Thursday, December 28, 2017

மாற்றுத் திறனாளிகளுக்கு அனுதாபம் காட்டாதீர்கள் - The Intouchables
நீங்கள் ஒரு நெரிசலான பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு நிறுத்தத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் அதில் ஏறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உடனே என்ன செய்வீர்கள்? வரவழைக்கப்பட்ட பதட்டத்துடன் எழுந்து மற்றவர்களை ஒதுக்கி அவரை கூவி அழைத்து உங்கள் இருக்கையில் அமரச் செய்வீர்கள் இல்லையா?

இதன் மூலம் 'நான் ஒரு நல்லவன்;  மனிதாபிமானி' என்கிற எண்ணம் உங்கள் மனதினுள் பரவும். அந்த இன்பத்தை நன்கு அனுபவிப்பீர்கள், இல்லையா?

ஒருவகையில் நீங்கள் செய்தது சரியென்றாலும் இன்னொரு வகையில் அது முறையற்ற காரியம் என்பதை அறிவீர்களா? அது ஏன் என்பதை அறிய நீங்கள் The Intouchables என்கிற 2011-ல் வெளிவந்த பிரெஞ்சு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

ஒரு கூட்டத்தில்  மாற்றுத்திறனாளிக்கு அனுதாபம் காட்டுவதின் மூலம் அவரை நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அவருக்கும் மற்றவர்களுக்கும் மீண்டுமொருமுறை நினைவுப்படுத்துகிறீர்கள், சுட்டிக் காட்டுகிறீர்கள். அத்தகைய 'மனிதாபிமானத்தை' பொதுவாக மாற்றுத் திறனாளிகள் விரும்புவதில்லை. தங்கள் மீது காட்டப்படும்  இப்படிப்பட்ட இரக்கத்தை அவர்கள் உள்ளுற வெறுக்கிறார்கள். அந்தக் கருணையுணர்வு அவர்களின் உடற்குறையை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது என்பதால்.

மாறாக தான் ஒரு மாற்றுத் திறனாளி என்கிற நினைவையே எழச்செய்யாத, அது குறித்த எந்தவொரு சிறப்புக் கவனமும்  செலுத்தாத போலியான அனுதாபத்தைக் காட்டாமல்  இயல்பான தோழமையுடன் பழகும் நண்பர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தச்  செய்தி இத்திரைப்படத்தில் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளது.

***

உயர்ந்த ரக கார் ஒன்று அதிவேகமாக சாலையில் செல்கிறது. கருப்பின இளைஞன் ஒருவன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் அமர்ந்திருப்பவர், 'இந்தப் போட்டியில் நீ தோற்று விடுவாய் என நினைக்கிறேன்' என்கிறார். அவன் உடனே காரை இன்னமும் வேகமாக செலுத்துகிறான். காவல்துறையினர் துரத்துகிறார்கள். இன்னமும் வேகம். ஒரு கட்டத்தில் மடக்கி அவன் கழுத்தின் மீது ஒன்று போட்டு விசாரிக்கிறார்கள். அச்சமயத்தில் அந்த இன்னொரு நபர் வலிப்பு நோய் வந்தவர் போல் நடிக்கிறார்.

'முட்டாள்களே, உங்களுக்குப் புரியவில்லையா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத்தான் இத்தனை வேகம். சரி. எனக்கென்ன?' என்று ஒதுங்கி நிற்கிறான் இளைஞன். சற்று பதறும் காவல்துறை, கார் செல்ல அனுமதி தருகிறது. கூடுதலாக மருத்துவனை வரை பாதுகாப்பாக வருகிறது. இளைஞன் வெற்றிகரமாக சிரிக்கிறான். அது அவன் பந்தயத்தில் 200 யூரோக்கள் ஜெயித்து விட்டதற்கான அடையாளம்.

இந்த 'பிளாஷ்பேக்' உடன் படம் துவங்குகிறது. இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறது அல்லவா?

***

நடுத்தர வயதுள்ள பிலிப் ஒரு பணக்காரர். எந்த அளவிற்கு பணக்காரர் என்றால் தான் ரசிக்கும் ஓர் ஓவியத்தை நாற்பதாயிரம் யூரோக்கள் அசால்ட்டாக தந்து வாங்குமளவிற்கு.

இவர் முன்னர் ஒரு சாகச விளையாட்டில் ஈடுபடும் போது ஏற்படுகிற விபத்தில் பாதிக்கப்பட்டு  கழுத்திற்கு கீழே உள்ள உறுப்புகளில் எந்தவொரு உணர்வும் அல்லாதவராாகி விடுகிறார்.  மற்றவர்களின் உதவி அல்லாமல் அவர்கள் எதையும் செய்ய முடியாது.  மருத்துவ மொழியில் இதை  quadriplegia என்கிறார்கள். இவருக்கு ஓர் ஆண் உதவியாளர் தேவை என்பதால் அதற்கான இண்டர்வியூ நடக்கிறது. அதற்கு வருகிறான் டிரிஸ்  என்கிற இளைஞன்.

அவனுடைய நோக்கம் பணியில் சேர்வதல்ல.  மேற்கத்திய நாடுகளில் பணியில் இல்லாத இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை தரும். அதைப் பெற வேண்டுமானால் பணிகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்காத நிலை இருந்தால்தான் முடியும். எனவே திரிஸ், சும்மா லுல்லுவாயாக ..இம்மாதிரியான இண்டர்வியூகளுக்கு வருவான், அங்கு பணி மறுக்கப்பட்டதற்கான சான்றிதழை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு அரசின் உதவித் தொகையை பெற்றுக் கொண்டு உல்லாசமாக இருப்பான். எனவே அந்த நோக்கத்துடன்தான் இந்த இண்டர்வியூவிற்கும் வருகிறான்.

டிரிஸ் ஓர் உற்சாகப் பேர்வழி. அவனுடைய குறும்புகள் காரணமாக அவன் இருக்கும் இடமெல்லாம் துள்ளலான மூடுக்கு மாறி விடும். இறுக்கமான மனோபாவமுடைய பிலிப்பேவிற்கு இவனுடைய குறும்பு உள்ளுற பிடிக்கிறது. எனவே இவனை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துகிறார்.

அதுவரை பிலிப்பை கையாண்டவர்கள் எல்லாம்  அவருடைய உடற்குறை காரணமாகவே அவரை ஒரு கண்ணாடிப் பாத்திரம் போல பத்திரமாக கையாள்கிறார்கள். அதன் மூலம் அவரது குறையை அவர்கள் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் செல்வந்தர் என்கிற காரணமாகவே அவரை போலியான மரியாதையுடன் நடத்துகிறார்கள்.

ஆனால் உற்சாகப் பேர்வழியான டிரிஸ், அவரை ஒரு  மாற்றுத்திறனாளியாகவே கருதுவதில்லை. அவருக்கு கழுத்தின் கீழே உண்மையிலேயே உணர்ச்சியில்லையா என்பதை அறிய அவர் கவனிக்காத சமயத்தில் அவருடைய காலின் மீது கொதிக்கும் நீரை ஊற்றி விளையாட்டாக சோதித்துப் பார்க்கிறான். அவருக்கு போன் வந்தால் வேறு ஏதோ நினைவில் 'உங்களுக்கு போன்' என்று ரீசிவரை தூரத்திலிருந்து நீட்டுகிறான். அவரை ஓரு சாதாரண நபரைப் போலவே கையாள்கிறான். இந்த மாற்று அணுகுமுறையே பிலிப்பிற்கு  மிகவும் பிடித்துப் போகிறது. அவனுடைய அதிக உற்சாகத்தின் மூலம் சுதந்திரக்காற்றை சுவாசிப்பது போல இருக்கிறது அவருக்கு.

இருவரின் ரசனையுமே வேறு வேறாக இருக்கிறது. பிலிப் ஓபரா நாடகத்தை ரசித்துப் பார்க்கிறார் என்றால் டிரிஸ், "தூ.. இந்தக் கருமத்திற்காக நூறு டாலர்?" என்று பரிகசித்து சிரிக்கிறான். இவர் உயர்ரசனையுடனான மேற்கத்திய சங்கீதத்தை ரசிக்கிறார் என்றால் டிரிஸ்ஸோ அதிரடியான, நடனமாட வைக்கும் இசையை விரும்புகிறான். ஆனால் இந்த எதிரெதிர் துருவங்களே ஒன்றையொன்று ஈர்த்து நெருங்குகின்றன. பிலிப், இலக்கியத்தரமான எழுத்துக்களின் வடிவில் கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம், டிரிஸ் அதிரடியாக தொலைபேசியில் அழைத்து அவரிடம் பேச வைக்கிறான். அவன்  செய்யும் எல்லாமே பிலிப்பிற்கு பிடித்துப் போகிறது. மிக முக்கியமாக, அவர் ஒரு வீல்சேர் ஆசாமி என்கிற உணர்வையே மறக்குமளவிற்கு டிரிஸ்ஸின் உற்சாக வெள்ளம் அமைகிறது.

இருவருமே தங்களின் அந்தரங்கமான சோகங்களைப் பரிமாறி இன்னமும் நெருக்கமாகின்றனர். ஆனால் இடையில் டிரிஸ் பணியிலிருந்து விலக நேர்கிறது. அவனுடைய குடும்பத்தில் ஏற்படும் சில சிக்கல்களைக் களைய அவன் சென்றுதான் ஆக வேண்டும். உற்சாகப் புயல் போல் அங்கிருந்து விலகுகிறான் டிரிஸ். அந்தப் பிரிவு பிலிப்பை உலுக்கி விடுகிறது. வேறு எந்த பணியாளரின் சேவையையும் அவர் விரும்புவதில்லை. அவர்களை கத்தி துரத்தி விடுகிறார். காதல் சோகம் போல தாடி வேறு வளர்க்கத் துவங்கி விடுகிறார். இந்தக் கொடுமையை சகிக்காத பிலிப்பின் பெண் செயலாளர், திரிஸ்ஸிற்கு இதை தெரிவித்து அவனை வரச் சொல்கிறார்.

"என்ன தலைவா,.  இது.. ஏன் இந்தக் கோலம்?" என்று கிண்டலடிக்கும் டிரிஸ், சாகச விளையாட்டில் ஈடுபாடுள்ள அவரை காரில் வேகமாக அழைத்துச் செல்கிறான். அதுதான் படத்தின் துவக்கக் காட்சி. ஒரு மதிய விருந்தில் பிலிப் கடிதம் மூலம் மட்டுமே நெடுங்காலமாக தொடர்பு கொண்டிருக்கும் பெண் நண்பியை அவருக்கு இன்ப அதிர்ச்சியாக நேரில் அறிமுகம் செய்து விட்டு தூரத்திலிருந்து டிரிஸ் குறும்பாக கையசைப்பதுடன் படம் நிறைகிறது. உற்சாக இளைஞன் டிரிஸ்ஸாக, Omar Sy ரகளையாக நடித்திருக்கிறார். ஆனால் பிலிப்பாக நடித்திருக்கும் François Cluzet உண்மையான சவாலை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார். மற்ற உடல் உறுப்புகளை துளியும் அசைக்காமல் கழுத்தை மட்டுமே உபயோகித்து படம் முழுவதும் நடிக்க வேண்டும். திரிஸ்ஸின் குறும்புகளைப் பார்த்து இவர் ரசித்து கண் மூடி சிரிக்கும் காட்சிகள் ரசனையாக உள்ளன. Olivier Nakache  மற்றும் Éric Toledano என்கிற இரட்டை இயக்குநர்கள் இத்திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கின்றன. பிரான்ஸ் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனையைப் புரிந்த திரைப்படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த திரைப்படம்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் இறுதியில் உண்மையான பிலிப்பேவையும் திரிஸ்ஸையும் காண்பிக்கிறார்கள்.

***

எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் ஒரு சமயத்தில் ஆரோக்கியம் தொடர்பாக எதையோ உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் வீல்சேரில் அமர்ந்திருக்கும் மனுஷ்யபுத்திரனிடம் சாரு தன்னிச்சையாக சொல்லும் பரிந்துரை இது. "நீங்கள் ஏன் வாக்கிங் போகக்கூடாது?"

ஒருவரின்  உடற்குறையை மனதிலிருந்து சுத்தமாக துடைத்து விட்டுஅவரை  தன்னைப் போலவே ஒரு சகஜீவியாக இயல்பாக கருதுபவர்களால்தான் இப்படி கேட்க முடியும்.

அதனால்தான் சொல்கிறேன்; மாற்றுத்திறனாளிகளிடம் அனுதாபம் காட்டாதீர்கள். அது சார்ந்த போலி உணர்வுகளை தூக்கியெறிந்து விட்டு அவரை இயல்பானதொரு நபராக மதியுங்கள்; அவரையும் அவ்வாறே உணரச் செய்யுங்கள்.

அது சரி. இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டவுடன், சமீபத்தில் இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறதா? ஆம். தமிழில் இது, நாகார்ஜூனா, கார்த்தி நடித்து 'தோழா' என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது. 

suresh kannan

Wednesday, December 27, 2017

‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)


நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்திற்கு அழிவேயில்லை. இந்தப் பிரபஞ்சம் உருவான முதல் கணத்திலிருந்தே இந்த தர்மயுத்தம் துவங்கியிருக்கக்கூடும். தேவனின் கருணைக்கும் சாத்தானின் வசீகரத்திற்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய திரைப்படம் இது. அறம் ஒருபோதும் தோற்பதில்லை என்கிற நீதியை வலுவாக சித்தரிக்கும் படைப்பு. மிக நுட்பமான திரைக்கதையைக் கொண்டது.

**

அதுவொரு புனர்வாழ்வு மையம். சிறையில் இருந்து பரோலில் வரும் கொடூரமான குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது அதன் நோக்கம். அந்த மையத்தின் தலைவரும் மதகுருவுமான இவான், இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர். ‘சாத்தானின் சோதனையால்தான் நமக்கு தீமைகள் நேர்கின்றன. அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதில் தீவிரமான நம்பிக்கையுடையவர்.

நவ – நாஜி குழுவைச் சேர்ந்தவனான ஆதாம், சிறையில் இருந்து பரோலில் வெளியாகி அந்த இடத்திற்கு வருகிறான். சக மனிதர்கள் மீது இவான் காட்டும் அன்பும் பொறுமையும் ஆதாமை குழப்பத்தில் ஆழத்துகின்றன. ‘இம்பூட்டு நல்லவனா ஒருத்தன் இருக்கவே முடியாதே’ என்று சந்தேகப்படுகிறான். இவானின் நற்பண்புகள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துகின்றன. எனவே இவானின் மீது கடுமையான கோபம் கொள்கிறான்.

முன்னாள் குற்றவாளிகளான காலித்தும், குன்னாரும் இவானின் பேச்சைக் கேட்டு கட்டின பசுமாடு மாதிரி இருப்பது ஆதாமை மேலும் குழம்ப வைக்கிறது. “இங்கு வந்ததற்காக நீ ஏதாவது உருப்படியான வேலையைச் செய்ய வேண்டும்” என்கிறார் இவான். ‘சர்ச் வாசலில் இருக்கும் ஆப்பிள் மரத்திலுள்ள பழங்களை வைத்து கேக் செய்கிறேன்” என்று பதிலளிக்கிறான் ஆதாம். இந்தப் போட்டியில் வென்று இவானின் முகத்தில் கரி்யைப் பூச வேண்டும் என்கிற வெறி எழுகிறது ஆதாமிற்கு.

ஆனால் ஆப்பிள் மரத்தை பாதுகாப்பது அத்தனை எளிமையான வேலையாக இல்லை. பறவைகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்று பழங்களை சேதப்படுத்துகின்றன. என்ன முயன்றும் அவற்றைத் துரத்த முடியவில்லை. ‘சாத்தானின் சோதனை இது” என்கிறார் இவான். ஆதாம் அதை ஏற்கவில்லை. தன் கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியைக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் காலித் பறவைகளைச் சுட்டுக் கொல்கிறான்.

இவானின் அன்பான நடவடிக்கைகள் ஆதாமை எரிச்சல்பட வைக்கின்றன. அவருடைய நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ஒரு விவாதத்தின் போது இவானை கடுமையாகத் தாக்குகிறான் ஆதாம். ஆனால் சிறிது நேரம் கழித்து ரத்தக் களறியாக எழுந்து வரும் இவான், எதுவுமே நடக்காதது போல ஆதாம் உள்ளிட்ட மற்றவர்களிடம் உரையாடுகிறார். இதைக் கண்டு ஆதாமிற்கு வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகிறது.

இவானுடைய பின்னணித் தகவல்களை அருகிலுள்ள ஒரு மருத்துவரின் மூலம் ஆதாம் அறிகிறான். மருத்துவருக்கும் இவானின் மீது இதே மாதிரியான எரிச்சல் உள்ளதால் ஆதாமைத் தூண்டி விடுவது போல தகவல்களைச் சொல்கிறார்.  இவானுடைய இளமைப்பருவம் இன்பகரமானதாக இல்லை. மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவருடைய மாற்றுத்திறனாளி மகன் சக்கர நாற்காலியில் உறைந்து கிடக்கிறான்.

இவானால் இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாகவும் அன்பாகவும் இருக்க முடிகிறது என்கிற கேள்வி ஆதாமைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உடல்ரீதியாக சித்திரவதை செய்தாலும் இவானை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் உளரீதியான தாக்குதலைத் துவங்குகிறான் ஆதாம். “கடவுள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதெல்லாம் பொய். அவர் உன்னை பயங்கரமாக வெறுக்கிறார். அதனால்தான் உனக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன” என்று தொடர்ந்து கூறுகிறான்.

ஒரு கட்டத்தில் இவான் இதை நம்ப ஆரம்பிக்கிறார். அவருடைய காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதும் மனம் இளகாத ஆதாம் அவரை கடுமையாக தாக்குகிறான். இவானின் மனம் கலைவது சக குற்றவாளிகளையும் பாதிக்கிறது. அதுவரை இயல்பாக இருந்த அவர்கள் தங்களின் குற்றவுலகிற்கு மறுபடியும் திரும்புகிறார்கள். காலித் ஒரு பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்க ஆவேசமாக கிளம்புகிறான். அதுவரை இவனிடம் பேசிக் கொண்டிருந்த குன்னார் மெளனமாகிறான்.

இந்த மாற்றங்கள் ஆதாமைக் குழப்புகின்றன. இவானின் அன்பும் கருணையும் உண்மையாகவே மனிதர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. இவானின் மீது மெல்ல இரக்கம் சுரக்கிறது. அவரைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆனால் மருத்துவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறார். ‘இவானுக்கு பெரிய அளவில் மூளைக்கட்டி இருக்கிறது. அதனால்தான் காதில் ரத்தம் வருகிறது. இன்னமும் சில நாட்களில் அவர் இறந்து விடுவார்”.

காலித்திற்கும் ஆதாமின் கூட்டாளிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. அவர்களை துப்பாக்கியால் காயப்படுத்துகிறான் காலித். எனவே அவர்கள் ஆயுதங்களுடனும் ஆட்களுடனும் திரும்ப வருகிறார்கள். ஆதாம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். தலையில் கட்டோடு அங்கு வரும் இவான் அவர்களைத் தடுக்க முயல, குண்டு அவர் தலையில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார் இவான்.

இவான் இறப்பதற்குள் ஆப்பிள் கேக்கை செய்து அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக சேதமடைந்தது போக மீதமிருக்கும் ஒரேயொரு ஆப்பிளில் கேக் செய்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்கிறான் ஆதாம். இவானின் படுக்கை காலியாக இருக்கிறது. மருத்துவர் ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார். “குண்டு பாய்ந்ததில் தலையில் இருந்த புற்றுநோய் குணமாகி விட்டது. மருத்துவ அதிசயம் இது”

மருத்துவனையின் வெளியே அமர்ந்திருக்கும் இவானுடன் இணைந்து கேக்கை உண்கிறான் ஆதாம். சில மாதங்கள் கடக்கின்றன. பரோலில் இருந்து இரண்டு புதிய குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள். கோபத்துடன் இவானைத் தாக்குகிறார்கள். இவானைப் போலவே ஆதாமும் அவர்களைப் பொறுமையாக கையாள்வதோடு படம் நிறைகிறது. ஆம். இவான், ஆதாமை தன்னைப் போலவே மாற்றி விட்டார்.

இவான், ஆதாம், ஆப்பிள், கிறித்துவ தேவாலயம், Book of job எனும் பழைய ஏற்பாட்டு நூல்.. என்று படம் முழுவதும் விவிலிய உருவகங்கள் நிறைந்திருக்கின்றன. தேவாலயத்தின் மணி அடிக்கும் போதெல்லாம் அதன் அதிர்வு காரணமாக ஆதாமின் அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லரின் படம் நழுவி விழுவது நல்ல குறியீடு.

இவானாக Mads Mikkelsen-ம் ஆதாமாக Ulrich Thomsen-ம் அருமையாக நடித்திருக்கிறார்கள். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Anders Thomas Jensen.suresh kannan

Tuesday, December 26, 2017

American Made (2017) - ‘ஆகாயக் கோட்டை'


Barry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்க்கை, சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டு வீழ்வதை திகிலும் பரபரப்புமாக விவரிக்கிறது.  சர்ரென்று உயரே பறந்து உற்சாகமாக பயணித்து தடாலென்று கீழே விழும் ஒரு விமானத்தைப் போலவே அவருடைய வாழ்க்கையும் அமைந்தது பரிதாபமான தற்செயல்.

**

வருடம் 1970. பேரி சீல் ஒரு திறமையான விமானி. குறைந்த வயதிலேயே கமாண்ட் பைலட் ஆன அளவிற்கான திறமை. விமான நிறுவனம் தரும் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே பயணத்தின் இடையே சிகரெட் பெட்டிகளை கடத்தும் சிறிய குற்றத்தோடு துவங்குகிறது அவனுடைய சாகச வாழ்க்கை.

CIA அதிகாரி ஒருவர் அவனை அணுகுகிறார். “சின்ன விஷயங்களுக்காக உன் திறமையை வீணாக்காதே. நான் சொல்கிறபடி செய். நிறைய பணம்” என்கிறார். “என்ன வேலை?”.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் கம்னியூஸ்ட் படைகளுக்கு ரஷ்யா உதவி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கா இதை தடுக்க விரும்பியது. பேரி சீல் ஒரு சிறிய விமானத்தின் மூலம் அந்தப் பகுதிகளில் தாழ்வாக பறந்து புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இன்னொரு வகையில் அதற்குப் பெயர் உளவு பார்த்தல்.

கிடைக்கப் போகும் ஆதாயங்களுக்காக மிக ஆபத்தான இந்தப் பணியை பேரி ஒப்புக் கொள்கிறான். விமான நிறுவன பணியை தூக்கிப் போட்டு விட்டு இதில் இறங்குகிறான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற விஷயத்தை அநாயசமாக கையாள்கிறான். இவனது திறமையான பணியைக் கண்டு CIA உற்சாகமாகிறது. அடுத்த பணியைத் தருகிறது. எதிரிப் பிரதேசங்களில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் பணத்தைத் தந்து விட்டு ரகசியங்களைப் பெற்று வருவது. கூரியர் வேலை.

இந்தச் சமயத்தில்தான் இன்னொரு அதிர்ஷ்டம் அல்லது ஆபத்து பேரியைத் தேடி வருகிறது. கொலம்பியாவில் உள்ள மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் குழு இவனைத் தொடர்பு கொள்கிறது. “தோ… பாருப்பா.. ப்ளைட்ல சும்மாதானே திரும்பிப் போறே..  நாங்க தர்ற பாக்கெட்டுக்களை அமெரிக்காவிற்கு எடுத்துட்டுப் போ”. (இந்தக் குழுவின் தலைவனான பாப்லோ எஸ்கோபர் பற்றி தனியான திரைப்படமே இருக்கிறது).

முதலாளிக்குத் தெரியாமல் ரிடர்ன் டிரிப்பில் தக்காளி மூட்டைகளை ஏற்றிக் கொள்ளும் லாரி டிரைவர் மாதிரி, இதற்கும் பாரி சந்தோஷமாக ஒப்புக் கொள்கிறான். அவனே எதிர்பாராத அளவிற்கு பணம் கொட்டுகிறது. CIA இதைக் கண்டும் காணாமலும் இருந்தாலும் போதைமருந்து கடத்தலை கண்காணிக்கும் அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகிறார்கள். CIA அதிகாரியே இந்த தகவலைத் தருகிறார். “நான் சொல்கிற இடத்திற்கு குடும்பத்தோடு தப்பி ஓடு”.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு ‘மேனா’ என்கிற சிறிய மாகாணத்திற்கு விரைகிறான் பாரி. அங்குள்ள ஏர்போர்ட்டையே அவனுக்குத் தரும் CIA அடுத்து வேறு ஒரு பணியைத் தருகிறது. இந்த முறை துப்பாக்கிகள். கம்யூனிஸ்ட்களை எதிர்க்கும் வலதுசாரி குழுவொன்றிற்கு சப்ளை செய்ய வேண்டும். செய்கிறான். அடுத்து ஆட்கள். அதையும் உற்சாகமாக செய்கிறான் பேரி.

ஒரு புறம் CIA, மறுபுறம் போதையுலகம் என்று இருபுறமும் பணம் கொட்டுகிறது. வீட்டில் புதைத்து வைக்க இடமில்லாத அளவிற்கு பணம். வங்கியில் கொண்டு போய்க் கொட்டுகிறான். இவனுடைய பணத்தை வைப்பதற்காகவே தனி காப்பறை அமைக்கிறார்கள். அந்தளவிற்கு பணம்.

ஏறத்தாழ பணத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பேரியின் வாழ்க்கையில் மச்சானின் உருவில் ஆபத்து வருகிறது. “எனது தம்பிக்கு வேலை போட்டுக் கொடுங்கள்” என்கிறாள் மனைவி. உச்சநீதிமன்ற உத்தரவை மறுக்க முடியுமா? சும்மா வெட்டியாக ஒரு வேலையைத் தருகிறான். பேரி ஒளித்து வைத்திருக்கும் சூட்கேஸ்களில் ஒன்றை திருடிக் கொண்டு உற்சாகமாக ஷாப்பிங் கிளம்புகிறான் ஊதாரி மச்சான்.

காவல்துறை இதைக் கவனித்து மச்சானைக் கைது செய்கிறது. பேரி அப்போது புதிய டீல் ஒன்றிற்காக கடத்தல் குழுவுடன் கொலம்பியாவில் இருக்கிறான். “காப்பாத்துங்க” என்று மச்சான் கதறுகிறான். “அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க வேலையை முதல்ல முடி” என்கிறது கடத்தல்குழு. மச்சான் தப்பிப்பதற்காக பேரி உதவி செய்கிறான். ஆனால் அவன் திமிராகப் பேசி விட்டு கிளம்பும் போது கார் வெடித்து சிதறுகிறது. ‘நாங்க பார்த்துக்கறோம்” என்று கடத்தல் குழு சொன்னதின் அர்த்தம் இதுதான் போல.

பேரி ஆகாயத்தில் கட்டிய கோட்டை ஒருவழியாக வீழ்ச்சியடையத் துவங்குகிறது.  FBI அவனுடைய வீட்டைச் சோதனையிட்டு எல்லா பணத்தையும் கைப்பற்றுகிறது. CIA அவனை கைகழுவுகிறது. வசமாக சிக்குகிறான் பேரி. ஆனால் அவன் தப்பிக்க இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தனது அரசியல் எதிரிகளுக்கு போதை மருந்து கடத்தல் உலகத்துடன் தொடர்பிருக்கிறது என்பதை அமெரிக்கா நிரூபிக்க பேரியைப் பயன்படுத்துகிறது. தனது கூட்டாளிகளையே ரகசியமாகப் படம் எடுக்கிறான் பேரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பத்திரிகைகளில் வெளியாகி விடுகிறது. கடத்தல் குழு தன்னை உயிருடன் விடாது என்பது பேரிக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் தன் மரணத்தை எதிர்பார்க்கிறான்.

அரசியல் காரணங்களால் நீதிமன்றத்திலிருந்து எளிதாக அவன் தப்பித்து விட்டாலும் கடத்தல் குழுவின் பழிவாங்கலில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. சுடப்படுகிறான்.

**

எழுபதுகளின் காலக்கட்ட பின்னணியில், பேரி சீல் ஆக டாம் குரூஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். பணம் சேர சேர, ‘’மங்காத்தா’ அஜித் போல ‘மணி.. மணி..’ என்ற இவர் உற்சாகமாக சிரிப்பது கலக்கல். “கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளித் தருவான். ஆனா கைவிட்டுடுவான்” என்கிற பாட்சா நீதியை சொல்லும் இந்தத் திரைப்படம், எதிரி நாடுகளில் அமெரிக்கா செய்யும் கலகங்களையும் குழப்பங்களையும் அம்பலப்படுத்துகிறது. ‘The Bourne Identity’ வரிசை திரைப்படங்களை இயக்கிய Doug Liman இத்திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார். 

suresh kannan

Wednesday, December 20, 2017

A Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவிழா 2017


சென்னை சர்வதேச திரைவிழாவில் 19.12.2017 அன்று  மாலை பார்த்த ஈரானிய திரைப்படம் இது. 'இந்த சமூகத்தில் வாழ இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று ஒடுக்கப்பட்டவனாக இருக்க முடியும் அல்லது ஒடுக்குகிறவனாக. - என்பதுதான் இத்திரைப்படத்தின் மையம். 'அறத்திற்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய சித்திரம் இது. 

**

ஓர் ஈரானிய கிராமம். ரேஸா சிறிய அளவிலான மீன்பண்ணை தொழில் செய்கிறான். அவனுடைய மனைவி பள்ளியில் தலைமை ஆசிரியை. ரேஸா அடிப்படையில் நேர்மைக்குணம் படைத்தவன். 'கொஞ்சம் பணம் செலவு செஞ்சா உன் கடனை லேட்டா கட்ற மாதிரி மாத்தி தர்றேன்' என்று வங்கி அதிகாரி லஞ்சம் கேட்கும் போது முதலில் சற்று சஞ்சலப்பட்டு பிறகு உறுதியுடன் அதிக வட்டி செலுத்தினாலும் பரவாயில்லை என்று ஒழுங்கான வழியில் செல்கிறான்.

அவனுடைய நிலத்தை அபகரிப்பதற்காக அருகில் உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஒன்று பல்வேறு வழிகளில் இடைஞ்சல் செய்கிறது. ரேஸா நேர்மையாளனாக இருந்தாலும் அடிப்படையில் கோபக்காரன். தொழிற்சாலை ஊழியர் ஒருவருடன் நிகழும் கைகலப்பில் சிறைக்குச் செல்கிறான். பலமுள்ள எதிர் தரப்பு நிறைய பொய் சாட்சியங்களை வைத்திருக்கிறது. லஞ்சம் தர விரும்பாத ரேஸா நெருக்கடிகளை சந்திக்கிறான்.

அவனுடைய மனைவி உலக நடைமுறைகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளவள். எனவே தன் சகோதரனின் உதவியால் கணவனை வெளியே அழைத்து வருகிறாள். புற அழுத்தங்கள் வீட்டின் உள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவில் சில சிக்கல்களும்.

தொழிற்சாலை மறைமுகமாக தன் மீது நிகழ்த்தும் அநீதிகளை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள எல்லா வழிகளையும் முயல்கிறான் ரேஸா. ஆனால் ஊழலும் லஞ்சமும் நிறைந்திருக்கிற அமைப்பின் கதவுகள் ரேஸாவிற்கு திறக்க மறுக்கின்றன. ஒரு கட்டத்தில் எதிராளியைப் பழிவாங்கும்  எண்ணம் இவனுக்குள் பெருகிக் கொண்டே போக, அறத்திற்குப் புறம்பான செய்கையில் ஈடுபடுகிறான். இவனுக்கு வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கீகாரமும் தேடி வருகிறது. ஆனால் அதை சுவைக்க முடியாமல் குற்றவுணர்வுடன் ரேஸா அழுவதுடன் படம் நிறைகிறது. 


**

படம் முழுவதும், இறுக்கமும் கோபமும் பொங்கி வழியும் முகமாக நடித்திருக்கும் Reza Akhlaghirad-ன் பங்களிப்பு அபாரமானது. இவரது மனைவியாக நடித்திருக்கும் Soudabeh Beizaee-ன் நடிப்பும் அற்புதம். ரேஜஸாவின் மனைவியும் நேர்மையானவர்தான். ஆனால் சூழல் அவரையும் தீமையின் பக்கம் நகரச் செய்கிறது. தன்னுடைய தலைமையாசிரியை பதவியைப் பயன்படுத்தி, கணவனின் எதிராளி மகளை அழைத்து மறைமுகமாக மிரட்டுகிறாள். அப்போது அவர் சொல்லும் வசனம் ஒன்று அபாரமானது. "ஆண்கள் தங்களின் பெருமிதம் காரணமாக நிகழ்த்தும் சச்சரவுகளையெல்லாம் பெண்கள்தான் தங்களின் நுண்ணறிவு கொண்டு போக்க முயல வேண்டும்"

பிடிவாத  நேர்மையுடன் இருக்கும் ரேஸா, மனம் மாறும் கட்டமும் நுட்பமானது. ஆட்சிக்கு எதிராக செயல்படும் அவனுடைய நண்பன் சில வருடங்களாக சிறையில் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலையில் உணவுப் பொருட்கள் விற்கும் பரிதாப நிலையைப் பார்க்கிறான் ரேஸா. 'என் கனவுகள் முழுவதும் கலைந்து விட்டன' என்று அழுகிறாள் அவள். ஆனால் தன் கணவனின் தியாகம் குறித்தான பெருமையும் அவளிடம் இருக்கிறது. 

கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றிருக்கும் இத்திரைப்படம் மிக நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் தன்னுடைய மையத்தை நோக்கி நகர்கிறது. நேராக சித்தரிக்காமல் குறிப்பால் உணர்த்தும் பல நுட்பமான காட்சிகள் நிறைந்துள்ளன. எந்தப் பக்கம் திரும்பினாலும் லஞ்சத்தின் பக்கம் முட்டிக் கொள்ளுமளவிற்கு சமூக அமைப்பு கெட்டிருப்பது உலகளாவிய பிரச்சினைதான் போல.  இயக்கம்: Mohammad Rasoulof.

suresh kannan

Monday, December 18, 2017

Daybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017


சில பல காரணங்களால் இவ்வருட விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தேன். எனவே அது தொடர்பான செய்திகளை பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்தேன். என்றாலும் மனதின் ஒரு பகுதி தன்னிச்சையாக அதன் பக்கம் குவிந்து கிடந்தது. அலுவலகத்திலும் சற்று புலம்பிக் கொண்டேயிருந்தேன்.

ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தால் அதுவாக உங்களைத் தேடி வரும் என்றொரு விதியும் பழமொழியும் இருக்கிறது. விழா துவங்கி நாலைந்து நாள் கழித்து நண்பர் கே.என்..சிவராமன் அழைத்தார். “ஏன் இவ்வருடம் செல்லவில்லையா? முன்பே சொல்லியிருக்கலாமே” என்று உரிமையாக கடிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தந்தார்.

அதுவரை சோம்பியிருந்த மனமும் உடலும் மினஇணைப்பு தரப்பட்ட இயந்திரம் போல ‘விர்ரென்றாகியது. அலுவலகப் பணிகளை விரைவிரைவாக செய்து முடித்தேன். அதற்கு இடையில், மாலையில் திரையிடப்படவிருக்கிற படங்களைப் பற்றிய விவரங்களை தேடினேன். அவசரத்திற்கு IMDB-ஐ நம்பலாம்.

‘KATHIE SAYS GOODBYE’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் முன்னணியில் நின்றது. அதன் பிறகு ‘DAYBREAK’ என்கிற அல்பேனிய திரைப்படம். கதைச் சுருக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.  அல்பேனியா மெல்லுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘அழுகாச்சி’ டிராமாவாக இருக்குமோ என்று தோன்றியது. எனவே அமெரிக்காவை தேர்ந்தெடுத்தென்.

அலுவலகத்தில் உள்ளவர்களை நச்சரித்து சில வேலைகளை மற்றவர்களின் தலையில் தள்ளி விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். நேரம் சுருக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு சற்று சாவகாசமாகவும் அல்பேனியாவிற்கு உடனடியாகவும். முதல் நொடியிலிருந்து ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் எனக்கு ‘என்னவோ’ போலிருக்கும்.

எனவே தீர்மானித்ததையொட்டி அமெரிக்காவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரியான போக்குவரத்து நெரிசல். ‘அமெரிக்காவா, அல்பேனியாவா’ என்று இரண்டிற்கும் இடையில் மனம் ஊசலாடிக் கொண்டேயிருந்தது. அனைத்து வாகனங்களும் உறைந்தது போல அப்படியே நிற்க, என் மனம் மட்டும் முன்னே விரைந்து கொண்டிருந்தது. பதட்டம் சற்று அதிகமாக “இது தேவையா’ என்றெழுந்த கேள்வியை புறந்தள்ளினேன்.

திடீரென ஓர் அசட்டு தர்க்கம். அமெரிக்கத் திரைப்படம் என்றால் இணையத்தில், டிவிடியில் என்ற பிற்பாடு எப்படியாவது பிடித்து விடலாம். அல்பேனியா என்றால் கிடைப்பது சிரமமாகி விடும் என்று தோன்ற சட்டென்று கட்சி மாறினேன். மனம் ஒரு monkey என்பது மற்றொருமுறை நிரூபணமாயிற்று. ஆனால் இந்த சங்கடமெல்லாம் முன்னே நின்றிருந்த கிங்கரர்களுக்கு தெரியவில்லை. கல்லுளி மங்கன்களாக நின்றிருந்தார்கள்.

ஏதோ ஒர் அதிர்ஷ்ட கணத்தில் மூக்கடைப்பு விலகியது போல நெரிசல் சற்று குறைந்து பேருந்து விரைந்த போதுதான் எனக்கும் மூச்சு வந்தது. திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு முன்னதாகவே காஸினோ திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாசலில் அனுமதிச்சீட்டை எவரும் கோரவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.

சரி, இன்று பார்த்த அல்பேனிய தேசத்து திரைப்படத்திற்கு வருவோம்.

**

DAYBREAK – இதுவொரு துயரச்சுவை கொண்ட நாடகம். Leta  என்கிற நடுத்தரவயதுப் பெண். கையில் சுமார் இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை. வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்படுகிறாள். அவளது பொருளியல் துயரம் நிதானமாக, ஆனால் அழுத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. செவிலியர் பணியில் இருந்தவள். ஆதரிக்க உற்றார்கள் இல்லாத சூழல்.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒரு கிழவியைப் பார்த்துக் கொள்ளும் சலிப்பான பணி. என்றாலும் மிக பொறுப்பாய் அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். சில சொந்த காரணங்களுக்காக கிழவியின் மகள், இவளிடம் சற்று பணம் தந்து விட்டு பிரான்ஸ் கிளம்பி விடுகிறாள்.

வீட்டின் உரிமையாளர் துரத்தியதும். வேறு வழியின்றி தன்னுடைய பணியிடத்திலேயே குழந்தையுடன் தங்கிக் கொள்கிறாள்.  கிழவிக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வருகிறது. எடுத்து வரும் தபால்காரன் 'அவள் உயிரோடு இருக்கிறாளா' என்று சோதித்து விட்டு பணத்தைத் தருகிறான். அதை வைத்துதான் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஊருக்குச் சென்ற மகள் திரும்பத் தாமதம் ஆக, இவளுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கிழவியின் மகளும் மருமகனும் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர இடிந்து போகிறாள். தங்க இடமும் இல்லாமல், செலவிற்கு பணமும் இல்லாத நிலையில் பென்ஷன் பணம் மட்டுமே அவளுடைய ஆதாரம்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இருப்பிற்காக அவள் எத்தனை கடினமானதொரு முடிவை எடுக்கிறாள் என்பதை பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள்  விவரிக்கின்றன. Survival Instinct-ம் வறுமையும் ஒருவரை எத்தனை நெருக்கடியை நோக்கி தள்ளிச் செல்லும் என்கிற ஆதாரமான செய்தி உறுத்தாமல் மிக மிக நிதானமாக சொல்லப்படுகிறது.

உதிரிப்பூக்கள் ‘அஸ்வினி’யை நினைவுப்படுத்துவது போல சோகம் ததும்பும் முகம் Ornela Kapetani –க்கு.  முழு திரைப்படத்திலும் இவளது முகம் ஒரேயொரு முறைதான் புன்னகைக்கிறது. பென்ஷன் பணம் எடுத்து வரும் தபால்காரனை வழிக்கு கொண்டு வருவதற்காக.

மிக நிதானமாக நகரும் திரைப்படத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை வெளிப்பட்டாலும் மிகையாக சிரித்து வைப்பது ‘பிலிம் பெஸ்டிவல்’ மரபு. இன்றும் அப்படியே ஆயிற்று. படுக்கை கிழவியாக நடித்திருந்தவரின் பங்களிப்பு அபாரம். வெளியே சென்று விட்டு கதவைத் திறந்து வருபவள், படுக்கையில் கிழவியைக் காணவில்லை என்பதும் பதறி விடுகிறாள். நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றுகிறது. ஆனால் கிழவி, இவளுடைய குழந்தையை வைத்துக் கொண்டு ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.

நிலவு நட்சத்திரங்களைப் பற்றி கிழவி பேசுவதும், ‘என்னைப் பற்றி ஒருமுறை கூட விசாரிக்கவில்லையா?” என்று தொலைபேசியில் மகள் விசாரிப்பதும் என படத்திற்குள் சில நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

அகாதமி விருதிற்காக அல்பேனியா தேசத்தின் சார்பில் தேர்வாகி அனுப்பப்பட்டிருக்கிற திரைப்படம்.  டிராமா பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

**

மிச்சமிருக்கிற நாட்களில் நேரத்தை பிழிந்து எப்படியாவது சில திரைப்படங்களை பார்க்கலாம் என உத்தேசம். இந்த முறை அண்ணாசாலையில், அருகருகிலேயே அரங்கங்கள் அமைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைவாணர் அரங்கம் தயாராகியும் அது ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. என்ன அரசியலோ?

suresh kannan

Friday, November 17, 2017

லக்ஷ்மி மற்றும் அறம் குறித்து சில வார்த்தைகள்

அறம் திரைப்படம் மற்றும் லக்ஷ்மி குறும்படம் ஆகிய இரண்டு படைப்புகளையும் பற்றி விரிவாக எழுதும் உத்தேசம் இருக்கிறது. இவை பற்றி இணையத்தில் வரும் பல மொண்ணையான எதிர்வினைகளை, நையாண்டிகளைக் கண்டால் சிரிப்பு ஒருபுறமும் கோபம் ஒருபுறமும் வருகிறது.

ஒரு சினிமாவைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சியை, கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று பாலுமகேந்திரா தொடர்ந்து குரல் தந்து கொண்டிருந்த அவசியத்தை மறுபடியும் மறுபடியும் நினைவுகூர்கிறேன். சினிமா என்றல்ல, ஒரு புதினத்தை, கட்டுரையை, கவிதையை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய நுண்ணுணர்வும் முதிர்ச்சியும் நிதானமும் நம்மில் பெரும்பாலோனோரிடம் இல்லை என்பதை ஒரு புகாராகவே சொல்கிறேன்.

எத்தனையோ மணி நேரங்களை செலவு செய்து ஓர் எழுத்தாளர், ஒரு இயக்குநர் தம்முடைய படைப்பை பொதுவெளியில் வைக்கிறார். ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து மிக மிக மேலோட்டமாக அவற்றைப் பற்றிய நம்முடைய எண்ணங்களை பதிவு செய்கிறோம். இதில் பல பதிவுகள் அதிகப் பிரசங்கித்தனமாக, சுயமுனைப்பு நோக்கமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் நம்முடைய அறியாமைதான் வெளிப்படுகிறது, இதன் மூலம் நம்முடைய முட்டாள்தனங்கள்தான் அம்பலப்படுகின்றன. என்கிற சொரணை கூட பலருக்கு இருப்பதில்லை.

**

லக்ஷ்மி குறும்படத்தில் அந்தப் பெண் பாத்திரம் தம்முடைய கணவனிடமிருந்து எதிர்பார்ப்பது பாலுறவை மட்டுமல்ல. அதையும் மீறி தன்னுடைய இருப்பு மதிக்கவும் அங்கீகரிக்கவும் பட வேண்டும் என்கிற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும். பாலின சமத்துவமில்லாத குடும்பம், சமூகம் போன்ற நிறுவனங்களை அந்தக் குறும்படம் விசாரணை செய்கிறது. தம்முடைய இணையிடமிருந்து ஆதரவான ஒரு சொல் கூட வராத இயந்திரத்தனமான வாழ்க்கை முறை அவளுக்கு சலிப்பையும் கழிவிரக்கத்தையும் தருகிறது. இதுவே அவளுக்குள் மெல்லிய பழிவாங்கல் உணர்வைத் தருகிறது. அதற்கான சந்தர்ப்பம் தற்செயலாக கிடைக்கும் போது ஒரு சராசரி பெண்ணுக்கான நியாயவுணர்வுடன் முதலில் தடுமாறும் அவள், பிறகு தன்னிச்சையாக அந்த புதிய அனுபவத்திற்குள் நீந்திச் செல்கிறாள்.

பாலுறவு அல்ல, அந்த இளைஞன் தனக்கு முக்கியத்துவம் தந்து உரையாடும் அணுகுமுறையே அவளுக்கு பிடித்துப் போகிறது. அவளைக் கவர்வது என்பது அந்த இளைஞனின் நோக்கமாக இருந்தாலும், இவளுடைய பார்வையில் அவளின் இருப்பு அங்கீகரிக்கப்படுவதே அவளுக்கு பெரிய ஆசுவாசத்தை தருகிறது.

ஆனால் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நீதி காரணமாக அவள் அதைத் தொடர விரும்புவதில்லை. அந்த ஒரு நாள் சந்திப்பை, அனுபவத்தை, புத்தகத்திற்குள் மயிலிறகை ஒளித்து வைக்கும் சிறுவனைப் போல ரகசியமாக வைத்துக் கொள்கிறாள். பாலுறவுதான் முக்கியம் என்றால் அந்த உறவை அவள் தொடர்ந்திருப்பாள் என்பதை மொண்ணை புத்திக்காரர்கள் கூட மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடும்.

ஆனால் இந்தக் குறும்படத்தைப் பார்த்த பலரும் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்து நீதி சொல்வதைத்தான் முக்கியமாக செய்திருக்கிறார்கள். சிந்து பைரவி திரைப்படம் முதற்கொண்டு இதே கருத்தாக்கத்தில் இதுவரை பல படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் இவற்றைப் பற்றி சமூகத்திற்கு எவ்வித புகாரும் இல்லை. ஏனெனில் இவையெல்லாம் ஆண்மையப் படைப்புகளாக, ஆணின் பார்வையில் இருந்து உருவானவை. 

இச்சமூகமும் பெரும்பாலும் ஆணாதிக்கத்தன்மையோடு இயங்குவதால் இந்தப் படைப்புகள் மிக இயல்பாக கடந்து போயின. இவற்றிற்கு விருதுகள் கூட கிடைத்தன. ஆனால் இதன் எதிர்முனையில் இதையே ஒரு பெண் நிகழ்த்தும் போது இச்சமூகம் பதட்டமும் கோபமும் அடைகிறது. நிலவுடமை மனோபாவத்தில் இயங்கும் அது தன்னுடைய சொத்து பறிபோகிற பதட்டத்தில் கோபம் கொள்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணை மலினமாகவும் கொச்சையாகவும் ஏசுகிறது. இணையத்தின் மூலம் வெளியான பல எதிர்வினைகள் இந்த நோக்கில், புரிதலில் அமைந்தவையே.

**

அறம் திரைப்படத்தில் தேவையற்ற காட்சிகள் இருந்ததாகவும், திரைக்கதை இலக்கணத்தில் பொருந்தாதாவாறு சில விஷயங்கள் இருந்ததாகவும் சில புத்திசாலிகள் சொல்கிறார்கள். இந்தப் படைப்பில் பிரச்சார தொனி வந்துவிடக்கூடாது என்கிற கவனத்துடனும் சுவாரசியம் குன்றிவிடக்கூடாது என்கிற திட்டமிடலுடனும் இயக்குநர் காட்சிகளை உருவாக்கியிருப்பதை மேலோட்டமாக கவனித்தாலே நாம் உணரக்கூடும். அப்படியே சில பிசிறுகள் இருந்தால்தான் என்ன? படைப்பின் மையம் சமூகவுணர்வுடன் இருந்து அது நேர்மையான காட்சிகளின் மூலமாக நகரும் போது இவற்றை பெரிதுபடுத்த வேண்டுமா? மக்களின் பிரச்சினையைப் பேசும் திரைப்படத்தில் பிரச்சார நெடி வந்தால்தான் என்ன? மக்களுக்காகத்தானே கலை?,

நேர்மையாக இயங்க முனையும் படைப்பாளிகளைக் கூட நம்முடைய அரைகுறை புத்திசாலித்தனத்தால் நிராகரிக்கும் போது நமக்கு மிஞ்சப் போவது வழக்கமான தமிழ் சினிமா குப்பைகளே. இந்த அடிப்படை கூட புரியாமல் ஒரு சினிமாவைப் பற்றி பேசுவதில் என்ன பயன்?

‘எக்காரணத்திற்காகவும் மக்களை குறை சொல்லாதீர்கள்’ என்கிற செய்தி அறம் படத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதை கவனித்திருக்கலாம். பல்வேறு சமயங்களில், பல்வேறு காரணங்களால் தாங்கள் தொடர்ந்து  நிராகரிக்கப்படும் மக்களின் கோபமானது ஒரு விபத்தின் வழியாக அவர்களிடம் ஆவேசமாக வெளிப்படுகிறது. அவர்கள் செய்யும் சில காரியங்கள் அந்தச் சமயத்தில் உணர்ச்சி வேகத்தில் முட்டாள்தனமாகத்தான் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு எதிரான குரலை இயக்குநர் படத்தில் ஓரிடத்திலும் அனுமதிப்பதில்லை. ‘அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். புரிய வைக்க வேண்டியது அறிவுசார் தரப்பின் கடமை’ என்பதை மறுபடி மறுபடி சொல்கிறார்.

ஆனால் அம்மாதிரியான மக்கள் சமூகத்தின் ஒரு பகுதியே அறியாமையால் இத்திரைப்படத்திற்கு எதிராக குரல் தந்து கொண்டிருப்பது கசப்பான முரண். 

suresh kannan

Thursday, October 05, 2017

ஆஸ்கர் விருது 2017 - மாற்றத்தின் அடையாளம்
எந்தவொரு விருதும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை. பொதுவாக எல்லா  விருதுகளிலும் ஏதோவொரு அரசியல் உள்ளுறையாக பதுங்கியிருக்கும். ஆஸ்கர்  விருதும் அப்படியே. உலகளாவிய வணிகச்சந்தையை கைப்பற்றிக் கொண்டிருக்கிற ஹாலிவுட் தேசத்திலிருந்து இந்த விருது தரப்படுவதால் பரவலான கவனத்திற்கு  உள்ளாகிறது. இந்த விருது தொடர்பாக பல சர்ச்சைகள், புகார்கள் ஏற்கெனவே நிறைய உள்ளன. அவற்றில் இரண்டு பிரதானமானது. ஒன்று, வெள்ளையினத்தவரின் ஆதிக்கம். இவர்களுக்கே பெரும்பாலான விருதுகளும் அங்கீகாரங்களும் வழங்கப்படும். காரணம், இனம் மற்றும் நிறவெறி அரசியல். குறிப்பாக கருப்பினத்தவர்கள் அப்பட்டமான வெறுப்புடனோ அல்லது நாசூக்கான தந்திரத்துடனோா ஒதுக்கப்படுவார்கள்.

இன்னொன்று, அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை விதந்தோதும் திரைப்படங்களுக்கு உறுதியான அங்கீகாரம். பரிந்துரைப் பட்டியலில் இதர சிறந்த திரைப்படங்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு அமெரிக்க ஆதரவை அடிநாதமாக கொண்டிருருக்கும் திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படும் தந்திரம். உலகளாவிய அளவில் கவனிக்கப்படும் விருதாக இருந்தாலும் அடிப்படையில் இது அமெரிக்காவில் உருவான ஆங்கில திரைப்படங்களுக்குத் தரப்படுவது என்பதால் இரண்டாவதிலுள்ள அப்பட்டமான சுயநல அரசியலை சற்று ஒதுக்கி வைக்கலாம். ஆனால் முதலாவதாக உள்ள இன அரசியல் சகிக்க முடியாதது மட்டுமல்ல, மனித சமத்துவத்திற்கு எதிரானதும் கூட.

ஆஸ்கர் விருதிற்கான தேர்வுக் குழுவில் இருப்பவர்களில் பெரும்பான்மையான சதவீதத்தினர் வெள்ளையினத்தவர்களே.  88 வருடங்களைக் கடக்கும் ஆஸ்கரின் நீண்ட வரலாற்றில், கறுப்பினக் கலைஞர்கள் இதுவரை  14 விருதுகளை மட்டுமே வென்றுள்ளனர். அதுவும் பெரும்பாலும் துணை நடிகர்களுக்கான விருதாகவே அது இருக்கும். வெள்ளையினத்தவர்களால் கேலி செய்யப்படும், இழிவு படுத்தப்படும் பாத்திரங்களாக அவை இருக்கும். பிரதான பாத்திரத்திற்கு தரப்பட்ட விருதுகள் என்பது அரிதான விதிவிலக்குகளே.

1939ல் " கான் வித் தி விண்ட் " படத்தில் நடித்த Hattie McDaniel  என்கிற கறுப்பின நடிகை  சிறந்த துணை நடிகைக்கான விருதை முதன்முதலாக பெற்றார். 1964-ல் Sidney Poitier என்கிற கறுப்பின நடிகர், சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். டென்சல் வாஷிங்டன்  - 2002-ம் ஆண்டிலும்  ஜேம்மி ஃபாக்ஸ் 2005--ம் ஆண்டிலும் ஃபாரஸ்ட் விட்டேகர் 2006--ம் ஆண்டிலும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்ற  கருப்பின நடிகர்கள். 2002-ல் Monster's Ball படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் Halle Berry.  இதுவரையான வரலாற்றில்  சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஒரே கறுப்பின பெண் ஹாலேபெர்ரி மட்டும் தான்.


இந்த விருதிற்குப் பின்னால் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளும் நிழலான செயற்பாடுகளும் நிறைய உள்ளன. இதனால் கலை சார்ந்த அர்ப்பணிப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வணிக நோக்கு முயற்சிகள் முன்னிலை பெறும் அநீதிகள் நிகழ்கின்றன.  இந்த விருதைப் பெறுவதற்காக அடித்துப் பிடித்து நடைபெறும்  தள்ளுமுள்ளு பிரமோஷன்கள், லாபிகள் நடந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக  மனச்சாட்சியுள்ள சில கலைஞர்கள் ஆஸ்கர் விருதை நிராகரித்த, விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்த சம்பவங்கள் இதற்கு முன் நிகழ்ந்துள்ளன. 45-வது அகாதமி விருதில் 'காட்ஃபாதர்' திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகராக' தேர்வு செய்யப்பட்ட மார்லன் பிராண்டோ விருதைப் பெற மறுத்து விட்டார். இனவெறி காரணமாக திரைத்துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதைக் கண்டித்து தமக்கு அளிக்கப்பட்ட விருதை நிராகரித்தார். அவருடைய பிரதிநிதி ஒருவர் விழா மேடையில் பிராண்டோவின் கடிதத்தை வாசித்தார். இது போல் பல கண்டனங்களும் சர்ச்சைகளும் இந்த விருது குறித்து  ஏற்கெனவே உள்ளன.

***

ஆனால் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த,  2017-ம் ஆண்டிற்கான 89வது அகாதமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் இதற்கான மாற்றம் மெல்ல உருவாகி வருவதை கவனிக்க முடிகிறது. அரங்கத்தில் எழுந்த  கரவொலிகளும் கூக்குரல்களும் இனவாத ஆதிக்க அரசியலுக்கு எதிரானவையாக இருந்ததைக் காண மகிழ்ச்சி ஏற்பட்டது. 'வந்தேறிகளை வெளியேற்றுவோம், உள்ளே அனுமதிக்க மாட்டோம்' என்றெல்லாம் அப்பட்டமான இனவெறி அரசியலை முன்வைக்கும் டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆகியிருக்கும் சூழலில், இது தொடர்பான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் கலைஞர்களின் எதிர்ப்புக்குரலில் உள்ள இந்த அரசியல் சமிக்ஞைகள் முக்கியமானதாக அமைகின்றன. மதம், இனம், நிறம் போன்ற கற்பிதங்களின் மீதான பாகுபாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள் என்பது நிரூபணமாகிறது.

'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இரானின் 'தி சேல்ஸ்மேன்' விருதை வென்றது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் அஸ்ஹார் ஃபர்ஹாடி விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் தடைகளை கண்டிக்கும் வகையில் அவரது புறக்கணிப்பை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சரமாரியாக கிண்டலடித்துக் கொண்டே இருந்தார். விருது ஒன்றை வழங்க வந்த மெக்ஸிகோவைச் சேர்ந்த நடிகரான கார்ஸியா பெர்னால் 'நம்மை பிரித்தாள எண்ணும் எல்லா சுவர்களையும் எதிர்க்கிறேன்' என்று குறிப்பிட்டது பார்வையாளர்களிடமிருந்து  பலத்த வரவேற்பைப் பெற்றது.

இனவாத அரசியலுக்கு எதிரான கலைஞர்களின் சமிக்ஞைகள், இது சார்ந்த விமர்சனங்களுக்கு பார்வையாளர்களிமிருந்து கிடைத்த ஆதரவு தவிர, இந்த வருட விருதுப்பட்டியலில் கருப்பினக் கலைஞர்கள் பங்கெடுத்த படைப்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இடம் பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது. தேர்வுப் பட்டியல்களிலும் விருது விழா  நிகழ்வு பங்களிப்புகளிலும் கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து கடந்த சில வருடங்களில் எழுந்த கண்டனங்களும் விமர்சனங்களும் கூட ஆஸ்கர் கமிட்டியின் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

சிறந்த திரைப்படமாக 'மூன்லைட்' தேர்ந்தெடுக்கப்பட்டதையே இதற்கு சான்றாக சொல்லலாம்.  முழுக்க முழுக்க கருப்பினக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆஸ்கர் விருது வெல்வது இதுவே முதன்முறை. என்றாலும் இது தொடர்பான அறிவிப்பில் நிகழ்ந்த குளறுபடி தற்செயலானதுதானா என்பதை கவனிக்க வேண்டும். சிறந்த படம் என்று 'லா லா லேண்ட்' முதலில் அறிவிக்கப்பட்டு பிறகு திருத்தப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றிலேயே இது போன்ற தவறு இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.  'மூன்லைட்' திரைப்படத்தின் இயக்குநர் அடலே ரொமன்ஸ்கியால் இந்த இனிய அதிர்ச்சியை நம்பவே முடியவில்லை. மிகுந்த நெகிழ்வுடன் விருதைப் பெற்றுக் கொண்டார். இதே திரைப்படத்தில் நடித்த மஹெர்சலா அலி 'சிறந்த துணை நடிகருக்கான' விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கறுப்பினத்தைச் சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை என்பதையும் கவனிக்க வேண்டும். 'சிறந்த தழுவல் திரைக்கதை'க்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது.

அதுவரை பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களில் கருப்பினத்தவர்களை சமூகவிரோதிகளாகவும் முரட்டுத்தனமானவர்களாகவும் சித்தரித்த போக்கிலிருந்து விலகி அவர்களின் வாழ்வியலில் உள்ள துயரத்தின் பக்கத்தை பதிவு செய்தது 'மூன்லைட்' ஒரு கருப்பின இளைஞனின் வாழ்க்கையை மூன்று வெவ்வேறு வளர்ச்சி படிநிலைகளில் விவரிக்கின்ற திரைப்படம் இது. சிரோன் என்பவனின் உளவியல் சிக்கல்களையும் பாலியல் சார்ந்த அடையாளக் குழப்பங்களையும் எளிமையான திரைமொழியில் உரையாடியது. இந்த திரைப்படம் எட்டு பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தது. சிறுவனின் தாயாகவும் போதைப் பழக்கத்தில் சிக்கியிருந்த பெண்ணாகவும் நடித்திருந்த Naomie Harris-ன் பங்களிப்பு அபாரமானதாக இருந்தது. சிறந்த துணை நடிகைக்கான நாமினேஷன் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தாலும் விருதை வெல்லவில்லை.

***

1950-ல் வெளிவந்த All About Eve மற்றும் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' ஆகிய திரைப்படங்களுக்கு ஈடாக, 14 பிரிவுகளில் நாமினேஷன் ஆன வரலாற்று சாதனையைப்  படைத்திருந்தது லா லா லேண்ட். சிறந்த இயக்குநர். சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை  உள்ளிட்டு ஆறு பிரிவுகளில் வெற்றி பெற்றது.

அடிப்படையில் இதுவோர் எளிய காதல் கதை. அபாரமான இசையும் பாடல்களும் காதலுணர்வு பொங்கி வழியும் திரைக்கதையும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தை உற்சாமாக்குகிறது. குறிப்பாக இதன் உச்சகக்காட்சி உருவாக்கப்பட்ட விதம் அபாரமானது. இதன் நாயகன் வெள்ளையினத்தவனாக இருந்தாலும் ஜாஸ் இசையை விதந்தோடியபடியே இருக்கிறான். ஜாஸ் இசை ஆப்ரிக்க அமெரிக்கர்கள் உருவாக்கிய விளிம்பு நிலைச் சமூகத்தின் முக்கியமான கலை அடையாளம் என்பதையும் கவனிக்கலாம். இந்த திரைப்படத்திற்காக 'சிறந்த இயக்குநர்' விருதைப் பெற்ற, 32 வயதான Damien Chazelle, இந்தப் பிரிவில் விருது பெற்றவர்களிடையே குறைந்த வயதுள்ளவராவார்.

சிறந்த திரைப்படத்திற்கான விருது மெல் கிப்சன் இயக்கிய Hacksaw Ridge-க்கு கிடைக்கலாம் என்று நான் அனுமானித்திருந்தேன். போர் திரைப்படமான இது, ஹாலிவுட் திரைப்படங்களின் வழக்கமான போக்கைப் போல  அமெரிக்க ஆதரவை அடிநாதமாக கொண்டிருந்தது.  இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் நிகழும் போர் ஒன்றில் ஜப்பானியர்களை மூர்க்கமானவர்களாகவும் தந்திரக்காரர்களாகவும் இத்திரைப்படம் சித்தரித்திருந்தது.

இதற்கு மாறாக அமெரிக்க தரப்பில் போருக்குச் செல்லும் நாயகன் அமைதியின் அடையாளமாகத் திகழ்கிறான். இந்த அரசியலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இதுவொரு சிறந்த திரைப்படமே.. தன்னுடைய சிறுவயது கசப்பான அனுபவங்களால் இனி தன் வாழ்நாளில் எந்நாளும் வன்முறையைக் கைக்கொள்ள மாட்டேன் என்கிற உறுதியை போர்க்களத்திலும் கடைப்பிடிக்கும் ஒருவரைப் பற்றிய திரைப்படம். Desmond Doss என்கிற நபரின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவானது. போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய வீரர்கள் பலரை தனியொருவராக இவர் காப்பாற்றினார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படமாக 'ஜூடோபியா' தேர்வானது. இனப்பாகுபாடுகளும் வன்முறையும் அல்லாத ஒரு கற்பனை உலகம் சாத்தியமானால் அது எத்தனை இனிமையானதாக இருக்கும் என்பதை சுவாரஸ்மாக விவரிக்கிறது. ஆனால் இதை விடவும் 'மோனா' திரைப்படம் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. கருப்பினச் சிறுமியின் கடல் தாண்டும் சாகசங்களின் மூலம் விரியும் இந்த திரைப்படம், இயற்கையின் மிக ஆதாரமான இதயமாக விளங்கும் பசுமையை மனித குலம் மெல்ல சுரண்டிக் கொண்டு எத்தனை அட்டூழியங்களை நிகழ்த்துகிறது என்பதை மறைமுகமான பொருளில் இடித்துரைக்கிறது.

***

சிறந்த துணை நடிகைக்கான விருதை கருப்பினப் பெண்ணான  'வயோலா டேவிஸ்' பெற்றார். 'பென்சஸ்' திரைப்படத்தில் அபாரமாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. மூன்றாவது முறையாக நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அவர் விருதை இதுவே முதல் முறை. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் தனது ஏற்புரையை வழங்கினார். " மிகப்பெரும் கனவு கண்டு, அந்தக் கனவுகள் நனவாவதற்கு முன்னரே மரித்துப்போன மக்களின் உடல்களில் மிச்சம் இருக்கும் அந்தக் கதைகளையே நான் சொல்ல விரும்புகிறேன். மக்களின் கதைகளைத் தோண்டி எடுங்கள்" என்கிற வேண்டுகோளை படைப்பாளிகள் முன் வைத்தார்.
 
'Loving' திரைப்படத்தில் அபாரமாக நடித்திருந்த Ruth Negga-விற்கு 'சிறந்த துணை நடிகை' விருது கிடைக்கக்கூடும் என்கிற என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. போலவே சிறந்த நடிருக்கான விருது 'பென்சஸ்' திரைப்படத்திற்காக டென்ஷல் வாஷிங்டனுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் 'மான்செஸ்டர் பை த சீ ' திரைப்படத்திற்காக கேஸே அப்லெக் அந்த விருதை தட்டிச்சென்றது நியாயமான தேர்வே.

Garth Davis இயக்கிய 'lion' திரைப்படம் ஏறத்தாழ இந்திய திரைப்படம் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு படத்தின் முதற்பகுதி காட்சிகள் பெரும்பாலும் இந்திய நிலப்பகுதியில் படமாக்கப்பட்டிருந்தன. 'ஸ்லம்டாக் மில்லியனர்' பாணியில் ஆஸ்கர் விருதை குறிவைத்து எடுக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுந்தாலும் (தேவ் பட்டேல்தான் இதிலும் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்தார்) இது அபாரமாக உருவாக்கப்பட்ட நெகிழ்வான திரைப்படம்.

வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞன், தன் குடும்பத்தை பிரிந்த துயர் தாங்க முடியாமல் பல மாதங்களாக தேடி பின்பு அவர்களை கண்டடையும் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை. மிகையுணர்வுகளால் அல்லாமல் இயல்பான தொனியில் உருவாக்கப்பட்டது பாராட்டத்தக்கது. ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருந்தாலும் எந்தப் பிரிவிலும் விருதை வெல்லவில்லை. 'சிறந்த துணை நடிகருக்கான' விருதை தேவ் பட்டேல் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு  இந்திய ரசிகர்களிடையே இருந்தது. வளர்ப்புத் தாயாக நடித்திருந்த நிகோல் கிட்மன் தனது அபாரமான நடிப்பைத் தந்திருந்தார்.  இதில் நடித்த சிறுவனான சன்னி பவார், விருது விழாவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான்.


இதர பிரிவுகளில் இன்னமும் பல விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த வருட தேர்வுகளில் கருப்பினத்தவர்களின் அங்கீகாரம் சில விருதுகளால்  நியாயமான முறையில் சாத்தியமாகத் துவங்கியவதை குறிப்பிடத்தகுந்த மாற்றமாகவும் நல்ல அடையாளமாகவும் கருத வேண்டியிருக்கிறது. இனவெறி பாகுபாட்டு அரசியலும்  அது சார்ந்த வன்முறைகளும் பெருகுவதை கலை சார்ந்த மனங்களாலும் நுகர்வுகளாலும்தான் மட்டுப்படுத்த முடியும். இதுவொரு மிகையான நம்பிக்கையாக இருந்தாலும் இருள் மட்டுமே நிறைந்திருக்கும் வெற்றிடத்தில் ஒரு துளி வெளிச்சம் ஏற்பட்டாலும் அது மகிழ்ச்சிதானே?

suresh kannan

Thursday, June 15, 2017

மலையாள சினிமா 2016 - புலிப்பாய்ச்சலின் வேகமும் விவேகமும்மலையாளச் சினிமாவின் 2016-ம் ஆண்டுக்கான வளர்ச்சி அறிக்கை மிக ஆரோக்கியமானதாக இருக்கிறது. சுமார் 25 கோடி முதலீட்டில் உருவான மோகன்லாலின் 'புலி முருகன்' வசூலில் 150 கோடிகளையும் கடந்து சாதனை புரிந்திருக்கிறது. த்ரிஷ்யம் திரைப்படத்தின் மூலம் தான் உருவாக்கிய கடந்த சாதனையை மோகன்லாலே மறுபடியும் முறியடித்திருக்கிறார். மலையாள திரையுலகின் வரலாற்றில் இதுவரை அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக 'புலி முருகன்' அறியப்படுகிறது. ஆனால் வெற்றிகரமான வணிகம் மட்டுமே ஒரு துறையின் வளர்ச்சியின் அளவுகோல் அல்ல. சினிமா என்பது  கலை சார்ந்த, சமூகத்தை பரவலாக பாதிக்கக்கூடிய வலிமை வாய்ந்த ஊடகம் என்பதால் வணிகத்தையும் தாண்டி அதன் உள்ளடக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

சினிமா என்பது பெரும் நிதியைக் கோரக்கூடிய கலை வடிவம் என்பதால் அதன் வணிக கணக்குகளை புறக்கணித்து விட முடியாது. என்றாலும் தூயகலை சார்ந்த படைப்புகள் ஒருபுறமும் தரமான வெகுசன சினிமாக்கள் இன்னொரு புறமும் இயங்குவதுதான் கலைத்துறையின் ஆரோக்கியம் சார்ந்த அடையாளம். எழுபதுகளிலும், எண்பதுகளிலும் கேரளத்தின் சினிமா அவ்வாறுதான் இயங்கியது. உலகமயமாதல் காலக்கட்டத்திற்குப் பிறகு வணிகரீதியான வெற்றிதான் வளர்ச்சி என்கிற நோக்கில் நகர்ந்தது. தமிழ் சினிமாவின் வணிகத்தைப் பார்த்து மலையாள கதாநாயகர்களும் அந்தரத்தில் பறந்து சண்டையிட்டு அவதார நாயகர்களாக மாறினார்கள். மலையாள சினிமாவின் இயல்புத்தன்மையும் பிரத்யேக அழகியலும் மெல்ல குறையத் துவங்கியது.


தோராயமாக 2010-ல் மலையாளத் திரையுலகில் புதிய அலை தோன்றியது. உலக சினிமாவின் தாக்கமும், புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தும் புதுமையும் துணிச்சலும் கொண்ட இளம் கலைஞர்கள் உள்ளே வந்தார்கள். வினித் சீனிவாசன் போன்ற அபாரமான திரைக்கதையாளர்கள், அல்போன்ஸ் புத்திரன் போன்ற புதுமை இயக்குநர்கள், ஃபகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி போன்ற உற்சாகமான நடிகர்களின் வருகை மலையாளத் திரையின் சூழலை கொண்டாட்டமாக மாற்றிற்று. மலையாள சினிமாவின் தேக்கத்தையும் பழைய மரபையும் உடைத்து புதிய வகையிலான கதையாடல்கள் மூலம் சுவாரசியமான திரைப்படங்களை உருவாக்கினார்கள்.

உலகமெங்கிலும் உள்ள மலையாளப் பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பை நுட்பம் தந்ததால் ஆரோக்கியமான வணிக சூழலும் உண்டானது. பொழுதுபோக்கு சினிமா வார்ப்பின் இடையேயும் பல புதிய  அம்சங்களை தர முடியும் என்பதை இந்த இளம் கலைஞர்கள் நிரூபித்தார்கள். கேரளம் தவிர இதர மாநிலங்களில் உள்ள பார்வையாளர்களையும் இவர்கள் திரும்பிப் பார்க்க வைத்தனர். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய மலையாளத் திரைப்படம் தமிழகத் தலைநகரமான சென்னையில் 250 நாட்களுக்கும் மேலாக ஓடி புதிய சாதனையை படைத்தது. மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள், இந்த இளைஞர்களிடையே போட்டியிட வேண்டிய நிலைமை உண்டானது.


இந்த சூழலில் 2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சில முக்கியமான சினிமாக்களைப் பற்றி பார்க்கலாம்.

***

இலக்கியத்திற்கும் மலையாள சினிமாவிற்கும் எப்போதுமே இடையறாத தொடர்புண்டு. இந்த வகையில் உண்ணி.ஆர் எழுதிய சிறுகதையை அடிப்படையாக் கொண்டு அதே பெயரில் உருவான திரைப்படம் 'லீலா'. அதுவரை பெரும்பாலான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக இருந்த பிஜூ  மேனன், மையப் பாத்திரத்தில் நடித்து பெருமையைப் பெற்றார். குதர்க்கமும் விநோதமும் கொண்ட செல்வந்தன். யானையின் கொம்பின் மீது ஓர் இளம் பெண்ணை சாய்த்து உறவு கொள்ள வேண்டும் என்கிற விசித்திரமான ஆசையைக் கொண்டு அது சார்ந்த பயணத்தை மேற்கொள்கிறான். கதாசிரியரே திரைக்கதையையும் எழுதியிருந்ததால் சிறுகதையின் வடிவம் பெரிதும் சேதமுறாமல் சுவாரசியமான திரைப்படமாக உருமாறியிருந்தது. ரஞ்சித் இயக்கிய இத்திரைப்படத்தில் பிஜூ மேனனின் நடிப்பு பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதே ஆண்டில் பிஜூ மேனன் நடித்த இன்னொரு திரைப்படமும் சுவாரசியமானது - அனுராக கரிக்கின் வெள்ளம். ஒரு நடுத்தர வயது ஆசாமி தன்னுடைய பழைய காதலியை சந்திக்க விரும்பும் பாத்திரத்தில் பிஜூ மேனன் அபாரமாக நடித்திருந்தார். இயல்பான நகைச்சுவைக் காட்சிகளால் இத்திரைப்படம் கவனத்தைக் கவர்ந்தது.

இந்த வருடத்தின் மிக முக்கியமான திரைப்படம்  'கம்மட்டிப்பாடம்', இந்த  வருடம் என்றல்ல, மலையாளத் திரையுலகின் வரலாற்றிலேயே கூட இது கவனத்துக்குரிய படைப்பாக பதிவு செய்யக்கூடிய தகுதியைப் பெற்றது. எந்தவொரு பிரதேசமும் நகர்மயமாகும் போது அந்த வளர்ச்சிக்கான பலியாக விளிம்புநிலை சமூகம் அமைகிறது. காலம் காலமாக தொடரும் வரலாற்றுக் கொடுமையிது. சேரி மக்களின் வாழ்விடங்களை ரியல் எஸ்டேட் மாஃபியா கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கொச்சின் எப்படி நவீன நகரமாக உருமாறுகிறது என்பதை எண்பதுகளின் காலக்கட்டப் பின்னணியில் விவரிக்கும் அபாரமான திரைப்படம். துல்கர் சல்மான் அற்புதமாக நடித்திருந்தார். ஆசாரி ஆர் பாலன் என்கிற அற்புதமான நடிகர் இத்திரைப்படத்தின் மூலம் கிடைத்தார். விநாயகனின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. ராஜீவ் ரவியின் இயக்கம் பாராட்டத்தக்கது.

துல்கர் சல்மானின் இன்னொரு குறிப்பிடத்தகுந்த திரைப்படமாக 'கலி' அமைந்தது. பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒரு சூறாவளியையே உண்டாக்கிய சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார். அதீதமான கோபம் வரும் ஓர் இளைஞன், அந்தக் குணாதியசத்தால் எவ்வகையான சிக்கலையெல்லாம் எதிர்கொள்கிறான் என்பது இதன் மையம். திரைப்படத்தின் பிற்பாதியின் திரைக்கதை மிக சுவாரசியமாகவும் பரபரப்பூட்டுவதாகவும் அமைந்திருந்தது.

***

மலையாள சினிமாவின் சமீபத்திய வெற்றிகரமான கண்டுபிடிப்பு என 'நிவின் பாலி'யைச் சொல்லலாம்.  குறுகிய காலத்திலேயே கேரள இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக மாறி விட்டார். மிக கவனமாக அவர் தேர்ந்தெடுக்கும் திரைக்கதைகள் அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. 2016-ல் வெளியான நிவின் பாலியின் இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட்.

ஒன்று, 'ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ'. தமிழில் வெளிவந்த, விக்ரம் நடித்த 'சாமி'யைப் போலொரு திரைக்கதை. ஆனால் 'சாமி'யில் இருந்த மிகையான ஆவேசம் இதில் இல்லை. ஒரு நல்ல காவல்துறை அதிகாரியின் பணியில் நடக்கும் சம்பவங்களின் இயல்பான தொகுப்பு. காவல் நிலையத்தில்  பிஜ்ஜூ எதிர்கொள்ளும் பல்வேறு விதமான புகார்கள், நபர்கள் என்று இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து வந்தாலும் சிறிது கூட சலிக்காமல் ஆக்கியிருப்பது திரைக்கதையின் சிறப்பு. 'பிரேமம்'  திரைப்படத்தில் பார்த்த அசட்டு இளைஞனா இவர்?' என்று வியக்க வைத்திருக்கிறார். காவல்துறையினரின் கோணத்தில் நின்று, பணி  நிமித்தம் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை விவரிக்கும் திரைக்கதை. இதைப் பார்த்த பிறகு காவல்துறையினரின் மீது பொதுச்சமூகத்தினரின் மனதில் மரியாதையும் பிரியமும் கூடுதலாக  உருவாகும்.

நிவின் பாலியின் இன்னொரு திரைப்படம் 'ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்'. இதில் மிக அடக்கமாகவும் இயல்பாகவும் நடித்திருந்தார். துபாயில் வசிக்கும் ஒரு மலையாளக் குடும்பம். குடும்பத்தின் தந்தை, தன் பிள்ளைகளை மிக உற்சாகமாகவும் உத்வேகம் ஊட்டியும் வளர்க்கிறார். உயரப் பறந்து கொண்டிருந்த தொழிலில் ஒரு துரோகம் காரணமாக வீழ்ச்சியுண்டாகிறது. இது அந்தக் குடும்பத்தை மிகவும் பாதிக்கிறது. தந்தையில்லாத சூழலில் மகனான 'நிவின்பாலி' தன் தாயுடன் இணைந்து எவ்வாறு அந்தச் சிக்கல்களை எதிர்கொள்கிறான் என்பதை இயல்பான, நெகிழ்வான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

பொருளாதாரத்திற்காக பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் மலையாளிகளின் உழைப்பு  இத்திரைப்படத்தில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.. கூடவே துபாயின் புகழையும் பாடுகிறார்கள். வணிகம் சார்ந்த சிக்கல்களை, நாயகன் தனியாக நின்று ஜெயிக்கும் சூரத்தனமெல்லாம் இல்லாமல் அவனுடைய தாயின் விவேகமும் கூட உதவுவதாக திரைக்கதை அமைத்திருப்பது பெண்மையைப் போற்றும் விதமாக அமைந்திருக்கிறது.  வினித் சீனிவாசனின் இயல்பான திரைக்கதையும் இயக்கமும். தந்தையாக ரெஞ்சி பணிக்கரின் அருமையான நடிப்பு.  உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம்.

***

2016-ல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் ஃபகத் பாசிலின் ''மகேஷிண்டே பிரதிகாரம்' கவனத்துக்குரிய படைப்பாக அமைந்தது. மிக இயல்பான காட்சிகளுடன் நகரும் இந்த திரைப்படம் வணிகரீதியாகவும் வெற்றிபெற்றது. தற்செயலாக ஒரு தெருச்சண்டையில் ஈடுபட நேரும் இளைஞன் ஊராரின் மத்தியில் அவமானப்படுகிறான். தன்னை அடித்தவனை வெற்றி கொள்ளாமல் இனி காலில் செருப்பு அணிவதில்லை என சபதம் ஏற்கிறான். ஏதோ கேட்பதற்கு ஹீரோவின் பழிவாங்குதல் தொடர்பான திரைப்படம் என்பது போல் தோன்றினாலும் சினிமாவின் வழக்கமான ஹீரோத்தனம் ஏதும் இதில் இல்லை. அவல நகைச்சுவையுடன் அமைந்திருக்கும் காட்சிகள்  படம் பூராவும் வந்து சுவாரசியப்படுத்துகின்றன. ஃபகத்தின் நடிப்பு அபாரமாக அமைந்திருந்தது. திலீஷ் போத்தனின் சிறப்பான இயக்கம். இந்த திரைப்படமும் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமே.

நிவின் பாலி நடித்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜ்ஜூ' காவல்துறையினரின் நேர்மறையான பக்கத்தை சித்தரித்தது என்றால், 'கிஸ்மத்' அதன் எதிர்பக்கத்தை சித்தரித்தது. தமிழின் 'விசாரணை' திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல இத்திரைப்படமும் காவல் நிலையத்தில் நிகழும் சம்பவங்களை பெரும்பாலும் கொண்ட திரைக்கதையாக அமைந்தது. இசுலாமிய  இளைஞன் ஒருவனும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இந்து மதப் பெண்ணும் காதல் கொள்கிறார்கள். குடும்பத்தினரின் பலத்த எதிர்ப்பிற்கு அஞ்சி தங்களின் பாதுகாப்பிற்காக காவல்நிலையத்திற்கு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய காவல்துறை, பிற்போக்கு மனோபாவத்தோடு பஞ்சாயத்து செய்கிறது. இறுதிக்காட்சி எதிர்பாராத திருப்பத்துடன் அமைந்திருந்தது.

மோசமான காவல்துறை அதிகாரியாக, வினய் ஃபோாட் பிரமாதப்படுத்தியிருந்தார். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்திய நகரங்களில் பணிபுரியும் இளைஞர்கள், காவல்துறையினரால் எவ்வாறு முன்தீர்மானமான குற்றவாளிகளாக பார்க்கப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பான காட்சிகளும் இடையில் வருகின்றன. அறிமுக இயக்குநரான சனவாஸ் கே பவக்குட்டிக்கு நல்வரவு.

***

நாடகத்தனமான காட்சிகளால் நிறைந்திருந்தாலும் 'கொச்சுவா பவுலோ அய்யப்ப கோய்லோ' ஒரு நெகிழ்வான 'ஃபீல் குட்' திரைப்படம். சிறார்களுக்கான உத்வேகத்தை அளிப்பது. 'தன்னுடைய மிக ஆதாரமான விருப்பத்தை நோக்கி ஒருவன் உறுதியாக பயணப்படுவான் எனில்,  இந்த பிரபஞ்சமே அவனுக்காக துணைபுரியும்'.   'பவுலோ கோய்லோ' எழுதிய ''The Alchemist' நாவலில் வரும் ஒரு பிரபலமான கருத்து இது. இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம்.

இடுக்கி என்கிற ஊரில் வாழும் சிறுவனான அப்புவிற்கு விமானங்கள் என்றால் மிகவும் பிரியம். ஒருமுறையாவது விமானத்தில் பறந்து விட வேண்டும் என்பது அவனுடைய வாழ்நாள் லட்சியம். ஆனால் அசந்தர்ப்பமான சூழல் காரணமாக  அந்த தங்க வாய்ப்பு இரண்டு முறை தவறி விடுகிறது. நீச்சல் கற்றுக் கொண்டால் அது தொடர்பான போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் செல்ல முடியும் என்பதற்காக பயங்கர ஆர்வத்துடன் நீச்சல் பயிற்சி கொள்கிறான். அதே ஊரைச் சார்ந்த இளைஞனான கொச்சுவா அவனுக்கு உதவுகிறான். சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறான். ஒரு கட்டத்தில், விமானத்தில் பறப்பதல்ல, நீச்சலே அவனது எதிர்காலம் என்கிற 'கண்டுபிடிப்பு' அந்தப் பயணத்தின் மூலமாக நிகழ்கிறது. குஞ்சாக்கோ கோபன் இந்தப் படத்தை தயாரித்து முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் சிறுவனை மையப்படுத்தியே பெரும்பாலான காட்சிகள் அமைந்திருக்கின்றன. சித்தார்த்தா சிவாவின் அற்புதமான இயக்கம்.

ஏறத்தாழ எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த 'பின்னேயும்' கலைத் திரைப்பட ரசிகர்களால் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலோனோர் தங்களின் ஏமாற்றத்தையே தெரிவித்தார்கள். 'ஒழிவுதிவசத்தே களி' இந்த வருடத்தின் முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று.  இடைத்தேர்தல் மூலம் கிடைக்கும் ஒரு விடுமுறை நாளை குடியுடன் கொண்டாட சில இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தின் மூலம் சமூகத்தின் வர்க்க முரண்கள், அதன் அரசியல், சாதியப் பெருமிதங்கள், பாகுபாடுகள், தனிநபர்களிடம் உறைந்திருக்கும் வக்கிரம் குடியின் மூலமாக வெளிப்படும் தருணங்கள் போன்றவற்றின் மீது இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு குறிப்பிட்டிருப்பவை தவிர, மம்மூக்காவின் 'புதிய நியமம்'  ''கசாபா', லாலேட்டனின் 'ஒப்பம்' 'Guppy', ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்த 'Oozham' போன்ற பல குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள் 2016-ம் வருடத்தை சுவாரசியமாக்கின.

***

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி வணிகநோக்கு திரைப்படங்களின் வார்ப்பிலும் கூட ஆரோக்கியமான, தரமான முயற்சிகளை தர முடியும் என்பதை மலையாள திரையுலகம் நிரூபித்திருக்கிறது. 'ஒரே பாடலில் பணக்காராகும்' அதிநாடகத்தனங்கள் பெரும்பாலான திரைப்படங்களில் இல்லை. அவ்வாறான மாற்றங்கள், வளர்ச்சிகளை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடன் காட்சிப்படுத்த திரைக்கதையில் அதிக  சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். மலினமானதாக அல்லாமல், தரமான, இயல்பான நகைச்சுவைகள் மிளிர்கின்றன.

கேரள  நிலவெளியின் அழகியல் பெரும்பாலான படங்களில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது. உதாரணமாக 'மகேஷிண்டே பிரதிகாரம்' திரைப்படத்தின் துவக்க காட்சிகள் 'இடுக்கி' பிரதேசத்தின் அழகியலையும் கலாசாரத்தையும் ஓர் அற்புதமான பாடலின் பின்னணியில் விவரிக்கிறது. 'ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம்' திரைப்படத்தில் நாயகன் 'நிவின்பாலிக்கு' எதிராகவே அவரது தந்தையை ஒருவன் வசைபாடுகிறான். தமிழ்ப்படங்களை பார்த்து வளர்ந்திருந்த நான், அந்த இடத்தில் நிச்சயம் ஒரு சண்டைக்காட்சி இருக்கும் என உறுதியாக நம்பினேன். அவ்வாறான வசையது. ஆனால் உள்ளுக்குள் அடக்கப்பட்ட கோபத்துடன் நாயகன் நகர்ந்து விடுவதாக காட்சி அமைந்திருந்தது ஆச்சரியம். இறுதியில் கூட தனது விவேகத்தின் மூலமும் நல்லியல்பின் மூலமும்தான் நாயகன் பழிவாங்குகிறான்.


வணிகப் படங்களாக இருந்தாலும் கூட கேரள மண்ணின் ஆன்மா வெளிப்படும் வகையில் திரைக்கதைகளை அமைக்கும் இயக்குநர்களின் நுண்ணுணர்வும் திறமையும் வியக்க வைக்கின்றன. இயல்பான திரைக்கதை, மிகையல்லாத உணர்ச்சிகள்,  சுவாரசியமான காட்சிகள் போன்றவை இத்திரைப்படங்களை அதிகம் வியக்க வைக்கின்றன. 2017-ம் வருடத்தின் மலையாளத்தின் திரைப்படங்கள் கடந்த ஆண்டை விடவும் அதிக பாய்ச்சலை நிகழ்த்தும் என்கிற உத்தரவாதத்தை இந்த திரைப்படங்கள் தருகின்றன. 

(புதிய தலைமுறை ஆண்டுமலர் -2016 -ல் பிரசுரமானது)

suresh kannan

Monday, May 29, 2017

வனநாயகன் - காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்

தொழிற்சங்கம் உருவாக முடியாத, பணிப்பாதுகாப்பில்லாத தொழிலாளா்களைக் கொண்டது ஐ.டி எனப்படும் தகவல் நுட்பம் சார்ந்த துறை. இதர துறைகளோடு ஒப்பிடும் போது இதில் வருமானம் சற்று கூடுதல்தான் என்றாலும் வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக ஊழியர்களை சக்கையாக பிழிந்து விடும்  தன்மையைக் கொண்டது என்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்கிற அபாயக்கத்தி இருக்கையின் கீீழே பதுங்கியிருக்கும். சுருங்கச் சொன்னால் திரசங்கு சொர்க்கம் அல்லது டை கட்டிய அடிமைத்தனம்.

இப்படி நிர்வாகத்தால் மனச்சாட்சியின்றி திடீரென்று வெளியேற்றப்படுவதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில ஐ.டி. பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னது திகிலாகவும் மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல்  அவர் திடீரென்று  பணிநீக்கம் செய்யப்படுகிறார். அன்றைய நாள் பணிக்கு வரும் போதுதான் அவருக்கே அந்த விஷயம் தெரியும். இதை அறிந்து மேலதிகாரியின் அறைக்குச் சென்று வாக்குவாதம் கூட செய்ய அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார். வேதனையுடன் அவர் தன் இருக்கைக்கு திரும்பும் போது வழியிலுள்ள ஒரு கதவைத் திறப்பதற்காக தனக்கு தரப்பட்டிருந்த ஸ்வைப்பிங் கார்டை உபயோகிக்கிறார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அதற்குள்ளாகவே நிர்வாகம் அதை செயலிழக்க வைத்திருக்கிறது. 'இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எத்தனை உழைத்திருப்பேன், எப்பேர்ப்பட்ட அவமானம் இது" என்று கண்ணீர் வடிய பேசிக் கொண்டிருந்தார் அவர்.

***

ஆருர் பாஸ்கர் எழுதிய 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' எனும் புதினம்,  தமது பணியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்படும் ஒரு  ஐ.டி. பணியாளரைப் பற்றிய அதிர்ச்சியில் இருந்து துவங்குகிறது. ஆனால் இது ஐ.டி. ஊழியர்களின் துயரங்களைப் பற்றி பேசும் பரிதாபங்களின் தொகுப்பல்ல. மலேசியாவின் பின்னணியில் இயங்கும் இந்தப் புதினம், ஒரு திரில்லருக்கான வேகத்துடன் பணி நீக்கத்திற்கு பின்னால் உள்ள பிரம்மாண்டமான வணிக சதியை பரபரப்பான பக்கங்களில் விவரிக்கிறது. 

நூலாசிரியர் ஆருர் பாஸ்கரின் முதல் புதினமான 'பங்களா கொட்டா' கிராமப்பின்னணியில் உருவான எளிய நாவல். வனநாயகன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மலேசிய நாட்டின் பிரம்மாண்ட பளபளப்பு பின்னணியில் இயங்குகிறது. பணிக்காக தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் இளைஞனான சுதா என்கிற சுதாங்கன், அந்நிய பிரதேச காங்கிரீட் வனத்தில் எதிரி எவரென்றே தெரியாத புதிருடன், காற்றில் கத்தி வீசுவது போல தன் பிரச்சினைக்காக தன்னந்தனியாக போராடுகிறான். 

இது தொடர்பான பரபரப்பை தக்க வைத்துக் கொள்ளும் இந்தப் புதினம், அதே சமயத்தில் ' இருளின் பின்னாலிருந்து உதித்த அந்த மர்ம உருவம் கத்தியுடன் பாய்ந்தது, .தொடரும்' என்கிற ரீதியில்  மலினமான திரில்லர் நாவலாகவும் கீழிறங்கவில்லை. உடல் சார்ந்த சாகசங்களின் மிகையான அசட்டுத்தனங்கள் இல்லை. புத்திக்கூர்மையுடன் நாயகன் போடும் திட்டங்கள் எதிர் தரப்பை கச்சிதமாக வளைத்து அவனுக்கு சாதகமாகும் தற்செயல் அபத்தங்களும் இல்லை. நடுத்தர வர்க்க மனநிலையில் குழம்பித் தவிக்கும் ஓர் இளைஞன், தனக்கெதிரான அநீதியை நோக்கி  அதன் சாத்தியங்களுடன் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை மட்டுமே நாயகன் செய்கிறான். இந்த தன்மையே இந்தப் புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையையும் இயல்பையும்  அளிக்கிறது. 

***

மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பன் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 

புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.


***

வங்கி இணைப்பு பணியின் இறுதி நாளன்று நிகழும் விநோதமான, மர்மச் சம்பவத்தில் இருந்து துவங்கும் இந்தப் புதினம், பிறகு முன்னும் பின்னுமாக பயணிக்கும் அதே சமயத்தில்  வாசிப்பவர்களுக்கு எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் சுவாரசியமான அத்தியாயங்களுடன் விரிகிறது. புதினம் முழுக்க சுதாங்கனின் நோக்கில் தன்னிலை ஒருமையில் விவரிக்கப்படுவதால் நாமே அவனுடைய அனுபவத்திற்குள் விழுந்து விட்ட நெருக்கமான வாசிப்பனுபவத்தை தருகிறது. 

சுதாவின் நெருங்கிய நண்பனான ரவி, எரிச்சலூட்டும் சகவாசி ஜேகே, வாகன ஓட்டுநர் சிங், புலனாய்வு இதழ் நிருபர் சாரா, முகம் பார்க்காமல் இணைய உறவில் மட்டும் நீடித்து பிறகு அதிர்ச்சி தரும் ஓவியா,  மெல்லிய காதலோடு காணாமற் போகும் சுஜா, வெவ்வேறு முகங்கள் காட்டும் தந்திரக்கார அதிகாரிகள் சம்பத், லட்சு என்று ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் தனித்தன்மையோடு துல்லியமாக உருவாகியிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான உராங்குட்டான் குரங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதையும் மனிதர்களின் லாபங்களுக்காகவும்  வக்கிரங்களுக்காகவும் அவை துன்புறுத்தப்படுவதையும் பற்றிய கவலைக் குறிப்புகளும் புதினத்தில் இடையில் பதிவாகியுள்ளன. 

நாயகனின் பணிநீக்கத்திற்கான காரணத்தை தேடி அலைவதான பரபரப்பின் பாவனையில் இந்தப் புதினம் இயங்கினாலும் இதன் ஊடாக இயற்கை வளங்களின் சுரண்டல், புதையலைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை, அதற்காக அவர்கள் செய்யும் கீழ்மைகள், நல்லவனற்றிற்கும் தீயவனவற்றிற்கும் இடையே நிகழும் ஒயாத  போர், தனிநபர்களின் நிறைவேறாத  ஆதாரமான விருப்பங்கள், அவற்றிற்கான தேடல்கள், உளைச்சல்கள் என பல்வேறு விஷயங்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. 

ஐ.டி பணியின் சூழல், அத்துறை பணியாளர்களின் பிரத்யேகமான மனோபாவங்கள், அவைகளில் உள்ள பிளாஸ்டிக் தன்மை தொடர்பான குறிப்புகளும் அபாரமாக பதிவாகியுள்ளன. புலம் பெயர்ந்து நீண்ட காலமாகி அங்கேயே உறைந்து விட்ட எழுத்தாளர்களின் பாணி வேறு. தமிழகத்திலிருந்து சென்று தற்காலிகமான விலகலில் ஒரு குழந்தையின் கண்களுடன் புதிய உலகை விழி விரிய நோக்கி, எப்போது வேண்டுமானாலும் தாயகத்திற்கு திரும்பி விடும் நோக்கில் அமையும் படைப்புகள் வேறு. இரண்டாவது பாணியில்,  இந்தப் புதினம் சிறப்புற உருவாகியுள்ளது. 


வன நாயகன், அதன் தலைப்பிற்கேற்ப பல்வேறு மிருகங்களின் குணாதிசயங்கள் அடங்கிய நபர்களின்  இடையில் போராடி விடைகாண்பவனைப் பற்றிய பயண அனுபவமாக சுவாரசியத்துடன் உருவாகியிருக்கிறது. 
**

வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம்,  முதல் பதிப்பு டிசம்பர் 2016
பக்கங்கள் 304, விலை ரூ.275

(அம்ருதா இதழில் வெளியானது)

suresh kannan

Sunday, May 28, 2017

குற்றம் 23: கருப்பையில் சிக்கியிருக்கும் பெண் விடுதலை

இந்தக் கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருக்கும் தமிழ் திரைப்படமான குற்றம் 23 பற்றியது.  என்றாலும் அந்த சினிமாவைப் பற்றி மட்டும் பிரத்யேகமாக உரையாடாமல் அதனுள் உட்பொருளாக அடங்கியிருக்கும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் பேசப் போகிறது. குறிப்பாக பெண்களின் கருப்பை அரசியல் பற்றி.  அதற்கு முன் திரைப்படத்தைப் பற்றி சிறிது பார்த்து விடலாம். 

***

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இயங்கினாலும் பெரிய அளவிலான வெற்றியை ருசிக்காத துரதிர்ஷ்டசாலிகள் நிறைய பேர் உண்டு. நாயகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை அதுவொரு பெரிய பட்டியல். அவர்களில் சிலர் மட்டும் சளைக்காமல் நீந்திக் கொண்டேயிருப்பார்கள். சற்று ஆவேசமாக முன்னகரும் போது நீரின் மேற்பரப்பில் அவர்களின் முகம் சற்று நேரம் தெரியும். பின்பு மீண்டும் அமிழ்ந்து விடும். என்றாலும் அவர்கள் தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார்கள். அவ்வகையான தொடர் முயற்சியாளர்களில்  ஒருவராக அருண் விஜய்யைச் சொல்லலாம்.  செல்வாக்கான பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் வெற்றி என்பது அவருக்கு அபூர்வமாகவே சாத்தியமாகியிருக்கிறது. சேரனின்  'பாண்டவர் பூமி' போன்ற சில திரைப்படங்கள் மூலமாக மட்டுமே அவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர முடிகிறது. மற்றபடி நிறைய தோல்வி மசாலாக்கள்.

கெளதம் மேனனின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் எதிர்நாயகன் பாத்திரம் என்றாலும் அதிலுள்ள சவாலுக்காகவே ஏற்ற துணிச்சலின் பரிசை அருண் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறார் . 'ஈரம்' என்கிற தனது முதல் திரைப்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்த  இயக்குநர் அறிவழகனிடம் தம்மை ஒப்படைத்துக் கொண்டது அவரது அடுத்த புத்திசாலித்தனம். கெளதம் உருவாக்கும் 'போலீஸ்' திரைப்படங்களின் நாயகத்தன்மை 'குற்றம் 23' திரைப்படத்திலும் எதிரொலிக்கிறது. நேர்மையான காவல் அதிகாரி, கண்ணியமான காதலன், சமூகக்குற்றங்களை செய்யும் வில்லன்களுக்கு எதிராக துணிச்சலுடன் போராடுவது என்று தன் பாத்திரத்தை திறமையாக கையாண்டிருக்கிறார் அருண். 

சமூகப் பிரச்சினைகளை, தமிழ் சினிமா பெரும்பாலும் ஊறுகாயாகவே பயன்படுத்திக் கொள்ளும். அந்தச் சிக்கல்களை தீர்ப்பதின் மூலம் தன்னை அவதார நாயகனாக முன்நிறுத்திக் கொள்ளும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை பல நாயகர்கள் காலம் காலமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருபுறம் குளிர்பான விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கும் அதே ஹீரோ, மறுபுறம் நீர் ஆதாரம் சுரண்டப்படும் விவசாயிகள் பிரச்சினைகள் தொடர்பாக திரையில் ஆவேசமாக வசனம் பேசும் அபத்தமும் நிகழத்தான் செய்கிறது.  

'ரமணா' திரைப்படத்தின் ஒரு பகுதியைப் போன்று  மருத்துவத் துறையில் நிகழும் மோசடிகளைப் பற்றி சில தமிழ் சினிமாக்கள் ஏற்கெனவே பேசியிருந்தாலும் அவைகளில் வணிக அம்சங்களே அதிகமிருந்தன. 'குற்றம் 23' திரைப்படத்திலும் அவ்வாறான  வணிக விஷயங்கள் கலந்திருந்தாலும் தன்னுடைய மையத்தை நோக்கி முன்னகர்வதில் பெரும்பாலும் நேர்மையைக் கடைப்பிடித்திருக்கிறது. இதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

சில அரிதான நேர்மை அடையாளங்களைத் தவிர்த்து விட்டு, காவல்துறை இயங்கும் லட்சணங்களை நாம் செய்திகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் பார்த்து வருகிறோம். ஆனால் தமிழ் சினிமா தனது வணிகத்திற்காக காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய மிகையான சி்த்திரங்களை முன்வைக்கிறது. சமூகத்தில் உருவாகும் குற்றங்களுக்கு சில தனிநபர்கள் மட்டுமே காரணம் என்பது போலவும் அவதார நாயகர்கள் அந்த தீயவர்களை வதம் செய்து விட்டால் குற்றங்கள் காணாமல் போய் விடும் என்பது போன்ற எளிய தீர்வுகளை முன்வைப்பதின் மூலம் குற்றங்களின் ஊற்றுக் கண்களை மழுப்பி மறைக்கும் வேலையையும் செய்கிறது. 

சமூகக் குற்றங்கள் உருவாவதற்குப் பின் இந்த அமைப்பின் பல்வேறு சிக்கலான கண்ணிகள் செயல்படுகின்றன. குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிக்கும் அசுரர்கள் அல்ல. அவர்கள் இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துதான் உருவாகிறார்கள். அவர்கள் உருவாவதற்கு இந்தச் சமூகமும் காரணமாக இருக்கிறது. இது சார்ந்த பல்வேறு பரிமாணங்களைப் பற்றி உரையாடாமல் காவல்துறை என்கிற நிறுவனத்தின் மூலம் சில தனிநபர்களை சாகடித்து விடுவதாலும் சிறையில் தள்ளி விடுவதாலும் குற்றங்கள் மறைந்து விடும் என்பது அறியாமையே. 

இது சார்ந்த சில குறைகள் இந்த திரைப்படத்தில் இருந்தாலும் இத்திரைப்படம் பயணிக்கும் ஆதாரமான பிரச்சினையில் இருந்து சில கருத்துக்களை நாமாக விரித்து சிந்தனைகளுக்கு உள்ளாக்கும் அவசியத்தை உருவாக்குகிறது***

இந்த திரைப்படத்தின் கதையும் சம்பவங்களும் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்.

கிறிஸ்துவ தேவாலாயத்தில் ஒரு பெண்ணும் பாதிரியாரும் கொல்லப்படுகிறார்கள். தொடர்ந்து வேறு சில மரணங்கள் நிகழ்கின்றன.  உதவி ஆணையர் வெற்றி (அருண் விஜய்)  இந்த தொடர் குற்றங்களைப் பற்றி விசாரிக்கிறார். இறந்தவர்கள் அனைவரும் பெண்கள். ஒவ்வொரு கண்ணியாக பற்றிக் கொண்டு முன்னகரும் போது இறந்தவர்கள் அனைவரும் கர்ப்பிணிப் பெண்கள் என்று தெரியவருகிறது. இந்த ஒற்றுமை அவரை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறது. இறந்து போனவர்களில் அவருடைய அண்ணியும் ஒருவர். எனவே இதை தனிப்பட்ட துயரமாகவும் எடுத்துக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார் வெற்றி. இந்த மரணங்களுக்குப் பின்னேயுள்ள மருத்துவ மோசடிகளும் சதிகளும் துரோகங்களும் ஒவ்வொன்றாக தெரியவருகின்றன. 

ஆண்களிடமுள்ள குறைபாட்டால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களுக்கு நவீன விஞ்ஞானம் செயற்கை முறை கருத்தரிப்பு எனும் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறது. இதில் பல முறைகள் உள்ளன. இந்த திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் மருத்துவமனையானது அவற்றில் ஒரு முறையை தங்களை நாடி வரும் பெண்களுக்கு பரிந்துரைக்கிறது. அதன்படி கணவனின் உயிரணுக்களை எடுத்து மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி விடுவார்கள். இயற்கையான முறையில் நிகழும் பாலுறவின் வழியாக கர்ப்பம் தரிக்கவில்லை என்கிற விஷயத்தை தவிர தன் கணவனின் மூலமாக வாரிசு ஒன்றை அடைகிறோம் என்கிற திருப்தி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்படும். மலடி என்று சமூகத்தால் இகழப்படும் மனப்புழுக்கத்திலிருந்தும் அவர் வெளிவரலாம். 

 மருத்துவமனையானது, வணிக நோக்த்திற்காக  ஒரு மோசடியை செய்கிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவருடைய உயிரணுக்கள் ஒரு குழந்தையை உருவாக்குவதற்கான போதுமான தகுதியோடு இல்லை என்றால் வேறொரு அநாமதேய ஆணின் உயிரணுக்களை பயன்படுத்தி கர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. இதுவும் நடைமுறையில் உள்ளதுதான் என்றாலும்   சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இதை மறைப்பது குற்றம். தார்மீகமாக அநீதியும் கூட. இந்த உணர்வுரீதியான மோசடியையும் துரோகத்தையும் மருத்துவ நிலையம் செய்கிறது.  தங்களின் வழியாக உருவான வாரிசு என அந்த தம்பதியினர் நினைத்துக் கொண்டிருக்கும் போது அது அவ்வாறாக இல்லை என்றாகி விடுகிறது. முற்போக்கான எண்ணமுள்ளவர்கள் இந்த மாற்று ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொள்வர். மேலைய நாடுகளில் இது வழக்கத்தில் உள்ள நடைமுறைதான். ஆனால் கற்பு என்பது ஒழுக்க மதிப்பீடுகளோடு அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கும் இந்தியா போன்ற தேசங்களில் இதை ஏற்பதில் நிறைய கலாசார சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மனச்சிக்கல்கள் இருக்கின்றன. 

இந்தப் பலவீனங்களைத்தான் இதில் வரும் வில்லன் பயன்படுத்திக் கொள்கிறான். மருத்துவமனை செய்யும் மோசடியின் உள்ளே நுழைந்து அதனினும் கூடுதலான துரோகத்தைச் செய்கிறான். அதற்கு அவனுடைய தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. தன் மூலமாக ஒரு வாரிசு உருவாக வேண்டும் என்பதில் வெறியாக உள்ளவன் அவன், இது குறித்து மனைவியுடன் ஏற்படும் சச்சரவு காரணமாக அவளைக் கொன்று விடுகிறான். தனது நோக்கம் தடைபட்டு விடுவதால் மருத்துவ நிலையத்தில் ரகசியமாக புகுந்து விந்து வங்கியில் தன்னுடைய உயிரணுக்களை சேர்த்து விடுகிறான். இதன் மூலம் தன்னுடைய வாரிசு பல பெண்களின் வழியாக உருவாகும் என்கிற குரூர திருப்தி அவனுக்கு. அவனுடைய நண்பர்கள் பணத்தாசை உள்ளவர்கள் என்பதால் சம்பந்தப்பட்ட பெண்களைத் தொடர்பு கொண்டு இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி பணம் பறிக்கத் துவங்குகிறார்கள். இந்த மோசடி தொடர்பாகத்தான் பெண்களின் மரணங்கள் நிகழ்கின்றன. 

மருத்துவமனையால் ஏமாற்றப்படும் பெண்களைத் தவிர இதிலுள்ள ஆபத்தான வேறு சில விதிவிலக்குகளையும் படம் சுட்டிக் காட்டுகிறது. கணவருக்கு தகுதியிருந்தாலும் சில காரணங்களுக்காக வேறொரு ஆணின் உயிரணுக்களின் மூலம் கர்ப்பம் ஈட்டிக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். தமக்குப் பிடித்தமான வெற்றிகரமான கிரிக்கெட் வீரனைப் போலவே தன்னுடைய குழந்தையும் உருவாக வேண்டும் என நினைக்கும் ஒரு பணக்காரப் பெண், அந்த கிரிக்கெட் வீரனின் உயிரணுக்களை ரகசியமாக பெரும் பணம் கொடுத்து வாங்கி கர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கிறாள். தன் மகளுக்கே தெரியாமல் இந்த அநீதியைச் செய்யும் ஓர் அரசியல்வாதியின் குரூரமான செயலும் படத்தில் சித்தரிக்கப்படுகிறது. ***

ஒரு குழந்தையை, தம் வாரிசை உருவாக்குவதில் ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் இணைவதுதான் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் இது சாத்தியப்படாத சூழலில் அதற்கான காரணங்கள் ஆராயப்படாமல்  பெண்ணின் மீதுதான் எல்லாப் பழிகளும் சுமத்தப்படுகின்றன. அவள் மலடி என்று சமூகத்தால் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறாள். "அண்ணியின் சாவிற்கு நீயும்தானே காரணம், எப்ப விசேஷம்' னு கேட்டு அவங்களை சாகடிச்சிட்டே  இருந்தே" என்று இத்திரைப்படத்தின் நாயகன் தன் தாயை நோக்கி கேட்கிறான். 

இந்தச் சிக்கலில் இருந்தும் மனப்புழுக்கத்தில் இருந்தும் வெளியேற பெண்ணுக்கு எவ்வித வாய்ப்பும் தரப்பட்டதேயில்லை. ஆணிடம் குறைபாடு இருந்தாலும் அந்தப் பழியையும் இணைத்து பெண்ணே ஏற்க வேண்டியிருக்கிறது. ஆனால் மறுபுறம் இதற்கான எவ்வித பழியையும் ஏற்க வேண்டியில்லாத சூழலில் வேறொரு திருமணத்தின் மூலம் ஆணுக்கு இன்னொரு வாய்ப்பையும் தர இச்சமூகம் தயாராக இருக்கிறது. 

ஆனால் நவீன மருத்துவம் இதற்கான மாற்றைக் கண்டுபிடித்திருப்பதின் மூலம் பெண்ணின்  துயரத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள பழமைவாத சிந்தனையில் ஊறிப் போன சமூகம் தயங்குகிறது. அப்போதும் பெண்ணே பலியாக வேண்டியிருக்கிறது. 

ஏன் பெண்ணைக் குறிவைத்தே இத்தனை சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன? மனித வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.


***


மனித குலம் உருவாகிய காலக்கட்டத்தில் வேட்டையாடும் சமூகமாக இருந்தது. அப்போதைக்கு தேவையான உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி உண்பதின் மூலம் ஓரிடத்தில் நிலையாக தங்காமல்  நாடோடிகளாகவே இருந்தனர். அவர்களுக்குள் நிறைய சண்டைகள் உருவாகிக் கொண்டே இருந்தன. குழுக்கள் உடைந்து மேலும் குழுக்களாக சிதறி பூமிப்பந்தின் பல்வேறு இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்கள். அப்போது பெண்ணே குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். குழுவை வழிநடத்தினாள். மனித உறவுகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் வரையறை செய்யப்படாத சூழலில் பாலின உறவு சார்ந்த கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தது. எவரும் எவருடனும் உறவு கொள்ளலாம் என்கிற நிலைமை. 

உடல் ரீதியாக ஒரு பெண்ணை ஆணிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம், அவளுடைய உடலின் மூலமாகத்தான் குழந்தை உருவாகிறது.. இது ஆணிற்கு அச்சத்திற்கு ஏற்படுத்தியது. அவளை கடவுளின் அம்சம் கொண்டவளாக கருதி வழிபட வைத்தது. பெண்ணின் தலைமையை ஏற்க எவ்வித மனச்சிக்கலும் இல்லாத நிலைமையை உண்டாக்கியது. தாய்வழி சமூகமாக இருந்த காலக்கட்டம் அது. 

ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டு நிலத்தைச் சார்ந்த வாழ்வுமுறை உருவாகிய பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. நகர்ந்து கொண்டேயிருக்கும் நாடோடிகளாக அல்லாமல் நிலையான வாழ்வுமுறை உண்டாகியது. தாங்கள் விவசாயம் செய்யும் இடம் தங்களுக்குத்தான் சொந்தம் என்கிற நிலவுடமை சமூக எண்ணங்கள் உருவாகின. தனக்குப் பிறகு இந்தச் சொத்துக்களை அனுபவிக்க வேண்டிய உரிமை தன்னுடைய ரத்தத்தின் மூலமாக மட்டுமே உருவான வாரிசு தேவை என்று ஆண் கருதினான். இதற்காக அவன் பெண்ணின் கருப்பையை கட்டுப்படுத்தவும் கறாராகவும் கண்காணிக்கவும் வேண்டியிருந்தது. இதர ஆண்கள் அதை அணுகாதவாறான தடுப்புகளை ஏற்படுத்த வேண்டியிருந்தது. எனவே தன் உடல் வலிமையைக் கொண்டு பெண்ணின் அதிகாரத் தலைமையைக் கைப்பற்றினான். பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமான பல்வேறு தந்திரங்களின் மூலமாகவும் ஆண்சமூகம் ஏற்படுத்தியது. 


பெண்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் இதர ஆண்களை பாலியல் நோக்கில் அணுகக்கூடாது என்பதற்காக கற்பு போன்ற கருதுகோள்கள் உருவாக்கப்பட்டன. தாலி என்கிற அடையாளத்தின் மூலம் அவள்  இன்னாரின் மனைவி மட்டுமே என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவள் மனதாலும் கூட தன் கணவரை மட்டுமே நினைத்திருந்தால் 'கற்புக்கரசி, பத்தினி' என்றெல்லாம் போற்றப்படுவாள். மாறாக இதிலிருந்து அவள் துளி தவறினால் கூட குடும்பப் பெண்ணாக கருதப்படாமல் ஒழுக்க வீழ்ச்சியின் அடையாளமாக கருதப்பட்டு இகழப்படுவாள். தன் கர்ப்பப்பையை தூய்மையாக வைத்திருந்து தன்னைக் கைப்பற்றிய ஆணின் மூலமாக மட்டும் குழந்தையை உருவாக்குவதும் அந்தக் குழந்தைகளை வளர்ப்பதும் மட்டுமே அவளின் அடிப்படையான கடமை என்கிற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. குடும்பம் என்கிற நிறுவனம் இப்படித்தான் உருவாகியது. பெண்ணின் எல்லா உரிமைகளும் சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு பெரும்பாலானவற்றை ஆண் சமூகம் கைப்பற்றியது. 

பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமலிருந்தது. அவன் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம். ஓர் ஆணுக்கு குழந்தையை உருவாக்க முடியாத குறைபாடுகள் இருந்தாலும் அதற்கும் பெண்ணேதான் காரணமாக இருக்க முடியும் என்று சமூகம் அழுத்தமாக நம்பியது. அவனுக்கு வேறு வாய்ப்புகள் தரப்பட்டன. இந்த தந்திரங்களையெல்லாம் பெண்களையே நம்ப வைத்ததுதான் ஆண் சமூகத்தின்  சாதனை. 

இந்த வரலாற்றுச் சுமையையும் ஆண்களின் துரோகத்தையும் பெண் சமூகம் பன்னெடுங்காலமாக சுமந்து வருகிறது. 


***


பெருமாள் முருகன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'மாதொரு பாகன்' என்கிற நாவலின் மீது சில மாதங்களுக்கு முன் சர்ச்சை உண்டாகியது. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை, சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த நாவல் தங்களை இழிவுபடுத்துகிறது என்று கூறி போராட்டங்களை ஏற்படுத்தினார்கள். அந்த நாவலின் உள்ளடக்கம் என்ன?


அன்பான தம்பதியொருவர் தங்களின் இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை. கணவனின் குடும்பத்தாரும் சரி, ஊராரும் சரி, இது சார்ந்த பல்வேறு விதமான  அழுத்தங்களை அந்தப் பெண்ணுக்கு தருகிறார்கள். அவளால் எந்தவொரு மங்கல நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடிவதில்லை. கணவனுக்கும் இது வருத்தம்தான். இது சார்ந்த பரிகாரங்கள், சடங்குகள் அனைத்தையும் முயன்று பார்க்கிறார்கள். எவ்வித பலனும் இல்லை. இன்னொரு திருமணத்தை செய்து கொள் என்று சமூகம் அந்தக் கணவனுக்கு பரிந்துரைக்கிறது. தன் மனைவியின் மீதுள்ள அன்பால் அவன் அந்த ஏற்பாட்டிற்கு சம்மதிப்பதில்லை.

அந்த ஊரில் வருடந்தோறும் ஒரு திருவிழா நடைபெறும். அதன் இறுதிநாளில் ஒரு சடங்கு உள்ளது. அதன்படி குழந்தைப் பேறில்லாத பெண்கள் கணவர் அல்லாத வேற்று ஆண் ஒருவனுடன் கூடி அந்த வாய்ப்பை அடைவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படுகிறது. ஆண்களின் கூட்டத்தில் தனக்குப் பிடித்தமானவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு பெண்ணுக்கு அளிக்கப்படும். இவ்வாறு அடையும் குழந்தைகள் கடவுளின் வரமாக கருதப்படுவார்கள். அந்தச் சடங்கில் கலந்து கொள்ளும் ஆணும் கடவுளின் அம்சமாகவே கருதப்படுவான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்தச் சடங்கைப் பற்றி யோசித்துப் பார்த்தால் நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பான 'செயற்கை கருத்தரிப்பு' என்கிற முறையை இன்னொரு பாணியில் அந்தக் காலத்திலேயே உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியம் உருவாகிறது. பழமைவாத சிந்தனைகளும் கடுமையான ஆச்சார சூழல்களும் நிலவிய காலக்கட்டத்தில் ஆன்மீகம் எனும் அமைப்பு வழியாக ஒரு சடங்காக இதை அமைத்திருப்பதில் முன்னோர்களின் சமயோசிதத்தையும் முற்போக்கு எண்ணத்தையும் பாராட்டத் தோன்றுகிறது. ஆணிடம் குறைபாடு இருந்தால் அது சார்ந்த பழியையும் துயரத்தையும் காலம்பூராவும் பெண்களே ஏற்றுக் கொண்டு புழுக்கத்தில் அவதியுறும் துயரத்திலிருந்து ஒரு விடுதலையை இந்தச் சடங்கு அளிக்கிறது. அதே சமயத்தில் இது சார்ந்த குற்றவுணர்வோ, ஒழுக்க  மதிப்பீடு சார்ந்த இகழ்ச்சியோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதற்கு பக்தி முலாமும் பூசப்பட்டு விட்டது. எத்தனை அற்புதமான ஏற்பாடு?

அந்த நாவலில் வரும் நாயகி, தன் கணவன் அறியாமல் சடங்கில் கலந்து கொள்கிறாள். அவள் அதுவரை அனுபவித்த துயரங்கள் அந்த நிலைக்கு அவளைத் தள்ளுகிறது. இதை பின்னால் அறியும் கணவன் துயரமும் கோபமும் கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது. 

நாவலாசிரியரான பெருமாள்முருகன், இதில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பெயரை குறிப்பிட்டு விட்டதால் அந்த ஊரின் சமூகம் இது சார்ந்த கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. 'நாங்கள் என்ன, தந்தை யாரென்று அறியாத முறையற்ற வழியில் வந்த கூட்டமா?' என்று கொதிப்படைந்ததது. குழந்தைப் பேறு அடைய முடியாத பெண்களின் துயரத்தையும், அது சார்ந்து முன்னோர்கள் ஏற்படுத்திய அற்புதமான மாற்று ஏற்பாட்டின் அவசியத்தையும் ஆண்மைய சிந்தனை உலகத்தால் சிந்திக்கவோ, சகித்துக் கொள்ளவோ முடியவில்லை. இதுவொரு குறிப்பிட்ட பிரதேசத்தின், சமூகத்தின் பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சினை. பெண் சமூகம் பன்னெடுங்காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினை. 


***

குடும்பம் என்கிற அமைப்பு உங்களை சிறைப்படுத்துமானால், பெண்களே.... உங்களின் கர்ப்பப்பைகளை தூக்கியெறியுங்கள் என்கிற ஆவேசமான அறைகூவலை முன்வைத்தார் பெரியார்.  குழந்தையைப் பெற்று உருவாக்கி வளர்த்து தரும் இயந்திரங்களாகவே பெண்கள் ஆண்களால் பார்க்கப்படுகிறார்கள் என்பதால் அவர் அப்படிச் சொன்னார். கற்பு, தாய்மை, குடும்பம் போன்ற பல கருத்தாக்கங்களும் நிறுவனங்களும் அவர்களை தந்திரமாக சிறையினுள் வைத்திருக்கின்றன என்பதால் பெண்கள் விடுதலையை நோக்கி நகர்வதற்கான பல்வேறு சிந்தனைகளை முற்போக்காளர்கள் பரப்பி வருகிறார்கள்.  

பெரும்பாலான வரலாறுகளும் சாதனைகளும் ஆண்களின் பெயராலேயே உருவாக்கப்படுகின்றன. இதற்கான காரணம் மிக எளிது. ஏனெனில் பெண்களுக்கு எவ்வித வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை. ஆண்களின் சாதனை வெளிச்சத்திற்குப் பின்னால் உள்ள இருளில் நின்று கொண்டு பெண்கள் உதவி செய்து கொண்டிருந்தாலே போதும். இந்தக் கட்டுப்பாடுகளையும் தளைகளையும் மீறி தங்களுக்கான வரலாறுகளை தாங்களே உருவாக்கிக் கொண்ட பெண்கள் சிலரே. 

“உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்களே தவிர உங்களிலிருந்து பிறக்கவில்லை” என்றார் கலீல் ஜீப்ரான். அடுத்த தலைமுறை உருவாதற்கான கருவிகள் மட்டுமே நாம்.  ஒவ்வொரு உயிருக்குமே அதனதன் வழியாக சுதந்திரமாக செயல்படுவதற்கான உரிமையுள்ளது. மனித குலத்தைத்தவிர இதர உயிரினங்கள் இயற்கையின் இந்த ஏற்பாட்டின் படிதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டுமே தங்களுக்கான பல சிக்கல்களைத் தானே உருவாக்கி வைத்துள்ளான். 

குழந்தைப் பேறு என்பது ஒரு பெண் கடந்து வரும் குறுகிய காலக்கட்டம் மட்டுமே. இயற்கை அந்த வாய்ப்பை அவளுக்கு தந்திருக்கிறது. வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே அது.  அதுவே அவளுடைய முழுமையான வாழ்க்கையல்ல. அது சாத்தியப்படாததற்காக அவள் கூச்சப்படவோ எவ்வித அவதூறுகளுக்கும் மனம் புழுங்கவோ அவசியமேயில்லை. ஆணின் பழிகளையும் ஏற்றுக் கொண்டு அவதியுறத் தேவையேயில்லை. இயற்கையின் ஆதார நோக்கமே அடுத்தடுத்த உயிர்களை  உருவாக்கி அந்தச் சுழற்சியின் மூலம் பூமியின் உயிர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும் என்பதே. பாலின்பம் என்பது அதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணி.

தாம் ஏற்படுத்திய தந்திரங்களின் மூலமாகத்தான் பெண் கட்டுப்பட்டு நடந்து கொண்டிருக்கிறாள் என்று பெரும்பாலான ஆணுலகம் நம்பிக் கொண்டிருப்பது அபத்தமானதொன்று. இந்த தளைகளை மீற வேண்டுமென்று ஒரு பெண் முடிவு செய்து விட்டால் ஆணின் தந்திரங்களை விடவும் பல மடங்கு தந்திரங்களை அவளால் மேற்கொள்ள முடியும். பெண்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் அவளது  துயரங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதே ஆண்களின் கண்ணியமான எதிர்வினையாக இருக்க முடியும்.

குழந்தைப் பேற்றிற்காக  திருமணம் எனும் நிறுவனத்தையோ கணவன் எனும் உறவையோ சார்ந்திருக்கத் தேவையில்லை என்கிற வாயப்பை நவீன விஞ்ஞானம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஆணுலகம் உருவாக்கி வைத்திருக்கும் பழமைவாத சிந்தனைகளாலும் கற்பிதங்களாலும் இனியும் பெண்கள் குழம்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆணும் பெண்ணும் இணைந்து பாலின சமத்துவத்தோடு உருவாக்குவதே இனிமையான உலகமாக இருக்க முடியும். அதில் உருவாகும் சமநிலையற்ற தன்மைகளை, குறிப்பாக குழந்தைப் பேற்றினால் உருவாகும் சிக்கல்களை பெண்ணுலகம் இனியும் சகித்துக் கொள்ளத் தேவையில்லை என்கிற ஆதாரமான செய்தியை இத்திரைப்படம் நினைவுப்படுத்துவதாக தோன்றுகிறது. 

வணிக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாக 'குற்றம் 23' அமைந்திருந்தாலும் பெண்ணுலகம் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலான விஷயத்தை மையப்படுத்தியாதாலேயே இது கவனிக்கத்தக்க படைப்பாக மாறியிருக்கிறது.

(ஜன்னல் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்)


suresh kannan