Wednesday, May 26, 2010

தி லிட்டில் புத்தா

குறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் கிடைத்தன. அவற்றில் சிலவற்றை அவ்வப்போது இந்த  வலைப்பதிவிலும் இட்டு அவற்றை சாஸ்வதமாக்க உத்தேசம். (Blog-ஐ  உடனே Unsubscribe செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காக: அதிகமி்ல்லை ஜென்டில்மேன். சில கோப்புகள்தான்).

எச்சரி்க்கை: மீள்பதிவு 

பெர்னார்டோ பெர்டோலுசி (Bernardo Bertolucci) இயக்கிய திரைப்படங்கள் தற்போது சென்னை, பிலிம் சேம்பரில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

07.09.2004 அன்று நான் பார்த்த படம் தி லிட்டில் புத்தா.(THE LITTLE BUDDHA).



ஒரு பெளத்த குரு மாணவர்களுக்கு கதை சொல்லும் காட்சியமைப்போடு படம் தொடங்குகிறது.

அந்தக் கதை இப்படியாக போகிறது.

ஒரு பூசாரி ஒரு ஆட்டை கடவுளுக்கு பலியிட தயாராகுகிறார். ஆடு சிரிக்க ஆரம்பிக்கிறது. திகைப்படைந்த பூசாரி ஆட்டிடம் விசாரிக்க, தான் 100 ஜென்மங்களாக ஆடாகப் பிறந்து, சாகடிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்து... இவ்வாறாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆடு. உடனே அழவும் ஆரம்பிக்கிறது. பூசாரி மறுபடியும் விசாரிக்க, 100 ஜென்மங்கள் முன்பு தானும் ஒரு பூசாரியாக இருந்ததாக சொல்வதைக் கேட்ட பூசாரி மனந்திருந்தி ஆட்டை பலியிடும் முடிவை கைவிடுகிறார்.

கடவுளின் பெயரால் விலங்குகளை கொல்வதை தவறு என்கிற நீதியுடன் அமைந்திருக்கிறது இந்தக் கதை.

இந்தக் கதை சொல்லி முடிக்கப்பட்டவுடன் அவருக்கு அமொரிக்காவிலிருந்து ஒரு செய்தி வருகிறது. இதற்காகவே காத்திருந்த மாதிரி அவர் அமெரிக்காவிற்கு கிளம்புகிறார். அங்குள்ள ஒரு அமெரிக்க சிறுவனை புத்தரின் மறுபிறவிகளின் தொடர்ச்சியாக கருதுகிறார். அவனுடைய பெற்றோரை சந்தித்து, அவன் புத்தரின் மறுபிறவிதானா என்று நிச்சயித்துக் கொள்ள பூட்டானுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறார். முதலில் மறுக்கும் அவர்கள், ஒரு சம்பவத்தின் மூலம் மனம் மாறி தந்தையும் மகனும் பூட்டான் வர ஒப்புக் கொள்கின்றனர்.

பூட்டானில் இன்னொரு சிறுவனும், சிறுமியும் இவ்வாறே புத்தரின் மறுபிறவி சோதனைப் பட்டியலில் இருக்கின்றனர். மூன்று பேருமேபுத்தரின் மறுபிறவிகளாக இருக்கக்கூடிய அடையாளங்களைக் கண்டு மதகுரு குழம்பிப் போகிறார். பின்னர் மூத்த மதகுரு மூலம் மூவருமே புத்தரின் மறுபிறவிகள் என்பதை உணருகிறார். சில சமயங்களில் முன்னர் இவ்வாறு நடந்திருக்கிறது என்று அறிய நேருகிறது. தன் வேலை முடிந்த திருப்தியில் அவர் இறந்து போக, மூன்று சிறார்களும் தங்களுடைய ஊர்களில் மதகுருவுடைய அஸ்தியை கரைப்பதுடன் படம் நிறைகிறது.

()        ()        ()

முதலில் நான் வியந்த அம்சம் இந்தப்படத்தின் ஒளிப்பதிவு. சில வினாடிகள் காண்பிக்கப்பட்ட அவரின் பேரை என்னால் நினைவு கொள்ள இயல விட்டாலும் படம் முழுக்க அந்த திறமைமிக்க கலைஞனை வியந்து கொண்டேயிருந்தேன்.

மதகுரு பரிசளிக்கிற புத்தகத்தின் மூலம் புத்தர் யார்? என்று அந்த அமெரிக்கச் சிறுவன் கேட்ட ஆரம்பிக்க கணத்திலிருந்து புத்தரின் சரிதம் நமக்கு படமாக சொல்லப்படுகிறது. அந்தக் கால புத்தரின் சரிதம் கொஞ்சமும், நிகழ்காலக் கதை கொஞ்சமுமாக, திரைக்கதை ஒரு கடிகார ஊஞ்சலை நினைவுப்படுத்தும் வகையில் இங்குமங்குமாக செல்கிறது.

இப்படி செல்கிற திரைக்கதை ஒரு நிலையில் சித்தார்த்தா புத்தராக மாறி ஞானம் பெறும் காட்சியை அந்தக் குழந்தைகளும் பார்க்கும்படியாக ஒரே பிரேமில் காண்பிக்கப்படுகிறது.

புத்தர் துறவு நிலையில் அமர்ந்திருக்க, அவருக்கு முன் புயல் அலைகள் ஒரு புறமும், நெருப்புக்கோளங்கள் ஒரு புறமும் ஆவேத்துடன் பாய கண்ணைக்கூச வைக்கும் மின்னல் ஒளியில் மிகுந்த பயத்துடன் குழந்தைகள் புத்தரை பார்க்கின்றனர். இந்தக் காட்சி கணினி தொழில்நுட்பம் கொண்டு மிக சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சில வினாடிகளே வரும் இந்தக் காட்சியை தொடர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அமானுஷ்ய உணர்வுடனிருந்தது.

சித்தார்த்தா என அழைக்கப்பட்ட புத்தரின் வாழ்க்கை சிறப்பான முறையில் நமக்கு சொல்லப்படுகிறது. கலை இயக்குநரின் உழைப்பு இந்தக் காட்சிகளில் திறம்பட வெளிப்படுகிறது.

'தமிழ்ப் படங்கன்னா நொட்டு நொள்ளைல்லாம் சொல்லுவாங்க. வெள்ளக்காரன் பண்ணாத்தாம்பா இவன்க ஒத்துப்பான்க' என்று நானே முன்பு முணுமுணுத்திருந்தாலும், அவர்களின் அசாத்திய அக்கறையை ஒவ்வொரு பிரேமிலும் பார்க்கிற போது வியக்கவே தோன்றுகிறது.

()        ()        ()


சித்தார்த்தா தோழர்களுடன் ஆடுகிற விளையாட்டு 'கபடி' என்கிற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இவ்வளவு தொன்மையானதா அந்த விளையாட்டு என்று ஆச்சரியமாக இருக்கிறது. (இதுபற்றி விவரமறிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்)

சித்தார்த்தாவாக, பின்னாளில் மாட்ரிக்ஸ் படங்களில் நடித்த கீனு ரீவ்ஸ் (Keenu Reeves) தன் பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

பின்னணி இசையை பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். எந்தவொரு இடத்திலும் பார்வையாளனின் கவனம் சிதறாதபடி மிக மெல்லிய பியானோ இசையும், இந்தியச் சூழ்நிலைகளில் அதற்கேற்ற இசையுமாக மிக சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. பூட்டானுக்கு சென்றிருக்கும் மகனை நினைத்தவாறு ஆகாயத்தை வெறித்துப் பார்க்கும் தாய் இருக்கும் அமெரிக்க பின்னணியில், ஆவேசமான ஒரு இந்திய பாரம்பரிய இசையை இணைத்த சாதூர்யம் ஒரு நயமிக்க ப்யூசனை (Fusion) நினைவுப்படுத்துகிறது.

()        ()        ()

இந்தப்படத்தை உணர்ந்து விட்டு வெளியே வரும் போது டீக்கடையில் 'மச்சான் பேரு மதுர' என்றொரு கண்ணராவியை கேட்கும் போது சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
 

suresh kannan

Thursday, May 20, 2010

சாரு தவறவிட்ட சர்வதேச விருது

இலக்கியத்திற்காக வழங்கப்படும் சர்வதேச  விருதுகளில் மிகப் பெரியது International IMPAC Dublin Literary Award. 1 லட்சம் யூரோக்கள் பரிசு. உலகிலேயே ஒரு நாவலுக்காக இவ்வளவு மிகப் பெரிய தொகை பரிசாக கிடைப்பது இந்த விருதின் மூலம்தான். 

1996-ம் வருடம் முதல் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விருதை வழங்குவது யார் தெரியுமா? டப்ளின் நகராட்சியும் இம்பாக் என்ற நிறுவனமும் இணைந்து  இந்த விருதை வழங்குகின்றன. (நம் உள்ளூர் மாநகராட்சிகள் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் புரியும் போது அவற்றிடம் இது போன்ற அதிசயங்களை எல்லாம் எதிர்பார்ப்பது அதீதம்).

உலகின் எந்தவொரு மூலையிலும் மொழியிலும் எழுதப்படும் புதினமும் இதில் போட்டியிட தகுதியானது. அது ஆங்கிலமாகவோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதாகவோ இருக்க வேண்டும். ஆனால் நேரடியாக இதில் கலந்து கொள்ள முடியாது. உலகெங்குமிலுள்ள மாநகர நூலகங்கள் இந்த நூலை பரிந்துரைக்க வேண்டும் என்பது முக்கியமானது.


2010 வருடத்திற்கான விருது  LONG LIST பட்டியல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் அர்விந்த் அடிகா (THE WHITE TIGER), அமிதவ் கோஷ் (SEA OF POPPIES) போன்ற இந்திய எழுத்தாளர்களின் பெயர்கள் காணப்பட்ட போது மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது. ஏனெனில் துருக்கிய நாவலாசிரியரான ஓரான் பாமுக்  உள்ளிட்டவர்கள் பெற்ற இந்த விருதை இந்திய நாவலாசிரியர்கள் எவரும் இதுவரை பெறவில்லை. 

ஆனால் கடந்த மாதம் இதன் SHORT LIST  வெளியான போது மேற்சொன்ன இந்திய எழுத்தாளர்கள் பட்டியலிலிருந்து  காணாமற் போனது ஏமாற்றத்தையளித்தது. ஜூன் 2010-ல் விருதை வென்றவர் பற்றிய முடிவு அறிவிக்கப்படும். 



இதில் சாரு எங்கேய்யா வருகிறார் என்று கேட்பவர்களுக்கு....

ஜனவரி 2009-ல் நடந்த சாரு நூல் வெளியீட்டு விழாவில் இந்த விருதிற்கு தொடர்புடன் அவர் மிக உணர்ச்சிகரமாக பேசியதை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்.


"யாருக்கு வேண்டும் சாகித்ய அகாதமி. இப்ப ஏதோ மேலாண்மை பொன்னுச்சாமின்றவருக்கு கொடுத்திருக்காங்க. கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு வேளைக்கு சாப்பிடறதுக்கு ஆகிற செலவு. இந்த லிஸ்ட்ல போய் ஏன் எஸ்.ராமகிருஷ்ணணையும் சேத்திருக்கீங்க? ஜெயமோகனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் 'கலைமாமணி விருதோ' என்னவோ கொடுத்துப் போகட்டும். ஆனா நம்ம சில எழுத்தாளர்கள் நோபல் பரிசு வாங்குகிற அளவிற்கு தகுதியானவங்கன்னு நான் ரொம்ப வருஷமா சொல்லிட்டு வரேன். (அசோகமித்திரன், ஆதவன். இ.பா., ந.முத்துசாமி... என்று சில எழுத்தாளர்களை சொல்கிறார்). உலகத்துல இருக்கற அத்தனை சிறுகதைகளிலும் சிறந்ததாக 20 தேர்ந்தெடுத்தா அதுல எஸ்.ராவின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' சிறுகதையும் ந.முத்துசாமியுடைய 'நீர்மை'யும் வரும். அப்பேர்ப்பட்ட படைப்பாளிகளை சாகித்ய அகாடமி கொடுத்து கேவலப்படுத்த சொல்றீங்களா, வெக்கமாயில்லை. இம்பாக்-னு ஒரு விருது. ஒன்றரை கோடி ரூபா பரிசு. நோபல் பரிசுக்கும் மேல. அடுத்த வருஷம் அந்த விருதுப் பட்டியல்ல என்னோட பேர் இருக்கும்னு உறுதியா என்னால சொல்ல முடியும்.

சாரு தன்னுடைய உரையில் ஜீரோ டிகிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் குறித்து மிக நம்பிக்கையாகவும் உறுதியுடனும் இதைச் சொல்லும் எனக்கும் கூட  சற்று பரவசமாகவே இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாருவின் கனவு நிறைவேறாதது மாத்திரமல்ல, லாங் லிஸ்ட்டிலும் அவரது புதினம் இடம் பெறவில்லை. சம்பந்தப்பட்ட பதிப்பகமும் எழுத்தாளரும் பொது நூலகங்களின் மூலம் நாவலை பரிந்துரைப்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றியடையாததுதான் காரணமாக இருக்கும் என நம்புகிறேன். 


சில விமர்சனங்களைத் தாண்டியும் சாரு என்னுடைய பிரியமான எழுத்தாளர்களுள் ஒருவர் என்பதால் வரும் ஆண்டுகளில் அவர் தனது வேறு புதினத்திற்காக இந்த விருதினை பெறுவார் என்றும் நம்புகிறேன். தனக்கு சில கோடிகள் பணம் கிடைத்தால் விக்ரமாதித்யன், சங்கர ராமசுப்பிரமணியன் போன்ற உற்சாக பான பிரிய நண்பர்களை மதுவிலேயே குளிப்பாட்டி கொண்டாடுவேன் என்று ஒருமுறை சாரு எழுதியிருந்த ஞாபகம். அது நிகழாமல் போனதும் கூடுதல் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.


suresh kannan

Tuesday, May 18, 2010

மாமா மாதிரியான ஹீரோக்கள்



'பையா' பார்த்தேன். பொதுவாக உற்சாகமாக இருந்தது.

என்ன..'ரன்'னையே அழுக்கு போகாமல் துவைத்து காயவைத்து சூடான இஸ்திரி போட்டு தந்திருக்கிறார் லிங்குசாமி.

சில சுவாரசியமான டிவிஸ்ட்டுகள் மாத்திரம் இருந்திருக்காவிட்டால் படம் ஃபிளாப்பாகி தயாரிப்பாளர், இயக்குநரை ----------------பையா..  என்று திட்டியிருந்திருக்கக்கூடும். நல்ல வேளையாக தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரே நபர் என்பதால் இந்த அபாயத்திற்கு சந்தர்ப்பமில்லை.

'சித்தப்பா' தோற்றத்தில் ஒரு ஹீரோ. முந்தைய படங்களைப் போல் அல்லாமல் காதலிக்கும் 'சாக்லேட் பாய்' வேடமெல்லாம் கார்த்திக்குக்கு பொருந்தவில்லை. (இந்த மாதிரியான வேடங்களில் தாத்தாக்களெல்லாம் நடித்துக் கொண்டிருப்பது வேறு விஷயம்).

'The heroes' pictures make you feel even your uncles can be movie stars' என்று தன்னுடைய காதல் சுயசரிதை புதினத்தில் சென்னையைப் பற்றி வர்ணிக்கும் போது சேத்தன் பகத்  குறிப்பிட்டிருப்பது உண்மைதான். ஹீராயின்கள் விஷயத்தில் நமக்கிருக்கும் ரசனையின்மை (இந்தப் படத்து நாயகியும் ஓர் உதாரணம்) ஹீரோக்கள் விஷயத்திலும் நீடிப்பது துரதிர்ஷ்டம்தான்.

படத்தில் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் மதியும் இசையமைப்பாளர் யுவுனும். அதீதமான சண்டைக்காட்சிகளும் துரத்தல் காட்சிகளும்  மதியின் பரபரப்பான உழைப்பால் சுவாரசியமாகியிருக்கிறது. யுவன் ஒரே மாதிரியாக பாடிக் கொண்டிருந்தாலும் 'என் காதல் சொல்ல நேரமில்லை' அந்த சூழ்நிலைக்கு மிகச் சரியாக பொருந்தியிருந்தது.

பாவம் மிலிந்த் சோமன் போன்ற நடிகர்கள். ஊறுகாய் ஜாடியாகக் கூட பயன்படுத்தப்படவில்லை. 

'ரன்' திரைப்படத்தின் போதே இதைப் பற்றி எழுதியிருந்த ஞாபகம். எந்தவொரு சமூகத்தைப் பற்றியோ, துறையினரைப் பற்றியோ இழிவாக காட்சியமைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனே தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அதே போல் தாதாக்களும் ரவுடிகளும் தங்களுக்கென சங்கம் அமைத்து திரைப்படத்தில் இப்படி தங்களை இழிவாக சித்தரிப்பதை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும். மூன்று வேளையும் ஃபீப் பிரியாணியாக சாப்பிட்டு உடலை ஏற்றி வைத்திருக்கும் ஒரு திடகாத்திரனை பல்லி போலவோ, பக்கத்து வீட்டு மாமா போலவோ இருக்கும் நாயகர்கள் ஒரே அடியில் விண்ணில் பறக்க வைப்பதை பார்த்து சாதாரணனாகிய எனக்கே மனம் பதைக்கும் போது அவர்கள் மனது என்ன பாடுபடும்?

suresh kannan

Sunday, May 16, 2010

தாம் தூம் திரைப்பட தலைப்பு அனிமேஷன்

புறநகர் ரயிலில் 'பதேர் பாஞ்சாலி' தொடர்பான நூலை வாசித்துக் கொண்டிருந்தவரிடம் அதன் காரணமாகவே என்னுடைய வழக்கத்திற்கு மாறாக பேச்சுக் கொடுத்தேன். கவிஞர் அறிவுமதி நடத்தும் 'தை' கவிதை காலாண்டு இதழில் வடிவமைப்பு செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டார் வெங்கடேஷ். திரைப்படத்துறையிலும் ஆர்வமுண்டு.  தீடீரென்று அமானுஷ்யமாக அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவார். வலைப்பூ ஆரம்பிக்கச் சொன்னேன்.  நுட்பம் தொடர்பாக எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது  சொல்வேன்.

சமீபத்தில் என்னிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். தாம்தூம் திரைப்பட தலைப்புக் காட்சிக்கான அனிமேஷனை அவருடைய நண்பரொருவர்தான் உருவாக்கினதாகவும் அதைப் பார்வையிட்டு பின்னூட்டமிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.



சம்பந்தப்பட்ட அனிமேஷனைப் பார்த்தேன். சிறப்பாகவே இருந்தது. டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட நகர்ப்புற காட்சிகளின் பின்னணியில் கணினி நுட்பம் உதவி கொண்டு சிறப்பான கற்பனையுடன் பெயர்களை நிரப்பியிருந்தார் வெங்கடேஷின் நண்பர். கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் திரைப்படமொன்றின் பின்னணியில் பணிபுரியும் இவ்வாறான பல சிறு கலைஞர்களைப் பற்றி நாம் அறியாமலே இருக்கிறோம்.

உங்கள் நண்பர்களிடமும் இதைப் பற்றிச் சொல்லுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தார். சொல்லி விட்டேன். சாவகாசமான நேரத்தில் இதைப் பார்வையிட்டு உங்கள் கருத்தையும் சொல்லி வைத்தால்,  அதை உருவாக்கியவருக்கு உற்சாகமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி.

suresh kannan

Saturday, May 15, 2010

டோம்பிவிலி ஃபாஸ்ட் (மராத்தி திரைப்படம்)

 Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

இந்த வரிசையில் இன்று (15.05.2010) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.


Dombivali Fast (Marathi)

Director : Nishikant Kamat
2005 / 144 minutes / Colour
English subtitles

National Award for the best feature film in Marathi 2006.


Uninterrupted Viewing
Film Courtesy NFDC

மாதவன் நடித்து தமிழில் வெளிவந்த 'எவனோ ஒருவன்' திரைப்படத்தின் மூல வடிவம் இது.

மராத்திக்குமான  மூலம், ஹாலிவுட்டில் ' FALLING DOWN' என்ற வடிவிலிருப்பதை பிற்பாடு அறிந்து கொண்டேன்.

(Source: இந்து ஆங்கில நாளிதழில் இன்று வந்திருக்கும் லோக் சபா தொலைக்காட்சி விளம்பரம்) மற்றும் http://164.100.47.132/lstv/dailyschedule.aspx

அவசியம் பாருங்கள்.

(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)

suresh kannan