Friday, June 05, 2009

நான்தான் 'தருமி' நாகேஷ்


'இருக்கறதுலேயே காமெடி பண்றதுதான் ரொம்பக் கஷ்டம்' என்று கமல்ஹாசன் முதற்கொண்டு பல நடிகர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் சொல்லி வருகிற விஷயத்தை நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போதே உணர்ந்து கொண்டு விட்டேன். எப்படி? சொல்கிறேன்.

ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவாகிவிட்ட பிறகு எங்கள் வகுப்பு டீச்சர் 'திருவிளையாடல்' திரைப்படத்தின் பகுதியை தேர்ந்தெடுத்தார்கள். தற்போது முப்பது அல்லது முப்பத்தைந்து வயதைக் கடந்திருக்கிறவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் எந்தவொரு கோயில்விழா என்றாலும் பெரும்பான்மையாக ஒளிபரப்படுவது 'திருவிளையாடல்' ஒலிச்சித்திரம். காட்சியின் ஒருபகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் கோடுகிழித்த அடையாளமாக டுடுடுய்ய்ய்ங்ங்ங் என்று வினோதமான சப்தத்துடன் ஒளிபரப்பாகும் அந்த வசனங்கள் நிறைய பேருக்கு நமீதா பாட்டுக்கு இடையில் எழுப்பி கேட்டாலும் ஒப்பிக்கிற அளவிற்கு மனப்பாடமாகவே ஆகிவிட்டிருக்கும். இதே போன்றதொரு இன்னொரு திரைப்படம் பாலாஜியின் 'விதி'. திருவிளையாடல் வசனங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கக்கூடியது சிவாஜி மற்றும் நாகேஷ் சம்பந்தப்பட்ட நகைச்சுவை. எவர்கிரீன் காமெடி அது. நாகேஷின் டைமிங் சென்ஸ்சிற்கு உச்சமாக இந்தக் காட்சிகளைச் சொல்லலாம்.

(சம்பந்தப்பட்ட திரைப்படக் காட்சிகளின் உருவாக்கத்தின் போது சிவாஜியின் நடிப்பை விட நாகேஷின் நடிப்பு பிரமாதமாய் அமைந்து போனதில் எரிச்சலைடந்த சிவாஜயின் அல்லக்கைகள் சிலர், சிவாஜியிடம் இதைப் பற்றி போட்டுக்கொடுத்து நாகேஷின் பகுதிகளை குறைக்கச் சொல்லி யோசனை சொல்ல, சிவாஜி அதை மறுத்து 'இப்படியே இருக்கட்டும். அவன் நல்லா பண்ணியிருக்கான்' என்றாராம். நாகேஷே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது இது.)

எங்களுடைய வகுப்பு சார்பாக ஆண்டுவிழாவில் இந்த நகைச்சுவைக் கோர்வையை நடித்துக் காட்டலாம் என்று டீச்சர் முடிவு செய்ததில் எனக்கு நாகேஷ் வேடம் கிடைத்தது. ஆச்சரியமில்லை. நன்றாக சீவின பென்சிலில் மெலிதாக போட்ட கோடு போல் இருந்தவனுக்கு 'இதுதான் பொருத்தமாக இருக்கும்' என்று டீச்சர் நினைத்திருக்கலாம். சிரிப்பும் கும்மாளமும் வெட்கமுமாக பிராக்டீஸ் நடந்தது. ஒரு காகிதத்தில் அந்த வசனங்களை எழுதி டீச்சர் கொடுத்துவிட்டாரே தவிர எப்படி அதை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. ஏற்கெனவே பிரபலமான வசனங்கள்தானே, பசங்களுக்கு தெரியாதா என்று அவர் நினைத்திருக்கலாம்.

அதுவரை உருப்போட்டிருந்ததையெல்லாம் வாந்தியெடுக்க வேண்டிய அந்த நாளும் வந்தது. 'நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி' என்று அறிவிப்பு வந்தவுடன் "ஏம்ப்பா பரிசுத் தொகை எவ்வளவுன்னு சொன்னே?" என்று நான் பதைபதைப்பாகவும் அவசரமாகவும் கேட்க வேண்டும். நான் ஏதோ "காப்பி போட்டாச்சா?" என்ற அன்றாட காரிய தொனியில் சாதாரணமாக கேட்க சபையில் யாருமே சிரிக்கவில்லை. என்னுடைய வகுப்புத் தோழர்கள் பிரத்யேகமாக சிரித்தது, என்னுடைய ஓணான் உடலைப்பார்த்தும் நான் கட்டியிருந்த வேட்டி எப்போது விழும் என்ற ஆவலிலும்தான் இருக்க வேண்டும். "முதல்ல இந்த பால்காரன் கணக்க தீர்க்கணும்" என்று நான் நாகேஷ் மாதிரியே சொன்ன போது மாத்திரம் கூட்டம் மெலிதாக சிரித்தது. சிறப்பாக (?!) நடித்ததற்காக சோப்பு டப்பா பரிசாக கிடைத்து. சிவனாக நடித்தவனுக்கு கொஞ்சம் பெரிய டப்பா.

நகைச்சுவையை அதனின் பிரத்யேக அம்சங்களோடு வழங்காவிட்டால் அது எடுபடாது என்று இதனால் புரிந்தது.

()

என்னுடைய பால்ய நண்பனொருவன் அவனுடைய கல்லூரி சார்பாக ஒரு நகைச்சுவை நாடகம் எழுதித்தரவேண்டுமென்று என்னிடம் கேட்டான். நான் அப்போது உலகத்தையே புரட்டிப் போடும் உத்தேசத்தில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதை பத்தாய் நூறாய் அவனிடம் மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருந்ததில் என்னை ஒரு எழுத்தாளன் என்றே அவன் நம்பி விட்டான். சென்னை வானொலியின் இரண்டாவது அலைவரிசையில் 'இளையபாரதம்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதாகவும் அதில் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுவதாகவும் அந்த வகையில் நண்பன் படிக்கும் கல்லூரி தேர்வாகியிருப்பதாகவும் அவன் மூச்சு வாங்கச் சொல்ல, நான் என்ன எழுதுவது என்று மனதுக்குள் மூச்சு வாங்க ஆரம்பித்தேன். நகைச்சுவை நாடகம் எழுதுவது என்று முடிவாயிற்று. ஒரு போலி டாக்டர் கிளினிக் வைத்து ஏமாற்றுவதும் கடைசியில் பிடிபடுவதும் என்பதுதான் ஒன்லைனர். பத்திரிகையில் வந்த, சினிமாவில் பார்த்த, எங்கேயோ கேட்ட, கொஞ்சம் சொந்தமான... என்று எல்லா நகைச்சுவைத்துணுக்குகளையும் கலந்து கட்டி மிக்சியில் போட்டு அடித்து நாடகமாக அவனிடம் சமர்ப்பித்தேன்.

போலீஸ் வாக்கிடாக்கி மாதிரி கமறிக் கொண்டிருந்த அந்த ரேடியோவில் சென்னை இரண்டாவது அலைவரிசையை தேடிக் கண்டுபிடிக்கவே அரைமணி நேரமாயிற்று. 'கரகர' சத்தத்தின் இடையில் குத்துமதிப்பாக நாடகத்தை கேட்டு மகிழ்ந்தோம். (டாக்டர்: "இந்த ஞாபக மறதி நோய் எத்தனை வருஷமா இருக்கு?" நோயாளி: "ம்.... ஞாபகம் இல்லீங்களே..). ஆனால் நாடகத்தின் இறுதியில் அதை எழுதியவரின் பெயராக நண்பனின் பெயர் ஒலித்ததில் மிகவும் வெறுத்துப் போனேன். மாணவர்கள் அல்லாதவர்கள் எழுதினால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அப்படிச் செய்ததாக நண்பன் மன்னிப்பு கேட்டதில் அடுத்த ஆண்டு அவர்கள் கல்லூரியில் நடந்த கலைவிழாவிற்காக ஒரு நாடகம் எழுதித்தந்தேன். நியூமராலஜியில் அதீத (மூட) நம்பிக்கை கொண்ட ஒருவர் அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார் என்பதான நாடகமது. நண்பன் விழாவிற்கு என்னையும் அழைத்திருந்தான். "பூச்சி மாதிரி இருக்கற... நீயா எழுதின. நல்லா இருந்ததுப்பா" என்றார்கள் அவனுடைய நண்பர்கள். இதற்காகவே பிரத்யேக ஒப்பனையெல்லாம் பூசி நடுத்தர வர்க்கத்து நடுத்தர வயது மனிதர்களாக மாறிப் போயிருந்தார்கள்.

.. அடுத்த நிகழ்ச்சி... வணிகவியல் மூன்றாமாண்டு மாணவர்கள் சார்பாக நாடகம்... என்று அறிவிக்கப்பட்டு எழுதியவரின் பெயராக என்னுடைய பெயர் ஒலிக்கப்பட்டது. அப்போதைய உணர்வை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நான் தனியாக அமர்ந்து எதையோ யோசித்து எழுதி.. அதை சிலர் மனப்பாடம் செய்துபடித்து... மேடையேறப்போவதை சிலநூறு பேர் கவனிக்கப் போகிறார்கள் என்கிற உணர்வே எனக்கு மிகுந்த பரவசத்தைத் தந்தது. ஆனால் அந்தப் பரவசத்தை சிறிது நேரத்திலேயே காணாமற் ஆக்கினா¡ர்கள் நாடகத்தில் பங்கேற்றவர்கள். மூடநம்பிக்கைகளை கிண்டலடிக்கும் அந்த நகைச்சுவை நாடகத்தை கொஞ்சம் கூட டைமிங் இல்லாமல் ஆளாளுக்கு ஒரு திசையில் கொஞ்சம் சொந்த சரக்கையும் இணைத்து மாடுலேஷனே இல்லாமல் பேசியதில்... அது எடுபடவே இல்லை. அடுத்து வந்த ஒரு மாணவர் குழு எந்த வித ஒப்பனை பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக மேடையேறி... சொத்தை ஜோக்குகளை ஆனால் மிக டைமிங்குடன் பேசியதில் சபை ஆர்ப்பரித்தது.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...

பதிவின் முதல் வரியைப் படிக்கவும்.

suresh kannan

13 comments:

லக்கிலுக் said...

மொக்கைக்கென தனி மொழிநடை உண்டு. உங்கள் மொக்கைகளுக்கு இடையேவும் கும்மி, டவுசர் போன்ற வார்த்தைகளை ஆங்காங்கே உப்பு, மிளகாய் மாதிரி தூவவேண்டியவது அவசியம். உங்கள் மற்ற பதிவுகளுக்கும், நீங்கள் குறிப்பிட்டு எழுதும் மொக்கைகளுக்கும் வித்தியாசம் தெரியவில்லை :-)

Athisha said...

உங்களுக்கு சுட்டுப்போட்டாலும் மொக்கை வராது.. சுரேஷ் நீங்க எப்பவும் போல சீரியஸாவே எழுதுங்க அதுதான் மொக்கை மாதிரியாவது இருக்கும்..

Anonymous said...

//காட்சியின் ஒருபகுதிக்கும் அடுத்த பகுதிக்கும் கோடுகிழித்த அடையாளமாக டுடுடுய்ய்ய்ங்ங்ங் என்று வினோதமான சப்தத்துடன் ஒளிபரப்பாகும்//


nice. :-)

சென்ஷி said...

@ லக்கிலுக், அதிஷா...

தனிப்பட்ட விதத்தில் சுரேஷை பிறாண்டுவது தனிமனித கீறல் வகையில் சேரும். :-))

மொக்கை எழுதுறது எவ்வளவு கஷ்டமுன்னு அதை படிக்கறவங்களுக்குத்தான் தெரியும்!

மறத்தமிழன் said...

சுரேஷ் கண்னன்,
"இருக்கறதுலேயே காமெடி பண்றதுதான் ரொம்பக் கஷ்டம்' என்று கமல்ஹாசன் முதற்கொண்டு பல நடிகர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் சொல்லி வருகிற விஷயத்தை நான் ஐந்தாவது வகுப்பு படிக்கும் போதே உணர்ந்து கொண்டு விட்டேன். எப்படி? சொல்கிறேன்".

இப்டி எழுதினால் எப்டி மொக்கையாகும் ?

இதையே "காமெடி பண்ரதுதாம்பா இர்க்ரதிலே பேஜார் புட்ச வேலனு கமலேருந்து அல்லாரும் டீவிலே கூவின்னு கீரத நான் அஞ்ஞா க்ளாஸ் பட்டிக சொல்லவே புர்ஞ்சுகினம்பா" என ஆரம்பிச்சு அப்டியே லக்கி சொன்னது போல
மொக்கைகளுக்கேயான "டவுசர்","தாவு தீர" "அடிங்" போன்ற வார்த்தைகளை தூவுங்க...மொக்கையாகலாம்...

அன்புடன்,
மறத்தமிழன்.

சென்ஷி said...

காமெடி பண்ரதுதாம்பா இர்க்ரதிலே டவ்சர் கள்ட்டர்ற வேலனு கமலேருந்து அல்லாரும் டீவிலே தாவூ தீர்த்துக்கி்னு கீரத நான் அஞ்ஞா க்ளாஸ் பட்டிக சொல்லவே புர்ஞ்சுகினம்பா

சொன்னது லக்கியில்லை :-)

வினோத்குமார் said...

ennamo ponga....

ethao comedy appadinu solreenga

நந்தாகுமாரன் said...

// நன்றாக சீவின பென்சிலில் மெலிதாக போட்ட கோடு போல் இருந்தவனுக்கு

நான் அப்போது உலகத்தையே புரட்டிப் போடும் உத்தேசத்தில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதை பத்தாய் நூறாய் அவனிடம் மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருந்ததில் என்னை ஒரு எழுத்தாளன் என்றே அவன் நம்பி விட்டான்.

நான் தனியாக அமர்ந்து எதையோ யோசித்து எழுதி.. அதை சிலர் மனப்பாடம் செய்துபடித்து... மேடையேறப்போவதை சிலநூறு பேர் கவனிக்கப் போகிறார்கள் என்கிற உணர்வே எனக்கு மிகுந்த பரவசத்தைத் தந்தது. //

ஸ்வாரஸ்யமான எழுத்து ... ரசித்தேன்

Anonymous said...

நனறாக இருந்தது. ஆனால் இன்னும் நகைச்சுவை அதிகப்படுத்தியிருக்கலாம். திருவிளையாடல் எப்பொதுமே பாக்கலாம்.

Venkat said...

சுரேஷ்,

நீங்க என்ன சொன்னாலும் இது மொக்கை பதிவு அல்ல. இதுவும் சீரியஸ் பதிவு தான். இருந்தாலும் நன்றாக இருந்தது.

தொடருங்கள்.

வெங்கட்

ILA (a) இளா said...

தேன்கூட்டின் கருவிப்பட்டைய எடுங்க, பக்கம் தெரிய ரொம்ப நேரம் ஆவுது

ரவிஷா said...

//சிவாஜி அதை மறுத்து 'இப்படியே இருக்கட்டும். அவன் நல்லா பண்ணியிருக்கான்' என்றாராம். நாகேஷே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னது இது//
சொல்லப்போனால், இந்தப் படத்தை எடுத்து முடித்தவுடன் என்னடா ஒரே சீரியஸாக இருக்கே என்று பலர் சொல்லித்தான் ஏ.பி.என். காமெடி பீஸை சேர்த்தார் என்று என் மாமனார் சொல்லக்கேள்வி! அந்த சீன்களில் சிவாஜி எப்படித்தான் நாகேஷுடன் நடித்தாரோ? செட்டில் எம்.ஜி.ஆர். அல்லது சிவாஜி இருந்துவிட்டால் யாரும் சிகரெட் புகைக்க மாட்டார்களாம்! அதே போல, யாரும் சேரில் அவர்கள் எதிரில் சேரில் உட்கார மாட்டார்களாம்! ஆனால் நாகேஷ் மட்டும் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தம்மடிப்பாராம்! கேட்டால் “சிவாஜி அடிச்சா மட்டும்தான் புகை வருமா? நான் தம்மடிச்சால் புகை வராதா?” என்பாராம்! இதனாலேயே இருவரும் நாகேஷுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்தார்கள்!

ஹரன்பிரசன்னா said...

என்னது இது?