Friday, April 22, 2011

அஞ்சலி : ர.சு. நல்லபெருமாள்


 பைண்டிங் செய்யப்பட்டிருந்த அந்த தொடர்கதைப் புத்தகம் எப்படி, யாரால் எங்கள் வீட்டிற்கு வந்தது என்பதும் பின்பு எப்படி மறைந்து போனது என்பதும் என்று எதையுமே நான் அறிந்திருக்கவில்லை அல்லது நினைவில் இல்லை. ஆனால் அம்புலிமாமா, ராணி, கல்கண்டு, குமுதம் வகையறா துணுக்குகளைத் தாண்டி சுமார் 15  வயதில் நான் வாசித்த முதல் முழு புதினம் என்கிற வகையில் அந்த நூல் என் நினைவில் இன்னமும் பசுமையாகவே உள்ளது. ரங்கமணி, திரிவேணி, தீட்சிதர், வெங்கி, சர்தார், கமலா... என்று அந்தப் புதினத்தின் பாத்திரங்கள் இன்னமும் என் மூளையின் நியூரான்களில் பத்திரமாக உள்ளனர்.

கல்கியில் தொடராக வந்து, அந்த நாவல் போட்டியில் முதல் பரிசை வென்ற 'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் வார சேகரிப்பு தொகுப்பு நூல்தான் அது.

சுதந்திரப் போராட்ட காலத்தின் பின்னணியில் இயங்கும் அந்தப் புதினத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் வன்முறையில் தம் உறவுகளை இழந்த ரங்கமணி, அவர்களைப் பழிவாங்க வன்முறையை கையாள முயல்வான். காந்தியவாதியான திரிவேணி மெல்ல மெல்ல அவனின் வன்முறை எண்ணங்களை திசைமாற்ற முயல்வாள். இறுதியில் அவளின் மரணத்தில்தான் அது சாத்தியமாகும். இடையில் ரங்கமணி, திரிவேணி, முன்னாள் காதலி கமலா என்கிற முக்கோணக் காதல்  நிகழ்வுகளுடன் புதினம் சுவாரசியமாக இயங்கும். இலட்சியவாத எழுத்து வகைமையில் இந்த நாவல் இயங்கினாலும் ஒரு சுவாரசியமான திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டுக்குண்டான கச்சிதங்களுடனும் சுவாரசியங்களுடனும் அமைந்திருந்த காரணத்தினால் பல முறை இந்தப் புதினத்தை வாசித்திருக்கிறேன். (இதையே நடிகர் கமலும் பல முறை வாசித்திருக்கலாம் என்பது 'ஹேராம்' வெளிவந்த போது உணர முடிந்தது. ரங்கமணி காந்தியைக் கொல்லப் போகும் சம்பவங்கள் முதற்கொண்டு அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் இரண்டு பெண்கள் என்பது வரை புதினத்தின் பல பகுதிகள் திரைப்படத்தோடு ஒத்துப் போகும். இதையொட்டி புதினத்தின் ஆசிரியரே எழுப்பிய ஆட்சேபணையை கமல் ஏற்றுக் கொண்டாரா என்பது தெரியவில்லை).

கல்லுக்குள் ஈரம் ஏற்படுத்திய சுவாரசியமே பிற்பாடு என் வாசிப்பு ஆர்வம் கூடியதற்கு ஒரு வித்தாக அமைந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அதுவே இந்தப் புதினத்தின் மீது காரணம் சொல்ல முடியாத ஒரு பிரியத்தை ஏற்படுத்துகிறது. பிறகு இந்த ஆசிரியர் எழுதிய மற்ற நாவல்களை  தேடினேன். 'மாயமான்கள்' என்று ஞாபகம். சாமியார்களின் போலித்தனங்களைப் பற்றியது. அவை போலியானவை என்றாலும் மக்களின் நம்பிக்கையும் அது தரும் நிவாரணமும் காரணமாக இந்த போலித்தனங்களும் சமூகத்தின் ஒரு தேவையான பகுதிதான் என்பது போல் அந்த புதினத்தின் சாரம் அமைந்திருக்கும்.

'கல்லுக்குள் ஈரம்' புதினத்தின் ஆசிரியரான ர.சு.நல்லபெருமாள் மறைந்த செய்தியை அறிந்த போது தன்னியல்பாக வருத்தம் எழுந்தது. அவருக்கு என் அஞ்சலி. suresh kannan

11 comments:

நெல்லை கபே said...

கமல் விகடனுக்கு எழுதிய பதிலில் இதை மறுத்த ஞாபகம் இருக்கிறது...பெருமாள் பொத்தாம் பொதுவாக நான் காப்பி அடித்ததாக குற்றம் சாட்டுகிறார் என்று சொன்னார்...

WordsBeyondBorders said...

இவருடைய 'மயக்கங்கள்' பல வருஷம் முன்னாடி நூலகத்தில் படிச்சிருக்கேன். மாறுபட்ட கோணம்/பார்வை இருந்தது அதுல. (பாடல் பெற்ற தலங்கள் பற்றி அவர் எழுதி இருந்தது இன்னும் நினைவில் உள்ளது, அவருடைய அரசியல் பார்வையும் அந்த பள்ளி பருவத்தில் புதுசா இருந்தது எனக்கு ). அவருடைய மத்த புத்தகங்கள் தேடி நூலகத்தில் வேற ஒன்னும் கிடைக்கல.
அஜய்

Yaathoramani.blogspot.com said...

அதேபோல
ர.சு நல்லபெருமாள் அவர்களின்
கேட்டதெல்லாம் போதும் என்கிற
புத்தகமும் அனைவரும் அவசியம்
படிக்க வேண்டிய ஒன்று

இராஜராஜேஸ்வரி said...

ர.சு. நல்லபெருமாள்" -அவருக்கு என் அஞ்சலி.

PRABHU RAJADURAI said...

ஆனால் பாரதிராஜா, தனது படத்தலைப்புக்கு இந்த நாவலின் தலைப்பை பயன்படுத்திக் கொண்டேன் என்று ஏற்றுக் கொண்டார். ர.சு.நல்லபெருமாள் அவர்களின் கதைகளை படித்தது இல்லை என்றாலும், அவருடன் எனக்கு சில தொடர்புகள் உண்டு. அவரது மகள் மரத்தடி இணையக்குழு நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்கள். அவரது கணவர் எனது நெருங்கிய பள்ளிக்கூட கால நண்பர். முக்கியமாக, நான் பிறந்து ஐந்து வயது வரை வளர்ந்த வீட்டிற்கு எதிர்ப்புறம் சில வீடுகள் தள்ளிதான் ர.சு.நல்லபெருமாள் அவர்களின் வீடு! பாளையங்கோட்டையில் மேடை போலீஸ் ஸ்டேசன் தெரு என்பார்கள்...(ரெயினீஸ் ஐயர் தெருவிற்கு பக்கத்து தெருதான்) யார் கண்டது, சிறுவயதில் என்னை தூக்கி அவர் கொஞ்சியிருக்கலாம்! அவர் வழக்குரைஞராக பணியாற்றியவர்.

ganesh said...

அது 'நியூட்ரான்' அல்ல நன்பரே. 'நியூரான்'

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி

//அவரது மகள் மரத்தடி இணையக்குழு நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்கள்.//

பிரபுராஜதுரை:

நினைவிருக்கிறது. அலர்மேல்மங்கை

//'நியூட்ரான்' அல்ல//

சுட்டியதற்கு நன்றி நண்பரே. திருத்தி விட்டேன்.

PRABHU RAJADURAI said...

தற்பொழுதுதான், தினமணி செய்தியில் கிடைத்த தொலைபேசி எண்ணை வைத்து அலர்மேலுமங்கை அவர்களுடன் பேசினேன். ர.சு.நல்லபெருமாள் அவர்களை நினைவில் கொண்டு ஜெயமோகன், சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் இணையத்தில் எழுதியது குறித்து அவர்களுக்கு மிகுந்த ஆறுதல். அனைவருக்கும் அவர்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்

Rathnavel Natarajan said...

ர.சு.நல்லபெருமாள் அவர்களின் 'போராட்டங்கள்' 'கல்லுக்குள் ஈரம்' படித்திருக்கிறேன்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

Ilan said...

ப்ரும்ம ரகசியம் படித்திருக்கிறேன் . அருமையான இந்திய தத்துவ மரபின் அனைத்து சாரங்களையும் தெரிந்துகொள்ள உதவும் .

Balu Nallaperumal said...

நல்லபெருமாளின் நூல்கள் வானதி பதிப்பகத்தில் (தி. நகர், சென்னை) கிடைக்கும். போராட்டங்கள் நாவல் இப்போது குருஷேத்ரம் என்ற பெயரில் கிடைக்கிறது.