Thursday, September 22, 2005

புழுதியில் எறியப்பட்ட தெய்வவீணை

புதிய பார்வை (செப் 15-30) இதழில் வெளியான கட்டுரையை, (மகாகவி பாரதியார் சர்வதேச கருத்தரங்கை முன்னிட்டு அவரின் வாரிசுகள் தொகுத்து வெளியிடப் போகும் கட்டுரைகள் தொடர்பானது) பாரதி அன்பர்களுக்கு உபயோகப்படக்கூடும் என்கிற நோக்கில் இங்கு வெளியிடுகிறேன். (நன்றி: புதிய பார்வை)

புழுதியில் எறியப்பட்ட தெய்வவீணை

மகாகவி பாரதியாருக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும் தமிழ்ச் சூழலில் பாரதியைப் பற்றியும் சற்றே வெடிப்புறப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. புழுதியில் எறியப்பட்ட தெய்வ வீணையாகத் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் பாரதி. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னும் அவரது தகுதிக்குரிய உன்னதத்துடனும், கண்ணியத்துடனும் பாரதி வாசிக்கப்பட்டதுமில்லை, விமர்சிக்கப்பட்டதுமில்லை.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகமில்லாத வாழ்க்கையும், எதைப் பற்றியும் எல்லையற்ற பணிவுடனும் திறந்த மனத்துடனும், பொறுப்புணர்வுடனும் கூடிய சுதந்திரத்துடனும் விவாதிக்கும் நேர்மையும், உள்ளத்துப் பொறியைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டேயிருக்கும் உன்மத்தமும், தன்னைப் பலி கொடுத்தும் தன் மதிப்பீடுகளைப் பேணும் நெஞ்சுரமும், பாரதியின் இயல்புகளாகும்.

தமிழ் இலக்கிய உலகில் நிலவும் எல்லா வகைக் குழுச் சண்டைகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும், தார்மீகத் தாக்குதல்களுக்குப் பின்னாலும், தமிழில் இருபதாம் நூற்றாண்டின் ஆகப்பெரும் கலைஞன் பாரதி என்பதில் இனி கேள்வியில்லை. மரபான கவிதையில் மட்டுமின்றிப் புதுக்கவிதை, சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம், கட்டுரை, கருத்துப்படம் மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முன்னோடி முயற்சிகளாகத் தன் சுவடுகளை அழுத்தமாகப் பதித்துச் சென்ற முழுமையான படைப்பாளி நம் மகாகவி. தொட்ட துறைகளிலெல்லாம் தன் தனி முத்திரையைப் பதித்த இந்த மகத்தான கலைஞனைப் பற்றிய ஆழமான பதிவுகள், நம் ஆய்வுலகில் உண்டா? பாரதியின் வாழ்வையும் எழுத்தையும் உள்ளபடியே புரிந்துகொள்ள முனையும் குறைந்த பட்ச முயற்சிகளேனும் இங்குச் சாத்தியமாகியுள்ளனவா எனில், 'இல்லை' என்றே தலைகுனிய வேணடிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒருபுறத்தில் பார்ப்பன வெறியனாகப் பாரதியைக் கட்டமைக்க சிலர் துணிந்திருக்கிறார்கள் என்றால், மறுபுறத்தில் அதைக் கண்டும் காணாத தந்திரசாலிகளாய்ப் 'பாரதியாருக்குச் சேவை' என்ற பெயரில் பாரதியைப் பலர் விற்பனைப் பொருளாக்கி வருகின்றனர். இத்தகையோர் நிறைவே இங்குண்டு. பாரதியைச் சாமியாக்கி பூசாரிகளாகத் தம்மைத் தாமே நியமித்துக் கொண்ட இப்பாமரர்களின் பாத பூசைகளில், கற்பூர ஆரத்திகளில், பாலாபிஷேகங்களில் பாரதி தரிசனம் பாதை மாறிக் கொண்டிருக்கிறது.

தேசியம், தமிழியம், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற அரசியல் தளங்களிலும், புனைவியல், யதார்த்தவியல், மீ-மெய்யியல், இருத்தலியம், பின்-நவீனத்துவம் போன்ற இலக்கியத் தளங்களிலும் பாரதியைத் தவிர்ததுவிட்டு விவாதித்தல் என்பது இன்று இயலாது. இவை எல்லாவற்றின் தொடக்கப் புள்ளியாகவும், அதே நேரத்தில் மரபின் செழுமையான சாரமாகவும் பாரதி நின்று கொண்டிருக்கிறார்.

