Saturday, December 07, 2019

Parched : விட்டு விடுதலையாகும் பெண்மை



பாலின சமத்துவமின்மை என்பது பல காலமாக நீடிக்கும் ஒரு தீவிரமான பிரச்சினை. குடும்பம், சமூகம், பணியிடம், திருமணம் என்று எல்லா நிறுவனங்களிலும் ஆண் இனத்தின் ஆதிக்கத்தையும் வன்முறையையும் பெண்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கல்வி, பொருளாதாரம் என்று பல்வேறு துறைகளிலும் பெண்கள் முன்னகர்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலிலும் பிரச்சினையின் தீவிரம் குறைந்த பாடில்லை. பெருநகரங்களிலேயே தனது கோரமான முகத்தை வெளிப்படுத்தும் ஆணாதிக்கம், அறியாமை நிறைந்த கிராமங்களில் எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. இந்த சூழலில் பெண்களின் பிரச்சினைகளை, உரிமைகளை, விடுதலையை மையப்படுத்தும் கலைப்படைப்புகள், விழிப்புணர்வு உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும். பெண்ணியம் என்பது போலிப் பகட்டாக, வெற்று வீம்பாக, மிகையுணர்ச்சி அடிப்படையில் அல்லாமல் அறிவு சார்ந்து அமைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கலை, இலக்கியத்திற்கு முக்கிய பங்குண்டு.

இந்த வகையில் சமீபத்தில் வெளியான சிறந்த பெண்ணிய வகைமைத் திரைப்படமென்று Parched-ஐ சொல்லலாம். நடிகர் அஜய் தேவ்கனின் சினிமா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், டொராண்டோ திரைப்படவிழாவில் சிறப்பு பிரிவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

குடும்ப வன்முறை, பெண் அடிமைத்தனம், பாலியல்  போன்ற தளைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு வெளியேறும் நான்கு கிராமத்துப் பெண்களின் மீதாக அமைந்துள்ள திரைக்கதை.


***

ராஜஸ்தானில் உள்ள ஒரு பழமைவாத கிராமம். இந்தியக் கிராமங்களுக்கேயுரிய ஆணாதிக்க கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள், வன்முறைகள் நிறைந்த பிரதேசம். துவக்க காட்சியே இத்திரைப்படம் முன்னகரப் போகும் திசையை அழுத்தமாக பதிவு செய்துவிடுகிறது.  புகுந்த வீட்டிலிருந்து தப்பித்து ஓடி வந்து விட்ட ஓர் இளம் பெண்ணை அங்கேயே திருப்பியனுப்ப பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கிறது. 'திருமணம் ஆன பிறகு இந்த ஊருக்கும் உனக்கும் தொடர்பில்லை. திரும்பிப் போ' என்று ஊர் பெரியவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். அவள் அழுத்தமாக மறுக்கிறாள். பெற்றோர்களின் மூலம் வலுக்கட்டாயமாக அனுப்புகிறார்கள். அவள் கதறிக் கொண்டே தன் தாயிடம் சொல்லும் வசனத்தின் மூலம் அவள் எத்தனை அவலமான சூழலில் இருக்கிறாள் என்பது தெரிய வருகிறது.

"என் கணவன் என்னைத் தீண்டுவதேயில்லை. அவனுக்கு வேறு ஒரு தொடுப்பு இருக்கிறது. அவனுடைய சகோதரர்கள் என்னை வன்கலவி செய்கிறார்கள். மாமனார் கூட. என் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு யார் தகப்பன் என்று தெரியாத காரணத்தினாலேயே அழித்து விட்டேன். நான் திரும்பிப் போனால் என்னைக் கொன்று விடுவார்கள்" என்று கதறுகிறாள்.

அவளுடைய தாய் ஒரு கணம் உற்றுப் பார்க்கிறாள். அடுத்த காட்சியில் இளம் பெண் திகைப்பும் அழுகையுமாய் பார்க்க அவளுடைய பெற்றோர் வண்டியில் ஏற்றி அனுப்பும் காட்சி தெரிகிறது. திருமணம் என்கிற ஒரு காரணத்தினால் எத்தனை கொடுமைகள் இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு ஒரு கேவலமான அடிமை போல தங்களின் வாழ்நாளை கண்ணீரில் கரைக்கும் கோடிக்கணக்கான இளம்பெண்களின் ஒரு பரிதாபமான பிரதிநிதியைப் போல அவளுடைய சித்திரம் நமக்குத் தெரிகிறது.

