Showing posts with label சுயம். Show all posts
Showing posts with label சுயம். Show all posts

Wednesday, March 21, 2012

மீண்டு(ம்)...



சற்று இடைவெளியாகி விட்டது. என்னை நான் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தேனோ அதற்கு முற்றிலும் எதிர்பக்கமாக நானிருக்கிறேன் என்று எனக்கு என்னையே அடையாளங் காட்டிய தருணங்கள். அகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்லதொரு வடிகால் எழுத்து. மாறாக எங்கோ அடைத்துக் கொண்டு விட்டது்; முடங்கிப் போயிற்று. அதைப் ப்ற்றி எழுதுவதன் மூலமே இதைக் கடந்து வரலாம் என்று சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். காய்ந்த எலும்பை கடித்து தன் குருதியை தானே ருசிக்கும் நாய் போல மஸோக்கிஸ மனம் பிரச்சினைகளிலிருந்து வரும் துன்பத்தில் ஆழந்து ருசிகண்டு விட்டது. விளைவாக வேறு எதைப் பறறியும் யோசிக்க முடியவில்லை. வரவேற்பறை சுவரில் ஒட்டப்பட்டிருந்த பாரதி வேறு ' தேடிச் சோறு நிதந் நின்று' என்று குற்றவுணர்வுள்ளாக்கிக் கொண்டிருந்தான். இளங்கலையில் எடுத்துப் படித்த உளவியல் என்னும் ஏட்டுச் சுரைக்காய் சுயபாகத்திற்கு சற்றும் உதவவில்லை.

சரி. இதைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்....

விதியின் கைகளில் என்னை ஒப்படைத்து விட்ட இந்த இடைவெளி காலத்தில், "சமீபமாக ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டு தினமும் ஓரிரண்டு மின்னஞ்சல்களாவது வந்துக் கொண்டேயிருந்தன. இப்போதும் தொடர்வதுதான் எனக்கே ஆச்சரியம். அந்த நட்புக் குரல்களின் கைகளைப் பிடித்தாவது சற்று சுதாரித்து எழுந்துக் கொண்டிருக்கலாம். மாறாக நான் பெரும்பாலும் எந்த ஒரு மடலுக்குமே பதிலளிக்கவிலலை. தாமாக புரிந்து கொண்டவர்கள் தவிர மற்ற ஒரு சிலர் 'தலைக்கனம்' என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். தவறில்லை. அதுவும் சற்று உண்டு.

அந்தக் கடிதங்களுக்கு பதிலளிக்க எனக்கு கூச்சமாயிருந்தது என்பதுதான் உண்மை. என் எழுத்தின் மீது நானே பெரும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் 'உங்கள் எழுத்தை ஏன் அச்சு வடிவில் கொண்டு வரக்கூடாது?' என்ற கேள்விகளெல்லாம் உள்ளூர பரிகாசம் உறைந்து போனவைகளோ என்கிற குறுகுறுப்பு எழுகிறது. (அச்சு வடிவில் வருபவைதான் சிறந்த எழுத்து என்கிற கற்பிதங்களையும் இங்கு தாண்டி வர வேண்டியிருக்கிறது).

சமீபமாக எதுவும் எழுதாத நிலையிலும் என் வலைப்பக்கத்தை தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் வாசிக்கிறார்கள் என்று வரும் புள்ளிவிவரங்கள் என்னை அற்ப மகிழ்ச்சியிலும் சங்டத்திலும் தொடர்ந்து எழுதாதது குறித்த குற்றவுணர்விலும் ஆழ்த்துகிறது. அபூர்வமாக நானே என் வலைப்பக்கத்திற்கு செல்லும் நள்ளிரவிலும் கூட  யாரோ ஒருவர் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டும் தகவல் என் பொறுப்பை உணரச் செய்கிறது. (அந்த ஒருவர் யாரோ அல்ல, உன்னுடைய ஐடிதாண்டா முண்டம் என்று நண்பர் சொல்வது நிச்சயம் பொய்யாகத்தானிருக்க வேண்டும்).  

ஆகவே.. நண்பர்களே...சுமாரான இடைவெளியில் கூட ஒருவரை முழுமையாக மறந்து போகக்கூடிய சாத்தியமுள்ள இந்த பரபரப்பான வாழ்வியல் சூழலில் இன்னமும் நினைவு வைத்துக் கொண்டுள்ள அன்பு உள்ளங்களுக்கு மிகப் பணிவான வணக்கம். இந்த ஆதரவுடன் மீண்டும் எழுதிப் பார்க்கலாம் என்று உத்தேசம்.

இது போன்ற கண்ணீர் சற்று கசியும் கடிதங்களை நானே முன்னர் பரிகாசம் செய்திருப்பேன். இப்போது இதுவே ஆசுவாசம் தருகிறது என்பதுதான் விந்தை.  பொதுவாக நான் நட்பை புறவயமாக பேணுவதில் அத்தனை அக்கறை கொண்டவனில்லை. என்றாலும் இந்த சிக்கலான சூழலில் சில அந்தரங்கமான நண்பர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்.
 

suresh kannan