்பைடர்மேன் பாத்திரத்தில் சித்தரித்திருப்பது இந்த திரைப்படத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று. காமிக்ஸ் புத்தகங்களில் வருவதைப் போன்றே பல காட்சிகளின் பின்னணியில் வார்த்தைகள் தோன்றுவது சுவாரசியமானது. அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் இந்தப் படைப்பை சிறார்கள் நிச்சயம் கண்டுகளிக்க வேண்டும்.


(SRV டைம்ஸில் பிரசுரமானது)

suresh kannan

Saturday, December 21, 2019

தமிழில் சினிமா பற்றிய நூல்கள்
சினிமா கலாசாரத்தை கடந்த ஒரு கலை. என்றாலும் அதன் கோட்பாடுகளை அறிந்து கொள்ள மொழி வழியிலான நூல்கள் தேவை. சினிமா ரசனை, உருவாக்கம், நுட்பம், கோட்பாடு போன்ற வகைமைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு நூல்கள் உள்ளன. இவற்றோடு ஒப்பிடும் போது, சினிமாவை சுவாசிக்கிற தமிழ் சமூகத்தில் அது தொடர்பான நூல்கள் குறைவுதான் என்றாலும் இங்கும் குறிப்பிடத்தக்க படைப்புகள் உள்ளன. அவைகளில் முக்கியமானவற்றில் சிலதைப் பற்றி பார்ப்போம்.

எளிமையான, அடிப்படையான நூல் வரிசையிலிருந்து துவங்கினால், அறந்தை நாராயணனின் ‘தமிழ் சினிமாவின் கதை’ நூலில் இருந்து ஆரம்பிக்கலாம். நாடக மரபு துவங்கி மெளனப் பட காலக்கட்டத்தைத் தொடர்ந்து எண்பதுகள் வரையான தமிழ்த் திரைப்படங்களின் பல்வேறு ஆதாரமான தகவல்களைத் தருகிறது. தியோடர் பாஸ்கரனின் ‘பாம்பின் கண்’ என்கிற மொழியாக்க ஆய்வுநூல் பல அடிப்படையான தகவல்களுடன் இதன் வரலாற்றை இன்னமும் துல்லியமாக்குகிறது. ‘எம் தமி்ழர் செய்த படம்” ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’ ஆகிய அவருடைய மற்ற நூல்கள் தமிழ் சினிமாவின் அடிப்படை வரலாற்றை சிறப்பான தரவுகளுடன் பதிவாக்கியிருக்கிறது. இந்த வகையில் தியோடர் பாஸ்கரன், ரேண்டார் கை போன்றோர்களை தமிழ் சினிமா நூலின் முன்னோடிகள் என்றே சொல்லலாம்.

அம்ஷன் குமாரின் ‘சினிமா ரசனை’, ஓவியர் ஜீவாவின் ‘திரைச்சீலை’ (தேசிய விருது பெற்றது) ஆகிய நூல்கள், சினிமாவை சரியானபடி நுகர்வதற்கான அடிப்படையான வெளிச்சத்தை சராசரி பார்வையாளனுக்கு அளிக்கின்றன. ‘வாங்க, சினிமாவைப் பற்றி பேசலாம்’ என்கிற இயக்குநர் பாக்யராஜின் நூல், வெகுசன சினிமா உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள சுவாரசியமான தகவல்களை ஜனரஞ்சக மொழியில் பேசுகிறது.

உலக சினிமாவைப் பற்றிய எளிமையான அறிமுகத்தை வெகுசன இதழில் செழியன் எழுதிய உலக சினிமா’ தொடர் அளித்தது. தீராநதியில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘அயல் சினிமா’ தொடரும் முக்கியம் வாய்ந்தது. உலக சினிமா குறித்து அவர் எழுதி தொகுத்திருந்த நூலும் கவனிக்கத்தக்கது. ஒரு சினிமாவைப் பற்றி பிரத்யெகமான முழு நூல் தமிழில் வருவதெல்லாம் மிக அபூர்வம். ‘பதேர் பாஞ்சாலி’ என்கிற வங்க சினிமாவைப் பற்றி எஸ்.ரா எழுதிய பிரத்யேகமான நூல் அவசியம் வாசிக்க வேண்டியது.

‘தமிழ் சினிமாவின் பரிணாமங்கள்’ என்கிற விட்டல்ராவின் நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது. இவரின் இன்னொரு நூலான ‘நவீன கன்னட சினிமா’  நாம் அறியாத, அண்டை மாநில கலையுலகத்தைப் பற்றிய பல சுவாரசியமான கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.

ஆய்வு ரீதியிலான சினிமா நூல்களும் தமிழில் உள்ளன. கார்த்திகேசு சிவத்தம்பியின் ‘தமிழ்ப் பண்பாட்டில் சினிமா’ என்பது ஒரு முன்னோடி நூல். ஹங்கேரி அறிஞரான பேல பெலாஸ் எழுதிய சினிமா கோட்பாடு பற்றிய நூல் எண்பதுகளிலேயே தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு விட்டது. எம்.சிவக்குமார் சிறப்பாக மொழிபெயர்த்த இந்த நூல் சமீபத்தில் புதிய பதிப்பாகவும் வெளியாகியுள்ளது. ‘திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (பிரேம்), கதாநாயகனின் மரணம் (ராஜன்குறை), ‘சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு’ (எம்.சிவக்குமார்), திரை அகம் (ஆனந்த் பாண்டியன்), சினிமா: சட்டகமும் சாளரமும் (சொர்ணவேல்) போன்றவை குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள்.

ப.திருநாவுக்கரசின் ‘சொல்லப்படாத சினிமா’, உலக ஆவணப்படங்கள் மற்றும் இந்திய, தமிழ் ஆவணப்படங்களைப் பற்றி விரிவாக பதிவு செய்திருக்கும் நூல். இவர் தொகுத்த ‘மக்களுக்கான சினிமா’ பல சர்வதேச கலைஞர்களின் சுயாதீன முயற்சிகளைப் பதிவு செய்திருக்கிறது. எஸ்.ஆனந்தின் ‘திரைப்பட மேதைகள்’ ஐரோப்பிய சினிமா இயக்குநர்களைப் பற்றிய மிகச்சிறந்த அறிமுகத்தை அளிக்கிறது. ‘சத்யஜித் ரே, திரைமொழியும் – கதைக்களமும் எனும் நூல், அந்த திரைமேதையின் ஆக்கங்களைப் பற்றிய மிகச் சிறந்த நூல். லதா ராமகிருஷ்ணன் இந்நூலை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

நாட்டுப்புற ஆய்வியலாளரான டி.தர்மராஜ் எழுதிய கபாலி: திரைக்கதையும், திரைக்கு வெளியே கதையும் எனும் நூல் ஒரு வெகுசன சினிமாவையொட்டி சமூகத்தின் புறச்சூழலையும் இணைத்து ஆராய்வது சுவாரசியமானது. பிரெஞ்சு இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் வெ.ஸ்ரீராமின் ‘புதிய அலை இயக்குநர்கள்”, பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு நூல்களும் இந்த வரிசையில் முக்கியமானவை. வெங்கடேஷ் சக்ரவர்த்தி, சுபகுணராஜன், சுந்தர்காளி போன்றவர்களின் சினிமா கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சினிமா நூல்களின் விற்பனைக்கென்றே பிரத்யேகமாக உருவாகியிருக்கும் ‘பியூர் சினிமா’ என்கிற நூல் அங்காடி, சினிமாவின் முக்கியத்தை அறிவுசார் சமூகம் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தாலும் கடக்க வேண்டிய தூரம் இன்னமும் நீளமாகவே உள்ளது. 


(தி இந்து தமிழ் நாளிதழில் பிரசுரமானது) 


suresh kannan

Friday, December 20, 2019

மம்முட்டி என்கிற மனிதன்
மம்முட்டி எனக்குப் பிடித்த நடிகர்தான் என்றாலும் ஒரு நடிகரின் வாழ்வனுபவங்களில் என்ன இருக்கப் போகிறது, அப்படியே இருந்தாலும் அது பொய்யும் புனைவுமாய் திரையைப் போலவே மிகை ஒப்பனையுடன்தானே பதிவாகியிருக்கப் போகிறது என்கிற அசுவாரஸ்யத்துடனும் தவறான முன்முடிவுடனும்தான் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.


அது, மூன்றாம் பிறை –  வாழ்வனுபவங்கள்.


மம்முட்டி என்கிற நடிகரைப் பற்றிய நூலாக அல்லாமல் பெரும்பாலும் ஒரு தனிநபரின் முகமாக  அமைந்திருப்பதே இந்த நூலின் சிறப்பு. தனது திரையுலக அனுபவங்களைத் தாண்டி தம் சொந்த வாழ்வின் அனுபவங்கள் பலவற்றையும் ஒப்பனையின்றி ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் மம்முட்டி. தமிழில் இப்படி எந்தவொரு நடிகராவது உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் எழுதுவாரா என்று சற்று நேரம் யூகித்துப் பார்த்தேன். தம் சுயநிறங்களை ஒரு வாக்குமூலம் போல ஒப்புக் கொள்ளும் மம்முட்டி தான் சறுக்கிய தருணங்களையும் பிறகு அதை உணர்ந்த பக்குவத்தையும் பாவ மன்னிப்பின் நெகிழ்ச்சியோடு எழுதியுள்ளார்.


***

முகம்மது குட்டி என்கிற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ஓமர் ஷெரீப் போன்று ஒரு நடிகனாகும் விருப்பத்தில் அதையே தன் பெயராக வைத்துக் கொள்கிறான்.கல்லூரி நண்பர்களால் அந்தப் பெயராலேயே அறியப்படுகிறான். ஒருநாள்  சக நண்பனொருவனால் இயற்பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவன் 'மம்முட்டி' என வேடிக்கையாக அழைக்க, பிடிக்காமலிருந்த அந்தப் பெயரே தன் அடையாளமாகி வாழ்நாள் முழுவதும் தன் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரும் சுவாரசியமான கட்டுரையோடு துவங்குகிறது இந்த நூல். (பிடிக்காமலிருந்த என் பெயர்)

தான் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, தன்னை தினமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் ‘சார்.. நீங்க ஏன் சினிமா நடிகராகக்கூடாது. அதற்கான முகவெட்டு உங்களுக்கு இருக்கிறது’ என்கிறான். சினிமா ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்த வழக்கறிஞருக்கு உள்ளுக்குள் ஜிலீர் என்கிறிருக்கிறது.

பிறகு புகழ்பெற்ற நடிகராகின பிறகு தன்னை வேடிக்கை பார்க்க முண்டியடிக்கும் கூட்டத்தில் போலீஸ்காரரால் அடிபட்டு ரத்தம் ஒழுகிய அந்த இளைஞனின் முகத்தை, பிரியத்துடன் தன்னை அழைத்த அந்தக் குரலை எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று யோசித்துப் பார்த்திருக்கிறார். பிறகுதான் அந்தச் சிறுவனின் நினைவு வருகிறது. தனக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுபிடித்த முதல் ரசிகனை பிறகு காண முடியவில்லை என்கிற துயரத்தை உண்மையாக பதிவு செய்கிறார். எப்படியாவது தேடிக் கண்டுபிடித்திருக்கலாமே என்று நமக்கே ஆதங்கம் பெருகுமளவிற்கு அந்த அனுபவம் அமைகிறது. (முதல் ரசிகனின் ரத்தம் தோய்ந்த முகம்).

பழங்குடி கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில்  மம்முட்டி நடிக்கிற போது துணை நடிகர்களாக உண்மையான பழங்குடி மனிதர்களே வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.  கும்பலாக அமர்ந்து உணவருந்துவது போன்ற காட்சி. கேமராவின் பொய்களுக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி உணவருந்த அவர்களுக்குத் தெரியவில்லை. சோறு கொட்டக் கொட்ட சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மம்முட்டியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு மம்முட்டி யாரென்று தெரிவதில்லை. அறிமுகமில்லாவிட்டாலும் எவரோ ஒரு நாடோடி போல என நினைத்து, மம்முட்டியின் இலையில் அவியல் தீர்ந்து போன போது தன்னிச்சையாக தன் இலையில் இருந்து அவியலை வாரி வைத்திருக்கிறார்.

முன்பின் அறிமுகமில்லா ஒருவனின் இலையில் உணவு தீர்ந்த போது எவ்வித தயக்கமுமில்லாமல் தன்னிடமிருந்து பகிர்ந்தளிக்கும் பழங்குடி மனோபாவத்தை மம்முட்டி நெகிழ்வுடன் வியக்கிறார். அவர்களைத்தான் நாகரிகம் அறியாதவர்கள் என்று உணவைப் பதுக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். (கற்றுணர்தல்)

பிரசவ வலியுடன் சாலையில் காத்திருந்த பெண்ணுக்கு உதவியதில் அவர் தந்தை தந்த இரண்டு ரூபாய், படப்பிடிப்பு நடந்த வீட்டின் உரிமையாளர் மகனை வெளியேறச் சொன்ன கோபம், சக நடிகை பகிர்ந்து கொண்ட அந்தரங்கமான துயரம், ஏமாற்றிய தயாரிப்பாளரிடமிருந்து வசூலிக்காமல் போன பணம், ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் மலையாளிகளை கண்டிக்கும் நேர்மை,  பெண்களை மதிப்பதை அமிதாப்பச்சனிடமிருந்து கற்றுக் கொண்ட சம்பவம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

மம்முட்டிக்குள் ஓர் அபாரமான எழுத்தாளன் ஒளிந்திருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையான எழுத்து. மலையாளத்தில் இதன் மொழி எப்படி இருந்திருக்கும் என்கிற யூகத்தை தனது இலகுவான  தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார் ஷைலஜா.

மிகவும் சுவாரசியமான நூல். வம்சி வெளியீடு


suresh kannan

Thursday, December 19, 2019

உறுமீனில் மறையும் சிறுமீன்கள்

பெருமுதலீட்டு திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவை  தங்களது அத்தனை வணிகத் தந்திரங்களையும் மிருக பலத்துடன் பயன்படுத்தி ஏறத்தாழ ஒட்டுமொத்த சந்தையையும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. தயாரிப்பு பற்றிய ஆரம்பக்கட்ட தகவல் துவங்கி அந்த திரைப்படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு சலிப்புண்டாகும் வரை இது சார்ந்த பரபரப்பு பொதுவெளியில் குறையாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இதன் சமீபத்திய உதாரணம் பாகுபலி-2.


இவ்வாறான ஆக்ரமிப்பினால் பல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் வெளியாவதில் பல்வேறு விதமான சிக்கல்கள் நேர்கின்றன என்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பும், பல திறமைசாலிகளின் உழைப்பும் எவருக்கும் பயனில்லாமல் டிஜிட்டலில் உறைந்து கிடக்கின்றன. பிரதானமான அரங்குகள், நேரங்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக இருக்கிறது.

அரசியலும் திரைத்துறையும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதால் நிகழும் திரையரசியல் விளைவு இது.  பல காத்திருப்புகள், சிக்கல்களுக்குப் பிறகு சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு அரங்குகள் கிடைத்தாலும் அது  நிரந்தரமில்லை. இது போன்ற புதிய முயற்சிகளுக்கு பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பில்லை என்கிற மெல்லிய சமிக்ஞை கிடைத்தாலும் கூட போதும், உடனே அந்த திரைப்படம் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது.

பிரம்மாண்டமாக சந்தைப்படுத்துதல் எனும் பலம் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு இருப்பதில்லை. அவை சிறப்பாக அமைந்திருந்தால் கூட, முதல் கட்ட பார்வையாளர்கள் கண்டபிறகு அவர்களின் வாய்மொழி வழியாகத்தான் மெல்ல அதன் புகழ் பரவும். ஆனால் லாபவெறி மிகுந்திருக்கும் சூழலில் அவ்வாறான அவகாசம் அளிக்கப்படுவதில்லை. ஒரு சிறுமுதலீட்டுத் திரைப்படம் சுவாரசியமானது என ஒருவர் கேள்விப்பட்டு இரண்டு நாட்கள் தாமதமாகச் சென்றாலும் கூட, அது அரங்கத்தில் தொடர்ந்து திரையிடலில் இருக்கும் என்கிற உத்திரவாதமில்லை. உடனே தூக்கப்பட்டு விடுகிறது. பிறகு கள்ள நகல்கள் மூலமோ, தொலைக்காட்சியின் வழியாகவோ பார்க்க காத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பெருமுதலீட்டுத் திரைப்படம் வெளியாகும் போது, மன்னர் வருகையின் போது எளிய சமூகத்தினர் ஒதுக்கப்படுவது போல சிறுமுதலீட்டுத்திரைப்படங்களுக்கான கதவுகள் உடனே அடைக்கப்படுகின்றன. அவை அப்புறப்படுத்தப்படுகின்றன. நாம் எந்த திரைப்படத்தைக் காண வேண்டும் என்பதைக் கூட வணிக அரசியலே தீர்மானிக்கும் அவலமான சூழல்.


இதற்கு திரைத்துறையினரையோ, திரையரங்கு உரிமையாளர்களையோ மட்டும் பெரிதும் குறைசொல்லி பலனில்லை. லாபம் ஈட்டாத ஒரு செயலைச் செய்ய வணிகர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான தர்க்கம்தான். ஒரு சிறுமுதலீட்டுத் திரைப்படம் வெளியாகும் தகவலை முன்னமே அறிந்து, அதன் முன்னோட்டக் காட்சிகளையொட்டி அது சுவாரசியமானதாக இருக்கும் என யூகித்தால் முதல் சில நாட்களுக்கு உள்ளாகவே அதற்கு ஆதரவளித்தால்தான் அதன் இருப்பு நீடிக்கும்.

இது சார்ந்த மனோபாவத்தையும் கலாசாரத்தையும் நாம் பழக வேண்டும். மிக குறிப்பாக சினிமாவின் மீது விருப்பமுள்ள நபர்களும் திரை ஆர்வலர்களும் இதை ஒரு கடமையாகவே செய்யலாம். நல்ல முயற்சி என அறியப்படும் ஒரு திரைப்படத்தைப் பற்றிய பரப்புரையை இயன்ற வழிகளில் எல்லாம் சாத்தியப்படுத்தலாம்.

சமீபத்தில் வெளியான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் கவனிக்கப்படாமல் போன ஆனால் கவனிக்கப்பட வேண்டிய  முயற்சிகளுள் சிலவற்றைப் பற்றி சுருக்கமாக பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அவ்வாறான சில திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம்.காதல் கண்கட்டுதேபரவலாக கவனிக்கப்படாமல் மறைந்து போன நல்ல முயற்சிகளுள் இதுவொன்று. ஆண் x பெண் உறவுச்சிக்கல் என்பது கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. தீரவே தீராதது. தொடர்ந்து ஆராயப்பட வேண்டியது. அதிலும் மனப்பக்குவம் இன்னமும் மலராத இளம் பருவத்தில் உண்டாகும் காதலில் பரஸ்பர புரிதலின்மை உள்ளிட்ட பல சிக்கல்கள் நிகழ்ந்தே தீரும். இந்த மையத்தை சிறப்பாக பதிவு செய்த திரைப்படம் இது.

வழக்கமான காதல் திரைப்படங்கள் போல ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு மோதலுக்குப் பின் மலரும் காதல், சாதி போன்ற காரணங்களுக்காக பெற்றோர்களின் எதிர்ப்பு, பயங்கரமான வில்லன், அடிதடி சாகசங்கள் என்பது மாதிரியான அபத்தங்கள் இந்த திரைப்படத்தில் இல்லை என்பது பெரும் ஆறுதல். சிறுவயது முதலே தங்கள் உறவை இயல்பான நட்புடன் அமைத்துக் கொண்ட ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் மலர்ந்திருக்கிற காதலையும் உணர்ந்து அதே இயல்புத்தனத்துடன் வெளிப்படுத்திக் கொள்கின்றனர். காதலர்களுக்குள் நிகழும் வழக்கமான ஊடல்கள், சண்டைகள், ஆணுக்கு எழும் சந்தேகம் போன்றவற்றை மட்டுமே மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மிக இயல்பாக நகரும் காட்சிகளும் இளம் நடிகர்களின் அபாரமான நடிப்பும் இந்த முயற்சியை கவனத்துக்குரியதாக மாற்றுகின்றன.

இதே பாணியிலான ஓர் அழுத்தமான திரைப்படத்தை இயக்குநர் கெளதம் ஏற்கெனவே உருவாக்கியிருந்தார். 'நீதானே என் பொன் வசந்தம்'  என்கிற திரைப்படம். 'ஒரு காதலுக்குள் நிகழும் சில தருணங்கள்' என்று படம் துவங்கும் போதே அந்த வகைமையை தெளிவுப்படுத்தியிருந்தார். வெவ்வேறு பருவங்களில் ஒரு காதலுக்குள் நிகழும் மகிழ்ச்சிகளை, ஊடல்களை, பிரிவுகளை, கோபங்களின் தருணங்களை பதிவு செய்திருந்தார். 'காதல் கண்கட்டுதே' முயற்சியை இதன் மினியேச்சர் வெர்ஷன் எனலாம்.  மையத்திலிருந்து திரைக்கதை எங்கும் விலகாமல் பயணப்படுவது இதன் சிறப்பு.

நாயகிகளை 'மந்த புத்தி'யுள்ளவர்களாகவும் நாயகனின் வழிகாட்டுதல்களின் படி நடக்கிற முட்டாள்களாகவும் சித்தரிக்கிற பொதுவான சூழலில் இத்திரைப்படத்தின் நாயகி சுயமரியாதையுள்ளவளாக காட்டப்படுவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நிருபர் பணியில் உள்ள அவர் இருசக்கர வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால், மறைந்து போன தன் தந்தையின் நினைவாக வைத்துள்ள பைக்கை உபயோகப்படுத்த முடிவு செய்கிறார். ஆனால் நாயகியின் தாய் முதல் சுற்றியுள்ள அனைத்து ஆண்களும் 'ஒரு பெண்ணால் எப்படி பைக் ஓட்ட முடியும்' என கேலி செய்கின்றனர். ஒரு சவாலாக அந்த விஷயத்தை நாயகி கடக்கும் பிடிவாதம் ரசிக்கும்படியாக சொல்லப்பட்டிருக்கிறது.

இளம் காதலர்களுக்குள் நிகழும் சிக்கலான அனுபவங்களை யதார்த்தத்திற்கு நெருக்கமாக நின்று பதிவு செய்த இயக்குநர் சிவராஜிடமிருந்து தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது 'காதல் கண்கட்டுதே'.
பாம்புச் சட்டை

இளம் வயதிலேயே கணவனை இழந்த தன் அண்ணிக்கு ஆதரவாக அவருடன் ஒரே வீட்டில் வசிக்கிறான் நாயகன். அதனால் சந்தேகங்களும் அவதூறுகளும் உருவாகின்றன. அவனுடைய காதல் திருமணத்திற்கு கூட தடையேற்படுகிறது. ஆனால் அவன் எல்லாவற்றையும் தாண்டி உறுதியாக இருக்கிறான். அண்ணிக்கு மறுதிருமணம் செய்வதற்காக பணம் சேர்க்க முற்படும் அவனுடைய பாதை தீய திசை நோக்கி இழுக்கப்படுகிறது. அது அவனை எவ்வாறெல்லாம் தத்தளிக்கச் செய்கிறது, எவ்வாறு கீழ்மையில் வீழ்கிறான், பிறகு அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை சித்தரிக்கிறது திரைப்படம்.

நாயகன் பாபி -சிம்ஹாவிற்கும் நாயகி கீர்த்தி சுரேஷிற்குமான காதல் காட்சிகள் மிக இயல்பாகவும் உயிர்ப்புடனும் அமைந்திருக்கின்றன. படத்தில் மிக முக்கியமான, ரசிக்கக்கூடிய அம்சம் இது.

தண்ணீர் கேன் போடும் நாயகன், எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரியும் நாயகி, கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி வேலை செய்யும் நாயகியின் தந்தை, நகைக்கடையில் பணிபுரியும் அண்ணி என்று அடித்தட்டு மக்களின் வாழ்வியல் தொடர்பான காட்சிகளும் அதன் பின்புலங்களும் கூடுமானவரை யதார்த்தமாக பதிவாகியிருந்தன.

நாயகன் பல விதங்களில் முன்மொழியும் காதலை நாயகி தொடர்ந்து மறுக்கிறாள். அதற்கு அவள் தெரிவிக்கும் காரணம் சமூகப் பாகுபாட்டின் அவலத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. சுடவைக்கும் உண்மை.

இது போன்று உருவாக்கப்படும் காதல் காட்சிகளுள் உள்ள பிரச்சினை என்னவெனில், ஒரு பெண் காதலை மறுத்தாலும் அது சார்ந்த உடல்மொழியை வெளிப்படுத்தினாலும் கூட ஆண் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தால், மிரட்டினால்,  ஒரு கட்டத்தில் அவள் ஒப்புக் கொள்வாள் என்கிற தவறான செய்தியை தமிழ் சினிமா தொடர்ந்து நிறுவிக் கொண்டேயிருக்கிறது. இளம் ஆண் மனங்களில் இதுவொரு விஷ விதையாக பல காலமாக விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் இதை சோதித்துப் பார்க்க விரும்பும் இளைஞன், பெண்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக தொந்தரவு கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். தன் நோக்கம் நிறைவேறாத பட்சத்தில், அந்த தோல்வியை தன் ஆண்மைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு ஆசிட் அடிப்பது  முதற்கொண்டு கொலைசெய்வது வரை பெண்களை பல்வேறு விதமாக பழிவாங்கத் துவங்குகிறான். காதல் என்பது இயல்பாகவும் பரஸ்பர ஒப்புதலுடனும் மலர வேண்டிய விஷயம் என்பதை தமிழ் சினிமா இயக்குநர்கள் இனிமேலாவது பதிவு செய்தால் நல்லது.

ரஜினியின் உடல்மொழியை நகலெடுக்கிறார் என்கிற புகார் சொல்லப்பட்டாலும் பாபி சிம்ஹா நன்றாகவே நடித்திருக்கிறார். ஒப்பனை குறைவாகவுள்ள கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்தில் அத்தனை அழகாக மிளிர்கிறார். கைம்பெண்ணின் துயரத்தை பானு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகனை தீய திசை நோக்கி இழுக்கும் பாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு வலுவாக அமைந்துள்ளது. கள்ள நோட்டுக்கள் உருவாகும் விதம், அவை புழக்கத்தில் விடப்படுவதற்கான நடைமுறை, அந்தக் கோஷ்டிகள் செய்யும் தில்லுமுல்லுகள், அப்பாவி ஆசாமிகளை தங்கள் பாதையில் இழுத்துப் போடும் விதம் போன்றவை பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. நேர்மைக்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் நாயகனின் மனோபாவமும் ஏமாற்றத்திலிருந்து மீள்வதற்கான அவன் கொள்ளும் ஆவேசமும் சிறப்பாக பதிவாகியுள்ளது.

