2016-ல் எழுதப்பட்ட கட்டுரை |
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் முகம் நிறைய மாறியிருக்கிறது. நுட்பம், கதை சொல்லும் பாணி, திரைமொழி, மாற்று முயற்சிகள் என்று அடுத்தக் கட்ட பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. பழைய திரையரங்கங்கள் அழிந்து மல்டிபெக்ஸ் தியேட்டர்கள் பெருகி வரும் சூழலுக்கு ஒருவகையில் காரணம் எனலாம். அதற்கான வணிகச் சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்படும் சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் பெருகி வருவது ஆரோக்கியமான சூழல்.
ஆனால் விட்டில்பூச்சிகள் நெருப்பில் விழுந்து அழிவது போல நிறைய ஆர்வக்கோளாறான முயற்சிகளும் இதற்கிடையில் வந்து அழிகின்றன. செல்வந்தர்கள், படஅதிபர்கள், தங்களின் வாரிசுகளை வைத்து உருவாக்கும் அபத்தங்கள் ஒருபக்கம், விட்ட சந்தை மதிப்பை எப்படியாவது பிடித்து விடும் பழைய நடிகர்களின் பகீரத முயற்சிகள் இன்னொரு பக்கம். உண்மையான ஆர்வத்துடன் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் இயக்குநர்களுக்கு இத்திரைப்படங்கள் ஒருவகையில் முட்டுக்கட்டையாக நிற்கின்றன.
ஒருபுறம் திரைப்படங்களின் தரம் உயர்ந்தாலும், சில விதிவிலக்குகளைத் தவிர்த்து இந்த பத்தாண்டுகளில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களின் உள்ளடக்கம் வழக்கமான பாணியிலேயேதான் உள்ளது. அது எந்த சமூகப் பிரச்சினைளை பேசுவதான பாவனை இருந்தாலும் இடையில் நிச்சயம் ஒரு காதல் இருக்கும். அது தொடர்பான பாடல்கள், அவதார நாயகர்களின் பஞ்ச் வசனங்கள் போன்ற சலிப்பூட்டும் வழக்கத்தை தமிழ் சினிமாவால் தாண்டி வர முடியவிலலை என்பது துரதிர்ஷ்டமானது. இதே பத்தாண்டு காலக்கட்டத்தில் இந்தி மற்றும் மலையாள திரையுலகத்தை இங்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கு குறிப்பிட்டு சொல்லக் கூடிய நிறைய மாற்று சினிமா முயற்சிகள் உருவாவதோடு வெற்றியும் பெறுகின்றன.தமிழில் இவை சொற்பமான சதவீதத்தில்தான் நிகழ்கின்றன.
***
கடந்த பத்தாண்டுகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள், மறுமலர்ச்சிகள், புதிய போக்குகள் தமிழ் சினிமாத்துறையில் தோன்றியிருக்கின்றன. கூடவே சில பாதகமான அம்சங்களும்.
குறும்பட இயக்குநர்கள் அதிக அளவில் முழுநீளத் திரைப்பட இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் உள்ளே வந்திருப்பது முக்கியமான மாற்றங்களின் ஒன்று. அதற்கு முந்தைய காலக்கட்டத்தின் பொதுவான நிலைமை இவ்வாறாகத்தான் இருந்தது. ஒருவர் இயக்குநராக விரும்பினால் புகழ் பெற்ற இயக்குநர்களின் வீடுகளின், அலுவலகங்களின் முன்னால் தவம் கிடக்க வேண்டும். என்றாவது ஒருநாள் அவர்களின் அருட்பார்வை கிடைத்து அவரின் உதவியாளராக இணைந்து உதவி இயக்குநர் என்கிற பெயரில் எல்லாப் பணிகளையும் செய்து மெல்ல மெல்ல உயர்ந்து தானும் ஒரு இயக்குநர் ஆவதற்குள் பல ஆண்டுகள் ஓடி விடும். ஏறத்தாழ குருகுல வாசம்தான். இதில் சில சுயநல இயக்குநர்கள் தங்கள் அடிமைகள் அத்தனை சீக்கிரம் வெளியேறுவதை விரும்ப மாட்டார்கள். அதற்கு தடை ஏற்படுத்த முயல்வார்கள். இவைகளையெல்லாம மீறி ஒருவர் இயக்குநராக உருமாறுவது என்பது பிரம்மப் பிரயத்தனம்தான்.
ஆனால் நுட்ப வளர்ச்சி காரணமாக சூழல் இன்று வெகுவாக மாறி விட்டது. ஆர்வமுள்ள எவரும் சுயஆர்வத்திலோ அல்லது அதற்கான கல்வியிலோ இணைந்து கற்று திறமையான குறும்படங்களை உருவாக்குவதன் மூலம் தன்னுடைய அடையாளத்தை உருவாக்கி விட முடியும். எந்தவொரு இயக்குநரின் ஆசிக்காகவும் தவம் கிடைக்கத் தேவையில்லை. அப்படியொரு ஜனநாயக வெளி உருவாகியிருப்பது முக்கியமான விஷயம்.
இது மட்டுமல்ல,இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்து உயர்ந்தவர்கள் ஏறத்தாழ தங்களின் குருநாதர்கள் சென்ற அதே வழியிலேயேதான் பெரும்பாலும் செல்ல முயல்வார்கள். ஏனெனில் அவர்களின் மூளை நிறைய அந்தக் கற்றல்தான் நிரம்பியிருக்கும். தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரியான வடிவமைப்பில் திரைப்படங்கள் உருவாக இதுவொரு முக்கியமான காரணம். ஒரு சினிமா உருவாவதின் நடைமுறை விஷயங்கள், சிக்கல்கள் ஆகியவற்றை அறிந்திருப்பதுதான் இவர்களின் பலங்களில் ஒன்றாக இருக்கும்.
ஆனால் உலக சினிமாவின் பரிச்சயம், நுணுக்கம் முறையான கல்வி போன்றவற்றின் மூலமாக உள்ளே நுழையும் புது இளைஞர்களிடமிருந்து புத்துணர்வுடன் அமைந்த விஷயங்களை எதிர்பார்க்க முடியும். அதுவரையான மரபை கலைத்துப் போட இந்தச் சூழல் உதவும். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்று குறும்பட உலகத்திலிருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர்களின் மூலம் சாத்தியமான புதுமையான முயற்சிகள் அவற்றை நிரூபிக்கின்றன.
இன்னொரு முக்கியமான மாற்றம், சினிமா பிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியிருப்பது. இந்த நவீன மாற்றத்தின் மூலம் பொருட் செலவு கணிசமாக குறைந்திருப்பதோடு திரைப்படம் உருவாக்குவதும், ஏன் ஒளிபரப்புவதும் கூட எளிதான விஷயமாக மாறி விட்டது. படப்பிடிப்புத் தளத்திலேயே காட்சிகள் சரியாக பதிவாகியிருக்கிறதா என்பதை உடனே தெரிந்து கொள்ளலாம். ஒரு அடிப்படையான டிஜிட்டல் காமிராவைக் கொண்டு கூட ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கி விட முடியும். பாலாஜி சக்திவேலின் 'வழக்கு எண்.18/9' அப்படி உருவான திரைப்படம்தான்.
ஆனால் இவைகளில் பாதகமாக அம்சங்களும் இருப்பதாக கூறுகிறார்கள். நுட்பம் எளிதாகி விட்டதாலேயே புற்றீசல்கள் போல நிறைய படங்கள் குவிந்து விடுகின்றன என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. மட்டுமல்ல, பிலிம் செலவு இல்லை என்பதால் இயக்குநர்கள் இஷ்டம் போல நிறைய ஷாட்களை எடுத்து கடைசி நேரத்தில் எடிட்டர்களின் மேஜையை நிறைப்பதால் அவர்களின் பாடு திண்டாட்டமாகிறது. இதனால் ஒரு திரைப்படத்தின் ஒத்திசைவின் தொனி பாதிக்கப்படுகிறது. பிலிமில் பதிவு செய்யும் காட்சிகளின் தரமும் அழகியலும் டிஜிட்டலில் வராது என்கிறது பழைய தரப்பு.
