Thursday, December 05, 2019

தாய்மையைப் போற்றுதல் - C/o. Sairabanu



பெண்களை  மையப் பாத்திரங்களாகவும் பெண்ணுலகப் பிரச்சினைகளைப் பிரதானப்படுத்தியும் சினிமாக்கள் உருவாவது அரிது. அவற்றிற்கான வணிகச்சந்தையா வணிக மதிப்போ இல்லை என்பதே முக்கியமான காரணம். அடிப்படையில் இது ஆணாதிக்க உணர்வு நிறைந்திருக்கும் சமூக மனோபாவத்தின் பிரச்சினை. ஏறத்தாழ உலகெங்கிலும் இதே நிலைதான். சில அரிதான பெண் ஆளுமைகள் மட்டுமே விதிவிலக்காக இந்த இரும்பு விதியை உடைத்து சாதனை புரிந்திருக்கிறார்கள். சமூகத்தின் எல்லாத் துறைகளும் ஆண்களாலும் ஆண்மைய சிந்தனையாலும் நிறைந்திருப்பதற்கு திரைத்துறையும் விதிவிலக்கில்லை என்பதால் ஆண்களை மையப்படுத்தியே சினிமாக்கள் உருவாகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு,  இந்த நிலைமையில் இருந்து இந்தி சினிமாவுலகில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. சொற்பமாக நிகழ்ந்த முந்தைய உதாரணங்களைத் தவிர்த்து The Dirty Picture (2011), No One Killed Jessica (2011), Kahaani (2012), English Vinglish (2012), Queen (2014) Mardaani (2014) NH10 (2015) என்பது போன்ற பெண்களை மையப்படுத்திய சினிமாக்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. இந்த வரிசையில் இன்னமும் கூட பல சமீபத்திய திரைப்படங்களை இணைக்க முடியும்.

இவை பரவலாக கவனிக்கப்பட்டதோடு வணிகரீதியாகவும் வெற்றியடைந்தன என்பதுதான் முக்கியமான விஷயம்.  சமூக உணர்வுள்ள சில பெண் படைப்பாளிகளின் முன்முயற்சிகள்தான் இவ்வகை திரைப்படங்கள் உருவாக பெரும்பாலும் காரணமாகயிருந்திருக்கின்றன. பொதுவாகக ஆண் படைப்பாளிகளின் இவ்வகையான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

பெண்மையப் பாத்திரங்களை வைத்து சினிமாவை உருவாக்கும் போக்கு மலையாள சினிமாவிலும் கூட சமீபமாக நிறையப் பிரதிபலிக்கிறது.  இந்த வகையில் மஞ்சு வாரியரின் நடிப்பில் வெளியான 'How Old are you' (2014) ஒரு முக்கியமான படைப்பு.. வணிகரீதியாகவும் இது பெரிய வெற்றியைப் பெற்றது. Karinkunnam 6'S (2016) - இதுவும் மஞ்சு வாரியர் நடித்து வெற்றி பெற்ற திரைப்படமே.

ஆனால் இது போன்ற பெண்மையத் திரைப்படங்கள் தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகும் போது வணிகரீதியாக பெரிய அளவில் வெற்றி காண்பதில்லை. மலையாளத்தில் பெரிய வெற்றியை ருசித்த 'How Old are you' தமிழில் ஜோதிகா போன்ற முன்னணி நடிகை நடித்தும்  திறமையாக சந்தைப்படுத்தப்பட்டும் கூட மலையாளத்தில் அடைந்த வெற்றியை அடையவில்லை. போலவே வெற்றி பெற்ற இன்னொரு மலையாள சினிமாவான '22 Female Kottayam' தமிழில் வெளியான போது கண்டுகொள்ளப்படவேயில்லை. அதனுடைய சுமாரான இயக்கம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றால் கூட இவை போன்ற திரைப்படங்கள் பெரும்பாலும் தமிழில் உருவாவதேயில்லை என்பதையும் உருவாகும் சில அரிதான முயற்சிகளுக்கும் போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பதையும் கவனிக்கலாம். தமிழ் சினிமா படைப்பாளிகள் மற்றும் பார்வையாளர்களின் மனோபாவம் மாறாததுதான் இதற்கான அடிப்படை காரணமா என்பது ஆய்வுக்குரிய விஷயம்.