சாதி, மதம், இனம், பால், மொழி என்று எல்லாவற்றிற்குள்ளும் ஊடாடியும் கடந்தும் பெருவெளி அனுபவமாக நிலைத்திருக்கும் பாரதியின் பன்முக ஆளுமையைப் பதிவு செய்தல் என்பது, நம் காலத்தின் உடனடித் தேவையாகும். சென்ற நூற்றாண்டிலேயே நாம் செய்திருக்க வேண்டிய காரியம் இது. எனினும், காலம் கடந்தேனும் செயல் புரியும் எண்ணம் இப்போதுதான் தோன்றியிருக்கிறது என்பது காலத்தின் விந்தைகளிலொன்று. இதற்குப் பாரதியின் ரத்தம் எம்முள் ஓடுவதும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணமன்று. ஆயிரம் மைல் பயணத்துக்கான முதல் அடியையும் யாராவது ஒருவர் தொடங்கி வைக்கத்தானே வேண்டியிருக்கிறது?

தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் பரிபூர்ணமாய் நம்பியவர் எம் பாட்டனார் பாரதி. வால்மீகியோடும் கம்பரோடும் ஷேக்ஸ்பியரோடும் டால்ஸ்டாயோடும் விட்மனோடும் தாகூரோடும் ஒப்பிடத்தகுந்த அந்த மேதைக்கு இன்று நாம் செய்ய வேண்டியது என்ன? உலக இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான பாரதியின் பங்களிப்பைத் திட்டவட்டமாக மதிப்பிட்டுரைப்பதுதான். இந்தத் திருப்பணியில் தமிழ் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

எதிர்வரும் பாரதியின் 123-ஆம் பிறந்த நாளில் (டிசம்பர் 11, 2005) சர்வ தேசியக் கருத்தரங்கு ஒன்று நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காகப் பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். தரமான கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவும் எண்ணியுள்ளோம். கட்டுரைகள், ஆறு முதல் பத்துப் பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படாத கட்டுரைகளைத் திருப்பியனுப்ப இயலாது. கடடுரைகளின் தேர்வைப் பொறுத்த வரையில், தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ள இயலாது. கட்டுரைகளை மட்டும் அனுப்புங்கள். காசோலைகள் ஏதும் வேண்டாம்.

என் பாட்டியார் மகாகவியின் மனைவி செல்லம்மா பாரதி, தான் எழுதிய பாரதியார் சரித்திரத்தின் முன்னுரையில், நான் (என் கணவருடைய) கதையை எழுதப் போகிறேன் என்று கூறிவிட்டு, தமிழ் மக்களைப் பார்த்து "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்கிறார். பாரதிக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

- முனைவர் எஸ்.விஜயசாரதி
(மகாகவி பாரதியாரின் பேத்தி)

டாக்டர் மீரா சுந்தரராஜன் டி·பில்
(மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி)
பேராசிரியை, சட்டத்துறை
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்
வான்கூவா, கனடா.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் எஸ்.விஜயசாரதி
35/2, பழைய எண்.15, மூன்றாவது பிரதான சாலை,
காந்தி நகர், அடையாறு, சென்னை-600 020.
மின் அஞ்சல்: v_bharati@hotmail.com

கட்டுரைகள் கிடைக்க வேண்டிய இறுதிநாள்:

நவம்பர் 11, 2005

Saturday, September 17, 2005

கணக்குப் பாடமும் கணையாழிக் கவிதையும்

செப்.2005 கணையாழி இதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கவிதை என் பழைய நினைவலைகளை உசுப்பி விட்டது. (நினைவலைகள் அடங்கிய பதிவுகளை வெறுப்பவர்கள் - அதாவது வீட்டில் கொசுவர்த்தி சுருள் கூட பயன்படுத்தாமல் பதிலாக மேட் பயன்படுத்துபவர்கள் - உடனடியாக இதிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

