Monday, November 26, 2012

வெற்றுத் துப்பாக்கி




நம்மை நினைத்தால் பாவமாக இருக்கிறது. பொழுதுபோக்கு சினிமாதான் இங்கு பிரதானம் என்பது கூட பாவமில்லை என்றாலும் கூட ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான, புத்திசாலித்தனமாக திரில்லர் படத்திற்கான வாய்ப்பு கூட இல்லாமல் எத்தனை காய்ந்து போயிருநதால், வெற்றுத் துப்பாக்கியை ஆஹா, ஓஹோ என்று புகழ்வோம்?.

நிற்க.. நான் ஏதோ உலகத் திரைப்படம், கலைப்படம், என்று பார்க்கிற ஹோதாவில், உயர்வுமனப்பான்மையில் ஒரு பாவனையாக இதைக் கூறவில்லை. எப்பேர்ப்பட்ட உயர்தர கலைஞனாய் இருந்தாலும் அவனுள் இருக்கும் பாமரன் சாகவே மாட்டான். சாவு மேளத்திலுள்ள கொண்டாட்டத்தை ரகசியமாகவேனும் ரசிக்கிற கர்நாடக சங்கீதக்காரன் இருப்பான். அதே போல் பாமரன் உள்ளிருக்கும் அறிவுஜீவியும்.

அந்த வகையில் எனக்கு ஆகசன் சினிமாக்கள் மிகப் பிடிக்கும். மன்னிக்கக்கூடிய சிறிய லாஜிக் பிழைகள் இருந்தாலும் கூட விறுவிறுப்பான திரைக்கதையாக இருந்தால் அதை ரசித்துப் பார்ப்பேன். இதே விஜய்யின் 'கில்லி' திரைப்படம் (தெலுங்கு மூலம்) சுவாரசியமான விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டது. ஆனால் துப்பாக்கி ஒரு ரெண்டுங்கெட்டான் தனமான ஆக்சன் படம். படங்களின் பாடல்களின் இடையூறு பற்றி நான் நீண்ட காலமாக புகார் கூறிக் கொண்டிருந்தாலும் இந்தளவு எரிச்சல் ஏற்படுத்தின பாடல் இடையூறுகளை சமீபத்தில் எந்த சினிமாவிலும் காண நேர்ந்ததில்லை. அசட்டுத்தனமான நகைச்சுவையுடன் கூடிய காதல் காட்சிகள். கஜினியில் இருந்த அந்த சுவாரசியம் கூட இல்லை. நல்ல நடிகர்களைக் கூட அபத்தமாக பயன்படுத்துவதில் தமிழ் சினிமாவிற்கு நிகரில்லை. ஜெயராம் இந்த மாதிரியான கண்றாவி பாத்திரங்களை ஏற்கிறார் என்று தெரியவில்லை.

இந்தத் திரைப்படத்தின் துணை தயாரிப்பு இந்திய ராணுவமோ என்கிற அளவிற்கு அட்டெஷனில் நின்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இந்திய ராணுவத்தின் முகம் 'விஜய்' என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் வழக்கம் போல் தமிழ் நாயக பிம்பத்திலேயே  இருப்பதுதான் சோகம். விடுமுறையிலும் வேலை பார்க்கும் தேச பக்தராக ஒற்றை ஆளாக நின்று இந்தியாவை காப்பாற்றுகிறார் விஜய். விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் நடித்த படங்களின் தேய்ந்து போன சிடியை நன்றாக துடைத்து புது தொழில்நுட்பத்தில் தோய்த்து தந்ததை தவிர இயக்குநரின் பணி வேறு ஒன்றுமில்லை.

இந்தப் படத்தில் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தாக பத்திரிகை செய்திகளில் வாசித்தேன். என்னைக் கேட்டால், உலகத்திலுள்ள எந்த பிரிவிலுள்ள தீவிரவாதிகளாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் இணைந்து இந்தப் படத்தின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரலாம். அந்தளவிற்கு தீவிரவாத இயக்கங்களை அடி முட்டாள்களாகவும் பழைய எம்.என்.நம்பியார் தலைமையிலுள்ள கொள்ளைக் கூட்ட கும்பல் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். தீவிரவாதத்தின் ஊற்றுக் கண் எது என்கிற எவ்வித பிரக்ஞையில்லாமலும் தீவிரவாதம் குறித்த சமூகவியல் பார்வையில்லாமலும், நாயகன் தன்னுடைய தேசப்பற்றை வலுவாக காண்பித்து கைத்தட்டல் வாங்குவதற்கு ஏற்ற வகையிலான boxing punch bag போல உபயோகித்துக் கொள்கிறார்கள்