பழைய திரையரங்கங்கள் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டிருப்பது ஒருவகையில் கலாசார சோகம்தான் என்றாலும், அதை ஈடுசெய்யும் வகையில் நவீன நுட்ப, சொகுசு வசதிகளுடன் மல்ட்டிபெக்ஸ் தியேட்டர்கள் உருவாகிக் கொண்டு வருகின்றன. இந்தப் போக்கினால் பல்வேறு வணிகத் தந்திரங்களின் மூலம் பொருள் சுரண்டல் நடைபெறுகிறது என்கிற புகார் இருந்தாலும் பார்வையாளனின் நோக்கில் ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை இவை உன்னதமாக்குகின்றன. மல்ட்டிபெக்ஸ் தியேட்டர்களை நோக்கி வரும் தரப்பின் ரசனையை யூகித்து சில தரமான சிறு முதலீட்டுத் திரைப்படங்கள் உருவாகின்றன. அவை சிறந்த படமாக இருந்து ரசிகர்களின் ஆதரவும் இருந்தால் குறைந்த நாட்களிலேயே இவை தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டி தரும் படைப்புகளாக அமைகின்றன. 'சய்ராட்' என்கிற மராத்தி திரைப்படத்திற்காக சென்னை மல்டிபெக்ஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து நின்றது இந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் ஓர் உதாரணம்.
ஆனால் ஸ்டார் நடிகர்களின் படங்கள் ஆரவாரமாக வெளிவரும் போது பல சிறுமுதலீட்டுத் திரைப்படங்களுக்கு அரங்கம் கிடைப்பதில்லை என்கிறார்கள். மக்களின் வாய்மொழி மூலம் விளம்பரம் பரவுவதற்குள்ளாகவே அந்தப் படங்கள் அரங்கத்தை விட்டு வெளியேற்றப்படும் சோகமும் நிலவுகிறது.
இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்காக ஆகும் செலவிற்கு பாதி பங்கிற்கும் அதிகமாக அவற்றை சந்தைப்படுத்துவதற்கான செலவு ஆவதாக சொல்லப்படுகிறது. முறையாக விளம்பரம் செய்யப்படாத காரணத்தினாலேயே எத்தனையோ நல்ல படங்கள் கூட்டத்தின் இடையில் காணமாற் போய் விடுகின்றன. ஒரு பகுதிக்குள் உள்ள மூன்று நான்கு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு நூறு நாள், நூற்றைம்பது நாள் ஓடி வெற்றித் திரைப்படங்களாக அறியப்பட்ட காலமெல்லாம் எப்போதோ மறைந்து விட்டது. ஒரே சமயத்தில் நூற்றுக் கணக்கான தியேட்டர்களில் வெளியிடப்பட்டு அது நான்கைந்து நாட்கள் ஓடினால் கூட வெற்றிப்படமாக கருதி மகிழ்ச்சி கொள்ளும்படி ஆகி விட்டிருக்கிறது நிலைமை. ஒரு நாள் ஓடினால் கூட 'வெற்றி வெற்றி' என்று போஸ்டர் ஒட்டி விடுகிறார்கள். ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்களை பல்வேறு வணிகத் தந்திரங்களின் மூலமாக பார்த்தே தீர வேண்டிய மனநெருக்கடியை பார்வையாளர்களுக்கு உண்டாக்குகிறார்கள். சமீபத்திய உதாரணம் கபாலி.
