Saturday, June 27, 2009

விருது பெற்ற திரைப்படம் இன்றிரவு (27.06.09)

Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

குழந்தைகளுக்கான திரைப்பட விருது பெற்ற திரைப்படங்கள் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்று (27.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.

MUJHSE DOSTI KAROGEOGE
(come, Let Us Be Friends)
[feature film]

1992/35mm/2725mts. 96 mins/Hindi (English subtitled)



Director/Script : GopiDesai
Camera : Ashok Mehta
Script : Sandeep Pendse, Gopi Desai
Dailogue : Hriday Lani
Music : rajat Dholakia
Editor : Renu Saluja
Cast : Amit Phalke, Saleem Amrohi, Nancy thakkar, Habib Tanvir, Irfan Khan, Dipti Dave, Anita Kanwal and the people and animals of Banni.

Synopsis

Nine year old Gul Hasan (Gulu) lives in the desert area of the Rann of Kutch. Its extreme variations of temperature, its absence of water, open sandy plains with no vegetation, its sand storms, cracked and parched earth, provide the inert background to his dreams, his hopes and aspirations. The natural environment along with urban and modern influences and happenings has a greater impact on Gulu's mind, which become the take-off point of his fantasies. Gulu's journery slips from reality to fantasy to reality.


Director's Biography

Gopi Desai, a graduate from Gujrat University, has trained in film at the film and television Insitutie, Pune, and at the National School of Drama. Desai made film programmes for women and children at the Indian Space Research Organization. Desai was a member of the Sangeet Natak Academy from '81 to '85. She has also worked for theatre, oppearning in plays and conducting work shops. She has acted in many television serials. Desai has made documentary films dealing with social and developmental issue. Her film "Land and People of Banni" won the Gujrat State Award for Best Film Desai has assisted leading directors such as Johnu Barua, Ketan Mehta, Amit Khanna, Mahesh Bhatt, Ramesh Sippy and Kamal Swarup. "Mujhse Dosti Karoge?" is her first feature film.

source: http://www.cfsindia.org/index.htm

Friday, June 26, 2009

சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்


இந்தப் பக்கத்தில் தன்னுடைய ஒரு சினிமா விமர்சனத்தில் குறை கண்டுபிடித்தவர்களின் மீது பாய்ந்து பிடுங்கிவிட்டார் சாருநிவேதிதா. சற்று அதீதம்தான். ஆனால் என்னால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சினிமாவை எப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிறோம் அல்லது எப்படி அனுபவிக்கிறோம் என்பதுதான் முக்கியமே ஒழிய அந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் போது அதில் ஏற்படும் கருத்துப் பிழைகளையோ, எழுத்துப் பிழைகளையோ பொருட்படுத்த தேவையில்லை என்பதுதான் முதிர்ச்சியடைந்த பார்வை.

என்னுடைய பதின்ம வயதுகளில் ரஜினி vs கமல் ரசிகர்களிடையே ஏற்படும் விவாதங்களில் சம்பந்தப்பட்ட நடிகர் எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், அதில் எத்தனை 100 நாட்கள் ஓடின, வெள்ளிவிழா கண்டன, அப்பாவாக எத்தனை படங்களில் நடித்திருக்கிறார், யார் யார் கதாநாயகிகளாக நடித்தார்கள்... போன்ற 'அதிமுக்கிய' புள்ளிவிபரங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் அதைத் திணறாமல் கடகடவென்று சொல்லத் தெரிந்தவர்கள்தான் 'உண்மையான' ரசிகர்களாக மதிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். நானும் அந்த அபத்தத்தை முயன்றிருக்கிறேன். பதின்ம வயதுகளில் இவ்வாறான அறியாமையுடன் இருப்பதைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் வளர்ந்து ஒரு புரிதலை அடைந்து உலக சினிமாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது இவ்வாறான விடலைத் தனத்தை கைவிடுவது நல்லது. 'குறை கண்டுபிடித்து விட்டோம் பாத்தியா' என்று சிறுமைத்தனமாக மகிழ்பவர்களே இவ்வாறான குறைகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார்கள். '

'The Hurricane' திரைப்படத்தை பற்றிய என்னுடைய பதிவிலும் ஒரு அனானி நண்பர் 'wikipedia' என்றொரு ஒற்றை வார்த்தை பின்னூட்டத்தில் தன்னுடைய மேதமையைக் காட்டி விட்டுச் சென்றிருந்தார். அதாவது இந்தப் படத்தைப் பற்றிய சில மேல் தகவல்களை நான் விக்கிபீடியாவிலிருந்து அப்படியே எடுத்து எழுதிவிட்டேனாம். என்ன அநியாயம் பாருங்கள். எனக்கு ஒன்று மாத்திரம் புரியவில்லை. அய்யா! இந்த மாதிரியான கலைக்களஞ்சியங்கள் எல்லாம் அப்படியாக தகவலை எடுத்து உபயோகப்படுத்தத்தானே இருக்கிறது. இன்னும் கற்கால வழக்கத்தின் படி நூலகம் நூலகமாக அலைந்து கனமான புத்தகங்களை தூசுதட்டி புட்டிக் கண்ணாடி போட்டு அதிலிருந்து குறிப்புகள் எடுத்து எழுதுபவர்களைத்தான் இவர்கள் அறிவாளிகள் என்று ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. நுட்பம் வளர்ந்துவிட்டது. ஒரு மவுஸ் சொடுக்கில் உலகமெங்கிலும் உள்ள தகவல்கள் கணினி வழியாக வந்து கொட்டுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு?. கண்ணதாசன் சம்பந்தப்பட்டதொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுதிய திரைப்பாடலொன்றில் வரும் வரி அல்லது கருத்து, சங்கப்பாடலில் உள்ளதை அப்படியே பிரதிபலிக்கிறதே, யாராவது ஆட்சேபிக்க மாட்டார்களா' என்று அவரின் உதவியாளர் கேட்டதற்கு 'அடப்போய்யா, என்னுடைய தாத்தாவின் பாக்கெட்டில் கைவிடுவதற்கு யாருடைய அனுமதியைக் கேட்க வேண்டும்?' என்று ஒரே கேள்வியைக் கொண்டு அந்த ஆட்சேபத்தை தூக்கி எறிந்தாராம்.

எங்கே தவறு என்றால், இணையத்தில் இருக்கும் ஒரு வேறொரு கட்டுரையை அப்படியே எடுத்துப் போட்டோ அல்லது வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துப் போட்டு 'தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன' என்கிற விஷயத்தை அப்படியே மூடி மறைத்து சம்பந்தப்பட்ட கட்டுரை தன்னால்தான் எழுதப்பட்டது' என்று நிறுவ முயல்வதுதான் அதிபயங்கர குற்றம். 'அறிவுசார் திருட்டு' என்று இதற்குப் பெயர்.

என்னுடைய பதிவில் பின்னூட்டமிட்ட நண்பர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்க முயன்றிருக்கிறார். அதாவது 'இந்தப் படத்தை நான் பார்க்கவேயில்லை அல்லது பார்த்தும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. விக்கிபீடியாவிலிருந்த தகவல்களை அப்படியே நான் காப்பியடித்திருக்கிறேன்' என்பதுதான் அவர் கூற முயல்வது. சினிமாவை பொழுது போக்காக மட்டும் கருதாமல் அதை உன்னதமானதொரு கலைவடிவமாக வழிபடுபவர்கள், ஒரு மதமாக பின்பற்றுபவர்கள், சுவாசமாக நினைப்பவர்கள்... போன்ற சினிமா ஆர்வலர்களுக்கு இந்த அற்பமான குற்றச்சாட்டு மிக்க எரிச்சலையே ஏற்படுத்தும். இதுவேதான் சாருவிற்கும் ஏற்பட்டு அவரை அதீதமாக எதிர்வினையாற்ற வைத்திருக்கிறது. தகவல்களை தரும் தளங்களிலிருந்து சம்பந்தப்பட்ட சினிமாவைப் பற்றின மேல் விவரங்களை மாத்திரமே பெற முடியும். அனுபவங்களைத் தர முடியாது.

சரி ஒரு வாதத்துக்கே வைத்துக் கொள்வோம். விக்கிபீடியா போன்ற தகவல்களை தரும் தளங்களை வைத்து ஒரு சினிமா விமர்சனத்தை எழுதி விட முடியுமா? என்னுடைய பதில் 'முடியும்'. எழுதுவதில் அடிப்படையான திறமை கொண்டவனால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியும். ஆனால் அது பிளாஸ்டிக் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும். எழுதினவனின் ஆன்மா அதில் இருக்காது. ஒரு தேர்ந்த, நுட்பமான வாசகனால் இதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். 'அந்த சினிமாவின் இயக்குநனும் நடிகனும் பார்வையாளனும் எங்காவது ஒரே புள்ளியில் இணையும் அந்த உன்னதமான அனுபவம்' செயற்கை விமர்சனங்களில் இருக்காது. சினிமாவை தன்னுடைய உயிர் போல நேசிக்கிறவன் இந்த மாதிரியான அற்பத்தனமான காரியங்களை செய்ய மாட்டான். வணிகப் பத்திரிகைகளில் கூலிக்காக மாரடிக்கும் சினிமா விமர்சனம் எழுதப் பணிக்கப்படுபவர்களே பெரும்பாலும் இவ்வாறு செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கவர் வாங்கிக் கொண்டோ அல்லது தயாரிப்பாளரின் நிர்ப்பந்தத்தாலோ, விளம்பர வருமானத்தை கணக்கிக் கொண்டோ ஒரு குப்பைப்படத்தை 'ஆஹா ஓஹோ'வென்று என்று புகழ்ந்து தள்ளுவது ஒரு முறை. அல்லது சம்பந்தப்பட்ட படத்தைப் பார்க்காமலேயே அதுவரை வந்த விமர்சனங்களையும் ஏற்கெனவே வந்திருக்கும் தகவல்களை வைத்தும் 'கதைவிடுவது' இன்னொரு முறை. அவற்றையெல்லாம் 'விமர்சனம்' என்ற கணக்கிலேயே கொள்ளக்கூடாது.

இணையத்திற்கு வந்த புதிதில் நான் கூட ஏதாவது சினிமாவைப்பற்றி எழுதும் போது 'விமர்சனம்' என்கிற வார்த்தையை அதனுடைய முக்கியத்துவம் அறியாமல் விடலைத்தனமாக பயன்படுத்திக் கொண்டிருந்தேன். எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியம் ஒருமுறை 'விமர்சகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் எவை?' என்று எழுதின கட்டுரையை படித்த போது எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஒரு விமர்சகனுக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஆழமான ஞானமும், சமகால நிகழ்வுகளைப் பற்றின அறிவும், நடைமுறை சிரமங்களையும் அனுபவங்களைப் பற்றியும், அதனுடைய எதிர்காலம் பற்றியும் அ முதல் ஃ வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எழுதாமல் தான் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கட்டுரையைப் படித்ததிலிருந்து 'விமர்சனம்' என்கிற பதத்தை நான் பயன்படுத்துவதில்லை. 'இந்த சினிமாவைப் பற்றிய என் பார்வை' என்கிற மாதிரிதான் மழுப்புகிறேன்.

மேலும் ஒரு நல்ல சினிமாவை ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு நிச்சயம் உள்வாங்கிக் கொள்ளவே முடியாது. ஒரு அடிப்படை பார்வையாளனாக எல்லா முன்முடிவுகளையும் களைந்துவிட்டு வெற்றான மனநிலையில் அந்தப்படத்தை அணுக வேண்டும். பின்பு இன்னொரு முறை அதிலிருந்து முற்றிலும் விலகி அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள், கேமரா கோணம் பார்வையாளனுக்கு சொல்ல முயலும் செய்தி, இயக்குநர் பார்வையாளனை மிகவும் நெருங்கி பேசும் அந்த கலாபூர்வமான மொழி ஆகியவற்றை நுட்பமாகவும் கூர்மையாகவும் அவதானிப்பதே ஒரு உண்மையான சினிமா ரசிகனின் அடிப்படையாக இருக்க முடியும். காத்திரமானதொரு சினிமா என்றால் மூன்று,நான்கு முறை பார்த்தால் கூட முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது.

ஆனால் இன்று இணையத்தில் எந்தவொரு குப்பைப் படத்தையும் முதல் நாளே அடித்துப்பிடித்து பார்த்துவிட்டு அதைப் பற்றி நான்கு பத்திகள் எழுதிவிட்டு 'விமர்சனம்' என்று தலைப்பு போட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஆனால் இந்த அபத்தமான பரவசம் ஒருநிலையில் வடிந்து, இந்தப் புள்ளியிலிருந்து முன்னகரும் வாய்ப்பு இருக்கிறது ; அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்' என்கிற எதிர்பார்ப்புதான் இப்போதிருக்கும் ஒரே ஆறுதல்.

உலக சினிமாவை பற்றி குறைந்த அளவே ஞானம் கொண்டிருந்த (சத்யஜித்ரேவின் சில படங்களை அரசுத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்) ஆனால் அதிலிருந்து முன்னகராமல் ஒரு சராசரி மசாலா சினிமா பார்வையாளனாகவே தொடர்ந்த என்னை மாற்றியமைத்தது தமிழ்ச் சிற்றிதழ்களின் அறிமுகம். குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி தீராநதியில் வந்து கொண்டிருந்த சினிமா தொடரான 'அயல் சினிமா'-வை சொல்ல வேண்டும். ஒரு சினிமாவை எப்படி அணுகுவது, எப்படி அதை புரிந்து கொள்வது, ஒரு குறிப்பிட்ட இயக்குநரின் அனைத்துப் படங்களையும் பார்த்து எப்படி அவரை மற்ற இயக்குநர்களுடன் வேறுபடுத்திக் காட்டுவது... என்று பல புரிதல்களை ஏற்படுத்தியது அந்தப் புத்தகம். அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்துதான் இன்னும் தீவிரமானதொரு இடத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை சினிமா பற்றி நான் எழுதும் பதிவுகள் என்னுடைய மேதமையைக் காட்டுவதற்காக அல்ல. என்னுடைய அனுபவத்தை சக மனிதருக்கும் கடத்தி அவரையும் அந்தச் சினிமாவை காணச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் எழுதுவதின் அடிப்படை நோக்கம். சிலருக்கு 'உலக சினிமா' என்றவுடனே எள்ளலான சில முன்முடிவுகளுடன் அணுகுவதுதான் வழக்கமாக இருக்கிறது. 'உலகத்தரம்' குறித்த கிண்டலான கேள்விகள் வேறு. இதற்கு சர்வதேச தரக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என்கிற கவனத்துடன் உருவாக்கப்படும் ஏற்றுமதிப் பொருட்களை ஒரு அவசர உதாரணமாக கொள்ளலாம். உலகமெங்கிலும் உள்ள மனிதர்களின் சில உணர்வுகள் பொதுவானது. அதற்கு மொழியோ,கலாசார அறிவோ,மிகையான தொழில்நுட்பமோ,நட்சத்திர நடிகர்களோ, கவர்ச்சியோ தேவையில்லை. அந்தப் புள்ளியை நோக்கி தன்னுடைய படத்தை நகர்த்திச் செல்கிறவனின் படங்கள் உலக சினிமா ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

உலக சினிமா என்பது இந்தியாவிற்கு வெளியிலிருந்து தயாரிக்கப்படுவதா என்ற மாதிரியான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறேன். இங்கும் பல அற்புதமான சினிமா இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். தமிழில் என்றால் மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, ஜான் ஆபிரகாம் என்று சில பெயர்களை உடனே நினைவு கூர முடிகிறது. ஆனால் இங்கு காட்சி ஊடகத்தைப் பற்றின அறிவு மிகக் குறைவாக இருக்கிறது. ஒரு காட்சியைப் பயன்படுத்தி சொல்லக்கூடிய இடங்களில் கூட வசனத்தைப் பயன்படுத்துகிறார்கள். ரசிகர்களுக்குப் புரிய வேண்டும் என்பது இவர்களின் மேதாவித்தனமான வாதம். ரசிகர்கள் எப்போதோ முன்னால் வந்துவிட்டார்கள் என்பதை யாராவது இவர்களுக்குச் சொன்னால் நன்றாக இருக்கும்.

தொடர்புடைய பதிவு: நாங்க பிலிம் காட்றம்ல

(மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது, உலகின் மிக முக்கியமான படங்களாக நான் கருதும் 10 படங்களின் வரிசையில் உள்ள சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா'வின் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி)

suresh kannan

சாக்லேட்


கதறியழும் குழந்தையை எப்படி சமாதானப் படுத்துவது என்றே தெரியவில்லை. சிரிக்கும் போது தேவகானமாக காதில் விழும் குழந்தையின் சிரிப்பு அழும் போது நாராசமாக ஆகி விடுவது என்ன மாயமோ தெரியவில்லை. அழுதால் கேட்டது கிடைத்து விடும் என்பதுதான் ஒரு குழந்தையின் முதல் கற்றல். பெணகளின் ஆயுதம் கண்ணீர் என்பார்கள். இது பெண்குழந்தை வேறு. சாமான்யத்தில் மசிந்து விடுமா? என்ன சமாதானப்படுத்தியும் அழுகை ஓயவில்லை. மாறாக இன்னும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டது.

விஷயம் இதுதான். எல்.கே.ஜி படிக்கும் அவளுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பது தகப்பனாகிய என் தினசரி கடமையாக எப்படியோ ஆகிவிட்டது. அவள் வெற்றிகரமாக ரைம்ஸ் சொல்லி முடிக்கும் போதெல்லாம் இரவு அலுவலகம் திரும்பும் போதோ அல்லது உடனேயோ அவளுக்கு பிடித்த ஒரு சாக்லேட்டை வாங்கிக் கொடுப்பது வழக்கம். உளவியல் படிக்கும் போது பாவ்லோவின் மணியோசை, நாயின் உமிழ்நீர் என்று படித்ததையெல்லாம் இவ்வாறாக செயல்முறையில் பரிசோதிக்க துணிந்து இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைக்கவில்லை.

வழக்கம் போல் இப்போதும் ஒரு நர்சரி பாடலை வெற்றிகரமாக முழுமையாக சொல்லி முடித்தவுடன் சாக்லேட்டுக்கான உத்தரவாதத்தை கேட்டது குழந்தை. வாங்கிக் கொடுக்க முடியாதபடி ஒரு சிக்கல். சமீபத்தில்தான் அவளுக்கு கடுஞ்சுரம் வந்து சளி அதிகமாகி, மூச்சு விட அவதிப்பட்டு, நாங்கள் பயந்து போய் மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடினோம். அவரோ குழந்தைக்கு குளிரான மற்றும் இனிப்பான பொருட்களை கொடுக்காதீர்கள் என்றும் அரிசி கஞ்சி மட்டும் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். இன்னும் கூட அவளுக்கு முழுமையாக குணமாகததால் எந்த இனிப்பு பொருளையும் வாங்கித்தர நான் துணியவில்லை.

இந்த நிலையில்தான் இந்த பெருங்குரலெடுத்த அழுகை....

எப்படியாவது இப்போதைய அழுகையை நிறுத்தி விடலாம் என்று மெதுவாக

"சாயந்தரம் வேணா பீச்சுக்குப் போலாமா"

"வேணாம்" என்றாள் கொஞ்சம் அழுகையை நிறுத்தியபடி.

"உனக்கு பிடிச்ச டாம் அண்டு ஜெர்ரி சி.டி. வேணும்னா போடட்டுமா?"

"ஹீம்...ஹீம்...." என்றாள் பிடிவாதமாக.

பின்பு நான் அவளுக்கு பிடித்ததையெல்லாம் பட்டியலிட்டு காட்டியும், அவளை வழக்கமாக சிரிக்க வைக்கும் யுக்தியான குரங்கு சேஷ்டையெல்லாம் செய்து காட்டின செயல்கள் எல்லாம் நம் அரசியல்வாதிகள் காவிரி தண்ணீருக்காக நடத்திய சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் போல் தோல்வியில் முடிந்தன. நான் கொஞ்சம் பொறுமையை இழந்து

"அப்ப சாக்லேட்டுதான் வேணுமா, சனியனே.... "

அவள் அதிர்ந்து போய் தன் அழுகை சத்தத்தை இன்னும் கூட்டி வைக்க, வேறு வழியின்றி அவளிடம் சரணாகதியடைந்தேன். மிகவும் மெல்லிய குரலில் ரகசியமாய்,

"இன்னிக்கு சாயங்காலம் வாங்கிட்டு வரேன். அம்மாவுக்குத் தெரிய வேணாம், என்ன? "

குழந்தை சட்டென்று சுவிட்சை அணைத்தாற் போன்று தன் அழுகையை நிறுத்தி, போனசாக ஒரு புன்னகையும் பூத்தது.

இவ்வளவு களேபரத்திற்கும் சமையல் அறையை விட்டு வெளியே வராத என் மனைவி, நான் மெல்லிய குரலில் சொன்னதை சரியாக மோப்பம் பிடித்து விட்டு

"உங்களுக்கு பட்டதெல்லாம் போதாதா. இப்பத்தானே அவளே கொஞ்சம் கொஞ்சமா குணமாகிகிட்டு வரா. டாக்டர் சொன்னதையெல்லாம் மறந்துட்டீங்களா. உங்களாதான் அவ கெட்டுப் போறதே. கேக்கறதையெல்லாம் வாங்கிக் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கீங்க. அதே மாதிரி எங்கிட்டயும் எதிர்பாக்கறா. எல்லாத்துக்கும் அழுது புடிவாதம் புடிக்கிறா. உங்களுக்கென்ன, மகராசனா ஆபிஸ் போயிடுவீங்க. இங்க நான்ல வெச்சுக்கிட்டு அவஸ்தை படணும்.

போன முறை உடம்பு சரியில்லாமப் போயி, நீங்களும் இல்லாம ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்குள்ள எவ்ள அவஸ்தைப்பட்டேன். இப்ப போயி அவளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்றீங்களே, ஏதாவது இருக்கா உங்களுக்கு...."

என்று அவள் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குபவர்கள் போல் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போக எனக்கு என் மேனேஜர் ஞாபகம் வந்து, அலுவலகத்திற்கு நேரம் ஆனதை உணர்ந்து பரபரப்பானேன். இந்த உரையாடல்களால் தன்னுடைய சாக்லேட்டை இழந்து விடுவோமோ என்று நம்பிக்கையை இழந்து மீண்டும் அழ ஆரம்பித்த குழந்தையை, என் மனைவிக்கு தெரியாமல் தனியாக அழைத்துப் போய் 'அப்பா சொன்னா கண்டிப்பா வாங்கித்தருவேன்.என்ன' என்று சமாதானப் படுத்தினேன்.

oOo

அலுவலக பணிகளுக்கிடையிலும் சாக்லேட் கேட்டு அழுத குழந்தையின் முகமே நினைவில் நின்று கொண்டிருந்தது. மெதுவாக வீட்டுக்கு போன் செய்து 'குழந்தைக்கு உடம்பு எப்படியிருக்கிறது' என்று மனைவியிடம் விசாரித்தேன். பக்கத்து பிளாட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தி கிடைத்தவுடன் மனம் நிம்மதி அடைந்தது. அலுவலகம் முடிந்தவுடன் குழந்தைக்குப் பிடித்த சாக்லேட்டை வாங்கி பத்திரப்படுத்தினேன்.

oOo


வீடு திரும்பியவுடன் வழக்கத்திற்கு மாறாக வீடு அமைதியாக இருந்தது. மனைவி வழக்கம் போல் தொலைக்காட்சி தொடரை பார்த்து கண் கலங்கி உட்கார்ந்திருக்க, ஒரு பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ரகசியமாக பால்கனிக்கு அழைத்துச் சென்று ட்ட்டடடடாங் என்று ம்யூசிக் எல்லாம் கொடுத்து சாக்லேட்டை எடுத்து நாடகப் பாணியில் உயரே தூக்கிக் காட்டினேன். குழந்தையின் கண்களில் சட்டென்று சுவிட்ச் போட்டாற் போல் பல்ப் எரிய, கண்களில் குறும்போடு சாக்லேட்டை நெருங்கியது.

"அம்மாக்குத் தெரியாம இங்கேயே சாப்பிட்டுடு, என்ன?"

குழந்தையும் ஒரு ரகசிய விளையாட்டை விளையாடும் உற்சாகத்தோடு ஒப்புக் கொண்டது. என் மனைவி கவனம் கலையாமல் இன்னும் தொலைக்காட்சிதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஒரு கொலைகாரனின் உஷார்த்தனத்தோடு சாக்லேட் உறையையும் கீழே போட்டு விடாமல் பத்திரப் படுத்தினேன். குழந்தையின் பார்வையில் இப்போதுதான் 'எங்க அப்பா' என்கிற உணர்வு தெரிய சமயத்தை வீணாக்காமல் ஒரு முத்தத்தையும் அவளிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

oOo

இரவு.

குழந்தை உறங்கி விட்டிருக்க, என் மனைவி என்னிடம் அக்கம் பக்கத்து இராமாயணத்தை எல்லாம் ஒப்பித்தபின், குழந்தையை பார்த்தபடி சொன்னாள்.

"முன்னல்லாம் மூச்சு விடும் போது 'கர்கர்' னு சத்தம் வரும்ல. இப்பத்தான் கொஞ்சம் இல்லாம் இருக்குது. மூணு பாட்டில் மருந்து கொடுத்தப்புறம் இப்பத்தான் பரவாயில்லாம இருக்கா. இதுல நீங்க வேற சாக்லேட் வாங்கிக் கொடுக்கறேன்னு சொன்னப்புறம் எனக்கு ரொம்பம் கோபம் வந்துடுச்சு. அதான் காலைல அப்படி பேசிட்டேன்."

என்றெல்லாம் பேசிக் கொண்டே போக, எனக்கு குற்ற உணர்வு அதிகமாகிக்கொண்டே போனது. நமக்குதான் குழந்தையின் மீது சரியானபடி அக்கறையில்லையோ, உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் எப்படி சாக்லேட் வாங்கிக் கொடுத்தேன். ஏதாவது ஆகிவிட்டதென்றால் என்ன செய்வது ... என்றெல்லாம் குழம்பிப் போனேன்.

பிறகு ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு சாக்லேட் வாங்கிக்கொடுத்த விஷயத்தை சொல்லிவிடலாம் என்று மன்னிப்பு கேட்கும் குரலில் ஆரம்பித்தேன்.

"....அது வந்து குழந்தை காலைல ரொம்ப அழுதாளா?...."

..ம்...

"சாக்லேட் வாங்கித்தரலேன்னா அழுவறத நிறுத்த மாட்டா போல இருந்தது. அதான் சாயந்திரம் வாங்கித் தரேன்னு பொய் சொன்னேன். ஆனா... யோசிசிச்சு பார்த்ததில, சாயந்திரமும் நான் சாக்லேட் வாங்கிட்டு வரலன்னா.. ரொம்ப ஏமாந்து போயிடுவாளேன்னு நெனச்சு....."

".. நெனச்சு..."

"இப்ப வாங்கிட்டு வந்தேன். பால்கனில வெச்சு சாப்புட்டா. இப்பத்திக்கு உனக்குத் தெரிய வேணாமேன்னு நெனச்சேன். அப்புறமா சொல்லிக்கலாம்னு... ஸாரி....

நான் என் வாக்கியத்தை முடிக்குமுன்னரே, அவள் என்னை மெலிதாக திடுக்கிட வைத்த அந்த கேள்வியை கேட்டாள்.

"அப்படின்னா, நீங்களும் சாக்லேட் வாங்கிக் கொடுத்தீங்களா?..."

(இது ஒரு மீள்பதிவு. Aug 7, 2004 அன்று மரத்தடி குழுமத்தில் பிரசுரமானது.)

ஏற்கெனவே வாசித்தவர்களும் தொடர் மீள்பதிவுகளால் எரிச்சல் அடைபவர்களும் மன்னிக்கவும். வீட்டுக் கணினி பழுது. எனவேதான்..


suresh kannan

Wednesday, June 24, 2009

சிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வழிகள்


1) 'மலைமொழிவேந்தன்', 'சிறுநகைக்கொன்றோன்' என்று யாருக்கும் புரியாத பெயரில் ஒரு முகமூடியை அணிந்து கொள்ள வேண்டும். யாராவது பெயர் விளக்கம் கேட்டால் சீறாப்புராணத்திலோ திருக்கழுக்குன்றத்திலோ (?) உள்ள ஒரு கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரீல் விடலாம்.

2) கோணித்துணி பத்து மீட்டர் வாங்கி முழுக்கை சட்டை அணிந்து கொள்ள வேண்டும். ஒரம் கிழிந்த ஜோல்னாப்பை இருத்தல் நல்லது. அதனுள் கல்சிறுத்தை மண்பயணி தமிழ்க்கினி போன்ற பத்திரிகைகளை வைத்திருக்க வேண்டும்.

3) அரும்பாக்கம் சாத்தப்பன் தெருவில் உள்ள ஓரு வீட்டில் (மனைவி ஊருக்கு போயிருக்கும் நேரத்தில்)பின்நவீனத்துவமும் முரண்பாடுகளும் என்கிற தலைப்பில் நடக்கிற இலக்கிய கூட்டத்திற்கு செல்லலாம். (சீக்கிரம் சென்றால் 50 கிராம் காராபூந்தியும் டிஸ்போஸபில் கப்பில் கொஞ்ஞPண்டு காப்பியும் கிடைக்கலாம்) பேச்சாளர்கள் தன் சுயப்பிரதாபங்களை முடித்து விட்டு விஷயமே இல்லாத விஷயத்திற்கு வருவதற்குள் 5 பேர் அரக்கோணம் இரயிலை பிடிக்க கிளம்பிருப்பர்கள் (மொத்தமே 15 பேர்தான் கூட்டத்திற்கு வந்திருப்பார்கள்) கூட்டம் முடிந்த பின் உடனே கிளம்பி விடுவது நல்லது. இல்லையென்றால் விழா அமைப்பாளர் எழுதிய 'பிக்காசோவும் முட்டைகோசும்' என்கிற நவீனத்தை விலைகொடுத்து வாங்கவேண்டி வரும்.

4) மோட்டுவளையை பார்த்து யோசித்து கொண்டிருக்கிறாற் போன்று ஒரு போல் புகைப்படமும் கூடவே தான் எழுதி வைத்திருக்கிற மிராண்டாவுக்குள் ஒரு பனித்தலையன் என்கிற சர்ரியலிச நாவலின் பிரதியையும் வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பத்திரிகை ஆசிரியரை கண்டவுடன் அதை கொடுத்து விட்டு உடனே அவர் பத்திரிகைக்கு ஒருவருட சந்தாவை கட்டிவிடுவது நல்லது.

5) "உணர்வுச்சூழலில் அரூப வெளிப்பாடு vortex என்ற ஆங்கிலச் சொல்லிலிருந்து vorticism தோன்றியது. இந்த இயக்கம் சார்ந்த கலைஞர்கள் பெரும்பாலும் Futurism என்னும் இயக்கத்தின் பாதிப்பில் அதைப் பின்பற்றி உருவங்களின் சலனம் அசைவுகள் இவற்றை உத்வேகத்துடன் வெளிப்படுத்தினர் " என்பது மாதிரியான கட்டுரைகள் எழுத தெரிந்து கொண்டீருக்க வேண்டும்.

மீதி 5 வழிகள் உங்கள் எதிர்வினைகளை பார்த்த பிறகு.
சுரேஷ், சென்னை.

()

இது ஒரு மீள்பதிவு. ராயர் காப்பி கிளப் மடற்குழுவில் Oct 20, 2003 அன்று பிரசுரமானது. (தினமும் வரும் ஆயிரக்கணக்கான வாசகர்களின் மின்னஞ்சல்களின் வேண்டுக்கோளுக்கிணங்க இந்த இலக்கிய பொக்கிஷங்கள் இந்த வலைப்பக்கத்தில் மீள்பதிவு செய்யப்படுகின்றன).

நகைச்சுவை நோக்கில் மாத்திரமே எழுதப்பட்ட மேற்கண்ட மடலுக்கு இரா.முருகனின் கோபமான எதிர்வினை.

கொச்சைப் படுத்த வேண்டாம்.

அவரவர் இலக்கியத் தொண்டுக்காக எத்தனை இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள், ஏற்றுக் கொண்டிருக்கி றார்கள் என்று தெரிந்தால் இப்படிப் பொறுப்பில்லாமல் பேச மாட்டீர்கள்.

நியூயார்க் டைம்ஸில் நிருபராக எழுதி வந்த வருமானத்தை எல்லாம் கணையாழிக்குச் செலவழித்த கஸ்தூரிரங்கன் கையில் மிஞ்சியது ஒன்றுமில்லை. தீபத்தோடு திரியாக எரிந்த நா.பாவும், சதங்கை வனமாலியும், பொன்.விஜயனும், விஜயபாஸ்கரனும், சி.சு.செல்லப்பாவும், விருட்சம் அழகியசிங்கரும், கசடதபற கிருஷ்ணமூர்த்தியும், முன்றில் அரங்கநாதனும், ஞானரதம் ஜெ.கேயும், காலச்சுவடு சு.ராவும், சுந்தரசுகனும், கவிதாசரணும் இன்னும் முகம் தெரியாத எழுத்து மட்டும் தெரிந்த எத்தனையோ நபர்களெல்லாம் கைக்காசையும், நேரத்தையும், வாழ்க்கையில் இன்னும் எதை எதையோ இழந்து சிறுபத்திரிகை நடத்தி, எழுதி அளித்த கொடை இன்றைய நவீனத் தமிழ் இலக்கியம். பைசா வருமானத்தை எதிர்பாராமல், விளம்பரத்தை வேண்டாமல் சிறுபத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் மரியாதைக்குரியவர்கள். 'இந்தியா'வில் பாரதி தொடங்கி வைத்த பரம்பரை இது. புதுமைப்பித்தனும், ஜி.நாகராஜனும், அசோகமித்திரனும், தஞ்சை பிரகாஷ¤ம் அவ்வழி வந்தவர்கள். இன்றைக்கு நாம் இணையத்தில் இலக்கியத்தை விவாதித்துக் கொண்டிருப்பது அவர்கள் போட்ட பிச்சையால் தான்.

இந்த மாதிரிக் கடிதங்களை இங்கே எந்த மட்டுறுத்துனரும் இனி இங்கே அனுமதிக்கக்கூடாது.

இரா.மு


குழுமத்தை விட்டு விலகுவதாக நான் எழுதியதும்,'நான் சொன்னதை பிற்காலத்தில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்' என்று இரா.முருகன் என்னை ஆற்றுப்படுத்தியதும்... மலரும் நினைவுகள்.


suresh kannan

Tuesday, June 23, 2009

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூறாவளி

'தாமதமாக கிடைக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம்' என்பது இத் திரைப்படத்தின் சாரம். Rubin "Hurricane" Carter என்கிற குத்துச்சண்டை வீரரின் வாழ்க்கை வரலாறு 'The Hurricane' (1999) திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பாவியாக கருதப்படும் Rubin தன்னுடைய வாழ்க்கையின் 20 வருடங்களை சிறையில் கழித்ததின் காரணங்களில் ஒன்றாக 'நிறவெறி'யைச் சொல்லலாம். மனிதர்கள் இயற்கையில் எந்த வித்தியாசமுமில்லாமல் படைக்கப்பட்டாலும் அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தமக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்கிறார்கள் சமூகவியில் அறிஞர்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த சம்பவம் இது. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 'எந்தப் பாடப் பிரிவு உயர்ந்தது' என்று தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவு வன்முறையாக மாறி அதில் தாக்கப்பட்ட மாணவன் சமீபத்தில் மரணமடைந்த போதுதான் இந்த விஷயம் வெளியில் வந்துள்ளது. ஆக சக மனிதனை வெறுக்க மனிதன் ஏதாவதொரு காரணத்தை 'உற்பத்தி' செய்து கொண்டேயிருக்கிறான்.



அமெரிக்கச் சேரியில் உள்ள கறுப்பினச் சிறுவர்களில் ஒருவன் ரூபின். பாலியல் நோக்கத்தில் தன் நண்பனை அணுகும் வெள்ளையன் ஒருவனை தாக்கின குற்றத்திற்காக சட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறான். கறுப்பினத்தினவர்கள் மீது வெறுப்புணர்வு கொண்ட அந்த வெள்ளை காவல் அதிகாரி அதை திருட்டு வழக்காக மாற்றி சிறுவனை சிறையில் அடைக்கிறான். சிறையிலிருந்து தப்பிய ரூபின் ராணுவச் சிப்பாயாக சேர்ந்து தன் பயிற்சியை முடித்து சில வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு வரும் போது, தண்டனைக் காலத்தின் இடையிலிருந்து தப்பிய குற்றத்திற்காக மறுபடியும் சிறையில் அடைக்கப்படுகிறான். வெள்ளையர்களை எதிர்கொள்ள தன்னை எப்படியாவது வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொள்வதுதான் சிறந்த வழி என்று உணரும் ரூபின் சிறையில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து தன்னை குத்துச்சண்டை வீரனாக தயார்ப்படுத்திக் கொள்கிறான். பிறகு வெளியில் வந்தவுடன் middle weight பிரிவில் பல புகழ்பெற்ற வீரர்களை தோற்கடித்து குறுகிய காலத்திலேயே நிறைய புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறான். எதிர் போட்டியாளர்களை நாக்அவுட் முறையில் வெற்றி கொள்வதால் சூறாவளி என்னும் அர்த்தததில் 'hurricane' என்கிற செல்லப் பெயர் கிடைக்கிறது.

இவனது புகழை கண்டு வெறுப்படையும் அந்த காவல் அதிகாரி, ரூபினை மூன்று நபர்கள் கொலையுண்ட ஒரு சம்பவத்துடன் இணைத்து கைது செய்கிறான். சாட்சியங்கள் ரூபினுக்கு எதிராக மிக வலுவாக இருக்கும் சூழ்நிலையில் குற்றம் உறுதிபடுத்தப்பட்டு ரூபின் சிறையில் அடைக்கப்படுகிறான். நிரபாதியான தன்னை நிரூபித்துக் கொள்ள அவன் எடுக்கும் முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுகின்றன.

()

ரூபினைப் போலவே சேரியைச் சேர்ந்த வறுமைப் பின்னணியைக் கொண்டவன் Lesra. பள்ளிப்படிப்பைத் தொடர இயலாமல் இருக்கும் லெஸ்ராவை கனடாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் தத்தெடுத்து அவனுக்கு கல்வியளிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஒரளவு வாசிக்கத் தெரிந்தவுடன் லெஸ்ரா வாசிக்கும் முதல் புத்தகமே குத்துச் சண்டை வீரர் ஒருவரின் வாழ்கை நூலான The 16th Round. பழைய புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் கடையிலிருந்து இதை வாங்குகிறான். ரூபின் சிறையிலிருந்து எழுதி வெளியிட்ட இந்த நூல் முன்னர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூபினுக்கும் தன்னுடைய வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு உணர்ச்சிவசப்படும் லெஸ்ரா ரூபினை சிறையில் சந்திக்கிறான். இருவருக்குமான உறவு வளர்கிறது. தன்னுடைய கனடா நண்பர்களுடன் இணைந்து ரூபினை எப்படியாவது சிறையிலிருந்து மீட்க உறுதியெடுக்கிறான். திரும்பவும் அந்த வழக்கிற்கான குறிப்புகளை ஆய்வு செய்வதில் ரூபினுக்கு சாதகமானதொரு சாட்சியம் கிடைக்கிறது. இதையடுத்து பெடரல் கோர்ட்டில் அப்பீலுக்காக செல்லும் போது நடந்த வாதப் பிரதிவாதங்களின் மூலம் நிறவெறியின் காரணமாக ரூபினின் மீது வீண்பழி சுமத்தப்பட்டிருப்பது நிருபணமாகிறது. ரூபின் விடுதலை செய்யப்படுகிறான்.

()

ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றை எப்படி சுவாரசியமான திரைக்கதையுடன் திரைப்படமாக உருவாக்குவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தப் படத்தைச் சொல்லலாம். ரூபினின் ஆக்ரோஷமான குத்துச் சண்டை போட்டி ஒன்றுடன் துவங்கும் திரைப்படம் ரூபின் கைது செய்யப்படுதில் தொடர்கிறது. பின்னர் லெஸ்ரா வாசிக்கும் சுயசரித நூல் மூலம் ரூபினின் வாழ்க்கை பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. குத்துச் சண்டை போட்டிகள் கருப்பு-வெள்ளை நிறத்திலேயே பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூபினின் குத்துச்சண்டை வாழ்க்கை இறந்த காலத்திலேயே உறைந்து போய்விட்டது என்று இயக்குநர் Norman Jewison சொல்ல வந்ததாக நான் கருதுகிறேன். ரூபினுக்கு ஆதரவாக முகம்மது அலி உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுக்கும் நிஜமான வீடியோ காட்சிகள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.



நிஜமான ரூபின் கார்ட்டர்

ரூபின் கார்ட்டராக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் Denzel Washington. அந்த குத்துச் சண்டை வீரரின் பாத்திரத்துடன் மிகவும் ஒன்றி நடித்திருக்கிறார். அவரின் திடகாத்திரமான உயரமான உடல் காட்சிகளை நம்பகத்தன்மையுடன் உருவாக்க மிகவும் பயன்பட்டிருக்கிறது. பட உருவாக்கத்திற்காக நிஜமான ரூபின் கார்ட்டருடன் பல காட்சிகளை விவாதித்திருக்கிறார். தனிமைச் சிறையில் மனநிலை பாதிக்கப்பட்டு தன்னிடமே விவாதிக்கும் காட்சியிலும் சிறை உடையை அணிய மறுத்து பின்பு ஒரு சமரசத்திற்கு இறங்கி வரும் காட்சியிலும் நடிப்பின் உச்சத்தை வழங்கியிருக்கிறார் எனலாம். நம்முடைய தமிழ் நடிகர்களில் இவருடன் யாரை ஒப்பிடலாம் என்று யோசித்துப் பார்த்ததில் யாருமே தெரியவில்லை. (தேவையில்லை என்றாலும் இப்படி யோசிப்பதை தவிர்க்க முடியவில்லை.). டென்சல் வாஷிங்டன் நடிப்பில் வெளிவந்த படங்களில் மிக முக்கியமானது இந்தப்படம் என்று திரை விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இயக்குநர் Norman Jewison காட்சிகளை மிகுந்த நம்பகத்தன்மையுடன் காட்சிகளை அமைத்திருந்தாலும் நிஜ சம்பவங்களோடு ஒப்பிடும் போது பல இடங்களில் உண்மைக்குப் புறம்பாக காட்சிகளை மழுப்பியிருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. குறிப்பாக Joey Giardello என்கிற பிரபல குத்துச்சண்டை வீரரோடு ரூபின் கார்ட்டர் மோதும் போட்டியில் நடுவரின் நிறவெறி காரணமாக ரூபினுக்கு எதிராக தீர்ப்பளிப்பதாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் Joey Giardello நிஜமாக சிறப்பாக சண்டையிட்டு ரூபினை தோற்கடித்திருக்கிறார். படம் வெளிவந்ததும் அவர் இதற்காக பட தயாரிப்பாளரின் மீது வழக்குத் தொடர்ந்ததும் நீதிமன்றத்தில் வெளியே நடந்த சமரசத்தில் அவருக்கு பணம் அளிக்கப்பட்டு சமாதானப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதான பாத்திரத்தை 'ஹீரோ' போல சித்தரிக்க ஒரு பக்கச் சார்பாக சித்தரிப்பது ஒரு வாழ்க்கை வரலாற்றை - அதுவும் சமகால ஆளுமையை - திரைப்படமாக உருவாக்கும் இயக்குநருக்கு அழகல்ல. இந்த மாதிரி குறைகளைத் தவிர மிகச் சிறந்த அனுபவத்தை இந்தப்படம் வழங்குகிறது.

அகாதமி விருதுப் நாமினேஷன் பட்டியலில் சிறந்த நடிகருக்கான பிரிவில் டென்சல் வாஷிங்டனின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் விருது கிடைக்கவில்லை. ஆனால் பெர்லின் சர்வதேச விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

ஒரு குத்துச் சண்டை வீரரின் வாழ்க்கை சிறப்பான முறையில் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருப்பதான காரணத்திற்காகவும் டென்சல் வாஷிங்டனின் அற்புதமான நடிப்பிற்காகவும் இந்தத் திரைப்படத்தை கட்டாயம் காணவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

suresh kannan

Saturday, June 20, 2009

'பட்டர்மில்க்'ன்னா மோரா?


என் ஆங்கில அறிவு மிக மோசமாக இருந்த காலகட்டமது. இப்போதும் அப்படித்தான். ஆனால் கொஞ்சம் பரவாயில்லை.

அப்போது நான் ஒரு மருந்து விற்பனையகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். வயது 20 இருக்கும். நான் பணியில் சேர்ந்த புதிதில் மருந்துச் சீட்டை யாரும் என்னிடம் கொடுக்க மாட்டார்கள். வயதில் இளையவனாக இருப்பதால் வந்த பயமா அல்லது காலனின் ஏஜெண்ட் மாதிரி தோற்றமளித்தேனோ, தெரியவில்லை. என்னை புறங்கையால் ஒதுக்கி விட்டு மூத்த விற்பனையாளரிடம் மட்டும்தான் கொடுப்பார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும். நாளடைவில் தேறி, நாள் தள்ளிப் போகணுமா? Primoulte-N என்று சொல்லுமளவுக்கு முன்னேறி விட்டேன்.

என் மார்வாடி முதலாளி ஒரு அலாதியான பேர்வழி. ரோட்டில் மாங்காய் துண்டுகள் விற்பனையானால் கூட பத்து பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்டு கொண்டு வருவார். ஆனால் மறந்தும் எனக்கு எதுவும் வாங்கி கொடுக்க மாட்டார். காலையில் வங்கிக்கு போகும் பணி. பாஸ்புக், பாங்க் செலான்கள் இன்ன பிற லொட்டு, லொசுக்கு போன்றவை அடங்கிய ஒரு முக்கியமான மூட்டையை பாதுகாப்பாக (!) என்னிடம் கொடுத்து விட்டு, வெறும் பணப்பையை அவர் தூக்கிக் கொண்டு முன்னால் செல்வார். நானும் மந்தையாடு போல் பின்னாலே செல்வேன். அவர் பிளாட்பாரத்தில் ஏறினால் நானும், சைக்கிளை சுற்றிக் கொண்டு போனால் நானும், இப்படி.

அப்போதுதான் அந்த குளிர்பதனம் செய்யப்பட்ட ஒட்டல் வரும். அந்த காலத்தில் இந்த மாதிரி ஒட்டல்களை காண்பது அரிது. உள்ளே இருப்பவர் யாரும் வெளியே தெரியமாட்டார்கள். அவர் மட்டும் உள்ளே சென்று - என்ன சாப்பிடுவாரோ தெரியாது - வரும் போது வாயை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே வருவார். "என்னடா, பராக்கு பாத்துக்கினு, வாடா." வழக்கம் போல் என்னை அழைத்துச் சென்று ஐஸ் வாட்டர் கூட வாங்கிக் கொடுத்ததில்லை.

எனக்கும் ஒரு நாள் அந்த ஒட்டலில் சென்று சாப்பிட ஆசையாயிருக்கும். என் சம்பளத்தில் அதெல்லாம் கட்டுப்படியாகுமா என்று சந்தேகமாயும் இருக்கும். மேலும் அந்த மாதிரி ஒட்டலில் நுழைவதே சாத்தியமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது. ஆனால், அந்த நாளும் வந்தது. இதற்கென்றே காசு சேமித்துக் கொண்டு, நன்றாக உடை அணிந்து கொண்டு திட்டமிட்ட படி உள்ளே நுழைந்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சுதாரித்துக் கொண்டு ஒரு சீட்டை நுனியில் ஆக்கிரமித்தேன்.

"என்ன சார் வேண்டும்?" என்றபடி வந்தான் என் முதலாளியை விட நன்றாக உடை உடுத்தியிருந்தவன். உள்ளே போய்விட்டேனே தவிர என்ன சாப்பிட வேண்டும் என்பதை முன்னரே தீர்மானிக்க வில்லை. சாப்பாடெல்லாம் சாப்பிட்டால் விலை என்னவாக இருக்குமோ என்று பயமாய் இருந்தது. ஏதாவது குளிர்பானம் மட்டும் சாப்பிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்தவன், "மெனு கார்டு?" என்றேன் எனக்கே கேட்காத குரலில் (சினிமாவில் பார்த்திருக்கிறேன்)

கார்டு வந்ததும் என்னென்ன அயிட்டங்கள் இருக்கிறது என்று நோட்டமிட்டேன். என்னென்னவோ புரியாத ஆங்கில பெயர்களிருக்க, ஒரு கிளாஸ் போட்டு வெளியே வியர்த்திருக்க மாதிரி படம் போட்டிருக்கிற ஏரியாவுக்கு வந்தேன். அதில் விலை எல்லாம் கன்னாபின்னாவென்றிருக்க, என் பட்ஜெட்டில் அடங்குகிற மாதிரி ஒரு அயிட்டம் இருந்தது. அதன் பெயர் BUTTERMILK என்றிருந்தது. எனக்கு அதன் பொருள் விளங்கவில்லை. ஆனால் அந்த பெயர் கவர்ச்சிகரமாக இருந்தது. என் மனதில் பாதாம், ஏலக்காய் எல்லாம் போட்டு ஒரு திரவம் மனக்கண்ணில் தோன்றியது. "ஒரு Buttermilk" என்றேன் அமர்த்தலாக.

"அது போதுமா சார்?" என்றான் அவன் திகைப்பாக. அதை அந்த ஒட்டல் வேலைக்காரர்கள் கூட குடிக்க மாட்டார்கள் போலிருந்தது அவன் பார்வை. நிறைய சாப்பிட்டு வயிறு சரியில்லாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு "போதும். கொண்டு வாங்க" என்றேன் சலிப்புடன். அவ்வப்போது ஏதோ ஒரு இடத்திற்கு அவசரமாய் செல்பவன் போல் கடிகாரத்தை பார்த்துக் கொண்டேன்.

கொண்டு வந்தானய்யா அந்த திரவத்தை அந்த கிராதகன். அட ஒக்க மக்கா, மோருல்ல இது? அடப்பாவிகளா, இதைத்தான்யா காலைல எங்க அம்மா உப்பெல்லாம் போட்டு குடுத்து விட்டாங்க. இங்கனயும் அதா, திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரியிருந்தது. நான் கேட்டதுதானா என்று சந்தேமாகவும் இருந்தது. வேறு வழியின்றி அதை குடித்து தொலைத்துவிட்டு வியர்க்க வியர்க்க வெளியே வந்தேன்.

பிறகு கடையில் மூத்த பணியாளரிடம் "அண்ணா buttermilkன்னா என்னன்னா? என்றேன் மெதுவாக. என்னடா விஷயம் என்றவா¢டம் எல்லாவற்றையும் விவரித்தவுடன், விழுந்து விழுந்து சிரித்தவர், "இங்கிலீஷ்ல மோருக்கு buttermilkன்னு தாண்டா பேரு" என்றார்.

இப்போது கூட ஹோட்டலில் தந்தூரி அயிட்டங்களை ஆர்டர் செய்யும் போது Gopi Manchurian என்றாலும் "காலிபிளவர்தானே?" என்று கேட்டே ஆர்டர் செய்கிறேன்.

(இது ஒரு மீள்பதிவு. Feb 26, 2004 அன்று மரத்தடி குழுமத்தில் பிரசுரமானது)

suresh kannan

Friday, June 19, 2009

உயிர் எழுத்து 25-ம் இதழ் வெளியீட்டு விழா



தொடர்புடைய பதிவு

கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்

பிரபலங்களிடம் 'ஆட்டோகிராஃப்' வாங்கும் பழக்கம் எப்படி வந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். பொதுவாக நம் எல்லோருக்குமே சக மனிதனை விட ஒரு அங்குலமாவது உயர்ந்த நிலையில் புகழின் படிக்கட்டுகளில் நிற்கும் ஆசை உள்ளுற இருக்கிறது. கடுமையான உழைப்பாலும் தனித்திறமையாலும் பல சமயங்களில் குருட்டு அதிர்ஷ்டத்தாலும் அதை சாதித்தவர்கள் ஒருபுறம் இருக்க, அந்நிலையை அடைய இயலாதவர்கள் பிரபலங்களுடன் சிறிது ஒட்டி உறவாடியாவது அந்த புகழின் வெளிச்சத்தில் கொஞ்சமேனும் தம்மையும் நனைத்துக் கொள்ள விரும்புவதுதான், ரசிகர் மன்றத்தில் கொடி கட்டுவது, நடிகர் வீட்டு வெயில் வரிசையில் காய்ந்து நின்று போட்டோ எடுத்து வீட்டில் மாட்டி வைப்பது, டப்பு அதிகமுள்ளவர்கள் சொந்த செலவில் பிரபலங்களுக்கு பாராட்டு விழா எடுப்பது... என்று பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது போலும். 'இன்னாரைத் தெரியும்' என்று மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது எதிரில் இருப்பவரின் புருவம் உயர்த்ததில் நமக்கு பெருமை பொங்கி வழிகிறது. இந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் பிரபலங்களிடம் ஆட்டோகிராஃப் பெறுவது.

பிரபலங்களை கண்ட பரவசத்தில் கீழே கிடக்கும் குப்பைக் காகிதத்தில் கையெழுத்து வாங்குபவர்கள் முதற்கொண்டு தங்கபிரேமிட்ட பைண்டு புத்தகத்தில் பிரபலத்திற்கு ஒன்றாக தனிப்பக்கம் ஒதுக்கி மிகுந்த முன்னேற்பாடாக இருப்பவர்கள் வரை உண்டு. இவ்வாறாக பிரபலங்களை துரத்தித் துரத்தி கையெழுத்து வாங்கி பத்திரப்படுத்தி மகிழ்பவர்களை 'philographers' என்கிறார்கள். ரூபாய் நோட்டு, பஸ் டிக்கெட்டின் பின்புறம். திறந்த முதுகு, அவசரத்தில் கிடைக்கிற எந்தவொரு காகிதம்.. என்று சகல விதமாக ஆட்டோகிரா·ப் பெறப்படுகிறது. 'அன்புள்ள ரசிகருக்கு, இத்துடன் எனது கையொப்பமிட்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். வாழ்க வளமுடன்' என்று தபாலில் கிடைத்த ஆவணத்தையெல்லாம் ஆட்டோகிரா·ப் வரிசையில் சேர்க்க முடியாது. பிரபலங்களை மாதிரியே கையெழுத்திட்டது அவர் வீட்டு நாய்க்குட்டியாகக் கூட இருக்கலாம். நிற்க. இந்தப் பதிவு ஆட்டோகிராஃப் பற்றி ஆய்வது பற்றியல்ல. நான் வாங்கின / வாங்க முயன்ற ஆட்டோகிராஃப்கள் பற்றியது.

()

அப்போது எனக்கு பதினைந்து வயது இருக்கலாம். கொலம்பஸ்ஸின் கொள்ளுப் பேரன் மாதிரி சென்னையின் முக்கிய இடங்களை நடந்தே 'கண்டு பிடிக்க' ஆரம்பித்திருந்த நேரம். 'ஹீரோ சென்னை வந்துவிட்டான்' என்று தமிழ் இயக்குநர்கள் காண்பிக்க உதவும் சென்ட்ரல் ஸ்டேஷன். ரயில்கள் தண்டவாளத்தில் உராயும் சத்தம், சுமை தூக்கிகளின் கூச்சல்கள், கிடைத்த இடத்தில் சாப்பாட்டுக் கடையை விரிக்கும் வடநாட்டவர்கள் என்று அந்த பரபரப்பான சூழ்நிலையை விழிவிரிய பார்த்துக் கொண்டிருந்தேன். நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் டாம் & ஜெர்ரி அறிவிப்புகளுக்கு நடுவே ஓடிக் கொண்டிருந்தது. வண்ணத் தொலைக்காட்சியை மிக நெருக்கத்தில் பார்த்தது அந்தத் தருணத்தில்தான்.

இப்படியாக ப.கா.மி.க.வே.பா. மாதிரி நான் நின்று கொண்டிருந்த போது குள்ளமான ஒரு மனிதர் சிலர் புடைசூழ நிலையத்திற்குள் நுழைந்துக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக வந்துக் கொண்டிருந்த அந்த மனிதரின் சுற்றத்தார் நிலையத்திற்குள் நுழைந்ததும்.."டாக்டர் கலைஞர் வாழ்க" என்று அடித்தொண்டையிலிருந்து கத்தியதும் நிலையமே அதிர்ந்து திரும்பிப் பார்த்தது. அவர் அப்போது ஆட்சியில் இல்லாத நேரம் என்பதால் எந்தவிதமான பாதுகாப்பு கெடுபிடிகளுமில்லை. இதுவரை தொலைக்காட்சிகளிலும் போஸ்டர்களிலுமே பார்த்த ஒரு அரசியல் தலைவரை மிக அருகில் நேரில் பார்த்த ஆச்சரியத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னைக் கடந்து போன பிறகுதான் அந்த யோசனை தோன்றியது. 'ஒரு ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கலாம்.'

அதற்குள் அவர் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிவிட்டிருந்தார். 'எதில் கையெழுத்து வாங்குவது' என்பது பிடிபடாமல் கீழே கிடந்ததில் சுத்தமாக கிடந்த ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு பாய்ந்தேன். எந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்று தெரியாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்த என்னை 'பாதுகாப்பு அதிகாரி' மாதிரியான தோற்றத்தில் இருந்தவர், கனிவான குரலில் 'என்ன தம்பி வேணும்?" என்றார். சொன்னேன். வழியனுப்புவதற்காக வந்திருந்த தொண்டர் கூட்டமும் வட்டமும் மாவட்டமும் குறுக்கும் நெடுக்குமாக போய்க்கொண்டிருக்க பரபரப்பாக இருந்தது. 'கொஞ்சம் பொறு தம்பி. சந்தடி ஓயட்டும். முயற்சி பண்றேன்" என்றார் கா.அ. ஆவலாக காத்து நின்றேன். வண்டி புறப்படுவதற்கான சமிக்ஞைகள் தெரிந்தது. கா.அ. திரும்பி வந்து "ரொம்ப பிசியா இருக்காருப்பா. முடியாது போலிருக்கு" என்றார். நான் அதிருப்தியுடன் இறங்கி வந்தேன்.

இன்னொரு சமயம். அதே 'ஹீரோ வந்துட்டானில்' நான் பார்த்த இன்னொரு பிரபலம் நடிகர் சரத்பாபு. அழகு மற்றும் நடிப்புத் திறமையிருந்தும் வெற்றிகரமான ஒரு கதாநாயகனாக ஆகமுடியாமல் 'நண்பர்' வேடத்திற்கென்றே தயாரிக்கப்பட்டவர் போல் அவர் நடத்தப்பட்டது என்பது எனது பொதுவான வருத்தமாக இருந்தது. [மக்கள் எந்த மாதிரியான முகத்தை ஹீரோவாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஆய்வது சமூகவியல் நோக்கில் சுவாரசியமானதொன்றாக இருக்கும்.]. வண்டிக்குள் அமர்ந்திருந்த அவரைக் கண்டதும் போன முறை ஆட்டோகிரா·ப் வாங்க முடியாத அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஆவேசத்துடன் பாய்ந்தேன். என்னிடம் பேனா இல்லாத சூழ்நிலையில் இன்னொருவரிடம் வாங்கி புன்னகையுடன் கையெழுத்து போட்டுத் தந்தார். அந்தச் சமயத்தில் அவர் அப்படியொன்றும் கவர்ச்சிகரமான ஆளுமையில்லை என்பதால் ஆர்வமில்லாமல் சில நாட்களிலேயே அந்தப் பேப்பரை தொலைத்து விட்டேன்.

அதே இடம். மற்றொரு சந்தர்ப்பம். ஓட்ட வீராங்கனை பி.டி.உஷா ரயில் வண்டியில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். உஷா அப்போது தங்கம் வென்று புகழின் உச்சியில் இருந்த நேரம். ஆனால் யாரும் அவரை சீண்டுவதாய் தெரியவில்லை. எனக்கு உஷாவை விட பக்கத்தில் இருந்த ஷைனி வில்சனை பிடித்திருந்தது. ஆனால் அவர் அவ்வளவு பிரபலமில்லை. எனவே உஷாவிடம் கையெழுத்து வாங்க முடிவு செய்தேன். நான் பேப்பரையும் பேனாவையும் சம்பாதித்துக் கொண்டு திரும்புவதற்குள் உஷா குழுவினரைக் காணோம். வண்டி கிளம்பாமல் இருந்தது. ஒருவேளை ஓடியே கேரளாவிற்குச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்துவிட்டாரோ என்று வருத்தமாக கிளம்பினேன். ஆனால் வீட்டுக்குத் திரும்புவதற்குள் என் மனதில் மெல்ல மெல்ல ஒரு வில்லங்கமான திட்டம் உருவாகியது.

()

"ஏ இங்க தாடா. பாத்துட்டு கொடுத்தடறேன்"

"மெல்ல. கிழிஞ்சிடப் போகுது"

"எப்படிரா மச்சான்"

ஐந்தே நிமிடங்களில் வகுப்பு முழுக்க செய்தி பரவிவிட்டது. என்னிடம் பேசாத க்ளாஸ் லீடர் ராஜகோபால் கூட வந்து பார்த்து விட்டுப் போனான்.

"பாம்பேல இருந்து எங்க மாமா வர்றார்னு சென்ட்ரல் ஸ்டேஷன் போயிருந்தோம். தண்ணி குடிக்கலாம்னு எதிர் பிளாட்பாராம் போனா, பி.டி.உஷா நிக்கறாங்க. அப்படியே ஆச்சரியமாப் போச்சு. கிட்ட போய் 'ஹலோ மேடம். ஆட்டோகிரா·ப்'-ன்னேன். உடனே சிரிச்சிக்கிட்டே 'ஹலோ'ன்னு சொல்லிட்டு போட்டுக் கொடுத்தாங்க. 'எந்தா படிக்கறது'ன்னாங்க. சொன்னேன். 'குட்பாய்'-ன்னு தலையை தடவிக் கொடுத்துட்டு போயிட்டாங்க."

நான் சொன்னதை எல்லோரும் நம்பி விட்டார்கள். விஷயம் இதுதான். ஒரு சிறிய பேப்பரில் அழகான கோணல் கிறுக்கில் 'பி.டி.உஷா' என்று நானே எழுதி வைத்திருந்த பேப்பரை காட்டி அப்படியாக அளந்து கொண்டிருந்தேன். இப்போது சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும் ஏன் அப்படிச் செய்தேன் என்று யோசித்துப் பார்க்கும் போது எல்லாம் மேலே சொன்ன அந்த 'ஒரு அடி அங்குல' மேட்டர்தான் என்று புரிகிறது. பி.டி.பீரியட் முடிந்து வந்த ஒரு நாளில் அந்த 'பொக்கிஷம்' காணாமற் போனதை உணர்ந்த போது வருத்தமெல்லாம் ஏற்படவில்லை. இந்த எமகாதககன்களை ஒரு நாளாவது கலாய்க்க முடிந்ததே என்று ரகசிய மகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு காரணமும் இருக்கலாம்.

வகுப்பில் 'பழனியப்பன்' என்கிற நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பையனொருவன் பயங்கர 'பந்தா' செய்துக் கொண்டிருந்தான். புதிய புதிய ஜூன்ஸ் அணிந்து வருவது, இண்டர்வெல்லில் நண்பர்கள் அனைவருக்கும் பால் ஐஸ்கிரீம் வாங்கித்தருவது., பாக்கெட்டிலிருந்து புது நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவுவது .. என்று ஸ்கூலே அவனை வியப்பாகவும் பிரமிப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தது. வாத்தியார்கள் கூட அவனிடம் சிரித்துப் பேசி கடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். பழனியப்பனை ஒரு நாளாவது முந்த வேண்டுமென்கிற ஆவல் இதைச் செய்ய என்னைத் தூண்டியிருக்கலாம்.

()

பின்னர் நான் வளர்ந்து என்னுடைய ஈகோவும் என்னுடனேயே வளர்ந்த பிறகு இந்த ஆட்டோகிரா·ப் வாங்குகிற சமாச்சாரமெல்லாம் மகா அபத்தமாகத் தெரிந்தது. நிறைய பிரபலங்களை நேரில் சந்திக்க நேரும் போது ஒரு முறை கூட கையெழுத்து வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. அந்த ஆர்வமும் பரவசமும் எப்போதோ வடிந்து விட்டிருந்தது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுக்கும் இதே நிலைதான். 'நான் காசு கொடுத்து வாங்கின புதுப் புத்தகத்தில் நானே ஒரு எழுத்தை எழுதக்கூட மிகவும் யோசிக்கும் போது இவர்கள் யார் அதில் கையெழுத்துப் போட' என்றுதான் தோன்றுகிறதே ஒழிய ஆட்டோகிரா·ப் வாங்க வேண்டும் என்று எப்போதுமே தோன்றியதில்லை.

ஆனால் ஒரு மனிதரிடம் என்னிடம் பிடிவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்து அவரைப் படித்து படித்து எனக்குள் ஆழமாக இறங்கி விட்டிருந்தார். அவர் என்னுடைய ஒரு பகுதி கூட என்று சொல்லுமளவிற்கு குருதியில் கலந்து விட்டிருக்கிறார். அவரது மரணத்தைக் கூட என் மனம் முழுமையாக நம்ப மறுக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஒரு விழாவில் அவரை சந்திக்க நேர்ந்த போது சந்தர்ப்பத்தை வீணடிக்க மனமில்லாமல் மிகுந்த தயக்கத்துடன் அவருடைய புத்தகத்தில் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டேன். அந்த மனிதர் இவர்தான்.

()

இன்னொரு பிரச்சினையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. புரொபைலில் என்னுடைய புகைப்படத்தை போட்டாலும் போட்டேன். வெளியில் போக நேரும் போதெல்லாம், "நீங்க சுரேஷ் கண்ணன்தானே. உங்க பிளாக்கை தொடர்ந்து படிப்பேங்க...ரொம்ப நல்லா எழுதறீங்க. அப்புறம் ... ஹிஹி உங்க கையெழுத்து....' என்று இழுக்கும் ஒரு மனிதரையாவது தினமும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது. ஒரு நாள் மூத்திரைப்புரையொன்றில் என்னுடைய பணியில் கண்ணுங் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பக்கத்து தடுப்பிலிருந்து ஒருவர் புன்னகையுடன் திரும்பி மேற்சொன்ன வசனத்தைப் பேசினார். அங்கேயுமா? அந்தச் சமயத்தில் எப்படி அய்யா கையெழுத்து போட முடியும்?. இப்படி ஒரே தொந்தரவாக இருக்கிறது.

எப்படி ஆட்டோகிராஃப் வாங்க மாட்டேன் என்று முடிவு செய்திருக்கிறேனோ அதே போல் இனி ஆட்டோகிராஃப் போட்டுத் தருவதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன். இனி என்னை நேரில் சந்திக்க நேர்கிறவர்கள் கையெழுத்து கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என்று இந்தச் சமயத்தில் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

(மேற்சொன்ன இரண்டு பத்திகளை முழுமையாக நம்பும் புண்ணியாத்மாக்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்கள் ஏற்படும். அவர்கள் எழுதும் பதிவுகளுக்கு அதிக ஹிட்கள் கிடைக்கும். 29C பஸ்ஸில் ஜன்னலோர சீட் வாய்ப்பு ஏற்படலாம். மனைவியுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது 'தங்கம் மற்றும் வெள்ளி விலை' நிலவரங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு கலவரங்களிலிருந்து தப்பிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

நம்பாத சந்தேகப்பிராணிகளுக்கு, ESPN பார்க்க அமரும் போது அதில் தொலைக்காட்சி சீரியல் ஒளிபரப்பாகும் துர்ப்பாக்கியம் ஏற்படும். சாருவைப் பற்றி அவதூறாக எழுதி பதிவு ஹிட் ஆகாமல் போவதோடு அவரிடமிருந்து நேரடியான சாபமும் கிடைக்க வாய்ப்புண்டு. ஷகிலா மேடம் உங்களின் மேல் உருண்டு புரண்டு நசுக்கியெடுப்பதைப் போன்ற துர்கனவுகள் வரும்).




சரி. இதெல்லாம் இருக்கட்டும். மேலேயிருக்கிற கையெழுத்து எவருடையதென்று யூகித்து பின்னூட்டத்தில் சரியான விடை சொல்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு அபூர்வமான, சிறப்பான, அட்டகாசமான பரிசொன்று காத்திருக்கிறது. என்ன பரிசா? வேறென்ன, என்னுடைய ஆட்டோகிராஃப்தான்.

(க்ளூ: பிரபல இசைப்பாடகர்)

suresh kannan

Wednesday, June 17, 2009

தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே


அன்புள்ள நண்பர்களுக்கு

'தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்க வேண்டும்'என்று கமல் சொன்னதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அடுத்து எழுதப்பட்ட இந்தப்பதிவில் அது குறித்து மாறுபட்ட பின்னூட்டங்கள் வந்தன. எனவே இதைக் குறித்த என் கருத்துக்களை தனிப்பதிவாக எழுத உத்தேசம். அதற்கு முன்னால் மக்களிடம் சர்வே ஒன்றை நிகழ்த்திப் பார்த்துவிடலாம் என்று விரும்புகிறேன். எனவே உங்களின் வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் உங்களின் வாக்குகளை அளிக்குமாறு வேண்டுகிறேன்.

'ஏற்கெனவே அவனவன் ஆயிரம் பிரச்சினைல செத்துட்டு இருக்கான். வந்துட்டாரு பெரிசா' என்று திட்ட விரும்புவர்கள் தங்கள் செயலை சாவகாசமாக நிகழத்திவிட்டாவது ஓட்டளிக்குமாறு வேண்டுகிறேன்.

ஓட்டளிப்பவர்களுக்கு விஜய டி ராஜேந்தர் மும்தாஜீடன் நடித்து புரட்சி செய்த, cannes திரைப்பட விழாவில் பங்கே பெறாத 'வீராச்சாமி்' திரைப்படத்தின் டிவிடி 'குலுக்கல்' (?!) முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் 'கொல்கிறேன்'.

suresh kannan

அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா


ஆஸ்திரேலிய தத்துவவியல் அறிஞரான Raimond Gaita தனது தந்தையைப் பற்றிய நினைவலைகளை மையப்படுத்தி எழுதிய சுயசரித நூலான Romulus My Father 1988-ல் வெளிவந்தது. Victorian Premier's Literary Award, The Nettie Palmer Prize for Non-fiction போன்ற விருதுகளை இந்த நூல் பெற்றுள்ளது. இதன் திரைவடிவம் அதே பெயரில் 2007-ல் Richard Roxburgh-ல் இயக்கப்பட்டு வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க சிறுவனான Raimond-ன் பார்வையில் விரிகிறது.

1960-ல் துவங்கும் இத்திரைப்படம் Romulus-ம் அவருடைய மகன் Raimond-ம் நேசத்தோடு பழகும் காட்சிகளோடு துவங்குகிறது. வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருந்த Rai-ன் தாய் Christine அந்த ஊருக்கு வரப்போவதான தகவல் கிடைக்கிறது. தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய தாயை வீட்டுக்கு அழைத்து வருகிறான் Rai. இனிமையாக பழகக்கூடிய அவளை மிகவும் நேசிக்கிறான் அவன். ஆனால் சொற்ப நாட்களிலேயே பெற்றோருக்குள் வழக்கமான மோதல் வெடிக்கிறது. மறுபடியும் தன்னுடைய இரண்டவாது கணவரோடு வாழ முடிவெடுக்கிறாள் Christine. அவள் மீது அளவற்ற நேசம் கொண்டிருக்கிற Romulus மனமேயின்றி இதற்கு சம்மதிக்கிறார். மிகுந்த பிரச்சினைகளுக்கிடையில் தன்னுடைய மகனை பாசத்துடன் வளர்க்கிறார்.

ஆடம்பரமாக வாழ நினைக்கும் Christine இரண்டாவது கணவருடான மோதலில் அங்கிருந்து மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறாள். இதற்கிடையில் அந்த கணவர் தற்கொலை செய்துவிடுகிறார். இவ்வளவு சிக்கலான சூழலிலும் தன்னுடைய தாயின் மீதான நேசம் Rai-க்கு எந்தவிதத்திலும் குறைவதில்லை. இன்னொரு குடும்பத்து குழந்தையான தன்னுடைய தங்கையை மிக பாசத்துடன் பார்த்துக் கொள்கிறான். ஆனால் அவள் வேறொருவருடன் உறவு கொள்வதை ஒரு முறை காண நேர்கிற போது அவளின் மீதான பிம்பம் மிக மோசமாக உடைந்து போவதால் தாயைப் புறக்கணிக்க ஆரம்பிக்கிறான். இந்த புறக்கணிப்பு காரணமாகவும் ஏற்கெனவே உள்ள உளவியல் ரீதியான சிக்கலாலும் தவிக்கும் Christine தூக்கமாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இதைத் தாங்கவியலாத Romulus மனநலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தன்னுடைய தந்தையின் நண்பரின் உதவியோடு முதிர்ச்சியானதொரு மனநிலைக்கு மெல்ல மாறுகிறான் Rai.

அவனுடைய தந்தை மருத்துவமனையிலிருந்து திரும்பிவருவதும் ஆரம்பக்காட்சியின் அதே நேசத்தோடுனான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதுடன் இத்திரைப்படம் நிறைகிறது.

()

பெற்றொரின் இடையில் நிகழும் முரண்கள் எவ்வாறு அந்தக் குடும்பத்தின் குழந்தைகளை உளவியல் ரீதியாக துன்புறுத்துகிறது என்பதை இப்படம் உறுத்தாமல் விவரிக்கிறது. ஒரு திரைப்படத்தை கண்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாமல் எவரோ ஒருவரின் வலிமிகுந்த வாழ்க்கையை நாம் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தியதே இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பலமாகச் சொல்லலாம். மிகுந்த சிக்கலான இக்கதையை தெளிவான திரைக்கதையின் வடிவத்தில் தந்திருக்கிறார் இயக்குநர். மூல வடிவமான நாவலை திரைக்கதையாக உருமாற்ற ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் அதற்காக உழைத்திருக்கிறார். இயக்குநராக இது இவரின் முதல் திரைப்படம்.

மிக நிதானமான நடையில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையுடனான இத்திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது படத்திற்கு இடையில் மிகுந்த அழகியலுடன் காட்டப்படும் வெளிப்புறக் காட்சிகள். 1960-ன் ஆஸ்திரேலிய நிலப்பரப்பை விரிந்த பரிமாணத்தில் காட்டுகிறது காமிரா. [சென்னையின் நிலப்பரப்பை அதன் அழகியலோடு நிதானமாக எந்த இயக்குநராவது காட்ட மாட்டாரா என்று ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறேன்].சொற்ப உரையாடலுடன் நகரும் காட்சியமைப்பு இடையில் நிகழும் காட்சிகளை பார்வையாளன் யூகித்துக் கொள்ளுமாறு உடனுக்குடன் அடுத்த காட்சிக்கு மாறிவிடுகிறது.

Romulus ஆக நடித்திருக்கும் Eric Bana மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். நம்மூர் ஷாருக்கான்,மாதவன் போன்று தொலைக்காட்சி நடிகராக இவரது நடிப்புப் பயணம் துவங்கியிருக்கிறது. இவருடைய பாத்திரம் மிக வலுவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. காமத்தின் போதாமையில் அல்லலுரும் தன் மனைவியோடு மிகுந்த முரண்கள் இருந்தாலும் அவளை மிகவும் நேசிக்கிறார். இன்னொரு திருமண வாய்ப்பை ஆரம்ப நிலையில் இதற்காக புறக்கணிக்கிறார். தன்னுடைய மனைவியின் பிரிவின் காரணமாக எழும் மன உளைச்சலில் மகனை ஒரு முறை நையப் புடைத்துவிட்டு பின்னர் அதற்காக வருந்துகிறார்.

சிறுவன் Rai-ஆக Kodi Smit-McPhee மிக அற்புதமாக நடித்திருக்கிறான். தன்னுடைய 'தாயின் கணவன்' மூடிய அறைக்குள் அவளை மூர்க்கத்தனமாக அடிக்கும் போது கதறியழும் போதும் பின்னர் வெளியே வரும் அவருடன் முர்க்கத்தனமாக சண்டையிட நிற்பதும் .. என ஒவ்வொரு காட்சியிலும் தரமான நடிப்பை வழங்கியிருக்கிறான். இதற்காக 2007-ன் சிறந்த குழந்தை நடிகருக்கான விருது அவனுக்கு கிடைத்திருக்கிறது.

ஆண்களுக்கேயுரிய பொதுவான ஈகோ குணம் ஒரு காட்சியில் மிகுந்த நயத்துடன் வெளிப்படுகிறது. அப்போதுதான் தன் குடும்பத்திற்கு மீண்டும் திரும்பியிருக்கும் Christine தன் மகனிடம் அவருடைய தந்தையுடன் ஏற்பட்டிருந்த காதல் நினைவுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறாள். அவர் எப்படியெல்லாம் தன்னை காதலித்திருந்தார் என்பதையும் தான் கிடைக்காத ஒரு சூழ்நிலையில் துப்பாக்கியால் தற்கொலை செய்ய முயன்று ஆனால் சரியாக சுடத்தெரியாமல் மூக்கை காயப்படுத்திக் கொண்டதையும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் Romulus 'அவனிடம் இப்போது இதையெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா?' என்று எரிச்சலுடன் கத்த மீண்டும் அவர்களுடான இன்னொரு சண்டை துவங்குகிறது.

()

இததிரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு யூமா வாசுகியின் 'ரத்தஉறவு' நாவலும் சாருநிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்ஸி பனியனும்' நினைவுக்கு வந்தது. குறிப்பாக யூமா வாசுகியின் நாவலை என்னால் ஒரே மூச்சில் முழுமையாக படிக்க முடிந்ததில்லை. சிறிது படிப்பதற்குள்ளாகவே மனம் மிகுந்த உளைச்சலுக்குள்ளாகி புத்தகத்தை மூடி விடுவேன். அந்தளவிற்கு அந்த நாவலில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் ரத்தத் தெறிப்பும் வாதையின் கதறலும் உறைந்திருக்கின்றன.

suresh kannan

Tuesday, June 16, 2009

கமல் தந்த அதிர்ச்சி


தமிழ் சினிமாவை சில புள்ளிகளேனும் அடுத்த தரத்திற்கு நகர்த்திச் செல்பவர்களில் இங்கு கமலின் பங்கு பிரதானமானது என்று பல முறை நான் எழுதியிருக்கிறேன். பல சிறந்த தொழில்நுட்பங்களை முதலில் இங்கு பெரும்பாலும் பயன்படுத்த ஆரம்பித்தது அவர்தான். [ஆனால் பெரும்பாலான நாயகர்களைப் போல கதைக்குள் தன்னை நுழைத்துக் கொள்ளாமல் தன்னையே பிரதானமாக சுற்றி வருமாறு கதையை அமைப்பது மோசமான முன்னுதாரணம் என்பதையும் சொல்ல வேண்டும்.] அப்படியான கமல் திரைக்கதைக்கான ஒரு பயிற்சிப் பட்டறையை சமீபத்தில் நடத்தி முடித்திருப்பது நிச்சயம் நல்லதொரு விஷயம். தன்னுடைய அனுபவத்தின் மூலம் கிடைத்த அறிவை அடுத்த தலைமுறையினருக்கு கடத்திச் செல்ல வேண்டும் என்கிற ஒரு பொறுப்பான செயல். ஆனால் இதை தமிழில் நடத்தியிருக்க வேண்டும் என்கிற முணுமுணுப்புக் குரல்கள் எரிச்சலையே வரவழைக்கிறது. தமிழர்களைக் குறிக்கும் பிரத்யேக 'நண்டு' கதை நினைவிற்கு வருகிறது. இந்த போலி 'தமிழ்ப் பாசக்காரர்களை' ஒன்றுகூட்டி அவர்களின் தமிழ் இலக்கண அறிவைச் சோதித்துப் பார்த்தால் என்ன முடிவுகள் வரும் என்பதை யோசித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. 'நள்ள தமிளில் எலுதுங்கல்' என்று வெற்றுக் கோஷம் போடுவதில் அர்த்தமே கிடையாது. நிற்க. இப்போது நான் குறிப்பிட வந்தது இந்த அரசியலைப் பற்றி அல்ல.

பயிற்சிப் பட்டறையின் நிறைவு நாளின் போது கமல் உரையாடுகையில் 'நான் சினிமாப் பாடல்களுக்கு எதிரி அல்ல. தமிழ் சினிமாவில் பாடல் இருந்தால் அதில் தவறில்லை. நானே பாடல் நடன அமைப்பாளராகத்தான் என் திரை வாழ்க்கையைத் துவங்கினேன்' என்கிற ரீதியில் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க கமல் இப்படியொரு அதிர்ச்சியைத் தந்திருக்க தேவையில்லை.

'இயல், இசை, நாடகம்' எனும் கலாசாரம் என்பது நம் மரபிலேயே வந்தது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் 'காட்சி ஊடகம்' பெருமளவில் முதிர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் நாம் சூழலுக்கேற்றவாறு அதை சீரமைத்துக் கொள்ள வேண்டாமா? மேலும் நம்முடைய திரைப்பாடல்கள் ரசிக்கும் வகையிலா உருவாக்கப்படுகின்றன? கவர்ச்சிப்பாடல், குத்துப்பாடல், சோகப்பாடல், சென்டிமென்ட் பாடல், காதல் பாடல்.. என்று எல்லா மசாலாவையும் உள்ளே நுழைக்கும் வகையில்தான் திரைக்கதையே யோசிக்கப்படும் போது எப்படி நாம் நல்ல சினிமாவை உருவாக்க முடியும்?

வறட்டி தட்டிக் கொண்டிருக்கும் நாயகி சாணத்தை தூக்கி எறியும் போது அந்த வழியே வரும் நாயகன் மேல் பட்டு விடுகிறது. வெட்கத்துடனும் சங்கடத்துடனும் அதை அவள் துடைக்க முயற்சி செய்ய, விளக்கெண்ணைய் குடித்த பசுமாடு போல் நோக்கும் நாயகன், அவள் கையைப் பிடிக்க, அதிரடி பின்னணி இசையுடன் அடுத்த காட்சியில் அவர்கள் மலேசியாவிலோ ஆஸ்திரேலியாவிலோ நடுரோட்டில் நடனமாடி பாட்டுப்பாடுவது நமக்கு பயங்கர காமெடியாய் தெரியவில்லை? அல்லது அது நமக்கு பழகிப் போய்விட்டதா? ஆனால் பரவசத்துடன் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் காட்சியை வெளிநாட்டுக்காரர்கள் 'யாரடா இந்தக் கோமாளிகள்' என்னும் ரேஞ்சில்தான் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

()

'தமிழ்ச் சினிமா வீடியோப்பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருக்கும் போது உங்கள் ரிமோட்டில் உள்ள mute பட்டனை அழுத்தி விட்டுக் கவனியுங்கள். சிரிப்பாக இருக்கும்' என்று, வாத்தியார் சுஜாதாவும் தமிழ்ச் சினிமாப் பாடல்களில் உள்ள அபத்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். சமீபத்தில் ஒரு திரை நிகழ்ச்சியில் பேசிய பாலுமகேந்திராவும் 'குரங்குக் குட்டிகள் குதிப்பது போல் இருக்கிறது' என்று பாடல் காட்சிகள் பற்றின தம் அதிருப்தியை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார். மதன் நடத்திய விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுய விவாதம் வந்த போது பல முன்னணி இயக்குநர்கள் பாடல்களை உள்ளே நுழைப்பதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றே தெரிவித்திருக்கின்றனர். என்றாலும் எது அவர்களை இதை தொடர வைக்கிறது.

இதன் வணிக மதிப்பு. 'நல்ல சினிமாவாவது, மண்ணாவது' என்று எல்லாவற்றிலும் காசு பார்க்க நினைக்கும் தயாரிப்பாளர்களாலும் இயக்குநர்களாலும் இதை நிச்சயம் கைவிட முடியாது. படத்திற்கு முன் வெளியிடப்படும் இந்தப் பாடல் தொகுப்புகள் சிலபல கோடிகளுக்கு விற்பனையாகின்றன. அதிலும் அதீதமாக hype செய்யப்படும், வெற்று இசைக்கூச்சலான பாடல்கள் விற்பனையில் நிறைய பணத்தை சம்பாதிக்கின்றன. (கந்தசாமி சமீபத்திய உதாரணம்). இன்னொன்று, படம் வெளிவருவதற்கு முன்னால் வரும் பாடல்களை ஒரு சிறந்த விளம்பர டிரைய்லராக நினைக்கிறார்கள். ரசிகர்களிடம் பாடல்கள் ஹிட்டாகிவிட்டால் அதன் மூலம் ஒரு எதிர்பார்ப்பு உருவாகி படமும் ஹிட்டாகிவிடும் என்பது இவர்களின் கணக்காக இருக்கிறது.

()

கமலால் உருவாக்கப்படும் சமீபத்திய படமான 'என்னைப் போல் ஒருவன்', 'A Wednesday' என்கிற இந்திப்படத்தின் மறுஉருவாக்கம் என்பது தெரிந்த செய்தி. ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள் இருக்கின்றன என்ற செய்தி வெளியாகும் போது, எப்படி அப்படியொரு படத்தில் பாடல்களை நுழைக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்திப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். நஸ்ரூதின்ஷா நடுரோட்டில் பின்னால் நூற்றுக் கணக்கானவர்கள் வர "ஹே.. என் பாரத தேசமே' என்றதொரு பாடலுடன் வந்தால் எப்படி அபத்தமாக இருக்கும்?

தமிழ்ச் சினிமாவில் பாடல்களே இல்லாமல் இதுவரை இரண்டே படங்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று 'அந்த நாள்'. இரண்டாவது கமலின் 'குருதிப்புனல்'. இதிலும் கூட ஒரு முன்னுதாரணமாய் இருந்திருக்கும் கமல் பாடல் காட்சிகளுக்கு வக்காலத்து வாங்கியிருப்பது நிச்சயம் எனக்கு அதிர்ச்சிதான்.

பாடல்கள் என்பதை திரைப்படத்தோடு கலக்காமல் மேற்கத்திய நாடுகளின் பாணியில் தனி ஆல்பங்களாக வெளியிடும் சூழ்நிலையை இங்கு உருவாக்க வேண்டும். இதனால் இசையமைப்பாளர்களும் 'situation-க்கு மூளையைச் கசக்காமல் முழுச் சுதந்திரத்தோடு தங்களின் உருவாக்கங்களை வெளியிட முடியும். இயக்குநர்களும் பாடல்கள் எனும் இடையூறு இல்லாமல் நல்ல கதையோட்டத்துடன் தங்களின் திரைக்கதையை யோசிக்க முடியும். இதனால் இரண்டு துறையுமே உருப்படும். பார்வையாளர்களும் இந்த மாதிரியானதொரு சூழ்நிலைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியொரு சூழல் விரைவிலேயே நிகழும் / நிகழ வேண்டும் என நாம் நம்புகிறேன்.

suresh kannan

Monday, June 15, 2009

நல்லதொரு நகைச்சுவைக் கட்டுரை

நீண்ட நாள் கழித்து டிவிட்டருக்கு சென்ற போது நாராயண் இந்தப் பதிவை பரிந்துரைத்திருந்தார். படித்துப் பார்த்தேன். அற்புதமான நகைச்சுவை. இந்த மாதிரி தரமான நகைச்சுவைக் கட்டுரையை உருவாக்குவது அரிது. அன்றாட வாழ்வில் நாம் படும் அவஸ்தைகளை முன்வைத்து அதையே நகைச்சுவையாக்கி அதை நம்மிடமே காண்பிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் சிறுவர்/சிறுமி வீடுகளில் இருக்கும் ஒவ்வொருவரும் இதில் வரும் சம்பவங்களை அனுபவித்திருப்பர்.

நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.


என்.சொக்கன் மிக அருமையாக எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

Sunday, June 14, 2009

கேள்வி பதிலும் சுயபுராணமும்


நண்பர் ஸ்ரீதர் நாராயணன் அழைப்பிற்கிணங்க இந்தப் பதிவு.

நாம் பிறந்த புதிதில் நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தோம். ஆனால் வளர வளர மற்றவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற கற்பிதங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு மந்தையில் ஐக்கியமாகி விடுகிறோம். என் இரண்டரை வயது மகள் இதுவரை கேட்ட நூற்றுக் கணக்கான கேள்விகளில் ஒன்று - "சாம்பார் ஏன் மஞ்சள் கலரில் இருக்கிறது?". அதானே! பச்சை கலரில் சாம்பார் தயாரிக்கப்படக்கூடாதா என்ன?

தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருப்பது நம்முடைய வளர்ச்சிக்கு உதவவே செய்யும். ஆனால் சரியான நேரத்தில் சரியான கேள்வியாக இருக்க வேண்டும். துணையுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது 'ஸ்கூல் பீஸ் கட்டியாச்சா?" என அச்சுப்பிச்சென்று கேட்கக்கூடாது. "இன்னிக்கு வெயில் ரொம்ப அதிகமில்ல?" என்ற கேள்வியுடன் உரையாடலை ஆரம்பிக்க முயற்சிப்பவர்களை கேள்வியே கேட்காமல் மனித வதைச் சட்டத்தில் உள்ளே போடலாம்.

இதுவொரு இணைய விளையாட்டு. புத்தக மீமீ, திரைப்பட மீமீ .. என்று தொடர்ந்து இது. இதிலும் 'இப்போது என்ன உடை அணிந்திருக்கிறீர்கள்?" என்கிற மனித வாழ்க்கைக்கு மிக அவசியமான கேள்விகளும் இருக்கின்றதுதான். (தயாரித்தவர் யார் என்று தெரியவில்லை). நான் மஞ்சள் நிற ஜட்டியை அணிந்திருப்பதை அறிந்து கொள்வதில் அவருக்கு அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை.

சரி கேள்விகளுக்குள் நுழைவோம். பொதுவாக ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதியான 'மிகச் சுருக்கமாக எழுதுவது' என்பது என்னிடம் அறவே கிடையாது. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் எங்கேயும் பயணிப்பேன். உங்கள் தலைவிதி. படியுங்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என்னுடைய இயற்பெயர் சுரேஷ். இப்படியொரு நாகரிகமான (?!) பெயரை எனக்கு வைத்த என்னுடைய பெற்றோரை சிறுவயதில் ரகசியமாக மனதிற்குள் பாராட்டிக் கொண்டேயிருப்பேன். கோவிந்த சாமி, (கோயிந்தா கோயிந்தா) சடகோபன், (டேய் சட) காஜா மொய்தீன். (டேய் காஜாப் பையா).. என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டிருந்த வகுப்புத் தோழர்கள் அவர்களின் பெயர்களினாலேயே கிண்டல் செய்யப்படும் போது அந்த ஒரு ஏரியாவில் இருந்தாவது நான் தப்பித்தேனே என்று ஆசுவாசமாக இருக்கும்.

இணையத்திற்கு வந்த புதிதில் 'சுரேஷ், சென்னை' என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். இந்த 'சுரேஷ்' என்கிற மாதிரியான அசட்டுத்தனமான பொதுப்பெயருக்கு பஞ்சமேயில்லை. ரொம்பவும் சாதாரண பெயர். லட்சக்கணக்கில் இருக்கும் 'சுரேஷ்'களுக்கு மத்தியில் வித்தியாசமே இருக்குமே என்னுடைய தந்தையின் பெயரை இணைத்து என்று 'சுரேஷ் கண்ணன்' என்று மாற்றியமைத்துக் கொண்டேன். அப்புறம்தான் தெரிய வந்தது, 'சுரேஷ் கண்ணன்' பெயரில் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள் என்று. பெயர் என்பது ஊறுகாய் பாட்டிலின் மீது ஒட்டப்படும் லேபிள் போன்றதுதான் என்கிற பக்குவம் இப்போது வந்துவிட்டது. தேவைக்காக எந்தவொரு அடையாளத்தையும் வெளிப்படுத்தாத பெயரை வைத்துக் கொள்ள விருப்பமிருக்கிறது.

2) கடைசியா அழுதது எப்போது?

சில அந்தரங்கமான தருணங்களை எப்போதும் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்தரங்கம் புனிதமானது (சில சமயங்களில்).

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

நிச்சயம் பிடித்திருந்தது. படிக்கும் காலங்களில் என்னுடைய கையெழுத்து மிக நன்றாக இருக்கும். பிறகு கணினி பயன்பாடு அதிகமாகிவிட்ட பிறகு கையால் எழுதுவது என்பது மறந்தேவிட்டது. மாத்திரமல்லாமல் வங்கிக் காசோலையில் போடும் கையெழுத்து கூட அடிக்கடி மாறிக் கொண்டே வருகிறது. ஒரு முறை வங்கியில் என்னை 'காஷ்மீர் தீவிரவாதி' ரேஞ்சிற்கு சந்தேகமாக பார்த்ததை இன்னமும் மறக்க இயலவில்லை.

4) பிடித்த மதிய உணவு?

இந்தப் பதிவை பார்க்கவும்.


5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

என்னிடம் நட்பு பாராட்டுவது கஷ்டம்தான். Introvert. பொதுவாக நட்பை பேணிக் காப்பதில் அவ்வளவு அக்கறை கொள்ளாதவன். நிறைய பாசாங்கான விஷயங்களை செய்துதான் நட்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதை தவிர்ப்பதே நல்லது என நினைக்கக்கூடியவன். உடனே ஒருவரிடம் பழகிவிடுவது என்னால் இயலாதது. அதையும் மீறி எனக்கு நண்பர்களாக உள்ளவர்களை வணங்குகிறேன். ஆனால் நெருங்கிப் பழகிவிட்டால் கூடுமானவரை உண்மையாக இருக்க முயற்சி செய்வேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

குளியல் அறையில்தான்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

ஆண்களென்றால் தொலைந்து போகிறதென்று முகத்தை. வாளிப்பான பெண்களென்றால்... ஹிஹி.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

இரண்டாவது கேள்விக்கான பதிலைப் பார்க்கவும்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

யாருமில்லை. நான் ஒரு தனிமை விரும்பி. தனிமையில்தான் 'நான் நானாக இருக்கிறேன்' என்பதால்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

வெறும் லுங்கி.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

டிரம்மர் சிவமணியின் 'மஹாலீலா' ஆல்பம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

நீலம்.. நீலம்.. நீலம்... இந்த நிறத்தைத் தவிர வேறு எந்தவொரு நிறத்தையும் என்னால் யோசிக்கவே முடியாது. பல்துலக்கும் பிரஷ்ஷில் இருந்து உள்ளாடை சமாச்சாரம் வரை நீலத்தில்தான் தேர்ந்தெடுப்பேன். (படங்களிலும் நீலமா என்று கேட்கக்கூடாது). அதுவும்தான். ஹிஹி.

14) பிடித்த மணம்?

மல்லிகை, மழை, குழந்தை, வார்னிஷ், புதுப்புத்தகம், எலுமிச்சை, பிரியாணி, ரசம் தாளிப்பு மற்றும் சில.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

இடுகையின் இறுதியில் வருகிறது.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

எல்லாப் பதிவுகளுமே. (ரொம்பவும் ஓவர்தான் இல்லே ஸ்ரீதர்?) :-)

17) பிடித்த விளையாட்டு?

இயற்கை தன் சுழற்சிக்காக உருவாக்கியிருக்கும் 'ஆதாரமான' விளையாட்டு.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம். சமீப காலங்களில். வாசிப்பிற்காக. ஆனால் பெரும்பாலான நேரங்களில் உபயோகிக்காமல் குற்றஉணர்வு.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

'காட்சி ஊடகம்' என்ற அதீத பிரக்ஞையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்துத் திரைப்படங்களும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

The Sting

21) பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம். மழையை அதனுடைய பிரத்யேக காரணங்களுக்காக மிக அதிகமாக நேசிக்கிறேன்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

கொல்லிப்பாவை சிற்றிதழ் தொகுப்பு, 'கட்டுரையும் கட்டுக்கதையும்' - பிரேம் ரமேஷ், சார்த்தர் பற்றிய எஸ்.வி.ராஜதுரையின் நூல். தினமலர் வாரமலர்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

படம் எதுவும் இல்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்:
மெலிதாக ஒலிக்கும் இசை, சாவு மேளம், குழந்தையின் சிரிப்பு, சுப்ரபாதம், ரயிலின் தடதடா...

பிடிக்காத சத்தம்:
பட்டாசு வெடி, குழந்தையின் கதறல், சத்தமான உரையாடல், மோசமாக இசைக்கப்பட்ட குத்துப்பாடல், ஒழுகும் நீர்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

சிறுவயதில் இரண்டு முறை வீட்டை விட்டு ஓடும் போதுதான் 'அதிக' தொலைவிற்கு சென்றுவிட்டதாக உணர்ந்தேன். மற்றபடி இதுவரை கும்மிடிப்பூண்டியைத் தாண்டியதில்லை. வெயிலைத் தவிர்க்க ஊட்டி, கொடைக்கானல் போனதையெல்லாம் கணக்கில் சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

சுமாராக எழுதுவேன். சமயோசிதமான நகைச்சுவையும் நுட்பமான ரசனையும் உண்டு என்று நம்புகிறேன்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

மனிதன் மிக முர்க்கமாக இயற்கையை மீறிச் செல்ல அபத்தமாக முயல்வது.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம், சோம்பல், சுயபச்சாதாபம், சில சமயங்களில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

என்னுடைய வீடு.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

அடிப்படை நாகரிகங்களுடன் கூடிய பாசாங்கில்லாத ஆதிமனிதனாக.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

தன் கையே தனக்குதவி. அதாவது சமையல். :-)

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

மகா அபத்தங்களுடன் கூடிய வரம்.

()

நான் அழைக்கும் பதிவர்கள்:

யார் யார் இந்தத் தொடரை எழுதியிருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில் பின்வரும் பதிவர்களை இந்த தொடர் ஓட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

ப்ரதீப் - எழுத்தாளர் சுஜாதாவை சந்திப்பதற்கு தேசிகன் ஏற்பாடு செய்திருந்த போது நாடக நடிகர் போலிருந்த இவரை ஒரே ஒருமுறை சந்தித்திருக்கிறேன். எழுதும் போது பத்திகளின் இடையில் தெறிக்கும் மிக யதார்த்தமான நகைச்சுவையை மிகவும் ரசிப்பேன்.

ஆசிப் மீரான் - மொக்கை பதிவுகள் போட்டே 'அண்ணாச்சி' பட்டம் வாங்கிவிட்டவர். அபூர்வமாக நல்ல பதிவுகளும் எழுதிவிடக்கூடியவர்.

ஹரன் பிரசன்னா- 'கிழக்கு' ஜோதியில் ஐக்கியமாகிவிட்ட பிறகு எழுதுவதைக் குறைத்துக் கொண்டவர். சீரியஸ் பதிவு போல எழுதுவார். அபூர்வமாக 'மொக்கை' பதிவுகளும் உண்டு. (கோபி கிருஷ்ணன் நூல் பற்றியது சமீபத்திய உதாரணம்).

நிர்மலா - சத்யஜித்ரே பிறந்த கொல்கத்தாவிற்கும் சென்னைக்கும் சீசன்டிக்கெட் எடுத்து வைத்திருப்பவர். எழுதுவதை வைத்து இவர் ஒரு பெண் பதிவர் என்று யூகிக்கவே முடியாது. 'பெண்ணியம்' என்று சில பெண் பதிவர்களிடம் காணப்படும் அபத்தங்களை இவரிடம் காண முடியாது.

எவனோ ஒருவன் - சமீபத்திய நண்பர். வலைப்பதிவிற்கு சட்டை மாற்றும் போது எழுந்த நுட்ப சந்தேகத்தை தானாக முன்வந்து தீர்த்து வைத்தவர். இரவு 12.00 மணிக்கு சந்தேகம் எழுப்பினாலும் உடனே பதிலளிப்பார். இவரும் எழுதுவார் என நம்புகிறேன்.

update: நிர்மலா எழுதின பதிவு

ப்ரதீப் எழுதின பதிவு

ப்ரதாப்பின் பதிவு

suresh kannan

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்


நாள்: ஜூன் 14, 2009
நேரம்: மாலை 5:30
இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர்.

தலைமை: சுகுமாரன்

பங்குபெறுவோர்:

ஞானக்கூத்தன்
ஆ.இரா.வேங்கடாசலபதி
யூமா வாசுகி
மற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

காலச்சுவடு

Saturday, June 13, 2009

விருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு

உலக சினிமாவைப் பற்றி நாம் அறிந்திருப்பதோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பிற மாநிலங்களில் உருவாக்கப்படும் திரைப்படங்களைக் குறித்து சிறிய சதவீதத்தைக் கூட பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை chakde india என்கிற திரைப்படத்தில் "ஜார்கண்ட், உத்தராஞ்சல்" என்றெல்லாம் கூட மாநிலம் இருக்கிறதா?" என்றொருவர் கேட்பார். நம்மில் யாராவது ஒரு அஸ்ஸாமிய திரைப்படத்தையோ மணிப்பூர் திரைப்படத்தையோ பார்த்திருப்போமோ? ஆனால் எங்கேயோ இருக்கும் பிரேசில், சிலி நாட்டுத் திரைப்படங்களை கொண்டாடுவோம்.

Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

இந்த வரிசையில் இன்று (13.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.



CHUTKAN KI MAHABHARAT
Director : Sankalp Meshram
Year of Production : 2004
Version : Hindi Feature
Duration : 87 mins
with English subtitles


Synopsis

A Nautanki team (a Musical folk theatre) sets up camp in a village and the whole village is abuzz with excitement and the ten year old boy Chutkan is no exception to enjoy the whole myth of Pandavas & Kauravas of Mahabharat.

Agog with images of Nautanki, Chutkan sees a dream in which Shakuni Mama & Duryodhana have a change of heart after deceitfully winning against Yudhistir at the game of chausar. They confess to their villainy and relinquish all claims to the kingdom. The great Mahabharata ends even before it’s begun.

Things take a strange turn when the Nautanki artistes behave exactly as Chutkan had dreampt.

The film then takes a hilarious journey in to the Magical realist genre made richer by the use of folk music, theatre & lyrical passages.

2005-க்கான மத்திய அரசின் சிறந்த 'குழந்தைகள் திரைப்பட விருது' இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

அவசியம் பாருங்கள்.

(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)

Friday, June 12, 2009

சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...


இன்றைக்கு இணையத்தில் எத்தனையோ வலைத்தளங்களில் எத்தனையோ இலக்கியப் படைப்புகள் வாசிக்க கிடைத்தாலும் அச்சான புத்தகங்களைப் படிப்பது போன்ற சுகம் எதிலும் கிடைக்கவில்லை. சுவற்றில் சாய்ந்து கொண்டு, கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு, பால்கனியில் அமர்ந்து கொண்டு, மொட்டைமாடியில் சேர் போட்டுக் கொண்டு, ஏன் கழிவறையில் கூட படிக்கும் வசதி புத்தகங்களின் மூலமே சாத்தியம். (மடிக் கணினியை இதில் சேர்க்க வேண்டாம்) மனையாள் சுகம் போல (நன்றி பாலகுமாரன்) இதுவே இயல்பானதாக எனக்குத் தோன்றுகிறது.

oOo

சிறுவயதில் எல்லாச் சிறுவர்களையும் போல அம்புலிமாமாவில் என் வாசிப்பு அனுபவம் தொடங்கினாலும், தோராயமாக ஒரு 18 வயதில் அது வெறியாகவே மாறியதின் அர்த்தம் இன்றும் எனக்கு விளங்கவில்லை. இத்தனைக்கும் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இந்தளவு புத்தகப் பைத்தியமாக இருந்ததில்லை.

நேற்றுத்தான் பார்த்திருப்பேன் என்றாலும் இன்றைக்கும் பிளாட்பார புத்தகக் கடைகளை பார்த்ததும் தாமாகவே என் கால்கள் நின்றுவிடும், ஏதாவது புதிதாக இன்று வந்திருக்கிறதா என்று. அண்ணா சாலை பக்கம் போகும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் லேண்ட்மார்க்கிலும், ஹிக்கின்பாதம்ஸிலும், புக்பாயிண்டிலும் போய் எந்தெந்த புதுப் புத்தகங்கள் வந்திருக்கிறது என்று வேடிக்கை பார்த்துவிட்டு வருவது வழக்கம். சில புத்தகங்களை வாங்க ஆசையிருந்தாலும் விலையைப் பார்த்து மிரண்டு போய் பெருமூச்சுடன் வைத்து விட்டு வருவேன். சில சமயம் அந்தக் குளிர்பதனம் செய்யப்பட்ட கடையில் நீண்ட நேரம் இருந்து விட்டு எதுவும் வாங்காமல் வர வேண்டிய குற்ற உணர்ச்சியில் ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிவருவதும் வழக்கம்.

எநதப் புத்தகத்தை வாங்கினாலும் அது 16 வயது ஐஸ்வர்யா போல் புது மெருகுடன் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். அட்டை சிறிது சேமடைந்திருந்தாலோ, ஏதாவது பக்கங்கள் சற்று கிழிந்திருந்தாலோ, அது நான் ரொம்ப நாட்களாக தேடிய புத்தகமாகவோ இருந்தாலும், வாங்க மாட்டேன். (ஒரு முறை ஹிக்கின் பாதம்ஸில் வாங்கிய சுஜாதாவின் 'பதவிக்காக' நாவலில் பல இடங்களில் மடித்து வைத்த அடையாளமிருந்தது. வாங்கி வந்தபின்புதான் இதைக் கவனித்தேன். இந்தப் புத்தகத்தை வாங்க வசதியில்லாத அல்லது விருப்பமில்லாத யாரோ இதை தவணை முறையில் கடையிலேயே நின்று படித்திருக்க வேண்டும். மறுநாளே அதை எடுத்துக் கொண்டு போய் வேறு புத்தகம் கேட்டேன். மன்னிப்பு கேட்டுக் கொண்டு மாற்றி கொடுத்தார்கள்)

அதே போல் என்னுடைய சொந்த புத்தகமாகவே இருந்தாலும் விருப்பமான வா¢களை அடிக்கோடிடுவதோ, ஏதாவது குறிப்பு எழுதுவதோ எனக்கு அறவே பிடிக்காத ஒன்று. வாங்கின அன்று இருந்த மாதிரியே புதுசாக வைத்திருக்க நிறைய பிரயத்தனப்படுவேன். நூல் நிலைய புத்தகங்களில் இது மாதிரி பல அபத்தங்களை பார்த்திருக்கிறேன். ஒரு சிறுகதைத் தொகுதியில், ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒருவர் அவருடைய பொன்னான கருத்தை எழுதி வைத்திருந்தார் ஒரு பிரகஸ்பதி. சில சமயம் சுவாரசியமான குறிப்புகளும் காணக்கிடைக்கும். ('இந்தப் புத்தகத்தை எழுதிய இருகூரானை இருகூறாக பிளக்க வேண்டும்' - 'இந்தப் புத்தகத்தை படிக்கும் நேரத்தில் சவரக்கடையில் வேலை செய்து சம்பாதிக்கலாம்' என்பது மாதிரி)

oOo

ஒரு சமயத்தில் சென்னையில் உள்ள எல்லா பெரிய நூல்நிலையங்களிலும் நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.

அமெரிக்கன் நூல்நிலையம்

இதில் உறுப்பினராக எந்த கட்டணமும் தேவையில்லை. இந்த விலாசத்தில்தான் தங்கியிருக்கிறேன் என்று ஒரு அத்தாட்சியும், பணிபுரிகின்ற நிறுவனத்திலிருந்து ஒரு கடிதமும் கொடுத்தால் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி காவலர்களைத் தாண்டி போகும் போது பெருமையாகவே இருக்கும். அமெரிக்க எழுத்தாளர்கள் எழுதின புத்தகங்கள் மட்டுமே இருப்பதால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கின மாதிரி எனக்கு ஒரு பிரமை.

எர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் பாக்னர் ஆகியோ¡¢ன் புத்தகங்களை இங்குதான் படிக்க முடிந்தது. நூல்நிலையம் ஏ.சியெல்லாம் போட்டு டாம்பீகமாக இருக்கும். டைம் போன்ற நிறைய வெளிநாட்டுப் பத்திரிகைகள் கிடைக்கும். ஹெட்போன் போட்டு சிலர் மெளன வீடியோப்படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நான் போகும் போதெல்லாம் யாராவது அமர்ந்து கொண்டு, எனக்கு சந்தர்ப்பமே வாய்த்ததில்லை. தொலைபேசியிலேயே புத்தக டியூவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

பிரிட்டிஷ் கவுன்சில்

பணக்கார நூல்நிலையம். கட்டணம் சாமான்யர்களுக்கு அதிகம். இங்கு ஒராண்டு உறுப்பினராக இருந்தேன். அங்கு வைத்திருக்கும் புத்தகங்களோடு ஒப்பிடுகையில் கட்டணம் குறைவுதான். அமெரிக்க நூலகத்தை விட வசதிகள் அதிகம். போகும் போதெல்லாம் அங்கிருக்கும் அழகான பெண் பணியாளர்களிடம் ஏதாவது கேட்டு கடலை போடுவது என் வழக்கம். எல்லாத் தலைப்புகளிலும் புத்தகங்களும் வீடியோக்களும் கிடைப்பது வசதியான விஷயம்.

கன்னிமரா நூல்நிலையம்

சென்னையின் ரொம்பவும் பழமையான நூல்நிலையம் என்பது இங்கிருக்கும் கழிவறையை உபயோகிக்கும் போது நினைவுக்கு வரும். (யாரோ, சிறுநீரை வீணாக்காதீர்கள் என்று பென்சிலால் சுவற்றில் எழுதி வைத்திருப்பார்கள்) மலையாள, கன்னட, உருது புத்தகங்களை பார்க்கும் போது இந்த மொழிகளையும் கற்றிருந்தால் இந்தப் புத்தகங்களையும் படிக்கலாமே என்று தோன்றும், என்னமோ தமிழில் அதிகம் கிழித்துவிட்ட மாதிரி. இணையத்திலேயே புத்தகங்களை renewal செய்துக் கொள்ளலாம் என்பது ஒரு வசதி.



தேவநேயப் பாவாணர் நூல்நிலையம்

இந்த நூல்நிலையக் கட்டிடத்தில் பல இலக்கியக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை அறிகிறேன். இப்பவும் நடக்கிறது. நூல் நிலையத்திற்குள் பல பேர் நிம்மதியாக மேஜையில் தலை வைத்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். நூலக பணியாளர்களும் இதைக் கேட்காமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கும். (தூங்குபவர்கள்தான் பணியாளர்களோ என்று எனக்கு சந்தேகம் வந்ததுண்டு) இங்கு நுழைந்தவுடன் 'அறிவியல்' என்கிற தலைப்பில் உள்ள அடுக்குக்கு செல்வது வழக்கம். அறிவியலில் எனக்கு ஆர்வம் அதிகம் போல என்று தப்புக்கணக்கெல்லாம் போட்டுவிடாதீர்கள். அங்குதான் நிறைய சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும் கிடைக்கும். பணியாளர்கள் தவறாக அடுக்கியது போக, சிலர் தனக்கு வேண்டிய புத்தகங்களை அங்கு ஒளித்து வைத்திருப்பர்.

oOo


இப்பவும் எந்தப் புத்தகக் கடையிலாவது ஆவென்று வாயைப் பிளந்து கொண்டு புத்தகங்களை வேடிக்கை பார்க்கும் ஒருவரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் விசாரித்துப் பாருங்கள். அது நானாக இருக்கக்கூடும்.

புத்தகங்கள் இல்லாத உலகை என்னால் கற்பனை செய்துக்கூட பார்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் சரோஜாதேவி எழுதின புத்தகமாகவது இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும்.

(இது ஒரு மீள்பதிவு. மரத்தடி மடற்குழுமத்தில் செப்,30,2004 அன்று எழுதியது).

suresh kannan

Wednesday, June 10, 2009

ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்


வன்முறை மனித இனத்தால் தவிர்க்கப்பட வேண்டியது என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து உரையாடிக் கொண்டு வந்தாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்னொரு உயிரை கொல்லும் இச்சை ஆழமாக புதைந்திருக்கிறது என்பதை நம்முடைய அன்றாட செயல்களின் மூலம் உணர முடிகிறது. தரையில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பான் பூச்சியை நாம் சுவாதீனமாக அழுத்தி தேய்த்துக் கொல்கிறோம். போகிற போக்கில் செடியின் இலையை பறித்து கசக்கி எறிகிறோம். யாரையாவது அடிக்கும் போது இன்னும் இன்னும்.. என்று நம் மனம் மூர்க்கமாக உறுமுகிறது. விபத்தில் சிக்கி ரத்தவெள்ளத்தில் கிடக்கும் மனித உடலைப் பார்க்க மனம் ரகசிய ஆர்வமாக விரும்புகிறது. ஆனால் உள்ளே ஆழத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மனிதமும் கற்பிக்கப்பட்டிருக்கிற நாகரிகமும் இதை மழுப்புகிறது. ஹிட்ச்காக்கின் 'Rope' (1948) திரைப்படம் இந்த முரண் உணர்வை திறமையாக வெளிக்கொணர்கிறது.

()

பிராண்டன் மற்றும் பிலிப் ஆகிய இருவர் தங்களுடைய நண்பனான டேவிட்டை கழுத்தை இறுக்கி கொலை செய்யும் 'மங்கலகரமான' காட்சியுடன் திரைப்படம் துவங்குகிறது. ஏன் இந்தக் கொலை? கொலை செய்வதில் உள்ள அழகியலும் அதன் மூலம் கிடைக்கும் திரில்லும் இவர்களை இயக்குகின்றன. மேலும் டேவிட்டை விட தாங்கள் உயர்ந்தவர்கள் எனவும் எனவே அவன் வாழ்வதற்கு தகுதியில்லாதவன் என்று இருவரும் கருதுகின்றனர். பிராண்டன் தன்னுடைய சாகசத்தை எண்ணி ரசிக்கிறவனாக இருக்கிற நிலையில் பிலிப் தன்னுடைய செயலுக்கான பயத்துடனும் குற்ற உணர்வுடனும் இருக்கிறான்.

இந்தக் கொலையை இன்னும் சுவாரசியப்படுத்த ஏற்கெனவே தன்னுடைய அபார்ட்மெண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நடக்கும் அறையிலேயே பிணத்தை ஒரு பெட்டியில் வைத்து மூடி அதன் மீது உணவு வகைகளை வைக்கின்றனர். 'தங்களை யாராவது சந்தேகப்பட முடியுமா?' என்கிற சவாலே இதை செய்ய அவர்களைத் தூண்டுகிறது. இவர்களின் முன்னாள் ஆசிரியரான ரூபர்ட் என்பவரையும் விருந்துக்கு பிராண்டன் அழைத்திருக்கிறான். எதையும் 'சந்தேகப்படும்' அவரின் குணாதிசயம் தெரிந்தும் அவரை விரும்பி அழைத்திருக்கும் காரணம் இந்த ரகசியமான 'சவால்' உணர்வே. அது மாத்திரமல்லாமல் மாணவர்களாயிருந்த அவர்களிடம் அவர் ஏற்கெனவே "கொலை செய்வதின் அழகியலைப்" பற்றி உரையாடியிருக்கிறார்.

விருந்திற்கு, கொலை செய்யபட்ட டேவிட்டின் தந்தை, அத்தை, மற்றும் டேவிட்டின் காதலி, அவளின் முன்னாள் காதலன் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். விருந்திற்கு டேவிட் வராதது குறித்தே அனைவரும் விசாரிக்கின்றனர். பிராண்டன் இதை திறமையாக சமாளித்தாலும் பிலிப் குற்ற உணர்வு காரணமாக நடுங்கிச் சாகிறான். பிராண்டன் தன்னுடைய முன்னாள் ஆசிரியரிடம் 'கொலை செய்வதில் உள்ள அழகியலைப் பற்றின உரையாடலை இடையே ஆரம்பிக்கிறான். இந்த அபத்தத்தை சகிக்க முடியாமல் பிலிப் உணர்ச்சிவசப்படுகிறான். பிராண்டன் தன்னுடைய சவால் உணர்வை இன்னும் சுவாரசியப்படுத்திக் கொள்ள, டேவிட்டின் தந்தைக்கு அவர் எடுத்துச் செல்ல விரும்பின புத்தகங்களை டேவிட்டை கொலை செய்யப் பயன்படுத்திய அதே கயிற்றின் மூலம் கட்டித் தருகிறான். பிலிப் இதைப் பார்த்து முகம் வெளிறிப் போகிறான். ரூபர்டிற்கு மெல்ல மெல்ல டேவிட் கொலை செய்யப்பட்டிருப்பானோ என்றும் பிராண்டனும் பிலிப்பும் இணைந்து இந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. பின்னர் தனது திறமையான யூகத்தின் பேரில் அவர் இதை நிருபிக்க முயல...

பிறகு என்ன நிகழ்கின்றது என்பதைப் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

()

ஹிட்ச்காக்கின் முதல் டெக்னிக்கலர் திரைப்படமான இதில் குறிப்பிடத்தகுந்த யுக்தியாக குறிப்பிடப்பட வேண்டியது எல்லாக் காட்சிகளும் மிக மிக நீளமான தொடர்ச்சியான டேக்குகளைக் கொண்டு (மொத்தமே 10 டேக்குகள்தான்) திறமையான திட்டமிடலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெரும்பான்மையான காட்சிகள் விருந்து நடக்கும் அறையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. திறமையான உரையாடல்களின் மூலமும் சுவாரசியமான திரைக்கதையின் மூலமும் புதுமையான காமிரா கோணங்களின் மூலம் ஒரு அற்புதமான அனுபவத்தை தருகிறார் ஹிட்ச்காக். இரு பாத்திரங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே இன்னொருவரின் உரையாடலுக்கு காமிராக மிக இயல்பாக தாவுகிறது. 'எப்படி கொலை நடந்திருக்கலாம்' என்று ரூபர்ட் விளக்கிக் கொண்டிருக்கும் போது காமிரா அதற்கேற்றவாறு அந்தந்த இடங்களுக்கு நகர்கிறது.

சிகாகோவில் நடந்ததொரு உண்மைச்சம்பவத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்ட பேட்ரிக் ஹாமில்டனின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். அந்தக்காலத்தில் இருந்த சென்சார் பிரச்சினை காரணமாக பிராண்டனுக்கும் பிலிப்புக்கும் உள்ள ஒருபால் உறவு மிகவும் பூடகமான முறையில் அமையுமாறு திரைக்கதை மாற்றி எழுதப்பட்டுள்ளது. (உண்மைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருபால் உறவினர்). 'முதலில் ஒரு கொலை, பின்னர் கொலையாளி யார்" என்கிற வழக்கமான திரில்லர் பட யுக்திகள் மீறப்பட்டு கொலையாளிகள் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களுக்கு அடையாளம் காணப்பட்டு அவர்களின் குற்றம் வெளிப்படுமா இல்லையா என்கிற பதைபதைப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துவதில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் ஹிட்ச்காக்.

பிராண்டன் மற்றும் பிலிப்பின் பாத்திரங்கள் உச்சபட்சமான திறமையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. படத்துவக்கத்திலேயே நிகழும் கொலை முடிந்தவுடன் சாகசத்தை விரும்பும் பிராண்டன் அறையின் விளக்கைப் போடுகிறான். மதிய நேரத்தின் வெளிச்சத்தில் அறையின் திரைகள் மூடப்படாமலேயே அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறான். ஆனால் பயப்படும் பிலிப் 'சற்று நேரம் அப்படியே இருக்கட்டும்' என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் கேட்கிறான். விருந்தினர்களின் உரையாடலின் போது 'பிலிப் விருந்து தயாரிப்பிற்காக கோழிகளின் கழுத்தை திறமையான நெரித்து கொலை செய்வான்" என்று யதேச்சையாக பிராண்டன் சொல்லப் போக சற்றுமுன் நடந்த கொலை காரணமாக குற்றஉணர்விலும் பயத்திலும் வியர்த்துப் போயிருக்கும் பிலிப் இதை ஆவேசமாக மறுக்கிறான். ஆசிரியர் ரூபர்டின் சந்தேகம் இந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவதாகச் சொல்லலாம். இவ்வாறான பல நுண்ணிய தகவல்களின் மூலம் படம் நகர்த்தப்படுகிறது.

பிராண்டனாக John Dall-ம் பிலிப்பாக Farley Granger-ம் ரூபர்ட்டாக James Stewart-ம் திறமையாக நடித்திருக்கின்றனர். பிராண்டன்-பிலிப்,இருவருக்குமிடையான முரண்களும் உரையாடல் மோதல்களும் மிகத்திறமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. 'புதுமை மன்னனான' ஹிட்ச்காக்கின் கிளாசிக் திரைப்படமான இதை ஹிட்ச்காக் ரசிகர்கள் மாத்திரமல்லாது அனைவருமே கண்டு களிக்க வேண்டும். இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது இதே போல் தமிழ்நாட்டில் நடந்த (நாவரசு கொலை) சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் செய்தவராக கருதப்பட்டவரின் பெயர் (ஜான்) டேவிட் என்பது ஒரு சோகமான ஆச்சரியம்.

suresh kannan

புதுச்சட்டை

என் வலைப்பதிவிற்கு புதுச்சட்டை ஒன்றை அணிவித்து பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் திட்டம். எழுதும் விஷயங்கள்தான் நன்றாக இல்லை, தளமாவது பார்க்க சுமாராக இருக்கட்டுமே.. சட்டை வாங்குவதற்காக தி.நகரா போக முடியும்? இணையத்தில் தேட ஆரம்பித்ததில் நிறைய தளங்கள் கிடைத்தன. ஆனால் அதை எப்படி என் பதிவில் பொருத்துவது என்பதில் பெருங்குழப்பம் ஏற்பட்டது.

இந்த கணினி நுட்ப விஷயத்தில் மாத்திரமல்ல, எந்தவொரு தொழில் நுட்ப விஷயத்திலும் என்னைப் போன்றதொரு 'மாக்கானை' பார்க்கவே முடியாது. நீண்ட வருடங்களுக்கு முன் 'கிராபிக் டிசைனிங்' கற்பதற்காக கணினி கல்வி நிலையத்திற்குச் சென்றிருந்தேன். மூன்று மாத கற்பித்தலுக்குப் பின் எனக்கு ஒழுங்காக தெரிந்தது, கணினியை எப்படி 'shut down' செய்வது என்பது மாத்திரம்தான்.

'Free Templates' என்று நிறைய தளங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். நமக்குத்தான் இந்த 'free' என்கிற வார்த்தை ரொம்ப பிடிக்குமே. பல் கூட தேய்க்காமல் உட்கார்ந்து நிறைய தேடியதில், இந்த வடிவமைப்பு ரொம்ப பிடித்திருந்தது. எப்படியோ 'முதலிரவு புதுகணவன்' போல் தட்டுத் தடுமாறி, தடவித் தடவி இலக்கை நிறைவேற்றி விட்டதாக நினைப்பு. ஆனால் 48 சைஸ் சட்டை மாதிரி, என்னுடைய 14' மானிட்டரில் பெரிதாக தெரிகிறது.

எப்படி இருக்கிறதென்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த டெம்ப்ளேட்டின் குறைகள், பிரச்சினைகள் பற்றி 'தில்லாலங்கடி' நண்பர்கள் பின்னூட்டத்தில் அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன்.

suresh kannan

Tuesday, June 09, 2009

லட்ச ரூபாய் நடிகை

மதிப்பிற்குரிய ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, பிரணாம்.
சமீபத்தில் நான் சென்னை வந்திருந்த சமயம் தங்கள் 'ஒளவையார்' படத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையில் அது எனக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். சங்கீதத்தின் பால் உங்களுக்குள்ள பிரேமைக்கும், கடவுளிடம் பக்திக்கும் 'ஒளவையார்' ஒரு பூர்ணமான அத்தாட்சி. முக்கியமாக ஸ்ரீமதி சுந்தராம்பாளின் அரிய செயல்களைக் கண்டு வரும் போதே என் கண்களில் பலமுறை நீர் நிரம்பி விட்டது.

அவர் ஏற்று நடித்த பாகத்தையும் பார்த்து, அவருடைய சங்கீதத்தையும் கேட்டபிறகு வெட்ட வெளிச்சமாக எனக்கு ஒரு விஷயம் தெளிவாகி விட்டது. உண்மைக் கலைஞர்களின் கீதத்திலேயுள்ள இனிமையும் சுவையும் அவர்களுடைய இதயத்தின் மேன்மையிலும் நாதோபாஸனையிலும் கலையிலும் கொண்டுள்ள பக்தியிலும் மட்டுமே காணக் கிடைக்கின்றன.

நானே விநாகராயிருந்தால் இம்மாதிரி உணர்ச்சியுடன் பாடும் ஒரு தொண்டரை - தொண்டராயிருக்கும் தொண்டன் என்ற முறையில் அவரைத் தொழுது கொண்டே இருப்பேன். இதற்கு மேல் அவர் மீது எனக்குள்ள மதிப்பை வெளியிட வார்த்தைகள் அகப்படவில்லை.

பொது ஜனங்களுக்கு இணையற்ற படம் ஒன்றை அளித்ததற்கு உங்களை நான் பாராட்டுகிறேன். படங்களில் கர்நாடக சங்கீதம் சோபிக்காது என்று சொல்கிறவர்களுக்கு 'ஒளவையார்' படம் ஆணித்தரமாக பதில் கொடுக்கும்.

ஒளவையார் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதன் தயாரிப்பாளர் வாசனுக்கு மேற்கண்ட கடிதத்தை எழுதியவர் யார் தெரியுமா? இந்தித் திரையுலகில் நீண்ட வருடங்களாக கானக் குயிலாய் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் லதா மங்கேஷ்கர்.

Photobucket

ஞானப் பழத்தைப் பிழிந்து..... என்று வெண்கல மணியின் நாதம் போன்ற கணீரென்ற குரலுடன் ஐந்தரைக் கட்டையில் ஒலிக்கும் பாடலைக் கேட்டால் இன்றைய தலைமுறையினருக்கு ஒருவேளை சிரிப்பு பொங்கிக் கொண்டு வரலாம். ஆனால் முறையான சங்கீத பயிற்சி இல்லாமல் கேள்வி ஞானத்தில் ஆறு வயதிலேயே பாடி சபையோரை அசத்திய கே.பி.எஸ் என்கிற கே.பி. சுந்தராம்பாளை தியாகராஜ பாகவதர் முதற்கொண்டு பல சங்கீத வித்வான்களும் தங்களின் ஆதர்ச பாடகராகவே கருதினர்.

1908-ல் பிறந்த கே.பி.எஸ்.-ன் வாழ்க்கை மிகுந்த வறுமையோடுதான் துவங்கியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாளுக்கு படிப்பு வரவில்லையே தவிர, பாட்டு நன்றாக வந்தது. வறுமையின் உச்சத்தில் அவரது தாய் தன்னுடைய பிள்ளைகளுடன் சாவதற்கு ஆற்றுக்கு கிளம்பியிருக்கிறார். பிறகு மூத்த பெண் அம்மாவை திரும்ப அழைத்து வந்திருக்கிறார். கரூரில் இருந்த நாடகக்குழுவில் 'நல்ல தங்காள்' நாடகத்துடன் சுந்தராம்பாளின் கலை வாழ்க்கை துவங்கியது ஒரு கறுப்பு நகைச்சுவை. தன்னுடைய கணீரென்ற குரல் வளத்தால் சபையோரை உடனே கவர்ந்த சுந்தராம்பாளின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.

தன்னுடைய காதல் கணவரான எஸ்.ஜி.கிட்டப்பாவை சுந்தராம்பாள் முதலில் சந்தித்தது இலங்கையிலுள்ள கொழும்புவில். அப்போது கிட்டப்பாவின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. 'கந்தர்வ கான கிட்டப்பா'. தன்னுடைய கணவரை முதன் முதலில் சந்தித்து பற்றி இப்படி குறிப்பிடுகிறார் கே.பி.எஸ்.

"நான் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன். ராஜா மாதிரி ஒருத்தர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார் என்று என் தாய் என்னிடம் வந்து சொன்னார். நான் எழுந்திருந்து முகத்தை சுத்தம் செய்து கொள்ளு முன்னமேயே எங்க ஆத்துக்காரர் என் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டார்.

நான் பிரமித்துப் போனேன். கூச்சம் சிறிதும் இல்லாமல் என் கட்டிலில் வந்து உட்காரவாவது என்று எண்ணினேன். ஆனால் அவர் பேசத் துவங்கி விட்டார். என்ன கம்பீரமான தோற்றம்! என்ன ஸ்பஷ்டமான வாக்கு! எனது கந்தர்வன் வந்துவிட்டார் என்றே தோன்றியது."

()

சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் இணைந்து நடித்த நாடகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. கிட்டப்பாவிற்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தாலும் சுந்தராம்பாளையும் இருவீட்டாரின் முரணோடு திருமணம் செய்து கொண்டார். இருவரும் துவக்கத்தில் காதல் பெருகி வழிந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்றாலும் கிட்டப்பா முரட்டுப் பிடிவாதக்காரராக இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் அவர்களிடையே நெருக்கமான வாழ்க்கை வாய்க்கவில்லை. கே.பி.எஸ். கிட்டப்பாவிற்கு எழுதிய சில கடிதங்களில் உருக்கமும் பிரியமும் கலந்து காணப்படுகிறது. 1933-ம் ஆண்டு தனது 28-வது வயதிலேயே கிட்டப்பா நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்.

தனது 25-ம் வயதிலேயே விதவையான கேபிஎஸ், 'பிற ஆடவரோடு இணைந்து நடிப்பதில்லை' என்ற முடிவோடு பொதுவாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார். பின்னர் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் காங்கிரஸின் பிரச்சாரத்திற்காக தம்முடைய கலைத் திறமையை பயன்படுத்த ஆரம்பித்தார்.

தமிழ்ச்சினிமா பேச ஆரம்பித்த பிறகு அதுவரை தெருவிலும் அரங்குகளிலும் நடைபெற்ற நாடகங்கள் திரைவடிவத்திற்கு மாற ஆரம்பித்தன. அசன்தாஸ் என்கிற சினிமா தயாரிப்பாளர் 'நந்தனார்' திரைப்படத்தை கேபிஎஸ்-ஸை வைத்து உருவாக்க விரும்பி அவருடைய மாமாவை அணுகிய போது "அவர் என்ன லட்ச ரூபாய் கொடுப்பீர்களா?" என்று விளையாட்டாக கேட்கப் போக தயாரிப்பாளர் உடனே சம்மதித்தாராம். ஒரு பெண் நடிகைக்கு லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது அப்போது மிக பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடைய மாமா ஒப்புக் கொண்டு விட்டார் என்பதற்காகவும் பிற ஆடவருடன் சேர்ந்து நடிக்கத் தேவையில்லை என்பதாலும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கேபிஎஸ் கூறுகிறார். 'எப்படி ஒரு பெண் ஆண் வேடமிட்டு நடிக்கலாம்' என்று தினமணியில் ஒரு விவாதமே துவங்குகிறது. பார்ப்பனரான சங்கீதபூபதி மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், பார்ப்பனரல்லாத கேபிஎஸ்ஸின் காலில் விழுந்து வண்ங்குவது போன்ற காட்சிக்கு ஆதிக்கச் சாதியிடமிருந்து எதிர்ப்பு வந்திருக்கிறது. "அவள் என் முன்னால் தெய்வம் போல நிற்கிறாள். எங்களுக்குள் எந்த வித்யாசமும் கிடையாது" என்று விஸ்வநாதய்யர் கூற அப்படியே படமாக்கப்பட்டிருக்கிறது.

மணிமேகலை (1940), ஒளவையார் (1953), பூம்புகார் (1964), திருவிளையாடல் (1965), மகாகவி காளிதாஸ (1966), உயிர்மேல் ஆசை (1967), துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973).. என்று பல வெற்றித்திரைப்படங்களில் கேபிஎஸ் நடித்திருக்கிறார். 1980-ல் கேபிஎஸ்-ஸின் மரணம் நிகழ்ந்தது.

()

தமிழிசைக் கலைஞர்களில் முக்கியமானவரான கே.பி.சுந்தராம்பாளைப் பற்றி எந்தவொரு நூலுமே வந்திருக்காத நிலையில் இந்த நூலின் ஆசிரியர் சோழநாடன் மிகுந்த உழைப்புடன் கேபிஎஸ்-ஸைப் பற்றின செய்திகளையும் புகைப்படங்களையும் தேடிச் சேகரித்து தொகுத்தளித்திருக்கிறார். பெரும்பாலும் பத்திரிகையில் வந்திருந்த செய்திகள் அப்படியே தரப்பட்டிருப்பதால் வாசிப்பில் ஒரு முழுமையான அனுபவம் கிட்டவில்லை. மாறாக நூலாசிரியர் எல்லா செய்திகளையும் வைத்து தன்னுடைய எழுத்தில் முழு நூலாக படைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. கேபிஎஸ், கிட்டப்பா உள்ளிட்ட.. பல பிரபலங்களின் அரிய புகைப்படங்கள் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. நூலின் பின்னிணைப்பாக கே.பி.எஸ்-ஸின் கிடைத்தவரையான பாடல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.

கேபிஎஸ்-ஸைப்பற்றியும் அவரின் சிறந்த பாடகத்திறமை பற்றியுமான குறிப்புகள், இசை விமர்சனங்கள், நந்தனார், மணிமேகலை, ஒளவையார் திரைப்படங்களின் கதைச்சுருக்கம், நந்தனார் திரைப்படத்தைப் பற்றி 'கல்கி' எழுதின ஒருதலைப் பட்சமான விமர்சனம்.... என்று பல அரிய செய்திகள் இந்நூலில் நிறைந்துள்ளன. முக்கியமானதொரு தமிழிசைக் கலைஞர் மூத்த திரைப்பட நடிகை / சுதந்திரப் போராட்ட தியாகி.... என்று பல பரிமாணங்களில் செயலாற்றியிருக்கும் ஒரு கலைஞரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இந்நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.

கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு
ப.சோழநாடன்
ரிஷபம் பதிப்பகம், சென்னை-78.
பக்கம் 272, விலை ரூ.100/-
image courtesy: www.viruba.com

suresh kannan

Sunday, June 07, 2009

ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?

முந்தைய பதிவின் தாக்கத்தினாலோ என்னவோ இன்றைக்கு அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு காலை 06.00 மணிக்கு எழுப்புவதற்காக மொபைலில் இருந்த அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நிம்மதியாக ஒன்பது மணிவரை தூங்கினேன். சமீபத்தில் திரைப்படங்களை அதிகம் பார்க்கத் துவங்கினதில் இருந்து புத்தக வாசிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போனது. எனவே இன்று தொலைக்காட்சியை முற்றிலும் புறக்கணிப்பது என்று முடிவு செய்து நீண்ட நாட்கள் வாசிக்காமலிருந்த புத்தகங்களில் ஒன்றை random ஆக உருவினேன்.

ஜெயகாந்தனின் ' ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" புதினத்தை வாசிக்கத் துவங்கினேன். நாவல் எழுதப்பட்ட ஆண்டு 'எழுபதுகள்' என்பதனால் புத்தகத்தின் மீது மட்டுமல்லாமல் உரைநடையின் மீதும் பழைய வாசனையை உணர முடிந்தது. ஆனால் விட்டுவிட்டு வாசித்தும் கூட மூன்றரை மணி நேரத்திற்குள்ளாக நாவல் முழுவதையும் வாசிக்க முடிந்ததற்கு ஜெ.காவின் சுவாரசியமான கதை அமைப்பு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

'ஹென்றி' என்கிற ஒரு அன்னியன் 'கிருஷ்ணராஜபுரம்' என்கிற ஊருக்குள் நுழைவதில் கதை ஆரம்பிக்கிறது. தேவராஜன் என்கிற உள்ளூர் ஆசிரியர் இவனுடன் நட்பாகிறார். ஊர்க்காரர்களைப் போலவே வாசிக்கிற நமக்கும் ஹென்றியின் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை ஆசிரியர் ஏற்படுத்தி விடுகிறார். ஹென்றியின் பாத்திரம் மிகச் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. அவனுடைய பெற்றோர் யார் என்பது யாருக்குமே தெரியாது. இந்து மத அப்பனையும் கிறிஸ்துவ மத அம்மையாலும் சுவீகாரம் எடுக்கப்பட்டவன். இந்த உலகத்தின் நிகழ்வுகள் அனைத்தையுமே குழந்தையின் இருதயத்தோடுதான் நோக்குகிறான். கிழங்கு விற்பவளையும் வேலைக்காரச்சிறுவனையும் ஊர்மணியக்காரரையும் ஒரே நோக்கில்தான் பார்க்கிறான். பைத்தியமாக நுழையும் ஒரு பெண் திகில் படத்தில் வருவதைப் போல மறைந்துவிடுவதோடு முடியும் இந்த நாவல் அந்தக் காலத்தில் மிகவும் சிலாகிக்கிப்பட்டிருக்கிறது. தம்முடைய நாவல்களிலேயே சிறந்தது என்று ஜெ.காவே இதைக்கொண்டாடுகிறார்.

இவ்வளவு சிறந்த படைப்புகளைத் தந்த ஜெ.கா. எழுதுவதை நிறுத்திக் கொண்ட போது அவரது வாசகர்கள் அல்லாதவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். என்னைக் கேட்டால் அவர் செய்தது மிகச் சிறந்த காரியமென்பேன். Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும். தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.

சமீபத்தில் வார்த்தை இதழ்களில் அவரது பதில்களை படிக்கும் போது அவர் எழுதாமலிருக்க முடிவு செய்தது எவ்வளவு நல்ல காரியம் என்பது புலனாகிறது.

(இது ஒரு மீள்பதிவு. http://sureshkannan.posterous.com/-76-ல் பிரசுரமானது)



suresh kannan