Wednesday, May 26, 2010

தி லிட்டில் புத்தா

குறுந்தகடுகளில் சேமித்து வைத்திருந்தவகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது சில வருடங்களுக்கு முன்பு மடற்குழுமங்களுக்காக எழுதின சில கோப்புகள் கிடைத்தன. அவற்றில் சிலவற்றை அவ்வப்போது இந்த  வலைப்பதிவிலும் இட்டு அவற்றை சாஸ்வதமாக்க உத்தேசம். (Blog-ஐ  உடனே Unsubscribe செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்காக: அதிகமி்ல்லை ஜென்டில்மேன். சில கோப்புகள்தான்).

எச்சரி்க்கை: மீள்பதிவு 

பெர்னார்டோ பெர்டோலுசி (Bernardo Bertolucci) இயக்கிய திரைப்படங்கள் தற்போது சென்னை, பிலிம் சேம்பரில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

07.09.2004 அன்று நான் பார்த்த படம் தி லிட்டில் புத்தா.(THE LITTLE BUDDHA).ஒரு பெளத்த குரு மாணவர்களுக்கு கதை சொல்லும் காட்சியமைப்போடு படம் தொடங்குகிறது.

அந்தக் கதை இப்படியாக போகிறது.

ஒரு பூசாரி ஒரு ஆட்டை கடவுளுக்கு பலியிட தயாராகுகிறார். ஆடு சிரிக்க ஆரம்பிக்கிறது. திகைப்படைந்த பூசாரி ஆட்டிடம் விசாரிக்க, தான் 100 ஜென்மங்களாக ஆடாகப் பிறந்து, சாகடிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்து... இவ்வாறாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறது ஆடு. உடனே அழவும் ஆரம்பிக்கிறது. பூசாரி மறுபடியும் விசாரிக்க, 100 ஜென்மங்கள் முன்பு தானும் ஒரு பூசாரியாக இருந்ததாக சொல்வதைக் கேட்ட பூசாரி மனந்திருந்தி ஆட்டை பலியிடும் முடிவை கைவிடுகிறார்.

கடவுளின் பெயரால் விலங்குகளை கொல்வதை தவறு என்கிற நீதியுடன் அமைந்திருக்கிறது இந்தக் கதை.

இந்தக் கதை சொல்லி முடிக்கப்பட்டவுடன் அவருக்கு அமொரிக்காவிலிருந்து ஒரு செய்தி வருகிறது. இதற்காகவே காத்திருந்த மாதிரி அவர் அமெரிக்காவிற்கு கிளம்புகிறார். அங்குள்ள ஒரு அமெரிக்க சிறுவனை புத்தரின் மறுபிறவிகளின் தொடர்ச்சியாக கருதுகிறார். அவனுடைய பெற்றோரை சந்தித்து, அவன் புத்தரின் மறுபிறவிதானா என்று நிச்சயித்துக் கொள்ள பூட்டானுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறார். முதலில் மறுக்கும் அவர்கள், ஒரு சம்பவத்தின் மூலம் மனம் மாறி தந்தையும் மகனும் பூட்டான் வர ஒப்புக் கொள்கின்றனர்.

பூட்டானில் இன்னொரு சிறுவனும், சிறுமியும் இவ்வாறே புத்தரின் மறுபிறவி சோதனைப் பட்டியலில் இருக்கின்றனர். மூன்று பேருமேபுத்தரின் மறுபிறவிகளாக இருக்கக்கூடிய அடையாளங்களைக் கண்டு மதகுரு குழம்பிப் போகிறார். பின்னர் மூத்த மதகுரு மூலம் மூவருமே புத்தரின் மறுபிறவிகள் என்பதை உணருகிறார். சில சமயங்களில் முன்னர் இவ்வாறு நடந்திருக்கிறது என்று அறிய நேருகிறது. தன் வேலை முடிந்த திருப்தியில் அவர் இறந்து போக, மூன்று சிறார்களும் தங்களுடைய ஊர்களில் மதகுருவுடைய அஸ்தியை கரைப்பதுடன் படம் நிறைகிறது.

