Monday, May 03, 2021

இபிஎஸ் என்னும் கப்பல் கேப்டன்

 

எனக்கு எடப்பாடி பழனிச்சாமியை நினைத்தால் ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அமைதிப்படை ‘அமாவாசை’யின் கச்சிதமான பிம்பம் என்பது அவருக்குத்தான் பொருந்தும்.

“உங்களுக்குப் பிறகு அதிமுகவின் நிலைமை என்ன?” என்று எம்.ஜி.ஆரிடம் அவரின் இறுதிக் காலத்தில் கேட்கப்பட்ட போது அது குறித்து அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘ப்ச்’ என்று உதட்டைப் பிதுக்கி கண் சிமிட்டியிருக்கிறார். தனக்குப் பிறகு கட்சி உடைந்து அழிந்து போகும் என்றுதான் அவர் உள்ளுக்குள் கருதியிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. தனக்குப் பிறகான அரசியல் வாரிசு யார் என்பதை அவர் துல்லியமாக அடையாளம் காட்டவில்லை.

எனவேதான் எம்.ஜி.ஆரின் மரணத்தின் போது ஜானகி அணி  vs ஜெ அணி என்னும் தற்காலிக குடுமிப்பிடிச்சண்டை நடந்தது. ஆனால் ஜெவின் பலத்தை உணர்ந்து கொண்ட ஜானகி விரைவிலேயே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு ஓய்ந்து விட்டார். தன் கவர்ச்சியாலும் போராட்டக்குணத்தாலும் அதிமுகவின் தலைமையை நோக்கி வெற்றிகரமாக நடந்தார் ஜெ. ஆனால் அந்தப் பயணம் எளிதானதாக இல்லை. ஆர்.எம்.வீரப்பன் போன்ற கடும் போட்டிகளையும் எதிரிகளையும் தாண்ட வேண்டியிருந்தது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுக என்னவாகும் என்கிற கேள்வி எழுந்த போது அதற்கு தக்க பதிலாக நின்றார் ஜெ. எம்.ஜி.ஆர் என்னும் பெரிய சக்தியை எதிர்த்து நிற்பதிலேயே நெடுங்காலத்திற்கு தன் ஆற்றலை பெரிதும் செலவிட்ட கருணாநிதிக்கு அதன் பிறகும் ஓய்வில்லை. மறுபடியும் ஜெவுடன் அவர் தன் அரசியல் போரைத் தொடர வேண்டியதாக இருந்தது. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்குப் பின்னரான நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார் ஜெ. 

*

மறுபடியும் அதேதான். ஜெவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக என்னவாகும் என்கிற கேள்வியும் சந்தேகமும் எழுந்தது. சசிகலா – தினகரன் கும்பல் கைப்பற்றுமா? அல்லது உட்கட்சிப்பூசலில் அழிந்து உடையுமா என்கிற ஐயங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கூட்டத்தில் நின்றிருந்தவனுக்கு யானை மாலையிட்டு தேர்ந்தெடுத்த அதிர்ஷ்டத்தைப் போல அதிகாரத்தின் உச்சிக்கு வந்தார் பழனிச்சாமி. ‘இதெல்லாம் எங்கே நீடிக்கப்போவுது.. அவ்ளதான்” என்று அதிமுகவில் இருந்தவர்களே அவநம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி கட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றினார்.

அதிமுகவின் வீழ்ச்சியை திமுகவே கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில் அதைப் பொய்யாக்கினார். ஒரு பக்கம் சசிகலா – தினகரன், இன்னொரு பக்கம் ஓபிஎஸ், எல்லாப் பக்கமும் உட்கட்சிப்பூசல், தமிழகத்தில் காலூன்றுவதற்காக பாஜக செய்யும் இடையூறுகள், ஸ்டாலினின் போராட்டங்கள் போன்ற பல விஷயங்களை ராஜதந்திரங்களுடன் எதிர்கொண்டார். குறிப்பாக சசிகலாவை அரசியலில் இருந்து ஓரங்கட்டியதை மாஸ்டர் ஸ்ட்ரோக் எனலாம்.

இதில் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். தன்னுடைய ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் தன்னை அவர் பெரிதும் முன்னிறுத்திக் கொள்ளவேயில்லை. ‘அம்மாவின் ஆசிப்படி’ என்று ஜெவின் புகைப்படத்தையே பெரிதாக எல்லா இடத்திலும் முன்னிறுத்தினார். ஒரு கட்டத்தில் ஜெவின் புகைப்படம் சிறிதாக குறைந்து கொண்டு வந்தாலும் கூட ஜெவின் பிம்பத்தைக் கொண்டே மக்களின் எதிர்ப்புணர்ச்சி, அதிருப்தி போன்றவற்றை சமாளித்தார். தான் முதலமைச்சராக இருந்தாலும் ஜெவின் ஆட்சிதான் தொடர்கிறது என்பதைப் போன்ற பிம்பத்தை வெற்றிகரமாக ஏற்படுததினார். இதுவொரு அபாரமான உளவியல் தந்திரம்.

தமிழக மக்களுக்கே ஒரு கட்டத்தில் ‘பரவால்லேயே. ஆளு தேவலாம்டே’ என்று தோன்றியிருக்கும். அந்த அளவிற்கு களத்தில் இறங்கி வேலை செய்தார். 

*

என்றாலும் மக்களுக்கு ஏதோவொரு வகையில் பழனிச்சாமி அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. இது நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அல்ல என்பதும் குறிப்பாக மத்திய அரசுடன் பல்வேறு வழிகளில் இணங்கிச் சென்று மாநில உரிமைகளை தாரை வார்த்தது என்பதும் என.. பல அதிருப்திகள் பெருகின.

இந்தச் சூழலில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மொத்தமாக மண்ணைக் கவ்வி விடக்கூடும் என்றிருந்த நிலையை பெரும்பாலும் தடுத்து நிறுத்தியது பழனிச்சாமியின் உழைப்பும் முன்கூட்டிய திட்டங்களும்தான். அதுதான் அதிமுக கூட்டணிக்கு 76 இடங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஏறத்தாழ ஸ்டாலினுக்கு நிகரான உழைப்பை அவர் தந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ஸ்டாலினுக்காவது பிரபல அரசியல் தலைவரின் வாரிசு என்கிற பின்னணி இருக்கிறது. ஆனால்  அது கூட இல்லாமல் ஓர் அரசியல் கட்சியை காப்பாற்றியதை பழனிச்சாமியின் ராஜதந்திர வெற்றி என்றே சொல்லலாம்.

ஏறத்தாழ மூழ்கிப் போகவிருந்த அதிமுக என்னும் கப்பலை காப்பாற்றியது பழனிச்சாமி என்னும் திறமையான கேப்டன்தான். இதற்குள் பல்வேறு விதமான அரசியல் கணக்குகள், சுயஆதாயங்கள், சாதி அரசியல்கள், மத்திய அரசை நோக்கிய கூழைக்கும்பிடுகள் என பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். ஏறத்தாழ இவையல்லாமல் எந்தவொரு அரசியல் கட்சியும் இயங்க முடியாது என்பதுதான் உண்மை.  

ஆனால் எம்.ஜி.ஆர் போலவோ ஜெவைப் போலவே எந்தவொரு கவர்ச்சிகரமான பின்னணியும் இல்லாமல் இதைச் சாதித்த பழனிச்சாமியை ஒருவகையில் பாராட்டியே தீர வேண்டும். வருங்காலத்தில் அவர் ஓர் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக நின்று மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் பேசினால் மக்களின் ஆதரவு இன்னமும் கூடும் என்று தோன்றுகிறது.

 

suresh kannan

2 comments:

நிரோஷ் சிவா said...

மிக சரியான கணிப்புகள். மிக றாஜதந்திறமான எதிர்கட்சி ஒன்றை வெற்றி பெற்றிருக்கும் ஆளும் கட்சி சமாளிக்க வேன்டி வரும்.

Kumar Sundaram said...

nichayam unmai,