Thursday, January 24, 2013

விஸ்வரூபமும் கருத்துச் சுதந்திரமும்



ஞாநியிடமிருந்து துவங்குவது சரியாக இருக்கும்.

சென்னையில் நிகழ்த்தப் பெறும் நாடகங்களை ஒவ்வொரு முறையும் நகர காவல் ஆணையரிடம் காண்பித்து அனுமதி பெற வேண்டும் என்கிற ஆங்கிலேய அடக்குறை கொண்ட காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட துருப்பிடித்த நடைமுறையை இன்னமும் விடாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறது காவல்துறை. இது தொடர்பாக ஞாநி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், காவல்துறையின்  அவ்வாறான நடைமுறை இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்தியாவின் 64வது வருட குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இந்தத் தீர்ப்பு அர்த்தபூர்வமாகியுள்ளது. ஞாநிக்கு பாராட்டுக்கள்.

ஒருபுறம் கருத்து சுதந்திரம் நிலைநாட்டப்பட்டிருக்கும் இந்த நிலையில் மறுபுறம் கமல்ஹாசன் தயாரித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. அந்தத் திரைப்படத்தைப் பார்த்த இசுலாமிய அமைப்புகள், அதில் இசுலாமியத்திற்கு எதிரான காட்சிகளும், இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை வைத்திருப்பதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரும் அவரது கருத்தை வெளிப்படையாக பேசவும், எழுதவும் சுதந்திரம் இருப்பதாக அரசியல் சட்டம் கூறினாலும் அது நடைமுறையில் ஒரளவிற்கே உள்ளது. கிராமப்புறங்களில் மாடுகள் மேய்வதற்காக அவை சிறிது தூரம் மாத்திரமே செல்லும் வகையில் கயிறால் கட்டியிருப்பார்கள். கயிறு கட்டப்பட்டிருக்கும் எல்லை வரைக்குமே அவை மேயமுடியும். இந்தியாவில் ஒரு சாதாரண தனிநபரின் கருத்துச் சுதந்திரமும் இந்த அளவில்தான் உள்ளது. ஓர் அரசியல் தலைவரின் மறைவைத் தொடர்ந்து வெளியான செய்தியை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த மற்றும் அதை வழிமொழிந்த சாதாரண காரணத்திற்காக  பெண்கள் இருவர், காவல்துறையால் கைது செய்யப்பட்ட சமீப செய்தியை இங்கு நினைவு கூரலாம்.

கமல் தயாரித்துள்ள விஸ்வரூபம் மத்திய அரசால் 'சென்சார்' செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் சில நூறு பேர்கள் உள்ள மதஅமைப்புகளால் ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடியுமென்றால் சென்சார் அலுவலகங்களின் அதிகார எல்லை என்ன என்ற கேள்வி இங்கு எழுகிறது. சென்சார் அலுவலகங்களை கலைத்து விட்டு ஒவ்வொரு திரைப்படத்தையும் வெயிடுவதற்கு முன்னால் அந்தந்த பிரதேசத்திலுள்ள மத, ஜாதி அமைப்புகளிடம் காண்பித்து அனுமதி பெற்று வெளியிடுவதை நடைமுறைப்படுத்தினால் சரியாக வருமா?

சில மாதங்களுக்கு முன்பு, கேரளத்தைச் சார்ந்த ஒரு தயாரிப்பாளர் உருவாக்கிய Dam 999 என்கிற ஆங்கிலத்திரைப்படம்,முல்லை-பெரியாறு அணையாறு சர்ச்சை தொடர்பானது, தமிழகத்திற்கு எதிரானது என்கிற செய்தி தமிழகத்திலுள்ள சில அரசியல்தலைவர்களால் பரப்பப்பட்டு அரசியலாக்கப்பட்டு அத்திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இன்று அந்தத் திரைப்படத்தைப் பற்றி எவருக்கு நினைவில் இல்லை. படத்தைப் பார்த்தவர்களும் குறிப்பிட்ட சர்ச்சைக்கும் திரைப்படத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்கள். இந்நிலையில் இம்மாதிரியான தடைகள் கேலிக்கூத்தாகும் வாய்ப்பும் இருக்கிறது.