12 இடங்களில் வெடிகுண்டு வைப்பது போன்ற தீவிரமான 'ஆப்பரேஷனில்' ஏதாவது பிழையோ சந்தேகமோ வந்தால் அதை தள்ளிப் போடுவதுதான் புத்திசாலிகள் செய்வது. ஆனால் திட்டத்தில் தொடர்புடைய ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு காணாமற் போன நிலையிலும் திட்டத்தைத் தொடர்வார்களா என்பது கேள்விக்குறி. தீவிரவாதிகளின் 'தலைவன்' நாயகனுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' மோதி தமிழ் சினிமா மரபைக் காப்பாற்றுகிறார். ஆர்த்தோபடிக் டாக்டர்கள் வருங்காலத்தில் தங்கள் பிழைப்பை எண்ணி வருத்தப்படுமளவிற்கு எலும்பு முறிந்த நாயகன் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளும் காட்சி மயிர்க்கூச்சலை ஏற்படுத்துகிறது. தீவிரவாதிகள் டஜன் டஜனாக துப்பாக்கிகளை வைத்திருந்தாலும் சிக்கன நடவடிக்கை காரணமாக அதை ஓரமாக வைத்து விட்டு நாயகனுடன் கை,கால்களால் சண்டை போட்டு நாயகன் ஸ்டைலாக அடிப்பதற்கு தோதாக நின்று விழுகிறார்கள்.

புத்திசாலித்தனமோ விறுவிறுப்போ அல்லாத, தமிழ் சினிமாவின் இற்றுப் போய் சலித்துப் போன சம்பிரதாயங்களை எவ்விதங்களிலும் கைவிடாத, இம்மாதிரியான அரைகுறை வேக்காடான திரைப்படங்கள்தான் நம்முடைய பிரதான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்றால்...

நம்முடைய சமூகத்தின் ரசனை எத்தனை புரையோடிப் போயிருக்கிறது என்றுதான் நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

suresh kannan

Thursday, November 22, 2012

சசியின் இந்திய லட்டும் அமெரிக்க ஆங்கிலமும்


பெளதீக ரீதியாக காலனியாதிக்கம் நம்மை வி்ட்டு விலகிப் போயிருந்தாலும் அது ஏற்படுத்தி வைத்திருக்கும் வரலாற்றுக் கறைகள், தழும்புகள், உளவியில் ரீதியான அகச்சிக்கல்கள் போன்ற பலவற்றின் மூலமாக நம்மை  இன்னமும் அவற்றின் பிடியிலேயே வைத்திருக்கிறது. உலகமயமாக்கம் என்னும் தந்திர வலைப்பின்னல் காரணமாக இன்னமும் வளர்ந்த நாடுகளின் அடிமைகளாக இருக்கிறோம். சுயஅடையாளங்களை தொலைத்து விட்டு அவற்றின் கலாச்சாரத்தை தன்னிச்சையாக நகல் செய்து கொண்டு 'நாகரிகம்' என்கிற பெயரில் கோமாளிகளாக, கூலிகளாக திரிந்து கொண்டிருக்கிறோம். இந்த மோசமான சூழலை சரி செய்ய வேண்டிய கல்வித்துறை தம்முடைய 'மெக்காலே' தூக்கத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் விழித்துக் கொள்ளாமல் இன்னமும் ஆழமாக நம்மை அந்தச் சகதியிலேயே புதைத்துக் கொண்டிருக்கிறது. 'ஆங்கிலம் என்பது அறிவு அல்ல, அது இன்னொரு மொழியே' என்பதை அழுத்தமாக இல்லாவிடினும் நீக்கு போக்காகவாவது சொல்லிச் செல்கிறது கவுரி ஷிண்டேவின் திரைப்படமான 'English Vinglish'.

