Monday, May 17, 2021

Operation Java (2021) - தற்காலிக பணியாளர் என்னும் பரிதாப சமூகம்

 

அறிமுக இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி, சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆபரேஷன் ஜாவா’ என்கிற மலையாளத் திரைப்படம் பரவலான வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது. கேரள காவல் துறையின் சைபர் கிரைமில் தற்காலிக பணியை மேற்கொள்ளும் இரண்டு இளைஞர்களின் வழியாக இந்தத் திரைப்படம் விரிகிறது. பிடெக் படித்துள்ள அந்த இளைஞர்கள் சரியான பணி கிடைக்காமல் சமூக அங்கீகாரத்திற்காக தம்முடைய கணினி அறிவை காவல்துறைக்கு தாரை வார்க்கின்றனர்.

கேரள மாநிலத்தில் 2015 - 2017-ம் ஆண்டுகளின் இடையில் நிகழ்ந்த உண்மையான இணையக் குற்றங்கள், அவை சார்ந்த வழக்கு விசாரணைகளின் வழியாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த துண்டு துண்டு சம்பவங்களை இயக்குநரும் எடிட்டரும் திறமையாக ஒட்ட வைத்திருந்தாலும் இதுவே ஒரு வகையில் இந்தப் படத்தின் சிறுபலவீனமாக தெரிகிறது.

*

1990-ல் Close-Up என்கிற இரானிய திரைப்படம் வெளியானது. இரானிய இயக்குநர் Mohsen Makhmalbaf-ன் பெயரை உபயோகித்து மோசடி செய்தார் ஓர் ஆசாமி. அதைச் செய்தவர் உண்மையில் ஓர் அப்பாவி. சுய அடையாளம் இல்லாத சராசரி நபரான அவருக்கு, பிரபல இயக்குநரின் அடையாளத்தை திருடி இரவல் வாங்குவதுதான் முக்கிய நோக்கம். மற்றபடி அவர் உபத்திரவமல்லாத ஆசாமி. இதை அப்படியே உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையாக மாற்றி படமாகவும் ஆக்கியதில் வெற்றி பெற்றுள்ளார் Abbas Kiarostami.

‘ஆப்பரேஷன் ஜாவா’ திரைப்படத்தின் முதல் அரை மணி நேரம் மேற்குறிப்பிட்ட திரைப்படத்தை நினைவுப்படுத்தும் வகையில் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளால் பரபரப்பாக நகர்கிறது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ திரைப்படமானது வெளியாவதற்கு முந்தைய தினமே இணையத்தில் கசிந்தது. இந்த வழக்கு விசாரணையை கேரள சைபர் கிரைம் பிரிவு எவ்வாறு கண்டுபிடிக்கிறது என்பதை இந்தப் பகுதியில் சுவாரசியமாக விவரித்துள்ளனர். புனைவும் உண்மையும் இணைந்து கதகளி ஆடும் அட்டகாசமான பகுதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது போல் கேரளத்தில் நிகழும் வேறு சில இணையக் குற்றங்களின் விசாரணைக்காட்சிகளும் பகுதி பகுதியாக வருகின்றன. நன்கு படித்தும் வேலை கிடைக்காத இரு இளைஞர்கள், சைபர் கிரைமிற்கு உதவுகின்றனர். அனைத்து வழக்குகளிலும் தங்களின் அறிவைச் சிறப்பாக பயன்படுத்தி விடையக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றும் அவர்கள், இறுதியில் சக்கையாகப் பயன்படுத்தப்பட்ட கறிவேப்பிலை போல வெளியேற்றப்படுகிறார்கள்.

நம் சமூக அமைப்பும் அரசு இயந்திரங்களும் தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிகிறது என்கிற சமகால யதார்த்தத்தை இந்தத் திரைப்படம் சிறப்பாக சித்தரித்திருக்கிறது.

இன்றைய தேதியில் அரசு வேலை என்பது எந்தவொரு சராசரி இளைஞனுக்கும் அடையவே முடியாத கனவு. நிரந்தர ஊழியர்களை அமர்த்துவது என்பது பெரும் நிதிச்சுமை என்பதால் அரசும் சரி, தனியார் அலுவலகங்களும் சரி, ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களையே பெரும்பாலும் நியமிக்கின்றனர். எனவே என்னதான் திறமையாக உழைத்தாலும் பணி நிரந்தரமின்மை என்னும் கத்தி அவர்களின் தலைக்கு மேல் நின்றபடியே இருக்கிறது. இதுவே அவர்களுக்கு பெரும் மனஉளைச்சலைத் தருகிறது. சமூக பாதுகாப்பில்லாத இந்த உணர்வை படம் மிக கச்சிதமாக இறுதியில் வெளிப்படுத்தியிருக்கிறது.

*

ஆன்டனி ஜார்ஜ்,
வினயதாசன் என்னும் இரு இளைஞர்களாக பாலு வர்கீஸூம் லக்மனும் சிறப்பாக நடித்துள்ளனர். தற்காலிக பணிதான் என்றாலும் காவல்துறையின் ஓர் அங்கமாக அவர்கள் மாறும் போது ஏற்படுகிற மனமகிழ்ச்சியும் ஆசுவாசமும் சம்பந்தப்பட்ட காட்சியில் சிறப்பாக பதிவாகியுள்ளது. போலவே இறுதியில் அவர்கள் பணியை இழந்து வெளியேறும் காட்சியும் உருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர்கள் ஈகோ காரணமாக அவமதிக்கும், புண்படுத்தும் யதார்த்தமான காட்சிகளும் உள்ளன. இவை ஒவ்வொரு தற்காலிக பணியாளரும் உத்தரவாதமாக எதிர்கொண்டிருக்கும் அனுபவமே.

காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் ஒவ்வொருவருமே தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக தந்திருக்கிறார்கள். மனம் உடையும் இளைஞர்களை அரவணைத்துச் செல்லும் அதிகாரியாக பினு பப்பு அற்புதமாக நடித்துள்ளார். பணி நிரந்தரமின்மை காரணமாக தன் காதலை இழந்து தவிக்கும் ஆன்டனிக்கு தன் சுயவாழ்க்கையைச் சொல்லி அவர் ஆற்றுப்படுத்தும் காட்சி அருமையானது.

தன் மனைவி தொடர்பான போலி ஆபாச வீடியோ இணையத்தில் வெளியான விஷயம், தன் குடும்பத்தில் எத்தனை பெரிய பிணக்குகளை, கசப்புகளை  ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காவல் அதிகாரியிடம் வெடிக்கும் சிறு காட்சியில் விநாயகன் அசத்தியுள்ளார்.

நம் சமூகத்தில் இணையம் தொடர்பாக எத்தனை குற்றங்கள் சமீபத்தில் பெருகியுள்ளன என்பதை தீவிரமும் நகைச்சுவையும் கலந்த காட்சிகளாக சொல்லிச் செல்கின்றனர். ஒரு வங்கியின் அதிகாரியே இந்த மோசடிக்கு பலியாவது அவல நகைச்சுவை.

*

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களை குற்றவாளிகளாகவும் மலினமாகவும் சித்தரிக்கும் போக்கு குறித்த புகார்களும் விமர்சனங்களும் நெடுங்காலமாக உள்ளன. இந்தத் திரைப்படமும் அந்தப் போக்கை பின்பற்றியுள்ளது. ஜமாத்ரா போல இணையக் குற்றங்கள் நிகழும் ஒரு முக்கியமான மையமாக தமிழ்நாட்டின் ஒரு பகுதியை சித்தரித்துள்ளனர். 

 


இன்னொரு சுவாரசியமான விஷயமும் உண்டு. இந்த இளைஞர்கள் பயன்படுத்தும் ஒரு லேப்டாப்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் உள்ளது. அது அரசால் பள்ளி மாணவர்களுக்கு தரப்பட்ட மடிக்கணினி. அது கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு கேரளா வரைக்கும் பரவியிருக்கிறது. இவ்வாறாக தமிழகத்தின் புகழ், மலையாளத் திரைப்படம் வரை எட்டியிருக்கிறது.

*

ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒலிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங் என்று பல தொழில்நுட்ப விஷயங்கள் இந்தப் படத்திற்கு பலமாக நிற்கின்றன. வழக்குகளின் விசாரணைக் காட்சிகளும் அது சார்ந்த சங்கிலிகளும் கண்ணிகளும் சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் இயக்குநரான தருண் மூர்த்தி அடிப்படையில் கணினி தொடர்பான படிப்பை முடித்தவர். ஆனால் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தால் குறும்படம், விளம்பரப்படங்களை இயக்கி அதன் மூலம் ஓர் அடையாளத்தைப் பெற்று பிறகு திரைப்பட இயக்குநராக முன்னேறி வெற்றி பெற்றுள்ளார். இயக்குநராக மாறுவதற்கு இவர் பட்டிருக்கும் கஷ்டங்கள், அவமதிப்புகள், தடைகள் போன்றவை, அந்த இளைஞர்களின் கஷ்டங்களில் உண்மைகளாக கலந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மலையாளத்தின் புதிய அலை இயக்குநர்கள் தங்களின் வித்தியாசமான கதை, திரைக்கதைகளின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறார்கள். தருண் மூர்த்தியும் ‘ஆபரேஷன் ஜாவா’வின் மூலம் அந்த வரிசையில் இணைகிறார். மலையாளத்தின் புதிய அலை திரைப்படங்களில் இதுவும் முக்கியமானதொன்றாக அமையும்.


 

suresh kannan

No comments: