Thursday, May 15, 2014

The Monuments Men (2014) - போரில் அலையும் கலை



"ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதின் மூலம் ஒரு தலைமுறை மக்களையே அழித்தொழிக்க முடியும். அவர்களின் இல்லங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கி துடைத்தெடுக்க முடியும். என்றாலும் அவர்கள் திரும்ப வருவார்கள். ஆனால் அவர்களின் சாதனைகளை, வரலாற்றை அழிப்பது, அவர்களின் இருப்பையே இல்லாமல் ஆக்குவதாகும். சாம்பல் போல் ஒன்றுமில்லாமல் கரையச் செய்வது. அதைத்தான் ஹிட்லர் விரும்புகிறார். நாம் அதை சுலபமாக அனுமதிக்க முடியாது"

திரைப்படம் துவங்கி சுமார் அரை மணி நேரத்திற்குள் ஃப்ராங்க் ஸ்டோக்ஸ் தன் சகாக்களிடம் பேசும் இந்த வசனம்தான் இத்திரைப்படத்தின் சாரம்.

()
 
இரண்டாம் உலகப் போர் நிகழும் காலக்கட்டம்.  ஜெர்மானியர்கள் தாங்கள் வெற்றி கொள்ளும் பிரதேசங்களில் எல்லாம் அங்குள்ள முக்கியமான ஓவியங்கள், நூல்கள், சிலைகளை எல்லாம் கொள்ளையடிக்கின்றனர். அவற்றையெல்லாம் கொண்டு  மிகப் பெரிய அருங்காட்சியகத்தை உருவாக்க வேண்டும் என்பது ஹிட்லரின் நோக்கமாகவும் கனவாகவும் இருக்கிறது. 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று நாஜிப்படைகளுக்கு உத்தரவிடுகிறார். போரில் தோற்றும் பின்வாங்கும் பிரதேசங்களில் எல்லாம் நாஜிகள் அவசரம் அவசரமாக கலை அடையாளங்களை கொள்ளையடிக்கிறார்கள், ஒளித்து வைக்கிறார்கள், அழிக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள வரலாற்றுப் பேராசிரியரான ஃப்ராங்க் ஸ்டோக்ஸ் இது குறித்து கவலை கொள்கிறார். உக்கிரமான போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் கலையைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்? என்றாலும்  இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபரிடம் வாதாடி அனுமதி வாங்குகிறார். கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட கலவையான ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவின் பெயரே The Monuments Men. ஜெர்மானியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ் நகரத்தில் போரில் தோற்று பின்வாங்கி ஓடும் நாஜிகள் பிக்காஸோ, டாவின்சி, உள்ளிட்ட பல முக்கியமான ஆளுமைகளின் தனியார் ஓவியங்களையும்  தேவாலயங்களில் உள்ள சிலைகளையும் கொள்ளையடித்து கடத்திச் செல்கின்றனர். ஸ்டோக்ஸின் குழு மிகுந்த சிரமங்களுக்கும் சில உயிரிழப்புகளுக்கும் இடையில் அதைத் தடுத்து நிறுத்தி அவற்றை மீட்டெடுத்து அந்தந்த உரிமையாளர்களிடம் சென்று சேர்ப்பதே இப்படத்தின் நிகழ்வுகள்.

()

ஸ்டைலான நடிகரான ஜார்ஜ் க்ளூனி இயக்கியிருக்கும் ஐந்தாவது திரைப்படம் இது. வயதான தோற்றத்தில் ஸ்டோக்ஸாக நடித்திருக்கிறார். 'அமெரிக்காதான் உலகத்தின் நிரந்தர பாதுகாவலன், அனாதை ரட்சகன், என்கிற ஹாலிவுட்தனமான செய்தி மீண்டும் இத்திரைப்படத்தின் மூலம் பதிவாக்கப்படுகிறது. இந்தச் சிக்கலைத் தாண்டி வந்து விட்டால் அருமையான திரைப்படம் இது.

இத்திரைப்படத்தின் உருவாக்கத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பது இதன் ஆர்ட் டிபார்ட்மெண்ட்டாகத்தான் இருந்திருக்கும். உலகப் போரின் நிகழ்வு காட்சிப் பின்னணிகளை சிறப்பாக உருவாக்கியிருப்பது அருமைதான் என்றாலும் பழமையான ஓவியங்களையும் சிலைகளையும் தத்ரூபமாக உருவாக்கியிருப்பதுதான் சிறப்பான விஷயம். இதற்கான அகாதமி விருதை இத்திரைப்படம் வென்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமிருக்காது.
 
ஓவியங்களைத் தேடி பயணிக்கும் ஒரு சமயத்தில் நாஜிகள் டன் டன்னாக ஒளித்து வைத்திருக்கும் தங்கப் பாளங்கள் கிடைக்கின்றன. பத்திரிகைகள் அவற்றையே பிரதானமாக வெளியிடுகின்றன. கலைச் செல்வங்கள் அழிவதைப் பற்றி ஒருவருக்கும் கவலையிருப்பதில்லை. மின்னலாக மறையும் ஒரு காட்சியில் ஒரு பெரிய  தொட்டி நிறைய சிறு சிறு தங்கக் கட்டிகள் இருப்பது காட்டப்படுகிறது. பிறகுதான் தெரியவருகிறது, அவை கொல்லப்பட்ட யூதர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட தங்கப் பற்கள். இந்த ஒரு சிறுகாட்சியே யூதர்கள் கூட்டம் கூட்டமாக அழிக்கப்பட்ட அந்த மிகப் பெரிய அவலத்தை வலிமையாக நிறுவுகிறது.
 
'ஒரு துண்டு கலையைக் காப்பாற்ற மனித உயிர்களையே இழந்திருக்கத்தான் வேண்டுமா? சில வருடங்கள் கழித்து யார் இதை நினைவில் வைத்திருப்பார்கள்" என்று ஒரு கேள்வி படத்தின் இறுதியில் வருகிறது. உண்மைதான். தங்களுடைய கலாசாரத்தின் சிறப்பான அடையாளங்களை பாதுகாக்கவும் அழியாமல் மீட்டெடுக்கவும் உழைத்த பல நபர்களை அதன் வரலாறுகளை நாம் இன்று அறிந்திருப்பதில்லை, மறந்தும் போய் விடுகிறோம்.

தமிழ் சமூகத்தில் இப்படியான ஒரு பிரதிநிதியாக ஒரு நபர் பிரதானமாக நினைவுக்கு வருகிறார். அவர் பெயர் உ.வே.சாமிநாத அய்யர்.

IMDB


suresh kannan

Wednesday, May 14, 2014

Free Men - Les hommes libres - இஸ்லாமிய யூதர்கள்



அனுதினமும் பார்க்கின்ற திரைப்படங்களைப் பற்றி சிறுகுறிப்பாவது எழுதிவிட வேண்டும் என எண்ணுவேன். பல சமயங்களில் அது இயலாமல் போகும். இனி அதை உறுதியாக கடைப்பிடிப்பதாக உத்தேசம்.

சமீபத்தில் பார்த்த நல்ல திரைப்படம் - Free Men (French: Les hommes libres).

இன்று அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாய் இருந்து கொண்டு இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்கள் உலகமெங்கிலும் நாஜிப்படைகளால் அனுபவித்த கொடுமைகளை திரைப்படங்களின் மூலம் காணும்  போதெல்லாம்  மனம் பதறுகிறது. எத்தனை பெரிய வரலாற்று சோகம் அது? எப்போது வேண்டுமானாலும் சாகடிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கக்கூடிய யூதர்கள் கரப்பான்பூச்சிகளைப் போல ஓடி ஒளிந்து தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தை சித்தரிக்கும் திரைப்படங்களுள் இதுவொன்று.

1940-ம் வருடம். ஜெர்மானியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ் நகரம். பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே புலம்பெயர்ந்து கருப்புச் சந்தையில் பொருட்களை விற்கும் யூனுஸ் என்கிற அல்ஜீரிய இசுலாமிய இளைஞன் நாஜிகளால் கைதாகி உள்ளுர் மசூதி ஒன்றை கண்காணித்து உளவு சொல்ல வேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுகிறான். மதம், புரட்சி, போராட்டம், தடை என்கிற எவ்வித கவலைகளுமில்லாத அந்த இளைஞன் மெல்ல மெல்ல அந்த பயங்கரமான உலகிற்குள் சென்ற பின்பு தன்னிச்சையாகவே அதன் நியாயத்தை உணர்ந்து புரட்சியின் ஒரு பகுதியாக ஆகி விடுகிறான்.

யூதர்களைக் குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் இத்திரைப்படத்தின் மையம் மிக முக்கியமாக வேறுபாடுவது, யூதர்களை அவர்களின் அடையாளத்தை மறைத்து மசூதிக்குள் புகலிடம் கொடுத்து காப்பாற்றும் இசுலாமியர்களைப் பற்றியது. வட ஆப்ரிக்க யூதர்களை, இசுலாமியர்கள் என்கிற போலியான சான்றிதழ்களை தருவதன் மூலம் அந்த மசூதியின் இமாம் அவர்களைக் காப்பாற்றுகிறார்.

சலீம் என்கிற அல்ஜீரிய இளைஞன் (உண்மையான கதாபாத்திரம் இது) அற்புதமான இசைத்திறமையைக் கொண்டிருந்தாலும் யூதனாக இருப்பதினாலேயே தன்னுடைய கலையையும் பாரிஸில் புகழ்பெற்ற பாடகனாக ஆக வேண்டும் என்கிற கனவையும் வெளிப்படுத்த இயலாமல் மறைந்திருக்கும் துரதிர்ஷ்டமும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

யூனுஸாக நடித்திருக்கும் இளைஞர் Tahar Rahim மிக இயல்பான முகபாவங்களால் அசத்தியிருக்கிறார். அது போலவே சலீமாக நடித்திருக்கும் இளைஞரும். காட்சிகள் மிகையின்றி யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தன்னைச் சுற்றி உருவாகிக் கொண்டிருக்கும் வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமலிருக்கும் ஓர் இளைஞன் அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகவே உருமாறும் அற்புதத்தை திரைப்படம் அபாரமாக பதிவாக்கியிருக்கிறது.


suresh kannan

Monday, May 05, 2014

திரைப்பட டைட்டில்கள்



பெரும்பாலும் திரைப்படங்களின் டைட்டில்களே அத்திரைப்படத்தின் உள்ளடக்கத்தை சொல்லி விடும். அப்படித்தான் அவை அமைக்கப்பட வேண்டும். காமெடியா, திரில்லரா, சஸ்பென்ஸா, ரொமாண்டிக்கா.. என்று பார்வையாளர்களை தயார்ப்படுத்துவதற்கு டைட்டில் காட்சிகள் அமைக்கப்படும் தன்மைக்கு பிரதான பங்குண்டு. டைட்டில் கார்டுகளின் போதே அதன் பின்னணியில் காட்சிகளை துவக்கிச் செல்லும் அவசரக் குடுக்கைகளான இயக்குநர்கள் உண்டு. இது எனக்குப் பொதுவாக பிடிக்காது. காட்சியை கவனிப்பதா, நுட்ப கலைஞர்களின் பெயர்களை கவனிப்பதா என்று குழப்பமாக இருக்கும். சுமார் இரண்டரை மணி நேர திரைப்படத்தை உருவாக்க பெருமளவு உழைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் இரண்டரை விநாடிகளுக்கு மேல் கூட  இருக்காது எனும் போது அதையும் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் உழைப்பிற்கு செய்யும் அநியாயம். மிருதுவான இசையில் அல்லது இசையே அல்லாமல் கறுப்பு நிற பின்னணியில் வெளிப்படும் டைட்டில் கார்டுகளே எனக்கு பொதுவாக பிடித்தமானது. இப்போதெல்லாம் டைட்டில்களில் வரும் சிறப்பான அனிமேஷன் காட்சிகளுக்காகவே ஒரு குழு உழைக்கிறது.

பழைய கால திரைப்படங்களில் டைட்டிலில் இளையராஜா பாடினால் அந்த திரைப்படம் ஹிட் என்று எப்படியோ ஒரு ராசி உருவாகி அதனாலேயே திரைப்படம் துவங்கும் போதே ராஜாவின் குரலை கேட்கும் அதிர்ஷ்டத்திற்கு உள்ளாகி விடும் நிலையில் இருந்தோம். ஒரு திரைப்படம் காண்பதென்பதே மிகவும் அபூர்வமாக இருந்த அந்த நாட்களில் திரைப்படத்திற்கு செல்வதும் அதற்கான திட்டங்களுமே மிக மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளித்த நாட்கள் அவை. இதோ ஒரு சிறந்த வெகுஜன திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியை, பரவசத்தை  ராஜாவின் குரல் - குறிப்பாக கிராமம் சாாந்த திரைப்படங்களில் - இன்னமும் அதிகமாக உணர வைக்கும் என்பதை என்னுடன் இணைந்து எத்தனை பேர் என்னுடன் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. எம்.எஸ்.வி கால பழைய திரைப்படங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான டெம்ப்ளேட்களில் வயலின்களும் டபுள் பேங்கோஸ்களும் அதிர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரின் பெயர் வரும் போது ஏதோ அவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பது போல இசை உயர்ந்து கொண்டே போய் உச்சத்தில் அதிர்ந்து நிறையும். காமெடி படங்கள் என்றால் முகத்தில் மாத்திரம் நடிகர்களின் படங்களைக் கொண்ட கேலிச் சித்திரங்கள் அதிவிரைவில் இடதும் வலதுமாக நகரும். பிறகு வந்த ஆக்ஷன் பழிவாங்கல் திரைப்படங்களில் கூலிங்கிளாஸ் அணிந்த துப்பாக்கி கொண்ட மனிதர்கள் நெகட்டிவ் எபக்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் போதே 'சூப்பரப்பு' என்று பரவசமாக இருக்கும்.

இதற்கு மாறாக விருது வாங்குவதெற்கென்றே எடுக்கப்படும் திரைப்படங்களின் டைட்டில்கள் அதற்கான சாவகாசத்துடனும் அழகியல் உணர்வுகளுடனும் துவங்கும் போதே 'இதோ ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம்' என்று தோன்றுகிற நிறைவான உணர்வு படம் முடியும் போது மிச்சமிருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

அப்படித்தான், சமீபத்தில் குறியீட்டுக் காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குநரின் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். கறுப்பு நிற பின்னணியில் மெலிதான ஸெலோவின் இசையுடன் பெயர்கள் தோன்றி சில நீண்ட விநாடிகள் கழித்து கொட்டாவியான இடைவெளியுடன் அடுத்தடுத்த பெயர்கள் வந்து கொண்டிருந்தன. இரண்டிற்கும் இடையில் திரை இருளாகவே இருக்கும். அத்திரைப்படம் கண்பார்வையற்ற நபர்கள் பிரதானமாக நடித்திருந்த திரைக்கதையுடன் கூடியது என்பதை முன்பே அறிந்திருந்ததால் அந்த பாணி டைட்டில் அதற்கு பொருத்தமாகவே இருந்தை உணர்ந்தேன். இயக்குநரின் பெயர் வந்தபிறகும் சில விநாடிகளுக்கு திரை இருளாகவே இருந்தது.

விநாடிகள் நிமிடங்களுக்கு நகர்ந்தன. அப்போதும் திரை இருளாகவே இருந்தது. 'இதோ ஒரு பார்வையற்ற நபர் தூக்கத்திலிருந்து எழுந்து அறையிலிருந்த விளக்கைப் போடப் போகிறார்' என்கிற மாதிரியான காட்சி வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் நானும் காத்திருந்தேன்.

சில நிமிடங்களுக்கு பின்னரும் திரை இருளாகவே இருந்தது. பொதுவாக இம்மாதிரி ஆமை வேகத்தில் நகரும் சாவகாச திரைப்படங்களை நிதானமாக பார்க்கும் அனுபவம் எனக்கு ஏராளம் என்பதால் அப்படியொன்றும் பரபரப்பில்லாமல் காத்திருந்தேன். பார்வையற்ற நபர்களின் உலகத்தின் இருண்மையை, தனிமையை இயக்குநர் நமக்கு உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது என்று தோன்றிக் கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கழிந்தும் கூட திரை இருளாகவே இருந்தது. 'இது என்னடா .. ஓவர் குறியீடாக இருக்கிறதே' என்று எழுந்து சென்று பார்த்தேன்.

மின்சாரம் நின்று போய் சில நிமிடங்கள் ஆகியிருந்தது. 

suresh kannan