Wednesday, June 17, 2009

அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா


ஆஸ்திரேலிய தத்துவவியல் அறிஞரான Raimond Gaita தனது தந்தையைப் பற்றிய நினைவலைகளை மையப்படுத்தி எழுதிய சுயசரித நூலான Romulus My Father 1988-ல் வெளிவந்தது. Victorian Premier's Literary Award, The Nettie Palmer Prize for Non-fiction போன்ற விருதுகளை இந்த நூல் பெற்றுள்ளது. இதன் திரைவடிவம் அதே பெயரில் 2007-ல் Richard Roxburgh-ல் இயக்கப்பட்டு வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க சிறுவனான Raimond-ன் பார்வையில் விரிகிறது.

1960-ல் துவங்கும் இத்திரைப்படம் Romulus-ம் அவருடைய மகன் Raimond-ம் நேசத்தோடு பழகும் காட்சிகளோடு துவங்குகிறது. வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருந்த Rai-ன் தாய் Christine அந்த ஊருக்கு வரப்போவதான தகவல் கிடைக்கிறது. தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய தாயை வீட்டுக்கு அழைத்து வருகிறான் Rai. இனிமையாக பழகக்கூடிய அவளை மிகவும் நேசிக்கிறான் அவன். ஆனால் சொற்ப நாட்களிலேயே பெற்றோருக்குள் வழக்கமான மோதல் வெடிக்கிறது. மறுபடியும் தன்னுடைய இரண்டவாது கணவரோடு வாழ முடிவெடுக்கிறாள் Christine. அவள் மீது அளவற்ற நேசம் கொண்டிருக்கிற Romulus மனமேயின்றி இதற்கு சம்மதிக்கிறார். மிகுந்த பிரச்சினைகளுக்கிடையில் தன்னுடைய மகனை பாசத்துடன் வளர்க்கிறார்.

ஆடம்பரமாக வாழ நினைக்கும் Christine இரண்டாவது கணவருடான மோதலில் அங்கிருந்து மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறாள். இதற்கிடையில் அந்த கணவர் தற்கொலை செய்துவிடுகிறார். இவ்வளவு சிக்கலான சூழலிலும் தன்னுடைய தாயின் மீதான நேசம் Rai-க்கு எந்தவிதத்திலும் குறைவதில்லை. இன்னொரு குடும்பத்து குழந்தையான தன்னுடைய தங்கையை மிக பாசத்துடன் பார்த்துக் கொள்கிறான். ஆனால் அவள் வேறொருவருடன் உறவு கொள்வதை ஒரு முறை காண நேர்கிற போது அவளின் மீதான பிம்பம் மிக மோசமாக உடைந்து போவதால் தாயைப் புறக்கணிக்க ஆரம்பிக்கிறான். இந்த புறக்கணிப்பு காரணமாகவும் ஏற்கெனவே உள்ள உளவியல் ரீதியான சிக்கலாலும் தவிக்கும் Christine தூக்கமாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இதைத் தாங்கவியலாத Romulus மனநலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தன்னுடைய தந்தையின் நண்பரின் உதவியோடு முதிர்ச்சியானதொரு மனநிலைக்கு மெல்ல மாறுகிறான் Rai.

அவனுடைய தந்தை மருத்துவமனையிலிருந்து திரும்பிவருவதும் ஆரம்பக்காட்சியின் அதே நேசத்தோடுனான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவதுடன் இத்திரைப்படம் நிறைகிறது.

()

பெற்றொரின் இடையில் நிகழும் முரண்கள் எவ்வாறு அந்தக் குடும்பத்தின் குழந்தைகளை உளவியல் ரீதியாக துன்புறுத்துகிறது என்பதை இப்படம் உறுத்தாமல் விவரிக்கிறது. ஒரு திரைப்படத்தை கண்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாமல் எவரோ ஒருவரின் வலிமிகுந்த வாழ்க்கையை நாம் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தியதே இத்திரைப்படத்தின் மிகப் பெரிய பலமாகச் சொல்லலாம். மிகுந்த சிக்கலான இக்கதையை தெளிவான திரைக்கதையின் வடிவத்தில் தந்திருக்கிறார் இயக்குநர். மூல வடிவமான நாவலை திரைக்கதையாக உருமாற்ற ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் அதற்காக உழைத்திருக்கிறார். இயக்குநராக இது இவரின் முதல் திரைப்படம்.

மிக நிதானமான நடையில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையுடனான இத்திரைப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது படத்திற்கு இடையில் மிகுந்த அழகியலுடன் காட்டப்படும் வெளிப்புறக் காட்சிகள். 1960-ன் ஆஸ்திரேலிய நிலப்பரப்பை விரிந்த பரிமாணத்தில் காட்டுகிறது காமிரா. [சென்னையின் நிலப்பரப்பை அதன் அழகியலோடு நிதானமாக எந்த இயக்குநராவது காட்ட மாட்டாரா என்று ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறேன்].சொற்ப உரையாடலுடன் நகரும் காட்சியமைப்பு இடையில் நிகழும் காட்சிகளை பார்வையாளன் யூகித்துக் கொள்ளுமாறு உடனுக்குடன் அடுத்த காட்சிக்கு மாறிவிடுகிறது.

