Friday, December 31, 2010

தமிழ் சினிமா - 2010

2010-ல் வெளிவந்திருக்கும்  தமிழ் சினிமாவிலிருந்து தேர்ந்தெடுத்த சில முக்கியமான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை காணும் போது சற்று நம்பிக்கை தோன்றினாலும் தமிழ்த்திரையின் மீது ஆண்டாண்டு காலமாக உள்ள அவநம்பிக்கையும் ஆதங்கமும் அப்படியே மாறாதிருக்கும் நிலை நீடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அயாச்சியே ஏற்படுகிறது.

திரைப்பட உருவாக்கங்களின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாம் இடத்திலிருக்கிற நாடு இந்தியா. அங்குள்ள மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. ஆனால் நாம் உற்பத்தி செய்து கொண்டிருப்பது பெரும்பாலும் வணிகநோக்கு குப்பைகளையே. தொழில்நுட்பம் என்கிற அழகான பேக்கிங்கில் இவ்வாறான குப்பைகளே பல்வேறு வணிக உத்திகளின் மூலம் செயற்கையான பரபரப்பும் கவர்ச்சியுமான சூழல் உருவாக்கப்பட்டு அவை பார்வையாளனிடம் திணிக்கப்படுகின்றன. அதற்கு இந்த வருடத்தின் மிகச் சிறந்த உதாரணம். எந்திரன். எந்திரனுக்கு நிகரான பரபரப்பை சென்ற வருடங்களில் ஏற்படுத்தியது இதே நடிகரின் 'பாபா'. ஆனால் அதில் முன்வைக்கப்பட்ட போலித்தனமான ஆன்மீகம் காரணமாகவும் நம்பகத்தன்மையின்மை மற்றும் சுவாரசியமின்மை காரணமாகவும் 'பாபா' படுதோல்வியைத் தழுவியது. ஆனால் பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மிகத் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கும் ஷங்கர், அதற்கு வேண்டிய எல்லாவித பிரம்மாண்ட மசாலாக்களையும் வண்ணங்களையும் தடவி தனது பொருளை பெரும் வணிக சாகசத்துடன் விற்று வெற்றியடைந்தார்.

மறுபடியும் மறுபடியும் இதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.  இந்த வணிக மாய்மால சூழலிலிருந்து சற்றே சற்று விலகி நின்று உருவாக்கப்படும் திரைப்படங்களைக் கூட நாம் 'உலக சினிமா' என்கிற பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ்கிறோம். உலக சினிமா என்னும் விஷயத்தை நாம் இன்னும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் டிவிடிகளிலும் பார்க்கும் நிலையில்தான் இருக்கிறோமே ஒழிய, நம் பிரதேசத்தின் மொழியில் உலகத்தரமுள்ள படைப்பு என்பது இன்னும் கனவாகவே உள்ளது. அதை நோக்கி அங்குலம் அங்குலமாக முன்னேறும் படைப்புகளைக் கண்டு மகிழும் வேளையிலேயே அதை சீர்குலைக்கும் விதமாக 'எந்திரன்' போன்ற ஏதாவதொரு வணிக சுனாமி அந்த முயற்சியை விழுங்கி விடுகிறது.

தமிழில் சர்வதேச தரத்தில் சினிமா எடுக்கும் நம்பிக்கையை அவர்களது உருவாக்கங்களின் மூலம் நமக்கு தந்திருப்பவர்களாக இருவரை மாத்திரமே இதற்கு முன்னால் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.  பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன்.(ருத்ரைய்யா 'அவள் அப்படித்தான்' என்னும் ஒரே அற்புதத்துடன் ஓய்ந்து விட்டார்)  'பருத்தி வீரன்' காரணமாக அந்த வரிசையில் அமீரையும் குறி்ப்பிட்டிருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் அவரோ 'யோகி' போன்ற குப்பை நகல்களில் ஈடுபட்டு அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து விட்டார்.

இப்போது அந்த நம்பிக்கையை நான் மிஷ்கின் மீது வைக்க விரும்புகிறேன். வெளிப்படையான காரணம், நந்தலாலா. ஜப்பானியப்படத்தின் நகல் என்கிற குற்றச்சாட்டும் வணிகசினிமாக்களின் சில கூறுகளை தன்னுள் வைத்திருக்கிற திரைப்படமாக 'நந்தலாலா' இருந்தாலும் சமகால சூழலில் அது ஒரு முக்கியமான முயற்சியாக எனக்குப் படுகிறது. அசட்டுத் திமிரான பேச்சைக் குறைத்துக் கொண்டு தனது சிறந்த உருவாக்கங்களின் மூலம் பார்வையாளர்களின் மூலம் மிஷ்கின் உரையாட முடிவு செய்வாராயின், தமிழில் மிக முக்கியமானதொரு இயக்குநராக அவர் பரிணமிக்க வாய்ப்புண்டு.


சரி. இப்போது 2010-ல் வெளிவந்த சில குறிப்பிடத்தகுந்த படங்களைப் பார்ப்போம். இவை என்னுடைய தனிப்பட்ட ரசனை சார்ந்து உருவாக்கப்பட்டவை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

நந்தலாலாவைத் தவிர குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு திரைப்படம், செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்'. படத்தின் முற்பகுதி சாதாரண சினிமாத்தனங்களைக் கொண்டிருந்தாலும் பிற்பகுதி புராதனத்தையும் சமகாலத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும்விதமான திரைக்கதையைக் கொண்டிருந்தது பாராட்டத்தக்கது. இன்னொன்று அங்காடித் தெரு. தமிழ்ச்சினிமாவின் தீராத கச்சாப்பொருளான காதலில் இருந்து இதனால் விலகி நிற்கமுடியவில்லையென்றாலும் பளபளப்பான கட்டிடங்களில் விரும்புகிற பொருளை முழுக்கவனத்துடன் தேடுகிற நாம், அதைத் தேடித்தருகிற பணியாளர்களை அந்த நொடியிலேயே மறந்து விடுவோம். இதுபோன்ற விளிம்புநிலை பணியாளர்களின் துயரங்களை முன்வைத்த வகையில் 'அங்காடித் தெரு' குறிப்பிடத்தகுந்த உருவாக்கம். பிரபு சாலமனின் 'மைனா'வும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் 'வித்தியாசமான படம்' என்கிற போர்வையில் அதுவும் வணிகச் சினிமாவிற்கான கூறுகளைக் கொண்டிருந்தது. இயக்குநர் படத்தின் வியாபாரத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை உருவாக்கும் சுதந்திரம் தரப்பட்டிருந்தால் இதை இன்னும் அதிக சிறப்புடன் உருவாக்கியிருப்பார் என நம்புகிறேன்.

சின்னத்திரையில் மிரட்டிய 'நாகா'வின் ஆனந்தபுரத்து வீடு கவனிக்கப்படாமலேயே போனதில் தனிப்பட்ட வகையில் எனக்கு வருத்தமே. ஆங்கிலத் திரைப்படங்களில் 'Road Films" என்கிற வகையில் உருவாக்கப்படுவது போல தமிழிலும் 'பையா' ' நந்தலாலா' 'வ க்வார்ட்டர் கட்டிங்' போன்றவை உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி.

Spoof வகை திரைப்படங்களில் சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் 'இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கத்தை' விட 'தமிழ்படமே' எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் அது ஒரு முழுமையான கதையோட்டத்தோடு அல்லாமல் துண்டு துண்டு காடசிகளாக கிண்டலடிப்பதை மாத்திரமே பிரதானமாக எடுத்துக் கொண்டு பெரிய பட்ஜெட் 'லொள்ளு சபா' போல் அமைந்து விட்டது அதன் பலவீனம். American pie தொடர் படங்களைப் போன்று ஒருபால்உறவு பாத்திரங்களையும் நகைச்சுவை முலாமுடன் சொல்லிச் சென்ற 'கோவா'வும் எனக்குப் பிடித்திருந்தது.

அதிரடி ஆக்சன் நாயகர்களின் போலித்தனங்களை பார்த்த சலித்த நமக்கு 'களவாணி'யின் இயல்பான சில்லறைத் திருட்டுகளும் யதார்த்தமான காட்சிகளும் என்னைக் கவர்ந்தது. இந்த ரீதியில் 'வம்சமும்' குறிப்பிடத்தகுந்த படைப்பு. இயக்குநர் பாண்டிராஜ் கவனிக்கப்படத் தகுந்த இயக்குநர்.

'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் வணிகரீதியான வெற்றி என்னை ஆச்சரியப்படுத்தியது. எந்த விதமான அடிப்படை கதையுமில்லாமல் வெறுமனே அசட்டுத்தனமான நகைச்சுவையைக் கொண்டே நகர்த்தப்படட இதையே தமிழக மனம் எப்படிவிரும்பியது என்பது ஆச்சரியம். (இத் திரைப்படத்தைப் பற்றி பேயோன் எழுதியிருக்கும் பகடிக் கட்டுரை நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியது).

'மதராச பட்டினம்' அதன் கலை இயக்க உழைப்பிற்காக குறிப்பிடத் தகுந்த படம் என்றாலும் பெரும்பாலும் 'டைட்டானிக்கை' நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்ததாலும் ஆர்யாவின் மந்தமான நடிப்பினாலும் என்னைக் கவரவில்லை. எமி ஜாக்சன் சிறந்த வரவு.

மணிரத்னத்தின் 'ராவணன்' உருவாக்கமும் தொழில்நுட்பமும் கவரும் வகையில் இருந்தாலும் உள்ளடக்கம் பலவீனமாக இருந்ததால் ரசிக்க முடியாமல் போய் விட்டது. கெளதம் வாசுதேவனின் 'விண்ணைத் தாண்டி வருவாயா' எனக்கு மிகவும் பிடித்துப் போனது குறித்து எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது. சினிமாவின் போலித்தனமாக காதல் உணர்வுகளைத் தாண்டி இதில் அசலான உணர்வுகள் சிறிதேனும் வெளிப்பட்டிருப்பதே காரணமாயிருக்கலாம் என நம்புகிறேன். சிம்பு ஒரு இனிய ஆச்சரியம்.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தவாறு சமகால தமிழ் சினிமா சூழலை மாத்திரம் வைத்தே இதன் பலங்களை முன்வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச தரத்தோடு ஒப்பிடும் போது இவை தொலைதூரத்திலேயே நிற்கின்றன என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருபுறம் பொழுதுபோக்குப் படங்களும் வணிக சினிமாக்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்னொரு புறத்தில் ஒரு சிறிய சதவீத அளவிற்காவது 'மாற்றுத் திரைப்படங்கள்' உருவாவாவதும் மக்களின் ரசனை அதற்கேற்றவாறு மாறாதிருப்பதுமே நம் பலவீனம்.

சிறந்த திரைப்படங்கள்

நந்தலாலா
ஆயிரத்தில் ஒருவன்
அங்காடி தெரு

குறிப்பிடத்தகுந்த திரைப்படங்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா
கோவா
தமிழ்படம்
ராவணன்
களவாணி
மதராச பட்டிணம்
வம்சம்
மைனா 

குறிப்பிடத்தகுந்த மறுஉருவாக்க மற்றும் மொழிமாற்றத் திரைப்படங்கள்

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்
ரத்த சரித்திரம்

சிறந்த ஒளிப்பதிவு கொண்ட திரைப்படங்கள்

 நந்தலாலா (மகேஷ் முத்துசாமி)
 ராவணன் (சந்தோஷ் சிவன், மணிகண்டன்) 

சிறந்த இசையமைப்பாளர் 

ஏ.ஆர்.ரஹ்மான் (விண்ணைத் தாண்டி வருவாயா, ராவணன்)  

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் 

இளையராஜா (நந்தலாலா)

சிறந்த கதை

ஆயிரத்தில் ஒருவன்  

 சிறந்த திரைக்கதை

விண்ணைத் தாண்டி வருவாயா

சிறந்த வசனம் 

அங்காடி தெரு (ஜெயமோகன்)

சிறந்த இயக்குநர்கள்

மிஷ்கின் (நந்தலாலா)
செல்வராகவன் (ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த நடிகர்
மிஷ்கின் (நந்தலாலா)

சிறந்த நடிகை
அஞ்சலி (அங்காடி தெரு)

சிறந்த துணைநடிகர்கள்
பார்த்திபன் (ஆயிரத்தில் ஒருவன்)
பாண்டி (அங்காடி தெரு)

சிறந்த துணைநடிகை
ஸ்நிக்தா (நந்தலாலா)

சிறந்த பாடலாசிரியர்
வைரமுத்து (ஆயிரத்தில் ஒருவன்)

சிறந்த பரிசோதனைப் பாடல்
ஆரோமலே (விண்ணைத் தாண்டி வருவாயா)

சிறந்த தொழில்நுட்பம்
எந்திரன்

சிறந்த ஏமாற்றம்
மன்மதன் அம்பு

துரதிருஷ்டவசமான நிகழ்வு

சுவர்ணலதா மறைவு


முரளி மற்றும் ஹனீபா மறைவு

சென்ற வருட பட்டியல்

தமிழ் சினிமா 2009

suresh kannan

image courtesy: http://hindia.in/tamilcinema

Tuesday, December 28, 2010

மன்மதன் அம்பு - அடி சறுக்கிய யானைகள்


கமல் திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த மொக்கை - ம.அ.. என்ற ரீதியில் விமர்சனம் வைக்கப்பட்ட போது கூட நான் முழு நம்பிக்கையையும் இழக்காமலிருந்தேன். ஹேராம், விருமாண்டி போன்ற படங்களில் அபாரமான திரைக்கதையை எழுதியிருந்த கமல் இதற்கும் திரைக்கதை எழுதியிருந்ததுதான் அதற்குக் காரணம். சரி, ஒருவேளை கமலே கோக்குமாக்காக நடந்தால் கூட, மசாலாவை சிறப்பாகத் தடவி எப்படி காசைப் பிடுங்குவது என்கிற சூட்சுமத்தை சிறப்பாக தெரிந்து வைத்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இதில் இருந்ததால் அவர் ஸ்டியரங்கை சரியாக பிடித்து திருப்பி  படத்தை குறைந்தது அடிப்படை சுவாரசியமாகவாவது உருவாக்கியிருப்பார் என்றும் நம்பினேன். (இந்த ப்ராக்ஜக்டில் கேஎஸ்ஆர் இருக்கிறாரா என்கிற சந்தேகமே இப்போது வந்து விட்டது.)

இந்தப் படத்தை உருவாக்கின திரை ஜாம்பவான்களின் மீது அடிப்படையான நம்பிக்கையை வைத்து துணிந்து படத்திற்குச் சென்றிருந்தால், சொல்லி வைத்தது மாதிரி அத்தனை பேருமே நிர்வாண பின்புறங்களை அசைத்து 'வெவ்வெ' காட்டியிருக்கிறார்கள். இந்தப் படம் 'படுமொக்கை' என்று எழுதினால் கூட அது மிகப்பெரிய under statement ஆக இருக்கும். இதைப் பற்றி எழுதுவது கூட நேர விரயம் என்றாலும் கூட என்னைப் போலவே கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு படத்திற்குச் செல்ல யோசித்திருக்கும் அப்பாவிகளை தடுத்து நிறுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.

நிர்வாணமாகத் திரியும் ஊரில் கோவணம் கட்டிய பைத்தியக்காரனாக, அபத்தமான தமிழ்ச்சினிமாவில் பல தரமான முன்னுதாரணங்களை உருவாக்கின கமல் நிச்சயம் கொம்பன்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்தக் கொம்பனே பாத்ரூம் பாசியில் வழுக்கி மல்லாக்க விழுந்திருக்கும் பரிதாபம்தான் சகிக்கவில்லை. (ஹேராம் மாதிரி வணிகரீதியான தோல்வியில் சறுக்கி விழுந்த போது கூட அந்த வழுக்கலை பொருட்படுத்தத் தேவையிருந்திருக்காத ஒரு கம்பீரம் இருந்தது). உள்ளடக்கம் சுவாரசியம் இல்லையெனில் ரஜினி படத்தையே தூக்கியெறியக் கூடிய புத்திசாலியான ரசிகர்கள் இருக்கும் சமகால சூழலில் கமல் இத்தனை அசமஞ்சமாகவா இருப்பது?

எவ்வித வணிக குதர்க்கங்களுமில்லாமல் இதை ஒரு மென்மையான டிராமாவாக ஆக்கியிருந்தால் கூட இந்த முயற்சியை பாராட்டியிருக்கலாம். அதற்கான சொற்ப தடயங்கள் இதில் இருந்தன. ஆனால் ஸ்காட்லாண்ட் காவல்துறையினராலேயே கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகளை விஜய்காந்த் துரத்தி துரத்தி உதைக்கும் அபத்தம் போல் சண்டைக்காட்சியோடு துவங்கி. படம் முடிவதற்கு முன்னால் யாரோ 'இது காமெடிப் படமாயிற்றே' என்று நினைவுப்படுத்தினாற் போல் அபத்தக் காட்சிகளால் நிரப்பி... போங்கப்பா.

மாதவன் அடுத்த முறை கமல் கூப்பிட்டவுடனே கண்ணீர் மல்க வந்து நிற்காமல், என்னவிதமான பாத்திரம் என்பதை கறாராக பேசிக் கொள்வது நல்லது. இல்லையெனில் இதில் அதிக எரிச்சலையூட்டிய அந்த மலையாளி (குரூப்) துணைநடிக பாத்திரத்தை அடுத்த படத்தில் கமல் அவருக்கு தந்துவிடுவார். ஜாக்கிரதை. சங்கீதா இன்னொரு மகா எரிச்சல். ஊர்வசி மாத்திரம் அதிகுண்டாக இல்லாமலிரு்நதால் அவர்தான் இந்த துடுக்கான பாத்திரத்தில் நடித்து வழக்கம் போலவே எரிச்சலூட்டியிருப்பார்.

இந்த மகா அபத்தத்தை ரெட்ஒன்னில் எடுத்தாலென்ன, செல்போனில் எடுத்தாலென்ன, பாவம் மனுஷ் நந்தன். இப்படி பல பேர்களின் உழைப்பு வியர்த்தமாகியிருக்கிறது. இந்தப் படத்தின் இன்னொரு மகா எரிச்சல் ஒலிப்பதிவு. என்ன உரையாடப்படுகிறது என்பதே பல இடங்களில் கேட்கவில்லை. லைவ் சவுண்ட் என்கிற நுட்பத்தின் மீது குறை சொல்ல முடியாது .விருமாண்டியில் கூட இந்த நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டது. ஏசி போட்டு பாப்கார்னுக்கு துட்டு பிடுங்கும் நம் அரங்கங்கள் இதற்கான அதிநவீன நுட்ப வசதிகளுக்கு ஈடு கொடுக்கவில்லையா, இந்தப்படத்தின் ஒலிப்பதிவு மோசமா என்பது தெரியவில்லை.

கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில்  இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே. 

suresh kannan

Monday, December 27, 2010

நாஞ்சில் நாடன் - பாராட்டு விழா

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தொடர்பான பாராட்டு விழா ஒன்றின் அறிவிப்பு ஜெயமோகனின் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை இங்கே பகிர விரும்புகிறேன்.எங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க்க தொகுப்பிற்க்காக  அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது .
நண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .

******************************************************************************
 
நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா

நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30
இடம் : ஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழாஹோட்டல் பின்புறம்)
.
வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
 
தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்
 
நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்
   வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா
   புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி

வாழ்த்துரை :

இயக்குனர் பாலா
எழுத்தாளர் ஞாநி
ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
எழுத்தாளார் சு.வெங்கடேசன்
எழுத்தாளர் பவா செல்லத்துரை
எழுத்தாளர் ஜெயமோகன்

ஏற்புரை - நாஞ்சில்நாடன்

நன்றியுரை - தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com
 
விழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.suresh kannan

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது


தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.

ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு  இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.


நாஞ்சில் நாடன் இணையத் தளம்


suresh kannan

Saturday, December 18, 2010

WHO IS THE HERO

சமயங்களில் ஒரு குறிப்பிட்ட திரையிசைப் பாடல் புயல் போல் நம்மை ஆக்ரமித்துக் கொள்ளும். நாள் முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். நாம் முணுமுணுப்பை நிறுத்தினால் கூட அது தொலைவில் எங்கோ ஒலித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும். பொதுவாக இதில் மெல்லிசைப் பாடல்களே தன்னிச்சையாக தேர்வாகும் என்றாலும் சமயங்களில் வேகதாளயிசைப் பாடல்களும் சேர்வதுண்டு.

அவ்வகையில் மன்மதன் அம்பு' திரைப்படத்தின் WHO IS THE HERO பாடலை நாளெல்லாம் கேட்டுக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஏன் இது இத்தனை தீவிரமாக எனக்குப் பிடித்துப் போனது என்பது எனக்கே விளங்கவில்லை. நான் இவ்வாறு துவக்கத்தில் விரும்பும் பாடல்கள் பொதுவில் நிச்சயம் ஹிட்டாகாது. பொதுவில் நன்றாக ஹிட்டான 'நாக்கு முக்கா' போன்றவற்றைகளைக் கேட்டால் எனக்கு கொலைவெறியே வரும். அப்படி ஒரு ராசி. 'சத்தம் போடாதே' படத்தில் சுதா ரகுநாதன் பாடிய இந்தப் பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று இங்கு எழுதியிருந்தேன். கர்நாடக இசையோடே பெரிதும் தொடர்புப்படுத்தி அறியப்பட்டிருந்த சுதா, அதிலிருந்து விலகி இந்த வேகதாளயிசைப் பாடலை பாடியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இது எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?.


WHO IS THE HERO-வை நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா பாடியிருக்கிறார். இவர் ஒரு பாப் இசைப் பாடகி என்பதையும் முன்னமே சில திரையிசைப் பாடல்களை பாடியிருக்கிறார் என்பதை அறிந்திருந்தாலும் இதைக் கேட்ட பின்புதான் அவரைப் பொருட்படுத்தி கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

தமிழ்த்திரையில் ஒரு காலகட்டத்தில் பெரும்பாலும் பாலு - ஜானகி கூட்டணியே  தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலை மாறி ரகுமானின் வருகைக்குப் பிறகுதான் கார்த்திக் உள்ளிட்ட பல புதிய இளம் பாடகர்களின் மீது வெளிச்சம் பரவியது. உதித் நாராயணன், சுக்விந்தர் சிங், ஷ்ரேயா கோஷல் என்று வடக்கிலிருந்தும் சிலர் இங்கு பாடுவது வழக்கமாக ஆனது. புதுக்குரல்களை தொடர்ந்து ரகுமான் முயன்று கொண்டேயிருக்கிறார். ரகுமானுக்குப் பிறகு இதை மற்ற இசையமைப்பாளர்களும் பின்பற்றி வருகின்றனர். இதிலுள்ள மிகப் பெரிய பிரச்சினை, அவர்களின் முறையற்ற தமிழ் உச்சரிப்புதான். பல இசையமைப்பாளர்கள் இதை கண்டு கொள்வதேயில்லை. அட்சரம் பிசகாமல் ஹிந்தி மொழியில் பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்றவர்களால் பாட முடிந்தாலும் அங்குள்ள இனவாத அரசியல் அவர்களை அங்கு நீடிக்க விடாமல் துரத்தியது. ஆனால் இங்கு தமிழ்க் கொலை செய்யப்பட்டும் தொடர்ந்து அந்த பாடகர்களுக்கே வாய்ப்பு தரப்படுவது துரதிர்ஷ்டம்.

ஜாஸ் இசை வகையில் அமைந்திருக்கும் இதை ஆண்ட்ரியா effortless ஆக அநாயசமாக தடங்கலில்லாமல் பாடியிருக்கிறார். இடையில் வரும் பேய்ச்சிரிப்பும் உற்சாகமாத்தான் இருக்கிறது. உச்சஸ்தாயியில் சுருதி விலகாமல் இவர் லாவகமாக பாடியதைக் கண்டு "என்னால் நிச்சயம் முடியாது"  என்று கமல் வியந்ததாகக் கூறப்படும் ஒரு trivia உண்மையா என தெரியாது. "எம்.எஸ்.வி. இளையராஜா வரிசையில் தேவி ஸ்ரீ பிரசாத்  வரக்கூடும் என்று இசை வெளியீ்ட்டு விழாவில் கமல் சொன்னது அதீதம் என்றாலும் இந்த வரிசையில் ரகுமானை வேண்டுமென்றே தவிர்த்ததில் என்ன அரசியலோ?.


தேவி ஸ்ரீ பிரசாத்தும் பாப் இசைக் கலைஞராகவே தன் பயணத்தை துவங்கியவர் என்றாலும் இங்கு அதிக வாய்ப்பில்லாத நிலையில் ஆந்திர திரைக்குச் சென்று அங்குள்ள கலாசாரத்திற்கேற்ப காரம் சாரமாக 'செம குத்துடன்' இசையமைத்து புகழின் உச்சிக்குச் சென்று விட்டார். ஏறக்குறைய எல்லாப்பாடல்களும் ஓரே மாதிரியான வேக தாளயிசையில் உருவாக்கப்படும் (உதா: 'குண்டுமாங்கா தோப்புக்குள்ளே) அவரது பாடல்களை பொதுவாக நான ரசிப்பதில்லை. ஆனால் மன்மதன் அம்பு அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதிற்குக் காரணம் கமலாக இருக்கலாம். சுந்தர்.சி எடுத்த 'அன்பே சிவம்' போல. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இன்னொரு பரிமாணத்தை இந்த ஆல்பம் நம் முன் வைக்கிறது.

பெரும்பாலான பாடல்களை கமலே எழுதி பாடியும் இருக்கிறார். 'நீல......... வானம்' என்று அவர் இழுக்கும் இழுப்பில் அது 'நீள...' வானமாக மாறும் அதிசயமும் (?!) நிகழ்கிறது. கமல் கவிதையில் பச்சையான முற்போக்கு வாசனை. திரிஷா கவிதையை பள்ளிக்கூட மாணவி போல் ஒப்பித்தாலும் அவர் குரலிலுள்ள feminine என்னை வசீகரிக்கிறது.

இருந்தாலும் இந்த ஆல்பத்தில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் இதுதான். அக்கம் பக்கத்தில் சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை என்று இந்தப் பாடலை உயர் டெசிபல் சத்தத்தில் கேட்டுப் பாருங்கள்.

suresh kannan

SOUL KITCHEN (2009)

சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியாதபடிக்கு சில பல பிரச்சினைகள்.தவிரவும்

1) வார நாட்களில் அலுவலக நுகத்தடியிலிருந்து விடுபட முடியாமலிருத்தல்.

2) திரையரங்களுக்கு இடையே பதட்டத்துடன் ஷட்டில் காக்காக ஓட வேண்டிய நிர்ப்பந்தம். போக்குவரத்திற்கு பேருந்து அல்லது ஆட்டோவை நம்பியிருக்கும் எனக்கு இது மிகக் கஷ்டம். வரும் வருடங்களில் நாலைந்து தியேட்டர்கள் ஒரேயிடத்தில் உள்ள காம்ப்ளெக்ஸை இதற்கு ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்.

3) பொது இடத்தில் சினிமா பார்க்கும் போது ஏற்படும் சில அசெளகரியங்கள். உலக சினிமா பரிச்சயமுள்ள பார்வையாளர்களின் இடையில் கூட திரையிடலின் போது சளசளவென பேசிக் கொண்டும், குறுக்கே நடந்து கொண்டும், தொலைபேசி உபயோகித்துக் கொண்டும் இடையூறு செய்யும் ஆசாமிகள் மீது கொலைவெறி வரும். ('மேட்டர்' காட்சிகளில் மாத்திரம் இவர்கள் படு அமைதியாகி விடுவார்கள்).

4) என்னதான் சினிமா மீது பிரேமையிருந்து தினசரி ஒன்று பார்க்கும் வழக்கமிருந்தாலும் ஒரே நாளில் நாலைந்து சினிமாவாக அதுவும் தொடர்ந்து ஒரு வாரம் பார்த்தால் மண்டைக்குள் போலிஷ், செக், ஸ்பானிஷ் என்று விதவிதமான ஒலிகள் சடுகுடு ஆடி பேஸ்து அடித்துவிடும். (தினசரி சீரியல் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் (பெண்கள் என எழுத நினைத்து சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்) அரை மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த தொடர்களுக்குள் தம்மை இயல்பாக பொருத்திக் கொள்வதை பார்க்கும் போது நெஞ்சுருக அவர்களை வணங்கவே தோன்றுகிறது).

இப்படி நிறைய நொட்ஸ் & நொள்ளைஸ் சொன்னாலும், திருவிழாவில் கலந்து கொண்டு கும்பலில் ஐக்கியமாகி கொண்டாடுவது என்பதும் வாழ்க்கையின் பிரத்யேக ருசிதான்; உன்னத அனுபவம்தான்.


சென்னை சர்வதேச திரைவிழாவின் துவக்க நாளின் திரையிடலாக ஜெர்மனி திரைப்படமான SOUL KITCHEN தேர்வு செய்யப்பட்டிருந்தமையால் ஆர்வத்துடன் அதை இணையத்தில் தேடிப் பார்த்தேன்.

அயல் சினிமாக்களில் என்னை குழப்பும் பல விஷயங்களில் ஒன்று, எப்படி ஒரு சினிமாவை 'காமெடி' என்ற வகைமையில் சேர்க்கிறார்கள் என்பது. 'அண்டா தலையா, மாங்கொட்டை தலையா' என்றே அதிரடியாக பார்த்துப் பழகின எனக்கு மொத்தப்படத்திலும் இரண்டே இரண்டு இடத்தில் மாத்திரம் புன்னகை பூக்க வைக்கிற சினிமாவை காமெடி என்று ஒப்புக் கொள்வது சங்கடமாக இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சாப்ளின் வகை ஸ்லாப்ஸ்டிக் காமெடி, பிளாக் காமெடி, டயலாக் காமெடி,செக்ஸ் காமெடி என்பதெல்லாம் வேறு. படம் முழுக்க அடிநாதமாக மெலிதாக நகைச்சுவை இழையோடும் படங்களும் வேறு. நகைச்சுவைக்கான தடயங்களே இல்லாத ஒன்றை எப்படி காமெடி என்று அழைக்கிறார்கள் என்பதில்தான் குழப்பம்.

இத்திரைப்படத்தையும் காமெடி என்றே நினைத்து பார்க்க அமர்ந்தால் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் நான் சிரித்தேன், இல்லை புன்னகைத்தேன். அவ்வளவுதான்.

முதுகுவலியால் தொடர்ந்து அவதிப்படும் ஜினோஸ், ஒரு பெண் பிசியோதெரப்பிஸ்டிடம் போகிறான். அண்டர்வேர் தவிர மற்றவற்றை உருவி அவனை மேஜையில் மல்லாக்க படுக்க வைத்து இடுப்புப் பகுதியில் தசைகளை உருவி மெல்ல விடுகிறாள். சங்கடத்தால் நெளியும் ஜினோஸ், நான் வேறு வேண்டுமானால் திரும்பி படுத்துக் கொள்ளவா? என்று கேட்கிறான். "இங்கே மசாஜ் செய்வது மிக அவசியமானது" என்கிறாள். "மன்னிக்கவும். தவிர்க்க முடியவில்லை. எனக்கு சங்கடமாக இருக்கிறது" என்கிறான்.

அடுத்த காட்சி இரண்டு பேரையும் மிட்-ஷாட்டில் காண்பிக்கிற போதுதான் தெரிகிறது, அவனின் குறி விரைப்படைந்து நெட்டுக்குத்தலாக நிற்கிறது. "இதற்காக நீ மகிழ்ச்சியடையவே வேண்டும். ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று அர்த்தம்".

இதைத் தவிரை மருந்திற்குக் கூட நான் வேறெங்கும் நான் புன்னகைக்கவில்லை.

சரி. பரவாயில்லை. இனி திரைப்படத்தினுள் நுழைவோம். ஆகோ ஓகோவென்று புகழ வேண்டிய படமில்லை இது. அதே சமயத்தில் மோசமானதாக நொந்து போகச் செய்யும் உருவாக்கமும் அல்ல.

தன் வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் தோல்வியையும் துரோகத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்கும் ஒருவன் எப்படி அதிலிருந்து மீள்கிறான் என்பது இப்படத்தின் மையம். அதற்காக 'வெற்றி நிச்சயம்' என்று ஒரே பாடலில் எல்லா வேலைகளையும் செய்து செல்வந்தனாக ஆகும் அபத்தமாக இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. படம் ஒரு  நதி போல இயல்பாக அதன் போக்கில் ஓடுகிறது. படத்தின் இறுதியில் வரும் ஏலக்காட்சியின் நாடகத்தனத்தைத் தவிர வேறெங்கும் தர்ககப் பிழைகளே இல்லை.

ஜெர்மனியில் குடியேறியிருக்கும் கிரேக்க வம்சாவளியான ஜினோஸ், ஒரு பழைய தொழிற்சாலையை உணவகமாக மாற்றி சிரமத்தில் நடத்திக் கொண்டு வருகிறான். வரி பாக்கிக்காக அவனைத் துரத்தும் அரசு அதிகாரிகள், உணவக நிலத்தை அவனிடமிருந்து பிடுங்குவதற்காக தொடர்ந்து சதி செய்யும் பால்ய நண்பன், சிறையிலிருந்து பரோலில் வரும் பெர்றுப்பில்லாத சகோதரன், வேற்று நாட்டில் சீனக்காரனை தேடிக் கொள்ளும் காதலி, படத்தின் பெரும்பாலும் துரத்தும் முதுகு வலி போன்ற துயரங்கள் அவனைச் சூழ்கின்றன.

இதிலிருந்து மெல்ல மெல்ல அவன் விடுபடுவதை மீதிப்படம் காட்டுகிறது.

இதில் செஃப் ஆக வரும் சாய்ன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். மாற்றங்களை விரும்பாமல் ஒரே மாதிரியான உணவு உண்பவர்களை, Taste Fascists என திட்டுகிறான். உணவு தயாரிப்பை அழகியலோடு இணைத்து சிந்திக்கும் இவன் தன் பிடிவாதத்திற்காக பணியை இழக்க நேரிடுகிறது. அமிதாப் பச்சனின் சீனி கம்'மை நினைவுப்படுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது.

ஸ்பானிய உணவை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர் ஒருவர், அது சூடாக பரிமாறப்பட வேண்டும் என விரும்புகிறார். வெளியே வந்து அவருடன் விவாதிக்கும் அவன் பாரம்பரிய முறைப்படி அது குளிர்ச்சியாகத்தான் பரிமாறப்பட வேண்டும் என்கிறான். 'இதை சூடாக்கித் தருவதில் உனக்கென்ன பிரச்சினை?' என்று கேட்கும் வாடிக்கையாளரிடம் "எப்பவாவது நான் உங்கள் பணியில் வந்து ஆலோசனை சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?" என்கிறான். விவாதத்தின் உச்சமாக சமையல் கத்தியை நடு மேஜையில் ஓங்கி குத்தி விட்டு "வேண்டுமானால் என் விந்தை அதில் விடுகிறேன். சூடாகட்டும்' என்று சத்தமிட்டு பணியை இழக்கிறான். இவனை தன்னுடைய உணவகத்தில் பணியில் அமர்த்திக் கொள்ளும் ஜினோஸ், மரபான வாடிக்கையாளர்களிடம் முதலில் தோல்வியைச் சந்தித்தாலும் புதிய வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகிறான்.


இத் திரைப்படத்தின் இயக்குநர் Fatih Akın. துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஜெர்மனியில் பிறந்தவர். அயல்தேசத்தில் குடியேறியவர்களின் கலாசார முரண்கள், அடையாள குழப்பங்கள், சிக்கல்கள், விரோதங்கள் போன்றவை இவர் படங்களின் அடிநாதமாக இருக்கும்.

இவரின் முந்தைய படமான The Edge of Heaven (2007) திரைப்படத்தைப் பற்றி முன்பு இங்கு எழுதியிருக்கிறேன். Head-on (2004)-ம் முக்கியமான திரைப்படம்.

SOUL KITCHEN திரைப்படத்தில் இசை ஒரு முக்கியமான பணியை வகிக்கிறது. இவனது உணவகத்தை இசைக்குழு ஒன்று தங்களது பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுவே உணவகத்தின் வெற்றிக்கு பின்னர் அடித்தளமாக அமைகிறது. இத்திரைப்படத்தின் இசைக்காக இரண்டு வருடங்களை செலவழித்திருக்கிறார் இயக்குநர். புலம்பெயர்ந்தவர்களின் துயரங்களைச் சொல்லும் பாடல்களை தேடி அதிக பொருள் செலவில் உரிமை பெற்று பின்னர் ஒவ்வொரு பாடலையும் பலமுறை கேட்டு அதற்கேற்ப திரைக்கதை அமைத்திருக்கிறார். சீரியஸான படங்களை இயக்கி விட்டு 'ஓர் ஆறுதலுக்காக' இந்த நகைச்சுவைப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இவருடன் இணைந்து திரைக்கதையை எழுதின Adam Bousdoukos-ன் உண்மையான உணவக அனுபவங்களைக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற இத்திரைப்படத்தை அதன் சிறப்பான திரைக்கதைக்காகவும் இசைக்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.

suresh kannan

Thursday, December 16, 2010

காமராஜர் அரங்கமும் கவர்ச்சி இலக்கியமும்


கண்,மூக்கு வெவ்வேறு திசையிலிருக்கும் ஒழுங்கற்ற விநோதமான ஓவியங்களையும் தீவிரமான உள்ளடக்கங்களையும் இலக்கிய கோட்பாட்டு விளக்கக் கட்டுரைகளையும் கொண்டிருந்த சிற்றிதழ்களுக்கும் வணிகப் பத்திரிகைகளுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு துல்லியமாக இருந்த இடைவெளியை நிரப்ப காலப்போக்கில் இடைநிலை இதழ்கள் உருவாகின. அவ்வாறான அடையாளங்களில் ஒன்று உயிர்மை.  பல்லை உடைக்கும் சிற்றிதழ்களின் மொழியை ஜீரணிக்கத் திணறும் வணிகப் பத்திரிகை வாசகர்கள் அதை தாவி அடைவதற்கான ஒரு படிக்கட்டுகளாக இந்த வகை இதழ்கள் திகழ்கின்றன.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து எழுந்துள்ள வணிகப் போட்டியில் பற்பசை முதல் ஆணுறை வரை அனைத்திற்கும் விளம்பரங்களும் சந்தைப்படுத்துதலின் உத்திகளும் அவசியமாகி விட்ட பிறகு இலக்கியமும் அதிலிருந்து தப்பி விட முடியுமா என்ன? 'எனது மேனியழகின் ரகசியத்திற்கு' எனச் சொல்லும் நடிகையர் இனி 'எனது சிந்தனையழகின் ரகசியத்திற்கு நான் பெரிதும் நம்புவது' ...என இவ்வாறான இதழ்களுக்கும் மாடலிங் செய்யும் நிலையை வருங்காலத்தில் காண நேரிடலாம்.

அதற்கான முன்னோட்டமோ என்று தோன்றுமளவிற்கு அமைந்திருந்தது 'உயிர்மை'யின் நூல் வெளியீட்டு விழா. சாருவின் ஏழு புத்தகங்கள். (ஏழு ஸ்வரங்கள் என்று இசையோடு தொடர்புப்படுத்தி சி(ரி)றப்பு விருந்தினர்களுள் ஒருவரான நடராஜன் இதை விழாவில் குறிப்பிட்டது புல்லரிப்பை ஏற்படுத்தியது).

உயிர்மையின் அழைப்பிதழை வைத்துக் கொண்டு அரைமணி நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். தமிழின் நவீன இலக்கியத்திற்கும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் சிலருக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்கிற ரீதியில் அந்தச் சிந்தனை அமைந்திருந்தது. கனிமொழி இயல்பிலேயே கவிஞருக்கான மரபணுக்கூறுகளைக் கொண்டவர் என்பதே அடிப்படைத் தகுதியாக இருந்திருக்கும். சரி. தமிழச்சி தங்கபாண்டியனும் சில கவிதைகளை எழுதியிருக்கிறாராம். அதோடு பளபளப்பான அழகாய் இருக்கிறார் என்பது கூடுதல் தகுதி. சரி. நல்லி செட்டியார்? அவரும் கூட சில புத்தகங்களை எழுதி 'எழுத்தாளர்' அந்தஸ்தை அடைந்தவராம். (இதோடு ஓர் உள்பாவாடைக்கான வியாபாரம் வராவிட்டாலும் கூட  இலக்கிய இதழ்களின் பின்னட்டைகளை தன்னுடைய நிறுவன விளம்பரங்களை நிரப்புவதன் மூலம் அவற்றை பல வருடங்களாய் போஷித்து வருபவராம்). சரி. நடராஜன்? நல்லியின் நிழலாய் வருவதே பெரிய தகுதியாக இருந்தாலும் இலக்கிய சம்பந்தம் ஏதேனும் இருக்குமா? இருக்கலாம். வாரமலரில் அவரின் சிறுகதைகள் ஏதேனும் பிரசுரமாகியிருக்கலாம். போதாது? மிஷ்கின் நந்தலாலா எனும் காலத்தால் அழிக்க முடியாத 'அசலான' அற்புதத்தை படைத்த காரணத்தினாலேயே அடுத்த சில நாட்களுக்கு நகரின் எல்லா விழாக்களிலும் பங்கு கொள்ளும் தகுதியை இயல்பாகவே பெற்று விடுகிறார்.

சரி. குஷ்பு? 'நடிகை என்றால் கேவலமா?' என்ற பெண்ணியம் மற்றும் முற்போக்கு சாயத்தில் தோய்க்கப்பட்ட கேள்விகளை தயக்கத்தோடு தள்ளி விட்டு யோசித்துப் பார்க்கலாம். ஏதாவது கவிதை, கிவிதை எழுதித் தொலைத்திருப்பாரோ, அப்படியெதுவும் தெரியவில்லை. பெரியார் படத்தில் மணியம்மையாய் நடித்ததனால் இருக்குமோ? கோயில் கட்டியும் இட்லிக்கு நடிகையின் பெயரைச் சூட்டி மகிழ்ந்த தமிழனின் அடிப்படை உளவியலை துல்லியமாக புரிந்து கொண்டு கூட்டம் சேர்ப்பதற்காக இந்த உத்தியோ? சேச்சே. அப்படி இருக்காது. பின் எதுதான் காரணமாய் இருக்கும் என்று குழம்பிப் போனேன்.

வரவேற்புரையாற்றின மனுஷ்யபுத்திரன் எனது இந்த மண்டைக்குடைச்சலை தீர்த்து வைத்தார். 'பொதுப்பரப்பில் தான் முன் வைத்த ஒரு கருத்திற்காக உறுதியாய் நின்று போராடின ஒரு பெண்' என்கிற காரணத்திற்காகவே குஷ்பு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று. ஆம்- அதுதான் காரணமாயிருந்திருக்க வேண்டும். முற்போக்கு என்பதை எழுத்தில் மாத்திரம் காட்டாமல் செயலிலும் நிகழ்த்திக் காட்டும் 'உயிர்மை'யை வியக்காமலிருக்க முடியவில்லை. எனில் வருங்காலத்தில் இலக்கியக் கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஷகீலா கூட அழைக்கப்படலாம். 'பிட்' படத்தில் ஆபாசமாக நடித்தார் என்று அவர் மீது போடப்பட்ட வழக்கிற்காக 'பர்தா' அணிந்து நீதிமன்றத்திற்கு வந்த அவரை, இசுலாமிய அமைப்புகள் அது குறித்து எதிர்ப்பு  தெரிவித்த போது அதை உறுதியாய் எதிர்த்த காரணத்தினால். ஆனால் இப்படி தன் கருத்தில் உறுதியாய் இருப்பவர்கள் நடிகைகளாகவும் அழகாயும் அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களாகவும் அமைந்திருப்பது அவசியமா அல்லது பிரதமர் கையால் விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த சுயஉதவிக் குழு 'சின்னப்பிள்ளை' போல கிழவியாகவும் இருக்கலாமா என்பதை தெளிவுப்படுத்தி விட்டால் வருங்கால விழாக்களுக்கு வாசகர்கள் வருவதா வேண்டாமா என  திட்டமிட வசதியாயிருக்கும்.

'அற்புதமான ஒரு மாலைப்பொழுது' 'விழா இனிதே நிறைவடைந்தது' என்றெல்லாம் 'மானே தேனே போட்டு எழுதியிருக்கலாம்தான். மண்டைக்குள்ளிருக்கும் நண்டு பிராண்டுது என்ன செய்ய.

()

அரங்கத்தின் வாசலிலியே வணிகத் திரைப்படங்களின் நாயகன்களுக்கு நிகரான சாருவின் பிளெக்ஸ் பேனர். அரங்கின் உள்ளே எழுத்தாளரின் பெயரைச் சொன்ன போதெல்லாம் வாசகப் பெருமக்களின் கைத்தட்டும் விசிலும். சாருவின் படத்திற்கு முன்னதாக (மதிய நேரத்தில் - என்னவொரு டைமிங்)  பீர் அபிஷேகமும் நடந்ததாய் கேள்விப்பட்டேன். திரைப்படத்தின் வணிகக் கலாச்சாரத்தின் அபத்தங்களை விமர்சித்து காரசாரமாய் எழுதும் சாரு இன்று ஒரு brand image ஆகி அந்தக் கலாசாரத்தின் ஒருபகுதியாய் நிற்கும் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு வியப்பது என்றே தெரியவில்லை.

நூல் வெளியீட்டில் உரையாற்றிய பலரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறித்த பிரக்ஞையோடும் முக்கியத்துவத்தோடும் பேசியது ஆச்சரியமாய் இருந்தது.

அத்தனை பெரிய காமராஜர் அரங்கத்தின் கணிசமான இருக்கைகள் நிரம்பியிருந்தாலும் (ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இத்தனை நபர்கள் வருவது நிச்சயம் ஒரு தமிழக சாதனைதான்) அதில் திருப்தியுறாத ம.பு. 'காலி இருக்கைகள், கலாசார வெறுமையின் குறியீடு' என்றார். என்ன இருந்தாலும் கவிஞரல்லவா? 'கவர்ச்சி நடிகை ரகசியாவின் நடனத்தை நடத்தியாவது கூட்டத்தை சேர்ககலாம் என்று நகைச்சுவை ஆலோசனை தந்தார் மதன். 'பொதுவாக இலக்கியக் கூட்டத்திற்கு வயதானவர்களே வரும் நிலையிலிருந்து விலகி இந்தக் கூட்டத்தில் இளைஞர்களை காண முடிவது மகிழ்ச்சியை அளிப்பதாக' தமிழச்சி கூறினார். (விசில், கைத்தட்டல்).

பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் ஒரு நூல் வெளியீட்டின் வெற்றிக்கு அடையாளம் என்று இந்த அறிஞர் பெருமக்கள் தீவிரமாக நம்புகிறார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் விசிலடிக்கும் கூட்டம். அடக் கஷ்டமே. இது மாதிரியான கூட்டம்தானே  ஒரு வணிகத் திரைப்படத்தின் முதல் காட்சியிலும் அமர்ந்திருக்கிறது? சாருவின் எழுத்தில் தென்படும் கொஞ்சம் நஞ்சம் இலக்கியமும் வெகுஜன வாசகர்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அந்தக் கொஞ்சம் நஞ்சம் இலக்கியத்தையும் உதறிவிட்டு கிளர்ச்சியடைந்த அனுபவமே போதும் என்பதாகவும்  நூல் வெளியீடு என்பது ஏதோ பெரிய அப்பளமும் பாப்கார்னும் சாப்பிட்டு ராட்டினத்தில் சுற்றித் திரும்பி அத்தோடு மறந்து விடும் தீவுத்திடல் கண்காட்சி போன்ற பொழுதுபோக்கு அடையாளங்களுள் ஒன்றாக ஆகி விடக்கூடாது என்கிற ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.

சாருவின் கிளர்ச்சி தரும் பிம்பத்தைத் தாண்டி இதில் எத்தனை பேர் அசலான இலக்கிய தேடலும் வாசிப்பும் அல்லது அதற்கான முயற்சியும் கொண்டிருப்பவர்கள் என்பதை ஓர் ஆய்வு செய்தால் அது தரும் விடை நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது. இது போன்ற அடையாளங்களால்தான் ஒரு பதிப்பகம் தன் பெருமையைக் கட்டிக் காக்க முடியும் என்கிற சூழலே பீதீயைத் தருவதாக இருக்கிறது. தம்முடைய கூட்டத்திற்கு வரும் அத்தனை மக்களும் தமக்குச் சாதகமான ஓட்டுக்களாக மாறிவிடக்கூடும் என்று கனவு காணும் அரசியல் கட்சிகள் போலவே கலை சார்ந்த அமைப்புகளும் நினைக்க ஆரம்பித்து அதை செயல்படுத்தத் துவங்கி விட்டால் என்ன ஆகும் என்பதே கவலையைத் தருவதாக உள்ளது.

(உயிர்மையின் மற்ற நூல் வெளியீட்டுக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களின் பட்டியல் கூட ஒரளவிற்கு ஆரோக்கியமாக இருக்க, சாருவின் கூட்டத்தின் நபர்கள் மாத்திரம் ஏன் இப்படி?. இதற்கான பொறுப்பு பதிப்பகத்தினுடையதா அல்லது எழுத்தாளருடையதா என்பது தெரியவில்லை. சாருவின் எழுத்து குறித்து இணக்கமாக பேச மீண்டும் மீண்டும் இந்த நபர்களைத் தவிர வேறு எவரும் கிடைக்கவில்லையா?)

இந்த உரோமமெல்லாம் தெரிந்தும் நீ ஏன் கூட்டத்திற்குப் போனாய் என்றொரு கேள்வி இதை வாசித்துக் கொண்டிருப்பவருக்கு தோன்றலாம். நல்லது. அதற்குக் காரணம் சாரு. அவரது "எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்' புதினத்தை சுஜாதா அடையாளங்காட்டியதிலிருந்து  பல்வேறு முரண்களைத் தாண்டியும் சாருவை நான் வாசித்து வருகிறேன்.  பாசாங்குகளை கழற்றி வைத்த எழுத்தின் சுவாரசியம், அதிநவீனம், அங்கதம், அயல் இலக்கியம், இசை அறிமுகம் போன்றவற்றைத் தவிர மற்றவர்களின் எழுத்தில் காணவே முடியாத சில விஷயங்களுக்காகவும் சாருவின் பிரத்யேக ஆளுமையில் உள்ள ஈர்ப்பு காரணமாகவும் -சமயங்களில் ஏற்படும் எரிச்சலைத் தாண்டியும் - கூடுமானவரை அவர் எழுதும் அனைததையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

()

இனி நிகழ்ச்சியில் நடந்ததைப் பார்ப்போம்.(நினைவிலிருந்து எழுதுகிறேன்.கருத்துப் பிழைகள் இருக்கக்கூடும்).

நித்யானந்தர் நூல் குறித்து உரையாட வந்தார் ரவிக்குமார். (இந்த நூல் பற்றிப் பேச மற்ற எவரும் மறுத்து விட்டார்களாம்). 'சாருவின் எழுத்தில் புனைவிற்கும் யதார்த்தத்திற்கும் எந்த இடைவெளியும் இருக்காது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் உரையாடல் கூட அடுத்த படைப்பில் வெளிவந்துவிடலாம் என்றார். (புனைவு எது நிஜம் எது என்று அடையாளம் தெரியாதவாறு எழுதுவதுதானே சாரு எழுத்தின் மகிமை). சாரு முன்பு நித்யா குறித்து 'பரவசத்துடன்' எழுதின சம்பவங்களை வைத்து சாருவையே கிண்டலடித்தார். நித்யா போல சாருவும் ஒரு ஆன்மீக குருவாகலாம் என்ற 'பஞ்ச்' உடன் முடித்த ரவிக்குமார், அதிகாரம் x மதகுருமார்கள் என்ற தலைப்பிலும் சற்று தீவிரமாகவே பேசினார்.

(நீட்ஷே,சார்த்தர் எல்லாம் கரைத்துக் குடித்த ஓர் எழுத்தாளர் சாமியாரைத் தேடிப் போவாராம். அவரிடம் ஏமாந்த வெறுப்பில் பின்பு அவரையே திட்டியும் எழுதுவாராம். பரபரப்பு சாமாத்தியங்களுடன் வெகுஜன பத்திரிகை வெளியிட்ட இந்தக் கட்டுரைகளை இலக்கிய அடையாளமாகக் கொண்டிருக்கும் பதிப்பகமும் 'சரசம் சல்லாபம் சாமியார்' என்று இலக்கியத்தனமான தலைப்புடன் வெளியிடுமாம். இப்படி வெளிப்படையாய் எல்லாவற்றையும் எழுதுவதுதான் சாருவின் பலமாம். சாருவின் கட்டுரை எழுத்துக்களில் சிலவற்றைத் தவிர வம்புகளே அதிகம்,அவற்றைத் தவிர்க்கலாம் என்று ம.பு முன்னர் உட்லண்ட்ஸ ஓட்டலில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீட்டுக்கூட்டத்தில் சொன்ன ஞாபகம்).

சார்த்தரும் சாருவும் என்ற உள்ளடக்கத்தில் தமிழச்சி பேசினார். (என்ன கொடுமை சாரு இது). எதுகை மோனையில் தமிழர்களுக்கு இருக்கும் ஈர்ப்பின் வயது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல்தான் என்றாலும் சாரு பெயரின் முதல் எழுத்திற்காக சார்த்தரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். சாக்ரடீஸ் பெயரும் அந்த எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது என்பதும் கிலியைத் தருகிறது. நோபல் பரிசை மறுத்த ஒருவரையும் அதற்காக  'எங்கே எங்கே' என்று  அலைமோதுகிற அதற்கான தகுதி கொண்ட எழுத்தை இதுவரை எழுதாத ஒருவரையும் ஒரு புள்ளியில் இணைப்பது முறையா?. சார்த்தரைப் போல இருத்தலியல்வாதிகளை விளிம்புநிலை மக்களில் கூட நிறைய பேரைக் காணலாம். சேகுவேரா'வின் ஒப்பனையில் அழகிரியை வைத்து பிளெக்ஸ் பேனரை தயார் செய்யும் அரசியல் கலாசாரத்தில் இதெல்லாம் சகஜம்தான் போலிருக்கிறது.

