Wednesday, December 04, 2019

Take Off - கடல் கடக்கும் பெண்




வருடம் 2014.  மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றுவதற்கான தாக்குதலில்  ISIS தீவிரவாதப் படை ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம். இந்தியாவில் இருந்து நாற்பதிற்கும் அதிகமான இளம்பெண்கள் செவிலியராக பணிபுரிவதற்காக  டிக்ரிட் எனும் நகரில் உள்ள மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஈராக்கில் நிகழ்ந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருந்தாலும்  'இங்கு நிலைமை அந்தளவிற்கு மோசமில்லை, கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது' என்று வந்த தகவல் அவர்களுக்கு துணிவை அளித்தது. ஏற்கெனவே அங்கு சென்று பணிபுரிந்து கொண்டிருந்த செவிலியர்களால் இந்தச் செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.

இந்தியாவில் கிடைக்கும் ஊதியத்தை விட சற்று கூடுதலாக சம்பளம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் நகை, நிலம் போன்றவற்றை அடமானம் வைத்து வெளிநாட்டுக்குச் செல்வதற்கான பணத்தை ஏற்பாடு செய்திருந்த வறுமையான பின்னணியைக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பணிபுரிந்த சில நாட்களுக்கு மட்டுமே நிலைமை சற்று சுமூகமாக இருந்தது. ஆனால் ISIS நாளுக்குள் நாள் மூர்க்கமாக முன்னேறிக் கொண்டே வந்தது. ஈராக்கின் ராணுவத்தால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  சிதறி ஓடினார்கள். எங்கும் மரண ஓலம், ரத்தக் கறைகள். குறிப்பாக இசுலாமியர் அல்லாதவர்களுக்கு உயிர் பாதுகாப்பில்லை என்கிற நிலைமை.

ஏறத்தாழ காலியாக இருக்கும் மருத்துவமனையில் ஒளிந்திருந்த 46 செவிலியரும் அச்சத்தால் உறைந்திருந்தனர். பாட்டரி தீர்ந்து கொண்டிருந்த நிலையில் ஈராக்கின் இந்தியத் தூதுவர் அஜய்குமாரைத் தொடர்பு கொண்டனர். 'அவசியமான உதவியை உடனே ஏற்பாடு செய்வேன்' என்று அவர் உறுதியளித்தார். செவிலியர்களில் பலர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதல்வர் உம்மண்சாண்டியின் தரப்பையும் தொடர்பு கொண்டனர். அவரும் நம்பிக்கையான பதில்களின் மூலம் ஆறுதலைச் சொன்னார்.

இந்தியாவைச் சேர்ந்த 46 செவிலியர்கள், போர் சூழல் கொண்ட அந்திய பிரதேசத்தில் சிக்கிக் கொண்ட தகவல் கிடைத்தது முதல் இந்திய வெளியுறவுத் துறையின் உயர் மட்ட குழுவில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்தப் பிரச்சினையில் பிரதான கவனம் செலுத்தினார். சில பல பரபரப்பான நாட்களுக்குப் பின்னர் அனைத்து செவிலியர்களும் இந்திய தூதுவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். கேரளத்தைச் சார்ந்த பல செல்வாக்குள்ள நபர்கள் இந்த மீட்பிற்கு பின்னர் உள்ளதாக கூறப்படுகிறது. பேரத்திற்குப் பிறகு இந்திய தரப்பின் சார்பில் கணிசமான தொகையும் கைமாறப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாக இது அப்போது இருந்தது. ஏறத்தாழ ஒரு மாதமாக நிகழ்ந்த பதட்டத்திற்குப் பின்னர், அனைத்து செவிலியர்களும் கொச்சி விமான நிலையத்தில் பத்திரமாக வந்து தரையிறங்கிய போது இந்தியாவின் சார்பில் உணர்ச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவுகளின் நெகிழ்வான சம்பவமாக அது அமைந்தது.

பரபரப்பும் சாகசமும் நெகிழ்வும் அடங்கிய இந்த சம்பவத்தையொட்டி உருவாக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் 'Take Off'.


***


இந்த திரைப்படத்தைக் காணுவதற்கான ஒரேயொரு உன்னதமான, அவசியமான காரணதைச் சொல்ல வேண்டுமென்றால் அது சமீராவாக நடித்த பார்வதி. தனது அபாரமான நடிப்பினால் ஒவ்வொரு சட்டகத்தையும் உயிர்பெறச் செய்திருக்கும் மாயத்தை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

திருமணத்திற்கு முன், பின் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. தன் அதுவரையான வாழ்வை வடிவமைத்தவர்களை, அனைத்து சுக, துக்கங்களிலும் பங்கு கொண்ட உறவுகளை  திருமணம் என்கிற காரணத்திற்காக ஒரே நாளில் பிரிந்து வருவது மரண வலிக்கு ஒப்பானது. நம் பண்பாடு உருவாகியிருக்கும் வகையில் ஆண்டாண்டுகளாக  இதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மருமகளும் திருமணத்திற்குப் பின் பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டிற்கே அதிக விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்.

சமீராவிற்கும் இதுவே நிகழ்கிறது. திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய தந்தையின் கடனை அடைப்பதற்காக போராடுகிறாள். அதற்காக பணிக்குச் செல்ல முனைகிறாள். ஆனால் இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த கணவனின் குடும்பம் அதை நெருடலாக உணர்கிறது. அந்த உறவையே துண்டிக்கும் இக்கட்டான நிலை சமீராவிற்கு ஏற்படுகிறது. அதனால் தன் மகனைப் பிரிய நேரும் துயரமான நிலைமையையும் வேறு வழியேயின்றி சகித்துக் கொள்கிறாள்.

அதிகமான பணம் கிடைக்கும் என்கிற காரணத்திற்காக உறவுகளின் எதிர்ப்பையும் முணுமுணுப்புகளையும் கடந்து, புதிதாக அமைத்துக் கொண்ட திருமண உறவுடன் ஈராக் செல்கிறாள்.ஆபத்தான சூழல் என்பதை அறிந்தும் அவளுடைய புதிய கணவன் மருத்துவ சேவைக்காக இவர்களை விட்டு வேறு இடத்திற்குப் பயணிக்கிறான். சமீரா பணிபுரியும் மருத்துவமனையை பயங்கரவாதப் படை கைப்பற்றுகிறது. ஒருபுறம் தன்னுடைய கணவனின் நிலைமையை அறிய முடியாமல் அதற்காக நிகழ்த்தும் உணர்வுப் போராட்டம், இன்னொரு புறம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான போராட்டம் என இரண்டு பக்கத்திற்குமான தத்தளிப்பு சமீராவிற்கு நிகழ்கிறது. தனது நெஞ்சுறுதியாலும் சமயோசித புத்தியாலும் தலைமைப் பண்பினாலும் எப்படி இந்த தடைகளை சமீரா தாண்டுகிறாள் என்பதை இந்த திரைப்படம் பரபரப்பாக பதிவு செய்திருக்கிறது.

***

இது ஆங்கிலத் திரைப்படமாக இருந்திருந்தால், திரைப்படத்தின் சுருக்கமான நேரம் காரணமாக பயங்கரவாதிகள் மருத்துவமனையைக் கைப்பற்றும் காட்சிகளோடு துவங்கியிருக்கும். இந்தியத் திரைப்படம் என்பதால் அதற்கான முஸ்தீபுகளைத் தர வேண்டியிருக்கிறது. காட்சிகளை இழுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த சலிப்பு ஏதும் தட்டாமல் திரைக்கதையை அபாரமாக உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மகேஷ் நாராயணன். முதல் பகுதி சமீராவின் உணர்வுப் போராட்டங்களினாலும் இரண்டாம் பகுதி சாகசப் போராட்டங்களினாலும் நிறைந்திருக்கிறது.

இதுவொரு பெண்மையத் திரைப்படமாக உருவாகியிருப்பது மகிழ்ச்சி. வணிகரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றியடைந்திருப்பது பார்வையாளர்களிடம் உருவாகிக் கொண்டிருக்கும் நுட்பமான மனமாற்றத்தை பிரதிபலிக்கிறது.

முதல் திருமண உறவு ஒடிந்த நிலையை அறிந்தும் காதலுடன் தன்னையே சுற்றி சுற்றி வரும் ஷாஹீதை கடுகடுவென்ற முகத்துடன் இரக்கமேயின்றி புறக்கணிக்கும் சிடுசிடுப்புக்காரியாக துவக்க காட்சிகளிலேயே பார்வதி கவர்ந்து விடுகிறார். பிரதானமாக அவரைச் சுற்றியே இதன் திரைக்கதை அமைந்திருக்கிறது. 'உன் அகத்தை மறைத்துக் கொள்ள  கோபத்தை ஒரு முகமூடி போல நீ பயன்படுத்துகிறாய்' என்று ஷாஹீத் சொல்வது உண்மையாகிறது. குடும்பத்தை கடனை அடைப்பதற்காக ஈராக் செல்ல முடிவெடுக்கும் போது அவளுடைய உறவுகள் பல முட்டுக்கட்டைகளை வைக்கின்றன. இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவள் வேறு.

இந்த இக்கட்டான நிலையில் ஷாஹீதின் காதலை ஏற்றுக் கொள்வது ஒருவகையில் சுயநலம்தான் என்றாலும் அது உறுத்தாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய உறவின் காரணமாக கர்ப்பமடையும் சமீரா, முந்தைய திருமணத்தின் மூலம் உருவான தன் மகன் அதை எவ்வாறு எதிர்கொள்வான் என்று பதட்டமடையும், அதை மறைக்க முயலும் காட்சிகளில் யதார்த்தத்திற்கு நெருக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

'முதலில் அப்பா, பிறகு கணவன், இப்போது இவனுக்காக பயப்பட வேண்டியிருக்கிறது' என்று சலிப்பானதொரு சூழலில் சமீரா பேசும் வசனம், பல்லாண்'டுகளாக ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்ணுலகின் துயரத்தை ஓர் ஆழமான துளியின் மூலம் கச்சிதமாக நம்மை உணரச் செய்து விடுகிறது.

சமீராவை ஆழமாக நேசிக்கும் மென்மையான பாத்திரத்தில் குஞ்ஞாக்கோ கோபன் கவர்கிறார். இந்தியத் தூதுவராக நடித்திருக்கும் பஃஹத் பாசிலின் நுழைவுக் காட்சியும் தொடரும் அவரது இயல்பான நடிப்பும் அபாரம்.

வெளிநாட்டுத் தீவிரவாத சம்பவங்களில் சிக்கிக் கொள்ளும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா எத்தனை அலட்சியமாக இருக்கிறது என்பதை அது சார்ந்த பரபரப்பான காட்சிகள் உணர்த்துகின்றன. இயக்குநர் சற்று அடக்கி வாசித்திருந்தாலும் அதன் பின்னேயுள்ள ஆழமான மெத்தனங்களை நம்மால் எளிதில் உணர முடிகிறது. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள், சிக்கலான சூழல்களில் உறுதியான முடிவை எடுக்காமல், பிரச்சினையை அடுத்தவர் கையில் மாற்றித் தந்து விட்டு நழுவுவது  நம்முடைய அரசு இயந்திரம் இயங்கும் அவலமான சூழலை பிரதிபலிக்கிறது. நேர்மையும் மனச்சாட்சியும் உள்ள சில அதிகாரிகளின் மூலமாக மட்டுமே மக்களுக்கு சில நல்ல விளைவுகள் அதிர்ஷ்டவசமாக நிகழ்கின்றன.

தன் உயர்அதிகாரிகளின் அபத்தமான உத்தரவுகளுக்கு வேறு வழியின்றி அதுவரை அடிபணியும் இந்தியத் தூதுவர், ஒரு சிக்கலான தருணத்தில் இந்திய தரப்பில் இருந்து சாதகமான சமிக்ஞை வர தாமதமாகிற போது எரிச்சலுடனும் துணிச்சலுடன் தன்னுடைய முடிவை செயலாக்குவதற்கான ஆவேசத்தில் ஈடுபடுவது அற்புதமான காட்சி. ஒவ்வொரு உண்மையான பணியாளரும் தன்னை அந்தக் காட்சியில் உணர முடியும்.

***

ஒரு பிராந்திய மொழி பட்ஜெட்டிற்கான எல்லை இருந்தாலும் ஈராக்கில் நிகழும் சாகசக் காட்சிகளை, ஆங்கிலப் படத்திற்கு நிகராக உருவாக்கியிருப்பதின் மூலம் காட்சிகளின் நம்பகத்தன்மைகளை உயர்த்தியிருப்பதில் இயக்குநர் பிரமிக்க வைக்கிறார். முதல் பாதியில் கேரளப் பின்னணியின் காட்சிகள், இரண்டாம் பகுதியில் ஈராக் என இரண்டு பகுதிகளையும் அதற்கேயுரித்தான பிரத்யேகமான நிறங்களில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ். பின்னணி இசையும் பாடல்களும் அருமை.

செவிலியர் பணியும் உன்னதத்தை அடிநாதமாக விளக்கும் இந்த திரைப்படம், பொருளாதார சுதந்திரம் பெண் விடுதலையின் ஒரு முக்கியமான அடித்தளமாக இருக்கும் என்கிற உண்மையையும் தனது மையமாக பதிவு செய்கிறது. பொருளாதாரக் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு பணிபுரிய இடம்பெயரும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அடித்தட்டு மக்களின் துயரத்தையும் இந்தப் படம் சரியாகவே எதிரொலிக்கிறது.

'டேக் ஆஃப்' -இந்திய சினிமாவின் தரத்தை மேலே உயர்த்தும்  தரமான முயற்சிகளில் ஒன்றாகப் பார்க்கலாம்.


 (அம்ருதா AUGUST 2017 இதழில் பிரசுரமானது) 
 

suresh kannan

No comments: