Tuesday, January 29, 2013

வீடு - செழியன் கட்டுரை



பேசாமொழி - என்கிற மாற்று சினிமாவிற்கான இணைய இதழ், சமீபத்திய இதழை வீடு திரைப்படத்தின் மீதான சிறப்பிதழாக கொண்டு வந்திருக்கிறது. 'திரையிலக்கணத்துடன் தமிழில் உருவாகியிருக்கும் இரண்டே படங்கள்' என்று நான் கருதுவதில் ஒன்றான 'வீடு' திரைப்படத்தின் மீதான மீள்பார்வையும் அதன் மீதான உரையாடல்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

உயிர் எழுத்து - ஜனவரி 2013 மாத இதழிலும் 'வீடு' திரைப்படம் பற்றிய அற்புதமானதொரு கட்டுரை (அதிகாலையின் பொன்னிற ஒளி) பிரசுரமாகியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் செழியன் எழுதியது. நான் வாசித்த வரையில் இத்திரைப்படம் பற்றி இதுவரை எழுதப்பட்டதில் மிகச்சிறந்ததாக செழியனின் கட்டுரையைச் சொல்வேன்.

வீடு திரைப்படம் தொடர்பான செழியனின் Nostalgia, அத்திரைப்படத்தை மிக ரசனையாக அணுகும் ஒரு பார்வையாளனின் கோணங்கள், ரசனையைத் தாண்டி திரைமொழியின் நுட்பங்கள் என்று ஒரு முழுமையான கட்டுரையாக இது உருவாகியிருக்கிறது என்று தோன்றுகிறது. இவை மூன்றையும் உறுத்தாதவாறு கலந்திருப்பதில் செழியனின் தன்னிச்சையான மேதமையை உணர முடிகிறது. 

செழியனின் எழுத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே வாசித்து பிரமித்திருக்கிறேன். கவிஞர் மீரா நினைவு மலரில் வெளியான அவரது கட்டுரையும் மிகச் சிறந்ததொன்று. வாசகன் எழுத்தால் அல்லாது காட்சி வடிவமாக அக்கட்டுரையை உணரும்படி எழுதப்பட்டிருக்கும். ஒரு மிகச்சிறந்த Long Take என்கிற வகையில் எழுதப்பட்ட அந்தக்கட்டுரையின் ஆரம்ப பத்தி ஏற்படுத்தின பரவசம் இன்னமும் மீதமுள்ளது. (பின்னாளில் செழியன் சிறந்த ஒளிப்பதிவாளராக உருவாகப் போவதற்கான அடையாமிது).

எனக்கு உலக சினிமா குறித்த பரிச்சயத்தின் துவக்கத்தையும் அதன் ருசியையும் தூர்தர்ஷன் படங்கள் (குறிப்பாக சத்யஜித்ரே) தந்திருந்தாலும் இதை பிரக்ஞையோடு அணுகுவதற்கான உணர்வையும் பயிற்சியையும் தருவதற்கான துவக்கத்தைத் தந்தது செழியனின் ஆனந்த விகடன் கட்டுரைகளும் (உலக சினிமா), எஸ்.ராவின்  தீராநதி கட்டுரைகளும் (அயல்சினிமா). அந்த வகையில் செழியனின் எழுத்து எனக்கு முக்கியமானது. 

உயிர் எழுத்து கட்டுரையை தேடி வாசித்துப் பாருங்கள். நான் சொல்வதை உணர முடியும்.

suresh kannan

Thursday, January 24, 2013

விஸ்வரூபமும் கருத்துச் சுதந்திரமும்



ஞாநியிடமிருந்து துவங்குவது சரியாக இருக்கும்.

சென்னையில் நிகழ்த்தப் பெறும் நாடகங்களை ஒவ்வொரு முறையும் நகர காவல் ஆணையரிடம் காண்பித்து அனுமதி பெற வேண்டும் என்கிற ஆங்கிலேய அடக்குறை கொண்ட காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட துருப்பிடித்த நடைமுறையை இன்னமும் விடாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறது காவல்துறை. இது தொடர்பாக ஞாநி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், காவல்துறையின்  அவ்வாறான நடைமுறை இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்தியாவின் 64வது வருட குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இந்தத் தீர்ப்பு அர்த்தபூர்வமாகியுள்ளது. ஞாநிக்கு பாராட்டுக்கள்.

ஒருபுறம் கருத்து சுதந்திரம் நிலைநாட்டப்பட்டிருக்கும் இந்த நிலையில் மறுபுறம் கமல்ஹாசன் தயாரித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. அந்தத் திரைப்படத்தைப் பார்த்த இசுலாமிய அமைப்புகள், அதில் இசுலாமியத்திற்கு எதிரான காட்சிகளும், இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை வைத்திருப்பதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரும் அவரது கருத்தை வெளிப்படையாக பேசவும், எழுதவும் சுதந்திரம் இருப்பதாக அரசியல் சட்டம் கூறினாலும் அது நடைமுறையில் ஒரளவிற்கே உள்ளது. கிராமப்புறங்களில் மாடுகள் மேய்வதற்காக அவை சிறிது தூரம் மாத்திரமே செல்லும் வகையில் கயிறால் கட்டியிருப்பார்கள். கயிறு கட்டப்பட்டிருக்கும் எல்லை வரைக்குமே அவை மேயமுடியும். இந்தியாவில் ஒரு சாதாரண தனிநபரின் கருத்துச் சுதந்திரமும் இந்த அளவில்தான் உள்ளது. ஓர் அரசியல் தலைவரின் மறைவைத் தொடர்ந்து வெளியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த மற்றும் அதை வழிமொழிந்த சாதாரண காரணத்திற்காக  பெண்கள் இருவர், காவல்துறையால் கைது செய்யப்பட்ட சமீப செய்தியை இங்கு நினைவு கூரலாம்.

கமல் தயாரித்துள்ள விஸ்வரூபம் மத்திய அரசால் 'சென்சார்' செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் சில நூறு பேர்கள் உள்ள மதஅமைப்புகளால் ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடியுமென்றால் சென்சார் அலுவலகங்களின் அதிகார எல்லை என்ன என்ற கேள்வி இங்கு எழுகிறது. சென்சார் அலுவலகங்களை கலைத்து விட்டு ஒவ்வொரு திரைப்படத்தையும் வெயிடுவதற்கு முன்னால் அந்தந்த பிரதேசத்திலுள்ள மத, ஜாதி அமைப்புகளிடம் காண்பித்து அனுமதி பெற்று வெளியிடுவதை நடைமுறைப்படுத்தினால் சரியாக வருமா?

சில மாதங்களுக்கு முன்பு, கேரளத்தைச் சார்ந்த ஒரு தயாரிப்பாளர் உருவாக்கிய Dam 999 என்கிற ஆங்கிலத்திரைப்படம்,முல்லை-பெரியாறு அணையாறு சர்ச்சை தொடர்பானது, தமிழகத்திற்கு எதிரானது என்கிற செய்தி தமிழகத்திலுள்ள சில அரசியல்தலைவர்களால் பரப்பப்பட்டு அரசியலாக்கப்பட்டு அத்திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இன்று அந்தத் திரைப்படத்தைப் பற்றி எவருக்கு நினைவில் இல்லை. படத்தைப் பார்த்தவர்களும் குறிப்பிட்ட சர்ச்சைக்கும் திரைப்படத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான தடைகள் கேலிக்கூத்தாகும் வாய்ப்பும் இருக்கிறது.

தமிழ்த்திரைப்படங்களில் தீவிரவாத பாத்திரங்கள் என்றாலே அது இசுலாமியர்களைக் கொண்டே கட்டமைக்கப்படும் கொடுமை தொடர்ந்து நடைபெறுவதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதையு்ம போராடுவதையும் புரிந்து கொள்ளவும் ஆதரிக்கவும் முடிகிறது. இப்படி இசுலாமியர்கள் தொடர்ந்து மோசமாக சித்தரிக்கப்படுவதை  தமிழகத்தின் முற்போக்காளர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து எதிர்த்தும் பதிவு செய்துமிருந்தும் வருகிறார்கள்.

ஆனால் இவ்வாறான சித்தரிப்பை  பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் பிரக்ஞையுடன் செய்வார்கள் என்பதை நம்புவதற்கில்லை. தாம் உருவாக்கும் திரைப்படங்களுக்கு இந்தளவிற்கெல்லாம் மெனக்கெடுவார்கள் என்று நம்புவது ஒரு நகைச்சுவை. சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் விஷயங்களையே தம்முடைய கதை உருவாக்கங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு பாமரனின் மனதில் பதிந்திருக்கும் எண்ணங்களையே திரைப்படத்தில் வெளிப்படுத்தினால்தான் தான் உருவாக்கும் கதையை அவனை நம்ப வைக்க முடியும் என்கிற இயக்குநர்களின் எளிமையான உத்தி இது. அரசியல் திரைப்படங்கள் எடுப்பது அவர்கள் நோக்கமல்ல, வணிகம்தான்.

ஆனால் இது கமல் போன்ற அறிவுஜீவிகளுக்கு இது பொருந்தாது. கமல் இது போன்ற சர்ச்சைகளை சந்திப்பது புதிதல்ல. 'ஹேராம்'  'உன்னைப் போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களில் இசுலாமியர்கள் சித்தரிக்கப்பட்டது ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கமல் இதை திட்டமிட்டே செய்யக்கூடும் என்பதை நம்புவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இன்று ஹாலிவுட் திரைப்படங்களின் வெற்றிகரமான கச்சாப் பொருள் 'இசுலாமியர்களின் மீதுள்ள வெறுப்பு'. கமலின் அடுத்த திரைப்படம் ஹாலிவுட்டில் தயாராக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியையும் இதையும் கூட இணைத்துப் பார்க்கலாம்.

இது போன்ற சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் அவர் படங்களுக்கு இலவசமாக கிடைக்கும் விளம்பரங்களே. DTH-ல் பணம் கட்டி அது நிகழாததில் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு கமல் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு இந்தத் தடையின் மூலம் இந்நேரம் அனுதாபமாக உருமாறியிருக்கலாம்.

திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப்படுவதற்காக இசுலாமியர்கள் தங்களின் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்வதில் நியாயமும் அதற்கான காரணங்களும் இருக்கிறதுதான். விஸ்வரூபம் திரைப்படத்தை அவர்கள் பார்த்திருப்பதால் (பணம் கட்டத்தயாராக இருப்பவர்களுக்கு இத்திரைப்படம் மறுக்கப்படுவதும் எதி்ர்ப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் இதிலுள்ள சுவாரசியமான முரண்நகை) அவர்கள் இதை தீவிரமாக எதிர்ப்பதில் நிச்சயம் காரணமிருக்கலாம்.

ஆனால் இசுலாமிய அமைப்புகள் இதன் மறுபுறமுள்ள நியாயமான காரணங்களையும் இணைத்து பார்க்க வேண்டும். மத உணர்ச்சி என்கிற ஒற்றைப் பார்வையில் அணுகக்கூடாது. ஒவ்வொரு தனிநபர்களுக்கும்  கருத்து சுதந்திரம் உள்ள நிலையில் கலைஞர்களுக்கு அந்த சுதந்திரம் சற்று கூடுதலாகவே அனுமதிக்கப்பட வேண்டும். தம்முடைய படைப்பு உருவாக்கத்தில் அவன் சுதந்திரமாக இயங்குவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான வெளி இருக்க வேண்டும். அப்போதுதான் உயிர்ப்புள்ள படைப்புகள் உருவாக முடியும். 'இந்தப் பாத்திரத்தை இப்படி சித்தரித்தால் இங்கிருந்து எதிர்ப்பு வருமே.. இந்தப் பாத்திரம் சிகரெட் பிடிக்க முடியாதே, ஒரு நாயக்குட்டியை காண்பிப்பதற்கு விலங்கு வைத்தியடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டுமே' என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் வரையறுத்துக் கொண்ட எல்லையிலிருந்து செயற்கையான படைப்புகள்தான் உருவாகும்.

எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளது போல இசுலாமியர்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர், அவர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மை. இதை இந்த மத அமைப்புகளால் மறுக்கவே முடியாது. எனில் இது தொடர்பாக வரும் அத்தனை ஊடகச் செய்திகளையும் புனைவுகளாகத்தான் காண நேரிடும். இந்த எளிய உண்மையைப் புரிந்து கொண்டு எல்லாவற்றிற்கும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பிடிவாதத்தை கைவிட வேண்டும். இப்படி அவர்கள் தெரிவிக்கும் தொடர்ந்த எதிர்ப்பும் அதன் விளைவாக தொடரும் வன்முறையும், நடுநிலையாளர்கள் இவர்களை வெறுக்கத்துவங்குவதற்கான காரணமாக அமையலாம். மற்ற மத அடிப்படைவாதிகளுக்கு இது சாதகமாக மாறிப் போகும் அபாயமும் உண்டு.

விஸ்வரூபம் வெளியாவது தள்ளிக் கொண்டே போவதின் மூலம் கமலுக்கு பொருள் இழப்பும் மனஉளைச்சலும் ஏற்படும் என்பதை எவராலும் எளிதில் யூகிக்க முடியும். ஆனால் கலைஞன் என்பதைத் தாண்டியும் சிறந்த வணிகரான கமல், தமிழக அரசிடம் நடத்தும் பேச்சு வார்த்தையின் மூலம் சாதுர்யமாக இந்தச் சிக்கலிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

இந்த நம்பிக்கைகளின் ஊடாக, துப்பாக்கி திரைப்படம் ஏற்படுத்தின சர்ச்சையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்ததைப் போல கமலும் 'அடுத்த படத்தில் இசுலாமியராக நடிப்பேன்' என்று அறிவித்து காமெடி ஏதும் செய்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய இப்போதைய பிரார்த்தனை.
suresh kannan

Sunday, January 20, 2013

புத்தகக் காட்சி - அலெக்ஸ் பாண்டியன்

இந்த முறை புத்தகக் காட்சிக்கு போகத் தோன்றவில்லை. (இப்படி சொல்வதுதான் இப்போது பேஷனோ). என்னவோ ஒரு சலிப்பு. புத்தகம் வாசிப்பதை விட சினிமா பார்ப்பது எளிதாக இருப்பதோ அல்லது கடந்த வருட புத்தகங்கங்களே கன்னி கழியாமல் இருப்பதோ, என்ன காரணமோ தெரியவில்லை. என்றாலும் ஒரு நண்பர் அந்தப் பக்கமாக சென்றதால் கூட சென்றேன். நண்பர் இரண்டு மணி நேர அவகாசம்தான் தந்திருந்தார். ஞாயிறு என்பதால் நல்ல கூட்டம். யாருக்கோ மெளன அஞ்சலி செலுத்தப் போவது போல் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாய்ப் போனால் டிக்கெட் கவுண்ட்டர். ஒருசேர அத்தனை கூட்டத்தையும் புத்தகங்களையும் பார்த்தால் எரிச்சலாக வந்தது. விவாகரத்து செய்ய முடியாத மனைவியைப் போல் தன்னிச்சையாக ஒவ்வொரு ஆண்டும் ஹிண்டு பேப்பருக்கு சப்ஸ்கிரிப்ஷன் கட்டுவது போல சில இதழ்களுக்கு ஆண்டு சந்தா கட்டினேன். கூட்டத்தில் தெரியாமல் ஒருவர் மேல் மோதினதிற்கு முணுமுணுப்பாக கெட்ட வார்த்தையால் திட்டினார். கூப்பிட்டு 'என்னங்க?" என்றதற்கு 'உங்களை இல்லைங்க".

கடகடவென்று அத்தனை கடைகளையும் கடந்தேன். நமக்கு முன்னோடியாக எத்தனையோ அறிஞர்களும் சாதனையாளர்களும் இருக்கிறார்கள். அவர்களின் பாதையில் நடக்க வேண்டுமென்று யார் அறிவுறுத்தினாலும் நாம் கேட்பதில்லை. ஆனால் புத்தகக் காட்சி அதை சாதித்திருக்கிறது.

விகடனில் சுஜாதா மலர் வாங்கலாமா என்று யோசித்து பிறகு வேண்டாம் என முடிவு செய்தேன் (காரணம் தெரியாது). அஞ்ஞாடியை வாங்கலாம்தான். ஊறுகாய் ஜாடி மாதிரி யார் அதை தூக்கி அலைவது?..

சென்னை பிலிம் ஸ்கூல் என்றொரு கடை. என்னவென்று எட்டிப்பார்த்தால் டிஸ்கவரி சேனல் சாயலில் விதவிதமான பறவைகளின் புகைப்படம். "இந்தப் பையன்தாங்க இதையெல்லாம் எடுத்தான்" என்றார் ஒரு பெண்மணி. சுட்டிக்காட்டப்பட்ட பையன் சுட்டி டிவி பார்க்கும் வயசில் இருக்கிறான். நிழல் பதிப்பகத்தில் திடீரென்று சிறு ஆவேசம் வந்து கீழ்கண்ட புத்தகங்களை வாங்கினேன்.

1) தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் - விட்டல்ராவ்
2) நவீன கன்னட சினிமா - விட்டல்ராவ்
3) சினிமா ரசனை - அம்ஷன் குமார்.

வெளியே வந்து நண்பருடன் KF Strong - உடனும் மதிய உணவாக குஸ்காவுடனும் (கவனிக்க: குஸ்கா) புத்தகக் காட்சி அனுபவம் இனிதே நிறைவடைந்தது.


                                                               ********

அலெக்ஸ் பாண்டியன் பார்த்தேன். இந்தப் படத்தைப் பற்றி நான் எந்தக் குறையும் சொல்லப் போவதி்லலை, ஒரே ஒரு விஷயத்தை தவிர்த்து.

என்னுடைய புகாரெல்லாம் இதை திரையரங்கத்தில் காசு கொடுத்து பார்தத பார்வையாளர்கள் குறித்துதான். குறிப்பாக இந்தப் படத்தை அதிகம் குறை சொல்லி எழுதியவர்கள் அல்லது எழுதாமல் மனதிலேயே புழுங்கினவர்கள். இந்தப் படத்தின் முன்னோட்டங்களை பார்த்தாலே இது ஒரு கீழ்தர மசாலா படங்களில் ஒன்று என்பது நன்றாகவே தெரிகிறது.

எனில் ஏன் முதல் நாளே சென்று காசு கொடுத்து திரையரங்கில் சென்று பார்த்து இந்த மாதிரி மூளையைக் கழற்றி வைத்து பார்த்தாலும் ரசிக்க முடியாத எரிச்சலூட்டுகிற மசாலாப் படங்களை தயாரிக்கும் இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் அறிந்தோ அறியாமலோ ஊக்குவிக்க வேண்டும்? அவர்களின் மார்க்கெட்டிங் மூளைத் திணிப்புகளுக்கு ஏன் பலியாக வேண்டும்? பின்பு ஏன் புலம்ப வேண்டும்? ஒவ்வொரு மோசமான படத்திற்கும் இது தொடர்ந்து நிகழ்ந்தே வருகிறது. அதனால்தான் சொல்கிறேன். இந்த திரை வியாபாரிகளை குறை சொல்லி உபயோகமில்லை. எது தேவையோ அதை சப்ளை செய்கிறார்கள். அவ்வளவுதான். நுகர்வோரின் தேர்வில்தான் அது அடங்கியிருக்கிறது. நல்ல படம் என்று அறியப்படுபவற்றை (இதற்கான அளவுகோல் அவரவர்களுக்கான அறிவு முதிர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது) ஒரு கடமையாகவே திரையரங்கில் சென்று பாருங்கள். சினிமா எனும் ஊடகத்தின் மீதும் அது சமூகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்தும்  உண்மையாக அக்கறை கொண்டிருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது இது பின்பு புலம்பி உபயோகமில்லை.

அப்படியே இந்த கச்சாடக்களை எல்லாம் பார்த்துத்தான் ஆக வேண்டுமெனில் இரண்டு மூன்று நாட்கள் பொறுங்கள். ஒரளவிற்கு தெளிவான பிரிண்ட்டுகள் உடனேயே வந்து விடுகிறது. அதில் பார்க்கலாம். (குழந்தைகளோடு வீட்டில் பார்க்கிற அபாயம் இதில் இருக்கிறது.). இப்படியாவது நம் உணர்வுகளை இந்த வணிக வியாபாரிகளுக்கு உறைக்க வைக்கலாம்.

அலெக்ஸ் பாண்டியனில் என்னை அதிகம் எரிச்சலூட்டியது ஆக்ஷன் காட்சிகள் கூட இல்லை. எந்தவொரு தர்க்கத்திற்கும் உட்படாத அவையெல்லாம் காமெடிக் காட்சிகளாகவே மக்கள் பார்க்கிறார்கள் என்பது இயக்குநர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்பது புரியவில்லை. மேலும் நாமும் இவை போன்ற அபத்தங்களுக்கு பழகி விட்டிருக்கிறோம். நான் குறிப்பிட விரும்புவது இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் so called நகைச்சுவைக் காட்சிகளை. இத்தனை கீழ்தரமான, மலிவான ஆபாச நகைச்சுவையை சமீபத்தில் எந்தவொரு படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை.



suresh kannan

Friday, January 18, 2013

தானம் அறக்கட்டளையின் 8ஆவது குறும்பட விழா போட்டி

மேம்பாட்டு குறும்பட விழா' எனும் தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தானம் அறக்கட்டளை குறும்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 1.வறுமை (2005), 2.தண்ணீரும் வாழ்க்கையும் (2006), 3.தண்ணீரும் மக்களும் (2007), 4.கலாச்சாரமும், பாரம்பரியமும் (2008), 5.வறுமைக்கு எதிரான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கு (2009) 6.மக்கள் ஜனநாயகமும், மேம்பாடும் (2010) 7.வாழ்வாதாரம் (2011) என்ற தலைப்புகளில் கடந்த ஏழாண்டுகளாக தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டு குறும்பட விழாக்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு 'உணவுப்பாதுகாப்பும் பருவநிலைமாற்றமும்' எனும் தலைப்பில் ஜனவரி 28-30, 2013 தேதிகளில் நடைபெறவுள்ளது. சுற்றுச்சூழல், உணவு, பருவநிலை, நீர்நிலைமேம்பாடு, வேளாண்மை, வறுமை போன்ற கருத்தமைவுகளில் உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இப்போட்டிக்கு அனுப்பலாம். சிக்கலுக்கான தீர்வினை முன்மொழிவது அவசியம்.

உலகின் எந்த மொழிகளில் தயாரானதாக இருப்பினும், உரையாடல்கள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் வெளியாகியிருப்பதோடு, படைப்பாளியின் தனிப்பட்ட சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பது மிக அவசியம். போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் ஏதேனும் விருதுகளோ, பாராட்டுகளோ பெற்றிருக்கும் பட்சத்தில் அவை குறித்த விபரங்களையும் இணைத்தல் வேண்டும். இயக்குநர், தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் படைப்புகளை அனுப்பலாம். விசிடி, டிவிடி அல்லது வி.ஹெச்.எஸ் வடிவங்களில்தான் அனுப்ப வேண்டும். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். தாங்கள் அனுப்பும் படங்கள், எக்காரணத்தை முன்னிட்டும் திரும்ப அனுப்ப இயலாது. படைப்புகள் 45 நிமிடங்களுக்கு மிகாமலிருப்பது சிறப்பு. ஒவ்வொரு படைப்பையும் தனித்தனி விண்ணப்பங்களோடுதான் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் மற்றும் போட்டி குறித்த விரிவான விளக்க அறிக்கைகள் http://www.dhan.org/dff என்ற இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. தங்களது படங்கள் (இரண்டு பிரதிகள்) மற்றும் விண்ணப்பத்தையும் ஒருங்கிணைப்பாளர், 8ஆவது மேம்பாட்டுக் குறும்பட விழா (2012), தானம் அறக்கட்டளை, மேம்பாட்டிற்கான தொடர்பியல் மையம், 7இ, வால்மீகி தெரு, சோமசுந்தரம் காலனி, மதுரை - 16 என்ற முகவரிக்கு வருகின்ற ஜனவரி 22, 2013ஆம் நாளுக்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விபரங்களுக்கு 0452 4353983 / 9443572724 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்படும் ஒன்பது படங்கள் பொதுமக்கள் மத்தியிலும், கல்லூரிகளிலும் திரையிடப்படுவதுடன், இறுதியாக வெற்றி பெறும் முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். படங்களுக்கான தேர்வுகளில் குறும்பட மற்றும் திரைப்பட இயக்குநர்கள், பேராசிரியர்கள், இதழாளர்கள் என பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர்.

மேற்காணும் செய்திக்குறிப்பை தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

suresh kannan

Saturday, January 12, 2013

ஆரோகணம்

ஆரோகணம் பார்த்தேன். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்கிற பெண் இயக்குநரின் முதல் படம். சிறுமுதலீட்டுப் படம்.  40 லட்சத்திற்குள் முடித்திருப்பதாகச் சொன்னார்கள். அதற்காகவே பாராட்டலாம். ஆனால் படம், குறும்படமாகவும் அல்லாமல் முழு நீளத் திரைப்படமாகவும் அல்லாமல் சொதப்பியிருக்கிறது. ஒரு திரைப்படமாக கூடி வரவில்லை. Bipolar disorder -ஐ பற்றிப் படம் பேசுகிறது என்றார்கள். படத்தில் அதற்கான தடயங்கள் பெரிதாக இல்லை. ஊறுகாய் மாதிரி, இறுதிக் காட்சியில் டான்ஸ் ஆடி முடித்த ஒரு உளவியல் மருத்துவர் தஸ்புஸ்ஸென்று இந்த குறைபாட்டைப் பற்றி பேசி படத்தை முடித்து விடுகிறார். இந்தக் குறைபாட்டுடனேயே சாதனை புரிந்த உலகப் புகழ்பெற்ற சாதனையாளர்களின் பெயர்களோடு படம் முடிந்து விடுகிறது.

பைபோலார் அஒழுங்கில் இருப்பவர்கள், உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தில் உயர்வும் தாழ்வுமான மனநிலைகளில் இருப்பார்கள் என்ற சொல்லப்படுகிறது. படத்தின் தலைப்பு அதற்கு மிகப் பொருத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. (சிந்து பைரவி படம் பார்க்கவில்லையெனில் இந்த ஆரோகண அவரோகண விஷயம் எனக்குத் தெரிந்திருக்காது).

நிர்மலா என்கிற நடுத்தரவயது குடும்பத்தலைவி காணாமற் போன செய்தியோடு படம் துவங்குகிறது. இடையில் ஒரு விபத்தும் காண்பிக்கப்படுகிறது. இந்த சமகால நிகழ்வுகளும் நிர்மலாவின் கடந்த கால நிகழ்வுகளும் நான் லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. (எடிட்டரின் பங்கு அபாரம்). பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிற நிர்மலாவிற்கு அடிக்கடி சாமி வருவதால் பாலுறவு தொடர்பான சங்கடங்களை சந்திக்கும் கணவன், இன்னொரு குடும்பத்தை அமைத்துக் கொள்கிறான். நிர்மலா தனது இரண்டு பிள்ளைகளோடு தனியாக வாழ்கிறாள். காய்கறி விற்கிறாள். திடீரென ஆவேசம் கொள்கிறார். அன்பாக இருக்கிறார். அடிக்கடி காணாமற் போகிறார். பிள்ளைகள் தேடி கூட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இப்படியாக காணாமற் போன ஒருமுறைதான் விபத்தில் சிக்குகிறார். இதுவரை டிவி சீரியல் போல மெலோடிராமாவாக சென்று கொண்டிருக்கும் திரைப்படம் பிறகு கேலிக்கூத்தாக ஆகி விடுகிறது. அகரீதியான குறைபாடு உள்ளவர்கள் உடல்ரீதியாக வலிமையாக, முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பது தமிழ் சினிமா கட்டமைத்திருக்கும் பல பொய்யான க்ளிஷேக்களில் ஒன்று. (குணா படத்தை நினைவுகூரலாம்). பயங்கர வேகத்தில் வரும் கார் நிர்மலா மீது மோதுகிறது. ஆனால் அவரோ ஒன்றுமே நிகழாதது போல் எழுகிறார். நட்சத்திர ஹோட்டலில் டான்ஸ் ஆடுகிறார். மையததிற்கு தேவையேயில்லாத கிளைகள் விரிகின்றன. (அரசியல்வாதி பாத்திரம் எதற்கு?).

நிர்மலாவாக விஜி. சரிதாவின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. இயக்குநர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நிர்மலாவின் பெண், பையன் .. என்று யதார்த்தமாக வரும் தமிழ் சினிமாவின் புதிய முகங்கள் ஆறுதலாக இருக்கிறது. கணவராக நடித்திருப்பவர் (அட்டகத்தியில் நாயகனுக்கு தந்தையாக வரும் நபர் - மாரிமுத்து) குறிப்பிடத்தகுந்த அளவிற்கு நடித்திருக்கிறார். சண்முகசுந்தரத்தின் அற்புதமான ஒளிப்பதிவு (வைட்-ஆங்கிள் காட்சிகள்) சிறப்பாக இருந்தாலும் வீண்.

இயக்குநர் பாலச்சந்தர் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பாராட்டினதாக கேள்விப்பட்டேன். அவரின் 'அக்னிசாட்சி' நாடகத்தனங்களுடான திரைப்படம் என்றாலும் அதுவே ஒரு நல்ல முயற்சி. ஆரோகணம் அதில் நூறில் ஒரு பங்கைக் கூட எட்டவில்லை. ரொம்பவும் சுமாரான முயற்சி.

suresh kannan

Tuesday, January 08, 2013

பசு வதை

எச்சரிக்கை: பசு வதையைப் பற்றிய வீடியோ. மிகக் குரூரமாக உள்ளது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம். குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்.




ஹரன் பிரசன்னா பேஸ்புக்கில்  பகிர்ந்து கொண்ட இந்த வீடியோவினால் மனச்சாட்சி உசுப்பப்பட்டு நேற்றிரவு தூக்கத்தையும் நிம்மதியையும் இழந்தேன். அடிமாடுகளாக கேரளாவிற்கு கொடுமையாக கடத்தப்படும் பசுக்களைப் பற்றி அச்சு ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் அவை குரூரமாக கொல்லப்படுவதை காட்சி ஊடகமாக பார்க்க் நேர்ந்தது இதுவே முதன்முறை.

நான் மிதமான அசைவ உணவுப்பழக்கத்தைக் கொண்டவன். என்றாலும் அசைவ உணவை நான் எந்த வகையிலும் நியாயப்படுத்தவே மாட்டேன். இதை விவாதித்து நிறுவ முடியாது. அவரவர் மனச்சாட்சிக்கு உண்டான விஷயம். அசைவ உணவு உண்ணும் வழக்கத்தில் உள்ள சமூகத்தில் பிறந்ததன் காரணத்தினாலேயே அதை நியாயப்படுத்துவது முறையல்ல. பிற உயிர்களைக் கொன்று வாழ நேரும் விலங்குகள் கூட தம்முடைய இரை மிகவும் துன்புறாதவாறு சில இயற்கையான  நெறிமுறைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால் மனிதன் எத்தனை கொடூரமான விலங்கு என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் உணரலாம். ஆனால் துன்புறுத்தாதவாறு விலங்குகளைக் கொல்வதின் மூலமும் கூட இதை நியாயப்படுத்தி விட முடியாது என்பதையும் இணைத்து யோசிக்க வேண்டியுள்ளது.

எல்லா உயிர்களும் இந்த உலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுள்ளது. 'வலிமையுள்ளது எஞ்சும்' என்கிற கருத்து யதார்த்த உண்மை என்றாலும் ஒரு நாகரிக சமூகம் மற்ற உயிர்களை துன்புறுத்தாத, வாழ அனுமதிக்கிற சூழலுக்குத்தான் நகர வேண்டும். கொசு, மூட்டைப் பூச்சியையெல்லாம் நாம் சாகடிப்பதில்லையா? என்று சிலர் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு அசட்டுத்தனமாக விவாதிப்பார்கள். நம்மைத் துன்புறுத்துவதால் நோய்களைப் பரப்புவதால் தற்காப்பிற்காக, சைவ உணவு அமையாத சூழலில், வேறு வழியில்லாமல் கொல்வது என்பது வேறு. ஆனால் மாற்று உணவிற்காக, அதன் சுவைக்காக, வேட்டையாடுவதின் மகிழ்ச்சிக்காக, ஒரு உயிரைக் கொல்வதின் மூலம் கிடைக்கும் குரூர இன்பத்திற்காக சக உயிர்களைக் கொல்வது முறையற்றது.

இந்த வீடியோ பசுவதை தொடர்பானது என்பதால் இதை இந்துத்துவ அரசியலோடு பொருத்திப் பார்க்க வேண்டாம். என்னளவில் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. மனிதனின் பேராசைக்காக கொல்லப்படும் அத்தனை அப்பாவி உயிரினங்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும்.

அசைவ உணவை கைவிட வேண்டும் என்கிற தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது இந்த வீடியோ. இந்தக் கொடுமைகள் ஏற்கெனவே நாமறிந்தவைதான் என்றாலும் ஏதாவது ஒரு புள்ளியில், பிரேக்கிங் பாயிண்டில்தானே சில முடிவுகள் நிகழும். அப்படியொன்றாக இந்த வீடியோவைப் பார்க்கிறேன்.


suresh kannan