Thursday, November 14, 2019

லென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்
தமிழில் வெளிவந்த திரைப்படங்களில்.  பரிசோதனை முயற்சியில் அமைந்த ஒரு படைப்பு பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பல சர்வதேச திரையிடல்களில் கலந்து விருது பெற்ற அந்த திரைப்படம் - 'லென்ஸ்'. தமிழ்,மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகிய  bilingual திரைப்படம். மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை கண்டு ரசிக்கும், காட்சிகளாக பதிவு செய்து மற்றவர்களுக்கும் பரப்பும் வக்கிர மனங்களை  குறுக்கு விசாரணை செய்வதே இதன் மையம். மனைவியை புறக்கணித்து விட்டு, வீடியோ செக்ஸ் சாட் செய்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு, பூமராங் போன்று அதே வகையான ஆயுதம் திரும்பி வந்து தாக்குகிறது. இரண்டு நபர்களுக்குள் நிகழும் வீடியோ உரையாடல்களைக் கொண்டே இதன் பெரும்பாலான காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல பரிசோதனை முயற்சி.

2010-ம் ஆண்டு Love, Sex Aur Dhokha என்றொரு இந்தி திரைப்படம் வெளிவந்தது. You are being watched என்பது இதன் டேக் லைன்.  தனது ப்ராக்ஜக்ட்டிற்காக படமெடுக்கும் ஒரு திரைப்படக்கல்லூரி மாணவனின் காதல், சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஒருவன் சக பெண் தொழிலாளியுடன் உறவு கொண்டு அதை வைத்து பணம் சம்பாதிக்க முயலும் காமம், பிரபலங்களின் அந்தரங்கங்களை சூடான வீடியோ செய்திகளாக்கும் ஒரு பத்திரிகையாளனின் துரோகம் ஆகிய மூன்று பகுதிகளாக இருந்தது. தனித்தனியான இந்த மூன்று பகுதிகளுக்கும் சுவாரசிய தொடர்பு ஏற்படுத்தும் நுணுக்கத்தில் இயக்குநர் Dibakar Banerjee வெற்றி பெற்றிருந்தார்.

திரைப்படக் கல்லூரி மாணவனின் காம்கார்டரில் பதிவாகும் காட்சிகள், ஷாப்பிங் மாலின் CCTV- காட்சிகள், பத்திரிகையாளனின் ரகசிய காமிரா காட்சிகள் ஆகியவற்றைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இவ்வகையில் இத்திரைப்படத்தை முதல் நவீன பரிசோதனை சினிமா என்று வகைப்படுத்தலாம்.

அந்தச் சமயத்தில் எழுதிய குறிப்புகள், சமீபத்திய 'லென்ஸ்' திரைப்படத்துடனும் மிகப் பொருத்தமாக இருப்பதால் இங்கு இணைக்கிறேன்.

***

இதுவொரு கற்பனைக் கதை. உண்மையான கதையாகவும் இருக்கக்கூடும்.

மணிமாறன் கணினியைத் திறந்து மின்னஞ்சலை சோதிக்க முயன்ற போது 'TRUE HOT INDIANS' (EXCLUSIVE) என்கிற குறிப்புடன் ஒரு மின்னஞ்சல் சாகசமாக கண்ணைச் சிமிட்டியது. ஸ்பேம் மெயிலோ என்று அழிக்க முயன்றான். ஆனால் அது ஆஸ்திரேலிய நண்பனிடமிருந்து வந்திருந்தது. Networking Site மூலமாக நண்பனானவன். புகைப்படத்தை பரிமாறிக் கொள்ளவில்லையெனினும் ஒத்த அலைவரிசை ரசனையில் ஒரளவிற்கு நெருக்கமான நண்பனாகிப் போனவன். அந்த ரசனை எது என்பதுதான் வில்லங்கமானது. Voyeurism.

மணிமாறன் விரும்பி பார்க்கும் பாலியல் படங்கள் வழக்கமானவைகள் அல்ல. பிரபல நடிகைகள் உடை மாற்றும் ஒளித்துணுக்குகள், டவல் நழுவ குளியலறைக்குச் செல்லும் அந்நிய குடும்பத்துப் பெண்கள், அவர்கள் அறியாமல் படம் பிடிக்கப்படும் ஆதாம் ஆப்பிள் சமாச்சாரங்கள். 'இந்தா எடுத்துக்கோ' என்னும் அப்பட்டமான வீடியோக்களை விட சாவித்துவாரம் வழியாக குறுகுறுப்புடன் ஒளிந்து பார்க்கும் உணர்வைத் தரும் வீடியோக்கள் மணிமாறனுக்கு அதிக கிளர்ச்சியைத் தந்தன. இதில் வெள்ளைக்காரிகளை விட இந்திய குறிப்பாக தென்னிந்திய பெண்களின் வீடியோக்களே தேடலே அதிகம். தேசப்பற்றெல்லாம் ஒன்றுமில்லை. இதை ரசிப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருவதால் வழக்கமான முறையில் படம்பிடிக்கப்படும் நடிகர்கள் கூட செயற்கையாக இந்த முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் அசலானது எது என்பதை கண்டுபிடிப்பது கூட ஒரு சுவாரசியமான விளையாட்டாகி விட்டது.

ஆஸ்திரேலிய நண்பன், கட்டணம் செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளும் தளத்திலிருந்த ஒரு லிங்க்கை வழக்கம் போல் மணிமாறனுக்கு அனுப்பியிருந்தான். குறுகுறுப்புடன் அதை தரவிறக்கம் செய்த இவன் அதை ரகசிய போல்டரில் போட்டு வைத்திருந்தான். அன்று முழுவதும் அதைப் பார்க்கப் போகிற தவிப்பு பல தருணங்களில் மூளையில் வியாபித்து வெளிப்பட்டது. அன்றிரவு செயற்கையான தனிமையை ஏற்படுத்திக் கொண்டு வீடியோவை பார்க்க ஆரம்பித்தான். முற்றிலும் அந்நிய சூழ்நிலையில் இருந்த அந்த இருவரும் யாரோ என்று பார்க்க ஆரம்பித்தவனுக்கு சில நொடிகளிலேயே தலையில் இடி இறங்கினாற் போல இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு மணிமாறனுக்கு திருமணமாகி தேனிலவிற்காக பெரும்பாலோர் செல்லும் அந்த மலை வாசஸ் தலத்திற்குச் சென்றிருந்தான். தங்கியிருந்த ஓட்டலின் பெயர் கூட மறந்துவிட்டது.

***

மணிமாறனுக்கு நேர்ந்த அந்த அவல நகைச்சுவை விபத்து யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம் இன்று கண்காணிப்பு சமுதாயத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். டிராபிக் சிக்னலில் இருந்து ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஹை-டெக் அலுவலகங்கள், ரயில்வே நிலையங்கள்.. என்று பல இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் காமிராக்கள் நம்மை தொடர்ந்து பதிவு செய்து கொண்டேயிருக்கின்றன. இவற்றின் மூலம் ஒருவரின் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை கண்காணித்து அவரைப் பற்றின பல தகவல்களைத் தொகுக்க முடியும்.

குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க இவை செயல்படுவது ஒருபுறமென்றால் ஒருவரை வேவு பார்க்கவும், பாலியல் செய்கைகளை படம்பிடித்து பணம் பறிக்கவோ, பார்த்து ரசித்து மகிழவோ செயல்படுத்தப்படும் பல ரகசிய கேமிராக்கள் ஒரு தனிமனிதனின் அந்தரங்க வெளியை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கும் உணர்வில் நாம் மற்றவர்களின் அந்தரங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிக ஆவலாகயிருக்கிறோம்.

இதில் அதிகம் அவதிப்படுவது பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள், துணை நடிகைகள். படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போதும் குளியலறையிலோ, உடைமாற்றும் வசதியில்லாத சூழ்நிலையில் தற்காலிக ஏற்பாடுகளின் போதோ காமிரா ஏதாவது தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறதா. என்கிற பதட்டம் தருகிற மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. 'ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது மறைவானதொரு இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றதை மேலிருந்து ஒரு குழுவான நபர்கள் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்ததை எண்ணி பல இரவுகள் அழுதிருக்கிறேன்' என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.

ஒருவரின் அந்தரங்க வெளிக்குள் நுழையும் உரிமையை 'இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம்' என்கிற போர்வையில் இன்று தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களும் கையில் எடுத்துள்ளன. லஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகங்கள் ஒருபுறமிருக்க பாலியல் செய்கைகளை படம்பிடித்து அவற்றை வைத்து பணம் பறிக்கும், பேரம் படியாவிடில் அதை வெளிப்படுத்தி அதன் மூலமும் கூட சம்பாதிக்கத் துணியும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன. கற்பனையாக மேலே குறிப்பிட்ட மணிமாறன்களைப் போல பல தனிநபர்கள் மற்றவர்களின் அந்தரங்களைக் காண எதையும் செலவு செய்ய தயாராக இருப்பதால் இவர்களுக்காக இணையத்தில் பல தளங்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளன.

முன்பே குறிப்பிட்டது போல காமிராக்களால் தொடர்ந்து மறைமுகமாக கவனிக்கப்படும் காட்சிகளை வைத்து ஒருவரின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தைக் கூட உருவாக்கிவிட முடியும். ஜிம்கேரி நடித்து 1998-ல் வெளிவந்த The Truman show இதையே அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சில பரிசோதனை திரைப்படங்களில் இவ்வாறான வீடியோ பதிவுகளை ஒரு உத்தியாகவே பயன்படுத்துகிறார்கள். Cloverfield (2008) ஒரு அமெச்சூர் வீடியோகிராபர் எடுக்கிற தொடர்ச்சியான குழப்பமான காட்சிகளைக் கொண்டே முழுத்திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் 'லென்ஸ்' திரைப்படம் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்துள்ளது.***

'அந்தரங்கம் புனிதமானது' என்றொரு சிறுகதை எழுதினார் ஜெயகாந்தன். தாயைத் தவிர தன்னுடைய தந்தை,  இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தற்செயலாக அறியும் மகன் கொதிக்கிறான். தாயுடன் அந்த விஷயத்தைப் பற்றி கோபமாக விவாதிக்கிறான். தந்தையுடன் இது பற்றி பேசத் தயங்குகிறான். அவரே அவனைக் கூப்பிட்டு இது பற்றி பேசுகிறார். 'ஒருவரின் அந்தரங்கமான விஷயம் எத்தனை முக்கி்யமானது என்பதையும் அதைக் கண்காணிப்பது அநாகரிகமானது என்பது குறித்தும் உபதேசிக்கிறார். தனிநபர்வாதம் எனும் கருத்தாக்கத்தை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த அபாரமான சிறுகதை. இன்றைய படித்த சமூகம் கூட ஜீரணிக்கத் தயங்கும் முற்போக்கான படைப்பை பல வருடங்களுக்கு முன்பே எழுதிய ஜெயகாந்தனை வியக்கத் தோன்றுகிறது.

ஆனால் அந்தரங்கம் எனும் தனிவெளி இன்று இருக்கிறதா என்கிற கேள்வியெழுகிறது. அந்தளவிற்கான கண்காணிப்பு சமூகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கணினி, கைபேசி என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணுக் கருவிகள் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கின்றன; பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன. மறைவான இடங்களில் ஆயிரம் கண்கள் நம்மை விழித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன.

'லென்ஸ்' திரைப்படத்தில் நிகழ்வது என்ன?

மெய்நிகர் உலகின் வழியாக அநாமதேயப் பெண்களுடன் பாலியல் உரையாடல்களை மேற்கொண்டு மகிழும் ஒருவன், ஒரு பெண்ணின் அழைப்பில் மயங்கி தனிவழி வீடியோவில் நுழைகிறான். ஆனால் வந்தவன் ஓர் ஆண். 'நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அதை நீ நேரடியாகப் பார்க்க வேண்டும்' என்கிறான். பதறிப் போகும் இவன் 'நீ லூசாய்யா" என்று இணைப்பைத் துண்டித்து விடுகிறான். ஆனால் தொடர்ந்து அவ்வாறு இருக்க முடிவதில்லை. அடுத்த வீடியோ உரையாடலில் திரையில் தோன்றுவது மயக்க நிலையில் இவனுடைய மனைவி. எதிராளி கடத்தி வைத்திருக்கிறான்.

இந்த இரண்டு தரப்பிற்கும் இடையிலான உரையாடலின் மூலமாக மனிதனின் கீழ்மைகள், வக்கிரங்கள், குற்றவுணர்ச்சிகள் போன்றவை வெளிவருகின்றன. இணையத்தில் இன்று ஏராளமான பாலியல் காட்சிகள் தடையின்றிக் காணக் கிடைக்கின்றன. அதில் பொதுவாக இரண்டு வகையுள்ளது. ஒன்று, தொழில்முறை நடிகர்களால் அவர்களாகவே முன்வந்து நடித்து பதிவு செய்யப்படும் காணொளிகள். இதில் 'அவர்களாகவே முன்வந்து' என்கிற சொல்லாடல் ஒரு சம்பிதாயமே. Porn Industry என்பது பல கோடி ரூபாய்கள் புழங்கும் ஒரு வணிகம். இதற்கான வணிகப்பின்னல் உலகெங்கிலும் நிறைந்துள்ளது. இதில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் பெரும்பாலும் கடத்தி வரப்பட்டு பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்டவர்கள். இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டு பல்வேறு வன்முறைகளின் மூலம் வேறு வழியின்றி இந்தத் தொழிலை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் மரத்துப் போய் தங்களின் நிராதரவான வாழ்வை ஏற்றுக் கொள்கிறார்கள்.  இவ்வகையான பலியாள்களின் உழைப்புச் சுரண்டலில் உருவாகும் பாலியல் காட்சிகளைக் கண்டு இன்புறுவதின் மூலம் இந்தத் தொழிலில் நிகழும் அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கயவாளிகளின் வணிக லாபத்திற்கும் நாமும் ஒருவகையில் காரணமாக இருக்கிறோம்.

***


பாலியல் திரைப்படங்களில் நடிப்பவர்களுக்காக முறையான சட்டங்கள், விதிமுறைகள் போன்றவை மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன என்று நம்பப்படுவது கூட ஒருவகையில் பொய்யே. 'I am Jane Doe' என்கிற ஆவணப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். சில அமெரிக்கத் தாய்மார்களுக்கும் ஓர் இணையத்தளத்திற்கும் இடையே பல வருடங்களாக நிகழ்ந்த ஒரு வழக்கின் பயணத்தை விவரிக்கும் ஆவணப்படம் அது. சராசரி குடும்பத்தைச் சார்ந்த அவர்களுடைய அப்பாவி மகள்கள் பாலியல் கும்பலால் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் அவர்களின் புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் கண்சிமிட்டல்களுடன் காட்டப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் உடனே அதிலுள்ள தொடர்பு எண்களை ஆவலுடன் குறித்துக் கொள்கிறார்கள். மறைமுகமாக பாலியல் வணிகத்திற்கு அந்த இணையத்தளம் துணைபோகிறது. வருமானம் டாலர்களில் கொட்டுகிறது.

அந்த இணையத்தளத்தை தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்தை நாடுகிறார்கள் பெற்றோர்கள். வெளிப்படையாகவே தெரியும் அநீதிதான். ஆனால் நீதிமன்றம் தனது கண்களை இறுக மூடிக் கொண்டு சட்டப்புத்தகத்தை விரல்களால் தடவிப்பார்த்து விட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறது. ஏனெனில் அந்த இணையத்தளத்தின் வாடிக்கையாளர்களில் நீதிபதிகள் முதற்கொண்டு மதகுருமார்கள், அரசு அதிகாரிகள் வரை பல பெரியமனிதர்கள் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவின் துணை கொண்டு இணையத்தளத்தால் மிக துணிச்சலுடன் தன் அராஜகத்தை தடங்கல் ஏதுமின்றி தொடர முடிகிறது. பல வருடமாக நீளும் சட்டப் போராட்டங்களுக்குப் பின்பே அந்த இணையத் தளத்தை முடக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், பாலியல் மாஃபியா கும்பலை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மனச்சாட்சியுள்ள வழக்கறிஞர்கள் ஆகிய பல நபர்களின் உழைப்பிற்குப் பின்புதான் நீதி மெலிதாக கண்விழித்து பார்க்கிறது.

தனிநபர்களுக்கான சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதாக நம்பப்படும் மேற்கத்திய நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால் இந்தியா மூன்றாம் உலக நாடுகளின் நிலைமை என்ன? இங்கு நிகழும் பாலியல் வணிகம் என்பது ஏறத்தாழ இறைச்சிக்காக அடிமாடுகளை வண்டியில் நெருக்கி ஏற்றிச் செல்வது போன்ற பரிதாபமான வணிகம்தான்.  கேள்வி கேட்பவர்களே கிடையாது. பல கோடி ரூபாய் புழங்கும் இந்த வணிகத்தை அரசு, நீதி, காவல் என்று எல்லாத்துறைகளும் கண்டும் காணாமலும் இருக்கின்றன. மறைமுகமாக இதன் கூட்டாளிகளே இருப்பவர்களும் இவர்களே. மிகப் பிரதானமாக இதன் வாடிக்கையாளர்களும். அதாவது பொதுசமூகத்தின் பெரும்பகுதி.

மேற்குறிப்பிட்ட வகையில் இன்னொன்று இதனினும் மோசமானது.  அப்பாவியான நபர்களின் அந்தரங்கமான தருணங்கள், குளியலறைக் காட்சிகள், உடைமாற்றும் காட்சிகள் போன்றவற்றை அவர்கள் அறியாமல் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பரப்பும் அயோக்கியத்தனம். தொழில்முறை நடிகர்களுக்காவது தங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதி குறித்து முன்பே தெரியும். ஆனால் இது போன்ற அப்பாவியான  பலியாள்களுக்கு, அந்தக் காட்சிகளின் புகழ் பரவி, பலர் கண்களுக்கும் விருந்தாகிய பிறகுதான் அறிய வருகிறது. எந்தக் குற்றமும் செய்யாமலேயே மிகப் பெரிய தண்டனை.

மற்றவர்களின் சிறுசிறு அந்தரங்கமான தருணங்களை ஒளிந்திருந்து ரசிக்க விரும்பும் நம்முடைய கீழ்மையான குணங்களின் காரணமாகவே இம்மாதிரியான அநீதிச் செயல்களும் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கின்றன. பாதிக்கப்படும் அப்பாவிகளைப் பற்றிய குற்றவுணர்வோ, சிந்தனையோ எதுவும் பெரும்பாலோனோர்க்கு இருப்பதில்லை. இவர்கள் அடைய விரும்பும் சிறிய நேரத்து இன்பத்திற்காக, அப்பாவியான நபர்கள் அவமானம் தாங்காமல் தங்கள் வாழ்நாளையே பலி கொடுக்க நேர்கிறது.

***

'லென்ஸ்' திரைப்படத்தில் நாயகனுடன் எதிர்தரப்பில் உரையாடும் நபருக்கும் அதுதான் நிகழ்கிறது. திருமணத்தின் மூலம் ஒளிரும் அவனுடைய வாழ்க்கை சில நாட்களிலேயே அணைந்து போகிறது. அவர்களின் உறவுக்காட்சிகள் இணையத்தில் ஒளிபரப்பாக, அவமானம் தாங்காமல் அவனுடைய மனைவி தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்கு முன் மனதளவில் பலமுறை சிறிது சிறிதாக இறந்து போகிறாள். ஆயிரம் கண்கள் தன்னுடைய உடலை வெறித்துப் பார்ப்பதற்கான பிரமையும் அச்சமும் அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. வெளிச்சத்தின் சிறுதுளி கூட நுழைய முடியாத அறையில் தன்னை ஒடுக்கிக் கொண்டு 'தாம் கண்காணிக்கப்படுகிறோம்' என்கிற பித்து நிலையில் ஒவ்வொரு நொடியையும் அச்சத்தில் கழிக்கிறாள்.

பாலியல் வக்கிரம் சார்ந்த குறுகுறுப்புடன் மற்றவர்களின் அந்தரங்கங்களை மிக ஆவலாக ரசித்துப் பார்க்கும் நமக்கு, நாமும் ஒருநாள் அவ்வாறாக மற்றவர்களின் கண்களுக்கு பலி விருந்தாக மாறக்கூடும் என்கிற உணர்வை இந்த திரைப்படம் மிக வலுவாக சுட்டிக் காட்டுகிறது. இதர பெண்களின் உறவுக்காட்சிகளை மிக ஆவலாக ரசித்துப் பார்த்த இதன் நாயகன், அதே வகையான பாதிப்பு தன் மனைவிக்கு ஏற்படும் போது தன்னிச்சையாக கதறுகிறான். தன் லீலைகள் வெளிப்படும் போது அவமானத்தில் குறுகுகிறான். இது சார்ந்த குற்றவுணர்வை ஒவ்வொரு பார்வையாளனுக்கும் கச்சிதமாக கடத்துவதே இந்த திரைப்படத்தின் வெற்றி.

மனித மனதின் சில ஆதாரமான இச்சைகள் இயற்கையானவைதான். அதற்கான வழிகளை, வடிகால்களை தேடியமைத்துக் கொள்வதில் பெரிதும் பிழையில்லைதான். ஆனால் அதன் பாதைகள் எவ்வாறாக அமைகின்றன என்பதில்தான் அதன் நீதியும் அநீதியும் அமைந்திருக்கிறது. சகமனிதருக்கு நம்மால் ஒரு துளி துன்பமோ தீங்கோ நிகழ்ந்து விடக்கூடாது என்கிற அறம் சார்ந்த உணர்வும் போக்கும்தான் கீழ்மைகளில் இருந்து விழாமல் நம்மை ஒரளவிற்காகவது காப்பாற்றக்கூடும். மற்றவர்களையும் காப்பாற்றும்.

சுமாராக 110 நிமிடங்கள் ஓடும் 'லென்ஸ்' திரைப்படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வீடியோ சாட்களாகவே அமைந்துள்ளது நல்ல முயற்சி. இது சார்ந்த சலிப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படாதவாறு இதன் அபாரமான திரைக்கதை அமைந்துள்ளது. இயல்பான வசனங்கள் பாலியல் வக்கிர மனங்களின் மீது நெருப்புத் துண்டுகளாக விழுகின்றன. திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பு அற்புதமாக உள்ளது. பல காட்சிகளில் யதார்த்தத்திற்கு நெருக்கமான மிகையின்றி நடித்துள்ளார். எதிர்முனையில் இவரை மிரட்டும் தரப்பாக நடித்துள்ள ஆனந்த் சாமியின் பங்களிப்பும் கச்சிதமாக நிகழ்ந்துள்ளது. தங்களின் அந்தரங்கம் வெளிப்பட்ட அவமானத்தில் குறுகி மரணமடையும் மணப்பெண்ணாக நடித்துள்ள வினுதா லாலின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

Voyeurism எனும் வக்கிரத்தின் மீதான விமர்சனமாக இயங்கும் இத்திரைப்படத்தின் சில காட்சிகளும் அவ்வாறே அமைந்திருக்கும் முரணை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். விபின் சித்தார்த்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு மிகப் பொருத்தமாக ஒலிக்கிறது. புறாக்களின் உலாவல் உள்ளிட்ட சில குறிப்பிட்ட காட்சிகள் ரசனை சார்ந்த அழகியலுடன் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.

கலை என்பது அடிப்படையில் பொழுதுபோக்கிற்காக என்றாலும் மனித வாழ்வின் சில கீழ்மைகளை நுட்பமாக குறுக்கு விசாரணை செய்வது அதன் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்முடைய வக்கிரங்களை உருப்பெருக்கி கண்ணாடி வழியாக நுட்பமாக சித்தரிக்கும்  'லென்ஸ்' வெற்றி பெற்றுள்ளது. தரமான முறையில் உருவாகும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு உத்தரவாதமாக வெற்றி கிட்டும் என்கிற நடைமுறை உண்மையை இந்த திரைப்படம் நிரூபித்துள்ளது.

(உயிர்மை JUNE 2017 இதழில் பிரசுரமானது)


suresh kannan

Wednesday, November 13, 2019

Lipstick Under My Burkha – நசுக்கப்படும் சிறிய கனவுகள்


சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இந்தியப் பெண்.  (சங்க இலக்கியத்தின் படி ‘அரிவை’ பருவத்தில் உள்ளவர்) நடைமுறை சார்ந்த கொச்சை மொழியில் ‘ஆண்ட்டி’ என்றோ, கெழவி என்றோ, ‘பெரிசு” என்றோ அழைக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளவர். கணவனை இழந்த பெண். எனவே விதவை.


இது போன்ற பெண்மணிகள் பொதுவாக என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என இந்த சமூகம் எதிர்பார்க்கும்?. வேளா வேளைக்கு கோயில் குளத்திற்குச் செல்லலாம், தொலைக்காட்சித் தொடர்களில் வரும் வில்லிகளைத் திட்டலாம், பொழுது போகவில்லையென்றால் மருமகளை சிறுமைப்படுத்திக் கொண்டே தன் அதிகாரத்தை நிறுவிக் கொண்டிருக்கலாம்இவற்றையெல்லாம்  அவர் செய்து கொண்டிருந்தால் இயல்பாக இயங்குகிறார் எனப் பொருள். …  இல்லையா?..ஆனால். இதற்கு மாறாக.. 55 வயது இந்தியப் பெண் ஒருவர்  பொலிகாளை போன்ற இளைஞனுடன் தொலைபேசியில் காமரசம் சொட்ட பேசிக் கொண்டே சுயமைதுனம் செய்து கொண்டிருந்தால் அந்தக் காட்சி எவ்வாறான அதிர்வுகளை ஏற்படுத்தும்?சே… என்ன ஒரு ஆபாசம்.. என்கிறீர்கள் என்றால் இது நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். ஒரு முதிய ஆண் இளம் பெண்ணிடம் சரசம் செய்வதையும் திருமணம் செய்வதையும் கூட ஒருவகையில் இயல்பாக கொள்ளும் இந்தச் சமூகம் வயதான பெண்ணொருவர் இளம் ஆணிடம் தன் பாலியல் விழைவுகளை வெளிப்படுத்தினால் அதை விரசமாகவும் நகைச்சுவையாகவும் மட்டுமே பார்க்கிறது. முதியவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு பாலியல் சார்ந்து தீராத ஏக்கமும் அதுசார்ந்த மனவுளைச்சலும் இருக்கிறது என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக அழுத்தமாகச் சொன்ன திரைப்படம் - Lipstick Under My Burkha.

இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை மட்டுமே இது. இன்னமும் முடியவில்லை. வேறு மூன்று பெண்களைப் பற்றிய கதைகளின் இழைகளும் கலந்திருக்கின்றன. வயதான பெண்ணின் பாலியல் விழைவை சித்தரிக்கும் பாத்திரத்தில் ரத்னா பதக் (நஸ்ரூதின் ஷாவின் மனைவி) துணிச்சலான காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார்.


**உலகமயமாக்கலுக்குப் பிறகு, பொருளியல் சுதந்திரம், அது சார்ந்த தன்னம்பிக்கை உள்ளிட்டு பல்வேறு விஷயங்களை நோக்கி பெண்ணுலகம் நகரத் துவங்கியிருக்கிறது. இது சார்ந்த சுயஅடையாளமும் தன்னிறைவும் பெண்களுக்கு ஏற்படத் துவங்கியிருக்கின்றன. இவ்வாறான போக்கு ஆணுலகத்திற்கு அச்சத்தையும் பதட்டத்தையும் தருகிறது. தங்களின் இதுவரையான அதிகாரம் மெல்ல கைநழுவிப் போவதை சகிக்க முடியாமல் இரும்புக்கரம் கொண்டாவது நசுக்கத் துடிக்கிறார்கள்.மதம், ஆணாதிக்கம், பழமைவாதம், நவீனத்திற்கு நகர்தல், முதிர்வயதில் நிறைவேறாத பாலியல் ஏக்கம் உள்ளிட்ட காரணங்களால் அவதிப்படும் நான்கு பெண்களைப் பற்றிய திரைப்படம் இது. வெவ்வேறு வயதுகளில் உள்ள இந்த நான்கு பெண்களும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய பெண்(கள்) மையத் திரைப்படம் இதுவென்று சொல்லலாம். ‘புர்கா’விற்குள் உதட்டுச்சாயம் என்கிற படத்தின் தலைப்பே நவீனத்திற்கும் பழமைவாதத்திற்கும் இடையிலான பெண்களின் கலாசார தத்தளிப்பை அழுத்தமாக சுட்டிக்காட்டி விடுகிறது.Alankrita Shrivastava என்கிற பெண் இயக்குநர் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைவிழாக்களில் திரையிடப்பட்டதோடு ‘பெண் சமத்துவம் பேசும் படைப்பு’ என்கிற பிரிவில் விருதுகளையும் பெற்றுள்ளது.துவக்க கட்டத்தில், இந்தியாவில் இந்தப் படைப்பை திரையிடுவதற்கான அனுமதியை சென்சார் போர்டு தர மறுத்து விட்டது. ‘அதீதமான பாலியல் காட்சிகள், ஆட்சேபகரமான வார்த்தைகள், Phone Sex, இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம்’ போன்றவை சமூகத்தில் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மேல் முறையீட்டிற்குப் பின், ஆட்சேபகரமான இடங்களில் காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்ட பிறகே இங்கு வெளியாகும் அனுமதி கிடைத்தது. இயக்குநரும் தயாரிப்பாளரும் தணிக்கைத்துறையுடன் மிக நீண்டதொரு போராட்டத்தை இதற்காக நிகழ்த்த வேண்டியிருந்தது.பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களும் பெருமூச்சுகளும் குற்றங்களும் நிறைந்திருக்கும் இந்தியா போன்ற தேசங்களில் அவர்களைப் பற்றிய சரியான சித்திரங்களின் நகல்களை திரையில் காட்டுவதற்கான சூழல் கூட இல்லாதபடியான கண்காணிப்பும், பழமைவாத மனோபாவமும் நிறைந்துள்ள சமூகப் போக்கு துரதிர்ஷ்டமானது.‘A’ சான்றிதழ் என்பது வயது முதிர்ச்சியை மாத்திரம் சுட்டவில்லை, அதனுடன் இணைந்து வளர்ந்திருக்க வேண்டிய மனமுதிர்ச்சியையே பிரதானமாக சுட்டுகிறது. ஆனால் அவ்வாறான அகமுதிர்ச்சியைக் கொண்ட மக்களின் சதவீதம் என்பது இந்தியாவில் குறைவு. பொதுச்சமூகத்தில் மட்டுமல்ல, தணிக்கைத் துறையில் இருப்பவர்களுக்கு கூட இது சார்ந்த முதிர்ச்சி குறைவு என்பதையே இது போன்ற தணிக்கை நடவடிக்கைகள் காட்டுகின்றன.**

போபால் நகரம். நெரிசலான சாலையில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடம் ‘Hawai Manzil’. அந்தக் கட்டிடத்தில் குடியிருக்கும் வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்த, வெவ்வேறு வயதுகளில் உள்ள நான்கு பெண்களின் கதை இது. கட்டிடத்தின் உரிமையாளர் ‘Usha Buaji. 55 வயதான பெண்மணி. விதவை. ஆன்மீகப் புத்தகத்தின் உள்ளே பாலியல் கதைப் புத்தகங்களை ஒளித்து வைத்து படிப்பவர். இவர் வாசிக்கும் பாலியல் கதைகளின் நாயகி ‘ரோஸி’. கதைகளில் விவரிக்கப்படும் பாலியல் விவரணைகளின் வழியாக தன்னையே அந்த ரோஸியாக நினைத்துக் கொள்கிறார் உஷா. இவரின் இந்த முகம் எவரும் அறியாதது.பேரனை நீச்சல் வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் போதுதான் கட்டழகுடன் இருக்கும் நீச்சல் பயிற்சிதரும் அந்த இளைஞனைப் பார்க்கிறார். தான் வாசிக்கும் கதைகளில் வரும் நாயகனைப் போலவே அவன் இருக்கிறான். எனவே தானும் நீச்சல் வகுப்பில் சேர்கிறார். அவன் மீதுள்ள ஈர்ப்பைச் சொல்ல உள்ளூற தயக்கம். இந்தியப் பெண்களுக்கே உள்ள ஆசாரமனம் சார்ந்த அச்சமும் வெட்கமும் அவரைத் தடுக்கிறது.எனவே ஓர் உபாயம் செய்கிறார். கதையில் வரும் நாயகியான ‘ரோஸி’ என்கிற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டு இளைஞனுடன் தினமும் தொலைபேசியில் பேசுகிறார். ‘யாரோ ஒரு இளம்பெண்’ என நினைத்துக் கொண்டு அவனும் பேசுகிறான். ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைக்கும் பாலியல் சார்ந்த உரையாடல்கள்.கடைசியில் குட்டு அம்பலப்பட்டு உஷா. தனது குடும்பத்தாரால் சாலையின் நடுவே தள்ளப்படுகிறார். “கிழவி.. இதெல்லாம் உனக்குத் தேவையா?’ ஆசாரப் பெண்மணியாக இருந்த சமயத்தில் கட்டிடத்தை விற்கலாமா வேண்டாமா என்கிற முக்கியமான முடிவு முதற்கொண்டு உஷாதான் எல்லாவற்றையும் தீர்மானம் செய்வார். கடினமான சிக்கல்களைக் கூட துணிவுடன் எதிர்த்து நிற்பார்.  இவரின் பிள்ளைகள் இவர் சொல்லுக்கு மறுசொல் பேச முடியாமல் திகைத்து நிற்பார்கள்.ஆனால் இவருடைய பாலியல் விழைவு விஷயம் தெரிய வந்த ஒரே கணத்தில் இவரின் நிலைமை தலைகீழாகி விடுகிறது. மகன்கள் இழிவாகப் பேசுகின்றனர் மருமகள்கள் வெறுப்பாக பார்க்கின்றனர். நீச்சல் பயிற்சி இளைஞனும், தான் ஏமாந்த வெறுப்போடு … கிழவி.. உன் குரலைக் கேட்டா ஏமாந்தேன்?’ என்று அருவருப்பாக பார்க்கிறான். அவள் வாசித்த பாலியல் கதைப்புத்தகங்கள் கிழித்து வெளியே எறியப்படுகின்றன. அவரும் வீட்டிற்கு வெளியே தள்ளப்படுகிறார். அதுவரை மூடி வைக்கப்பட்ட உஷாவின் ரகசிய ஆசைகளைப் போலவே கிழித்தெறியப்பட்ட தாள்களும் காற்றில் நிர்வாணமாக பறக்கின்றன.தன் ஆதாரமான இச்சைகளை அடக்கிக் கொண்டு, ஆணாதிக்க கருத்தாக்கமான ‘கற்பு’ எனும் நெறியை பின்பற்றும் வரைதான் ஓர் இந்திய பெண்ணின் மதிப்பும் செல்வாக்கும் நீடிக்கிறது. அது விதவையானாலும் சரி, திருமணம் ஆகாத முதிர்கன்னிகளாக இருந்தாலும் சரி, பாலியல் சார்ந்த ஏக்கங்களை மறைத்துக் கொள்ளும் வரைதான் ஆண்கள் உலகம் அவர்களை சிலை வைத்து வழிபடுகிறது. அவைகளில் இருந்து ஒரு துளி பிசகினாலும் குப்பைத் தொட்டியில் எடுத்து வீசுகிறது. கற்புதான் ஒரு பெண்ணின் மதிப்பிற்கான அளவுகோலா என்கிற அழுத்தமான கேள்வியை இந்தப் பகுதி உணர்த்துகிறது. முதியவர்களின் காமம் ஏன் நகைச்சுவையாகவும் தகாததாகவும் பார்க்கப்படுகிறது என்கிற கேள்வியும்.உஷாவின் அதே வயதுள்ள ஓர் ஆண் தன் துணையை இழந்தவுடன் இரண்டாம் திருமணம் பற்றிய பேச்சு இயல்பாக வருகிறது. ஆனால் வயதான பெண்ணுக்கு திருமணம் என்றாலோ துணை என்றாலோ முகஞ்சுளிக்கும் நிலைமைதான் நீடிக்கிறது.**நீச்சல் வகுப்பில் சேர்வதற்காக தனக்கேற்ற நீச்சல் உடை ஒன்றை அச்சமும் திகைப்புமாக உஷா வாங்கும் காட்சியொன்று வருகிறது. ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல என்பதை தொடர்புள்ள காட்சிகள் அவல நகைச்சுவையுடன் விவரிக்கின்றன.  இதற்குத் தொடர்பாக தமிழ் திரைப்படத்தின் காட்சியொன்றும் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘காஞ்சனா’ திரைப்படத்தில், நாயகனின் தாயான கோவை சரளா, இளம்பெண் அணியும் ஸ்விம் சூட் ஒன்றைப் பார்த்து “இதை நான் அணிந்தால் எப்படியிருக்கும்?” என்று கேட்கிறார். உடனே பழைய திரையிசைப்பாட்டு ஒன்று பின்னணியில் ஒலிக்க, அவர் அந்த உடையுடன் நீச்சல் குளத்தில் நீந்துவது போன்ற காட்சி நகைச்சுவை நோக்கில் காட்டப்படுகிறது.மேல்தட்டு வர்க்கத்தினர் அல்லாமல் இதர சமூகத்தின் பெண்கள்  நீச்சல் பழக வேண்டுமெனில் அது சார்ந்த வெளியோ, கலாசாரமோ இங்கு இல்லை. ஒரு சராசரியான இந்தியப் பெண்மணி நீச்சல் கற்றுக் கொள்வதற்கான அவசியமே இங்கு இல்லையா? இப்படியான அடிப்படையான விருப்பங்கள் கூட ஏன் மறுக்கப்படுகின்றன? ஏன்  அவை நகைச்சுவையுடன் பார்க்கப்படுகிறது? புடவையுடன் நீச்சல் கற்றுக் கொள்ள முடியுமா என்ன?

இப்படி பல கேள்விகளை இது தொடர்பான காட்சிகள் எழுப்புகின்றன.**

Rehana Abidi ஒரு கல்லூரி மாணவி. இஸ்லாமியக் குடும்பம். கல்லூரி நேரம் முடிந்ததும் தந்தை நடத்தும் கடையில் வந்து மாங்கு மாங்கென்று ‘புர்கா’ தைக்க வேண்டும். தையல் கடையின் மூலம்தான் குடும்ப வருமானம். இஸ்லாமியச் சமூகத்திற்கென்று உள்ள பிரத்யேகமான கட்டுப்பாடுகள் உள்ள ரெஹ்னாவிற்கு ரகசியமான ஆசைகள் பல உள்ளன.


அவள் மனதிற்குள் வாழ்வது வேறு உலகத்தில். மேற்கத்திய கலாசாரத்தைச் சார்ந்த உலகம். அமெரிக்கப் பாடகி Miley Cyrus தான் அவளுடைய ஆதர்சம். அதைப் போலவே தானும் ஒரு இசைப்பாடகி ஆட வேண்டுமென்று விருப்பம். கல்லூரிக்குச் செல்லும் வழியில் தான் அணிந்திருக்கும் புர்காவை கழற்றி விட்டு ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன ஆடைகளை அணிந்து கொள்வாள்.வீட்டாரிடம் இப்படியான பொருட்களை வாங்கித் தர கேட்க முடியாது என்பதால் ஷாப்பிங் மால் சென்று லிப்ஸ்ட்டிக் உள்ளிட்ட பொருட்களை களவாடுகிறாள். மேல்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்களிடம் சிரமப்பட்டு தன்னைப் பொருத்திக் கொள்ள நினைக்கிறாள். ‘இத்தனை சின்ன ஊரில் Miley Cyrus பற்றி அறிந்த ஒருத்தி இருப்பாள் என்பதே எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது’ என்கிற ஆண் நண்பனால் ஈர்க்கப்படுகிறாள்.புகைப்பிடிக்கவும் மதுவருந்தவும் கற்றுக் கொள்கிறாள். கல்லூரியில் ஜீன்ஸிற்கு தடைவிதிக்கும் போது அது சார்ந்த போராட்டத்தில் சென்று சிறைக்குச் செல்கிறாள். கோபமடையும் தகப்பனிடம் எப்படியோ சமாளித்தாலும் வீட்டில் சிறை வைக்கப்படுகிறாள். தன் ஆண் நண்பனால் கலைக்கப்படுவதற்கு முன்பு சட்டென்று விழித்துக் கொண்டு வீடு திரும்புகிறாள்.பெற்றோரால் அறைக்குள் தள்ளப்பட்டதும் பின்னணி இசையே இல்லாமல் ஆவேசமாக இவள் நடனமாடும் காட்சி ஒன்றே, இவளது பாத்திரத்தை வலிமையாக நிறுவுகிறது. ரெஹ்னாவாக Plabita Borthakur அற்புதமாக நடித்துள்ளார்.**மூன்றாவது பெண் லீலா. தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம். தாய் ஓவியக்கல்லூரியில் நிர்வாண மாடல். லீலாவிற்கு அந்த சிறிய நகரத்திற்குள் அடைபட்டிருப்பது பிடிக்கவில்லை. டெல்லிதான் அவளது கனவு. திருமண நிறுவனம் ஒன்றைத் துவங்கி வெற்றியடைய வேண்டும் என்று போராடுகிறாள். ஹனிமூன் செல்லும் தம்பதிகளுடன் கூடவே சென்று சிறந்த ஒப்பனையுடன் அவர்களை புகைப்படம் எடுத்து தரும் அவளுடைய புதுமையான திட்டம் அத்தனை வரவேற்கப்படுவதில்லை.

தன்னுடைய ஆண் நண்பனும் வணிக கூட்டாளியுமான ஹர்ஷத் என்கிற புகைப்படக்காரனுடன் அவளுக்கு உடல்ரீதியான தொடர்பும் உண்டு. ஆனால் வீட்டில் வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்து விடுகிறார்கள். நிச்சய நாள் அன்று புது மணமகன் வீட்டின் ஒருபுறம் அமர்ந்திருக்க, இன்னொரு இருட்டு மூலையில் காதலனுடன் உறவு கொள்கிறாள். அதனை வீடியோவும் எடுத்து வைத்துக் கொள்கிறாள். ‘மவனே.. என்னை விட்டுட்டுப் போயிடலாம்’னு நெனச்சே’ இதுதான் சாட்சி. பார்த்துக்கோ’ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்தாலும் தன் காதலனுடன் ரகசியமாக டெல்லிக்கு ஓடிச் சென்று புது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது  அவளுடைய ஏற்பாடு. ஆனால் இருவருக்குள் ஏற்படும் சண்டை தடையாக வந்து நிற்கிறது. இவளுடைய தீராத அன்பை புரிந்து கொள்ளாத அவன்,  ‘உனக்கு செக்ஸ்தான் முக்கியமா?’ என்று கேட்டு அவமானப்படுத்தி விடுகிறான். வேறு வழியில்லாமல் நிச்சயிக்கப்பட்ட மணமகன் பக்கம் வந்து நிற்கிறாள். ஆனால் காதலன் மீண்டும் வந்து அழைக்கிறான். இருபக்கமான தத்தளிப்பு வீடியோக்காட்சி வெளிப்படுவதின் மூலம் முடிவிற்கு வருகிறது. லீலாவாக Aahana Kumra துணிச்சலான காட்சிகளில் நடித்துள்ளார்.**

Shireen Aslam என்கிற இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தலைவியாக நடித்துள்ளவர், பிரபல நடிகை கொன்கொனா சென். மூன்று மகன்கள். ஆனால் தாம்பத்யம் என்பதை இவர் முறையாக அனுபவித்தது இல்லை. இவளுடைய கணவன் பாலியல் இயந்திரத்தைப் போலவே இவளைப் பயன்படுத்துவான்.  வருவான். பிஸ்டன் பம்பு போல இயங்குவான். சென்று விடுவான். அவ்வளவுதான். இவளுடைய தனிப்பட்ட உணர்ச்சிகளைப் பற்றியோ ஆசைகளைப் பற்றியோ அக்கறை கொள்ளாத இந்திய ஆணின் பிரதிநிதி. ஆசையாக முத்தம் கூட கொடுத்தது கிடையாது. முத்தம் கூட இல்லாத கலவி நரகம்தானே? பலமுறை அபார்ஷன் ஆவதால் இவளது உடல்நலம் கெடுகிறது.கணவன் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிவதாகச் சொன்னாலும் சரியான வேலை கிடையாது. இவள்தான் குடும்பத்தின் செலவை பார்த்துக் கொள்கிறாள். இவள் வீடு வீடாகச் சென்று சேல்ஸ் கேர்ள் வேலை செய்வது கணவனுக்குத் தெரியாது. கிளினிக்கில் பணிபுரிவதாகச் சொல்லி வைத்திருக்கிறாள்.கணவனாகப்பட்ட ஆசாமி பிள்ளைகளிடம் கூட சிரித்துப் பேச மாட்டான். சட்டென்று எரிந்து விழுவான். எந்த நேரத்தில் கோபப்படுவான் என்று தெரியாமல் வெடிகுண்டுடன் பழகுவது போலவே அவனுடன் இருக்க வேண்டும். அழைத்த நேரத்தில் படுக்கையில் தயாராக இருக்க வேண்டும். இவளுடைய பதவி உயர்வு பற்றிக் கூட அவனிடம் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. நிச்சயம் கோபப்படுவான்.ஒரு சராசரியான இந்தியப் பெண் படும் அத்தனை அவலங்களையும் இவருடைய பாத்திரம் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. தனக்குத் தெரியாமல் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய நேர்கிறது. அதற்கும் கலங்காமல் தன் சமயோசித புத்தியால் அந்தச் சிக்கலைத் தீர்க்கிறாள். தன் சொந்த பிரச்சினையில் தலையிட்டது, பதவி உயர்வின் மூலம் தன்னை விடவும் அதிகம் சம்பாதிப்பது ஆகிய இரண்டு தவறுகளுக்காகவும் கணவன் இவளுக்குத் தண்டனை தருகிறான். எப்படி? அதே கொடூரமான வன்கலவி.**இது பெண் மையத்திரைப்படம்தான் என்றாலும் அது சார்ந்த உரத்த அழுகைகளோ, கேவல்களோ, மிகையான சித்திரங்களோ என்று எதுவுமே இந்த திரைப்படத்தில் கிடையாது. விதம் விதமான நான்கு பெண் பாத்திரங்களையும் அவர்களின் பிரத்யேகமான, இயல்பான உலகில் இயங்க வைப்பதின் மூலமாக ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் சித்திரத்தை சரியாக வரைந்து விடுகிறார் இயக்குநர்.பொதுவாக பெண் மையத் திரைப்படங்கள் என்றால் அவர்கள் ஆணுலகத்தால் விதம் விதமாக கொடுமைப்படுத்தப்படுவதான காட்சிகளும், பெண்களின் மீது பார்வையாளர்களின் அனுதாபத்தை கோருவதான காட்சிகளும் அமைந்திருக்கும். ஆனால் இதில் சித்தரிக்கப்படும் பெண்களின் ஆசைகளும் கனவுகளும் இந்தியக் கலாசாரத்தின் நோக்கிலும் ஆண்களின் பார்வையிலும் ஆபாசமானவை, பொருந்தாதவை. ‘இதெல்லாம் தேவையா, கொழுப்புதானே?’ என்று ஆணுலகை கேட்க வைப்பவை. ஏன் பழமைவாத அறியாமையில் ஊறிப் போயிருக்கும் பெண்கள் கூட ஆட்சேபிப்பவைதான். ஆனால் ஆண்கள் மிக இயல்பாக அனுபவித்துக் கொண்டிருக்கும் விஷயங்கள்தான் அவை.இப்படியான கனவுகளை சித்தரிப்பதின் மூலம் இயக்குநரும் அதையேதான் பார்வையாளர்களை கேட்க முயல்கிறார். ஆண்களின் உலகம் சில ஆதாரமான இச்சைகளை, விருப்பங்களை தன்னியல்பாகவும் சுதந்திரமாகவும் அடையும் போது அதே போன்ற ஆசைகள், கனவுகள் பெண்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?லிப்ஸ்டிக், ஜீன்ஸ் போட்டுக் கொள்வது, தனக்குப் பிடித்தமான இளைஞனோடு பெருநகரத்தில் வாழ நினைப்பது, முதிர்வயது காமத்தை இயல்பாக அடைய நினைப்பது, முரட்டுக் கணவனை சாராமல் பொருளாதார சுதந்திரத்துடன் இருப்பது, எவ்வித தொந்தரவுகளும் இன்றி கட்டிலில் நிம்மதியாக தூங்குவது, திருமணம் என்கிற பெயரில் தன் உடல் மீது நிகழ்த்தப்படும் பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பது, இசைப்பாடகியாவது ..என்று பெண்களுக்கு பல அடிப்படையான கனவுகள் இருக்கின்றன. ஆனால் ஆணாதிக்கம் விதித்திருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளால், அவர்களின் ஒவ்வொரு சிறிய கனவும் மிதிக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. எனில் தனக்காக வாழாமல் அனைத்து ஆசைகளையும் அடக்கிக் கொண்டு ஆண்களால் அனுமதிக்கப்பட்ட சிறிய உலகில் வாழ்ந்து மடிய வேண்டுமா என்கிற ஆதாரமான கேள்வியை இத்திரைப்படம் வலிமையாக எழுப்புகிறது.இயக்குநர் Alankrita Shrivastava இந்தக் கேள்விகளை நேரடியாக எந்தவொரு இடத்திலும் எழுப்பவில்லை. ஆனால் பார்க்கும் ஆண்களின் சமூகம் மனம் கூசி தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை இயல்பான காட்சிகளுடன் உருவாக்கியுள்ளார். தங்களின் அடிப்படையான கனவுகள், விருப்பங்கள் பறிபோவதைப் பற்றிக் கூட அறியாமையுடன் இருக்கும் பெண்கள், ‘அட ஆமாம்ல’ என்று தான் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை வியக்கும் காட்சிகளும் இருக்கின்றன.ஆண்களின் உலகத்தால் தங்களின் கனவுகள் நசுக்கப்பட்ட நான்கு பெண்களும் இணைந்து கிழித்து எறியப்பட்ட பாலியல் கதைப்புத்தகத்தின் பக்கங்களை புகைப்பிடித்துக் கொண்டே வாசிப்பதுடன் படம் நிறைகிறது. அவர்கள் ஊதும் புகை, ஓர் எள்ளலாக ஆணுலகத்தின் மீது சென்று விழுகிறது.ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என்று நேர்த்தியான தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியுடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. திணிக்கப்பட்ட ஆபாசம் என்று எதுவுமில்லை. பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்யும் கோளாறான உத்திகளும் இல்லை. பின் எதற்காக தணிக்கைத் துறை அதிர்ச்சியடைந்து இதைச் தடை செய்யவும், 16 இடங்களை வெட்டிய பிறகு காட்சிப்படுத்தவும் அனுமதி தந்தது?தணிக்கைத் துறையில் இருப்பவர்களும் பெரும்பாலும் ஆண்கள்தானே. நிச்சயம் உள்ளூற பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள். அதுவே ஒருவகையில் இத்திரைப்படத்தின் வெற்றி. 


suresh kannan

Tuesday, November 12, 2019

Article 15 | 2019 | India | இயக்குநர் - Anubhav Sinha

அயல் திரை  - 16

‘சாதி என்னும் நோய்க்கூறு'உலக சினிமா என்றதுமே சிலபல சினிமா ஆர்வலர்களுக்கு இந்தியா என்பது செளகரியமாக மறந்து போகும். சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ இந்திய திரைப்படக்கலையின் உன்னதத்தை உலக அரங்கிற்கு அடையாளம் காட்டிய முன்னோடியான திரைப்படம். பெருகி வழிந்தோடும் வணிகநோக்கு திரைப்படங்களுக்கு இடையில் ஏறத்தாழ சர்வதேச தரத்திற்கு நிகரான படைப்புகளும் இங்கு உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ அப்படியொரு துணிச்சலான. தரமான முயற்சி. ஆஸ்கர் விருதிற்காக இந்தியத் தரப்பிலிருந்து அனுப்புவதற்கு தேர்வாகியிருந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. (ஆனால் ‘Gully boy’ என்கிற சுமாரான திரைப்படத்தை அனுப்பியிருக்கிறார்கள். நம் ஆஸ்கர் கனவு, கனவாகவே இருக்கட்டும் என்கிற நல்லெண்ணம் போல).

இந்தியாவில் குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் ஆர்ப்பாட்டமின்றி அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் இது. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு கூறுகளையும் ஆபத்துக்களையும் உறுத்தாமல் இணைத்திருப்பது இந்தத் திரைப்படத்தை முக்கியமாக்குகிறது.

அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு  சட்டத்தின்  ‘பிரிவு 15’ என்ன சொல்கிறது?  ‘மதம், சாதி, இனம், நிறம், பிறப்பிடம், பாலினம் போன்றவற்றின் காரணமாக அரசு எவரிடமும் பாரபட்சமாக நடந்துகொள்ளக் கூடாது’ என்கிறது.

1950, ஜனவரி 26 அன்று முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் குடியரசாகி ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் ஆகியும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகள் இன்னமும் புத்தகங்களில் மட்டுமே பத்திரமாக உள்ளன. அவை நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இந்த உண்மையை இந்தத் திரைப்படம் கச்சிதமாக பதிவு செய்துள்ளது. ‘அரசியல் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அதை எரிக்கும் முதல் நாளாக நானே இருப்பேன்’ என்று அம்பேத்கர் சொன்னார். அந்தக் கோபத்தையும் இந்தத் திரைப்படம் நேர்மறையாக பதிவாக்கியுள்ளது.

இந்தியாவின் பிரதானமான நோய்மைக்கூறுகளுள் ஒன்று சாதியம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் போல இந்தியா முழுக்க சாதி, மத அரசியல் நீக்கமற நிறைந்துள்ளது. நகரங்களில் சற்று கண்ணுக்குத் தெரியாத கிருமி போல இருக்கும் இந்தக் கொடுமை, கிராமப்புறங்களில் அப்பட்டமான முறையில் முகத்தில் அறைவதாக இருக்கிறது. அப்படியொரு இந்தியக் கிராமத்தின் அசலான சித்திரத்தை இந்த திரைப்படம் வலுவாக சித்தரிக்கிறது.

**

டெல்லியில் உயர்கல்வியை முடித்திருக்கும் அயன் ரஞ்சன், ஐரோப்பிய வாசத்தால் அந்த மனநிலையில் வாழ்பவன். “அரசுப் பணியை செய்ய வேண்டும்’ என்கிற தந்தையின் வற்புறுத்தல் காரணமாக இந்தியக் காவல்துறையில் உதவி ஆணையராக (ACP) பதவியேற்கிறான். உள்துறை செயலாளரிடம் ‘கூல் சார்’ என்று இயல்பாக சொன்ன காரணத்திற்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமத்திற்கு தூக்கியடிக்கப்படுகிறான்.

கிராமத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வரும் அயனுக்கு அங்குள்ள சாதியப் படிநிலைகளின் யதார்த்தங்களும் அவை சார்ந்த கொடுமைகளும் மெல்ல உறைக்க ஆரம்பிக்கின்றன.. கடுமையான தாகமாக இருந்தாலும் கூட தாழ்த்தப்பட்ட சாதியினர் விற்கும் நீரை அருந்தாத, அவர்களின் நிழல் கூட மேலே படுவதை விரும்பாத இடைநிலைச்சாதிக்காரர், இவர்களையும் இணைத்து மலினமாக பார்க்கும் ஆதிக்கச் சாதிக்காரர், அவற்றின் உட்பிரிவுகளிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள் போன்றவை அயனை ஆச்சரியத்திலும் எரிச்சலிலும் ஆழ்த்துகிறது. ஆனால் அவனுடைய கோபத்தால் ஒரு உபயோகமும் இல்லை. கெட்டி தட்டிப் போன சாதியத்தை அவனால் துளி கூட அசைக்க முடியவில்லை. “அவங்களை வெக்க வேண்டிய இடத்துலதான் வெக்கணும்” என்று ஆதிக்க சாதியினர் ஒருபுறம் கொக்கரிக்க, “என்ன சாமி.. பண்றது.. எங்க விதி” என்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதை ஏற்றுக் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிளம்பும்  சில கோபக்கார இளைஞர்களை ‘தீவிரவாதிகள்’ என்கிற முத்திரையோடு அரசு இயந்திரம் வேட்டையாடும் அவலமும் இன்னொரு புறம் நிகழ்கிறது.

**

மூன்று தலித் சிறுமிகள் காணாமல் போன வழக்கோடு அயன் ரஞ்சனின் காவல்துறை பணி ஆரம்பிக்கிறது. அதில் இரண்டு சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்குகிறார்கள். ஒரு சிறுமி என்னவானாள் என்பது தெரியவில்லை. ‘இரு சிறுமிகளுக்கிடையே தகாத உறவு இருந்ததாகவும் அதனால் அவர்களின் பெற்றோர்கள் ஆணவக் கொலை செய்து விட்டதாகவும் காவல்துறை வழக்கை ஜோடிக்கிறது. இதற்காக சிறுமிகளின் தந்தைகளையும் அடித்து உதைத்து கைது செய்கிறது. தங்களின் பிரியமான மகள்களை இழந்ததோடு கொலைப்பழியையும் ஏற்க வேண்டிய பரிதாபமான நிலைக்கு அவர்கள் ஆளாகின்றார்கள்.


அயன் ரஞ்சன் மெல்ல இந்த வழக்கிற்குள் இறங்குகிறான். காணாமல் போன சிறுமி எங்கோ உயிருடன்தான் இருப்பாள் என்று அவனின் உள்ளுணர்வு சொல்கிறது. அவளைக் கண்டுபிடித்து விட்டால் இந்த வழக்கு தொடர்பான விடைகள் கிடைத்து விடும் என்று நம்புகிறான். ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதானதாக இல்லை. ஒருபுறம் அரசு இயந்திரமும் இன்னொரு புறம் சாதியமும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன.

நேர்மையும் மனச்சாட்சியும் உள்ள சில காவல்துறையினரோடு விசாரணையில் இறங்குகிறான் அயன் ரஞ்சன். அந்த ஊரில் தோல் தொழிற்சாலை நடத்தும் செல்வாக்குள்ள நபரான அன்ஷூ என்பவனின் மீது சந்தேகம் வருகிறது. மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக சிறுமிகள் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் மற்ற தொழிலாளர்கள் அச்சப்பட்டு கூலி உயர்வு கேட்டு போராட மாட்டார்கள் என்பது அவனது திட்டம். “நாங்களா பார்த்து கொடுக்கறதுதான் அவங்க இடம். அவங்களா கேட்டா நசுக்கிடுவோம்” என்று விசாரணையில் எக்காளத்தோடு பதில் சொல்கிறான்.

இந்த உண்மை தெரிந்தாலும் அயன் ரஞ்சனால் அன்ஷூவை எதுவும் செய்யமுடியவில்லை. அன்ஷூவின் செல்வாக்கும் சாதியும் குறிப்பாக கருப்பு ஆடுகளாக இருக்கும் சக அதிகாரிகளின் துரோகமும் அவனுடைய கையைக் கட்டிப் போடுகின்றன. “நீங்க இருந்து போயிடுவீங்க சார்.. நாங்க இங்கயேதான் இருந்தாகணும். வெட்டிப் போட்டுடுவாங்க” என்று பதைபதைக்கிறார் இன்ஸ்பெக்டர் பிரம்மதத். இவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அது சார்ந்த பெருமிதத்தோடு பல கீழ்மைகளைச் செய்கிறார். தெரு நாயின் மீது அன்பையும் கருணையையும் காட்டும் இவர், தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலேயே மனிதர்கள் மீது அவற்றைக் காட்ட மறுக்கிறார். இந்த முரண் மிக இயல்பாகப் பதிவாகியுள்ளது.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் மூலம் சிறுமிகள் வன்கலவி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் ரிப்போர்ட் எழுதப் போகும் இளம் மருத்துவரை பிரம்மதத் மிரட்டுகிறார். பிறகு அயன் ரஞ்சன் தரும் துணிச்சல் காரணமாக சாட்சியங்களை வலுவாக்குகிறார் இளம் மருத்துவர்.

ஆனால் ஒருநிலையில் அயன் ரஞ்சனின் அத்தனை முயற்சிகளுக்கும் பெரிய முட்டுக்கட்டையைப் போடுகிறது மேலிடம். இந்த வழக்கு சிபிஐ  விசாரணைக்கு மாற்றப்படுகிறது. சிபிஐ அதிகாரியாக வரும் பணிக்கரும் (நம்ம ஊர் நாசர் இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்). சாதி மற்றும் அதிகார வெறி கொண்டிருப்பதாகத் தெரிவதால் இந்த வழக்கிற்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏறத்தாழ பறிபோகிறது. அயன் ரஞ்சன் சஸ்பெண்ட் ஆகிறார்.

இந்த வழக்கு என்னவானது, காணாமல் போன சிறுமி கிடைத்தாளா, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா, அயன் ரஞ்சனின் போராட்டம் வெற்றி பெற்றதா என்பதையெல்லாம் இயல்பான காட்சிகளாகவும் அதே சமயத்தில் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். நேர்மறைத்தன்மையின் அழகு துளிர்க்கும் நையாண்டியின் இறுதிக்காட்சியோடு இந்தப் படம் முடிந்திருப்பதுதான் சிறப்பு.

**

ஏஸிபி அயன்ரஞ்சனாக, ஆயுஷ்மான் குரானா அற்புதமாக நடித்திருக்கிறார். நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலோடு அந்தக் கிராமத்திற்குள் நுழைகிறார் சாதியமும் பழமைவாதமும் நிறைந்திருக்கும் அந்த ஊரில் ஓர் அயல் கிரக ஜீவி போல் தாம் உணர்வதை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆயுஷ்மான்.

அயன் ரஞ்சன், காவல்துறையில் உள்ள தன் சக ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் சாதியைப் பற்றி விசாரிக்கும் காட்சி முக்கியமானது. அவர்களின் சாதியை அறிவது அவர் நோக்கமல்ல. அதன் மூலம் ஒவ்வொரு சாதியிலும் உள்ள உட்பிரிவுகள், அதனுள்ளும் ‘தான்தான் மேலே’ என்று அடித்துக் கொள்ளும் அபத்தம், ஆதிக்க சாதியினரின் பிரிவுக்குள்ளேயும்  இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், உயர்வு மனப்பான்மைகள் போன்றவற்றை அவல நகைச்சுவையுடன் அந்தக் காட்சி வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை அடையாளமாக்க முயலும் சமகால அரசின் பல அத்துமீறல்கள் இதில் துண்டுக்காட்சிகளின் வழியாக விரிகின்றன.

கசாப்புக்கடையில் பணிபுரியும் தலித் இளைஞர்கள் நடுத்தெருவில் அடிக்கப்படுவது. சாதியக்கொடுமைகள் காரணமாக மதம் மாறும் தலித் சமூக மக்களை ‘வாருங்கள், இந்துக்களாக ஒன்றிணைந்து நிற்போம்” என்று மதத்தலைவர்கள் தந்திரமாக அரவணைக்க முயல்வது, தலித்களுடன் ஒன்றாக இணைந்து உணவருந்துவதாக பொது மேடையில் நாடகமாடும் மதக்கட்சியினர் அவர்களுக்கான பாத்திரங்களை தனியாக கொண்டு வருவது, சில தலித் தலைவர்களே அறியாமை அல்லது ஆதாயம் காரணமாக கைகோர்த்து நிற்பது, ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேச வற்புறுத்தும் சிபிஐ அதிகாரி … என்று பல காட்சிகள் சமகால அரசியலின் மீது விமர்சனங்களாக அமைந்துள்ளன. இவை திரைப்படத்தின் இடையே உறுத்தாமலும் பிரச்சாரமாக மாறாலும் நிகழ்ந்திருப்பதுதான் அற்புதம்.

**

தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளைப் பேசக் கூட ஆதிக்கச் சாதியிலிருந்துதான் ஒருவர் வர வேண்டுமா? என்று அயன் ரஞ்சன் பாத்திரம் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது. அவன் பிறப்பால் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவன் என்பதை விடவும் ‘வெளியில் இருந்து வந்தவன், அந்த நோக்கில் பார்ப்பவன்’ என்பதுதான் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது. 

டெல்லியில் உயர்கல்வியை முடித்தாலும் மேலை நாட்டில் சில காலம் ஐரோப்பிய மனநிலையில் வாழ்ந்தாலும் இந்தியாவிலுள்ள சாதியமைப்புகள் பற்றி அவனுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனால் ஒரு நகரவாசி என்னும் எல்லைக்குள்ளேதான் இவற்றை அவன் அறிவான். கிராமத்திற்குள் நுழையும் போதுதான் சாதி என்னும் நச்சுக்காற்றின் வீச்சை அவனால் துல்லியமாகவும் காத்திரமாகவும் உணர முடிகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாமல் அவனுக்கு மூச்சுத்திணறுகிறது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

மாறாக  கிராமத்து சூழலிலேயே வாழ்பவர்கள் இந்த அவலமான சூழலை மிக இயல்பாக கடக்கின்றார்கள். தினம் தினம் அதனுடனேயே வாழ்வதால் அவர்களுக்கு எதுவும் உறைப்பதில்லை. ‘சாதியைக் காரணம் காட்டி ஒரு சக மனிதனுக்கு கீழ்மைகளைச் செய்கிறோமே” என்று ஆதிக்கச் சாதியினருக்கு உறைப்பதில்லை. இதைப் போலவே இன்னொரு பக்கம், ‘தான் ஏன் இப்படி பல கொடுமைகளைச் சகித்துக் கொள்ள வேண்டும்?” என்பது குறித்த விழிப்புணர்வு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரிடமும் இல்லை. “எத்தனையோ காலமா இப்படித்தாங்கய்யா இருக்குது. எதையும் மாத்த முடியாது” என்னும் விரக்தியிலும் ஆண்டைகளை அனுசரிக்க வேண்டிய அச்சத்திலும் இருக்கிறார்கள்.

சகதியிலேயே தொடர்ந்து வாழும் ஒரு நபருக்கு எவ்வாறு அந்த நாற்றம் பழகி அதுவே இயல்பென்று வாழ்கிறாரோ, அப்படியே இவர்களும் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதற்கு மாறாக வெளியில் இருந்து வருபவருக்குத்தான் இந்தச் சூழலின் அபத்தம் அதிகமாக உறைக்கிறது. அயன் ரஞ்சன் அப்படிப்பட்ட ஒருவன் என்பதாகத்தான் பார்க்க முடியும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்தும் இவ்வாறான கோபத்தில் கிளம்பும் சிலர் ‘பயங்கரவாதிகளாக’ சித்தரிக்கப்பட்டு காவல்துறையால் வேட்டையாடப்படுகிறார்கள்.

**

இந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மிகச் சிறப்பான நடிப்பு என இன்ஸ்பெக்டர் பிரம்மதத்-ஆக நடித்த மனோஜ் பஹ்வா-வை சொல்ல வேண்டும். அடிப்படையில் நகைச்சுவை நடிகரான இவர், இந்த திரைப்படத்தில் இயல்பான எதிர்மறைத்தன்மையை வெளிப்படுத்தி தன் வில்லத்தனத்தை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். சாதியத்தில் ஊறிப்போன ஒரு கிராமத்துக்காரரின் சித்திரத்தையும் துல்லியமாக பிரதிபலித்துள்ளார்.

செல்வாக்குள்ள நபர்களிடம் பம்முவதாக இருக்கட்டும், சொந்த சாதிக்காரர்களுக்கு சாதகமாக நடப்பதாகட்டும், தன் பேச்சைக் கேட்காமல் விசாரணையைத் துரிதப்படுத்தும் அயன் ரஞ்சனைப் பார்த்து உள்ளூற தவிப்பதாகட்டும், அவற்றிற்கு சாமர்த்தியமாக முட்டுக்கட்டை போடுவதாகட்டும், தன்னுடைய கீழ்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்று பதறுவதாகட்டும்.. ஏறத்தாழ அனைத்துக் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

போலவே வயதான கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் குமுத் மிஸ்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்தது. காவல்துறையின் நடைமுறை அநீதிக்கும் மனச்சாட்சிக்கும் இடையே தத்தளிப்பவராக வருகிறார். மேலதிகாரியான பிரம்மதத்தை பகைத்துக் கொள்ள முடியாமலும், அதே சமயத்தில் அயன் ரஞ்சனின் நியாயத்திற்கு துணை போக முடியாமலும் இவர் தவிப்பது நன்கு வெளிப்பட்டுள்ளது.

தன் குற்றத்தை வெளிப்படுத்தி சட்டத்தின் கீழ் மாட்டி விடும் கான்ஸ்டபிளை, இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அடித்து “உன்னையெல்லாம் அப்படியே செருப்பு தைக்க விட்ருக்கணும்டா.. நீயெல்லாம் பதவிக்கு வந்ததால்தான் இப்படியெல்லாம் ஆகுது” என்று கொதிக்கும் போது பதிலுக்கு அதிகாரியை கன்னத்தில் அறைந்து ‘நாங்கல்லாம் எத்தனை காலத்திற்கு செருப்பு தைத்துக் கொண்டேயிருப்பது?” என்று வெடிக்கும் காட்சி முக்கியமானது மட்டுமல்ல, அற்புதமானதும் கூட.

Ra.One போன்ற பொழுதுபோக்குத் திரைப்படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா-விடமிருந்து இப்படியொரு துணிச்சலான திரைப்படம் வந்திருப்பது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சமகால அரசியலை பல கோணங்களில் எதிர்கொள்ளும் நோக்கில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இவான் முல்லிகனின் அபாரமான ஒளிப்பதிவும் அவசியமான காட்சிகளில் திகிலைக் கிளப்பும் மங்கேஷ் தக்தேயின் அட்டகாசமான பின்னணி இசையும் இத்திரைப்படத்திற்கு வலு சேர்க்கின்றன.

இந்தியாவின் பிரத்யேகமான, பல நூற்றாண்டு கால பிரச்சினையான சாதியத்தைப் பற்றி மிகச் சரியான எதிர்ப்புக்குரலாக எழுந்திருக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்றாக இருக்கும். 


(குமுதம் தீராநதி -  NOVEMBER  2019 இதழில் பிரசுரமானது) 

suresh kannan

Monday, November 11, 2019

Parasite | 2019 | South Korea | இயக்குநர் - Bong Joon-ho
அயல் திரை  - 15
 
 
‘ஒட்டுண்ணிகளின் ஒடுங்கிய உலகம்’கான் திரைப்பட விழா 2019-ல், அதன் உயரிய விருதான Palme d'Or-ஐ வென்றுள்ள திரைப்படம் இது. இந்தப் பிரிவில் தென் கொரியா வென்றுள்ள முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது. Memories of Murder (2003) உள்ளிட்டு பல சிறப்பான திரைப்படங்களை இயக்கியுள்ள Bong Joon-ho இந்த திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார்.

அவல நகைச்சுவையில் அமைந்த க்ரைம் திரில்லர் திரைப்படமான இது, சமூக அடுக்கில் உள்ள வித்தியாசங்களையும் வர்க்க வேறுபாட்டினையும் பொருளாதார சமநிலையின்மையையும் உறுத்தாமல் மிக நுட்பமாகவும் அழுத்தமாகவும் சொல்லிச் செல்கிறது.

**

அப்பா, அம்மா, மகன், மகள் என்று நான்கு உறுப்பினர்களைக் கொண்ட கீழ்நடுத்தர வர்க்க குடும்பம் அது. முட்டுச் சந்தில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். நால்வருக்குமே சரியான வேலை கிடைக்காததால் சிரமப்படும் வாழ்க்கையாக இருக்கிறது. இலவச இண்டர்நெட்டை வீட்டின் மூலைமுடுக்குகளில் தேடுகிறார்கள். பிட்சா பெட்டி மூடித்தரும் பணியை அரைகுறையுமாக செய்து விழிக்கிறார்கள்.

இந்நிலையில் மகனுடைய நண்பன் ஒருவன் அவர்களிடம் வருகிறான். வெளிநாட்டிற்குச் சென்று படிக்கவிருப்பதால் அவன் செய்து கொண்டிருக்கும் பணியை நண்பனுக்கு சிபாரிசு செய்ய முன்வருகிறான். ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் பணி. ஆனால் இவனோ கல்லூரி வாசலை மிதிக்காதவன். ஆனால் ராணுவத்தில் பணிபுரிந்தவன் என்பதால் நடைமுறை அனுபவத்தின் மூலம் பல விஷயங்களைக் கற்றவன்.

எனவே போலியான பட்டப்படிப்பு சான்றிதழை தயார் செய்து அந்தப் பணியில் சேர்கிறான். அந்த வீட்டின் பிரம்மாண்டமும் பணக்காரச் சூழலும் அவனைக் கவர்கின்றன. அந்த வீட்டுப் பெண் இவன் மீது ஈர்ப்பு கொள்கிறாள். வீட்டின் இளைய மகன் துறுதுறுப்பானவனாக இருக்கிறான். கன்னாபின்னாவென்று ஓவியம் வரைந்து வைத்திருக்கிறான். அவனுடைய அதீதமான நடவடிக்கை குறித்து கவலைப்படுகிறாள் அவனுடைய தாய்.

“எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியை இருக்கிறார். உறவுக்காரப் பெண்தான். அவளைப் பணிக்கு அழைத்து வரட்டுமா? இவனைச் சரியாக வழிநடத்துவாள்” என்று கேட்கிறான். இவனுடைய நல்லியல்பாலும் கண்ணியமான தோற்றத்தாலும் ஈர்க்கப்பட்ட தாய், ‘சரி’ என்று சொல்ல அவன் ஓர் இளம்பெண்ணை அழைத்து வருகிறான். அவள் வேறு யாருமல்ல, இவனுடைய சகோதரிதான்.

இப்படியே அவனுடைய தந்தை டிரைவராகவும், தாய் சமையல் பணியிலும் அந்த வீட்டுக்குள் ஒவ்வொருவராக நுழைகிறார்கள். ஒருவரையொருவர் தெரியாதது போல அந்நியராக நடந்து கொள்கிறார்கள். முந்தைய பணியாளர்களை சூழ்ச்சி செய்து வெளியே அனுப்பி விடுகிறார்கள். (விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ என்கிற தமிழ் திரைப்படத்தின் கதை இங்கு நினைவிற்கு வரக்கூடும். ஆனால் கொரியத் திரைப்படம் பயணிக்கும் திசையும் ஆழமும் வேறு).

**

முதலாளியின் குடும்பம் சுற்றுலாவிற்கு சென்று விடும் ஒரு சமயத்தில் இவர்களின் குடும்பம் அந்தப் பணக்கார வீட்டில் கும்மாளமடிக்கிறது. இந்த வீட்டுப் பெண்ணை தங்களின் மகன் மணந்து கொண்டால் அனைத்தும் தங்களுக்கு சொந்தமாகி விடும் என்கிற கற்பனையில் மிதக்கின்றனர்.

இந்த  நிலையில்,  முன்பு சமையல் பணியில் இருந்த பெண்மணி வந்து கதவைத் தட்டுகிறார். ‘ஒரு முக்கியமான பொருளை விட்டு விட்டேன். எடுத்துச் சென்று விடுகிறேன்’ என்று கெஞ்சவும் தற்போதைய பணியாளர் அனுமதிக்கிறார். அப்போதுதான் தெரிய வருகிறது, முன்னாள் பணிப்பெண்ணின் கணவர் கடன் தொல்லைக்கு பயந்து அந்த வீட்டின் அடியிலுள்ள ரகசிய அறையில் இருக்கிறார் என்பது. சுமார் நான்கு வருடங்களாக தன் கணவனை ஒளித்து வைத்து யாருக்கும் தெரியாமல் பராமரித்து வருகிறார் என்பதும்.

வானிலை மாற்றத்தின் தடங்கலால் முதலாளியின் குடும்பம் வீட்டுக்குத் திரும்பும் தகவல் கிடைக்கிறது. இரண்டு பணியாளர் குடும்பத்திற்கும் இடையே மோதல் நடக்கிறது. இதில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. தீவிரமான தளத்திற்கு கதை நகர்கிறது. பரபரப்பும் விறுவிறுப்பான நிகழ்வுகளுக்குப் பிறகு உச்சத்தை எட்டுகிறது இந்த திரைப்படம்.

**

“ஒட்டுண்ணி’ என்கிற தலைப்பே திரைப்படத்தின் உள்ளடக்கத்தை கச்சிதமாக விளக்கி விடுகிறது. வர்கக ரீதியாக சமூகத்தின் உயர் மட்டத்தில் வாழ்பவர்களை அண்டி வாழ்கிற நிலைமையே இதர பிரிவினருக்கு இருக்கிறது. இந்த நிலைமை ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கோபத்தையும் வன்மத்தையும் உற்பத்தி செய்கிறது. இதனால் வன்முறையையும் கையில் எடுக்க சிலர் தயங்குவதில்லை. போலவே நலிந்த பிரிவினரும் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள்.

பணக்கார வீட்டில் சொகுசாக நேரத்தைக் கடத்தும் அந்தக் குடும்பம், ‘கரப்பான் பூச்சியைப் போல வாழவேண்டியிருக்கும் தங்களின் பழைய வீட்டை நினைத்து வெட்கப்படுகிறார்கள். இப்படியொரு பிரம்மாண்டமான வீடு தங்களுக்கு இருந்தால் எப்படியிருக்கும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் முதலாளிகள் திரும்பவிருக்கும் செய்தி கிடைத்ததும், அவர்களின் கண்ணுக்குத் தெரியாமல் வீட்டின் பல்வேறு பகுதிகளில் ஒளிந்து கொள்கிறார்கள். சமையல் அறையில் விளக்கைப் போட்டதும் கரப்பான்பூச்சிகள் பாய்ந்தோடி மறைவதைப் போலவே அவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஏழைக் குடும்பம் பழைய கட்டிடத்தின் அடித்தளத்தில் வாழ்வதைப் போல, பணக்கார வீட்டின் அடியில் உள்ள ரகசிய அறையிலும் ஒரு நபர் மறைந்து வாழ்கிறார். இவர்களைப் போலவே அந்தக் குடும்பமும் அண்டி வாழ வேண்டியிருக்கிறது. இப்படியாக ஒரு சமூகத்தின் வர்க்க வேறுபாட்டுச் சித்திரத்தை மெல்ல வரைந்து காட்டுகிறார் இயக்குநர்.

இளைஞனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே சராசரிக்கும் மேலான அறிவைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இளைஞனின் தங்கை மிகுந்த புத்திக்கூர்மை கொண்டவராக இருக்கிறார். ஆனால் இவர்கள் தங்களின் திறமையைச் சரியான திசையில் பயன்படுத்துவதில்லை. சமூகச் சூழலும் அவர்களை அழுத்தி வைத்திருக்கிறது. எனவே குறுக்கு வழியிலாவது தங்களின் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார்கள். அதுவே அவர்களை பல சிக்கல்களுக்கு இட்டுச் செல்கிறது.

இளைஞனுக்கு பரிசாக கிடைக்கும் அதிர்ஷ்டக் கல் ஒன்று, பிறிதொரு காட்சியில் அவனுக்கே ஆபத்தை விளைவிக்கிறது. பணக்கார வீட்டில் இவர்கள் கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இவர்களின் பழைய வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்து பொருட்களை நாசப்படுத்துகிறது. அதிர்ஷ்டத்தின் வழியான கற்பனைகளும்  குறுக்குவழி உயர்வுகளும் நிலையானதல்ல என்கிற ஆதாரமான செய்தியை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இந்தத் திரைப்படம்.

**

தென்கொரியாவின் புகழ்பெற்ற நடிகரான Song Kang-ho, ஏழைக் குடும்பத்தின் தந்தையாக மிக நேர்த்தியாக நடித்திருந்தார். இவர்களின் குடும்பம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது ‘இதிலிருந்து மீள நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?’ என்று மகன் கேட்கிறான். “ஆம். இருக்கிறது’ என்று முதலில் சொல்லும் இவர் பிறிதொரு தருணத்தில் சொல்கிறார். “அவ்வாறு எந்தத் திட்டத்தையும் நாம் உருவாக்க முடியாது. வாழ்க்கை என்னும் அலை அடித்துச் செல்லும் திசையில்தான் சென்றாக வேண்டும்’ என்று விரக்தியுடனும் நிதர்சனத்துடனும் சொல்வது நல்ல காட்சி.

இவரது மகனாக நடித்திருக்கும் Choi Woo-shik-ம் நன்கு நடித்துள்ளார். இருவருமே கான் திரைப்பட விழாவில் ‘சிறந்த நடிகருக்கான’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள்.

தொழில்நுட்ப அளவிலும் இந்த திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் அபாரமான ஒளிப்பதிவை பிரத்யேகமாகச் சொல்ல வேண்டும். பணக்கார வீட்டின் பிரம்மாண்டம், பாதாள அறைகளின் குறுகலான சந்துகள், மழை நீரில் பொருட்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி போன்றவை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பணியாளரிடமிருந்து வெளிப்படும் மட்டரகமான வாசனையைக் கண்டு முகம் சுழிக்கிறார் செல்வந்தர். இங்கு தோன்றும் பகைமையின் புள்ளி, இன்னொரு இடத்தில் எரிமலையாக வெடிப்பதில் வர்க்க வேறுபாட்டின் புள்ளியை அநாயசமாக தொட்டிருக்கிறார் இயக்குநர்.

மனிதன் என்பவன் சமூக விலங்குதான். இந்த விலங்குகளுக்கு இடையேயான போட்டி இயற்கையை ஒட்டியதாகவும், மனித குலத்தின் பிரயேக முதிர்ச்சியுடனும் இருக்க வேண்டும். மாறாக நாகரிக வளர்ச்சி என்கிற பெயரில் சமூக அடுக்கில் உருவாகியிருக்கும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளையும் பாரபட்சங்களையும் எதிர்வினைகளையும் ஒரு க்ரைம் த்ரில்லரின் வழியாக விவரிக்கிறது இந்த சுவாரசியமான திரைப்படம்.


(குமுதம் தீராநதி -  SEPTEMBER  2019 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Sunday, November 10, 2019

Alpha | 2018 | United States | இயக்குநர் - Albert Hughes


அயல் திரை  - 14
 
ஞமலியுடன் ஒரு முதல் கைகுலுக்கல்


மனிதனின் செல்லப் பிராணிகளுள் முக்கியமானது நாய். கற்காலம் துவங்கி இன்று வரை மனிதனுடன் உறவைத் தொடரும் விலங்கினம் என்றால் அது நாய்தான்.  பாசமிகு தோழன், விசுவாசம் மிக்க காவலன் என்று இந்த விலங்கிற்கு பல பரிமாணங்கள் உண்டு. புத்திக்கூர்மையுள்ள இந்த விலங்கினத்தை தங்கள் வீட்டு குழந்தையாகவே கருதி பாசம் பொழிபவர்களும் உண்டு. இதன் மறுமுனையில் உணவிற்காக கொல்பவர்களும் உண்டு.

வெடிகுண்டு, போதைப் பொருள், குற்றத் தடயங்கள் போன்றவைகளைக் கண்டுபிடிப்பதற்கு நாயின் அசாதாரணமான மோப்ப சக்தி பயன்படுவதால் இவற்றை காவல்துறையிலும் ராணுவத்திலும் பயன்படுத்துகிறார்கள். வேட்டையாடுதல், ஆட்டு மந்தைகளை ஒழுங்குப்படுத்துதல் போன்ற விஷயங்களுக்காகவும் நாய்கள் முன்பு பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. பல தொன்மங்களில் நாயைப் பற்றிய குறிப்புகள் பதிவாகியுள்ளன.

நாய்க்கும் மனித குலத்திற்குமான இந்த நெடும் உறவு எப்போது, எப்படி துவங்கியிருக்கும்? லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே இது துவங்கி விட்டதாக சொல்கிறார்கள். மனிதன், ஓநாய்களைப் பழக்கியதில் அவை காலப்போக்கில் பல்வேறு நாயினங்களாக பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பரிணாம வளர்ச்சியின் முதல் புள்ளியை இந்தத் திரைப்படம் கற்பனையாக உருவாக்கிக் காட்டுகிறது.

**

பழைய கற்காலம். இருபதாயிரம் வருடங்களுக்கு முந்தைய ஐரோப்பா. அதுவொரு இனக்குழு. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் உணவைச் சேமிக்க வேண்டிய நேரம் வருகிறது. விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு வருவதற்காக சிலர் கிளம்புகிறார்கள். ஆனால் அதுவொரு ஆபத்தான பயணம். கொடிய விலங்குகளால் சிலர் மரணம் அடையக்கூடும். ஆனால் வேறு வழியில்லை.

வேட்டைக்குத் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து கிளம்புகிறான் குழுவின் தலைவன். கூட அவனுடைய மகன் கேடா. கேடாவிற்கு கூர்மையான ஆயுதங்களை உருவாக்கும் திறமை இருக்கிறதே ஒழிய, அதைப் பயன்படுத்தும் துணிச்சல் இல்லை. ஒரு மிருகத்தைக் கொல்ல முடியாமல் அவனுடைய இரக்கவுணர்ச்சி தடுக்கிறது. ‘ஆபத்தான பயணமாயிற்றே’ என்று கலங்குகிற  தன்னுடைய மனைவியின் வேண்டுகோளை நிராகரித்து மகனை அழைத்துச் செல்கிறான் குழுவின் தலைவன். இப்படித்தான் வாழ்க்கை முறையை மகன் கற்றுக் கொள்ள முடியும், அவன் வருங்கால தலைவன் ஆவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தந்தைக்குத் தெரியும்.

முன்னோர்கள் வைத்திருக்கும் தடயங்களின் உதவியுடன் நெடுந்தொலைவு பயணிக்கிறார்கள். வழியில் ஒருவனை புலி அடித்துச் செல்கிறது. கடந்து செல்கிறார்கள்.  காட்டெருமைகளின் கூட்டம் ஒன்று கண்ணில்படுகிறது. அந்தக் கூட்டத்தை தாக்குவதற்காக இவர்களின் குழு தயாராகிறது. இதில் நடக்கும் களேபரத்தில் ஒரு காட்டெருமை கேடாவை நோக்கி ஆவேசமாக வருகிறது. தனியாக மாட்டிக் கொள்ளும் கேடா, அதனால் தாக்கப்பட்டு ஒரு பெரிய பள்ளத்தாக்கிற்கு சற்று கீழேயிருக்கும் முகட்டில் மயக்கமடைந்து விழுகிறான்.

தன் மகன் தாக்கப்பட்டதைக் கண்ட குழுத்தலைவன் அலறியடித்துக் கொண்டு பள்ளத்தாக்கில் இறங்க முயற்சிக்க, மற்றவர்கள் தடுத்து விடுகிறார்கள். சுயநினைவின்றி இருக்கும் அவனை, ‘இறந்து விட்டான்’ என்று கருதி சென்று விடுகிறார்கள். குழுத்தலைவனும் கலங்கியபடி சென்று விடுகிறான்.

கேடாவை பிணந்தின்னும் கழுகு ஒன்று கொத்தித் தின்ன வரும் போதுதான் அவனுக்கு சுயநினைவு திரும்புகிறது. மிகப் பெரிய பள்ளத்தாக்கு கீழே இருப்பதைப் பார்த்து அலறும் அவன், பரிதாபத்துடன் ‘அப்பா.. அப்பா’ என்று அழைத்துப் பார்க்கிறான். பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு எப்படியோ அந்தச் சூழலில் இருந்து தப்பிக்கிறான். காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருப்பதற்கு சுயவைத்தியம் பார்த்துக் கொள்ளும் அவன், தடயங்களை வைத்து வீடு திரும்ப முயற்சிக்கிறான். ஆனால் அந்தப் பயணம் அத்தனை எளிதாக இல்லை. “அவன் துணிச்சலானவன்” என்று ஒருமுறை தந்தை இவனைப் பற்றியிருக்கிற வாக்கியம் நினைவிற்கு வர, அதை உத்வேகமாகப் பற்றிக் கொண்டு முன்னர்கிறான்.

ஓநாய்களின் கூட்டம் ஒன்று இவனைத் துரத்துகிறது. மரத்தில் ஏறி தப்பிக்கும் இவன் அதில் ஓர் ஓநாயை தன்னிச்சையாக காயப்படுத்தி விடுகிறான். உயிர் தப்பிக்கும் வேகத்தில் அதைச் செய்து விட்டாலும் இவனுக்குள் சுரக்கும் இரக்கவுணர்ச்சி காரணமாக அதற்கு உதவி செய்ய முனைகிறான். காயமுற்றிருந்தாலும் தன்னை நெருங்கும் மனிதனைக் கண்டு பல்லைக் காட்டி உறுமுகிறது அந்த ஓநாய். அதன் வாயைக் கட்டி அதற்கு மருத்துவம் செய்கிறான் கேடா.

ஓநாயும் அந்த மனிதனும் மெல்ல மெல்ல ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள். ‘இவன் தனக்கு நண்பன்’ என்கிற செய்தியை ஓநாய் மெல்ல அறிந்து கொள்கிறது. இருவரின் காயங்களும் சற்று ஆறியவுடன் கேடா வீடு செல்லும் திசையை நோக்கி நடக்கத் துவங்குகிறான். ஓநாய் இவனுடைய பின்னாலேயே வருகிறது. ‘போ’ என்று துரத்தினாலும் அது கேட்பதாயில்லை.

‘ஆல்பா’ என்று இவன் பெயர் வைத்து அழைக்கும் அந்த ஓநாயும் கேடாவும் மெல்ல மெல்ல அந்தப் பயணத்தின் வழியாக நெருக்கமாகிறார்கள். அவர்கள் திரும்புவது பனிக்காலம் என்பதால் பாதைகள் அடைபடுகின்றன. தடங்கள் மறைகின்றன. வழியில் ஏற்படும் ஆபத்துக்களை இருவரும் இணைந்து சமாளிக்கிறார்கள். ஒருமுறை கேடாவிற்கு ஏற்படும் உயிர் போகும் ஆபத்திலிருந்து ஆல்பா காப்பாற்றுகிறது. கேடா சொன்னதின் பேரில் தன் கூட்டத்துடன் இணைந்து பிறகு இவனுடன் மீண்டும் வந்து இணைகிறது ஆல்பா.

புலியின் தாக்குதலில் படுகாயமுறும் ஆல்பாவைச் சுமந்து கொண்டு ஊர்ந்து ஊர்ந்து தன் வீடு இருக்கும் திசை நோக்கி முன்னேறுகிறான் கேடா. இறந்து விட்டதாக கருதப்பட்ட மகன், குற்றுயிரும் குலையுறுமாக வீடு திரும்பியதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான் குழுவின் தலைவன். தங்களின் மகனைக் காப்பாற்றிய அந்த ஓநாயை குழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு மருத்துவம் அளித்து காப்பாற்றுகிறது. அப்போதுதான் அந்த ஓநாய் கர்ப்பமுற்றிருப்பது தெரிகிறது. நான்கைந்து குட்டிகளை ஈனுகிறது.

சில மாதங்களுக்குப் பிறகு, பழக்கப்படுத்தப்பட்ட ஓநாய் படையுடன் அந்தக்குழு மறுபடியும் வேட்டைக்குப் புறப்படும் காட்சியோடு படம் நிறைவுறுகிறது.

**

இந்தத் திரைப்படத்தின் மையமே, மனிதனும் ஓநாயும் பரஸ்பரம் தங்களைப் புரிந்து கொள்ளும் காட்சிகள்தான். ஐந்தறிவும் ஆறிறிவும் தங்களின் ஆதாரமான உணர்வுகளின் தீண்டல்களால் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சிகள் மிக சாவகாசமாகவும் நம்பகத்தன்மையுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. மானிடனுக்கும் நாய்க்கும் பிறகு உருவாகவிருக்கும் நெடுங்காலப் பினைணப்பிற்கான முதற்புள்ளி.

கேடா காட்டெருமையால் தாக்கப்படுவது, பள்ளத்தாக்கின் முனையிலிருந்து அவன் தப்பிப்பது போன்ற காட்சிகள் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளன. மிக குறிப்பாக பனித்தரையின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் கேடாவை, ஆல்பா காப்பாற்ற முயலும் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் Martin Gschlacht-ன் ஒளிப்பதிவின் பின்னேயிருக்கும் அசாதாரணமான உழைப்பைக் காண முடிகிறது.

இன்ன பிற விலங்குகள் வரைகலை உத்தியின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆல்பாவிற்காக அசலான ஓநாயையே பயன்படுத்தியுள்ளார்கள். தன் மகனுக்கு ஓநாய் கூட்டத்தின் தலைவனைப் பற்றி சொல்கிறான் குழுத்தலைவன். ஆல்பா என்பதுதான் அதன் அடையாளம். அந்த ஆல்பாதான் நன்றியுணர்ச்சி காரணமாக தன் குழுவை விட்டு விட்டு கேடாவின் பின்னால் செல்கிறது.

இந்த இனக்குழு பேசும் மொழி, இந்தத் திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளின் மெலிதான சாயல்களை இந்த உரையாடல்களில் காண முடிகிறது. கேடா என்கிற இளைஞனாக Kodi Smit-McPhee நன்கு நடித்துள்ளான். வேட்டைக்காக தாக்கப்பட்ட ஒரு மிருகத்தை கொல்லக் கூட முடியாமல் தவிக்கும் அப்பாவியான இவன், தனித்து விடப்பட்ட வனத்தில் இருந்து தன்னந்தனியாக ஒவ்வொரு தடையையும் தாண்டும் முதிர்ச்சியை அந்தப் பயணத்தில் கற்றுக் கொள்கிறான்.

Albert Hughes அற்புதமாக இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படம், சிறார்கள், பெரியவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படமாகும். இந்தப் பூமி என்பது மனித குலத்திற்காக மட்டும் படைக்கப்பட்டதில்லை, இது அனைத்து உயிரினங்களுக்கானது, அனைத்துமே ஒன்றிணைந்து நட்புடன் வாழ்வது அவசியமானது என்பதை இந்த திரைப்படம் வலுவாக உணர்த்துகிறது.

நாயைப் போலவே மனிதனின் இதர செல்லப்பிராணிகளுடனான முதல் உறவு எவ்வாறு உருவாகியிருக்கும் என்கிற கற்பனையை அதிகப்படுத்தும் விதையாக இந்த திரைப்படம் உள்ளது. இந்த நோக்கில் பல திரைப்படங்கள் உருவாகினால் நன்றாக இருக்கும் என்கிற ஆவலை ஏற்படுத்தியுள்ளது ‘ஆல்பா’.


(குமுதம் தீராநதி -  AUGUST  2019 இதழில் பிரசுரமானது)
 

suresh kannan

Saturday, November 09, 2019

Searching | 2018 | United States | இயக்குநர் - Aneesh Chaganty

அயல் திரை  - 13
 
திரை சூழ் உலகு


காணாமல் போன தனது மகளை, ஒரு தந்தை தேடுவதுதான் இந்த அமெரிக்க த்ரில்லர் திரைப்படத்தின் ஒரு வரி கதை. ‘இதிலென்ன புதுமை இருக்கிறது? இது போல் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளனவே?’ என்று நீங்கள் வியக்கலாம். ஆம், கதை பழசாக இருக்கலாம். ஆனால் இதன் திரைக்கதை புதுமையானது. இதில் வரும் எதுவுமே நேரடியான காட்சிகள் அல்ல. அனைத்துக் காட்சிகளுமே கணினித் திரை, கைபேசி திரை, கண்காணிப்பு காமிரா திரை என்று திரைக் காட்சிகளின் வழியாகவே முழுத் திரைப்படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

“படம் முழுவதும் செல்போன், கம்ப்யூட்டர்.. ஸ்கிரீனா.?.. எனில் படம் சலிப்பாக இருக்குமோ?” என்று ஒருவேளை உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஒரு காட்சி கூட சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்குமளவிற்கு பரபரப்பான திரைக்கதையாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.

**

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகரம். சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர் டேவிட் கிம். கணினித்துறையில் பணியாற்றுபவர். பள்ளியில் படிக்கும் தன் மகளான மார்கோட் கிம்முடன் கணினி, கைபேசி, சமூகவலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் எப்போதும் தொடர்பில் இருக்கிறார். இருவரும் நேரில் சந்திப்பது அபூர்வமான விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஒரு நாள் மகளுடனான தகவல் தொடர்பு அறுந்து போகிறது. கைபேசி முதற்கொண்டு எதில் அழைத்தாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. சற்று பதட்டமடையும் அவர், மகளின் பியானோ டீச்சரை கைபேசியில் அழைத்து விசாரிக்கிறார். அவள் ஆறு மாதத்திற்கு முன்பே பியானோ வகுப்பிலிருந்து நின்று போன அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. ஆனால் மாதா மாதம் அதற்கான கட்டணத்தை மகளிடம் இவர் அளித்திருக்கிறார்.

மகளுடன் படிக்கும் வகுப்புத் தோழனை அழைத்து விசாரிக்கிறார். அங்கும் இல்லை. இந்தத் தேடலிலேயே இரண்டு, மூன்று நாட்கள் கடந்து விடுவதால் வேறு வழியின்றி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார். ரோஸ்மேரி விக் என்கிற பெண் காவல்துறை அதிகாரியிடம் இந்த வழக்கு சென்று சேர்கிறது. ‘நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள்’ என்கிற ஆறுதலை அளிக்கிறார் ரோஸ்மேரி.

இதற்கிடையில் மகளின் சமூகவலைத்தள கணக்குகளின் உள்ளே சென்று ஆராய்கிறார் டேவிட். பியானா வகுப்பிற்காக அளிக்கப்பட்ட பணத்தை வேறு எவருக்கோ நன்கொடையாக மகள் அளித்திருப்பதைக் கண்டு வியக்கிறார். ஆனால் பெற்றுக் கொண்டவரின் கணக்கு மூடப்பட்டிருக்கிறது. மகளிடமிருந்து தகவல் அறுந்து போன அந்தக் கணத்தின் முன்பான தருணங்களில் எங்கெல்லாம் இருந்திருக்கிறாள் என்பது குறித்தான வரைபடத்தை உருவாக்குகிறார். இதற்காக மகளின் சமூகவலைத்தள நண்பர்கள் உள்ளிட்டு பலரிடம் விசாரிக்கிறார்.

இந்தத் தகவல்களைின் உதவியுடன் தன்னுடைய விசாரணையை மேற்கோள்ளும் காவல்துறை அதிகாரி, மார்கோட் கிம் பணத்துடன் எங்காவது ஓடியிருக்கலாம் என்கிறார். ஆனால் டேவிட்டுக்கு அதில் நம்பிக்கையில்லை. ‘என் மகள் அந்த மாதிரியான பெண்ணில்லை’ என்று மறுக்கிறார். இதற்கிடையில் ‘மார்கோட் கிம்’மை தான் கொலை செய்ததாக வாக்குமூலம் தருகிறார் ஒருவர். டேவிட்டுக்கு அதிர்ச்சியும் துயரமும் ஏற்படுகிறது.

தான் சேகரித்து வைத்திருக்கும் தரவுகளை மீண்டும் ஆராயும் போது அதிர்ச்சியான விஷயம் ஒன்றை கண்டுபிடிக்கிறார் டேவிட். அதைப் பின்தொடர்ந்து செல்லும் போது மேலும் பல ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. மார்கோட் கிம்மிற்கு என்னதான் ஆனது, குற்றவாளி யார் என்பதையெல்லாம் பிறகு வரும் பரபரப்பான காட்சிகள் விவரிக்கின்றன.

கவனியுங்கள். இத்தனை விவரங்களும் நேரடியான காட்சிகளாக அல்லாமல் கைபேசி, கணினி, வெப்கேம் உள்ளிட்ட திரைகளின் வழியாகவே விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு காட்சியும் திணிக்கப்பட்டதாகவோ, சலிப்பை ஏற்படுத்துவதாகவோ அமையவில்லை. அத்தனை திறமையாக இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

**

கணினி, கைபேசி மற்றும் சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திரைப்படம் சுவாரசியத்தையும் மனநெருக்கத்தையும் தரும். அந்த அளவிற்கு பல்வேறு திரைகள் இதில் விரிந்த வண்ணம் உள்ளன. அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறான திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் துவக்கமே விண்டோஸ் 98-ன் கணினித் திரையோடு அறிமுகமாகிறது. பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களின் வழியாக மார்கோட் கிம்மின் இளமைப்பருவமும் அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சிகரமான தருணங்களும் நமக்கு அறிமுகமாகின்றன. புற்றுநோயால் இறந்து போகும் தாயின் பிரிவையும் நம்மால் அறிய முடிகிறது.

முழுவதும் திரைகளால் மட்டுமே விரியும் புதுமையான திரைக்கதையில் அமைந்த த்ரில்லர் திரைப்படம் என்றாலும் இதன் மூலம் நாம் பல நுட்பமான விஷயங்களை உணர முடிகிறது.

கைபேசி, கணினி, வெப்-கேம், சிசிடிவி காமிரா, தொலைக்காட்சி, ATM என்று ஒவ்வொரு தினமும் அன்றாடம் எத்தனை திரைகளின் மூலமாக நம் வாழ்க்கை கழிகிறது என்பதை பிரக்ஞைபூர்வமாக இந்த திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்பது போய், ஒரே அறையில் ஆனால் பல திரைக்களுக்கிடையில் கழியும் குறுகிய வாழ்க்கைக்குள் விழுந்து விட்டோம். இந்த திரைப்படத்தின் காட்சிகளின் மூலம்தான் ‘நாம் இத்தனை திரைகளை தினமும் பயன்படுத்துகிறோம் இல்லையா?” என்பது ஆச்சரியத்துடன் உறைக்கிறது. திரைசூழ் உலகு.

இணையமும் கண்காணிப்புச் சமூகமும் தனிநபர் அந்தரங்கம் என்கிற விஷயத்தை மதிப்பில்லாமல் செய்து விடுகின்றன. சமூகவலைத்தளங்களில் நாமே முன்வந்து பதியும் அந்தரங்கத் தகவல்கள் தவிர நம்மை கண்காணிக்கும் பல விஷயங்களின் மூலம் நம்மைப் பற்றிய தனிப்பட்ட செய்திகள் ஏராளமாக கசிந்து கொண்டேயிருக்கின்றன. இவ்வாறு வெளிப்படும் துளித்துளியான தகவல்களை திட்டமிட்டும் கச்சிதமாகவும் இணைத்தால் ஒரு நபரின் அன்றாட நிகழ்வுகளின் அனைத்துத் தகவல்களையும் திரட்டி விட முடியும். அந்த அளவிற்கு நம்மைப் பற்றிய தகவல்களை வாரி இறைத்துக் கொண்டேயிருக்கிறோம். எங்கு செல்கிறோம், எங்கே இருக்கிறோம், என்ன வாங்கினோம் என்பது உள்ளிட்ட பல தகவல்களை பொதுவெளியில் உலவ விடுவதில் அற்பமான இன்பத்தை அடைகிறோம். இதற்குப் பின்னால் பெரிய வணிகப் பின்னலும் இருக்கிறது. நம்முடைய அந்தரங்கத் தகவல்களை அவர்கள் கச்சிதமாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

இது மட்டுமல்ல, முறையான அறிமுகமில்லாத முகமிலி மனிதர்களிடம் உருவாகும் இணையப் பழக்கம் மூலம் பல ஆபத்துக்களையும் ஏமாற்றங்களையும் அடையும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் மார்கோட் கிம், தவறான நபரிடம் தன் பணத்தை இழக்கிறாள். அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் அவளைச் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன.

எந்தவொரு பெற்றோருக்குமே தங்களின் பிள்ளைகளைப் பற்றிய உயர்வான மதிப்பீடுதான் இருக்கும். நல்ல விஷயம்தான். ஆனால் அதை சமநிலையுடன் அணுகுவது முக்கியமானது. தன்னுடைய பிள்ளை ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கியதாக அறிந்தவுடன் அவர்களிடமிருந்து வரும் முதல் வசனமே இதுவாகத்தான் இருக்கும். ‘எங்க பிள்ளையைப் பற்றி எங்களுக்கு நல்லாத் தெரியும். அவன் இந்த மாதிரி தப்பு வழிக்கெல்லாம் போறவன் இல்லை’.

ஒருவர் என்னதான் தம் பிள்ளைகளிடம் நட்புரீதியில் பழகினாலும் அவர்களைப் பற்றிய முழு பின்னணியும் அவருக்குத் தெரியுமா என்றால் தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. இந்த அதிர்ச்சியான விஷயத்தையும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் தந்தை பாத்திரத்தின் மூலம் அதை உணர முடிகிறது.  தன்னுடைய மகளுடன் அவர்  நவீன நுட்பங்களின் மூலம் தொடர்ந்து உரையாடினாலும், அன்பைக் காட்டிக் கொண்டிருந்தாலும் அவர்களின் இடையே ஏராளமான இடைவெளியும் இருக்கிறது. தாயின் மரணத்தினால் மகளின் மனதினுள் உறைந்திருக்கும் துயரத்தின் சதவீதத்தை சரியாக கணிக்கத் தவறி விடுகிறார் தந்தை.

தகவல் தொடர்பு சாதனங்களும் வசதிகளும் பெருக பெருகத்தான் மனிதர்களுக்கு நடுவிலான தகவல் இடைவெளியும் அதிகமாகிக் கொண்டே போகிறது என்கிற சுவாரசியமான நகைமுரண் செய்தியை இந்த திரைப்படம் உணர்த்திச் செல்கிறது.

**

அனீஷ் சாகந்தியின் அறிமுகத் திரைப்படம் இது. அனீஷ் சாகந்தி வாஷிங்டனில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய பெற்றோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல்வேறு குறும்படங்களையும் விளம்பரங்களையும் உருவாக்கிய அனீஷ் சாகந்தி, இந்த திரைப்படத்தையும் முதலில் குறும்படமாகவே உருவாக்கத் திட்டமிட்டார். ஆனால் அவரது திறமை காரணமாக முழுநீளத் திரைப்படமாக்குவதற்கான நிதி கிடைத்தது. திரைகளால் மட்டும் விவரிக்கப்படும் திரைக்கதை, முழுநீளத் திரைப்படத்திற்கு தகுதியானதா, அத்தனை நீளத்திற்கு இழுக்க முடியுமா என்றெல்லாம் சந்தேகம் முதலில் இருந்தது. ஆனால் சுவாரசியமான திரைக்கதையின் மூலம் இதைச் சாதித்திருக்கிறார்கள்.

ஒரு திரில்லர் என்பதைத் தாண்டி இணையம், நுட்பம், சமூகவலைத்தளம் போன்றவற்றின் சாதக பாதகங்கள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி உள்ளிட்ட பல விஷயங்களை இந்த திரைப்படம் மிக நுட்பமாக உணர்த்திச் செல்கிறது. இணையப்பயன்பாட்டை அதிகம் மேற்கொள்கிறவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பும் கூட. 

(குமுதம் தீராநதி -  JULY  2019 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

Friday, November 08, 2019

Arctic | 2018 | Iceland | இயக்குநர் - Joe Pennaஅயல் திரை  - 12

பனிப்பிரதேசத்தில் ஒரு தனிமைப் பயணம்இந்த திரைப்படத்தின் கதையையும் வசனங்களையும் ஒரு குழந்தையின் உள்ளங்கையில் எழுதி விடலாம். அப்பவும் இடம் மீதம் இருக்குமளவிற்கு பிரம்மாண்டமான மெளனத்தால் நிரம்பிய படம் இது. கதையின் பின்னணி அப்படி.

‘Survival film’ என்கிற வகைமையில் இதுவரை நிறைய திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன.  மனித நடமாட்டம் அற்ற தனிமையான தீவில் அல்லது அப்படியொரு பிரதேசத்தில் மாட்டிக் கொண்டு அல்லாடி உயிர் தப்புவதற்காக மூச்சுத் திணறுகிறவர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படங்கள். ‘ராபின்சன் குருசோ’ இதன் முன்னோடி திரைப்படம் எனலாம். ‘டாம் ஹாங்க்ஸ்’ நடித்த ‘Cast Away’ இந்த வகையில் பிரபலமானது.

2018-ல் வெளிவந்த ‘Arctic’ இந்த வகைமையைச் சேர்ந்ததுதான். கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதோடு "Golden Camera" பிரிவில் போட்டியிடும் தகுதியையும் பெற்றிருந்தது.

**


ஆர்க்டிக் பகுதி பற்றி நமக்குத் தெரியும். பூமியின் வடமுனையில் அமைந்துள்ளது. இதன் தென்முனையில் இருப்பது அண்டார்ட்டிக்கா. பனிக்கட்டிகளால் சூழ்ந்துள்ள இந்தப் பிரதேசங்களில் மிகுந்த சிரமத்திற்குள்தான் மனிதர்கள் வாழ முடியும்.

விமானவிபத்து காரணமாக, இப்படிப்பட்ட ஆர்க்டிக் பகுதியில் சிக்கிக் கொள்கிறான் ‘ஓவர்கார்ட்’ என்கிற, ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆசாமி. அவனை மீட்பதற்காக எவரும் வருவதில்லை. அவன் அங்கு மாட்டிக் கொண்டிருக்கிறான் என்பது வெளியுலகத்திற்கு தெரியுமா என்பதே கூட தெரியாத நிலைமை.

என்றாலும் அவன் நம்பிக்கையை இழப்பதில்லை. அவனுடைய அன்றாட பணி கச்சிதமாகத் திட்டமிட்ட வகையில் இருக்கும். காலையில் எழுந்தவுடன் பனிக்கட்டியின் அடியில் வைக்கப்பட்டிருந்த தூண்டிலில் ஏதாவது மீன்கள் சிக்கியிருக்கிறதா என்று பார்த்து அவற்றை பத்திரப்படுத்த வேண்டியது. தன்னிடமிருக்கும் இயந்திரத்தின் மூலம் அருகில் ஏதேனும் விமானம் அல்லது ஹெலிகாப்டரின் நடமாட்டம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பது, பனிக்கரடி ஏதேனும் தூரத்தில் தென்பட்டால் ஓடிவந்து பழுதடைந்திருக்கும் விமானத்திற்குள் வந்து பதுங்கிக் கொள்வது, உடல் முழுவதும் போர்த்தி பாதுகாத்துக் கொண்டு இரவில் உறங்குவது.

அந்தப் பகுதியில் தற்செயலாக வரும் வானூார்தியின் வழியாக என்றாவது ஒருநாள் இங்கிருந்து தப்பிச் சென்று விட முடியும் என்கிற நம்பிக்கையை இழக்காமல் இருக்கிறான் அவன். ஒரு நாள், அப்படியொரு அதிசயமும் நிகழ்கிறது. இவன் சுழற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் அருகில் ஏதோவொரு வானூர்தி இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. ஆம்.. அது உண்மைதான். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து கொண்டிருக்கிறது. ஓவர்கார்ட் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். ஆரஞ்சு வண்ணப்புகையை உருவாக்கி அவர்களின் கவனத்தைக் கவர முயற்சிக்கிறான்.

ஆனால் துரதிர்ஷ்டம் இவனை விடுவதாக இல்லை. அப்போது அடித்துக் கொண்டிருக்கும் பனிப்புயலில் சிக்கி ஹெலிகாப்டர் பனியில் விழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. பரபரப்புடன் அருகில் சென்று பார்க்கிறான். தலையில் அடிபட்டு விமானி இறந்து கிடக்க, அருகிலிருக்கும் ஒரு பெண், இடுப்பில் ஏற்பட்ட பயங்கரமான காயத்துடன் குற்றுயிராக கிடக்கிறாள். ரத்தம் வெளியேறாதவாறு முதலுதவி செய்து அவளை மெல்ல தன்னுடைய விமானத்திற்குள் அழைத்துச் செல்கிறான்.

எப்போதாவது ஒருமுறை சுயநினைவை அடையும் அவள் பெரும்பாலும் மயக்கத்திலேயே இருக்கிறாள். ‘எல்லாம் சரியாகி விடும்” என்கிற நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லி அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். வேறு எந்த வானூர்தியும் அங்கு வராமல் போகவே, காயமடைந்திருக்கும் பெண்ணை ஒரு தள்ளுப் படுக்கையில் வைத்து பனிப்பாறைகளின் வழியாக நகர்த்திச் செல்கிறான். கையில் வரைபடம் இருந்தும் பாதைகள் அவனைக் குழப்புகின்றன. பனிக்கரடியின் தாக்குதல் உள்ளிட்ட சில சிக்கல்களை வேறு அவன் சமாளிக்க வேண்டியிருக்கிறது.

ஓவர்கார்டும் அந்த இளம் பெண்ணும் பிழைத்தார்களா என்பதை மீதமுள்ள காட்சிகள் மெளனம் நிரம்பிய பரபரப்புடன் விவரிக்கின்றன.

**

மனிதன் சமயங்களில் தனிமையை விரும்புகிறவனாக இருந்தாலும் அடிப்படையில் அவன் இதர மனிதர்களுடன் கூடிவாழ்கிற சமூக விலங்கு என்பதை இந்த திரைப்படம் மிக அழுத்தமாக உணர்த்துகிறது. அது மட்டுமில்லாமல் எந்தவொரு சிக்கலான தருணத்திலும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்கிற செய்தியையும் மிக ஆழமாக நமக்குள் கடத்துகிறது. இதையும் தாண்டிய விஷயமும் ஒன்றுண்டு.

‘தானே எப்படி மீள்வது?’ என்பது புரியாத நிலைமையில் இருக்கும் ஓவர்கார்ட், தன்னைப் போலவே இந்தச் சிக்கலில் வந்து மாட்டிக் கொண்ட, சுயநினைவில் இல்லாத இளம்பெண்ணை மிகுந்த சிரமங்களுக்கு இடையில் காப்பாற்றி அழைத்துச் செல்கிறான். கால்கள் புதையும் பனியில் ஒருவர் நடந்து செல்வதே சிரமமானது எனும் போது, தள்ளுப்படுக்கையில் அவளை இழுத்துச் செல்கிறான். மேடான பகுதியில் அந்தப் பெண்ணை ஏற்ற முடியாத சிரமங்கள் ஏற்பட்டாலும் அவளைக் கைவிடாத அவனுடைய நல்லியல்பு நம்மைப் பிரமிக்க வைப்பதோடு அது தொடர்பான செய்தியையும் நமக்குள் கடத்துகிறது.

ஓவர்கார்ட் என்னும் பாத்திரத்தில், டென்மார்க்கைச் சேர்ந்த நடிகரான Mads Mikkelsen மிக அபாரமாக நடித்துள்ளார். ‘The Hunt’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளவர் இவர். மூச்சைத் திணற வைக்கும் தனிமையின் பயங்கரத்தில் ‘தான் எப்படியாவது மீட்கப்படுவோம்’ என்று இவர் காட்டுகிற பொறுமை வியக்க வைக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை இவரது அபாரமான நடிப்புதான் தாங்கிப் பிடிக்கிறது.

ஒரு கட்டத்தில், காயம் அடைந்திருக்கும் பெண்ணிடமிருந்து எவ்வித அசைவும் இல்லாததால், ‘அவள் இறந்து விட்டாள்’ என்று கருதி விட்டு விட்டு நகர்கிறார். ஆனால் பனிப்பாறையின் இடுக்கிற்குள் இவர் விழுந்து கால் சிக்கிக் கொண்டு மேலேறி வருவதற்குள் பெரும்பாடாகி விடுகிறது.

**

இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநரான Joe Penna. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஓர் இசைக்கலைஞர். தனது இசை ஆல்பங்களின் மூலம் இணையத்தில் மிகுந்த புகழைப் பெற்றுள்ளார். 400 மில்லியன் பேர் இவரது வீடியோ ஆல்பங்களைப் பார்த்து ரசித்திருப்பதாக கூறப்படுகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களையும் குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

‘ஆர்க்டிக்’ இவர் இயக்கிய முதல் திரைப்படம் என்றாலும் சர்வதேச திரைப்படத்திற்கான தரத்தையும் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது. திரைப்படம் என்பது காட்சிகளின் வழியாக விவரிக்கப்பட வேண்டியதொரு ஊடகம் என்னும் அடிப்படையை நிரூபிக்கிற விஷயத்தை ஜோ பென்னா சாதித்துள்ளார்.

காட்சிகளையே சார்ந்துள்ள இவ்வாறான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக அவசியமானது. Tómas Örn Tómasson-ம், Joseph Trapanese-ம் தங்களின் பங்களிப்பை மிகச் சிறப்பாக தந்துள்ளனர். ஓவர்கார்டின் தனிமையும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பார்வையாளர்களிடம் உணர்வுபூர்வமாகவும் மிகையின்றியும் கடத்தப்பட்டுள்ளன.

உயிர்வாழ்வதற்கான தீராத ஏக்கத்தையும் அதற்கான போராட்டத்தையும் சிக்கலான சூழலிலும் பிறர்க்கு உதவும் தியாகத்தையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது, இந்த ‘ஆர்க்டிக்’ திரைப்படம். 


(குமுதம் தீராநதி -  JUNE  2019 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

Thursday, November 07, 2019

தேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு 'சபாஷ் நாயுடு'  என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், அது குறித்த சாதிய நோக்கிலான விமர்சனங்களும் கண்டனங்களும்  நுண்ணரசியல் தேடும் பதிவுகளும் குவியத் துவங்கி  விட்டன. படத்தின் தலைப்பில் சாதியின் பெயரை கமல்ஹாசனால் தவிர்க்க முடியாதா என்று கேள்விகளும் உள்நோக்கத்துடன்தான் அவர் இது போன்ற தலைப்புகளை தொடர்ச்சியாக வைக்கிறார் என்கிற கோபங்களும்  கிளம்புகின்றன.

இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் எதைப் பற்றியது என்பதையறியாமல் வெறும் தலைப்பை வைத்தே விமர்சனம் செய்வது எம்மாதிரியான நெறி என்பது தெரியவில்லை. முன்னர் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த  சாதியக் கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் கமல்ஹாசனின் 'தேவர் மகன்' திரைப்படமும் அதன் பாடலும் காரணமாக இருந்தது; துணை போனது என்கிற கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக 'தேவர் காலடி மண்ணே' என்று துவங்கும் திரைப்பாடல் தேவர் சமூகத்தினருடைய சாதியப் பெருமிதங்களின் ஒரு நிரந்தர அடையாளமாகி தலித் சமூகத்தினரின் மீது ஒரு வெறுப்பேற்றும் ஆயுதமாகவே எறியப்பட்டு கலவரங்களுக்கு காரணமாகின என்கிறார்கள்.

இந்த விஷயங்கள் குறித்து சற்று நிதானமாகவும் சமநிலையோடும் உரையாட முயல்வோம். இந்தக் கட்டுரை எந்தவொரு தனிநபருக்கும் அமைப்பிற்கும் சமூகத்திற்கும் ஆதரவான அல்லது எதிரான நோக்கில் எழுதப்பட்டதில்லை என்பதை மாத்திரம் மனதில் இருத்திக் கொண்டு வாசிப்பை தொடர வேண்டுகிறேன்.

***

தமிழ் சினிமா உருவாகத் துவங்கியதிலிருந்தே  சாதி, மதம்  தொடர்பான சர்ச்சைகளும் கூடவே இணைக்கோடாக பயணிக்கத் துவங்கின. தமிழ் படவுலகின் தந்தை என கருதப்படும் கே.சுப்பிரமணியம் 'பாலயோகினி' என்கிற திரைப்படத்தை 1937-ல் உருவாக்கினார். சாதிய வெறியை சாடும் சமூக சீர்திருத்த கதை இது. படத்தில் விதவைப் பெண் பாத்திரத்திற்கு பிராமண விதவைப் பெண் ஒருவரையே நடிக்க வைத்தார். வைதீக பிராமணர்களிடமிருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.1952-ல் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய  'அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?' என்பது போன்ற நாத்திக பிரச்சார கருத்துக்கள் ஆத்திகர்களால் கடுமையாக ஆட்சேபிக்கப்பட்டன. 1954-ல் வெளியான சொர்க்கவாசல் திரைப்படத்திற்காக மூட நம்பிக்கையின் மீது அமைந்த வைதீகச் சடங்குகளை விமர்சித்து அண்ணாதுரை எழுதிய வசனங்கள் கடுமையான சர்ச்சைக்குள்ளாகி சென்சாரில் பிறகு வெட்டப்பட்டன.

திரைப்படங்களில் தங்கள் சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று பிராமணர்கள் துவங்கிய இம்மாதிரியான எதிர்ப்புகள் பிறகு மெல்ல மற்ற சமூகத்தினர் இடையேயும் பரவியது. 'கரை கடந்த குறத்தி' என்கிற திரைப்படத்தின் தலைப்பு  காரணமாகவே அச்சமூகத்தினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தமையால் 'கரை கடந்த ஒருத்தி'யாக மாற்றப்பட்டது. பின்பு இடைநிலைச் சாதிகளின் பெருமைகளை விதந்தோதும் திரைப்படங்கள் வரிசையாக வந்து குவியத் துவங்கின. அது குறித்த சர்ச்சைகளும் எழுந்தன. இந்தக் குவியல்களில் எவை சாதியப் பெருமிதங்களை நிலைநாட்டுகிறது, எவை அதன் எதிர்திசையில் இயங்குகிறது என்று சமநிலையோடு களைந்து பார்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

***

எந்தவொரு படைப்பையும் கீழிறக்கி அதை சர்ச்சைக்குள்ளாக்குவதற்கு மிக எளிமையான வழி ஒன்றுண்டு. அந்த படைப்பின் ஒரு பகுதியை தங்களுக்கு சாதகமாக ஏற்றவாறு  ஒடித்து துண்டித்து அதை உள்நோக்கமுடைய பரப்புரை வாசகங்களுடன் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டேயிருப்பது. இது போன்று  'உருவாக்கப்படும்' சர்ச்சைகள் எளிதில் கவனத்திற்கு உள்ளாகும் வாய்ப்பிருப்பதால் அவை உடனே பரவி அந்த துண்டிக்கப்பட்ட கருத்து மிக எளிதாகவே தொடர்புடைய படைப்பிற்கு எதிரானதொன்றாக  நிலைபெற்று விடும். இது மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, மேற்கோள் காட்டப்பட்டு வரலாற்றின் ஒரு பகுதியாகவே மாறி விடும். பிறகு சம்பந்தப்பட்ட படைப்பாளியோ அல்லது அவரது பிற்கால ஆதரவாளரோ நினைத்தால் கூட இந்த எதிர்பரப்புரையை உடைத்து அத்தரப்பு நியாயத்தை நிலைநிறுத்துவது கடினமாகி விடும்.

இவ்வகையான எதிர்பரப்புரைகள் உள்நோக்கமல்லாமல் கவனக்குறைவாக கூட தவறாக நிலைநிறுத்தப்படும் வழக்கமுண்டு. உதாரணமாக பாரதியின் 'மெல்ல தமிழினி சாகும்' என்ற ஒற்றை வரி மாத்திரம் தவறாக பலமுறை மேற்கோள் காட்டப்பட்டு பாரதியே தமிழ் மொழியின் அழிவை யூகமாக சொல்லி விட்டார் என்று சிலர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அவரைத் திட்டுபவர்களும் உண்டு. அந்தக் கவிதையின் தொடர்ச்சியாக 'என்றந்தப் பேதை யுரைத்தான்' என்பதை அவர்கள் அறிவதில்லை. மீண்டும் மீண்டும் இது தவறு என்று பாரதி அன்பர்களும் தமிழறிஞர்களும் விளக்கிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் மொழியின் முன்னோடியான பாரதி அப்படி சொல்லியிருப்பாரா என்பதை சரிபார்த்துக் கொள்ளக் கூட பலருக்குத் தோன்றுவதில்லை. எதிர்பரப்புரையில் உள்ள வசீகரத்தின் பலமே இதுதான்.

ஓரு திரைப்படத்தின் தலைப்பு அல்லது அதன் சில வசனங்களைக் கொண்டே அது சாதியத்திற்கு ஆதரவான திரைப்படம், வன்முறையைத் தூண்டுகிற படம் என்கிற அவசர முடிவிற்கு வருவது முறையற்றது. தீய நோக்குடன் தங்களுக்குச் சாதகமாக சில சாதிய வெறியாளர்கள் செய்யும் அல்லது புரியாதவர்கள் நிகழ்த்தும் இந்த எதிர்பரப்புரைகளுக்கு பாமரர்கள் வேண்டுமானாலும் உணர்வுரீதியாக ஒருவேளை மயங்க நேரலாம். ஆனால் சமநிலையுணர்வுடன் அறிவுசார்ந்து சிந்திப்பவர்களும் பலியாவதுதான் வேதனையானது. ஒரு திரைப்படத்தின் மையம் எதை  நோக்கி பயணிக்கிறது; எந்தக் கருத்தை அழுத்தமாகச் சொல்கிறது; அதன் நோக்கம் என்ன என்பதைத்தான் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். அது பயணிப்பதற்கு இடையிலான விஷயங்களை துண்டித்து மேற்கோள் காட்டி எதிர்ப்பது அறிவுடைமை ஆகாது.

தென்மாவட்டங்களில் நிகழ்ந்த சாதியக் கலவரங்களுக்கு 'தேவர் மகன்' காரணமாக அமைந்தது என்பது பல சினிமாக்கட்டுரைகளில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக அத்திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதொரு பலமான அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டு கடுமையாக எதிர்க்கப்படுகிறது. இதை சற்று பார்ப்போம்.

தேவர் திரைப்படத்தின் திரைக்கதை என்ன?

சாதியப் பாகுபாடுகளும் பகைமைகளும் சச்சரவுகளும் நிறைந்திருக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமம். அந்தச் சூழலில் இருந்து இடையில் விலகியிருந்த ஒரு நவீன மனம் கொண்ட இளைஞன் அங்கு திரும்பி வருகிறான். முற்போக்கு மனோபாவம் கொண்ட அவனுக்கு அங்குள்ள சாதிய மோதல்களும் அதன் தொடர்பாக நிலவும் வன்முறை பதட்டங்களும் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.பழமைவாத மனநிலை கொண்ட தந்தையிடம் இதையெல்லாம் 'காட்டுமிராண்டித்தனம்' என விவாதிக்கிறான். அங்கிருந்து மறுபடி விலகி விட நினைக்கிறான். ஆனால் அங்கு நடைபெறும் சம்பவங்களும் சூழலும் அந்த வன்முறைக்குள் அவனையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன. தொடர்ந்து அதனுடன் போராடுகிறான். இதற்காக தன் கனவுகளையும் காதலையும் கூட அவன் இழக்க நேர்கிறது. தேவர் சமூகத்தின் இரு சகோதரர்களுக்குள் நிலவும் பகைமையின் இடையில் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் துயரத்தையும் இழப்பையும் அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. இறுதியில் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்த ஒரு பிரதானமான சாதிய வெறியாளனை தற்செயலாக கொன்று விட்டு சிறைக்குச் செல்கிறான். 'சண்டையெல்லாம் போதும்டா.. புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா" என்று கடந்த அனுபவங்களின் வலி காரணமாக கதறுகிறான். கல்வி அவர்களை முன்னேற்றும் என்கிற நம்பிக்கையால் அவன் செய்யும் உபதேசம் அது.

ஆக படத்தின் பிரதான நாயகன், படம் முழுவதுமே சாதியத்திற்கு எதிராகவே தொடர்ந்து உரையாடுகிறான். படத்தின் இறுதிச் செய்தியும் சாதிய வன்முறைக்கு எதிரானதுதான். ஆனால் இத்திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதாகவும் வன்முறையின் ஊற்றுக் கண்ணாகவும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மஞ்சள் கண்ணாடி அணிந்திருப்பவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல சாதியப் பதட்டம் கொண்டவர்களால் இத்திரைப்படம் தவறாக அணுகப்படுகிறது என்பது வெளிப்படை.

பின்பு ஏன் இந்தப் படம் சாதியத்திற்கு ஆதரவானதாக புரிந்து கொள்ளப்பட்டது. பார்ப்போம்.

***

எந்தவொரு கலைப்படைப்பும் மேன்மையுறுவது அதன் நுண்மைகளினாலும் அதன் நேர்மறையான மையத்தினாலும்.  ஒரு கதாபாத்திரமோ அல்லது சூழலோ அதன் சரியான நுண்மைகளுடன் சித்தரிக்கப்பட்டால்தான் நம்பகத்தன்மையைப் பெறும். கலை நோக்கிலும் மேம்பட்டதான நிலையை நோக்கி உயரும். மொண்ணையாக உருவாக்கப்படும் களிமண் சித்திரங்களால் அல்ல.

முன்பெல்லாம் சமூகத் திரைப்படங்களில் நாயகனின் சாதியைக் கண்டு கொள்வது சிரமம். வெளிப்படையாக சித்தரிக்கப்பட்டிருக்காது. உணர்ச்சிகரமான கதையும் சூழலும் வசனங்களுமே பார்வையாளர்களுக்கு போதுமானதாக இருந்தன. ஆனால் திரைப்படங்களின் உருவாக்க முறை மெல்ல முன்னேறும் போது நாயகன் பாத்திரம் முதற்கொண்டு ஒவ்வொன்றிற்கும் அவைகளுக்கான பின்னணிகளுக்கு நம்பகத்தன்மையுடன் கூடிய நுண்தகவல்களைத் தர வேண்டியிருந்தது. அப்போதுதான் அவை யதார்த்தமான படைப்புகளாாக உருமாற முடியும் என்கிற கவனம் இயக்குநர்களுக்கு ஏற்பட்டது.

தேவர்மகன் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக வரும் பெரிய தேவர், அடிப்படையில் நல்லியல்புகள் கொண்டவராக இருந்தாலும் பழமைவாத மனம் உள்ளவராக, சாதிய பெருமிதம் கொண்டவராக இருக்கிறார். எனவே அது தொடர்பான பெருமிதப் புகழுரைகள் அவரை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. இந்தச் சூழலை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக உணர்த்த என்ன செய்ய வேண்டியிருக்கிறது? அவர் சமூகத்தின் புகழ்ச்சிப் பாடலை சித்தரிக்க வேண்டியிருக்கிறது. பொதுவாகவே கிராமத்திலுள்ள கூத்துக்கலைஞர்கள் அந்தந்த ஊர் பெரியவர்களின், சமூகங்களின் அருமை பெருமைகளை மிகையாக புகழ்ந்து பணம் பெறும் வழக்கம் இன்றும் கூட உள்ளது. (பருத்தி வீரனில் வரும் ஒரு காட்சியை நினைவு கூறலாம்). ஆனால் சாதியத்தின் பெயரால் நிகழும் வன்முறை, பகைமை குறித்த புழுக்கமும் பெரிய தேவருக்குள் உள்ளது. எனவேதான் தன் மகன் இதை காட்டுமிராண்டித்தனம் என்று ஆத்திரப்படும்  போது 'நாகரிக உலகத்தை நோக்கி அவன் மெல்லத்தான் வருவான்' என்கிறார்.

ஒரு திரைப்படத்தின் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான நோக்கில் சித்தரிக்கப்பட்ட ஒரு திரையிசைப்பாடலை தொடர்புள்ள அந்த சாதியச்சமூகம் தன்னுடைய பெருமைகளை விதந்தோதுவதற்காக எடுத்து பயன்படுத்திக் கொண்டால் அது எவருடைய குற்றம்? சமநிலையுடன் அத்திரைப்படத்தை கவனிக்கும் எந்தவொரு நடுநிலையாளரும் அதிலுள்ள வன்முறையின் குரூரத்தை உணர்ந்திருப்பார். இறுதியில் நாயகன் கதறும் கதறலால் துளியாவது அசைக்கப்பட்டிருப்பார். ஒருவேளை அவர் அழுத்தமான சாதி நம்பிக்கையாளராக இருந்திருந்தாலும் கூட அது குறித்த பரிசீலனை அவருக்குள் ஒரு துளியாவது ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இவற்றையெல்லாம் வசதியாக கைவிட்டு விட்டு அதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வன்முறைகளை பெருமையாகவும் அதன் பாடலை தங்களுக்குச் சாதகமானதாகவும் மாற்றிக் கொண்டால் அந்த மனம் சாதியப் பெருமிதத்திற்குள் எத்தனை ஆழமாக மூழ்கியிருக்கும்? தவறு படத்தின் மீதா அல்லது அந்த சாதியக் கொடுர மனதின் மீதா?

சமீபத்தில் விக்ரம் சுகுமாரன் இயக்கி வெளியான 'மதயானைக்கூட்டம்' என்கிற திரைப்படம் சாதியத்திற்கு ஆதரவானதாக பெரும்பாலான விமர்சகர்களால் கருதப்பட்டது. உண்மையில் அத்திரைப்படம் சாதியத்திற்கு எதிரானது. அந்த வன்முறையில் ஈடுபடுபவர்களை முட்டாள்களாக, கொடூரர்களாக சித்தரித்த திரைப்படம் அது. அறிவுஜீவிகளாலேயே ஒரு  திரைப்படத்தின் மையத்தை சரியாக கணிக்க முடியவில்லையெனும் போது பாமரர்களை நினைத்தால் பரிதாபமாகவே உள்ளது. இத்திரைப்படத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கட்டுரையை 'மதயானைக் கூட்டம் - சாதியக் கொடூரத்தின் ஆவணம்' என்கிற தலைப்பில் பிப்ரவரி 2014 உயிர்மை இதழில் எழுதினேன். அதுவரை அத்திரைப்படத்தை சாதியத்திற்கு ஆதரவானதாக கருதிய சிலர், இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டதாக எனக்கு தெரிவித்திருந்தார்கள். அத்திரைப்படத்தின் தலைப்பே அச்சமூகத்தில் உள்ள சாதிய வெறியாளர்களை கடுமையாக விமர்சிக்கிறது என்கிற அடிப்படையை, எளிமையான உண்மையைக் கூட பலரால் உணரமுடியவில்லை.

தேவர் சமூகத்தின் ஒரு பிரிவைச்  சார்ந்த சாதியமைப்பு ஒன்று தங்களின் பேனர்களில் 'மதயானைக்கூட்டமே' என்று தங்களை சுயபெருமித்துடன் வர்ணித்துக் கொண்டது என்ற செய்தியை நண்பரொருவர் கூறினார். தேவர் மகனின் பாடலை தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்ட அதே சிறுமைத்தனம்தான் இதுவும். மதயானைக்கூட்டம் என்ற சொல்லின் பின்னால் உள்ள விலங்குகளின் மூர்க்கத்தனமான பொருளையுணரால் அதையும் பெருமையாக நினைக்கும் கூட்டத்தை என்னதான் சொல்வது? இந்த சிறுபிள்ளைத்தனங்களுக்கு கலைஞர்கள் என்ன முடியும்?

திரைப்படங்கள் என்று மட்டுமல்ல. சாதியப் பெருமிதங்களை பறைசாற்றும் சமூகங்கள் எந்தவொரு பழைய அடையாளங்களையும் அதன் உண்மையான பொருள் உணராமல் தங்களின் பெருமைகளாகவே நினைத்துக் கொள்கிறார்கள். சிங்கம் என்கிற விலங்கு ஒரு சமூகத்தின் பெருமை மிக அடையாளமாக, புளகாங்கிதமாக கருதப்படுகிறது. சிங்கத்தின் வாழ்வு முறையைக் காணும் போது உண்மையில் அரிமா எனப்படும் ஆண் சிங்கம் என்பது சோம்பேறித்தனமானது. தன் உணவிற்காக பெண் சிங்கத்தை சார்ந்திருக்கக்கூடியது. பெண் சிங்கங்கள் கூடி வேட்டையாடும் உணவை  வெட்கமில்லாமல் சென்று முதன்மையாக தின்னக்கூடியது. ஒரு சிங்கக்கூட்டத்தில் பெண் சிங்கங்களுக்கே அதிக முக்கியத்துவம் உண்டு. பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கத்திற்கு ஆயுள் குறைவானது. இந்த உண்மைகளை அறியும் எந்தவொரு நபராவது தம்மை இந்த விலங்குடன் ஒப்பிட்டு பெருமையடைவாரா?

ஆக சாதியப் பெருமிதங்களைக் கொண்ட நபரால் எந்தவொரு அடையாளத்தின்  உண்மையான பொருளை உணராமல் மேம்போக்காக தங்களுக்கு சாதகமாக ஸ்வீகரித்துக் கொள்ளும் அற்பத்தனங்களுக்கு அதன் எதிர்திசையில் இயங்கும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்கள் பலியாக்கப்படலாமா என்பதை யோசிக்கலாம்.

***

கல்வியறிவின் சதவீதம் குறைவாக உள்ள , பழமைவாத மனங்கள் இன்னமும் மாறாத ஒரு சமூகத்தில் உருவாகும் படைப்புகள் அது குறித்த ஜாக்கிரத்தனத்துடன், அந்தச் சூழலை உசுப்பேற்றாத அளவில் உருவாக்கப்பட வேண்டும் அல்லவா? இது கலைஞர்களின் கடமையும் பொறுப்பும் அல்லவா என்றொரு கேள்வி எழலாம். இது ஒருவகையில்தான் சரியானது. கலைஞர்களின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடாத சமூகம்தான் நாகரிகத்தை நோக்கி முன்னேறுகிற சமுதாயமாக கருதப்படும்.  துணைத் தகவல்களால் திசை திரும்பாது ஒரு படைப்பின் மையத்தை சரியாகப் புரிந்து கொள்கிற அளவிற்கான பயிற்சியை நாம் பெற வேண்டும் என்பதே இதிலுள்ள செய்தி. 'ஒரு திரைப்படத்தை எவ்வாறு அணுகுவது என்கிற பயிற்சியை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்று இயக்குநர் பாலுமகேந்திரா பல காலமாக சொல்லிக் கொண்டிருந்ததை இந்த நோக்கில் புரிந்து கொள்ளலாம்.

அப்படியொரு முன்னேற்றமான சூழல் சமூகத்தில் மலரும் வரை பாமரர்களுக்கு இதைச் சரியாக சுட்டிக் காட்ட வேண்டிய பணி விமர்சகர்களுக்கு உண்டு. சாதிய வன்முறைச் சமூகத்தை நோக்கி உபதேசிக்க வேண்டிய கடமையை விட்டு கலைஞர்களை நோக்கி விமர்சிக்கும் விஷயமானது சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் தன்மையையே ஏற்படுத்தும்.

தேவர் மகனுக்குப் பிறகு தலைப்பிடப்பட்ட கமல்ஹாசனின் 'சண்டியர்' என்கிற திரைப்படமும் துவக்க நிலையிலேயே பலத்த ஆட்சேபத்திற்கு உள்ளானது. தேவர்மகன் திரைப்படத்தின் சில கூறுகளை சாதிய வெறியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட வன்முறைகளையும் அந்தக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தின் துயரங்களை கருத்தில் கொண்டாவது, அதன் நடைமுறை பாதிப்புகளை உணர்ந்தாவது கமல்ஹாசன் இந்த எதிர்ப்பை புரிந்து கொண்டிருக்கலாம். ஒரு தற்காலிக சமரசமாக தலைப்பை உடனடியாக மாற்றியிருக்கலாம். அதே சமயத்தில் இது படைப்புச் சுதந்திரத்தில் தலையிடும் விஷயம் என்கிற அவர் தரப்பும் அதற்கான நியாயம் கொண்டதுதான். சிலபல போராட்டங்களுக்குப் பின் தலைப்பை அவர் கசப்புடன் மாற்றிக் கொண்டது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. ஆனால் 'விருமாண்டி' என்று மாற்றப்பட்ட தலைப்பில் வந்த இந்த திரைப்படமும் இரு சாதியச் சமூகங்கள் முட்டாள்தனமாக மோதிக் கொண்டு மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அவலத்தை சித்தரிப்பதுதான். ஆனால் இத்திரைப்படமும் அதன் உள்ளடக்கத்தை தவறாகவே புரிந்து கொண்டு பரப்புரை செய்யப்பட்டது.

தம்முடைய திரைப்படத்திற்கு உடனடி கவனம்  கிடைக்க வேண்டும் என்கிற காரணத்திற்காகவே இது போன்ற சர்ச்சையான விஷயங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கிறார் என்கிற வாதம் எந்தளவிற்கு உண்மையானது? சண்டியர் சர்ச்சைக்குப் பிறகு வேறொரு நடிகரால் 'வர்றார் சண்டியர்' என்கிற திரைப்படம் வெளியான போது அது சார்ந்த பலத்த எதிர்ப்பும் உருவாகவேயில்லை. புகழ் பெற்ற நடிகர் என்பதாலேயே அவர் தொடர்பான விஷயங்களை எதிர்த்து தாங்கள் புகழடைய நினைக்கிறார்கள் என்று இந்த எதிர்ப்பாளர்களின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டை வைக்க முடியும்தானே?

***

உண்மையில் 'தேவர் காலடி மண்ணே' திரைப்பாடலை விட அதிக ஆபத்தைக் கொண்டது 'எஜமான் காலடி மண்ணே' வகைப் பாடல்கள். ஏனெனில் தேவர்மகன் போன்ற திரைப்படங்களின் இடையில் சித்தரிக்கப்படும் காட்சிகள் சாதியத்திற்கு ஆதரவானதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருந்தாலும் அதன் ஒட்டுமொத்த மையம் சாதியத்திற்கு எதிரானதாக உள்ளது என்பதை நிதானமாக யோசித்தால் உணர முடியும். ஆனால் 'எஜமான் காலடி மண்ணே' வகையறா திரைப்படங்களில் இது போன்ற ஆபத்தான இடைத்தகவல்கள் அல்லாமல் நாயகன் நல்லவன், அதன் எதிர்நாயகன் கெட்டவன் என்கிற கறுப்பு -வெள்ளை சித்திரங்களாக உருவானாலும் ஒட்டுமொத்த நோக்கில் அவை ஆண்டை -அடிமை கலாசாரத்தை மறைமுகமாக மிக வலுவாக முன்வைக்கின்றன.

இதில் வரும் நாயகர்கள் அடிப்படையில் நல்லியல்புகளைக் கொண்டிருந்தாலும் அந்தப் பிரதேசத்தின் எல்லாப் போக்கையும் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சார்ந்தவர்கள் இவரை அண்டிப் பிழைப்பவர்களாகவும் இந்த நாயகர்கள் அவர்களை கடவுள் நிலையிலிருந்து கருணை காட்டுவதான காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். குறுநில மன்னர்களாக, நிலச்சுவான்தாரர்களாக இருந்த காலக்கட்டத்தின் நிலப்பிரபுத்துவ தன்மையின் நீட்சிகளாக இவர்கள் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அனைத்துச் சமூகங்களும் அதன் மையத்தில், அதிகாரத்தில் பங்கேற்கும் ஜனநாயக வெளியை உறுதிப்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இது போன்ற சித்தரிப்புகள் பிற்போக்குத்தன்மைகளை வலியுறுத்துவதான அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்த தன்மையில் தேவர்மகன் வகை திரைப்படங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதைப் போல இவ்வகைத் திரைப்படங்களின் ஆபத்துகள் சரியாக கூட புரிந்து கொள்ளப்படுவதில்லை. முன்னதை விட இவ்வகையான திரைப்படங்கள் சமூகத்தில் விதைக்கும் ஆபத்தே அதிகம்.

ஒருகாலக்கட்டத்திற்குப் பிறகு தமிழ் திரையில் இடைநிலைச்சாதிகளின் சாதியப் பெருமிதங்களை அழுத்தமாக முன்வைக்கும் திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி போன்றவர்கள் இவ்வகையான திரைப்படங்களை தொடர்ச்சியாக உருவாக்கத் துவங்கினார்கள். இடைநிலைச்சாதி சமூகங்களை பெருமையாக சித்தரிப்பது என்பது ஒரு போக்காகவே மாறி அதுவே ஒரு வணிகச் சரக்காக மாறிற்று. தொடர்ச்சியான முற்போக்கு பிரச்சாரங்களால் சமூகத்தில் அமுங்கியிருந்த சாதியுணர்வு மீண்டும் வீறு கொண்டு புது வேகத்துடன் சாதிய அமைப்புகளாகவும் அரசியலாகவும் மாறுவதற்கு இவ்வகை திரைப்படங்களும் ஒருவகையில் காரணமாக இருந்தன. ஏனெனில் ஒட்டுமொத்த நோக்கில் இவை அந்த நாயகர்களின் சாதியப் பெருமிதங்களுக்கு ஆதரவாக இயங்கின; அதன் வன்முறைகளை நேரடியாக,  மறைமுகமாக நியாயப்படுத்தின.

ஆனால் இவ்வகை திரைப்படங்களின் ஆபத்துகள் பரவலாக உணரப்படுவதில்லை, எதிர்ப்புகள் பரவலாக ஆவதில்லை. ஆனால் இதன் நேர்திசையில் இயங்கும் தேவர்மகன் வகை திரைப்படங்கள் பெரிய ஆபத்தாக முன்நிறுத்தப்படுகின்றன. நாம் எவ்வகை புரிதலில் இயங்குகிறோம் என்கிற அறியாமையை இந்தப் போக்குகள் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றன.

சமீபத்தில் வெளியான 'மருது' என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படங்களான குட்டிப் புலி, கொம்பன் ஆகிய திரைப்படங்களோடு இந்த திரைப்படமும் ஒரு குறிப்பிட்டட சமூகத்தின் சாதியப் பெருமிதங்களை, அதன் வன்முறைகளை, கொலைகளை பெருமைமிகு அடையாளத்துடன் பதிவு செய்கிறது. இதன் சமூக அடையாளங்கள் மிகத் தெளிவாகவே படத்தில் சித்தரிக்கப்படுகின்றன. இந்தப் பிரதேச மனிதர்கள் அல்லது இந்தச் சமூகத்து மனிதர்கள் வன்முறையாளர்கள் என்கிற செய்தியை இவ்வகைத் திரைப்படங்கள் விஷம் போல் பொதுப்புத்தியில் ஏற்றிக் கொண்டேயிருக்கின்றன. இது தொடர்பான சமூக உணர்வோ அல்லது கூச்சமோ இந்த இயக்குநர்களுக்கு இருப்பதில்லை. தற்செயலாக வன்முறைக் கூட்டத்தில் விழ வேண்டிய குற்றவுணர்வோடு தேவர்மகன் நாயகன் கதறுவதைப் போல இவர்களுக்கு எந்தவொரு நெருடலும் இருப்பதில்லை. மாறாக அந்த வன்முறைகளை தங்கள் கலாசாரத்தின் பெருமையாக  நினைப்பதுதான் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது. இது போன்ற திரைப்படங்கள்தான் மிகவும் ஆபத்தானவை. இந்த வித்தியாசத்தை தெளிவாக உணரும் நுண்ணுணர்வு நமக்குள் வளர வேண்டும்.

மேலும் ஒரு சாதியின் பெயரை உச்சரிப்பதற்கே தயங்கும், அச்சப்படும் போக்கும் ஆபத்தானது.  எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடிய ஒரு அணுகுண்டை எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைப்பதைப் போன்ற ஆபத்து இது. சாதி சார்ந்த நகைச்சுவைகளால், பகடிகளால் அதன் தீவிரத்தன்மை மெல்ல மழுப்பப்பட வேண்டும். இதைப் பற்றிய  மிகையுணர்வுடன் அல்லாத வெளிப்படையான அறிவுசார் உரையாடல்கள் சமநிலையுடன், திறந்த மனதுடன் சமூகத்தில் நிகழ வேண்டும்.

பழங்குடிகளின் தொடர்ச்சியாக உருவாகி வந்த இனக்குழுக்களில் இருந்து சாதி என்கிற அமைப்பும் அதன் உட்பிரிவுகளும் உருவாகின. ஒவ்வொரு இனக்குழுவிற்கு பின்னாலும் பல்லாண்டுக்கணக்கான வருடத்தில் இறுகி வந்த பண்பாட்டு அடையாளங்களும் அதன் நுண்மைகளும் உள்ளன. அவற்றில் உள்ள பிற்போக்குத்தனங்கள் மெல்ல களையப்பட்டு தன்னைச் சுத்திகரித்துக் கொண்டே முன்னகர்வதே நாகரிக சமூகத்தின் அடையாளம். மாறாக அதனுள் திணிக்கப்படும் உயர்வு தாழ்வுகளும் பாகுபாடுகளுமே சர்ச்சைகளையும் வன்முறைகளையும் உண்டாக்குகின்றன. சாதி அரசியல் இதனை வளர்த்து தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்கிறது.

***

மீண்டும் கமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படத்தின் சர்ச்சைக்கே திரும்புவோம். 'சபாஷ் நாயுடு' என்பதில் உள்ள சாதியப் பெயருக்காக படம் வெளிவருவதற்கு முன்பே ஏன் இத்தனை பதட்டப்பட வேண்டும்? இந்தப் படத்தின் தலைப்புடன் வெளியான நடிகரின் புகைப்படம் இதுவொரு நகைச்சுவைத் திரைப்படம் என்பதை வெளிப்படையாகவே உணர்த்துகிறது. இதற்கு முன்னர் வெளியான 'தசாவதாரம்' என்கிற திரைப்படத்தின் ஒரு பாத்திரமான 'பலராம் நாயுடு' பலரால் கவனிக்கப்பட்டது; ரசிக்கப்பட்டது.

கமல்ஹாசன் ஒரு திறமையான கலைஞர் என்பதன் கூடவே திறமையான வணிகர் என்கிற தன்மையையும் கொண்டவர். எனவே முன்னர் ஒரு பாத்திரத்தின் மூலம் நிறுவப்பட்ட அடையாளத்தை சாமர்த்தியமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் விதமாக அதை இன்னமும் விரிவாக்கம் செய்து முழு திரைப்படமாக உருமாற்றுகிறார். எனவே பார்வையாளர்களிடம் அது எளிதில் சென்று பதிய ஏதுவாக அந்தப் பெயரையே மறுபடியும் பயன்படுத்திக் கொள்கிறார் என்கிற நோக்கில் நம்மால் ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை?

தசாவதாரம் 'பலராம் நாயுடுவை' நினைவுகூர்ந்தால் அது எத்தனை சுவாரசியமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம் என்பதை உணர முடியும். பலராம் நாயுடு, காவல்துறை அதிகாரிக்குரிய அடிப்படையான அறிவைக் கொண்டிருந்தாலும் ஓர் அரசாங்க இயந்திரத்தின் அபத்தமான தன்மையையும் கொண்டவர். ஒரு சிக்கலான சூழலை அவரால் உடனடியாகப் புரிந்து கொள்ள  முடியவில்லை. தன்னை உயர்ந்த இடத்தில் கற்பனை செய்து கொண்டு அந்த அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் அவர், அவரை விடவும் உயர்ந்த அதிகாரியின் முன்னால் அடிமை போல பதறவும் செய்கிறார். அதீதமான மொழிப்பற்று கொண்டவர். அம்மாஞ்சியான ஒருவரைக் கூட தன் மொழி சார்ந்தவர் என்பதால் வரவழைக்கப்பட்ட பாசத்துடன் சகித்துக் கொள்கிறார்.

இப்படியொரு பாத்திரம் முழு திரைப்படத்திலும் வந்தால் அது எத்தனை சுவாரசியமான  படைப்பாக இருக்கும்? ஆனால் அது வெளிவருவதற்கு முன்னாலேயே அதனுள் உள்ள சாதியின் பெயரைக் காரணம் காட்டி நாம் பதறுகிறோம், எதிர்க்கிறோம். நம் எல்லோருக்குள்ளும் ஒரு கோமாளித்தனமான  'பலராம் நாயுடு" என்கிற உண்மையைத்தான் இம்மாதிரியான பதட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன.


உயிர்மை - ஜூன் 2016-ல் வெளியான கட்டுரை.

suresh kannan