இளம் கலைஞர் அஜீஷின் இசையில் 'நீ உறவாக' எனும் பாடல் அற்புதமாக உருவாக்கப்பட்டு சிறப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பக்கத்து வீட்டு பாட்டி, அவரின் பின்புலம் முதற்கொண்டு ஒவ்வொரு சிறிய பாத்திரமும் விஷயமும் மிகக் கவனமாக கையாளப்பட்டிருக்கிறது. ஒரு முதியவர் சாலையில் தவறுதலாக கொட்டி விடும் அரிசியை நாயகி பொறுக்கித் தருகிறாள். இந்த ஒரு காட்சிக் கோர்வை உருவாக்கப்பட்டிருக்கும் விதமே இயக்குநரின் கலையுணர்விற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

எங்கேயும் நிலைக்காமல் அலைபாயும் திரைக்கதைதான் இத்திரைப்படத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. படத்தின் முற்பகுதி அபாரமான இயல்புத்தனத்துடன் உருவாகியிருந்தாலும் பிற்பகுதி சினிமாத்தனமாக அமைந்திருப்பது ஏமாற்றம். இயக்குநர் ஆடம் தாசனிடமிருந்து சிறப்பானதொரு சினிமாவை எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை ஆழமாக விதைக்கிறது 'பாம்புச்சட்டை'.


மாநகரம்


குற்றங்களின் கூடாரம் என்று பெருநகரங்களின் மீது பொதுவான புகார் இருக்கிறது. இதை வைப்பவர்கள், கிராமங்களில் இருந்தும் சிறுநகரங்களில் இருந்தும் இடம் பெயர்ந்தவர்கள். இதிலுள்ள முரண்நகை என்னவென்றால் பெரும்பாலும் அவ்வாறு இடம்பெயர்ந்தவர்களால்தான் பெருநகரங்கள் நிறைந்திருக்கின்றன. எங்கெல்லாம் மக்களின் அடர்த்தி அதிகமாகிறதோ, அங்குள்ள பொருளியல் அசைவுகள் காரணமாக பெரிய குற்றங்கள் முதல் உதிரிக்குற்றங்கள் வரை நிகழும் என்பது எளிமையான தர்க்கம்.

நேர்காணல் ஒன்றிற்காக சென்னையை நோக்கி வருகிறான் ஓர் இளைஞன். வந்த முதல் நாளிலேயே நகரத்தின் கசப்பு அவன் மீது படிகிறது. ஆள் மாறாட்ட பிழை காரணமாக வன்முறைக் கும்பலிடம் அடிவாங்குகிறான். தன் கல்விச்சான்றிதழ்களை தவற விடுகிறான். அவனுடைய பயணம் இத்திரைப்படத்தின் முக்கியமான இழை. காதலை இறைஞ்சிக் கொண்டேயிருக்கும் ஒரு முரட்டுக்காதலன், மகனின் மருத்துவத்திற்காக நகரத்திற்கு வரும் கால்டாக்சி டிரைவர், சிறுவனைக் கடத்தி பணம் பறிக்க நினைக்கும் ஒரு சிரிப்பு ரவுடி கோஷ்டி போன்றவை இதர இழைகள்.

இத்திரைப்படத்தின் முக்கியமான பலம் என்று இதன் திரைக்கதையைச் சொல்ல வேண்டும். ஏறத்தாழ ஒரே நாளில் நடந்து முடியும் கதை. அனைத்து இழைகளையும் கச்சிதமாகவும் உறுத்தல் இல்லாத ஒத்திசைவுடன் அடுக்கியதே இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை சுவாரசியமாக்குகிறது. ஸ்ரீ முதல் சார்லி வரை ஒவ்வொரு பாத்திரமும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கின்றன. குறிப்பாக சிரிப்பு ரவுடியாக வரும் முருகதாஸின் வெள்ளந்திதனம் ரசிக்க வைக்கிறது. ஆனால் இந்தப் பகுதியில் நிகழும் நகைச்சுவை முழுக்க செயற்கைத்தனம்.

தமிழ் சினிமாவின் வழக்கமான அவியலாக அல்லாமல் அபாரமான திரைக்கதையின் மூலம் நல்லதொரு திரில்லர் திரைப்படத்தை முயன்ற லோகேஷ் கனகராஜிடமிருந்து இன்னமும் சிறப்பான திரைப்படத்தை எதிர்பார்க்கலாம்.

கடுகு

தோற்றத்தில் மிக எளிமையாகத் தோன்றுகிற சாமானியன், மற்றவர்கள் தாழ்வாக எள்ளி நகையாடுகிற வேடிக்கைப் பொருளாக இருக்கிறவன் நீதியின் சார்பில் அநீதிக்கு எதிராக அதுவரை அடங்கியிருந்ததில் இருந்து வெடிக்கும் கதைகளை நிறைய வாசித்திருக்கிறோம். 'கடுகு' அப்படியொரு திரைப்படம். எளியவனாக இயக்குநர் ராஜ்குமார் நடித்திருந்தார். சிறப்பானது என்று மதிப்பிட முடியாவிட்டாலும் குறைவில்லாத நடிப்பு.

தரங்கம்பாடி என்கிற சிற்றூரின் பின்புலத்தில் நிகழ்கிற கதை. அரசியல் செல்வாக்குள்ள அமைச்சர், அப்பாவியான ஒரு பள்ளி மாணவிக்கு நிகழ்த்த முயன்ற அநீதியைப் பற்றி அறிந்து புழுங்கிச் சாகிறான் சாமானியன். இந்த அநீதிக்குத் துணை போகும் அந்த ஊரின் பிரபலமான இளைஞனின் மீதும் அவனுடைய கோபம் பாய்கிறது. புலி வேஷம் அணிந்து நடனமாடக் கூடிய தன் திறமையை வைத்து தீயவர்களை எப்படி பழிவாங்குகிறான் என்பது உச்சக்காட்சி.

இயக்குநர் படத்தை சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருந்தாலும் சினிமாவின் செயற்கைத்தன வாசனை படம் பூராவும் நெளிய வைக்கிறது. ஆச்சரியகரமாக பரத் இதில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஊருக்கு நல்லது செய்து அதன் மூலமான லாபங்களுக்கு ஆசைப்படாதவராக நகர்ந்து கொண்டிருந்த அவரது பாத்திரம், முகத்தில் அறைவது போல் சட்டென்று எதிர்திசைக்கு நகர்கிறது. அது சார்ந்த அக தத்தளிப்புகளை பரத் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த திரைப்படம் எனக்கு இரண்டு தமிழ் சிறுகதைகளை நினைவுப்படுத்தியது. ஒன்று அசோகமித்திரனின் 'புலிக்கலைஞன்'. இன்னொன்று சா.கந்தசாமியின் 'இரணிய வதம்'. மெல்ல மெல்ல சூடேறி ஒரு கணத்தில் சடாரென்று வெடிக்கும் கதைகள். ஆனால் திரைப்படம் அது சார்ந்த கவித்துவ உச்சம் ஏதுமில்லாமல் உப்புச் சப்பின்றி அபத்தமாக முடிந்து போகிறது. ஆசிரியையின் துயரம் சார்ந்த உபகதையை அனிமேஷன் வடிவில் சொன்னது சிறப்பு. தன் காதலுக்காக பல கோணங்கித்தனங்கள் செய்து ஏமாறும் அந்த அப்பாவி இளைஞனின் விருப்பத்தை இறுதியிலாவது இயக்குநர் விஜய் மில்டன் நிறைவேற்றியிருக்கலாம்.

முன்னணி நாயகர்களுக்காக செயற்கையான அதிபிம்பங்களை உருவாக்காமல் எளிய மனிதர்களுக்கான திரைக்கதையை நம்பி தமிழ் சினிமா பயணிப்பது ஆரோக்கியமான அடையாளம். அந்த வகையில் 'கடுகு' வரவேற்கத்தகுந்ததொரு முயற்சி.

8 தோட்டாக்கள்

நகைச்சுவை நடிகராக நிலைபெற்ற ஒருவரை, குணச்சித்திர வேடத்திற்கு நகர்த்தும் போது பழைய அடையாளத்தையும் கூடவே தக்க வைத்துக் கொள்வார்கள். இயக்குநர் அல்லது நடிகரின் பிடிவாதத்தினால் இது நிகழலாம். தனது பிரதான அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்கிற பாதுகாப்பு உணர்ச்சியே இதை செலுத்துகிறது என யூகிக்கிறேன். நாகேஷை பாலச்சந்தர் உபயோகப்படுத்தியதை சிறந்த உதாரணமாக சொல்லலாம். குணச்சித்திர பாத்திரமாக இருந்தாலும் கூட அதன் இடையில் 'காமெடியன்' நாகேஷ் வெளிப்பட்டே தீர்வார். இது பல நகைச்சுவை நடிகர்களுக்கு நேர்கிற விபத்து. காலம் பூராவும் நகைச்சுவையிலேயே அமிழ்த்தப்பட்டு மறைந்தவர்களும் உண்டு.

அவ்வாறில்லாமல் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட ஒருவரை அந்த அடையாளம் முற்றிலும் இல்லாமல் வேறொரு நிறத்திற்கு மாற்ற சவாலான மனோபாவமும் அசாதாரணமான தன்னம்பிக்கையும் வேண்டும். எம்.எஸ்.பாஸ்கர் என்கிற நகைச்சுவை நடிகரை அப்படி முயன்று பார்த்த படைப்பாக 'சூது கவ்வும்' திரைப்படத்தைச் சொல்லலாம். ஊழல்கள் மலிந்திருக்கும் அரசியலில் நேர்மையான ஒருவருக்கு இடமேயில்லை என்கிற அபத்த நகைச்சுவை தாங்கிய பாத்திரத்தை பாஸ்கர் அருமையாக கையாண்டிருப்பார். அவரது நகைச்சுவை பிம்பம் எங்குமே தோன்றாது. நலன் குமாரசாமி இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்.

இதற்குப் பிறகு இந்த நோக்கில் பாஸ்கரின் இன்னொரு பரிமாணத்தை திறமையாக பயன்படுத்தியவர் என்று இளம் இயக்குநர் ஸ்ரீ கணேஷை சொல்லலாம். '8 தோட்டாக்கள்' ஒரு அருமையான கிரைம் திரில்லர். அபாரமான திருப்பங்களைக் கொண்ட திரைக்கதை.

***


இவற்றைத் தவிர எங்கிட்ட மோதாதே, அதே கண்கள், நிசப்தம், கடம்பன், லென்ஸ் போன்ற திரைப்படங்களையும் அவற்றின் சில பிரத்யேகமான காரணங்களுக்காக கவனிக்கப்பட வேண்டியவைகளின் பட்டியலில் வைக்கலாம். இது போன்ற நல்ல முயற்சிகளின் இடையில் புற்றீசல்கள் போல முதிராத முயற்சிகளும் இடையிலேயே கைவிடப்பட்ட பரிதாபமான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களும் இருப்பது வருந்தத்தக்கது.

மேலே சுருக்கமான அலசப்பட்டுள்ள திரைப்படங்கள் கூட ஓரெல்லை வரையான நல்ல முயற்சிகள் எனலாமே தவிர சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியவில்லை. அந்தந்த இளம் இயக்குநர்களுக்கு, சினிமாவுக்கேயுரிய நெருக்கடிகள், தவிர்க்க முடியாத சமரசங்கள் ஆகியவற்றினால் அது சார்ந்த பிரதிபலிப்பு விபத்துகள் படைப்பில் நேரிட்டிருக்கலாம். ஆனால் அவற்றை மீறியுமான பல விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தால் 'சிறந்த திரைப்படம்' எனும் எல்லையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.

உதாரணமாக, பாம்புச்சட்டை மிக இயல்பான காதல் திரைப்படமாக, சமூகவிழிப்புணர்வு சார்ந்த படைப்பாக மலர்ந்திருக்க வேண்டியது. ஆனால் திரைக்கதைக் கோளாறினால் தனது மையத்தை தவற விட்டு விட்டது. பாம்புச்சட்டை நாயகனுக்கும் சரி, 8 தோட்டாக்களின் பிரதான பாத்திரத்திற்கும் சரி, அவர்கள் துரத்திச் செல்லும் பணத்தின் அவசியம் திரைக்கதையில் போதுமான அளவு அழுத்தத்துடன் பதிவு செய்யப்படவில்லை. 'வேறு வழியில்லை, அந்த திசை நோக்கித்தான் அவன் பயணப்பட வேண்டியிருக்கிறது' என்கிற நம்பகத்தன்மையையும் நெருக்கடியையும் உணர்வுபூர்வமாக பார்வையாளனும் அடையும் போது அந்தப் படைப்போடு தன்னை வலுவாக இணைத்துக் கொள்கிறான். படைப்பும் வெற்றி பெறும். இது ஒரு உதாரணம் மட்டுமே.

திரைக்கதை உருவாக்கங்களிலும் விவாதங்களிலும் இது போன்ற விஷயங்களை இளம் இயக்குநர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மற்றபடி வழக்கமான, சலித்துப் போன தமிழ் சினிமா உருவாக்கங்களிலிருந்தும் முன்னணி நாயகர்களை மட்டும் உருவாக்கப்படும் மசாலா கதைகளில் இருந்தும் விலகி, திரைக்கதையை பிரதானமாக நம்பி உருவாக்கப்படும் இது போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் முக்கியமானவை. இவற்றின் வளர்ச்சியும் பார்வையாளர்கள் இவற்றிற்கு தரும் ஆதரவும்தான் தமிழ் சினிமாவை வளமான பாதைக்கு இட்டுச் செல்லும்.

(பேசும் புதிய சக்தி இதழில் பிரசுரமானது)

suresh kannan

Wednesday, December 18, 2019

M.S. Dhoni: The Untold Story : தற்செயல்களின் சாதனைஒலிம்பிக், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி போன்ற பெரிய அளவு விளையாட்டு திருவிழாக்கள் நிகழும் போதெல்லாம் இந்திய பொதுச் சமூகத்திடமிருந்து உடனடியாகத் தோன்றி விடும் வெறிகளுள் ஒன்று தேசப்பற்று. அதன் கூடவே கசப்பும் எரிச்சலுமாக வெளிப்படும் எதிர்வினைகளில் ஒன்று இதுவாக இருக்கும். 'இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டிலிருந்து ஒரு தங்கம் வாங்க முடியலையே?". விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு சமூகக் காரணிகளை இந்த புகார்தாரர்கள் மேலோட்டமாகவாவது அறிந்திருப்பார்கள் என்றாலும் தேசப்பற்று ஆவேசத்தின் காரணமாக இந்த முணுமுணுப்புகளுக்கு குறைவிருக்காது.

நாம் நிச்சயம் தாழ்வு மனப்பான்மையோ, சலிப்போ கொள்ளத்  தேவையேயில்லை. எந்தவொரு துறையிலும் உலகத்தின் சாதனையாளர்களுக்கு நிகரான திறமையுள்ளவர்கள் இங்கும் நிச்சயமாக இருப்பார்கள். அவ்வாறான திறமைசாலிகளை கண்டெடுத்து எவ்வித அரசியலும் கலக்காமல் அவர்களை முறையாக ஊக்குவித்தால் நம்மாலும் அத்தகைய மைல்கல்களை எட்ட முடியும். ஆனால் இந்தியாவில் அங்கிங்கெனாபடி நிறைந்திருக்கும் சாதி மத அபிமானம், துவேஷம், ஊழல், அரசியல் போன்ற தடைக்கற்கள் இந்தச் சாதனைகளை நோக்கி நகர விடாது. இவற்றைக் களையாமல் நாம் உலகச் சாதனைகளைப் பற்றி பேசுவதில், புகார் செய்வதில் அர்த்தமில்லை.

எம்.எஸ்.தோனி என்கிற கிரிக்கெட் சாதனையாளரின் வாழ்க்கை வரலாற்றின்  மீது அமைந்திருக்கும்  திரைப்படத்தைப் பார்த்தால் இந்தக் கருத்து மேலதிகமாக உறுதிப்படுகிறது. கிரிக்கெட் என்பது ஒரு மதத்திற்கு இணையான வெறியையும் அபிமானத்தையும் இந்தியாவில் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். எனவே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கும் நோக்கம், சாதனையாளரின் வரலாற்றை விவரிப்பதையும் தாண்டி மக்களின் அபிமானத்தை வணிகமாக்கிக் கொள்வதுதான் என்பது வெளிப்படை. அடுத்து சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையும் திரைப்படமாக வரப்போவதாக சொல்கிறார்கள்.

ஆனால் தோனியின் வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகள், காட்சிகளாக விரியும் இந்தப் பயணத்திலேயே இந்த நுண்ணரசியல் விஷயங்களும் தன்னிச்சையான உள்ளுறையாக பதிவாகியிருப்பதை உணர முடிகிறது.

பொதுவாகவே இங்கு திறமையாளர்களை  தேடிக் கண்டுணரும் கலாசாரமோ, அவர்களை முறையாக பராமரிக்கும்  வழக்கமோ இல்லை. பொதுவான நிலைமையே இப்படியென்றால் தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு சமூகத்தில் உள்ள திறமையாளர்களை எவரும் சீந்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம். தீராத ஆர்வமுடையவர்கள் அவர்களே இந்தச் சமூகத்தின் ஒவ்வொரு தடைக்கற்களையும் முட்டி முட்டி முன்னேற வேண்டியிருக்கும். அப்படி முன்னேறும் பயணத்திலும் கூட அவர்களின் திறமை மூடப்பட்டு அவர்களை மறைக்கும் விதமாக பல்வேறு கீழ்மை அரசியல்களும் நிகழும். இவர்கள் முட்டி மோதி சற்று அடையாளம் பெற்று விட்ட பிறகு ஊடகங்களும் பெருவணிகமும் இவர்களை சுயநலம் காரணமாக அள்ளி அணைத்துக் கொள்ளும். இவர்களின் புகழும் திறமையும் சற்று மங்கினால்  உடனே உதறித்தள்ள இந்த வணிகக்கூட்டம் தயங்காது.


***

தோனி என்கிற கிரிக்கெட் சாதனையாளன் எவ்வாறு தன் பயணத்தின் உயரத்தை அடைகிறான்? அது திட்டமிட்ட பயணமா அல்லது தற்செயல்களால் அமைந்ததா?

இளம் வயது தோனிக்கு கால்பந்து விளையாட்டின் மீதுதான் விருப்பம் இருக்கிறது. அதில் திறமையான கோல்கீப்பராக இருக்கிறான். ஆனால் அவன் படிக்கும் பள்ளியில் உள்ள கிரிக்கெட் குழுவில் விக்கெட் கீப்பராக இருக்கும் மாணவனை, படிப்பு பாழ்படக்கூடாது என்று அவனது தாய் அழைத்துச் சென்று விடுகிறாள். எனவே அந்த ஆசிரியர், கோல் கீப்பராக இருக்கும் இவனை வலுக்கட்டாயமாக அழைத்து கிரிக்கெட்டில் போடுகிறார். ஆக. ஒருவனின் கனவும் பயணமும் அமைவது அவனது இயல்பான ஆர்வத்தினால் அல்ல. தற்செயல்களே தீர்மானிக்கின்றன.

படத்தின் துவக்கத்திலேயே இது தொடர்பானதொரு காட்சி வருகிறது. தோனியின் தந்தை பிரசவ வார்டில் காத்திருக்கிறார். செவிலி வெளியே வந்து அவருக்கு மகன் பிறந்திருப்பதாக கூறுகிறாள். மகிழ்ச்சியடையும் தந்தையை பிறகு வரும் மருத்துவர் குழப்புகிறார். 'உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது'. சிறிய விசாரணைக்குப் பிறகு தெளிவாகிறது. ஆண் குழந்தை இவருக்கு கிடைக்காமல், ஏற்கெனவே மூன்று ஆண் பிள்ளைகள் உள்ள இன்னொரு குடும்பத்திற்கு தவறுதலாக கூடுதல் ஆண் பிள்ளையாக தோனி சென்றிருந்தால் என்னவாகியிருக்கும் என்கிற சுவாரசியமான கேள்வியை இந்தக் காட்சி எழுப்புகிறது. நம்முடைய மருத்துவமனைகள் ஒருவரின் தலைவிதியையே மாற்றி எழுதி விடும் வல்லமையுடன் இயங்குகின்றன.

தன்னுடைய அதிரடிகளின் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் கவனஈர்ப்பு ஏற்படுத்தும் தோனிக்கு ரயில்வே பணி கிடைக்கிறது. எங்கே இவனது எதிர்காலம் விளையாட்டில் தொலைந்து விடுமோ என்று பயந்து கொண்டிருக்கும் அவனது நடுத்தர வர்க்க தந்தை அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். பாதுகாப்பான குமாஸ்தா வேலைகளைத் தவிர வேறு பிற துறைகளை  நடுத்தரவர்க்கம் அலட்சியப்படுத்துகிறது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நிலைமை இங்கு அப்படித்தான் இருக்கிறது. ஒருவன் தனக்கு விருப்பமான துறையில் தன் கனவுப்பயணத்தை தொடர நினைத்தால் அதற்கான நிச்சயமான எதிர்காலம் இங்கு இல்லை. தோனியின் தந்தை அவனை அரைமனதுடன் கிரிக்கெட் விளையாட சம்மதிக்கிறார்தான் என்றாலும் அவர் அனுமதிக்காமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? இன்னொரு தற்செயல்.

உறுதியான, தெளிவான திட்டமிடலும் ஆர்வமும் அல்ல, தற்செயல்களே பெரும்பாலும் இங்கு சாதனைகளின் பயணத்தை தீர்மானிக்கின்றன.

***

இத்திரைப்படத்தில் வரும் இரண்டு காட்சிக் கோர்வைகள் எனக்குப் பிடித்திருந்தன. உத்வேகமும் நெகிழ்வும் அளித்தன. ஒன்று, தோனி தனது குழப்பத்திலிருந்து விலகி எதிர்காலத்தைப் பற்றி  உறுதியுடன் தீர்மானிக்கும் இடைவேளை காட்சி. ரயில்வேயில் டிக்கெட் கலெக்ட்டராக  பணி கிடைத்தது அவனுடைய தந்தைக்கு நிம்மதி என்றாலும் உள்ளூற  இவனுக்கு சந்தோஷமில்லை. கிரிக்கெட் கனவுகளுடன் அரசாங்க இயந்திரத்தில் சிக்கி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது பயிற்சிக்கு சென்று விடுவதால் இவன் மீது விசாரணையொன்று வரவிருப்பதாக இவனுக்கு ஆதரவாக இருக்கும் உயர்அதிகாரி எச்சரிக்கிறார். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறார். மனஉளைச்சலில் இருக்கும் இவனுக்கு எதுவுமே காதில் விழுவதில்லை.

குழப்பமான சிந்தனையுடன் ரயில்வே நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். கனவுலகிலிருந்து வருவதைப் போல ஒரு ரயில் அவனை நோக்கி வருகிறது. அவனுடைய ஊருக்குச் செல்லும் வண்டியாயிருக்கும் அது. பெரிய மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் அவனுடைய பெயரைச் சொல்லி கூக்குரலிடுவது போன்ற ஒலிகள் அவனுடைய மனக்காதில் விழுகின்றன. சட்டென்று உறுதியான தீர்மானத்துடன் அந்த ரயிலில் ஏறுகிறான். அவன் தன் பணியிலிருந்து  விலகி விட்டான் என்று தெரிகிறது. அப்படி தீர்மானமான முடிவெடுக்காமல் அவன்  ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டே சாத்தியமான கிரிக்கெட் போட்டிகள் மட்டும் விளையாடிக் கொண்டிருந்தால் என்னவாகியிருக்கும்? மீண்டும் ஒரு தற்செயல்.


இன்னொரு காட்சி. தோனி திறமையானவனாக இருந்தாலும் இந்திய அணியில் தேர்வாவது சிரமமானதாக இருக்கிறது. கடுமையான போட்டி. தவிர வழக்கமான அரசியலும். சோர்வும் எரிச்சலும் இருந்தாலும் தன்னுடைய ஊக்கத்தை அவன் கைவிடுவதில்லை. ஒருநாள் அவன் பேட்மிட்டன் ஆடிக் கொண்டிருக்கும் போது நண்பர்கள்  வந்து அந்த  சந்தோஷமான விஷயத்தைச் சொல்கிறார்கள். ஆம். அவன் இந்திய அணியில் விளையாட தேர்வாகியிருக்கிறான். அவர்களின் கூச்சல் தோனியின் காதில் விழுந்தாலும் அவனுடைய கவனம் கலைவதில்லை. தன்னுடைய ஆட்டத்தை முடிக்கும்  வரையில் நிறுத்துவதில்லை. அதிலேயே கவனமாக இருக்கிறான். மகிழ்ச்சியோ, துயரமோ, எத்தனை கவனக்கலைப்புகள் வந்தாலும் உணர்ச்சிவசப்படாமல் தம்முடைய அப்போதைய பணியில் ஒருமுகப்பட்ட மனதுடன் கவனமாக இருக்கும் அந்த மனோபாவமே, தோனியை அணித்தலைவன் என்கிற நிலைக்கு உயர்த்திச் சென்றிருக்கும் என்பதை உணர முடிகிறது.


***

மத்திய  அரசாலும் இன்னபிற வளர்ந்த மாநிலங்களாலும் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்பட்ட  மாநிலங்களில் ஒன்றின் நகரத்திலிருந்து தன்னுடைய கடுமையான உழைப்பால் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான தலைவனாக மாறிய இந்த சரித்திரம் ஏறத்தாழ சுவாரசியமாகவே சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு biographical drama-விற்கு மூன்று மணி நேரம் என்பது அதிகம். தோனியின்  தனிப்பட்ட காதல் வாழ்க்கை சம்பவங்கள் சாவகாசமாக விவரிக்கப்பட்டிருந்ததை சற்று சுருக்கியிருக்கலாம்.  மைதானங்களில் பதிவாக்கப்பட்ட உண்மையான காட்சித்துணுக்குகள் மிகப் பொருத்தமான தருணங்களில் உறுத்தாதவாறு இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நுட்பம் பாராட்டப்பட வேண்டியது.

The Untold Story என்கிற படத்தின் தலைப்பிற்கேற்ப படத்தில் எதுவுமே இல்லை. எல்லாமே பொதுவெளியில் உதிர்ந்த தகவல்கள்தான்.  மாறாக பல சம்பவங்கள் விடுபட்டிருப்பது இந்த தலைப்பை தலைகீழ் நகைச்சுவையாக்குகிறது. தோனி, இந்திய அணியின் தலைவனானது, இதர வீரர்களுடனான இணக்கமும் மோதலும், அதிலிருந்த அரசியலை எதிர்கொண்டது, கிரிக்கெட் எனும் ஆட்டத்தை சுற்றுலா பொருட்காட்சி மாதிரி ஆக்கிய டி20 ஆட்டங்கள் போன்வற்றின் தீற்றல்கள் இதில் விடுபட்டிருந்தன. நடைமுறைச் சிக்கல்கள், சங்கடங்கள் கருதி சில விஷயங்கள்  தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

Sushant Singh Rajput எனக்குப் பிடித்தமான நடிகர்களில் ஒருவர். தோனியாக நடிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது மிகவும் பொருத்தமானது. ஏறத்தாழ தோற்ற ஒற்றுமையிலும் மட்டுமல்ல, மைதானங்களில் தோனி வெளிப்படுத்தும் உடல்மொழியை கச்சிதமாக பின்பற்றியிருந்தார். தோனி ஒருவேளை அடைந்திருக்கக்கூடிய அகச்சிக்கல்களை, சங்கடங்களை தனது அபாரமான முகபாவங்களால் நம்மை உணரச் செய்திருந்தார். யுவராஜ் மாதிரியே இருந்தவரையும் casting செய்த மெனக்கெடல் சிறப்பு. அனில்கபூர், குமுத் மிஸ்ரா, ராஜேஷ் சர்மா போன்ற விற்பன்னர்கள் தங்களின் அற்புதமான பங்களிப்பை அளித்திருந்தார்கள்.

இதன் திரைக்கதைக்காகவும் நம்பகத்தன்மைக்காகவும் இயக்குநர் நீரஜ் பாண்டேவின் குழு மேற்கொண்டிருந்த உழைப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால் இதை ஒரு சம்பிரதாயமான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக ஆக்கி விட்டிருந்ததுதான் பரிதாபம். வெகுசன பார்வையாளர்களுக்கான பண்டமாக இதை ஆக்க மாற்ற முயன்றதில் நிகழ்ந்த விபத்தாக இருந்திருக்கலாம்.

என்றாலும் இந்தியா போன்ற ஊழல் மலிந்திருக்கும் பிரதேசத்திலிருந்து சாதனையாளர்கள் உருவாவதும் வெளியே வருவதும் பெரும்பாலும் அவர்களின் சுயாதீன முயற்சிகளாலும் தற்செயல்களாலும் மட்டுமே நிகழ்கிறது என்பதை தன்னிச்சையான உள்ளுறையாக விவரித்த விஷயத்திற்காக இத்திரைப்படம் ஒரு முக்கியமான பதிவாக இருக்கும்.


(காட்சிப்பிழை இதழில் பிரசுரமானது)
suresh kannan


Monday, December 16, 2019

குட்டியப்பனின் 'லீலா' விநோதம்
எழுத்தில் வெளியான ஒரு நல்ல படைப்பை சினிமாவாக மாற்றுவதென்பது ஒரு திரைப்பட இயக்குநருக்கு ஒரு நோக்கில் எளிதான, பளு குறைந்த பணி. ஏற்கெனவே போட்டு வைக்கப்பட்டிருக்கும் அஸ்திவாரத்தின் மீது  திரைக்கதை எனும் கட்டிடத்தை நுட்பமாக கட்டும் திறமையை செலுத்தினால் போதும். ஆனால் இன்னொரு நோக்கில் அதுவே பெரிய சவாலும் கூட. கதாசிரியர் முதற்கொண்டு அந்த எழுத்தின் வாசகர்களையும் இயன்ற அளவிற்கு திருப்தி செய்வதோடு அந்தப் படைப்பின் மையத்தையும் சிதைக்காமல் அதற்கு நியாயம் செய்ய வேண்டும். மலையாள இயக்குநர் ரஞ்சித்தின் சமீபத்திய திரைப்படமான 'லீலா', ஆர்.உண்ணியால் எழுதப்பட்ட  சிறுகதையின் மையத்தை மிக கச்சிதமாக பிரதிபலிக்கும் ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. எழுத்தாளரே இதற்கு திரைக்கதை எழுதியதும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கலாம்.

உலகின் சிறந்த திரைப்படங்களாக அறியப்படுபவை பெரும்பாலும் எழுத்தியலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாகின்றன. ஒருவகையில் அத்திரைப்படங்களுக்கு அந்த படைப்புகளே நல்ல அடையாளத்தை தரும் விளம்பரங்களாகவும் அமைகின்றன.  'கதை,திரைக்கதை,வசனம், இயக்கம்' என்று எல்லாவற்றிற்கும் தாமே கிரெடிட் எடுத்துக் கொள்ளும் இந்திய வெகுசன திரையுலகின் மோசமான போக்கு சர்வதேச அரங்குகளில் அங்கீகரி்க்கப்படும் திரைப்படங்களில் பொதுவாக இருப்பதில்லை.

சுகுமாரனால் தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ள, ஆர்.உண்ணி எழுதிய 'லீலை' போன்ற  மலையாளச் சிறுகதையை  இலக்கிய பயிற்சியற்ற மொண்ணையான இயக்குநர்கள் வாசித்தால் ' ஒன்றுமே இல்லாத இந்த சாதாரணக் கதையைப் போய் எப்படி சினிமாவாக மாற்றுவது' என்று எரிச்சலும் சலிப்பும் கொள்ளக்கூடும். ஆனால் நுண்ணுணர்வும் முறையான இலக்கிய வாசிப்பும் உள்ள இயக்குநர்கள் வாசித்தால் 'சிறுகதையின் நுட்பத்தை எப்படி காட்சி வழியாக உருமாற்றுவது' என்று திகைப்பு கொள்வார்கள். ரஞ்சித் இரண்டாவது வகை. மேற்பரப்பில் அலட்சியமாகத் தோன்றும் ஆனால் அடிப்பரப்பில் சமூகத்தின் ஒழுக்க  மதிப்பீடுகளை மிக ஆழமாக எள்ளி நகையாடும் இந்தச் சிறுகதையை மிக நுட்பமானதொரு சினிமாவாக்கியுள்ளார்.

ஒரு சிறுகதையை எப்படி திரைப்பட வடிவமாக மாற்றுவது என்று பயில விரும்பும் இளம் இயக்குநர்கள், இந்தச் சிறுகதை மற்றும் சினிமாவை அவதானித்து எங்கெங்கெல்லாம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது, மெருகேற்றப்பட்டிருக்கிறது, சிறுகதையை அடுத்த தளத்திற்கு எப்படி சினிமா நகர்த்திச் செல்கிறது என்பதை ஒரு கற்றலாகவே வாசிக்கலாம். அப்படியொரு ஜாலத்தை ரஞ்சித் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் சிறுகதையின் ஒரு முக்கியமான குறிப்பு திரைக்கதையில் மாற்றப்பட்டிருப்பதின் மூலம் இதன் ஒரு பகுதி பலவீனமாக அமைந்திருப்பதாக என்னளவில் உணர்கிறேன். என்னவென்று கட்டுரையின் போக்கில் பார்ப்போம்.

***

லீலா எதைப்  பற்றிய திரைப்படம்? அப்படி ஏதும் குறிப்பாக சொல்லி விட முடியாது என்பதே இதன் சிறப்பும் தனித்தன்மையும். ஒன்று செய்யலாம். இறுதிக் காட்சியில் அப்பாவி இளம் பெண்ணான லீலா ஏன் யானையின் கால்களில் நசுங்கிச் சாகிறாள்? அது ஏன் கொம்பன் யானையாக இருக்கிறது? என்று யோசித்துப் பார்த்தால் இத்திரைப்படத்தின் பூடகம் ஒருவாறு மெல்ல பிடிபடலாம். ஆண்மைய சிந்தனைகளால் இயங்கும் உலகத்தில் பெண்ணுலகம் எவ்வாறு நெடுங்காலமாக நசுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதற்கான ஒரு துளி உதாரணமாக 'லீலா' இருக்கக்கூடும்.

நடுத்தர வயதிலுள்ள குட்டியப்பன் ஆற்றில் மிதந்து செல்லும் இலை போல, காற்றில் பறந்து செல்லும் காகிதத் துண்டு போல ஒரு வாழ்க்கையை நிலையில்லாத வாழ்கிறவன். அன்றாட சலிப்புகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டு அதன் எதிர்திசைக்கு பாய்ந்தோடும் மனஅமைப்பைக் கொண்டவன். படிக்கட்டுகள் வழியாக அல்லாமல் ஏணி வழியாக  ஏறி மாடிக்கு வந்து காப்பி தரச்சொல்லி பணிப்பெண்ணை விநோதமாக இம்சிப்பவன். பணிப்பெண் விழுந்து இடுப்பெலும்பை முறித்துக் கொள்ளும் போது காந்தி சிலையின் முன்பு மனமுருக மன்னிப்பு கேட்பவன். அந்தக் குற்றவுணர்விலிருந்து விலக ஓய்வு பெற்ற பாலியல் தொழிலாளப் பெண்களுக்கு நிதியுதவி தருபவன்.  ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, மர்லின் மன்றொ, ப்ரூஸ்லீ  என்கிற விசித்திரமான கலவையில் படங்கள் தொங்கும் வீடு அவனுடையது. ஏதோவொரு அமைதியின்மை அவனது ஆழ்மனதில் நெருடிக் கொண்டேயிருக்கிறது. இரவுகளில் தனிமையாக உறங்க அஞ்சுகிறான். அதனிடமிருந்து தப்பிக்க ஓர் அலைக்கழிக்கும் வாழ்க்கைக்குள் தன்னை ஒளித்துக் கொள்கிறான்.  இப்படியாக குட்டியப்பனின்  குணாதிசயங்களும் அவன் வெளிப்படுத்தும் நுட்பமான பகடிகளும் படம் முழுவதிலும் விரவிக் கிடக்கி்ன்றன.

ஒரு நடுஇரவில் பிள்ளேச்சனின் வீட்டு கதவைத் தட்டி குட்டியப்பன் சொல்கிறான். "பிள்ளேச்சா.. நான் ஒரு யானை வாங்கலாம்னு இருக்கேன். தயாரா இரு. காலைல போகலாம்".

குட்டியப்பனின் எதிர் பிம்பமாக இயங்கும் இந்த பிள்ளேச்சன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமானது. குட்டியப்பனின் கலகத்திற்கு எதிரான ஒரு சராசரியான நடுத்தரவர்க்க கோழையின் பாத்திரம். குட்டியப்பனின் விநோதமான அலைச்சல் இவருக்குள் எரிச்சலையும் அச்சத்தையும் தந்தாலும் அதன் மீது ஈர்ப்பும் இருக்கிறது. ஒருபுறம் உள்ளிருந்து எழும் அறவுணர்விற்கு அஞ்சினாலும் சமூகத்தினால் கீழ்மைகள் என ஒதுக்கப்பட்டிருப்பவைகளை மெல்ல தீண்டிப் பார்க்கும் ஆர்வமும் அவருக்குள் ரகசியமாக இருக்கிறது. குட்டியப்பன் ஓர் இளம்பெண்ணை தேடிச்செல்லும் பயணத்தில் தன்னுடைய மகளின் நினைவு அவ்வப்போது பிள்ளேச்சனுக்கு வந்தாலும் குட்டியப்பனை விட்டு விலகி விடாத படி அவருக்கு சாத்தானின் ருசியும் தேவைப்படுகிறது.


***


குட்டியப்பனுக்கு ஒரு யானையும் ஓர் இளம் பெண்ணும் தேவைப்படுகிறது. அதை நோக்கிய தேடலும் பயணமும்தான் 'லீலா'வின் கதை.

'ஒரு கொம்பன் யானையோட தும்பிக்கை மேலே ஒரு பெண்ணை துணியில்லாமல் சேர்த்து நிறுத்தினா எப்படி இருக்கும்? பார்த்தா நெற்றிப்பட்டத்தை அவிழ்த்து வெச்ச மாதிரி இருக்கணும். அப்புறம் யானையோட ரெண்டு கொம்புகளையும் பிடிச்சிக்கிட்டு தும்பிக்கையோடே சாஞ்சிருக்கும் பெண்ணை சம்போகம் பண்ணணும்'

உண்ணி எழுதிய சிறுகதையின் துவக்கப்பகுதியிலேயே குட்டியப்பனின் இந்த நோக்கம் தெளிவாக நிறுவப்பட்டு விடுகிறது. ஆனால் திரைக்கதையில் இது பூடகமாக அதன் இறுதி வரைக்கும் காப்பாற்றப்படுகிறது. சிறுகதையிலிருந்து திரைக்கதையாக உருமாறும் போது மற்ற பகுதிகள் மேம்பட்டிருந்தாலும் கதையின் மையமான இந்த விஷயம் மாற்றப்பட்டது பெரிய நெருடலைத் தருகிறது. குட்டியப்பனின் பயணம் முழுதும் அவனுடன் பயணிக்கும் பிள்ளேச்சனுக்கு 'ஏதோ நடக்கிறது" என்று தெரிந்தாலும் அது என்னவென்று தெளிவாகத் தெரிவதில்லை. அவருடன் இணைந்து பார்வையாளர்களும் இந்த பூடகத்தன்மையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதுவே ஓர் ஆர்வத்தைத் தந்தாலும் கூடவே எரிச்சலையும் தருகிறது.

