Wednesday, May 11, 2005

அட்சய திருதியையும் அசட்டுத்தனங்களும்

கடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.

அக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.

சீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.

இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.

இவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா?

உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது? பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

இந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள்.
வாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும்? தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.

()

பெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது.

suresh kannan

14 comments:

Anonymous said...

அதையேன் கேட்கிறீங்க. வீட்டில் எனக்கு உதவி செய்யும் பெண் திடீரென்று பெருக்குவதை நிறுத்திவிட்டு, என்னிடம் " இன்று அட்சய திதியாம் அம்மா." என்றாள். நான் ஓ, இன்னிக்குதானா அது," என்றபடியே வேலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். " அவள் தொடர்ந்து காலையிலே 7 மணிக்கெல்லாம் நல்ல நேரமாம். " என்றாள். நானும் இன்னொரு "ம் " கொட்டியபடி, " அதெப்படி அவ்வளவு சீக்கிரம் கடை திறப்பாங்களா?" ஆமாம்மா. காலையிலேயே திறந்துடுவாங்களாம்" என்றாள். நான் மூணாவது "ம்" கொட்டிவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன். அவளுக்கு சே.. என்று வாழ்வே வெறுத்துப் போயிருக்கும். ஏற்கனவே, இந்த வூட்டு அம்மாவுக்கு மேக்கப் பத்தியெல்லாம் தெரியாது / பிடிக்காது - எப்போ பார்த்தாலும் அந்தப் பொட்டிகிட்ட உட்காந்து ஏதோ தட்டிகிட்டே இருக்காங்க... அப்பப்போ வெளியெலே போவாங்க; திரும்பி வந்து மறுபடி அந்தப் பொட்டிகிட்ட உட்காந்து தட்ட ஆரம்பிச்சுடுவாங்க... ஒண்ணுமில்லேன்னா, டிவி பக்கம் ஏதோ புரியாத சேனல் பாப்பாங்க. ஏதோ நாலு சீரியல் பாத்தோமா, புடவை நகை என்று வாங்கினோமா என்றில்லாமல் இதென்ன இவங்க இப்படி போரடிக்கிறாங்க" என்று ஏற்கனவே ஒரு மாதிரியாக என்னை அளந்து வைத்திருந்தாள். இவங்ககிட்ட போய் அட்சய திதி பத்தி பேசினோமே என்று த்ன்னை நொந்துகொண்டு மறுபடி பெருக்க ஆரம்பித்து இருப்பாள். அப்புறம்தான் கவனித்தேன். கழுத்தில், காதில், கையில் என்று பள பலவென்று நகைகள். அதில் சிலது நிஜம்; சிலது நகலாக இருக்கலாம். ஆனாலும் இன்று தங்கம் போட்டுகொண்டால் நிறைய வரும் என்று அவளுக்கு நம்பிக்கை.

நீங்கள் சொல்வது சரிதான் சுரேஷ். ஆசை யாரை விட்டது? அந்தப் பெண் அட்சய திதியை நம்பும் மதமும் அல்ல. :-)
Aruna

துளசி கோபால் said...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!!! போன வருஷம் நான் வாங்கின அரைக்கால் கிராம் தங்கம்
இப்ப ஆயிரம் கிலோவா வளர்ந்திருக்கே! இதுக்கு என்ன சொல்றீங்க?

கேழ்வரகுலே நெய் ஒழுகுதுன்னா கேப்பாருக்கு........:-)

ஒரு வாரப் பத்திரிக்கைவிடாம இந்த விளம்பரம் வந்தாஆளுங்க பாயாம என்ன செய்யும்?

நானும் எப்பவாவது ஒரு வருசம் இந்த நாளுக்கு சென்னைக்கு வந்து வேடிக்கை
பாக்கப்போறேன்!!!

இராதாகிருஷ்ணன் said...

//எந்தத்துறையில் படித்தால்....ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதை// இதுதான் வாழ்க்கையின் 'அர்த்தம்' பலருக்கு!

வியாபாரிகளின் தந்திரம்; மக்களின் முட்டாள்தனம். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பெருங்கூட்டம் சீலைக் கடைகளைத் தேடி ஓடியது. திருத்தவும் முடியாது, திருந்தவும் மாட்டாங்க.

Anonymous said...

//எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர,//

:-)
-காசி

Anonymous said...

//எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர,//

ஐய்யய்யோ...! அட ஏங்க உங்களுக்கு?... இந்த திட்டு திட்டுறிங்க!... நீங்களா வாங்கிக் கொடுத்தா, ஏன் வியாபாரிகளின் தந்திரத்திற்குப் பலியாகப் போகிறோம்?., அதுசரி நீங்கதான் நகை போடுவதயே முட்டாள்தனம் என்கிறீர்களே!. உங்க எழுத்துகளைப் படிச்சுட்டுதான் வர்றேன், பிறந்தநாள் கொண்டாடுனா திட்றிங்க!... சுஜாதா ஏதோ வயசான காலத்துல மலரும் நினைவுகள் எழுதினா (நாம் எல்லோரும்தான் எழுதுவோம்), கடைசியா... தகப்பன் மகனுக்கு சொல்றார்னு சொல்லி அவருக்கே பயம் ஏற்படுத்திறிங்க! அடுத்தவர்களின் ஆசை, உங்களுக்கு என்ன துன்பத்தை தருகிறது?
\\'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' \\
பரவயில்லயே... இந்த வரியெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கே!... கோடி இன்பங்களை அனுபவித்துப் போவதை விட்டுவிட்டு, எதெடுத்தாலும் கோபப்படுறிங்களே! அடுத்தவங்களுக்கு 'அட்டாக்' வருவதை பாக்கிறத விட்டுட்டு உங்க பி.பிய ஓடிப்போய் 'செக்' பண்ணுங்க!

Anonymous said...

என் பெயர் மரம்! அப்படிப்போடு என் blog name பெயர் ஏனோ பின்னுட்டத்தில் வரவில்லை

Anonymous said...

உழைத்து சேமிக்கிற பணத்தில் வாங்கி பீரோவில் வைக்கிற நகையையே காற்று வாங்கி வரப் போகும் நேரத்திற்குள் திருட்டுப் போய்விடுகிறது. இதில் தானாக வளர்வதாவது?

நல்ல கட்டுரை.

பாலாஜி

By: Balaji

Anonymous said...

மயிலாப்பூர் பக்கம் நிறைய போஸ்டர். அட்ஷய திருதி பத்தி அட்டகாசமா ஒரு விழிப்புணர்வு கொடுக்கிற மாதிரி. உபயம் தி.க ஆளுங்க. நகைவியாபாரிங்களை குறை சொல்லியிருந்தாங்க. பிராமணீயம், தமிழ் தேசியங்கற வார்த்தையெல்லாம் இல்லாத கருப்புச்சட்டைக்காரங்களின் போஸ்டர் அபூர்வமா, அசத்தலா இருந்தது.

ஜெ. ரஜினி ராம்கி

Anonymous said...

//பிராமணீயம்ங்கற வார்த்தையெல்லாம் இல்லாத கருப்புச்சட்டைக்காரங்களின் போஸ்டர் அபூர்வமா இருந்தது. //
அவங்க (இப்போதைக்கு!) இருக்கிற இடம் அப்படி! சோழியும், குடுமியும் சும்மா ஆடுமா?! (மேற்படி பழமொழியை இப்படி சொல்றது தான் சரி அப்படீன்னு ஒரு தமிழ் வாத்தியார் சொன்னாரு!)

அப்புறம் சுரேஷ், சாதாரணமா மக்களின் மூடநம்பிக்கைகள் அடுத்தவங்களை பாதிக்குதுன்னா அதை போட்டு தாக்குறது தப்பில்லே! இதிலே அந்த மாதிரி எதுவும் இருக்கிறதா எனக்கு தோணலை! அப்படி எதும் இருந்திச்சின்னா சொல்லுங்களேன்.. என்னோட கருத்தை மாத்திக்கிறேன்! இந்த மாதிரியான விஷயங்களின் போதாவது சிறுசேமிப்புங்கிற எண்ணம் நம்மாளுக்கு தோணுதே, இல்லையா?!

மாயவரத்தான்... said...

இன்னாபா இது கருத்து சொன்னா நம்ம பேரையும் ஏத்துக்க மாட்டேங்குது உங்க பின்னோட்டப் பேழை?! மேலே உள்ளா கருத்து என்னோடது தான் தல!

- மாயவரத்தான்

Anonymous said...

'அட்ஷய த்ருதயை' என்ற வியாபார தந்திரத்திற்கு மக்கள் மயங்கி விட்டதில் எனக்கும் இசைவில்லைதான்.

வியாபாரிகளுக்கு ஒரு வருமான வரிக் கணக்கு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு தொடங்கி, வரி பிடித்தங்கள் எல்லாம் இல்லாமல் சம்பள கவர் மக்கள் கையில் வரும் மாதங்களில், உபரிப் பணம் வேறு எங்கும் போய் விடாமல் தம் கைக்கு வந்து சேருமாரு செய்ய ஒரு காரணம் வேண்டியிருந்தது. 'அட்ஷய த்ருதயை' முயற்சி செய்தார்கள். பற்றிக் கொண்டு விட்டது!

ஆமாம், இதையே ஆங்கிலத்தில் 'வாலன்டின்ஸ் டே', 'மதர்ஸ் டே', 'ஃபாதர்ஸ் டே' என்றால் சத்தம் எதுவும் வருவதில்லையே. அதுவும் வியாபார நோக்கத்தில் வந்ததுதான். அது போல் இதுவும் ஒன்று.

இது போல் எத்தனையோ மூடநம்பிக்கைகளும், அதிர்ஷ்டத்தை நம்பி உழைப்பைப் பின் தள்ளும் விஷயங்களும் தமிழ் சமுதாயத்தில் இன்றைய இயல்பு. இன்னும் இரண்டு அல்லது மூன்று தலைமுறை தள்ளி மாறி விடும் என்பது என் நம்பிக்கை. பார்க்க நானிருக்கப் போவதில்லை.

Anonymous said...

சுரேஷ்,
அட.. விடுங்க. பணம் இருக்குறவங்க வருஷத்துல ஒருநாள் ஒரு கிராம் தங்கம் வாங்கறாங்க. இதனால யாருக்கு என்ன நஷ்டம்?. பணத்தை புதுப்படம் பார்க்க, தண்ணியடிக்க, ஊர்சுற்ற என்று நூற்றுக் கணக்கில் செலவழிக்கும்போது தங்கம்தானே? இருந்துவிட்டுப் போகட்டுமே. அவங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம், மனுசங்க பணத்தை வைத்து என்னதான் செய்யப் போறாங்க, சில சமயம் சந்தோசத்துக்காகக்கூட செலவு செய்யலைன்னா?.
- முத்து
http://muthukmuthu.blogspot.com

Anonymous said...

அட்சய திருதியை வியாபாரத் தந்திரமாகவே இருக்கட்டும். The reality is that gold prices are up everyday, and people are being encouraged to buy & hoard gold. This is probably good for giving the economy a boost, and who knows, our collection of gold definitely outweighs the Federal Reserve's gold collection.

By: RussianEntertainer

Anonymous said...

Good