Monday, May 30, 2005

எழுத்தாளர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு?

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய 'மானுடப்பிரவாகம்' என்ற சிறுகதை ஒன்பதாம் வகுப்பு தமிழ் துணைப்பாடத்தில் இடம் பெற்றிருந்தது. மாமன் - மைத்துனன் இடையே வயல் வரப்பு தொடர்பாக ஏற்படும் தகராறு போலீஸ் வரை சென்று, பிறகு மாட்டை விற்று போலீஸிற்கு லஞ்சம் கொடுத்து விவகாரத்தை முடிக்கின்றனர். பின்னர் ஏற்படும் ஒரு குடும்ப விழாவில் இருவரும் தங்கள் தவறுகளை மறந்து ஒற்றுமையாகின்றனர். தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளை தாங்களே அமர்ந்து பேசி முடிப்பதையழித்து, மூன்றாம் மனிதர் (அதிலும் அதிகார அமைப்பு) தலையிடுவதன் மூலம் பொருள் இழப்பும் தீராப்பகையும் ஏற்படுவதால், இதைத்தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் கோடி நன்மை என்பது இக்கதையின் ஆதார நீதி.

ஆனால் இக்கதை காவல்துறையின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் இருப்பதால், இந்தக் கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் இந்தக் கதை நீக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: தினமலர் செய்தி - 17.05.2005)

()

பாடத்திட்டத்தில் எந்தமாதிரியான உள்ளடக்கத்தை தர வேண்டும் என்று ஒரு குழுவே அமர்ந்து தீர்மானிக்கிறது. அவ்வாறு தீர்மானித்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை முறையற்ற காரணங்களுக்காக நீக்குவது என்பது சரிதானா? என்கிறதொரு கேள்வி என்னுள் எழுகிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி இடது சாரி சிந்தனையுடையவர் என்பதும் அவரது கதைகளில் பிரச்சாரத் தொனி சற்று மேலோட்டமாகவே இருக்கும் என்பதும் நாம் அறிந்தே இருக்கிறோம். அடிப்படையில் அவரே ஒரு விவசாயியாக இருப்பதால், உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு இந்தக் குறைகளை நாம் ஒதுக்கித்தள்ளவே வேண்டும். இவ்வாறானாவர், ஏதோ நடைமுறையில் இல்லாத ஒன்றையோ அல்லது முறையற்ற செயலை மறைமுகமாக ஆதரிக்கும் படைப்பையோ எழுதிவிடவில்லை. சமகாலப் பிரச்சினையையும் அதற்கு முறையான தீர்வு ஒன்றினையுமே அவர் தனது படைப்பில் கொடுத்துள்ளார்.

இந்தக் கதையை நீக்குவதன் மூலம் அவர்களின் நோக்கம் என்ன? இளம் தலைமுறையினரிடம் காவல் துறையின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ முயல்கின்றார்களா? அந்த நோக்கத்தில் இது செய்யப்பட்டிருக்குமாயின் அதை விட அபத்தம் ஒன்றுமிருக்க முடியாது. ஈராக்கில் குண்டு வெடித்து அதன் அதிர்வை அடுத்த அரைமணி நேரத்தில் நம் வரவேற்பறையில் உணர முடிகிற அளவிற்கு, ஊடகங்கள் தகவல் மழை பொழிந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், இளம் தலைமுறையினருக்கு நம் காவல்துறையினரின் லஞ்ச லாவண்யச் செயல்களும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் அப்பாவிகளை அவர்கள் கொடுமைப்படுத்துவதும், சமீபத்தின் செயல்பாடுகள் மூலம் ஒரு பெண்ணின் முந்தானைக்குள் ஒரு மாநிலத்தின் காவல்துறையே இளைப்பாறும் அசிங்கத்தையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

ஒரு சாராரின் கோரிக்கையை ஏற்று இப்படைப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என்றால், இதை தீர ஆராய்ந்து பாடத்திட்டத்தில் சேர்த்ததின் நோக்கம் பலனற்றதாகவே போய்விடுகிறதல்லவா? இதே நிலை நீடித்தால், காக்கா வடை திருடிய கதையை கூட, வனவிலங்குகளின் பால் அக்கறை கொண்ட மேனகா காந்தி போன்ற அமைப்பினர், ஒரு பறவையை தவறான முறையில் சித்தரிப்பதா என்று கேள்வி எழுப்பும் பட்சத்தில், அந்தக் கதையையும் நீக்கிவிடுவார்களா? அபத்தம்.

suresh kannan

Thursday, May 19, 2005

முள்ளும் மலரும் திரைப்படம் - என் பார்வை (பகுதி 2)

என் முந்தைய பதிவின் தொடர்ச்சி ...............

இசையமைப்பாளர் இளையராஜா:

1980, 90-களில் இயக்குநர்கள் கதையை முடிவு செய்துவிட்டு, அதை திரைக்கதையாக்கும் போது இளையராஜாவையும் மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல் சம்பவங்களை நகர்த்துவார்கள். ராஜாவும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிகச் சிறப்பாக அந்த வெற்றிடத்தை தன் தேவ இசையால் நிரப்புவார், சில சமயங்களில் மெளனங்களாலும். இந்தப் படத்தில் அவ்வப் போது Theme Music மாதிரி ஒலிக்கும் கழைக் கூத்தாடிகளின் மேளச் சத்தத்தை (இரண்டொரு முறைக்கு மேலேயோ அல்லது இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தவருக்கோ இந்த ஒலி காதில் ஒலிக்கிறதா?) மனதை உருக்குவதான காட்சிகளில் திறமையாக பயன்படுத்தியிருப்பார்.

இது தொடர்பாக பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட (பிரபல புகைப்படக்காரர் யோகா சந்தித்தது) மகேந்திரனின் நேர்காணல் சுவையானது. (எப்பவாவாது பொதிகைக்காரர்களுக்கே போரடித்தால் போடுவார்கள், பாருங்கள்)
மகேந்திரன் இந்தக் கதையை திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்றாற் போல் பல இடங்களில் வசனங்களை குறைத்து மெளனங்களை அதிகப்படுத்தியிருப்பார். உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:

ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவனை தழுவும் அவள், அப்போதுதான் அவன் கையை இழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பிப்பாள். இந்தக் காட்சியில் ஒரு வசனமும் கிடையாது. மற்ற இயக்குநர்கள் என்றால் குய்யோ முறையோ என்றோ வீராவேசமாகவோ பக்கம் பக்கமாக வசனங்களால் நிரப்பியிருப்பார்கள். ஆனால் ராஜா இந்த இடத்தை அபாராக தன்னுடைய இசையால் பார்வையாளர்கள் உருகும்படி இசைத்திருக்கிறார்.

சமீபத்தில்தான் ஒரு தோல்விப்படத்தை கொடுத்திருந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ரீ-ரிகார்டிங் முடிவதற்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, பல இடங்கள் வசனங்கள் இல்லாமல் மெளனமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். 'இன்னாங்க இப்படி எடுத்து வச்சிருக்கீங்க. நான் போண்டிதான் ஆயிடுவேன் போலிருக்கு". ஆனால் படம் வெளிவந்து மக்கள் அதை ஆரவாரமாக வரவேற்றது சரித்திரம்.

ஆக.. இந்தப்படத்தின் முதுகெலும்பாக இளையராஜாவின் இசையை குறிப்பிடலாம். கதையோடு ஒட்டி, பின்னி உறவாடும் வகையில் பின்னணி இசை அமைப்பதில் இந்தியாவில் இவரளவிற்கு யாருமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதில் பாடல்களும் மிக சிறப்பாக இருக்கின்றன். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' என்கிற பாடலை மட்டும் ஒரு ஏகாந்த வேளையில் கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோன்றும். 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே' என்கிற பாடலில் வரும் லேலேலெலெ.... என்று வரும் ஹம்மிங்கை எப்போது கேட்டாலும், நான் எப்பவோ பார்த்த அஸாமைப் பற்றின ஒரு டாக்குமெண்டரிதான் ஞாபகத்திற்கு வரும். மிக இனிமையான ஹம்மிங்.

ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா

புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர்களுக்கான தேர்வில் தங்கம் வென்ற பாலுமகேந்திரா, தொழில்நுட்படம் அவ்வளவாக வளராத அந்த கட்டத்தில், ஆர்வோ (ORWO) கலரில் இந்தப் படத்தில் பல ஜாலமே செய்திருக்கிறார். மேற்குறிப்பிட்ட அதே பாடலை உதாரணமாக கொள்ளலாம். ஜீப்பில் மலைப்பாதையில் விரையும் திருப்பங்களும், பயணிக்கிறவர்களின் ஒவ்வொருத்தரின் முகபாவங்களும், பாடலின் முடிவில் வானத்து நிலாவை மரக்கிளைகளுக்கிடையான இடைவேளையில் காமிரா துரத்துவதுமாக....... கவிதைக் கணங்கள்.

ஒரு நல்ல ஒளிப்பதிவாளனின் வேலை, தன் திறமையை தனியே காண்பிக்காமல், கதையோட்டத்திற்கு குறுக்கே நிற்காமல், சம்பவங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப கோணங்களை ஒழுங்குபடுத்துவதுதான். அதை திறம்படவே செய்திருக்கிறார் பாலு.

ரஜினிகாந்த்

தன் எல்லா நடிப்புத் திறமையையும் இந்தப் படத்திலேயே கொட்டி விட்டதால், பிற்கால படங்களில் அந்தத் தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தாரா என்று சந்தேகம் வருமளவிற்கு தன் உச்சபட்ச சிறப்பான நடிப்புத் திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

தங்கைக்கு சோறு போடாமல் பட்டினியாக வைத்திருக்கிறான் என்று புரளி பேசினவனை அடித்து கும்மி விட்டு "என் வள்ளி பட்டினியா இருக்கான்னா, அது இந்த காளி செத்த நாளாத்தான் இருக்கும்" என்று உறுமுவதாகட்டும், கை போனதால் வேலையை விட்டு தூக்கிய, ஏற்கெனவே மெல்லிய வெறுப்பு படர்ந்திருக்கும் தன் மேலதிகாரயிடம் "பரவாயில்ல சார். நானும் உங்க இடத்துல இருந்தா, இப்படித்தான் செஞ்சிருப்பேன். கேவலம்.... நாம மனுஷங்கதானே சார்" என்று விரக்தியுடன் கூறிவிட்டு, சடாரென்று தன் முகபாவத்தை தீவிரமாக்கிக் கொண்டு "ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" என்று சவால் விடுகிறாற் போல் பேசுவதாகட்டும், கை போனதால் உதவிக்காக திருமணத்திற்கு சூசகமாக வற்புறுத்துகிற தன் தங்கையிடம் "ம்..... வள்ளிக்குட்டி. நான் என்னவோ நெனச்சேன். நீ கூட பொடி வெச்சு பேச கத்துக்கிட்டியே' என்று நக்கலடிப்பதாகட்டும், தனக்கு பிடிக்காத மாப்பிள்ளையுடன், ஊர்க்காரர்கள் துணையுடன் திருமணம் செய்யப் போகும் தங்கையிடம் "அந்த நாயிங்க எல்லாம் போகட்டும். ஏன்னா அதுங்க என் கூட பிறந்துதங்க இல்ல. ஆனா நீ என் ரத்தம்" என்று உருகுவதிலாகட்டும், தங்கை தன்னிடமே திரும்பி வந்ததும் "இப்ப உங்க மூஞ்சுங்கள எங்கடா வெச்சுக்கப் போறீங்க" என்று பெருமைப்படுவதிலாகட்டும்..........

ரஜினியின் Master Piece இந்தப்படம்தான் என்று தயங்காமல் கூறுவேன்.

ஆனால் இப்பேர்ப்பட்ட ரஜினி தன் பிற்கால படங்களில் இன்னும் விக் மாட்டிக்
கொண்டு 'நான் ஒரு தடவ சொன்னேன்னா' எனும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் டாப் ஸ்டாராகிய அபிதாப் கூட தன் வயதுக்கேற்ற மாதிரி BLACK., AKS மாதிரியான மாதிரியான மாற்றுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்க, இவர் இன்னும் தேவுடா..தேவுடா என்று பாடிக் கொண்டிருக்கிறார். அட தேவுடா...

ஷோபா

இந்தப் பெயரை உச்சரிக்கும் பா¡க்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. இயல்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்ல நடிகையை நாம் இழந்துவிட்டோம்.

அப்பாவி முகத்துடன் அறிமுகமாகும் இவர், சரத்பாபு விட்டுச் சென்றிருந்த ஜீப்பை பஸ் டிரைவர் போல் தன்னை பாவித்துக் கொண்டு ஓட்டும் போதும் பின்பு பின்னால் வந்து நின்று கொண்டிருக்கும் சரத்பாவுவை மிரட்சியுடன் பார்ப்பதும் ஒரு குழந்தையைப் பார்ப்பது போலிருக்கிறது. இவருக்கும் சரத்பாபுவிற்கும் மலரும் அந்த சொல்லப்படாத காதலின் பரிணாம காட்சிகள் ஒரு கவிதைத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் பிற்பகுதியில் குடும்பத்தின் பொருளாதார பாரத்தை தான் சுமக்க தயாராகும் போது அவரின் குழந்தை முகம் மறைந்து போய் முதிர்ச்சியான ஒரு இந்தியப் பெண்ணின் அடையாள முகம் தெரிகிறது. படத்தின் உச்சக்காட்சியில் தன் மனம் கவர்ந்தவனோடு போவதா, உருகி அழைக்கும் தன் அண்ணனின் குரலுக்கு செவிசாய்ப்பதா என்று தவிக்கும் காட்சியில் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்.

