Monday, December 18, 2017

Daybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017


சில பல காரணங்களால் இவ்வருட விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தேன். எனவே அது தொடர்பான செய்திகளை பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்தேன். என்றாலும் மனதின் ஒரு பகுதி தன்னிச்சையாக அதன் பக்கம் குவிந்து கிடந்தது. அலுவலகத்திலும் சற்று புலம்பிக் கொண்டேயிருந்தேன்.

ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தால் அதுவாக உங்களைத் தேடி வரும் என்றொரு விதியும் பழமொழியும் இருக்கிறது. விழா துவங்கி நாலைந்து நாள் கழித்து நண்பர் கே.என்..சிவராமன் அழைத்தார். “ஏன் இவ்வருடம் செல்லவில்லையா? முன்பே சொல்லியிருக்கலாமே” என்று உரிமையாக கடிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தந்தார்.

அதுவரை சோம்பியிருந்த மனமும் உடலும் மினஇணைப்பு தரப்பட்ட இயந்திரம் போல ‘விர்ரென்றாகியது. அலுவலகப் பணிகளை விரைவிரைவாக செய்து முடித்தேன். அதற்கு இடையில், மாலையில் திரையிடப்படவிருக்கிற படங்களைப் பற்றிய விவரங்களை தேடினேன். அவசரத்திற்கு IMDB-ஐ நம்பலாம்.

‘KATHIE SAYS GOODBYE’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் முன்னணியில் நின்றது. அதன் பிறகு ‘DAYBREAK’ என்கிற அல்பேனிய திரைப்படம். கதைச் சுருக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.  அல்பேனியா மெல்லுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘அழுகாச்சி’ டிராமாவாக இருக்குமோ என்று தோன்றியது. எனவே அமெரிக்காவை தேர்ந்தெடுத்தென்.

அலுவலகத்தில் உள்ளவர்களை நச்சரித்து சில வேலைகளை மற்றவர்களின் தலையில் தள்ளி விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். நேரம் சுருக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு சற்று சாவகாசமாகவும் அல்பேனியாவிற்கு உடனடியாகவும். முதல் நொடியிலிருந்து ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் எனக்கு ‘என்னவோ’ போலிருக்கும்.

எனவே தீர்மானித்ததையொட்டி அமெரிக்காவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரியான போக்குவரத்து நெரிசல். ‘அமெரிக்காவா, அல்பேனியாவா’ என்று இரண்டிற்கும் இடையில் மனம் ஊசலாடிக் கொண்டேயிருந்தது. அனைத்து வாகனங்களும் உறைந்தது போல அப்படியே நிற்க, என் மனம் மட்டும் முன்னே விரைந்து கொண்டிருந்தது. பதட்டம் சற்று அதிகமாக “இது தேவையா’ என்றெழுந்த கேள்வியை புறந்தள்ளினேன்.

திடீரென ஓர் அசட்டு தர்க்கம். அமெரிக்கத் திரைப்படம் என்றால் இணையத்தில், டிவிடியில் என்ற பிற்பாடு எப்படியாவது பிடித்து விடலாம். அல்பேனியா என்றால் கிடைப்பது சிரமமாகி விடும் என்று தோன்ற சட்டென்று கட்சி மாறினேன். மனம் ஒரு monkey என்பது மற்றொருமுறை நிரூபணமாயிற்று. ஆனால் இந்த சங்கடமெல்லாம் முன்னே நின்றிருந்த கிங்கரர்களுக்கு தெரியவில்லை. கல்லுளி மங்கன்களாக நின்றிருந்தார்கள்.

ஏதோ ஒர் அதிர்ஷ்ட கணத்தில் மூக்கடைப்பு விலகியது போல நெரிசல் சற்று குறைந்து பேருந்து விரைந்த போதுதான் எனக்கும் மூச்சு வந்தது. திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு முன்னதாகவே காஸினோ திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாசலில் அனுமதிச்சீட்டை எவரும் கோரவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.

சரி, இன்று பார்த்த அல்பேனிய தேசத்து திரைப்படத்திற்கு வருவோம்.

**

DAYBREAK – இதுவொரு துயரச்சுவை கொண்ட நாடகம். Leta  என்கிற நடுத்தரவயதுப் பெண். கையில் சுமார் இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை. வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்படுகிறாள். அவளது பொருளியல் துயரம் நிதானமாக, ஆனால் அழுத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. செவிலியர் பணியில் இருந்தவள். ஆதரிக்க உற்றார்கள் இல்லாத சூழல்.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒரு கிழவியைப் பார்த்துக் கொள்ளும் சலிப்பான பணி. என்றாலும் மிக பொறுப்பாய் அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். சில சொந்த காரணங்களுக்காக கிழவியின் மகள், இவளிடம் சற்று பணம் தந்து விட்டு பிரான்ஸ் கிளம்பி விடுகிறாள்.

வீட்டின் உரிமையாளர் துரத்தியதும். வேறு வழியின்றி தன்னுடைய பணியிடத்திலேயே குழந்தையுடன் தங்கிக் கொள்கிறாள்.  கிழவிக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வருகிறது. எடுத்து வரும் தபால்காரன் 'அவள் உயிரோடு இருக்கிறாளா' என்று சோதித்து விட்டு பணத்தைத் தருகிறான். அதை வைத்துதான் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஊருக்குச் சென்ற மகள் திரும்பத் தாமதம் ஆக, இவளுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கிழவியின் மகளும் மருமகனும் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர இடிந்து போகிறாள். தங்க இடமும் இல்லாமல், செலவிற்கு பணமும் இல்லாத நிலையில் பென்ஷன் பணம் மட்டுமே அவளுடைய ஆதாரம்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இருப்பிற்காக அவள் எத்தனை கடினமானதொரு முடிவை எடுக்கிறாள் என்பதை பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள்  விவரிக்கின்றன. Survival Instinct-ம் வறுமையும் ஒருவரை எத்தனை நெருக்கடியை நோக்கி தள்ளிச் செல்லும் என்கிற ஆதாரமான செய்தி உறுத்தாமல் மிக மிக நிதானமாக சொல்லப்படுகிறது.

உதிரிப்பூக்கள் ‘அஸ்வினி’யை நினைவுப்படுத்துவது போல சோகம் ததும்பும் முகம் Ornela Kapetani –க்கு.  முழு திரைப்படத்திலும் இவளது முகம் ஒரேயொரு முறைதான் புன்னகைக்கிறது. பென்ஷன் பணம் எடுத்து வரும் தபால்காரனை வழிக்கு கொண்டு வருவதற்காக.

மிக நிதானமாக நகரும் திரைப்படத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை வெளிப்பட்டாலும் மிகையாக சிரித்து வைப்பது ‘பிலிம் பெஸ்டிவல்’ மரபு. இன்றும் அப்படியே ஆயிற்று. படுக்கை கிழவியாக நடித்திருந்தவரின் பங்களிப்பு அபாரம். வெளியே சென்று விட்டு கதவைத் திறந்து வருபவள், படுக்கையில் கிழவியைக் காணவில்லை என்பதும் பதறி விடுகிறாள். நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றுகிறது. ஆனால் கிழவி, இவளுடைய குழந்தையை வைத்துக் கொண்டு ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.

நிலவு நட்சத்திரங்களைப் பற்றி கிழவி பேசுவதும், ‘என்னைப் பற்றி ஒருமுறை கூட விசாரிக்கவில்லையா?” என்று தொலைபேசியில் மகள் விசாரிப்பதும் என படத்திற்குள் சில நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

அகாதமி விருதிற்காக அல்பேனியா தேசத்தின் சார்பில் தேர்வாகி அனுப்பப்பட்டிருக்கிற திரைப்படம்.  டிராமா பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

**

மிச்சமிருக்கிற நாட்களில் நேரத்தை பிழிந்து எப்படியாவது சில திரைப்படங்களை பார்க்கலாம் என உத்தேசம். இந்த முறை அண்ணாசாலையில், அருகருகிலேயே அரங்கங்கள் அமைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைவாணர் அரங்கம் தயாராகியும் அது ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. என்ன அரசியலோ?

suresh kannan

No comments: