Tuesday, May 03, 2005

எழுபதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜாதா! ஆனால்.............

பொதுவாக நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதோ, என் பிறந்த நாளைக்கு யாராவது வாழ்த்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ கிடையாது. பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல ஒரு அபத்தம் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஓரு ஆணும் பெண்ணும் தங்களுடைய காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் செயலில் இயற்கையின் சதியின்படி அகஸ்மாத்தாக நாம் வந்து பிறந்து தொலைக்கிறோம். இதை ஏதோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி போல் நடிகர்களும், அரசியல்வாதிகளும், இன்னபிற விளம்பர விரும்பிகளும் போஸ்டர்களும் பத்திரிகை விளம்பரங்களுமாக அலட்டும் போது சிரிப்புத்தான் வருகிறது.

என்றாலும் சுஜாதா தன்னுடைய சமீபத்திய ஆனந்தவிகடன் கட்டுரைத் தொடரில் மே 3ம் தேதியோடு 70 வயது நிறைகிறது என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் வயதாவதால் ஏற்படும் உடல் மற்றும் மன பின்னடைவுகளை குறித்து நெகிழ்ச்சியாக எழுதியிருந்தார். தான் இறக்கப் போகிறோம் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம் கடைசியாக ஆதரவாகப் பேசுகிற அந்த தொனியை அந்தக் கட்டுரையில் காண முடிந்தது. ஆக.... மரணத்தை எதிர்கொள்ள அவர் மனதளவில் தயாராகி விட்டார் என்பதையே அந்தக் கட்டுரை உணர்த்துகிறது. மரணம் என்பது தவிர்க்க இயலாத சமாச்சாரம் என்றாலும் நம்மால் நேசிக்கப்படும் ஒருவர், நமக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய ஒருவர், நம்மை விட்டு பிரியப் போகிறார் எனும் போது ஏற்படும் இயல்பான சோகம் மனதைக் குடைகிறது.

()

சுஜாதாவைப் பற்றி இணையத்தில் இதற்கு முன்னர் ஒரளவு நிறைய எழுதியுள்ளேன். ராஜேஷ்குமார்களும், பட்டுக்கோட்டை பிரபாகர்களுமாக நான் கிரைம் நாவல்கள் என்கிற காட்டாற்று வெள்ளத்தில் திசை தெரியாமல் நீந்திக் கொண்டிருக்கும் போது அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி என்று உயிர்மெய் எழுத்துக்களில் பெயர்கள் ஆரம்பிக்கும் ஏறக்குறைய எல்லா நல்ல தமிழ் எழுத்தாளர்களைப் பற்றின அறிமுகத்தை அவர் கட்டுரைகளின் ஊடாக தந்து என்னை நல்வழிப்படுத்தினார்.

அறிவியல் சமாச்சாரங்களை அவரளவிற்கு எளிமைப்படுத்தி, அதே சமயத்தில் புரியும்படியாகவும் கட்டுரை எழுதியவர்களைப் பற்றி இனிமேல்தான் அறியப் போகிறேன். கட்டுரைகளின் ஊடாக அவ்வப் போது நம்மை ஆசுவாசப் படுத்தி இன்னும் எளிமையாக அதை விளக்கிச் சொல்லுவதில் சமர்த்தர். தமிழ் உரைநடையில் அவர் ஏற்படுத்திய பாதிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் பிரபலமான காலந்தொடங்கி இன்று எழுத ஆரம்பிக்கும் படைப்பாளிகளில் கூட அவரின் பாதிப்பை காண முடியும். பல இலக்கியக் கட்டுரைகளிலும் உலக அளவில் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றியும், பல நல்ல நூல்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

சரி.......... போதும்.

சுஜாதாவைப் பற்றி எழுதுவதென்றால் இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம். திகட்ட திகட்ட புகழ்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் நமக்குப் பிடித்த எழுத்தாளரை ஒரு பீடத்தில் அமர்த்தி அனுதினமும் அந்தாதி பாடிக் கொண்டே இருப்பதுதான் ஒரு வாசகனின் கடமையா? அவருடைய குறைகளை நாம் உணர்ந்திருந்தாலும் அவைகளை கண்டு கொள்ளாமல், யாராவது அதை சுட்டிக் காட்டும் போது, ..... த்தா போடாங்க..... என்று அறைகூவல் விடுவதுதான் ஒரு வாசகனின் வேலையா?