()        ()        ()

முதலில் நான் வியந்த அம்சம் இந்தப்படத்தின் ஒளிப்பதிவு. சில வினாடிகள் காண்பிக்கப்பட்ட அவரின் பேரை என்னால் நினைவு கொள்ள இயல விட்டாலும் படம் முழுக்க அந்த திறமைமிக்க கலைஞனை வியந்து கொண்டேயிருந்தேன்.

மதகுரு பரிசளிக்கிற புத்தகத்தின் மூலம் புத்தர் யார்? என்று அந்த அமெரிக்கச் சிறுவன் கேட்ட ஆரம்பிக்க கணத்திலிருந்து புத்தரின் சரிதம் நமக்கு படமாக சொல்லப்படுகிறது. அந்தக் கால புத்தரின் சரிதம் கொஞ்சமும், நிகழ்காலக் கதை கொஞ்சமுமாக, திரைக்கதை ஒரு கடிகார ஊஞ்சலை நினைவுப்படுத்தும் வகையில் இங்குமங்குமாக செல்கிறது.

இப்படி செல்கிற திரைக்கதை ஒரு நிலையில் சித்தார்த்தா புத்தராக மாறி ஞானம் பெறும் காட்சியை அந்தக் குழந்தைகளும் பார்க்கும்படியாக ஒரே பிரேமில் காண்பிக்கப்படுகிறது.

புத்தர் துறவு நிலையில் அமர்ந்திருக்க, அவருக்கு முன் புயல் அலைகள் ஒரு புறமும், நெருப்புக்கோளங்கள் ஒரு புறமும் ஆவேத்துடன் பாய கண்ணைக்கூச வைக்கும் மின்னல் ஒளியில் மிகுந்த பயத்துடன் குழந்தைகள் புத்தரை பார்க்கின்றனர். இந்தக் காட்சி கணினி தொழில்நுட்பம் கொண்டு மிக சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. சில வினாடிகளே வரும் இந்தக் காட்சியை தொடர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு அமானுஷ்ய உணர்வுடனிருந்தது.

சித்தார்த்தா என அழைக்கப்பட்ட புத்தரின் வாழ்க்கை சிறப்பான முறையில் நமக்கு சொல்லப்படுகிறது. கலை இயக்குநரின் உழைப்பு இந்தக் காட்சிகளில் திறம்பட வெளிப்படுகிறது.

'தமிழ்ப் படங்கன்னா நொட்டு நொள்ளைல்லாம் சொல்லுவாங்க. வெள்ளக்காரன் பண்ணாத்தாம்பா இவன்க ஒத்துப்பான்க' என்று நானே முன்பு முணுமுணுத்திருந்தாலும், அவர்களின் அசாத்திய அக்கறையை ஒவ்வொரு பிரேமிலும் பார்க்கிற போது வியக்கவே தோன்றுகிறது.

()        ()        ()


சித்தார்த்தா தோழர்களுடன் ஆடுகிற விளையாட்டு 'கபடி' என்கிற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இவ்வளவு தொன்மையானதா அந்த விளையாட்டு என்று ஆச்சரியமாக இருக்கிறது. (இதுபற்றி விவரமறிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்)

சித்தார்த்தாவாக, பின்னாளில் மாட்ரிக்ஸ் படங்களில் நடித்த கீனு ரீவ்ஸ் (Keenu Reeves) தன் பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

பின்னணி இசையை பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். எந்தவொரு இடத்திலும் பார்வையாளனின் கவனம் சிதறாதபடி மிக மெல்லிய பியானோ இசையும், இந்தியச் சூழ்நிலைகளில் அதற்கேற்ற இசையுமாக மிக சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. பூட்டானுக்கு சென்றிருக்கும் மகனை நினைத்தவாறு ஆகாயத்தை வெறித்துப் பார்க்கும் தாய் இருக்கும் அமெரிக்க பின்னணியில், ஆவேசமான ஒரு இந்திய பாரம்பரிய இசையை இணைத்த சாதூர்யம் ஒரு நயமிக்க ப்யூசனை (Fusion) நினைவுப்படுத்துகிறது.

()        ()        ()

இந்தப்படத்தை உணர்ந்து விட்டு வெளியே வரும் போது டீக்கடையில் 'மச்சான் பேரு மதுர' என்றொரு கண்ணராவியை கேட்கும் போது சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
 

suresh kannan

9 comments:

அதிஷா said...

ரொம்ப நல்லா இருக்கு...

D.R.Ashok said...

//சித்தார்த்தா என அழைக்கப்பட்ட புத்தரின் வாழ்க்கை சிறப்பான முறையில் நமக்கு சொல்லப்படுகிறது//
அதாவது எனது பின்னூட்டங்கள் மாதிரி ;)

//'மச்சான் பேரு மதுர'என்றொரு கண்ணராவியை கேட்கும் போது சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது//
உங்களுக்கு வயசாகிறது என்பது புரிகிறது...

குறிப்பாக எண்ணங்கள் அதிகமானால் தான் தியானம் தேவைபடுகிறது... எண்ணங்களை ஊக்கபடுத்தவே.. தற்போதைய தமிழ் சினிமா படங்கள்/பாடல்கள் உதவுகிறது...

அடக்க்டவுளே இந்த கருத்த நான் பதிவா போட்டுயிருக்காலாம்... பல மொக்கை பதிவுகளுக்கு நடுவுல சிறப்பானதா இருந்திருக்கும்... :(

(பாருங்க யாருன்னா.. புத்தம் சரணம் கச்சாமின்னு பின்னூட்டமிடுவாங்க)

(ஆமாம் புத்தர பத்தி சிவராம்கிட்ட பேசியிருக்கீங்களா...)

Raj Chandra said...

தமிழ்ப் படங்கன்னா நொட்டு நொள்ளைல்லாம் சொல்லுவாங்க. வெள்ளக்காரன் பண்ணாத்தாம்பா இவன்க ஒத்துப்பான்க' என்று நானே முன்பு முணுமுணுத்திருந்தாலும்.

- பின் வரும் வரிகளில் நீங்களே நிரூபிக்கிறீர்கள்:
"பின்னணி இசையை பற்றி குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். எந்தவொரு இடத்திலும் பார்வையாளனின் கவனம் சிதறாதபடி மிக மெல்லிய பியானோ இசையும்"

- புத்தர் காலத்தில் ஏது பியானோ? இதே தமிழ் படம் என்றால் நாலு திருச்சாத்து உண்டு :)

Ravi said...

cinematographer: Vittorio Storaro
Original Music : Ryuichi Sakamoto

--IMDB

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

வவ்வால் said...

Budhar kalathila piano mattuma illai camera kooda than illai enave padame eduthirukka koodathu appadinum neenga ketkalam @ravi chanra

tamil padathuku suvathula muttipingana ,ayal nattu padangalukum niraya thadavai muttikanum,kupai padangal angum undu, @kannan.

வவ்வால் said...

Budhar kalathila piano mattuma illai camera kooda than illai enave padame eduthirukka koodathu appadinum neenga ketkalam @ravi chanra

tamil padathuku suvathula muttipingana ,ayal nattu padangalukum niraya thadavai muttikanum,kupai padangal angum undu, @kannan.

சுரேஷ் கண்ணன் said...

//அந்தக் கால புத்தரின் சரிதம் கொஞ்சமும், நிகழ்காலக் கதை கொஞ்சமுமாக, திரைக்கதை ஒரு கடிகார ஊஞ்சலை நினைவுப்படுத்தும் வகையில் இங்குமங்குமாக செல்கிறது.//

@ RajChandra. :-)

Subbaraman said...

Those children are not reincarnation of Buddha. They're reincarnations (individual manifestations) of a Lama.