Saturday, October 30, 2010

குறுந்தகடுகளுடன் ஒரு பயணம்

சும்மா ஜாலியாய் ஒரு நாஸ்டால்ஜியா மொக்கை


"சார் டிவிடி ஏதாச்சும் பாக்கறீங்களா. பிஎஃப் படம்லாம் இருக்கு சார். மலையாளம், இங்கிலீஷ்னு பக்கா பிரிண்ட். புதுப்படங்கள்லாம் கூட இருக்கு. சரியா இல்லைன்னா வந்து மாத்திக்கலாம்.  வாங்க சார்"

சென்னை பாரிஸ்கார்னர் பக்கத்தில் பர்மா பஜார் ஓரமாக நீங்கள் நடக்கும் போது யாராவது வந்து இப்படி உங்கள் காதைக் கடித்து ரகசியம் பேசினால் உடனே சரேலென்று அவரிடமிருந்து விலகி விடுங்கள். இ.வாக்களுக்காக வலை விரித்து காத்திருக்கும் புரோக்கர்கள் அவர்கள். மாறாக அதீத கற்பனையுடன் அவர் பின்னர் சென்றீர்களெனில் குருட்டுத்தனமாக தடவித் தடவி மேலாடையை கழற்றுவதற்கே ஒரு மணிநேரம் எடுத்துக் கொள்ளும் தேசலான மங்கல் பிரிண்ட்டை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள். (இதுலயும் வெள்ளைக்காரன்ங்கதாம்ப்பா பெஸ்ட் என்கிறார் நண்பர்). வெறுத்துப் போய் அதற்குப் பதிலாக 'நாகூர் அனீபா பாடல்களை' மாற்றிக் கொள்ளும் நல்ல நோக்குடன் மறுபடியும் சென்றீர்கள் என்றால் நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல உங்களை புறக்கணித்து விடுவார்கள்.

நிற்க. இந்தக் கட்டுரை பர்மாபஜாரைப் பற்றின அனுபவக்கட்டுரை மாத்திரமல்ல. குறுந்தகடு என்னும் சமாச்சாரம் எப்படி என் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தது என்பதைப் பற்றியதான குறுங் கட்டுரை. குறுந்தகட்டுக் கட்டுரை என்றும் சொல்லலாம்.

()

சைக்கிளில் ரிப்ளெக்டராகவும் குழந்தைகள் உருட்டி விளையாடும் பொருளாகவும்  குறுந்தகடுகள் இன்று தன் கவர்ச்சியை பெருமளவு இழந்து விட்டாலும் நான் முதன் முதலில் எப்போது குறுந்தகட்டை பார்த்தேன் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

A, B தவிர C,D சைடெல்லாம் கூட இருக்கு.. உனக்குத் தெரியாதா?.. என்று யாராவது கேட்டிருந்தால் கூட நம்பியிருக்கக்கூடிய அளவிற்கு ஆடியோ கேசட்டே சரியாக பழகியிருக்காத நிலை. வாயில் கட்டை விரலைப் போட்டு சப்பிக் கொண்டிருக்கும் மழலை சின்னமிட்ட 'மர்பி' ரேடியோதான் இசைக்கான அப்போதைய ஒரே வழி. (இப்போது யாராவது ஒலிச்சித்திரமெல்லாம் கேட்கிறீர்களா?). என் அண்ணன் வீட்டில் இல்லாத சமயத்தில் அவனுடைய எல்லைப்பகுதியில் தீவிரமான ஆராய்ச்சி கொண்டிருந்த போது ஒளித்து வைத்திருந்த ஆடியோ சிடிக்கள் கண்ணில் பட்டன. அப்போது அது ஆடியோ சிடி என்பது கூட எனக்குத் தெரியாது. டேட்டா பதியப்பட்டிருக்கும் பளபளவென்ற பகுதிதான் என்னை அதிகம் கவர்ந்தது. நகத்தால் சுரண்டிப் பார்த்தேன். (இப்போது குறுந்தகட்டை யாராவது அந்தப் பகுதியில் விரல்படுகிறாற் போல் எடுத்தால் கூட எரிச்சலும் இரும்பு சிலேட்டில் ஆணியாற் கிறுக்கினாற் போல் கூச்சமும் கொள்வேன்.) கண்டுபிடித்தால் கொலைவெறியுடன் தாக்குவான் என்பது நினைவுக்கு வர இருந்தது மாதிரியே வைத்து விட்டேன்.

பின்னர் நான் சிறு வேலைகளுக்கு போய் சம்பாதிக்க ஆரம்பித்தாலும் என்னால் அதிகபட்சமாக டபுள்டெக் டேப்ரிகார்டர்தான் வாங்க முடிந்தது. 'அடுத்து நீங்கள் கேட்கவிருக்கும் பாடல்... என்று என் குரலைப் பதிவு செய்து நானே கேட்பதில்  ஒர் அற்ப திருப்தி.

திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் கூட வாடகை வீடியோ கேசட்டுகள்தான். (இப்போது கூட வெகுஜனம்  சிடியை கேசட்டு என்றே குறிப்பிடுவது விநோதமாக இருக்கிறது). 'கண்ணழகி' நடிகையின் கேசட்டை ஆவலோடு எடுத்து வந்தால், யார் ஆண், பெண், எவர் எங்கே இருக்கிறார்கள், செய்கிறார்கள் என்றே தெரியாத தேசலான மழைபெய்யும் கேசட்டை வெறுப்புடன் திருப்பிக் கொடுத்தேன். நமட்டுச் சிரிப்புடன் அதை ஒப்புக் கொண்ட கடைக்காரர், "சரி வேறு எந்த படம் வேண்டும்?" என்றார் ஜென்டில்மென்னாய்.   இந்த சங்காத்தமே வேண்டாமென்று முடிவு செய்து "மோட்டார் சுந்தரம் பிள்ளை" இருக்கா? என்றேன் அதிரடியாய். டாஸ்மாக்கில் விண்டோஸ் சாப்ட்வேரை கேட்டவனைப் போல எல்லோருமே சற்று திடுக்கிட்டு என்னைப் பார்த்தனர். காலமே சற்று உறைந்தது.

சிவாஜி கணேசன் என்றாலே ஓவர் ஆக்டிங் என்று எப்பவும் நக்கலடிப்பவர்களுக்கு (அதில் உண்மையில்லாமலி்ல்லை) ஒன்று சொல்வேன். இந்தப்படத்தைப் பாருங்கள். சிவாஜி 'அண்டர்பிளே' செய்து நடித்த படங்களில் ஒன்று. எப்பவோ தொலைக்காட்சியில் பார்த்திலிருந்தே அதை மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந்தது. என்றாலும் ஒரு பத்தொன்பது வயது இளைஞன் அதைப் பொதுவில் வெளிப்படுத்தியதுதான் மக்களுக்கு சகிக்க முடியாமலிருந்தது.

பின்பு வீடியோ கேசட் கடைக்காரரே சற்று டெவலப்பாகி, சிடி மற்றும்  பிளேயரையும் வாடகைக்கு விடுமளவிற்கு உயர்ந்தார். உள்ளங்கை அளவேயிருந்த போர்ட்டபிள் சிடி பிளேயர். ஹீரோக்கள் வெடிகுண்டை செயலிழக்க வியர்வையுடனும் பதட்டமான பிஜிஎம்முடனும் போராடுவதைப் போல மஞ்சள், சிகப்பு ஒயர்களை சரியாக இணைத்து ஆடியோவும் வீடியோவும் வரவழைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.  அப்போதுதான் விசிடி எனும் சமாச்சாரத்தை முதன் முதலில் பார்த்தது. ஒரு தமிழ் திரைப்படம் நீளத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று தகடுகளில் அடங்கியிருக்கும்.

()

என்னதான் வாடகைக்கே எடுத்துக் கொண்டிருந்தாலும் சொந்தமாய் சிடி இருப்பது பெருமை என்கிற லட்சியம் நாளுக்கு நாள் பெருக, இருக்கும் கொடுமையில் பிளேயரையாவது அப்புறம் வாங்கிக் கொள்ளலாம், முதலில் சிடிக்களை வாங்கி வைத்துக் கொள்வோம் என்று அதிபுத்திசாலித்தனமாக யோசித்து விசாரித்ததில் சிடிக்கள் பர்மா பஜார் எனும் இடத்தில் சல்லிசாக கிடைக்கும் என்று தெரியவந்தது. பர்மாவிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு உதவ, பீச் ஸ்டேஷன் அருகே நிலம் ஒதுக்கி்த் தந்தது அப்போதைய அரசு. தங்களுடன் கொண்டு வந்திருந்த வெளிநாட்டுப் பொருட்களை விற்கத் துவங்கி, தமிழர்களின் வெளிநாட்டுப் பொருட்களின் மீதிருந்த அதீத மோகத்தால், இன்று பல நூறு கடைகள் பெருகி ஆறடிக்கு இரண்டடி சந்துக்கு பதினைந்தாயிரம் ரூ வாடகை என்கிற அளவில் வந்து நிற்கிறது. அதற்கே அரசியல் செல்வாககு இருந்தால்தான் முடியும்.

சரி. எஸ்.முத்தைய்யா போன்ற சென்னை வரலாற்று ஆர்வலர்களின், ஆய்வாளர்களின் ஏரியாவிற்குள் நாம் நுழைய வேண்டாம்.

பர்மா பஜார் என்றாலே 'ஆரண்ய காண்டம்' ராமாயண நூலை வாங்கப் போகிறவர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்ட காண்டத்தை' ஏமாற்றி விற்கும் மோசடிக்காரர்கள் புழங்கும் பிரதேசம்  என்று சிறுவயதிலிருந்தே எனக்குப் போதிக்கப்பட்டிருந்தபடியால், என் அலுவலகத்தின் அருகாமையிலே இருந்தும் கூட பல நாட்கள் அந்தப் பக்கத்தில் செல்லாமலேயே இருந்து விட்டேன்.

பணத்தை எண்ணிய களைப்பில் பில்கேட்ஸே சலித்துப் போய் விண்டோஸ் 98-ஐ கைகழுவி விட்டு அடுத்த வர்ஷனுக்கான பில்டப்பை தரும் சமயத்தில்தான் என் அலுவலகத்திற்கு கணினியே வந்தது. வின்ஆம்ப்பில் இருந்த இரண்டே இரண்டு சாம்பிள் பாடல்கள்தான். அப்போது இணையத்தில் தரவிறக்குவதைப் பற்றியெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. 'ஹலோ' என்று ஒரு வார்த்தை இ-மெயில் அனுப்பினாலே பில்லில் இரண்டு ரூ ஏறி விடும்.

mp3 என்கிற வார்த்தை அப்போது ஒரு வசீகரச் சொல்லாக எங்கும் உலவிக் கொண்டிருந்தது. கயவர்களின் பிரதேசத்திற்கு மிகுந்த தயக்கத்துடன் சென்று வேவு பார்த்தேன். ஒரு எம்பி3-ஐ எம்பி நிற்கிற உயரத்தின் விலையைச் சொன்னார்கள். எப்படியோ ஒரு சிடியை பேரம் பேசி வாங்கி வந்துவிட்டேன். இளையராஜாவின் ஹிட்ஸ். சோனி கம்பெனி சிடி மாதிரியே அச்சு அசலான நகல். (?!).

சிடியின் உள்ளே பதியப்பட்டு இருந்தது என்ன தெரியுமா?

(அடுத்த பகுதியில்)

suresh kannan

Tuesday, October 26, 2010

கே எம் மீடியா பிளேயர்சினிமா, திரையிசை உட்பட இணையத்தில் இலவசமாக எதையும் தரவிறக்கி உபயோகிப்பதேயில்லையென்று இரண்டு கால்களிலும் நின்று சாதிக்கும் யோக்கியவான்கள், இந்தப் பதிவை வாசிக்க வேண்டாமென்று சிரம் தாழ்த்தி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

முன்னர் ஒரு பதிவில் கூறியிருந்தது போல் நுட்ப விஷயங்களை கையாள்வதில் நான் அத்தனை சமாத்தனில்லை. ஆனால் தேடித் தேடி சில விஷயங்களை நானே முயன்று கண்டுபிடித்து வெற்றிகரமாக கையாள முயலும் போது அந்த மென்பொருளை உருவாக்கினவருக்குக் கூட அத்தனை சந்தோஷம் கிடைத்திருக்காது.

கணினியில் சினிமா பார்ப்பதில் சில அசெளகரியங்களும் பல செளகரியங்களும் உள்ளன.  சீரியல்களுக்காகவும் சுட்டிடிவிகளுக்காகவும் வீட்டில் நிகழ்கிற மகாயுத்தத்தின் இடையில் வெற்றிகரமாக தோற்றுப் போய் நான் சரணடைவது கணினியிடம்தான். படம் சற்று போரடித்தால் = பட்டனை அழுத்தி விட்டு மின்னஞ்சல்களைப் பார்க்கலாம். இன்று நம்மை  அல்லது மற்றவர்களை யார் என்ன, எப்படி திட்டியிரு்ககிறார்கள் என்று வேடிக்கை பார்க்கலாம். பார்த்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றின மேலதிக விவரங்களைத் தேடலாம். கணினியை அதிக நேரம் உபயோகிப்பதினால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளை கண்முடி சற்று சிந்தித்து விட்டு படம் பார்ப்பதைத் தொடரலாம்.

என்றாலும் டிவிடி பிளேயரின் மூலம் தொலைக்காட்சியில் நள்ளிரவு அமைதியில்  எவ்வித இடையூறுமில்லாமல் பார்ப்பதே இதுவரை நல்ல அனுபவத்தைத் தந்திருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.

பெரும்பாலோனரைப் போல விண்டோஸ் மீடியா பிளேயர் மூலம்தான் முன்பு திரைப்படங்களைப்  பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் சப்-டைட்டில் எனும் சமாச்சாரத்தை திரைப்படத்துடன் இணைத்து பார்க்க முடியும் என்கிற ஆனந்தமான தகவல் தெரிய வந்த போது வி.மீ.பி. அதற்கு ஒத்துழைக்கவில்லை.

AVI வீடியோ பைலை DVDஆக மாற்ற உதவும் Total Video Player எனும் மென்பொருளை பிறகு கண்டடைந்தேன். சப்-டைட்டில் எழுத்துக்கள் அழுத்தமானதாக நன்றாக தெரிந்து கொண்டிருந்த இதை நீண்ட நாட்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் சில சப்-டைட்டில்கள் இதில் வேலை செய்யவில்லை. (வசனங்களின் வரிகளுக்கு இடையில் அதிக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருக்கும் சப்-டைட்டில்கள்). அதற்காக தேடிப் பார்த்த போது கிடைத்தது VLC  Media Player.

சில சிக்கலான வீடியோ கோடக்குகளை கூட இந்த மென்பொருள் உள்ளடக்கியிருந்தது. ஆனால் இதிலுள்ள பிரச்சினை சப்-டைட்டில் மெலிதாக, தேசலான தோற்றத்தில் தெரிந்ததுதான். (செட்டிங்க்ஸில் இதை மாற்றிக் கொள்ள முடியும் என்பதைக் கூட பிறகுதான் தெரிந்து கொண்டேன்). சில வகை MKV வீடியோ கோப்புகளில் சப்-டைட்டில் தனியாக இல்லாமல் வீடியோவுடனே எம்பெட் செய்யப்பட்டிருக்கும். இதை VLC-யில்தான் காண முடிந்தது.

சமீபத்தில் கணினியில் வைரஸ் பிரச்சினை ஏற்பட்டு ஓ.எஸ்.ஐ ரீ- இன்ஸ்டால் செய்து விட்டு VLC  மீடியா பிளேயரின் லேட்டஸ்ட் வர்ஷனை இறக்கினேன். ஆனால் புல் ஸ்கீரினில் வைக்கும் வீடியோ உறைந்து திக்கித் திணறியது. டிவிட்டரில் க்ருபாவிடம் இதுபற்றி வினவினேன். 'என்ன கான்பிகிரேஷன்? என்றார்.  பெண்டியம் 3, 256 MB RAM.  'இந்த மாதிரி விண்டேஜ் கலெக்ஷனை வைத்துக் கொண்டு இன்னும் மாரடிப்பவர்களை சிறையில் தள்ள ஏன் ஒரு சட்டம் கொண்டு வரக்கூடாது?' என்றார் காட்டமாக. (பின்பு VLC - ன் பழைய வர்ஷனையே மீண்டும் நிறுவியதில் இந்தப் பிரச்சினை எழவில்லை என்பதையும் கண்டு கொண்டேன்).