குட்டியப்பன் அதுவரை தான் சந்திக்கும் பாலியல் தொழிலாளிகளுடன் உடல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. படத்தின் துவக்கத்தில் சந்திக்கும் அவ்வாறான ஒரு பெண் முன்பு பிணம் போல படுத்துக் கொண்டு 'என்னை உன் தந்தையாக நினைத்து அழு' என்கிறான். இப்படியொரு விநோதமான வாடிக்கையாளனால் தவிக்கும் அவள் ஒரு கட்டத்தில் தந்தையின் நினைவினால் அழுதுத் தீர்க்கிறாள். அவளை ஆறுதலாக அணைத்துக் கொள்கிறான் குட்டியப்பன். இதைப் போலவே இன்னொரு பாலியல் தொழிலாளியுடன் ஒரு பாடலை ஒலிக்க விட்டு நிர்வாணமாக நடனம் மட்டுமே ஆடினான் என்கிற தகவல் பிறகான காட்சிகளில் வருகிறது. இதை சம்பந்தப்பட்ட பாலியல் தொழிலாளியே நாணத்துடன் பிள்ளேச்சனிடம் சொல்கிறாள். 'ஆத்ம வித்யாலயமே' என்கிற  அந்தப் பாடல் மலையாளத் திரைப்படமான ஹரிச்சந்திராவில் இடம்பெற்றது. ஹரிச்சந்திரன் மயானத்தில் பாடும் பாடல். 'அந்த ராத்திரிய என்னால மறக்கவே முடியாது பிள்ளேச்சா' என்கிறாள் வெட்கத்துடன்.

பாலியல் தொழிலாளிகளுடன் உடல் ரீதியான உறவு கொள்வது அவன் நோக்கமல்ல என்பது இந்தச் சித்தரிப்புகளின் மூலமாக தெளிவாகவே நிறுவப்படுகிறது. அவனுடைய அகம் தேடுவது வேறு ஏதோவொன்றை. ஆனால் 'யானையின் மீது சாய்த்து ஒரு இளம் பெண்ணோடு உறவு கொள்ள வேண்டும்' என்கிற அவனுடைய தீர்மானம் முதலிலேயே தெளிவாக சொல்லப்பட்டிருந்தால் இதன் திரைக்கதை இன்னமும் வலுவாக அமைந்திருக்கலாம் என கருதுகிறேன். ஏனெனில் படம் முழுவதுமே இதற்கான 'ஏற்பாடுகள்' நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் முகம் முழுக்க  சோகம் கவ்வியிருக்கும் இளம் பெண்ணை பார்த்ததும், தன்னுடைய மகளின் நினைவு வந்து பிள்ளேச்சன் அமைதியில்லாமல் தவிப்பதைப் போல பார்வையாளர்களும் தவிக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்தப் பூடகத்தை இயக்குநர் கையாண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

***

படம் துவங்கும் போதே குட்டியப்பனின் விநோதமான மனஅமைப்பு பார்வையாளர்களுக்கு துல்லியமாக கடத்தப்பட்டு விடுகிறது. அலட்சியமான உடல்மொழியுடன் குதிரையின் மீது வரும் அவன் சொல்கிறான்.'இரவு நேரத்தில் குடித்து விட்டு போலீஸ்காரர் தொந்தரவு இல்லாமல் வருவதற்கு ஏற்ற வாகனம்  இதுதான்'. பிறகு காங்கிரஸ் தலைவர் பி.டி.சாக்கோவின் சிலையை நோக்கி 'சரிதானே சாக்கோ சார். தெரியுமா உங்களுக்கு.. பலாவில் உங்க கட்சி 26 குழுக்களா உடைஞ்சிருக்கு' என்கிறான். செல்கள் பிரிந்து பிரிந்து புது செல்கள் உருவாவது போல  காங்கிரஸின் குழு குணாதியசத்தை ஒரு வரியில் கிண்டலடிக்கும் வசனம் இது. படம் முழுவதும் போகிற போக்கில் இது போன்று பல நுட்பமான கிண்டல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு காட்சியில் பாலியல் தரகனான தாசப்பாப்பி 'மாட்டுக்கறி வாங்கினேன்" எனும் போது "ஏன் மாட்டுக்கறி'ன்னு உரக்கச் சொல்றே?' என்கிறான் குட்டியப்பன். சமகால அரசியல் கிண்டல் இது.

குட்டியப்பனாக பிஜூ மேனன் அபாரமாக நடித்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் கதாநாயனுக்கான வெற்றிகரமான உயரத்தை அடைய முடியாமல் போனாலும் இரண்டாம் நிலை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றி பெற்றவர். குட்டியப்பனின் அலட்சியமான உடல்மொழியையும் ஆனால் உள்ளுக்குள் பதற்றம் கொள்ளும் நடுக்கத்தையும் சரளமாகப் புளுகும் இயல்பையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பிள்ளேச்சனாக விஜயராகவன். மனைவிக்கு பயந்து மிரளும் கோழைத்தனத்தையும் குட்டியப்பனின் விநோதங்களை தூர நின்று விரலால் தொட்டு நாக்கில் தடவும் ருசியையும் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். (தமிழில் இத்திரைப்படம் ரீமேக் ஆனால் முறையே ஓவர் ஆக்டிங் செய்யாத பார்த்திபனும் டெல்லி கணேஷூம் பொருத்தமாக இருப்பார்கள் என யூகிக்கிறேன்). பிள்ளேச்சனின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி அற்புதமான நடிகை. காமிரா என்கிற தன் முன்னே உள்ளது என்கிற உணர்வே அல்லாதது போல மிக இயல்பாக நடித்துள்ளார். குட்டியப்பனால் 'லீலா' என பெயர் சூட்டப்படும் அப்பாவியான இளம்பெண் பாத்திரத்தில் பார்வதி நம்பியார் நன்றாக நடித்துள்ளார். 'உதிரிப்பூக்கள்' அஸ்வினியின் முகம் போன்று சோகத்தால் மூழ்கப்பட்ட கண்களும் முகமும் இந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

***

மலையாளத் திரையுலகின் புதிய அலை இயக்குநர்களில் ரஞ்சித் குறிப்பிடத்தகுந்தவர். இடையில் நிறைய சுமாரான திரைப்படங்களை எடுத்தவராக இருந்தாலும் 'கையொப்பு' 'ஞான்' 'பாலெரி மாணிக்கம்', 'இந்தியன் ருபி'  போன்ற அற்புதமான படங்களையும் எடுத்தவர். அந்த வரிசையில் 'லீலா'வும் நிச்சயம் இணையும்.

இந்த திரைப்படத்தின் மையமே குட்டியப்பனின் அக ரீதியான அலைச்சல்தான். ஒரு சராசரி நபரின் எவ்வகையான வாழ்வுமுறைக்கும் அவனுடைய உலகம் அடங்குவதில்லை. அவனுக்குள் ஏன் அப்படியொரு விநோதமான விருப்பம் உருவாகிறது என்பதற்கான விளக்கமோ காரணங்களோ திரைப்படத்திலும் சிறுகதையிலும் சுட்டிக்காட்டப்படவில்லை. அவனுடைய பின்னணி கூட சொல்லப்படுவதில்லை. பூர்வீக சொத்து தரும் செளகரியத்தினால் அந்த செல்வத்தை விசிறியடித்து தன் சலிப்புகளைத் தாண்டிச் செல்ல முயல்கிறான்.

ஒழுக்க மதிப்பீடுகளால்  கட்டியமைக்கப்பட்டுள்ள சமூகத்தின் பிம்பம் விளிம்பு நிலை மனிதர்களால் மீறப்பட்டுக் கொண்டேயிருப்பது இத்திரைப்படத்தில் பல இடங்களில் நுண்மையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தன் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி அவளை குட்டியப்பனுடன் விபச்சாரத்திற்காக தரும் தங்கப்பன் நாயருக்கு குடியும் பணமும் முதன்மையானதாக இருக்கிறது. பின்பு அதற்காக கண்ணீர் வடிக்கவும் செய்கிறான் தங்கப்பன். பாலியல் தொழிலாளியான உஷா தன் கணவருக்குத் தெரிந்தேதான் அந்த தொழிலில் ஈடுபடுகிறாள். குட்டியப்பனுடன் கழித்த விநோதமான இரவை நாணிக் கொண்டே பிள்ளேச்சனுடன் பகிர்கிறாள். தன் மகளையொத்த ஓர் இளம்பெண் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதை குற்றவுணர்வுடன் கவனித்தாலும் அதை தடுக்க முடியாத கையாலாதவனாக பிள்ளேச்சன் இருக்கிறார்.   நடுத்தரவர்க்க மனோபாவம் காரணமாக அவரால் நிகழ்த்த முடியாத சாகசங்களை குட்டியப்பன் செய்வதை கவனிக்கும் போது அவனின் அருகாமை அவருக்கு ஒரு பக்கம் ஆசுவாசமாகவும் ஆதாயமாகவும் இன்னோரு பக்கம் பயத்தையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது. பார்க்கும் எந்தவொரு பெண்ணையும் தன்னுடைய தொழிலுக்கேற்ற உருப்படியாக கவனிக்கும் பாலியல் தரகன் தாசப்பாப்பி.

இது போன்ற பல நுண்தகவல்கள் படம் முழுவதும் எவ்வித நாடகீயத்தனமுமின்றி மிக இயல்பாக சொல்லப்படுகின்றன. தன் வாழ்க்கையை எப்படியாவது வாழ்ந்து முடிப்பதுதான் ஒவ்வொரு எளிய மனிதனுக்குள்ள சவால். ஆகவே நாகரிக உலகம் ஏற்படுத்தியிருக்கும் விழுமியங்களை அவன் உடைத்துக் கொண்டே முன்னகர்கிறான். புதுமைப்பித்தனின் மொழியில் சொன்னால் இதுதான் 'பொன்னகரம்'. இந்த சவால்களின்  இடையில் ஆணாதிக்கப்போக்கினால் லீலாக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அதை நுட்பமாக உணர்த்த முயலும் சித்திரம் இது.(காட்சிப்பிழை இதழில் பிரசுரமானது)

suresh kannan

Saturday, December 14, 2019

இறுதிச் சுற்று - ஒரு நாக்அவுட் அனுபவம்


ஒரு விளையாட்டை முழுக்க முழுக்க மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் தமிழில் குறைவு. ஏறத்தாழ இல்லை என்றே சொல்லி விடலாம். இதுவரை விளையாட்டுடன் தொடர்புப்படுத்தி உருவான திரைப்படங்களும் வெகுசன சினிமாவின் கூறுகளின் இடையில் அந்த விளையாட்டும் ஒரு இழையாக பயணிக்குமே ஒழிய முழுக்க அதை மையப்படுத்தியிருக்காது.

முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவான இந்தித் திரைப்படங்களாக ஷாருக்கானின் ‘சக்தே இந்தியா’, பிரியங்கா சோப்ராவின் ‘மேரிகோம்’ போன்றவற்றை சொல்லலாம். விளையாட்டுடன் தொடர்புள்ளவையாக உருவான தமிழ் திரைப்படங்கள் என்று ஜீவா, வெண்ணிலா கபடிக்குழு, எதிர்நீச்சல், வல்லினம், ஈட்டி, பூலோகம் போன்றவற்றை உதாரணம் சொல்ல முடியும். (கில்லி திரைப்படத்தை இதில் சேர்க்க முடியாதா என்று ஏக்கமாக கேட்கிறார் விஜய் ரசிகர் ஒருவர்). இதில் ஜீவாவும் வெண்ணிலா கபடிக்குழுவும் சாதிய அரசியலையும் பூலோகம் விளையாட்டுத்துறையில் உள்ள சர்வதேச வணிக அரசியலைப் பற்றி பேசும் முக்கியமான திரைப்படங்களாகும்.

இப்படியான விளையாட்டுத் திரைப்படங்களுக்கென்று ஒரு பொதுவான வார்ப்புரு இருக்கும். முன்பு புகழ்பெற்ற வீரராக இருந்தவர் இப்போது பயிற்சியாளராக இருப்பார். அவருக்கு கடந்த கால கசப்பு ஏதாவது ஒன்றிருக்கும். அல்லது அவரால் தீவிரமாக பயிற்சியளிக்கப்பட்டிருந்த சீடன் எவனாவது அவரைத் துரோகித்து விட்டு எதிர்முகாமிற்கு சென்றிருப்பான். தனிப்பட்ட வாழ்க்கையின் கடுமையான துயரம் ஏதாவது இருக்கும். முரட்டுத்தனமாகவும் சிடுசிடுவென்றும் இருக்கும் அவரிடம் அந்த விளையாட்டில் இளம் வயதிலிருந்தே மிக ஆர்வமுள்ள எந்த இளம் வீரனாவது அவரிடம்  கற்றுக் கொள்ள வேண்டி வருவான். முதலில் அவனை ஏற்றுக் கொள்ளவே அவர் மறுப்பார். பின்பு அவனது பிடிவாதத்தையும் பிரத்யேகமான திறமையையும் அடையாயம் கண்டு கொள்ளும் குரு, அவனை சீடனாக அரவணைத்துக் கொள்வார். சில பல தீவிரமான போராட்டங்களுக்குப் பின் குருவின் இழந்த புகழை விசுவாசமான அந்த சீடன் மீட்டுத் தருவான்.

இது போன்ற திரைப்படங்கள் விளையாட்டைப் பற்றியது என்பதால் அது தொடர்பான காட்சிகளே அதிகம் இருக்கும். அது தொடர்பான நுணுக்கங்கள், பயிற்சிகள், கட்டுப்பாடுகள், தவிர்க்கக்கூடிய தவறுகள், சறுக்கல்களால் நிறைந்திருக்கும். தொடர்பான விளையாட்டுப் போட்டிகள் அடிக்கடி வராது. அதற்கான உணர்ச்சிகரமான சூழல் முதலில் வலுவாக அமைக்கப்படும். பார்வையாளன் அந்தப் போட்டியை மிகவும் ஆர்வமாகவும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கும்படி இருக்கும். மெல்ல மெல்ல அதன் உச்சத்தை நோக்கி நகரும். போட்டி நடக்கும் போது காட்சி பரபரப்பின் உச்சக்கட்டத்தை அடையும். பார்வையாளன் இருக்கையின் நுனிக்கே வந்து விடுவான். முதல் சில சுற்றுகளில் நாயக வீரன் தோல்வியுற்று காயப்பட்டு பதட்டத்தை ஏற்படுத்துவான். பிறகு குரு தரும் உத்வேகமான சமிக்ஞையின் மூலம் நுணுக்கமான அசைவின் மூலம் எதிரியை வீழ்த்துவான். அந்த உச்சக்கட்ட வெற்றியில் பார்வையாளனும் மிக்க மகிழ்ச்சியோடு பங்கு கொள்வான். அவனுடைய பதட்டம் பிறகு மெல்ல தணியத் துவங்கியிருக்கும்.

சில்வஸ்டர் ஸ்டோலோனின் ‘ராக்கி’ தொடர்வரிசை திரைப்படங்கள் இவ்வகைமையில் முன்னோடியாக குறிப்பிடும்படியானதாக சொல்லலாம். சமூகத்தின் எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஆண்மைய சிந்தனைகளால் இயங்குவதால் இதில் நாயக வீரனாக உருவாக்கப்படும் மையப்பாத்திரங்கள் பெரும்பாலும் ஆண்களாகவே அமைவார்கள். வணிகச் சந்தையும் சமூக மனதின் பொது உளவியலும் இதற்கொரு முக்கியமான காரணம். ஆவேசமான விளையாட்டுக்களுடன் பெண்களை தொடர்புபடுத்தி எவரும் யோசிப்பதில்லை.

ஆனால் மேலே உதாரணம் காட்டப்பட்ட சக்தே இந்தியா மற்றும் மேரிகோம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலுமே பெண்கள்தான் விளையாட்டு வீரர்கள் என்பது ஆச்சரியமான விஷயம். ஓட்டப்பந்த வீராங்கனையான அஸ்வினி நாச்ப்பா –வை கொண்டு மெளலி இயக்கிய தெலுங்குத் திரைப்படத்தையும் சொல்லலாம். மேரிகோமும் அஸ்வினியும் தங்களின் சுயமான திறமையால் அந்தந்த துறைகளில் ஏற்கெனவே நிறுவிக் கொண்டதால்தான் அவர்கள் குறித்தான திரைப்படங்கள் உருவாக முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

***

இதன் தொடர்ச்சியாக தமிழில் ஒரு பெண் வீரரை மையப்படுத்தி முதன்முதலில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘இறுதிச்சுற்று’. இது பெரும்பாலும் விளையாட்டுத் திரைப்படங்களுக்கான உதாரண வார்ப்புருவை கச்சிதமாகவும் திறமையாகவும் பின்பற்றியிருந்ததால் மிகுந்த கவனத்திற்கு உரியதாகிறது. மற்ற வெகுசன திரைப்படங்களிலுள்ள வழக்கமான கூறுகளினால் இதன் திரைக்கதை காற்றாடி போல அலைபாய்வதில்லை. சாதாரண விளையாட்டுக்களிலேயே பெண்கள் தொடர்பான திரைப்படங்கள் உருவாகமல் இருக்கும் போது மிகுந்த உடல்வலிமையைக் கோரும் மற்றும் எளிதில் காயமேற்படும் ஆபத்துகளைக் கொண்ட குத்துச்சண்டை போன்ற ஆக்ரோஷமான விளையாட்டு தொடர்பான திரைப்படத்தில் ஒரு பெண்ணை மையப்படுத்தி உருவாக்க தனியான துணிச்சல் வேண்டும். மேரிகோம் போன்ற வெற்றிபெற்ற முன் உதாரணங்கள் இருந்ததால் இது சாத்தியமாயிற்று எனலாம்.

ஒரு படைப்பாளியை பால் பேதத்துடன் சுட்டிக்காட்டுவது முறையானதல்ல என்றாலும் இத்திரைப்படத்தை இயக்கியது ஒரு பெண் என்பதாலும் தன்னுடைய இனத்தவரை பிரதானப்படுத்த வேண்டும் என்று அவர் சிந்தித்திருக்கலாம். ஏறத்தாழ எல்லாத் துறையில் பெண்கள் முன்னேறிக் கொண்டும் சாதனைகள் புரிந்து கொண்டிருந்தாலும் கூட அவர்களின் பிரகாசங்கள் வெளியில் பரவலாக அறியப்படாமல் ஆணாதிக்க உலகில் மூழ்கடிக்கப்படும் சூழலில் இது போன்ற படைப்புகள் அவசியம் தேவைப்படுகின்றன.

ஹாலிவுட் திரைப்படமான ‘மில்லியன் டாலர் பேபி’ இதன் கச்சிதமான உதாரணம். குத்துச்சண்டை விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடைய ஒரு பெண், புகழ்பெற்ற பயிற்சியாளரை நாடிப் போகிறாள். ‘பெண்களுக்கு நான் பயிற்சியளிப்பதில்லை’ என்று மறுக்கும் அவர், அவளின் பிடிவாதத்திற்குப் பிறகு அவளின் திறமையை இனங்கண்டு பயிற்சியளிக்க ஆரம்பிக்கிறார். குறுகிய காலத்திலேயே அவள் புகழ்பெற்ற வீராங்கனையாக உருவாகத் துவங்குகிறாள். தன்னுடைய மகளின் பிரிவின் துயரத்தால் மறுகிக் கொண்டிருக்கும் பயிற்சியாளர் இவளை தன் சொந்த மகளாகவே பாவிக்கத் துவங்குகிறார்.


***

இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு வருவோம்.

அங்கிங்கெனதாபடி எங்கும் நிறைந்திருக்கும் அரசியலானது குத்துச்சண்டை விளையாட்டுத் துறையிலும் இருக்கும் காரணத்தினால் திறமை வீணாக்கப்பட்டு அதன் துயரம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரொலிக்கும் கடந்த கால கசப்புகளுடன் இருக்கிறார் குத்துச்சண்டை வீரர் பிரபு. (மாதவன்). பின்னாட்களில் திறமையான பயிற்சியாளர் என்கிற அடையாளத்துடன் இருந்தாலும் அவரது மூர்க்கத்தனமும் அங்கு நிகழும் அரசியலின் மீது அவர் வெளிப்படுத்தும் ஆவேசமும் பலருக்குப் பிடிப்பதில்லை. எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் சென்னைக்கு மாற்றப்படுகிறார்.

அசுவாரசியமாக சென்னைக்குள் நுழையும் அவரின் கண்ணில் படுகிறாள் மதி. மீனவக்குப்பத்தைச் சார்ந்த இளம்பெண். குத்துச்சண்டை விளையாட்டில் அவளுக்குள் ஒளிந்திருக்கும் அசாத்தியமான திறமையை வெளிக்கொணர முயல்கிறார். ஏறத்தாழ பிரபுவிற்கு ஈடான முரட்டுத்தனத்துடன் இருக்கும் மதி (ரித்திகா சிங்) என்கிற அந்தப் பெண்ணிற்கும் இவருக்கும் துவக்கத்தில் நிறைய முரண்களும் மோதல்களம் நிகழ்கின்றன. சிலபல உணர்ச்சிகரமான நாடகங்களுக்குப் பிறகு மாஸ்டரின் லட்சியம், விருப்பம், நோக்கம் எல்லாமே குத்துச்சண்டையும் தன்னுடைய நலனும் மாத்திரமே என்பதைப் புரிந்து கொண்ட பின் குருவிற்குப் பெருமை தேடித்தரும் விதமாக சர்வதேச போட்டியின் கடைசி விநாடிகளில் எதிராளியை நாக்அவுட்டின் மூலம் வெல்கிறாள் மதி.

திறமையான பயிற்சியாளராக அற்புதமாக நடித்துள்ளார் மாதவன். சில வருடங்களுக்கு முன்பு ‘அலை பாயுதே’ திரைப்படத்தில் மென்மையான இளம் காதலனாக அறிமுகமாகிய அந்த மாதவனா இவர் என்று பிரமிக்கும் படியாக தன்னுடைய தோற்றம், உடல்மொழி, அலட்சியமும் மூர்க்கமும் கொண்ட வசனங்கள் என்று தன்னை இந்தப் பாத்திரத்திற்காக மிகுந்த மெனக்கெடலுடன் உருமாற்றியிருக்கிறார். மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’ திரைப்படத்தில் முரட்டுத்தனமான ஒரு ரவுடியாக இவ்வகையான பாத்திரத்தில் ஏற்கெனவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திரைப்பட பாத்திர வடிவமைப்பின் தனித்தன்மைகளுக்காக தன்னையே வருத்திக் கொள்ளும் இது போன்ற நடிகர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாதவனின் திரைப்படப் பயணத்தில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும். அத்தனை அபாரமான நடிப்பு.

இத்திரைப்படத்தில் நடித்தற்காக நாசர் அவர்களை பிரத்யேகமாக பாராட்டியாக வேண்டும். ஏனெனில் துணை நடிகர் கூட ஒருவேளை நடிக்கத்தயங்குகிற ஒரு பாத்திரத்தில் இத்தனை வருட அனுபவமுள்ள சீனியர் நடிகர் தயங்காமல் நடிக்கத் துணிந்த அந்த அர்ப்பணிப்பு உணர்விற்காக. பயிற்சியாளர் என்கிற பெயரில் உள்ளூரில் பல வருடங்களாக இருந்தாலும் எந்தவொரு சாம்பியனையும் உருவாக்காத முதிர்ச்சியற்ற, மாதவனின் முரட்டுத்தனத்தினால் சமயங்களில் சிறுமைப்படுத்தப்படுகிற பாத்திரம் அவருக்கு. பயிற்சிக்கூடத்தில் உதவியாளராக இருக்கிறார். (மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் மார்கன் ப்ரீமென் நடித்த பாத்திரம் நினைவிற்கு வருகிறது). ‘நீ கக்கூஸ் கழுவத்தான்யா லாயக்கு’ என்று மாதவனால் ஒரு கட்டத்தில் அவமானப்படுத்தப்படும் போது.. “ஆமாம். கக்கூஸ் நான் கழுவுறேன். ஆனா கப்பு உங்கள்துதானே?’ எனும் போது அந்த ஒரு சிறிய வசனத்தில் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உறைந்திருக்கும் சமூகக் கோபம் வெடித்து சிதறுகிறது.

மதி என்கிற மீனவகுப்பத்துப் பெண்ணாக நடித்திருக்கும் நடிகை உண்மையிலேயே கிக் பாக்ஸிங் வீரராக இருப்பதால் அவருடைய உடல்மொழி நம்பகத்தன்மையுடன் இருக்கிறது. அதிலொன்றும் கூட ஆச்சரியமில்லை. ஆனால் இதற்கு முன் நடித்த அனுபவமேதுமில்லாமல் முதல் திரைப்படத்திலேயே அத்தனை அபாரமாய் நடித்திருக்கிறார் பாருங்கள். அதுதான் ஆச்சரியம். மாதவனுக்கு ஈடான முரட்டுத்தனத்துடன் அவருடன் மோதிக் கொண்டேயிருப்பவர், ஒரு கட்டத்தில் மாதவனின் நல்லியல்பு புரிந்தவுடன் இனக்கவர்ச்சியினால் அவர் மீது காதல் கொள்வதும் போட்டியில் தோற்ற காரணத்திற்காக  மாதவன் தன்னை நிராகரித்தவுடன் வேதனை கொள்வதும் பின்பு மீட்டுக் கொண்ட உத்வேகத்துடன் குருவின் மீது நெகிழ்ச்சி காட்டுவதும் என பல்வேறு உணர்ச்சியான முகபாவங்களால் அற்புதம் செய்திருக்கிறார்.

ராதாரவி சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறார். குத்துச்சண்டை அஷோசியேஷனின் தலைவராக அரசியலும் அற்பத்தனங்களும் செய்பவராக ஜாகீர் உசேனின் நடிப்பும் அபாரம்.

வழக்கமான போக்கில் சென்று கொண்டிருந்த தமிழ் திரையிசையில் அந்தந்த காலக்கட்டததில் தமது பிரத்யேகமான திறமையின் மூலம் அதை உற்சாகமான புதிய திசைக்கு பயணிக்க வைத்து சாதனை புரிந்த இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் போல சமகாலத்தில் அந்தச் சாதனையைப் புரிந்து வருபவராக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. அதுவரையான மரபை ஆரோக்கியமாக மீறும் துணிவு, புதிய பாணியிலான இசையமைப்பு, விளிம்பு நிலை சமூகத்தின் கலையை அதன் தன்மை பெரிதும் மாறாமல் உபயோகிக்கும் உன்னதம் போன்றவை இந்த இசையமைப்பாளரை தனித்து கவனப்படுத்துகின்றன.

***

இறுதிச் சுற்று திரைப்படத்தின் இயக்குநரான சுதா கோங்கராவின் முதல் திரைப்படமான ‘துரோகி’ பார்த்திருக்கிறேன். பாத்திரங்களின் வடிவமைப்பு, மேக்கிங் ஆகியவை சிறப்பாக இருந்தாலும் திரைக்கதையின் பலவீனத்தால் சுமாரான திரைப்படமாக அது அமைந்தது. இவர் மணிரத்னத்தின் உதவியாளராக இருந்ததால் குருவின் செய்நேர்த்தியை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரைக்கதையை வடிவமைப்பதில் கோட்டை விட்டு விட்டாரே என்று அப்போது நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாய் அற்புதமான திரைக்கதையின் மூலம் விட்டதைப் பிடித்து விட்டார்.

இத்திரைப்படம் விளையாட்டுத் திரைப்படங்களுக்கேயுரிய தேய்வழக்கான வார்ப்புருவில் அமைந்திருந்தாலும் சுவாரசியமான, உணர்ச்சிகரமான, பரபரப்பான காட்சிக்கோர்வைகளின் மூலம் கவர்ந்திருக்கிறார். வழக்கமான தமிழ் திரைப்படத்தின் நீளம் அல்லாமல் கச்சிதமான காட்சிகளுடன் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. இடையில் பாடல்கள் வந்தாலும் அவைகளுக்குள்ளும் திரைக்கதை நகர்வதால் பெரிய இடையூறாக தெரியவில்லை. தேவைற்ற காட்சிக்கோர்வை என்று எதையுமே சொல்லி விட முடியாதபடி படைப்பின் மையத்துடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கின்றன. கதாபாத்திரங்களின் உணர்வும் பார்வையாளர்களின் உணர்வும் பின்னிப் பிணையும் படி உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்குவது ஒரு திறமையான இயக்குநரின் அடையாளம். அந்த வகையில் கவுரி அபாரமான வெற்றியை அடைந்திருக்கிறார்.

பொதுவாக குருவைத் தேடி சீடன் கண்டடைவதும் அவருடைய துவக்க நிராகரிப்புகளைத் தாண்டி பிடிவாதத்துடன் தன் திறமையின் மூலம் அவரைக் கவர்வதும் என்கிற வழக்கமான போக்கு அல்லாமல் இத்திரைப்படத்தில் குருதான் தன்னுடைய சீடரை அடையாளங் கண்டுகொள்கிறார்.

பெண் பித்தன் என்று அறியப்படும் மாதவன் அந்தக் காரணத்தினாலேயே தன் பின்னால் சுற்றுகிறானோ என்று துவக்கத்தில் சந்தேகப்படும் ரித்திகா, தன் சகோதரிக்காக விளையாட்டில் வேண்டுமென்றே தோற்றுப் போய் மாதவனை வெறுப்பேற்றுவதும் பின்பு திறமையை வளர்ப்பது மட்டுமே அவரது நோக்கம் என்கிற நல்லெண்ணத்தை புரிந்து கொண்டு அவர் மீது நேசம் கொள்வதும் ஜெயிப்பதற்காக போட்டியை அணுகும் நேரத்தில் சகோதரியின் துரோகத்தால் தோற்றுப் போவதும், முன்பு போலவே இப்போதும் வேண்டுமென்றே தோற்றுப் போனாள் என்கிற குற்றச்சாட்டுடன் குருவின் புறக்கணிப்பையும் ஆத்திரத்தையும் துயரத்தையும் எதிர்கொள்வதும் இறுதியில் விடாமுயற்சியோடு குருவின் நம்பிக்கையைப் பெறுவதும் என நுட்பமான புனையப்பட்டிருக்கும் திரைக்கதை சுவாரசியமான வேகத்துடன் பயணிக்கிறது. (உச்சக் காட்சியில் போட்டியில் வென்று விட்ட பிறகு தாயைத் தேடும் குழந்தை போல மாஸ்டரை தேடி அவர் மீது பாய்ந்து அமரும் காட்சியின் உடல்மொழியும் ‘மில்லியன் டாலர் பேபி’ திரைப்படத்தை நினைவுப்படுத்துகிறது.)

பாத்திரங்களின் வடிவமைப்பும் அவற்றின் இயல்பான பரிணாம வளர்ச்சியும் கூட மிக நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மாதவனின் மீது காதல் கொள்ளும் ரித்திகா அவர் வாங்கித் தந்த தொப்பியை பெரும்பாலும் அணிந்திருப்பதும் அவர் பக்கத்தில் அமர்வதற்காக போட்டியிட்டு இடம் பிடிப்பதும் அவருடன் பேசும் பெண் மீீது பொறாமை கொள்வதும் அதுவரை குருவின் காலைத் தொட்டு கும்பிடாத திமிருடன் இருந்தவர், குருவின் முழு நல்லெண்ணம் முழுவதும் புரிந்தவுடன் இறுதிப் போட்டிக்கு முன்பு காலில் விழுந்து வணங்கிச் செல்வதன் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் அக மாற்றத்தை சிறப்பான நுணுக்கங்களுடன் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

குருவிற்கும் பெண் சீடருக்கும் உள்ள உறவும் மிக அற்புதமாக ஆபாசக் கலப்பின்றி பதிவாகியிருக்கிறது. ரித்திகாவிற்கு தன் மீதுள்ளது ஒடிபஸ் காம்ப்ளக்ஸினால் (Oedipus Complex) ஏற்பட்டிருக்கும் இனக்கவர்ச்சி என்பதை புரிந்து கொள்ளும் மாதவன் அவரை கவனமாக நல்வழிப்படுத்துகிறார். ஒரு காட்சியில் ரித்திகா புடவையணிந்து கொண்டு வந்து காதலை வெளிப்படுத்தும் போது ‘உன்னைப் புடவையில் பார்க்க பிடிக்கவில்லை. ரிங்கில் நின்று ஃபைட் பண்ணும் போதுதான் பிடிச்சிருக்கு’ என்று அவர் சொல்வதிலிருந்து குத்துச்சண்டையைத் தவிர அவருடைய கவனம் வேறெதிலுமே இல்லை என்பதின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. போலவே சகோதரிகளாக இருந்தாலும் காதல் என்று வந்து விடும் போது ஏற்படும் விலகலும் துரோகமும் கூட திரைக்கதையின் மையத்துடன் பொருந்துமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘அவளுக்கு மாத்திரம் ஏன் மாஸ்டர் ஸ்பெஷலா டிரையினிங் தர்றீங்க’ என்று ரித்திகாவின் சகோதரி மாதவனிடம் ஆவேசப்பட்டு அழும் காட்சி ஒன்று போதும், இயக்குநரின் திறமைக்கு சான்றாக அமைகிறது.

***

விளையாட்டு தொடர்பான அத்தனை இந்தியத் திரைப்படங்களின் காட்சிகளிலும் சாதி, மதம், வர்க்கம் என்று ஏதோ ஒருவகையில் அதன் அரசியல் நுழைந்து விடுவதைப் பார்க்கும் போது திரைக்கதையை கற்பனையாக உருவாக்கினாலும் இந்தியாவின் அவலமான யதார்த்தம் எப்படியோ உள்ளே பதிவாகி விடுவதைக் காண முடிகிறது.

ஷாருக்கானின் சக்தே இந்தியா திரைப்படத்தில் அவன் ஒரு இசுலாமியன் என்பதற்காகவே விளையாட்டில் அவன் செய்யும் தவறொன்றின் மீது மதச்சாயமும் அது சார்ந்த அரசியல் வசைகளும் பூசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் ஆதிக்க சமூகத்தினர் மட்டுமே தொடர்ச்சியாக பெரும்பாலும் தேர்வு செய்வு செய்யப்படும் சாதிய அரசியலை ‘’ஜீவா’ திரைப்படம் பதிவு செய்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது இடைநிலைச்சாதிகள் செய்யும் ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் ‘வெண்ணிலா கபடிக்குழு’ சொல்கிறது. பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் போன்ற புறக்கணிககப்பட்ட இந்திய மாநிலங்களிலிருந்து மிக அபூர்வமாக உருவாகி வரும் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ள வேண்டிய உளவியல் தடைகளை “மேரிகோம்’ விவரிக்கிறது.

இத்திரைப்படத்திலும் விளையாட்டுத் துறையில் உள்ள அரசியலும் அதிகார துஷ்பிரயோகமும் துல்லியமாகப் பதிவாகியிருக்கிறது. பெண் விளையாட்டு வீரர்கள் மீதான பாலியல் சுரண்டலும்.

இந்தியா இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஏன் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியவில்லை? என்கிற பொதுவான சலிப்பான புகாருக்கும் கேள்விக்குமான விடை இம்மாதிரியான அரசியல் ஆபாசங்களில் பொதிந்திருக்கிறது. தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதும், இதிலுள்ள அரசியல் தடைகள் தாண்ட முடியாமல் விரக்தியுடன் விலகிப் போகிறவர்களும் சிபாரிசு காரணமாக உள்ளே நுழையும் பலவீனர்களாலும் நாம் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டேயிருக்கிறோம்.  நம்முடைய தேசம் வெல்ல வேண்டும் என்கிற பொதுவான நோக்கத்தை விட தனிநபர்களின் சுயநலமான எண்ணங்கள் ஆதிக்கம் செய்வதே இம்மாதிரியான அவலத்திற்கு காரணம்.

***

குத்துச் சண்டை மாதிரியான ஆபத்தான விளையாட்டுப் போட்டியின் பின்னுள்ள வணிகச் சந்தையையும் (பூலோகம் திரைப்படம் இதைப் பற்றி பிரதானமாக உரையாடுகிறது) வீரர்களுக்கு இதில் ஏற்படும் உயிரிழப்பு உள்ளிட்ட ஆபத்துக்களையும் பற்றி இத்திரைப்படம் கவனத்தில் கொள்ளவேயில்லை. ஒரு வழக்கமான விளையாட்டு தொடர்பான திரைப்படத்தைப் போலவே ஒரு பரபரப்பான, பரவசமான வெற்றியுடன் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துவதோடு நின்று விடுகிறது.

குத்துச்சண்டை போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டுக்கள் என்பது என்னதான் தற்காப்புக் கலை என்றும் மருத்துவர்கள் மற்றும் நடுவர்களின் கண்காணிப்பில் நிகழ்வது என்றாலும் மனித உடலை மீளாத ஆபத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை வாய்ந்தது. மனதை ஒருமுகப்படுத்துதல், உடலினை உறுதி செய்தல், எதிராளியின் அசைவிற்கேற்ப குறைந்த நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு தாக்குதல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளும் விளையாட்டு என்பது போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதிலுள்ள ஆபத்தை மழுப்ப முடியாது.

மறுபடியும் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தைத்தான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கிறது.

அத்திரைப்படம் இறுதிச் சுற்று போல வெற்றியடைந்த மகிழ்ச்சியுடன் நின்று விடாமல் சக போட்டியாளரின் வன்மம் காரணமாக போட்டி நின்ற பிறகும் தொடர்கிற தாக்குதல் காரணமாக அதில் வரும் வீராங்கனை மீள முடியாத ஆபத்தோடு படுத்த படுக்கையாகி விடுகிறார். அவர் படும் அவதியை காண சகிக்க முடியாத அவருடைய பயிற்சியாளர் ஒரு நிலையில் அவளுக்கு மரணத்தை அளிப்பதோடு குத்துச்சண்டை பயிற்சியளிப்பதையே நிறுத்தி விட்டு அங்கிருந்து விலகி எங்கோ மறைந்து விடுவதாக அத்திரைப்படம் முடிகிறது. குத்துச்சண்டையின் புகழ்பெற்ற வீரராக விளங்கிய முகம்மது அலி அதிலிருந்து விலகிய பிற்காலத்தில் ‘பார்கின்ஸன் நோயால்’ அவதிப்பட்டதை உதாரணமாக சொல்லலாம்.

குத்துச்சண்டை போன்ற ஆபத்தான விளையாட்டுகளுக்கு என்னதான் பல பெருமைகளுடன் கூடிய அரிதாரங்களைப் பூசினாலும் விளையாட்டு ஆர்வலர்கள் இதை மறுத்தாலும் அவைகளில் உள்ள ஆபத்தை மழுப்ப முடியாது. மனிதர்களுக்கு எச்சமயத்திலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தன்மை கொண்டது. மட்டுமல்லாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்வதை சுற்றியுள்ள மனிதர் கூட்டம் ரசிப்பதென்பது அவர்களின் ஆழ்மனதில் உறைந்துள்ள குரூரமான வன்முறை உணர்வுகளுக்கு தீனி போடுவது போல்தான் அமைந்துள்ளது. மன்னர்களும் சர்வாதிகாரிகளும் அரசாண்ட காலங்களில் பொழுதுபோக்குகள் அதிகமில்லாத சூழலில் மனிதரை மனிதர் மோத விட்டு ரசிக்கும் போக்கும் நாகரிக உலகிலும் தொடர்வது பொருத்தமில்லாதது போல் தோன்றுகிறது.

இறுதிச்சுற்று இது போன்ற விஷயங்களையும் திரைக்கதையினுள் உரையாடியிருந்தால் ஒரு முழுமையான திரைப்படமாக மலர்ந்திருக்கக்கூடுமோ என்று தோன்றுகிறது.

***

இந்தியாவில் பெண்களுக்கான குத்துச்சண்டை அறிமுகமான ஐந்தே வருடத்தில் அந்த இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது எத்தனை பேருக்கு தெரியும்? என்கிற கேள்வியுடன் இத்திரைப்படம் முடிகிறது.

பார்வையாளர்களை நோக்கி இயக்குநர் சுதா வைத்திருக்கும் 'நாக்அவுட்' குத்து அது.(அம்ருதா இதழில் பிரசுரமானது) 


suresh kannan