ஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்றும் என்ன செய்தும் தம்மை ஒரு முற்போக்குவாதி என்று யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்களே என்றும் கவலைப்படுகிறீர்களா?
கவலையை விடுங்கள். மனச்சாட்சியையும், சூடு சொரணைகளையும் சற்று ஒத்தி வைத்து விட்டு உங்களை முற்போக்குச் சாயத்தில் முக்கியெடுத்த செவ்வாய் கிரகவாசியான பிரகஸ்பதி போன்றதொரு வடிவில் கட்டமைத்துக் கொண்டு அதன் மூலம் இணையப்பரப்பில் பரவலான கவனத்தைப் பெற கீழ்கண்ட வழிகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.
(1)
முதலில் உங்கள் வலைப்பூவின் பெயரே கலகத்தன்மையுடன் இருத்தல் அடிப்படையானது. பூங்குருவி, தென்றல் காற்று என்றெல்லாம் அழகியல் உணர்ச்சியுடன் பெயர் வைத்திருந்தால் உங்களை ஏதோ வாரமலரின் பின்பக்கத்தில் கவிதை எழுதுகிற தயிர்வடை ஆசாமி என்று புறக்கணித்து விடுவார்கள். இந்த வலைப்பூவின் தலைப்பையே உதாரணத்திற்கு பாருங்கள். பிச்சைப்பாத்திரத்தில் என்ன இருக்கும்? மனிதர்கள் தங்களின் ஜாதிய கற்பிதங்களை கழற்றி வைத்து விட்டு கூடும் ஒரே இடமான பாலியல் தொழிலாளியின் யோனி மாதிரியானது அது. ஜாதிமதமில்லாத ஜீவத்துளிகள் நிறைந்திருப்பது போல பிச்சைப் பாத்திரத்திலும் எல்லோர் வீட்டு மிச்ச, சொச்ச உணவு அடங்கியிருக்கும். அந்த மாதிரியான ஒரு கலேஜியான பிரதேசத்தை குறியீடாகக் கொண்ட வார்த்தையை உங்கள் வலைப்பூவின் பெயர் எதிரொலிக்க வேண்டும். ஆனால் வாசகர்களின் கவனத்தைக் கவர இந்த மிதவாதம் கூட உதவாது. இன்னும் கூட காத்திரமாக கூடவே சற்று இலக்கியச் சாயலுடன் இருப்பது உத்தமம். 'விந்துத்துளியின் பிரபஞ்ச வெளி' என்பது போலவோ 'பெருங்கதையாடலில் விரியுமென் யோனி' என்பது போலவோ அமைந்திருத்தல் நன்று. 'தீப்பொறி ஆறுமுகம்" "வெற்றிகொண்டான்" போன்ற திராவிடப் பேச்சாளர்களின் காத்திரமான உரையாடல்களை தொடர்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது இதற்கு உதவக்கூடும். சிற்றிதழ் வட்டாரத்தில் கலகவாதிகளாக அறியப்படுகிறவர்கள் தலைமையேற்கும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் அதற்கு ஒப்பானது.
(2)
பதிவு ஆரம்பித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது முற்போக்காளர்களுக்குள் நிலவும் பல முகாம்களில் ஏதாவது ஒரு முகாமிற்கு அடைக்கலம் தேடிச் செல்வது. வணிக இதழ்கள் முதற்கொண்டு சிற்றிதழ்கள் வரை இந்த முகாம்களின் எண்ணிக்கை அதிகம். ஏதாவதொரு முகாமோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் காத்திரமாக செயல்படுவது என்பது பெண்கள் நடிக்காத சீரியல் வெற்றி பெறுவது போல சாத்தியமேயில்லாத ஒரு காரியம். முற்போக்கு எழுத்தாளர்களை எப்படி அடையாளம் கொள்வது என்று குழப்பமா? எந்த பதிவிலாவது ஙோத்தா... லவ்டேகோபால்... என்ற வார்த்தைகள் தென்பட்டால் அவரை தயக்கமின்றி உடனே முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஏதாவது ஒரு முகாமை தேர்வு செய்தவுடன் அந்த முகாமில் இருப்பவர்களின் பதிவிற்குச் சென்று 'சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' என்றோ ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்' என்றோ ஆவேசமான வசவு வார்த்தைகளுடன் இணைத்து பின்னூட்டமிட்டு பதிவெழுதுவர்களையே அசத்தி அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இம்மாதிரியான செயல்களின் மூலம் அவர்களும் உங்களின் பதிவிற்கு வந்து அதே மாதிரியான மொழியில் பின்னூட்டமிட்டு உங்களின் புகழைப் பரப்ப வலிகோலுவார்கள். பிற்காலத்தில் அவர்கள் உங்களை அவர்களின் வாரிசாக அறிவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பின்நவீனத்தின் கோமணத்தையே அவிழ்த்து ஆராய்வதாக சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள், பழமைவாதிகள் தங்கள் சமூகத்தை தொடர்ச்சியாக கட்டமைக்க ஏற்படுத்திய வாரிசு முறையை மாத்திரம் ஏன் பின்பற்றுகிறார்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
(3)
உங்கள் பதிவின் உள்ளடக்கம் என்பது எப்போதும் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகள் பொதுப்புத்தி கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு பொதுப்புத்தி (common sense) என்பதே இருக்கக்கூடாது. புரிகிறாற் போலவும் நேர்க்கோட்டிலமைந்த வாக்கியங்களாகவும் எழுதினால் உங்களுக்கு முற்போக்கு எழுத்தாளராக இருக்க அடிப்படைத்தகுதி கூட இல்லையென்று பொருள். ஓசியில் கிடைக்கிறதே என்று பத்து கட்டிங்கை தொடர்ச்சியாக அடித்து விட்டு டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனின் உளறலோடு ஒத்திசைவான ஒரு தாளகதியான மொழியில் எழுதத் தெரிந்திருத்தல் நன்று. புரியும்படி சொன்னால் அல்லது புரியாதபடி சொன்னால் உங்கள் ஆழ்மனதின் ஒப்பனை செய்யப்படாத எண்ணங்களை இலக்கிய மொழியின் சாயலோடு வடிவமைத்து கலக வார்த்தைகளில் பதிவு செய்வதே முற்போக்கு எழுத்தின் பாலபாடம். தமிழில் இருக்கும் அத்தனை வசவு வார்த்தைகளையும் பதிவின் இடையில் உபயோகிப்பது மிக முக்கியம். வாசிக்கிறவர்கள் யாரும் முகஞ்சுளிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்குள் ஒருவேளை எழலாம். இப்படியான வசவு வார்த்தைகளை படிப்பதிலும் சொல்லிப் பார்ப்பதிலும் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு ரகசிய கிளர்ச்சி இருக்கிறது என்பது அடிப்படை உளவியல் உண்மை. எனவே மேலுக்குள் அதை அருவருத்தாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பார்கள் என்பது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே நிறுவப்பட்ட ஒரு வரலாற்று ரகசியம்.
(4)
செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் தொடர்ந்து கவனித்து சிறுபான்மையினர்கள் சம்பந்தப்பட்ட அவர்கள் மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளை (அதற்குத்தான் இந்தியாவில் பஞ்சம் கிடையாதே) சிவப்பு மையால் குறித்து வைத்துக் கொள்வது முக்கியம். பின்பு புலனாய்வுப் பத்திரிகைளும் சிறப்பு செய்தியாளர்களும் மத அடிப்படையாளர்கள் நடத்தும் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கும் தரவுகளை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றை உங்களின் பார்வை போல கலந்து கட்டி ஆவேசமான தொனியில் மறுபிரசுரம் செய்வது உங்களை முற்போக்காளர்களின் வரிசையின் முன்னணியில் நிற்க வைப்பதற்கு நிச்சயம் உதவும். இதில் தலித்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட சம்பவத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த மலம் உலராமல் பார்த்துக் கொள்வது முற்போக்காளராகிய உங்களின் முக்கியமான கடமை. வருங்காலத்தில் தலித்களே இதை மறக்க முயற்சித்தாலும் இதை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்து அவர்களின் தாழ்வுணர்ச்சியையும் பதட்டத்தையும் இழக்காமல் வைத்திருக்க வேண்டியது நீங்கள் முற்போக்காளராக தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான அடிப்படை என்பதை மறக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் நீங்கள் முற்போக்காளர் தகுதியை நீட்டித்துக் கொண்டே இருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்சினையை உணர்ச்சிகரமாக எழுதி உங்கள் முற்போக்காளர் இமேஜை நீங்கள் பஸ் பாஸ் போல் renewal செய்து கொண்டே இருக்க முடியும்.
இன்னொரு அடிப்படையையும் மறக்கக்கூடாது. 'ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அனைவருமே கொடூரமானவர்கள், வன்முறையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை தொடுத்து கொண்டிருப்பவர்கள். அவர்களில் சிலர் தங்களின் ஜாதிய கற்பிதங்களை உணர்ந்து அதைக் கடந்து வெளியே வரமுயற்சித்தாலும் அவர்களின் சட்டைக்குள் கயிற்றைத் தேடிப்பார்த்து அடையாளத்தை உணர்ந்து அவர்களை மறுபடியும் ஜாதியக் கூண்டுக்குள் திருப்பித்தள்ளி விடுவது முற்போக்காளனின் கடமை.
எல்லா கருமாந்திர ஜாதிகளிலும் நல்லவர்களும் அயோக்கியர்களும் வன்முறையாளர்களும் மனிதாபிமானம் கொண்டவர்களும் கலந்தேதான் இருப்பார்கள் என்பது கடைந்தெடுக்கப்பட்ட பொய் என்பதை முற்போக்காளர்கள் உணர வேண்டும். ஒரு வன்முறை நிகழ்வை "எவ்வாறு புரிந்து கொள்வது" என்பதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகிறது. எங்காவது ஒரு வன்முறைச்சம்பவம் நிகழ்ந்தால் அது ஆதிக்கச் சாதியினராலேயாதான் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று முன்கூட்டிய தீர்மானத்துடன் நம்புவதுதான் சிறந்த புரிதல்.
(5)
சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை. உலக சினிமா என்பது இந்திய துணைக்கண்டத்தின் வெளியில் உருவாக்கப்படுவது என்பதை மறந்து விடக்கூடாது. புகழ்பெற்ற, பொதுவாக பரவலாக அறியப்பட்ட உலகத் திரைப்படங்களை பற்றி எழுதுவது உங்களின் தனித்தன்மைக்கு வேட்டு வைக்கும் செயல். பழங்குடிகளின் தொன்மையான மொழியில் வெளிவந்து திரைப்பட விழாக்களில் மொத்தமே பத்து நபர்கள் மாத்திரமே பார்த்திருக்கும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே உன்னதம். இந்தத் திரைப்படங்களின் போக்கு மக்களின் புரட்சி, எழுச்சி ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இம்மாதிரியான விமர்சனங்களின் போது சம்பந்தப்பட்ட படத்தை மாத்திரம் ஒற்றைப் பரிமாண பார்வையோடு எழுதுவது அறிவீனம். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பல்வேறு திரைப்பட இயக்குநர்களின் பெயர்களையும் படத்தலைப்புகளையும் (வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்திருத்தால் போதும்) ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டே செல்வது கூடுதல் தகுதி. படிக்கும் வாசகன் உங்களை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வாயைப் பிளந்து பிரமிக்க இது உதவும்.
உலக சினிமாக்களை காண ஆங்கில மொழியின் போதாமை குறித்து கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, இதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டாம். உள்ளுர்ப் படங்களுக்கு வருவோம். நமது உள்ளுர் சினிமா நாயகர்கள் அரிவாள்களை தலைக்கு உயரே தூக்கும் வணிகப்படங்களை வெளிவந்த முதல் நாளே முண்டியத்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்தாலும் அந்தப் பிரியத்தை உள்ளுக்குள் ஒளித்து அவர்களையும் அந்தப்படங்களையும் கன்னாபின்னாவென்று திட்டி எழுதுதலின் மூலம் முற்போக்குச் சாயத்தை அழுத்தமாக பூசிக் கொள்ளலாம். விமர்சனப் பதிவின் தலைப்பை மிக அழுத்தமாக வைப்பது அதிக வாசகர்களைப் பெறுவதற்கு மிகுதியாக உதவும். "பார்ப்பனிய மலத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட தூமைத் துணி' 'சீழ்பிடித்த ஆண்குறியில் வழித்தெழிக்கப்பட்ட நாற்றமடிக்கும் விந்துக்குருதி' என்று கலகத்தன்மையுடனோ அல்லது 'பெருங்கதையாடலின் குறுநகை' என்று இலக்கிய வாசனையுடனோ இருத்தல் முக்கியம். பதிவின் உள்ளடக்கத்தில் பட இயக்குநரையோ பிரதான நடிகரையோ "தேவடியாப் பையன்" என்றோ அவர்களின் "ஆண்குறிகளை வெட்டுதல்" குறித்தோ கொண்ட வரிகளை மறக்காமல் சேர்ப்பது வாசகர்கள் கிளர்ச்சியடைந்து "இவ்வாறெல்லாம் கூட பொதுப்பரப்பில் கலக்ததன்மையோடு செயல்பட முடியுமா" என்று உங்களை பிரமிப்புடன் காண உதவும்.
தமிழ்ப்படங்கள்தான் குப்பை என்று தெரிகிறதே, அப்புறம் ஏன் அதை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து இப்படி இணையப் பரப்பை நீங்கள் எடுக்கும் வாந்தியாலும் அபான வாயுவாலும் நிரப்புகிறீர்கள் என்று யாரும் உங்களை கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள்தான் கோமியம் தெளிக்கப்பட்டு புனிதமாக்கப்பட்ட உங்களின் கலகவார்த்தைகளில் பிரமிப்படைந்து வாயடைத்து நிற்கிறார்களே.
(6)
திரையரங்கில் படம் வெளிவந்த முதல்காட்சி அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்து முன்னால் நிற்கிற இருபது பேரின் கவனத்தை திசைமாற்றி தாண்டிப் போய் சீட்டை வாங்கியதுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரே புரட்சியாக இருந்திருக்கும். பரவாயில்லை. ஆனால் உங்களின் பதிவுகளில் இம்மாதிரியான சில்லறைத்தனமான செயல்களின் தடங்கள் பதியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மார்க்ஸ், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற ஆவேசமான புரட்சி சம்பந்தப்பட்ட பெயர்களும் மேற்கோள்களும் உங்கள் பதிவின் இடையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலையில் தவறாமல் வாக்கிங் சென்று காய்கறி வாங்கித் திரும்பும் மிடில்கிளாஸ் கேணையனாக உங்களை சித்தரித்துக் கொள்வது உங்களின் முற்போக்கு பிம்பத்தை கட்டமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். டாஸ்மாக்கில் ஓசியில் குடித்து வாந்தியெடுத்ததைப் பற்றியோ போதையில் எதிரே இருப்பவனுடன் நடந்த கைகலப்பு பற்றியோ புளகாங்கிதத்துடன் அதை விவரித்து எழுதுதல் நலன் பயக்கும். திரையில் தங்கள் நாயகர்களை ஆராதிக்கும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகள் அதே முறையில் உங்களின் இந்த புரட்சிச் செயல்களில் கிளர்ச்சியடைந்து உங்களை ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு உங்களின் அல்லக்கைகளாக மாற வாய்ப்புண்டு.
(7)
சர்வதேச அறிவுஜீவிகளின் கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கண்டெடுத்து சமீபத்தில் அதை வாசித்ததாக போகிற போக்கில் அலட்சியமாக தெரிவிப்பது உடனடி பலனை ஏற்படுத்தக் கூடியது. குருட்டாம் போக்கில் கட்டுரையின் சில வரிகளை அடிக்கோடிட்டு காண்பித்து இந்த வரிகளுடன் தாம் மிகவும் உடன்படுவதாகவோ அல்லது கட்டுரையாளரின் மேதாவித்தனத்தை மறுதலிப்பதாகவோ தெரிவிப்பது 'நம்மாளு இண்டர்நேஷனல் லெவல்ல பைட் பண்றாரே' என்று வாசகனின் மனத்தில் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடும்.
வேற்று மொழி அறிவுஜீவிகளின் கட்டுரைகளை நேர்காணல்களை சற்று சிரமம் மேற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் உதவக்கூடியதுதான். பதிவின் கீழே சிறியதாக தமிழில் ...... என்று உங்கள் பெயரை விரும்பினால் நிரப்பிக் கொள்ளலாம். சாளேஸ்வர வாசகர்கள் இதைக் கவனிக்காமல் முழுக் கட்டுரையும் உங்களாலேயே எழுதப்பட்டது என்று தவறாக (உங்களைப் பொறுத்தவரை சரியாக) புரிந்து கொள்வதற்கு அது உதவக்கூடும். மொழிபெயர்க்கும் கட்டுரையின் தொனி அசல்கட்டுரையின் படியேதான் வரவேண்டுமென்கிற கட்டாயமெல்லாம் ஒன்றில்லை. இடையே உங்களின் கைச்சரக்கையும் கலந்து அடிக்கலாம். இம்மாதிரி பதிவையெல்லாம் யாரும் பிரக்ஞையுடன் வாசிப்பதில்லை என்பதால் யாரும் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அரவாணிகள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி நிஜ வாழ்க்கையில் நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கலாம். அவர்களுக்காக உங்கள் பிருஷ்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் எழுத்து, பொதுவாழ்க்கை என்று வரும் போது அவர்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது, பேசுவது, கவலைப்படுவது போன்ற செயல்கள் உங்களின் முற்போக்கு இமேஜ் வளர்வதற்கு பெரிதும் உதவக்கூடியது.
(8)
பிடித்த எழுத்தாளர்களாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை யாரும் சீந்த மாட்டார்கள். சிறுபத்திரிகைகளில் மாத்திரமே ரகசியமாக உலவும் எழுத்தாளர்களை (குறைந்தபட்சம் பெயர்களையாவது) அறிந்து கொள்வது நல்லது. அவர்களின் படைப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்து அதில் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய சங்கதி இருந்தால் (இல்லையென்றால் நாமே செயற்கையாகவும் அதைக் கட்டமைக்கலாம்) கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்து 'இது சிறுபான்மையினரை அவமதிக்கும் நோக்கில் எழுதப்பட்டது' என்ற ஆவேசமான தொனியில் பரபரப்பான கட்டுரை ஒன்றை எழுதலாம். (காதலான திரைப்படத்தில் பெரியாரின் சிலைக்கோணத்தை அரசியலாக்கிய கட்டுரையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது). பொதுப்புத்திக்கு தெரியாத / உறைக்காத கோணத்தை இந்த முற்போக்காளர் விழிப்புடன் கூர்மையாக அவதானித்து கண்டுபிடித்து விட்டாரே என்று உங்களுக்கு பாராட்டு மழை பொழியும். சாணக்குகியா, அசிங்கபெரியவன் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே வெற்றிமோகன், பாரு போன்ற முன்னணி சிற்றிதழ் படைப்பாளிகளை அவ்வப்போது சீண்டிக் கொண்டோ அல்லது அவர்கள் தங்களுக்குள் சீண்டிக் கொள்வதை கண்டித்து காறித்துப்பியோ தொடர்ந்து பதிவெழுதுதலும் நன்று.
()
மேற்கண்ட வழிகளை கவனமாகப் பின்பற்றுவதின் மூலம் 'நீங்களும் ஒரு முற்போக்காளர்' என்ற தகுதியையும் ஆளுமையையும் இணையப் பரப்பில் நீங்கள் உடனடியாகவும் சிறப்பாகவும் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். "நீங்களும் இதைப் பின்பற்றுகிறீர்களா?" என்று என்னை நோக்கி அபத்தமாக யாரும் கேள்வியெழுப்பக் கூடாது. இது ஒரு சுயவாக்குமூலமோ என்று சந்தேகப்படுபவர்கள் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வார்கள்.
முப்பது வழிகள் என்று குறிப்பிட்டு விட்டு எட்டு வழிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே என்று முணுமுணுப்பவர்கள் முற்போக்கு முகாமிற்குள் நுழைய அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள். சொல்லப்பட்டதின் ஒழுங்கை பின்பற்றாததே கலகத்தின் குறியீடு என்று இதற்குள் யூகித்திருந்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புண்டு. (நியுமராலஜிப் படி எட்டாம் எண்தான் எனக்கு ராசியானது என்பதால்தான் எட்டு விதிகளுடன் இந்தப் பதிவு முடிக்கப்பட்டிருக்கிறது என்று காற்றுவாக்கில் வரும் உறுதியில்லாத தகவல்களை நம்பாதீர்கள்).
வாழ்க முற்போக்கு! வளர்க கலகவாதிகள்! ஒழிக பொதுப்புத்தி!
(முக்கியமான பின்குறிப்பு: விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் நிஜமான அக்கறையுடன் சாய்வில்லாத மனப்பாங்குடன் இயங்கும் படைப்பாளிகள், களப்பணியாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவ்வாறான பாவனையில் போலித்தனமாக இயங்கி மற்றவர்களின் கவனத்தில் தம்மை எப்போதும் வைத்துக் கொள்ள நினைக்கும் அற்பர்களை கிண்டலடிக்க முயல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.)
பதிவு நீண்டுவிட்டதால் பின்னதொரு சாவகாசமான நேரத்தில் இன்னும் சில வழிமுறைகளும் விதிமுறைகளுமாக இந்தப் பதிவு update செய்யப்படலாம்.
தொடர்புடைய பதிவு
புகழ் பெற்ற சாமியாராக சில குறுக்கு வழிகள்suresh kannan