பெரும்பாலும் திரைப்படங்களின் டைட்டில்களே அத்திரைப்படத்தின் உள்ளடக்கத்தை சொல்லி விடும். அப்படித்தான் அவை அமைக்கப்பட வேண்டும். காமெடியா, திரில்லரா, சஸ்பென்ஸா, ரொமாண்டிக்கா.. என்று பார்வையாளர்களை தயார்ப்படுத்துவதற்கு டைட்டில் காட்சிகள் அமைக்கப்படும் தன்மைக்கு பிரதான பங்குண்டு. டைட்டில் கார்டுகளின் போதே அதன் பின்னணியில் காட்சிகளை துவக்கிச் செல்லும் அவசரக் குடுக்கைகளான இயக்குநர்கள் உண்டு. இது எனக்குப் பொதுவாக பிடிக்காது. காட்சியை கவனிப்பதா, நுட்ப கலைஞர்களின் பெயர்களை கவனிப்பதா என்று குழப்பமாக இருக்கும். சுமார் இரண்டரை மணி நேர திரைப்படத்தை உருவாக்க பெருமளவு உழைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் இரண்டரை விநாடிகளுக்கு மேல் கூட இருக்காது எனும் போது அதையும் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் உழைப்பிற்கு செய்யும் அநியாயம். மிருதுவான இசையில் அல்லது இசையே அல்லாமல் கறுப்பு நிற பின்னணியில் வெளிப்படும் டைட்டில் கார்டுகளே எனக்கு பொதுவாக பிடித்தமானது. இப்போதெல்லாம் டைட்டில்களில் வரும் சிறப்பான அனிமேஷன் காட்சிகளுக்காகவே ஒரு குழு உழைக்கிறது.
பழைய கால திரைப்படங்களில் டைட்டிலில் இளையராஜா பாடினால் அந்த திரைப்படம் ஹிட் என்று எப்படியோ ஒரு ராசி உருவாகி அதனாலேயே திரைப்படம் துவங்கும் போதே ராஜாவின் குரலை கேட்கும் அதிர்ஷ்டத்திற்கு உள்ளாகி விடும் நிலையில் இருந்தோம். ஒரு திரைப்படம் காண்பதென்பதே மிகவும் அபூர்வமாக இருந்த அந்த நாட்களில் திரைப்படத்திற்கு செல்வதும் அதற்கான திட்டங்களுமே மிக மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளித்த நாட்கள் அவை. இதோ ஒரு சிறந்த வெகுஜன திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியை, பரவசத்தை ராஜாவின் குரல் - குறிப்பாக கிராமம் சாாந்த திரைப்படங்களில் - இன்னமும் அதிகமாக உணர வைக்கும் என்பதை என்னுடன் இணைந்து எத்தனை பேர் என்னுடன் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. எம்.எஸ்.வி கால பழைய திரைப்படங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான டெம்ப்ளேட்களில் வயலின்களும் டபுள் பேங்கோஸ்களும் அதிர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரின் பெயர் வரும் போது ஏதோ அவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பது போல இசை உயர்ந்து கொண்டே போய் உச்சத்தில் அதிர்ந்து நிறையும். காமெடி படங்கள் என்றால் முகத்தில் மாத்திரம் நடிகர்களின் படங்களைக் கொண்ட கேலிச் சித்திரங்கள் அதிவிரைவில் இடதும் வலதுமாக நகரும். பிறகு வந்த ஆக்ஷன் பழிவாங்கல் திரைப்படங்களில் கூலிங்கிளாஸ் அணிந்த துப்பாக்கி கொண்ட மனிதர்கள் நெகட்டிவ் எபக்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் போதே 'சூப்பரப்பு' என்று பரவசமாக இருக்கும்.
இதற்கு மாறாக விருது வாங்குவதெற்கென்றே எடுக்கப்படும் திரைப்படங்களின் டைட்டில்கள் அதற்கான சாவகாசத்துடனும் அழகியல் உணர்வுகளுடனும் துவங்கும் போதே 'இதோ ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம்' என்று தோன்றுகிற நிறைவான உணர்வு படம் முடியும் போது மிச்சமிருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.
அப்படித்தான், சமீபத்தில் குறியீட்டுக் காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குநரின் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். கறுப்பு நிற பின்னணியில் மெலிதான ஸெலோவின் இசையுடன் பெயர்கள் தோன்றி சில நீண்ட விநாடிகள் கழித்து கொட்டாவியான இடைவெளியுடன் அடுத்தடுத்த பெயர்கள் வந்து கொண்டிருந்தன. இரண்டிற்கும் இடையில் திரை இருளாகவே இருக்கும். அத்திரைப்படம் கண்பார்வையற்ற நபர்கள் பிரதானமாக நடித்திருந்த திரைக்கதையுடன் கூடியது என்பதை முன்பே அறிந்திருந்ததால் அந்த பாணி டைட்டில் அதற்கு பொருத்தமாகவே இருந்தை உணர்ந்தேன். இயக்குநரின் பெயர் வந்தபிறகும் சில விநாடிகளுக்கு திரை இருளாகவே இருந்தது.
விநாடிகள் நிமிடங்களுக்கு நகர்ந்தன. அப்போதும் திரை இருளாகவே இருந்தது. 'இதோ ஒரு பார்வையற்ற நபர் தூக்கத்திலிருந்து எழுந்து அறையிலிருந்த விளக்கைப் போடப் போகிறார்' என்கிற மாதிரியான காட்சி வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் நானும் காத்திருந்தேன்.
சில நிமிடங்களுக்கு பின்னரும் திரை இருளாகவே இருந்தது. பொதுவாக இம்மாதிரி ஆமை வேகத்தில் நகரும் சாவகாச திரைப்படங்களை நிதானமாக பார்க்கும் அனுபவம் எனக்கு ஏராளம் என்பதால் அப்படியொன்றும் பரபரப்பில்லாமல் காத்திருந்தேன். பார்வையற்ற நபர்களின் உலகத்தின் இருண்மையை, தனிமையை இயக்குநர் நமக்கு உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது என்று தோன்றிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் கழிந்தும் கூட திரை இருளாகவே இருந்தது. 'இது என்னடா .. ஓவர் குறியீடாக இருக்கிறதே' என்று எழுந்து சென்று பார்த்தேன்.
மின்சாரம் நின்று போய் சில நிமிடங்கள் ஆகியிருந்தது.
suresh kannan
2 comments:
எம்.எஸ்.வி கால பழைய திரைப்படங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான டெம்ப்ளேட்களில் வயலின்களும் டபுள் பேங்கோஸ்களும் அதிர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரின் பெயர் வரும் போது ஏதோ அவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பது போல இசை உயர்ந்து கொண்டே போய் உச்சத்தில் அதிர்ந்து நிறையும்.
நண்பரே,
இளையராஜாவும் இதே மாதிரி டைட்டில் இசை கொடுத்தவர்தான். எம் எஸ் வி இந்த டெம்ப்ளேட்டை தாண்டி அமைத்த சிறப்பான இசையை நீங்கள் கேட்டதில்லையா? விந்தைதான். நீங்கள் இளையராஜாவை தலை மேல் தூக்கி சுற்றுவதுதான் டெம்ப்ளேட்டாக இருக்கிறது.
superu...
Post a Comment