Showing posts with label ஜெயந்தன். Show all posts
Showing posts with label ஜெயந்தன். Show all posts

Saturday, February 13, 2010

எழுத்தாளர் ஜெயந்தன் : அஞ்சலி

பிடித்தமான எழுத்தாளர் இறந்துவிடும் போது அவரை இதுவரை சந்தித்திருக்காவிட்டால் கூட நம்முடைய சுற்றங்களில் ஒருவரை இழந்துவிட்ட துக்கத்தையே நாம் அடைகிறோம் என்று தோன்றுகிறது. பலவிதமான எழுத்தாளர்களில் எப்படி ஒருசிலரை குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்துவிடுகிறது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த எழுத்தாளனின் சிந்தனைகளும் எண்ணங்களும் வாசகனுடனான அதே அலைவரிசையோடு இணைந்து ஒத்துப்போகிற அந்தப் புள்ளிதான் அதனுடைய துவக்கமாக இருக்கக்கூடும்.

ஓர் உதாரணம். நெரிசலான பேருந்தில் பால் வித்தியாசங்களில்லாமல் மனித உடல்களுடன் கரைந்துப் போய் ஆக்டோபஸீக்கு சிக்கன்குனியா வந்த போஸில் எசகுபிசகாக எரிச்சலுடன் நின்று கொண்டிருப்போம் அல்லவா? சினிமா பாடல் காட்சிகளில் வருவது போல் திடீரென்று மற்ற அனைவரும் மறைந்து போய் நாம் மட்டும் காலியான பேருந்தில் அதே போஸில் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? நான் நினைத்து நினைத்து சிரிக்கும் என்னுடைய இந்த அபத்தமான நகைச்சுவையை எழில்வரதனின் ஏதோ ஒரு சிறுகதையில் அப்படியே சந்திக்கும் போது எனக்கு எழில்வரதனை அந்தக் கணமே பிடித்துப் போயிற்று. எனக்குப்பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில் எழில்வரதனும் இயல்பாகவே இணைந்து விட்டார்.


ஜெயந்தனை நான் இணைத்துக் கொண்டதும் இதே மாதிரியான தருணமொன்றில்தான். 'வெள்ளம்' என்றொரு சிறுகதை. காமத்தைப் பற்றின நுட்பமான சித்திரங்களைக் கொண்ட சிறுகதையது. மனைவி ஊருக்குப் போயிருக்கும் ஒரு மதிய வேளையில் மழை பெய்ய ஆரம்பிக்க அதன் தொடர்ச்சியாக பாலுறவு கிளர்ந்த எண்ணங்களுடன் படுத்திருக்கும் ஒருவன், மழைக்கு வந்து ஒதுங்கும் வெவ்வேறு வயதுடைய மூன்று பெண்களைப் பார்க்கும் உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் சிறுகதை. அந்தக் கணமே ஜெயந்தனை மிகவும் நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அவரது சிறுகதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடியதில் மிகச் சிரமப்பட்டே அடைய முடிந்தது. திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையொன்றில் மேய்ந்து கொண்டிருந்த போது ஜெயந்தனின் சிறுகதைத் தொகுதியான 'மனச்சாய்வு' கண்ணில்பட்டது. இன்ப அதிர்ச்சியுடன் அதை எடுக்க முனைவதற்குள் பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு நபரும் அதே புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். அடுத்தவர் தேர்வு செய்திருப்பதை வாங்கத் துடிப்பதுதானே தமிழ் மரபு? அசுவாரசியமாக புரட்டிப் பார்த்து அவர் தூக்கிப் போட்ட அந்த நூலை கைப்பற்றியவுடன்தான் ஆசுவாசமாக இருந்தது. பின்னதான புத்தக கண்காட்சியின் போது அவருடைய மொத்த சிறுகதைகளையும் இரண்டு பாகங்களாக பதிப்பித்திருந்ததை (ராஜராஜன் பதிப்பகம்) கண்டு அவற்றை வாங்கின பிறகுதான் மற்ற சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. (இப்போது வம்சி பதிப்பகம் எல்லாச் சிறுகதைகளையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்).

()

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இலக்கியக்கூட்டம் ஒன்றில் ஜெயந்தனை சந்தித்தேன்.

புகைப்படத்தில் ஏற்கெனவே பார்த்திருந்தபடியால் அவரைப் பார்த்த போது உடனே அடையாளங்கண்டு கொள்ள முடிந்தது. இயல்பாகவே எனக்குள்ள கூச்ச சுபாவம் காரணமாக அவரை அணுகி உரையாடுவதற்கு தயக்கமிருந்தாலும் பிடித்த எழுத்தாளர் என்பதால் கூச்சத்தை உதறி பேச ஆரம்பித்தேன். அவரின் சிறுகதையொன்றை சிலாகித்து பேசினதை கேட்டுக் கொண்டார். இன்னொரு  சிறுகதையில் வந்திருந்த சம்பவமொன்று திரைப்படமொன்றில் பயன்படுத்தப்பட்டிருந்ததைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களே இந்த உரையாடல் நீடித்தது. பிறகு என்ன நினைத்தாரோ, உரையாடலிலிருந்து திடீரென்று விலகி என்னிடமிருந்து பிய்த்துக் கொண்டு இன்னொருவரிடம் பேச ஆரம்பித்தார். என்னை அவர் அவமானப்படுத்திவிட்டதாக உணர்ந்தேன். அப்போது இளைஞன்தானே? ஆத்திரம் பொங்கியது. 'இந்த எழுத்தாள மயிராண்டிகள் எல்லாம் இப்படித்தான்' என்று குரோதமாக எண்ணிக் கொண்டேன். பிறகு அவருடைய சிறுகதைகளை வாசிக்கும் போது 'இன்னாத்த கிழிச்சுட்டான். இந்த மாதிரி ஆயிரம் கதை நான் எழுதுவேன்' என்று நினைத்துக் கொண்டேன். 'ஒரு எழுத்தாளரின் மறுபக்கம்' என்கிறதோர் கட்டுரையை ஜெயந்தனின் பெயர் குறிப்பிடாமல் எழுதி அப்போது உறுப்பினராக இருந்த 'ராயர் காப்பி கிளப்' மடற்குழுமத்தில் இட்டேன்.

இப்போது யோசிக்கையில் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும் கிறுக்குத்தனமாகவும் தோன்றுகிறது. அப்போது இவை தோன்றாமைக்கு அந்த வயதுக்குரிய நியாயங்கள் இருக்கத்தான் செய்தன. ஒரு எழுத்தாளரிடம் ஏற்படும் தனிப்பட்ட கசப்புகள் அவருடைய படைப்புகளுடனான வாசிப்பனுபவத்தை பாதிப்பதின் அபத்தத்தைப் பற்றியும் மேற்சொன்ன  கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த அஞ்சலிக் கட்டுரையை எழுதுவதை முன்னிட்டு மேலே குறிப்பிட்டிருந்த 'வெள்ளம்' சிறுகதையை தேடி வாசித்தேன். சில கதைகள் அப்போது ஏற்படும் பரவசத்தை சில வருடங்கள் கழித்து ஏற்படுத்துவதில்லை. ஆனால் 'வெள்ளம்' சிறுகதை இப்போதைய வாசிப்பிற்கும் அந்த உணர்ச்சியை பாதுகாப்பாக தருவதில் வெற்றி பெற்றது. 'மனச்சாய்வு' 'அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்' 'முனுசாமி' 'ஞானக்கிறுக்கன் கதைகள்' போன்ற சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்புகளாக உடனடி நினைவுக்கு வருகின்றன. தொகுதியை மீள்வாசிப்பு செய்துவிட்டு அவற்றைப் பற்றி எழுத முயல்கிறேன். இடதுசாரி சிந்தனைகளை உள்ளடக்கிய அவரது எழுத்து எந்தவித அலங்காரமுமில்லாத எளிமையானது. சாவசகாசமாக சம்பவங்களை விவரிப்பது. ஆனால் வாசிப்பின் நிறைவில் வலுவான பாதிப்பை ஏற்படுத்துவது.

ஜெயந்தனுக்கு என்னுடைய அஞ்சலி.

(ஜெயந்தனின் புகைப்படம் தொகுதியின் பின்னட்டையில் இருந்து எடுக்கப்பட்டது).


தொடர்புடைய பதிவுகள்:

தினமணி செய்திக் குறிப்பு

ஜெயந்தனின் சிறுகதையொன்றை வாசிக்க

இன்னொரு வாசக அனுபவமும் அஞ்சலியும்

ஜெயமோகனின் அஞ்சலி

ஜெயந்தனின் குறுநாவல் குறித்தான விமர்சனம்

suresh kannan