***


அந்தக் கிராமத்தில் உள்ள ராணி, பிஜ்லி,லஜ்ஜோ ஆகிய மூன்று பெண்களும் தோழிகள்.

ராணிக்கு இளம் வயதிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டு விடுகிறது. திருமணமான இரண்டாவது வருடத்திலேயே அவளுடைய கணவன்  ஒரு விபத்தில் செத்துப் போகிறான். நீண்ட கால தனிமையின் துயரத்தோடு தன் மகனை வளர்க்கிறாள் ராணி.

பிஜ்லி கிராமத்து ஆண்களின் பாலியல் வடிகாலாக இருக்கிறாள். ரெக்கார்ட் டான்ஸ் ஆடிய நேரம் போக பணக்காரர்களின் காம இச்சைக்கு விருந்தாகும் பண்டமாக இருக்கிறது அவளது வாழ்க்கை.

லஜ்ஜோ குடும்ப வன்முறையில் சிக்கி கணவனிடம் தினம் தினம் அடிபடுகிறவள். போதாக்குறைக்கு மலடி என்கிற அவச்சொல்லையும் சுமந்து திரிகிறாள். ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லையெனில் அதற்கு அவளே காரணம் என்கிற பிற்போக்குத்தனமான சிந்தனைக்கு அந்தக் கிராமமும் விதிவிலக்காக இல்லை.

இந்த மூன்று பெண்களின் அவல வாழ்க்கையில் அடுத்த தலைமுறையின் பிரதிநிதியாக வந்து இணைபவள் ஜானகி. ராணியின் மருமகளாக வருபவள். ராணியின் இளம் மகனும், பிற்போக்குத்தனமான ஆணின் குணாதிசயங்களோடு இருக்கிறான். புது மனைவியை விட்டு விட்டு பாலியல் தொழிலாளிகளை நாடிச் செல்கிறான்.

இந்த நான்கு பெண்களின் வழியாக ஆணாதிக்க உலகின் குரூரங்களும் அவர்களிடம் சிக்கித் தவிக்கும் பெண்களின் அவலங்களும் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருக்கின்றன. பெண் இயக்குநரான லீனா யாதவ் நினைத்திருந்தால் இந்த துயர அடுக்குகளை மிகவும் மெலோடிராமாவாக பார்வையாளர்களிடமிருந்து கண்ணீரை வலுக்கட்டாயமாக பிடுங்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்க முடியும். அதற்கான கலைத்திறன் அவரிடம் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் துயரங்களின் இடையேயும் அவர்களிடமுள்ள சந்தோஷங்களின் கணங்களையும் தங்களின் விடுதலைக்காக  தன்னிச்சையாக அவர்கள் சிந்திக்கும் காட்சிகளையும் மிக இயல்பானதாக பதிவு செய்துள்ளார்.


***

குடும்ப வன்முறையைத் தாண்டி பெண்கள் தங்களின் பாலியல் விழைவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும், தங்களுக்குள் அந்தரங்கமான பரஸ்பர ஆறுதல்களைத் தேடிக் கொள்ளும் காட்சிகளும் இதில் நுட்பமாக பதிவாகியுள்ளன. தங்களை வீராதி வீரர்களாக காட்டிக் கொள்ளும் இந்திய ஆண்கள், பாலியலை கையாள்வதில், அறிந்து வைத்திருப்பதில் எத்தனை பலவீனமானவர்கள், விழிப்புணர்வு இல்லாதவர்கள் என்பதை பல்வேறு ஆய்வுத்தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

லஜ்ஜோ, கணவனிடம் தினமும் உதை வாங்குவது மட்டுமல்லாமல் மலடி என்கிற அவச்சொல்லுக்கும் ஆளாகிறாள். "ஏன் உன் கணவனிடமும் குறை இருக்கலாமே?" என்று பிஜ்லி கேட்கும் போது "என்ன ஆணிடம் குறை இருக்குமா?' என வெள்ளந்திதனமாக அதிசயிக்கிறாள். தன்னுடைய இயலாமைக்கும் பெண்கள் மீதே பழிபோடும் ஆணாதிக்க தந்திரங்களின் நூற்றாண்டு சதியின் கரம் அவளையும் வளைத்துப் பிடித்திருக்கிறது.

லஜ்ஜோவின் 'மலடி' பட்டத்தைப் போக்குவதற்காக பிஜ்லி ஓர் ஆலோசனை தருகிறாள். பிஜ்லிக்குப் பிடித்தமான ஓர் ஆடவனுடன் லஜ்ஜோ கூடி குழந்தைப் பேறு அடைவதுதான் அது.  இது தொடர்பாக பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நாவல் எனக்கு நினைவிற்கு வந்தது. கணவனின் இயலாமைக்காக, அவனுடைய குறைக்காக அப்பாவியான மனைவி தன் வாழ்நாள்  முழுவதும் அவச்சொல்லையும் குழந்தையில்லாத மனஉளைச்சலையும் போக்குவதற்காக 'ஐதீகம்' என்கிற பெயரில் செய்யப்பட்டிருக்கும் ஒரு முற்போக்குத்தனமான ஏற்பாடு தொடர்பான விவரங்களும் சம்பவங்களும் அந்த நாவலில் பதிவாகியிருக்கும். நிலவுடைமை மதீப்பீடுகள் நிறைந்திருந்த காலக்கட்டத்தில் இது குறித்து சிந்தித்திருக்கும் முன்னோர்களை வியக்கவே தோன்றுகிறது.  ஆனால் சாதி அரசியலால் அந்தப் புதினம் சர்ச்சைக்கு உள்ளானதும் பெருமாள் முருகன் எழுத்தை கைவிடுவதாக அறிவித்ததும் துரதிர்ஷ்டமானது.

பிஜ்லியின் தொழிலே தினம் ஆண்களை சந்திப்பதுதான். ஆனால் அவளே தன் பாலியல் கிளர்ச்சியையும் இன்பத்தையும் இந்த ஆடவனிடம் மட்டும்தான் கண்டிருக்கிறாள். எனவே இவனை தன் தோழி லஜ்ஜோவிற்கு பரிந்துரைக்கிறாள். தயக்கத்துடனும் பயத்துடனும் செல்லும் லஜ்ஜோ, தன் ஆடையை விலக்கிக் கொண்டு படுத்து விடுகிறாள். இந்தச் செயல் ஆண்களின் பொதுவான அவசரத்தை பரிகசிப்பது போலவே இருக்கிறது.

ஆனால் தன்னை நோக்கி வணங்கும் அவனைக் கண்டு அவளுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமுமாக இருக்கிறது.  அவன் மெல்ல மெல்ல நிதானமாக அவளை கையாள்கிறான். அவள் இதுவரைக்கும் அடையாத இன்பமாக அது இருக்கிறது. சற்று தவறியிருந்தாலும் ஆபாசமாகி விட்டிருக்கக்கூடிய இந்தக் காட்சிக் கோர்வையை கலையழகியலுடன் கையாண்டிருக்கும் இயக்குநரின் திறன் பாராட்டப்பட வேண்டியது. இதன் பின்னணி இசையும் அபாரமானது.

இரண்டே வருடங்கள் மட்டுமே திருமண வாழ்க்கையை வாழ்ந்த ராணியின் தனிமையுணர்வும் அவளுக்கு அடிக்கடி வரும் அநாமதேய தொலைபேசி அழைப்புகளும் கூட பெண்களின் பாலியல் தனிமையின் துயரத்தை நுட்பமாக சொல்கிறது.

***


ஓர் ஆண் இன்னொரு ஆணை இழிவு செய்ய உபயோகப்படுத்தும் வசவு வார்த்தைகளைக் கவனித்தால் அதன்  உட்பொருள் பெரும்பாலும் பெண்களை இழிவு செய்வதாகத்தான் இருக்கும். உலகமெங்கிலும் பரவலாக இந்த வழக்கம் உள்ளது. இதன் பின்னாலும் ஆண்மைய சிந்தனையே உள்ளது. இந்த  விஷயத்தை பிஜ்லி விசாரணை செய்கிறாள். "ஏன் ஆண்கள் பரஸ்பரம் திட்டிக் கொள்ளும் வசவுகளில் பெண்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள்?. நாம் ஆண்கள் தொடர்பான வசவு வார்த்தைகளை உருவாக்குவோம்" என்று மூன்று பெண்களும் குன்றின் உச்சியில் நின்று அந்த வார்த்தைகளை உற்சாகமாக கூவுவது சுவாரசியமான காட்சிகளுள் ஒன்று.

தன் கணவனைப் போலவே தன் மகனும் ஆணாதிக்கப் பிரதியின் நகலாக இருப்பதை வேதனையுடன் தொடர்ந்து கவனிக்கும் ராணி, ஒரு கட்டத்தில் தன் மருமகளை அவள் விரும்பிய காதலனுடன் இணைத்து வைக்கும் காட்சி நெகிழ்வானது.

இதில் வரும் எல்லா ஆண்களும் கொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படும் சமநிலையற்ற தன்மையை இயக்குநர் செய்யவில்லை. இதே கிராமத்தைச் சேர்ந்த கிஷன் என்கிற இளைஞன், வேற்று இனப் பெண்ணை திருமணம் செய்திருப்பதால் ஊராரால் வெறுப்பாக பார்க்கப்படுகிறான். பெண்கள் உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்களுக்கான வணிகத்தை செய்வதன் மூலம் அந்த கிராமத்தின் பெண்களுக்கு பொருளாதார ரீதியான தன்னம்பிக்கை வர காரணமாக இருக்கிறான். இறுதியில்  ராணியின் மகன் உட்பட சில பழமைவாத மனோபாவம் கொண்ட இளைஞர்களால் தாக்கப்பட்டு நடுச்சாலையில் வீழ்ந்து கிடக்கிறான்.

இதைப் போலவே ஜானகியைக் காதலிக்கும் இளைஞனும். வரதட்சணை பணம் தர முடியாத வறுமையின் காரணமாக அவளைத் திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் அவள் திருமணமாகி வந்திருக்கும் இந்த ஊரைச் சுற்றி சுற்றி வருகிறான். அவள் விட்டுச் சென்ற பாடப்புத்தகங்களைக் கொண்டு வந்து தருகிறான்.

***

ராணியாக நடித்திருக்கும் தன்னிஷ்தா சட்டர்ஜியின் பங்களிப்பு அபாரமானது. இவர் நாடகக்குழுக்களில் செயலாற்றியவர். கிராமத்து பெண்ணாகவே தோன்றுகிறார். நீண்டகால தனிமையை இளமைப்பருவத்திலேயே உணர வேண்டிய துயரம், தன் மகனின் மீது வைத்திருக்கும் அன்பு, அவனும் ஒரு வழக்கமான  ஆணைப் போல தன்னை அவமானப்படுத்தும் போது கொள்ளும் அழுகை போன்ற காட்சிகளை சிறப்பாக கையாண்டிருக்கிறார்.  லஜ்ஜோவாக நடித்திருக்கும் ராதிகா ஆஃப்தே, பிஜ்லியாக நடித்திருக்கும் சுர்வீன் சாவ்லா போன்றோரின் நடிப்பும் அற்புதமானதாக உள்ளது.

ரஸ்ஸல் கார்ப்பெண்டரின் சிறப்பான ஒளிப்பதிவு, சர்வதேச திரைப்படங்களின் நிகரான தரத்துடன் உள்ளது. ஹித்தேஷ் சோனிக்கின் பின்னணி இசையும் அபாரம். ஆணாதிக்க உலகில் சிக்கித் தவிக்கும்  நான்கு கிராமத்து பெண்களின் துயர வாழ்வியலை எவ்வித செயற்கையும் மிகையும் இல்லாது கலையமைதியுடன் விவரிப்பது சுலபமானதல்ல. லீனா யாதவ்வின் எழுத்தும் இயக்கமும் இயல்பான தொனியில் அதை சாதித்திருக்கின்றன. ஆணாதிக்க தளையிடமிருந்து அவர்கள்  தங்களை விடுவித்துக் கொண்டு  சுதந்திரமாக முன்னகரும் இறுதிக் காட்சியின் விடுதலையானது, அதிரடியானதாக இல்லாமல் இயல்பான பரிணாத்துடன் அமைந்துள்ளதான திரைக்கதை பாராட்டதக்கது

குடும்ப வன்முறை, பாலின சமத்துவமின்மை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் பெண்ணுலகம் தங்களின் விடுதலையைப் பற்றி ஆழமான சுயபரிசீலனையில் ஈடுபட வேண்டிய செய்தியை ஆர்ப்பாட்டமில்லாமல்  வலியுறுத்துகிறது இத்திரைப்படம்.



(அம்ருதா  இதழில் பிரசுரமானது)
 

suresh kannan

No comments: