முந்தைய பதிவின் தாக்கத்தினாலோ என்னவோ இன்றைக்கு அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு காலை 06.00 மணிக்கு எழுப்புவதற்காக மொபைலில் இருந்த அலாரத்தை ஆஃப் செய்து விட்டு நிம்மதியாக ஒன்பது மணிவரை தூங்கினேன். சமீபத்தில் திரைப்படங்களை அதிகம் பார்க்கத் துவங்கினதில் இருந்து புத்தக வாசிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போனது. எனவே இன்று தொலைக்காட்சியை முற்றிலும் புறக்கணிப்பது என்று முடிவு செய்து நீண்ட நாட்கள் வாசிக்காமலிருந்த புத்தகங்களில் ஒன்றை random ஆக உருவினேன்.
ஜெயகாந்தனின் ' ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" புதினத்தை வாசிக்கத் துவங்கினேன். நாவல் எழுதப்பட்ட ஆண்டு 'எழுபதுகள்' என்பதனால் புத்தகத்தின் மீது மட்டுமல்லாமல் உரைநடையின் மீதும் பழைய வாசனையை உணர முடிந்தது. ஆனால் விட்டுவிட்டு வாசித்தும் கூட மூன்றரை மணி நேரத்திற்குள்ளாக நாவல் முழுவதையும் வாசிக்க முடிந்ததற்கு ஜெ.காவின் சுவாரசியமான கதை அமைப்பு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
'ஹென்றி' என்கிற ஒரு அன்னியன் 'கிருஷ்ணராஜபுரம்' என்கிற ஊருக்குள் நுழைவதில் கதை ஆரம்பிக்கிறது. தேவராஜன் என்கிற உள்ளூர் ஆசிரியர் இவனுடன் நட்பாகிறார். ஊர்க்காரர்களைப் போலவே வாசிக்கிற நமக்கும் ஹென்றியின் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை ஆசிரியர் ஏற்படுத்தி விடுகிறார். ஹென்றியின் பாத்திரம் மிகச் சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது. அவனுடைய பெற்றோர் யார் என்பது யாருக்குமே தெரியாது. இந்து மத அப்பனையும் கிறிஸ்துவ மத அம்மையாலும் சுவீகாரம் எடுக்கப்பட்டவன். இந்த உலகத்தின் நிகழ்வுகள் அனைத்தையுமே குழந்தையின் இருதயத்தோடுதான் நோக்குகிறான். கிழங்கு விற்பவளையும் வேலைக்காரச்சிறுவனையும் ஊர்மணியக்காரரையும் ஒரே நோக்கில்தான் பார்க்கிறான். பைத்தியமாக நுழையும் ஒரு பெண் திகில் படத்தில் வருவதைப் போல மறைந்துவிடுவதோடு முடியும் இந்த நாவல் அந்தக் காலத்தில் மிகவும் சிலாகிக்கிப்பட்டிருக்கிறது. தம்முடைய நாவல்களிலேயே சிறந்தது என்று ஜெ.காவே இதைக்கொண்டாடுகிறார்.
இவ்வளவு சிறந்த படைப்புகளைத் தந்த ஜெ.கா. எழுதுவதை நிறுத்திக் கொண்ட போது அவரது வாசகர்கள் அல்லாதவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். என்னைக் கேட்டால் அவர் செய்தது மிகச் சிறந்த காரியமென்பேன். Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும். தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.
சமீபத்தில் வார்த்தை இதழ்களில் அவரது பதில்களை படிக்கும் போது அவர் எழுதாமலிருக்க முடிவு செய்தது எவ்வளவு நல்ல காரியம் என்பது புலனாகிறது.
(இது ஒரு மீள்பதிவு. http://sureshkannan.posterous.com/-76-ல் பிரசுரமானது)
suresh kannan
15 comments:
எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் படைப்பாளியின் சுதந்திரம்.எழுதாத எழுத்தின் இழப்புக்கு உரிமையாளன் வாசகன் மட்டுமே.
//தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.//
அருமை!
ஜெயகாந்தன், இருக்கும் புகழுடனே இருப்பதே மேல்.
//எழுதுவதும் எழுதாமல் இருப்பதும் படைப்பாளியின் சுதந்திரம்.எழுதாத எழுத்தின் இழப்புக்கு உரிமையாளன் வாசகன் மட்டுமே.//
உண்மைதான். ஆனால் சிலர் எழுதியும் அதை படிக்க வைத்தும் வாசகனை தொல்லை செய்வதுதான் சிரமமாய் இருக்கும் :(
//சமீபத்தில் வார்த்தை இதழ்களில் அவரது பதில்களை படிக்கும் போது அவர் எழுதாமலிருக்க முடிவு செய்தது எவ்வளவு நல்ல காரியம் என்பது புலனாகிறது.//
அறிவுஜீவி நோக்கில் பலர் முன்வைக்கும் இக்கருத்தைப் பற்றி இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்தேன். ஆயினும் இக்கருத்தின் பின்னிருக்கிற அரைகுறைதனத்தை எடுத்துக் காட்ட எழுத வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தன் பதில்கள் எனக்கும்கூட திருப்தியில்லைதான். ஆனாலும் என் பாமரப் பார்வை அதற்கு ஜெயகாந்தனை மட்டுமே குறை சொல்லாது. கேள்விகளைப் பொருத்தே பதில்களின் தரங்களும் அமைகின்றன. ஆக, 50% பொறுப்பு கேள்வி கேட்பவருக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் நுணுகி அலசி ஆராய்ந்து துவைத்து உலர்த்தும் பலர், இந்த அடிப்படையை மறந்து பதில் சொல்கிறவரை மட்டும் பொறுப்பாளியாக்குவது கொஞ்சம் அதிகப்படியான அறிவுஜீவித்தனம்தான். :-)
அன்புடன், பி.கே. சிவகுமார்
பெண்களுக்குத்தான் ‘மெனோபாஸ்’.ஆண்களுக்கு இயற்கையிலேயே அதெல்லாம் இல்லை.அதுவும் ‘intellectual' மெனோபாஸ் எல்லாம் நமது கற்பனையே,நண்பரே.
//கொஞ்சம் அதிகப்படியான அறிவுஜீவித்தனம்தான். :-)//
சிவகுமார்,
உங்களின் சுருக்கமான பதில் என்னை திகைப்படையச் செய்துவிட்டது. வயதாகிவிட்டதா அல்லது உடம்பு கிடம்பு சரியில்லையா?
பதில்கள் தரமாக அமையாததற்கு வாசகர்களும் பொறுப்பு என்பது சரிதான். (இதன் மூலம் 'வார்த்தை' வாசகர்களின் தரத்தையும் நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்) ஆனால் கேள்விகள் மொக்கையாக இருந்தாலும் அதை தரமானதாகவும் சுவாரசியமானதாகவும் ஆக்குவதற்கு எழுத்தாளின் பங்கும் பெருமளவில் இருக்கிறது. ஜெயமோகனைப் பாருங்கள். மனிதர், சார்,வணக்கம்..." என்று கேள்வியை ஆரம்பிப்பதற்குள் ஏ4 அளவில் பத்து பக்கங்களுக்கு சுவாரசியமான ஒரு கட்டுரையை பதிலாக தருகிறார். :-)ஆனால் சிறந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதற்கு இடது கையால் ஜெகே பதிலெழுதுகிற பல கேள்விகளை இதழிலிருந்தே எடுத்து தர முடியும்.
//பெண்களுக்குத்தான் ‘மெனோபாஸ்’.//
ஷண்முகப் பிரியன்,
நீங்கள் உடல்ரீதியான சிக்கலை சொல்கிறீர்கள். நான் சொல்வது மனரீதியான பிரச்சினை. ஒரு காலத்தில் ஓகோ என்று கொண்டாடப்பட்ட பல எழுத்தாளர்களின் சமீபத்திய படைப்புகளைப் படித்துப் பாருங்கள். சுஜாதாவே ஒரு சிறந்த உதாரணம், சில கட்டுரைகளைத் தவிர்த்து.
ஏ4 அளவில் பத்து பக்கங்களுக்கு சுவாரசியமான ஒரு கட்டுரையை பதிலாக தருகிறார். :-).
ஆம், தென்னை மரத்தில் மாடு கட்டப்பட்டுள்ளது,மாட்டிற்கு நான்கு கால்,எழுத்தச்சன் மாட்டினை குறித்து எழுதியது, மாட்டினை குறித்து சந்தோக்கிய உபநிஷத்தில் என்ன சொல்லப்படுகிறது,ஆஸ்த்ரேலியாவில்
மாடுகள் கொழுத்திருக்க காரணம் என்ன, மாட்டிறைச்சி சாப்பிட்டால்
மலச்சிக்கல் கூடுமா என்று மாடு பற்றி பத்து பக்கங்களுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார். அதற்கு ஜெயகாந்தனே பரவாயில்லை.
அதிகம் எழுதுவதால் ஏற்படும் ஆபத்துக்களில் ஒன்று,பல தட்டையான கட்டுரைகள், புனைவுகள்
எழுதப்படுவது.சாருவும்,ஜெமோவும்,எஸ்.ராவும் எழுதித்தள்ளுகிறார்கள். இதில் எத்தனை தேறும். எதற்காக இப்படி எழுத வேண்டும். என்ன தேவை.
//
இவ்வளவு சிறந்த படைப்புகளைத் தந்த ஜெ.கா. எழுதுவதை நிறுத்திக் கொண்ட போது அவரது வாசகர்கள் அல்லாதவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். என்னைக் கேட்டால் அவர் செய்தது மிகச் சிறந்த காரியமென்பேன். Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும். தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.
//
சரியான கருத்து.
//Intellectual Menopause ஏற்படுவதற்கு முன்னாலேயே ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட வேண்டும்//
அருமையாக பதிவு எழுதிக்கொண்டு இருந்த பல பழைய பதிவர்கள் இன்று எழுதாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமா?
//தொலைக்காட்சிகளில் பரதம் ஆடும் மாமிகள் போல் இம்சைப்படுத்தக்கூடாது.//
ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆன மாதிரி இருக்கு!! தொலைக்காட்சி பார்க்கிறத நிறுத்த இதுவும் ஒரு காரணமா :-)?
Intellectual Menopause - எங்கே சுரேஷ் பிடிச்சிங்க இந்த வார்த்தையை? பிரயோகம் சூப்பர் :-)
//இதன் மூலம் 'வார்த்தை' வாசகர்களின் தரத்தையும் நீங்கள் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்//
இது நீங்களாக செய்யும் முடிவு. இப்படி வைத்துக் கொள்ளலாம். எவ்வளவோ படிக்கிற அறிவுஜீவியான தாங்கள் மொக்கை பதிவுகள் எழுதுவதில்லையா? அந்த மாதிரி அறிவுஜீவி ”வார்த்தை” வாசகர்கள் மொக்கை கேள்விகள் கேட்கிறார்கள் எனலாமே :-)
நிஜமாகச் சொல்வதென்றால், அறிவுஜீவி வாசகர்களைவிடப் பொதுப்புத்தியைச் சரியாகப் பிரயோகிக்கிற வாசகர்கள் ”வார்த்தை”க்கு அதிகம் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்.
அன்புடன்,
- பி.கே. சிவகுமார்
//எவ்வளவோ படிக்கிற அறிவுஜீவியான தாங்கள் மொக்கை பதிவுகள் எழுதுவதில்லையா? //
பழைய சிவகுமார் தொலைந்து போய்விட்டார் என்றே தோன்றுகிறது,அல்லது ஜெ.கா. போலவே பக்குவமடைந்து விட்டீர்களோ என்னவோ. :-))
இது இருக்கட்டும். பா.ராகவன் உங்களை அழைத்திருக்கிறாரே, பார்த்தீர்களா?
// எழுதுவதும் எழுதாமலிருப்பதும் அவனுக்கு உள்ள உரிமை. இதைப்பற்றி விமர்சிக்க பெரிய "அறிவு ஜீவித்தனம்" ஒன்றும் தேவை இல்லை. இந்தவாரத்தை பிரயோகமே ஒரு மோசமான ஏமாற்று வேலைதானே! //
// Intellectual menopause - இப்படியெல்லாம் வார்த்தை பிரயோகம் வந்துவிட்டால் நீங்கள் எல்லாம் "அறிவு ஜீவிகள் " என்று எண்ணமா? தங்களை "அறிவு ஜீவிகள் " என்று நினைத்துக்கொண்டு பேசுபவர்களும் எழுதுபவர்களும் முதல் தரமான பகல் க்காரர்கள்வேஷ //
" Intellectual menopause " இப்படியெல்லாம் எழுதிவிட்டால் அறிவுஜீவித்தனமா என்ன?
" அறிவுஜீவித்தனம்" இந்த வார்த்தை பிரயோகமே ஒரு புரட்டு வேலையப்பா.
ஒருவன் எழுதுவதை நிறுத்திக்கொள்வது ஒரு இயல்பான விஷயம்.
இதுகுறித்து ஏதாவது Intellectual menopause போன்று வார்த்தை பிரயோகங்கள் வருவதற்கென்று நீர் எழுத்தும் நபர் என்று புறிகிறது
சரியான கிறுக்கன் நீ.
Post a Comment