சரத்பாபு

நான் சிறுவயதில் முதன்முதலாக ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர். (இப்போது பில்கேட்ஸே வந்தால் கூட வாங்க மாட்டேன்) மெல்லிய சிரிப்புடன் மிக மென்மையாக கையெழுத்திட்டு கொடுத்த அந்த மனிதரை மறக்கவியலாது.
இவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இவர் ஏன் ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வரமுடியவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும். திடகாத்திரமான உடம்பு, நல்ல சிவப்பு, சுருள் முடி, அழகான முகம் என்று ஒரு
கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்கள் இருந்தும், நண்பர்கள் வேஷத்திலேயே தன் திரையுலக பயணத்தை நடத்திக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி அங்கலாய்க்கவே தோன்றுகிறது. கதாநாயக முகம் என்பது எதிர்பார்க்கவியலாத ஒரு கலவையோடு, மக்கள் தங்கள் மனங்களில் மிக நெருக்கமாக உணர முடிகிற முகங்களுக்குத்தான் வாய்க்கும் போலிருக்கிறது.

இவருக்கும், காளி என்கிற கதாபாத்திரத்திற்கும் ஆரமபத்திலேயே அறிமுகமாகிற நல்லது, பொல்லாததுமான அறிமுகங்களும், காளிக்கு இவர் மேல் வெறுப்பு படரும் காட்சிகளும் மிகத்திறமையாக ஆரவாரமின்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. காளியால் 'லா பாயிண்ட்' என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கப்படும் இவர், காளி வேலை இழந்த நிகழ்வையும், காளிக்கு அடிபட்டிருக்கிற போது பகைமையை மறந்து மருத்துவமனைக்கு விரைவதிலும் ஒரு படித்த கனவானை நம் முன் நிறுத்துகிறார். தன் கெளரவத்தை விட்டு காளியிடம் பெண் கேட்டு மனரீதியாக மோசமாக அவமானப்படுவதிலும், ஓடிப் போகிற யோசனையை சொல்கிற காளியின் மனைவியிடம் அதை மறுப்பதிலும் தன் பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார்.

படாபட் ஜெயலஷ்மி

இன்னொரு ஷோபா. இன்னொரு தற்கொலை.

'அவள் ஒரு தொடர்கதை'யில் வருகிற அல்ட்ரா மாடர்ன் பெண்ணா என்று அதிசயப்பட வைக்கும் அளவிற்கு ஒரு கிராமத்து அடங்காப்பிடாரியாக நடித்திருக்கிறார். புளிப்பு மாங்காயும், வறுத்த மீனுமென்று தின்னிப் பண்டாரமாகவும் ஒரு ஆம்பிளைப் பாப்பாத்தியாக வருமிவர், காளியுடன் நடக்கும் ஒரு சிறிய சல்லாபத்தில் தன் பெண்மையை விழிப்பை உணர்ந்து நாணப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் ஒரு குடும்பத்தலைவிக்கேயுரிய பொறுப்புடன் காளியின் தங்கையை தன் மகளாக நினைத்து அவளின் எதிர்காலம் பாழாகிற சூழ்நிலையில் தன்னையும் தன் வாழ்க்கையையும் பற்றி கவலைப்படாமல் தன் கணவனான காளிக்கு எதிரான தீர்மானமான முடிவை எடுக்கிறாள்.

மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு (அவர் மனைவியாக வருகிறவர்) என்று எல்லா கதாபாத்திரங்களும் மிக இயல்பாக வந்து போகிறார்கள்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது.

suresh kannan

Saturday, May 14, 2005

மலராகத் தொடங்கி முள்ளாகிப் போன ரஜினிகாந்த்

கடந்த வருடங்களில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய நட்சத்திர கலை விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்தை ஒரு ரசிகர் கேட்ட கேள்வி: "நீங்க நடிச்சதிலியே உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச படம் எது?". சற்று நேரம் மோவாயை தடவி யோசித்து விட்டு ரஜினி சொன்ன பதில்: முள்ளும் மலரும்.

அபூர்வ ராகங்களில் தாடியோடு அலங்கோலமான தோற்றத்தோடு அறிமுகமான அந்த இளைஞன், பின்னாளில் தமிழ்த் திரையையே ஆட்டி வைக்கப் போகிற ஒரு உச்ச நட்சத்திரமாக வரப்போகிறார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏன், வறுமை காரணமாக எல்.ஐ.சி. கட்டிட படிக்கட்டுகளில் தூங்கியதாக சொல்லும் அந்த இளைஞனே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். தொடக்க காலத்தில் சில நல்ல படங்களில் நடித்த ரஜினி அதையே தொடர்ந்திருந்தால் சூப்பர் ஸ்டாராக ஆகியிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். வணிக படங்கள் என்கிற மாயவலை அவரை வலுவாக இழுக்க ஆரம்பிக்க, தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதில் சிக்கிக் கொண்டார். விளைவு, இயல்பாக நடிக்கக்கூடிய அந்த கலைஞனை வணிகப்படங்கள் விழுங்கி ஏப்பம் விட்டன.