Romulus ஆக நடித்திருக்கும் Eric Bana மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். நம்மூர் ஷாருக்கான்,மாதவன் போன்று தொலைக்காட்சி நடிகராக இவரது நடிப்புப் பயணம் துவங்கியிருக்கிறது. இவருடைய பாத்திரம் மிக வலுவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. காமத்தின் போதாமையில் அல்லலுரும் தன் மனைவியோடு மிகுந்த முரண்கள் இருந்தாலும் அவளை மிகவும் நேசிக்கிறார். இன்னொரு திருமண வாய்ப்பை ஆரம்ப நிலையில் இதற்காக புறக்கணிக்கிறார். தன்னுடைய மனைவியின் பிரிவின் காரணமாக எழும் மன உளைச்சலில் மகனை ஒரு முறை நையப் புடைத்துவிட்டு பின்னர் அதற்காக வருந்துகிறார்.

சிறுவன் Rai-ஆக Kodi Smit-McPhee மிக அற்புதமாக நடித்திருக்கிறான். தன்னுடைய 'தாயின் கணவன்' மூடிய அறைக்குள் அவளை மூர்க்கத்தனமாக அடிக்கும் போது கதறியழும் போதும் பின்னர் வெளியே வரும் அவருடன் முர்க்கத்தனமாக சண்டையிட நிற்பதும் .. என ஒவ்வொரு காட்சியிலும் தரமான நடிப்பை வழங்கியிருக்கிறான். இதற்காக 2007-ன் சிறந்த குழந்தை நடிகருக்கான விருது அவனுக்கு கிடைத்திருக்கிறது.

ஆண்களுக்கேயுரிய பொதுவான ஈகோ குணம் ஒரு காட்சியில் மிகுந்த நயத்துடன் வெளிப்படுகிறது. அப்போதுதான் தன் குடும்பத்திற்கு மீண்டும் திரும்பியிருக்கும் Christine தன் மகனிடம் அவருடைய தந்தையுடன் ஏற்பட்டிருந்த காதல் நினைவுகளை பரிமாறிக் கொண்டிருக்கிறாள். அவர் எப்படியெல்லாம் தன்னை காதலித்திருந்தார் என்பதையும் தான் கிடைக்காத ஒரு சூழ்நிலையில் துப்பாக்கியால் தற்கொலை செய்ய முயன்று ஆனால் சரியாக சுடத்தெரியாமல் மூக்கை காயப்படுத்திக் கொண்டதையும் சிரித்துக் கொண்டே சொல்கிறாள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் Romulus 'அவனிடம் இப்போது இதையெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா?' என்று எரிச்சலுடன் கத்த மீண்டும் அவர்களுடான இன்னொரு சண்டை துவங்குகிறது.

()

இததிரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது எனக்கு யூமா வாசுகியின் 'ரத்தஉறவு' நாவலும் சாருநிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ·பேன்ஸி பனியனும்' நினைவுக்கு வந்தது. குறிப்பாக யூமா வாசுகியின் நாவலை என்னால் ஒரே மூச்சில் முழுமையாக படிக்க முடிந்ததில்லை. சிறிது படிப்பதற்குள்ளாகவே மனம் மிகுந்த உளைச்சலுக்குள்ளாகி புத்தகத்தை மூடி விடுவேன். அந்தளவிற்கு அந்த நாவலில் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும் ரத்தத் தெறிப்பும் வாதையின் கதறலும் உறைந்திருக்கின்றன.

suresh kannan

6 comments:

Beski said...

ஆஸ்திரேலியப் படங்களில் இதுவரை நாட்டம் இருந்ததில்லை... பார்க்கிறேன்.

இதுபோன்ற படங்கள் தாங்களுக்கு எங்கு கிடைக்கின்றன? எப்படி அறிந்துகொள்கிறீர்கள்?

பிச்சைப்பாத்திரம் said...

பிரதாப்,

சென்னையில் பர்மா பஜார், ஜெமினி காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் கிடைக்கிறது. (நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்த இடங்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.) அதைத் தவிர எல்லா வல்ல இயற்கைக்கு அடுத்தபடியாக இயங்கிக் கொண்டிருக்கும் இணையத்திலும் பல அரிய படங்கள் தரவிறக்கக் கிடைக்கிறது. (pirated version பார்க்க மனச்சாட்சி உறுத்துகிறது என்றால் இதை மறந்து விடவும்). :-)

சென்ஷி said...

//(pirated version பார்க்க மனச்சாட்சி உறுத்துகிறது என்றால் இதை மறந்து விடவும்)//

சில படத்திற்குத்தான் மனசாட்சி உறுத்தும். இந்த மாசம் கோட்டா முடிஞ்சுடுச்சு. அடுத்த மாசம் பார்த்துக்கறேன் :)

பிச்சைப்பாத்திரம் said...

நாகேஷ் சீடரே,

எங்க,ஆளக் காணுமேன்னு பாத்தேன். :-)

KARTHIK said...

// ஆஸ்திரேலியப் படங்களில் இதுவரை நாட்டம் இருந்ததில்லை... பார்க்கிறேன்.//

அப்படி ஒதுக்காதீங்க ஹோலி சுமோக்,பியானோ மாதிரி பல நல்ல படங்கள் அங்க வந்திருக்குங்க.
கவுத்-9841898145,இவர்கிட்ட கேலுங்க கிடைக்கும் விலை-40.

Beski said...

அட, வுட்டா கூட்டிட்டு போய் கட வாசல்ல இறக்கி வுட்டுருவாய்ங்க போல இருக்கு!