இத் திரைப்படம் பிரதானமாக இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று, ஆங்கில மொழி அறியாததின் காரணமாக தம்முடைய குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவமானப்படுத்தப்படும் ஒரு பெண், குறைபாடு என்று கருதப்படும் அந்தப் பிரச்சினையிலிருந்து தன்னை மீட்டெடுப்பது, இன்னொன்று, பெரும்பாலான குடும்பத் தலைவிகள் எதி்ர்கொள்வது. Home Manager என்று கெளரவமாக பட்டம் சூட்டப்பட்ட ஊழியம் அல்லாத பணிப்பெண்ணாய் கணவனாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களாலும் மிக நுட்பமாக சீண்டல்களாலும் அவமரியாதைகளாலும் சுயஅடையாளத்தையும் மரியாதையையும் இழந்து நிற்கும் உலகளாவிய பிரச்சினை. முந்தைய பிரச்சினையையாவது சசியைப் போல சில மாத உழைப்பில் கடந்து வரலாம். ஆனால் பல காலமாகத் தொடரும் இரண்டாவது பிரச்சினை, ஆணாதிக்க மனோபாவம் மாறும் சூழல் மற்றும் அசலான பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வு ஆகிவற்றின் மூலம்தான் தீரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதலாம்.

உயர் மத்திய தர வர்க்க குடும்பத் தலைவியான சசி, ஆங்கிலம் அறியாத காரணத்தினால் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் தன்னுடைய கணவனாலும் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் சுமார் 15 வயதுடைய மகளாலும் தொடர்ந்து சீண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்.கள்ளங்கபடறியாத  இளைய மகன்தான் அவளுடைய ஒரே ஆறுதல். வீ்ட்டியிலேயே லட்டு தயாரித்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதுதான் அவளுக்கு சிறிய மகிழ்ச்சியையும் பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது.

தன்னுடைய சகோதரியின் மகள் திருமணத்திற்காக சசி அமெரிக்கா போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சில பல தயக்கங்களுடன் தனிமையில் செல்லும் அவளை அந்த தேசம் பயமுறுத்துகிறது. ஆங்கில மொழி அறியாத தன்னுடைய பலவீனத்தை அந்த மொழியை கற்றுக் கொள்வதின் மூலம் வெற்றிகரமாக கடந்து வருவதாக மீதமுள்ள கதை சற்று நகைச்சுவையுடன் பயணிக்கிறது.

எவ்வித சுய அடையாளமும் பெருமையும் இல்லாத அவளுக்கு முதன் முதலாக தன்னம்பிக்கையை அளிக்கும் வார்த்தை 'entrepreneur' அமெரிக்க ஆங்கில வகுப்பில் முதல் நாளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது வீட்டில் லட்டு செய்து விற்பனை செய்யும் வழக்கத்தைப் பற்றிக்கூறுகிறாள். எனில் அவள் ஒரு 'தொழில் முனைவோர்' என்கிறார் ஆசிரியர். மிகுந்த பெருமையுடன் அவள் இதைப் பற்றி கணவனிடம் தொலைபேசியில் கூறும் போது அவன் வழக்கமான கேலியோடு அதை புறந்தள்ளிப் போகிறான்.

சசியாக ஸ்ரீதேவி. மிகச் சிறந்த மீள்வரவு. சில பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் குரலை கேட்கும் போது பதின்மங்களில் கேட்டுப் பழகி நியூரான்களில் பதிந்துள்ள அந்தக் குரல் உயிர் பெற்று சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. சிறப்பாகவும் நடித்திருக்கிறார். என்றாலும் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருப்பவராக பிரெஞ்சு நடிகர், Mehdi Nebbou -அவர்களைச் சொல்ல வேண்டும். சசியுடன் ஆங்கில வகுப்பில் படிக்கும் சக மாணவர். சசியை மெளனக் காதல் செய்கிறார். சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் இவரின் உடல்மொழியும் நடிப்பும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

இவரும் சசியும் தனிமையில் நெருக்கமாக உணரும் ஒரு சூழ்நிலை படத்தில் வருகிறது. ஐரோப்பிய,அமெரிக்கத் திரைப்படங்களாக இருந்தால் உடலுறவுக் காட்சி அல்லது குறைந்தபட்சம் ஒரு முத்தக் காட்சியாவது இடம் பெற்றிருக்கும். கலாச்சார காவலர்கள் பொங்கி விடுவார்கள் என்பதால் கவுரி ஷிண்டே இதை மென்மையாக தவிர்த்திருக்கிறார் என்று கருதுகிறேன். 

