அபூர்வ ராகங்களில் தாடியோடு அலங்கோலமான தோற்றத்தோடு அறிமுகமான அந்த இளைஞன், பின்னாளில் தமிழ்த் திரையையே ஆட்டி வைக்கப் போகிற ஒரு உச்ச நட்சத்திரமாக வரப்போகிறார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏன், வறுமை காரணமாக எல்.ஐ.சி. கட்டிட படிக்கட்டுகளில் தூங்கியதாக சொல்லும் அந்த இளைஞனே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். தொடக்க காலத்தில் சில நல்ல படங்களில் நடித்த ரஜினி அதையே தொடர்ந்திருந்தால் சூப்பர் ஸ்டாராக ஆகியிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். வணிக படங்கள் என்கிற மாயவலை அவரை வலுவாக இழுக்க ஆரம்பிக்க, தெரிந்தோ அல்லது தெரியாமலோ அதில் சிக்கிக் கொண்டார். விளைவு, இயல்பாக நடிக்கக்கூடிய அந்த கலைஞனை வணிகப்படங்கள் விழுங்கி ஏப்பம் விட்டன.

என்னைப் பொருத்தவரை அவர் சிறப்பாக பணியாற்றிய படங்களாக, தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை, ராகவேந்திரா ஆகிய சில படங்களைச் சொல்வேன். இந்த வரி¨சியில் மிக முக்கியமான படம் முள்ளும் மலரும். ஒரு முரட்டு இளைஞன் கதாபாத்திரத்திற்கு அவர் உருவ அமைப்பு மிகப் பொருந்திப் போனதால் மிக உச்சபட்ச நடிப்பை இதில் அவரால் வழங்க முடிந்தது. ஆனால் அதே உருவத்தைக் கொண்டு அவரால் சென்டிமென்டான காட்சிகளில் இயல்பாக நடிக்க இயன்ற போதுதான் அவருக்குள் ஒளிந்திருக்கும் கலைஞனை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது.
இப்போது அந்தப்படத்தை உருவாக்கியவர்களில் முக்கியமான நபர்களைப் பார்ப்போம்.
இயக்குநர் மகேந்திரன்:
பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டிருந்த தமிழ்ப் படங்களை அதிலிருந்து மீட்டெடுத்து, சினிமாவின் ஆதார விஷயமான காமிராவின் மூலம் தன் கதையை சொல்லத் தொடங்கியவர்களில் முக்கியமானவர். உமாசந்திரன் எழுதிய, கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டியில் வெற்றி பெற்ற 'முள்ளும் மலரும்' நாவலை திரைப்படமாக்க முடிவு செய்தவுடன், அதன் முக்கியமான கதாபாத்திரத்திரமான 'காளி' க்கு ரஜினியைப் போட அவர் அதிகம் யோசித்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. கமலுடனும் ரஜினியுடனும் நல்ல படங்களைப் பற்றி விவாதித்தும், அந்த சமயத்தில் வெளிவந்த படங்களைப் பற்றின தன் அதிருப்தியின்மையையும் அவர்களுடன் பேசியிருக்கிறார் என்பது அவர் பேட்டிகளின் மூலம் தெரிய வருகிறது.
உதிரிப்பூக்களோடு ஒப்பிடும் போது இந்த படத்தின் தரம் சற்று மட்டுதான் என்கிற போதும், அப்போது வந்துக் கொண்டிருந்த (ஏன் இன்றைய படங்களோடும்) ஒப்பிடும் போது இதன் தரம் மிக உயர்ந்தது என்று தயங்காமல் கூறிவிடமுடியும். கதையின் பரப்பளவு என்று பார்த்தால் சிறிதுதான். ஒரு முரட்டுத்தனமான இளைஞன் (முள்) தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட தன் தங்கையை அளவிற்கு அதிகமாக நேசிப்பதும், அவனின் முரட்டுத்தனமாக அன்பில் பல நேரம் மகிழ்ந்தும் சில நேரங்களில் சங்கடமாக உணர்வதுமான அவன் தங்கை (மலர்) என்று இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி வரும் சின்ன கதை.