'அப்ப எதுதாம்ப்பா நல்ல மீடியா பிளேயர்' என்று கூகுளிடம் மண்டியிட்டு கேட்ட போது கிடைத்ததுதான் KM PLAYER.

இந்த மென்பொருளை திறக்கும் போதே, ஏதோ ஹோம் தியேட்டருக்குள் நுழைகிற ஃபீலை தருகிறது. மாத்திரமல்ல, சப்டைட்டிலை எந்தவொரு அளவிலும், கிழக்கு மேற்கு.. என எந்தவொரு திசையிலும் நிறத்திலும் கூட அமைத்துக் கொள்ளலாம்.

இன்னொரு வசதியையும் கண்டேன். சில படங்களின் சப்-டைட்டில்கள் வசனங்களோடு பொருந்திப் போகாமல் முந்தியோ, தாமதித்தோ தெரிந்து அமெச்சூர் நடிகனைப் போல் எரிச்சலை ஏற்படுத்தும்.

சப்-டைட்டில் எடிட்டர் கொண்டு இதனை சரிசெய்வதெல்லாம், இரண்டே இரண்டு டூவீலர் மெக்கானிக்குகளை வைத்துக் கொண்டு ரோபோ தயாரிக்கும் மகான்களுக்கே சாத்தியம். இப்படி சப்டைட்டில் ஒத்துழைக்காத காரணத்தினாலேயே பல வீடியோக்களை எரிச்சலோடு ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அதற்கும் இந்த மென்பொருளில் ஒரு வசதியிருக்கிறது. இப்படி முரண்டு பிடிக்கும் சப்-டைட்டில்களை ஐந்து, ஐந்து விநாடிகளாக முன்னும் பின்னும் நகர்த்தியமைத்திக் கொள்ளலாம்.  வீடியோவின் அளவை பல்வேறு அளவுகளிலும் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

முன்னரே சொன்னது போல் நுட்ப விஷயங்களை கையாள்வதில் நானொரு பாமரன். 'யாம் பெற்ற இன்பம்' என்ற நோக்கில்தான் இதைப் பொதுவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த மென்பொருளை உயோகிக்க உத்தேசிப்போர் தத்தம் பொறுப்பில் அதன் சாதக பாதகங்களை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இப்படி.. கணினியில் திரைப்படம் பார்க்க உதவும் ஏனைய மீடியா பிளேயர்களையும் அதுசார்ந்த உபயோகிப்பு அனுபவங்களையும் பகிருமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.

suresh kannan

Saturday, October 23, 2010

இன்று (23.10.2010) ஷ்யாம் பெனகலின் திரைப்படம்

Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

இந்த வரிசையில் இன்று (23.10.2010) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது. இத்திரைப்படம் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு இங்கே.
 Nishant

Directed by Shyam Benegal
Written by Satyadev Dubey (Dialogue)
Vijay Tendulkar (Screenplay)
Starring Shabana Azmi
Naseeruddin Shah
Girish Karnad
Smita Patil
Amrish Puri
Music by Vanraj Bhatia
Cinematography Govind Nihalani
Editing by Bhanudas Divakar
Distributed by Blaze Entertainment
Release date(s) 6 September 1975
Running time 140 min
Country India
Language Hindi

(COURTESY: WIKIPEDIA)


suresh kannan

Thursday, October 21, 2010

சினிமா பற்றி பேச நீ யார்?

முந்தைய பதிவொன்றில் ராம்கோபால் வர்மாவையும் மணிரத்னத்தையும் ஒப்பிட்டு ஒரு வரி எழுதும் போது, 'இப்படி எழுத நீ யார்?' என்றொரு அனானி நண்பர் பின்னூட்டத்தில் கேட்டார். நண்பர் முகமூடி அதை வேறு நோக்கில், "ஏன் அகங்காரம் தெறிக்கும் இத்தனை நான்கள்?' என்று கேட்டிருந்தார். இதே போல் இன்னொரு பதிவின் பின்னூட்டத்தில் 'ஏதோ சினிமாவை காக்க வந்தவர் போல் ஏன் இந்தப் பாவ்லா'? என்றொரு நண்பர் கேள்வி எழுப்பியிருந்தார். இது போன்ற கேள்விகளை பல்வேறு சமயங்களில் எதிர்கொள்வதால் இந்தப் பதிவு எழுத நேர்ந்தது.

சமீபத்தில் ஜெயமோகனின் பதிவில் வாசித்த ஒரு பத்தியை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

நான் கண்டுவரும் ஒன்று உண்டு. நான் ஒரு விமரிசனக்கருத்தை அழுத்தமாகச் சொல்லும்போது சிலர் பொங்கி எழுவார்கள் ‘இவன் எப்படி அப்படிச் சொல்லலாம்? சொல்வதற்கு இவன் யார்? தன்னை அதிகமாக எண்ணிக்கொள்கிறான்’ என்றெல்லாம் சொல்லி வசைகளும் முன்முடிவுகளும் கலந்து ‘தூக்கிவீசும்’ கட்டுரைகளை எழுதித்தள்ளுகிறார்கள். ..

ஆனால் என்னைப் பொறுத்தவரை  நான் என்னை 'விமர்சகன்' என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். அந்தச் சொல்லுக்குப் பின்னாலிருக்க வேண்டிய தகுதியும், உழைப்பும், முதிர்ச்சியும் குறித்து நானறிவேன். என்னுடைய தற்போதைய உயரம் குறித்து எனக்கு தெளிவாகத் தெரியும்.

யமுனா ராஜேந்திரன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி போல் கோட்பாடுகள் சார்ந்தோ, ஜெயமோகன் போல் தத்துவம் சார்ந்தோ, அசோகமித்திரன் போல் புராதனம் சார்ந்தோ, எஸ்.ரா போல் அதன் அழகியல் சார்ந்தோ, தியோடர் பாஸ்கரன் போல் நுண்தகவல்கள் சார்ந்தோ, சாருநிவேதிதா போல கூர்மையான அங்கதம் சார்ந்தோ என்னால் சினிமாவைப் பற்றி உரையாட இயலாது. ஆனால் அந்தத் தகுதியை நோக்கி செல்ல வேண்டிய விருப்பமுண்டு.

நண்பர்கள் கேட்ட கேள்வியை இப்போது என்னையே நோக்கி நான் கேட்டுக் கொள்கிறேன்.

"சினிமா பற்றி எழுத நீ யார்?"

சில நாட்களுக்கு முன் சமகால சினிமாவின் இளம் இயக்குநர் ஒருவருடன் மின்னஞ்சலில் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது.

நான் அவரிடம் சொன்னேன்.

" நான் வணிக சினிமாக்களைப் பற்றி தொடர்ந்து கடுமையாக எழுதி வருவதை கவனித்திருப்பீர்கள். ஆனால் ஒரு சினிமாவின் உருவாக்கத்தைப் பற்றி நூல்களில் வாசித்ததோடு சரி. துளிக்கூட நேரடி அனுபவம் கிடையாது. ஒருநாள் கூட படப்பிடிப்புகளையோ அதனுடன் தொடர்புடைய பிற பணிகளையோ நான் பொறுமையாக கவனித்தது கிடையாது.

ஆனால் ஒரு கதைத் துளியை உருவாக்கி விவாதங்களின் மூலம் அதை விரிவாக்கி, திரைக்கதை எழுதி, தயாரிப்பாளர் தயாரிப்பாளராக,நடிகர், நடிகராக அலைந்து ஒப்புதல் பெற்று இரவு பகல்,உள்ளுர் வெளியூர் பாராமல் படப்பிடிப்பு நடத்தி கதையின் போக்கில் அவ்வப்போது குறுக்கிடும் அத்தனை இடையூறுகளையும் தாண்டி முடித்து அதன் வணிக சாத்தியக் கணக்குகளைக் கடந்து வெளியாகும் நாளன்று நகத்தைக் கடித்துக் கொண்டு  நிகழும் அந்த கூட்டு முயற்சியின் பின்னுள்ள அத்தனை கடுமையையும் என்னால் யூகிக்க முடியும். சில தகவல்களை நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.


இத்தனையையும் அறிந்து வைத்துக் கொண்டே ஒரு சினிமாவை அதன் மோசமான உருவாக்கத்திற்காக கடுமையாக எழுதும் போது 'சினிமாத் துறையில் உள்ளவர்கள் அதை வாசிக்க நேர்ந்தால், எவ்வாறு உணர்வார்கள்?' அதிலுள்ள குறைகளைக் கண்டு நமட்டுச்சிரிப்புடன் கடந்து செல்வார்களா? எரிச்சலுடன் திட்டித் தீர்ப்பார்களா? என்று குறுகுறுப்பாக உள்ளது அது பற்றி அறிய விரும்புகிறேன்'


- என்று அந்த நண்பரிடம் கேட்டேன்.

அவர் சொன்னது. "சுரேஷ். சினிமா உருவாக்கம் என்பது வேறு. சினிமா ரசனை என்பது வேறு. நீங்கள் முழுக்கவும் ரசனை சார்ந்து எழுதுகிறீர்கள். தவறில்லை. இங்கு ஒரளவு நல்ல சினிமாவை எடுக்க முடிகிறவர்கள் திறமைசாலிகள் என்பதை விடவும் மகா அதிர்ஷ்டக்காரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நேரில் சந்திக்கும் போது விரிவாக பேசுவோம்' என்றார்.

திரும்பவும் சொல்கிறேன். நான் விமர்சகன் அல்ல.

இப்போதைக்கு நான் ஒரு சாதாரண சினிமா பார்வையாளன், ரசிகன். திரைப்படங்களைப் பார்த்தது குறித்த என் அனுபவங்களையும் கருத்துக்களையும் அது சார்ந்த எளிய மதிப்பீடுகளையும் இங்கு பகிர்வதே என் பிரதான நோக்கம். அதில் தவறோ, பிழையோ, அரிதாக பிடித்த படைப்பாளிகளின் மீதான மனச்சாய்வோ இருந்திருக்கலாம். ஆனால் அதன் பின்னே அதற்கான கடும் உழைப்பு உண்டு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

நாளைக்கு ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும் என்பது என் திட்டம். சமயங்களில் அது சாத்தியப்படுவதில்லை. இந்தத் தகுதியே திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்கான அடிப்படை என்று நான் சொல்லவரவில்லை. ஒரு திரைப்படத்தை அடிப்படையாக எப்படி பார்க்க வேண்டுமோ அந்த நோக்கில் பார்ப்பேன். பின்பு தேவையெனில் சில விடுபடல்களுக்காவும் நடிகர்கள் உடல் மொழிகளுக்காகவும் பின்னணி இசைக்காகவும் காமிராக் கோண்ங்களுக்காகவும் திரை மொழியை நுட்பமாக புரிந்து கொள்வதற்காகவும் மீண்டுமொரு முறை பார்ப்பதுண்டு. சிறந்ததாகக் கருதப்படும் திரைப்படங்களை இதற்கும் அதிகமான எண்ணிக்கையிலும் பார்ப்பதுண்டு. சில திரைப்படங்கள் ஒவ்வொரு முறையும் வேறு வேறு பரிமாணத்தில் வியப்பை ஏற்படுத்தும். (இதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறேன்).

ஆக.. ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது இதை இரண்டு அல்லது மேலான எண்ணிக்கையில் பார்த்த அனுபவத்தில்தான் எழுதுகிறேன் என்பதை கவனிக்க வேண்டுகிறேன். ஆனால் சில திரைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அவற்றை எழுத வேண்டுமென்கிற உந்துதலைத் தராத சாதாரணவைகளாக இருக்கும். சிலவற்றை எவ்வளவு முயன்றாலும்  பகிரவே முடியாத அளவிற்கு நுட்பமான அகவுணர்வு சார்ந்ததாக இருக்கும். மேலும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்ற போது கூடுமானவரை அது சார்ந்த அனைத்துத் தரவுகளையும் கூட கவனத்தில் கொள்கிறேன். இந்த இயக்குநரின் முந்தைய படங்கள் எவை, தர அடிப்படையில் இவரது நிலை என்ன, முந்தைய படங்களோடு இது எப்படி வேறுபடுகிறது, இதே வகைமையில் எடுக்கும் மற்ற இயக்குநர்ளோடு ஒப்பிடும் போது இவர் / இந்தத் திரைப்படத்தின் தரம் எப்படியானது, இதைப் பற்றியான மற்ற விமர்சனங்கள் போன்றவைகளை கவனிக்கிறேன்.

ஆக..இத்தனை அனுபவம் மற்றும் உழைப்பு சார்ந்து ஒரு திரைப்படத்தை நான் அவதானிக்கும் போது என்னுடைய தனிப்பட்ட அளவுகோல்களைச் சார்ந்து ஏன் அவற்றைப் பற்றின ஒரு கறாரான மதிப்பீட்டை நான் வைக்கக்கூடாது?

இதுவரையான மணிரத்னம் மற்றும் ராம்கோபால் வர்மாவின் உருவாக்கங்களை ஒப்பிட்டு என்னால் ஒரு பிரத்யேகக் கட்டுரையையே எழுத முடியும். மணிரத்னத்தின் 'நாயகன்' திரைப்படத்தை இதுவரை குறைந்தது ஐம்பது முறையாவது பார்த்திருப்பேன். போர்ட் கோப்போலாவின் 'காட்ஃபாதர்' திரைப்படத்தின் தழுவல் என்பது பொதுவாக அறியப்பட்டாலும், மணிரத்னம் இதை சிறப்பாக 'தமிழ்த்தன்மையுடன்' வளர்த்தெடுத்திருப்பார். (இந்தத் தழுவலை வெளிப்படையாக ஒப்பு்க் கொள்ளாத மணிரத்னம் மீதான இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றாலும் எத்தனை இயக்குநர்களால் - மூலத்தின் உரிமையையே வாங்கித் தந்திருந்தாலும் - இதை இத்தனை சிறப்பாய் உருவாக்கியிருக்க முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். (இயக்குநர் பேரரசு போன்றவர்கள்  'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கியதாய் கற்பனித்துப் பாரு்ங்கள்.)

ஆனால் ராம்கோபால் வர்மா, இதற்கான ஒப்புதலை வெளிப்படையாக இட்டு விட்டு 'சர்க்கார்' என்கிற இந்திப்படமாக எடுத்தார். இரண்டையும் மேம்போக்காக ஒப்பிட்டுப்பார்த்தாலே, மணிரத்னத்திற்கும் ராம்கோபால் வர்மாவிற்கான வேறுபாடு புரியும்.

சிறுவனாக பம்பாய்க்கு ஓடிப் போய் அங்கேயே வளர்கிற ஒருவனை, இந்தி மொழி தெரியாதவன் போல் 'நாயகனில்' சித்தரித்திருப்பது மிகப் பெரிய தர்க்கப்பிழை. உரையாடல் தமிழ் பார்வையாளர்களுக்கு புரிய வேண்டுமென்பதற்காக வழக்கமாக இயக்குநர்கள் செய்யும் சமரசத்தை மணிரத்னமும் செய்திருந்தார். என்ன கொடுமை? சேட்டுக்கள் புழங்கும் சென்னை செளகார்பேட்டையில் சிறிது காலம் புழங்கிய எனக்கே திக்கித்திக்கி இந்தி பேச முடிந்திருக்கும் போது வேலு நாயக்கரால் முடிந்திருக்காதா? "அய்யிரே டாக்டருக்கு வூடு எங்கன்னு கேளு?" என்று மொழிபெயர்ப்பாளரின் துணையை நாட வேண்டும்?

ஆனால் ராம்கோபாவ் வர்மாவின் திரைப்படங்களில் இம்மாதிரியான தர்க்கப் பிழைகளை பெரிய அளவில் காண முடியாது. அவர் படங்களில் வரும் தாதாக்கள் அசலுக்கு மிக நெருக்கமான சித்தரிப்புகளில் வருவார்கள். அவர்களை வேலுநாயக்கர் போலவோ திருபாய் அம்பானி போலவோ திருவுரு ஆக்கும் வேலையில் RGV  ஈடுபடமர்ட்டார். மேலும் காமிராக் கோணங்கள் மணிரத்னத்தின் படங்களை விட ராம்கோபால் வர்மாவின் படங்களில் மிக லாவகமாக உருவாக்கப்பட்டிருக்கும்.

அஞ்சலி என்றொரு மணிரத்னம் திரைப்படத்தில் ஒரு காட்சி. மனநிலை குன்றிய ஜனகராஜை, ரகுவரனின் மகள் விளையாட்டாக 'பைத்தியம்' என்று பால்கனியில் இருந்து கத்தியழைப்பாள். எப்போதுமே குழந்தைகளிடம் கோபம் கொள்ளாத ரகுவரன் மகளை அறைந்து விடுவார். இது ஏன் என்று இத்திரைப்படத்தை முதன்முறையாக பார்வையாளர்களுக்கு புரியாததாக இருக்கும். ஆனால் படத்தின் பல காட்சிகளைக் கடந்த பின்புதான் ரகுவரனின் மறைத்து வளர்க்கப்படும் இன்னொரு குழந்தை மனநலம் குன்றியவள் என்பதே பார்வையாளர்களுக்குத் தெரியவரும்.

ஆனால் இதற்குள் முந்தைய காட்சி ஞாபகத்திலிருந்து அழிந்து இதற்கும் அதற்கும் தொடர்புப்படுத்தி பார்க்கும் நினைவு யாருக்குமே இருக்காது. இத்திரைப்படத்தை இரண்டாவது முறையாக பார்ப்பவர்களுக்குத்தான் இந்தக் காட்சி வந்தவுடனே அதன் முக்கியத்துவம் புரியும். ஒரு அதிர்ச்சிக்கு பார்வையாளனை தயார்ப்படுத்தும் வகையில் முன்னமே அதை சூசகமாக பல்வேறு காட்சி படிமங்களின் மூலம் துளித்துளியாய் வெளிப்படுத்துவதை சிறந்த இயக்குநர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஆக.. ஒரு திரைப்படத்தை அவதானிப்பதற்கு பின்பு இத்தனை உழைப்பு இருக்கிறது. "எதுக்குங்க இதைப் போய் ஏதோ ஹோம் ஒர்க் மாதிரி செஞ்சிக்கிட்டு. ஏதோ படத்த ஜாலியா பாத்தமா போனமா'... என்பதை சினிமாவை அந்த நேரத்து பொழுதுபோக்காக வைத்திருப்பவர்கள்தான் சொல்ல முடியும். சினிமா ஆர்வலர்கள் அல்ல.

அச்சுப் பத்திரிகைகளின் கட்டுப்பாட்டில் இயங்க முடியாத சமயத்தில் இணையம் தரும் சுதந்திரத்தில் சிலவற்றை அழுத்தமாகவே சொல்ல முடியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மறுபடியும் இந்தக் கேள்வியை யோசித்துப் பார்க்கிறேன்.

'சினிமா பற்றி பேச நான் யார்?'

தொடர்புடைய பதிவுகள்சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்

suresh kannan

Monday, October 18, 2010

டிவிட்டருக்கு குட்பை!


டிவிட்டரிலிருந்து விலகிவிடுவது என்பது நீண்ட நாள் திட்டம். ஒரு முறை அதில் எதுவுமே எழுதாமலிருக்க திட்டமிட்டு பல்லைக் கடித்துக் கொண்டு வெற்றிகரமாக இருபத்திரண்டு நிமிடங்களை கழித்து விட்டு கைநடுங்க மீண்டும் போய் சங்கமத்தில் கலந்தேன்.

140 எழுத்துக்களுக்குள் விளையாடுவது என்பது சுவாரசியமான சவால்தான். ஆனால் வலைப்பதிவில்  இததனை நீளமாய் எழுதியுமே சொல்ல வந்ததின் போதாமையை உணரும் போது 140 என்கிற இடஒதுக்கீடு 'மணிரத்னம்' போன்ற பேருந்துச் சீட்டின் பின்புறத்தில் வசனமெழுதும் ஆளுமைகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாய் இருக்கலாம்.

மேலும் டிவிட்டர் என்கிற, அப்போதைய மனநிலையில் உடனடியாக எதிர்வினையாற்றும் ஊடகம், தமிழர்களின் அத்தியாவசிய குணாதிசயங்களுள் ஒன்றான வம்பு பேசும் நோய்க்கூறு மனநிலையை பெட்ரோல் ஊற்றி வளர்க்கிறதோ என்கிற ஐயம் எனக்குண்டு. அந்த ஜனத்திரளில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்துதான் இதைச் சொல்கிறேன். திண்ணையில் எதிரெதிரே அமர்ந்து பேசும், சீட்டுக்கட்டு விளையாடும் மனநிலையை டிவிட்டர் ஏற்படுத்துகிறது. சிரிப்பும் கும்மாளமுமான உரையாடல் எப்போது வேண்டுமானாலும் சிலரிடம் கைகலப்பை ஏற்படுத்தலாம் என்கிற பதட்டத்தையும் அது தருவதாக இருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புதான் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுதவிர டிவிட்டர் அதிக நேரததைத் தின்கிறது என்பது இன்னொரு பிரதான காரணம். 140-க்குள் எதையாவது எழுத வேண்டும் என்கிற உந்துதலும், எதைவேண்டுமானாலும் எழுதிவ விடலாம் என்கிற உழைப்பைக் கோராத அலட்சியமும், அதற்கு எதிர்வினையாற்றுபவருக்கு பதில், மீண்டும் கேள்வி, பதில், அதற்கான காத்திருப்பு என்கிற மாயச்சுழலில் நம்மையும் அறியாமலே ஆழத்தில் இறங்கிக் கொண்டிருக்கிற நிலையை டிவிட்டர் உருவாக்குகிறது.

இந்தக் காட்டுக்குதிரையை அதற்கேயுரிய லாவகத்துடன் கையாண்டு பயணம் செய்கிற சாமர்த்தியசாலிகளையும் அதே சமயத்தில் காண்கிறேன்.ஒருபுறம் பார்த்தால், தொழில்நுட்பங்களின் மீது எவ்வித குற்றமுமில்லை. அதைக் கையாளும் மனித மனங்களின் மீதுதான்.

என்றாலும் முக்கியமான செய்திகளை உடனுக்குடன் பகிர்வது, முக்கியமான இணையத்தளங்களை கொண்டு தருவது,  என்பது முதல் மைலாப்பூரில் பொடிதோசை எங்கு கிடைக்கும் என்பது வரையான செய்திகளை, தகவல்களை நண்பர்கள் உடனுக்குடன் கொட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆக்கப்பூர்வமாகவும் இது பயன்படும் என்பதை சுனாமி, பூகம்பம், --- குரூப் ரத்தம் உடனடியாக தேவை.. போன்ற எதிர்பாரா சமயங்களில் உணர வைக்கிறது. ரைட்டர் பேயோன் போன்றவர்கள் இந்த ஆடுகளத்தின் சூட்சுமத்தை கச்சிதமாக உணர்ந்து வெற்றிகரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்.. என்னைப் பொருத்தவரை ஏதோ இது எனக்கு சரிப்பட்டுவரவில்லை. ஆகவே இன்று முதல் என்னுடைய டிவிட்டர் கணக்கை நீக்கி விட்டேன். இதுநாள் வரை அந்த ஊடகத்தில் என்னுடன் தோழமையாக உரையாடிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி. இந்தத் தகவலை டிவிட்டர் ஜனங்களுக்கும் பகிரவே இந்தப் பதிவு.

டிவிட்டரை தற்காலிமாக பூட்டி வைத்திருந்த சமயத்தில் பல நண்பர்கள் அதற்கான வேண்டுகோளை அனுப்பியிருந்தனர். இந்த முடிவினால்தான் அவர்களுக்கு அதற்கான இணைப்பை செயல்படுத்த முடியவில்லை. நண்பர்கள் மன்னிக்கவும்.

டிவிட்டரின் சமீபத்திய தம்பியான  GOOGLE BUZZ-ஐயும் இதே போல் கைவிட தி்ட்டம். இனி ஒன்லி BLOG தான்.

எந்தவொரு புதிய பதிவையும் டிவிட்டரில் தெரிவிப்பது வழக்கம். இந்தப் பதிவை அவ்வாறு தெரிவிக்க முடியாது என்பதுதான் இதிலுள்ள CATCH 22 சோகம். 

suresh kannan

Sunday, October 17, 2010

பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா?விஜய் டிவியில் ராம்கோபால் வர்மாவின் சமீபத்திய திரைப்படமான 'ரத்த சரித்திரம்' பிரமோஷனை பார்த்த கையோடு இதை எழுதுகிறேன்.

டிரைய்லரே பச்சை மிளகாயை மிளகாய்ப் பொடி தொட்டுக் கொண்டு கடித்தாற் போல் விறுவிறுவென்று இருக்கிறது. 'எண்டர் தி டிராகன்' பார்த்துவிட்டு வெளியே வந்த போது பல்லி மாதிரி இருக்கிற யாரையாவது தேர்ந்தெடுத்து 'ஹூர்ரே' என்று கையால் வெட்ட வேண்டும் போலிருக்கிறது' என்று 'வாத்தியார்' முன்பு எழுதினது ஞாபகம் வருகிறது.

நாடகத்தின் நீட்சியாகவே நிகழ்ந்துக் கொண்டிருந்த இந்திய சினிமாவை இருளும் வெளிச்சமுமான சரியான கலவையில் அதன் காட்சியமைப்பை மாற்றியமைத்தவர்களில் மணிரத்னம் முதன்மையானவர் என்றாலும் ஒருவகையில் ராமுவை மணியின் முன்வரிசையில் வைப்பேன். ஏனெனில் ஒரு பாத்திரம் பழிவாங்குதல் குறித்து வெளிப்படுத்தும் வன்முறை மிக நேர்மையாகவும் அதன் உக்கிரத்துடனும் ராமுவின் உருவாக்கங்களில் இருக்கும். ராமுவின் முதல்படமான 'உதயத்தில்' (தெலுங்கில் ஷிவா) கல்லூரி மாணவனான நாயகன், ரவுடி மற்றும் அரசியல் பின்னணி பலம் தரும் தைரியத்தில் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் சக மாணவனுக்கு எதிராக ஒரு ரெளத்திரமான கணத்தில் தன்னுடைய சைக்கிளின் செயினை ஆவேசமாக உருவும் கணத்தில், அந்த அனுபவக் கடத்தலை பார்வையாளனுக்கு மிகக் கச்சிதமாக கொண்டு சேர்த்தற்காக ராமுவை நினைவுகூரும் அதே சமயத்தில் அந்தக் காட்சியையும் இப்போது நினைவுகூரும் போது உள்ளுக்குள் ஒரு நரம்பு துடித்து அடங்குகிறது.

மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தம்முடைய படங்களின் வெளிப்பாட்டிற்கு சம்பந்தமேயில்லாமல்  ஒரு ரோபோ போலவே அமர்நதிருக்கிறார் ராமு. சில்லறை ரவுடிகளின் அபத்தமான கூக்குரல்களுக்கு இடையில் வன்முறையின் பின்னுள்ள அனைத்து நியாய/அநியாயங்களை சாத்தியங்களை உணர்ந்திருக்கிற ஒரு முதிர்ச்சியான வன்முறையாளனைப் போன்ற சித்திரமே அதைப் பார்த்தவுடன் தோன்றுகிறது.

'பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வு' -  மஹாபாரதம் ' என இந்தப் படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் டேக் லைனாக வெளிவந்த போது இந்து மக்கள் கட்சி இதை எதிர்த்ததாக பத்திரிகைகளில் வாசித்தேன். இந்த எதிர்ப்பிற்குப் பிறகு இந்த வாசகத்தை உபயோகிப்பதை படநிர்வாகம் கைவிட்டு விட்டது போலிருக்கிறது.

சரி. பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா? ஒருவகையில் ஆம். நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்முறைகளின் போதும் சிந்தனைகளின் போதும் கூட நமக்குள் முழுமையாக நிகழாத ஒருமுகப்படுத்தப்பட்ட மனக்குவிப்பும் வலிமையும் செயலும், பழிவாங்குதலின் போது நிகழ்கிறது என்பதை எத்தனை பேர் ஆச்சரியத்தோடு கவனி்த்திருப்போம்.

OLD BOY என்கிற கொரிய நாட்டுத் திரைப்படம் 'பழிவாங்குதல்' என்பதை ஒரு தத்துவமாகவே கொண்டு இயங்குகிறது. மாணவப்பருவத்தில் நிகழ்ந்த ஒரு மனக்கசப்பின் காரணமாக அந்தப் பகையுணர்வை பல ஆண்டுகள் அதன் வெம்மை குறையாமல் பாதுகாத்து, அதற்குக் காரணமானவனை  கடத்திச் சென்று பல ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கிறான் ஒருவன். எதற்காக தனக்கு இந்த தண்டனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் சிறைவாசி அங்கிருந்து வெளிப்படுத்தப்பட்டவுடன் தன்னுடைய பழிவாங்குதலை நிறைவேற்றுகிறான்.

அந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்.


ஆனால் பழிவாங்குதல் என்பது பரிசுத்தமான உணர்வாக இருந்தாலும் நாம் இதை நியாயப்படுத்த முடியுமா? இந்தப் பரிசுத்தம் எத்தகையது? ஏதோவொரு  குற்றவுணர்வின் காரணமாக ஏற்படும் நோய்க்கூறு மனநிலையில் உளப்பாதிப்பில் திரும்பத் திரும்ப கைகழுவுகிற பரிசுத்தத்தைப் போன்றது

ஒருவரை பழிவாங்குவதற்காக முனைப்புடன் செயற்படும் அந்தத் தருணங்களில் நாம் அந்தப் பரிசுத்த உணர்வோடு இருந்தாலும் அதே சமயத்தில் மிருகத்தன்மையோடு இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. மிருகங்களிடமிருந்து நாம் வேறுபடும் முக்கியமான புள்ளியிது என்று தோன்றினாலும் உண்மையில் மிருகங்களிடம் கூட பழிவாங்கும் உணர்வு கிடையாது. உணவுப் போட்டிக்காகவும் தம்முடைய பாதுகாப்பிற்காகவும்தான் இன்னொரு மிருகத்தோடு மோதுகிறதே ஒழிய பழிவாங்குவதற்காக அல்ல. 'யானை தன் வாலை இழுத்தவனை பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும்', 'கண்கொத்தி பாம்பு தான் சாகடித்தவனை சுடுகாடு வரை சென்று பார்க்கும்' என்பதெல்லாம் மிருகங்களைக் குறித்த சுவாரசியமான அவதூறுகள்.

ஆனால் பரம்பரை பரம்பரையாக தங்களின் பகையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களை இன்றும் கூட பார்க்கிறோம். இதற்குப் பின்னாலிருக்கும் மூலக் காரணத்தை பின்னோக்கி ஆராய்ந்தால் அது மிக நுண்ணியதாகவும் எளிதில் தீர்த்துக் கொண்டிருப்பதாகவும் சமயங்களில் நகைப்பிற்கு உரியதாகவும் கூட இருக்கும். நாம் இதுவரை போட்டிருக்கும் சண்டைகளை சில ஆண்டுகள் கழித்து அதன் முதிர்ச்சியோடு  நினைவு கூர்ந்தால் அது பெரும்பாலும் சிறுபிள்ளைத்தனமாக உணரச் செய்வதோடு அதை வெட்கச் சிரிப்புடன் ஒப்புக் கொள்கிறதாகவும் 'இதற்கு்ப போயா?'  என்பதாகவும் இருக்கும்.

இப்படியான தருணங்களில் ஒரு சராசரி மனிதனாக நானும் மாட்டிக் கொண்டிருக்கிறேன். சக மனிதனின் மீது கோபம் கொள்கிற சமயங்களில் மற்ற சமயங்களை விட நான் மிக உண்மையானவாக இருக்கிறேன். (பழிவாங்குதலை கோழைத்தனமாக மறைமுகமாக செய்வதைப் போன்ற ஒர் அயோக்கியத்தனம் இருக்கவே முடியாது.) ஆனால் அந்த ஆவேசம் அடங்கின பிறகு நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது நான் செயல்பட்டதை நினைத்து குற்றவுணர்வும் வெட்கமும் அடைகிறேன். இந்த இரு நிலைகளுக்குள் கடந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

மனிதன் இத்தனை வருடங்கள் வளர்த்து வருகிற சமூக நாகரிகங்களும் அமைப்பும் நம்முடைய பழிவாங்கும் குணங்களை அநாகரிகங்களை வன்மங்களை மட்டுப்படுத்தி மாத்திரமே வைத்திருக்கின்றன. 'உர்'ரென்று சீறும் வனமம் நம் அடிமனதில் அதன் உக்கிரத்தோடு அமர்ந்திருக்கிறது. இதைக் கடந்து வருவது அசாத்தியமானதுதான் என்றாலும் இந்த உணர்வொடு சக மனிதனின் மீதான நேசத்தை சிதைக்காமலிருப்பதில்தான் அடங்கியிருக்கிறது இதனுள்ளிருக்கும் மறைமுக சவால்.

இந்த உணர்வோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். ராமுவின் ரத்தசரித்திரம் அதனைக் காண்பதற்கான ஆவலையும் எதிர்பார்ப்பையம் ஏற்படுத்துவதில் நிறைவு பெற்றிருக்கிறது. அந்தப்படத்தைப் பார்த்தவுடன் ஒருவேளை என்னுள் எழும் 'பரிசுத்தவுணர்வில்' அதைப் பற்றி விரைவில் எழுத முயல்கிறேன்.

suresh kannan

Friday, October 15, 2010

ஒரு நண்பரின் கடிதம்

சமீபத்திய சர்ச்சைகளின் மாய வியூகத்தில் எப்படியோ சிக்கி மனஉளைச்சலாக இருப்பதாக நேற்று வெளியிட்டிருந்த பதிவினைத் தொடர்ந்து எதிர்பாராத இடங்களிலிருந்து பல நண்பர்கள் தனிமடல்களில் தங்களின் கருத்தைத் தெரிவித்திருந்தனர். பலர் தங்களின் தார்மீக ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். பலருக்கும் இது குறித்த மனக்கொந்தளிப்பிருந்தாலும் அதே சமயத்தில் தங்களின் நேரமும் மனஆரோக்கியமும் முக்கியமானது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

'இதிலிருந்து வெளியே வந்து விடுங்கள். இது ஒரு விஷவட்டம். இன்றைக்கு இவர், நாளைக்கு இன்னொருவர் என்று இணையப் பெருவெளியில் இவர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கெல்லாம் தொடர்ந்து மல்லுக் கட்டுக் கொண்டிருந்தால் உங்களின் எழுத்துத் திறன் பாதிக்கப்படலாம்' என்பதுதான் அவர்கள் வெளியிட்ட கருத்துக்களின் மைய தொனியாக இருந்தது.. மேலதிக சர்ச்சைகளைத் தவிர்க்க சில பின்னூட்டங்களைத் தடுத்து விட்டேன்.

அனைவருக்கும் நன்றி.

வந்திருந்த கடிதங்களில் ஒன்று எனக்கு மிக முக்கியமானதாகப் படுவதால், என்னை சில நிமிடங்கள் சிந்திக்க வைத்ததால், பொது உபயோகம் கருதி, அவரது அனுமதியுடன் பெயர்களை நீக்கி விட்டு இங்கு பிரசுரித்துள்ளேன்.

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
 
தங்கள் சமீபத்திய பதிவுகளை வாசித்தேன். ஏன் வீணாக சண்டை போடுகிறீர்கள் என்றெல்லாம் அறிவுரை கூறப் போவதில்லை. ஆனால் ஒரு விஷயம். இது என்னையும் மிக நாட்களாக ஆட்கொண்ட ஒன்று. பரந்த வாசிப்பும்,  அறிவனுபவமும் உள்ள _______________________________- போன்றோரெல்லாம் ஏன் வெறுப்பைக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது எனக்கு பல நாட்களாக புரியாமலே இருந்தது. உளவியல் பிரச்சனையோ, பணிச்சுமையோ அல்லது வேறு ஏதாவது காரணமோ என்றெல்லாம் கூட தோணிற்று. ஆனால் விஷயம் அவ்வளவு சிக்கலானதெல்லாம் இல்லை. மிகவும் நேரடியானது. ஆற்றாமைதான் அவர்களது பிரச்சனை.   மேலே சொன்ன ஒவ்வொருவருக்கும் எழுத்தாளனாகும், ஒரு பெரும் சிந்தனையாளனாகும் கனவு இருந்தது. கனவு மட்டுமே இருந்தது (அந்த லிஸ்டில் ____________________________-- போன்ற பெயர்களயும் சேர்த்துக் கொள்ளலாம்). அதை நிறைவேற்றத் தேவையான உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை போன்றவை  இல்லை. முக்கியமாக பொறுமை இல்லை. இன்றே, இந்நிமிடமே மறுக்க முடியாத ஆளுமையாக ஆக வேண்டும் என்ற இளமைக்கே உரிய கனவு அவர்களுக்கு இருந்திருக்கிறது. அது தவறு என்றேல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் அந்தக் கனவைப் பின்தொடர்ந்து வரும் வலியை, புறக்கணிப்பை,   கோளாறுகளை, சறுக்கல்களை நேர்மையாக பரிசீலித்து பார்க்க அவர்களால் முடியவில்லை என்றே நினைக்கிறேன். அவர்களது எதிர்மறை ஆளுமை இவை அனைத்தையும் தலைகீழாக்கி, சித்தாந்த முலாம் பூசி, தங்களுக்கு எதிரான கூட்டுச் சதியாகவே புரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிர்வினை புரிவதிலேயே இவர்களது பாதி வய.து கழிந்திருக்கும்.  இவர்களை எதுவுமே செய்ய முடியாது.  பொறுமிக் கொண்டே தான் இருப்பார்கள். சீண்டிக் கொண்டே தான் இருப்பார்கள். தூர தூர ஓடினாலும். 

இதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களை சீண்டிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு எதிர்வினை புரிந்து கொண்டே இருந்தால் நீங்களும் இந்த ஆற்றாமை உணர்வை அடைவீர்கள். ஒரு காலத்தில் அக்கப்போர் தவிர எதுவுமே உருப்படியாக எழுதவில்லையே என்ற உணர்வு அவர்களுக்கெல்லாம் கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும் என்றே நான் ஊகிக்கிறேன். அந்த நிலைக்கு நீங்கள் ஒருநாளும் செல்லக் கூடாது என்ற ஆசையிலே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அடுத்ததாக நீங்கள் எழுதப்போகும் எதிர்வினையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து எதிர்வினைக்கு எதிர்வினை என்று எழுத ஆரம்பித்தீர்கள் என்றால் நீங்களும் அவர்கள் சென்று சேர்ந்த இடத்திற்கே சென்று சேர்வீர்கள்.  ஒரு நண்பனாக, வாசகனாக உரிமையுடன் சொல்கிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து தான் இருக்கும். ஆனாலும் பெல்ட்டிற்க்குக் கீழ் அடித்துவிட்டார்கள் என்பதால் நீங்களும் உள்ளுக்குள் தடுமாறிப் போயிருப்பீர்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். அவ்வளவு தான் நான் சொல்வது.

புறக்கணிப்பே நாம் இவர்களுக்கு தரக் கூடிய அதிகபட்ச தண்டனை.  

அன்புடன்,
_______________


suresh kannan

Thursday, October 14, 2010

இரண்டு எதிர்வினைகள்

ஏன் இணையததிற்கு எழுத வந்தோம் என்று யோசிக்கிற அளவிற்கு முன்னெப்போதுமில்லாத மனஉளைச்சலை சந்திக்கிற தருணததில் இதை எழுதுகிறேன். அன்றாட வாழ்வின் இயந்திரத்தனங்களும் அழுத்தங்களும் சலிப்பூட்டுவதுமான சமயங்களிலிருந்து இளைப்பாறுவதற்காகவும் நண்பர்களுடன் மகிழ்வாக உரையாடுவதற்காகவும்  என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும்  இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருந்தது. ஒத்த அலைவரிசை ரசனையுள்ள  நண்பர்களையும் இனிமையாகப் பழகக்கூடிய பல நண்பர்களையும் தந்ததே இணையத்தின் என் ஒரே சம்பாத்தியம். எஸ்.ராவின் பாதிப்பில் உலக சினிமா மீது ஆர்வமேற்பட்டு அதைக் குறித்து தொடர்ந்து எழுதி அது குறித்தானதொரு பிரத்யேக அடையாளம் என் மீது ஏற்பட்டதே நிறைவானதாக இருக்கிறது. இதற்கு உச்சமாக எழுத்தாளர் ஜெயமோகன் என் வலைப்பதிவையும் (என் வலைப்பதிவை மாத்திரம் அல்ல) அவர் கவனித்து வாசிக்கும் சினிமா பதிவுகளில் ஒன்றாக குறிப்பிட்ட போதுதான் நான் எழுதி வருவதின் சீரியஸ்னஸே எனக்கு அழுத்தமாகப் புரிந்தது. (ஆனால் இதுவே சிலருக்கு காண்டை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. ஜெயமோகனின் பிரம்மாண்ட ஆளுமையின் காரணமாகவே அவரை மூர்க்கமாக வெறுப்பவர்கள் அந்த பட்டியலில் என்னையும் இணைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.) இனியாவது இன்னும் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுத வேண்டுமென்கிற உந்துதலை ஜெயமோகனின் குறிப்பு ஏற்படுத்தியது.

ஆனால் கல்லெறிந்து விட்டு ஓடிப்போகும், காரணமேயின்றி காழ்ப்பை வெளிப்படுத்தும் ஆசாமிகளால் பல சமயங்களில் நான் காயப்பட்டிருக்கிறேன். கூடிக் கும்மியடிக்கும், யாரையாவது நோண்டிக் கொண்டேயிருக்கும் இந்த ஈனப்பிறவிகளிடமிருந்து விலகிப் போனாலும் துரத்திக் கடிக்கும் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாததாக இருக்கிறது. சரி. நம்முடைய உழைப்பைச் செலுத்தி மேற்குறிப்பிட்ட நற்பெயரை சம்பாதித்து விட்ட ஒரே காரணத்திற்காக இவர்களுடன் மல்லுக்கட்டாமலேயே ஒதுங்கியிருந்து பார்த்துவிட்டேன்.

 சரி. அதையெல்லாம் பார்த்தால் முடியாது. இணையத்தில் இல்லையெனினும் சமூகத்திலும் இவ்வாறான மனிதர்களையும் நிகழ்வுகளையும் எதிர்கொண்டாகத்தான் வேண்டும். என்னை நுண்ணுணர்வு உள்ளவனாகவும் சமூகம் கட்டியமைத்தபடியான நாகரிகமானவாக அடையாளம் காட்டிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும்தான்  விரும்புகிறேன் என்றாலும் எனினும் ஒருவன் வேண்டுமென்றே மூர்க்கமாக வந்து மோதும் போது ஒதுங்கிப் போவதற்கு நான் மகான் அல்ல.

சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை சில நண்பர்கள் அறியக்கூடும். அறியாதவர்களுக்காக சுருக்கமாக.

ரோசா வசந்த் என்கிற 'மல' ஆராய்ச்சியாளரும் (அதாவது தன்னைப் பற்றி ஆராய்கிறவர்) சிந்தனையாளரும் என்னுடைய இணையப் பயணத்தின் ஆரம்பம் முதலே பதிவுகளிலும் சமீபத்தில்  டிவிட்டரிலும்  என்னைச் சீண்டிக் கொண்டிருந்தனின் விளைவாக ஒரு மனநெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஆவேசமாகி சிறுகுறிப்பொன்றை எழுதினேன். (நான் திமிர்த்தனமாக எழுதிய டிவிட்களுக்கான பதிலது  என்று ரோசாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமிருக்கு திமிரைத்தான் பதிலாக அளிக்க முடியும்). அப்படி எழுதியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 'அக்கப் போர் மனநிலையில் இல்லை. இரண்டொரு நாட்களில் எழுதுவேன்' என்றேன். உடனே டிவிட்டரில் நண்பர்களுடன் என்னுடைய உரையாடலைத் தொடர்ந்தேன். இவருக்கு பதிலளிக்கக்கூடிய உன்னதப் பணியில் ஈடுபடாமல் (உண்மையில் அது எனக்கு மனஉளைச்சலைத்தருகிற காரியம்) டிவிட்டரில் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இவருக்குக் கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. எது அக்கப்போர், எது இளைப்பாறுவதற்கான உரையாடல்  என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் பல ஆண்டுகள் தொடர்பான விஷயங்களை மீள்நினைவு செய்து எழுத வேண்டுமென்றால் அதற்கான அவகாசமும் தேவை.

இதற்கு சற்றும் வாய்ப்பே தராமல், நாராயணன் இதுகுறித்து பஞ்சாயத்து பதிவொன்றை எழுதினார். ஒரு சமயத்தில் இணையத்தில் நான் பொறாமைப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர் நாராயணன்தான் என்பதை அவரிடமே பொதுவில் முந்தைய சமயங்களில் தெரிவித்திருக்கிறேன். ஒரளவிற்கு நடுநிலைமையான நேர்மையான மனிதர் என்பது போல்தான் நாராயணன் குறித்த பிம்பம் என்னுள் இருந்தது. சுந்தர்-வசந்த் தாக்குதல் தொடர்பான சமயத்தில் இருபக்கமும் என்ன நடந்ததென்று தெரியாமல் அமைதி காத்ததாக சொன்னவர், என்னுடைய விஷயத்தில் மாத்திரம் உடனே எதிர்வினை பதிவு எழுதியது ஏன் என்பது புரியவில்லை.

'இத்தனை வருடங்களாக பெரும்பாலும் இலக்கியம், சினிமா குறித்து  மாத்திரமே எழுதி வருகிற ஒருவன், இணையத்தில் இதுவரை யாரையும் கடுமையாக எழுதாத ஒருவன், திடீரென்று ஏன் இப்படி ஒருவரைப் பற்றி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறான்' என்று நாராயணன் சிறிது நேரமாவது யோசித்திருக்கலாம். அல்லது என்னையே தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். ஆனால் 'சிந்தனையாளரின்' சகவாசமும் நட்பும்  கண்ணை மறைத்துவிட்டது போலிருக்கிறது.

சரி. அதுவும் ஒருவகையில் எனக்கு நன்மையே புரிந்தது. டிவிட்டர் சமூகத்தில் மாத்திரம் முணுமுணுக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் பிளாக்கர் பரப்பிற்கு வெளியே வந்து பலரும் அறியக் காரணமாயிற்று. ஆனால் ஒருவகையில் நாராயணனின்  ஒருதலைபட்சமான பார்வையும் ரோசாவை ஏதோ திருவுரு ஆக்குகிற முயற்சியில் எழுதினதும்  எனக்குள் ஆயாசத்தை ஏற்படுத்தியது. இப்போது இது எந்த திசையில் போகும் என்பதைக் கூட என்னால் யூகிக்க முடிந்தது. உண்மையில் ரோசாவுடனான பூசலை நான் விளக்கி எழுதுவதாகச் சொல்லியிருந்த பதிவின் மூலம் முடித்துக் கொள்வதுதான் என் நோக்கமாக இருந்தது. ஆனால் நாராயணன் பதிவு தந்த ஆயாசத்தில் என் தற்போதைய நிலையை சுருக்கமாக எழுதி முடித்துக் கொண்டேன்.

உண்மையில் நான் கடுமையாக எழுதியதற்காக ரோசாவிடம் மன்னிப்பு கேட்கும் முடிவில் கூட இருந்தேன். இனியதற்கு வாய்ப்பேயில்லை. ரோசாவிற்கு டிவிட்டரில் எழுதிய குறிப்பில் கடுமையாக எழுதியதும் பஞ்ச் டயலாக் பேசியதும் அந்தச் சமயத்தின் தீவிரமான மனநிலையில், ரோசாவின் திமிரான பதிலுக்கு எதிர்வினையாக எழுதியது. அதற்கு பின்னணயில் ரோசா இத்தனை ஆண்டுகளாக என்னுள் ஏற்படுத்தியிருந்த மனஅழுத்த அடுக்குகளும் காரணம்.

ரோசாவிற்கு பதிலெழுவதாக நான் எழுதியிருந்ததை வாசித்த பல நண்பர்கள் அதைத் தொடராமலிருக்க என்னைக் கேட்டுக் கொண்டார்கள். 'ரோசா ஒரு வகையில் எதையும் தீவிரமான எல்லையில் குரோதத்துடன் அணுகுவார் என்றும் அவருக்கு ஒருவகையான உளப்பிரச்சினை உள்ளது என்றும் பொதுவெளியிலோ தனியான சந்தர்ப்பத்திலோ எவ்வித அவகாசமும் தராமல் தாக்கக்கூடியவர் என்றும் எச்சரித்தார்கள்.

இந்த மாதிரியான நிகழ்வுகளில் தொடர்புப்படுத்தி என் பெயர் இணையத்தில் அடையாளம் காட்டப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் - சற்று மிகையாக சவடால் அளித்தாலும் - என் வழக்கப்படி மீண்டும் ஒதுங்கிப் போகவே விரும்பினேன்.

ஆனால்...

ரோசா அவருடைய வழக்கமான குரோத மொழிகளுடன்  என்னைப் பற்றி இன்று எழுதியிருக்கிறார். என் வாயிலிருந்து இன்னும் மேலதிக வார்த்தைகளைப் பிடுங்கி அதை தனக்கு சாதகமானதாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழலுக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். இதனால்தான் என்னை 'ஆதாரம் ஆதாரம்' என்று துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.  (என்னுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ஒருவரை திட்டமிட்டு மூக்கில் குத்தி தாக்கி விட்டு அதற்கு தார்மீக ரீதியாக மன்னிப்பு கூட கேட்காமல் ஏதோ கிரிமினல் வக்கீல் போல் எதிர்வினையாற்றிய ரோசா ஒர்  அநாகரிக பேர்வழி என்று அதை இணையத்தில் அவதானித்த பலருக்கே தெரியும். இதுக்கு எதுக்கய்யா புண்ணாக்கு ஆதாரம்) அதிலிருந்து நான் தப்பித்துக் கொண்டவுடன். அவருக்கு கோபம் தலைக்கேறி விட்டிருக்கிறது. எனவே ஒரு குரோதமான பதிவின் மூலம் அதை  தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.

ரோசாவை சைக்கோ என உணாச்சி வேகத்தில் நான் திட்டியதற்கு பஞ்சாயத்து செய்தவர்களும் கேள்வி கேட்டவர்களும் நடுநிலையான நண்பர்களும் மனச்சாட்சியோடு ரோசாவின் பதிவிற்கு எதிர்வினை புரிவார்கள் என நம்புகிறேன /  எதிர்பார்க்கிறேன்.

இனி என் முறை.  ரோசாவின் தொடர்ந்து அழுத்தம் தந்து கேட்டுக் கொண்டிருந்த படி அதற்கான விளக்கத்தை எழுதப் போகிறேன். இந்த மனநெருக்கடிக்கு எப்படியோ என்னைத் தள்ளிய ரோசாவின் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன். இதில் அவருக்கு வெற்றிதான். வாழ்த்துகள். ரோசாவிற்கான விளக்கப்பதிவை எழுதுவதின் மூலம் எனக்கும் சற்று மனஅழுத்தம் குறையக்கூடும் என்பதையும் வெளிப்படையாகவே நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன்.  அந்தச் சூழலையும் சமத்காரமாக ஏற்படுத்தித் தந்ததற்காக அவருக்கு நன்றி.


அடுத்ததாக லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவின் பதிவு.

இந்தக் கருமத்தையெல்லாம் புறக்கணித்து விட்டுச் செல்வதுதான் என்னுடைய முடிவாக இருந்தது.

நான் ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றால் அவருக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச தகுதி கூட இந்த ஆசாமியிடமில்லை. என் மீது இத்தனை வெறுப்பை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு நேரில சந்திக்கும் சமயங்களில் எப்படி இந்த ஆசாமியால் ஹிஹி என இளிக்க முடிந்தது  என தெரியவில்லை. இதுதான் உண்மையில் இரட்டையான மனநிலை.

ஒர் அநாகரிக ஆசாமியை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்குரிய இயல்பான முக வெளிப்பாட்டோடு அவரை மறுத்து ஒதுங்கி நடந்து கொள்வதுதான் முறையான, நோமையான செயல். அதைவிட்டு பல ஆதாயங்களுக்காக வெறுக்கும் நண்பர்களிடம் குழைவது, பிடிக்காத நபரோடு கலவி கொள்ள வேண்டியிருக்கிற பாலியல் தொழிலாளியின் நிலைக்கு ஒப்பானது. பாவம். அவர்களுக்காவது அதை மறுக்கக்கூடிய வாய்ப்பும் சந்தர்ப்பமும் இல்லை.

திராவிட மேடைகளில் பிரியாணிக்காகவும் காசுக்காகவும் மதுக்காகவும் ஆபாச மொழியில் எதை வேண்டுமானாலும் உளறக்கூடிய பேச்சாளர்களின் இணையவடிவம் இந்த ஆசாமி. ரோசாவி்ன் இன்னொரு வகையான குளோனிங் இவர். இந்த ஆசாமியிடமிருந்தும் நான் வெளிப்படையாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டாலும் அடிப்படை நாகரிகமேயின்றி தொடர்ந்து எதையோ உளறிக் கொண்டேயிருந்தார். இது போன்ற சில ஆசாமிகள் இதே வேலையாக உருப்படியாக எழுதுபவர்களையும் சீண்டி சீண்டி அவர்களின் சமநிலையைக் குலைப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நானும் இந்தப் பதிவுமே ஓர் உதாரணம். அந்த வகையில் அவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானதுதான்.

தமிழ் இணையம் / பதிவுகள் என்பது கீழ்த்தரமான வசவுகளால் பின்னூட்டங்களால் ஆனது என்பது போன்ற பொதுப் பிம்பத்திற்கு இம்மாதிரியான ஆசாமிகள்தான் காரணம். இணையத்தின் இந்த மோசமான அடையாளம் மாறுவதற்கு மற்ற பதிவர்களால் இவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்பதையும் மற்ற நண்பர்களுக்கும் பொதுவானவர்களுக்கும்  ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன். ஆனால் இம்மாதிரியான ஆசாமிகள்தான் இணையத்தின் பிரதிநிதிகள் என்பது மாதிரி தங்களின் செல்வாக்கைக் கொண்டு ஊடகங்களில் வெளிப்படும் போது அவமானமாக இருக்கிறது.

இந்த ஆசாமியைப் பொருட்படுத்தி இத்தனை எழுதியதே அதிகம். நண்பர் ஆசிஃப் பற்றி நான் கூகுள் பஸ்ஸில் எழுதியதையும் இந்த ஆசாமி குறிப்பிட்டிருக்கிறார். மரத்தடி குழும காலத்திலேயே ஆசிஃப் என் நண்பர் என்பதையும் அவருக்கும் எனக்குமான இந்த உரசல் வழக்கமானதுதான் என்பதையும் பஸ்ஸிலேயே விளக்கியிருக்கிறேன். ஆசிஃபும் இதை புரிந்து கொண்டு பெருந்தன்மையாக பதிலளித்திருந்தார். ஆனால் அதையும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த நபர் உளறியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. எனக்கு நண்பர்களே கிடையாதாம். அடக்கஷ்டமே. தன்னுடைய ரசனைக்கு அலைவரிசைக்கு ஈடாக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு சிறிய வட்டத்திற்குள் புழங்குவதும் ஆதாயங்களுக்காக எல்லோரிடம் பல்லை இளிப்பதும் ஒன்றா? நான் எழுதிய பதிவின்ஒட்டுமொத்த கான்டெக்ஸ்ட்டை புரிந்து கொள்ள முடியாமல் அல்லது புரிந்து கொள்ளாத பாவனையுடன்  இறுதிப் பகுதியில் தன் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டதின் காரணமாகவே நான் எழுதியதையெல்லாம் இம்மாதிரி வழக்கமாக எழுதுபவர்கள் போலவே திரி்த்து திரித்து எழுதுவதை என்னவென்பது. நான் விமாசனங்களை எதிர்கொள்வதேயில்லையாம். நேர்மையான விமர்சனமென்றால் உடனே அதை ஏற்றுக் கொண்டு பெரும்பாலான சமயங்களில் பதிலளித்திருக்கிறேன். இல்லையெனில் அது மேலதிக சர்ச்சையை வளர்க்குமென்றால் அதை அங்கேயே முறித்துவிட்டு ஒதுஙகிப் போவதுதான் என் வழக்கம்.இதனாலேயே என் பதிவின் பின்னூட்டங்களுக்கு கூட நான் பதிலளிப்பதில்லை. மெனக்கெட்டு என் பதிவை வாசிக்கும் நல்ல வாசகர்கள் கூட இதனால் வருத்தமடைந்திருக்கலாம்.

நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்.

'எதற்குங்க இதுக்கெல்லாம் நேரம் வேஸ்ட் செய்துக்கிட்டு' 'இவங்களையெல்லாம் புறக்கணிப்பதுதாங்க நல்லது" 'அவங்க இப்படித்தான்' 'எதற்கு வம்பு' என்றெல்லாம் தயவுசெய்து பின்னூட்டங்களில் எழுதாதீர்கள். நான் மேலே குறிப்பிட்ட சில ஆசாமிகள் மாத்திரமில்லை. இது போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் சீண்டும் போது இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதைக் கண்டியுங்கள். நாம் நாகரிகமாக ஒதுங்கி ஒதுங்கிப் போகத்தான் இவர்களுக்கு குஷி கிளம்பி விடுகிறது. துரத்தி துரத்திக் கடிக்கிறார்கள். நான் இப்படி அமைதியாக இருந்ததனால்தான் இன்று 'மலப்புழு'வாகியிருக்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். உடனேயே தக்க பதிலடி கொடுப்பவர்களிடம் இவர்கள் வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.

இனி ரோசாவிற்கான என் பதிலை போதுமான சாவகாசம் எடுத்துக் கொண்டு எழுதுவேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? வருகிறேன். இதன் மூலம் என் மீதும் சேறும் சகதியும் அவதூறும் வன்மமும் பட்டாலும் சரி.இதன் மூலம் இந்த நபருக்கு உளப்பிரச்சினைக்கு மேலதிக பாதிப்பேதும் ஏற்பட்டால் அதற்கு மூலக்காரணம் நானல்ல என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். குரோதமான மொழியில் எழுதப்பட்டவைகளுக்கு அவரே அதிகம் விரும்பியபடி பதிலளிப்பதுதான் என் நோக்கமேயன்றி வேறொன்றுமில்லை.

இப்படி எழுதுவதில் எனக்கே ஒப்புதலில்லை என்றாலும் ஒரு முன்ஜாக்கிரதைக்காக இதைப் பதிவு செய்கிறேன். பொதுவெளிகளில், பதிவர் சந்திப்புகளில், நூல் வெளியீட்டு விழாக்களில் எங்காவது ஒருவேளை நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது நேரடி அல்லது மறைமுகக் காரணமாகயிருக்க்கூடும் என்பதையும் அந்தச் சமயத்தில் அதை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வேன என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். இதையும் சொல்லித் தொலைத்து விடுகிறேன். இதை ஒரு வேளை தவறான முறையில் பயன்படுத்துவேனோ என்கிற சந்தேகமெல்லாம் எவருக்கும் எழத் தேவையில்லை. அது நிச்சயம் நேர்மையானதாகவே இருக்கும்.

இன்னொன்று: இணையத்தின் பின்னூட்டங்களிலும் டிவிட்டர் சந்துகளிலும் என் பெயரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டு  எழுதப்படும் தனிமனித தாக்குதல்களுக்கும் அதீத அவதூறுகளுக்கும் சைபர் கிரைமின் உதவியையும் நான் நாடக்கூடும. ஒருவகையில் ரோசா, யுவகிருஷ்ணா போல நேரடியாக மோதுபவர்களைக் கூட நான் மதிக்கிறேன். அதை விட்டு கோழைகள் போல் மறைவாக முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்களின் அரசியல் அசிங்கமாக இருக்கிறது.அவர்கள் அதை நிறுத்தி விட்டு எதுவென்றாலும் என்னிடமே உரையாடலாம்.சில நண்பர்கள் நகைச்சுவைக்காக என் பதிவுகளை கலாய்ப்பதை அதே நகைச்சுவையுடன்தான் அணுகியிருக்கிறேன் என்பதை பல நண்பர்கள் அறிவார்கள். சீரியஸான கேள்விகளுக்கும் அதே தீவிரத்தனத்தோடு சமயங்களில் அதன் கடுமையைக் குறைக்கும் பொருட்டு நகைச்சுவையாகவும் எதிர்வினை புரிந்திருக்கிறேன். விமர்சனத்தையே எதிர்கொள்ள மாட்டேன் என்பதெல்லாம் திரிபுவாதம்.

என் மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com


தொடர்புடைய பதிவுகள்

வார்த்தைகளின் வன்புணர்ச்சி

கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!

காகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்


சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு

suresh kannan

Wednesday, October 13, 2010

செல்லில் அடங்காத இசைடச் ஸ்கீரின் செல்போன், ஐபாட், பளூடூத்... போன்ற நவீன வகை தொலைத்தொடர்பு மற்றும பொழுதுபோக்குச் சாதனங்களையும் அவை போன்ற நுட்பங்களையும் கையாள்வதில் சமர்த்தோ அல்லது விருப்பமோ எனக்கு எப்பவும் இருந்ததில்லை. க்ரெடடிட் கார்டோ, ஏடிஎம் கார்டோ கூட என்னிடமில்லை. (அதை வைத்திருப்பதற்கெல்லாம் விட்டமின் ப சற்று அதிகமும்  'நாளை மற்றொரு நாளே'  என்கிற கடனுக்கு அஞ்சாத ஏகாந்த மனநிலையும் தேவை என்பதெல்லாம் வேறு விஷயம்.). செல்போன் கட்டணம் நிமிடத்திற்கு 16ரூ என்றிருந்த காலகட்டத்திலிருந்து மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு வந்தபிறகும் எந்த செல்போனையும் நான் பயன்படுத்த விருப்பமில்லாமலே இருந்தேன். அதை வைத்துக் கொண்டு சிலர் செய்யும் அலட்டலும் ஏதோ காலையில் காம்ப்ளானுக்கு பதிலாக எக்னாமிக் டைம்ஸை கரைத்துக் குடிப்பது  போல, சாப்பிடும் போதும் செல்போனில் பேசிக் கொண்டேயிருக்கும் எதிர்டேபிள்  'பிஸ்னஸ் மேக்னட்டுக்களை' காண்பதினாலோ அல்லது பேருந்துகளில்,ரயிலில் பயணிக்கும் போது வரிசைகளில் காத்திருக்கும் போது பெரும்பாலானோர் பொறுமையற்ற மனநிலையுடன் செல்போன்களில் எதையாவது நோண்டிக் கொண்டிருப்பதை கவனிப்பதினாலோ செல்போன்களின் மீது ஒவ்வாமையாகவே இருந்தது. 'சும்மா இருப்பது' எத்தனை கடினம் இந்த உலகமயமாக்க பதட்ட வாழ்க்கை உணர்த்துகிறது.

செல்போன் இல்லாமலே பல வருடங்களை ஓட்டிவிட்டாலும் எதிர்வீட்டு ஆறாம்வகுப்பு மாணவன் ' ஹாய்டா! ஹோம்ஒர்க்லாம் எழுதியாச்சு. .. என்கிற ரீதியில் சக மாணவனிடம் பேசி விட்டு நிமிர்ந்து என்னை மிதப்பாய்ப் பார்த்தபின்புதான் (எனக்கு அப்படித் தோன்றியதோ என்னவோ) நானும் செல்போன் வாங்குவது குறித்து அவமானத்துடன் யோசித்தேன். செல்போனிலியே டெராபைட் அனுப்பும் டெரரான போன்கள் எல்லாம் எனக்குத் தேவைப்படாததால் மிக அடிப்படையான மாடலை வாங்கினேன்.

அதற்கும் வந்தது வினை. என்னைச் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஸ்டீரியோ இசையில் ரிங்டோனிக்க, பாக்கெட்டிலிருந்து புறப்பட்ட இருபாம்புகள் காதில் ஒட்டிக் கொண்டிருக்க தலையாட்டி இசை கேட்டுக் கொண்டிருக்க இடையில் என்னுடைய போன் மாத்திரம் பரிதாபமாக ஞீஞீஞீஞீ .. என்று அனலாகில் அழுதது. அடுத்தமுறையாவது இசை கேட்கும் வசதியுடன் வாங்க வேண்டுமென்று ஆறு மாதங்கள் கழித்து பண்பலை வானொலியை கேட்கும் வசதியுடன் கூடிய செல்போனை வாங்கினேன்.

வாங்கினபின்புதான் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.. ரயிலின் தடக்தடக், உரையாடலின் இரைச்சல், வாகனங்களின் ஹாரன்கள், உறுமல்கள் என்கிற நாராச சப்தங்களுக்கு இடையில் இவர்களால் எப்படி இசையை கேட்க முடிகிறதென்று. அது வேகதாளயிசை கொண்ட திரைப்பாடல்களாக இருந்தாலும் சரி, அதன் ஒவ்வொரு ஒலியையும் மீட்டலையும் ஜென் தேநீர் லயிப்புடன் முனைப்புடன் கவனித்துக் கேட்டால்தான் என்னால் அதை ரசிக்க முடியும். இப்படி தன்னிச்சையாக அதுபாட்டுக்கு ஒலித்துக் கொண்டிருக்க உரையாடிக் கொண்டோ, துண்டித்து விட்டு துண்டித்து விட்டு கேட்கவோ இத்தனை இரைச்சல்களின் நடுவில் கேட்க எப்படி சாத்தியமென்று எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நானும் முயன்று பார்த்ததில் பக்கத்தில் ஒருவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தால் கூட என்னால் கேட்க முடியவில்லை.

எப்போதுமே இப்படியான முழு கவனத்துடன் இசை கேட்க முடியாது என்பதையும் உணர்கிறேன். தன்னிச்சையாக கேட்க வேண்டிய தருணங்களும்  உண்டு. நான் அலுவலகம் கிளம்பும் போதெல்லாம் நிச்சயம் ஏதாவதோரு இசை ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். டொய்ங் டொய்ங்.. என்றொலிக்கும் வாத்திய இசையோ, ஆறாம் மாடியில் பறக்கும் துப்பட்டாவை பிடிக்க முனையும் ஹிந்துஸ்தானியோ...எல்லாம் இரவில்தான். காலை வேளைகளில் நிச்சயமாக அதிரடி இசையாக இருக்க வேண்டும். அது ராக்கோ, தேவாவின் கானாவோ. உற்சாகமாக கிளம்பும் உந்துதலை அது தர வேண்டும்.

ஆனால் மெல்லிசையை கேட்க உன்னதமான தருணம் நள்ளிரவுதான். இதை அனுபவித்தவர்கள் என்னுடன் உடன்படுவார்கள். இசையமைப்பாளர்,பாடகர், பாடகி, வாத்தியக் கலைஞர்கள், நுட்பவியலாளர்கள், பாடலாசிரியர்கள் குழுவோடு கேட்பவனும் இணையும், முழுமையாக பங்கு பெரும் தருணமது. இசைக்கோர்ப்பாளர் எத்தனை ஒலிகளை தம்முடைய காவிய மாயத்துடன் இணைத்திருக்கிறார் என்பதை நுட்பமாக அணுக முடியும். 'என்னுள்ளில் ஏதோ' (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) எனும் ஒரே பாடலை ஓரிரவில் தொடர்ந்து சுமார்  இரண்டு மணி நேரங்களாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன்பு இண்டர்லூடாக  ஒலிக்கும் பறவையின் அகவல் போன்ற இசை என்னைப் பித்துப் பிடிக்க வைத்தது. 'காலைல டாக்டர வேணா பாக்கலாமா?' என்று உறக்கததிலிருந்து வெளியே வந்த என் மனைவி கேட்ட பிறகுதான் பதறிப் போய் கணினியை அணைத்தேன். (டாக்டர் ருத்ரன் போன்றவர்கள் இதை வாசித்துக் கொண்டிருந்தால் இது எந்த மாதிரியான உளப்பிரச்சினை என்பதைச் சொல்ல வேண்டும்). என்னைப் பொறுத்தவரை சமூகம் கட்டியமைத்திருக்கும் நியதிகளின் படியும் சம்பிரதாயங்களின் படியும் வழுவாமல் ஒரு கோட்டை இட்டுக் கொண்டு அதிலேயே பல வருடங்களாக எவ்வித சின்னச்சின்ன மீறல்களுமில்லாமல் ஒருவன் வாழ்வானாயின் அவனைத்தான் முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்த இடத்தில் இளையராஜாவின் இசையைப் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும். புரிந்தும் புரியாமலும் எத்தனையோ இசையைக் கேட்டாலும் ராஜாவின் குறிப்பாக 80களில் வெளியான பாடல்களின் இசையைப் போல என் மனதிற்கு மிக நெருக்கமானதாக எதையுமே சொல்ல இயலவில்லை. பதின்ம வயதுகளில் இந்தப் பாடல்களின் பின்னணிகளிலேயே வளர்ந்ததால்தான் இவை இன்னும் பிடிக்கின்றனவா என்பதும் ஆய்வுக்குரியது. தாயின் கருவறையில் ஒடுங்கியமர்ந்திருக்கிற குழந்தையின் கதகதப்பை ராஜாவின் குறிப்பிட்ட சில இசையைக் கேட்கும் சமயத்தில்தான் உணர்கிறேன். (இது குறித்து விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் உரையாடலாம்).

நள்ளிரவில் கேட்பதைப் போல் இசையை அணுகுவதற்கு இன்னொரு உன்னதமான முறை ஹெட்போன். மற்றவர்களை தொந்தரவு செய்யாதவாறு இசை கேட்பதற்காக இது கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் வீணையின் சிணுங்கலோ குழலின் குழைவோ தலைக்கு நடுவில் ஒலிக்கும் போது அது கேட்பனுபவத்தின் இன்னொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்கிறது.

இந்தக் காரணத்திற்காகத்தான் ஹெட்போன் வழியாக இசை கேட்கக்கூடிய செல்போனை வாங்கினேன். ஆனால் பகல் நேரங்களில் அதை சில நொடிகள் கூட தொடரக்கூடிய மனநிலை வாய்க்கவில்லை. அதனால்தான் இதை மற்றவர்கள் எப்படி தொடர்கிறார்கள் என்பது குறித்து எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது.

ஆனால் ஹெட்போன்களில் கேட்பதில் இன்னொரு விதமான பிரச்சினையும் எனக்கிருந்தது. எனக்கு ஒரு காதின் செவிப்பறையில் துளையுண்டு. சிறுவயதிலிருந்தே இந்தப் பிரச்சினை என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது. அறுவைச் சிகிச்சைதான் ஒரேவழியென்று பல ENT மருத்துவர்களும் கிருமித்  தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் தற்காலிகமாக சமாளிக்கலாம் என்று சில மருத்துவர்களும் மாறுபட்ட ஆலோசனைகளைச் சொல்வதால் குழப்பமாயிருக்கிறது. இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்து கொண்ட சிலரின் அனுபவங்கள் கேட்பதற்கு அத்தனை உவப்பானதாயில்லை. மருத்துவம் தொடர்பாக 'எதையும் தள்ளிப் போடும்' இந்திய மனோபாவத்தின் படி இதைக் கையாண்டு கொண்டிருக்கிறேன்.

என்ன பிரச்சினையெனில் இவ்வாறாக ஹெட்போன் உபயோகித்து இசை கேட்ட சமயங்களில் எல்லாம் உத்தரவாதமாக எனக்கு காதில் பிரச்சினை ஏற்பட்டது. இதை ஆராய்ந்த போது நாம் கண்ட இடங்களில் வைக்கும் ஹெட்போன்களில் உள்ள ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் மிக எளிதில் காதிற்குள் நுழைந்து தொற்றை ஏற்படுத்துகின்றன. ஓணானை எடுத்து நேரடியாக காதில் விட்டுக் கொள்ளும் சொந்தசெலவு சூன்ய சமாச்சாரமிது. பிறகு இந்தப் பழக்கத்தை விட்டொழித்த பிறகுதான் பிரச்சினை சமநிலைக்குத் தற்காலிகமாக திரும்பியது.

அதுவுமில்லாமல் சுற்றியிருக்கும் இரைச்சலைத்தாண்டி, அதிரடியான இசைகளை ஹெட்போன் மூலம் தொடர்ந்து கேட்பதால் அது காதின் நரம்புகளைச் சிதைத்து உளப்பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்கிறார்கள். 'குறிப்பிட்ட சில ப்ரீக்வன்ஸி இசை கேட்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்பதால் என்னுடைய இசையமைப்புகளில் அம்மாதிரியான இசையை கண்டிப்பாகத் தடுத்துவிடுவேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நவீன இசையமைப்பாளர்களின் பெரும்பாலான பாடல்கள் கேடுதரும் இசையுடன் அமைந்திருப்பதைக் காண வேதனையாக இருக்கிறது' என்கிறார் இளையராஜா ஒரு நேர்காணலில்.

இதிலிருந்து இப்படியாக ஹெட்போன்களில் இசையை தன்னிச்சையாக கேட்டு வரும் நபர்களைக் கண்டாலே அவர்களின் காதுகளிலிருந்து அதைப் பிடுங்கி பிரச்சினையை விளக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் வணிகசினிமாக்களைப் பற்றி மிதமாக எழுதுவதற்கே "..த்தா நீ யாருடா அதச் சொல்றதுக்கு" என்று பின்னூட்ட மற்றும் டிவிட்டர் சந்துகளில் பீதியூட்டும் வகையிலான குரோதக் கூக்குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது இதையும் எழுதினால் அவ்வளவுதான். வசவுகளைக் கொண்டே என்னைப் புதைத்து விடுவார்கள்.

இப்போது ஹெட்போன்களில் கேட்பவர்கள் தவிர, அது இல்லாமல் வெளியே அனைவருக்கும் இசை அலறும்படியான செல்போன்களும் வந்துவிட்டன. ஒருபக்கம் 'எங்கே நிம்மதி' என்று புலம்பிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்திலிருந்து 'டாடி மம்மி வீட்டில் இல்லே' என்று உரத்த ரகசியம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஹெட்போன்கள் ஒருவகை பிரச்சினையென்றால் இது இப்படி.

suresh kannan

காகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்

அன்புள்ள நாராயணன்,

உங்கள் பதிவு. வார்த்தைகளின் வன்புணர்ச்சி

ரோசா மூலமாக அல்லாவிடினும் உங்கள் மூலமாக இந்த விஷயம் குறித்த முதல் பூனைக்குட்டி பிளாக்கர் பரப்பில்  வெளியே வந்தது குறித்து மகிழ்ச்சி. இதைப் பொதுவில் கொண்டு வந்து அதற்கான உடனடி விளக்கத்தை பொதுவிலேயே நான் எழுதுவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தித் தந்ததற்கும் நன்றி.

நான் டிவிட்டரில் எழுதின அந்தக் குறிப்புக்கு ரோசா பதில் கேட்டதைத் தொடர்ந்து அதைக் குறித்து பதில் எழுதுவதாக அவரிடம் ஒப்புக் கொண்டிருந்தேன். இப்போது நான் அது தொடர்பாக எழுதிக் கொண்டிருக்கும் டிராஃப்டில் நான் கையாண்டிருந்த கடுமையான மொழி குறித்தான விளக்கமும் (தார்மீக அடிப்படையில் மன்னிப்பும் கூட) அடக்கம். ஆனால் அதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அளிக்காதவாறு மனச்சாய்வுடன் நீங்கள் எழுதியிருக்கும் இந்தப் பதிவு ரோசா மீது நீங்கள் கொண்டுள்ள நட்பை எதிரொலிக்கிறதேயன்றி எவ்விதமான நடுநிலை நேர்மையையும் வெளிப்படுத்துகிறதா என்பதை உங்கள் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன். மேலும் 'கீழ்ப்பாக்த்தில் இருக்க வேண்டிய நபர்கள்' என்ற நீங்கள் எழுதிய வார்த்தையும் ரோசாவை 'சைக்கோ' என்று நான் சொன்ன வார்த்தையும் வேறுவேறு பொருள் கொண்டவை என்று நீங்கள் வாதிட மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். நண்பருக்காக எனக்கு உபதேசம் செய்யப் புறப்பட்ட நீங்களே இப்படி எழுதியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இணையத்தில் இதுவரை இத்தனை கடுமையான மொழியை நான் உபயோகித்திருப்பது சாருவைக்குறித்துதான். வாசகர்களை ஆபாசமான மொழியிலும் சக எழுத்தாளர்களை வன்மத்துடன் தொடர்ந்து எழுதும் சாருவின் முன்னால் வைக்கும் என்னுடைய எதிர்ப்பு அரசியல் அது. சாரு என்னைப் பொருட்படுத்தி வாசிக்கிறாரா என்பது குறித்தான கவலை எனக்கும் அவ்வாறு அவர் வாசிப்பதற்கான அவசியம் அவருக்கும்  கூட இருக்க முடியாது.

சாருவிற்குப் பிறகு நான் இத்தனை கடுமையாக எழுதியது ரோசாவைக் குறித்தான் இந்தக் குறிப்பு மாத்திரம்தான். சாருவையையாவது நான் பொருட்படுத்தி வாசிக்கும் எழுத்தாளர்களின் வரிசையில் வைத்துள்ளேன். ரோசாவின் பதிவுகளை நான் பொருட்படுத்தி வாசிப்பதோ பின்னூட்டம் இடுவதோ கிடையவே கிடையாது. என்றாலும் இணையத்தில் நான் பதிவு எழுதத் துவங்கியதிலிருந்தே  ரோசா, என் மீதுள்ள - இதுவரை என்னால் காரணமே அறிந்து கொள்ள முடியாத - காழ்ப்புடன் தொடர்ந்து என்னைச் சீண்டிக் கொண்டேயிருந்தார். நண்பர்களிடம் இது குறித்து விசாரித்த போது அவர் குறிப்பிடட சிலரிடம் இவ்வாறுதான் நடந்து கொள்வதாகவும் கடுமையான ஆபாசமான மொழியில் திட்டி விட்டு சமயங்களில் அதை அழித்துவிடுவதாகவும் சொன்னார்கள். சக பதிவர்களைக் குறித்து இத்தனை கடுமையான மொழியில்  பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதுபவர் ரோசாவா அல்லது நானா என்பதை கடந்த வருடங்களில் தமிழ் இணையப்பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அவதானித்து வருபவர்கள் அறிவார்கள்.

இவரைப் பொருட்படுத்தி வாசிக்காத காரணத்தினாலும் வேலிக்குள் போகிற ஓணானை எதற்கு வேட்டிக்குள் விட்டுக் கொள்ள வேண்டும் என்கிற காரணத்தினாலும் இவருக்கு சில சமயங்களைத்தவிர நான் எந்தப்பதிலும் அளித்ததேயில்லை. என்றாலும் பதிவுலகத்தில் தொடர்ந்த இவரின் சீண்டல் டிவிட்டரிலும் தொடர்ந்தது.

என்னுடைய பதிவுகளை மொக்கை என்று விமர்சித்த காரணத்தினாலேயே அவரைப் பற்றி நான் கடுமையான மொழியில் எழுதியதாக அவர் எழுதியிருக்கிறார். அது மாத்திரமே காரணமல்ல  என்பது அவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். என் பதிவை  விமர்சிக்க எவருக்குமே உரிமையுண்டு. இப்படிச் சொல்கிறவர்களின் மீதெல்லாம் நான் பாய வேண்டுமென்றால் ஒரு  நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரங்களையாவது இதற்கு  ஒதுக்குமளவிற்கு அனானி பின்னூட்டங்கள் என் பதிவில் தொடர்ந்து வருகின்றன.  அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவதேயில்லை.

ஆனால் ஒரளவு நீங்கள் அறிந்து வைத்திருக்கிற நபர், போகிற போக்கில் மேம்போக்காக உங்களை காயப்படுத்த வேண்டுமென்றே 'விமர்சனம்' என்ற  போர்வையில் தொடர்ந்து சீண்டிக் கொண்டிருந்தால் அவரை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்? 'இலக்கிய சிந்தனையும் வீச்சும் பரப்பும் கொண்ட மனிதர்' என்று உங்களால் வர்ணிக்கப்பட்ட ரோசா இதைச் செய்வதற்கும் இதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிற ஒரு சாதாரண சில்லுண்டி பதிவர் செய்வதற்கும் வித்தியாசமுண்டா இல்லையா?. என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை.

இதுதான் அந்தக் கடுமையான மொழியுடன் கூடிய உடனடி எதிர்வினைக்கு உப காரணமென்றாலும் பிரதான காரணங்களுள் ஒனறு, மேற்சொன்னாறு ஆரம்பத்திலிருந்தே பதிவுகளில், பின்னூட்டங்களில் என்னைச் சீண்டி வந்துக் கொண்டிருந்ததும். இதற்கெல்லாம் இணையத்திலிருந்தே என்னால் பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் என்றாலும் இதற்காக பழைய பதிவுகளை - குறிப்பாக ரோசா பதிவுகளை- தேடி வாசிக்க நேர்வது  மிகுந்த அலுப்பையும் மனஉளைச்சலையும் தருவது.

சுந்தர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அவர் எழுதின பதிவில் ரோசாவை, 'நேர்ச்சந்திப்புகளில் வன்மமும் அநாகரித்தனமும் கொண்டவர்' என்று நான் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது முழுக்க முழுக்க (நண்பர்கள் சந்திப்பில்) ரோசாவால் சப்ஜெக்டிவ்வாக காயப்பட நேர்ந்த (கருத்து அல்லது விவாத ரீதியானது அல்ல) அனுபவங்க்ளின் எதிரொலியாக எழுதினது. ஆனால் இந்த பின்னூட்டத்திற்குப் பிறகு 'சுரேஷ் கண்ணன் என்னைப் பற்றி அபாண்டமாக புளுகி விட்டார்' என்று ரோசா தொடர்ந்து சொல்லி வருகிறார். மேலும் அதை மறுப்பதற்கான ஆதாரங்களையும் தன்னால் தர முடியும் என்றும் சுந்தர் தாக்குதல் தொடர்பான விளக்கப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். (இதை அவர் நீக்கி விட்டதால் இது குறித்தான சுட்டியை இங்கு தர முடியவில்லை. ரீடரில் ரோசாவின் பதிவை தொடர்பவர்கள் இதை வாசிக்க முடியும்).

'என்ன வகையில் அநாகரிமாக நடந்து கொண்டேன்' என்று என்னிடம் ரோசா விளக்கம் கேட்பது போல,  நான் அபாண்டமாக புளுகியதற்கு ஆதாரம் உண்டு என்று ரோசா எழுதியது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு எனக்கும்  உரிமையுண்டு. மேலும் என்னைக் குறித்தும் எழுதிய குறிப்புகள் அடங்கிய பதிவுகளை நீக்கி விட்ட ரோசாவிற்கு என்னிடம் விளக்கம் கேட்பதற்கு எந்த வகையான தார்மீக உரிமை இருக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை.

ரோசா என்னைத் தொடர்ந்து சீண்டி வந்துக் கொண்டிருந்த மனநெருக்கடிகளின் போதே அவர் கேட்டிருந்த விளக்கப்பதிவை என்னால் எழுதியிருக்க முடியும். ஆனால் இதில் என்னையும் ரோசாவையும் தாண்டி சந்திப்பிற்கு அழைத்த பொதுவான நண்பர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்களைச் சங்கடப்படுத்த வேண்டாமே என்று அமைதி காத்தேன்.

உண்மையில் சுந்தருக்கு அவர் பதிலளித்த தொடர் பதிவு நிறைவு பெறும் சமயத்தில் மேற்குறிப்பிட்ட காரணத்தையும் மீறி நான் எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் இடையிலேயே அந்தப் பதிவுகளை அவர் நிறுத்திவிட்டதும் நீக்கிவிட்டதும் காரணமாக என்னால் எழுத முடியாமற் போய் விட்டது.

ரோசாவை கடுமையான எழுதினது தொடர்பாக பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு 'நீங்களா அதை எழுதினது' என்று ஆச்சரியத்துடனும் திகைப்புடனும் கேட்கிறார்கள். முன்னரே குறிப்பிட்டிரு்ப்பது போல இவ்வாறு எழுதுவது என்னுடைய இயல்பும் வழக்கமும் அல்ல என்பதை என் பதிவுகளை வாசிப்பவர்களே உணரக்கூடும். தவறு செய்தவனைக் காட்டிலும் அதைச் செய்யத் தூண்டியவனே பிரதான குற்றவாளி என்கிற முறையில் என்னை இந்த மனநெருக்கடிக்கு தள்ளின ரோசாவிற்கும் இந்த நிகழ்வில் பங்குண்டு என்பதையும் என் குறிப்பை வாசிப்பவர்கள் உணர வேண்டும் என நான் விரும்புகிறேன்.

இந்த நிலையில் ரோசாவிற்காக நான் தயார் செய்து கொண்டிருந்த விளக்கங்களை (இதிலேயே சிலது வந்துவிட்டது) எழுதுவதிலும் வெளியிடுவதிலும் எவ்விதப் பயனுள்ளது என்பதை (நாராயணின் பதிவை வாசித்த பிறகு)  யோசிக்க ஆயாசமாய் உள்ளது. இது எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பதையும் யூகிக்க முடிகிறது. இவ்விதமான காகிதக் கத்திச் சண்டைகளிலும் சில்லுண்டித்தனமான பதிவுகளிலும் செயற்பாடுகளிலும் எனக்கு எப்போதுமே விருப்பமோ ஈடுபாடோ இருந்தது கிடையாது. இதிலிருந்து மீண்டு வருவதே இப்பொதைய பிரதான யோசனையாக உள்ளது என்கிற வகையில் இதைத் தொடரத்தான் வேண்டுமா என்றும் தோன்றுகிறது.

ரோசாவின் நண்பராக என்னுடைய விளக்கத்தை நீங்கள் எப்படி வாசித்துக் கொண்டாலும், பொதுவான நண்பர்களும் இதன் பின்னணியை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த உடனடி பதிவை வெளியிடுகிறேன். இனி நான் பதிலளிக்க வேண்டியது ரோசாவிற்கேயன்றி இதை ஊதிப் பெருக்க விரும்பும் நபர்களுக்கல்ல. ஆனால் அதைச் செய்வது என் அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. இனி ரோசா என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும் என்றும் இதை இப்படியே தலைமுழுகித் தொலைப்பது என்றும் இப்போதைக்குத் தோன்றுகிறது. அப்போது நீங்கள் உள்ளிட்ட இணைய நண்பர்கள் இவ்வாறான 'பஞ்சாயத்து மற்றும் உபதேசப்' பதிவுகளை எழுதுவீர்களா அல்லது கள்ள மெளனம் சாதிப்பீர்களா என்பதை காத்திருந்து பார்க்க விரும்புகிறேன்.

பின்குறிப்பு: நாராயண், ஃபேஸ்புக்கில் இந்தக் குறிப்பை எழுதினவரை குறிப்பிட்டுள்ளீர்கள். (அவரை பின்தொடராத காரணத்தினால் அது என்னவேன்று எனக்குத் தெரியவில்லை). கொடுமை ஐயா. ரோசாவிற்காவாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருட்படுத்தி பதிலளிக்கலாம். ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் நபர் இணையச் சில்லுண்டிகளின் ராஜா. அவர் டிவிட்டர்களை சிலதை வாசித்தாலே இது புரிந்து போகும். இதை ஊதிப் பெருக்கி வேடிக்கை பார்ப்பதே இந்தச் சில்லுண்டிகளின் வேலையும் நோக்கமும். சாத்தானே வேதம் ஓதுவது போல, இந்தச் சில்லுண்டிகளே இணைய நீதிபதிகளாகவும் வேடம் ஏற்றிருக்கும் கருப்பு நகைச்சுவையின் அபத்தத்தைத் தாங்கவே முடியவில்லை. இயன்றால் இவர்களின் மேற்கோள்கள் இல்லாமல் நீங்களே நேரடியாக எழுதுங்கள் நாராயணன். இது என் வேண்டுகோள்.

suresh kannan

Tuesday, October 05, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

 தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

 படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

 ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

 வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

 நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

 மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

 ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

 சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

 இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

 படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

 தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

 "எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

தினமணி சுட்டி: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=313354&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D!

suresh kannan

ஜி.நாகராஜன் - கடைசி தினம் - சி.மோகன்ஜி.நாகராஜன் என்றதோர் எழுத்தாளரின் பெயர், பெரும்பான்மையான தருணங்களைப்  போலவே சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப்பக்கத்தில்'தான் அறிமுகமாகியது. ஜி.நா.வின் 'குறத்தி முடுக்கு' 'நாளை மற்றொரு நாளே' போன்றவற்றை அவசியம் வாசிக்க வேண்டிய படைப்புகளென' என அவர் பரிந்துரைத்திருந்த ஞாபகம். அவர் விவரித்ததலிருந்து ஜி.நா., என் அலைவரிசைக்கு ஒத்த எழுத்தாளராக இருப்பார் என்று ஏனோ தோன்ற, காலச்சுவடு அப்போது வெளியிட்டிருந்த 'ஜி.நாகராஜனின் படைப்புலக' தொகுதியை வி.பி.பி-யில் வரவழைத்தேன். சுமார் 22 வயதில் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியனாக பணிபுரிந்துக் கொண்டிருந்த எனக்கு, அந்த நூலின் விலை அப்போதைய என் சம்பளத்தின் கால் பங்குக்கு ஈடாக இருந்தது. மேலாளரிடம் கடன் வாங்கி தபால்காரரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்ட போது 'ஏண்டா இதெல்லாம் உனக்குத் தேவையா' என்கிற பார்வைகளையும கேள்விகளையும் எதிர்கொண்டது நினைவில் உள்ளது.

நானறிந்தவரை நவீன தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் விளிம்பு நிலை மனிதர்களை தன் படைப்புகளில் சித்தரித்தவர்  புதுமைப்பித்தன். அவருக்குப் பிறகு ஜி.நாகராஜன்தான் அவர்களின் இருண்ட பிரதேசங்களின் மீது இலக்கிய வெளிச்சமிட்டுக் காட்டியவர். பின்னர் ஜெயகாந்தன். புதுமைப்பித்தனாவது நடுத்தர வர்க்க மனிதர்களுள் ஒருவராக சற்று உயர்ந்த இடத்தில் நிற்பதான தோற்றத்துடன் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். ஜி.நாகராஜனோ விளிம்பு நிலை மனிதர்களுள் ஒருவராகவே வாழ்ந்தவர். சுந்தரராமசாமி அவரது நினைவோடை நூலிலும் அசோகமித்திரன் ஒரு கட்டுரையிலும் ஜி.நா -வை சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் எதிர்கொண்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய நிலையில் அது புரிந்து கொள்ளக்கூடியதே.

அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத  பழைய புதினங்களைப் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை இதழில் எழுதி வரும் தொடரில் 'குறத்தி முடுக்கு' புதினத்தைப் பற்றிய கட்டுரையை வாசித்த போது, அதே புதினத்தை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த போது எத்தனை நுட்பமான விஷயங்களைக் காணத் தவறியிருக்கிறேன் என்பதும் எந்தவொரு முக்கியமான புதினத்தையும் தகுந்த இடைவெளியில் மீள்வாசிப்பு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் அக்கட்டுரை எனக்கு உணாத்திற்று.


ஜி.நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' எனும் புதினம் க்ரியா ராமகிருஷ்ணனி்ன் பங்களிப்புடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி (Tomorrow one more day) எனும் நூலாக பெங்குவின் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கிறது. இந்த நூல் வெளியீட்டில் பேசியது குறித்து தீராநதி அக்டோபர் 2010 இதழில் சி.மோகன் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையில் உள்ள கீழ்க்கண்ட, எனக்கு மிகவும் பிடித்ததொரு பத்தியை கீழே பகிர்ந்துள்ளேன். ஜி.நாவின் இலக்கியச் சித்திரத்தை மிகக் கச்சிதமான வார்த்தைகளில் வெளிக்கொணர்ந்துள்ள பத்தியிது எனக் கருதுகிறேன்.

.......ஜி.நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றி பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி.நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும் பொறுக்கிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும் முதல் தீர்க்கமான குரல் ஜி.நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுக்களையும் வழித்துத் துடைத்து, வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி.நாகராஜனுடையது. பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தின் உயிர்ப்பின் அழகுகளையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி.நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள், அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர். .....

ஜி.நாகராஜன் உயிர் நீத்த கடைசி தினத்தில் அவருடனான அனுபவங்களையும் இக்கட்டுரையில் சி.மோகன் பகிர்ந்துள்ளார். அதையே கட்டுரையின் தலைப்பும் சுட்டுகிறது.

ஆங்கில நூல் சுட்டி. :
http://www.penguinbooksindia.com/category/Classic/Tomorrow_Is_One_More_Day_9780143414124.aspx

suresh kannan

பண்பாட்டுச் சீரழிவை ஊதி வளர்க்கும் சன் குழுமம் : தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
மாநிலக்குழு, 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

பத்திரிகைச்செய்தி 04-10-2010

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான எந்திரன் திரைப்படம் தயாரானது முதல் அக்கம்பெனியார் படத்துக்கான விளம்பரம் என்ற பெயரில் செய்து வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாய உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரையும் கவலை கொள்ளச்செய்வதாக உள்ளன. தங்கள் கையில் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருப்பதாலும் தாங்கள் போட்ட பணத்தைப்போல பல மடங்கு சம்பாதித்துவிட வேண்டும் என்கிற வியாபார வெறியுடனும் தமிழக இளைஞர்களைத் தவறான வழியில் திசைகாட்டும் வேலையை சன் குழுமம் செய்து வருகிறது.அதிகாலை 4 மணி முதல் திரைப்படத்தைத் திரையிடுவது ,இளைஞர்கள் மொட்டை போட்டுக்கொள்வதையும் கோழிகள் அறுப்பதையும் கட் அவுட்டுகளுக்குப் பால் ஊற்றுவதையும் மிகச்சிறந்த முன்னுதாரணமான பண்பாட்டு அசைவுகள் போல சன் டிவியிலும் தினகரன் பத்திரிகையிலும் திரும்பத் திரும்ப வெளியிட்டுத் தமிழக இளைஞர்களை மேலும் மேலும் அவ்விதமே செய்யத்தூண்டுகிறது.தமிழகத்தின் பலமான ஒரு உழைப்புச் சக்தியை இவ்விதம் சிதைக்கும் பணியை சன் குழுமம் செய்கிறது.சன் குழுமம் செய்து வரும் இந்தப் பண்பாட்டுச் சீரழிவு நடவடிக்கையை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொறுப்பும் மனச்சாட்சியும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதைக் கண்டனம் செய்ய வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.தாம் விரும்பும் திரைக்கலைஞரைக் கொண்டாடும் ரசிக மனநிலையை ஒரு பைத்திய மனநிலைக்கு வழிநடத்தி இட்டுச்செல்லும் சன் குழுமத்தின் வியாபார வலையில் விமர்சனமின்றி வீழ்ந்துவிட வேண்டாம் எனத் தமிழகத்து இளைஞர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கண்டன அறிக்கையை தங்கள் இதழில் வெளியிட்டு உதவுமாறு அன்புடன் வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.

அருணன்                                   ச.தமிழ்ச்செல்வன்
மாநிலத்தலைவர்                      பொதுச்செயலாளர்

நன்றி: http://satamilselvan.blogspot.com/2010/10/blog-post.html

suresh kannan

Monday, October 04, 2010

ஜெமோ மீதான ம.பு.வின் பகடி

உயிர்மை இதழைப் பிரிக்கும் போதெல்லாம் நான் பெரும்பாலும் உடனே வாசித்துவிடுவது மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தை. நவீன தமிழிலக்கியத்தில் உரைநடையை சுவாரசியமாக கையாள்வதில் மபுவும் முக்கியமானவர் என்பது என் அவதானிப்பு. அவருடைய தலையங்கங்கள் விஜய்காந்த், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காலால் உதைக்கும் தீவிரத்தனத்துடனும் சிவாஜி கணேசன் நீண்ட வசனத்தை பேசும் நெகிழ்ச்சித்தனத்துடனும் இருக்குமென்றாலும் இறுக்கமான அவருடைய மொழிக்காகவே தலையங்கத்தை உடனே வாசித்துவிடுவேன்.

ஆனால் உயிர்மைஅக்டோபர் 2010 தலையங்கத்தோடு உள்பக்கங்களில் கூடவே இன்னும் அதிவேகமான துடிப்பான இன்னுமொரு விஜய்காந்த் காத்திருந்தார். வழக்கமான இறுக்கத்திற்கு மாறாக மபுவின் பகடியான மொழியை நான் முதன் முதலில் சந்தித்த அனுபவமிது. 'தேனீர் கோப்பையில் பெய்த மழை' எனும் அந்தக் கட்டுரையில் மபு வைத்திருக்கும் நுட்பமான கிண்டல்களும் விமர்சனங்களும் சட்டென்ற புன்னகையையும் சிரிப்பையும் ஏற்படுத்துபவை. குறிப்பாக ஜெயமோகன் குறித்த கிண்டல்கள் ஒருசில அதீதம் என்றாலும் பெருஞ்சிரிப்பை வரவழைப்பவை. ஜெமோ குறித்து தனது அடிப்பொடிகள் வாயிலாக மபு உயிரோசையில் வெளியிட்டு வந்த காழ்ப்புணர்ச்சியான கட்டுரைகளைத் தாண்டி வெளிப்படையாக நேரடியாக முன்வைக்கும் கிண்டல் இதுவே என நினைக்கிறேன். படைப்புகளைக் காட்டிலும் இம்மாதிரியான வம்புகளே அதிகம் முன்நிறுத்தப்படுகிறதென்றாலும் இலக்கியம் ஜவீத்திருக்க இவையும் மறைமுக காரணிகளே எனக் கருதுகிறேன்.

...கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறுவிதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி 'கவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக.. மனுஷ்யபு்த்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை என்று வாக்குறுதி அளித்துக் கொண்டிருந்தார். (அருண்மொழி நங்கைக்கு அடுத்தபடியாக எனக்கும் ஜெயமோகனின் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுர இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று....
மனுஷ்யபுத்திரனை புன்னகையுடன் கண்டிக்கிறேன். :)

suresh kannan

அபத்தமான சமகாலம்


ஒரு திரைப்படம், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பெரும்பான்மையை பித்துப்பிடிக்க வைத்து மனப்பிறழ்வு மந்தைகளாக ஆக்க முடியும் என்பதைக் காணும் போது அந்த ஊடகத்தின் அசுர பலத்தை மீண்டும் வியப்பதா அல்லது நாம் எவ்வளவு பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பதற்காக வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. 'எந்திரன்' திரைப்பட வெளியீடு குறித்து அதன் ரசிகர்கள் நடத்தின கோமாளித்தனங்களை தன்னுடைய வணிகத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியத்தோடு (இதுவே எதிர்மறையானதாகவும் மாற வாய்ப்பிருக்கிறது) சன் தொலைக்காட்சி ஒளிபரப்பின காட்சித் தொகுப்பினை நேற்று காணக் கொடுத்த வைத்த பரவசத்தோடு இதை எழுதுகிறேன்.

அலகு குத்தல்கள், பால் குடங்கள், மண்டி போட்டு மலையேறுதல்கள், படப்பெட்டிக்கு பூஜை புனஸ்காரங்கள், கட்அவுட்டிற்கு பாலாபிஷேகங்கள்.. இவ்வளவும் எதற்காக? தன்னுடைய பிரியமான நடிகரின் படம் வெற்றிகரமாக ஓடுவதற்காம். இத்தனையையும் கள்ள மெளனத்தோடு கவனிக்கிற அதன் மூலம் இந்தக் கோணங்கித்தனங்களை மறைமுகமாக  ஊக்குவிக்கிற ரஜினியின் இமயமலை சுற்றுலா 'ஆன்மீகம்' எத்தனை போலித்தனமானதோ, அதே அளவிற்கு இந்த நிகழ்வுகளும் அபத்தமானவை. எப்படி இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறதோ, அதே அளவிற்கு இதை ஆட்சேபிக்கிற உரிமை துரதிர்ஷ்டவசமாக அங்கு வாழ்கிறவர்களுக்கும் உண்டு. அதன் விளைவே இந்தப் பதிவு.

எல்லா தனிமனிதர்களுமே தனக்கேயென்று இருக்க விரும்புகிற 'சுயஅடையாளத்தை' தேடி அலைகிறவர்கள்தான். அதை நேர்மையான உழைப்பின் மூலம் பெற இயலாதவர்கள், சமூகத்தால் வெற்றிகரமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்படுவர்களின் அடையாளங்களைச் சார்ந்து நின்று அதன் மூலம் தன்னுடைய அடையாளத்தைப் பெற முயல்வது.சுருக்கமாகச் சொன்னால் இது ஒரு குறுக்குவழி. இதன் புறவயமான வடிவங்கள்தான் ரசிகர் மன்றங்கள், அரசியல் பேரவைகள், தொணடர் படைகள், முதலியவை.

'நெரிசலில் சிக்கி அவதிப்படக்கூடாதென்பதற்காக' தன் ரசிகர்களை தன் மகள் திருமணத்திற்கு வரவேண்டாம் என்று கரிசனத்துடன் அறிக்கை கொடுத்த ரஜினி, இப்படி முதல் காட்சிக்காக பெருங்கூட்டத்தில் சிக்கி அவதிப்படும் ரசிகர்களுக்காக "ஏன் இப்படி அவதிப்படுகிறீர்கள். எப்படியும் ஒருவாரத்தில் இதன் கள்ள குறுந்தகடு வெளிவரப்போகிறது. அதை வாங்கி வீட்டிலேயே செளகரியமாக அமர்ந்து பாருங்கள்" என்று ஏன் அறிக்கை விடவில்லை இவர்களில் யாராவது யோசிப்பார்களா?  தாம் ரசிக்கும் நடிகனை அரங்கிலேயே கழற்றி விட்டு வராமல் தம் தோளிலேயே சுமந்து கொண்டு  'வீட்டுத் திருமணத்திற்கு' அழைக்கவில்லையே என்று ரசிகன் வருத்தப்படுகிற கொடுமைகளெல்லாம் தமிழ்நாட்டில்தான் நிகழும்.

இவர்கள் செய்வது மகா அபத்தங்களென்று இவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கே தெரியும். 'இரவல் அடையாள'த்தைத் தாண்டி ஏதாவது ஆதாயம் கருதியோ, சம்பந்தப்பட்ட நடிகர்கள் அல்லது படத்தயாரிப்பாளர்களின் 'ஏற்பாடுகள்' மூலமே இவை நிகழ்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இதிலிருந்து விலகக்கூடிய சாமர்த்தியக்காரர்களை விட்டுவிடலாம். ஆனால் தன்னுடைய அன்றாட உழைப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை அறியாமை காரணமாக வீணடிப்பவர்கள் குறி்த்தும் அதிகாரத்திற்கெதிராக திரையில் வீராவேசமாக முழங்கும் தன் தலைவன், யதார்த்த வாழ்க்கையிலும் அதே போல் இருப்பான் என்கிற கனவுடன் அவனை அரியணையில் அமர்த்தத் துடிக்கும் அப்பாவிகளைக் குறித்துத்தான் நம்முடைய கவலை.

இந்த நிகழ்ச்சியை கூடவே பார்த்துக் கொண்டிருந்த நண்பர், "பார்த்தீர்களா, உலகமெங்கிலும் எப்படி வரவேற்பு?'' என்றார் நமட்டுச் சிரிப்புடன். அதுசரி. 'இந்தப் பேனா எல்லா உலக மொழிகளிலும் எழுதும்' என்கிற தந்திரமான விளம்பர வாசகங்களின் மூலம் தம் பொருளை விற்கும் வணிகர்களின் சாமர்த்தியத்திற்கு இணையானதுதான் இந்த ஊதிப் பெருக்கல்கள். 'ஆங்கிலத்தில் பேசினாலே அவன் அறிவாளி' எனக் கருதும் பொதுப்புத்தியுடன் கூடிய முட்டாள்கள் உலகெங்கிலும் பரவியிருப்பது போல், தமிழர்களும் உலகெங்கிலும் பரவியிருப்பதும் அவர்கள் இந்தப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்பதிலும் அப்படியில்லாத இடங்களிலும் நான்கைந்து பேரை கேமரா முன் அடைசலாக நிற்க வைத்து அவர்களின் கூக்குரல்களின் மூலம் ஏதோ அந்த நகரமே இந்தப்படத்தைக் காண்பதற்காக காத்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஊடகத்தின் போலித்தந்திரங்களைக் கண்டு மந்தைகள் வேண்டுமானாலும் மயங்கலாம். மனச்சாட்சியுள்ளவர்கள் அல்ல.

"உங்களை மாதிரி ஒரு சில பேர்கள் மூலையில் அமர்ந்து திட்டிக் கொண்டிருக்கலாம். படம் எப்படி ஓடுகிறது பார்த்தீர்களா?" என்றார் அதே நண்பர். உண்மைதான். சென்னை நகரின் திரையரங்குகளில் 80 சதவீத அரங்குகளில் இந்தத் திரைப்படம்தான்.

தமக்குள்ள பலத்தின் மூலம் சக போட்டியாளர்களின் காலை உடைத்து அறையில் பூட்டி வைத்து விட்டு தான் மாத்திரமே ஓட்டப் பந்தயத்தில் ஓடி 'வெற்றி வெற்றி' என ஒருவன் முழங்குவானாயின் அவனை இந்த உலகம் 'வீரன்' என மாலையிட்டு கொண்டாடுமா? அல்லது அவனின் அயோக்கியத் தனத்தைக் கண்டு காறித் துப்புமா? சென்னையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைதான் என அறிகிறேன். இந்த அசுரத்தனமான போட்டியிலிருந்து தாமாக விலகிப் போனவர்கள் சொற்பமிருக்க, அதிகாரத்தைக் கொண்டு மிரட்டி விலக்கப்பட்டவர்களும் அடித்து ஒடுக்கப்பட்டவர்களும் எத்தனை பேரோ?

ஓரளவிற்கு மனச்சாட்சியுடன் நியாயமாகப் பேசுபவர்கள் என கருதக்கூடிய பிரகாஷ்ராஜ், சேரன் என்று திரையுலகில் உள்ளவர்களே மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தை விரும்பியோ விரும்பாமலோ கொண்டாடுவதைக் காண சற்று வேதனையாகவே இருக்கிறது. ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய, இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக அழைக்கப்பட்ட மாநில முதல்வர் சொல்கிறார். "இந்த தயாரிப்பு நிறுவனத்தைப் பாராட்டுவதென்பது என்னையே பாராட்டிக் கொள்வதாகும்". ஆக..இந்த கூட்டுக் களவாணித்தனத்திற்கு தானும் ஓர் உடந்தை என வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்த அவரின் நேர்மையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தற்காக இதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதையும் முதல்வர் தெரிவிக்கிறார். 'திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழ் வளரும்' என்ற அரிய யோசனையை செயல்படுத்தும் முதல்வர், அது தரமான உள்ளடக்கத்துடன், தமிழ் கலாசாரத்தை உள்ளடக்கிய படங்களுக்கு மாத்திரமே' என்பதையும் இணைத்திருந்தால் எத்தனை ஆரோக்கியமானதொன்றாக இருந்திருக்கும்? சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர் பயன்பெற வேண்டிய இந்தச் சலுகையையும் பலநூறு கோடிக் கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்களும் உள்ளே புகுந்து பெற்றுக் கொள்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. அரசியல் காரணங்களுக்காக என்றாலும் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசியை பில்கேட்ஸூம் வரிசையில் நின்று வாங்கினால் 'அவருக்கும் இந்தச் சலுகை உண்டென்றால் அதைப் பெறுவதில் என்ன தவறு' என்போமா? அல்லது தார்மீக ரீதியான உணர்வுடன் இந்தச் சலுகையை அவர் மறுத்தால் அவரைப் பாராட்டாமல் இருப்போமா?

'ஹாலிவுட் தரத்திற்கு நிகரானதாக அதையும் தாண்டி  பெரும் பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்பது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுத் திரைப்படப் பார்வையாளர்களின் உற்சாக கூக்குரலாகவும் இருக்கிறது. வெறும் நுட்பம்தான் சினிமாவா? என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறேன். வைரம் பதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள பேனாவில் எழுதியதாலேயே ஒரு சிறுகதையோ, புதினமோ பாராட்டப்பட வேண்டுமென்பது எத்தனை பெரிய நகைச்சுவையாக இருக்கும்? பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்ட ஹாலிவுட் படங்களின் நுட்பங்களை, மக்களைச் சுரண்டி குவிக்கப்பட்ட பணத்தின் மூலம் நாம் சமகாலத்தில் அதே ஹாலிவுட் நுட்பவியலாளர்களைக் கொண்டே ஹாலிவுட்டின் அபத்த நகல்களாக உருவாக்கி விட்டு நாமே அதை சிலாகித்துக் கொண்டால் எப்படி? மேலும் எந்த ஹாலிவுட் படத்தில் பல நூறு கண்ணாடி பாட்டில்களை அடுக்கி விட்டு 'இரண்டு பெருசுகள்' டூயட் பாடும் அபத்தங்களெல்லாம் நடக்கிறது? 'யாரும் இதுவரை படப்பிடிப்பு நடத்தியிராத இடங்களை இதற்காக தேடிச் சென்றார்களாம்'. இதெல்லாம் ஒரு பெருமையா? இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தியிராத சேரிகளும் மூத்திரச் சந்துகளும் சென்னையிலேயே நிறைய இருக்கின்றனவே? ஷங்கர் இதை அறிய மாட்டாரா?

'கக்கா' போகக்கூட அதிகாலையில் எழுந்திருக்காதவன், ஒரு திரைப்படத்தைக் காண அரங்கில் அதிகாலை நான்கு மணிக்கே அமர்ந்திருக்கிறான் என்றால் சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மூளைச்சலவை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது என்பதுதானே பொருள். இதில் படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஹாரிபாட்டர் நாவலை முதன் முதலாக வாங்க விடியற்காலையிலேயே புத்தகக் கடைகளின் முன்பு நின்ற முன்னோடிகள் உலகமெங்கிலும்தானே இருக்கின்றனர்? மக்களிடம் 'விழிப்புணர்வு' ஏற்படுத்த வேண்டுமென்பதின் பொருள் இப்படி அதிகாலையில் எழுப்பி ஓட வைப்பதுதான் போலிருக்கிறது.

நான் பொழுதுபோக்கு சினிமாவின் எதிரியல்ல. கலையின் அடிப்படையே பொழுதுபோக்குதல்தான். சினிமாவைக் கொண்டு பொழுதைப் போக்குவதல்ல. அரைத்த மாவையே அரைக்காமல், வணிகக் காரணங்களுக்காக நாயக பிம்பங்களையும் வன்முறையையும் ஆபாசங்களையும் ஊதிப் பெருக்காமல் சுயசிந்தனைகளுடன் ஆரோக்கியமான உள்ளடக்கங்களுடன் கூடிய பொழுதுபோக்கு சினிமாக்களை நான் ஆதரிக்கிறேன். சர்வதேச அரங்குகளில் விருதுகளை குவிக்கும் உயர்ந்த தரமுள்ள திரைப்படங்களைக் கூட நான் தமிழில் இப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாறான திசையில் தமிழ் சினிமா பயணிக்கத் துவங்கும் போது, அந்த நம்பிக்கை துளிர்க்கத்துவங்கும் போது அதில் பின்னடைவை ஏற்படுத்துகிற, கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்கிற, அலகு குத்திக் கொள்கிற மூடநம்பிக்கைகளுக்கு நம்மைத் தூண்டுகிற,  நம்மை அந்த ஆட்டு மந்தை நிலையிலேயே வைத்து அதன் மூலம் நம் பணத்தையும் சிந்தனையும் பிடுங்கிக் கொள்கிற வணிகத்தையே ஒட்டுமொத்த குறிக்கோளாகக் கொண்டிருக்கிற சூழலைத்தான் நான் வெறுக்கிறேன்.

ஹாலிவுட் நுட்பங்களைக் கொண்டு உள்ளூர் அபத்தங்களை நிரப்பி எடுப்பது நல்ல சினிமாவா? அல்லது நமது கலாசாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, சமூக அவலங்களை, நிகழ்வுகளை, நுண்ணுணர்வுகளை மீட்டெடுக்கக்கூடிய, ஆன்மாவை ஊடுருவிச் செல்லுமாறு  எடுப்பது நல்ல சினிமாவா? விவசாயிகளின் பிரச்சினைகளை ஊடகங்களின் நாய்ச்சண்டைகளை பார்வையாளர்களின் முன்வைப்பது நல்ல சினிமாவா? மனித இயந்திரம் உயிருள்ள பெண்ணைக் காதலிப்பதும் அதன் மூலமான நுட்ப பிரம்மாண்டங்களையும் அசட்டு நகைச்சுவைகளையும் கொண்டது நல்ல சினிமாவா? சினிமா ஆர்வலர்களின் முன்பு இதையெல்லாம் ஒரு கேள்வியாக முன்வைக்கிறேன்.

suresh kannan