Friday, June 29, 2012

புத்துயிர்ப்பு

சமீபமாக ஏன் உங்கள் தளத்தில் ஏதும் எழுதுவதில்லை சில நண்பர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டும் நினைவூட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். குறிப்பாக 'வழக்கு எண்' திரைப்படம் குறித்தான என் பார்வையை பல நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அறிகிறேன். அந்த நல்ல உள்ளங்கள் பேருந்திலோ ரயிலிலோ பயணிக்கும் போது பக்கத்து இருக்கையில் நல்ல 'பிகர்' அமர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நிற்க. இந்தத் தளத்தில் சமீபமாக எழுதாதது குறித்த குற்றவுணர்ச்சியும் ஆதங்கமும் எனக்கும் உள்ளது. எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்களும் ஆர்வமும் இருந்தாலும் அதை யதார்த்தத்தில் செயல்படுத்தாத முடியாத மனத்தடை குறித்து எனக்கே விளங்கவில்லை. இனியாவது இதைத் தாண்டி வரக்கூடிய மனபலத்தையும் நல்லெண்ணத்தையும் சேகரிக்க முயல்கிறேன். தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு நன்றி.

இந்தத் தளத்தின் தீவிர வாசகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக (அடங்குடா) சமீபத்தில் முகநூலிலும் (என்ன இழவு மொழிபெயர்ப்பு இது) கூகுள் ப்ளஸ்ஸிலும் எழுதிய சில குறிப்புகளை இங்கு பிரசுரிக்க விரும்புகிறேன். அவை உங்களின் மேலான பார்வைக்கு:

                                                                *       *     *    *

"இதற்காகத்தானா பாபு?"
என்கிறாள் ஜமுனா.
"ஆம் மகளே"
என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்.
வருத்தமாயும்
சங்கடமாயும்
உணர்கிறேன்.

                                                                 *       *     *    * 

ஒரு படைப்பில் எழுத்தாளனும் வாசகனும் ஏதேனும் சில புள்ளிகளில் மிக நெருக்கமாக சந்தித்துக் கொள்வதுண்டு. மிக அபூர்வமாக அந்தத் தருணங்களை கடக்கும் வாசகனுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரை மிகவும் பிடித்துப் போய் தனது ஆதர்சங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்கிறான்.

அப்படியான ஓர் அனுபவத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் 'பின்நவீனத்துவவாதியின் மனைவி' (உயிர்மை, மே 2012) என்ற சிறுகதையின் மூலம் அடைந்தேன். சுரேஷ்குமார இந்திரஜித்தின் பல சிறுகதைகளை ஏற்கெனவே வாசித்திருந்தாலும் இந்தச் சிறுகதையை, தேர்ந்த பாட்டுக்காரனின் ஆலாபனையை 'வாஹ் வாஹ்' என்று சிலாகிக்கும் ரசிகன் போல, வரிக்கு வரி உற்சாகமாக பின்தொடர்ந்ததின் காரணம் எனக்கே புரியவில்லை. ஒரு ஏகாந்தமான மனநிலையில் அந்த சிறுகதையை வாசித்ததும் உபகாரணமாக இருக்கலாம் என யூகிக்கிறேன்.

சுரேஷ்குமார் இந்திரஜித் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் நிறைய எழுதுகிறார். சில எழுத்தாளர்கள் இவ்வாறான மீள்வரவின் போது முன்பு உச்சத்தில் இருந்த மீதமான வாசனையோடு வாசகனை சலித்துக் கொள்ள வைப்பார்கள். ஆனால் அவ்வாறில்லாமல் நன்றாகவே எழுதுகிறார் சுரேஷ்குமார்.

குறிப்பிட்ட இந்தச் சிறுகதையை (பின்நவீனத்துவவாதியின் மனைவி) நண்பர்களுக்கு அழுத்தமாக பரிந்துரைக்கிறேன். நீங்களும் அந்த அலைவரிசையை  ஒரு வேளை அடையக்கூடும்.

                                                                 *       *     *    * 

Jackie Chan retires as action hero after 100th film

- செய்தி

அய்யா சாக்கி சான், ஒங்களுக்கு விவரம் போதலீங்கய்யா. ஆக்சன் ஹீரோன்னா நீங்களேதான் உருண்டு டைவ் அடிச்சு சண்டை போடணும்னு நெனச்சீட்டு இருக்கீங்க. உடம்பெல்லாம் ரத்த காயமா நெறய இடத்துல தையல் போட்டுட்டு திரியறீங்க. எங்க ஊரு சூப்பர் நடிகருங்க கிட்ட இருந்து கத்துக்கங்க.. எழுபது வயசாயி சுகருக்காக இன்சுலின் ஊசி போட்டுக்கற ரேஞ்சுல இருந்தாலும் கழுத்துல இருந்து காலு வரைக்கும் மொச்சு மொச்சு முத்தா கொடுக்கற டூயட் பாட்டுல மாத்திரம் தானே மோந்து பார்த்துட்டு, உஷ் உஷ்னு பேக்ரவுண்டு மீயூஜிக் வர்ற கைய கால அசைக்கற காட்சிக்கு கூட டூப் போட்டுட்டு "நாங்க வேணாம்னு சொல்லியும் நெறைய சீன்ல.............. சாரே ரிஸ்க் எடுத்து பைட் செஞ்சிருக்காரு" ன்னு இண்டர்வியூங்கல டேரடக்கருங்க அளந்து விட வெக்கற சாமர்த்தியம் உங்களுக்கு ஏங்க வரலை? இந்த பயபுள்ளைங்க நம்பி கட்அவுட்டுக்கு பால்,பீர் ஊத்தருதுல இருந்து ஆட்சிப் பொறுப்பையே ஒப்படைக்கற அளவுக்கு ஒணர்ச்சி வசப்படற ஆடுங்க எல்லாம் ஒங்க ஊர்ல கெடையாதா, இல்ல அந்த சாமர்த்தியம் ஒங்களுக்கு இல்லையா...

அதான் சொன்னேனே... ஒங்களுக்கு வெவரம் பத்தலை. இன்னும் கொற காலத்துக்கு எப்படி பொழைக்கப் போறீங்களோ... என்னமோ போங்க...

                                                                 *       *     *    * 


சாவகாசமாக கிடைத்ததொரு தருணத்தில் (அதுக்காக மத்த நேரத்துல பிசி -ன்னு தப்பா நெனக்கப்படாது) கைபேசியில் தேவை / உபயோகமில்லாத தொடர்பு எண்களை அழித்து விடலாம் என்று ஏனோ மூளையில் தோன்றி அதை செயலாக்க முனைந்ததில் பின்வரும் அபத்த நகைச்சுவைகள் கிடைத்தன.

1) 'அந்நியன்' திரைப்படத்தில் விவேக் 'சிக்கன் பகோடாவை' வேறு வேறு பெயர்களாக ஜம்பிள் செய்து பார்ப்பது போல் 'கார்த்திக்' என்ற பெயரில் மாத்திரமே வேறு வேறு ஸ்பெல்லிங்கில் எண் கூட்டணியில் பத்து பதினைந்து இருக்கின்றன. மூத்திரச் சந்தில் பார்த்தாலும் பாதியில் நிறுத்தி விட்டு "உங்க நம்பர் கொடுங்க" என்று அப்போதைய அவசரத்தில் எந்த பெயரையோ உள்ளிட்டு பதிவு செய்ததில் அந்த 'கார்த்திக்' வரிசையில் ஒரிருவரைத் தவிர மற்ற எவருமே யாரென்று தெரியவில்லை.

இதில் பிரச்சினை என்னவெனில் 'ஆள் ஞாபகமில்லை' என்று அழித்து விடவும் முடியாது. முக்கியமான ஆசாமியாக இருக்கலாம். அல்லது 'நீங்கள் யார்?" என்று தத்துவார்த்தமாக அவரிடமே கேள்வி கேட்டு விடவும் முடியாது. அதை விட அபத்தமும் சங்கடமும் வேறு இருக்காது. தினமும் அசட்டு சிரிப்புடன் 'குட்மார்னிங்' சொல்லி ஓசிப் பேப்பர் கேட்கப் போகும் பக்கத்து வீட்டு வழுக்கைத் தலை மாமாவாகவும் இருக்கலாம். பிறகு பேப்பர் கிடைப்பது நின்று விடும்.

2) சில அலுவலக விஷயம் தொடர்பான நபர்கள் யாரென்று அடையாளம் தெரிந்தாலும் அவர்களிடம் (வேண்டா வெறுப்பாக) பேசுவது பொதுத் தேர்தல் மாதிரி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் இருக்கும். அவர்களையும் தேவையில்லை என்று நீக்கி விடவும் மூளை மறுக்கிறது. என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்கிற முன்ஜாக்கிரதை உணர்ச்சி.

3) ஒரே நபருடைய நாலைந்து எண்கள். சம்பந்தப்பட்டவரே மூன்று நான்கு எண்கள் மாற்றி தன்னுடைய முதல் எண்ணை மறந்து விட்ட நிலையில் என்னுடைய கைபேசியில் அது பத்திரமாக பதிவாகி, அது உபயோகத்தில் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்திலேயே நீக்க முடியாமல் தவிப்பது.

4) சிலருடைய எண்கள் அவர்களின் தொழில் சார்ந்து பதிவு செய்து விட்டு (Electrician, Carpenter) பின்னர் 'யாரு, எலெகட்ரியசனா, என்று பெயரிட்டு அழைக்காமல் பொதுவாக அழைக்கும் சங்கடத்தை எப்படி தவிர்க்க? இதிலும் நாலைந்து எலெகட்ரியசன்கள், கார்ப்பெண்ட்கள். (உண்மையில் இவர்களின் எண்கள்தான் இருப்பதிலேயே அதி முக்கியம்).

5) பிறகு....... இம்சை சார்ந்த அழைப்புகளை பிரத்யேக அடையாளங்களுடன் பதிவு செய்து விட்டு பிறகு அதை நீக்கவும் முடியாமல் தவிப்பது. அதே இம்சைகள் சிறிது இடைவெளியில் பேசினால் அடையாளம் தெரியாமல் பேசி நாக்கைக் கடித்துக் கொள்ள வேண்டும்.

6) சிலருக்கு (அவர்கள் அறியாமல்) செல்லமாக அல்லது அவமரியாதையாக பெயர் பதிவு செய்து விட்டு மற்றவர்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ நம்முடைய கைபேசியை பார்வையிட நேரிட்டால் வயிற்றுக் கோளாறுடன் கையைப் பிசைந்து தவிக்கும் அவஸ்தையை எப்படி தவிர்ப்பது?

இறுதியாக... 'அடங்காப்பிடாரி... என்று யாருக்கோ பெயர் வைத்து விட்டு பிறகு மறந்தே விட்டேன். இப்போது அந்த 'அடங்காப்பிடாரி' யாரென்று தெரியாமல் தலையைத் தின்று கொண்டிருக்கிறேன்.

                                                                 *       *     *    * 

நித்யானந்தா ஆசிரமத்தில் கஞ்சா, மது பாட்டில்கள்: ரகசிய அறையில் இருந்து 50 சிறுவர்-சிறுமிகள் மீட்பு - செய்தி

இந்தச் செய்தியிலுள்ள நம்பகத்தன்மை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு செய்தியை பொதுப்புத்தியின் அரிப்புக்கேற்றவாறு கிளுகிளுப்பாக கட்டமைத்துத் தருவதில் வணிக ஊடகங்களின் திறமையை நாம் பல வருடங்களாக பார்த்து வருகிறோம். இப்படியாக செய்தியேதும் 'உருவாக்கப்பட்டு' வராவிட்டால்தான் நாம் ஏமாந்து விடுவோம் என்று தோன்றுகிறது. இம்மாதிரியாக கிளுகிளுப்பு ஊடகங்களைத்தான் நாம் அதிகம் ஆதரிக்கிறோம் என்பதும் துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்.

                                                                 *       *     *    * 

'அரை மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவழிக்க இதில் ஏதுமில்லை'

என்று இணையத்தைப் பற்றி முன்பொரு முறை சுஜாதா சொன்னதை மனப்பூர்வமாக ஏற்கும் மனநிலைக்கு வந்து விட்டேன் என்று தோன்றுகிறது.

                                                                 *       *     *    * 

கிரேக்க அல்லது ஹீப்ரு மொழியில் மருத்துவ பெயரிடப்பட்ட உடம்பின் உதிரிபாகங்களில் ஒன்றோ அல்லது பலவோ அல்லது எதுவோ ஒத்துழைக்க மறுத்ததின் விளைவாக ஆயாசமாக இருக்க இன்று அலுவலகத்திற்கு மட்டமடித்து விட்டேன். போனஸாக கிடைத்த இந்த சாவகாசத்தை எப்படி கரைக்க என்று மலைப்பாக இருக்கிறது. செய்ய நிறைய வேலைகள் இருப்பது போலவும் எதுவுமே இல்லாதது போலவும் இருக்கிறது. என்னென்ன வேலைகள் (?!) இருக்கின்றன என்று பட்டியலிட்டுப் பார்த்தேன்.

1) 1939-ல் வெளிவந்த அல்பேனிய திரைப்படத்தை இன்று புரியாமலேயே பார்த்துவிட்டு "இருபது வருடங்களுக்கு முன்பு தில்லி சர்வதேச திரைவிழாவில் பத்து கிலோமீட்டர் நடந்து சென்று குளிரில் நடுங்கிக் கொண்டே பார்த்தேன்" என்று ஒரு ஜல்லியடி பதிவு எழுதிப் பார்க்கலாம்.

2) மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை ஒரு முறை பிரித்து வாசனை பார்த்து விட்டு குறைந்த பட்சம் ஒழுங்காக அடுக்கியாவது  வைக்கலாம்.

3) அடுத்த நாள் அலுவலகத்திற்கு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்கிற பிரக்ஞை ஆழ்மனதில் நெருடிக் கொண்டேயிருக்கிற வழக்கமான குற்றவுணர்வின்றி சாவகாசமாக மனைவியுடன் கூடிப் பார்க்கலாம்.

4) சில தருணங்களில் கவனித்திருந்த, மிகச்சரியாக மாலை 05.00 மணிக்கு வந்து 05.30 வரை பூனை நடை பழகும் எதிர் மாடி ஆண்ட்டி இன்றும் நேரத்திற்கு வந்து உடல் நலத்தை சரியாக பராமரிக்கிறாரா  என்று அவரின் உடல் ஆரோக்கியம் குறித்த மனிதநேயத்துடன் காத்திருந்து பார்க்கலாம்.

5) வழக்கமாக சென்று அழைத்து வருகிற மனைவி்க்குப் பதிலாக குழந்தைகளை பள்ளிக்குச் சென்று அழைத்துவந்து ஆனந்த அதிர்ச்சி தரலாம். (அய்யோ லீவு போட்டீடிங்களா! அப்ப நாங்க இன்னிக்கு டிவி பார்க்க முடியாதா?)

6) ஜன்னல் கம்பி துடைப்பது, கழிவறை கழுவுவது, மின்கட்டணம் செலுத்துவது, என்று முடிவில்லாமல் நீளும் லெளகீகக் கடமைகளில் ஏதாவது ஒன்றையாவது முணுமுணுக்காமல் செய்து விட்டு வரலாம்.

7) எப்போதும் சுமையாக அழுத்திக் கொண்டிருக்கும் இருத்தயியல் கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியில் மூலையில் அமர்ந்து மோட்டுவளையைப் பார்த்து மோனத்தவத்தில் ஈடுபடலாம்.

8) இரண்டு தலைகாணிகளுடன், பில்லா - 2 திரைப்பட போஸ்டரில் அஜித் பக்கத்தில் மந்தகாசமாக சிரித்து மனதை விட்டு அகல மறுக்கும் ஏதோவொரு நாட்டு நடன அழகியை பெருமூச்சுடன் நினைவு கூர்ந்து குப்புறப்படுத்து தூங்கிக் கழிக்கலாம்.

எனக்கென்னவோ கடைசி காரியத்தைத்தான் கச்சிதமாக செய்து முடிப்பேன் என்று தோன்றுகிறது.

                                                                 *       *     *    * 

http://newindianexpress.com/entertainment/reviews/article547004.ece

'கலியுகம்' ஆடியோ ரிலீஸில் நடந்த சர்ச்சை தொடர்பான செய்தியை வாசிக்க எரிச்சலாக இருந்தது. தமிழ் சினிமாக்காரர்கள் தங்களைப் பற்றி எந்தமாதிரியான சுயமதிப்பீடு வைத்திருக்கிறார்கள் மற்றும் எப்படியெல்லாம் அந்த போலி மதிப்பீடுகளைக் கட்டியமைத்து அதை மற்றவர்கள் போற்றி வணங்க வைக்க பாடுபடுகிறார்கள் என்பதையெல்லாம் அறிவதற்கான ஒரு சிறு வெளிச்சக் கீற்று இச்சம்பவம் என்பதாகப் படுகிறது.

'தமிழி்ல் சினிமா குறித்தான விமர்சனக்கலை என்பது இன்னமும் வளரவில்லை. வணிக இதழ்கள் தங்களின் பிரத்யேக சலிப்பூட்டும் வணிக நோக்கு சட்டகங்களுக்கு உட்பட்டு எழுதுகின்றன என்றால் மாற்று இதழ்கள் தங்களின் அரசியலுக்கு உட்பட்டு எழுதுகின்றன' என்கிற கருத்தை (நினைவிலிருந்து எழுதுகிறேன) முன்வைத்தவர் வேறு யாருமல்ல. 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம். அதுவும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சையில் மையமாக இருந்த அதே திரைப்படத்தைப் பற்றி (வழக்கு எண்.18/9) திரைப்பட இயக்குநர்கள் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் இவ்வாறு பேசினார். அந்த நிகழ்ச்சியில் ஓரளவிற்காவது உருப்படியாக பேசியவர் இவர் மாத்திரமே.

நிலைமை இவ்வாறிருக்க 'உங்களது விமர்சனங்களை வெளிப்படையாக எழுதாதீர்கள். எங்களின் வணிகம் பாதிக்கப்படும்' என்று சினிமாக்காரர்கள், எழுத்தாளர்களிடம் தெரிவிப்பது சமூகம் குறித்த எவ்வித அக்கறையுமல்லாத அப்பட்டமான சுயநலம் சார்ந்த கூச்சல். 'எதிர்மறை விமர்சனங்களை இயக்குநர்களிடம் தனியாக சொல்லலாமே?'' என்று ஆதங்கப்பட்டிருக்கிறாராம் ஒரு தயாரிப்பாளர். அய்யா, இது என்ன தொடையில் வந்திருக்கும் கட்டியா, மருத்துவரிடம் தனியாக சென்று ஆலோசனை கேட்க... மோசமான கலைப்படைப்புகள் வெளியாவது ஒரு மோசமான சமூகத்தின் நோயக்கூற்று அடையாளம். அதை பொது மேடையில் வைத்துததான் அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும்.

வழக்கு எண்ணை மோசமான தமிழ்வணிக சினிமா சூழலில் வைத்து மதிப்பிடும் போது ஓர் ஆரோக்கியமான குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்களே போட்டுக் கொள்ளும் விளம்பரங்களைப் போலவும் ஒருவரையொருவர் சொறிந்து கொண்டு பிரகடனப்படுத்திக் கொள்வதைப் போலவும்  'உலகத்தரமான சினிமா' 'அபூர்வமான கலைப்படைப்பு' 'குறிஞ்சி மலர்" என்கிற அடைமொழிகளுக்கெல்லாம் நிச்சயம் தகுதியில்லாதது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். இந்த சுயசொரிதல்களின் போதுதான் பார்வையாளர்களுக்கு இந்த ஆபாச அரசியலின் மீது நிச்சயம் கோபமும் எரிச்சலும் எழுகிறது.

நல்ல இலக்கியமும் சினிமாவும் ஒன்றையொன்று நெருங்குவது நல்ல சினிமா உருவாவதற்கான ஆரோக்கியமான அடையாளம் என்பது பல காலமாக கூறப்படுவது. அது தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சற்று சாத்தியப்பட்டுக கெர்ணடிருப்பது குறித்து மகிழ்ச்சியே. அவ்வாறு தமிழ் சினிமாவில் புகும் இலக்கியவாதிகளும் மோசமான சினிமாக்கள் குறித்தோ அல்லது சுமாரான முயற்சிகள் வானுலக புகழப்படுவது குறித்தோ (குறைந்தபட்சம் தங்களின் சுதந்திரமான வெளியில்) எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் கள்ள மெளனம் சாதிப்பது சங்கடத்தையும் எரிச்சலையும் தருகிறது. இதையும் மீறி எழும் குரல்களையும் அதன் ஆரமப நிலையிலேயே சினிமாக்காரர்கள் வணிக காரணங்களினால் அழுத்திக் கொன்று விட நினைப்பது சினிமாவிற்கும் சமூகத்திற்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம்.

வழக்கு எண் திரைப்படம் குறித்து நீண்ட நாட்களாக எழுத நினைத்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அதை உடனே எழுதுவற்கான உத்வேகத்தை இச்சம்பவம் அளித்திருக்கிறது. பார்ப்போம்.

                                                                 *       *     *    * 

லீலை என்றொரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன்.

சிறியமுடிச்சை வைத்துக் கொண்டு நேர்த்தியான திரைக்கதையினால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் (எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்தவராமே?). திரைப்படம் 2008-லேயே தொடங்கப்பட்டும் வணிகக்காரணங்களினால் தாமதமாகி சமீபத்தில் வெளியாகி போதுமான விளம்பரமில்லாமல் பரவலாக வெளிப்படாமலேயே சுருங்கி விட்டது துரதிர்ஷ்டம்.

ஹீரோ ஷிவ் பண்டிட் விளம்பர மாடல் போல. அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பல காட்சிகளில் இளமையாகத் தோன்றினாலும் சில காட்சிகளில் முத்தலாகத் தெரிகிறார். ஆரம்ப கால ரகுவரனை நினைவுப்படுத்துகிறார். ஒரு சாயலில் எஸ்.ஜே. சூர்யாவைப் போலவே தோன்றுபவரை பிரதான பாத்திரத்திற்கு இயக்குநர் தேர்ந்தெடுத்தற்கு இடிபஸ்ஸொ இடியாப்ப காம்ப்ளக்ஸோ காரணமாக இருந்திருக்கலாம். ஹீரோயின் மனசி பரேக் மனசில் ஒட்டவேயில்லை. சகிகத்துக் கொண்டு பார்த்தேன்.

சந்தானமும் படத்தில் இருக்கிறார். அவர் வரும் காமெடி டிராக்குகளைத் தவிர படத்துடன் தொடர்புடைய காட்சிகளில் வழக்கத்திற்கு மாறாக அடக்கி வாசித்திருக்கிறார். தொடர வேண்டும். பட்ஜெட் காரணத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான காட்சிகள் சாப்ட்வேர் கம்பெனியையே சுற்றி வருகிறது. இருந்தாலும் போரடிக்காமல் இருந்ததற்கு முன்னர் சொன்னது போல் இயக்குநரின் சுவாரசியமான திரைக்கதை காரணம்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 'ஜில்லென்று ஒரு கலவரம்' 'பொன்மாலைப் பொழுது' போன்ற பாடல்கள் நன்றாக வந்துள்ளன. முதல் பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.  பின்னணி இசையைப் பொறுத்தவரை ராஜாவின் சாயலைத் தொடுவதற்கு கூட இனிமேல் இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் போல.

நல்லதொரு ஃபீல்குட் திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது. நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.


                                                                 *       *     *    * 



இணையத்தில் 'பைத்தியக்காரன்' என்ற பெயரில் எழுதி வந்த நண்பர் சிவராமன், தினகரன் சப்ளிமெண்ட் இதழ்களில் அசத்தலான மொழியில் எழுதும் சினிமா கட்டுரைகள் குறித்து பலர் அறிந்திருக்கலாம். அறியாதவர்களுக்காக:

பொதுவாக இந்த மாதிரி சப்ளிமெண்ட்ரிகளை 'நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து' மாதிரி தூக்கிப் போட்டு விடுவதே என் வழக்கம். அல்லது பளபளவென்று ஜிகினா தொடையுடன் இருக்கும் ப்ளோ -அப் களை சற்று நேரம் வெறித்து பார்த்து விட்டு அதில் வரும் trivia-க்களை சற்று கொறித்து விட்டு எறிந்து விடுவது வழக்கம். அதாவது இந்த இதழ்களை தேடி வாசிக்க சற்றும் மெனக்கெடுவதில்லை.

ஆனால் என்னுடைய இந்த வழக்கத்தை மாற்றி இவருடைய கட்டுரைகளுக்காகவே  இந்த துணையிதழ்களை தேடி வாசிக்கும் நிலைமைக்கு என்னை மாற்றியதில் சிவராமனின் சிநேகமான எழுத்துக்கு பெரும் பங்குண்டு.

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் படங்களின் நிலவரங்கள், அதிலுள்ள அரசியல்கள், காமெடிகள், நடிக, நடிகையர்களின் விவரங்கள் போன்றவைகளை பறவைப் பார்வையில் ஒருவர் எளிதாக அறிந்து கொள்ள சிவராமனின் கட்டுரைகளை வாசித்தாலே போதும். அதிலும் சில குறிப்புகளின் இறுதியில் அவர் தரும் ஆங்கில one liner-கள் அட்டகாசம். மேலோட்டமாய்ப் பார்த்தால் எவரும் எழுதிவிடும் பாவனையில் இருந்தாலும் அந்த விவரங்களைத் திரட்டுவதற்கும் அதை 'அஜால்குஜாலான' மொழியில் உருமாற்றி சுவாரசியமான தகவல்களாக தருவதற்கும் எத்தனை உழைப்பு வேண்டியிருக்கும் என்பதை ஒரு கட்டுரையையாவது எழுதிப் பார்த்தால்தான் தெரியும்.

இணையத்தில் (சிதைவுகள்) சிவராமன் எழுதி வந்தது ஏறக்குறைய நின்று விட்ட நிலையில் இந்த இன்னொரு 'சிவராமனின்' எழுத்துக்கள் அந்த ஆதங்கத்தை சற்று மட்டுப்படுத்தினாலும் அசல் சிவராமனின் சுயம் வெளிப்படும் அந்த ஆவேச எழுத்தை மிஸ் செய்யும் ஆதங்கம் சற்றும் குறையவில்லை.

கடந்த வெள்ளி மலரில் இயக்குநர் அனுராக் காஷ்யப் பற்றி 'இந்தி சினிமாவின் பாலா' என்று சிவராமன் எழுதியிருக்கும் இந்த கட்டுரை இதுவரை வந்தவற்றின் உச்சம் எனலாம். வாசித்து மகிழுங்கள். (பக்கம் 22,23,24)

http://www.dinakaran.com/E_Book.asp?id=24&showfrom=6/22/2012&cat=22
 
 
                                                                 *       *     *    *
 
 
http://www.jeyamohan.in/?p=28150

காலையில் என்னை நெகிழ வைத்த கட்டுரை. இயக்குநர் துரை மற்றும் நடிகர் ஷாமின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. ஒரு சினிமா உருவாவதின் பின்னாலுள்ள ரத்தத்தையும கண்ணீரையும் யூகிக்கத்தான் முடிகிறது.

ஆனால் ஒரு கறாரான விமர்சகன், இந்த சென்டிமென்டிடுகளை, உழைப்பை, அர்ப்பணிப்பை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை அணுக முடியாது, சலுகை காட்ட முடியாது. அதனுடைய ஒட்டு மொத்த இறுதி் வடிவம்தான் ஒரு பார்வையாளனாக அவனுக்கு முக்கியம். எவ்வித அரசியலும் மனச்சாய்வுமின்றி, அற்புதமாக இருந்தால் அந்த சினிமாவை தூக்கி வைத்துக் கொண்டாடவும் மோசமாக இருந்தால் தூக்கிப் போட்டு மிதிக்கவும் அவன் தயங்க மாட்டான்.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டுமென்று மனப்பூர்வமாக விழைகிறேன். படம் வெளிவந்தவுடன் திரையரங்கில்தான் சென்று நிச்சயம் காண வேண்டுமென்று உறுதியெடுத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.


suresh kannan