இதை மகேந்திரன் சொல்லியிருக்கும் விதம் அபாரமானது. நூல் பிடித்தாற் போன்ற நேர்த்தியான திரைக்கதையின் மூலம் இந்த சின்னஞ்சிறுகதையை ஆயாசமில்லாமல் சொல்வது கடினமான விஷயம். முரட்டுத்தனமான அண்ணனையும், அதற்கு மாறான இயல்புள்ள மலரைப் போன்ற தங்கை என முரணான கதாபாத்திரங்களை இயல்பாக நடமாட விட்டிருக்கிறார். சம்பவங்களின் உச்சக்காட்சியை (climax) பிரமாதமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். அண்ணன் நல்லவன்தான் என்றாலும் தன்னுடைய வாழ்க்கை (சொல்லப்படாத அந்த காதலும்) பாழாகி விடப் போவதாலும் உறவினர்களின் வற்புறுத்தலாலும் அவனை விட்டுப் பிரிய முடிவெடுக்கும் தங்கை, பழைய நினைவுகள் நெஞ்சிலாட தன்னந்தனியாக நிற்கும் அண்ணனை திரும்பித் திரும்பி பார்த்து விட்டு மனம் தாங்காமல் எல்லோரையும் உதறிவிட்டு அண்ணனுக்கு துணையாக நிற்க முடிவு செய்யும் அந்தக் காட்சி உருக்கமென்றால், இதை இன்ப அதிர்ச்சியுடன் எதிர்கொள்ளும் அவன், தன் பிடிவாதத்தை உதறி அவள் காதலித்தவனுக்கே திருமணம் செய்து கொடுப்பது கம்பீரம்.
ரஜினிக்கும் சரத்பாபுவும் பரஸ்பரம் ஏற்படுத்திக் கொள்ளும் அந்த இனந்தெரியாத வெறுப்பை சிறுசிறு காட்சிகளில் மெல்ல மெல்ல படிக்கட்டுகள் போல் அமைத்திருக்கும் உத்தி பாராட்டத்தக்கது.
இளையராஜா, பாலுமகேந்திரா, ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர்களின் பங்களிப்பைப் பற்றி அடுத்த பதிவில்......................
suresh kannan
6 comments:
test
முள்ளும் மலரும் தொடர்கதையில் காளி கடைசிக் காட்சியில் தன் தங்கையையும் அவள் கணவரையும் கொலை செய்யும் அளவுக்கே போய் விடுகிறான். (இங்கு குமரனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்து விடுகிறது). இருப்பினும் காளியின் மனைவி மங்கா அங்கு வந்து தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களிக் காப்பாற்ற முனைய, கடைசி நிமிடத்தில் காளியும் அவளுடன் சேர்ந்து தோள் கொடுக்க, இருவருமே உயிரிழக்கின்றனர். திரைக்கதையில் மகேந்திரன் செய்த முக்கிய மாற்றம் இது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு. நன்றி.
By: வசந்தன்
/////அவர்களிக் காப்பாற்ற முனைய, கடைசி நிமிடத்தில் காளியும் அவளுடன் சேர்ந்து தோள் கொடுக்க, இருவருமே உயிரிழக்கின்றனர். ///////
ராகவன்,
நீங்கள் எந்தப் படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
- suresh kannan
அன்பு சுரேஸ்,
நீங்கள் இகாரஸ் எழுதிய பதிவிற்கு கொடுத்த பின்னூட்டத்தைப் பார்த்தேன். உதிரிப்பூக்களுக்கு முன்பாகவே முள்ளும் மலரும் வந்து விட்டது. இதுதான் மகேந்திரனின் முதல்படம்.
உமாசந்திரனின் முள்ளும் மலரும் கதையை மூலாமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் மகேந்திரன் காளி என்ற ஒரு கேரக்டரை மட்டும் எடுத்துக் கொண்டு கதையை அவராக பின்னிவிட்டார். உமாசந்திரனின் கதை மிகவும் சாதாரணமான கதையே.
இதைப்போலத்தான் உதிரிப்பூக்கள் புதுமைப்பித்தனின் கதையை இன்ஸ்பிரேசனாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
அன்புடன்
ராஜ்குமார்
முள்ளும் மலரும், தமிழ் சினிமாவிலேயே எனக்கு பிடித்த நம்பர் ஒன் படம். எப்போதாவது இதைப்பற்றி எழுத ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லாமல் விட்டுவிடுவேனோ என்று பயந்தே இதுவரை எழுதாமல் தவிர்த்து வந்திருக்கிறேன். தொடருங்க சுரேஷ்.
டைட்டில்தான் பேஜாரா கீது!
Post a Comment