Showing posts with label ஏ.ஆர். ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ.ஆர். ரஹ்மான். Show all posts
Wednesday, January 13, 2010
விண்ணைத் தாண்டி வரும் ரஹ்மானின் இசை
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த இந்தத் திரைப்படத்தின் இசைப்பாடல்கள் நேற்று வெளியாகியது. இதுவரை ஹாரிஸ் உடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த கெளதம் மேனன் முதன் முறையாக ரஹ்மானை அணுகியதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. ஆஸ்கர் வாங்கின கையோடு வெளிவரும் ரஹ்மானின் முதல் தமிழ் சினிமா இசை என்பதும் கூடுதல் காரணம். இதன் இசை வெளியீட்டு விழா லண்டனில் நிகழ்ந்திருந்தாலும் தமிழ்நாட்டில் இப்போது ரீலிஸாகி குறுந்தகட்டிற்கான விற்பனை முன்பதிவே சில ஆயிரங்களைக் கடந்து விட்டது என்று மியூசிக் கம்பெனி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். கெளதமின் ஆஸ்தான பாடலாசிரியை தாமரையே எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் என்பது கேட்பனுபவத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.
ரஹ்மான் இந்த எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. இந்த இசைப்பாடல்களில் ரஹ்மானின் படைப்பு இன்னும் கூடுதல் தரத்துடன் இருப்பதாகத் தோன்றுவது என்னுடைய பிரமையாகவும் இருக்கலாம். ரஹ்மான் இப்போது சர்வதேச இசை சமூகத்துக்கு மிக நெருக்கமானவராகி விட்டதால் தம்முடைய படைப்புகள் எல்லாவிதத்திலும் அந்த தரத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுடைய இசைக்கோர்வைப் பணியை இன்னும் மேம்படுத்தி செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன்.
இசை குறித்த எந்தவொரு அடிப்படை ஞானமும் இல்லாவிட்டாலும், தமிழ்த் திரைப்பாடல்களை தொடர்ந்து கேட்டு வருபவன் என்கிற முறையில் 'ஒரு பாமரனின்' பார்வையில் இது எழுதப்பட்டது என்பதை மாத்திரம் நினைவில் நிறுத்தவும்.
(1) ஓமணப் பெண்ணே..
அற்புதமான மெலடியிது. 'அழகிய தமிழ் மகன்'-ல் .'நீ மர்லின் மன்றோ' பாடின அதே ஸ்டைலிஷான பாணியில் மிகவும் அனுபவித்துப் பாடியிருக்கிறார் பென்னி தயாள். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பின்னணியில் ஒலிக்கிற அற்புதமான ரிதம். இடையில் கல்யாணி மேனன் பாடின மலையாள வரிகள் வருவதால், நாயகன் நாயகியை மலையாளப் பின்னணியில் ரசித்து பாடுகிற பாடலாக இருக்கலாம். பாடலின் தலைப்பும் அதை உறுதிப்படுத்துகிறது. பாடலின் இறுதிப் பகுதியில் மேற்கத்திய இசைக்கருவிகளோடு தமிழிசையான நாதஸ்வரமும் மிக அற்புதமான கலவையாக இயைந்து ஒலிக்கிறது. தாமரையின் வரிகளில் குறிப்பிடத்தகுந்த எந்த புதுமையில்லை. .. நீ போகும் வழியில் நிழலாவேன்..' என்கிற மாதிரியான வழக்கமான தமிழ்சினிமா வரிகள்தான்.
ரஹ்மான் ரசிகர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் பிடிக்குமென்பதால் நிச்சய ஹிட்.
(2) அன்பில் அவன்...
தேவனும் சின்மயியும் பாடியிருக்கிறார்கள். சற்று வேகமான தாளஇசை கொண்ட peppy நம்பர். தேவனுக்கு மேற்கத்திய இசைக் குறித்த ஞானமிருப்பதால் அவரால் இதில் சுலபமாக ஒட்டிக் கொள்ள முடிகிறது. என்னவொன்று அவருடைய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்புதான் சற்று நெருடலாக இருக்கும். சின்மயி தானொரு அற்புதமான பாடகி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியாக ஒலிக்கும் ரிதம் தாளம் போட்டு கேட்க வைக்கிறது. ரஹ்மானின் முக்கிய பலம் தாள இசையை மிக அற்புதமான பயன்படுத்துவது. இதில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இதில் தாமரை தன்னுடைய திறமையை நிரூபிக்க எந்த வாய்ப்புமில்லை என்றுதான் தோன்றுகிறது. நாயகனும் நாயகியும் திருமணத்திற்கான முன்னேற்பாட்டையும் அதற்கான வாழ்த்தையும்தான் கேட்க முடிகிறது. 'நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும் கண்டு கொள்ளும் கலை அறிந்தோம், எங்கு அதைப் பயின்றோம்' என்ற வரிகளை மாத்திரம் ரசிக்க முடிகிறது.
இதுவும் நிச்சயமாக ஹிட்டாகலாம்.
(3) விண்ணைத் தாண்டி வருவாயா..
படத்தின் தலைப்புப் பாடல். சோகப் பாட்டு (pathos) வகை போல் ஒலிக்கிறது. unplugged போல் மிகச் சொற்ப இசைக்கருவிகளே பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பிரதானமாக ஒலிக்கும் கிட்டாரின் இசைக்கோர்வை அற்புதம். துள்ளலான பாடல்களில் திறமையாக சோபிக்கும் கார்த்திக் தம்மை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பாடியிருக்கிறார் என்று யூகிக்கிறேன். என்றாலும் சூழலின் சோகத்தை மிகத் திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கேட்பனுபவத்திற்கு அந்தளவிற்கு திருப்தியாக இல்லையெனினும் காட்சிகளோடு பார்க்கும் போது சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
சோக மெலடியை விரும்புவர்களுக்கு பிடிக்கலாம்.
(4) ஹொசன்னா...
இந்த ஆல்பத்தின் அற்புதமான இன்னொரு மெலடி. இந்தப் பாடல் இணையத்தில் கசிந்து ஏற்கெனவே ஹிட்டாகி விட்டது. ரஹ்மானின் குரலோ என்கிற மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்பிரகாஷ் அற்புதமாக பாடியிருக்கிறார். சமயங்களில் நெருடலை ஏற்படுத்தும் பிளாசேவின் ராப் இதில் மிகப் பொருத்தமாக இயைந்திருக்கிறது. ஹொசன்னா.. என்கிற ஒரே வார்த்தையை மாத்திரம் பின்னணியில் விதம் விதமாக பாடும் Suzzane-ன் குரல் தேவதையின் குரல் போலவே ஒலிக்கிறது. பாடலின் அற்புதமான percussion-ம் interlude-களும் மீண்டும் மீண்டும் கேட்கும் விருப்பத்தை ஏற்படுத்துகின்றன. ரஹ்மானின் முத்திரை மிகப் பலமாக விழுந்திருக்கும் பாடல்.
நிச்சய ஹிட்.
(5) கண்ணுக்குள் கண்ணை..
எனக்குப் பிடித்த நரேஷ் ஐயர் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஆனால் நரேஷின் மிகப் பெரிய பலம் மெலடி. 'முன் தினம் பார்த்தேனை' இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ஒரே காரணம் நரேஷின் குரல். ஆனால் இதில் வேகமான தாள இசை கொண்ட பாடலை நரேஷிற்கு கொடுத்து ரஹ்மான் ஒரு சிறிய அநியாயம் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. எல்லாவிதமான வகை பாடல்களையும் ஒரு பாடகர் பாடத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றாலும் கூட. ஆனால் இதையும் மீறி நரேஷின் அற்புதமான குரலை ரசிக்க முடிகிறது. குறிப்பாக உச்ச ஸ்தாயியில் நரேஷின் குரல் சஞ்சரிக்கும் போது எந்தவித நெருடலும் இல்லாமல் வந்து இறங்குகிறது.
ஹிட்டாவது சற்று சந்தேகம்தான் என்று நினைக்கிறேன்.
(6) மன்னிப்பாயா...
ஸ்ரேயா கோஷல் எனும் தேவதையும் ரஹ்மானும் பாடியிருக்கிறார்கள். ரஹ்மான் தன்னுடைய பிரத்யேக குரலில் சிறப்பாக பாடியிருந்தாலும் (உருகி.. உருகி..யை கவனியுங்கள்) ஸ்ரேயா மிக எளிதாக இவரை எளிதாக ஓவர்டேக் செய்திருக்கிறார். அற்புதமான மெலடி. ரஹ்மானின் இசைக்கோர்வையின் வசீகரம் மயங்க வைக்கிறது.
'திருக்குறளுக்கு' இசையமைப்பதை தன்னுடைய எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ரஹ்மான் ஒரு நேர்காணலில் கூறியிருந்த ஞாபகம். அதற்கான முன்னோட்டமாக இந்தப் பாடலில் நான்கு குறட்களை உறுத்தாமல் நுழைத்திருக்கிறார். ..'உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே.. என்ற வரிகளில் மாத்திரம் தாமரை வெளிப்படுகிறார்.
இந்தப் பாடல் காட்சிகளின் பின்னணியில் சிறப்பாக இருக்கும் என யூகிக்கிறேன். கெளதம் மேல் நம்பிக்கையிருக்கிறது. நடுநிசியில் இந்தப் பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் வரலாம்.
சோக மெலடி ரசிகர்களின் ஜாக்பாட்.
(7) ஆரோமலே....
அபத்தமான தமிழ்சினிமா இசைச் சூழலில் ரஹ்மானால் மாத்திரம்தான் இந்த மாதிரியான பரிசோதனை முயற்சிகளில் துணிச்சலாக ஈடுபடமுடியும்.
தனக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒன்றான நுஸ்ரத் பதே அலிகான் பாடும் தன்மையிலிருந்து இந்தப் பாடலை ரஹ்மான் உருவாக்க முனைந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன். அல்போன்சின் unromantic குரல் உச்ச ஸ்தாயியில் எகிறும் போது சற்று பயமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. சூ·பி இசையும் தமிழிசையின் ஒப்பாரி வகையும் கலந்ததொரு உணர்வும் ராக் இசையை கேட்கும் துடிப்பான பரவசமும் இந்தப் பாடலை கேட்கும் போது ஏற்படுகிறது. என்றாலும் தமிழ் சினிமா இசை ரசிகர்கள் இதுவரை சந்தித்திராத ஒரு தளத்தில் இப்பாட்டு இயங்குகிறது என்பதை மாத்திரம் சொல்ல முடியும்.
எழுத்தாளர் கோணங்கி எழுதினதோ என்று சந்தேகப்பட வைக்கும் மலையாள வரிகள் வசீகரத்தை ஏற்படுத்துகின்றன.
துணிச்சலான பரிசோதனை முயற்சி.
ரஹ்மானின் இந்த இமாலய புகழும் சர்வதேச விருதுகளும் அவரின் கடும் உழைப்பால் கிடைத்தது என்கிற உண்மையை இந்தப் பாடல்கள் உரக்கச் சொல்கின்றன. தமிழ் சினிமாவின் இசை சற்று முதிர்ச்சியான திசையில் நடக்கத் துவங்கியிருக்கின்றது என்பதற்கான அடையாளமாக இந்த ஆல்பத்தைச் சொல்ல முடியும். மொழி அறியாத, சர்வதேச இசையில் கேட்பனுபவம் உள்ள ஒருவரால் கூட இந்த இசையை மிக நெருக்கமாக உணர முடியும்.
முதல் கேட்பில் சற்று தொய்வை ஏற்படுத்துகிற சில பாடல்கள் மாத்திரம் மீண்டும் மீண்டுமான அனுபவத்தில் நிச்சயம் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். ரஹ்மானின் இசையை கேட்டுவரும் முந்தைய அனுபவங்களிலிருந்து இதை எளிதாகச் சொல்ல இயலும்.
இந்த ஆல்பத்தின் மிகப் பெரிய ஏமாற்றம், தாமரை. முந்தைய அனுபவங்களிலிருந்து மிகச் சிறந்த வரிகளை எதிர்பார்த்திருந்த எனக்கு தாமரையும் சொல்லிக் கொள்கிறாற் போல் அல்லாத பங்களிப்பு ஏமாற்றத்தைத் தருகிறது. நிற்க. இதற்காக அவரைக் குறைச் சொல்ல விரும்பவில்லை. இயக்குநரோ, இசையமைப்பாளரோ அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமலிருந்திருக்கலாம் அல்லது குறுகிய வட்டத்திற்குள் இயங்கச் சொல்லி கட்டாயப்படுத்திருக்கலாம்.
ஹாரிஸ்-கெளதம் கூட்டணி உடைந்து போனது சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், ரஹ்மான் தனது மேஜிக்கால் அந்த வருத்தத்தை துடைத்தெறிந்திருக்கிறார். பாடல்களை காட்சிரீதியாக சற்று கற்பனை செய்து பார்க்கும் போது த்ரிஷா கூட பொருந்திப் போவார் என்று தோன்றினாலும் 'டன்டணக்கா' இமேஜை வைத்திருக்கும் சிம்புவை கற்பனை செய்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. பார்க்கலாம். படத்தின் ஸ்டில்களையும் பாடல்களையும் கேட்ட பிறகு சிம்புவை விட 'உன்னாலே உன்னாலே' வினய், இந்தத் திரைப்படத்திற்கு பொருத்தமாய் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. சிம்புவிற்கு இருக்கிற வணிக மதிப்பு வினய்க்கு இருக்காது என்பதுதான் ஒரே மைனஸ்.
ரஹ்மானின் இந்த ஆல்பம் பண்பலை வானொலிகளின் புண்ணியத்தில் விண்ணைத் தாண்டி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பது மாத்திரம் நிச்சயம்.
image courtesty: http://chennai365.com/movies/vinnaithandi-varuvaya-audio-launch-stills/
suresh kannan
Monday, March 09, 2009
ரஹ்மானை பாராட்டிய இளையராஜா

மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடையே ரஹ்மான். புராணப்படங்களில் வருவது போல் முப்பெரும் கடவுள்களை ஒரே மேடையில் பார்த்தது போலிருந்தது. சற்று அதீதமாக இருந்தாலும் நான் அப்போது உணர்ந்ததை அதைத்தான். வர்ஜா வர்ஜயமில்லாமல் எல்லாவகை இசையையும் கேட்கிறவன்தான் என்றாலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இந்த மூன்று பேரும்தான். தமிழ்த் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்தின் சார்பில் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடைபெற்ற நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழச்சியது.
()
என்னுடைய பதின்ம வயதுகள் இளையராஜாவோடு மாத்திரமே கழிந்தது. இப்போது மாதிரி அல்லாமல் எம்.எஸ்.வி.யை கேட்க அப்போது சற்று சலிப்பாக இருக்கும். அதற்குப் பின் ரஹ்மான் புயலாக உள்ளே நுழைந்தவுடன் ராஜாவை சற்று நகர்த்தி வைத்து விட்டு அவரின் ரசிகராக மாறிப் போனேன். ஆனாலும் கேட்கிற போது உள்ளே மிக ஆழமாக இறங்கி அதிகம் சலனப்படுத்துவது யார் என்றால் அது ராஜாதான். இந்த மாதிரியான ஒப்பீடு அவசியமில்லாதது என்றாலும் கூட எப்படியோ இது நிகழ்ந்து விடுகிறது. (ரஹ்மான் கூட இதைப்பற்றி தன் உரையில் சொன்னார்). நண்பர்களுடனான அரட்டையின் போது இந்த தலைப்பு வரும் போது என்னுடைய கொச்சையான ஒப்பீடு இப்படியாக இருக்கும்.
'ராஜாவின் இசை தாயின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் உணர்வை தருவது; ரஹ்மானின் இசை, மனைவியின் மடியில்'. அப்படியானால் தேவா? என்றான் ஒருவன். அதை பொதுவில் சொல்லவியலாது.
இசை பற்றிய அடிப்படை அறிவோ அதன் நுணுக்கங்களோ அறியேன் என்றாலும் என்னுடைய கேட்பனுபவத்தில் 'ராஜாவின் இசைக்கோர்வை மிலிட்டரி அணுவகுப்பு போல ஒரு தீர்மானமான கண்டிப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் ரஹ்மானின் இசை அப்படியல்ல. திடீரென்று பல எதிர்பாராத ஆச்சரியங்களைக் தரக்கூடியது. (மணிரத்னத்தின் 'உயிரே' திரைப்படத்தின் ஸ்ரீனிவாசின் குரலில் 'என்னுயிரே' பாடலைக் கேட்டுப் பாருங்கள்). ரஹ்மான் தன்னுடைய பாடல்களில் தாளத்தை (rhythm) மிக வசீகரமாக அமைப்பதில் கவனமாக இருக்கிறார்.
இருவரும் பாடகர்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களிடம் வேலை வாங்குவதும் இதை எதிரொலிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை பலரின் நேர்காணல்களிலிருந்து உணர்ந்திருக்கிறேன். ராஜாவின் ஒலிப்பதிவில் அவர் என்ன நினைக்கிறாரோ, அல்லது இசைக்குறிப்புகள் எழுதியிருக்கிறாரோ, அவை அச்சுப் பிசகாமல் வர வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் ரஹ்மான் பாடகர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார். அவர்களை வழக்கமான முறை தவிர அவர்களின் பிரத்யேக திறமையைப் பொறுத்து பல்வேறு வகையாக பாடச் சொல்லி பின்னர் அவற்றிலிருந்து பொருத்தமான சிறந்தவற்றை எடுத்து தன்னுடைய படைப்பை உருவாக்குகிறார். குறிப்பிட்ட பாடலின் இறுதி வடிவம் எப்படியிருக்குமென்று ரஹ்மானைத் தவிர யாருக்கும் தெரிவதில்லை.
அதிகப் பிரசங்கித்தனத்தை இங்கேயே நிறுத்தி விட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்தவற்றை சொல்கிறேன்.
()
டி.எம்.எஸ்., P.B.ஸ்ரீனிவாஸ், சித்ரா, எஸ்.ஜானகி, கங்கை அமரன், வித்யாசாகர், பரத்வாஜ் உட்பட பில பிரபலங்களை சபையில் காண முடிந்தது.
* ஏவிஎம் சரவணன் கையைக் கட்டாமல் பேசிய போது "எம்.எஸ்.வி, வாலி போன்ற பல வருடங்களாக பணியாற்றும் திறமைசாலிகளை அரசு கவுரவிக்காதது வருத்தமாக இருக்கிறது" என்றார்.
* தனக்கு அளிக்கப்பட்ட பொன்னாடையை தமாஷாக வேட்டி போல கட்டிக் கொண்டு பேசிய எம்.எஸ்.வி. "நான் விருது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதனால் அது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னுடைய பிள்ளைகள் விருது வாங்குவதைக் காண சந்தோஷமாக இருக்கிறது." (பின்பு உடல்நிலை சரியில்லாததாலோ என்னவோ நிகழ்ச்சியின் இடையிலேயே அப்போது பேசிக் கொண்டிருந்த ரஹ்மான் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றார்).
* வழக்கமாக அளந்து பேசும் இளையராஜா அன்று மிக உற்சாகமாக பேசியதைக் காண ஆச்சரியமாக இருந்தது.
" ஜான் வில்லியம்ஸ் என்கிற மேற்கத்திய இசைக் கலைஞர் நான்கு ஆஸ்கர் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் அதை சில வருட இடைவேளைகளில்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நம்ம ஆள் போனார்... (சற்று இடைவெளி விட்டதில் சபை ஆர்ப்பரிக்கிறது). ரெண்டு விருதை தட்டிட்டு வந்துட்டார்."
"ரஹ்மானுக்கு எத்தனையோ பிரம்மாண்ட பாராட்டு விழா நடக்கலாம். ஆனா இந்த மாதிரி ஒரு மேடை எங்கேயும் கிடைக்காது."
"நம்ம கிட்ட எத்தனையோ இசை மேதைகள் இருந்திருக்காங்க. நெளஷத் அலி, மதன் மோகன், ரோஷன், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர்கள். நம்ம எம்.எஸ்.வி அண்ணா எத்தன படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒருவேளை இந்த கம்போசர்ல்லாம் இல்லைன்னா.. இந்த விருதையெல்லாம் யாருக்கு கொடுப்பாங்க? கம்போசர்தான் முக்கியம். எல்லோரும் 12 Notes இருக்கும்பாங்க. நம்ம பாலமுரளி அண்ணா 27 சுருதியும் பாடிக் காட்டுவார். எனக்கு எப்ப இசையில் சந்தேகம் வந்தாலும் அவர்கிட்டதான் கேட்பேன். எந்த மேடையிலும் ஏறக்கூடிய தகுதி அவருக்கு இருக்கு."
"சம காலத்துல இசையமைச்சிக்கிட்டு இருந்த மதன் மோகனும் ரோஷனும் ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக்கிட்டதே இல்ல. தீடீர்னு ரோஷன் செத்துப் போயிடறாரு. சின்ன வயசுதான். 32. அவர் வீட்டுக்குப் போன மதன் மோகன் ரோஷனோட உடலைப் பாத்து சொல்றாரு.. You fool! To whom i will answer hereafter?". அதாவது அவங்க சந்திக்கவே இல்லைன்னாலும் தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன?"
"எம்.எஸ்.வி அண்ணாதான் இங்க ஆதார ஸ்ருதி. அதற்கு மேல நான் பஞ்சமம். ரஹ்மான் அதற்கு மேல சட்ஜமம்"
* பாடகி எஸ்.ஜானகி பேசும் போது ரஹ்மானின் தந்தையும் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்த சேகரை நினைவு கூர்ந்தார். "அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாரு".
வழக்கமாக பொதுவில் தன்னுடைய உணர்ச்சியை சற்றும் வெளிப்படுத்தாத ரஹ்மான் அப்போது உணர்ச்சிப் பெருக்கில் வழிந்த கண்ணீரை இயல்பாக துடைத்துக் கொண்டதை காண ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலிருந்து உடனே சற்று தன்னை மீட்டுக் கொள்ள அவர் வெளிப்படுத்திய உடல்மொழி பார்க்க அழகாக இருந்தது. மற்றவர்களின் அனுதாபங்களை ரஹ்மான் விரும்புவதில்லை. சில வருடங்களுக்கு முன் அவரின் தொலைக்காட்சி நேர்காணலில் அவருடைய இளமைப்பருவ வறுமையைப் பற்றிய கேள்விக்கு "ரொம்பக் கஷ்டப்பட்டோம்" என்று கூறியவர் உடனே சுதாரித்துக் கொண்டு "ரொம்ப டிராமாட்டிக்கா சொல்ல வேணாம்னு பாக்கறேன்" என்று அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.
()
கே.பாலச்சந்தர், பாடகர் மனோ, பரத்வாஜ், வித்யாசாகர், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் ரஹ்மானை வாழ்த்திப் பேசினர். ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது ரஹ்மானைப் பார்த்துதான் கீபோர்டை எடுத்ததாகவும் எப்போதும் அவர்தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக இருப்பதைக் குறிப்பிட்டார். சங்கர்(கணேஷ்) நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியது அதீதமாக இருந்தது.
எல்லாப் பாராட்டையும் புன்னகையால் மட்டுமே ஏற்றுக் கொண்ட ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறுவதற்கான முயற்சியின் நடைமுறைகளை சுருக்கமாக சொன்னார். "வெளிநாட்டுப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் போது ஏன் நம்ம நெளஷத், இளையராஜா போன்றவங்களுக்கு கெடைக்கலைன்னு முன்ன நினைப்பேன். ஆனா அகாதமி உறுப்பினர்களுக்கு நம்ம அறிமுகம் தேவையாயிருக்கு. யாருன்னு தெரியாம ஒட்டுப் போட மாட்டாங்க. என்னோட ஏஜெண்ட் மூலமா இதைச் செஞ்சேன். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு யோசிச்சு இசையமைக்கலை. கிடைச்ச நேரத்துல வழக்கமாகத் தான் செஞ்சேன். இளையராஜா, எம்.எஸ்.வி பேசும் போதெல்லாம் உங்க பலத்த கைத்தட்டல பார்த்தேன். இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க".
()
கலைஞர்கள் தங்களின் மனமாச்சரியங்களை களைந்து வைத்து விட்டு இப்படியாக தங்களின் சமகால கலைஞர்களை வெளிப்படையாக பாராட்ட முன்வருவது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
suresh kannan
Subscribe to:
Posts (Atom)