தமிழச்சி உரையாடின நூலான 'மழையா பெய்கிறது' என்ற கட்டுரை நூலின் தலைப்பே தனி சுவாரசியம். உலக அறிஞர்களின் வாழ்விலும் ஆன்மீக குருமார்களின் வாழ்விலும் நடந்த சுவையான சம்பவங்கள் (இவைகளில் பல கற்பனைகளாகவே இருக்கலாம்) எங்கோ பகிரப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு பின்னர் அது வரலாற்று உண்மையாக ஆகிவிடுகிற நகைச்சுவை இருக்கிறதல்லவா? அதே போன்றதுதான் நூலின் தலைப்பும்.

சாரு மூன்று நாட்களாக இங்கும் அங்கும் எங்கும் நகராமல் எழுத்து தியானத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாராம். மூன்று நாட்கள் கழித்து அவருக்குப் பேசின நண்பர் 'சென்னையே வெள்ளக்காடாக இருக்கிறதே,உங்களுக்குத் தெரியாதா" என்றாராம். சாரு அதற்கு 'மழையா பெய்கிறது?" என்கிற திருவாக்கியத்தை அருளினாராம். (என்னாங்கய்யா, எங்கள பாத்தா அவ்ளோ கேனைங்களாகவா தெரியுது).

சாருவிடம் தமக்கு ஏற்பட்ட பழைய அறிமுக நிகழ்வுகளை நூற்றி ஒன்றாவது முறையாக பகிர்ந்து கொண்டார் கனிமொழி. 'எழுத்தாளன் பொதுவெளியில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.' என்று அவர் பேசிய போது சமீபத்திய 'அரசியல் பேரம் வெளிப்பட்ட' நிகழ்வுகளும் உடனே நினைவுக்கு வந்து சிரிப்பாக வந்தது.

'இப்படி தமிழ் சினிமாவை தொடர்ந்து தாக்கி எழுதினால் உங்கள் கதாநாயக கனவு நிறைவேறாமலே போய்விடும்' என்று சாருவை நோக்கி சொன்ன மதன், பிறகு பேச்சை தமது பிரத்யேக விருப்பமான தலைப்பான 'உலக வரலாற்று' சம்பவங்களுக்குள்  இட்டுச் சென்றார். சாக்ரடீஸை கொன்றது சர்வாதிகாரம் அல்ல, ஜனநாயகம் என்றார். விமர்சனம் என்பது ஆரோக்கியமான படைப்புச் சூழலுக்கு எத்தனை முக்கியமானது என்பதும் அவர் பேச்சில் இணைந்தது. வெகுஜன ஊடகத்தில் பணியாற்றியதன் காரணமாகவே அந்த ஜாக்கிரதையுணர்ச்சியால் தம்மால் கடுமையாக எழுத முடியாமல் அதுவே இயல்பாகி விட்டது என்றவர், மிஷ்கின் நண்பர் என்பதற்காக விட்டிருக்காமல் நந்தலாலாவில் உள்ள குறைகளையும் சாரு எழுதியிருக்கலாம் என்று ஆலோசனை தந்தார்.

(இங்கே ஒரு  நகைச்சுவை சம்பவம். பேசி முடித்த பின்னர், நல்லி, நடராஜன், ரவிக்குமார், கனிமொழி, தமிழச்சி (பின்னர் திரும்பி வந்தார்) என்று அனைவரும் கிளம்பியிருக்க மதன் பேச எழுந்த போது மேடையில் ம.பு.வும் எஸ்.ராவும் மாத்திரமே அமர்ந்திருந்தனர். (மிஷ்கினும் சாருவும் எங்கோ சென்றிருந்தனர்)

'இங்கு மேடையில் அமர்ந்திருக்கும்'... என்று யாரைப் பார்த்து சொல்வது என்று மதன் பேச ஆரம்பித்த அந்தக் கணத்தில் ஒரே  சிரிப்பொலி. ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டு வருபவர்கள் அது முடியும் வரை அமர்ந்திருப்பதும் பேச்சாளரின் உரையாடலை கவனிப்பதுதானே அடிப்படை நாகரிகம்?. ("ஏண்டா இந்த நடிகனுங்க ஒவ்வொரு பொறந்த நாளைக்கும் போஸ்டர் அடிச்சு ஒட்டுறாங்க. நாட்ல இவங்க மட்டும்தான் பொறந்தாங்களா, நாமளலாம் அப்ப வேஸ்ட்டா பொறந்துட்டமா" என்று கவுண்டமணியின் திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.)மிஷ்கின்.

'தேகம்' நூலைப் பற்றி இவர் உரையாட வேண்டும். 'சரோஜா தேவி' நாவல் என்று அதைப் பற்றி ஒரே வரியில் முடித்து விட்டு 'நந்தலாலா புலம்பல் புராணத்தை பாடக் கிளம்பி விட்டார். (ஆனால் இவருக்குப் பின்னால் இந்த நாவலைப் பற்றின பேசின எஸ்.ரா அதன் மையம் குறித்து   மிகச் சிறந்த உரையை ஆற்றினார்.)  இப்போது என்ன சந்தேகம் வருகிறது என்றால் 'ஆங்கிலப் புத்தகங்களை தன்னுடைய அலுவலகத்தில் அடுக்கி வைத்து இரவும் பகலும் அவற்றை படிப்பதாக நேர்காணல்களில் சொல்லிவரும் மிஷ்கின், உண்மையாகவே அவற்றையெல்லாம் வாசிக்கிறாரா, அப்படியே வாசித்தாலும் சாருவின் நாவலை புரிந்து கொள்வது போலவே அவற்றையும் தட்டையாக ஒரே வார்த்தையில் புரிந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

(மிஷ்கின் நாவல் குறித்து உரையாடாத காரணத்திற்காக சாரு பிறகு எழுதின நண்பனின் துரோகம்' பதிவுகளை வாசித்தேன். இதற்கு முன்னர் சாரு நூல் வெளியீட்டில் கலந்து கொண்ட சினிமாக்காரர்கள் எவருமே (பார்த்திபன், அமீர், சசிகுமார்) சாருவின் நூலை வாசித்ததாக அவர்களின் பேச்சிலிருந்து உணர முடியவில்லை. பிறகு ஏன் சினிமாக்காரர்களை வரவழைத்து கூட்டம் கூட்டி பிறகு இதைப் புலம்ப வேண்டு்ம் என்பது புரியவில்லை. அல்லது இவையெல்லாமே நாடகத்தின் பல்வேறு காட்சிகளாக என்பதும்).

சரி. மிஷ்கினின் 'நந்தலாலா புலம்பல் புராணத்திற்கு வருவோம்.

நந்தலாலா படம் வெளிவருவதற்கு முன்னால் 'அது வரவில்லை' என்பதையே மேடைதோறும் புலம்பிக் கொண்டிருந்தவர் இப்போது படம் ஓடவில்லை என்பதற்காகவும் அதன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்காகவும் புலம்பித் தள்ளினார். (இந்தப்படம் பிளாப், உங்களுக்குத் தெரியுமா?) 'விமர்சகர்களால்தான் இந்தப் படம் தோற்றது' என்று அவர் சொன்ன போது சிரிப்புதான் வந்தது. விமர்சகர்களால் ஒரு படைப்பு தோற்றது என்பது மேற்கத்திய நாடுகளிலும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் வேண்டுமானால் நிகழலாமே ஒழிய தமிழகத்தில் அது சாத்தியமேயில்லை என்று மிஷ்கினுக்குத் தெரியவே தெரியாதா என்ன? வெகுஜன ஊடகங்கள் முதற்கொண்டு அவரின் நண்பரான சாருவின் கட்டுரை வரை அதைக் கண்மூடித்தனமாக புகழ்ந்து தள்ளிய பிறகும் 'படம் ஓடாததற்கு' விமர்சகர்களை குறை சொல்வது எப்படிப் பொருந்தும்?

'உங்கள் எடையைக் சரியாகக் காட்டும் இயந்திரத்தின் மீது கோபம் கொள்வீர்களா? - இது சாருவின் சினிமா பற்றிய நூலிலுள்ள ஒரு வரி. 'கறாரான விமர்சனங்களினால்தான் ஆரோக்கியமான படைப்புகள் தொடர்ந்து வர முடியும். - இது இதே மேடையில் பேசின 'மதனின்' உரையாடல்.

குற்றவுணாச்சியும் முரணும் மிஷ்கினுடைய பேச்சில் தெளிவாக வெளிப்பட்டன.

'கிக்குஜிரோவை காப்பியடிச்சுட்டேன் சொல்றாங்க. மனநிலை பாதிக்கப்பட்ட என்னுடைய சகோதரனுடைய சம்பவங்க அது.  ஜப்பானியப்படத்த தமிழ் மக்களுக்கு கொடுக்கணும்னு நெனச்சது தப்பா? இந்த சர்ச்சைக்கு அப்புறம்தானே நீங்க கிக்குஜிரோவை தேடிப் பாத்திருப்பீங்க? அதுக்கு நந்தலாலாதானே காரணம்? முதல் ஷாட்டே ரெண்டு நிமிஷம் வெச்சேன். யாராவது அதைப் பத்தி பேசினீங்களா? சுவத்தைத் தாண்டி குதிக்கிற காட்சியில் அப்படியே நிர்வாணமா நின்னேன். அஸிஸ்டெண்ஸ்லாம் கட்டிப் பிடிச்சு அழுதுட்டாங்க. யாராவது அந்த சீனை நோட் செஞ்சீங்களா? கூலிங் கிளாஸை போட்டுப் பாத்துட்டு 'அய்யோ ராத்திரியாடுச்சு'ன்னு திரும்பக் கொடுத்துடுவேன். அந்த வசனத்த யோசிக்க ரெண்டு நாளாச்சு. (என்ன கொடுமை மிஷ்கின் இது) யாராவது அதப் பாராட்டுனீங்களா? பாலியல் தொழிலாளி பேசற ஒரு லாங் டேக்கை மாத்திரம் அஞ்சு நாளைக்கு மேலே எடுத்தேன். யாராவது அதச் சொன்னீங்களா?

'காப்பியடிச்சுட்டேன்னே சொல்றீங்க. நாலே நாலு சீனை கிடானோவுக்கு டிரிப்யூட் செய்யறதுக்காக வெச்சேன்" அது தப்பா? நல்ல படம் கொடுக்கறதுக்காக எத்தனை கஷ்டப்பட்டேன்? படிச்சவங்க இதைச் செய்யலாமா?"

... இப்படியாக மிஷ்கினின் பேச்சு நந்தலாலா குறித்தே சுழன்றது.

குப்பையான திரைப்படங்களுக்கு மத்தியில் தரமான படமொன்றைத் தருவதற்காக உறுதியுடன் போராடுகிற அவருடைய கலை மனம் குறித்து நமக்குப் புரிகிறதென்றாலும் அதற்கு ஆதரவு அளிப்பதுதான் நம் கடமை என்றாலும் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான நேர்மையில்லா விட்டால் அதற்குரிய விமர்சனங்களை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். இல்லையெனில் கமல் போல் கள்ள மெளனமாகவேனும் இதைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஷங்கரோ, மணிரத்னமோ என்றால் நிச்சயம் இதை ஒரு சம்பிரதாயப் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள். அப்படியல்லாமல் இது குறித்து தாமே முன் வந்து உரையாடின மிஷ்கினை இந்த வகையில் பாராட்டவே செய்ய வேண்டும்.

மிஷ்கின் சொன்ன இன்னொரு விஷயமும் முக்கியமானது எனக் கருதுகிறேன். தாம் உதவி இயக்குநராக இருந்த போது சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் (இதயம் கதிர்) சினிமா பற்றி எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தம் உதவியாளர்களுக்கும் அதையே பரிந்துரைப்பதாகவும் கூறினார். அகிரா குரசோவாவும் டகேஷி கிடானோவும் தம்முடைய குருக்கள் என்றும் அவர்களின் படங்களை மாத்திரம் திரும்பத் திரும்ப பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன் என்றும் கூறினார்.

மிஷ்கின் உரையாடத்தவறின 'தேகம்' புதினம் குறித்து எஸ்.ராவின் உரையாடல் அந்த மாலையின் ஆகச் சிறந்ததாக இருந்தது. 'இந்த நாவல் மனிதர்களின் மீதான வதையைப் பற்றியது' என்றவர் மனித குலம் மீது வதை பிரயோகிக்கப்பட்ட வரலாற்றை உதாரணங்களுடன் பேசினார். ஜி.நாகராஜன் குறித்த சம்பவம் ஒன்றும் இடையில். மரணத்திற்கும் பாலுணர்விற்கும் இடையிலுள்ள நெருக்கத்தைப் பற்றியுமாக அவர் பேச்சு நீண்டது.

இறுதியாக சாரு.

தன்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டு விழாவிலும் பேசுகிற அதே விஷயங்களை எப்படித்தான் அவரால் திரும்பத் திரும்ப சொல்ல முடிகிறதோ தெரியவில்லை. தான் உருவாக்கிய பொய்களை தானே நம்பிக் கொண்டு அதை சுவாரசியமாக பகிர்வதற்கும் ஒரு கொண்டாட்ட மனநிலை வேண்டும். கணையாழியில் மகாநதிக்கு எழுதின விமர்சனம், கமல்ஹாசன் மீதான எதிர்ப்பு, கனிமொழியின் நட்பு, நல்லியின் புரவலத்தன்மையின் புனிதம், ஆங்கில மொழி பத்திரிகைகளின் அங்கீகாரத்தின் பெருமை..என்று அதே பல்லவி. பேசாமல் இதை பதிவு செய்து வைத்துக் கொண்டு ஒவ்வெர்ரு நிகழ்சசியிலும் ஒலிபரப்பி விடலாம்.

பாலகுமாரன் குறித்து அவர் கூறியதில் ஒரு காமெடி நடந்தது.

மாலை 05.30 மணிக்கு வந்து நிகழ்ச்சி இறுதி வரையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் பாலகுமாரனை நன்றியோடு புகழ்ந்த சாரு, பா.கு.வின் கவிதை ஒன்றையும் பதில் மொய்யாக செலுத்தி விட்டு பிறகு கூறினார்.

'நான கோயிலுக்கு போறத பாத்துட்டு பாலகுமாரனுக்கு ஒரே ஆச்சரியம். "நீங்க ஆஸ்திகரா' ன்னு கேட்டார். "ஆமாம்'னேன். அப்புறம் நாஸ்திகம் பத்தி அவர் ஒரு விஷயம் சொன்னார். ரொம்ப அருமையான விஷயம் அது. 

ஆனா என்னன்னு மறந்து போச்சு."

(விசில் கைத்தட்டல்)

தாங்க முடியாமல் 'தேகம்' நாவலை மாத்திரம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டேன். நாவலை வாசித்து விட்டு தேவையிருந்தால் அதைப் பற்றி எழுதுகிறேன்.


(பின்குறிப்பு: இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய ஆறுதலான விஷயம் குஷ்பு வராமல் போனது. வந்திருந்தால் இன்னும் என்னென்ன காமெடிகள் நடந்திருக்குமோ. பேசாமல் தலைப்பை காமெடி இலக்கியம் என்று மாற்றியிருக்கலாம்.

IMAGE COURTESY: http://picasaweb.google.com/thamizhstudio/13122010#

தொடர்புடைய பதிவுகள்

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 2

சாருவும் நோபல் பரிசும்

suresh kannan

Thursday, December 09, 2010

நந்தலாலா - குறியீடுகளுடன் ஓர் உரையாடல்.


 "முதன் முறையாக தமிழ் சினிமாவில் திரைமொழி சார்ந்த குறியீடுகள் 'நந்தலாலா'வில் மிக நுட்பமாக உபயோகப்படுத்தப் பட்டிருப்பதை" முந்தையதொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இத்திரைப்படம் குறித்த மற்ற இணைய பதிவுகளிலும் திரை மொழி சார்ந்த குறிப்புகளும் புரிதல்களும் இடம் பெற்றிருந்ததைக் காண மகிழ்ச்சி. வணிகநோக்குத் திரைப்படங்களை அணுகுவது போல அதிலிருந்து விலகி நிற்கிற மாற்றுத் திரைப்படங்களையும் தட்டையாக அணுகுவது சரியானதல்ல. கலையுணர்வு சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்கள், பார்வையாளர்களும் அப் படைப்பில் பங்கு கொள்ளும் படியான அவர்களுடன் உரையாடும்படியான  இடைவெளிகளையும் அடையாளங்களையும் ஏற்படுத்தி வைப்பார்கள். அவ்வாறான இடைவெளிகளை பார்வையாளன் தம்முடைய நுண்ணுணர்வு  மற்றும் அனுபவம் சார்ந்த புரிதல்களினாலும் யூகங்களினாலும் நிரப்பும் போதுதான் அந்தப் படைப்பு முழுமையடைகிறது.

இவ்வாறான குறியீடுகள் பார்வையாளர்களுக்கு அவரவர் அனுபவம் சார்ந்து வெவ்வேறு அர்த்தங்களையும் புரிதல்களையும் தரக்கூடும். ஒருவர் தம்முடைய புரிதலை அழுத்தமாக வெளிப்படுத்தும் போது அந்த நோக்கில் அதை அணுகியிருக்காத மற்றொருவர், தம்முடைய புரிதல் ஒருவேளை தவறோ என்று மயங்கத் தேவையில்லை. ஒரு படைப்பை இவ்வாறுதான் அணுக வேண்டும் என்று எந்தக் கறாரான விதிகளும் கிடையாது.

ஆனால் அதே சமயத்தில் இந்தக் குறியீடுகளுக்கான பொதுவான அர்த்தங்களை (இதில் பல நாம் ஏற்கெனவே அறிந்தவைதான்) உணர்ந்து அந்த நோக்கில் இந்தக் குறியீட்டுக் காட்சிகளை அணுகுவது நல்லது. உதாரணமாக ஒளியும் இருளும்ஒளி என்பது உண்மை, நம்பிக்கை, நனமை, புதியவழி, வெகுளித்தனம் ஆகியவற்றின் குறியீடாகக் கொள்ளலாம்.  மாறாக இருள் என்பது பொய், தீமை, வஞ்சம், அவநம்பிக்கை, நோய் போன்றவற்றின் குறீயீடாகக் கொள்ளலாம்.

ருஷ்ய இயக்குநர் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியின் திரைப்படங்களில் இம்மாதிரியான படிமங்களும் குறியீடுகளும் மிக வலுமையாக அதிபூடகமாக இருக்கும். Andrey Rublyov (1966) திரைப்படத்தில் படம் முழுவதும் குதிரை எனும் விலங்கு ஒரு படிமமாகவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். இதை ருஷ்ய கலாசாரத்துடன் இணைத்து புரிந்து கொள்வது சரியானது. படத்தின் இறுதியில் குதிரைகள் மழையில் நனையும் காட்சியை 'வாழ்வு எனும் நிலைக்கு' இணையானதாக தார்க்கோவ்ஸ்கி வர்ணிக்கிறார். மனதிற்கு மிக நெருக்கமானதாகவும் தோழமையானதாகவும் ருஷ்ய நிலவெளியை சுருக்கமாக விளக்கிவிடவும் குதிரை எனும் படிமம் அவருக்கு உகந்ததாக இருக்கிறது.

ஷோகே இமாமுராவின் (Shohei Imamura) The Eel திரைப்படத்தில் வரும் மனிதன் தொட்டியில் அடைக்கப்பட்ட மீனிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருப்பான். பிறன்மனையை நாடின மனைவியை கொலை செய்துவிட்டு சிறைத் தண்டனை முடிந்தவுடன் யாருமறியாத தனிமையில் தன் வாழ்வைத் தொடரும் மனிதன் அவன். இங்கு தொட்டி மீன் அவனது தனிமையையும் தனிமைப்படுத்துதலையும் குறிக்கிறது. ஆற்றுக்குள்ளோ கடலுக்குள்ளோ வசித்திருந்த  மீன் இப்போது தான் தொட்டிக்குள் இருப்பதை உணர்ந்திருக்குமா? சிறையிலிருந்து வெளிவந்த மனிதன் அதை விட பெரிய சிறையான சமூகத்திற்குள் நுழைவதற்காக மகிழ்ச்சியடைய வேண்டுமா அல்லது துயரம் கொள்ள வேண்டுமா போன்ற தத்துவார்த்தமான கேள்விகளையும் இக் குறியீடுகள் நம் முன் வைக்கின்றன.

இனி 'நந்தலாலா'வில் குறியீட்டுக் காட்சிகளை என் புரிதலோடு இங்கு பதிகின்றேன். இது உங்களின் புரிதலோடு மாறுபடலாம், ஒன்றுபடலாம் அல்லது இயக்குநரின் சிந்தனையோடு ஒப்பிடும் போது தவறாகவும் இருக்கலாம். இதில் ஒன்றும் பிரச்சினையில்லை. உண்மையில் இவைதாம் இதிலுள்ள புதிர்த்தன்மையை ரகசியத்தை அவிழ்க்கும் மகிழ்ச்சியை தருகிறது.

நல்லதொரு திரைப்படத்தை உருவாக்க ஓர் இயக்குநர் பல ஆண்டுகள் உழைக்கிறார். அதன் மையத்தை அவர் சிறுவயதிலிருந்தே சுமந்திருந்திருக்கலாம். அவர் மனதில் அது மெல்ல மெல்ல உருப்பெறுகிறது; சிதைகிறது ; வளர்கிறது. அது பல சமரசங்களைக் கடந்து இறுதி வடிவ திரைப்படமாக வருவதற்குள் பல பரிணாமங்களை அடைந்திருக்கலாம்.  அதை வெறும் இரண்டரை மணி நேரத்தி்ல் பார்த்து புரிந்து கொள்வது சாத்தியமில்லாதது.

எனவே இத்திரைப்படத்தை மீண்டுமொரு முறை பார்த்தேன். முதன்முறை பார்த்த போது என்னை நெகிழ வைத்த சில காட்சிகள் இம்முறை மொண்ணைத்தனத்தோடு கடந்து போனது குறித்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

இதில் மிஷ்கின் ஏற்றிருக்கும் பாஸ்கர் மணி என்கிற பாத்திரம் இளைஞனுக்கும் குழந்தைக்கும் உள்ள மனநிலையில் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. சுவற்றை தொட்டுக் கொண்டே நடப்பதும் வலது பக்கமாக சென்று பிறகு தீர்மானமின்றி அதற்கு எதிர்புறமாக நடப்பது குழந்தையின் மனநிலையைக் குறிக்கிறது. இறுதிக் காட்சியில் தாயைத் தேடி விரைவாக நடக்கும் போது திடீரென்று ஒரு வீட்டிற்குள் போய் அதன் கதவில் ஊஞ்சல் போல் விளையாடி விட்டு பின் தன் கடுமைக்குத் திரும்புகிறான். ரூபாய் நோட்டை வாங்காமல் சில்லறைக் காசை மாத்திரம் விரும்பி வாங்குவதும் குழந்தைமையின் அடையாளமே.

கோயில் கோபுரத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் கிழிந்த காற்றாடி, புதருக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கவர், சப்பாத்திக் கள்ளி, மரத்தின் சிக்கலான வேர்கள் போன்றவை பாஸ்கர் மணியின் மனம் பிறழ்ந்த நிலையையும் அதன் இருண்மையையும் தவிப்பையும் விளக்குகின்றன.

ஆனால் 20 வருடங்களாக வெளி உலகத்தையே பார்க்காமல் மனநல காப்பகததில் அடைக்கப்பட்டிருக்கும் ஒருவன் அதன் பாதிப்புகளோ தடயங்களோ எதுவுமின்றி வெளிசமூகத்தில் மிக சகஜமாக புழங்குவது இங்கு முரணாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் அவிழ்த்து விடப்பட்ட ஓர் எலியின் பதற்றமான உடல்மொழிதான் இங்கு பொருத்தமானது.

காப்பகத்திலிருந்து தப்பிக்கும் பாஸ்கர் மணி, அது வரை அணிந்திருந்த நோயாளி உடையை கழற்றி வீசி விட்டு (கோபத்துடன் அடிக்கவும் செய்கிறான்) காவலரின் உடையை அணிந்து கொள்கிறான். உண்மையில் அந்த உடை அவனது அப்போதைய நிலைக்கு எதிரானது . நாலு சுவற்றுக்குள் இருக்கும் போது தன் அத்தனை எதிர்மறை எண்ணங்களையும் இயல்பாக வெளிப்படுத்தும் மனிதன், பொது சமூகத்தில் நுழையும் போது அதற்கு எதிரான 'நல்ல' முகமூடியை அணிந்து கொள்வதை இக் காட்சி பகடி செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. பாஸ்கர் மணி, தன்னுடைய அடையாளத்தை விரும்பித் தொலைப்பதற்காக அந்த உடை அவனுக்கு உதவுகிறது. இதே போல் பள்ளிச்சிறுவனும் தன் அடையாள அட்டையை பையில் ஒளித்துக் கொண்டு தன் பயணத்தை துவங்குவதை காணலாம்.

பாஸ்கர் மணி ஏன் தன்னுடைய பேண்ட்டை இறுக்கப் பிடித்த படியே நடக்கிறான் என்பது பலரின் சந்தேகம்.

இது என்னுடைய புரிதல்.

அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன்தான் என்றாலும் அதன் ஆரம்ப நிலையில் இருப்பவன். பிரச்சினையின் மையத்தை ஆய்வு செய்து எளிதில் குணப்படுத்தி விடும் நிலையில்தான் உள்ளான். ஆடையை கழற்றி வீசுபவனாகவோ அல்லது நழுவுவது கூட தெரியாமல் நிர்வாணமாக இருப்பவனோ அல்ல. ஆடை அணிவதன் அவசியம் குறித்த தன்னுணர்வுடன் இருப்பவன். அதனால்தான் அவன் சமயங்களில் இயல்பான சராசரித்தனத்துடன் நடந்து கொள்ள முடிகிறது. இதை பார்வையாளனுக்கு உணர வைப்பதற்காக இந்த உத்தியை இயக்குநர் பின்பற்றியிருக்கலாம் என யூகிக்கிறேன்.

ஏன் மாணவிக்கும் சிறுவனுக்கும் கூழாங்கற்களை அளிக்கிறான் என்பதும் பலரின் கேள்வியாக இருந்தது. இது குறித்த என்னுடைய புரிதல்.

பாஸ்கர் மணி குழந்தை மனநிலையிலும் இருக்கிறான் என்று முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன் அல்லவா? இதுவும் அதன் வெளிப்பாடே. தீப்பெட்டிகளின் அட்டைகள், விதவிதமான கோலிகள், பம்பரங்கள் போன்றவற்றோடு இது போன்ற சேகரிப்பில் இருப்பவை கூழாங்கற்களும்.

மலையிலிருந்து உருண்டு உருண்டு வந்து இயற்கையே பளபளப்பாக்கித் தந்த இது அழகியலின் குறியீடு. சலசலவென்று ஓடிக் கொண்டிருக்கும் நீரின் அடியில் தியான நிலையில் உறைந்திருக்கும் கூழாங்கற்களின் அழகை எந்த வயதிலும் ரசிக்கலாம். இந்த மாதிரியான சேகரிப்பையெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் பொக்கிஷம் போல் ஒளித்து வைத்த விளையாட்டுத்தனங்கள் இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அபத்தமாய்த் தெரியலாம். நண்பர்கள் விரும்பிக் கேட்டாலும் கூட எவரிடமும் பங்கு போட மனம் வராது. வேண்டுமானால் நம்மிடம் இல்லாத ஒன்றை நண்பனிடம் வாங்கி அவனுக்குத் தேவையானதை கொடுக்கும் பண்ட மாற்று வர்த்தகம் வேண்டுமானாலும் நடக்கும். விளையாட்டுத் தோழன் பிரிந்து விலகப் போகிறான் எனும் போதுதான் நம் பொக்கிஷங்களிலிருந்து அவனுக்குப் பிரியமானதை தரும் மனது வரும்.

இத்திரைப்படத்தில் பாஸ்கர் மணி, இரண்டு முறை கூழாங்கற்களைப் பரிசளிக்கிறான். தமக்கு உதவி செய்யும் பள்ளி மாணவியை பிரியும் சமயத்தில் எங்கோ ஒளித்து வைத்திருக்கும் கூழாங் கற்களை பரிசளிக்கிறான். இரண்டாவது முறை தன் வீட்டைக் கண்டுபிடித்தவுடன் சிறுவனை பிரியும் உணர்த்தும் விதமாக அவனுக்கு கூழாற்கற்களை பரிசளிக்கிறான்.

இதில் இரண்டு விஷயங்கள் நமக்கு புலனாகிறது. அவன் தன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கூழாங்கற்களை தேடி எடுக்கும் போது அது அவனது வீடு என்பது பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இரண்டு அந்தக் கற்களை அவன் ஏதோ அரை மணி நேரத்திற்கு முன்புதான் ஒளித்து வைத்தது போல அத்தனை இயல்பாக எடுத்து வருவது அவன் அப்போது அவனுடைய பால்ய காலத்து நினைவில் இருக்கிறான் என்பதும் நமக்குத் தெரிகிறது. இதில் கூழாங்கற்கள் என்பது நட்பின் குறியீடாக எனக்குத் தெரிகிறது.பள்ளி மாணவியிடன் ஏற்பட்ட குறுகிய நேர நட்பில் பாட்டுப் பின்னணியுடன் உப்புமூட்டை தூக்கி விளையாடுமளவிற்கு நெருங்குவது அதீதம்தான் என்றாலும் உப்புமூட்டை விளையாட்டும் குழந்தைமையை வெளிப்படுத்தும் மனோநிலையே. இறுதிக் காட்சிக் கோர்வையில் தன்னுடைய தாயையும் மருத்துவத்திற்காக அவன் உப்பு மூட்டை தூக்கிச் செல்வதை கவனிக்கும் போது இந்த மாணவியையும் அவன் தாய்மை வழியும் உணர்வுடன்தான் அணுகுகிறான் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

தாய்மையைத் தேடும் பயணம் என்பதால் படத்தின் பல இடங்களில் தாய்மை சார்ந்த குறியீடுகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கதறிக் கொண்டிருக்கும் குழந்தைகள், சினையுடன் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு, இறுதிக்காட்சியில் நரிக்குறவன் வரும் போது அவர்கள் அமாந்திருக்கும் ஆலமரமும் அதன் விழுதுகளும் போன்றவை தாய்மையின் அடையாளங்கள். பெரும்பாலான பிரேம்களில் இளைஞன், சிறுவன், பாலியல் தொழிலாளி ஆய்த எழுத்தானபோல நிற்கும் காட்சிகள், முறையே அப்பா, அம்மா, குழந்தை எனும் ஓர் குடும்ப அமைப்பின் இழந்து போன ஏக்கத்தை அவர்கள் வெளியிடுவதாக தோன்றுகிறது.

பாலியல் தொழிலாளியை கடத்திப் போக முயலும் வண்டியின் சிவப்பு நிறம் அபாயத்தையும், வன்முறையையும், தீமையையும் குறிக்கிறது. அதில் வரும் கைத்தடியுடன் வரும் கிழவனின் உடல்மொழி சாத்தானை ஒத்ததாக இருக்கிறது.

வண்டியில் வருபவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஸ்கர் மணியை நையப் புடைக்கும் போது அவர்களை கூக்குரலிட்டு தடுக்க முயலும் பாலியல் தொழிலாளி தலைவிரி கோலமாக ஒரு கையில் கல்லுமாக கண்ணகி தோற்றத்தில் நிற்கிறாள். ஒரு பாலியல் தொழிலாளி  கண்ணகியை நினைவுப்படுத்தும் தோற்றத்தில் நிற்க வைத்திருப்பதின் மூலம் இயக்குநர் சொல்லும் செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றவர்களை துன்புறுத்திக் கொண்டேயிருக்கும் வன்மக்காரர்களை, பாதிக்கப்பட்டவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் இயற்கையே (கடவுள்) அவர்களைத் தண்டிக்கும் என்பது நமது பூர்விக நம்பிக்கை. பாலியல் தொழிலாளியைத் துன்புறுத்துவதற்காக துரத்தும் வன்முறை கும்பல், நாசரின் வண்டி காரணமாக கவிழ்ந்து விடுவது கவித்துவமான நீதி. சமயங்களில் நமக்கே தெரியாமல் இயற்கையின் (கடவுளின்) கருவியாக நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவது நாசர் வரும் காட்சிகள்.

அவர்கள் ஆலமரத்தடியில் அமர்ந்து நரிக்குறவனுக்காக காத்திருக்கும் போது சிறுவன் மீண்டும் கேட்கிறான் "அம்மாவைப் பாக்க போலாமா?" அவனுடைய அம்மா இன்னொரு குடும்பத்துடன் இருக்கும் உண்மை பாஸ்கர் மணிக்குத்தான் தெரியும். சிறுவனிடம் என்ன சொல்வது என்று யோசிக்கிறான். அப்போது அவனுடைய கண்கள் நரிக்குறவன் வைத்து விட்டுப் போகும் காகம் மற்றும் கொக்கின் இறந்த உடல்கள் மீது நிலைக்கின்றன.

முன்னரே பார்த்தபடி வெள்ளை என்பது உண்மையின் நிறமாகவும் கறுப்பு என்பதை பொய்யின் நிறமாகவும் அறியலாம். எனவே சிறுவனிடம் உண்மையைச் சொல்வதா பொய்யைச் சொல்வதா என்கிற குழப்பம் குறியீடுகளாக அவன் முன் நிற்கிறது. பாஸ்கர் மணி கறுப்பைத் தேர்ந்தெடுக்கிறான். "உங்க அம்மா செத்துப் போயிட்டா".

சிறுவன் அவனுடைய தாய் வீட்டைத் தேடி ஒவ்வொரு வீடாக அலைபாய்ந்து கேட்கும் போது பாஸ்கர் மணியின் நிழல் அவனுக்கு தவறான திசையைச் சுட்டிக் காட்டுகிறது. நிழல் = இருள் = பொய் என்பதறிக.

சிறுவனின் தாய் தங்கியிருக்கும் வீடு மற்றும் பாஸ்கர் மணியின் தாய் தங்கியிருக்கும் வீடு  என்று இரண்டு வீடுகளுக்கான தேடல்களின் போதும் பெரும்பாலான வீடுகள் வெள்ளை நிறத்தில் உள்ளன. இரண்டு பேருமே தங்கள் தாயைக் கண்டடைவது என்கிற உண்மையைத் தேடி அலைகிறார்கள். வெள்ளை நிறம் உண்மையைக் குறிப்பது. இருக்கிற அத்துணை உண்மைகளில் தன்னுடைய உண்மை எது என்கிற தேடலை அது குறிப்பதாயக் கருதலாம்.

மனநிலை பாதிப்பிலிருந்து பாஸ்கர் மணி எப்படி இறுதிக் காட்சியில் சராசரி மனிதனாக ஆகி விடுகிறான் என்பது சிலரது கேள்வியாக இருந்தது. எளிதில் யூகிக்கக்கூடியது இது. அதுவரை தன்னுடைய தாயை அறைந்து விடும் கோபத்திலிருக்கும் பாஸ்கர் மணி (உண்மையில் அது கோபமல்ல, தான் புறக்கணிக்கப்பட்டதின் மீது எழுந்த சுயபச்சாதாபம்) தன்னை விடவும் மோசமான மனநிலை பாதிப்பிலிருக்கும் தாயைக் கண்டவுடன் உருகி அவளை சுத்தப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைதது விடைபெறுகிறான். அதுவரை அவன் பாதுகாத்து வைத்திருந்த கோப உணர்ச்சி அனைத்தும் வடிந்து போகிறது.  தாயைச் சந்தித்த கணத்திலிருந்தே, பித்து நிலையில் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த அவன் குரல், சாதாரண நிலைக்கு மாறிவிடுவதை கவனித்திருக்கலாம்.

அவன் ஏன் அந்தப் பாலியல் தொழிலாளியை திருமணம் செய்துக் கொண்டு மூவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்கக்கூடாது என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். படத்தின் இறுதியில் சுபம் போடும் போது கூட்டுக் குடும்பமாக அனைவரும் சிரித்து நிற்கும் திரைப்படங்களை பார்த்து பார்த்து இது நமக்குத் தோன்றியிருக்க வேண்டும். யதார்த்த வாழ்க்கையில் அப்படி நிகழ முடியாத அளவிற்கான சூழல்களும் சங்கடங்களும் இருக்கலாம். நாம் நினைக்கும் படி பாத்திரங்கள் இயங்க வேண்டும் என்றும் அப்படியில்லாத பட்சத்தில் அதிருப்தி கொள்வதும் நல்ல பார்வையாளனுக்கு அழகல்ல.

பாஸ்கர் மணி சிறுவனின் தாயைச் சந்திக்கப் போகும் போது 'உங்க அம்மா எனக்கும் முத்தம் தருவாளா?' என்று களங்கமில்லாமல் கேட்கிறான்.  அவளுக்கு தருவதாக செடியிலிருக்கும் செம்பருத்திப் பூவை பறித்துச் செல்கிறான். பின்னர் அது  கீழே விழுந்து கிடக்கும்  ஒன்று குளோசப் ஷாட்டில் காண்பிக்கப்படுகிறது. படத்தின் இறுதியில் சிறுவனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் 'புது அம்மாவும்' அதே வகையான சிவப்பு நிற பூவை  அணிந்திருப்பதை காண முடியும். முன்னர் பார்த்திருந்த காட்சியின் தொடர்ச்சியின் பல நிமிடங்கள் கழித்து இன்னொரு காட்சியோடு தொடர்புப்படுத்தும் உத்தியிது.இந்தப் படம் முழுவதும் தாய்மையைத் தேடுகிற உள்ளடக்கமாக மேலுக்குத் தெரிந்தாலும் அதைத் தேடி அலைகிற அந்த பயணம்தான் எனக்கு இத்திரைப்படத்தின் பிரதான அம்சமாய்த் தோன்கிறது. தொடர்ந்து வரும் நீளமான சாலைகள் அதற்கான பொருத்தமான குறியீடாக அமைந்திருக்கின்றன. மரவட்டை முதல் மனிதர்கள் வரை எங்கெங்கோ பயணம் செய்துக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் பயணங்கள் நம் அகவுணர்வுகளை விசாலாமாக்குகின்றன. இயந்திர வாழ்வின் இறுக்கத்தை தளர்த்துகின்றன. அடிக்கடி பயணம் செய்ய நேர்பவர்கள் பிறருக்கு எளிதில் உதவுபவர்களாகவும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் உள்ளவர்களாகவும் இருப்பதை வைத்து சூழலை அனுசரிக்கும் பண்புள்ளவர்களாகவும் இருப்பதை நடைமுறையில் காணலாம். (விமானத்தில் பயணம் செய்து நட்சத்திர ஓட்டலில் தங்கித் திரும்புவர்களைச் சொல்லவில்லை. சமூகத்தின் அனைத்து வித மனிதர்களையும் சந்திக்கும் அனுபவங்களைத் தரும் பயணங்கள்).

எப்போதாவது பயணம் செய்பவர்கள் கூட எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களை வெறுப்புடன் நோக்கத் துவங்கி, பின்பு அவர்களுடன் முகவரி பரிமாறிக் கொள்ளும் வரை சகஜமாகி விடுவதை நாமும் கூட உணர்ந்திருக்கலாம். நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் மேற்கொள்கிறவர்கள் (குறிப்பாக லாரி டிரைவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், வணிகர்கள்) மனித நேயம் மிக்கவர்களாக இருப்பதைக் காணலாம். ஊருக்குப் போக காசில்லை என்று நடுவழியில் புலம்பும் மனிதர்களின் வலியை அவர்களால் நெருக்கமாக உணர்ந்து கொள்ள முடியும். சந்தேகப்படாமல் இயன்ற பணத்தை தந்து உதவுவார்கள். இதையே வைத்து ஏமாற்றும் நபர்களையும் அவர்களால் எளிதில் அடையாளங் காண முடியும். மனிதர்களை வாசிக்கவும் பயணங்கள் உதவி புரிகின்றன.

அவ்வகையில் பாஸ்கர் மணியும் சிறுவனும் தங்களின் பயணங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களை நம்மாலும் உணர முடிகிறது. அவ்வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த 'சாலை சினிமா'க்களில் (Road movies) இதையும் குறிப்பிட முடியும். (இன்னொரு 'சட்' உதாரணம் 'அன்பே சிவம்).

மற்ற மொழிகளில் Kikujiro (1999)  La Strada (1954)  About Schmidt (2002) The Motorcycle Diaries (2004) Le Grand Voyage (2004) Paris, Texas (1984) ஆகியவை நினைவுக்கு வருகின்றன.

நந்தலாவின் மூலப்படமான கிகுஜிரோவில் துயரம் ஒர் அடிநாதமாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதிலிருந்து வெளிவருவதற்கான கொண்டாட்ட மனநிலை படம் முழுவதும் வழிந்து கொண்டேயிருக்கிறது. அதில் பயணம் என்பதுதான் பிரதான குறியீடு என்பது தெளிவாக தெரிகிறது. படத்தின் இறுதியில் கிகுஜிரோ, சிறுவனிடம் 'இதை மறுபடியும் செய்யலாம்' என்று ஒரு விளையாட்டை குறிப்பிடுவது போலவே பயணத்தை குறிப்பிடுகிறார். ஆனால் நந்தலாலா கொண்டாட்டங்களின் மனநிலையைக் கொண்டிருந்தாலும், தமிழ் சினிமா ரசிகனின் மனநிலையைக் கருத்தில் கொண்டோ என்னவோ,  தாய் சென்டிமென்ட், அழுகை, பாலியல் தொழிலாளியின் வாதை போன்றவைகளைக் கொண்டு துயரத்தையே பிரதானமாக முன்வைக்கிறது.

()


மேற்சொன்ன குறியீட்டின் புரிதல்கள் 'ரூம் போட்டு யோசித்த" என்னுடைய அதீத கண்டுபிடிப்புகளாகக் கூட இருக்கக்கூடும். இயக்குநரே யோசித்திருக்காத, தன்னிச்சையாகவோ தற்செயலாகவோ அமைந்த காட்சிகளைக் கூட என்னுடைய தர்க்கச் சட்டகத்தில் பொருத்தி மகிழ்ந்திருக்கலாம். பரவாயில்லை. இவற்றை ஒரு பயிற்சியாகவே பழகினால் இயக்குநரின் அலைவரிசையோடு இணைந்து படைப்பை அணுகுகிற இன்னும் அவற்றை நெருக்கமாய் ஸ்பரிசிக்கக்கூடிய அனுபவங்கள் கிட்டக்கூடும். மனமகிழ்ச்சிக்காக பார்க்கிற திரைப்படங்களை இத்தனை சிரமத்துடன் பார்க்க வேண்டுமா என்று கேட்கிற நண்பர்களுக்கு: ராஜேஷ்குமாரை வாசிக்கிற அதே மனநிலையில் ஜேம்ஸ் ஜாய்ஸை வாசிக்க முடியாது. அதற்கான உழைப்பைச் செலுத்தியே ஆக வேண்டும். அதுவே அந்த படைப்பாளனுக்கு நாம் தருகிற மரியாதை.

இந்தப் படத்தின் பின்னணி இசை குறித்து முந்தைய பதிவில் எழுத எனக்கு சில தயக்கங்கள் இருந்தன. வழக்கமாக ராஜாவை வெகுவாக சிலாகிக்கும் நண்பர்கள் கூட இம்முறை என்னிடம் பேசும் போது சற்று சங்கடத்துடனே பேசினார்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் மேலோட்டமாக பேசினாலே பல ஆபாசமான வசைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல்தான் இங்கு நிலவுகிறது. இசையை ரசிக்கிற உன்னதமான மனநிலையும் மாற்றுக் கருத்தை முன்வைக்கிறவனுக்கு அதற்கான வெளியைத் தராமல் வன்மத்துடன் வார்த்தைகளை இறைக்கும் மனநிலையும் எப்படி ஒருங்கே இணைந்து செயல்பட முடியும் என்று எனக்கு ஆச்சரியமாய் இரு்க்கிறது.

இந்தியச் சினிமாவில் ராஜாவின் பின்னணி இசை ஒரு மகத்தான சாதனையாக இருக்கிறது / இருந்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக ராஜா மாத்திரமே கொண்டாடப்பட வேண்டியவர் என்பதும் அவரின் இசை பற்றி எதிர்மறையாக யாரும் பேசக்கூடாது என்பதும் முறையானதல்ல. ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் ரத்னா கபேயின் இட்லி சாம்பாரை உண்டு, அதுதான் உலகத்தின் மிகச் சிறந்த உணவு என்று தீவிரமாக நம்புவானாயின் அது அவனது பிரச்சினை. (இந்த விஷயத்தில் இன்று தமிழன் இட்லியை கைவிட்டு பிட்ஸா வகையாறாக்களுக்கு தாவி பல வருடங்களாகி விட்டது). நம்முடைய கிணற்றுத் தவளைத்தனத்தை பறைசாற்றிக் கொள்ளவே இவை பயன்படும்.

நந்தலாலாவின் பின்னணி இசையையும் கிகுஜிரோவிற்கு இசையமைத்த Joe Hisaishi-ன் இசையையும் ஒரு பயிற்சியாகக் கூட கேட்டுப் பார்க்கலாம். கிகுஜிரோவில் தேவையான இடங்களில் மாத்திரமே பியானாவின் மெல்லிசை சலசலத்துக் கொண்டிருக்கிற நீரின் ஓசையைப் போல வழிகிறது. ஆனால் நந்தலாலாவில் ராஜா சில இடங்களில் தன்னுடைய மேதைமையை பார்வையாளனுக்கு உணர்த்தியிருந்தாலும், தேவையில்லாத இடங்களில் தன்னுடைய இருப்பை காண்பித்துக் கொண்டேயிருக்கிறார். படத்தை இரண்டாவது முறையாக பார்க்கும் போது இதை தெளிவாகவே உணர்ந்தேன். பல இடங்களில் எரிச்சலாகக் கூட இருந்தது.

இறுதியாக..

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது வெவ்வேறு அனுபவங்களையும் மனத்திறப்புகளையும் அளிப்பது ஒரு செவ்வியல் திரைப்படத்தின் அடையாளம். அந்த வகையில் நந்தலாலாவும் ஒரு செவ்வியல் படைப்பின் கூறுகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள ஆறுதலான விஷயம்.

இன்னொரு ஆறுதலான விஷயமும் இருக்கிறது. இத்திரைப்படம் குறித்து நான் எழுதும் கடைசிப் பதிவு இது என்பதுதான் அது.

image courtesy: original uploader

suresh kannan

Monday, December 06, 2010

அம்பேத்கர்: அறிவுஜீவி அரசியல்

"இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்த தளத்திலேயே இருக்க வேண்டியதுதான்."

- அம்பேத்கர், பத்திரிகை தலையங்கத்தில்

 'தசாவதாரம்' திரைப்படத்தில் ஒரு காட்சி. மணல் கொள்ளை  அரசியல்வாதியிடம் பர்மிட்டை காண்பிக்கச் சொல்லி ஒரு தலித் அமைப்பு கேள்வி எழுப்பும். "உங்கள்ல படிச்சவங்க யாருடா இருக்கா?" என்பார் அரசியல்வாதி. 'அதெல்லாம் அந்தக் காலம். இப்பம் எங்கள்ல படிக்காதவங்க ஒருத்தனையாவது காமி பாப்போம்" என்று பதிலடி கொடுப்பார்கள். 

இவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே அடித்தளம் போட்ட அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டாக்டர்.பாபா சாஹேப் அம்பேத்கர். இந்தியாவின் தாழ்ததப்பட்ட மக்களின் முதல் பட்டதாரி வழக்கறிஞர்.  வாழ்வின் பெரும்பான்மை முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சமூக விடுதலைக்காகவும்  சிந்தித்தவர்; போராடினவர். தீண்டாமை ஒரு சமூகக் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டதிற்கான காரணகர்த்தா.

அம்பேத்கர் குறித்து NFDC தயாரித்து 1998-ல் உருவாக்கப்பட்டு 2000-ல் வெளியான திரைப்படமொன்று தமிழ் மொழி மாற்றத்துடன் சமீபத்தில் வெளியாகியிரு்ககிறது. 1998-ன் சிறந்தபடத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அம்பேத்கராக நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும் நிதின் சந்திரகாந்த் தேசாய்க்கு சிறந்த ஆர்ட் டைரக்டர் விருதும் கிடைத்தன. காந்தி படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற பானு அதையா இதில் பணியாற்றியுள்ளார்.

ஒரு திரைப்படத்தின் மூலம் இத்தனை பெரிய ஆளுமையின் முழு பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாதென்றாலும், அறியாமலே இருப்பதற்கு பதிலாக இதிலிருந்து துவங்குவதற்காவது இந்தத் திரைப்படம் உதவும்.  மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒர் அமைப்பு  உருவாக்கின படத்தைக் காண மக்களே போராட வேண்டிய அவலமான சூழல். பத்து வருடங்களுக்கு முன்பாகவே உருவான திரைப்படத்தை சமீபத்தில்தான் காணும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு, அதுவும் சொற்ப திரையரங்குளில், காலை நேரத்தில். சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி.

கோடிக்கணக்கான ரூபாயில் தயாராகும் வணிகக் குப்பை திரைப்படங்கள் நிமிடத்திற்கொரு முறை விஷ அம்பாக நம் மூளைகளில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அபத்தமான சூழலில் அரசே முன்வந்து வரிவிலக்கு அளித்து மக்களிடம் இதை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். அதுசரி.  'பெண் சிங்கத்திற்கும்' 'மானாட மயிலாட' போன்றவைகளின் முன்னால் அம்பேத்கர் அப்படியொன்றும் அவசியமானவர் இல்லைதானே?

சரி. இப்போது அம்பேத்கர் திரைப்படத்திற்கு வருவோம்.

வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். சுமார் பத்து வருடத்திற்கு முன்பு உருவான திரைப்படத்தை இப்போது பார்ப்பதில் சில தயக்கங்கள் எனக்கு இருந்தன. ஒளிப்பதிவு எப்போது இருக்குமோ, அது நன்றாக இருந்தாலும் பிரிணட் எப்படி இருக்குமோ, முக்கியமாக தேசத் தலைவர்களின் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் பல எனக்கு அதிருப்தியையே தந்திருக்கின்றன. (காந்தி போன்றவை தவிர). சமீபத்தில் வெளியான பெரியார், காமராஜர் போன்று, எங்கே இதுவும் மோசமான உருவாக்கமாக இருக்குமோ என்று எணணிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அத்தனை தயக்கங்களையும் தகர்த்து விட்டு இத்திரைப்படம். இந்த வருடம்தான் எடுத்தது போல் அத்தனை புத்தம் புதிதான வெளித்தோற்றத்துடனும் உள்ளடக்கத்துடனும் இருக்கிறது. தேசத் தலைவர்கள் குறித்த திரைப்படங்கள் என்றாலே, பொதுவாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவும் சமுதாயத் தொடர்பைப் பற்றி மேலோட்டமாகவும் இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அம்பேத்கரின் அரசியல் குறித்த நிகழ்வுகளும் அது குறித்த உரையாடல்களும் முக்கியத்துவத்தோடு பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த அரசியல் ரீதியான முரண்பாடு அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

'காந்தி ஒரு சந்தர்ப்பவாதி அரசியல்வாதி' என்பது மாதிரியான காந்தி குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் விமர்சனமெல்லாம் அப்படியே பதிவாகியிருக்கிறது. சென்சாரில் எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. 'மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது' என்கிறார் அம்பேத்கர்.

' காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து போராட்டம் செய்கிறாராம்' என்று தகவல் தருகிறார் நண்பரொருவர். அதற்கு அம்பேத்கர் சொல்வது 'அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு".

பரோடா சமஸ்தானம் அளிக்கும் உதவித் தொகையின் மூலமாக நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைகழகத்தில் அம்பேத்கர் கல்வி பயிலும் காட்சியோடு படம் துவங்குகிறது. 'இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது' என்று கேட்கிறார்கள். 'நான் இங்கு வந்தது கல்வி பயில்வதற்காக. இப்போது அதைத்தான் முழுக்கவனத்துடன் செய்வேன்' என்கிறார் அம்பேத்கர். சமஸ்தானம் உதவியை நிறுத்திக் கொள்ள வேறு வழியின்றி இந்தியா திரும்புகிறார். அங்கு வரவு செலவு அதிகாரியாக பணி கிடைத்தாலும் தங்குவதற்கான இடம் கிடைக்கவில்லை.

தீண்டாமை என்னும் கருநாகம் அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து அவரைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. மஹர் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த பாவத்திற்காக ஆதிக்கச் சாதியினர் எல்லா இடத்திலும் அவரை மறுக்கின்றனர். பார்சி இனத்தவர்களுக்கான சத்திரத்தில் கெஞ்சிக் கூத்தாடி தங்குகிறார். ஆனால் சில நாட்களிலேயே இதை கண்டுபிடித்து பார்சிக்காரர்கள் தடி,கம்புகளுடன் வந்து அவரைத் துரத்துகின்றனர்.

தமக்கு வேலையளித்த மகாராஜாவிடமே இது குறித்து முறையிடுகிறார். 'உனக்கு வேலை தந்ததே நான் செய்த புரட்சி. மேலும் உன்னை ஆதரித்தால் எனக்கு தொல்லை ஏற்படும்' என்கிறார் மகாராஜா.

சுயபச்சாபத்தினால் ஒரு பூங்காவில் அமர்ந்து அம்பேத்கர் அழும் காட்சி ஒரே ஒரு முறை காட்டப்படுகிறது. இது போல் எத்தனை முறையோ? கல்வி எனும் சாதனம் சமூக விடுதலையைத் தேடித் தரும் என்பது பொதுவான கருத்தானாலும் அது மாத்திரமே உதவாது என்பது அவருக்கு தெளிவாக புரிந்து போகிறது. தங்களுக்கான உரிமைகளை தாங்களேதான் போராடி பெற வேண்டும்.

நீருக்கும் தீண்டாமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது போலும்.

இயற்கை அனைவருக்கும் பொதுவாக அளித்துள்ள நீரை ஆதிக்கச் சாதிக்காரர்களே ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். பணியிடத்தில் அவருக்கு கீழ் பணிபுரிகிற ஆதிக்கச் சாதிக்காரன் அவருக்கு தண்ணீர் கொண்டுவர தர மறுக்கிறான்.

கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிற சமயத்தில் அவர் தண்ணீர் அருந்த முயல்வதை மற்ற பேராசிரியர்கள் தடுக்கின்றனர். "வேண்டுமானால் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்' என்கிறார்கள். 'நான் அருந்தும் நீர் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதுவீர்களானால் அவரவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள்தான் நீர் கொண்டு வர வேண்டும்' என்று பதிலடி தருகிறார் அம்பேத்கர். மேலும் 'நீர் தீட்டுப் பட்டு விட்டால் அதைப் போக்கும் மந்திரம்தான் உங்களுக்குத் தெரியுமே. அதைக்கொண்டு நீரை சுத்தப்படுத்திக் கொள்ளுங்களேன்' என்று அவர்களின் மூக்கை உடைக்கிறார். சம்பந்தப்பட்ட மந்திரத்தையும் ஸ்பஷ்டமாக உச்சரித்துக் காட்டுகிறார்.

மக்களிடம் அவர்களின் விழிப்புணர்விற்கான செயற்பாட்டைத் துவங்கியதுமே அவர் முதலில் கையிலெடுக்கும் போராட்டம், நகர சபையினால் அங்கீரிக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிற குளங்களில் நீர் அருந்தும் போராட்டம்தான்.

பம்பாயிலிருக்கும் பிராமண எதிர்ப்புச் சங்கமொன்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்புகிறது. ஆனால் பிராமணர்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. அம்பேத்கர் தெளிவாக இதை மறுத்துவிடுகிறார். 'பிராமணர்கள் மாத்திரமல்ல, அதற்கு அடுத்தடுத்த அடுக்குகளில் இருக்கும் சாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கும் போது பிராமணர்களை மட்டும் எதிர்ப்பது முறையாகாது' என்பது அவரின் நிலைப்பாடு.

மேற்படிப்பைத் தொடர்வதற்காக மீண்டும் லண்டன் பயணம். இந்தியாவில் தீண்டாமையினால் அல்லறுவது போல அங்கே இனவெறியினால் கிடைக்கிற துன்பம். ஏழ்மை வேறு. ஆனால் எதுவுமே அவரின் கல்வித்தாகத்தை தடுக்க முடியவில்லை. இந்தியாவின் சாதிஅமைப்புகள் குறித்தான ஆய்வுக் கட்டுரை பல்கலைகழகத்தால் ஏற்கப்பட்டாலும் அதன் கடுமையான மொழிநடை அவர்களை பதட்டமடையச் செய்கிறது. மாற்றி எழுதித் தரச் சொல்கிறார்கள். தன் தோழியிடம் இது குறித்து ஆத்திரத்துடன் உரையாடுகிறார். "என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கிறாள் அவள்.

அம்பேத்கர் சொல்கிறார்: 'திருத்துவேன்'. இரு பொருள்பட என் காதில் ஒலிக்கிறது இது.

மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் முழு மூச்சாக தன் சமூகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். காந்தி சைமன் கமிஷனை புறக்கணிக்கிற போது அம்பேத்கர் அங்கு சென்று இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடுமையை விளக்கிச் சொல்லி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை முன்வைக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் எனினும் அவர்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களை தனியாக பிரித்தால், சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடைவெளி இன்னும் தீவிரமாகி இரு பிரிவுகளுக்கான ஒற்றுமை சாத்தியப்படவே படாது என்பது காந்தியின் நிலைப்பாடு.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீடிக்கிற தீண்டாமைக் கொடுமை அடுத்து வரும் சில வருடங்களில் தீரப் போவதில்லை என்பது அம்பேத்கரின் யதார்த்தமான வாதம். (அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் இன்றும் கூட காலாவதியாகிவிடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது). முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் கூட தொகுதி ஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்கிற காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதை மறுப்பது என்ன நியாயம் என ஆவேசமாக முழங்குகிறார் அம்பேத்கர்.  தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களின் இனவெறி தாக்குதல்கள் குறித்து தெளிவாக அனுபவித்திருக்கிற காந்தி, இந்தியாவில் அதே நிலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது பொருத்திப் பார்க்காமல் வசதியாக மறந்து விடுவது ஏன்? என்பதும் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்வி. (ஆனால் சுதந்திர அறிவிப்பின் போது 'பாகிஸ்தான்' குறித்த ஜின்னாவின் கோரிக்கையை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளாதது குறித்து நெருடல் ஏற்படுகிறது. முஸ்லிம்கள் குறித்த அம்பேத்கரின் தீவிரமான விமர்சனங்கள் படத்தில் வெளிப்படவில்லை. சென்சாரில் துண்டிக்கப்பட்டதா என தெரியவில்லை.)

அம்பேத்கர் முன்வைக்கும் கோரிக்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார். பெரும்பான்மையான மக்களின் வெறுப்பு அம்பேத்கரின் மீது படிகிறது. காங்கிரஸூக்கு எதிராக செயல்பட்டு பிரிட்டிஷ்ஷாருடன் பேச்சு வார்த்தை நடத்தும் அவரை 'தேசத் துரோகி' என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.

'தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களின் தொகுதி ஒதுக்கீடு குறித்தான அவசியத்தை காந்தியிடம் விவாதிக்கிறார். 'தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இந்துக்களிடம் பிரிவினை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை' என்கிற அதே பல்லவியை பாடுகிறார் காந்தி. '5 வருடங்கள் அவகாசம் கொடுங்கள். அதற்குள் மக்கள் மனம் மாறுவார்கள்'

இத்தனை வருடங்களாக ஏற்படாத மாற்றம் சில வருடங்களில் ஏற்படும் என்பதை அம்பேத்கர் ஏற்கத் தயாராக இல்லை. 'தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற நிலையில்தான் ஆதிக்கச் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்தாமல் இருப்பார்கள்'. உண்ணாவிரதம் காரணமாக காந்தியின் உயிருக்கு ஆபத்து நேரிடும் போது எல்லாத் திசைகளிலிருந்து நெருக்கடியும் அழுத்தமும் கூடுகிறது. வேறு வழியின்றி காந்தியை சந்தித்து தம்முடைய சமரசங்களை முன்வைக்கிறார். விடைபெறும் போது காந்தியிடம் சொல்கிறார். 'காந்திஜி, அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்'. 

தாம் நிற்கிற நிலையிலிருந்து விலக மறுக்காத காந்தியின் பிடிவாதமும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளை முழுக்க புரிந்து கொள்ள விரும்பாத அவரின் மீது அம்பேத்கர் கொள்கிற எரிச்சலும் முரணும் இத்திரைப்படம் முழுக்க பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் மனதின் ஆழத்தில் காந்தி மீது இவர் வைத்திருக்கிற மரியாதையும். காந்தி உண்ணாவிரதமிரு்க்கிற சமயத்தில், தம்முடைய உணவை திருப்பி அனுப்பி விடுவதின் மூலம் இதை உணர முடிகிறது. 

தம்முடைய சமூகப் போராட்டத்திற்கு தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக இருப்பதே கசப்புடன் உணர்கிறார். 'தீண்டத்தகாதவன்' என்று தங்கள் மீது அழுத்தமாக குத்தப்பட்டிருக்கும் முத்திரையை இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே நீக்க முடியும் என்று நம்புகிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடும் போது தேர்தல் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடத்த முண்டியடிப்பது போன்று மற்ற மதங்களின் தலைவர்கள் பேரத்திற்கு வருகின்றார்கள். அவரை இந்து மதத்திலேயே தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் நடைபெறுகிறது. பலத்த ஆலோசனைக்குப் பின் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலிருப்பதாக அவர் நம்புகிற பெளத்த மதத்தை தேர்ந்தெடுக்கிறார்.

சுமார் ஐந்து லட்சம் மக்களோடு அவர் பெளத்த மதத்தை தழுவுவதோடு படம் நிறைகிறது.  

சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பும் அவரைத் தேடிவருகிறது. இந்த ஆலோசனையை நேருவிடம் முன்வைப்பவர் காந்திதான். எந்த இடையூறுமில்லாமல் இதைச் செய்யலாம் என்கிற நேருவின் உத்தரவாதத்துடன் அதை ஏற்றுக் கொள்கிறார் அம்பேத்கர். குழுவிலுள்ள மற்ற நபர்கள் பல்வேறு காரணங்களினால் செயல்படாத நிலையில் தனியொருவராக இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கிறார். ஆனால் இந்து சட்ட மசோதா குறித்த பகுதிகளை நேரு ஏற்றுக் கொண்டாலும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இதனால் ஏமாற்றமும் கசப்பும் கொள்ளும் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.

அம்பேத்கரின் தனி வாழ்க்கையும் இடையிடையில் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு கல்வி தொடர்பான காட்சிகளின் இடையில் சிறுவயதில் அவர் சந்திக்க நேர்ந்த தீண்டாமைக் கொடுமைகள் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவரது மனைவியான ரமாபாய் (சோனாலி குல்கர்னி) ஒரு சாதாரண குடும்பத்தலைவி. கல்விக்காகவும் போராட்டத்திற்காகவும் தன்னை விட்டு பெரும்பாலும் விலகியே இருக்கிற கணவனின் அருகாமைக்கு ஏங்குகிறவர். எக்காரணம் கொண்டும் தன் குழந்தைகளின் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அம்பேத்கர்.

உடல் நலிவுற்று ரமாபாய் இறக்கும் காட்சி உருக்கம். 'வெளியே மழை பெய்கிறதா' என்று பிதற்றுகிறார் ரமாபாய். பாவனையாய் அதை ஆமோதிக்கிறார் அம்பேத்கர். அவர்களின் இளவயதுத் திருமணத்தின் போது மழை பெய்த காட்சிகள் மிகப் பொருத்தமாய் இங்கு இணைகிறது.

முன்னரே குறிப்பிட்ட படி அம்பேத்கர் என்கிற ஆளுமை குறித்தான நல்லதொரு அறிமுகத்தை தருகிறது இத்திரைப்படம். 90 களில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், அந்தக் காலக் கட்டத்திற்காக பின்னணிகளுக்காகவும், வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்காகவும் எவ்வித சமரசங்களுமின்றி நம்பகத்தன்மையோடு பதிவாகியிருக்கின்றன. அசோக் மேத்தாவின் சிறந்த ஒளிப்பதிவு இந்த அனுபவத்தை இன்னும் உன்னதமாக்குகிறது.

கிளிஷேவான வாக்கியமாக இருந்தாலும் சொல்லி விடுகிறேன். இத்திரைப்படத்தின் எந்தவொரு காட்சியிலும் எனக்கு மம்முட்டி என்கிற நடிகரே தெரியவில்லை. உருவப் பொருத்தம் முதற்கொண்டு அத்தனை கச்சிதமான தேர்வு. மம்முட்டியின் அடக்கமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததில் ஆச்சரியமில்லை.

()

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் 05.12.2010 அன்று காலை 11.15 மணிக் காட்சியில் இத்திரைப்படத்தைக் கண்டேன்.

விடாது பெய்துக் கொண்டிருந்த மழையிலும் சுமார் 40 சதவீத அரங்கம் நிரம்பியிருந்தது குறித்து மகிழ்ச்சி. திரையரங்குகளில் நடிகர்களின் புகைப்படங்களையே கண்டு எரிச்சலடைந்திருந்த கண்களுக்கு, அம்பேத்கரின் வாசகங்களும் புகைப்படங்களும் தாங்கிய பதாகைகள் மகிழ்ச்சியை ஏற்படு்த்தின. அம்பேத்கர் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததோடு பார்வையாளர்களை வரவேற்றனர். ஓரு அரசியல் திரைப்படத்தின் காட்சிகளை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு பொருத்தமான இடங்களில் கைத்தட்டல்களின் மூலம் எதிர்வினையாற்றியது குறித்தும் மகிழ்வாக இருந்தது. காந்தியைப் பற்றின அதீதமான கூச்சல்கள்தான் சங்கடத்தை ஏற்படுத்தின.

இன்னும் சில நாட்களே திரையிடப்பட இருக்கும் இதை சந்தர்ப்பத்தை வீணாக்காமல் காணுமாறு வேண்டுகிறேன். முக்கியமாக குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.

இந்தியா என்கிற தேசத்தின் உருவாக்த்தின் பின்னால் எத்தனை பேரின் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது என்பதை இளைய தலைமுறை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். நகரங்களில் மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் கிராமங்களில் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீடிக்கிற தீண்டாமை என்னும் கொடிய கற்பிதத்தை பற்றி அவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் நினைவு நாளான இன்று இந்தப் பதிவு எழுதப்படுவதின் பொருத்தம் குறித்த உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.   

suresh kannan

Saturday, December 04, 2010

ரத்த சரித்திரம் - பழிவாங்குதலின் பரிசுத்தம்


ஓரு அக்மார்க் ராம் கோபால் வர்மா படம்.

வர்மாவிற்கு வயதாகி விட்டதா? என்று முன்னொரு பதிவில் கேட்டிருந்தேன். இப்போது  மகிழ்ச்சியுடன் அதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். (அந்தப் பதிவின் பின்னூட்டங்களையும் வாசிக்கவும்). ஒரு சிங்கம் போல் தன்னுடைய தோல்விகளிலிருந்து சிலிர்த்தெழுந்து கிளம்பியிருக்கிறார் RGV.

கேங்க்ஸ்ட்டர்களின் படங்களை வெறுமனே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாக்காமல் அவர்களின் அகம் சார்ந்த உணர்வு காட்சிகளோடு தொடர்ந்து உருவாக்குபவர் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸஸி. அந்த வகையில் இந்தியாவின் மார்ட்டின் ஸ்கார்ஸஸி-யாக ராம்கோபால் வர்மாவைக் குறிப்பிடலாம். (ஹாலிவுட்டை அளவுகோலாக வைத்துத்தான் இந்திய இயக்குநர்களை மதிப்பிட வேண்டும் என்கிற அர்த்தமில்லை. அழுத்தமான புரிதலுக்காக இப்படி குறிப்பிடுகிறேன்).

இருளும் குறைந்த வெளிச்சமுமான ஒரு அறை. இரண்டு மூன்று தீவிரமான முகங்கள். பதற வைக்கும் பின்னணியிசை. இவை மாத்திரமே கொண்டு வெளியே ஏதோ ஒரு மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருப்பதான பிரமையை பார்வையாளனிடம் ஒரு தேர்ந்த இயக்குநரால் நிகழ்த்தி விட முடியும். அந்த மாதிரி ஓர் இயக்குநர் RGV.

இன்னமும் வளவளவென்று வசனம் பேசிக் கொண்டிருக்கும் இந்தியத் திரைப்படங்களிலிருந்து விலகி காட்சிகளின் மூலமாக படத்தை நகர்த்திச் செல்வதில் நம்பிக்கையுள்ள சொற்ப இயக்குநர்களில் வர்மா பிரதானமானவர். இப்படத்தின் வசனங்கள் மிகச் சுருக்கமாக இருந்தாலும் அழுத்தமாக அமைந்துள்ளன.

பல வருடங்களாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பழிவாங்குதலில் தம்முடைய இலக்கிலிருந்து தப்பிப் போனவன் குறித்து ஆததிரத்துடன் விவாதிக்கிறது இளைஞர் குழு. 'ஆஸ்பிட்டல்ல போய் இப்பவே போட்டுடலாம்' என்று துள்ளுகிறான் ஓர் இளைஞன். "அவன் கேவலமானவனா இருக்கலாம். ஆனா முட்டாள் இல்ல. நம்மள எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்' என்கிறான் சூர்யா.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரத்தில் சூர்யாவை உபயோகித்திருந்தது மிகப் பெரிய பின்னடைவான விஷயமாக அமையலாம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை பின்பகுதியில் பார்க்கலாம்.

டைட் குளோசப் காமிராக் கோணங்கள், ஒரு முகத்தில் நிலை கொண்டிருக்கும் காமிரா அவுட் ஆஃப் போகஸில் தெரியும் எதிர் முகத்திற்கு மாறுவது, மெலிதான தலையசைப்பிற்குப் பிறகு தொடரப் போகும் பயங்கரங்கள், அடிவயிற்றை பதற வைக்கும் பின்னணி இசை.... என்று வர்மாவின் பிரத்யேக திரை மொழி இதிலும் தொடர்கிறது.

பரிட்டாலா ரவி என்கிற நக்சலைட் பின்னணி கொண்ட ஆந்திர அரசியல்வாதியின் சுயசரிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம். ஐந்து மணி நேரம் கொண்ட இதன் முதல் பாகம் இந்தியிலும் தெலுங்கிலும் மூன்று மாதங்களுக்கு முன் வெளியாகியது

தமிழில் வெளியாகியிருப்பது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை பார்த்து விட்டு இரண்டாம் பாகத்தை பார்ப்பதுதான் சரி என்றாலும் பார்த்திருக்காவிட்டாலும் பெரிய பாதகமில்லை. பார்வையாளர்களின் புரிதலுக்காக முதல் பாகத்தின் காட்சிகள் சுருக்கமாக முதல் 20 நிமிடங்கள் வாய்ஸ் ஓவர் பின்னணியுடன் விவரிக்கப்படுகின்றன. கடந்த கால (என்டிஆர்) ஆந்திர அரசியலின் பின்னணியை அறிந்திருப்பதன் மூலம் இப்படத்துடன் அதிகமான ஒன்ற முடியும்.

எவ்வித முன் அறிமுகமுமில்லாமல் இப்படத்தை ரசிக்க முடிவது RGV செய்திருக்கும் திரைக்கதை மாயம். என்ன பிரச்சினையெனில் குற்ற இலக்கியப் படைப்பின் முப்பதாவது பக்கத்தில் நுழைந்தது போல படத்தின் துவக்க காட்சிகள் ரத்தமும் அரிவாளுமாக சதியுமாக பரபரவென்று நகர்கின்றன.(பின்னணியில் இதை விவரித்துக் கொண்டு செல்வது இயக்குநர் கெளதம் மேனனின் குரல்) இதைச் சுதாரித்துக் கொண்டு படத்திற்குள் நுழைந்து விட்டால் பின்பு அதகளம்தான்.

இடைவேளை என்னும் கற்பிதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியத் திரைபடங்களின் 90 சதவீத திரைக்கதைகள் இடைவேளையைக் கருத்தில் கொண்டுதான் எழுதப்படுகின்றன. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாதி பெரும்பான்மையும் வெறுமனே ஆக்ஷன் காட்சிகளால் நகர்ந்தாலும் பின்பகுதி சதுரங்கக் காய்களின் நகர்த்துதல்களோடு புல்லட் வேகத்தில் பறக்கிறது.


நாம் ஒருவனை உக்கிரமாக வெறுக்கும் போது அவனைப் பழிவாங்குவதற்காக நம்முடைய ஐம்புலன்களும் ஆறாவது அறிவோடு இணைந்து ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையோடு இயங்கும். பத்திருபது ஆண்டு தியானப் பயிற்சியில் கூட இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையின் இயக்கம் நமக்குக் கிடைக்காது. நம் மனதினுள்ளேயே எல்லாவிதமான ஆற்றலும் இருக்கின்றன. நாம்தான் அவைகளை உணர்வதில்லை. தியானங்களும் ஆன்மீகத் தேடல்களுமே இதை வெளிக் கொணர்கின்றன. இவை நன்னோக்கு சிந்தனைகளை வெளிக்கொணர்கிறது என்றால், பழிவாங்குவதில் ஏற்படும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை, வன்முறையையும் வன்மத்தையும் வெளிக் கொணர்கிறது. நல்ல விஷயத்திற்காக கூட இததனை தீவிரமாக சிந்திக்காத மனிதன், இந்த எதிர்மறையான விஷயத்திற்காக கூர்மையாக செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதே சமயத்தில் வேதனையையும் ஏற்படுத்துவது.

இப்படியான பழிவாங்குதல் எனும் உணர்வு எவ்வாறு பரம்பரை பரம்பரையாக ஒரு சங்கிலி போல் தொடர்கிறது, தனது கிளைகளை பரவலாக விரித்துக் கொண்டு செல்கிறது என்பதைப் பற்றி இந்தப்படம் உரையாடுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் நிகழ்வுகளுக்கு தமிழக வண்ணம் பூசப்பட்டிருப்பது ஒட்டாமல் இருந்தாலும் இது பெரிய பின்னடைவை  ஏற்படுத்தவில்லை. மனிதனின் பொதுவான பழிவாங்குதல் குணத்தை பற்றியது என்பதால். 'இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே' எனும் வழக்கமான டிஸ்கெளைய்மருக்குப் பிறகு துவங்கும் படம் ''நிஜத்தில் நடந்த கதை' என்று தொடருவது நகைமுரண்.

பல்லைக் கடித்துக் கொண்டு கீழேயுள்ள இரண்டு பாராக்களை வாசித்து விடுங்கள்.

ஆனந்தபுரம் எனும் பகுதியில் (ஆந்திராவில் இது அனந்தபூர்) வன்முறையின் மூலம் வலிமையான அரசியல் தலைவராக விளங்குபவர் நாகேந்திர மூர்த்தி (கிட்டி). இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை பெரிதும் நம்புகிறார். வீரபத்ரன் விவசாய பாட்டாளிகளுக்காக உண்மையாக பாடுபடும் அரசியல்வாதி. இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி எனும் எம்.எல்.ஏ (கோட்டா சீனிவாசராவ்) நாகேந்திர மூர்த்தியின் சிந்தனையைக் கலைத்து வீரபத்ரனை வெளியேற்றச் செய்கிறார். மக்களின் ஆதரவு வீரபத்ரனுக்கு ஏற்படுகிறது. இதனால் நாகேந்திர மூர்த்தியும் நாகமணியும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை வைத்தே கொலை செய்கின்றனர். வீரபத்ரனின் மூத்த மகனையும் கொல்கின்றனர்.

வீரபத்ரனின் இளைய மகனான பிரதாப் ரவி (விவேக் ஒபராய்) தன் தந்தை கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். தந்தையின் ஆதரவாளர்களுடன் நாகேந்திர மூர்த்தியையும் நாகமணியையும் கொன்று பழி தீர்க்கிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனந்தபுரத்தில் எவரும் எதிர்க்க முடியாத ஒரு வலிமையான சக்தியாக உருவெடுக்கிறான்.


சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா  - என்.டி.ஆர். பாத்திரம்) ஓட்டு வங்கிக்காக ஆனந்தபுரத்தில் நுழையும் அவரை சில வன்முறை சக்திகள் வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன. இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் பிரதாப் ரவி. அவனை அழைத்து வந்து அரசியலில் நுழைய வைத்து பிரதாப்பை உள்துறை மந்திரியாகவே ஆக்கி விடுகிறார். ஏற்கெனவெ உள்ள தாதா பலத்துடன் அரசியல் பலமும் இணையவே வெல்லவே முடியாத ஒரு மையமாக ஆகி விடுகிறான்  பிரதாப்.

ஆச்சா...

இதுதான் முதல் பாகத்தின் 20 நிமிடங்களில் காட்டப்படும் சுருக்.

ஆனால் பிரதாப் எதிர்பார்க்காதவிதமாக அவனைக் கொல்வதற்காக ஒருவன் பழிவாங்குதல் எனும் உணர்வே மனித வடிவத்தில் காத்திருப்பது போல் காத்திருக்கிறான். அது சூர்யா. (முதலில் குறிப்பிட்ட நாகேந்திர மூர்த்தியின் மகன்). இப்போது பிரதாப்பிற்கும் சூர்யாவிற்கும் பழிவாங்குதல் குறித்து நிகழும் ஆடுபுலி ஆட்டமும் சதுரங்க விளையாட்டுக்களுமே 'ரத்தசரித்திரம்' இத்திரைப்படத்தின் பிரதான பாத்திரமான பிரதாப் ரவியாக விவேக் ஓபராய். அட்டகாசமான உடல்மொழி. (இவர் முதல் திரைப்படத்திற்காக வர்மாவிடம் வாய்ப்புத் தேடி வந்த போது நடந்து கொண்டதை தேடிவாசித்துப் பாருங்கள்). ஈநாடு தொலைக்காட்சியில் நாம் சாதாரணமாக காண்கிற காரசாரமான ஒரு ஆந்திர அரசியல்வாதியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

இவர் சூர்யாவை கொல்வதற்காக தொடர்ந்து முயலும் போது அந்தக் குழப்பங்கள் அரசியலிலும் எதிரொலிக்கின்றன. இதனால் இவரது அரசியல் குருவான சிவராஜ் (என்டிஆர்) 'அரசியல்வாதியான நீ இனிமேலும் இது போன்ற சில்லறைத்தனமான சச்சரவுகளில் ஈடுபடாதே' என்று அறிவுறுத்துகிறார். எனவே தனது வன்முறைகளை கைவிட்டு விட்டு சிறையிலிருக்கும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தைக்காக போகிறான் பிரதாப்.

வன்முறை தவிர பிறவற்றை யோசிக்கத் தெரியாத ஒரு ரவுடி, ஒரு தேர்ந்த கச்சிதமான அரசியல்வாதியாக உருமாறுவதை இந்தக் காட்சிகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. சிறையில் இவருக்கும் சூர்யாவிற்கும் நிகழும் உரையாடல் செம காரம். (உன் வழியில நீ போ, என் வழியில நான் போறேன். - உன் வழியை அடைக்கறதுதான் என் வேலை. உன்னைச் சாகடிக்கறதுக்காகத்தான் நான் சாகாம இருக்கேன்).

சூர்யாவின் குடும்பம் முழுவதையும் பிரதாப் அழித்ததால்தான் அவன் இத்தனை வெறியோடு இருக்கிறான். ஆனால் காட்சிகளின் பின்னணியில் நிகழ்வது வேறு. தன் எதிரிகள் அனைவரையும் சாகடிக்க வேண்டும் என்கிற ஆபரேஷனில் அவனது ஆட்கள் உத்தரவுகள் எதுவுமின்றி தானாகவே சூர்யாவின் வீட்டில் வெடிகுண்டு வைத்து கொன்று விடுகின்றனர். இதற்காக பிரதாப் பிறகு தனது ஆட்களை கண்டிக்கிறான்.

ஒரு நிலையில் தேர்தலில் தனக்கு போட்டியாக நிற்கும் சூர்யாவின் மனைவியை (பிரியாமணி) கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப்பிற்கு ஏற்படுகிறது. பெண் என்பதால் தயங்குகிறான். ஆனால் சுற்றியுள்ள ஆட்கள், தேர்தலில் வெல்வதோடு ஒப்பிடும் போது இது சாதாரண விஷயம்' என வற்புறுத்தும் போது வேறு வழியின்றி அதை ஒப்புக் கொள்கிறான். ஆனால் அவனுடைய மனைவி இதை எதிர்க்கிறார். அவன் மனச்சாட்சியை தூண்டும்படி வாக்குவாதம் செய்கிறாள். பவானியை கொல்வதற்காக ஆட்களை அனுப்பி விட்டு காத்திருக்கும் பிரதாப், தனிமையில் தன் மனைவியுடன் நிகழ்ந்த உரையாடல்களை மனதில் நிகழ்த்திப் பார்க்கிறான். மனச்சாட்சி உறுத்துகிறது. போராட்டத்தில் அவனது மனிதம் வெல்கிறது. ஆட்களை தொடர்பு கொண்டு கொலையை நிறுத்தச் சொல்கிறான்.

இங்கே ஒரு திருப்பம். பவானியைக் கொல்லச் சென்ற பிரதாப்பின் வலது கரங்களில் ஒன்றை சூர்யாவின் சிறைநண்பன் கொல்கிறான். மனம் திருந்தி நிற்கும் பிரதாப்பிற்கு இந்தச் செய்தி கிடைக்கிறது. ஆத்திரத்தில் அழுகிறான். மனது மீண்டும் பழிவாங்கல் உணர்விற்கு மாறுகிறது.

மனிதத்தனத்திற்கும் விலங்குத்தனத்திற்கும் இடையில் நம் மனது எத்தனை நுட்பமாக ஊசலாடுகிறது என்பதை விளக்குவதற்காகவே இத்தனை நீளமாக இதை எழுதினேன். இந்தக் காட்சிகளை மிக அற்புதமான திரைமொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பிரதாப்பின் அகஉணர்வுப் போராட்டம் மிக வலுவாக இதில் வெளியாகியிருக்கிறது. இது போல் பல காட்சிகளை உதாரணமாகச் சொல்ல முடியும்.

வர்மாவின் மேக்கிங்கில் இரண்டு காட்சிக்கோர்வைகளை மாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திரைப்படம் பயில விரும்பும் மாணவர்களுக்கு இதை ஒரு பாடமாகவே வைக்கலாம் என்று குறிப்பிடுவது அதீதமாக இருக்காது என நம்புகிறேன்.

சூர்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி. அவனை பிரதாப்பின் எதிரிகள் எவரும் கொன்று விடக்கூடாது என்பதற்காக காவல்அதிகாரி (சுதீப்) கண்காணிக்கிறார். ஒரு ஃபார்மலான வக்கீலிடம் துவங்கும் இந்தக் காட்சி, பல்வேறு சந்தேக முகங்களையும் காவல் அதிகாரி மற்றும் சூர்யாவின் கூர்மையான அவதானிப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறது. நாம் கையில் சற்று அதிகமான பணத்தை வைத்துக் கொண்டு செல்லும் போது வழியில் பார்க்கும் நபர்களெல்லாம் சந்தேகப்படும் படி தெரிவது போல் எவரைப் பார்த்தாலும் கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். ஒவ்வொரு அசைவும் சந்தேகத்துக்குரியதாக தெரிகிறது.

இன்னொன்று சூர்யா, பிரதாப்பை கொல்லும் காட்சி. டைட் குளோசப் காட்சிகளும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் தீவிரமான முகபாவங்களும் மற்றவர்களின் இயல்பான இயக்கங்களும் காட்சியின் தரத்தை உயர்த்திச் செல்கின்றன. இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் காட்சிகள் இயங்குவதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.

சூர்யாவின் நடிப்பு கிராஃப் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகின்றது. வணிக மசாலாப்படங்களில் ஒருகால், வித்தியாசமான முயற்சிகளில் ஒருகால் என்று இரட்டைக்குதிரைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். பல காட்சிகளில் இவரது உடல்மொழி அபாரம். குறிப்பாக பிரதாப்பை கொன்றுவிட்டு இவர் திரும்பும் காட்சியில் பல வருடங்கள் காத்திருந்த செயலை நிகழ்த்தின ஆசுவாசமும் திருப்தியும் அதன் மூலம் வெளிப்படும் கண்ணீரும் என.. இவரின் முகபாவங்கள் அட்டகாசம். சிக்ஸ் பேக் தெரிய இவர் இடும் சண்டைக்காட்சிகள் தேவையில்லாத வணிகத் திணிப்பு

பிரியாமணிக்கு நடிப்பதற்கு அத்தனை வாய்ப்பில்லாவிட்டாலும் வருகிற காட்சிகளில் எல்லாம் இவர் மிகை ஒப்பனையுடன் வருவது சற்று எரிச்சலாகவே இருக்கிறது. இயக்குநர் இதைக் கவனித்திருக்கலாம். சுபலேகா சுதாகர் சிறிது நேரமே வந்தாலும் ஒரு அரசாங்க தரகரின் வேலையை கனகச்சிதமாக செய்கிறார்.


 பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே. இவரைப் பார்த்து விட்டு நான் அப்படியே உறைந்து அமர்ந்து விட்டேன். வெறுமனே காமத்தை கிளர்த்தும் அழகு, வணங்க வைக்கும் அழகு, தள்ளி நின்று ரசிக்க வைக்கும் அழகு என்று பெண்களை கவனிப்பதில் பல வகைகள் உண்டு என்பது என் தனி அபிப்ராயம். இவரை எவ்வாறு வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை. ஐஸ்வர்யா ராயையும் தீபிகா படுகோனையும் இணைத்து வைத்த கலவையில் ரவிவர்மா ஓவியம் போலிருக்கிறார். தி.ஜாவின் மரப்பசு அம்மிணியை நிலைகொள்ளாமல் வாசித்த பதின்ம வயது உணர்வு மீண்டும் எனக்குள் திரும்பியது. விவேக் ஓபராய் இவரை ஆறுதலான அணைத்த காட்சியில் மனம் பொறாமையில் வெந்து அடங்கியது. அப்பேபர்ப்பட்ட பிரமிக்க வைக்கும் அழகு. இவரின் மற்ற படங்கள் எத்தனை மொக்கையாக இருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன். :-)

சூர்யாவை இதில் நடிக்க வைத்தது இந்தப்படத்தின் ஒரு பின்னடைவாக இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன் அல்லவா? ஏனென்று சொல்கிறேன். சூர்யா தோன்றும் ஆரம்பக்காட்சியில் கைத்தட்டல்கள் காதைப் பிளந்தன. சிங்கம், வேல் போன்ற வணிக மசாலா பட சூர்யாவை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். சூர்யாவின் பிம்பமே அந்த பாத்திரத்தில் பார்வையாளன் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தடையாக அமையலாம்.

ரத்த சரித்திரத்தில் ஹீரோ, வில்லன் என்று எவருமே கிடையாது. அவரவர்களின் பார்வையில் அவரவர்கள் செய்வது நியாயமே. இதைப் பார்வையாளர்கள் தெளிவாக உணரும்படிதான் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால் நாயக வழிபாட்டு ரசிகர்கள், சூர்யாவை ஹீரோவாகவும் விவேக் ஓபராயை வில்லனாகவும் உருவகித்துக் கொண்டு திரைப்படத்தைப் பார்த்தால் இயக்குநருக்கு அது ஒரு தோல்வியே. பிரதேச மொழிக்கேற்றவாறு அவரவர்களின் பகுதிகள் கூட்டியோ குறைத்தோ அமைக்கப்பட்டுள்ளன என அறிந்தேன். எனில் இந்தி வர்ஷனில் விவேக் ஓபராயின் பகுதி எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். (முதல் பாகத்தில் விவேக் மற்றும் சத்ருஹன் சின்ஹாவின் ராஜாங்கம்தான் என கேள்விப்பட்டேன்).

அமல் ராத்தோடின் காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். என்றாலும் சில காட்சிகளில் அர்த்தமேயின்றி 360 டிகிரியில் சுழன்று காட்சிப்படுத்துவது தேவையில்லாமல் சங்கடப்படுத்துகிறது. சூர்யாவும் அவனது சகாவும் சிறையில் கம்பிகளுக்கு இடையில் உரையாடும் போது நடுக்கோணத்தில் காமிரா நின்று இருவருக்கும் இடையே எந்த தடுப்பும் இல்லை என்பது போன்று படமாக்கியிருப்பது சிறப்பு. பி்ன்னணி இசை காட்சிகளின் உக்கிரத்தை மேலும் கூட்டுகிறது.

இயக்குநர் விக்ரமனின் 'லாலாலா' படங்களைப் பார்த்துப் பழகினவர்கள் இந்தப் படத்தின் வன்முறையை ஜீரணிப்பது சிரமம். வன்முறையில் உள்ள அழகியலை ரசிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரமே இதை ரசிக்க முடியும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் வன்முறை ஒளிந்திருக்கிறது என்கிற யதார்த்தத்தை புரிந்து கொண்டால் போதும். ஏனெனில் பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பை இந்தப்படத்தில் எதிர்பார்க்கவே முடியாது. வனம் அதிர மோதிக் கொள்ளும் இரண்டு சிங்கங்களின் தீவிரமான அலறல்களைத்தான் இதில் கேட்கும். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மருந்திற்குக்கூட உங்களால் புன்னகைக்க முடியாது.

பழிவாங்குதலின் இந்தத் தொடர் சங்கிலியை இயக்குநர் எப்படி முடிப்பார் என்று யோசனையாக இருந்தது.

பிரதாப்பை கொன்ற சூர்யாவிடம் காவல் அதிகாரி சொல்கிறார். 'நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள். ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்" என்கிறார்.

"நிச்சயம் ஆக மாட்டேன்" என்கிறான் சூர்யா.

அடுத்தடுத்த காட்சிகளில் சூர்யா அரசியலில் இறங்கப்போகும் நேர்காணலை தொலைக்காட்சி தெரிவிக்கின்றது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரதாப்பின் மனைவியின் கையிலிருக்கும் குழந்தையின் டைட் குளோசப்பில் படம் முடிகிறது.

பழிவாங்குதலின் தொடர்ச்சி. வர்மா டச். வர்மாவின் ரசிகர்கள் நிச்சயம் பாருங்கள். குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். இளகிய மனதுள்ளவர்களும் இத்திரைப்படத்தை தவிருங்கள்.

தொடர்புடைய பதிவு:

பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா?

suresh kannan