நடிகர் அஜித் (இந்தியில் அமிதாப்) சில காட்சியில் தோன்றுகிறார். விமானப்பயணத்தில் தடுமாறும் சசிக்கு உதவி அவளுக்கு தன்னம்பி்க்கை ஊட்டுபவராக வருகிறார். இதற்கு அஜித்தை தேர்ந்தெடுத்தது கச்சிதமாக பொருந்துகிறது. சூப்பர் ஸ்டார் இமேஜ் உள்ள அஜித் படத்திற்காக ஒப்பனை ஏதும் செய்து கொள்ளாமல் தன்னுடைய அன்றாட தோற்றத்திலேயே நரைமுடியுடன் நடித்திருக்கிறார். பொது வாழ்க்கையிலும் இரவல் முடியை மாட்டிக் கொண்டு இமேஜை மெயின்டெயின் செய்யும் நடிகர்களுக்கு இடையில் இவரது தன்னம்பிக்கை காட்சிக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. (இந்தப் பாத்திரத்திற்கு முன்னர் ரஜினியை அணுகி அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது).

சசி அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தடுமாறி அங்குள்ள விற்பனையாளரால் அவமானத்துக்குள்ளாகிறாள். அவளை அவமானப்படுத்துபவர் ஓர் ஆப்ரிக்க அமெரிக்கன் பெண்மணி. நிறவெறி காரணமாக வெள்ளையர்களால் அவமரியாதைக்குள்ளாகும் ஒரு இனத்திலிருந்து வருபவர், மொழிக் குறைபாடு காரணமாக இன்னொரு நபரை அவமானப்படுத்தும் நுட்பமான உளவியல் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அடிமை சற்று உயர்ந்தாலும் மிதிப்பதற்கென்று அவருக்கு ஓர் அடிமை தேவைப்படுகிறது. யூத இனம் ஒரு கால கட்டத்தில் உலகெங்கிலும் துரத்தி துரத்தி கொன்று அழிக்கப்பட்டது. ஆனால் அதே யூத இனமே இன்று பாலஸ்தீனியர்களை கொன்றுக் குவிக்கிறது வரலாற்று முரண்.

'English Vinglish'.  - சுவாரசியமான காட்சிகளைக் கொண்ட  திரைப்படமென்றாலும் சில பல கிளிஷே காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. உதாரணமாக ஆங்கிலத்தில் தடுமாறி பின்பு அதைக் கற்றுக் கொள்கிற சசி, கிளைமாக்சில் அதை நிரூபிப்பது போல் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசுவாள் என்கிற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை இயக்குநர் ஏமாற்றாமல் பூர்த்தி செய்கிறார். முன்பே குறிப்பிட்ட படி ஆங்கிலம் ஒரு மொழிதான், அதுவே அறிவு அல்ல என்கிற செய்தியை இயக்குநர் அழுத்தமாக சொல்லத் தவறியிருக்கிறார். தன்னை அவமானம் கொள்ளச் செய்கிற ஆங்கிலத்தை ஏன் சசி கற்றுக் கொள்ளாமலேயே நிராகரித்து திரும்பக் கூடாது?. 'தொழில்முனைவோர்' என்கிற தன்னம்பிக்கையும் சுயஅடையாளமுமே அவளுக்குப் போதுதானது என்று ஏன் சசி கருதக்கூடாது?.

உண்மையில் இந்த தொனியிலும் சில காட்சிகளில் படம் சற்று பயணிக்கிறது. அக்கா பெண்ணின் திருமணத்திற்காக சசியே பிரத்யேகமாக உருவாக்கின லட்டுக்கள் எல்லாமே பாழாகிறது. ஆனால் விடாப்பிடியாக மறுபடியும் அதை உருவாக்க முடிவு செய்கிறாள். ஆனால் அன்றுதான் அவளுடைய ஆங்கில வகுப்பின் இறுதி தேர்வு நாள். ஆனால் வகுப்பை புறக்கணித்து லட்டு செய்ய முடிவெடுக்கிறாள். அக்கா பெண் இதைச் சுட்டிக் காட்டும் போது சசி இப்படியாக பதில் சொல்கிறாள்: "எனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் நான் தேர்வு பெறுவேனா இல்லையா என்று தெரியாது. நான் எனக்கு மிகவும் தெரிந்த விஷயத்தில் நான் தோற்றுப் போக விரும்பவில்லை".

இந்த தொனியையே உச்சக்கட்ட காட்சியாக வைத்திருந்தால் 'English Vinglish' ஒரு மாற்று சினிமாவாக உருவாகியிருக்கும்.

suresh kannan