'கணக்கு என்றால் ஆமணக்கு' என்கிறார் பாரதி. இந்த விஷயத்தாலேயே பாரதியை மிக நெருக்கமாக என்னால் உணர முடிந்தது. தமிழே எனக்கு எப்போதும் விருப்ப பாடம். தங்கள் மகன்களை குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்தும் அந்தக் கால பெற்றோர்கள் உருவேற்றியதாலும் ஸ்டைலாக பேசுவதால் ஏற்படும் மதிப்பாலும ஆங்கிலத்தில் ஒரளவு விருப்பம் ஏற்பட்டு படிக்க முடிந்தது. வரலாறு மற்றும் புவியியலை எல்லாம் நான் அப்போது ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதோ, இப்போது இணையத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேனே, அதை மாதிரியே எதை எழுதி வைத்தாலும் மதிப்பெண்கள் வந்துவிடும். (எங்கள் சரித்திர ஆசிரியர் மார்க் போடுவதில் தரித்திரமாக இல்லாமல், என்ன எழுதியிருக்கின்றது என்பதை பார்க்காமலேயே, கோலி விளையாடும் சிறுவர்கள் மாதிரி விடை எத்தனை ஜாண் நீளத்திற்கு நீண்டிருக்கிறதோ அத்தனை மதிப்பெண்கள் வழங்கி 'சரித்திர' சாதனை புரிவார்.)

ஆனால்.... இந்த கணக்குப் பாடம்தான் என்னை ஜென்மப் பகைவன் மாதிரி எல்லா வகுப்பிலும் துரத்திக் கொண்டே வந்தது. கணக்கு வகுப்பு என்றால் நிஜமாகவே எனக்கு ஜீரம் வந்துவிடும். அதுவும் இந்த 'அல்ஜீப்ராவை' கண்டுபிடித்தவனை எங்கு கண்டாலும் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக அப்போது தயாராயிருந்தேன். பெண் பிள்ளைகளை துரத்திக் கொண்டும் போகும் செயல் கூட 'கணக்குப் பண்ணுவது' என்கிற பரிபாஷையில் அழைக்கப்பட்டதனாலேயே அந்த காரியம் கூட எனக்குப் பிடித்தமில்லாத ஒன்றாக இருந்தது.

()

இப்பவும் இருக்கிற பிராட்வே தியேட்டரின் (இங்குதான் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் என்கிற திரைப்படம் மூன்றரை வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது) எதிரேயுள்ள புனித கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியில் அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய வெள்ளைப் பாவாடையை போட்டுக் கொண்டு எப்படி கால் தடுக்காமல் நடக்கிறார்கள் என்று நான் வியக்கிற பாதர்மார்களும், காலை வெயிலில் பிரேயருக்கு நிற்கிற போது எங்கள் மேல் வெயில் படாமல் தடுத்தருள் புரிந்த பரந்து விரிந்த பாதாம் மரமும் (இந்த மரத்திலிருந்து விழும் பாதாம்காய்களை கல்லால் உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை சாப்பிடுவோம். சமீபத்தில் அந்தவழி போனபோது இந்த மரம் வெட்டப்பட்டு பிரேயர் ஹால் வெளிச்சமாய் இருந்ததை பார்த்த போது என்னுள் எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விளக்க தெரியவில்லை) தாமதமாக வந்தால் பி.டி வாத்தியார் மூன்று ரவுண்டு மூச்சிரைக்க ஓட வைக்கிற பிரம்மாண்டமான விளையாட்டு மைதானமும் இடைவேளைகளில் வெளியே போகமுடியாதபடி வாட்ச்மேன் லாசர் பூட்டிவைத்துவிட கதவு கம்பி இடைவெளியில் வாங்கின உப்பு தூவின மாங்காய் துண்டுகளும், எலந்தம் பழங்களும் அங்கேதான் அறிமுகமானது.

நான் பொதுவாக எப்போதுமே பார்டரில் பாஸ் பண்ணுகிற ஆள். பின்பெஞ்சில் மேளம் தட்டிக் கொண்டு ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்குமே, அதைச் சார்ந்தவன். 'நன்றாக படிக்கிற பசங்களை' எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கிண்டல் செய்து மட்டம் தட்டுவோம். அவர்கள் இதையெல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருப்பார்கள். நான் அந்த வயதில் மிகவும் பூஞ்சையாக இருப்பேன். இந்த காரணத்திற்காகவே சக மாணவர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கேன். "பின்னால கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா சர்ட்டை இன் பண்றே". இந்தக் குறையை மறைத்துக் கொள்வதற்காகவே வேண்டுமென்றே படிக்காத மாணவர்களிடம் சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால் தமிழில் மட்டும் எப்போதும் 70 அல்லது 80 எடுத்துவிடுவேன். இதனாலேயே படிக்கிற மாணவர்கள் என்னை 'இவன் பழுதா பாம்பா' என்று தீர்மானிக்க முடியாமலிருந்தார்கள். ஒரு முறை தமிழில் உயர்ந்த பட்சமாக 93 எடுத்துவிட என்னை ஆப்ரிக்க தேசத்திலிருந்து வந்தவன் போல் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனால் இந்த கணக்குப்பாடம்தான்... அது என்னை விரோதியாக பார்த்ததோ அல்லது நான் அதை விரோதியாக பார்த்தேனோ தெரியவில்லை. எப்போதும் வாய்க்கா, வரப்பு தகராறுதான். நிற்க.

()

இந்த இடத்தில் நிறுத்தி எங்கள் கணக்கு வாத்தியார் அமல்தாஸைப் பற்றி கூற வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். இவர் வாய்விட்டு சிரித்த கணங்கள் அபூர்வமானவை. மதப்போதகர் தினகரனின் குரலை குளோனிங் செய்தது போல் அதே குரலில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார். நானும் அதே மாதிரியே நண்பர்களிடையே ஒரு முறை வயிற்றை முக்கி பேச முயன்றதில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தததால் அதை தொடரவில்லை. மிக மெல்லிதான ஒரு பிரம்பு வைத்திருப்பார். பிரம்பு மெலிதாக இருந்தாலும் வயாகரா சாப்பிட்ட மாதிரி அதன் வீர்யம் பெரிது. கையில் அடி வாங்கி கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு வலி கியாரண்டி.

கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென்று நிறுத்தி சரியாக என்னைக் குறிவைத்து எழுப்பி "இதோட பார்முலா சொல்லு" என்பார் நம்பியார் குரலில். அந்த பார்முலாவோ உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் தேடிய பார்முலாவை விட கடினமானதாக இருக்கும். நான் "ஏ ஸ்கொயர் ப்ளஸ்.... " என்று ஏதோ மழுப்ப முயல கையை விறைப்பாக நீட்டச் சொல்லி சுளீரென்று பிரம்படி விழும். இதனாலேயே கணக்கையும் அந்த வாத்திராரையும் மிகவும் பிடிக்காமல் போய்விட்டது. 'கணக்கில் மட்டும்தான் பூஜ்ஜியம் வாங்க முடியாது. அவ்வளவு எளிதானது' இது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். ஆனால் இந்த விஷயத்தை அவ்வப்போது சாதித்து அவரை மிகவும் எரிச்சலூட்டுவேன். படிக்கிற மாணவர்கள் அல்ஜீப்ராவை ஏதோ மாற்றான் மனைவியுடன் சல்லாபிப்பது போல் சுவாரஸ்யமாக போட்டுக் கொண்டிருக்க, நான் அவர்களை எரிச்சலோடும் லேசான பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருப்பேன். அல்ஜீப்ரா என்கிற விஷயம் அல்கொய்தா போல் என்னை மிரட்டிக் கொண்டிருந்த காலமது.

()

இப்போது கூட யாராவது பேச்சு வாக்கில் "போடுங்களேன். 1 ஸ்கொயர் ·பீட் ஆயிரத்து ஐநூறுன்னா.... 435 ஸ்கொயர் ·பீட் எவ்வளவு ஆகுது? என்னும் போது என் கைகள் தன்னிச்சையாக கால்குலேட்டரை தேடும். அவரோ "இதுக்கு எதுக்குங்க கால்குலேட்டர். நானூறு இன்டு ஆயிரத்து ஐநூறு.. ஆறு லட்சம் ரூபா.. இல்லியா. அப்புறம் 35 இன்டு .. என்னா கரெக்டுதானே... என்று நானும் ஏதோ அந்த கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது என்னை சரிபார்த்துக் கொண்டிருக்க, நான் மையமாக சிரித்துக் கொண்டே "ஆமா ஆமா" என்று அவர் சொல்லும் விடையை எந்தவித நிபந்தனையுமின்றி அப்படியே ஒப்புக் கொள்வேன். இப்போது ஆறாங்கிளாஸ் படிக்கும் பக்கத்து வீட்டு பையனின் கணக்குப் புத்தகத்தை சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலை லேசாக 'கிர்..ரென்றது. அப்போதைய கணக்குகளே பரவாயில்லை போல. எண்களும் நானும் ஆடிக் கொண்டிருக்கும் இந்த மல்யுத்தம் எப்போது சமாதானத்திற்கு வருமென்று தெரியவில்லை.

()

என்னுள் இவ்வளவு நினைவலைகளை எழுப்பிய அந்த கவிதையை இப்போது பார்ப்போம்.

என் கணக்குப் புத்தகம்
======================

- சிறீ.நான்.மணிகண்டன்

சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.

(நன்றி : கணையாழி - செப் 2005)

Thursday, September 08, 2005

பிரியசகி

கடந்த வாரத்தில் ஒரு நாள் ஒரு இணைய நண்பர் என் வீட்டிற்கு தொலைபேசினார். "சுரேஷ் கண்ணன் இருக்காரா?" அந்த 'இருக்காரா' என்பதில் ஏதோ ஒரு வித்தியாசமும் அழுத்தமும் தெரிந்தது. ''நான் தான் பேசறேன்" என்றேன். "இல்லைங்க. ரொம்ப நாளா உங்களை பிளாக் பக்கம் காணோம். அதுவுமில்லாம காலை பேப்பர்ல உங்க பேர் போட்டு ஒரு ஆபிச்சுவரி விளம்பரம் வேற பாத்தேன். அதான் எதுக்கும் விசாரிச்சுருவோமேன்னு..... என்று இழுத்தார்.

அடப்பாவிகளா! சினிமா உலகில் ஒரு விஷயம் சொல்வார்கள். தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்கச் சொல்லி. இல்லையென்றால் இறந்துவிட்டதாக சொல்லி புதைத்துவிடுவார்களாம். இணையத்திலும் அதே கதையாக இருக்கவே, அடித்து பிடித்து ஏதோ ஒன்றை எழுதி என் 'இருப்பை' தெரிவிப்பதற்காக இந்த அவசர 'சினிமாப் பார்வை' பதிவு.

பிரியசகி

Image hosted by Photobucket.com


இந்த மாதிரி கதையமைப்பை கொண்ட படங்களை நாம் பழைய படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம். ஏழை கதாநாயகனுக்கும் பணக்கார கதாநாயகிக்கும் எப்படியோ காதல் ஏற்பட்டு (சினிமாவைப் பொறுத்தவரை காதல் ஏற்படுவதற்கு எந்த எழவு காரணமும் தேவையில்லை. தடுக்கி விழப்போன நாயகியை வேலை வெட்டி இல்லாமல் அவள் பின்னாலேயே மூத்திரம் குடித்த மாடு சுற்றிக் கொண்டிருக்கும் காதலன் தாங்கிப்பிடிக்க பின்னணியில் 'நம்தன நம்தன' என்று பின்னணியில் இசை ஒலிக்க அடுத்த விநாடியே பட பட்ஜெட்டைப் பொறுத்து பிலிப்பைன்ஸிலோ அல்லது பிலிம்சிட்டியிலோ டூயட் பாட .......... காதல் உதயமாகிவிடும்.) கல்யாணமாகி எல்லாவித பாலியல் தேவைகளையும் பரஸ்பரம் தீர்த்துக் கொண்ட பிறகு அவர்களின் நாசூக்குகள் கழன்று போய் அசிங்கமான சுயரூபங்கள் வெளியாகி சண்டை ஏற்பட்டு பிரிந்து போய் அவர்களின் குழந்தைக்கு வில்லனின் மூலம் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும்....... நிறைய படங்களை இதுமாதிரி பார்த்திருக்கிறோம்தானே?

கதாநாயகன் என்றால் முத்துராமனோ, சிவகுமாரோ. திமிர்பிடித்த கதாநாயகிக்கு ஜெயசித்ராவோ அல்லது வாணிஸ்ரீயோ. வில்லி மாமியாருக்கு சி. சரஸ்வதி. அவருக்கொரு அப்பாவி புருஷன். (சகஸ்ரநாமம் அல்லது எஸ்.ராகவன்) இப்படியாக casting இருக்கும்.

இதே மாதிரி கதையமைப்பை பிட்சா மாதிரி அலங்காரம் செய்து நவீனப்படுத்தி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அதியமான்.

()

மாடலிங் விஷயமாக சென்னையிலிருந்து துபாய் வந்திருக்கும் சதாவை பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொண்டு விடுகிறார் மாதவன். தன்னைச் சுற்றுகிறவனை விட அலட்சியப்படுத்துபவனையே பிரதானப்படுத்தி நோக்குகின்ற பெண்களின் அடிப்படை குணத்தை நன்கறிந்த மாதவன் சதாவின் தோழியிடம் மட்டுமே பேசி சதாவை வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறார். ரொம்பவும் விளக்குவானேன்.... அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அதோடு நின்றுபோகாமல் இக்கால வழக்கத்திற்கு மாறாக திருமணத்தில் முடிகிறது. இருவரும் அவரவர் பெற்றோர்களை எப்படியோ சம்மதிக்க வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவனுக்கும் ஹைகிளாஸ் சதாவுக்கும் பொருளாதார மற்றும் கலாசார வேறுபாடுகளினால் மோதல் ஏற்படுகிறது. கர்ச்சீப் உடையில் நைட்டி போட்டுக் கொண்டு வரவேற்பறையில் உலாவரும் மருமகளை அந்த ஆர்தடாக்ஸ் குடும்பம் விநோதமாக உணர்கிறது.

இந்த நிலையில் சதா கர்ப்பமாக, இதற்குள் தாயானால் அழகு போய்விடும் என்று அவரின் அலட்டல் தாயார் (ஐஸ்வர்யா) அபார்ஷனுக்கு யோசனை சொல்கிறார். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை இழக்க விரும்பாத மாதவன் விவாகரத்திற்கும் ஒத்துக் கொண்டு குழந்தையை அடைய விரும்புகிறார். குழந்தை பிறந்ததும் கணவனை பிரியும் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கும் சதா, குழந்தை பிறந்த பிறகு அதை பிரிய மனமில்லாமல் தனிமையாக உயர, சில பல சம்பவங்களுக்குப் பிறகு தம்பதிகள் இணைகிறார்கள். சுபம். (அப்பாடா!)

()

தொட்டாற்சிணுங்கி, சொர்ணமுகி, தலைமுறை போன்ற படங்களை இயக்கிய அதியமான் இந்தப் படத்தை எழுதி (?) இயக்கியிருக்கிறார். விநியோகஸ்தர்கள் சில பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போது 'புத்தம் புது காப்பி' என்று போஸ்டரில் போடுவார்கள். மனிதர் இதே பார்முலாவை பயன்படுத்தி பழைய படங்களின் அரதப்பழசான கதையை தன் திறமையை பயன்படுத்தி சற்று சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.

மாதவன் சதாவை வெறுப்பேற்றும் சம்பவங்கள் ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்தாலும் அதையே ஏறக்குறைய இண்டர்வெல் வரைக்கும் ஜவ்வு மாதிரி இழுத்திருப்பதில் சற்று அலுப்புத் தட்டுகிறது. எப்படா இவர்களுக்கு கல்யாணம் நடந்து தொலைக்கும் என்று நமக்கே எரிச்சலாக இருக்கிறது. என்றாலும் மாதவனும், சதாவும் நிஜமான காதலர்களே வெட்கப்படுமளவிற்கு மிக அன்னியோன்யமாக இருக்கின்றார்கள். காதலன் கையைத் தொட்டவுடனேயே, புணர்ச்சியின் உச்சக்கட்ட முகபாவனையை அபிநயப்பிப்பது கதாநாயகிக்கு எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை. தயாரிப்பாளர் சதாவை ஒப்பந்தம் செய்யும் போது சதாவின் தொப்புளுக்கும் தனியாக கால்ஷீட் வாங்கியிருப்பார் போலிருக்கிறது. பல காட்சிகளில் சதாவின் தொப்புள் சிறப்பாக நடித்து தம் பங்கை திறமையாக ஆற்றியிருக்கிறது.

'சாக்லேட் பாய்' என்றழைக்கப்பட்ட மாதவன் நிச்சயம் மாறியிருக்கிறார். ஆய்த எழுத்திலேயே அவரது வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் தன் பாத்திரத்தை உணர்ந்து மிக பொறுப்பாக நடித்திருக்கிறார். பெரும்பாலான உணர்வுபூர்வமான காட்சிகளை அவரே முழுவதும் சுமந்திருக்கிறார்.

()

அதியமான் மென்மையான சில காதல் காட்சிகளை ஹாலிவுட்டை நினைவுப்படுத்தும் அளவிற்கு நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்கிறார். திருமணம் வரை ஒழுங்காக செல்லும் கதை விவாகரத்து பிரச்சினைக்குப்பிறகு பயங்கர காமெடி படமாகி விடுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு விவாகரத்து வழங்குவதாக சொல்லும் நீதிமன்றம், மாதவனின் வேண்டுகோளின்படி குழந்தையைப் பெற்று தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு போடுகிறது. (மேலும் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்றொரு வசனத்தை வேறு நீதிபதி சொல்கிறார்). இப்படியெல்லாம் விவாகரத்து சட்டம் மூலம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியமா என்று தெரியவில்லை. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயலாக இது தெரிகிறது. (இது மாதிரி சட்ட விதிகளை இஷ்டத்திற்கு வளைக்க்கூடிய காமெடிகளெல்லாம் தமிழ்ச்சினிமாவில் மட்டுமே சாத்தியம்).

குழந்தைக்கு அவளுடைய தாய் எந்தவித பாதிப்பையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக சட்டத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையின் பிரதிநிதியாக கோவை சரளா வருகிறார். காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் அபத்தங்கள் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. (வில்லத்தனம் நிறைந்த மாமியாரின் கொடுமைகளால் கொடுமைப் படுத்தப்படுகிற பாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு நிறைய அனுதாபம் ஏற்படும். கொடுமைப் படுத்துகிறவரின் மீது எரிச்சலும் கோபமும் அதிகமாகி உஷ்ணமாகி உட்கார்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கு வடிகாலாக ஏதாவது ஒரு அடாவடி பாத்திரம் வில்லியை போட்டு புரட்டி எடுக்கும். பார்வையாளர்களும் தங்கள் எரிச்சல் தணிகிற உணர்வில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அந்த மாதிரி ஒரு பாத்திரத்திற்கே கோவை சரளா பயன்பட்டிருக்கிறார். அதே போல் கூஜா தூக்கி கணவராக வரும் அநியாயத்திற்கு மனைவிக்கு அடிபணிந்து போய் கிளைமாக்ஸ் காட்சியில் பொங்கியெழுந்து மனைவியை ஒர் அறை அறையும். அந்த அறையை பிரதாப் போத்தன் அறைந்திருக்கிறார். இதுவும் பார்வையாளர்களுக்கான வடிகால் காட்சியே)

நடுத்தர வர்க்கத்தினராக சொல்லப்படும் மாதவனுடைய வீடு பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி இருக்கிறது. அவர்களுடைய படுக்கையறையில் கலை இயக்குநரின் கை வண்ணம் தெரிந்தாலும் இதுவா நடுத்தர வர்க்கத்தினருடைய அடையாளம்? என்கிற கேள்வி நம்முள் நெருடுகிறது. (நான் சமீபத்தில் பார்த்த நடுத்தர வர்க்கத்தினருடைய வீட்டுக்கு உதாரணமாய் 'அலைபாயுதே' படத்தில் வரும் ஷாலினியின் வீட்டை சொல்வேன்).

()

என்றாலும் பல்லி ஹீரோ நூறுபேரை தூக்கிப்போட்டு பந்தாடும் அசட்டு சண்டைக் காட்சிகளோ, ஒருத்தரை ஒருத்தர் உதைப்பதே காமெடி என்றாகிவிட்ட தமிழ்ச்சினிமாவின் சம்பிராதயமான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாமல் நூல் பிடித்தாற் போன்று தெளிவான திரைக்கதை மூலம் படத்தை சொல்லியிருப்பதற்காக அதியமானை பாராட்டலாம்.