Friday, December 27, 2019

என் அருமை கன்னுக்குட்டி (Ferdinand - 2017)



ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டை பற்றி நமக்குத் தெரியும். மனிதனுக்கும் விலங்குக்கும் இடையில் நடக்கும் போட்டியின் இறுதியில் விலங்கு கொடூரமாக கொல்லப்படும். மனிதர்களின் மகிழ்ச்சிக்காக நிகழும் இந்த வன்முறை விளையாட்டு கூடாது என்பதை இந்த திரைப்படம் சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

அதுவொரு காளைப் பண்ணை. சண்டைக்காக வளர்க்கப்படும் காளைகள் நிறைய உண்டு. அங்கு வளரும் கன்றுக்குட்டியான Ferdinand இயல்பிலேயே சாதுவான சுபாவத்தைக் கொண்டது. மலர்களின் வாசத்தை முகர்வது என்றால் அதற்கு அலாதியான பிரியம். ‘காளை என்றால் சண்டை போட வேண்டும். அதற்குத்தான் நாம் இருக்கிறோம்” என்று இதர கன்றுகள் இதை அவ்வப்போது சீண்டுகின்றன. ஆனால் ‘அன்பே சிவம்’ என்று நல்ல பிள்ளையாக இருக்கிறது Ferdinand.

Ferdinand-ன் தந்தை வீரம் மிகுந்த காளை. ஒருமுறை சண்டைக்குச் செல்லும் அது திரும்பி வராததால் துயரமடையும் Ferdinand எப்படியோ பண்ணையிலிருந்து தப்பிச் செல்கிறது. நினா என்கிற சிறுமியிடம் அடைக்கலம் புகுகிறது. இந்தக் கன்றுக்குட்டியை அன்பும் பாசமுமாக வளர்க்கிறாள் நினா. வருடங்கள் கடக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது Ferdinand. என்றாலும் அதனுடைய குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது.

நினாவும் அவளுடைய தந்தையும் மலர் திருவிழாவிற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். ‘நானும் வருவேன்’ என்று அடம்பிடிக்கிறது Ferdinand. ‘நீ இப்போது பெரிதாக வளர்ந்து விட்டதால் சரிவராது. ஏதேனும் ஆபத்து வரலாம்’ என்று இதனை விட்டு விட்டு அவர்கள் கிளம்புகிறார்கள். மலர்களின் மீது பிரியமுள்ள Ferdinand பிறகு தானும் செல்ல முடிவெடுத்து ஊருக்குள் நுழைகிறது. ஒரு வண்டு துரத்த அதனிடமிருந்து தப்பிக்க முயலும் Ferdinand-ன் ஜாலியான கலாட்டாவினால் ஊர் அமர்க்களப்படுகிறது. மக்கள் மிரள்கிறார்கள். சில ஆட்கள் Ferdinand-ஐ பிடித்துச் செல்வதை சோகத்துடன் பார்க்கிறாள் நினா.

தான் பிறந்து வளர்ந்த காளைப் பண்ணைக்கே திரும்பும் சோகம் Ferdinand-க்கு ஏற்படுகிறது. “நீ பெரிதாக வளர்ந்தாலும் அப்படியேதான் இருக்கிறாய்” என்று இதர காளைகள் கிண்டலடிக்கின்றன. El Primero என்கிற புகழ்பெற்ற வீரன் அங்கு வருகிறான். வீரமுள்ள காளையை தேர்ந்தெடுப்பது அவனுடைய நோக்கம். இந்த தேர்வில் தோற்று விட்டால் நேரடியாக கசாப்புக்கடைதான்.

வாழ்வா, சாவா என்கிற நிலை ஏற்பட, இதர காளைகளை சம்மதிக்க வைத்து அங்கிருந்து தப்பிக்க முயல்கிறது Ferdinand. பிறகு என்னவாயிற்று என்பதை ஜாலியான கலாட்டாக்களுடன் விவரிக்கிறது திரைப்படம்.

பீங்கான் பாத்திரங்கள் கடையில் மாட்டிக் கொண்டு Ferdinand வெளியே வர தத்தளிப்பது, காளைகளுக்கும் குதிரைகளுக்கும் நடக்கும் நடனப்போட்டி, கசாப்புக்கடையில் இருந்து தப்பித்தல், இறுதிப் போட்டியில் காளைக்குப் பதிலாக மனிதன் தப்பித்து ஓடுதல் போன்ற சுவாரஸ்யமான காட்சிகள் சுவையைக் கூட்டுகின்றன.

The Story of Ferdinand என்கிற குழந்தைகள் நூலில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் வண்ணமயமான மற்றும் அபாரமான கற்பனை வளத்துடன் கூடிய காட்சிகள் உண்டு. Carlos Saldanha இயக்கியுள்ள இந்த திரைப்படம் குழந்தைகள் கண்டு களிப்பதற்கான அருமையான சித்திரம்.
 
 
(SRV டைம்ஸில் பிரசுரமானது) 






suresh kannan

No comments: