முதலில் வசந்தபாலனுக்கு ஓர் அழுத்தமான கைகுலுக்கல்.
முதலாளித்துவமும் அதிகாரமும் அதன் பரிவாரங்களும் கைகோர்த்துக் கொண்டு எளிய மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் சுரண்டிக் கொழுப்பதை தைரியமாக அப்பட்டமாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இவர் காட்டியிருப்பது பனிக்கட்டியின் முனையைத்தான் என்றாலும் பெருங்கடலின் ஆழத்தில் இன்னும் எத்தனை சுறா, திமிங்கலங்களின் கோரத்தாண்டவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்பதை நாம் யூகிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
படத்தின் தலைப்பை நியாயப்படுத்த வேண்டுமென்றால் சென்னை நகரின் மிக நெரிசலான அந்தத் தெருதான் படத்தின் மையமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநர் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தோடு நிறுத்திக் கொண்டார், சில சொற்ப உப கதைகளோடு. தீப்பெட்டி தொழிற்சாலை பணியாளர்களைப் போல தெற்கத்திக் கிராமங்களிலிருந்து நகருக்கு அழைத்து வரப்படும் இளம் நவீன கொத்தடிமைகளை நகரம் எப்படி சக்கையாகப் பிழிந்தெடுத்துக் கொண்டு பளபளப்பாக நிற்கிறது என்பதை இயக்குநர் படம் நெடுக்க சொல்லிக் கொண்டே போகிறார்.
இதை ஏதோ அந்த குறிப்பிட்ட தி.நகர் நிறுவனத்திற்கு மட்டுமானதாக பார்க்கத் தேவையில்லை. "சீக்கிரம் டேபிளை தொடைப்பா" என்று நம்மாலும் அதட்டப்படும் ஹோட்டல் சிறுவர்கள் முதற்கொண்டு பல கோடி செலவில் தலைமைச் செயலகம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு அதனருகிலேயே எந்தவிதமான அடிப்படை வசதிகளுமில்லாமல் மலக்கூடங்களின் அருகிலேயே உறங்க நேரும் வடக்கு மாநிலத்தவர்கள் வரை அனைவருக்கும் பொருத்திப் பார்க்கலாம். இன்னும் நீட்டித்தால் காண்டம் வாங்க அனுப்பப்படும் சினிமா உதவி இயக்குநர் முதற்கொண்டு சாப்ட்வேர் கம்பெனியின் டை கட்டின அடிமைகள் வரை (இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் உட்பட) இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இப்படியொரு சமூகப் பிரச்சினையை இயக்குநர் மையமாக சொல்ல நினைத்தாலும் தமிழ் சினிமாவின் புளித்துப் போன கச்சாப் பொருளான ‘காதல்’ என்கிற சமாச்சாரத்தை போர்த்தித்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை 'துரதிர்ஷ்டம்' என்றுதான் சொல்ல வேண்டும். படம் துவங்கின சில நிமிடங்களுக்கு ‘அய்யோ, இந்தப் படத்திற்கா வந்தோம்’ என்ற சலிப்பு தோன்றிய பின் கதைக்களம் கிராமத்திலிருந்தும் பிறகு நகரத்திற்கு வந்தவுடன் முகத்தில் அறையும் காட்சிகளுடன் சரசரவென்று நகர்கின்றன. பல நுட்பமான காட்சிகள்.
ஸ்ட்ராபெரி பழம் நுழைந்திராத கிராமத்திற்குள் கிரிக்கெட் எப்பபடியோ நுழைந்து விட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோயில் நுழைவு போல காட்டப்படும் அந்த துணிக்கடை நிறுவனம் திறக்கப்படும் காலைக்காட்சிகள் மதநிறுவனங்களுக்குப் பின்னும் அழுக்குகள் நிறைந்திருப்பதைப் போலவே இங்கும் அழுக்குகள் நிறைந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ‘அண்ணன் கிளம்புறம்மா’ என்று நகரத்திற்குப் புறப்படும் சகோதரனிடம் இறுகிற பாறை போன்ற முகத்துடன் ‘சரிண்ணே’ என்கிற அந்தச் சிறுமியின் முகம் என்னை மிகவும் வதைத்தது.
சில சொற்ப காட்சிகளே வந்து போகும் நாயகனின் தந்தையிலிருந்து துணிக்கடையில் பணிபுரியும் பலரின் முகங்கள் அசலான கிராமிய மணத்துடன் பொருந்திப் போவது நிறைவாக இருக்கிறது. பிரதான பாத்திரங்களில் நடிக்க ‘வைக்கப்பட்டிருக்கும்’ இளைஞனும் யுவதியும் மிக அற்புதமாக தங்கள் பகுதியைச் செய்திருக்கின்றனர்.
இறுதிப்பகுதியில் நாயகியின் தந்தையாக வரும் கவிஞர் விக்கிரமாதித்யன் சொற்ப நேரமே வந்தாலும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். அந்த மாதிரி காட்சியை நானே பார்த்திருக்கிறேன். அரசு மருத்துவமனையில் எனது தந்தையை சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது, எதிர் படுக்கையில் இருந்தவர் இறந்து போனதுமே அந்த எளிமையான ஏழ்மைக்குடும்பம் சிறிது நேரத்தில் காணாமற் போய்விட்டது. பிணத்தை எடுத்துப் போக ஆகும் செலவை நினைத்து அஞ்சியிருக்கலாம்.
பணியிலிருந்து விலக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் சபை நடுவில் தன்னுடைய காதலையே மறுக்குமோர் இளைஞனும் அதன் காரணமாக வெகுண்டெழும் அவன் காதலியும் பிறகான அவளின் தற்கொலையும்.... படத்தின் ஆகச் சிறந்த காட்சிக்கோர்வையிது.
நடிகர்களில் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவர் மூவர்.
கருங்காலி சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குநர் வெங்கடேசன். பார்வையாளனிடம் நிறைய வெறுப்பைச் சம்பாதிக்கும் பாத்திரம். இவர் அடிவாங்கும் போது அரங்கமே குதூகலிக்கிறது. இந்த மாதிரியான வில்லன் பாத்திரங்களைப் பார்க்கும் போது நாம் செளகரியமாக ‘நாயகனின்’ பகுதியில் நின்று கொள்கிறோம். ‘ச்சே.. எவ்வளவு மோசமானவன்ப்பா..” ஆனால் நூற்றுக் கணக்கான இளம் பெண்களை மேய்க்கும் அதிகாரம் வாய்த்தால் நம்மில் எத்தனை பேர் அவர்களின் மார்களை கசக்காமலிருப்போம் என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.
‘அண்ணாச்சியாக’ பழ.கருப்பையா. சர்ச்சையான அந்த பாத்திரத்திற்குள் தைரியமாகப் பொருந்தியிருக்கிறார். ஒரு அப்பட்டமான வியாபாரி என்கிற நிலையில் அவரின் எல்லாச் செயல்களையும் நியாயப்படுத்தி விடமுடியும். “எத்தன ரூவா கொட்டி வேபாரம் பாக்கோம்... சவத்து மூதிக...தனது வியாபாரத்திற்கு தடையாக இருக்கும் எந்தவொரு விஷயமும் அவருக்கு எரிச்சலூட்டுகிறது. தம்மிடம் வேலைபார்க்கும் சூப்பர்வைசர் எவளை கசக்கிலாலென்ன, எவனை நையப் புடைத்தாலென்ன?... பணியாளர்கள் அடங்கி ஒடுங்கி முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் எதிர்பார்ப்பு.
அரசு இயந்திரங்களின் சக்கரங்களுக்கு இவர் தினம் எவ்வளவு படியளக்கிறார் என்றொரு லிஸ்ட் சில நொடிகள் காட்டப்படுகிறது. அந்த ஒரு ஷாட்டின் மூலம் அரசாங்கத்தின் மீது பலமாக காறி உமிழ்ந்திருக்கிறார் இயக்குநர். ‘அம்பதாயிரம் ரூவா பட்டுப்புடவைய திருடிட்டான்யா’ என்று சொன்னவுடனேயே காவல்துறை அந்த இளைஞனை காவல் நிலையத்தில் வைத்து நையப்புடைக்கிறது. அண்ணாச்சி அப்படி பொய்க்குற்றம் சாட்டக் கூட தேவையில்லை. வெறுமனை விரலைச் சுட்டியிருந்தால் கூட போதும். காவல் நாய் விசுவாசத்துடன் சுட்டப்பட்ட திசை நோக்கி பாயத் தயாராக இருக்கும். இளைஞன் நிறுவனத்திற்குள் நடக்கும் வன்கொடுமைகளைச் சொல்ல சொல்ல வாய் மேலேயே அடிவிழுகிறது.
மூன்றாமவர் நடிகை சிநேகா. நடிகையாகவே வருகிறார். சம்பந்தப்பட்ட நிறுவனம் எது என்பது பல காட்சிகளில் நிறுவப்பட்டாலும் இவர் 'எடுத்துக்கோ.. எடுத்துக்கோ' என்று விளம்பர மாடலாக நடிப்பதின் மூலம் சந்தேகத்திற்கிடமின்றி அது நிரூபணமாகிறது. கதையின் போக்கு இவரிடம் விவரிக்கப்பட்டதா என தெரியவில்லை. தெரிந்தேதான் நடித்தார் என்றால் தைரியம்தான். இவரின் விளம்பர வாய்ப்பு சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தொடருமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
()
வசனம் ஜெயமோகன். வசனத்திற்கு திரையரங்கு ஆரவாரிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். வசனங்களுக்காக திரைப்படங்கள் சிலாகிக்கப்பட்ட காலம் முடிந்து ஒரு மாமாங்கமாகி விட்டாலும் நவீன திரையில் நிகழும் இம்மாதிரியான விதிவிலக்குகள் ஆச்சரியப்படுத்துகின்றன. உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் என்ற அங்கம் தனியாக உருவாக்கப்படக்கூடியதே அல்ல. திரைக்கதையின் ஊடாக அந்த சூழ்நிலையில் பாத்திரங்கள் இயல்பாக என்ன பேச வேண்டுமோ, அதை மாத்திரம் பேசினால் போதும். ஆனால் மிகு யதார்த்தமாக இருந்தால் வறட்சியாக இருக்கும்; அதில் கொஞ்சமாவது சுவாரசியம் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் வசனகர்த்தா தேவைப்படுகிறார். ஜெயமோகன் இதை சரியாக செயல்படுத்தியிருக்கிறார். பிரதான பாத்திரங்களான இளைஞனும் யுவதியும் கூட்டத்தின் நெரிசலின் இடையில் உரையாடுகிறார்கள்.
அவள் சொல்கிறாள்: “தங்கச்சி உன்ன யாரு யாருன்னு கேட்டுட்டே இருந்தா?”
“நீ என்ன சொன்ன?”
“சிரிச்சேன்”
அவ்வளவுதான். படம் பார்த்தவர்களுக்கு இந்த வசனத்தின் பின்னணியிலுள்ள அழுத்தமும் எளிமையும் புரியும். என்றாலும் சில இடங்களில் நேர்ந்திருக்கும் நாடகத்தனமான அபாயங்களை ஜெயமோகன் தவிர்த்திருக்கலாம் என்று படுகிறது.