***


பெண் பாத்திரத்தை பிரதானமாக வைத்து மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் C/O Saira Banu. இத்திரைப்படத்திற்கு இதை விடவும் பொருத்தமானதொரு தலைப்பு இருக்க நியாயமில்லை என்பது படத்தைப் பார்த்தால் தெரியும். (திரைப்படத்தின் தலைப்பை தமிழில் வைத்து விட்டாலே அதற்கு கேளிக்கை வரி விலக்குண்டு என்கிற அபத்த நகைச்சுவையெல்லாம், நல்லவேளையாக மலையாள திரையுலகில் இல்லை). தென்னிந்தியர்களின்  கனவு நாயகியாக இருந்த அமலாவின் மறுவருகை ஏறத்தாழ 25 வருடங்களுக்குப் பிறகு இந்த  மலையாள சினிமாவின் மூலம் நிகழ்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாய்ரா பானு (மஞ்சு வாரியர்) தபால் அலுவலகத்தில் பணிபுரியும் நடுத்தர வயது பெண். அவருடைய மகன் ஜோஷ்வா. பெயருக்கு சட்டக்கல்லூரியில் படிக்கிறான் என்றாலும் புகைப்படத் துறையில்தான் அவனுடைய ஆர்வம் மிகுந்திருக்கிறது. கீழ்நடுத்தர வர்க்க குடும்பம். சாய்ரா பானுவும் ஜோஷ்வாவும் தாய் - மகன் போல் அல்லாமல் நண்பர்கள் போலவே பழகுகின்றனர். ஜோஷ்வாவின் தந்தை பற்றிய விவரம் முதலில் வெளிப்படுவதில்லை. அவருடைய இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்காக ஜோஷ்வா அனுமதி கேட்கும் போது அவனுடைய வயதைக் காரணம் காட்டி சாய்ரா பானு உறுதியாக மறுக்கிறாள்.

கல்வி தொடர்பான விஷயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் நிகழும் ஒரு சமயத்தில் 'நீ ஒண்ணும் என் அம்மா இல்ல' என்று வெடிக்கிறான் ஜோஷ்வா. பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக செல்கிறான். உடைந்து போகும் சாய்ரா பானு பிறகு மெதுவாக தன்னைத் தேற்றிக் கொண்டு மகனைப் பற்றி விசாரிக்கத் துவங்குகிறாள். தாயின் அனுமதி பெறாமல் பைக்கை எடுத்துச் சென்ற ஜோஷ்வா, சூழ்நிலை காரணமாக மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். செய்யாத தவறுக்காக கொலைப்பழி அவன் மீது விழுகிறது. சிறையில் அடைக்கப்படுகிறான். குற்றத்தைச் செய்த சகமாணவன் செல்வாக்குள்ளவன்  என்பதால் அவன் தப்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

நடுத்தர வயது மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் எளிய பெண்ணான சாய்ரா பானு, அரசாங்கத்தின் மிகப் பெரிய இயந்திரங்களான காவல் மற்றும் நீதித்துறையிடம் போராடி எவ்வாறு தன் மகனை மீட்க முடியும்? அதற்கான விடையைத் தேடிப் பயணிக்கிறது இந்த திரைப்படம்.


***

பருந்திடமிருந்து தன் குஞ்சைக் காப்பாற்ற கோழி கொள்ளும் ஆவேசத்தையும் வீரத்தையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். போலவே தன் மகனைக் காப்பாற்றுவதற்காக ஒரு தாய் எந்த எல்லைக்குள் செல்வாள். ஆனால் தான் பெறாத மகனுக்காக அதேயளவு தாய்மையுணர்வு உருவாகுமா என்கிற கேள்விக்கு விடையைச் சொல்கிறது இந்த திரைப்படம். தாய்மையுணர்வும் பாசமும் அவளுக்கான உத்வேகத்தையும் வழியையும் காட்டித் தரும் என்கிற அற்புதமான செய்தியை இந்தப் படம் பதிவு செய்கிறது.

