Monday, December 30, 2019

‘ஆவியுலகத்திற்குள் மாட்டிக் கொள்ளும் ‘கிட்டார்’ சிறுவன் (Coco) 2017


..


.இந்த திரைப்படத்தின் பல சிறப்புகளில் ஒன்று, ‘சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான பிரிவில்’ ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றது’ என்பதுதான். பிக்சார் அனிமேஷன் ஸ்டுடியோவின் தரமான உருவாக்கமும் சுவாரசியமான திரைக்கதையும் இத்திரைப்படத்தை மறக்கவியலாத அனுபவமாக மாற்றுகின்றன.

மெக்ஸிகோவைச் சேர்ந்த கோகோ என்கிற 12 வயது சிறுவனுக்கு இசை என்றால் பிரியம். எர்னஸ்டோ என்கிற பிரபலமான இசைக்கலைஞர்தான் அவனுடைய ஆதர்சம். ஆனால் கோகோவின் வீட்டில் ‘இசை’ என்கிற சொல்லைக் கேட்டால் கூட கொலைவெறியாகி விடுகிறார்கள். கோகோ ஒரு முறை கிட்டார் வாத்தியத்தை தொட்டுப் பார்த்தற்கே அவனுடைய பாட்டி விரட்டி விரட்டி அடிக்கிறாள்.

இதற்கான பின்னணிக் காரணம் இருக்கிறது. கோகோவின் தாத்தாவுடைய தாத்தா இசை மீதுள்ள பிரியத்தால் வீட்டை விட்டுப் போய் விடுகிறார். அவருடைய மனைவி மிகச் சிரமப்பட்டு காலணி தயாரிக்கும் வேலையைக் கற்றுக் கொண்டு குடும்பத்தை வளர்த்தெடுக்க வேண்டியதாக இருந்தது. எனவே கோகோவின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக காலணி தயாரிக்கும் தொழிலைச் செய்கிறது. தங்களின் பரம்பரையை இப்படி ஆக்கியவர் மீதும் அதற்குக் காரணமான இசை மீது அவர்கள் கடும் வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

ரத்தத்திலேயே இசை ஊறியிருப்பதால் கோகோவினால் தன் இசை தாகத்தை தவிர்க்க முடியவில்லை. ஓர் இசைப் போட்டியில் கலந்து கொள்ள முயல்கிறான்.  வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, கோபத்துடன் வீட்டை விட்டு ஓடுகிறான். போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் சொந்த கிட்டார் வேண்டும். என்ன செய்வது என்று தவிக்கிறான் கோகோ. தன் ஆதர்ச இசைக்கலைஞரான எர்னஸ்டோவின் அருங்காட்சியகத்திலிருக்கும் கிட்டாரை எடுக்க முடிவு செய்கிறான் கோகோ.

மெக்ஸிகோ கலாசாரத்தின் படி அன்றைய தினம் முன்னோர்களை நினைவுகூரும் நாள். அவர்களுடைய புகைப்படத்தையும், அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளையும் வைத்து வழிபட்டால் மேல்உலகிலிருந்து அவர்கள் ஆவி வடிவத்தால் வருவார்கள் என்றொரு நம்பிக்கை.

கிட்டாரைத் திருடப் போகும் கோகோ தற்செயலாக தடுக்கி விழுந்து ஆவிகளின் உலகத்திற்குள் சென்று விடுகிறான். கூடவே அவனது செல்ல நாயான ‘டாண்டே’வும். சில பல நகைச்சுவையான சம்பவங்களுக்குப் பின் அவன் ஒரு விஷயத்தை அறிய நேர்கிறது. ‘புகழ்பெற்ற இசைக் கலைஞரான எர்னஸ்டோதான் அவனுடைய கொள்ளுத்தாத்தா’ என்கிற விஷயம். தானொரு இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறியும் கோகோ வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறான்.

எர்னஸ்டோவின் ஆசியை வாங்கிக் கொண்டு நம்முடைய உலகத்திற்கு திரும்பி விட வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். ஆனால் அதிலொரு சிக்கல். சூரிய உதயத்திற்குள் அவன் திரும்பாவிட்டால் அவன் ஆவியுலகத்திலேயே இருக்க வேண்டியதுதான்.

கோகோ தந்தையின் ஆசியைப் பெற்றானா, பூமிக்குத் திரும்பினானா என்பதையெல்லாம் மிக மிக சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள். வண்ணமயமான சித்திரங்களும் வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் அற்புதமான பாடல்களும் கற்பனை வளத்துடன் கூடிய திரைக்கதையும் என இத்திரைப்படம் காட்சிக்கு காட்சி பிரமிப்பூட்டுகிறது.

Lee Unkrich அபாரமாக இயக்கியிருக்கும் திரைப்படம் இரண்டு விஷயங்களை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது. ‘உன் மனம் உணர்த்தும் விஷயத்தை நோக்கி செல்’ மற்றும் ‘முன்னோர்களை மறவாதே’



(SRV டைம்ஸில் பிரசுரமானது) 

..suresh kannan

No comments: