Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Friday, April 30, 2021

அஞ்சலி: கே.வி.ஆனந்த்


 
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி,ஆனந்த் மாரடைப்பால் இறந்து விட்டதாக அறிகிறேன். நமக்குப் பிடித்தமான பிரபலங்களின் மரணங்களை அறிய நேர்கிற அந்தக் கணங்களில் நாமும் உள்ளே ஒரு துளி இறந்து போகிறோம் என்று தோன்றுகிறது. சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கே.வி. ஆனந்த் என்பவர் முன்பே பரிச்சயம் ஆனவர். ஆம். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் கிரைம் நாவல்களின் அட்டைப்படங்களுக்காக பிரத்யேகமான புகைப்படங்களை எடுத்தவர் ஆனந்த்.

முன்பெல்லாம் கிரைம் நாவல் என்றால் காமா சோமாவென்று ஏதோ ஒரு புகைப்படத்தை முகப்பில் அச்சிடுவதே வழக்கம். ஆனால் நாவலின் உள்ளடகத்திற்கென்று பிரத்யேக புகைப்படங்களை எடுத்து அச்சிடுவது என்பது ஆனந்தின் வருகைக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன். இதற்காக நிஜ மாடல்களை உபயோகித்து அவர்களின் முதுகில் கத்திக்குத்து இருப்பது போல் ஒப்பனை செய்து.. அதை வசீகரமான கோணத்தில் புகைப்படம் எடுத்து.. இதற்காக நிறைய மெனக்கெடுவார் ஆனந்த். இவரது அட்டைப்படங்களுக்காகவே நாவல்களை வாங்கியவர்கள் அதிகம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் ஆனந்த்தை விதம் விதமாக உற்சாகப்படுத்துவார்கள்.

இது தவிர முன்னணி வார இதழ்களிலும் பிரபலமான புகைப்படக்கலைஞராக ஆனந்த் இருந்தார்.

*

புகைப்படமும் சினிமாவிற்கான ஒளிப்பதிவும் மிக நெருக்கமான தொடர்புடையது. ஒளியின் ரகசியத்தை அறிந்து கொண்டால் போதும். எனவே சிறந்த புகைப்படக்காரராக இருந்த ஆனந்திற்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவாளராக முன்னகர்வது என்பது எளிதாகவே இருந்திருக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆனந்த், அங்கு மிகச்சிறந்த மாணாக்கனாக விளங்கினார். அதற்கு முன்பு ஜீவாவிடமும் சிறிது காலம் உதவியாளராக இருந்திருக்கிறார். தான் பிஸியாக இருந்த காரணத்தினால் தனக்கு வந்த வாய்ப்பை தனது முதன்மைச் சீடனுக்கு அளித்து மகிழ்ந்தார், பி. சி. ஸ்ரீராம்

ஆம். 1994-ல் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாளத் திரைப்படம்தான் ஆனந்த் ஒளிப்பதிவு செய்த முதல் திரைப்படம்.

பின்னர் முதல்வன், பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற தகுதியை அடைந்து விட்டாலும் அங்கேயே தேங்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.

*

கே.வி.ஆனந்த் முதலில் இயக்கிய திரைப்படமான ‘கனா கண்டேன்’ 2005-ல் வெளியாகியது. இன்றைக்குப் பார்த்தாலும் வசீகரிக்கக்கூடிய புத்திசாலித்தனமான திரைக்கதை. இன்றைக்கு மலையாளத்தில் பிரபல நாயகனாக இருக்கக்கூடிய பிருத்விராஜை ஒரு சுவாரசியமான வில்லனாக ‘கனா கண்டேனில்’ உபயோகித்திருப்பார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘காப்பான்’ தவிர, கே.வி. ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களும் சுபா என்கிற எழுத்தாளர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தது. சுபாவின் எழுத்தும் ஆனந்தின் இயக்கமும் இணைந்து ஒரு வசீகரமான கலவையாக அமைந்தது. போலவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆன்டனி போன்ற திறமைசாலிகளோடு தொடர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.

கே.வி.ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களுமே வெகுசனத் திரைப்படங்கள்தான். ஆனால் வழக்கமான மசாலாவில் மாட்டிக் கொள்ளாமல் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பல புதிய விஷயங்களை தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார். ‘அநேகன்’ இதற்கொரு நல்ல உதாரணம்.

ஆனந்த் தனது திரைப்படங்களுக்கு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே அத்தனை அழகாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’ ‘மாற்றான்’ என்று புழக்கத்தில் இல்லாத தமிழ்ப்பெயர்களை சூட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

தானே சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தும் தான் இயக்கிய திரைப்படங்களுக்கு இதர ஒளிப்பதிவாளர்களை அமர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வெகுசன இயக்குநர்களில் ஒருவராக இருந்த கே.வி.ஆனந்தின் மறைவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி.

suresh kannan

Monday, November 18, 2019

'சோ' ராமசாமி - அங்கத நாயகன்





சமீபத்தில் மறைந்த சோ ராமசாமி பன்முக ஆளுமைத்திறன் உள்ளவராக இருந்தார் என்றாலும் இந்தக் கட்டுரையில் சினிமா தொடர்பான அவரது முகத்தைப் பற்றி பிரதானமாக நினைவுகூர உத்தேசம்.  தவிர்க்க முடியாத பட்சத்தில் இதர பரிணாமங்கள் சார்ந்த தகவல்களும் தன்னிச்சையாக வந்து இணையக்கூடும்.

நகைச்சுவையை விரும்பாதவர்கள் பொதுவாக எவருமே இருக்க மாட்டார்கள். எனவே நகைச்சுவை எழுத்தாளர்களை, நிகழ்த்துக் கலைஞர்களை நாம் உடனே விரும்பத் துவங்கி விடுவோம். ஆனால் அவர்களுக்கு பொதுவானதொரு ஆபத்து இருக்கிறது. அந்தக் கணத்தில் நகைச்சுவையை சிரித்து ரசித்தாலும் பொதுச்சமூகத்திடமிருந்து சமூக மதிப்போ, அங்கீகாரமோ அவர்களுக்கு கிடைக்காது. மட்டுமல்ல அவர்கள் எல்லா சூழலிலும் நகைச்சுவையாளர்களாக மட்டுமே பார்க்கப்படுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வேறுமுகமோ அல்லது தீவிரமான கருத்துகளுமோ கூட  நகைச்சுவையாகவே பார்க்கப்படும் அல்லது  இடது கையால் சிரிப்புடன் நிராகரிக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். தமிழ்நாட்டிலுள்ள பெரியவர் முதல் சிறியவர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. படத்தில் அவர் பேசி நடித்த பல வசனங்கள் அன்றாட நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கிறோம். சில காரணங்களால் இடையில் அவருடைய பங்களிப்பு தமிழ் சினிமாவில் இல்லையென்றாலும் கூட அவருடைய ஆகிருதி பெரிதும் சேதமாகாமல் அப்படியே இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தல் ஒன்றில் ஒரு அரசியல் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்ததை தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசித்தார்கள். அவற்றில் பெரும்பான்மையும் வாக்காக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கூட பலமாக இருந்தது. ஆனால் நிகழ்ந்தது என்ன என்பது நமக்குத் தெரியும்.

கல்வியறிவின் சதவீதம் உயர்ந்து கொண்டு வந்தாலும் கூட நிஜத்திற்கும் நிழலிற்குமான வேறுபாட்டை பிரித்தறியும் மனோபாவம் நம்மிடம் இன்னமும் வளராமல் இருக்கிறது. கதாநாயகர்களாக நடிப்பவர்கள் அதிகாரத்திற்கான கனவினை தன்னம்பிக்கையுடன் காண முடியும். அதற்கு மக்களின் குறிப்பிட்ட சதவீத ஆதரவும் கூட கிடைக்கும். சினிமாவில் ஏழைகளைக் காக்கும் அவதார நாயகராக இருப்பவர், நிஜத்திலும் அப்படியிருப்பார் என்று பொதுச்சமூகம் தன்னிச்சையாக நம்புகிறது. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு இவ்வாறான சமூக மதிப்போ, அங்கீகாரமோ பொது மனதில் எழாது. இங்கு எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆக முடியும், ஆனால் நாகேஷால் உள்ளூர் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்பதே யதார்த்தம். நகைச்சுவை  நடிகர் ஒருவேளை பொதுநல நோக்கும் நல்லியல்பும் அரசியல் அறிவும் இருந்தவராக இருந்தால் கூட மக்களின் மனதில் உறைந்திருக்கும் பிம்பம், அவருடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அவர்களை எப்போதும் நகைச்சுவையாளர்களாக  எள்ளலாக பார்ப்பதே பொது மனோபவம். அவர்களை திரைப்படங்களில் கூட கதாநாயகர்களாக தொடர்ந்து ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஆனால் இந்த மரபை உடைத்து ஒரு நகைச்சுவை நடிகரை அறிவுஜீவியாகவும் பார்க்க வைக்க  முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் சோ. இதற்கு முன்னால் இந்த பிம்பம் என்.எஸ்.கிருஷ்ணணுக்கு இருந்தது. உலக அளவில் சார்லி சாப்ளினுக்கு இருந்தது. சோவின் துணிச்சலான கருத்துக்களும் தீர்க்கதரிசனத்துடன் கூடிய அரசியல் பார்வையும் அவருக்கு பிரத்யேகமான சமூக மதிப்பை தந்தன. ஒரு சிக்கலான அரசியல் சூழலில் அவருடைய தரப்பு என்னவாக இருக்கும் என்பதை பொதுச்சமூகம் உட்பட அரசியலில் இருப்பவர்களே கூட ஆர்வமாக கவனித்தார்கள். தேசிய அளவிலும் அவருக்கான முக்கியத்துவம் இருந்தது. இந்த வகையில் தனித்துவமானவராக இருந்தார் சோ.

***

சிலர் மிகுந்த முனைப்புடன்  துவங்கும் காரியங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். ஆனால் வேறு சிலர் அலட்சியமாகத் துவங்கும் எல்லா விஷயங்களிலும் வெற்றிகரமாக பிரகாசிப்பார்கள். இதில் இரண்டாம் வகையினராக இருந்தவர் சோ. இதை வெறும் குருட்டு அதிர்ஷ்டம் என்று மட்டும் சொல்லி விட முடியாது. அலட்சியமான துவக்கமாக இருந்தாலும் கூட மிகுந்த உழைப்பும் பிரத்யேகமான அணுகுமுறையும் தனித்துவமான நகைச்சுவையுணர்வும் துணிச்சலும் சோவிடம் இருந்ததாலேயே அவருக்கு வெற்றிகள் குவிந்தன.

நண்பர்களின் வேண்டுதலின் பேரில் நாடகங்கள் எழுதவும் அதில் நடிப்பவராகவுமாக அவருடைய கலைப்பயணம் துவங்கியது. அதுவும் கூட தற்செயலாகத்தான் துவங்கியது. நண்பர்கள் எழுதிய நாடகத்தை  'சோ' கிண்டல் செய்ய 'ஏன்.. நீதான் ஒண்ணு எழுதேன்' என்று  அவர்கள் உசுப்பேற்றி விட  பிறகு அவர் எழுதிய பல நாடகங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்தன.

யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழு நடத்தி, பட்டு எழுதிய 'பெற்றால்தான் பிள்ளையா' என்கிற நாடகம், 'பார் மகளே பார்' என்று சினிமாவாக மாறும் போது நாடகத்தில் சோ ஏற்ற பாத்திரத்தை, சினிமாவிலும் அவரேதான் நடிக்க வேண்டும் என பீம்சிங், சிவாஜிகணேசன் போன்றவர்கள் வற்புறுத்தினார்கள். நாடகத்தில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்திருந்த அவரின் பங்களிப்பு பிடித்திருந்ததால் சினிமாவிலும் அது வரவேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். சினிமாவில் நடிப்பதை ஒழுக்க மதீப்பீட்டோடு தொடர்புப்படுத்தி நிராகரிக்கும் நம்பிக்கை சார்ந்த பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் தன் குடும்பத்தினரை நினைத்து சினிமாவில் நுழைவதற்கான தயக்கம் சோவிற்கு இருந்தது. எனவே மறுத்தார். ஆனால் பீம்சிங்கும், சிவாஜியும் வற்புறுத்தவே ஒப்புக் கொண்டார். அந்தப் பாத்திரம் மக்களால் ரசிக்கப்பட்டது. குடும்பத்தினரின் ஆட்சேபத்தால்  பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியவரை 'நடுஇரவில்' எனும் திரைப்படத்தின் மூலம் வீணை எஸ். பாலச்சந்தர் மீண்டும் வற்புறுத்தி அழைத்து வந்தார்.

நாடகத்தைப் போலவே சினிமாவிலும் அவரது வெற்றி தொடர்ந்தது. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என்று அதிலும் முன்னேற்றம். எப்படி தற்செயலாக சினிமாவிற்குள் வந்து விழுந்தாரோ அப்படியே ஒரு கட்டத்தில் 'இனி சினிமாவில் நடிப்பதில்லை' என்கிற மனஉறுதியுடன் அதிலிருந்து வெளியே வந்தார். 'சினிமாவின் மூலம் கிடைக்கும் பிரபலத்தை இழந்து விடுவேனோ என்கிற அற்பத்தனமான அச்சம் கூட எனக்கு இருந்தது' என்பதையும் கூட ஒரு சமயத்தில் வெளிப்படையாகவே பதிவு செய்தார்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க  அவர் தாமாகவே முன்வந்த ஒரு சந்தர்ப்பம்  உண்டானது. ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட சர்ச்சையின் தொடர்பாக  தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம் ஏற்பட்டது. ஒருதரப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடைய அப்போதைய திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள் தயங்கினார்கள். இதைக் கேள்விப்பட்ட சோ, கமலுக்கு தன்னுடைய தார்மீக ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் விதமாக தாமே முன்வந்து ஒரு  பாத்திரத்தைக் கேட்டு வாங்கி நடித்தார். அவருக்காகவே அந்தப் பாத்திரம் உருவாக்கப்பட்டது. சோவின் துணி்ச்சலான அணுகுமுறைக்கும் தாம் நம்பும் நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிக்கும் உறுதிக்கும் இதுவோர் உதாரணம்.

***

நாடகம், சினிமாவைப் போலவே பத்திரிகைத் துறையில் அவர் வரநேர்ந்ததும் தற்செயலே. 'நீயெல்லாம் எழுதினா யார் படிப்பா?" என்று நண்பர்கள் உசுப்பேற்ற, மக்கள் ஆதரவைத்  தெரிந்து கொள்வதற்காக தன் பத்திரிகையின் துவக்கத்தைப் பற்றி பத்திரிகையில் விளம்பரம் செய்ய அமோகமான ஆதரவு. பிறகு 'துக்ளக்' பிறந்தது. சோவின் பரிமாணங்களில் 'துக்ளக்' முக்கியமான முகம்.

பெரும்பாலான ஊடகங்கள் அதிகாரத்தை அண்டி அதற்கு இணக்கமாக நின்று கொண்டிருந்த போது 'இண்டியன் எக்ஸ்பிரஸ்' போன்ற சில பத்திரிகைகள் மட்டுமே துணிச்சலுடன் இயங்கின. இந்த அரிய வரிசையில் 'துக்ளக்'கின் பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தாய் இருந்தது. எமர்ஜென்சி நடவடிக்கையை துணிவுடன் எதிர்த்தார். தணிக்கையாளர்களின் கண்காணிப்பை பல நகைச்சுவையான வழிகளில் சமாளித்து அவற்றை கேலிக்கூத்தாக்கினார். அச்சு ஊடகங்களில் 'புலனாய்வு இதழ்' என்கிற வகைமை இன்னமும் கூட நம்பகத்தன்மையுடன் கூடியதாக உருவாகாத நிலையில், வெற்று பரபரப்புகளையும் கிளர்ச்சிகளையும் அளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு தரமான, முன்னோடி புலனாய்வு இதழாக 'துக்ளக்' திகழ்ந்தது.

தாம் நம்பும் கருத்துக்களின் பக்கம் நின்று வெளிப்படையாக எழுதும் துணிச்சல் அவருக்கு எப்போதும் இருந்தது. இதற்காக எவரை வேண்டுமானாலும்  விமர்சித்து எழுத  தயாராக இருந்தார். அவருடைய எழுத்தில் நையாண்டியும் ரசிக்கத்தக்க கேலியும் இருக்கும். எதிர் தரப்பை மூர்க்கமாக தாக்கும் வன்மம் இருக்காது. எனவே அவருடைய எழுத்தை எதிராளிகளும் ரசித்து படித்தனர். அவருடைய வெளிப்படைத்தன்மையே அவர் எழுத்தின் மீதான நம்பகத்தன்மையாக மாறியது. அரசியல் போக்குகளை தீர்க்கதரிசனத்துடன் யூகிக்கும் திறமை அவரிடம் இயல்பாக படிந்திருந்தது. அதற்கான காய் நகர்த்தல்களில் அவருடைய பங்களிப்பும் இருந்தது.


***

தாம் ஈடுபட்ட துறைகளில் தன்னம்பிக்கையுடன் கூடிய அலட்சியத்துடன் அவர் இறங்கியதைப் போலவே அவருடைய நடிப்பும் அமைந்திருந்தது. சோ-வை சிறந்த நடிகராக சொல்ல முடியாது. ஆனால் தம்மிடம் இயல்பாக படிந்திருந்த சாதுர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்தார். நாடக மேடையின் அதே நடிப்பையே திரையிலும் அவர் பெரும்பாலும் பிரதிபலித்தார். துவக்க காலக்கட்டத்தில் ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகருக்கான தோரணையே அவரிடம் இருந்தது. அரசியல் விமர்சகராக அவர் கவனிக்கப்பட்ட பிறகு அது தொடர்பான நகைச்சுவையை அங்கத பாணியில் திரையிலும் பிரதிபலித்தார். அவரே உருவாக்கிக் கொள்ளும் பல வசனங்கள், தொடர்புள்ள திரைப்படத்திற்கு சம்பந்தமேயில்லாமல் வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன. தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் இருந்த பல பலவீனமான அம்சங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. வழக்கம் போல இந்த முரணையும்  இயக்குநர்களும் பார்வையாளர்களும் கணக்கில் கொள்ளவில்லை. அவர் முன்வைக்கும் ஒவ்வொரு கிண்டலையும் பொதுவான அல்லது அப்போதைய அரசியல் சூழலுடன் பொருத்திப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த வரவேற்பை சோவும் வலுவாக பயன்படுத்திக் கொண்டார்.

சில திரைப்படங்களில் 'சோ' மெட்ராஸ் பாஷை எனப்படும் வட்டார வழக்கு மொழியை பேசுபவராக நடித்தார். அது சினிமாவிற்கென்று உருவாக்கப்பட்ட நாடகத்தனமான நகலாக இருந்ததே அன்றி அசலான உச்சரிப்பை பின்பற்றவில்லை. 'நம்பிள்கி.. நிம்பிள்கி'.. என்று சேட்டுகள் பேசுவார்கள் என்று தமிழ் சினிமா உருவாக்கிய மலினமான சித்திரத்தை 'சோ'வின் பாணியும் உண்டாக்கியது. சந்திரபாபு, லூஸ் மோகன், கமல்ஹாசன் போன்று இதர சில நடிகர்களும் இந்த மோசமான சித்திரத்தின் பங்களிப்பாளர்களாக இருந்தார்கள்.

சுயபகடி என்பது சோ -வின் முக்கியமான அம்சம். இரக்கமேயில்லாமல் மற்றவர்களை கிண்டலடிப்பது போல தன்னையும் அதே போல் கிண்டலடித்துக் கொள்வார். உறுதியான தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் தன்னையே பகடி செய்து கொள்ள முடியும். 'இனி மேல் நமக்கு நிறைய தீனி கிடைக்கும்' என்று இரண்டு கழுதைகள் பேசிக் கொள்வது போலத்தான் 'துக்ளக்'கின் முதல் அட்டைப்படக் கருத்து அமைந்திருந்தது. சோ திரைக்கதை எழுதிய திரைப்படங்களுள் ஒன்று 'நிறைகுடம்'. அதில் பத்திரிகையில் பணிபுரிவராக சோ நடிப்பார். அந்த ஊரின் பிரமுகர் ஒருவர் இறந்து விட்டதாக செய்தி போட்டு விடுவார். சம்பந்தப்பட்ட நபர் ஆத்திரத்துடன் பத்திரிகை அலுவலகத்திற்கு வந்து விசாரிப்பார். பத்திரிகையின் ஆசிரியரும் சோவிடம் விளக்கம் கேட்க, 'நம்ம பத்திரிகையோட பாலிசி என்ன, 'செய்திகளை முந்தித் தருவது'. அதனாலதான் இவர் மரணச் செய்தியை கொஞ்சம் முன்னால போட்டுட்டேன்' என்று நையாண்டித்தனமாக சமாளிப்பார்.

இன்னொரு திரைப்படத்தின் காட்சி. ஒரு ரவுடியிடம் சோ மாட்டிக் கொள்வார். 'அடிச்சிடுவியா' என ரவுடியை நோக்கி ஜம்பமாக கேட்பார். ரவுடி இவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட, 'ஏண்டா.. அடிப்பியா.. ன்னுதானே கேட்டேன். ஆமாம்னு சொல்ல வேண்டியதுதானே, ஏண்டா அடிச்சே?'  என்று அழாத குறையாக கேட்பார். பிற்காலத்தில் 'கைப்புள்ள'யாக வடிவேலு பல திரைப்படங்களில் நடித்ததற்கான முன்னோடிக் காட்சியிது.

***

தாம் சார்ந்திருக்கும் துறையைப் பற்றிய விமர்சனங்களை, புகார்களைள வெளியில் தெரிவிக்காமல் பாதுகாப்பாக இருப்பதுதான் பொதுவான வழக்கம். ஆனால் எதிலும் துணிச்சலாக இயங்கும் சோ, தமிழ் சினிமா உருவாக்க முறையின் அபத்தங்கள், அதிலுள்ள நடைமுறை பித்தலாட்டங்கள் போன்றவற்றையும் கூட அத்துறையில் இருந்த சமயத்திலேயே வெளிப்படையாக எழுதினார். 'திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்' என்று அவர் எழுதிய சிறுநூலில் தமிழ் சினிமா இயங்குவதில்  உள்ள பல விஷயங்களை கேலியாகவும், அவை சீர்திருத்தப்பட வேண்டிய தீவிரமான அக்கறையுடனும் எழுதினார்.

குறுகிய வட்டமாக இருந்தாலும் தம்முடைய நண்பர்களின் மீது சோவிற்கு உறுதியான நம்பிக்கையும் உறவும் இருந்தது. 'ஒருவரின் அணுகுமுறையை, நடவடிக்கையை சில வருடங்களுக்கு மேலாகவும் கூட  நேரம் எடுத்துக் கொண்டு கவனிப்பேன். அவரை நண்பராக்கிக் கொண்ட பிறகு அவரைப் பற்றி எவர் தவறான கருத்துக்களை சொன்னாலும் கூட நம்பி விடமாட்டேன்' என்று தம்முடைய நட்புகளை பேணுவதில் சிறந்த முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தம்முடைய நாடகங்களில் நண்பர்களைத் தவிர புதியவர்களை இணைத்துக் கொள்வதில்லை என்பது அவருடைய தீவிரமான நிலைப்பாடு. நண்பர்களுக்கு வயதாகி விட்ட பிறகு 'கல்லூரி மாணவர் போன்ற பாத்திரங்கள் அவர்களுக்குப் பொருந்தாது' என்கிற நடைமுறைக் காரணத்திற்காக, தமது நாடகக் குழு வெற்றிகரமாக  இயங்கிய நேரத்திலும் கூட அதைக் கலைத்து விட்டார். அரசியல் தலைவர்களிடம் அவருக்கிருந்த நெருக்கத்தை மனதில் கொண்டு நண்பர்கள் கேட்கும் சில பரிந்துரைகளை உறுதியாக மறுத்து விடும் நேர்மையும் அவரிடம் இருந்தது.

தம்முடைய ஸனாதன நம்பிக்கைகளையும் வலதுசாரித்தனமான கருத்துக்களையும் வெளிப்படையாக முன்வைக்க அவர் தயங்கியதில்லை. ஆனால் அது சார்ந்த இறுக்கமான பிடிப்போ, மூர்க்கமான பிடிவாதமோ அவரிடம் இருந்ததில்லை. 'பிராமணியம் பிறப்பாலல்ல, நடத்தையால் பெறப்படுவது' என்பது போன்ற கருத்துக்களை தயங்காமல் எழுதினார். 'பேசும் கொள்கையொன்று, நிழலாக செய்யும் காரியம் ஒன்று' என்று செயல்படும் பல பெரிய மனிதர்களின், அரசியல்வாதிகளின் மத்தியில் சோவின் இந்த நேர்மை பாராட்டத்தக்கதொன்று.

அவருடைய நிலைப்பாடுகளில், கருத்துகளில் பல சர்ச்சைகள் இருந்தன. அது தொடர்பான, கருத்து வேறுபாடுகளை, விமர்சனங்களை முன்வைப்பதற்கு நிச்சயமாக இடமுண்டு என்றாலும் எதையும் ஒளிக்காமல் வெளிப்படுத்தும் நேர்மை சோ என்கிற ஆளுமையின் பலங்களுள் முக்கியமானதாக இருந்தது. அனைத்து தரப்புகளுக்குமே தாம் நம்பும் கொள்கைகளின், நிலைப்பாடுகளின் பால் சார்ந்து தீவிரமாக இயங்கும் வெளியும் சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டாக வேண்டும். இந்த முரணியக்கம்தான் ஆரோக்கியமான ஜனநாயக அரசியலின் அடையாளம். அந்த வகையில் தன்னுடைய தரப்பு நம்பிக்கைகள் சார்ந்த துணிச்சலான கருத்துக்களை பத்திரிகை, சினிமா, அரசியல் போன்ற துறைகளில் கூர்மையான அங்கதத்துடன் முன்வைத்த சோ என்கிற ஆளுமையின் இயக்கம் அவரது மறைவின் மூலம் நின்று போனது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு. 

CHO SAD. 


(உயிர்மை இதழில் பிரசுரமானது)  
suresh kannan

Friday, November 15, 2019

அசோகமித்திரன்: சராசரிகளின் எழுத்தாளன்



அசோகமித்திரன் மறைந்து விட்டார். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெற்றிடம் என்றுதான் இதற்குப் பொருள். அவருடைய எழுத்தின் தன்மையை பொதுமைப்படுத்தி  ஒருவரியில் சொல்ல வேண்டுமானால்  ' நகர்ப்புறம் சார்ந்த கீழ்நடுத்தர வர்க்கத்தின் அத்தனை துயரக் கசப்புகளையும் உருட்டித் திரட்டி செய்த நகைச்சுவை மாத்திரை' என்று வரையறை செய்ய முயலலாம். ஆனால் இது அவரது படைப்புலகின் ஒரு பக்க பரிமாணம் மட்டுமே. அவருடைய படைப்புகளில் பெரும்பாலும் வெற்றியாளர்களோ சாதனையாளர்களோ இல்லை. மாறாக  தங்களுடை வாழ்வின் மிக அடிப்படையான விஷயத்திற்கு கூட அல்லறுரும் சாதாரண மனிதர்களே இருந்தார்கள்; எளிய சமூகத்தின் வாழ்க்கைச் சம்பவங்களே இருந்தன.

சைக்கிள செயின் எப்போது கழன்று விடுமோ என்கிற பதட்டத்துடன் பாலத்தின் மீது சைக்கிளை செலுத்திச் செல்பவர்கள், அதைச் சரிசெய்ய முயன்ற மசிக்கறையுடன் உள்ளவர்கள், குழந்தையின் சுரம் காரணமாக மருத்துவத்திற்கு  நண்பனிடம் இரண்டு ரூபாய் கடன் வாங்கச் சென்று கேட்கத் துணிவில்லாமல் கூசி மழுப்பலாக இலக்கியம் பேசி விட்டு தயங்கி வெறும் கையைப் பிசைந்து  திரும்பி வரும் கையாலாகாதவர்கள், ரேசன் சர்க்கரைக்காக வரிசையில் நின்று 'இல்லை' என்று திருப்பியனுப்பப்பட்டவுடன் உள்ளுக்குள் முனகிக் கொண்டே வரும் கோழைகள் ஆகியோர்களே இருந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. நம்முடைய சித்திரங்கள்தான் அவை.

ஆனால் இவை அனைத்தையும் அசோகமித்திரன் புகார்களாகவோ புலம்பல்களாகவே சொல்லவேயில்லை. மாறாக தன்னையே பார்த்து புன்னகைத்துக் கொள்ளும் சுயஎள்ளல்களுடன்தான் இந்தக் கசப்புகளை தன் படைப்புகளில் பதிவு செய்கிறார். ஞானத்தின் ஒருவகையான எளிமை என்றுதான் இதைச் சொல்ல முடியும். 'மனிதர்களுக்கு இத்தனை துயரங்களைத் தரும் கடவுள் நிச்சயம் ஒரு குரூரமான ஆசாமியாகத்தான் இருக்க முடியும்' என்று சிலர் ஆத்திரத்தில் புலம்புவதுண்டு. அது உண்மையென்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டால் கூட அப்படிப்பட்ட கடவுளே ஒருவேளை அசோகமித்திரனின் எழுத்தை வாசிக்க நேர்ந்தால், தன் எள்ளல்களால் அந்த துயரங்களை ஒன்றுமில்லாமல் கசக்கிப் போடும் அசோகமித்திரனின் எளிமையான திமிரையும் சிரிப்பையும் கண்டு திகைத்து மனம் கூசி நிற்கக்கூடும்.

உலகின் எந்தவொரு சிறந்த எழுத்தாளருக்கும் இணையாக வைத்துப் போற்றக்கூடிய எழுத்தாளுமை அசோகமித்திரன். ஆனால் தம்முடைய எழுத்து குறித்து அவருக்கு எந்தவித அகங்காரமும் தற்பெருமையும் இருந்ததாகத் தெரியவில்லை. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எழுதுவதின் சவால் குறித்து  அவரிடம் கேட்கப் பட்ட போது 'எழுதறதுல என்ன சவால் இருக்கு, செல்லாத ஆயிரம் ரூபாயை மாத்தறதும் ஆதார் கார்டு வாங்கறதும்தான் உண்மையான சவால்' என்பது போல அவரது பாணியில்  பதில் சொல்கிறார். மேற்பார்வைக்கு அது ஏதோவொரு எளிய புலம்பல் போல் தோன்றினாலும் அதனுள் பொதிந்துள்ள அரசியல் அங்கதம் மிகக்கூர்மையானது. நினைத்து நினைத்து சிரிக்கவும் அதற்குப் பிறகு கசப்படையவும் வைப்பது.

ஓர் இலக்கியக்கூட்டம். உயிர்மை சார்பில் நடத்தப்பட்டது என்பதாகத்தான் நினைவு. தம்முடைய கணையாழி கால அனுபவங்களைப் பற்றி மெல்லிய குரலில் தனக்கேயுரித்தான அவல நகைச்சுவையுடன்  விவரித்துக் கொண்டிருந்தார் அசோகமித்திரன். 'அங்க பார்த்தீங்கன்னா...இந்த புஸ்தகங்களை கயிறு போட்டு பார்சல் கட்டறதுதான் எனக்கு பெரிய சவால். இறுக்கமா கட்டவே எனக்கு வராது. எப்படித்தான் சிலர் அதை திறமையா கட்டறாங்கன்னே தெரியல. அவங்களுக்கு .இதுக்காக ஏதாவது விருது குடுத்தா கூட தகும்' என்பது மாதிரியாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டம்  விழுந்து விழுந்து சிரிக்கிறது. அசோகமித்திரனை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்குத்தான், அவருடைய ஆளுமையை அறிந்தவர்களுக்குத்தான் அவர் சொல்லுவதில் உள்ள எளிமையான தன்மையை மீறி அதனுள் இருக்கும் ஆழமான அவல நகையை புரிந்து கொண்டு ரசிக்கவும் கசப்படையவும் முடியும். மாறாக அவருடைய எழுத்தைப் பற்றி எந்தவோரு அறிமுகமும் இல்லாமல் அந்தக் கூட்டத்திற்கு ஒருவர் ஒருவேளை வந்திருந்தால். ... ' என்னய்யா.. இது அந்தப் பெரிசு .. ஏதோ சாதாரண விஷயத்தை சொல்றாரு. இந்த பைத்தியக்காரக் கூட்டம் இப்படிச் சிரிக்குதே'.. என்று புரியாமல் திகைத்து அமர்ந்திருக்கக்கூடும்.


இதைப் போலவே அசோகமித்திரனின் படைப்புகளை பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் ஆனால் அவருடைய ஆளுமையைப் பற்றிய புகழுரையை மட்டும் எங்காவது கேள்விப்பட்டு அவரது சிறுகதைக்குள் நுழையும் எந்தவொரு துவக்க நிலை வாசகனும் 'இந்தச் சாதாரணக் கதையையா இப்படிப் புகழ்ந்தார்கள்' என்று திகைக்கவோ தனக்குள் புன்னகைக்கவோ கூடும். பாராட்டப்பட வேண்டியவை என்றால் அது அதிக பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் சிக்கலானதாகவும் இருக்க வேண்டும் என்கிற மயக்கம் நம்மிடம் இருக்கிறது. 'உலகத்தின் எல்லாச் சிக்கலான விஷயங்களும் அடிப்படையில் எளிமையானவை' என்றொரு கருத்து இருக்கிறது. அசோகமித்திரனின் எழுத்தும் இவ்வகையான எளிமையையே கொண்டிருக்கிறது.

***

லெளகீக வாழ்வின்  ஓர் எளிய சிக்கலுக்காக கூட பேனாவை தூக்கிப் போட்டு விட்டு சுயசெளகரியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் முதற்கொண்டு எழுத்தை தம்முடைய பிழைப்புவாதத்திற்காக மலினமாக கையாள்பவர்கள் வரை பலர் இருக்கிறவர்களின் மத்தியில்  தம்முடைய எளிய வாழ்வின் பல்வேறு விதமான துயரங்களுக்கிடையேயும் எவ்வித முணுமுணுப்பும் புகாரும் இல்லாமல், மிக குறிப்பாக அதற்கான அங்கீகாரத்தையும் பொருளியல் மதிப்பையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதி வந்தவர்களுள் மிக முக்கியமானவர் அசோகமித்திரன்.  சினிமாவுலகில் எப்படியாவது புகுந்து விட முடியாதா என்கிற தவிப்புடன் முட்டி மோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் இடையில், அந்தத் துறையில் நீீண்ட காலம் பணிபுரிந்திருந்தாலும், அத்துறை சார்ந்த அறிவு கொண்டிருந்தாலும், ஒரு நிலையில் எழுத்தாளனுக்கேயுரிய சுயமரியாதையுடன் வெளியேறியவர். கணையாழி போன்ற பொருளியல் ஆதாயம் அதிகம் கிட்டாத பத்திரிகைகளில் பல காலமாக உழைத்திருக்கிறார். ஒருவகையில் வாழ்க்கையின் சிக்கல் சார்ந்த துயரங்களுக்கு விரும்பியே தம்மை ஒப்புக் கொடுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் உயரமான திண்ணையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டே தெருவை வேடிக்கை பார்க்கும் சிறுவனின் எளிமையையும் அவரது ஆளுமை கொண்டிருக்கிறது.

ஏழு நாவல்கள், நான்கு குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நுால்கள், தொகுத்த நூல்கள் என ஏராளமானவற்றை தமிழின் சொத்துக்களாக விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசியப் பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலேயே தொடர்ந்து முழுவதுமாக எழுதியிருந்தால் இன்னமும் அதிக உயரத்திற்கு சென்றிருப்பாரோ, என்னவோ. தமிழக சூழலும் குழு அரசியல்  உள்ளிட்ட இன்ன பிற அரசியல்களும் அவரை குரூரமாக உதாசீனப்படுத்தியது. பாரதி, புதுமைப்பித்தன், கோபிகிருஷ்ணன் என்று இந்த வரிசை என்று ஓயுமோ என்று தெரியவில்லை.

தாம் பணிபுரிந்த ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்களைக் கொண்டு எழுதிய 'Fourteen years with boss' உள்ளிட்ட நூல் முதற்கொண்டு அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தொகுக்கப்படாத கட்டுரைகள் இன்னமும் கூட இருப்பதாக ஒரு நேர்காணலில் கூறுகிறார். ஆங்கில உரைநடையில் மானசீக குருக்களில் முக்கியமானவராக,  'பிலிம் இண்டியா' பத்திரிகை ஆசிரியரான பாபுராவ் படேலை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அசோகமித்திரன் இதுவரை எழுதிய அனைத்துச் சிறுகதைகளும் ஒரு முழு தொகுப்பாக சமீபத்தில் வெளிவந்துள்ளது. (காலச்சுவடு பதிப்பகம்). மொத்தம் 274 சிறுகதைகள். பொதுவாக எந்தவொரு எழுத்தாளரின்  சிறுகதை தொகுப்பையும் கால வரிசையில் கவனித்தால் எழுத்தின் நடையிலும் தன்மையிலும் இன்ன பிற வகைகளிலும் மாற்றத்தை உணர முடியும். ஆனால் அசோகமித்திரனின் சிறுகதைகள் துவக்கம் முதலே ஓர் ஒழுங்கையும் கலை அமைதியையும் சாதாரணத்துவத்தையும் கொண்டிருக்கிறது. எந்தவொரு பக்கத்தையும் பிரித்து இது இந்தக் குறிப்பிட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கவே முடியாது. இதை அவர் பிரக்ஞையுடன் நிகழ்த்தினாரா அல்லது அவரே எழுத்து இயல்பே அவ்வாறுதானா என்பது ஆய்வுக்குரியது. கலாசார எல்லைகளைத் தாண்டி உலகத்தின் எந்தவொரு எளிய மனிதரும், நுட்பமான வாசகரும் அசோகமித்திரனின் எழுத்தோடு தம்மை நெருக்கமாக உணர்வார்கள்.

இதைப் போலவே அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் எந்தவொரு இதர மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு தகுதியானது. காலம், இடம், கலாசாரம் போன்ற கற்பித எல்லைகளைத் தாண்டி நிற்கிற உன்னதத்தன்மையை அசோகமித்திரனின் எழுத்து கொண்டுள்ளது. 'கதைகளிலிருந்து 'கதையை' வெளியேற்றுவதே தாம் எழுதும் கதைகள்' என்று சா.கந்தசாமி சொல்வதை அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கும் கச்சிதமாக பொருத்திப் பார்க்கலாம். பலராலும் குறிப்பிடப்படும் 'புலிக்கலைஞன்' 'பிரயாணம்' 'காந்தி' போன்றவை  இவருடைய அபாரமான சிறுகதைகள். 'இன்ஸ்பெக்டர் செண்பகராமன்' போன்ற சிறந்த குறுநாவல்கள்.


அவரது சிறுகதைகளுள் பொதுவாக அதிகம் மேற்கோள் காட்டப்படாததும், என்னளவில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக கருதுவதுமான 'குருவிக்கூடு' எனக்கு அதிகம் பிடித்த சிறுகதை. வழக்கம் போல் எளிமையானதுதான். குருவிக்கூடு ஒன்றைப் பாதுகாக்க ஒரு சிறுவன் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வான். ஆனால் அது தோற்றுப் போகும். சிறுவன் வருத்தப்படுவான். அதன் பிறகு குருவிக்கும் சிறுவனுக்கு நிகழும் உரையாடல்தான் அந்தக் கதையின் அற்புதமே.  இன்ன பிற உயிரனங்களின் மீது மானுட குலம் கொண்டிருக்கும் கருணையின் மீதான போலித்தனத்தை இரக்கமேயில்லாமல் குரூரமாக பரிகாசம் செய்வார் அசோகமித்திரன். பொதுவாக 'மென்மையான எழுத்து' என்று அறியப்பட்டும் நம்பப்பட்டும் கொண்டிருக்கிற அசோகமித்திரனது படைப்புகள் பல சமயங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் நெருப்பு போல மூர்க்கமான வேறு பக்கத்தையும் சித்தரிக்கும். நுட்பமான வாசிப்பின் வழியாக அறிய முடிவது இது.

***

சினிமாவைப் பற்றிய தகவல்கள், அபிப்பிராயங்கள் நிரம்பிய அசோகமித்திரனின் எழுத்தை மட்டும் தொகுத்தாலே பெரிய தொகுதியாக வந்து விடும். அந்த அளவிற்கு இந்திய மொழிகளில் வெளியான சினிமாக்களைப் பற்றிய பல்வேறு கட்டுரைகளை தனது பாணியில் எழுதிக் குவித்துள்ளார். பெரும்பாலானவற்றில் அவருக்கேயுரிய அங்கதமும் தனித்துவமும் இருந்தது. 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் பற்றி அவர் எழுதிய கட்டுரையொன்றை என்னால் மறக்கவே முடியாது. அந்த திரைப்படத்தில் வரும் விஜயன் பாத்திரத்தை வெறுக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் அசோகமித்திரன் இதற்கு முற்றிலும் வேறு பரிமாணத்தையும் பார்வையையும் முன்வைக்கிறார். 'அந்தச் சூழலில் அந்தப் பாத்திரம் ஆற்றும் எதிர்வினைகள் இயல்பானவைதானே' என்று அ.மி. முன்வைக்கும் நியாயங்களின் மூலம் 'அதோனே' என்று ஒருகணம் நமக்கும் தோன்றி விடுகிறது.

சினிமாவின் பல்வேறு விதமான பளபளப்புகளுக்குப்  பின்னே மறைந்திருக்கும் இருள் உலகத்தைப் பற்றிய அற்புதமான நாவல் 'கரைந்த நிழல்கள்'. துணை நடிகைகளின் உடைகளில் வீசும் வியர்வை நாற்றம் முதற்கொண்டு துல்லியமான விவரணைகளுடனும் அற்புதமான கட்டுமானத்துடனும் அமைந்த நாவல் அது. நீர் அரசியலும் அது சார்ந்த ஊழல்களும் பற்றாக்குறையும் உக்கிரமாக மேலெழுந்து வந்து கொண்டிருக்கும் சமகால சூழலில் 'தண்ணீர்' நாவலின் மையம் இன்னமும் அர்த்தபூர்வமானதாகிறது.


அவரது படைப்புகளின் உன்னதங்களைப் பற்றி இன்னமும் எவ்வளேவோ உரையாடிக் கொண்டேயிருக்கலாம். தம்முடைய சீரான, தொடர்ச்சியான இயக்கத்தின் மூலம் பல்வேறு விதமான ஆக்கங்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார் அசோகமித்திரன். சர்வதேச அளவில் நோபல் பரிசு பெறுவதற்கு கூட  தகுதி பெற்ற எழுத்தாளருக்கு, இந்தியாவின்  ஞானபீட பரிசு கூட வழங்கப்படாமலிருப்பதின் பின்னுள்ள அரசியல் வருத்தப்பட வைக்கிறது. ஆனால் இதற்காகவெல்லாம் அவர் வருந்தியவர் அல்ல. இயற்கையைப் போல எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தவர் இயற்கையுடன் சென்று கலந்து விட்டார். விருதுகள்தான் அவர் முன்னால் வந்து நிற்பதற்கு கூச வேண்டும்.

மகத்தான அந்தக்  கலைஞனுக்கு இந்த எளிய வாசகனின் ஆத்மார்த்தமான அஞ்சலி. 

(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

Friday, November 06, 2015

'ஆச்சி' மனோரமா - நகைச்சுவைத் திலகத்தின் வெற்றிடம்


தமிழ்த்திரை போல வேறெந்த திரையுலகிலும் இத்தனை நீண்ட, தொடர்ச்சியான, அதிக எண்ணிக்கையிலான நகைச்சுவை நடிகர்களின் வரிசையில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையானவர்கள் ஆண் நடிகர்கள்தான் என்பதை கவனிக்க வேண்டும். உலகெங்கிலும் கூட இதுதான் நிலைமை. பெண் நகைச்சுவையாளர்கள் குறைவு. தமிழ்த் திரையில் கூட டி.ஏ மதுரம், சி.டி.ராஜகாந்தம், டி.பி.முத்துலட்சுமி, எம்.சரோஜா, அங்கமுத்து, காந்திமதி, சச்சு, கோவை சரளா போன்று ஒருசில பெயர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண் சாதனையாளர்கள் அரிதாகவே உருவாகி வர முடியும் என்கிற சமூகவியல் காரணம் ஒன்றுண்டு என்றாலும் பொதுவாக பெண்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைவு அல்லது இல்லை என்கிற பொதுப்புத்தி சார்ந்த கருத்தை அநாயசமாக உடைத்துப் போட்டவர் நடிகை மனோரமா. இந்த வகையில் இவரின் பங்கு மகத்தானது. பெரும்பாலும் ஆண்மைய சிந்தனையையே சார்ந்து இயங்கும் இந்தச் சமூகத்தில் ஒரு பெண் கலைஞர் தன்னுடைய துறையில் மிக  நீண்ட காலம் இயங்கி நாடகங்களில் துவங்கி பிறகு பல மொழிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து முடித்திருக்கிறார் என்பதில் அவரின் நடிப்பாற்றலையும் தாண்டி சமூகவியல் நோக்கிலும் இது அரிதான ஓர் உலக சாதனை என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாகவே நகைச்சுவையாளர்களின் தனிப்பட்ட வாழ்வு துயரமும் சோகமும் கொண்டதாக இருக்கும் என்பார்கள். மனோரமாவின் வாழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல.  சுயநலமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட உலகம் அவருடையது. மனோரமா பத்து மாதக் குழந்தையாக இருந்த போது 'பெண் குழந்தை பிறந்த எரிச்சலில்' அவருடைய தந்தை காசி கிளாக்குடையார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனோரமாவின் தாய் ராமாமிர்தத்தின் தங்கையையே அவர் இரண்டாவதாக மணம் புரிந்தார். தன்னுடைய சொந்த சகோதரியினாலும் கணவனாலும் பல துன்புறுத்தல்களுக்கு ஆளானார் ராமாமிர்தம். தற்கொலை முயற்சியிலிருந்தும் காப்பாற்றப்பட்டார். தாக்குப்பிடிக்க முடியாத அந்தச் சூழலில் குழந்தை மனோரமாவைச் சுமந்து கொண்டு மன்னார்குடியிலிருந்து காரைக்குடியிலுள்ள பள்ளத்தூருக்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த செட்டியார் குடும்பமொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.

மிகுந்த வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தாலும் சிறுவயதிலேயே மனோரமாவிற்குள் இசை குறித்த ஞானம் இயற்கையாக படிந்திருந்தது. ஒரு பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே அதை அப்படியே பாடும் திறன் இருந்தது. பள்ளி நிகழ்ச்சியொன்றில் 'பாருக்குள்ளே நல்ல நாடு' எனும் பாரதியின் பாடலை அவரே தன்னிச்சையாக 'காற்றினிலே வரும் கீதம்' எனும் எம்.எஸ் பாடிய பாடலின் மெட்டில் பாடியதை அனைவரும் பாராட்டினர்.  அவருடைய பாட்டுத் திறமை காரணமாக நாடகங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாத சூழலில் சம்பாத்தியத்திற்காக நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அதிலும் அவரும் திறமை வெளிப்பட்டு புகழ் கிடைத்தது. மனோரமாவின் அசாத்தியமான திறமையை அறிந்து கொண்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரை தன்னுடைய நாடகக் குழுவில் இணைத்துக் கொண்டார்.

தமிழ் திரையில்  'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவைப் பாத்திரத்தில் அறிமுகமானார் மனோரமா. கவிஞர் கண்ணதாசனின் மூலம் இந்த அறிமுகம் நிகழ்ந்தது. 'தனக்கு நகைச்சுவை வராது' என்பதற்காகவும் நாயகியாக நடிக்க விரும்பிய காரணத்தினாலும் அவருக்கு நகைச்சுவைப் பாத்திரத்தில்  நடிக்க தயக்கம் இருந்தது. 'நாயகியாக நடித்தால் சில வருடங்கள் மட்டுமே நடிக்க முடியும். நகைச்சுவை நடிகை என்றால் பல ஆண்டுகளுக்கு நடிக்கலாம்' என்கிற கண்ணதாசனின் அறிவுறுத்தலும் வழிகாட்டுதலும் பிற்பாடு உண்மையாகிப் போனது. அதற்குப் பிறகு 'கொஞ்சும் குமரி' உள்ளிட்ட சில படங்களில் மனோரமா நாயகியாக நடித்தாலும் நகைச்சுவை நடிகை என்கிற அடையாளமே அவருக்கு அழுத்தமான அடையாளத்தை உருவாக்கியது.

பல சிரமங்களுக்கிடையில் தன்னை வளர்த்து உருவாக்கிய தாய் ராமாமிர்தம் மீது மனோரமாவிற்கு பெரும் பக்தியே உண்டு. ஆனால் அவருடைய தாயைப் போலவே மனோரமாவின் தனிப்பட்ட வாழ்வும் துயரச் சாயலுடன் அமைந்தது. தன்னுடன் திரைப்படங்களில் நடித்த ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மனோரமா. ஆனால் இந்த இன்ப வாழ்வு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்து விட்டது. மனோரமாவிற்கு குழந்தை பிறந்த நேரத்தில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக ராமநாதன் அவரைப் பிரிந்து சென்று விட்டார். வேறு திருமணமும் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகனுடன் அதற்குப் பிறகான தன்னுடைய நீண்ட வாழ்க்கையை தனிமையுடன் எதிர்நீச்சல் போட்டு கடந்து வந்தார் மனோரமா. ராமநாதன் இறந்த சமயத்தில் அவர்களுக்குப் பிள்ளையில்லை என்கிற காரணத்தினால் கணவரின் துரோகத்தையும் மறந்து தன்னுடைய மகனின் மூலம் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வைத்ததில் மனோரமாவின் நல்லியல்பை புரிந்து கொள்ள முடிகிறது.

***

கோபிசாந்தா என்கிற இயற்பெயருடைய மனோரமாவின் நீண்ட கலைப்பயணத்தை பொதுவாக இரண்டு பகுதிகளாக காண முடியும்.அறிமுகமான  'மாலையிட்ட மங்கை' துவங்கி மிக நீண்ட காலத்திற்கு விதம் விதமான பல்வேறு பாத்திரங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் மனோரமா. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது வட்டாரத்தை சேர்ந்த கதாபாத்திரமாக நடிக்க நேர்ந்தால் குறுகிய நேரக் கற்றலிலேயே தன்னுடைய உடல் மொழியையும் மாற்றிக் கொள்வதோடு அந்த வட்டார மொழியையும் கச்சிதமாக உச்சரிக்கும் திறமை இயற்கையாகவே மனோரமாவிற்குள் படிந்திருந்தது. தன்னுடைய இளமைப் பருவத்தின் பெரும்பான்மையையும் காரைக்குடி பகுதியில் கழிக்க நேர்ந்ததால் நகரத்தார்களின் வட்டார வழக்கை இவரால் மிகத்திறமையாக பின்பற்ற முடிந்தது. பல நாடகங்கள் முதற்கொண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ( 'ஜில் ஜில் ரமாமணி') உள்ளிட்டு வெளிப்பட்ட இந்த பிரத்யேகமான திறமையை பல திரைப்படங்களில் காண முடியும். இந்தத் திறமையின் மூலமாக அன்பாக வழங்கப்பட்டு இவருடன் ஒட்டிக் கொண்ட 'ஆச்சி' என்கிற அடைமொழி இறுதி வரைக்கும் பயணித்தது.

நாகேஷ், சோ, சந்திரபாபு, விகே ராமசாமி, தேங்காய் சீனிவாசன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் முதற்கொண்டு அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்த ஏறத்தாழ தமிழின் பெரும்பாலான  நடிகர்களுடன் நடித்த சாதனை மனோரமா ஒருவருக்கே இருக்க முடியும். நகைச்சுவைப் பகுதிதானே என்று அலட்சியமாக அல்லாமல் அதிலும் தன்னுடைய அர்ப்பணிப்பையும் குணச்சித்திரத்தோடு கூடிய நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தும் அரிதான திறமையைக் கொண்டிருந்தார் மனோரமா. 'அன்பே வா' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான வீட்டை 'அவர்தான் உரிமையாளர்' என்று அறியாமல் அவரிடமே வாடகைக்கு தருவார் நாகேஷ். இந்த உண்மை மனோரமாவிற்கு மட்டுமே தெரியும். ஆனால் இதைச் சொல்ல விடாமல் தடுத்து விடுவார் எம்.ஜி.ஆர். இந்த விஷயங்களை அறியாத நாகேஷ் தன்னுடைய பிரத்யேகமான நகைச்சுவையோடு எம்.ஜி.ஆரிடம் ஆர்ப்பாட்டமாக அதிகாரம் செய்வார். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல் சொந்த வீட்டிலேயே தன் முதலாளி எதிர்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களை தாங்கவும் முடியாமல் தத்தளிப்பார் மனோரமா. தன்னுடைய நகைச்சுவை நடிப்பிற்கு இடையில் அதையும் தாண்டி இந்த தத்தளிப்பையும் சங்கடத்தையும்  மிகத் திறமையாக வெளிப்படுத்தும் இயல்பான நடிகையாக விளங்கினார்  மனோரமா. இது போல் பல திரைப்படங்களை உதாரணமாக சொல்ல முடியும். ஏ.பி. நாகராஜன் இயக்கிய கண்காட்சி என்கிற திரைப்படத்தில் ஊமை, ஆங்கிலோ இந்தியன் என ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார்.

மனோரமாவின் இந்த  நீண்ட நகைச்சுவைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தைச் சொல்லலாம். நகைச்சுவை நடிகையான மனோரமாவிற்குள் இருந்த குணச்சித்திர நடிகையின் அபாரமான திறமை வெளிப்படுமாறு அவரது பாத்திரத்தை அத்திரைப்படத்தில் சிறப்பாக வடிமைத்திருந்தார் பாலச்சந்தர். வாய் பேச இயலாத நாதஸ்வர வித்வானின் மனைவியாகவும் கமல்ஹாசனின்  அன்பான அண்ணியாகவும் தன்னுடைய மாமனார் ஜெமினி கணேசனின் பழமைவாத செயற்பாடுகளை பொறுத்துப் பார்த்து ஒரு கணத்தில் வெடித்து தீர்ப்பவராகவும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவரை பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்பட்டிருந்த மனோரமா சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் தமிழ் சினிமா அறிந்தது, இந்தப் படத்திற்குப் பிறகுதான். இதைப் போலவே வசந்த் இயக்கிய 'நீ பாதி நான் பாதி' திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வழங்கிய மனோரமாவைப் பார்க்க முடியும்.