உதாரணமாக மற்ற பதிவர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்டிருக்கும் “யானை வாழுற காட்டுலதான் எறும்பும் வாழுது” என்கிற வசனத்தை எடுத்துக் கொள்ளலாம். என்ன மாதிரியான சூழலில் இது பேசப்படுகிறது என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையால் செமத்தியாக கவனிக்கப்பட்டு திரும்பும் இளைஞன் தன்னுடைய காதலியை நிறுவனத்திலிருந்து மீட்க வந்திருக்கிறான். கடையில் உள்ள சூப்பர்வைசர்கள் இணைந்து தாக்குகின்றனர். வியாபாரம் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த அண்ணாச்சி அந்த பெண்ணை விடுவிக்கச் சொல்கிறார். இருவரையும் வெளியில் துரத்தும் கருங்காலி சூப்பர்வைசர் சொல்கிறான். “இந்தத் தெருவுல எவனும் உங்களுக்கு வேலை தர மாட்டான். பிச்சைதான் எடுக்கணும்”. இதுதான் அங்காடித்தெரு வியாபாரிகளின் தர்மம்.
தங்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் காகிதக் குப்பை போல் கசக்கி வெளியே எறியும் நிறுவன அடியாளிடம் அந்த இளைஞன் எப்படி பேசியிருப்பான். “போடா தேவடியாப் பயலே, நீயே உக்காந்து அண்ணாச்சி குண்டிய நக்கிட்டிரு. உன்னையும் அவன் வெளியே தூக்கிப் போடப் போறான். மவனே பாருடா. இதே தெருவுல உன் கண்ணு முன்னாடியே நானும் பொழச்சுக் காட்டறண்டா”... சென்சார் காரணமாக இத்தனை அப்பட்டமாக பேசமுடியாதென்றாலும் இதே போன்ற தொனியில்தானே வெடித்திருப்பான்? அந்தச் சமயத்திலும் எப்படி இலக்கிய நயத்துடன் யானை எறும்பு என்றெல்லாம் பேச முடியும்?. இதைத்தான் சினிமாத்தனம் அல்லது நாடகத்தனம் என்கிறேன்.
எல்லா வசனங்களுக்கும் வசனகர்த்தாவையே பொறுப்பாக்க முடியாது என்றாலும் எழுதியவர் ஜெயமோகன் என்பதால்தான் இந்த சொற்ப தடுமாற்றங்களை சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது. டி.ராஜேந்தர் வசனம் என்றால் காதைப் பொத்திக் கொண்டிருக்கலாம்.
()
வசந்தபாலன் பல நுட்பமான காட்சிகளை படம் முழுக்க இறைத்திருக்கிறார். குறிப்பாக இரவு நேரங்களில் காட்டப்படும் ரங்கநாதன் தெரு. பணியாளர்களைப் போலவே அட்டைக்குப்பைகளும் அதன் உபயோகம் முடிந்தவுடன் வெளியே எறியப்படுகின்றன. அந்த ராத்திரியின் சொற்ப வெளிச்சத்தில் ஒரு தந்தை தன்னுடைய குழந்தைக்கு சூடான டீயை ஊதி ஊட்டுகிறார். எல்லா அலவங்களையும் மீறி மனித இருப்பில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்கள்தான் அவனை தொடர்ச்சியாக இயக்குகின்றன என்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.
நகராட்சி கழிவறையின் மூலம் சம்பாதிக்கும் சுயமுன்னேற்ற நீதிக்கதைளெல்லாம் பாலச்சந்தர் படங்களிலேயே ரிடையர் ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வசந்தபாலன் இந்த மாதிரியான கிளிஷேக்களை கைவிடுவது நல்லது. அவை இல்லாமலேயே மையக்கதையின் போராட்டத்தை வலுவாகச் சித்தரிக்க முடியும். மற்றபடி பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவரும், பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானரும் அவர்களின் வாரிசு பிரச்சினையும் என சொற்ப நொடிகளில் உப கதைகள் விரிகின்றன.
ஏற்கெனவே சொன்னது போல் படத்தின் தலைப்பை நியாயப்படுத்துவது அந்தத் தெருவின் மனிதர்களையும் நிகழ்வுகளையும் பெரு, சிறு வணிகர்களின் தந்திரமான போக்குகளையும், நடுத்தர வர்க்கத்து வாடிக்கையாளர்களின் அல்பத்தனங்களையும் என... அந்தத் தெருவின் ஆளுமையை இன்னும் அதிகமாக உபயோகித்திருக்கலாம். இதன் மூலம் காதல் காட்சிகள் நீளும் அபத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். பாடல் காட்சிகளிலிருந்து தமிழ் சினிமா என்றைக்கு வெளியேறி வரப் போகிறதோ? பிராமண மாமியின் பாத்திரம் செயற்கை குரூரத்துடன் சித்தரிக்கப்பட்டிருந்து போல் பட்டது.
என்றாலும் குறைந்த அளவு சமரசங்களுடன் ஒரு நல்ல படைப்பை தந்ததற்காகவே வசந்தபாலனை நாம் ஆதரிக்க வேண்டும். உடனே இதை உலக சினிமா என்று கொண்டாட வேண்டியதில்லை. அதற்கான பயணத்தின் முன்னே வைக்கப்பட்ட காலடித் தடங்களுள் ஒன்று. வசந்தபாலனின் முந்தைய படமான வெயில் கூட அத்தனை பாராட்டிற்கு உகந்ததல்ல. சில நுட்பமான காட்சிகளைத் தவிர்த்து அதுவுமொரு வணிகநோக்குத் திரைப்படமே. ‘இவ்வளவுதான் செய்ய முடியும்’ என்கிற சூழலில்தான் தமிழ் சினிமா நின்று கொண்டிருக்கிறது. இயக்குநர்களை மாத்திரம் குறை கூறிப் புண்ணியமில்லை.
சரி. வசந்தபாலன் இந்த சமூக அவலத்தை திரைப்படமாக எடுத்து நம்முன் வைத்துவி்ட்டார். நாம் என்ன செய்யப் போகிறோம். பளபளப்பான வியாபாரங்களுக்குப் பின்னால் மனித உரிமை மீறல்களை ஒளித்து வைக்கும் வணிகர்களை புறக்கணிக்கப் போகிறோமா? ஒரு கரண்டி அரிசி மாவை தோசை என்கிற பெயரில் அறுபது ரூபாய்க்கு விற்றுக் கொழுத்து பணியாளர்களின் மனைவிமார்களை களவாடும் அண்ணாச்சிகளின் உணவகங்களுக்கு போகாமலிருக்கப் போகிறோமா? அடுத்த முறை ரங்கநாதன் தெருவிற்குப் போகும் போது விளையாட்டாகத்திரியும் இளம் பணியாளர்களை எரி்ச்சலோடு அல்லாமல் 'த்சொ' என்று அனுதாபமாக பார்க்கப் போகிறோமா.. தெரியவில்லை.
எப்படியோ அதிகார மையங்கள் தொடர்ந்து கள்ள மெளனம் சாதிக்கப் போவது நிச்சயமென்றாலும் நடுத்தர வர்க்கத்தின் சொரணையை சற்று சோதித்துப் பார்த்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறார் இயக்குநர்.
()
தமிழ் சினிமாவின் அபத்தங்கள் குறித்து ஓயாது நாம் புலம்புகிறோம். ஆனால் விதிவிலக்காக சற்றே விலகி ஒரு நல்ல படம் வந்தால் என்ன செய்கிறோம்? சென்னை ஆல்பட் அரங்கில் மொத்தம் இருநூறு பேர்தான் இருந்திருப்போம். ‘நான் முடிவு செஞ்சிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” என்கிற மென்ட்டல் கேஸ்களின் படங்களையெல்லாம் முதல் நாளே முண்டியத்து பார்க்கும் நாம் நல்ல படங்களுக்கு மாத்திரம் ‘ஆணா, பெண்ணா’ என்று உருவம் கூட தெரியாத தேசலான பிரிண்ட்டுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
இதை வாசிக்கும் நண்பர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். இந்த மாதிரியான விதிவிலக்குத் திரைப்படங்களையாவது தியேட்டருக்கு சென்று பாருங்கள்.
இந்த வேண்டுகோள் ஐங்கரன்களுக்காக அல்ல; வசந்தபாலன்களுக்காக.
image courtesy: original uploader
suresh kannan