தமிழ்த்திரைப்படங்களில் தீவிரவாத பாத்திரங்கள் என்றாலே அது இசுலாமியர்களைக் கொண்டே கட்டமைக்கப்படும் கொடுமை தொடர்ந்து நடைபெறுவதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதையு்ம போராடுவதையும் புரிந்து கொள்ளவும் ஆதரிக்கவும் முடிகிறது. இப்படி இசுலாமியர்கள் தொடர்ந்து மோசமாக சித்தரிக்கப்படுவதை  தமிழகத்தின் முற்போக்காளர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து எதிர்த்தும் பதிவு செய்துமிருந்தும் வருகிறார்கள்.

ஆனால் இவ்வாறான சித்தரிப்பை  பெரும்பாலான தமிழ் இயக்குநர்கள் பிரக்ஞையுடன் செய்வார்கள் என்பதை நம்புவதற்கில்லை. தாம் உருவாக்கும் திரைப்படங்களுக்கு இந்தளவிற்கெல்லாம் மெனக்கெடுவார்கள் என்று நம்புவது ஒரு நகைச்சுவை. சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் விஷயங்களையே தம்முடைய கதை உருவாக்கங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு பாமரனின் மனதில் பதிந்திருக்கும் எண்ணங்களையே திரைப்படத்தில் வெளிப்படுத்தினால்தான் தான் உருவாக்கும் கதையை அவனை நம்ப வைக்க முடியும் என்கிற இயக்குநர்களின் எளிமையான உத்தி இது. அரசியல் திரைப்படங்கள் எடுப்பது அவர்கள் நோக்கமல்ல, வணிகம்தான்.

ஆனால் இது கமல் போன்ற அறிவுஜீவிகளுக்கு இது பொருந்தாது. கமல் இது போன்ற சர்ச்சைகளை சந்திப்பது புதிதல்ல. 'ஹேராம்'  'உன்னைப் போல் ஒருவன்' போன்ற திரைப்படங்களில் இசுலாமியர்கள் சித்தரிக்கப்பட்டது ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கமல் இதை திட்டமிட்டே செய்யக்கூடும் என்பதை நம்புவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இன்று ஹாலிவுட் திரைப்படங்களின் வெற்றிகரமான கச்சாப் பொருள் 'இசுலாமியர்களின் மீதுள்ள வெறுப்பு'. கமலின் அடுத்த திரைப்படம் ஹாலிவுட்டில் தயாராக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தியையும் இதையும் கூட இணைத்துப் பார்க்கலாம்.

இது போன்ற சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் அவர் படங்களுக்கு இலவசமாக கிடைக்கும் விளம்பரங்களே. DTH-ல் பணம் கட்டி அது நிகழாததில் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு கமல் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பு இந்தத் தடையின் மூலம் இந்நேரம் அனுதாபமாக உருமாறியிருக்கலாம்.

திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப்படுவதற்காக இசுலாமியர்கள் தங்களின் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்வதில் நியாயமும் அதற்கான காரணங்களும் இருக்கிறதுதான். விஸ்வரூபம் திரைப்படத்தை அவர்கள் பார்த்திருப்பதால் (பணம் கட்டத்தயாராக இருப்பவர்களுக்கு இத்திரைப்படம் மறுக்கப்படுவதும் எதி்ர்ப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் இதிலுள்ள சுவாரசியமான முரண்நகை) அவர்கள் இதை தீவிரமாக எதிர்ப்பதில் நிச்சயம் காரணமிருக்கலாம்.

ஆனால் இசுலாமிய அமைப்புகள் இதன் மறுபுறமுள்ள நியாயமான காரணங்களையும் இணைத்து பார்க்க வேண்டும். மத உணர்ச்சி என்கிற ஒற்றைப் பார்வையில் அணுகக்கூடாது. ஒவ்வொரு தனிநபர்களுக்கும்  கருத்து சுதந்திரம் உள்ள நிலையில் கலைஞர்களுக்கு அந்த சுதந்திரம் சற்று கூடுதலாகவே அனுமதிக்கப்பட வேண்டும். தம்முடைய படைப்பு உருவாக்கத்தில் அவன் சுதந்திரமாக இயங்குவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான வெளி இருக்க வேண்டும். அப்போதுதான் உயிர்ப்புள்ள படைப்புகள் உருவாக முடியும். 'இந்தப் பாத்திரத்தை இப்படி சித்தரித்தால் இங்கிருந்து எதிர்ப்பு வருமே.. இந்தப் பாத்திரம் சிகரெட் பிடிக்க முடியாதே, ஒரு நாயக்குட்டியை காண்பிப்பதற்கு விலங்கு வைத்தியடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டுமே' என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் வரையறுத்துக் கொண்ட எல்லையிலிருந்து செயற்கையான படைப்புகள்தான் உருவாகும்.

எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் உள்ளது போல இசுலாமியர்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர், அவர்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மை. இதை இந்த மத அமைப்புகளால் மறுக்கவே முடியாது. எனில் இது தொடர்பாக வரும் அத்தனை ஊடகச் செய்திகளையும் புனைவுகளாகத்தான் காண நேரிடும். இந்த எளிய உண்மையைப் புரிந்து கொண்டு எல்லாவற்றிற்கும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பிடிவாதத்தை கைவிட வேண்டும். இப்படி அவர்கள் தெரிவிக்கும் தொடர்ந்த எதிர்ப்பும் அதன் விளைவாக தொடரும் வன்முறையும், நடுநிலையாளர்கள் இவர்களை வெறுக்கத்துவங்குவதற்கான காரணமாக அமையலாம். மற்ற மத அடிப்படைவாதிகளுக்கு இது சாதகமாக மாறிப் போகும் அபாயமும் உண்டு.

விஸ்வரூபம் வெளியாவது தள்ளிக் கொண்டே போவதின் மூலம் கமலுக்கு பொருள் இழப்பும் மனஉளைச்சலும் ஏற்படும் என்பதை எவராலும் எளிதில் யூகிக்க முடியும். ஆனால் கலைஞன் என்பதைத் தாண்டியும் சிறந்த வணிகரான கமல், தமிழக அரசிடம் நடத்தும் பேச்சு வார்த்தையின் மூலம் சாதுர்யமாக இந்தச் சிக்கலிலிருந்து வெளிவருவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

இந்த நம்பிக்கைகளின் ஊடாக, துப்பாக்கி திரைப்படம் ஏற்படுத்தின சர்ச்சையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்ததைப் போல கமலும் 'அடுத்த படத்தில் இசுலாமியராக நடிப்பேன்' என்று அறிவித்து காமெடி ஏதும் செய்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய இப்போதைய பிரார்த்தனை.
suresh kannan

12 comments:

பிரகாஷ் said...

இது போன்று ஸ்டீரியோடைப்பிங்காக -தீவிரவாதிகளில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்- கலைப் படைப்புகள் உருவாகாமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது. இனி இஸ்லாமியர்களால் இந்த நாட்டில் எந்த ஒரு தீவிரவாதமும் நிகழாமல் அவர்கள் பார்த்துக் கொண்டால், நாளடைவில், இது போன்று அவர்களை சித்தரிக்க, சமூகத்தில் இல்லவே இல்லாத ஒரு போலியை உண்மை போல சித்தரிக்க, எந்த ஒரு படைப்பாளியும் அஞ்சுவான். அப்படி வலிந்து, இல்லாத ஒன்றைச் சித்தரிக்கும் போலிப் படத்தை மக்கள் புறக்கணித்துத் தோல்வியடைய வைப்பர். இந்தப் பூட்டின் சாவி, படைப்பாளிகள் கையில் இல்லை. இஸ்லாமியர்களின் கையில் இருக்கிறது.

DiaryAtoZ.com said...

அருமையான கட்டுரை. இஸ்லாமியர்கள் சிந்திப்பார்களா? அரசு தன கடமையை செய்யுமா?

Anonymous said...

மேல இருக்கறதை சொன்னது வால்டேர் இல்லை என்பதை மட்டுமெ பதிவு செய்து அமர்கிறேன்!

;)))

டைனோ

வவ்வால் said...

//Evelyn Beatrice Hall, (1868 – after 1939),[1] who wrote under the pseudonym S.G. Tallentyre, was an English writer best known for her biography of Voltaire with the title The Friends of Voltaire, which she completed in 1906.
In her biography on Voltaire, Hall wrote the phrase: "I disapprove of what you say, but I will defend to the death your right to say it" (which is often misattributed to Voltaire himself) as an illustration of Voltaire's beliefs.[2] Hall's quote is often cited to describe the principle of freedom of speech.//

fakequotes.com இல் இருந்து சு.க எடுத்து போட்டிருக்கார். அப்போவே வால்தெர் சொல்லவில்லைனு தெரிஞ்சு இருக்கனும்.

அதனால் இப்போ என்ன நல்ல மேற்கோள் தானே "டைனோ" ஏன் நீங்களே யார் சொன்னது என சொல்லாமல் அமர்ந்தீர்கள்?

-------------

சு.க,

பாம்பும் சாவக்கூடாது ,கோலும் உடையக்கூடாது போல இருக்கு உங்க கருத்து :-))

வவ்வால் said...

//நண்பர்களுக்கு, எந்தவொரு பின்னூட்டத்தையும் பிரசுரிப்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமே. அதைக் கருத்தில் கொண்டு பின்னூட்டமிடவும்.//

நல்ல கருத்து சுதந்திரம் , நீங்க தான் கருத்து சுதந்துரம் பற்றி பேருரை ஆற்ற சகல தகுதியும் கொண்ட "கருத்து சுதந்திர போராளி" :-))

Baby ஆனந்தன் said...

DAM 999 படத்தின் கிளைமாக்ஸில் உடைந்து பெரும் சேதம் ஏற்படுத்தும் டேம் ஊழல் அரசியல்வாதி கட்டும் புதிய டேம் தானே தவிர முல்லை பெரியாறு அணை அல்ல. கேரளாவில் இருக்கும் டேம் ஒரு உடைவது போல் காட்டுகிறார்கள் என்றதுமே நம்மாட்கள் தேவையில்லாமல் பெரிதாக பிரச்சனை செய்து பேனை பெருமாள் ஆக்கி அந்த மட்டமான படத்திற்கு இலவச விளம்பர ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள்.

விஸ்வரூபம் தொடர்பாக அரசியல் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கமல் இதையெல்லாம் எதிர்பார்து தான் தனது பிறந்த நாளுக்கு முதல்வரைச் சந்தித்ததாகக் கூறினர். அப்படி இருக்கையில் மீண்டும் எதிர்பார்க்கப்பட்ட பிரச்சனையே பூதாகரமாக வெளிப்பட்டிருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை. கமலுக்கு நீதமன்றம் கொடுத்துள்ள இரண்டு நாட்கள் அவகாசத்திற்குள் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, பிரச்சனையை முடித்து படத்தை வெளியிடுவார் என்று நம்புவோம்...

Anonymous said...

மென்போக்காக மேம்போக்காக கருத்துரிமையும் வேண்டும், இஸ்லாமியரின் கோபமும் நியாயம் என சொல்லிவிட்டீர்கள் .. புரியுமா புரிய வேண்டியோருக்கு என்பது மட்டும் வினா? பார்ப்போம் !

குரங்குபெடல் said...

மற்றுமொரு முரண் நகை . . .

நேற்று விஸ்வரூபம் விவகாரம் குறித்து விவாதம்

ஒன்று . .

Sun News தொலைகாட்சியில் நேரலையாக ஒளிபரப்பாக . . .

கீழே Flash News


கள்ள நோட்டு கும்பல தலைவன் ரபீக் கைது

பிச்சைப்பாத்திரம் said...

வாசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

டைனோ. :)

வவ்வால்: நீங்கள் சுட்டிக் காட்டியதை ஏற்றுக் கொள்கிறேன். அது ஆபாச பின்னூட்டமிடுவர்களுக்கான எச்சரிக்கையாக சில மாதங்கள் முன் போட்டது. நானே மறந்து விட்டேன். கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் இடுப்பின் கீழ் தாக்குவதை நீங்களும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். :)

krish said...

​முதலில் உள்ள ​மேற்​கோளில் ​சொன்னது ​போன்ற கருத்துச் சுதந்திரம் அ​மையும் சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்ப​னை ​செய்து பார்த்​தேன். தன்னு​டைய கருத்துக்களின் ஆழ அகலங்களில் அதன் உள் புறத் தாக்கங்களில் மிகத் ​தெளிவு ​கொண்ட மனிதர்களும், அ​தே ​போல் தன்னு​டைய சித்தாந்தங்களுக்கும் மாற்றானது எதிரானது இ​வை என பிறவற்​றை அ​டையாளம் காணும் மனிதர்களும் நி​றைந்த ஒரு சமூகத்தில்தான் அத்த​கைய கருத்துக்கள் அதன் உண்​மையான அர்த்தத்தில் சமூகத்தால் ந​டைமு​றைப்படுத்த முடியும்.

இன்​றைய நம் சமூகம், சினிமாவில் நல்லவன்(?) ​வேடம் ​போட்டு நடித்தவன் நிஜ வாழ்விலும் நல்லவனாகத்தான் இருப்பான் என்று நம்பும் ஒரு சமூகம். காகிதத்தில் பதிபித்ததும், ​வா​னொலி ​தொ​லைக்காட்சியில் ஒளிபரப்பியதும், ​மே​டையில் முழங்குவதும், விளம்பரங்களில் ​சொல்லப்படுவதும் உண்​மை என்று நம்பும் சமூகம் ​மே​​லே கற்ப​னை ​செய்த சமூகத்திலிருந்து எத்த​னை ​கோடி கி​​லோமீட்டர் ​தொ​லைவில் ஒரு நட்சத்திரத்​தைப் ​போல இருக்கிறது நம்மு​டைய சமூகம்.

கருத்துச் சுதந்திரம் பற்றிய ​பேச்சுக்க​ளெல்லாம் சாராம்சத்தில் அ​மெரிக்கா முன்​வைக்கும் ஒரு உலகப்பார்​வையின் சிபாரிசாக அ​மைவதின் அடிப்ப​டை​யை புரிந்து ​கொள்ள முடியாமல் ​போய் விடுவது துரதிர்ஷ்டம்.

இசுலாமியர்கள் உலகம் முழுவதும் இருந்தாலும் எல்லா இசுலாமியர்களும் ஒன்றல்ல. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா, சவுதி அ​ரேபியா ​போன்ற நாடுகளின் வரலாறும், அரசியலும் இன்​றைய வாழ்க்​கை மு​​றையும் ​தெரியாத சராசரி இந்திய மக்கள் மத்தியில் இறுதியில் வந்து பதிந்திருப்பது அ​மெரிக்காவின் அந்த ஒற்​றைப் பார்​வைதான். இ​தை மறுக்க முடியமா?

க​லைஞர்கள் பிரக்​ஞை​யோடு தன் ப​டைப்​பை ப​டைத்தார்களா இல்​லை தான் இன்னது ​செய்கி​றோம் என்று ​தெரியாம​லே வணிக ​நோக்கத்​தோடு ப​டைக்கிறார்களா என்ப​வை​யோ, அவர்கள் சமூக, அரசியல் ப​​டைப்பு என்று ​சொல்லி ப​டைக்கிறார்களா அல்லது வியாபார ப​டைப்பு அல்லது த்ரில்லர் ப​டைப்பு என்று ​சொல்லி ப​டைக்கிறார்களா என்ப​வை அல்ல பிரச்சி​னை. அந்த ப​டைப்புகள் காட்டும் வாழ்க்​கை என்பது எப்படிப்பட்டது? நம்முன்னுள்ள வாழ்க்​கையின் சிக்கல்க​ளை அது காட்டும் கண்​ணோட்டம் யாரு​டைய கண்​ணோட்டம் என்பதும் தான் மிக முக்கியமானது.

இசுலாமிய தீவிரவாதம் என்பது இன்​றைய உலக ஆண்​டைகள் ஏற்றுக்​கொண்ட ஒரு உலகப் பார்​வை என்பதால் ப​டைப்பாளர்களுக்கு இது சுலபமாக இருக்கலாம். அ​மெரிக்க தீவிரவாதம்தான் இன்​றைய உலகின் மிகப்​பெரிய சவால் என்ற பார்​வை​யோடு படம் எடுக்க இந்த அரசுகள் அனுமதிக்குமா? ஈரான் எத்த​னை பிற்​​போக்கான அரசாக இருந்தாலும் அது அதன் உள்நாட்டு பிரச்சி​னை அப்பிரச்சி​னை​யை அதன் மக்கள் பார்த்துக் ​கொள்வார்கள் நீ யாரடா அது பற்றி ​பேச என அ​மெரிக்கா​வை கண்டிக்கும் ஒரு படம் எடுக்க அனுமதிப்பார்களா? இந்தியாவில் இந்துத் தீவிரவாதம் பற்றி படம் எடுப்பது சாத்தியமா? இ​து எல்லாம் சாத்தியமாகும் ஒரு நாளில் மட்டு​மே இசுலாமிய தீவிரவாதம் பற்றிய இலக்கியங்க​ளை​யோ க​லைக​ளை​யோ கருத்துச் சுதந்திரத்தின் ​பேரால் ஏற்றுக் ​கொள்ள முடியும். அது வ​ரை கருத்துச் சுதந்திரம் என்ப​தே அத்த​கைய இசுலாமிய தீவிரவாத எதிர்ப்பு ப​டைப்புக​ளை கடு​மையாக எதிர்த்து ​போராடுவது என்பதாகத்தான் இருக்க முடியும்.

சிவ.சரவணக்குமார் said...

க்ரிஷ்.....

ஹிந்துக்கள் பயங்கரவாதிகள் என்று நம் [!] நாட்டு உள்துறை அமைச்சர் கூறி மூன்று நாள் ஆகிறது.......எவனுக்கும் உறைக்கல......இதுவரை சினிமாவில் ஹிந்தும‌தம் போல வேறு எந்த மதமும் இழிவு செய்யப்பட்டதில்லை..... பத்தாதுன்னா திராவிட இயக்கங்களின் நிதி உதவியோட நீங்களே ஒரு படம் எடுங்க.......

சிவ.சரவணக்குமார் said...

கடந்த காலங்களில் கமல் பல முறை தன் படங்க‌ளில் ஹிந்து மதத்தை திட்டமிட்டு இழிவு செய்திருப்பார்.......அப்பொதெல்லாம் அவரது'' திறமையை'' ,''துணிவை''பாராட்டிய வீர[!]மணி இப்போது இஸ்லாமியர்களோடு பேசி தீர்வு காணவேண்டும் என்று உபதேசம் செய்கிறார்.....

தானாக முன்வந்து இவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட [ அக்ர‌ஹாரத்தில் இருந்து பெரியார் திடலுக்கு வந்தவராம்] கமலுக்கு இதுவும் வேண்டும்.....இன்னமும் வேண்டும்.......

இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல........உலகுக்கே அச்சுறுத்தல்.........இதை யாரும் சுட்டிக்காட்டக்கூடாதென்றால் , தங்கள் மதத்தின் பெயரால் நடைபெறும் பயங்கரவாதத்தை இவர்கள் கண்டிக்கவேண்டும்....... பயங்கரவாதிகளை தனிமைப்படுத்தவேண்டும்......அதைவிட்டுவிட்டு அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் எங்கள் பிரதான எதிரி என்று அறிவித்த ஒசாமா பின்லேடன் மறைவுக்கு சென்னையில் தொழுகை நடத்தினால் எப்படி?


''இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லீம்ஸ் '' படத்துக்கு அந்தப்ப‌டம் வெளியான ,அமெரிக்கவிலேயே பெரிய எதிர்ப்பில்லை........இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் இந்தோனேசியாவிலோ , அரபு நாடுகளிலோ பெரிய எதிர்ப்பில்லை.......ஆனால்சம்பந்தமே இல்லாமால் சென்னையில் மிகப்பெரிய வன்முறை.......அதை அரசு வேடிக்கை பார்த்ததன் விளைவு , இப்போது இந்த அளவுக்கு வந்துவிட்டது.......

ஓட்டு வங்கி அரசியலுக்காக இன்னும் என்னென்ன விலை கொடுக்கப்போகிறோமோ?