***
தமிழ் சினிமா கடந்த பத்து வருடங்களில் குறிப்பிட்டு சொல்லத்தக்க கீழ்கண்ட இளம் இயக்குநர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயம். (அறிமுக வருடம் அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருக்கிறது)
மிஷ்கின் (2006), ராம், வெற்றிமாறன், வெங்கட்பிரபு (2007), சுசீந்திரன், ராஜேஷ், பாண்டிராஜ் (2009), தியாகராஜன் குமாராஜா, சாந்தகுமார் (2011) பாலாஜி மோகன், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன், கமலக்கண்ணன் (2012) G.N.R. குமரவேலன், நலன் குமாரசாமி, நவீன், R.S.பிரசன்னா, அல்போன்ஸ் புத்திரன், விக்ரம் சுகுமாரன் (2013) S.U. அருண்குமார் (2014) மணிகண்டன், G.பிரம்மா (2015) நெல்சன், அஸ்வினி திவாரி, உஷா கிருஷ்ணன், விஜயகுமார் (2016).
இந்தக் காலக்கட்டத்தில் உருவாகி வந்த மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக மிஷ்கினைச் சொல்லலாம். அயல் திரைப்படங்களிலிருந்து தம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும் திரைமொழியை அவர் கையாளும் விதம் பொதுவான தமிழ் சினிமாவிலிருந்து வேறுபட்டிருக்கிறது. அதுவரை எதிர்மறையாகவே சித்தரித்துக் கொண்டிருந்த பேய் என்கிற கருத்தாக்கத்தை நேர்மறையாக சித்தரித்தது 'பிசாசு'. இந்த நேரத்தில் தமிழ் சினிமாவிற்கு பேய் பிடித்த விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஹாரர் காமெடி என்கிற வகைமை தமிழ் சினிமாவிற்கு புதிதானது என்றாலும் 2011-ல் வெளியான 'காஞ்சனா' பேயோட்டம் ஓடி அதிகமான லாபத்தைத் தந்ததால் பிறகு அது போன்ற பாணியிலேயே தொடர்ந்து எக்கச்சக்கமான படங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இன்னமும் கூட பேய் நம்மை விட்டபாடில்லை.
'ஆரண்ய காண்டம்' என்கிற ஒரேயொரு திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடம் அழுத்தமான அடையாளத்தைப் பெற்று விட்டார் தியாகராஜன் குமாரராஜா. தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா என்று இதை வகைப்படுத்தலாம். காட்சிகளின் உருவாக்கம், கதை சொன்னதின் முறை, ரகளையான பின்னணி இசை என்று எல்லாமே அதுவரையான மரபுகளை கலைத்துப் போட்டன. இவா் அடுத்த திரைப்படத்தை இயக்க மாட்டாரா என்று பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வெளிவந்து ஐந்தாண்டுகள் கடந்தும் கூட சமீபத்திய சென்னை திரைப்பட விழாவில் 'ஆரண்ய காண்டம்' வெளியிடப்பட்ட போது ஏதோ ரஜினியின் புதுப்படம் வந்தது போல அரங்கு நிறைந்திருந்தது.
ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது போல குறும்பட உலகிலிருந்த வந்த இயக்குநர்கள் அதுவரையான பழைய இயக்குநர்களை சற்று ஓரம் தள்ளி விட்டு வெற்றிக் கொடி நாட்டினார்கள். பாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி' இதன் துவக்க வாசல். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி என்று பல இளம் படைப்பாளிகள் இப்படியாக தமிழ் சினிமாவிற்குள் வந்தார்கள்.
'பருத்தி வீரன்' மூலம் அழுத்தமான நம்பிக்கையை உருவாக்கிய அமீர் பின்பு நீர்த்துப் போய் காணாமற் போனது துரதிர்ஷ்டம். வடிவேலு என்கிற நகைச்சுவை ஆளுமை தமிழ் சினிமாவிலும், ஏன் தமிழ் சமூகத்திலும் ஏற்படுத்திய பாதிப்பை எவராலும் மறக்கவே முடியாது. அவருடைய நகைச்சுவையை அவருடைய பாணியிலேயே அன்றாட வாழ்வில் பேசாத ஒரு தமிழர் கூட இருக்க முடியாது. இந்தக் காலக்கட்டத்தில் வந்த 'இம்சை அரசன்' ஒரு நகைச்சுவை கலாட்டாவாக இருந்தது. ஆனால் கதாநாயக மோகத்திலும் தவறான அரசியல் சூழலிலும் சிக்கிக் கொண்டு அவர் பின்பு மெல்ல மறைந்து போனது தமிழ் சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பு எனலாம்.
இந்தக் காலக்கட்டத்தில் வெற்றி மாறன் ஒரு குறிப்பிடத்தகுந்த இயக்குநராக உருவாகி வந்து கொண்டிருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் சர்வதேச அரங்குகளில் கலந்து கொள்வதையும் வெற்றி பெறுவதையும் ஒரு நல்ல மாற்றமாக சொல்லலாம். 'விசாரணை' அப்படியொரு நல்ல படைப்பு. போலவே 'காக்கா முட்டை'. இரானிய திரைப்படங்களைப் போல எளிமையான உருவாக்த்துடன் ஆனால் அதற்குள் ஆழமான அரசியலை உரையாட முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்தது. ஸ்டார் நடிகராக இருந்தாலும் இது போன்ற திரைப்படங்களை தயாரிக்கும் தனுஷ் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். விருதுப் படங்களின் வரிசையில் 'குற்றம் கடிதல்' ஒரு நல்ல முயற்சி.
'மதுபானக்கடை' மூலம் அழுத்தமான அரசியல் உரையாடலை நிகழ்த்தினார் கமலக்கண்ணன். துரதிர்ஷ்டமாக இது பரவலாக கவனிக்கப்படவில்லை. உலகமயமாக்கலின் அரசியலை தம் திரைப்படங்களில் நுட்பமாக உரையாடுபவர் 'ராம்'. இவருடைய திரைப்படங்களையும் வெகுசன ரசிகர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இடைநிலைச் சாதிகளின் பெருமிதங்கள் விதந்தோடப்படும் ஆபத்தான சூழலில் தலித் அரசியலை தனது 'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் முன்வைத்த ரஞ்சித் குறிப்பிடத்தகுந்த படைப்பாளி.
***
படைப்புச் சுதந்திரம், கருத்துரிமை ஆகியவை பற்றிய உரையாடல்கள் இந்தக் காலக்கட்டத்தில் நிறைய நிகழ்ந்தன. 'விஸ்வரூபம்' 'தலைவா' போன்ற திரைப்படங்கள் தொடர்பான சர்ச்சைகள் அந்த சந்தர்ப்பத்தை உண்டாக்கின. தொழில்நுட்பத்தையும் அசத்தலான திரைக்கதையையும் வைத்துக் கொண்டு ஒரு ஈயை கதாநாயனாக்கி விட்டார் ராஜ்மெளலி. வெற்றித் திரைப்படங்களுக்கு ஸ்டார் நடிகர்களின் அவசியம் தேவையில்லை என்கிற விஷயத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியது இத்திரைப்படம். ஹாலிவுட் திரைப்படங்களில் அனிமேஷன் வகை திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பிருக்கும். அந்த வகையான ஆர்வத்தை முதலில் ஏற்படுத்தியது 'கோச்சடையான்'. ஆனால் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாலும் சுமாரான உருவாக்கத்தினாலும் வந்த வேகத்திலேயே அந்த ஆர்வம் அணைந்து போனது. ரஜினிகாந்த்தின் லிங்கா படத்தின் தோல்வி, இனி தேய்வழக்கு வணிக மசாலாக்களுக்கு இடமிருக்காது என்கிற ஆறுதலான அடையாளத்தை ஏற்படுத்தியது.
எல்லாத் துறையையும் போலவே சினிமாவும் ஆணாதிக்கத்தால் நிறைந்தது. என்றாலும் இதன் இடையில் சில பெண் இயக்குநர்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தகுந்தது. சுதா உருவாக்கிய 'இறுதிச்சுற்று' ஓர் அற்புதமான சினிமாவாக அமைந்தது. எத்தனை வயதானாலும் ஆண் கதாநாயகர்கள் மட்டும் நாயகர்களாகவே நீடிக்க பெண் நடிகைகள் தோன்றிய வேகத்திலேயே மறைந்து போகிறார்கள். இந்த சூழலில் நெடுங்காலமாக 'நாயகி' நிலையில் அழுத்தமாக அமர்ந்திருக்கும் 'நயனதாரா' மற்றும் 'திரிஷா' போன்றவர்களின் வெற்றியை குறிப்பிட்டே ஆக வேண்டும். ஜோதிகாவின் மறுவருகையை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.
ஒரு சாதாரண மிமிக்ரி கலைஞராக இருந்து பரவலான கவனத்தைப் பெற்று கதாநாயகனாக தம் உழைப்பால் உயர்ந்த சிவகார்த்திகேயனின் வெற்றி எளிய இளைஞர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும். எம்.எஸ்.வி., இளையராஜா, ரஹ்மான் என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் ஆட்சியே பரவலாக இருக்கும். அந்த மரபு மெல்ல உடைந்து பல புதிய இளம் இசையமைப்பாளர்கள் தோன்றிய காலக்கட்டம் இது. இந்த வரிசையில் மிக முக்கியமானவராக சந்தோஷ் நாராயணின் வருகையை குறிப்பிட வேண்டும். ஆப்ரிக்க மற்றும் சென்னையின் விளிம்பு நிலை சமூகத்தினரின் இசையின் கலவையுடன் ஒரு புதிய மரபை தமிழ் சினிமாவில் உருவாக்கி வருகிறார். நவீன இளம் மனங்களின் மனதைக் கவர்ந்ததாக அனிருத்தின் இசை இருக்கிறது.
***
கடந்த சில ஆண்டுகளில் உலக சினிமாவின் பரிச்சயமும் ரசனையும் சினிமா ரசிகர்களிடையே இங்கு பரவலாக உருவாகியிருப்பது தமிழிலும் அது போன்ற தேடலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த தேவையை இயக்குநர்களும் உணரத் துவங்கியிருக்கிறார்கள். நல்ல திரைக்கதையும் கடினமான உழைப்பும் இல்லையெனில் ரசிகர்களைக் கவர்வது கடினம் என்கிற சூழல் மலர்ந்து கொண்டிருக்கிறது.
என்றாலும் தர அடிப்படையில் தமிழ் சினிமா முன்னேற வேண்டிய தூரம் அதிகம். உலகத்திலேயே அதிக சினிமாக்களை உற்பத்தி செய்யும் இந்தியாவிலிருந்து சர்வதேச அரங்குகளில் அங்கீகாரம் பெறும் சினிமாக்கள் மிக குறைவு. தமிழில் அபூர்வம். படைப்பாளிகள் முன்னகர வேண்டிய இந்த சூழலில் பார்வையாளர்களுக்கும் அதற்கான முக்கிய பங்கிருக்கிறது. ரசனை மாற்றமும் வளர்ச்சியும் மிக முக்கியமான விஷயம். சிறந்த திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற கட்டாயத்தை தமிழ் திரைக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த இருவழிப்பாதையுடன் அப்படியொரு மறுமலர்ச்சி நிகழ்ந்தால் அடுத்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவின் பங்களிப்பு இன்னமும் முக்கியமானதாக இருக்கும் என நம்பலாம்.

(அம்ருதா AUGUST 2016 இதழில் பிரசுரமானது)
suresh kannan
1 comment:
Super 😍
Post a Comment