தமிழ் திரையுலகின் ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் ஒரு பாத்திரம் ஒருவருக்கு பொருத்தமாக அமைந்து விட்டால் அல்லது அது வெற்றி பெற்று விட்டால் அதை ஒரு அழுத்தமான முத்திரையாக  அந்த நடிகரின் மீது குத்தி ஏறத்தாழ அனைத்து இயக்குநர்களுமே அதைப் போன்ற பாத்திரத்தையே தொடர்ந்து தருவார்கள். காவல் துறை நபர், அப்பாவி வேலைக்காரர் என்பது போன்று ஒரே பாத்திரத்திலேயே தங்களின் வாழ்நாள் முழுவதையும் கழித்த துணை நடிகர்கள் உண்டு. இதனாலேயே சிறிய வேடங்களில் நடிக்கத் தயங்கும் நடிகர்கள் உண்டு. எனவே இதற்கு முன் பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மனோரமாவை 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்திற்குப் பிறகு பெரும்பாலான நாயகர்களின் அம்மா பாத்திரத்தில் பொருத்தி பொங்கி பொங்கி அழ வைத்தனர். 'அம்மா சென்ட்டிமென்ட் காட்சியா, கூப்பிடு மனோரமாவை' என்றாகி விட்டது. படப்பிடிப்புத் தளத்திற்குள் வரும் முன்னரே அவர் மூக்கைச் சிந்திக் கொண்டே வர வேண்டும் என்றாக்கி விட்டனர். இந்தத் தேய்வழக்கு பயன்பாட்டிற்கு இடையிலும் அவருடைய திறமை தன்னிச்சையாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. வி.சேகர் என்றொரு குடும்பப்பட இயக்குநர். அவர் படங்களில் வருபவர்களில் எல்லோருமே மிகையுணர்ச்சியோடு கத்திக் கொண்டேயிருப்பார்கள். இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'நான் பெத்த மகனே' வில் தன் ஒரே மகனின் மீது அதீதமான பாசமும் பொசசிவ்னஸ் குணாதிசயமும் உள்ள தாயாக மனோரமா நடித்திருப்பார். அது வெகுசன திரைப்படம்தான் என்றாலும் அந்த மெலோடிராமாவிற்குள்ளேயும் தன்னுடைய இயல்பான நடிப்பை மனோரமா வெளிப்படுத்தினார்.

நடிகர்களில் பொதுவாக இருவிதமுண்டு. இயக்குநரின் படைப்பாற்றலை பெரிதும் நம்பி தம்மை முழுமையாக அவரிடம் ஒப்புக் கொடுத்து விடும் நடிகர்கள். சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்தான் இவர்களின் நடிப்பாற்றலை உணர்ந்து அதற்கேற்ப பாத்திரங்களை வடிவமைத்து அந்த உணர்வுகளை, உடல்மொழியை இவர்களிடம் விளக்கி விட்டால் போதும். தம்முடைய பகுதியை இந்த நடிகர்கள் சிறப்பாக அசத்தி விடுவார்கள். இவர்கள் இயக்குநர்களின் செயல்களில் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள். சிவாஜி போன்றோர் இவ்வகையானவர்கள். இன்னொரு வகையான நடிகர்கள் ஒருநிலையைக் கடந்த பின்னால் தங்களின் பாதையை தாங்களே வடிவமைத்துக் கொள்வார்கள். அதற்கேற்ப கதைகளை, இயக்குநர்களை அமைத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர், கமல் போன்றவர்கள் இந்தவகையினர்.

மனோரமா முதல் வகையைச் சார்ந்தவர். இயக்குநர் தம்மிடம் என்ன விளக்குகிறாரோ, அவற்றை உள்வாங்கி தமிழ் வெகுசன சினிமாவின் வழக்கமான போக்கிற்கு ஏற்ப திறமையாக வெளிப்படுத்துபவர். மனோரமாவின் முற்கால திரைப்படங்களைக் கவனித்தால் துடுக்குத்தனமான பெண்ணாக, சக நகைச்சுவை ஆண் நடிகர்கள் வழிந்து துரத்த உள்ளுக்குள் மறுகினாலும் அவர்களை கண்டிப்புடன் துரத்துபவராக இருப்பார். பெரும்பாலான திரைப்படங்கள் இப்படித்தான். ஏற்கெனவே குறிப்பிட்டபடி 'அம்மா' நடிகையான பிறகு வழிய வழிய கண்ணீர் சிந்தும் பாத்திரங்கள். இவர் 'பொம்பளை சிவாஜி' என்றழைக்கப்பட்டது ஒருவகையில் சரியானதே. ஏனெனில் சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து சிவாஜியைப் போலவே வீணடிக்கப்பட்ட கலைஞர்களில் மனோரமாவும் ஒருவர். மனோரமாவின் பன்முகத் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தமிழ்த்திரை இயக்குநர்களைத்தான் இதற்கு நொந்து கொள்ள வேண்டும். 'திருநங்கை' பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட கால ஆசை நிறைவேறாமல் நிராசையாகவே முடிந்து விட்டது.

மனோரமா திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக நிலைபெற்றுவிட்ட காலத்திலும் நாடகங்களில் நடிப்பதையும் கைவிடாத தொழில்பக்தியைக் கொண்டிருந்தார். பார்வையாளர்களின் உடனடி கைத்தட்டலையும் எதிர்வினையையும் சினிமாவில் சம்பாதிப்பதை விடவும் பெரும் செல்வமாக கருதினார். சில வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாவிட்டாலும் துவக்க காலம் முதலே கேள்வி ஞானத்தின் மூலம் பாடல்களை பாடும் திறமையைக் கொண்டிருந்த மனோரமா தன்னுடைய கணீர் குரலால் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களையும் பாடியுள்ளார். சென்னை வட்டார வழக்கு மொழியில் இவர் பாடிய 'வா வாத்யாரே வூட்டாண்ட..' எனும் பாடல் அது வெளிவந்த காலத்தில்  மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மேடை நாடக மரபிலிருந்து திரையுலகிற்கு இடம்பெயர்ந்த கலைஞர்களின் வரிசையில் அதன் கடைசிக் கண்ணிகளில் ஒருவராக இருந்தவர் மனோரமா. தங்களுடைய கலையின் மீது பக்தியும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் 'தங்களின் கலைச் செயலாற்றல் வெளிப்படும் போதே உயிர் பிரிய வேண்டும்' என்று நினைப்பார்கள். மனோரமாவும் அது போன்ற எதிர்பார்ப்பை பல சமயங்களில் வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஏதோவொரு திரைப்படத்தில் நடிக்கும் அயராத உறுதி அவரிடம் இருந்தது. சமூகத்தின் ஏனைய துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனையோடு இயங்கும் திரையுலகில் தன் தனிப்பட்ட துயரங்களையும் மீறி நீண்ட காலத்திற்கு பல நூறு திரைப்படங்களில் நடித்து பெண்  நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி கலைஞராக விளங்கிய அந்த நகைச்சுவைப் பேரரசி ஏற்படுத்திய வெற்றிடமும் சாதனைகளும்  நிரந்தரமாக இருக்கும். 

- உயிர்மை - நவம்பர் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)


suresh kannan

Sunday, January 18, 2015

கே.பாலச்சந்தர் - கலகக்குரல்களின் முன்னோடி



 'கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது'  - அவள் ஒரு தொடர்கதை என்கிற திரைப்படத்தில் இருந்த இந்த ஒரு வரி வசனத்தில் இருந்த குறும்புத்தனமும் சீற்றமும்தான் யார் இந்த பாலச்சந்தர் என்று என்னை தேடிப் பார்க்க வைத்தது. 'கட்டில் சத்தம் தாங்கலை' என்பது  திருமணமாகாத பெண்ணொருத்தி தன்னுடைய அண்ணியிடம் சொல்லும் அதே திரைப்படத்தில் வரும் இன்னொரு வசனம். 'சக்ஸஸ் சக்ஸஸ்' என்பது போன்ற சென்ட்டிமென்ட் வசனத்துடன் துவங்கும் அப்போதைய தமிழ் சினிமாக்களில் இப்படிப்பட்ட அதிர்ச்சிகர வசனங்கள் எல்லாம் இன்று கூட  நினைத்துக் கூட பார்க்க முடியாதவை. இப்போதைய இயக்குநர்கள் கூட கையாளத் தயங்குபவை. கவிதாவிற்கு திருமணமே ஆகக்கூடாது என்று இயக்குநர் திட்டமிட்டு அடுக்கிய சதிகளின் தொகுப்பாக  கூட இத்திரைப்படம் ஒருவிதத்தில் எனக்கு தோற்றமளிக்கும். கடவுள்களைப் போலவே கதாசிரியர்களும் சாடிஸ்ட்டுகளாக இருந்தால்தான் அந்த புனைவு விளையாட்டுகள் சுவாரசியமாக அமையும் போலிருக்கிறது. என்றாலும் பொறுப்பற்ற ஆண்களின் உலகில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் ஆண்களுக்காகவும் சேர்த்து கடைசி வரையிலும் உழைத்தேதான் தன்னை வருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனும் கசப்பான யதார்த்தத்தைதான் அத்திரைப்படத்தில் முன்வைத்திருக்கிறார் என்று சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக மாத்திரமே இச்சமூகம் அணுகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அதை மத்தியதர வர்க்க குடும்பங்களின் வரவேற்பறை விவாதங்களாக மாற்றிய வகையில் பாலச்சந்தரின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனித்தன்மையும் முக்கியத்துவமும் உண்டு. 'அரங்கேற்றம்' திரைப்படம் வெளிவந்த போது அப்போதைய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக இருந்த 'குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை' வெளிப்படுத்தும் விதமாக அத்திரைப்படம் அமைந்திருந்தாலும் கூட ஒரு பிராமண பெண்ணை பாலியல் தொழிலாளியாக சித்தரித்தற்காக  பிராமண சமூகத்தின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இந்த சர்ச்சைக்கு பத்திரிகை ஆசிரியா் சோ  அளித்த விளக்கத்தை வாசித்த நினைவிருக்கிறது.  'ஒரு கதையில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பாத்திரம் அதல பாதாளத்தில் விழும் போதுதான் பார்வையாளர்களுக்கு இயல்பாகவே அதன் மீது அதிக பரிவுணர்ச்சி ஏற்படும். அந்த வகையில்தான் இத்திரைப்படத்தை அணுக வேண்டும்'. புனைவில் இயங்கும் ஒரு கதாபாத்திரம் அதன் தன்மைக்கு முரணான எதிர் துருவ நிலையில் பயணப்படும் போதுதான் அந்த முரணியக்க நிலையில் அந்தப் புனைவு சுவாரசியமாக அமையும் என்கிற வகையில் சோவின் இந்த விளக்கம் சரியானது போல தோன்றினாலும் சாதிய நோக்கில் அது ஒரு சமூகத்தை உயர்த்தி சொல்வது போல் சுயநலமாக அமைந்திருப்பது முறையற்றது.

பாலச்சந்தரின் பெரும்பாலான திரைப்படங்கள் இவ்வாறான சர்ச்சைகளையும் விவாதங்களையும் அப்போதைய தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தின. அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தன.  ஆனால் தம்முடைய படைப்புகளை வெறுமனே அதிர்ச்சி மதிப்பீட்டு நோக்கில் திட்டமிட்டு அவர் உருவாக்கியதாக தெரியவில்லை. ஏனெனில் அவைகளில் சமூகத்தின் மீதான கடுமையான விமர்சனங்களோடு கூடவே அதற்கான பரிவுணர்ச்சியும் கலந்திருந்தது.  "பாலு.. உன்னோட படங்கள்ல மட்டும்தான் பாடல்கள் எழுதுவதற்கு சவாலாக அமைகிற மாதிரியான சிக்கலான, சுவாரசியமான கதைச் சூழல்கள் இருக்கு" என்று கண்ணதாசன், பாலச்சந்தரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு.

கிராமங்களில் நிகழ்ந்த புராணக்கதைகளின் மீது அமைந்த தெருக்கூத்து நாடகங்களும் அதன் தொடர்ச்சியாக திரை நடிகர்கள் நடித்த ஸ்பெஷல் புராண நாடகங்களும் வெற்றிகரமாக செயல்பட்ட காலத்தில்  சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அப்போது தங்களுக்கென சொந்தமான நாடகக்குழுவைக் கொண்டிருந்தார்கள். எஸ்.வி. சகஸ்ரநாமம், எம்.ஆர்.ராதா, போன்று பல நடிகர்கள் ஒருபுறம் திரைப்படங்களிலும் இன்னொரு புறம் தங்களின் மரபு தொடர்ச்சியை கை விட்டு விடாமல் பெருவிருப்பத்துடன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்கள். இம்மாதிரியான நாடகங்கள் பின்னர் திரைப்படங்களாகவும் உருவாகின. இந்தக் காலக்கட்டங்கள் மங்கிய சூழலில் கல்வியறிவு பெற்ற நகரத்தின் மத்திய தர வர்க்க இளைஞர்கள் தங்களின் கலைத்திறமையை வெளிக்காட்ட அமெச்சூர் நாடகக்குழுக்களை உருவாக்கினார்கள். இந்த நாடக மரபிலிருந்து உருவாகி வநதவர் கே.பாலச்சந்தர். சிறு வயதுகளில் எம்.கே.தியாகராஜ பாகவதர் திரைப்படங்களைக் காண்பதில் ஆர்வம் கொண்டிருந்த பாலச்சந்தருக்கு நாடகங்களை எழுதுவதில் உள்ள ஈடுபாடு இளமையிலேயே உண்டானது.

அரசு அலுவலகத்தில் அவர் பணிபுரிந்து கொண்டிருந்த போது புதிதாக பொறுப்பேற்க வந்த அதிகாரியை வரவேற்கும் விழாவிற்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய நாடகமான 'மேஜர் சந்திரகாந்த்' பரப்பரப்பான வரவேற்பை பெற்றது. பிறகு நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக பொதுமக்களும் இதைக் காண ஏதுவாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட போது அமோகமான வெற்றியைப் பெற்றது. அப்போது ஓடிய திரைப்படங்களுக்கு ஈடான கூட்டத்தை பாலச்சந்தரின் நாடகங்களும் பெற்றன. திரையுலகினர் திரும்பிப் பார்க்கிற அளவிற்கான வளர்ச்சியைப் பெற்றிருந்தார் பாலச்சந்தர். இவரின் 'மெழுகுவர்த்தி' எனும் நாடகத்தை காண வந்திருந்த எம்.ஜி.ஆர், 'இது போன்ற திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு நிச்சயம் வரவேண்டும்' என்று கூறி 'தெய்வத்தாய்' திரைப்படத்தில் வசனமெழுத வாயப்பளித்தார். அத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடினாலும் தம்முடைய தனித்தன்மையும் திறமையும் அதில் வெளிப்படவில்லையே என்கிற வருத்தம் பாலச்சந்தருக்கு ஏற்பட்டதால் தம்முடைய நாடகங்களையே திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய 'சர்வர் சுந்தரம்' மகத்தான வெற்றியைப் பெற்றது. அதுவரை நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருந்த நாகேஷை மறுகண்டுபிடிப்பு செய்து இன்னொரு பரிமாணத்தில் சித்தரித்த பெருமை பாலச்சந்தரையே சாரும். அபத்தமான சென்டிமென்ட் உணர்வுகளும் வழக்கங்களையும் இன்னமும் கூட கொண்டிருக்கும் தமிழ்  சினிமாவில் தன்னுடைய இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படத்தையின் தலைப்பையே 'நீர்க்குமிழி' என்று வைக்கும் துணிச்சலையும் புதுமையையும் பாலச்சந்தர் கொண்டிருந்தார்.அதுவரை தமிழ் சினிமாவில் மாறாதிருந்த பல பழமைவாதப் போக்குகளை பாலச்சந்தரின் படங்கள் சிதறடித்தன.

காதலனை கொன்றவனை பழிவாங்குவதற்காக அவனுக்கே சித்தியாக வந்து அதிர்ச்சி தரும் ஒரு பெண் (மூன்று முடிச்சு), திருமணமான ஒருவன் மகள் வயதுள்ள பெண்ணுடன் கொள்ளும் பாலுறவால் ஏற்படும் குடும்பச் சிக்கல்கள் (நூல்வேலி), காதலன், சேடிஸ்ட் கணவன், ஒருதலையாக காதல் செய்யும் அப்பாவியொருவன் என்று மூன்று ஆண் முனைகளில் அலையுறும் ஒரு பெண் (அவர்கள்), அதிக வயது வித்தியாசமுள்ள இரு ஜோடிகளின் காதலினால் ஏற்படும் உறவுச்சிக்கல்கள் (அபூர்வ ராகங்கள்) திருந்தி மைய நீரோட்ட வாழ்க்கையில் புக விரும்பும் ஒரு ரவுடியையும் பாலியல் தொழிலாளியையும் இச்சமூகம் அவர்களின் பழைய நிலைக்கே தள்ளும் அபத்தம் (தப்புத் தாளங்கள்) என்று வித்தியாசமான பல கதையோட்டங்களை கையாண்ட இயக்குநராக பாலச்சந்தர் திகழ்ந்தார்.

துவக்க காலத்தில் நாடகபாணிக் கதைகளையே கையாண்டாலும் ஒரு கட்டத்தில் சமூகப் பிரச்சினைகளை அலசும், அதற்கு தீர்வு காண முயலும், அவற்றை முன்வைக்கும் லட்சியவாத மனிதர்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்கினார். சமூகக்கதைகளை மாத்திரமல்லாமல் எதிரொலி, நூற்றுக்கு நூறு போன்ற 'ஹிட்ச்காக்' வகை சஸ்பென்ஸ் படங்களை இயக்குவதிலும் அவருடைய திறமை வெளிப்பட்டது.

எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம் என்று நடிகர்களால் திரைப்படங்கள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், ஸ்ரீதருக்குப் பிறகு 'இயக்குநரின் திரைப்படங்களாக' அவை அடையாளம் காணப்பட்டு இயக்குநர்களுக்கான முக்கியத்துவத்தையும் பெருமையையும் நிறுவியதில் பாலச்சந்தரின் பங்களிப்பிற்கு முக்கியத்துவமுண்டு. அதைப் போலவே ஆண்மையவாத சிந்தனைகளில் உதிர்ந்த படைப்புகளாக தமிழ் சினிமாக்கள் உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில் பெண் கதாபாத்திரங்கள் வெறும் கவர்ச்சி பிம்பங்களாகவும் சென்ட்மென்ட் உபயோகங்களுக்காகவும் ஆண்களால் காப்பாறப்பட காத்துக் கொண்டிருக்கும் அபலைகளாகவும் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இதிலிருந்து முற்றிலும் விடுபட்டு பெண்களை முன்னிலைப்படுத்தியும் அவர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியும் சித்தரித்த வகையில் பாராட்டத்தக்க ஓர் இயக்குநராக பாலச்சந்தர் இருந்தார். பணக்கார பண்ணையார் - ஏழை விவசாயி என்று சமூகத்தின் மேல்நிலை x கீழ்நிலை பாத்திரங்களையே கொண்டு அதுவரையான தமிழ் சினிமாக்கள் இயங்கிய போது அதை விட குழப்பங்களும் சிக்கல்களும் கொண்ட மத்திய தர வர்க்க மனிதர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் தமிழ் திரையில் பதிவு செய்த வகையில் பாலச்சந்தர் ஒரு முன்னோடியாக செயல்பட்டார். மிகச் சிறிய கதாபாத்திரங்கள் கூட அவருடைய திரைப்படங்களில், பார்வையாளர்களின் கவனத்தைப் பெறுமளவிற்கு அவற்றின் தனித்தன்மைகளோடு உருவாக்கப்படும். (அபூர்வ ராகங்களில் மருத்துவராக நடித்திருந்த கண்ணதாசன் பாத்திரத்தை உதாரணமாக சொல்லலாம்).

திரைப்படத்துறையில் தன் பயணத்தை வெற்றிகரமாக துவங்கிய பின்னரும் கூட தன்னுடைய அரசுப்பணியை இழப்பதில் அவருக்கு தயக்கமிருந்தது. ஏவிஎம் செட்டியார் அவருக்கு தைரியம் கூறி மூன்று வருட ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பின்புதான் தன் அரசுப்பணியிலிருந்து விடுபட்டார். பாலச்சந்தரின் இந்த நடுத்தர வர்க்க  பின்னணியின் மனோபாவத்தை பிரதிபலிப்பது போலவே அவரது பெரும்பாலான கதாபாத்திரங்கள் இயங்கின. 'கல்வி'யின் மூலம்தான் தங்களின் சமூகத்தின் வறுமையிலிருந்து விடுபட்டு மேலேற முடியும் என்கிற மத்தியதர வர்க்கத்தின் சிந்தனையை அவரது பல கதாபாத்திரங்கள் எதிரொலித்தன. ஸ்டார் நடிகர்களின் பின்னால் ஓடாமல் தம்முடைய திறமையின் மீது அசாத்திய நம்பிக்கை கொண்டு பல புதுமுகங்களை பட்டை தீட்டி அறிமுகப்படுத்தி வெற்றிபெறச் செய்தவர் என்கிற வகையில் 'சினிமா என்பது இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய ஊடகம்' என்கிற செய்தியை தொடர்ந்து நிருபித்துக் கொண்டேயிருந்தார். 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் சுஹாசினியைத் தவிர்த்து விவேக் உள்ளிட்ட ஏறத்தாழ அனைத்து நடிகர்களும் புதுமுகங்களே. தம்முடைய திரைப்படங்களில் வரும் பாடல் வரிகளும் இசையும் காட்சிக் கோணங்களும் வித்தியாசமாக அமைவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கன. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பில் பாலச்சந்தரின் திரைப்பட பாடல்கள் பிரத்யேக சிறப்புகளுடன் வெளிப்பட்டன. ரஜினி -கமல் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தின் பாடல்கள் பொதுவெளியில் பார்வையாளர்கள் இடையே கோலாகலமான, கொண்டாட்டமான மனநிலையை உருவாக்கின.

வங்காளப் படங்களின் பாதிப்பு பாலச்சந்தரின் படங்களில் இருந்தது. குறிப்பாக சத்யஜித்ரே, ரித்வக் கட்டக் ஆகியோரைச் சொல்லலாம். 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் ரித்விக் கட்டக்கின் 'மேஹ தாஹ தாரா' என்கிற வங்காளப் படத்தின் தழுவலே. பாலியல் தரகராக இருக்கும் நபர் எதிர்பாராத சூழலில் தன்னுடைய மகளை பாலியல் தொழிலாளியாக கண்டு அதிர்ச்சியுறும் காட்சியும் ரே திரைப்படத்தின் ஒரு காட்சியே. 'பாலச்சந்தர் ஒரு நடிகராக வந்து விடக்கூடாது என்கிற பிரார்த்தனையும் கவலையும் எனக்குண்டு. ஏனெனில் அவர் நடிகராக வந்தால் நாங்கள் எல்லோரும் காணாமல் போக வேண்டியிருக்கும். அத்தனை சிறந்த நடிகர். அவர் எங்களுக்கு கற்றுத் தரும் நடிப்பின் சில சதவீதத்தையாவது ஒழுங்காக செய்து விட்டால் கூட அது சிறப்பாக அமைந்து விடும்' என்று தனது நேர்காணல்களில் கமல்ஹாசன் உயர்வுநவிற்சியுடன் அடிக்கடி கூறியதை காண நேர்ந்ததையொட்டி பாலச்சந்தர் நடிப்பதைக் காண பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் அவர் நடிப்பைக் காணும் போது அது அத்தனை சிலாகிக்கும்படியாக இல்லாதது ஒரு புதிரே.

சினிமாவில் சாதித்த பிறகு தொலைக்காட்சியில் பணிபுரிவதென்பது ஒருபடி கீழான செயல் என்று இன்றும் கூட நம்பப்பட்டிருக்கும் சூழலில் 90 களிலேயே பல தொலைக்காட்சி நாடகங்களை இயக்கி அனைவரையும் கவனிக்க வைத்தார். மற்றவர்களின் திரைப்படங்கள் தோல்வியடைந்தால் அதைக் கொண்டாடி மகிழும் மனப்பான்மையும் உள்ள திரையுலகில் புதிய இயக்குநர் முதற்கொண்டு எந்தவொருவரின் படைப்பு சிறப்பாக இருந்தாலும் அதை தம்முடைய கையெழுத்துடன் கூடிய கடிதத்தில் எழுதி வெளிப்படுத்தும் பிரத்யேகமான பண்பு பாலச்சந்தரிடம் இருந்தது.

தமிழ் சினிமா தனது  முன்னோடி படைப்பாளிகளை ஒவ்வொருவராக இழந்து வருவது வருந்தத்தக்கது. சமீபத்தில்தான் பாலுமகேந்திரா காலமானார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் இன்னொரு முக்கியமான இயக்குநரும் பாலச்சந்தரும் காலமானது பேரிழப்பே. பழமைவாத மனோபாவங்கள் ஆழமாக வேரூன்றிய காலக்கட்டத்திலேயே அதைச் சிதறடிக்கும் விதமாக புதுமையான, புரட்சிகரமான படைப்புகளை உருவாக்கிய பாலச்சந்தரின் பாதையை இளம் இயக்குநர்களும் பின்பற்றுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

- உயிர்மை - ஜனவரி 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Thursday, February 13, 2014

அஞ்சலி: பாலுமகேந்திரா


என்னளவில் நான் எப்போதுமே குறிப்பிடுவது இதைத்தான். தமிழ் சினிமாவில் சர்வதேச தரத்திற்கான படைப்புகளை  நெருங்கிய படைப்பாளிகள் இருவர்தான். ஒருவர் மகேந்திரன், இன்னொருவர் பாலுமகேந்திரா. அவருடைய மறைவு அதிர்ச்சியடைய வைக்கவில்லையெனினும் நிச்சயம் வருத்தப்பட வைக்கிறது. தமிழ் சினிமா சாதனையாளர்களின் குறிப்பாக மாற்று சினிமாவின் முன்னோடிகளின் பட்டியலில் பாலு மகேந்திராவின் பெயர் நிரந்தரமாக இருக்கும்.

ஒரு சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நேர்நத போது அங்கிருந்த இயக்குநர் (டேவிட் லீன்) மழை என்று உத்தரவு போட்டவுடன் மழை பெய்த அதிசயத்தை பார்த்து அதிலிருந்த கடவுளுக்கு நிகரான தன்மையை வியந்த சம்பவத்தில்தான் பாலுமகேந்திரா பின்னாளில் சினிமா இயக்குநர் ஆவதற்கான விதை இருந்ததை அவரே பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக உருமாறிய படைப்பாளிகளில் பாலுமகேந்திரா முக்கியமானவர். முள்ளும் மலரும் திரைப்படத்தின் ஒரு பாடலில் காட்சியில் இலைகளின் ஊடாக சூரியனை காமிரா தொடரும் ஒரு காட்சி காண்பதற்கு இன்றைக்கும் பரவசம் ஊட்டக்கூடியது. விடியற்காலைகளையும் அந்தி வானத்தையும் பாலுவின் கேமராவைப் போல வேறு எவராலும் அத்தனை அழகுணர்ச்சியுடன் பதிவு செய்ய முடியவில்லை. மலைப்பிரதேசங்களின் அழகையும் குளிர்ச்சியையும் பார்வையாளர்களின் மனங்களுக்கும் வெற்றிகரமாக கடத்தியவர் பாலு. இயற்கை என்பது ஒரு முக்கியமான கவித்துவ  பாத்திரமாகவே அவரது படங்களில் தொடர்ந்து வந்திருக்கிறது.

காட்சிகளை அழகுணர்ச்சியுடன் பதிவு செய்தவர் என்பதையும் தாண்டி இயக்குநராகவும் தமிழ் சினிமாவிற்கு அவரின் பங்களிப்பு முக்கியமானது. தனிநபர்களுக்கான அகச்சிக்கல்களை மிகுந்த நுண்ணுணர்வுத்தன்மையுடன் அவரது படம் ஆராய்ந்திருக்கிறது. ஒரு கலைஞனின் அடிப்படையான அடையாளமான சமூகப் பொறுப்பையும் அவரது படங்கள் புறக்கணிக்கவில்லை. இன்றைக்கும் கூட மத்திய தர வர்க்க மனிதர்களின் மிகப் பெரிய கனவாகவும்  லட்சியமாகவும் திகழும் 'சொந்த வீடு' என்கிற விஷயத்தை அடைய ஓர் எளிய குடும்பம் சிறுக சிறுக பல போராட்டங்களுக்கு இடையே முன்னேறுவதையும் அதிகாரம் எனும் ஆலமரம் அந்தக் கனவை ஒரு நொடியில் கலைத்துப் போடும் அராஜகத்தையும் அற்புதமான முறையில் பதிவு செய்தது 'வீடு' திரைப்படம். உழைத்து உழைத்து பழசாகி பின்பு வெளியே எறியப்படும் வீட்டுப் பொருட்களை போலவே மனிதர்களும் அவர்களின் அந்திமக்காலத்தில் உதவாத சுமைகளாக இந்தச் சமூகம் அணுகும் அனுதாபத்தை 'சந்தியா ராகம்' பதிவு செய்தது.  இளையராஜாவுடனான கூட்டணிகளின் போது பாலுவின் திரைப்படங்கள் பிரத்யேகமான வண்ணங்களுடன் உருவானது இரு மேதைகளுடைய திறமைக்கான அடையாளம்.

இரு துணைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் ஓர் ஆண்மனதை பாலுவின் படங்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கின்றன. 'மறுபடியும்' திரைப்படம் இதை தீவிரமான தொனியில் அணுகியதென்றால் 'ரெட்டை வால் குருவி'யும் சதிலீவாதியும் இதை நகைச்சுவைத் தொனியுடன் அணுகியது. ஒரு கலைஞனையும் அவனது படைப்புகளையும் பிரித்துப் பார்க்க முடியாது என்கிற நிலையில் அவரது இந்த திரைப்படங்களை அவரது வாழ்க்கையுடனும் ஒரு நாகரிகமான விமர்சன எல்லையில் பொருத்திப் பார்க்க முடியும். ஷோபாவின் தற்கொலையின் போதும் 'என் துணைவி' என்று மெளனிகாவை அவர் பொதுவெளியில் அறிவிக்கும் போதும் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளானவர் பாலு. கலைஞனுக்கே உரித்தான அலையுறும் சிக்கலான மனம்தான் அவரைச்செலுத்துகிறது என்கிற புரிதலுடன்தான் இந்தப் புகார்களையும் சர்ச்சைகளையும் கடந்து வர முடியும். இந்தச் சங்கடமான வேலிக்குள் அவரை நிறுத்தி வைத்துப் பார்ப்பது முறையற்றது. ஒரு கலைஞனுக்குள்ள மரியாதையை இம்மாதிரியான லெளகீகச் சிக்கல்கள் குலைத்து விடாது என்பதிலிருந்தும் குலைத்து விடவில்லை என்பதிலிருந்தும் பாலுவின் மேதமையின் வீர்யத்தை அனுமானித்து விட முடியும்.

அவரது கடைசி திரைப்படமான 'தலைமுறைகளை' நான் இன்றளவும் பார்க்கவில்லை. பார்க்க விரும்பவில்லை என்பது இன்னொரு காரணம். அத்திரைப்படத்தைப் பற்றி என் அலைவரிசையை ஒத்த நண்பர்களின் உரையாடல்களும் அபிப்ராயங்களும் எனக்கு அத்தனை உவப்பாயில்லை. எனக்குள் பிரம்மாண்டமாக நிற்கும் பாலுவின் பிம்பத்தை நான் கலைத்துக் கொள்ள விரும்பவில்லை.

தீவிரமான இலக்கிய வாசகரான பாலுமகேந்திரா, தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் ஓரு பாலத்தை ஏற்படுத்தி விடவேண்டும் என்பதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளும் கனவுகளும் வேறு எந்த முன்னோடி இயக்குநரும் அதிக அளவில் முயற்சிக்காதது. எந்தவொரு இளைஞரும் உதவி இயக்குநர் பணிக்காக அவர் முன் நிற்கும் போது அவர் கேட்கும் கேள்வி 'தமிழ் இலக்கியத்தில் என்னென்ன படித்திருக்கிறீர்கள்?' என்பதாகத்தான் இருக்குமாம். தமிழின் சிறந்த சிறுகதைகளை தனது உதவியாளர்களுக்கு தொடர்ந்து பரிந்துரைப்பதும் அதைப் பற்றி உரையாடுவதும் திரைக்கதைப் பயிற்சிக்காக தமிழ் சிறுகதைகளை யோசிப்பதும் அவருக்கிருந்த நியாயமான இலக்கிய தாகத்தைக் காட்டுகிறது. பெரிய திரையில் அதிகம் சாத்தியப்படாவிட்டாலும் சிறந்த சிறுகதைகளை படமாக்கும் தனது தாகத்தை 'கதை நேரம்' மூலம் தணித்துக் கொள்ள முயன்றார் என்றுதான் தோன்றுகிறது.

சினிமா குறித்து தனக்கிருந்த பாண்டியத்தை தனது 'சினிமாப் பட்டறை' மூலம் வருங்கால இளைஞர்களுக்கு கற்றுத்தருவதற்காக வயது முதிர்ந்த நிலையிலும் அவர் எடுத்திருந்த முயற்சிகள் நெகிழ வைப்பது.

ஈழப் போராட்டத்தை, அது தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி ஒரு திரைப்படம் உருவாக்கி விட வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் கனவாக இருந்தது. அது நிறைவேறாத நிலையிலேயே அவர் மறைந்தது மிகவும் துயரகரமானது. அவரது திரைப்படங்களை ஆவணப்படுத்தி வைக்கவும் பாதுகாக்கவும் இயலவில்லை என்பதற்காக அவர் அடைந்த துயரத்தையும் வேதனையையும் உண்மையில் இச்சமூகம்தான் அடைந்திருக்க வேண்டும். கடந்து போகும் வரலாறுகளையும் சாதனைகளையும் பதிவு செய்வதிலும் பாதுகாத்து வைப்பதிலும் நாம் காட்டும் அலட்சியமும் புறக்கணிப்பும் அவமானகரமானது. எதிர்கால சந்ததி இதற்காக நம்மை மன்னிக்கப் போவதேயில்லை.

'திரைப்பட ரசனையை பாடக் கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும்' என்று தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தே ஒற்றைக்குரல் பாலுமகேந்திரா வுடையதுதான். நம்மை ஆள்பவர்களையே சினிமாத்துறையில் இருந்து தோந்தெடுக்கும் அளவிற்கு வலிமையான ஊடகமாக இருந்த சினிமாவை உணர்ச்சிப்பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாக மக்கள் அணுக வேண்டியதின் அவசியத்தை வலுவாக உணர்ந்திருந்த ஒரே இயக்குநர் பாலுமகேந்திராதான். அவரின் குரலை எதிரொலிக்க தமிழ் சினிமாவில் எவருமில்லை என்கிற நிலை, அதிகாரத்தின் அடிமைகள் எல்லாத்துறையிலும் இருப்பதைப் போலவே கலைத்துறையிலும் நிறைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. அவரின் நிறைவுறாத இந்த வேண்டுகோளை தீப்பந்தமாக எடுத்துச் செல்லும் அடுத்த கலைஞனின் தேவைதான் இப்போது அவசியமானது. பாலுவின் பிரத்யேக அடையாளத்துடன் அதன் தொடர்ச்சியாக வேறு எந்த இயக்குநரும் உருவாகவில்லை என்பதே பாலுவின் தனித்தன்மைக்குச் சான்று.

பாலுமகேந்திரா எனும் உன்னதமான கலைஞனுக்கு ஓர் எளிய பார்வையாளனின் மனப்பூர்வமான அஞசலி. 


suresh kannan

Friday, April 22, 2011

அஞ்சலி : ர.சு. நல்லபெருமாள்


 பைண்டிங் செய்யப்பட்டிருந்த அந்த தொடர்கதைப் புத்தகம் எப்படி, யாரால் எங்கள் வீட்டிற்கு வந்தது என்பதும் பின்பு எப்படி மறைந்து போனது என்பதும் என்று எதையுமே நான் அறிந்திருக்கவில்லை அல்லது நினைவில் இல்லை. ஆனால் அம்புலிமாமா, ராணி, கல்கண்டு, குமுதம் வகையறா துணுக்குகளைத் தாண்டி சுமார் 15  வயதில் நான் வாசித்த முதல் முழு புதினம் என்கிற வகையில் அந்த நூல் என் நினைவில் இன்னமும் பசுமையாகவே உள்ளது. ரங்கமணி, திரிவேணி, தீட்சிதர், வெங்கி, சர்தார், கமலா... என்று அந்தப் புதினத்தின் பாத்திரங்கள் இன்னமும் என் மூளையின் நியூரான்களில் பத்திரமாக உள்ளனர்.

கல்கியில் தொடராக வந்து, அந்த நாவல் போட்டியில் முதல் பரிசை வென்ற 'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் வார சேகரிப்பு தொகுப்பு நூல்தான் அது.

சுதந்திரப் போராட்ட காலத்தின் பின்னணியில் இயங்கும் அந்தப் புதினத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் வன்முறையில் தம் உறவுகளை இழந்த ரங்கமணி, அவர்களைப் பழிவாங்க வன்முறையை கையாள முயல்வான். காந்தியவாதியான திரிவேணி மெல்ல மெல்ல அவனின் வன்முறை எண்ணங்களை திசைமாற்ற முயல்வாள். இறுதியில் அவளின் மரணத்தில்தான் அது சாத்தியமாகும். இடையில் ரங்கமணி, திரிவேணி, முன்னாள் காதலி கமலா என்கிற முக்கோணக் காதல்  நிகழ்வுகளுடன் புதினம் சுவாரசியமாக இயங்கும். இலட்சியவாத எழுத்து வகைமையில் இந்த நாவல் இயங்கினாலும் ஒரு சுவாரசியமான திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டுக்குண்டான கச்சிதங்களுடனும் சுவாரசியங்களுடனும் அமைந்திருந்த காரணத்தினால் பல முறை இந்தப் புதினத்தை வாசித்திருக்கிறேன். (இதையே நடிகர் கமலும் பல முறை வாசித்திருக்கலாம் என்பது 'ஹேராம்' வெளிவந்த போது உணர முடிந்தது. ரங்கமணி காந்தியைக் கொல்லப் போகும் சம்பவங்கள் முதற்கொண்டு அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் இரண்டு பெண்கள் என்பது வரை புதினத்தின் பல பகுதிகள் திரைப்படத்தோடு ஒத்துப் போகும். இதையொட்டி புதினத்தின் ஆசிரியரே எழுப்பிய ஆட்சேபணையை கமல் ஏற்றுக் கொண்டாரா என்பது தெரியவில்லை).

கல்லுக்குள் ஈரம் ஏற்படுத்திய சுவாரசியமே பிற்பாடு என் வாசிப்பு ஆர்வம் கூடியதற்கு ஒரு வித்தாக அமைந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அதுவே இந்தப் புதினத்தின் மீது காரணம் சொல்ல முடியாத ஒரு பிரியத்தை ஏற்படுத்துகிறது. பிறகு இந்த ஆசிரியர் எழுதிய மற்ற நாவல்களை  தேடினேன். 'மாயமான்கள்' என்று ஞாபகம். சாமியார்களின் போலித்தனங்களைப் பற்றியது. அவை போலியானவை என்றாலும் மக்களின் நம்பிக்கையும் அது தரும் நிவாரணமும் காரணமாக இந்த போலித்தனங்களும் சமூகத்தின் ஒரு தேவையான பகுதிதான் என்பது போல் அந்த புதினத்தின் சாரம் அமைந்திருக்கும்.

'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் ஆசிரியரான ர.சு.நல்லபெருமாள் மறைந்த செய்தியை அறிந்த போது தன்னியல்பாக வருத்தம் எழுந்தது. அவருக்கு என் அஞ்சலி. 



suresh kannan

Monday, March 01, 2010

பாகவதர்


 தேங்காய் மூடி பாகவதர் முதற்கொண்டு ஏஸி கச்சேரி பாகவதர்கள் வரை எத்தனையோ பேர் இருந்தாலும் 'பாகவதர்' என்றாலே தமிழக மனங்களில் சட்டென உடனே நினைவுக்கு வருவது ஓர் உருவம்தான். தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையின் மிக உச்சமாக இயங்கி பின்னர் வீழ்ந்த நட்சத்திரமாக மறைந்துப் போனவர். வாழ்வின் நிலையாமைக்கு மிகச் சிறந்ததொரு தத்துவ உதாரணம். பண்டிதர்கள் தங்கள் குழுவில் பொத்தி வைத்திருந்த கர்நாடக இசையை பாமரருக்குச் சென்று சேர்த்த நபர்களில் பிரதானமானவர். ஒரு முறையாவது இவரை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று பெண்களை ஏங்க வைத்த அப்போதைய காதல் மன்னன்.

சிறுவயது  தூர்தர்ஷன் நாட்களில் இவரது பாடல்கள் வரும் போதெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே தலை தெறிக்க ஓடுவோம்.  சற்று ருசி தெரிந்த பின் கேட்ட பிறகு அதன் நுணுக்கங்கள் தெரியாவிடினும் உள்ளுணர்வின் ரசனை காரணமாக பாகதவர் பாடல்களில் பித்துக் கொண்டேன். 'தீன கருணாகரனே நடராஜா' வை மாத்திரம் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை.

இன்று அவரது நூற்றாண்டு பிறந்த தினம். இது தொடர்பாக இந்து நாளிதழில் இன்று வெளிவந்த எஸ்.முத்தைய்யாவின் கட்டுரையை  இங்கு வாசிக்கலாம்.

 suresh kannan

Saturday, February 27, 2010

எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு

சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர்

சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.

எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.

இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.


 ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.

28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.

இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)

ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.

இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.

"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.

()

உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"

சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."

சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"

சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"

சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "

சுஜாதா: "அப்படியா?

சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"

சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."

சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"

சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"

சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.

சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."

(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)

சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"

சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"

சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"

சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"

சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.

(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)

சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".

சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)

சுஜாதா: (சிரிப்பு)

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"

()

நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.

"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.

()

இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.

பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)

இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

(இது ஒரு மீள் பதிவு) image courtesy : Bharat KV's photostream

நன்றி: சுஜாதா தேசிகன்.

மற்ற நண்பர்களின் அனுபவங்களை வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்:


 சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

எழுது... எழுது...

 suresh kannan

Saturday, February 13, 2010

எழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலி

பிடித்தமான எழுத்தாளர் இறந்துவிடும் போது அவரை இதுவரை சந்தித்திருக்காவிட்டால் கூட நம்முடைய சுற்றங்களில் ஒருவரை இழந்துவிட்ட துக்கத்தையே நாம் அடைகிறோம் என்று தோன்றுகிறது. பலவிதமான எழுத்தாளர்களில் எப்படி ஒருசிலரை குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த எழுத்தாளனின் சிந்தனைகளும் எண்ணங்களும் வாசகனுடனான அதே அலைவரிசையோடு இணைந்து ஒத்துப்போகிற அந்தப் புள்ளிதான் அதனுடைய துவக்கமாக இருக்கக்கூடும்.

ஓர் உதாரணம். நெரிசலான பேருந்தில் பால் வித்தியாசங்களில்லாமல் மனித உடல்களுடன் கரைந்துப் போய் ஆக்டோபஸீக்கு சிக்கன்குனியா வந்த போஸில் எசகுபிசகாக எரிச்சலுடன் நின்று கொண்டிருப்போம் அல்லவா? சினிமா பாடல் காட்சிகளில் வருவது போல் திடீரென்று மற்ற அனைவரும் மறைந்து போய் நாம் மட்டும் காலியான பேருந்தில் அதே போஸில் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நான் நினைத்து நினைத்து சிரிக்கும் என்னுடைய இந்த அபத்தமான நகைச்சுவையை எழில்வரதனின் ஏதோ ஒரு சிறுகதையில் அப்படியே சந்திக்கும் போது எனக்கு எழில்வரதனை அந்தக் கணமே பிடித்துப் போயிற்று. எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் எழில்வரதனும் இயல்பாகவே இணைந்து விட்டார்.


ஜெயந்தனை நான் இணைத்துக் கொண்டதும் இதே மாதிரியான தருணமொன்றில்தான். 'வெள்ளம்' என்றொரு சிறுகதை. காமத்தைப் பற்றின நுட்பமான சித்திரங்களைக் கொண்ட சிறுகதையது. மனைவி ஊருக்குப் போயிருக்கும் ஒரு மதிய வேளையில் மழை பெய்ய ஆரம்பிக்க அதன் தொடர்ச்சியாக பாலுறவு கிளர்ந்த எண்ணங்களுடன் படுத்திருக்கும் ஒருவன், மழைக்கு வந்து ஒதுங்கும் வெவ்வேறு வயதுடைய மூன்று பெண்களைப் பார்க்கும் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் சிறுகதை. அந்தக் கணமே ஜெயந்தனை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அவரது சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடியதில் மிகச் சிரமப்பட்டே அடைய முடிந்தது. திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது ஜெயந்தனின் சிறுகதைத் தொகுதியான 'மனச்சாய்வு' கண்ணில்பட்டது. இன்ப அதிர்ச்சியுடன் அதை எடுக்க முனைவதற்குள் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நபரும் அதே புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அடுத்தவர் தேர்வு செய்திருப்பதை வாங்கத் துடிப்பதுதானே தமிழ் மரபு? அசுவாரசியமாக புரட்டிப் பார்த்து அவர் தூக்கிப் போட்ட அந்த நூலை கைப்பற்றியவுடன்தான் ஆசுவாசமாக இருந்தது. பின்னதான புத்தக கண்காட்சியின் போது அவருடைய மொத்த சிறுகதைகளையும் இரண்டு பாகங்களாக பதிப்பித்திருந்ததை (ராஜராஜன் பதிப்பகம்) கண்டு அவற்றை வாங்கின பிறகுதான் மற்ற சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. (இப்போது வம்சி பதிப்பகம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்).

()

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இலக்கியக்கூட்டம் ஒன்றில் ஜெயந்தனை சந்தித்தேன்.

புகைப்படத்தில் ஏற்கெனவே பார்த்திருந்தபடியால் அவரைப் பார்த்த போது உடனே அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது. இயல்பாகவே எனக்குள்ள கூச்ச சுபாவம் காரணமாக அவரை அணுகி உரையாடுவதற்கு தயக்கமிருந்தாலும் பிடித்த எழுத்தாளர் என்பதால் கூச்சத்தை உதறி பேச ஆரம்பித்தேன். அவரின் சிறுகதையொன்றை சிலாகித்து பேசினதை கேட்டுக் கொண்டார். இன்னொரு  சிறுகதையில் வந்திருந்த சம்பவமொன்று திரைப்படமொன்றில் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களே இந்த உரையாடல் நீடித்தது. பிறகு என்ன நினைத்தாரோ, உரையாடலிலிருந்து திடீரென்று விலகி என்னிடமிருந்து பிய்த்துக் கொண்டு இன்னொருவரிடம் பேச ஆரம்பித்தார். என்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். அப்போது இளைஞன்தானே? ஆத்திரம் பொங்கியது. 'இந்த எழுத்தாள மயிராண்டிகள் எல்லாம் இப்படித்தான்' என்று குரோதமாக எண்ணிக் கொண்டேன். பிறகு அவருடைய சிறுகதைகளை வாசிக்கும் போது 'இன்னாத்த கிழிச்சுட்டான். இந்த மாதிரி ஆயிரம் கதை நான் எழுதுவேன்' என்று நினைத்துக் கொண்டேன். 'ஒரு எழுத்தாளரின் மறுபக்கம்' என்கிறதோர் கட்டுரையை ஜெயந்தனின் பெயர் குறிப்பிடாமல் எழுதி அப்போது உறுப்பினராக இருந்த 'ராயர் காப்பி கிளப்' மடற்குழுமத்தில் இட்டேன்.

இப்போது யோசிக்கையில் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றுகிறது. அப்போது இவை தோன்றாமைக்கு அந்த வயதுக்குரிய நியாயங்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு எழுத்தாளரிடம் ஏற்படும் தனிப்பட்ட கசப்புகள் அவருடைய படைப்புகளுடனான வாசிப்பனுபவத்தை பாதிப்பதின் அபத்தத்தைப் பற்றியும் மேற்சொன்ன  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதுவதை முன்னிட்டு மேலே குறிப்பிட்டிருந்த 'வெள்ளம்' சிறுகதையை தேடி வாசித்தேன். சில கதைகள் அப்போது ஏற்படும் பரவசத்தை சில வருடங்கள் கழித்து ஏற்படுத்துவதில்லை. ஆனால் 'வெள்ளம்' சிறுகதை இப்போதைய வாசிப்பிற்கும் அந்த உணர்ச்சியை பாதுகாப்பாக தருவதில் வெற்றி பெற்றது. 'மனச்சாய்வு' 'அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' 'முனுசாமி' 'ஞானக்கிறுக்கன் கதைகள்' போன்ற சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்புகளாக உடனடி நினைவுக்கு வருகின்றன. தொகுதியை மீள்வாசிப்பு செய்துவிட்டு அவற்றைப் பற்றி எழுத முயல்கிறேன். இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய அவரது எழுத்து எந்தவித அலங்காரமுமில்லாத எளிமையானது. சாவசகாசமாக சம்பவங்களை விவரிப்பது. ஆனால் வாசிப்பின் நிறைவில் வலுவான பாதிப்பை ஏற்படுத்துவது.

ஜெயந்தனுக்கு என்னுடைய அஞ்சலி.

(ஜெயந்தனின் புகைப்படம் தொகுதியின் பின்னட்டையில் இருந்து எடுக்கப்பட்டது).


தொடர்புடைய பதிவுகள்:

தினமணி செய்திக் குறிப்பு

ஜெயந்தனின் சிறுகதையொன்றை வாசிக்க

இன்னொரு வாசக அனுபவமும் அஞ்சலியும்

ஜெயமோகனின் அஞ்சலி

ஜெயந்தனின் குறுநாவல் குறித்தான விமர்சனம்

suresh kannan

Friday, February 27, 2009

எழுது... எழுது...

....வழக்கம் போல் எழுத்தாளர் வாக்கியம். இந்த முறை ஜான் ஹெர்ஸே..

.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல - திரும்பத் திரும்ப எழுதுவது - மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது.... மீண்டும் எழுதுவது

*****************************

- சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985


suresh kannan

Saturday, January 31, 2009

அஞ்சலி : நாகேஷ்

Photobucket


'தமிழ்த் திரையுலகில் இருக்கிற அளவிற்கு அதிகமாக மற்ற மாநிலங்களில் நகைச்சுவை நடிகர்கள் இல்லை' என்று ஒரு முறை குறிப்பிட்டார் இயக்குநர் மகேந்திரன். உண்மைதான். சம்பிரதாயமாக என்.எஸ்.கிருஷ்ணன் முதற்கொண்டு இப்போதைய சந்தானம் வரை பட்டியலிட்டால் அது ஒர் நீளமான பட்டியலாக இருக்கும். தமிழர்களிடம் உள்ள ஆழமான பிரத்யேக நகைச்சுவை உணர்ச்சியே இதற்கு காரணம். (என்ன, அவர்களின் புனித பிம்பங்களின் அருகே மாத்திரம் போகக்கூடாது) தொலைக்காட்சி ஊடகங்கள் 24 மணி நேரமும் வாரியிறைத்துக் கொண்டிருக்கும் நகைச்சுவைக் காட்சிகளே இதற்கு சாட்சி.

அப்படியான நகைச்சுவை நடிகர்களி்ல் என்னை பிரதானமாக கவர்ந்தவர் நாகேஷ். நகைச்சுவை நடிப்பிற்கு மிகவும் அவசியமான 'டைமிங்'கில் அதிகில்லாடி. 'நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியா' என்ற வசனம் இன்றளவும் பிரபலம். 'மிமிக்ரி' நடிகர்கள் அதிகம் உபயோகிக்காதது இவர் குரலாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு நகல் செய்ய முடியாத சாதாரண ஒரு குரலை வைத்துக் கொண்டு இவர் திரையில் புரிந்திருக்கும் வர்ண ஜாலங்கள் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

தந்திரமும் நகைச்சுவையும் கலந்ததொரு பாத்திரமான 'வைத்தி'யை (தில்லானா மோகனாம்பாள்) நாகேஷைத் தவிர வேறு யாராவது இவ்வளவு திறமையாக நடித்திருக்க முடியாது என்றே நான் தீர்மானமாக நம்புகிறேன். slapstick நகைச்சுவையிலும் திறமையான இவருடன் ஒப்பிடக்கூடியவர் சந்திரபாபு மட்டுமே. பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான norman wisdom-மின் பாதிப்பு நாகேஷீக்கு பெருமளவில் இருந்தது.

பின்புறத்தில் எட்டி உதைப்பது, வசவு வார்த்தைகளில் அர்ச்சிப்பது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது போன்ற எந்தவித கோணங்கித்தனங்களுமில்லாமல் தரமான நகைச்சுவையை வழங்கியவர்களில் நாகேஷ் பிரதானமானவர். நகைச்சுவையைத் தாண்டி குணச்சித்திர பாத்திரங்களில் இவரை பாலச்சந்தர் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தாலும் கமலின் 'நம்மவர்' திரைப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அசாத்தியமானது. 'கல்கி' வாரஇதழில் தொடராக வந்த இவர் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் 24 மணி நேரமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உடல்நலம் பாதிக்கும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். தங்களுக்கென பிரத்யேக ரசிகர்களை வைத்திருந்தாலும் எம்.ஜி.ஆரும்,சிவாஜியும் கூட இவரை தவிர்க்க இயலவில்லை.

நாகேஷின் மறைவு உண்மையாகவே வருத்தத்தை ஏற்படுத்தியது. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி.

suresh kannan