அவரவர்களின் மகன்களைக் காப்பாற்ற இரு தாய்கள் முயல்கிறார்கள். ஒருவர் நீதியின் பாதையில் நேர்வழியில் செல்கிறார். இன்னொருவர் குற்றவுணர்வு இருந்தும் தன் மகனின் குற்றத்தை மறைத்துக் காப்பாற்ற முயல்கிறார். வழக்கம் போலவே நீதி இவர்களை மெளனமாக வேடிக்கை பார்க்கிறது.

அறிமுக இயக்குநரான சோனி ஆண்டனி, இந்த கோர்ட் டிராமா திரைப்படத்தை மிக இயல்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்திச் செல்கிறார். தேவையில்லாமல் ஒரு காட்சிக் கோர்வை கூட இருக்கக்கூடாது என்பது ஒரு நல்ல திரைக்கதையின் பாலபாடம். முன்னர் நிகழும் சம்பவங்கள் பிந்தைய நிகழ்வுகளோடு கச்சிதமான இணைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் படத்தின் முற்பகுதியில் நிகழும் சில காட்சிகள், படத்தின் பிற்பகுதிகளின் சிக்கல்களோடு பொருத்தமாக இணைக்கப்படுவது பாராட்டத்தக்கது. நாடகத்தன்மையுடன் கூடிய திரைப்படமாக இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்தையும் நம்பகத்தன்மையோடு இயக்குநர் விவரிக்க முயல்வது சிறப்பானது.

தன் மகனை  அநீதியிலிருந்து மீட்டு வர தானே நீதிமன்றத்தில் வாதாட முடிவு செய்கிறார் சாய்ரா பானு. அந்தக் கதாபாத்திரத்தை செயற்கையாக உயர்த்தி காண்பிப்பதற்காக இந்தச் சூழல் திடீரென்று நாடகத்தன்மையுடன் முடிவாவதில்லை. தன் மகனைக் காப்பாற்றுவதற்காக நீதியின் அத்தனை கதவுகளையும் தட்டுகிறார் சாய்ரா பானு. ஒவ்வொரு காரணங்களால் எல்லாமே மூடிக் கொள்கின்றன. 'தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிக்க ஒரு சாமானியனுக்கு இந்த தேசத்தில் எந்த வழியுமே இல்லையா?" என்று அவர் உணர்ச்சி பொங்க கேட்பது, விசாரணைக் கைதிகளாகவே பல வருடங்கள் சிறையில் கழிக்கும் எளிய சமூகத்தின் குரலையும் துயரத்தையும் எதிரொலிக்கிறது.

சாய்ரா பானு நீதிமன்றத்தில் உரையாடும் காட்சியும் திடீரென்று ஞானம் பெற்றவரின் ஆவேசமாக அல்லாமல் ஒரு சராசரி பெண்ணின் பதட்டத்தோடும் குழப்பத்தோடும் அமைந்திருப்பது காட்சிகளின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.


***

பெண்மையப் பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு மஞ்சு வாரியருக்கு கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணமல்ல. தனது திறமையான நடிப்பை ஒவ்வொரு திரைப்படத்திலும் நிரூபித்து தான் தேர்வு செய்யப்படுவதற்கு நியாயம் அளிக்கிறார் மஞ்சு வாரியர். இந்த திரைப்படத்திலும் அவருடைய கொடி மிக அட்டகாசமாக பறக்கிறது. இளைஞனான ஜோஷ்வாவிற்கு ஈடாக அவனைக் கலாய்ப்பதாகட்டும், அவனுடைய அவமதிப்பை சகித்துக் கொண்டு பொறுமை காப்பதாகட்டும், அவனைக் காப்பாற்றுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் விடாமுயற்சியுடன் முயல்வதாகட்டும், சாய்ரா பானு என்கிற அந்தப் பாத்திரத்தை திறம்பட கையாண்டிருக்கிறார்.

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிகை அமலாவை மலையாள சினிமாவில் காண முடிகிறது. கனவு நாயகியின் அழகை  காலம் சிறிது அசைத்துப் பார்த்திருந்தாலும் ஏறத்தாழ அந்த வனப்பு அப்படியே இருக்கிறது. ஒரு திறமையான அரசு வக்கீலாக மிக கம்பீரமாக நடித்திருக்கிறார். ஜோஷ்வாக நடித்திருக்கும் ஷானே நிகாம், மாறாத முகபாவங்களில் இருந்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு சமகால இளைஞனின் தத்தளிப்புகளோடு அந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாய்ரா பானுவிற்கு உதவும் 'உப்புமா' வக்கீலாக பிஜூ சோப்பனத்தின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

திரைக்கதையின் போக்கை சீர்குலைக்காத இரண்டு அருமையான பாடல்கள் பொருத்தமான இடங்களில் ஒலிக்கின்றன. ஒரு புகைப்படக்கலைஞன் கேமராவினால் அல்லாது இதயத்தின் தூண்டுதல் வழியாக புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஜோஷ்வாவிற்கு கிடைக்கும் உபதேசக் காட்சி அருமையானது. சிறந்த புகைப்படக்கலைஞராக இருந்த அவனுடைய தந்தையான பீட்டர் ஜார்ஜை முன் உதாரணமாக காட்டுகிறார் தந்தையின் நண்பர். (இதே போன்றதொரு விஷயம் 'மகேஷிண்டே பிரதிகாரம்' திரைப்படத்திலும் உள்ளது)

***

பெண்மையத் திரைப்படம் என்பதால் மஞ்சு வாரியருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோஷ்வாவின் தந்தையாக சித்தரிக்கப்படும் மோகன்லால் கூட, ஒரு சிறிய காட்சியில் அதிலும் குரல் மூலமாக மட்டுமே நம்மால் அறியப்படுகிறார். ஏறத்தாழ மஞ்சு வாரியருக்கு இணையான பாத்திரம் அமலாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 'அந்தந்த சமயத்திற்கு ஏற்ப நீதியை எவ்வாறு கையாள வேண்டியிருக்கிறது' என்று இவர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு செய்யும் உபதேசக்காட்சி படத்தின் முற்பாதியில் வருகிறது. பிற்பாதியின் சம்பவங்களை, அந்தக் கதாபாத்திரம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதற்கான சமிக்ஞையை பார்வையாளர்களுக்கு சூசகமாக உணர்த்தும் படியாக அபாரமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

பார்வையாளர்களால் சற்றும் யூகிக்க முடியாதபடியான திசைக்கு இறுதிப்பகுதி பயணிக்கிறது. சாய்ரா பானு சராசரியான பெண்ணாக இருந்தாலும் தன் மகனைக் காப்பாற்றுவதற்கான விடாமுயற்சியின் பயணத்தில் எவ்வாறு ஒவ்வொன்றாக கற்றுக் கொள்கிறார், தனது நுண்ணுணர்வைப் பயன்படுத்தி எவ்வாறு அந்த வழக்கை எதிர்கொள்கிறார் என்பது தொடர்பான காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றன.

இரு நிலைகளின் முரண்களில் பயணப்படும் பெண்களின் வழியாக தாய்மையின் உன்னதத்தை மிக அற்புதமாக பதிவு செய்திருக்கிறது இந்த திரைப்படம். இது போன்ற பெண்மைய  திரைப்படங்கள், வணிகமதிப்பையும் சந்தையையும் உத்தரவாதமாக வெற்றி கொள்ளும் நிலை எப்போது சாத்தியமாகிறதோ, பாலின சமத்துவத்திற்கான மனோபாவம் சமூகத்தில் பெருகி விட்டதற்கான அடையாளமாக அந்தச் சூழலைக் கருதி மகிழ்ச்சி அடையலாம்.


(அம்ருதா JULY  2017 இதழில் பிரசுரமானது) 

suresh kannan

No comments: