Saturday, March 16, 2013

விஸ்வரூபம் - இரா.முருகன் - நாவல்





விஸ்வரூபம்

பரமக்குடி பிராமணன் கடல் கடந்து தூர தேசத்து கதக் நடனத்தில் துவங்கி அரையின் கீழ் உதை வாங்கி துலுக்கன்மார் தேசத்தில் சண்டையிட்டுத் திரும்பும் டாக்கீஸ் சமாச்சாரமில்லை.

அதையும் விட சுவாரசியமானது, இரா.முருகனின் சமீபத்திய புதினம். கால்பந்து அளவிற்கான நூற்கண்டு அது இஷ்டத்திற்கு தாறுமாறாக பிரிந்து நான்லீனியர் இடியாப்பச் சிக்கலாய் விரிந்திருக்கிறது இந்த நூலின் களத்தில். தென்கிழக்கு முனையை பிடித்து இழுத்தால் எதிர்பாராத சிக்கலான திசையில் எதிர் அசைவு தெரிகிற சுவாரசியம். மாய யதார்த்த அரூப முன்னோர்கள் குடத்திலிருந்தும் நாரைகளாகவும் நாவல் நெடுக சலசலவென்று உரையாடிக் கொண்டும் உபதேசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். யுகம் முழுக்க உட்கார்ந்து எழுதினது போல ஆயாசத்துடன் தோற்றமளிக்கும் புதினம், இரண்டு சிறுநீர் இடைவேளைகளுக்கிடையில் எழுதி வி்ட்டிருப்பதான வாசிப்பு லகுவையும் கொண்டிருப்பதற்கான ரகசிய முரண் என்னவென்று தெரியவில்லை. எண்ணூறு பக்க நூலை வாசித்து முடித்தவுடன் அபினையும் அரை போத்தல் சாராயத்தையும் இணைத்து உண்டதைப் போன்ற கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறது.

18-ம் நூற்றாண்டிற்கும் 19-ம் நூற்றாண்டிற்கும் இடையில் நர்த்தனமாடும் (அல்லது இட வலமாகவா?)  அஸ்தி சொம்போடும் சொத்து பத்திரத்தோடும் பயணிக்கும் புதினம், இலக்கிய சாசுவதம் பற்றிய கவலையெதுவுமில்லாமல் தன்னிச்சையான மொழியில் உருவாக்கப்பட்டிருப்பதான பாவனையுடன் இயங்கினாலும் தொடர்புள்ள காலக்கட்டத்திய மொழியை உருவாக்குவதற்கான உழைப்பும் மெனக்கெடலும் அந்தந்த மொழி நேர்த்தியில் தெரிகின்றன. இங்கிலாந்து இளவரசர் ரயில் பயணம் குறித்த பத்திரிகை மொழிப் பகுதி ஓர் உதா.

இந்தப் புதினத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானது மகாலிங்கய்யன் என்கிற வரதராஜ ரெட்டி எழுதுகிற சுயவாக்குமூல கடிதங்கள்தான். அய்யருக்கும் ரெட்டிக்கும் உள்ள சுவாரசியமான தொடர்பு, புதினத்தை வாசித்தால்தான் புரியும். மனைவி லலிதாம்பிகைக்கும் கர்ப்பிரிச்சிக்கு பிறக்கும் மகனான வைத்தாஸூக்கும் எழுதும் கடிதங்களை அவர்கள் அல்லாமல் துரதிர்ஷ்டமாக நாம் மாத்திரமே வாசிக்க நேர்கிறது. ரெட்டிய கன்யகை குறித்த இரா.முருகனின் அபாரமான வர்ணிப்பில் வாசகனுக்கு ஸ்கலிதம் ஏற்படாவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

மயக்கும் மொழியில் ஒரு மாய யதார்த்தப் பயணம் இந்த விஸ்வரூபம்

(கிழக்கு பதிப்பகத்தின் மாத இதழான 'அலமாரி'யில் வெளியான சிறு விமர்சனத்தின் திருத்தப்படாத  வடிவம்)

suresh kannan

Friday, March 15, 2013

டேவிட்: மத பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்


மணிரத்னத்தின் சிஷ்யர் பிஜோய் நம்பியார் இயக்கியிருக்கும் 'டேவிட்' திரைப்படம் இரண்டு தனித் தனி காலக் கட்டங்களில் பயணிக்கிறது. ஒன்று 1999 மும்பை. மற்றொன்று 2010 கோவா. டேவிட் என்கிற பெயர் கொண்ட இரண்டு தனி நபர்களின் கதைச் சரடுகள், துண்டு துண்டாக நான்-லீனியர் பாணியில் சொல்லப்பட்டு இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிறது. இந்த உத்தி படத்தின் கட்டமைப்பிற்கோ அழுத்தத்திற்கோ எவ்விதத்திலும் பிரதானமாக உதவவில்லை. 'உலகசினிமா' என்கிற பாவனையை உருவாக்குவதற்காக இயக்குநர் இதை பயன்படுத்தியிருக்கலாம். என்றாலும் வணிக சம்பிதாயங்களை பெரும்பாலும் தவிர்தது இரண்டு கதைகளும் இணைக்கோட்டு சுவாரசியத்துடன் சொல்லப்பட்ட காரணத்திற்காகவே இந்தக் குறையை பொருட்படுத்தத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் பயங்கரவாதிகளாக தொடர்ந்து சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரை ஊடகத்தில் பெரும்பான்மையினரின் பயங்கரவாதமும் அதன் பின் இயங்கும் அரசியலும் தமிழ்த்திரையில் பெரிதும் பேசப்படவில்லை அல்லது பேசப்படுவதற்கு தயக்கம் கொண்டிருக்கும் சூழலில் 'டேவிட்' திரைப்படம் இதைப் பற்றி உரையாடின காரணத்திற்காகவே குறிப்பிடத்தகுந்த படைப்பாக அடையாளப்படுத்த வேண்டியதின் அவசியத்தை கோருகிறது.

1999 மும்பையில் வசிக்கும் தமிழ் கிறித்துவக் குடும்பம். தந்தை நோயல் மத போதகர். கிறிஸ்துவின் தீவரமான, உண்மையான விசுவாசி. இவரது மகன் டேவி்ட் (ஜீவா) இசைத்துறையில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கான கனவுகளுடனும் லட்சியத்துடனும் வாழ்கிறான். அதன் மூலம் இரண்டு சகோதரிகள் உள்ளிட்ட தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க முடியும் என்பது உபநோக்கம். 'மதமாற்றம் செய்கிறார்' என்கிற காரணத்தைக் கூறி இந்து மத அரசியல் கும்பலொன்று டேவிட்டின் த்நதையை அவமானப்படுத்தி தாக்குகிறது. இதற்கான காரணத்தையும் பின்னணியையும் தேடியலையும் டேவிட் உச்சமாக ஓர் அரசியல் தலைவரை கொல்ல முடிவு செய்கிறான். இது ஒரு கதை.

2010 கோவாவில் வசிக்கும் மீனவனான டேவிட்டின் (விக்ரம்) மனைவி திருமண நாளன்றே தனது காதலனுடன் ஓடிப்போகிறாள். ஊராரின் கேலிக்கு ஆளாகும் இவன் பெண்கள் மீது வெறுப்பு கொண்டு தொடர்ந்த குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். சான்ட்டா கிளாஸ் முகமூடி அணிந்து மணப்பெண்களை தாக்கி விட்டு ஓடுகிறான். தனது நண்பனுக்கு நிச்சயமாகும் பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது. குற்றவுணர்விற்கும் காதலுக்கும் இடையில் அல்லாடுபவன் இறுதியில் நண்பனின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறான். இது மற்றொரு கதை.

இரண்டு டேவிட்களும் சந்திக்கும் இறுதிக் காட்சிகளின் மூலம் அவர்களின் முடிவை செயல்படுத்தினார்களா அல்லவா என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. மும்பையின் காட்சிகள் தீவிரத்துடனும் வேகத்துடனும் பயணிக்கும் போது கோவாவின் காட்சிகள் நுட்பமான நகைச்சுவையுடன் சாவகாசமாக நகர்ந்து படத்தின் ஓட்டத்தை சமன் செய்கிறது.

***
 
மும்பைக் காட்சிகள் இயங்கும் காலத்தின் பின்னணியை 1999-ஆக இயக்குநர் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்கலாம். இதே ஆண்டில்தான் ஒரிசா மாநிலத்து கிராமமொன்றில் கிரகாம் ஸ்டெபின்ஸ் என்கிற பாதிரியார் தனது சிறிய இரண்டு மகன்களுடன் இந்து அமைப்பினர் சிலரால் ஜீப்பில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே பதற வைத்த படுகொலை அது. இதிலும் ஃபாதர் நோயலை (நாசர்) இந்து மதத்தைச் சேர்நத அரசியல் கும்பலொன்று வீட்டுக்குள் புகுந்து இழுத்து அடித்து உதைத்து முகத்தில் சேற்றைப் பூசி அவமானப்படுத்துகிறது.

நாசரின் உடல்மொழி மிக நுட்பமாக வெளிப்பட்டிருக்கும் படங்களில் இதை முக்கியமானதாக சொல்லலாம். தன்னுடைய சம்பளத்தின் பெரும்பான்மையை பாதிக்கப்பட்டவர்களுக்காக செலவழித்து இயேசுவை உண்மையாக பின்பற்றும் விசுவாசி. நிரபராதியான தான் அவமானப்படுத்தப்பட்டதை எண்ணி எண்ணி இவர் கூனிக்குறுகும் காட்சிகள் அபாரமாய் பதிவாகியிருக்கின்றன. முகச்சவரம் செய்து கொள்ளும் காட்சியில் தன் முகத்தில் பூசப்பட்ட சேற்றுக்கறையையும் நீக்குவதான மன அவஸ்தையில் தன்னை சிதைத்துக் கொள்ள முயலும் காட்சி அதன் உக்கிரத்தோடு பதிவாகியிருக்கிறது. 'மன்னிப்பதே மனிதனி்ன் அரிய குண்ங்களுள் என்று' என்கிற இடத்தை வந்து இறுதியில் அடைவதின் மூலம் தன்னை மீட்டுக் கொள்கிறார்.

ஆனால் இவரது மகன் டேவிட் தனது தந்தை அவமானப்படுத்தப்பட்டதை அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் குடும்பத்தைக் கவனிக்காத தந்தையின் பரோபரிகாரதனத்தின் மீது இவனுக்கு கடும் எரிச்சல் இருக்கிறது. என்றாலும் ஆழ்மன பாசம் காரணமாக அவமானம் செய்த கும்பலையும் அதற்கான காரணத்தையும் தேடுகிறான். கும்பலிலிருந்த ஒருவன் தரும் தகவலின் மூலம் ஒரு ரவுடியை வந்தடைகிறான்.  அவன் டேவிட்டுக்கு அரசியல் வகுப்பு எடுக்கிறான். "பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதில்தான் அரசியல் ஆர்வம் காட்டும். பிரச்சினையை உருவாக்கும், விளம்பரம் செய்யும். அதற்கான தற்செயலான பலிகடா உன் அப்பா". அவன் கைகாட்டுவது எம்எல்ஏ மாலதி தாய். அப்பாவித் தொண்டன், ரவுடி, அரசியல்வாதி என்று இந்திய அரசியல் நிழலாக செயல்படும் அடிப்படையான அடுக்குமுறை.

பாஜகவின் சுஷ்மா சுவராஜை நினைவுப்படுத்தும் எம்எல்ஏவாக ரோஹிணி அட்டங்காடி. (படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒன்றாக அம்பானி நிறுவனம் இருப்பதற்கும் இதற்கும் தொடர்பிருக்காது என்று நம்புவோம்). டப்பிங் குரல் எரிச்சலூட்டினாலும் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. மதவெறியும் அதன் பின்னேயுள்ள அரசியல் நோக்கமும் உள்ள ஒரு முகம். "உன்னோட அப்பா நிரபராதியாக இருக்கலாம். ஆனால் ஒருத்தர அடிச்சாதான் மத்தவங்களுக்கு ஒரு பயம் இருக்கும்" என விளக்கம் தருகிறார்.

மத அரசியலும் அதன் பின்னணயில் இயங்கும் வன்முறையும் ஒரு தனிநபரின் கனவையும் லட்சியத்தையும் ஆளுமையையும் எப்படி சிதைக்க முடியும், எப்படி அந்த வாழ்க்கையின் போக்கை மாற்றியமைக்க முடியும் என்பதை டேவிட்டின் இந்த ஒரு துண்டு வாழ்க்கை வெளிப்படுத்துகிறது. சமகால இளைஞனின் கோபத்தையும் இறுதியில் முற்றிலுமாக அதிலிருந்து விலகி இன்னொரு நிலைக்கு மாறுவதையும் ஜீவா அபாரமாக வெளிப்படுத்தியிருந்தார்.
 
***
 
2010 கோவாவில் நிகழும் இ்ன்னொரு டேவிட்டின் காட்சிக் கோர்வைகள் மந்தபுத்தியுள்ள இளைஞன் ஒருவனின் தோல்வியடையும் காதலை நகைச்சுவையுடன் சொல்கிறது. கமலுக்குப் பிறகு ஏதாவது குறையுள்ள பாத்திரத்தில்தான் விக்ரம் நடிப்பார் என்பதே ஒரு விதியாகி விட்டது. பஞ்ச் டயலாக்குள் பேசி படுத்தியெடுப்பதை விட தோல்வியுறும் ஒரு மனிதனின் பாத்திரத்தில் விக்ரம் நடிக்க முன்வந்ததற்காக அவரைப் பாராட்டலாம். என்ன. படம் பூராவும் வித விதமான பாட்டில்களில் குடித்துக் கொண்டேயிருக்கிறார். 'குடி உடல்நலத்துக்கு கேடு' எனும் எச்சரிககைப் பலகையை இவர் வரும் காட்சிகளில் எல்லாம் ஆணி அடித்து மாட்டி விடுகிறார்கள். அதே பழக்கத்தில் இவர் குடிக்காத காட்சிகளில் கூட அது வரும் வாசனைக்காகவே போர்டு மாட்டுவது சற்று அதீதம்தான்.

திருமண நாளன்றே தன் மனைவி ஓடிப் போய் விடுவதால் பெண்கள் என்றாலே வெறுப்பு. மசாஜ் பார்லர் நடத்தும் தபுதான் இவரின் ஒரே ஆதரவு. இறந்து போன அப்பாவும். இரா.முருகனின் நாவல்களில் செத்துப் போன 'மாய யதார்த்த' முன்னோர்கள் வழிநடத்திக் கொண்டிருப்பதைப் போல இதிலும் விக்ரமின் அப்பா குடித்துணையோடு படம் நெடுகிலும் வழிநடத்துகிறார். ("பொண்ணுங்க வியர்வையிலிருந்து சென்ட் செஞ்சா பிரமாதமா இருக்கும்"). இந்தக் காட்சிகள் முழுக்க கொண்டாட்ட மனநிலையோடும் இருண்மையான நகைச்சுவையோடும் நிகழ்கின்றன. இவ்வாறு அருவமாக ஒரு பாத்திரம் படம் நெடுக வருவது தமிழ்த் திரைக்கு புதியது. நண்பனுக்காக நிச்சயிக்கப்பட்டிருக்கும் செவிட்டு,ஊமைப் பெண்ணை காதல் செய்யத் துவங்குகிறார விக்ரம். நட்பு காரணமாக குற்றவுணர்வு கொள்ளும் இவரை ஆற்றுப்படுத்துகிறார் தபு. கையைக் கிழித்துக் கொண்டு தனக்காக பெண் கேட்டுப் போகச் சொல்லி தன் குண்டு அம்மாவை இவர் மிரட்டும் தீவிரமான காட்சி, குண்டு அம்மா நாற்காலி விழுந்து இவர் மீதே விழும் நகைச்சுவையோடு முடிகிறது.
 
இரண்டு டேவிட்களுமே தங்களின் பெண் தோழமைகளின் மூலம்தான் நட்பையும் ஆதரவையும் தேடிக் கொள்கிறார்கள். மும்பை டேவிட் தான் கிடார் சொல்லித்தரும் மாணவனின் விதவைத்தாயின் மூலம். கோவா டேவிட் மசாஜ பார்லர் நடத்தும் ஃப்ரென்னியின் மூலம். இருவர்களுக்குமான தாய்மை கலந்த காதல் மிக நுட்பமாக சொல்லப்படுகிறது.
 
***
 
இத்திரைப்படம் பிரதானமாக இந்திக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் (இந்தியில் மூன்று டேவிட்கள்) கலாச்சாரத் தடைகளைத் தாண்டின பொதுத்தன்மைக்காகவும் சுவாரசியமான திரைமொழிக்காகவும் வழக்கமான வணிக மசாலாக்களைத் தாண்டினதொரு மாற்று சினிமாவாக அடையாளப்படுததப்படும் தன்மையைக் கொண்டிருக்கிறது. டப்பிங் குரல்கள்தான் எரிச்சல். நீர்ப்பறவை, கடல், டேவிட் என்று கிருத்துவ சார்புள்ள படங்கள் தமிழ்த் திரையில் சமீபமாக தொடர்ந்து வெளியாவது தற்செயலா அல்லவா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது. 

- உயிர்மை - மார்ச் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை) 

suresh kannan