Sunday, June 30, 2019

அசோகமித்திரன் -புலிக்கலைஞன் - குறும்படம்
‘புலிக்கலைஞன்’ – அசோகமித்திரன் எழுதிய உன்னதமான சிறுகதைகளுள் ஒன்று என்பது பெரும்பாலோனோர்க்கு தெரியும். இலக்கியப் பரிட்சயம் அல்லாதவர்கள் கூட வாசித்திருக்கக்கூடிய புகழ்பெற்ற சிறுகதை.

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் இந்தச் சிறுகதையை குறும்படமாக்கியிருந்தார் ஓர் இளம் இயக்குநர். இந்தப் படைப்பை தேர்ந்தெடுத்தற்காகவே அவரை  முதலில் பாராட்டலாம்.

ஆனால் சிறப்பு விருந்தினரான விஜய் மில்டன், நடுவர்கள் வெற்றிமாறன், சேரன் ஆகியோர் குறிப்பிட்டதைப் போல இதன் எக்சிகியூஷன் சரியாக நடத்தப்படவில்லை. சிறுகதையின் ஆன்மா, காட்சிகளின் வழியாக கடத்தப்படவேயில்லை. நண்பர் கேபிள் சங்கர், தயாரிப்பாளராக வெற்றிலை வாயோடு நடித்திருந்தார்.

எளிமையாகத் தோற்றமளிக்கும் காதர், ஒரு கலைஞனாக விஸ்வரூபம் எடுப்பதுதான் இந்தச் சிறுகதையின் முக்கியமான அங்கம். இந்தப்பகுதி மிக மிக சுமாராக படமாக்கப்பட்டிருந்தது. அதில் நடித்தவரும் சுமாராகத்தான் செய்தார். நிற்க..

நம்முடைய பாரம்பரியக் கலைகளும் கலைஞர்களும் தேய்ந்து கொண்டே வருவதையும் மையக்கலைவெளியில் அவை நிராகரிக்கப்படுவதும்தான் அந்தச் சிறுகதை சொல்ல வரும் ஆதாரச் செய்தி.

எனில், அவ்வாறான கலைஞர் ஒருவரை படப்பிடிப்புக்குழுவால் தேடிப்பிடிக்க முடியவில்லை என்னும் நடைமுறை விஷயமே சிறுகதையின் அடிப்படையை நமக்கு சொல்லி விடுவது ஒரு சுவாரசியமான நகைமுரண்.

இந்தச் சிறுகதையின் கனம் என்னவென்பது இளம் இயக்குநருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. எனில் அதைப் படமாக்க எத்தனை சிரத்தையையும் மெனக்கெடலையும் வழங்கியிருக்க வேண்டும்?! அவர் புலிக்கலைஞனை ‘எலிக்கலைஞனாக்கி’ விட்டது துரதிர்ஷ்டம்.
suresh kannan

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 6 – ‘கமல் – வெற்றியடைந்த நடிகன்தான் தோல்வியுற்ற அரசியல்வாதி’கமல் வந்தும் நிகழ்ச்சி இன்னமும் களைகட்டவில்லை. “இவரே பாம் வைப்பாராம்.. அப்புறம் இவரே எடுப்பாராம்” என்கிற “முதல்வன்’ ரகுவரன் வசனம் மாதிரி, கமலைப் பற்றிய கேள்விகளை முதலிலேயே எழுதி வைத்திருப்பார்களாம். அதை போட்டியாளர்கள் வாசிக்க மட்டுமே வேண்டுமாம். என்ன நியாயம் இது? மாறாக போட்டியாளர்களே சொந்தமாக கேள்விகளைக் கேட்டிருந்தாலாவது சற்று சுவாரசியமாக அமைந்திருக்கும்.

தொடர்பேயில்லாத கேள்வியாக இருந்தாலும் தன்னைப் பற்றி அதில் முக்கால் சதவீதம் திணித்து விடுவதில் கமல் சமர்த்தர். எனில் இந்தக் கேள்விகள் அவரைப் பற்றியது என்றால் விளாசி விட மாட்டாரா? காதில் ரத்தம் வரும் வரை விளாசி விட்டார்.

இன்று அவருடைய ஒப்பனையும் ப்ரெளன் கலர் ஷேடில் இருந்த  ஆடையும் அட்டகாசமாக இருந்தது. துவக்க நாளில் ‘பாங்க் கொள்ளைக்காரன்’ மாதிரி வந்ததற்கு இன்று நல்ல பரிகாரம். இது போன்றே தொடரலாம். அவரின் ஆடை வடிவமைப்பை கவனிக்கும் மேடம் கவனிக்கவும் (நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் ‘மேடம்’ என்று விளித்திருக்கிறேன்).

பொதுவாக கமல் வரும் நாட்களில் recap முடித்து அன்றைய நாளின் சொச்சங்களை லேசாக காட்டி விட்டு நேரடியாக கமலிடம் போய் விடுவார்கள். இந்த இரண்டு நாட்களையும் அவரே பெரும்பாலும் ஆக்ரமித்துக் கொள்வார். அதான் வழக்கம். அதென்னமோ இன்று வியாழன், வெள்ளி பஞ்சாயத்துக்களை சாவகாசமாக காட்டிக் கொண்டிருந்தார்கள்.

**


ஏற்கெனவே விரிவாக எழுதியதுதான். இளையதலைமுறையுடன் பழகுவதில் மோகன் வைத்யாவிற்கு பிரச்சினை இருக்கிறது. சரவணன் மற்றும் சேரனைப் போல ஓர் எல்லையுடன் பழகினால் பிரச்சினையில்லை. ஆனால் இறங்கி அடித்தால் ‘பசங்களால்’ கேலியாக திருப்பியடிக்கப்படும் அடியையும் தாங்க வேண்டும். தர்ஷன் ஏதோ கிண்டலடித்து விட்டார் என்று மோகன் சீரியஸாகி விட்டார். ‘இனிமே என்னை அப்பா –ன்னு கூப்பிடாத. அண்ணா –ன்னு கூப்பிடு” என்று கட்டளையிட தர்ஷன் ‘மூசு.. மூசு..’வென அழ ஆரம்பித்தார்.

பல வருடங்கள் இணைந்து வாழ்கிற தன் தந்தை, தாய், அண்ணன், அக்காவிடம் கூட வீட்டில் உறவுமுறையைச் சொல்லி அழைத்து இத்தனை பாசம் காட்டுவார்களா என தெரியவில்லை. ஆனால் வந்த நான்காம் நாளிலேயே அப்பா – மகன் சொந்தங்கள் உருவாகி, அதில் பிரிவுத் துயரெல்லாம் ஏற்பட்டு…

எல்லாம் காமிராக்கள் செய்யும் மாயம்தான் போல. பொதுவெளியில் தங்களை நெகிழ்ச்சியானவராக, நல்லவராக காட்டிக் கொள்ளும் ஆசை.

**

லாஸ்லியாவிற்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் டாஸ்க்கை பிக்பாஸ் இன்று தந்தார் போலிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெண் இப்போதுதான் மேடைக்கு வந்தார். ‘வசீகரா’ என்கிற ரொமாண்டிக் பாட்டை பஜனைப் பாட்டாக்கினார்.  ‘நின்னுக்கோரி வர்ணம்’ கறிக்கடை பாய் மாதிரி இந்த அற்புதமான பாடலை அவர் பிய்த்துப் பிய்த்துப் போட மற்றவர்களும் பின்பாடி ஏழரையை அற்புதமாக கூட்டினார்கள்.

‘அழுகாட்சி’ டாஸ்க் மீண்டும் துவங்கித் தொலைத்தது. இதற்கு மீரா தாமதமாக வந்ததால் ஜாடையாக திட்டித் தீர்த்தார் வனிதா. அவர் கோபமாக இருக்கும் போது யாரும் ‘கூல்’ என்று சொல்லி நெருங்கக்கூடாதாம். யாராவது அழுதால் சமாதானப்படுத்தக்கூடாதாம். கட்டளைகள் பறந்தன. இதெல்லாம் சராசரியான மனித இயல்புகள். வனிதாவே சொல்கிற படி ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைகள் இருக்கும். அவற்றை ஒரு தனிநபர் தன்னிடமுள்ள அதிகாரத்தின் மூலம் எப்படி அழிக்க முடியும்? ஹிட்லர்கள் உருவாவது இப்படித்தான்.

'உன் அப்பா... அம்மா.. கிட்ட போ' என்று முன்பு கோபமாக பேசிய வனிதா, பிறகு மீராவிற்கு அப்பா இல்லை என்கிற விஷயத்தை அறிந்து கொண்டு அதற்காக வருத்தம் தெரிவித்தது நல்ல விஷயம். 'இந்த உலகத்துல எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது. புரியுதா.. மத்தவங்களுக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடு" என்று அவர் உபதேசித்தது உண்மை. வனிதா மாதிரியானவர்கள் ஒருபக்கம் கோபக்காரர்களாக இருந்தாலும் இன்னொரு பக்கம் உண்மையானவர்களாக இருப்பார்கள்.

 இந்த ‘அழுகாட்சி’ டாஸ்க்கை சாண்டி அற்புதமாக பகடி செய்தார். அவருடைய முறை வந்த போது ‘ஆச்சுவலி.. எனக்கு அப்பா அம்மா கிடையாது.. நான் ஒரு அநாதை..’ என்று ஆரம்பிக்கும் போதே கர்சீப்பை எடுத்து வைத்துக் கொண்டு லாஸ்லியா அழ ஆரம்பித்து விட்டார். ‘தான் சொன்னதெல்லாம் டூப்’ என்று சாண்டி அடுத்த வாக்கியத்தில் சொன்னதின் வழியாக லாஸ்லியாவிற்கு கிடைத்தது பெரிய பல்பு. ‘சாண்டி..’ என்று சிணுங்கினார். இந்த ‘டாஸ்க்கே’ எத்தனை போலித்தனமானது என்பதை போட்டு உடைத்த சாண்டிக்கு நன்றி.

தன் சகோதரியின் தற்கொலை பற்றியும் அப்பாவிடம் இருந்த அன்பு பற்றியும் லாஸ்லியா விளக்கியது உருக்கமாக இருந்தது. அவரது இலங்கைத் தமிழ் கேட்க அத்தனை சுகம். கவின் இவரை சைட் அடித்துக் கொண்டிருந்ததை காமிரா அம்பலப்படுத்தியது. ‘பயபுள்ள நிறைய பேருக்கு டோக்கன் போடும் போல’

குடும்ப வன்முறையில் இருக்கும் கொடுமையையும் இளம் தலைமுறையினர் அதனால் பாதிக்கப்படும் துயரத்தையும் முகின் ராவின் உருக்கமான பகிர்தல் விளக்கியது. ஆனால் அந்த நிலையிலும் தன் அப்பாவை அவர் வில்லனாக்கி விடவில்லை. ‘அவரு நல்லவருதான்… ஸாரி அப்பா’’ என்று இணைத்துக் கொண்டது அற்புதமானது.

**

லாஸ்லியா கவினை அண்ணன் என்பது போல் சொல்லி விட்டாராம். இதற்காக அவருடைய தண்ணீர் பாட்டிலை கவின் எடுத்து வைத்துக் கொண்டார். லாஸ்லியா எப்படியாவது மறுநாள் காலைக்குள் பாட்டிலை திரும்ப எடுத்து விட்டால் கவின் அவரைத் தங்கையாக ஏற்றுக் கொள்வாராம். இல்லையென்றால் ‘அண்ணன்’ என்கிற சொல்லைத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமாம். எல்லாம் தமிழ் சினிமாக்கள் படுத்துகிற பாடு. அதில் வருகிற கோணங்கித்தனங்கள் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன.

‘பாய்ஸ்’ படத்தின் சித்தார்த் போல அந்த தண்ணீர் பாட்டிலை விதம் விதமாக பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்தார் கவின். பாத்ரூம் போகும் போது கூடவே எடுத்துச் சென்றாராம். இந்த மொக்கையான விஷயத்தை சாவகாசமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். பின்பு எப்படியோ சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு பாட்டிலை கவின் திரும்பக் கொடுத்தார். "நீ எனக்கு அண்ணன்.. தம்பி.. இல்லைதான். ஆனா யாரோ' என்று கவினுக்கு பல்பு கொடுத்தார் லாஸ்லியா.

வெளிப்படையானவராக இருப்பது சிறப்புதான். ஆனால் வலக்கண்ணால் லாஸ்லியாவைப் பார்த்து கொண்டு இடக்கண்ணால் மிச்சமிருக்கும் பெண்களையும் சைட் அடித்துக் கொண்டிருக்கிறார் கவின். 

இந்த ‘பாட்டில்’ டாஸ்க் தேவதாஸ் போல விஸ்கி ‘பாட்டிலிலும்’ சோகப் ‘பாட்டிலிலும்’ முடியும் என்கிற நடைமுறை கவினுக்கு புரிந்தால் சரி.

**

போட்டியாளர்கள் வாசித்த கேள்விகளுக்கு கமல் பதில் சொன்னார். அவற்றில் ‘நாளை நமதே’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு சகோதரராக நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றியும் குறிப்பிட்டார். ‘எம்.ஜி.ஆர் கூட டான்ஸ் ஆடக்கிடைத்த வாய்ப்பு. பாருங்க.. அது நிஜமாகியிருந்தா.. இப்ப எவ்ள உதவியாக இருக்கும்?” என்று பொடி வைத்துப் பேசினார். எம்.ஜி.ஆர் கூட நடனம் ஆடியவர்கள் அரசியலிலும் ஜெயித்த கதையை கிண்டல் செய்கிறாரா என்ன?

‘விஸ்வரூபம்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சர்ச்சையில் தமிழக மக்கள் எனக்கு தோள் கொடுத்தார்கள். அதற்கான நன்றிக் கடனைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்று கமல் உருகியது எல்லாம் சரி. ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தை அதே தமிழக மக்கள் ஓட வைக்கவில்லையே.. கவனித்தீர்களா.. கமல்?..

‘வெற்றி பெற்ற தேவர்மகன்தான் குணா.. தோல்வியடைந்த குணாதான் தேவர்மகன்’ என்று இன்னொரு கேள்விக்கு பதில் சொன்னார். இதெல்லாம் நமக்கு அப்போது புரியாது. பிறகு நிதானமாக யோசித்தால்தான் புரியும். எம்.ஏ. பிலாஸபி.. எம்.ஏ. பிலாஸபி. (ஆனால் குணா. அற்புதமான முயற்சி. அது தமிழகத்தில் ஓடியிருந்தால்தான் ஆச்சரியம். கமல் இம்மாதிரியான பரிசோதனைகளையெல்லாம் தோல்விக்குப் பயப்படாமல் துணிச்சலாக செய்வார்).

‘ஸ்ருதிஹாசன் மட்டுமல்ல, தமிழகமே என் குடும்பம்தான்’ என்று பிட்டைப் போட்டதெல்லாம் வழக்கமான அரசியல்வாதித்தனம். கமல் இது போன்ற க்ளிஷேக்களைத் தவிர்த்துத் தொலைக்கலாம்.

சரவணனின் சோகக்கதையை தனியாகக் குறிப்பிட்டு ‘அவர்தான் உங்களின் தாய்.. உங்களின் குழந்தையும் கூட. என் வணக்கத்தைச் சொல்லுங்கள்’ என்று பிரத்யேமாக குறிப்பிட்டது சிறப்பு.

கமல் வந்தும் கூட நிகழ்ச்சி ‘பிக்கப்’ ஆகவில்லை என்பது சோகம். (நிகழச்சி பெரிய வெற்றி.. வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்று கமலே சொன்னது நல்ல காமெடி). இன்றைக்காவது ‘குறும்பட’ பொங்கல் ஏதாவது வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவார் என்று எதிர்பார்ப்போம்.suresh kannan

Saturday, June 29, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 5 – ‘மோகன் போட்ட கூக்ளி.. ஸாரி.. ‘ஹூக்’ளி’
பிக்பாஸ் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியும் நடந்து கொண்டிருப்பதால் இரண்டையும் தொடர்புப்படுத்தி ஒரு தலைப்பு வைக்க வேண்டுமே என்று நினைத்தேன். விளைவு இந்தத் தலைப்பு. இரண்டுமே  விளையாட்டுதானே?!.

‘அழுகாச்சி’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. வனிதாவும் கவினும் தங்களின் அனுபவங்களைப் பகிர, ‘என்னடா.. இது .. இன்றைய நாளும் எழவு வீடாகவே முடிந்து விடுமோ’ என்று தோன்றியது. ஆனால் மோகன் வைத்யா போட்ட ‘ஹூக்’ளி’தான் இன்றைய நாளின் பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டது. அவர் ‘பற்ற வைத்த நெருப்பினால்’தான் இன்று நாள் முழுக்க சரவெடி சத்தம் பிக்பாஸ் வீட்டில் கேட்டது. நன்றி மோகன் அவர்களே.

‘கேயாஸ் தியரி’ பற்றி அறிந்திருப்பீர்கள். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட எங்கோ தொலைவில் இருக்கிற எரிமலையின் பொங்குதலுக்கு காரணமாக அமையக்கூடுமாம். இந்த உலகில் நடக்கும் அனைத்து சிறு நிகழ்வுகளுக்கும் பெரிய நிகழ்வுகளுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத பல தொடர்ச்சிகள் இருக்கின்றன என்கிறார்கள். அதற்குத் தோராயமான உதாரணமாக இந்த நாளைச் சொல்லலாம்.

என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.

**

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மீரா, அங்கு கடந்து சென்ற மோகன் வைத்யாவிடம் ஓர் உதவியைக் கேட்டார். “என் டிரஸ் பின்னாடி, (அதாவது கழுத்துப் பகுதியில்), ஹுக் போட்டு விடுகிறீர்களா?” என்று. மாடலிங் உலகில் இது சகஜமான விஷயமாக, உப்புப் பெறாத விஷயமாக கூட இருக்கலாம். ஆனால் நடுத்தர வர்க்க மனநிலைக்கு இது சற்று அதிர்ச்சியான விஷயம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மிடில் கிளாஸ் ஆசாமிகள் கூட சற்று ஆடிப் போயிருப்பார்கள். ‘இன்னாம்மா.. இந்தப் பொண்ணு. திமிரப் பாத்தியா” என்று வீட்டுப் பெண்மணிகள் முணுமுணுத்திருப்பார்கள்.

‘என்னடா.. இந்தக் காட்சி சாதாரணமாக கடந்து போய் விட்டதே?!’ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே இது தொடர்பான பஞ்சாயத்து ஆரம்பித்தது. இந்த விஷயத்தை ஒரு புகார் மாதிரி கேப்டன் வனிதாவிடம் சென்று பதிவு செய்து விட்டார் மோகன். ‘இந்த மாதிரி அவங்க கேட்டாங்க… எனக்குச் சங்கடமா இருக்கு. உதவி செய்யறது ஓகே. ஆனா கேமிரா முன்னாடி செஞ்சா பார்க்கறவங்க என்னைத் தப்பா நெனப்பாங்க.. நீங்க அவங்க கிட்டச் சொல்லுங்க” என்றிருக்கிறார்.

மோகனின் நோக்கில் இந்த விஷயம் புரிந்து கொள்ளக்கூடியதுதான். சங்கடமான விஷயம். ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம்? மீராவையே தனியாக அழைத்து “இங்க பாரும்மா.. குழந்த.. இப்படி செய்யச் சொல்லாதே.. அது உனக்கு மட்டுமல்ல.. எனக்கும் கெட்ட பெயரை வாங்கித் தரும்” என்று சொல்லியிருக்கலாம். சரி.. நடந்தது நடந்து விட்டது.

இப்போது இந்த விஷயத்தை ஹேண்டில் செய்வது ‘கேப்டன்’ என்கிற வகையில் வனிதாவின் டர்ன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அவருமே மிக தன்மையாகத்தான் இதைக் கையாண்டார். மீராவை தனிமையில் அழைத்து இந்த விஷயத்தை ஆரம்பித்து சொல்லும் போதே இடைமறித்த மீரா.. “நாங்க அப்பா – பொண்ணு மாதிரி.. இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்பது போல் அவசரமாகச் சொல்லி விட்டு ஓடி விட்டார்.

தான் சொல்ல வருவதைக் கூட முழுமையாக கேட்காமல் ஓடி விட்டாளே என்று வனிதாவின் ஈகோ காயப்பட்டிருக்கும். இத்தனைக்கும் அவர் மீராவிற்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டுதான் அழைத்திருந்தார். எனவே தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தது வனிதா என்னும் கொக்கு. அதற்கான சமயமும் வந்தது. அல்லது வனிதா அதை உருவாக்கினார் என்றும் சொல்லலாம். 

**

ஒரேயொரு ‘கடாய்’ பாத்திரத்தை சுத்தம் செய்யும் பணியை மீராவிற்காக ஒதுக்கித் தந்தார் வனிதா. ஆனால், அம்மையப்பனை சுற்றி வந்து மாம்பழத்தை ‘லவட்டிய’ புத்திசாலி கணேசன் மாதிரி, அந்த வேலையை சாண்டியிடம் ஹேண்ட்ஓவர் செய்தார் மீரா. சாண்டியும் அந்த வேலையை இயல்பாக செய்து முடித்து விட்டார்.

ஆனால் வனிதா டீமிற்கு இந்த விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. இது தொடர்பான பஞ்சாயத்தை ஆரம்பித்தார்கள். ‘இரவில்தான் பாத்திரங்கள் அதிகம் விழுகின்றன. நான் நிறைய உழைக்கிறேன். மட்டுமல்ல, இன்று உடம்பு சரியில்லை. அதனால்தான் சாண்டியிடம் கேட்டுக் கொண்டேன்’ என்பது மீராவின் தரப்பு வாதம். ஆனால் வனிதா இதை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. அவரது ஈகோ ஏற்கெனவே காயப்பட்டிருந்ததால், ‘எனில் நீ பாத்ரூம் க்ளீனிங்’-ற்கு செல்’ என்று உத்தரவு போட்டார். அது மீராவிற்கு வைத்த செக் மேட்.

ஆனால் மீரா அதற்கு அடிபணியவில்லை. ‘நான் பாத்திரம் விளக்குவதை செய்ய மாட்டேன் என்று சொல்லவேயில்லையே’ என்று வாதிட.. ‘நான் சொல்லிவிட்டேன். இது கேப்டனின் கட்டளை. என் கட்டளையே சாசனம்’ என்று ராஜமாதாவாக மாறி வனிதா உரத்த குரலில் ஆணையிட “நீங்கள் செய்வது தவறு அம்மா” என்று அமரேந்திர பாகுபலியாக மாறினார் மீரா. “ஏன் கத்தறீங்க.. எங்க அப்பா அம்மா தவிர வேறு யாரும் என் கிட்ட சத்தம் போட உரிமை கிடையாது” என்று கலங்கும் குரலில் மீரா பதில் அளிக்க, “அப்ப.. ஏன் இங்க இருக்க.. உங்க வீட்டுக்குப் போ” என்று அதிரடி மாமியாராக மாறினார் வனிதா.

மீரா அழுது கொண்டே வெளியேற… இந்தச் சமாச்சாரம் குறித்து மற்ற பெண்கள் கூட்டணி அமைத்து பேசினார்கள்.. பேசினார்கள்… அப்படி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள்.

இந்தக் கூட்டணியை சற்று கவனித்தால் அது வயது சார்ந்த அணியாகப் பிரிந்திருப்பதைக் கவனிக்க முடியும். வயதானவர்களான பாத்திமா, மோகன் போன்றோர் ஓர் அணியில் இருக்கிறார்கள். நடுத்தரவயது வனிதாவோடு கூட்டணி அமைத்துக் கொண்டார் மதுமிதா. ‘இவங்க சொன்னதுல என்ன தப்பு?” என்கிற சப்போர்ட் வேறு. (வனிதா, முன்னாள் சாதனையாளரான காயத்ரியாகவும் மதுமிதா ஆர்த்தியாகவும் உருமாறியிருப்பதைக் கவனிக்க முடியும்).

அபிராமி, சாக்ஷி உள்ளிட்ட இளம்வயதினர் பெரும்பாலும் மீராவின் பக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தார்கள். அதிகாரத்தைச் செலுத்தத் துவங்கியிருக்கும் வனிதா அக்காவின் மீது அவர்களுக்கும் எரிச்சல் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

மீராவின் மீது முதலில் வெறுப்பைக் காட்டிய அபிராமியும் சாக்ஷியும் கூட இப்போது மீராவின் பக்கம் சாய்ந்தது நல்ல விஷயம். வெளியே அழுது கொண்டிருந்த மீராவை இளம் வயதுக்காரர்கள் சென்று சமாதானப்படுத்தியது வேறு வனிதாவை கொந்தளிக்கச் செய்தது. “அவ சீன் போடறா.. வெளிய ஆர்மி ஆரம்பிப்பாங்கன்னு கற்பனை’ என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருந்தார். (ஆனால் மக்கள் உண்மையில் ஆர்மி ஆரம்பித்திருக்கிற ‘லாஸ்லியா’ என்கிற ஜீவன் அந்த வீட்டில்தான் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது. அப்படியே அபூர்வமாக கண்ணில்பட்டாலும் தெய்வதிருமகள் ‘விக்ரம்’ மாதிரி என்னென்னமோ கையைக் காட்டிக் கொண்டு தனியாக உலவிக் கொண்டிருக்கிறது).

“இரவில் அதிக பாத்திரங்கள் விழுவது நீ வருவதற்கு முன்னாலே இருந்ததுதான். நீயாக கற்பனை செய்து கொள்கிறாய்” என்று மீராவிடம் சரியான காரணத்தை எடுத்துச் சொன்னார் தர்ஷன். “நான் எவ்ளோ வேலை செஞ்சேன் தெரியுமா” என்று பதிலுக்கு சிணுங்கினார் மீரா.

சேரனும் மீராவைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால்,  “நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா..’ என்று நாட்டாமை ரேஞ்சில் மீரா பஞ்ச் டயலாக் பேசினார். (அதுவும் யார் கிட்ட இந்த பஞ்ச்?!. நாட்டாமை விஜய்குமாரோட பொண்ணு கிட்டயே.. என்ன ஆணவம்?!) இதைக் கேட்டு நொந்து போன சேரன் அமைதியானார். மீராவையும் மதுமிதாவையும் அழைத்து இவர் செய்த பஞ்சாயத்தும் ஒரே காமெடியாகத்தான் இருந்தது. ‘திரும்பத் திரும்ப பேசற நீ” மதுமிதா தன் தரப்பை கொட்டித் தீர்த்துக் கொண்டே இருந்தார்.

**

இந்த ‘ஹூக்’ளி சமாச்சாரத்திற்கு மறுபடியும் வருவோம். தான் சொன்னதை மீரா கேட்கவில்லை என்கிற மெல்லிய கோபத்தோடு இந்த விஷயத்தை வனிதா அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பாத்திமா உள்ளிட்ட சிலரிடம் தொடர்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பந்தை மறுபடியும் மோகனிடமே தள்ளி விட்டார்கள். ‘நாங்க சொன்னா கேட்க மாட்டேங்கறா.. நீங்களே சொல்லிடுங்க” என்று. அவரும் பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி ‘இதோ பாருங்கோ… அது வந்து..” என்று குழறிக் கொட்டி உரையாடலை முடித்தார்.

உருப்படியான வேலைகள் இல்லாவிட்டால் அது வம்புகள் உருவாவதற்கும் தொடர்ந்து நிகழ்வதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மெய்ப்பிக்கிறது பிக்பாஸ் வீடு.

பிக்பாஸ் வீடு என்பது கண்ணாடி மாதிரிதான். நம் வீடுகளில் அன்றாடம் நிகழும் சமாச்சாரம்தான் இது. சரவெடி மாதிரி ஒரு பெரிய சண்டை நிகழ்ந்து முடிந்திருக்கும். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தால் மிக அற்பமானதாக இருந்திருக்கும். அதை ஊதி ஊதி பெருக்கி விட்டிருப்பார்கள். எனவே இதில் வரும் பாத்திரங்களை விமர்சிப்பதை விடவும் இந்தச் சம்பவங்களின் மூலம் நம்மையும் சுயபரிசீலனை செய்து கொள்வதே நல்லது. அதுவே இந்த நிகழ்ச்சிக்கு நாம் செலவிடும் நேரத்திற்கான மதிப்பு. வெறும் வம்பாக மட்டும் பார்த்து முடித்தால் இழப்பு நமக்கே.

உண்மையில் வனிதா போன்ற பட்டாசுகளை கையாள்வது எளிது. சற்று பொறுமையும் சாதுர்யமும் நகைச்சுவைத்தன்மையும் இருந்தால் போதும். பிக்பாஸ் விளையாட்டு என்பதே ஒருவரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான். ஒரு புதிய சூழலில் புதிய நபர்களுக்கு இடையே ஒருவர் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார் என்பதுதான் இதன் அடிப்படை. ஆனால் அந்த விஷயத்தை மீராவால் திறம்பட செய்ய முடியவில்லை.

தான் நேர்மையாக இருப்பதாக கருதிக் கொண்டு அனைத்திலும் சற்று சண்டித்தனம் செய்கிறார் என்றே சொல்ல வேண்டும். தன்னை யாரும் அதிகாரம் செய்ய முடியாது என்று அவர் கருதுவது சரிதான். ஆனால் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் போது அதன் நெளிவு சுளிவுகளுக்கேற்ப தானும் சற்று மாற வேண்டும். ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு சூழலை எதிர்ப்பது, அல்லது தன் தரப்பை நிதானமாக தலைமையிடம் சுட்டிக் காட்டுவது சரியாக இருக்கும்.

**

பெண்கள் இப்படி ஒருபக்கம் கன்னாபின்னாவென்று அடித்துக் கொண்டிருக்க, ஆண்கள் மிக கூலாக இருந்தார்கள். மீரா சொன்ன வேலையை சாண்டி எளிதாக செய்து முடித்தார். தர்ஷன் மீராவிற்கு உண்மையை எடுத்துச் சொல்லி  சமாதானம் செய்தார். சேரன் மிகச் சிறப்பான முறையில் பஞ்சாயத்தை நிகழ்த்தினார்.

மட்டுமல்ல.. இந்தச் சர்ச்சையை வைத்து இறுதியில் சாண்டி தலைமையில்  ஒரு கானா பாட்டாகவும் பாடி முடித்தார்கள். இந்த வீட்டை விட்டு வெளியே செல்வதற்குள் மோகன் வைத்யா, கர்நாடக சங்கீதத்தை மறந்து விடுவார் என்றும் சாண்டியே அதற்கு காரணமாக இருப்பார் என்றும் யூகிக்க முடிகிறது.

இன்றும் நாளையும் பெரிய நாட்டாமை வரும் நாள். அவர் வந்து என்னென்ன பொங்கலை கிளறப் போகிறாரோ?! பொறுத்திருந்து பார்த்து நாமும் கிளறுவோம்.suresh kannan

Friday, June 28, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 4 – “சோகங்களைக் கொண்டாடாதீர்கள்”பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காம் நாளிலேயே சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. அதற்கு முக்கியமான காரணம் இந்த ‘அழுகாச்சி’ டாஸ்க்தான்.

‘நீங்கள் இதுவரை வெளியில் சொல்லாத ரகசியம் என்ன?’ என்பது போன்றவற்றையெல்லாம் இந்தப் பகுதியில் கேட்கிறார்கள். அதுவரை சொல்லாத ரகசியம் என்றால் அது மிக முக்கியமானதாக, அந்தரங்கமானதாகத்தான் இருக்கும். அதை ஏன் பொதுநிகழ்ச்சியில், இப்போதுதான் அறிமுகமானவர்களின் முன்னால் சொல்ல வேண்டும்? இதுவே செயற்கையாகவும் போலித்தனமாகவும் இருக்கிறது. இதன் பின்னால்தான் ரியாலிட்டி ஷோக்களின் பிரம்மாண்ட வணிகமும் இருக்கிறது.

சற்று யோசியுங்கள். நாம் மிக முக்கியமான விஷயங்களை எங்கே எப்போது பகிர்ந்து கொள்வோம்? பல வருடங்கள் பழகிய மிக நெருங்கிய நண்பரிடம், நமது பரிபூர்ண நம்பிக்கையைப் பெற்றவரிடம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில்தான் பகிர்ந்து கொள்வோம். இல்லையா? ஒரு பூ மலர்வது மாதிரி இந்தத் தருணங்கள் இயல்பாக மலர வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது? ‘ம்.. வரிசையாக வந்து மூக்கைச் சிந்துங்கள்’ என்று யாரோ உத்தரவுகளைத் தருகிறார்கள். இது என்ன கட்டணக் கழிப்பிடமா? வரிசையாக வந்து உபாதையைத் தணித்துக் கொண்டு போக?

மகிழ்ச்சி, கொண்டாட்டம், சந்தோஷம் போன்ற நேர்மறையான விஷயங்கள்தான் ஒரு பொதுவெளியில் பரவ வேண்டும். அதில்தான் உண்மையும் இருக்கும். ‘நகைச்சுவையான விஷயத்தைப் பகிர்ந்து கொள். எல்லோரும் சிரிப்பார்கள். உன் துயரத்தைப் பகிர்ந்து கொள். நீ மட்டுமே அழுது கொண்டிருப்பாய்’ என்றொரு மேற்கோள் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் மற்றவர்களின் துயரத்தைக் கேட்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இது போன்ற சமயங்களில் அவர்கள் மற்றவர்களுக்காக அழுவதில்லை. தன்னுடைய துயரங்களை அவற்றில் இணைத்துக் கொண்டுதான் கண்கலங்குகிறார்கள். 

அதிலும் இது போன்ற ‘அழுகாச்சி’ விஷயங்கள் எதிர்மறையான அதிர்வலையை விரைவில் பரப்பி விடும். தனது துக்கத்தை மற்றவர்களிடம் பகிரும் போது கிடைக்கும் அனுதாபம், அதன் மூலம் கிடைக்கும் கவனஈர்ப்பு , தலை தடவப்படும் சுகம் ஆகிய சந்தோஷங்களினால் சிலர் இதற்கு அடிமையாகி விடுவார்கள். ‘மஸோக்கிஸ்டுகளையே’  (masochistic) இது உருவாக்கும்.

சிலர் இந்த டாஸ்க்கில், ஒருவர் சோகத்தை சொல்லத் துவங்கும் முன்பே அதற்கு தயாராக கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு கண்கலங்கத் துவங்கியதை கவனிக்கலாம். அதிலும் பாத்திமா பாபுவின் எக்ஸ்பிரஷன்கள் இரண்டு, மூன்று சிவாஜி கணேசன்களையே தாண்டி விட்டது.

**

சரி, இது போன்ற துயர அனுபவங்களினால் மற்றவர்களுக்கு உபயோகம் இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது.  மற்றவர்களின் கொடுமையான அனுபவங்களைக் கேட்கும் போது நாம் எத்தனை ஆசிர்வசிக்கப்பட்டிருக்கிறோம் என்கிற உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நம்மிடமுள்ள சிறிய பிரச்சினைகளையே எத்தனை பூதாகரமாக கற்பனை செய்து வைத்திருக்கிறோம் என்பதும் உறைக்கிறது. குறிப்பாக தர்ஷன் விவரித்த அனுபவம் என்பது போர்ச்சூழலில் வளர்ந்தவர்களால்தான் அதன் துயரத்தை சரியாக உணர முடியும். மற்றவர்களால் யூகிக்க மட்டுமே முடியும். அதன் உண்மையான வலி நமக்குத் தெரியாது.


இன்னொன்று, பெரும்பாலானவர்கள் விவரித்த சோகக் கதைகளை நன்கு கவனியுங்கள். கீழ்மைகளில் இறங்குபவர்கள் பெரும்பாலும் ஆண்களாக, குடும்பத்தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் கீழ்மைகளால் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் ஆணிவேராக குடும்பத்தலைவியே இருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தந்தை இல்லாவிட்டாலும் கூட ஒரு குடும்பம் எப்படியோ தட்டுத்தடுமாறி பின்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறி விடும். ஆனால் தாய் இல்லாத குடும்பம் மிகுந்த அலைக்கழிப்பில் மிதக்க நேரிடும். ஆணாதிக்க மனோபாவமும் அது சார்ந்த அதிகார மமதையும் எத்தனையோ குடும்பங்களை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது , குடும்ப உறுப்பினர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது என்பதையே இந்தக் கதைகளின் மூலமாக அறிகிறோம்.

இதில் இளம் ஆண்களுக்கு, சிறுவர்களுக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. நாம் ஆதிகாலத்தில் தாய்வழிச்சமூகமாகத்தான் இருந்தோம் என்று மனித வரலாறு சொல்கிறது. தன் உடல்பலத்தால் பின்பு ஆண் சமூகம் அதைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் எத்தனை துள்ளினாலும் ஒரு பெண்ணின் மனோபலத்தை ஓர் ஆணினால் எளிதில் உடைத்து விடவோ அடைந்து விடவோ முடியாது. வெட்ட, வெட்ட துளிர்த்துக் கொண்டேயிருக்கும் பெண் தான் ஆதாரமான சக்தி என்பது வருங்கால ஆண் குழந்தைகளின் பிரக்ஞையிலாவது வலுவாக பதிய வைக்கப்பட வேண்டும்.