இல்லை. அந்த படைப்பாளியின் குறைகளையும் நாம் சுட்டிக் காட்டுவதுதான் முறையான செயலாக இருக்கும்.

அந்த வகையில் சுஜாதாவின் குறைபாடாக நான் காண்பது இதைத்தான்.
அவரின் புகழ் பெற்ற சிறுகதைகளான நகரம், அரிசி, பிலிமோத்ஸவ் போன்றவை சர்வதேசத்தரம் வாய்ந்தது மத்திய தர வர்க்கத்தினரின் பிரச்சினைகளை, கோழைத்தனங்களை, சோகங்களை எள்ளல் தொனியுடன் அவர் எழுதிய சிறுகதைகள் போற்றுதலுக்கு உரியவை. ஆனால் அதிர்ச்சி முடிவுகளுக்காகவே எழுதிய மற்ற சிறுகதைகள்....?

சிறுகதைகளில் எட்டிய உயரத்தைக் கூட நாவல்களில் அவரால் எட்ட முடியாமல் போனது. ஜன்னல் மலர், குருபிரசாத்தின் கடைசி தினம், கனவுத் தொழிற்சாலை, காயத்ரி, நில்லுங்கள் ராஜாவே போன்ற சில நாவல்களைத் தவிர மற்ற நாவல்கள் அபத்தமானவை. முக்கியமாக தொடர்கதைக்களுக்காக எழுதப்பட்ட நாவல்களின் அத்தியாயங்கள் ஒரு செயற்கையான அதிர்ச்சியுடன் முடியும். அடுத்த வாரம் அந்த அத்தியாயம் உயிர்பெறும் போது தரப்பட்ட அதிர்ச்சி அசட்டுத்தனமான வகையில் தெளிவாகும். சமீபத்திய உதாரணம்: யவனிகா, பேசும் பொம்மைகள்.

எது இலக்கியம், எது இலக்கியமல்ல என்று அவருக்குத் தெளிவாக தெளிந்திருக்கிறது. கணையாழியில் அவர் எழுதின கட்டுரைகளின் மூலம் இதை நாம் உணர முடிகிறது. அவரே உலக அளவிலான நல்ல இலக்கியவாதிகளின் படைப்புகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

'கணையாழிக்கு என்று ஒரு பேனா, குமுதத்திற்கு என்று ஒரு பேனா என்று நான் எடுப்பதில்லை' என்று சமீபத்தில் மறுபதிப்பாக வந்திருக்கும் 6961 நாவலின் பின்னட்டையில் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இது நிஜமில்லை என்று அவர் ராணிமுத்துக்காக எழுதியிருக்கும் 'வேணியின் காதலன்' என்கிற அசட்டு நாவலின் மூலம் தெரிகிறது.

என்னுடைய ஆதங்கமெல்லாம், எது நல்ல இலக்கியம் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் மற்றும் அதை எழுதக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள சுஜாதா, எதற்காக அந்த முயற்சியில் சற்று கூட ஈடுபடாமல் வணிக இதழ்களுக்காக தம்மை சமரசப்படுத்திக் கொண்டு பல வெற்றுக் குப்பைகளை எழுதித் தள்ளியுள்ளார் என்பதுதான். எழுதித்தான் சம்பாதிக்க வேண்டும் என்கிற பொருளாதார நிர்ப்பந்தம் ஏதும் அவருக்கு இருந்ததில்லை. 'பணம் என்கிற விஷயத்தை நான் பொருட்படுத்தியதில்லை' என்று சமீபத்திய ஆ.வி. கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.சில வாசகர்களின் அதீத வெளிப்பாடான விமர்சனங்கள் மட்டுமே போதும் என்று அவர் நினைக்கிறாரா? அது மட்டுமே அவருக்கு மன நிறைவை தருகிறதா?

()

இலக்கியவாதிகள் தங்கள் வட்டத்தில் சேர்க்காதது பற்றி அவருக்குள் ஆதங்கம் இருப்பதை அவருடைய கட்டுரைகளில் வெளிப்படும் மெலிதான புலம்பலின் மூலம் அறிய முடியும். ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் அதிகம் ஈடுபடவேயில்லையே? ஆனால் அவரை எவ்வாறு வகைப்படுத்துவது என்பது சற்று சிரமமான காரியம். பின்னாளில் அவரைப் பற்றி ஆராயும் ஒருவன், 'என்னய்யா இந்தாளு, நாய் வாய் வெச்சா மாதிரி எல்லா விஷயத்தையும் கொஞ்சம் கொஞ்சம் எழுதியிருக்கான்' என்று புலம்பக்கூடும்.

suresh kannan

11 comments:

Voice on Wings said...

உங்கள் வாசகனாக இந்தப் பதிவு குறித்து நான் கூற விரும்பும் குறை: உங்களுக்கு உடன்பாடு இல்லையெனினும் இது பிறப்பைக் கொண்டாடும் சமயம். இந்நேரத்தில் இறப்பு, மரணம் என்று சாவு மணி அடித்திருக்க வேண்டாம். எழுவதைத் தொட்டுவிட்டார் என்பதாலேயே "நம்மை விட்டு பிரியப் போகிறார்" என்றெல்லாம் எண்ணி ஏன் வருந்த வேண்டும் எனப் புரியவில்லை. He may still lead an active life.

மற்றபடி, "ஓரு ஆணும் பெண்ணும் தங்களுடைய காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் செயலில் இயற்கையின் சதியின்படி அகஸ்மாத்தாக நாம் வந்து பிறந்து தொலைக்கிறோம்." என்ற வரிகள் சிரிப்பை வரவழைத்தன.

Anonymous said...

நிச்சயமாக இந்தப்பதிவின் தொனியும் உள்ளடக்கமும், பதிவு நேரமும் எனக்குப் பிடிக்கவில்லை.

ஆங்கிலத்தில் எல்லாத்துறைக்கும் பத்திரிக்கை தனியாக இருந்தாலும், எல்லாவற்றிலும் வாய் வைக்கும் ரீடர்ஸ் டைஜெஸ்ட்டும் பிரபலம்தான். அதுவும்தான் இலக்கியத்திற்கு தேவைப்படுகிறது.

பினாத்தல் சுரேஷ் said...

the last post was from me.

Anonymous said...

என்னய்யா ஆச்சு உங்களுக்கு:(
- அன்பு

Anonymous said...

நண்பர்களுக்கு,
சுஜாதா நீண்ட நாள் வாழ வேண்டுமென்பதுதான் என் விருப்பமும்.

ஆனால் நான் சொல்ல வந்ததின் ஆதார தொனி இந்தப் பதிவில் ஒலிக்கிறதா என்று தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து அவசரம் அவச்ரமாய் எழுதியதன் விளைவு.

இதை இன்னும் விரிவாய், நான் சொல்ல வந்த எல்லா விஷயங்களுடன் முழுமையாய் எழுதுகிறேன்.

படித்து விட்டு இன்னும் காட்டமாய் திட்டுங்கள்.


- Suresh Kannan

Anonymous said...

கடைசியா என்ன சொல்லவரீங்க?

Heey..I am tying in Tamizh.

Anonymous said...

"நல்ல வாசகர், சுமாரான எழுத்தாளர்" என்று சுஜாதாவை என்று வகைப்படுத்தலாம். அறிவியல் விஷயங்களை தமிழிலில் தந்ததற்கும் பாராட்டலாம். அவருடைய கதைகள் மற்றும் கட்டுரைகளை ஒப்பிட்டால், அவர் சிறந்த கட்டுரையாளராகவே அடையாளம் காணப்படுவார்.

By: ag

Anonymous said...

அவநம்பிக்கை சுஜாதா மீதா இல்லை உங்கள் மீதாகவேவா எனத் தெரியவில்

Anonymous said...

அவநம்பிக்கை சுஜாதா மீதா இல்லை உங்கள் மீதாகவேவா எனத் தெரியவில்

Anonymous said...

//ஓரு ஆணும் பெண்ணும் தங்களுடைய காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் செயலில் இயற்கையின் சதியின்படி அகஸ்மாத்தாக நாம் வந்து பிறந்து தொலைக்கிறோம்//

eventhough i also dont like celebrating birthdays i am not accepting the above philosopy. Life is to live and we should be glad enough to be born.

manasu said...

antha "agasmaathu" mattum nadakkalaina.... intha " agasmaathai" patri neenga "agasmaathaa" pesa mudinchirukathu suresh.

pirantha naal kondaduvathu vena waste ah irukkalam... athukaka piranthathaye kevalama solla koodathu illaya....

kannan