Tuesday, April 03, 2018

ரங்கஸ்தலம் எனும் ரம்பமும் சமந்தா புராணமும்



நீண்ட காலம் கழித்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை பெரிய திரையில் காண்பதற்கு (விமர்சனத்திற்காக அல்லாமல்) பிரதான காரணமாய் இருந்தது தோழி சமந்தாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகத்தான். அந்த விஷயம் ஒருமாதிரியாக அட்டகாசமாக நிகழ்ந்தது என்றாலும் இதற்காக படத்தின் இன்னபிற அபத்தங்களை சகித்துக் கொண்டு அமர்ந்திருந்தது கொடுமையான அனுபவமாக இருந்தது. சில குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர்த்து வழக்கமான தேய்வழக்கு சினிமாவாக இருந்தது ‘ரங்கஸ்தலம்’. இது எப்படி வணிகரீதியான வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. அர்ஜூன் ரெட்டி போன்ற திரைப்படங்கள் ஒருபக்கம் தெலுங்கு சினிமாவை முன்னகர்த்திக் கொண்டு வரும் போது ரங்கஸ்தலம் போன்ற கிளிஷேக்கள் பின்னகர்த்துகின்றன.

படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால் தோழி சமந்தாவின் பங்களிப்பைப் பற்றி பின்வரும் பத்திகளில் பார்த்து விடலாம்.

சமந்தா ஒரு பேரழகி, தேவதை என்கிற விஷயமெல்லாம் ஊர் அறிந்ததுதான். தன் சினிமா ஒப்பனைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு எண்பதுகளின், கிராமத்துப் பெண்ணின் எளிமையைப் பூசிக் கொண்டு இயல்பான தோற்றத்தில் வருகிறார். ஒப்பனையின்மை என்கிற விஷயம் கூட தோழியின் அழகைக் குறைக்க முடியவில்லை என்பதுதான் சிறப்பு.

குணா படத்திற்காக என்று நினைவு. சிவாஜி கமல்ஹாசனை இவ்வாறு பாராட்டினார். ‘அழகா இருக்கற ஒரு நடிகன், ஒரு பாத்திரத்திற்காக தன்னை அவலட்சணமா காட்டி நடிக்க முன்வர்றான்னா.. அவன்தான் சிறந்த கலைஞன்”. அந்த வகையில் சமந்தா ஓர் அபாரமான கலைஞி எனலாம்.

ஒரு நடிகையின் வணிகச் சந்தையும் அதன் மதிப்பும்  அவருடைய திருமணத்திற்குப் பிறகு முற்றிலும் கீழிறிங்கி விடுவது இந்தியா போன்ற கலாசார சூழலில் வழக்கமானது. ஒரு சராசரியான இந்திய ஆணின் உளவியல் சிக்கலுக்கும் இது போன்ற போக்குகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு அவளிடமிருந்த ‘ஏதோவொன்று’ காணாமல் போய் விட்டது என்று சராசரி ஆண் கருதுகிறான். எதையோ இழந்ததாக அவன் கருதுவதே இது போன்ற நிராகரிப்புகளுக்கு வந்து சேர்கிறது. ‘பிறன் மனை நோக்கான்’ என்றெல்லாம் இதை ஜல்லியடிக்கக்கூடாது. எதிலும் புதியதைத் தேடும் ஆதிக்க மனதின் சிக்கல் இது. இதையே திரைப்படத்தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கருதுகிறார்கள். பார்வையாளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறார்கள். அதையெண்ணி அச்சப்பட்டு திருமணமான நடிகைகளுக்கு அக்கா, அத்தை வேடம் தரவே தயாராக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் இந்த மரபை உடைத்த நடிககைகள் மிகச் சொற்பமே. அந்த வரிசையில் கம்பீரமாக இணைந்திருக்கிறார் சமந்தா. இந்த திரைப்படத்திற்கும் நடிகை தேர்வின் போது மேற்குறிப்பிட்ட மாதிரியான இடையூறுகளை இயக்குநர் எதிர்கொண்டிருக்கிறார். நடிகர் சிரஞ்சீவிதான் சமந்தாவின் தேர்வு குறித்து நம்பிக்கையளித்ததாக சொல்கிறார்கள். திருமணத்திற்குப் பின்னரும் சமந்தாவின் பிம்பம் துளியும் குறையாமல் இருப்பது, பார்வையாளர்கள் அவர் மீது வைத்துள்ள பிரியத்தைக் காட்டுகிறது. இத்திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி அவரை ரசிக்கிறார்கள்.

அவருடைய நடிப்புத் திறமையை இயக்குநர் வலிமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது பெரிய குறை. இந்தியச் சினிமாவின் சராசரியான நாயகி போலவே இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அதையும் மீறி தன் பங்களிப்பில் சமந்தா ஜ்வலிப்பதுதான் சிறப்பு. இடுப்பின் அபாரமான வளைவுகளும் ஆபத்தான இறக்கங்களும் நாபியின் பேரழகும் நமக்குள் சில சங்கடமான உணர்வுகளை உற்பத்தி செய்கின்றன.

அவர் காட்சியளிக்கும் ஒவ்வோரு பிரேமிலும் மற்ற நடிகர்களை கவனமாகத் தவிர்த்து விட்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட் சட்டென்று விதம் விதமாக அவருடைய முகபாவங்களை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தேன். அவருடைய அழகை அள்ளி அள்ளி மனதிற்குள் நிரப்பிக் கொள்ள முயற்சித்தேன். பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்பட்ட பூனையின் பேராசை போலவே அது அமைந்தது.

**

ராம் சரணின் திரைப்படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. இதுவரை பெரும்பாலும் வழக்கமான மசாலா கதாநாயகனாகவே நடித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன். ரங்கஸ்தலத்தில் ஒரு வெகுசன திரைப்படத்தின் நாயக எல்லைக்குள் நின்று திறம்பட இயங்கியிருக்கிறார். நாயகனை மிகையான சூப்பர் ஹீரோவாகவே சித்தரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இருந்து விலகி செவிக்குறைபாடு உள்ள பாத்திரமாக இதில் காட்டியதே ஓர் ஆறுதலான முயற்சி எனலாம். இந்தச் சந்தர்ப்பத்தை இயன்றவரை ராம்சரண் நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலும் அவர் வெளிப்படுத்தும் ஒரே மாதிரியான முகபாவங்கள் சலிப்பூட்டுகின்றன.

எண்பதுகளின் காலக்கட்டத்தில் படம் இயங்குவதால் அது சார்ந்த பின்னணி விஷயங்கள் திறமையாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு காட்சியில் நாயகன் எழுந்ததும் ஒரு டப்பாவைத் திறந்து வெள்ளைப் பொடியைக் கொட்டுவார். “ஏன்யா இந்தாள் எழுந்தவுடனேயே மூஞ்சிக்கு பவுடர் போடப் போகிறான்?” என்று வியந்தேன். அது அக்காலக்கட்டத்தில் பல் விளக்கும் கோல்கேட் பவுடர். பற்பசை உபயோகத்திற்கு மாறி நீண்ட காலமாக விட்டதால் இது சட்டென்று மறந்து போயிருந்தது. இது போன்ற கலை இயக்கம் சார்ந்த சின்னச் சின்ன விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின.

ஒளிப்பதிவாளர் ரத்னவேலின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு முக்கியமானது. சோளக்காட்டில் நிகழும் துரத்தல்களும் சண்டைக்காட்சிகளும் தொடர்பான ஒளிப்பதிவு அபாரம். போலவே அந்த நிலப்பரப்பின் அழகியலும் செம்மண் புழுதியும் சிறப்பாக பதிவாகியிருந்தன.

ஒரேயொரு ‘டண்டணக்கா’ மெட்டை வைத்துக் கொண்டு பல காலமாக ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் DSP. ஆந்திரர்களுக்கு இன்னமும் இது சலிக்கவில்லையோ என்னமோ. ‘ரங்கம்மா.. மங்கம்மா’ என்கிற பாடல் மட்டும் சற்று கவனத்தை ஈர்க்கிறது. மற்றதெல்லாம் டப்பாங்குத்துதான். காது வலிக்கிறது. நாயகனைப் போலவே பார்வையாளர்களும் செவிக்குறைபாடு உள்ளவர்கள்  என்று  இசையமைப்பாளர்கள் நினைத்துக் கொண்டது போல பாடல்களிலும் பின்னணி இசையிலும் மிகையான சத்தம்.

ஜெகபதி பாபு, பிரகாஷ் போன்றவர்கள் எத்தனையோவாவது முறையாக தாங்கள் சலிக்க சலிக்க செய்த வில்லன் பாத்திரத்தை இதிலும் தொடர்கின்றனர். அதிலும் பிரகாஷ்ராஜின் ஒப்பனையெல்லாம் கொடுமை.


கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு வருடக்கணக்காக தினமும் சவரம் செய்தும் முகத்திற்கு பவுடர் போட்டும் குணப்படுத்தி விடுகிறார் நாயகன். இது போன்ற நகைச்சுவைகள் திரைக்கதையின் நம்பகத்தன்மையை சிதைக்கின்றன. மிக எளிதாக யூகிக்கக்கூடிய கிளைமாக்ஸ். இதற்கு அத்தனை பில்டப் தந்திருக்க வேண்டியதேயில்லை. ஏன் இத்திரைப்படத்தை  180  நிமிடங்களுக்கு இழுத்திருக்கிறார்கள் என்கிற மர்மம் பிடிபடவில்லை. படத்தின் இரண்டாம் பாதியில்தான் சிறிதாவது வேகம் எடுக்கிறது. முதற்பகுதியின் பல காட்சிகள் வீண்.

தன்னைக் கடித்து தப்பிய பாம்பினை நாயகன் தேடும் காட்சியை பல நிமிடங்கள் கழித்து வில்லனோடு இணைப்பது, நாயகனின் செவிக்குறைபாட்டை நகைச்சுவையாகவும் தீவிரமாகவும் உபயோகித்தது போன்று சில விஷயங்கள் மட்டுமே இந்த சலிப்பான திரைக்கதையில் ஆறுதலான விஷயங்கள். சமந்தா எடுத்து வரும் உணவை, ராம்சரணின் வீட்டைச் சேர்ந்தவர்கள் உரிமையாக கைப்பற்றிக் கொள்ளும் காட்சி ‘விக்ரமன்தனமாக’ இருந்தாலும் கவர்ந்தது.

கிராமத்து மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஊரையே ஆட்டிப் படைக்கும் பண்ணையார்த்தனத்தை சற்று தாமதமாகவேனும் நாயகன் எதிர்க்கும் பல படங்களில் ரங்கஸ்தலமும் ஒன்று. நவீன நுட்பத்தின் வழியாக ‘வித்தியாசமான’ படம் என்கிற பாவனையில் பழைய வடையையே சுட முயன்றிருக்கிறார்கள். வேறு ஒன்றும் புதிதாக இல்லை. சமந்தாவின் தரிசனம் மட்டுமே ஆறுதல்.

suresh kannan