**

மோகன் வைத்யா தன் மீது ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறார் என்று சாண்டி வருந்திக் கொண்டிருந்தார். சாண்டியின் குறும்புகள் சமயங்களில் ரசிக்கத்தக்கவையாக இருந்தாலும் பல சமயங்களில் எல்லை மீறுகின்றன. அவருடைய சமவயது நபர்களிடம் இது சரி. ஆனால் வயதில் மூத்தவர்களுடன் ஓர் எல்லையோடு நிற்பதுதான் முறையானது. சாண்டியும், சரவணனும் அடித்த கமெண்ட்டுகள் மோகன் வைத்யாவை ஏதோ ஒரு வகையில் புண்படுத்தியிருப்பதை அறிய முடிகிறது.

நாற்பது அல்லது ஐம்பது வயதுகளைத் தாண்டியவர்களின் மனோநிலை விநோதமானது. இழந்து கொண்டிருக்கும் இளமை என்பது அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கும். மனது அந்த இழப்பை எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இன்னமும் தாங்கள் இளமையாகத்தான் இருக்கிறோம் என்கிற பிடிவாத கற்பனையுடன் அதை வெளியுலகத்திற்கு பறைசாற்ற பல கோணங்கித்தனங்களை முயற்சிப்பார்கள்.

அவற்றில் ஒன்று இளைஞர்களுடன் பழகுவது. இது நல்ல விஷயம்தான். மனதை இளமையாக வைத்துக் கொள்ளும் ஒரு வழிதான். ஆனால் எந்த எல்லை வரை அவர்களை அனுமதிப்பது என்கிற கறார்தனம் இருக்க வேண்டும்.  இளைஞர்களுடன் இணைந்து குறும்புகளில் ஒரு பக்கம் ஈடுபட்டாலும், இன்னொரு பக்கம் பெரியவர்களுக்கான மரியாதையையும் 'பெரிசுகளின்' மனம் எதிர்பார்க்கும். பழகும் இளைஞர்கள் எங்காவது எல்லை மீறினால் அவர்களின் மனம் சுணங்கிப் போய் விடும்.

சேரன் இந்த எல்லையைச் சரியாக பின்பற்றுகிறார் என்று தோன்றுகிறது. அவரிடம் சாண்டி உட்பட எவரும் எந்தக்  குறும்பும் வைத்துக் கொள்வதில்லை. இயக்குநர் என்கிற பிம்பமும் அவருக்கு உதவுகிறது. மாறாக மோகன் வைத்யா திரைப்படங்களிலும் கோழைத்தனமான பாத்திரங்களையே செய்திருப்பதாலும் வெளித் தோற்றத்திற்கு 'அம்மாஞ்சி'யாக இருப்பதாலும் கேலிக்கு எளிதில் ஆளாகிறார் என்று நினைக்கிறேன்.

எப்படியோ மோகனுக்கும் சாண்டிக்கும் இடையே இருந்த மனவருத்தம் ‘கக்கூஸினுள்’ காம்பமைஸ் ஆனது சந்தோஷம்.

**

மீரா ராம்ப் வாக் கற்றுத்தந்த போதும் சரி, மின்தடை ஏற்பட்ட போதும் சரி, அபிராமி செய்த அலப்பறைகள் நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தின. பிக்பாஸ் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் பட்டியலில் இப்போதைக்கு அபிராமிதான் முதலிடத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் – அவர் தன்னுடைய துயரத்தைப் பகிர்ந்த போது அவரின் மீதான வெறுப்பும் எரிச்சலும் சற்று தணிந்தது உண்மை. கண்கலங்கிய மீராவிற்கு இவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தந்ததும் நல்ல மாற்றம். ஒருவருடான பகையை நீறு பூத்த நெருப்பு மாதிரி பல வருடங்களுக்கு தக்க வைத்துக் கொள்வதை விடவும் எதிராளியை அமர வைத்து வெளிப்படையாக சில நிமிடங்கள் பேசினாலே பல விரோதங்கள் எளிதில் மறைந்து விடும் என்பது அவர்களுக்கு இடையிலான உரையாடலில் தெரிந்தது.

மீராவைப் பற்றி பல சர்ச்சைகளும் புகார்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவையெல்லாம் வெளியில்தான். இந்த விளையாட்டில் அவருடைய பங்கேற்பு எப்படி இருக்கிறது என்பதையே பார்க்க வேண்டும். அந்த வகையில் மீரா இதுவரை சரியாக செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் எந்த நேரமும் அவரிடமுள்ள ‘சந்திரமுகி’ வெளிப்பட்டு அது நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு உதவும் என்றே தோன்றுகிறது. இல்லையென்றாலும் பிக்பாஸ் அதற்கு  எப்படியாவது வழி ஏற்படுத்தி விடுவார்.

‘சூப்பர் மாடல் ஆவறதெல்லாம் அப்படியொன்னும் கஷ்டமான விஷயம் இல்லையே’ என்று மீராவைச் சீண்டிக் கொண்டிருந்தார் ரேஷ்மா.

**

இயக்குநர் சேரன் தன்னால் மறக்க முடியாத நாளைப் பற்றி பகிர்ந்து கொண்ட முறை மிக இயல்பாக இருந்தது. அவர் நாயகனாக நடித்த திரைப்படங்களில் செய்ததைப் போல எங்கே முகத்தை மூடிக் கொண்டு அழுது விடுவாரோ என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக அது நிகழவில்லை. ஆணாதிக்கம் நிரம்பியவர்களின் இடையில் சேரனைப் போன்ற கண்ணியமான, கம்பீரமான ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதைப் போலவே சரவணன் பகிர்ந்து கொண்ட ‘ரகசியமும்’ உருக்கமாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு சிற்றிதழில் இந்தச் சிறுகதையை சில வருடங்களுக்கு முன்பு வாசித்த நினைவு மங்கலாக இருக்கிறது.

அவன் – இரண்டொரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவன். பல வருடங்கள் சிறுமைப்பட்டு மெல்ல மெல்ல நகர்ந்து முட்டி மோதி அடைந்த நாற்காலி அது. ஆனால் அந்த தங்க நாற்காலியின் மஞ்சள் வெளிச்சம் விரைவிலேயே மறைந்தது. ஏறின வேகத்திலேயே கீழே விழுந்தான்.

அதெல்லாம் ஒரு காலம். இப்போது அவன் ஒரு சராசரி. ஆனால் பிரச்சினை என்னவெனில் அவனால் சராசரியாக தன்னை உணர முடியவில்லை. அவன் எப்போதோ அடைந்த சிறிய புகழ் இப்போதும் அவன் மீது பெரும் சுமையாக அமர்ந்திருக்கிறது.

எங்காவது வெளியில் போனால் “நீங்கதானே.. அது ஏன் சார்.. நடந்து போறீங்க?” என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி வாடகை வீட்டுக்குள்ளேயே பெரிதும் அடைந்திருக்கிறான். அது அவனது கற்பனை மட்டுமே. அன்றாட செலவுகளுக்கே சிரமப்படும் ஒரு அவல வாழ்க்கை. ஆனால் ஊமையின் கனவு போல அவனால் வெளியில் சொல்லவும் முடியாது.

இந்த நிலையில் – அவன் எப்போதோ நடித்த திரைப்படம் ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தகவல் கிடைக்கிறது. ஒரு சிறிய மகிழ்ச்சி அவனுக்குள் எட்டிப் பார்க்கிறது. பாலைவனத்தில் செய்த தூறல் போல. ஆனால் அவனிடம் தொலைக்காட்சிப் பெட்டியில்லை. தான் நடித்த திரைப்படத்தை தானே பார்க்கும் ஆவல் உண்டாகிறது. ஆனால் எங்கு செல்வது.. இந்தத் தவிப்புதான் அந்தச் சிறுகதையின் மையம்.

இந்தச் சிறுகதையை அப்போது படிக்கும் போது நடிகர் ராமராஜனின் நினைவு எனக்குள் வந்து போனது. இப்போது சரவணனுடன் அதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் சரவணனாவது பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ராமராஜனால் தனது கீரிடத்தை கீழே இறக்கி வைக்கவே முடியவில்லை.

காசு சம்பாதிப்பது கூட பெரிதல்ல, அதை வீண் ஆடம்பரத்திலும் பணம் சேரும் திமிரிலும் இழந்து விடாமல் பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்வது எத்தனை முக்கியமானது என்பது சரவணனின் அனுபவம் மூலம் நமக்கு கிடைத்த பாடம்.

**

இப்போது என்னுடைய முக்கியமான கவலையெல்லாம் என்னவென்றால், இந்த ‘‘அழுகாச்சி’டாஸ்க்கில் லாஸ்லியாவின் டர்ன் வரும் போது எத்தனை வாலிப வயோதிகர்களின் இதயம் வெடிக்கப் போகிறதோ, தெரியவில்லை. பாவம், பெரும்பாலும் பி.பி., சுகர் பேஷண்ட்டுகள் வேறு

suresh kannan

Thursday, June 27, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்


ஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க்அவுட்’ ஆனது போல் தெரியவில்லை.

‘கீரை கப்பை யாரோ கழுவவில்லை’ என்று காலையிலேயே புதிய பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டார் அபிராமி. அது சரியாக வேலை செய்தது. “ஏம்ப்பா.. ஏற்கெனவே அந்த ஊருக்கும் நம்மளுக்கும் வாய்க்கா தகராறு இருக்கு” என்பதால் அபிராமியின் கூச்சலை மீரா கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்திருக்கலாம். தேவையில்லாமல் கையைப் பிடித்து இழுத்து விட்டார்.

“ரெண்டு ரூவாதாண்டா.. கேட்டேன்.. அவன் என்ன கோபத்துல இருந்தானோ தெரியல. இத்தாம்பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடியைப் போல இந்தச் சந்தர்ப்பத்தை வலுவாக பயன்படுத்திக் கொண்ட அபிராமி, ‘நான் ஒண்ணும் உன் கிட்ட பேசல” என்று பதிலுக்கு எகிற “குழந்தாய்.. கோபம் என்பது உடலையும் மனதையும் அழிக்கக்கூடியது.. பி.காம்.. பி.காம்…” என்று மீரா உபதேசம் செய்ய அபிராமியின் கோபம் தக்காளியின் விலை மாதிரி சர்ரென்று ஏறியது. ‘நான் உன்கிட்ட பேசலை’ என்று அபிநய சரஸ்வதி மாதிரியான தோரணையைச் செய்தார். கோபப்படும் போது கூட நடனமுத்திரையை கச்சிதமாக காட்டுவது உண்மையான கலைஞர்களுக்கே சாத்தியம்.

பிறகு, பழைய காலத்து நடிகைகள் மாதிரி அவர் நேராகச் சென்று படுக்கையறையில் விழுந்தார். அங்குதான் வனிதா இருந்தார். அவர் இந்தப் பஞ்சாயத்தை நிச்சயம் ஊதிப் பெருக்குவார் என்கிற அபிராமியின் கணக்கு தப்பவில்லை. ‘சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா?” என்று டிரைசைக்கிளை எடுத்துக் கொண்டு ஆவேசமாக கிளம்பினார் வனிதா.

மீரா அவரிடமும் ‘குண்டுக் குழந்தாய்.. கோபம் ஆரோக்கிய கேடு. .. பி.காம்’ என்கிற வழக்கமான பாட்டை நிதானமாகப் பாட “ஓய்… யாரைப் பார்த்து பி.காம்’ன்ற.. நான் அதை விட பெரிய படிப்பு படிச்சிருக்கேன். எஸ்.எஸ்.எல்.சி.. தெர்மா உனக்கு’ என்று சவுண்ட் சரோஜாவாக மாற.. மெர்சலான மீரா பெண்களின் ஆதாரமான ஆயுதத்தை கையில் எடுத்தார். கண்ணீர்.. ப்பா.. இந்தப் பெண்களுக்கு எத்தனை எளிதாக கண்ணீர் வந்து விடுகிறது?! தண்ணீர் பஞ்சமே இல்லாத வரம் கிடைத்தவர்கள்.

மீரா அழத் துவங்கியவுடன் பார்வையாளர்களின் அனுதாபம் அவர் பக்கம் சாய்ந்து விடுமோ என்று கவலைப்பட்டாரோ.. என்னமோ.. அபிராமி, தானும் அதே ஆயுதத்தை எடுத்தார்.. ‘பார்ப்பமா.. உன் அழுகைக்கும்.. என் அழுகைக்கும் சோடி போடுவமா.. சோடி..’ என்று இருவரும் கூட்டு அழுகைப் போட்டி நடத்த ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் அவர்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

“ஏண்டா.. கவினு.. பாப்பா அழுவுதில்ல.. சமாதானப்படுத்தேண்டா” என்று வனிதா டீம் கவினை அழைத்தது. ‘டாடி.. என்னைத் தூக்கிக்கோங்க டாடி’ என்கிற குழந்தை மோடில் அபிராமியும் ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு கூப்பிட, ‘சரி.. இதுக்கும் ஒரு டோக்கனை போட்டு வைப்போம். என்ன இப்போ..’ என்பது மாதிரியே உலவும் கவின் இந்தச் சந்தர்ப்பத்தை வீணாக்காமல் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ மூலம் அபிராமியின் கண்ணீரை உலர வைத்தார்.

காதலுக்கு தூது போகும் ஆண்களை பொதுவாக.. “ஏண்டா  மாமா வேலை பார்க்கறே?” என்று இதர நண்பர்கள் கிண்டலடிப்பார்கள். இதே வேலையைச் செய்யும் பெண்களை எப்படி அழைப்பது? வனிதா டீம் செய்வது இதைத்தான். நீண்ட காலமாக, உண்மையாக இருக்கும் காதலாக இருந்தால் அதற்கு உதவி செய்வது நியாயமான விஷயம். ஆனால் ரியாலிட்டி ஷோவின் ‘இன்ஸ்டன்ட் காதலை’ காவியக்காதல் மாதிரி இணைத்து வைக்க முயல்வது அபத்தம்.

முதல் சீஸனிலும் இப்படித்தான் ஆயிற்று. ஆரவ் – ஓவியா விற்கு இடையில் துவங்கிய வழிசலை வையாபுரி உள்ளிட்ட பலரும் சிரித்து சிரித்து ஊதிப்பெருக்கினார்கள். பிறகு நிலைமை சிக்கலான பிறகு அவர்களே “ஏம்ப்பா.. இந்தப் புள்ள இப்படிப் பண்ணுது’ என்று புறமும் பேசினார்கள். வனிதா டீம் இதையே செய்யத் துவங்கியிருக்கிறது.

இதற்கிடையில் இன்னொரு அபத்த நாடகமும் நடந்தது. முகின் ராவுடன் நெருக்கமாக உலவினால் கவினுக்கு பொஸஸிவ்னஸ் வரும் என்று ஆதிகாலத்தை ஐடியாவை யாரோ அபிராமிக்கு சொல்ல, அவரும் அந்த நாடகத்தை மொக்கையாக நடத்தினார். ஆனால் கவின் இதற்கு அலட்டிக் கொள்ளவேயில்லை. ‘முகின்.. ரொம்ப நல்ல பையன்.. மா.. இனிமே உன் கண்ல நான் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்” என்று எஸ்கேப் ஆக.. அபிராமிக்கு கிடைத்தது ஆயிரம் வாட்ஸ் பல்பு.

**

ஆக்ஷன் பிளாக் முடிந்ததும் அடுத்து ஆரம்பித்தது டிராஜிடி எனும் டிராமா. உணர்வுச்சுரண்டல் என்பது ரியாலிட்டி ஷோக்களின் ஆதாரமான தாரக மந்திரம். ஆனால் இதை வெளிப்படையாக இல்லாமல் நாசூக்காக செய்ய தனித்திறமை வேண்டும். ஆனால் இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘பப்பரப்பே’ என்று வெளிப்படையாக உருவாக்கப்பட்டது.

இதில் வந்த கேள்விகளைக் கவனியுங்கள். ‘உங்கள் வீட்டில் எத்தனை இழவு விழுந்தது.. எப்போது  விழுந்தது.. அந்த நாள் நினைவிருக்கிறதா, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது.. மைக்கை அவர் கிட்ட கொடுங்க’ என்கிற மோடிலேயே அனைத்துக் கேள்விகளும் இருந்தன.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் பல சோகமான அனுபவங்களும் தருணங்களும் இருக்கும். அவை தன்னிச்சையாக, பொருத்தமான தருணங்களில் இயல்பாக வெளிப்பட்டால்தான் அழகு. மாறாக வாயில் கையை விட்டு வாந்தியெடுக்க முயல்வதைப் போல செயல்பட்டால் அது இப்படிப்பட்ட எபிஸோடாகத்தான் அமையும்.

என்றாலும் மோகன் வைத்யா பகிர்ந்த அனுபவங்கள் மிக உருக்கம். குறிப்பாக காது கேளாத மனைவி ரயில் விபத்தை சந்தித்த கணத்தை அவர் விவரித்த போது ‘ச்சே..என்னடா இது’ என்று அனுதாபம் ஏற்பட்டது. போலவே ரேஷ்மா பகிர்ந்த அனுபவங்களும் கொடுமை. குடும்ப வன்முறை என்பது எத்தனை கொடிய விஷயம் என்பதை மீண்டும் உணர்ந்தோம்.

அறியாத வயதில் ‘ஏற்பாடு செய்யப்பட்ட’ திருமணத்தில் நிகழ்ந்த கொடுமைகளின் மூலமாகவாவது ரேஷ்மா உஷாராகி, தனது அடுத்த தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் விதியின் கையால் எழுதி செல்லப்படும் நாடகங்களை பல சமயங்களில் நாம் தடுத்திருக்க முடியாது.

‘போய் புள்ளைக் குட்டிங்களை படிக்க வைங்கடா’ என்கிற தேவர் மகன் கமல் மாதிரி “பொண்ணுங்களை அடிக்காதீங்கடா.. அவங்க தாங்க மாட்டாங்க” என்று உருக்கமாக மெசேஜ் சொன்னார் பாத்திமா. ஏறத்தாழ அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. சேரன் அப்படியே சாய்ந்து விட்டார். அடுத்த படங்களில் அவருக்கு ஏதாவது சீன் ஐடியா கிடைத்து விட்டதோ, என்னமோ.

ரேஷ்மா பகிர்ந்து கொண்ட துயர அனுபவங்களில் இருந்து ஆண்களுக்கான படிப்பினை இருந்தது. குடும்ப வன்முறை என்பது சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த குடும்பத்தை மட்டுமன்றி, வளரும் பிள்ளைகளையும உளவியல் ரீதியாக பாதிக்கக்கூடிய விஷயம். 
 
தன் வருங்கால கணவரைப் பற்றி அபிராமி அலட்டலாக பகிர்ந்து கொண்ட போது அவரது உடல்மொழி குமட்டலை வரவழைப்பது போல இருந்தது. ‘என்ன உடம்பு.. அப்படி வாங்குது’ என்று மதுமிதா சொன்னது சரியான விஷயம். ‘கவின் ஆல்ரெடி ரிஜக்ட்ட்’ என்று அம்மணி சொல்லியது.. ‘நரி.. திராட்சை’ கதையை நினைவுப்படுத்தியது.

**

“ஒருத்தர பார்த்தாலே அவங்க கேரக்ட்டரை கண்டுபிடிச்சுடுவேன்’ என்று அலப்பறை தந்து கொண்டிருந்தார் வனிதா “எங்கப்பன் இதைச் சொல்லிக் கொடுத்திருக்கான்’ என்று அவர் எகிறிக் கொண்டிருந்தது ஓவர். (பாவம், நாட்டாமை!) வனிதா டீமை கவனிக்கும் போது வனிதா அக்கா, முதல் சீஸன் காயத்ரியாகவும், அபிராமி ஜூலியாகவும் உருமாறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. சாக்ஷி ரைசாவை நினைவுப்படுத்துகிறார்.

ஷெரீனை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. அபிராமியும் சாக்ஷியும் பேசும் போதெல்லாம் பூனை போல பின்னாடியே வந்து ‘என்னப்பா.. ஆச்சு?” என்று மழுப்பலாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

சாண்டி செய்யும் காமெடியினால்தான் பல வருடங்களாக சிரிக்காமல் இருந்த மோகன் வைத்யா சிரித்துத் தீர்க்கிறாராம் இதுவே ஒரு காமெடி செய்திதான். சாண்டி செய்யும் அலப்பறைகள் பல சமயங்களில் கர்ணகடூரமாக இருக்கின்றன.

‘தெய்வதிருமகள்’ விக்ரம் மாதிரி.. லாஸ்லியா தனியாக நின்று பரிதாபமாக பாடிக் கொண்டிருந்தார். ஏதாவது பிக்கப் ஆகுமா என்று காமிராவும் அவரைச் சற்று நேரம் தொடர்ந்து பார்த்தது. ம்ஹூம்.. பட்டாசு புஸ்ஸூ. பாவம் லாஸ்லியா ஆர்மி. யூனிபார்மை தூக்கிப் போட்டு விட்டு விஆர்எஸ் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வழக்கம் போல் பெண்கள்தான் இந்த நிகழ்ச்சியை முன்னகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். பாவம்.. ஆண் போட்டியாளர்கள் ‘தேமே’ என்று உலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கலகம் அவர்களினால் உருவாவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். 

**

பிரேக் முடிந்து சீன் துவங்கும் போது காமிரா ஏதாவது ஒரு அரங்கப் பொருளில் குளோசப் கோணத்தில் நிலை கொண்டு பின்பு கட் செய்தோ அல்லது zoom out ஆகியோ காட்சிகளைத் தொடர்வது சிறப்பு. இதனால் செட் பிராப்பர்ட்டிகளின் அழகு நம் மனதில் நிற்கிறது.

எபிஸோடில் நடக்கும் கொடுமைகளைக் கூட ஒருவழியாக சகித்துக் கொள்ளலாம். ஆனால் அது முடியும் நேரத்தில் அசரிரீ மாதிரி ஒரு ‘வாய்ஸ்ஓவர்’ ஸ்டேட்மெண்ட் வருகிறதே.. அதை மட்டும் தாங்க முடியவில்லை. ‘பாஸ்.. அப்ப நாம காட்டியும் குடுக்கிறோம்.. கூட்டியும் கொடுக்கிறோமா’.. மோமெண்ட்.

suresh kannan

Wednesday, June 26, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்விவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பிக்பாஸ்ஸில் இருக்கும் சில பெண்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அறிமுக வீடியோக்களிலும் துவக்க விழா மேடையிலும் ‘புதுமைப்பெண்கள்’ ரேஞ்சிற்கு சீன் காட்டியவர்கள் அன்றாட தினங்களில் சராசரிகளைப் போலவே செயல்படுகிறார்கள்.

ஒருவகையில் இந்த நிகழ்ச்சியின் அடிப்படையும் அதுதான். நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் கூட. பிரபலங்களின் திறமையை வியக்கலாம்; பிரமிக்கலாம்; ஏராளமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவற்றைத் தாண்டி அவர்களும் ஒரு சராசரிகளே என்பதை நாம் உணர வேண்டும். அவர்களைக் கடவுள்களாக பீடத்தில் அமர்த்தி தொழக்கூடாது. அவர்களின் சராசரியான தருணங்கள் வெளிப்படும் போது மீது எரிச்சல் அடையவோ கோபப்படவோ கூடாது. அதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வசை பாட கிளம்பி விடக்கூடாது. 

**

முதல் நாளின் இறுதியில் கவனத்தை தன் மேல் படரச் செய்த அபிராமியே இந்த இரண்டாவது நாளையும் ஆக்ரமித்துக் கொண்டார். தன் மீதான கவன ஈர்ப்பை எப்படி உருவாக்க வேண்டும், அதை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அம்மணிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இந்த டிரெண்டை ஓவியா ஆரம்பித்து வைத்தாலும் வைத்தார், பலரும் தங்களை அதுவாக நினைத்துக் கொண்டு காமிராவிடம் சென்று கொஞ்சிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அபிராமியும் இந்தப் பாவனையை பின்பற்றினாலும் நமக்குத்தான் எரிச்சல் ஏற்படுகிறது. ஓவியா போன்ற உண்மையான தேவதைகள் அபூர்வமாகத்தான் தோன்றுவார்கள். 

ஒரு நடிகரை டிவியில் பார்த்து அபிராமிக்கு ‘க்ரஷ்’ உருவானதில் தவறேயில்லை. ஆனால் அந்த உணர்வை அப்போதுதான் அறிமுகமான பெண்களிடம் தம்பட்டம் அடிப்பதும், அதிலும் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்று தெரிந்தும் அதே விஷயத்தை திரும்பத் திரும்ப பொதுவில் பறைசாற்றிக் கொள்வதிலும் இருந்து அம்மணிக்கு ‘க்ரஷ்’ என்பது கவின் மீது என்பதை விடவும் காமிரா மீதுதான் அதிகம் என்பதை யூகிக்க முடிகிறது.

இத்தோடு நிற்காமல் கவினிடமும் இதைப் பற்றி சொல்லி ‘சீரியஸாக’ இதை யோசிக்கச் சொன்னதும் அது கேலியாக மறுக்கப்படும் போது கோபித்துக் கொண்டு கிளம்புவதும் சிறுபிள்ளைத்தனம். ஆனால் இந்த விஷயத்தை கவின் சற்று முதிர்ச்சியோடு கையாண்டார் என்றே சொல்ல வேண்டும். “என்னைப் பற்றியான எதிர்மறை விஷயங்கள் நிறைய இருக்கும். அவற்றைப் பார்த்தால் நீ ஓடி விடுவாய். சில நாட்கள் கழித்து நீ முடிவு செய்” என்பது போல் தற்காலிக சமாதானத்தை முன்வைத்து ‘எஸ்கேப்’ ஆனார்.

கடந்த சீஸனில் ஓவியா விட்ட காதல் அம்பை துவக்க சமயங்களில் ஊதி வளர்த்து விட்டு பிறகு மறுத்து தானும் சிக்கலில் மாட்டி ஓவியாவையும் துயரத்தையும் தள்ளினார் ஆரவ். அப்படியாக மாட்டிக் கொள்ளாமல் கவின் விழிப்பாக இருப்பது நன்று.

**

இந்த சீஸனின் முதல் ‘அழுகாட்சி’ காட்சியை துவங்கி வைத்த பெருமை மோகன் வைத்யாவையே சேரும். ‘தனக்கு பொங்கல் வேண்டாம்’ என்பதைப் பொதுவில் சொல்லப் பயந்து வேறு காரணத்தைச் சொல்லி அழுது தொலைத்தாரோ என்னவோ என்று தெரியவில்லை. அவரது சொந்தக் காரணங்கள், சுயஇழப்புகள் அனுதாபத்துக்கு உரியதுதான். மறுப்பே இல்லை. ஆனால் ‘உறவுகளைத் தேடித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன்’ என்று கலங்கியதுதான் பயங்கர டிராமாவாக இருந்தது. அதென்னமோ ஒவ்வொரு சீஸனுக்கும் இப்படி சிலர் கிளம்பி விடுகிறார்கள்.

அன்பும் பிரியமும் செலுத்த வெளியுலகில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. யாரையாவது தத்தெடுப்பது முதற்கொண்டு உறவினர்களிடம், நண்பர்களிடம் வெளிப்படையான அன்பு செலுத்துவது வரை நிறைய செய்யலாம். ஆனால் ரியாலிட்டி ஷோவில் ‘காமிராவின் முன்புதான் அன்பு செலுத்துவேன் என்று பிடிவாதம் பிடிப்பது நன்றாக இல்லை. இந்த சின்னப்பசங்கள் எல்லாம் பொண்ணுங்களோடு  இணைந்து லூட்டி அடிப்பதும் தனக்கு சாண்டி என்கிற இம்சை மட்டுமே கிடைத்தானே.. என்று காண்டாகி விட்ட மனக்குறையை அழுது  தீர்த்தாரா என்று தெரியவில்லை.

**

கடந்த சீஸனில் ‘முட்டை’ பிரச்சினை கிளம்பியதைப் போன்று இந்த சீஸனில் ‘பொங்கல்’ பிரச்சினை பொங்கத் துவங்கியிருக்கிறது. ‘உணவை வீணாக்குவது தனக்கு பிடிக்காத விஷயம்’ என்று இதை ஆரம்பித்து வைத்தார் பாத்திமா. தன்னை சமூக உணர்வும் பொறுப்பும் உள்ளவராக காட்டிக் கொள்வது நல்ல விஷயம்தான். இதுவொரு பாவனையாக அம்பலப்படும் எல்லைக்கு சென்று விடக்கூடாது.

‘உணவு வீணாகாத வகையில் திட்டமிட்டு சமையுங்கள்’ என்பது சேரனின் யோசனை. இந்த ‘ஆண்’ குரலை ஒவ்வொரு வீட்டிலும் கேட்கலாம். ஆனால் வனிதா இதை சரியான கோணத்தில் மறுத்தார். ‘அப்படிக் கறாராக சமைக்க முடியாது. திடீரென்று எவருக்காவது பசித்தால் இல்லை என்று சொல்ல முடியாது’ என்றார். இதுதான் தாய்க்குலங்களின் அசலான குணம். யாராவது சற்று அதிகம் கேட்டால் அவர்களால் ‘இல்லை’ என்று மறுக்க முடியாது. அதற்காகவே சற்று கூடுதலாகச் சமைப்பார்கள். பிறகு மீந்து போன உணவை வீணாக்க விரும்பாமல் தானே அதை அடுத்த வேளைகளில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வார்கள்.

நான் இது போன்ற தருணங்களில் சொல்லும் யோசனை ஒன்று உண்டு. அதிகமாகிய உணவை ஒருவரே தண்டனை போல சாப்பிட வேண்டாம். மாறாக அடுத்த வேளைக்கு, இருக்கும் அத்தனை நபர்களுக்கும் பிரித்து பகிர்ந்தளித்து விடலாம். இதனால் அவருக்கும் அந்தத் தண்டனை நேராது. மற்றவர்களும் விளையாட்டு போல கொஞ்சமாக இருக்கும் பழைய உணவை சாப்பிட்டு முடித்து விட்டு புதிய உணவிற்குள் உற்சாகமாக நுழையலாம்.

இன்னொன்று, மீதமாகிய உணவுகளை இளம் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆண் நபர்களுக்குத் தர மாட்டார்கள். பெண்களே இந்த தண்டனையை ஏற்றுக் கொள்வார்கள். இதுவொரு மோசமான வளர்ப்புமுறை. பாலின பாகுபாட்டின் ஒரு அம்சம். ஆண்களை இப்படி இளம் வயதிலேயே உயர்வு மனப்பான்மை பொங்கி வழியும் படி வளர்க்கக்கூடாது.

‘பொங்கல் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் பசியினால் சாப்பிட்டு விட்டேன். அடுத்த முறை கஷ்டம்’ என்று சாக்ஷி தன் மனக்குறையை முன் வைத்ததற்கும் இது போன்ற வளர்ப்புமுறைகள் ஒரு காரணம். சற்று டெடரான முகபாவத்தில் இருந்தாலும் ‘உனக்குப் பிடிக்காதா, அல்லது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதா?” என்று சரியான கேள்வியைக் கேட்டார் வனிதா. உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது என்றால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் ‘பிடிக்காது’ என்றால் அது ஒரு வித்தியாசமான சூழலை சகிப்புத்தன்மையுடன் ஏற்று வாழப் பழகாதவர் என்றே பொருள். பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையே இதுதான்.

**

இரண்டாவது நாளிலேயே பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் விஷயங்களை அபிராமி செய்கிறார். கவினுடன் ‘க்ரஷ் கேண்டி’ விளையாட்டு விளையாடி இம்சைப்படுத்துவது ஒரு பக்கம் என்றால், புதிதாக நுழைந்த போடடியாளரான மீராவின் மீது வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியது சகிக்க முடியாதது. இருவருக்கும் இடையே ஏற்கெனவே பழைய பஞ்சாயத்து ஏதாவது இருக்கும் போலிருக்கிறது.

தன்னுடைய உணர்வை வெளிப்படையாக வைத்துக் கொள்வது நேர்மையான விஷயம்தான். ஆனால் அதை எதிர்மறையானதாக மாறக்கூடாது. சில காரணங்களுக்காக, முன்விரோதங்களுக்காக மீராவை பிடிக்கவில்லையென்றால், அபிராமி அவரிடம் பழகாமல் இருக்கலாம். ஆனால் வெறுப்பை வெளிப்படையாகக் காண்பிப்பது, அவமதிக்க முயல்வது போன்றவை அவருக்கே எதிராகத்தான் திரும்பும். இதைத்தான் சேரனும் சுட்டிக் காட்டினார்.

தான் இன்னொரு சிநேகனாக மாறிவிடக்கூடாது என்கிற கவனம் சேரனிடம் இருக்கிறது. தன்னை கேங்கில் எளிதில் இணைத்துக் கொண்டதற்காக மீரா ‘கட்டிப்புடி நன்றி’ சொல்ல வந்த போது மிரண்டு ஒதுங்கிக் கொண்டார். மேலும் அப்போது  சிநேகனையும் மேற்கோள் காட்டினார். படுக்கை ஒதுக்கும் விஷயத்தில் மீராவின் வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டது நல்ல விஷயம்.

**

நான் எப்போதுமே சொல்லும் விஷயம் இது. அது நீண்ட கால வரலாற்றுப் பகையாக இருந்தாலும் கூட ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் ஆண்கள் அத்தனை விரோதத்தையும் ஒட்டுமொத்தமாக சட்டென்று உதறி விட்டு இணைந்து விடுவார்கள். ஆனால் பல வருட நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் இரு பெண்களுக்கு இடையில் ஒரு மெல்லிய கோட்டு பகைமை புகைந்து கொண்டே இருக்கும். என்னுடைய அவதானிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால் நான் கவனித்த பல சம்பவங்களில் இது உறுதியாகியிருக்கிறது.

அபிராமிக்கும் மீராவிற்கும் இடையில் நடப்பது இதுதான் என்று தோன்றுகிறது. சாக்ஷி இதற்கு நன்றாக ஒத்து ஊதுகிறார். இரண்டாவது சீஸனில் ‘யாஷிகாவும் ஐஸ்வர்யாவும்’ ஒன்றாகச் சுற்றியதைப் போலவே இந்த ஜோடி ‘லா.லா.லா.’ என்று அலைகிறது. இவர்கள் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் எப்படியோ மோப்பம் பிடித்து விடும் ஷெரீன் பின்னாலேயே ஓடி வந்து இணைந்து கொள்கிறார். தன்னைப் பற்றி இவர்கள் ஏதும் வம்பு பேசி விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியோ என்னமோ. (இது தொடர்பாக ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்).

மீராவிடம் தாங்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதைப் பற்றி அபிராமியும் சாக்ஷியும் பிறகு வருந்தினார்கள். உண்மையான குற்றவுணர்ச்சியா அல்லது பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்து நாமினேஷனில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியா என்று தெரியவில்லை. சேரனின் உபதேசமும் அவர்களுக்கு உறைத்திருக்கலாம்.

**

பார்வதியை உருகி உருகி காதலித்த தேவதாஸ் கூட அவளை அதிகாலையில் சென்று பார்த்திருந்தால் விஸ்கி பாட்டிலைத் தூக்கிப் போட்டு நாயைத் துரத்தி விட்டு விட்டு தன் வேலையைப் பார்க்க போயிருப்பான் போல. அந்தளவிற்கு ஒப்பனையில்லாத அம்மணிகளின் முகங்களை காணச் சகிக்கவில்லை. அதிலும் அபிராமியின் அண்மைக் கோணங்கள் கலவரத்தை ஏற்படுத்துகின்றன.

இன்றைய எபிஸோட் பெரும்பான்மையையும் அபிராமி அண்ட் கோவே ஆக்ரமித்துக் கொண்டது. லாஸ்லியா உள்ளிட்ட பிறர் இந்த வெளிச்சத்தின் முன்னால் காணாமல் போனார்கள். புதிதாக வந்த மீராவை உடனே கணிக்க முடியாதுதான். ஆனால் அம்மணி சண்டை போடுவதில் மற்றவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்று தெரிகிறது. ‘எனக்கும் நேரம் வரும். அப்ப வெச்சு செய்றேன்’ என்று நகைச்சுவைப் பூச்சில் சவால் விட்டிருக்கிறார். எனில் உத்தரவாதமாக குடுமிப்பிடி சண்டைகள் உண்டு. பார்ப்போம்.


suresh kannan

Monday, June 24, 2019

பிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடைஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான் வந்துட்டிருக்கு' என்று 'பிக் பாஸ்' விளையாட்டு பற்றி அறிந்த சொற்பமான நபர்கள், அது தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். 'பிக் பாஸா, அப்படின்னா என்ன?' என்று அப்போது அப்பாவித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட, அதன் வருகைக்குப் பிறகு அதைப் பற்றி தினமும்  ஓயாமல் விவாதிக்கும் அளவிற்கு  அந்த விளையாட்டு இன்று தமிழகத்தின்  மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகி  விட்டது.

ஆம், ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த டைனோசர்  கம்பீரமாக ஆக்ரமித்து  சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல்வேறு விதமான உரையாடல்கள், அலசல்கள், ஆவேசங்கள், உணர்ச்சிகள் ஓயாமல் சமூக வலைத்தளங்களில் பெருகிக் கொண்டிருக்கின்றன. முன்பு இந்தியில் பிரம்மாண்டமாக  வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய மொழிகளில் நுழைந்து, கன்னடத்தில் வெற்றி பெற்று, சமீபத்தில் தமிழ், தெலுங்கு என வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

'Voyeurism எனும் மனிதனின் சிறுமைக் குணங்களில் ஒன்றை பயன்படுத்திக் கொண்டு வணிக ஆதாயத்தை அடையும்  நிகழ்ச்சியிது, கலாசார நசிவை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது என்பது போன்ற, விதம் விதமான எதிர்விமர்சனங்கள் சமூக ஆர்வலர்கள், கலாசாரக் காவலர்கள் போன்றவர்களிடமிருந்து ஒருபுறம் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு சமூகத்தின் கலாசார அழிவிற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க, இந்த நிகழ்ச்சியினால் மட்டுமா அது அழிந்து விடப் போகிறது?, இதுவொரு வணிக நோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் சிக்கலான சூழலில் மனித மனங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன, எதிர்வினையாற்றுகின்றன என்கிற மனித நடத்தையைப் பற்றி ஆய்வாகவும், பார்வையாளர்களின் சுயபரிசீலனைக்கான தூண்டுதலாகவும் எடுத்துக் கொள்ள முடியும்' என்று இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் சில சதவீதம் கருதுகிறார்கள்.

இவைகள் ஏதுமின்றி, ஒரு வழக்கமான ரியாலிட்டி ஷோவைப் போலவே இதையும் அந்தக் கணத்தில் மிட்டாய் போல் சுவைத்து மறக்கும் சதவீதமும் ஒருபுறம் பெரும்பான்மையாக இயங்குகிறது.

சமகால தமிழ் சூழலில் அதிகமும் கவனிக்கப்படுகிற நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் அதிகமாக விவாதிக்கப்படும் பேசு பொருளாகவும் மாறி விட்ட 'பிக் பாஸின்' சாதக, பாதகங்களைப் பற்றி, இந்த விளையாட்டின் அடிப்படைத்தன்மைகளைப் பற்றிய என்னளவிலான கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பதிவு செய்ய முயல்கிறேன்.


***


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பல்வேறு விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரிக்கும்  நிறுவனமான 'Endemol', வடிவமைத்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'Bigg Brother'. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய '1984' என்கிற நாவலின் சாரமே, இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது என்கிறார்கள். கடுமையான கண்காணிப்பு சமூகத்திற்குள் வாழும் குடிமக்கள், எவ்வாறு மனஉளைச்சலும் இறுக்கமும் நிறைந்த இயந்திரமாக மாறுகிறார்கள் என்பதை அரசியல் பின்னணியுடன் நுட்பமாக விளக்கும் நாவல் அது.

இந்த நிகழ்ச்சிக்கென்று சில அடிப்படையான, கறாரான விதிகளும் நிபந்தனைகளும் உண்டு. பல்வேறு காலக்கட்டங்களில் இதன் வடிவமைப்பு மெல்ல மெல்ல மாறிக் கொண்டே வந்திருந்தாலும் அடிப்படை ஒன்றுதான்.

சகல அடிப்படையான வசதிகளும் உள்ள ஒரு வீீட்டில், வெவ்வேறு துறையைச் சேர்ந்த 14 பிரபலங்கள், நூறு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்கிற கட்டாயத்துடன் உள்ளே நுழைவார்கள். அவர்களை 24 மணி நேரமும்  பல காமிராக்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். தொலைபேசி, இணையம், பத்திரிகை போன்ற வசதிகள் இருக்காது. வெளியுலகத்தைப் பற்றிய எவ்வித தகவலையும் அவர்கள் அறிய முடியாது. தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்ள வேண்டும். இயந்திரக் குரல்களின் கட்டளைகளுக்கு அவர்கள் அடிபணிந்தாக வேண்டும்.

அகம் மற்றும் புறம் சார்ந்த நெருக்கடிகளை, அகங்கார உரசல்களை, கருத்து வேறுபாடுகளைத் தாண்டி எவர் அதிக நாட்கள் தாக்குப் பிடித்து இறுதி வரை அந்த வீட்டிற்குள் நீடிக்கிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கணிசமான பணம் பரிசாக கிடைக்கும்.

ஒரு பிரபலமான நபர், இந்த நிகழ்வுகளின் தொகுப்பாளராகவும் வழிகாட்டியாகவும் இருப்பார். 'யார் வெளியேற்றப் பட வேண்டும்' என்று விளையாட்டின் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் பரஸ்பரம் பரிந்துரை செய்யலாம். இது தவிர பார்வையாளர்கள் அளிக்கும் வாக்கு, போட்டியாளர்களின் இருப்பை நிர்ணயிக்கும் காரணங்களில் ஒன்றாக இருக்கும்.

உலகமெங்கிலும், நாற்பதிற்கும் மேலான நாடுகளில் பரவலான வெற்றியைப் பெற்ற இந்த ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் 'Bigg Boss' என்கிற அடையாளத்துடன் 2007-ல் நுழைந்தது. இந்தியில் இதுவரை பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கின்றன. அமிதாப் பச்சன், சல்மான் கான் முதற்கொண்டு பல கோலிவுட் பிரபலங்கள், இந்த நிழச்சியின் தொகுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். கன்னடத்தில் நடிகர் சுதீப் வழிநடத்தினார். இப்போது இந்த நிகழ்ச்சி தமிழிலும் நுழைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருக்கிறார்.


***

இதர மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யமாக வம்பு பேசுவது, அவற்றை ஆவலுடன் கவனிப்பது, பிறருடைய அந்தரங்கமான தருணங்களை, விஷயங்களை எட்டிப் பார்க்க விருப்பம் காட்டுவது போன்றவை மனித குணத்தின் மிக ஆதாரமான அம்சங்களில் ஒன்று. இது எல்லை தாண்டிப் போகிற போது வக்கிரத்தன்மையாகிறது. கற்காலத்திலிருந்தே இருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் குணாதிசயம் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.

''அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட / மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்' என்கிறது திருக்குறள். (கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர். -மு.வரதராசன் உரை). புறம் பேசுதலின் தொன்மைக்கும், அது கீழ்மைகளில் ஒன்றாக கருதப்பட்டதற்கும் உதாரணமாக இந்தக் குறளைக் கொள்ளலாம்.

கூட்டுக்குடும்ப முறை பெரிதும் சிதறாதிருந்த காலக்கட்டங்களில் மனிதர்கள் வம்பு பேசுவதற்கு போதுமான வெளிகளும் காரணங்களும் இருந்தன. ஒவ்வோரு புது மருமகளும் 'புகுந்த' வீட்டிற்குள்' நுழையும் போது, அந்நியமான சூழல், மனிதர்கள் என்று பிக் பாஸ் விளையாட்டின் அதே உணர்வுகளை, உளைச்சல்களை உணர்வார். மிக அற்பமான காரணங்கள் கூட வம்புகளுக்கு காரணமாக இருந்திருக்கும். பேசிப் பேசி மாய்வார்கள். ஒரு தரப்பிற்கு மனஉளைச்சல்களை ஏற்படுத்தும் இந்த வம்புகள், இன்னொரு தரப்பிற்கு மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் முரணான தன்மையையும் கொண்டிருக்கும்.

கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடும்பங்கள் பெருகிய பிறகு வம்பு பேசும் பொதுவெளிகள் குறையத் துவங்கின. மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் கலாச்சாரம் பெருகியது. குறிப்பாக பெருநகரங்களில், பக்கத்து வீடுகளில் உள்ளவர்களைப் பற்றிய தகவல் கூட அறியாத அல்லது அறிந்து கொள்ள விரும்பாத போக்கு வளர்ந்தது. பெண்களும் பணியிடங்களுக்குச் செல்லும் போக்கு வளர்ந்ததால் வம்பு பேசுவதற்கான நேரங்கள் குறைந்தன. பரபரப்பான வாழ்வியல் தன்மை, இது சார்ந்த விஷயங்களுக்கான போதுமான நேரத்தை அனுமதிக்கவில்லை. அலுவலக கூடங்கள் வம்பு பேசுவதற்கான சாத்தியத்தை அளித்தாலும் அவையும் போதுமானதாக அமையவில்லை.

இந்த வெற்றிடத்தை தொலைக்காட்சி தொடர்கள் மிக வெற்றிகரமாக கைப்பற்றின. ஆண்களை விடவும் பெண்களே அதிகம் வம்பு பேசுவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கான உளவியல் காரணங்களும் இருக்கலாம். நிறைவேறாத விருப்பங்கள், அவை சார்ந்த ஏக்கங்களை அவர்கள் வேறு சில ஆசுவாசங்களின் மூலம்தான் கடக்க முடிவது ஒரு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சி தொடர்களின் வெற்றிக்கு பெண்கள் ஆதாரமாக இருக்கிறார்கள். எனவே அவர்களைக் குறிவைத்தே பெரும்பாலான தொடர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

பெண் பாத்திரங்களை பிரதானமாகக் கொண்டு பெண்மையப் படைப்புகளாக இவை இருந்தாலும் பெரும்பாலும் அசட்டுக் களஞ்சியமாகவே உருவாகின்றன. இவைகளில் பெண்கள் மிதமிஞ்சிய அதிகாரம் உள்ளவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆண்களை அடிமைப்படுத்துவது, அடிப்பது, போன்ற காட்சிகள் நிறைந்த மிகையுணர்ச்சியுடன் நாடகங்களே அதிகம். அன்றாட வாழ்வில் தங்களின் அதிகாரத்தை பெரிதும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள  பெண்களுக்கு இந்த தொடர்கள் மிகுந்த மனஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. ஆண்களை பழிவாங்குவதுதான் பெண்ணியச் செயற்பாடு என்கிற அரைவேக்காட்டுத்தனத்தை இது போன்ற தொடர்கள் ஊக்கப்படுத்துகின்றன.

இந்த வம்பு பேசும்/கவனிக்கும் மனநிலையை வணிகமாக்கும் நவீனமான வடிவம்தான் 'பிக் பாஸ்' போன்ற ரியாலிட்டி ஷோக்கள்.


***

பெண்களையே அதிக பார்வையாளர்களாகக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும் 'பிக் பாஸிற்கும்' இடையே ஒரு பெரிய வித்தியாசம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதுவரை நெடுந்தொடர்களை எரிச்சலாகவும் கிண்டலாகவும் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கணிசமான பார்வையாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்களைப் பற்றி பெண்கள் விவாதித்துக் கொண்டிருந்த அதே ஆர்வத்துடன், ஆண்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான காரணமாக எது இருக்கும்? திரைப்படங்களும் சரி, தொலைக்காட்சி தொடர்களும் சரி, ஒரு கதையாடலாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அதற்கேற்ப நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதால் 'இது செயற்கையானது' என்பது  பார்வையாளர்களின், குறிப்பாக ஆண்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கலாம். மட்டுமல்லாமல் இது போன்ற தொடர்களில் பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதால் ஆண்கள் அது சார்ந்த மனவிலகலோடும் எள்ளலோடும் அவைகளை புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் 'பிக் பாஸ்' விளையாட்டு, மனிதர்களின் 'அசலான சம்பவங்கள்' என்கிற பாவனையுடன் உருவாகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை கூடுகிறது. 'பிளாஸ்டிக்'தனமான மனிதர்கள், சம்பவங்களை விடவும்,பொதுவிடங்களில் நிகழும் உண்மையான வாய்ச்சண்டைகளைப் போல இதன் நிகழ்வுகள் உண்மைத்தனத்துடன் வெளியாகின்றன. அதிலும் இவை பிரபலங்கள் தொடர்பான சண்டை என்பதால் சராசரிகளின் ஆவல் பல மடங்கு கூடுகிறது.

'பிக் பாஸ்' போட்டியாளர்களின் அசைவுகளை காமிராக்கள் 24 மணி நேரமும்  தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது ஒரு மணி நேரத்திற்கானது என்பதால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' தருணங்கள் மட்டுமே  தொகுக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. அந்த தருணங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய வம்புகளாக, அகங்கார மோதல்களாக இருக்கும். இவையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நமக்கு காட்டக்கூடிய வடிவில்தான் இருக்கும்.

உண்மை என்பதே பல பரிமாணங்களைக் கொண்டதாக, எளிதில் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள முடியாத அருவமாக இருக்கும் போது இதில் காட்டப்படும் காட்சிகளை மட்டும் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற கறுப்பு - வெள்ளைத்தனமான முடிவிற்கு பார்வையாளர்கள் வருவது அறியாமையே. சினிமாக்களில் சித்தரிக்கப்படும் நாயகர்களையும் வில்லன்களையும் நிஜமென்று நினைத்துக் கொண்டு முறையே புகழ்வதும், திட்டுவதும் எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தமே இந்த நிகழ்ச்சியையும் அது போன்று அணுகுவது.


***

இந்த நிகழ்ச்சி 'நாடகத்தன்மையுடையது',  'சம்பவங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டு உறுப்பினர்கள்  நடிக்க வைக்கப்படுகிறார்கள்' என்பது போன்ற அபத்தமான அவதானிப்புகளை நிறைய வெளிப்படுகின்றன. எனில் நெடுந்தொடர்களுக்கும் இதற்குமான வித்தியாசம்தான் என்ன?

ஒரு கற்பனையான பரிசோதனையைப் பார்ப்போம். அடைக்கப்பட்ட ஒரு கூண்டிற்குள் சில எலிகளை விடுவோம். அவைகளுக்கு போதுமான உணவு அளிக்காமல் இருப்பது, கோபமூட்டும் வகையில் சீண்டிக் கொண்டே இருப்பது, எரிச்சலூட்டும் வகையில் சிறிய தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பது போன்வற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், அந்தக் கூண்டிலிருந்து தப்பிப்பதையே முதன்மையாக குறிக்கோளாக அவை கொண்டிருக்கும். அது சாத்தியமில்லை என்கிற சூழலில் பிற எலிகளின் மீது கோபம் திரும்பும். ஒன்றையொன்று பிறாண்டிக் கொண்டு, குதறிக் கொண்டிருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக அவை இறந்து போகலாம். அனைத்தும் ஒடுங்கிய அச்சத்தில் ஏறத்தாழ செத்துப் போன நிலையை அடைந்து கொண்டிருக்கலாம்.

'பிக் பாஸ்' விளையாட்டில் நிகழ்வதும் ஏறத்தாழ இதுவே. போட்டியாளர்களுக்கு அடிப்படையான வசதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் குறுகிய வெளி, வெளியேறும் தண்டனை, அது சார்ந்த அச்சம், பதட்டம் உள்ளிட்ட பல காரணங்கள் அவர்களுக்கு மெல்ல மெல்ல உளைச்சலையும் மோதல்களையும் உருவாக்குகிறது. இந்தச் சூழல் மிக கவனமாக திட்டமிட்டு, உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அப்படியான எதிர்வினைகள்தான் உற்பத்தியாகும் என்பது இந்த விளையாட்டை வடிவமைத்தவர்களுக்கு உறுதியாகத் தெரியும்.

சுருக்கமாகச் சொன்னால், மோதல்கள் உருவாவதற்காக கச்சிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வெளி உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. எதிர்பார்த்தபடியே அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள்.

சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் இதில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவது தற்செயலானதல்ல. கவனமாக திட்டமிடப்படுவது. அவர்கள் பெரும்பாலும் பிரபலங்களாக, திரைத்துறையைச் சேர்ந்தவர்களாக, அழகானவர்களாக இருப்பது  பார்வையாளர்களின் சுவாரசியத்தை தக்க வைத்துக் கொள்ளும் உத்தியே. எனவே இவர்களுக்குள்ளான உயர்வு மனப்பான்மை, தாழ்வுமனப்பான்மைக்கான அகங்கார மோதல்கள் நிச்சயம் உருவாகும். முன்கூட்டியே திட்டமிட்ட நாடகங்களாக இவை இருக்க முடியாது. அப்படி இருந்தால் இந்த விளையாட்டின் அடிப்படையான சுவாரசியமே கலைந்து விடும்.

'போட்டியாளர்கள் நடிக்கிறார்கள்' என்று எழுகிற அதிபுத்திசாலித்தனமான புகார்களும் அபத்தமானவையே. இவர்கள் நடிக்கிறார்கள் என்பது உண்மையானால் உலகப் புகழ் பெற்ற நடிகர்களை விடவும் இவர்களே சிறந்த கலைஞர்களாக இருக்க முடியும். ஆனால் இதில் கலந்து கொள்கிறவர்கள் பெரும்பாலும் திரைத்துறையின் புகழில் இருந்து மங்கலாகிக் கொண்டிருக்கிறவர்களே.

ஒரு பாத்திரத்தின் அதியதார்த்தமான அசைவை உருவாக்குவது, நடிகர்களை வெளிப்படுத்த செய்வது எத்தனை சவாலான காரியம் என்பது சினிமா இயக்குநர்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்காக மிகவும் மெனக்கெடுவார்கள். கச்சிதமான உடல்மொழி வரும் வரையில் திரும்பத் திரும்ப பல டேக்குகள் எடுக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.

நடைமுறை உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். நிஜ வாழ்வில், நீங்கள் அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது வேறு எந்தப் பணியிலோ தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீீர்கள் என வைத்துக் கொள்வோம். பின்னாலிருந்து ஒருவர் திடீரென்று உங்களைப் பயமுறுத்துகிறார். அப்போது உங்களின் உடல்மொழியிலும் முகபாவங்களிலும் அது சார்ந்த அதிர்ச்சியும் திடுக்கிடலும் தன்னிச்சையாக ஏற்படும். நீங்கள் அறியாமல் இந்தக் காட்சி பதிவு செய்யப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

இந்த தன்னிச்சையான உடல்மொழியின் வெளிப்பாட்டை, அதே போன்று அச்சு அசலாக உலகத்தின் எத்தனை சிறந்த நடிப்புக் கலைஞனாலும் தந்து விட முடியாது. அவனுடைய ஆழ்மனதில் 'நாம் நடிக்கப் போகிறோம்' என்று எழுகிற உணர்வை அழிக்கவே முடியாது. எத்தனை திறமையான நடிகனாக இருந்தாலும் இது சார்ந்த செயற்கைத்தன்மை சிறிய சதவீதமாவது நிச்சயம் வெளிப்பட்டு விடும். மேற்குறிப்பிட்ட அசலான காட்சியையும், நடிகர் நடித்த காட்சியையும் ஒப்பிட்டால் நுட்பமான கவனிப்பின் மூலம் இரண்டிற்குமான வித்தியாசத்தை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

'பிக் பாஸ்' விளையாட்டில் வெளிப்படும் உடல்மொழிகளும் அசைவுகளும் அசலானவையே. அவை தொகுக்கப்பட்ட விதத்தில் அல்லது விளையாட்டு, போட்டி போன்றவைகளில் வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிட்ட சில விஷயங்கள் இருக்கக்கூடும்.


***

மனிதனின் வம்பு பேசும், கவனிக்கும் அடிப்படையான குணத்தை, மற்றவர்களின் அந்தரங்கங்களை ஒளிந்திருந்து பார்க்கும் வக்கிரத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் ஊக்கப்படுத்துகின்றன, இது சார்ந்த உணர்வுச்சுரண்டலை வணிகமாக்குகின்றன என்கிற புகார்களில் பெரும்பாலும் உண்மையில்லாமல் இல்லை.

கமல்ஹாசன் பற்றிய தனிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வம்புகளாக உருமாறும் போது 'எனது பெட்ரூமில் எட்டிப் பார்க்கும் உரிமை எவருக்கும் கிடையாது' என்று தனிநபரின் சுதந்திரத்தைப் பற்றி பேசிய அவரே, தூங்கும் நேரத்தையும் விடாமல் பதிவு செய்யும் இது போன்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஆனது நகைமுரணா அல்லது காலத்தின் கட்டாயமா என தெரியவில்லை.

நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் போது 'இதுவொரு சமூகப் பரிசோதனை' என்றார் கமல். ஒருவகையில் அது உண்மைதான். தீயவைகளில் இருந்து தன்னிச்சையாக உருவாகும் நன்மை போல, இந்த நிகழ்ச்சி வணிக நோக்குடையது என்றாலும் கூட இதிலும் சில நன்மைகள் இருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வீட்டின் உறுப்பினர்களின் அகங்கார மோதல்கள், சண்டைகள், கோரமான முகபாவங்கள், புண்படுத்தும் குரூரங்கள், புண்படும் பரிதாபங்கள் போன்றவற்றைக் காணும் போது, நம்மை 'வெளியே' நிறுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி விமர்சிக்கிறோம். சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் நம்முடைய கீழ்மைகளின் பிம்பங்களே அவை என்பதை உணர முடியும். நம்முடைய அன்றாட வாழ்வில் அது போன்ற சம்பவங்ககள் நிறைய நடக்கின்றன. புண்படுத்துகிறவர்களாகவும், புண்படுகிறவர்களாகவும் நாமே இருக்கிறோம். ஆனால் அவைகளைப் பதிவு செய்யும் காமிராக்கள் இல்லை. எனவே அந்தக் கணங்களில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை நாமே அறிய முடிவதில்லை. அது சார்ந்த ஒரு வாய்ப்பை இந்தக் காணொளிகள் நமக்குத் தருகின்றன.

ஒரு போட்டியாளர் மிக மோசமாக நடந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து பார்வையாளர் திடுக்கிடும் போது அல்லது அவரை கடுமையாக வெறுக்கும் போது, அவரும் அது போன்றே அவருடைய வாழ்வில் பலமுறை நடந்து கொண்டதை மனச்சாட்சி நினைவுப்படுத்துகிறது. அது குறித்து குற்றவுணர்வும் வெட்கமும் அடைய வைக்கிறது. இனியாவது அப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்கிற நல்லுணர்வு தூண்டப்படுகிறது.

இது சார்ந்த சுயபரிசீலனைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சியின் தன்னிச்சையான ஒரு நல்விளைவு எனலாம். இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துதான் நல்லியல்புகளுக்கு திரும்ப வேண்டுமா, அறங்களை, மதிப்பீடுகளை வலியுறுத்தும் நல்ல இலக்கியங்களின் மூலம் அடையலாமே' என்கிற கேள்வி எழக்கூடும். அது அபத்தமான வழியிலாக இருந்தாலும் அறிவுக்கண் திறந்து கொள்ளும் நல்விளைவு எங்கே உருவாகினாலும் அது நல்லதுதானே? போதிமரம் எங்கே, எப்போது எதிர்ப்படும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.


இந்த விளையாட்டின் தமிழ் வடிவத்தில், நடிகை ஓவியாவின் செயற்பாடுகள் பெரும்பான்மையோரைக் கவர்ந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இவருக்கு புகழ் மாலைகள் குவிகின்றன. இவருடன் சண்டை போடுபவர்கள் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள்.

அப்படியென்ன செய்கிறார் ஓவியா? பெரும்பாலும் எவரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே உரையாடுகிறார். சர்ச்சைகள் உருவாகும் சூழலில் இருந்து உடனே விலகுகிறார்.  புண்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். தம்முடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறார். மிக குறிப்பாக தனது ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்கிறார்.

இவரிடமும் குறைகள் இல்லாமல் இல்லை. தமக்கு தரப்பட்ட பணிகளை செய்யாமல் ஒதுங்குவது, கூடி விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுவது போன்ற குறைகள். இவற்றையும் மீறி இவர் பார்வையாளர்களால் கொண்டாடப்படுவதற்கு மற்றவர்களின் அதிகமான கீழ்மைகளே காரணம். ஓவியாவின் நல்லியல்புகள், ஒரு நாகரிக மனிதர் பின்பற்ற வேண்டிய அடிப்படையான சாதாரணத்துவத்தைக் கொண்டிருந்தாலும் பிறரின் மோசமான செயல்களோடு ஒப்பிடப்படும் போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இருளில் ஒளிரும் அகல் விளக்கின் பிரகாசம் போல.

***

'கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட. அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன, தாம் விளையாட' என்பது ஒரு பிரபலமான திரையிசைப்பாடல். ஒருவகையில் இந்த உலகமே 'பிக் பாஸ்' விளையாட்டு மைதானம்தான். மனச்சாட்சி எனும் ஒளிப்பதிவுக்கருவி நம்முடைய கீழ்மைகளை தொடர்ந்து பதிவு செய்து அவசியமான சமயங்களில் நமக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.  நாம்தான் அவற்றை பெரும்பாலும் கவனிப்பதில்லை.

மனிதன் என்பவன் கூடிவாழும் சமூக விலங்கு என்பது ஒருபுறம் உண்மை. இன்னொரு புறம் தனிமையை, அந்தரங்க வெளியை விரும்புபவனாகவும் இருக்கிறான். இரண்டிற்குமான முரணியக்க விளையாட்டே 'பிக் பாஸ்'.

- உயிர்மை - ஆகஸ்ட் 2017-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

 
suresh kannan