Image hosted by Photobucket.com

என்னைப் பொருத்தவரை அவர் சிறப்பாக பணியாற்றிய படங்களாக, தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை, ராகவேந்திரா ஆகிய சில படங்களைச் சொல்வேன். இந்த வரி¨சியில் மிக முக்கியமான படம் முள்ளும் மலரும். ஒரு முரட்டு இளைஞன் கதாபாத்திரத்திற்கு அவர் உருவ அமைப்பு மிகப் பொருந்திப் போனதால் மிக உச்சபட்ச நடிப்பை இதில் அவரால் வழங்க முடிந்தது. ஆனால் அதே உருவத்தைக் கொண்டு அவரால் சென்டிமென்டான காட்சிகளில் இயல்பாக நடிக்க இயன்ற போதுதான் அவருக்குள் ஒளிந்திருக்கும் கலைஞனை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.

இப்போது அந்தப்படத்தை உருவாக்கியவர்களில் முக்கியமான நபர்களைப் பார்ப்போம்.

இயக்குநர் மகேந்திரன்:

பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டிருந்த தமிழ்ப் படங்களை அதிலிருந்து மீட்டெடுத்து, சினிமாவின் ஆதார விஷயமான காமிராவின் மூலம் தன் கதையை சொல்லத் தொடங்கியவர்களில் முக்கியமானவர். உமாசந்திரன் எழுதிய, கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டியில் வெற்றி பெற்ற 'முள்ளும் மலரும்' நாவலை திரைப்படமாக்க முடிவு செய்தவுடன், அதன் முக்கியமான கதாபாத்திரத்திரமான 'காளி' க்கு ரஜினியைப் போட அவர் அதிகம் யோசித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. கமலுடனும் ரஜினியுடனும் நல்ல படங்களைப் பற்றி விவாதித்தும், அந்த சமயத்தில் வெளிவந்த படங்களைப் பற்றின தன் அதிருப்தியின்மையையும் அவர்களுடன் பேசியிருக்கிறார் என்பது அவர் பேட்டிகளின் மூலம் தெரிய வருகிறது.

உதிரிப்பூக்களோடு ஒப்பிடும் போது இந்த படத்தின் தரம் சற்று மட்டுதான் என்கிற போதும், அப்போது வந்துக் கொண்டிருந்த (ஏன் இன்றைய படங்களோடும்) ஒப்பிடும் போது இதன் தரம் மிக உயர்ந்தது என்று தயங்காமல் கூறிவிடமுடியும். கதையின் பரப்பளவு என்று பார்த்தால் சிறிதுதான். ஒரு முரட்டுத்தனமான இளைஞன் (முள்) தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட தன் தங்கையை அளவிற்கு அதிகமாக நேசிப்பதும், அவனின் முரட்டுத்தனமாக அன்பில் பல நேரம் மகிழ்ந்தும் சில நேரங்களில் சங்கடமாக உணர்வதுமான அவன் தங்கை (மலர்) என்று இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி வரும் சின்ன கதை.

இதை மகேந்திரன் சொல்லியிருக்கும் விதம் அபாரமானது. நூல் பிடித்தாற் போன்ற நேர்த்தியான திரைக்கதையின் மூலம் இந்த சின்னஞ்சிறுகதையை ஆயாசமில்லாமல் சொல்வது கடினமான விஷயம். முரட்டுத்தனமான அண்ணனையும், அதற்கு மாறான இயல்புள்ள மலரைப் போன்ற தங்கை என முரணான கதாபாத்திரங்களை இயல்பாக நடமாட விட்டிருக்கிறார். சம்பவங்களின் உச்சக்காட்சியை (climax) பிரமாதமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அண்ணன் நல்லவன்தான் என்றாலும் தன்னுடைய வாழ்க்கை (சொல்லப்படாத அந்த காதலும்) பாழாகி விடப் போவதாலும் உறவினர்களின் வற்புறுத்தலாலும் அவனை விட்டுப் பிரிய முடிவெடுக்கும் தங்கை, பழைய நினைவுகள் நெஞ்சிலாட தன்னந்தனியாக நிற்கும் அண்ணனை திரும்பித் திரும்பி பார்த்து விட்டு மனம் தாங்காமல் எல்லோரையும் உதறிவிட்டு அண்ணனுக்கு துணையாக நிற்க முடிவு செய்யும் அந்தக் காட்சி உருக்கமென்றால், இதை இன்ப அதிர்ச்சியுடன் எதிர்கொள்ளும் அவன், தன் பிடிவாதத்தை உதறி அவள் காதலித்தவனுக்கே திருமணம் செய்து கொடுப்பது கம்பீரம்.

ரஜினிக்கும் சரத்பாபுவும் பரஸ்பரம் ஏற்படுத்திக் கொள்ளும் அந்த இனந்தெரியாத வெறுப்பை சிறுசிறு காட்சிகளில் மெல்ல மெல்ல படிக்கட்டுகள் போல் அமைத்திருக்கும் உத்தி பாராட்டத்தக்கது.

இளையராஜா, பாலுமகேந்திரா, ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர்களின் பங்களிப்பைப் பற்றி அடுத்த பதிவில்......................

suresh kannan

Wednesday, May 11, 2005

அட்சய திருதியையும் அசட்டுத்தனங்களும்

கடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.

அக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.

சீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.

இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.

இவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா?

உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது? பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

இந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள்.
வாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும்? தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.

()

பெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது.

suresh kannan

மொபைல் கணினிகள் பத்தாயிரம் ரூபாய்க்காமே?

பெங்களூரைச் சேர்ந்த கணினி ஆராய்ச்சி நிறுவனமொன்று (CSIR) தயாரிப்பில் இருக்கும் தங்கள் புதிய மொபைல் கணினிகளைப் பற்றி தெரிவித்த செய்தியன்று இன்றைய இந்து நாளிதழில் வந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கவிருக்கும் இந்த கணினிகளின் விலைதான் என்னை பரவசப்படுத்தியுள்ளது. ஒரு desktop கணினியின் அத்தனை அடிப்படை அம்சங்களும் கொண்ட இநத கணினிகளின் விலை ரூபாய் பத்தாயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

சமீபத்தில் ஏதோ ஒரு விழாவில் பேசிய தயாநிதி மாறன் வரும் 2008 ஆண்டுக்குள் எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் கணினியின் விலை பத்தாயிரமாக ஆக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லி முடிப்பதற்குள் வந்திருக்கும் அறிவிப்பு அரசியல்வாதிகள் தாங்கள் சம்பந்தப்பட்ட துறையில் எவ்வளவு updated ஆக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த பட்ஜெட்டில் கணினியின் விலை குறையும் என்று எதிர்பார்த்து ஏமாந்த எனக்கு இந்த செய்தி உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது என்றாலும் இதன் சாதக, பாதக அம்சங்கள் குறித்த முழுத்தகவல்கள் அறியாமல் முழுவதுமாக மகிழ முடியாது.

கணினி சம்பந்தப்பட்ட நுட்பத்தில் தேர்ச்சியடைந்திருக்கும் நண்பர்கள், இதைப் பற்றின மேலதிக விவரங்களை ஆராய்ந்து தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட சுட்டி:
http://www.hindu.com/2005/05/11/stories/2005051103002200.htm

suresh kannan

Tuesday, May 03, 2005

எழுபதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜாதா! ஆனால்.............

பொதுவாக நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதோ, என் பிறந்த நாளைக்கு யாராவது வாழ்த்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ கிடையாது. பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல ஒரு அபத்தம் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஓரு ஆணும் பெண்ணும் தங்களுடைய காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் செயலில் இயற்கையின் சதியின்படி அகஸ்மாத்தாக நாம் வந்து பிறந்து தொலைக்கிறோம். இதை ஏதோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி போல் நடிகர்களும், அரசியல்வாதிகளும், இன்னபிற விளம்பர விரும்பிகளும் போஸ்டர்களும் பத்திரிகை விளம்பரங்களுமாக அலட்டும் போது சிரிப்புத்தான் வருகிறது.

என்றாலும் சுஜாதா தன்னுடைய சமீபத்திய ஆனந்தவிகடன் கட்டுரைத் தொடரில் மே 3ம் தேதியோடு 70 வயது நிறைகிறது என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் வயதாவதால் ஏற்படும் உடல் மற்றும் மன பின்னடைவுகளை குறித்து நெகிழ்ச்சியாக எழுதியிருந்தார். தான் இறக்கப் போகிறோம் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம் கடைசியாக ஆதரவாகப் பேசுகிற அந்த தொனியை அந்தக் கட்டுரையில் காண முடிந்தது. ஆக.... மரணத்தை எதிர்கொள்ள அவர் மனதளவில் தயாராகி விட்டார் என்பதையே அந்தக் கட்டுரை உணர்த்துகிறது. மரணம் என்பது தவிர்க்க இயலாத சமாச்சாரம் என்றாலும் நம்மால் நேசிக்கப்படும் ஒருவர், நமக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய ஒருவர், நம்மை விட்டு பிரியப் போகிறார் எனும் போது ஏற்படும் இயல்பான சோகம் மனதைக் குடைகிறது.

()

சுஜாதாவைப் பற்றி இணையத்தில் இதற்கு முன்னர் ஒரளவு நிறைய எழுதியுள்ளேன். ராஜேஷ்குமார்களும், பட்டுக்கோட்டை பிரபாகர்களுமாக நான் கிரைம் நாவல்கள் என்கிற காட்டாற்று வெள்ளத்தில் திசை தெரியாமல் நீந்திக் கொண்டிருக்கும் போது அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி என்று உயிர்மெய் எழுத்துக்களில் பெயர்கள் ஆரம்பிக்கும் ஏறக்குறைய எல்லா நல்ல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றின அறிமுகத்தை அவர் கட்டுரைகளின் ஊடாக தந்து என்னை நல்வழிப்படுத்தினார்.

அறிவியல் சமாச்சாரங்களை அவரளவிற்கு எளிமைப்படுத்தி, அதே சமயத்தில் புரியும்படியாகவும் கட்டுரை எழுதியவர்களைப் பற்றி இனிமேல்தான் அறியப் போகிறேன். கட்டுரைகளின் ஊடாக அவ்வப் போது நம்மை ஆசுவாசப் படுத்தி இன்னும் எளிமையாக அதை விளக்கிச் சொல்லுவதில் சமர்த்தர். தமிழ் உரைநடையில் அவர் ஏற்படுத்திய பாதிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பிரபலமான காலந்தொடங்கி இன்று எழுத ஆரம்பிக்கும் படைப்பாளிகளில் கூட அவரின் பாதிப்பை காண முடியும். பல இலக்கியக் கட்டுரைகளிலும் உலக அளவில் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றியும், பல நல்ல நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

சரி.......... போதும்.

சுஜாதாவைப் பற்றி எழுதுவதென்றால் இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். திகட்ட திகட்ட புகழ்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் நமக்குப் பிடித்த எழுத்தாளரை ஒரு பீடத்தில் அமர்த்தி அனுதினமும் அந்தாதி பாடிக் கொண்டே இருப்பதுதான் ஒரு வாசகனின் கடமையா? அவருடைய குறைகளை நாம் உணர்ந்திருந்தாலும் அவைகளை கண்டு கொள்ளாமல், யாராவது அதை சுட்டிக் காட்டும் போது, ..... த்தா போடாங்க..... என்று அறைகூவல் விடுவதுதான் ஒரு வாசகனின் வேலையா?

இல்லை. அந்த படைப்பாளியின் குறைகளையும் நாம் சுட்டிக் காட்டுவதுதான் முறையான செயலாக இருக்கும்.

அந்த வகையில் சுஜாதாவின் குறைபாடாக நான் காண்பது இதைத்தான்.
அவரின் புகழ் பெற்ற சிறுகதைகளான நகரம், அரிசி, பிலிமோத்ஸவ் போன்றவை சர்வதேசத்தரம் வாய்ந்தது மத்திய தர வர்க்கத்தினரின் பிரச்சினைகளை, கோழைத்தனங்களை, சோகங்களை எள்ளல் தொனியுடன் அவர் எழுதிய சிறுகதைகள் போற்றுதலுக்கு உரியவை. ஆனால் அதிர்ச்சி முடிவுகளுக்காகவே எழுதிய மற்ற சிறுகதைகள்....?

சிறுகதைகளில் எட்டிய உயரத்தைக் கூட நாவல்களில் அவரால் எட்ட முடியாமல் போனது. ஜன்னல் மலர், குருபிரசாத்தின் கடைசி தினம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நில்லுங்கள் ராஜாவே போன்ற சில நாவல்களைத் தவிர மற்ற நாவல்கள் அபத்தமானவை. முக்கியமாக தொடர்கதைக்களுக்காக எழுதப்பட்ட நாவல்களின் அத்தியாயங்கள் ஒரு செயற்கையான அதிர்ச்சியுடன் முடியும். அடுத்த வாரம் அந்த அத்தியாயம் உயிர்பெறும் போது தரப்பட்ட அதிர்ச்சி அசட்டுத்தனமான வகையில் தெளிவாகும். சமீபத்திய உதாரணம்: யவனிகா, பேசும் பொம்மைகள்.

எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்று அவருக்குத் தெளிவாக தெளிந்திருக்கிறது. கணையாழியில் அவர் எழுதின கட்டுரைகளின் மூலம் இதை நாம் உணர முடிகிறது. அவரே உலக அளவிலான நல்ல இலக்கியவாதிகளின் படைப்புகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

'கணையாழிக்கு என்று ஒரு பேனா, குமுதத்திற்கு என்று ஒரு பேனா என்று நான் எடுப்பதில்லை' என்று சமீபத்தில் மறுபதிப்பாக வந்திருக்கும் 6961 நாவலின் பின்னட்டையில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இது நிஜமில்லை என்று அவர் ராணிமுத்துக்காக எழுதியிருக்கும் 'வேணியின் காதலன்' என்கிற அசட்டு நாவலின் மூலம் தெரிகிறது.

என்னுடைய ஆதங்கமெல்லாம், எது நல்ல இலக்கியம் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் மற்றும் அதை எழுதக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள சுஜாதா, எதற்காக அந்த முயற்சியில் சற்று கூட ஈடுபடாமல் வணிக இதழ்களுக்காக தம்மை சமரசப்படுத்திக் கொண்டு பல வெற்றுக் குப்பைகளை எழுதித் தள்ளியுள்ளார் என்பதுதான். எழுதித்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற பொருளாதார நிர்ப்பந்தம் ஏதும் அவருக்கு இருந்ததில்லை. 'பணம் என்கிற விஷயத்தை நான் பொருட்படுத்தியதில்லை' என்று சமீபத்திய ஆ.வி. கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.சில வாசகர்களின் அதீத வெளிப்பாடான விமர்சனங்கள் மட்டுமே போதும் என்று அவர் நினைக்கிறாரா? அது மட்டுமே அவருக்கு மன நிறைவை தருகிறதா?

()

இலக்கியவாதிகள் தங்கள் வட்டத்தில் சேர்க்காதது பற்றி அவருக்குள் ஆதங்கம் இருப்பதை அவருடைய கட்டுரைகளில் வெளிப்படும் மெலிதான புலம்பலின் மூலம் அறிய முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் அதிகம் ஈடுபடவேயில்லையே? ஆனால் அவரை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது சற்று சிரமமான காரியம். பின்னாளில் அவரைப் பற்றி ஆராயும் ஒருவன், 'என்னய்யா இந்தாளு, நாய் வாய் வெச்சா மாதிரி எல்லா விஷயத்தையும் கொஞ்சம் கொஞ்சம் எழுதியிருக்கான்' என்று புலம்பக்கூடும்.

suresh kannan

Monday, May 02, 2005

இதோ, புரிகிறாற் போல் ஓர் கவிதை

எனது சமீபத்திய பதிவில், பொதுவான கவிதைகள் மேலான என் கடுமையான விமர்சனங்கள் குறித்து நண்பர்களிடையே மெலிதான அதிருப்தி எழுந்ததை உணர முடிந்தது. கவிதை என்கிற இலக்கிய வடிவத்திற்கு நான் ஜென்மப் பகைவனில்லை. ரஷ்ய மொழியில் இருந்தோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் இருந்தோ மொழிபெயர்க்கப்பட்டாற் போன்ற தோற்றத்துடன், மிகவும் பூடகமான மொழியில் எழுதப்பட்டு வாசகனை திண்டாடச் செய்வதில் ரகசியமாக மகிழ்கின்ற கவிதைகள் குறித்தே நான் சாடியிருந்தேன். எனவேதான் கவிதைகளைக் கண்டாலே கசப்பு மருந்தைக் கண்ட குழந்தைகள் மாதிரி முகச்சுளிப்புடன் ஓடிவிடுகிறேன். (மருந்து கசப்பென்றாலும் அதுதான் நோயைக் குணப்படுத்துவதென்று யாராவது அபத்தமாக பின்னூட்டமிடாதீர்கள்) :-)

என்றாலும் சில நல்ல கவிதைகள் (?!) அபூர்வமாக கண்ணில் படும் போது ரசித்து படித்திருக்கின்றேன். அவ்வாறாக சமீபத்தில் மே 2005 காலச்சுவடில் படித்த கவிதையன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

()

தான்
ஒரு யானையால்
வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதை
காவலர்கள் முன்னிலையில்
மீண்டுமொரு முறை கூற வேண்டியிருந்தது
அந்த எறும்புக்கு.

சாட்சியம் உள்ளதா
என்ற காவலரிடம்
தன் வயிற்றைக் காட்டி
யானையின் கருவை
தான் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறியதும்
சிரிப்பை அடக்க முடியவில்லை அவர்களுக்கு.

எல்லா இடங்களிலும்
புன்னகைக்கும் இதழ்களின் இடையே
ஒரு புழுவைப் போல நெளிந்தபடி
இருக்கின்றனசிலரின் பரிதவிப்புகள்

()

நன்றி: காலச்சுவடு
எழுதியவர்: காலபைரவன்

இந்தக் கவிதையை புரிந்து கொள்ள நீங்கள் கண்ணாடியை மாட்டிக் கொண்டு அகராதியை ஆராய வேண்டியதோ, கொஞ்ச நேரம் கிழக்கு பக்கமாக மோட்டுவளையை பார்த்துக் கொண்டோ, நூற்று ஒன்றாவது முறையாக படித்தும் தலையை சொறிய வேண்டியதோ இல்லை. படித்தவுடன் நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் புரிந்து விடும், அதிகாரத்திற்கெதிரான ஒரு முனகல் என்று.
இது மாதிரி நல்ல கவிதைகளை படிக்கும் போதுதான் எனக்கும் இவ்வாறு கிறுக்கத் தோன்றுகிறது.

இந்தியா
ஒரு ஜனநாயக நாடு
'பாப்பாப்பட்டி'க்களைத் தவிர.



suresh kannan