Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, June 24, 2015

இரண்டு கட்டுரைகள் - ஜூலை 2015

ஜூலை 2015 இதழ்களுக்காக இரண்டு திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஒன்று, காக்கா முட்டை திரைப்படம் பற்றியது. 

இதில் என்ன எழுதப் போகிறேன் என்பதைப் பார்க்க நானே ஆவலாக இருந்தேன். (அடங்குடா!) தமிழில் இது கவனப்படுத்தப்பட வேண்டிய, வரவேற்கப்பட வேண்டிய  சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும் அதன் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கலாம் என்கிற நோக்கில் கதாபாத்திரங்களின், சம்பவங்களின் வடிவமைப்பில் நிகழ்ந்திருக்கும் போதாமைகளை, பிசிறுகளை, இயக்குநரின் மீதுள்ள மதிப்பேதும் குறையாத அளவிற்கு சுட்டிக் காட்டியுள்ளேன்.  இவைகளை பதேர் பாஞ்சாலி திரைப்படத்தின் காட்சிகளோடு ஒப்பிட்டுள்ளேன்.


***

இரண்டாவது, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படத்தைப் பற்றியது. சமீபத்தில் வெளிவந்த ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போனதொரு நல்ல திரைப்படம். ஆனால் 'நாயகனுக்கு பிறகு தமிழில் என்னைக் கவர்ந்த மிகச்சிறந்த திரைப்படம்' என்று பாரதிராஜா மிகையுற்சாகமாக கூறின அளவிற்கு அல்ல. (மணிரத்னம் மீது பாரதிக்கு அப்படியென்ன கோபம்).

இதில் துண்டு துண்டாக மிகச் சிறந்த தருணங்களும் சிறுகதைகளும் உள்ளன. குறிப்பாக பொருளீட்டுவது உள்ளிட்ட இன்னபிற காரணங்களுக்காக சென்னை எனும் பெருநகருக்கு புலம் பெயர்ந்திருக்கும் பிரம்மாச்சாரிகளும், தனிநபர்களும் வசிப்பிடத்திற்காக அல்லாடும் பகுதிகள். அப்படி தங்க இடம் கிடைக்காத ஓர் இரவின் நீளம் எத்தனை கொடுமையாக இருக்கும் என்பது உள்ளிட்ட பகுதிகள் மிகச் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன. பெருநகரத்தின் கதவுகள் இரவுகளில் இறுகச் சாத்திக் கொள்கின்றன.

ஏறத்தாழ அப்படியொரு அனுபவத்தை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. என்னுடைய வழக்கமாக அல்லாமல், நண்பர்களின் அழைப்பில் சென்று உரையாடிய ஒரு மாலைப்பொழுது நீண்டு கொண்டே போய் கிளம்ப நள்ளிரவாகி விட்டது. அந்த நேரத்தில் வீட்டுக்குச் செல்ல முடியாது. நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது. உடனிருந்த நண்பர் எங்காவது விடுதியில் உறங்கி விட்டு காலையில் கிளம்பலாம் என்று யோசனை தந்தார்.  

மழையில் நனைந்து கொண்டே ஓரளவிற்கு  தரமான, சுமாரான விடுதிகளில் சென்று கேட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அப்படிச் சென்ற நான்கைந்து விடுதிகளிலும் இடமில்லை என்று கறாராக சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மையில்லை என்பது அவர்களின் உடல்மொழியிலேயே தெரிந்தாலும் வெட்கத்தை விட்டு கெஞ்சிக் கேட்டாலும் 'அறை காலியில்லை' என்றே சாதித்தார்கள். உடனிருந்த நண்பர் தான் ஒரு பத்திரிகையாளர் என்று அடையாள அட்டையைக் காட்டியும் அவர்கள் மசியவில்லை. 

பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் இந்த இரவை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்று சற்று கலவரமாகி விட்டது. பதின்ம வயதுகளில் திரைப்படத்தின் இரவுக் காட்சிகளுக்கு தனியாகச் சென்று வீடு திரும்ப முடியாமல் காலியான ஆட்டோக்களிலும் பூங்காக்களிலும் சமயத்தில் சாலையோரத்திலும் கூட உறங்கின அனுபவம் எனக்கு உண்டுதான் என்றாலும் அவை பழங்கதையாகி நாகரிக உலகில் கலந்து விட்ட மேட்டிமைத்தனமும் சொகுசும் இப்போது  அப்படி அனுமதிக்குமா என தெரியாமல் இருந்தது. மட்டுமல்லாமல் காவல் துறையினரின் சந்தேகத்தை, அராஜகத்தை கடப்பதற்கு தனியான திறமை வேண்டும்.

இந்த நகரத்தின் தன்மையையும் சூழலையும் அறியாத ஓர் அந்நியர், ஊருக்கும் திரும்ப முடியாத படி இப்படி மாட்டிக் கொண்டால் என்ன செய்வார், எப்படி உணர்வார் என்பதை யோசித்துப் பார்க்கவே பயமாக இருந்தது. பெருநகரத்தின் இரவு முகம் என்பது அனுபவமில்லாதவர்களுக்கு திகிலை ஏற்படுத்துகிறது. பிறகு நண்பரின் யோசனைப்படி அந்த நேரத்தில் தெய்வாதீனமாக வந்த ஷேர் ஆட்டோவில் பயணித்து சென்னையின் புறநகரில் இருந்த சுமாரான விடுதியில் இடம் கிடைத்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது. 

கன்யாகுமரியின் விடுதிகளில் தனிநபராக வருபவர்களுக்கு இடம் தரப்படாது என்று விடுதி உரிமையாளர்கள் சங்கம் ஒரு முடிவே எடுத்திருக்கிறார்களாம். தனிநபர்களாக வருபவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகரித்திருப்பதே காரணம் என்கிறார்கள். பார்க்க: செய்தி. இப்படி பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

இப்படியாக பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் சாலையோரத்திலும் காவல்துறையினரின், சமூக விரோதிகளின், பணக்காரத் திமிரில்  கார் ஏற்றிக் கொல்லும் நபர்களிடையே ஒவ்வொரு இரவையும் கழிக்க நேர்பவர்களின் நிலைமையை யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. 

இந்த சம்பவத்தின்  உணர்வை மேற்குறிப்பிட்ட திரைப்படத்தின் காட்சிகள் மீள்நினைவு செய்ய வைத்து விட்டது. 

இரண்டு கட்டுரைகளும் முறையே உயிர்மை மற்றும் அம்ருதா ஜூலை 2015 இதழ்களில் வெளிவரக்கூடும். (பிரசுரமாகும் வரை உறுதியில்லை). நண்பர்கள் வாசித்து விட்டு தங்களின் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

suresh kannan

Monday, December 01, 2014

காவியத்தலைவன் - ஒற்றை வரி நிராகரிப்புகள்

காவியத்தலைவன் திரைப்படம் அல்லது அது போன்ற முயற்சிகள் வெளியாகும் போது அவை குறித்து இணையத்தில் வரும் ஒருவரி விமர்சனங்களையும் எள்ளல்களையும் இடக்கை புறந்தள்ளல்களையும் பார்க்கிறேன். இயல்புதான். முன்பு திரையரங்கு வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலித்த அசல் நிர்வாணமான உண்மையான விமர்சனங்கள் இவை. இப்போது இணையத்தில் ஒலிக்கின்றன. தமிழ் திரைப் படைப்பாளிகள் இவற்றைக் குறித்து எரிச்சல் கொள்வதோ புறக்கணிப்பதோ, குறை சொல்வதோ கூடாது. மாறாக இவ்வகையான உண்மை விமர்சனங்களை அவர்கள் கருத்தில் கொள்வதே அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. (மிஷ்கின் இந்த விஷயத்தில்தான் தவறு செய்கிறாார்). ஏனெனில் தமிழ் சினிமாவின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இவர்களே. இவர்களை பெரும்பாலும் மனதில் இருத்தித்தான் இயக்குநர்களும் படைப்புகளை அதற்கேற்ற சமரசங்களுடனும் உருவாக்குகிறார்கள் என்பது வெளிப்படை.

ஆனால் பாருங்கள், திரையரங்கின் வாசல்களில் பாமர ரசிகர்களிடையே ஒலிக்கின்ற குரல்களை அவர்களின் பின்புலத்தில் வைத்து ஒருவாறு யோசிக்க முடிகிறது. ஆனால் ஏறத்தாழ அதே மாதிரியான குரல்கள் கல்வியறிவு பெற்ற ஓரவிற்கான சமூக உணர்வு கொண்ட இணைய கனவான்களிடையேயும் ஒலிக்கிற போதுதான் நெருடுகிறது. இன்று தமிழ் சினிமா பெரும்பாலும் பஞ்ச் வசன நாயகர்களிடம் சிக்கி மசாலா சகதியில் மூழ்கியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். இதிலிருந்து விலகி நல்ல சினிமாக்கள் வந்து விடக்கூடாதா என்று நாம்தான் ஏங்குகிறோம். ஆனால் காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகள் வரும் போது அவற்றிலுள்ள குறைகளை ஊதிப்பெருக்கி  கருணையேயில்லாமல் ஏளனம் செய்கிறோம். இதன் மூலம் அவ்வாறான படங்கள் மேலும் வரவிடாமல் செய்யும் சூழலுக்கு நாமே ஒருவகையில் காரணமாய் இருக்கிறோம். (இவ்வகையான விமர்சனங்கள் ஒரு திரைப்படத்தின் வணிகவெற்றியை பாதிக்குமளவிற்கு இருக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஏனெனில் அஞ்சான் போன்ற திரைப்படங்களைப் பற்றி என்னதான எதிர்விமர்சனங்கள் எழுந்தாலும் அவைகளை உருவாக்கியவர்கள் பேராசையுடன் எதிர்பார்த்த லாபத்தை சற்று குறைக்கலாம் என்றாலும் நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்காது).

இவ்வாறான முயற்சிகள் மிகுந்த சிரமங்களுக்குப் பின் உருவாகும் விதங்களைப் புரிந்து கொண்டு அவற்றைப் பற்றிய நிறைகளை பாராட்டியும் குறைகள் எனக் கருதுபவைகளை மென்கண்டிப்புடன் எழுதப்படும் விமர்சனங்களைக் குறித்து ஆட்சேபம் ஏதுமில்லை. ஆனால் விடலைத்தனங்களுடன் போகிற போக்கில் குரலெழுப்பிச் செல்லும் ஒற்றை வரி அபத்தங்கள் நீங்கி அவைகளுக்கான பொறுப்புணர்வுடன் வெளிப்பட வேண்டும் என்பதுதான் நம் ஆதங்கம். 

குறைந்த பட்ஜெட்டில் என்றால் கூட ஒரு சினிமாவை உருவாக்குவதற்கு எத்தனை பொருளியல் தேவையும் மனித உழைப்புகளின் தேவையும் இருக்கின்றன என்பதை நாம் சரியாக அறியத் தேவையில்லையென்றாலும் ஓரளவிற்காவது அதை யூகிக்க முடியும். இன்று சினிமா எடுப்பதற்கு ஈடான உழைப்பை அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் செய்ய வேண்டியிருக்கிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும் அதைச் சரியாக சந்தைப்படுத்தா விட்டால் மக்களிடம் சென்று சேராததோடு பொருளிழப்பும் ஏற்படும் அபாயமுண்டு. இந்திய சர்வதேச திரைவிழாவில் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்ட படமான 'குற்றம் கடிதல்' என்கிற திரைப்படத்தைப் பற்றி இந்த விழாவிற்கு முன் எத்தனை பேருக்கு தெரியும்? இன்றும் கூட எத்தனை பேர் அதைப் பார்த்திருப்பார்கள்?

தெளிவான வணிக நோக்குடன் ' தோராயமாக இத்தனை கோடி லாபம் சம்பாதிக்கப் போகிறோம்' என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப திரைப்படம் உருவாக்குபவர்கள் ஒருவகை. ஆனால் இதிலிருந்து சலித்து விலகி தம்முடைய மனச்சாட்சியின் குரலுக்கேற்ப அதை ஒரளவிற்காவது திருப்திப்படுத்தும் வகையில் நல்லதொரு படைப்பை தந்து விட வேண்டும் என்கிற உந்துதலுடன் செயல்படுபவர்கள் ஒருவகை. காவியத்தலைவன் போன்ற முயற்சிகள் இவ்வகையான உந்துதல்களின் மூலம் சாத்தியப்படுபவையே. இவைகள் தொடர்ந்து வெற்றி பெறுவதன் மூலம் சூழல் மாற்றடைந்து, சில உலக சினிமாக்களைப் பார்த்து 'ஏன் தமிழில் இவ்வாறெல்லாம் உருவாக்கப்படவில்லை?" என்று நாம் ஆதங்கம் கொள்கிறோமே,   அந்த மாதிரியான படங்கள் உருவாகும் சூழல் இங்கும் ஏற்படக்கூடும்.

ஆனால் இவை குறித்து ஒரளவிற்காவது புரிதல் உள்ள நாம் இம்மாதிரியான முயற்சிகள் வளர்வதற்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம். இம்மாதிரியான இணைய விமர்சனங்கள் பெருமுதலீட்டுப்படங்களை ஒன்றும் செய்யவியலாது என்பது  நிதர்சனம் எனினும் சிறு முதலீட்டுப்படங்களை படகில் விழுந்த ஓட்டை போன்று ஒருவேளை மூழ்கடித்து விடலாம். இவ்வகையான அசட்டு விமர்சனங்களை நம்பி வாசிக்கும் ஒருபகுதியினராவது இவ்வாறான திரைப்படங்களை புறக்கணிக்க முடிவு செய்தால் ஒருவகையில் அது இழப்பே. 

தமிழிலும் நல்ல சினிமாக்கள் வெளிவரவேண்டும் என்று உண்மையாகவே ஆர்வமும் ஆதங்கமும் கொள்ளும் நாம், அந்த நிலைக்கு நகர்ந்து செல்லும் அடையாளங்களைக் கொண்ட முயற்சிகளை, அவற்றில் உள்ள குறைகளை பெரிதுபடுத்தாமல், ஆதரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இத்தனை காலமாக பெரும்பாலும் மசாலா குட்டையில் ஊறிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு ஒரே நாளில் விடிவு வந்து விடாது. மெல்ல மெல்லத்தான் மாற முடியும். வணிக சினிமாவின் பெரும்பான்மையான சம்பிதாயங்களை கைவிட முடியாமல்தான் இந்த மாற்றங்கள் நிகழ முடியும். வங்காளத்திலும் கேரளத்திலும் இதை விட தீவிரமான இடைநிலை சினிமாக்கள் உருவாகி அவை வெற்றியும் பெறுகிறதென்றால் அங்குள்ள பார்வையாளர்களும் இணைந்து இந்த இணக்கமான சூழலை சாத்தியப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது. 

காவியத்தலைவன் போன்ற மாற்று முயற்சிகளை ஒற்றைவரியில் 'மொக்கைடா மச்சான்' நிராகரிக்கும் கும்பல், ஒருவேளை இதை விடவும் சிறந்த சினிமாக்களை ஆதரிக்கிறார்களோ என்று பார்த்தால், லிங்கா போன்றவைகளுக்கு  'வீ ஆர் வெயிட்டிங் தலைவா' என்று உற்சாக கூக்குரலிடுகிறார்கள். உண்மையில் நாம் நிராகரிக்கவும் புறக்கணிக்கவும் செய்ய வேண்டியவை, தமிழ் சினிமாவை தின்று கொழுக்கும் அவ்வாறான வணிகத் திமிங்கலங்களையே. மிகத் தெளிவாக திட்டமிட்டு, புழுத்துப் போன ஒரே மசாலாவை வெவ்வேறு பாக்கிங்கிலும் பிராண்ட்டிலும் சந்தைப்படுத்தி மயக்கத்திலிருக்கும் பார்வையாளர்களின் பாக்கெட்டுகளில் கையை விட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் வணிக நோக்குத் திரைப்படங்களே நம் கடுமையான விமர்சனத்திற்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாக வேண்டியவை. இடைநிலை சினிமாக்கள் அல்ல.

suresh kannan

Monday, May 05, 2014

திரைப்பட டைட்டில்கள்



பெரும்பாலும் திரைப்படங்களின் டைட்டில்களே அத்திரைப்படத்தின் உள்ளடக்கத்தை சொல்லி விடும். அப்படித்தான் அவை அமைக்கப்பட வேண்டும். காமெடியா, திரில்லரா, சஸ்பென்ஸா, ரொமாண்டிக்கா.. என்று பார்வையாளர்களை தயார்ப்படுத்துவதற்கு டைட்டில் காட்சிகள் அமைக்கப்படும் தன்மைக்கு பிரதான பங்குண்டு. டைட்டில் கார்டுகளின் போதே அதன் பின்னணியில் காட்சிகளை துவக்கிச் செல்லும் அவசரக் குடுக்கைகளான இயக்குநர்கள் உண்டு. இது எனக்குப் பொதுவாக பிடிக்காது. காட்சியை கவனிப்பதா, நுட்ப கலைஞர்களின் பெயர்களை கவனிப்பதா என்று குழப்பமாக இருக்கும். சுமார் இரண்டரை மணி நேர திரைப்படத்தை உருவாக்க பெருமளவு உழைத்திருக்கும் நபர்களின் பெயர்கள் இரண்டரை விநாடிகளுக்கு மேல் கூட  இருக்காது எனும் போது அதையும் கவனிக்க விடாமல் செய்வது அவர்களின் உழைப்பிற்கு செய்யும் அநியாயம். மிருதுவான இசையில் அல்லது இசையே அல்லாமல் கறுப்பு நிற பின்னணியில் வெளிப்படும் டைட்டில் கார்டுகளே எனக்கு பொதுவாக பிடித்தமானது. இப்போதெல்லாம் டைட்டில்களில் வரும் சிறப்பான அனிமேஷன் காட்சிகளுக்காகவே ஒரு குழு உழைக்கிறது.

பழைய கால திரைப்படங்களில் டைட்டிலில் இளையராஜா பாடினால் அந்த திரைப்படம் ஹிட் என்று எப்படியோ ஒரு ராசி உருவாகி அதனாலேயே திரைப்படம் துவங்கும் போதே ராஜாவின் குரலை கேட்கும் அதிர்ஷ்டத்திற்கு உள்ளாகி விடும் நிலையில் இருந்தோம். ஒரு திரைப்படம் காண்பதென்பதே மிகவும் அபூர்வமாக இருந்த அந்த நாட்களில் திரைப்படத்திற்கு செல்வதும் அதற்கான திட்டங்களுமே மிக மகிழ்ச்சியையும் பரவசத்தையும் அளித்த நாட்கள் அவை. இதோ ஒரு சிறந்த வெகுஜன திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியை, பரவசத்தை  ராஜாவின் குரல் - குறிப்பாக கிராமம் சாாந்த திரைப்படங்களில் - இன்னமும் அதிகமாக உணர வைக்கும் என்பதை என்னுடன் இணைந்து எத்தனை பேர் என்னுடன் ஒப்புக் கொள்ளப் போகிறீர்கள் என்று தெரியவில்லை. எம்.எஸ்.வி கால பழைய திரைப்படங்களில் ஏறக்குறைய ஒரே மாதிரியான டெம்ப்ளேட்களில் வயலின்களும் டபுள் பேங்கோஸ்களும் அதிர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரின் பெயர் வரும் போது ஏதோ அவர்கள்தான் படத்தின் வில்லன்கள் என்பது போல இசை உயர்ந்து கொண்டே போய் உச்சத்தில் அதிர்ந்து நிறையும். காமெடி படங்கள் என்றால் முகத்தில் மாத்திரம் நடிகர்களின் படங்களைக் கொண்ட கேலிச் சித்திரங்கள் அதிவிரைவில் இடதும் வலதுமாக நகரும். பிறகு வந்த ஆக்ஷன் பழிவாங்கல் திரைப்படங்களில் கூலிங்கிளாஸ் அணிந்த துப்பாக்கி கொண்ட மனிதர்கள் நெகட்டிவ் எபக்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் போதே 'சூப்பரப்பு' என்று பரவசமாக இருக்கும்.

இதற்கு மாறாக விருது வாங்குவதெற்கென்றே எடுக்கப்படும் திரைப்படங்களின் டைட்டில்கள் அதற்கான சாவகாசத்துடனும் அழகியல் உணர்வுகளுடனும் துவங்கும் போதே 'இதோ ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம்' என்று தோன்றுகிற நிறைவான உணர்வு படம் முடியும் போது மிச்சமிருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

அப்படித்தான், சமீபத்தில் குறியீட்டுக் காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற ஒரு திரைப்பட இயக்குநரின் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். கறுப்பு நிற பின்னணியில் மெலிதான ஸெலோவின் இசையுடன் பெயர்கள் தோன்றி சில நீண்ட விநாடிகள் கழித்து கொட்டாவியான இடைவெளியுடன் அடுத்தடுத்த பெயர்கள் வந்து கொண்டிருந்தன. இரண்டிற்கும் இடையில் திரை இருளாகவே இருக்கும். அத்திரைப்படம் கண்பார்வையற்ற நபர்கள் பிரதானமாக நடித்திருந்த திரைக்கதையுடன் கூடியது என்பதை முன்பே அறிந்திருந்ததால் அந்த பாணி டைட்டில் அதற்கு பொருத்தமாகவே இருந்தை உணர்ந்தேன். இயக்குநரின் பெயர் வந்தபிறகும் சில விநாடிகளுக்கு திரை இருளாகவே இருந்தது.

விநாடிகள் நிமிடங்களுக்கு நகர்ந்தன. அப்போதும் திரை இருளாகவே இருந்தது. 'இதோ ஒரு பார்வையற்ற நபர் தூக்கத்திலிருந்து எழுந்து அறையிலிருந்த விளக்கைப் போடப் போகிறார்' என்கிற மாதிரியான காட்சி வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் நானும் காத்திருந்தேன்.

சில நிமிடங்களுக்கு பின்னரும் திரை இருளாகவே இருந்தது. பொதுவாக இம்மாதிரி ஆமை வேகத்தில் நகரும் சாவகாச திரைப்படங்களை நிதானமாக பார்க்கும் அனுபவம் எனக்கு ஏராளம் என்பதால் அப்படியொன்றும் பரபரப்பில்லாமல் காத்திருந்தேன். பார்வையற்ற நபர்களின் உலகத்தின் இருண்மையை, தனிமையை இயக்குநர் நமக்கு உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது என்று தோன்றிக் கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கழிந்தும் கூட திரை இருளாகவே இருந்தது. 'இது என்னடா .. ஓவர் குறியீடாக இருக்கிறதே' என்று எழுந்து சென்று பார்த்தேன்.

மின்சாரம் நின்று போய் சில நிமிடங்கள் ஆகியிருந்தது. 

suresh kannan

Friday, November 22, 2013

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்


எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர்,  இறைந்து கிடக்கிற புத்தகங்களுக்கு நடுவிலிருக்கும் புகைப்படங்களை  சமீபத்தில் பார்த்ததும் சஹஹிருதயர்களைப் பார்த்த அளவில்லா சந்தோஷம் ஏற்பட்டது. நான் தனியனில்லை என்கிற சந்தோஷமும். என்னளவில், வாசிக்கிறோமோ இல்லையோ அது ஒருபுறம். ஆனால்  புத்தகக் குவியல்களின் நடுவில் சும்மா  இருப்பதே சொல்லவியலாத மகிழ்ச்சியையும் நல்ல அதிர்வலைகளையும் ஏற்படுத்துகிறது. அவைகைள வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதே நமக்கு பிடித்த பெண்களை பிடித்தமான கோணங்களில் கவனித்துக் கொண்டிருக்கும் இன்பத்தை அளிக்கிறது. 'வாயேன் என்னை வந்து வாசியேன்' என்று சுற்றியுள்ள புத்தகங்கள் அழைத்துக் கொண்டேயிருக்கும் குரல்களைக் கேட்பது தனி இன்பம்.

என் படுக்கையறையின் கட்டில் முழுக்க புதத்கங்களால் இறைந்து கண்கொள்ளா காட்சியாக இருக்கும். என் மனைவி என் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும் பல விஷயங்களில் இதுவுமொன்று. (வாக்கியங்களுக்கு இடையி்ல் வாசிக்காதீர்கள்). சமையலறையும் வரவேற்பறையும் தேவையற்ற வஸ்துகளால் இறைந்திருக்கும் உண்மையைச் சுட்டிக் காட்டி அவரை பழிவாங்கி விடுவதில் சற்று திருப்தியாக இருக்கும்.  புத்தகங்களை கண்ணாடிச் சிறையில் அடைத்து விருந்தினர்கள் நம்மீது மதிப்பு கொள்வதற்காக காட்டும் வீண் ஜம்பங்களை விட புத்தகங்கள் இப்படி இறைபட்டு விருப்பமான நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பதை உடனே வாசிப்பதே சிறந்த காரியம். புத்தகங்கள் மாத்திரமல்ல, எவற்றையுமே உபயோகிக்காமல் வீணாக வைத்திருப்பதால் பல கேடுகள் விளையும்.

வீட்டில் மாத்திரமல்ல, என் அலுவலக மேஜையும் (அங்கும் கூட புத்தகங்கள்) காகிதங்களாலும் கோப்புகளாலும் நி(இ)றைந்திருக்கும். என் பாஸ் இதை என்னிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சொல்லி அலுத்து விட்டு விட்டார். இப்படியாக அஃறிணைகள் ஒழுங்கின்மைகளோடு இறைந்திருக்கும் ஒழுங்குதான் எனக்கு பிடித்திருக்கிறது. இப்படி இறைந்திருந்தால் சட்டென்று தேடி எடுப்பதும் எளிதாக இருக்கிறது.  பொருட்களை இப்படியாக இறைத்து வைத்திருப்பவர்களின் மனோநிலை,  பிசிறுகளும் குழப்பங்களும் நிறைந்ததாக இருக்கலாம்  என்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்தும் நிரூபித்தும் இருக்கிறார்களாம். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளை இந்த குப்பைகளின் கீழ் ஒளித்து வைத்தால் போகிறது. அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை.

அது போல் புத்தகங்களை வாசிக்கும் சிலர் அதில் அடிக்கோடிட்டும் குறிப்புகள் எழுதியும் தாம் வாசித்ததை நிரூபிக்கும் ஆவேசத்துடன் செயல்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை எத்தனை முறை வாசித்தாலும் அந்தப் புத்தகங்கள் அச்சிலிருந்து வெளிவந்த அதே புத்தம்புது அழகுடனும் வாசனையுடனும் தூய்மையுடனும் இருப்பதைத்தான் சரியாக எண்ணுவேன்.

புத்தகங்களை நாமறியாமல் காலால் தொட்டு விட்டால் அதைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் மரபு சார்ந்த பழக்கம் நம்மிடமிருக்கிறது. விவரம் அறியாத வயதுகளில் நானும் செய்திருக்கிறேன். ஆனால் நான் மிக மதிக்கும் புத்தகங்களின் மீது எவ்வித குற்றவுணர்வும் தயக்கமுமின்றி என்னால் கால் வைத்து ஏறி நிற்க முடியும். அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்துதான் எனக்கு மதிப்பே ஒழிய அச்சிடப்பட்டிருக்கும் காகிதங்கள் குறித்தல்ல. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய 'புலிநகக் கொன்றை' புதினத்தில், உடலுறவு கொள்ளும் வசதிக்காக தடித்தடியான புத்தகங்களான கார்ல்மார்க்ஸின் 'மூலதனத்தை' பயன்படுத்திக் கொள்ளும் ஒரு பாத்திரம் நினைவிற்கு வருகிறது.

இவையெல்லாம் ஏதோ முற்போக்குத்தனமாக சிந்தித்து அவை சார்ந்தவைகளை அவற்றை ஒரு ஜம்பத்துடன் வெளியிட்டும்  அந்தப் பழக்கங்களை முரட்டுத்தனமாக தனக்குள் திணித்துக் கொள்வது என்பதல்ல. சற்று பகுத்தறிவுடன் சிந்தித்தாலே இவைதான் சரி என்பது இயல்பாக எல்லோருக்கும் தோன்றிவிடுவதுதான் இது. நம்முள் திணிக்கப்பட்டிருக்கும் மரபு சார்ந்த பல கற்பிதங்களின் காரணமாகவும் ஆழ்மன வினைகளை மறுக்க முடியாத காரணங்களினாலும்தான் இவைகள் ஆச்சார மீறலாகவும் தவறுகளாகவும் நமக்கு தெரிகின்றன.

அ,முத்துலிங்கத்தின் முகநூல் குறிப்பு. 

suresh kannan

Friday, June 29, 2012

புத்துயிர்ப்பு

சமீபமாக ஏன் உங்கள் தளத்தில் ஏதும் எழுதுவதில்லை சில நண்பர்கள் தொடர்ந்து விசாரித்துக் கொண்டும் நினைவூட்டிக் கொண்டும் இருக்கிறார்கள். குறிப்பாக 'வழக்கு எண்' திரைப்படம் குறித்தான என் பார்வையை பல நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அறிகிறேன். அந்த நல்ல உள்ளங்கள் பேருந்திலோ ரயிலிலோ பயணிக்கும் போது பக்கத்து இருக்கையில் நல்ல 'பிகர்' அமர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நிற்க. இந்தத் தளத்தில் சமீபமாக எழுதாதது குறித்த குற்றவுணர்ச்சியும் ஆதங்கமும் எனக்கும் உள்ளது. எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்களும் ஆர்வமும் இருந்தாலும் அதை யதார்த்தத்தில் செயல்படுத்தாத முடியாத மனத்தடை குறித்து எனக்கே விளங்கவில்லை. இனியாவது இதைத் தாண்டி வரக்கூடிய மனபலத்தையும் நல்லெண்ணத்தையும் சேகரிக்க முயல்கிறேன். தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு நன்றி.

இந்தத் தளத்தின் தீவிர வாசகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக (அடங்குடா) சமீபத்தில் முகநூலிலும் (என்ன இழவு மொழிபெயர்ப்பு இது) கூகுள் ப்ளஸ்ஸிலும் எழுதிய சில குறிப்புகளை இங்கு பிரசுரிக்க விரும்புகிறேன். அவை உங்களின் மேலான பார்வைக்கு:

                                                                *       *     *    *

"இதற்காகத்தானா பாபு?"
என்கிறாள் ஜமுனா.
"ஆம் மகளே"
என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்.
வருத்தமாயும்
சங்கடமாயும்
உணர்கிறேன்.

                                                                 *       *     *    * 

ஒரு படைப்பில் எழுத்தாளனும் வாசகனும் ஏதேனும் சில புள்ளிகளில் மிக நெருக்கமாக சந்தித்துக் கொள்வதுண்டு. மிக அபூர்வமாக அந்தத் தருணங்களை கடக்கும் வாசகனுக்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளரை மிகவும் பிடித்துப் போய் தனது ஆதர்சங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்கிறான்.

அப்படியான ஓர் அனுபவத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் 'பின்நவீனத்துவவாதியின் மனைவி' (உயிர்மை, மே 2012) என்ற சிறுகதையின் மூலம் அடைந்தேன். சுரேஷ்குமார இந்திரஜித்தின் பல சிறுகதைகளை ஏற்கெனவே வாசித்திருந்தாலும் இந்தச் சிறுகதையை, தேர்ந்த பாட்டுக்காரனின் ஆலாபனையை 'வாஹ் வாஹ்' என்று சிலாகிக்கும் ரசிகன் போல, வரிக்கு வரி உற்சாகமாக பின்தொடர்ந்ததின் காரணம் எனக்கே புரியவில்லை. ஒரு ஏகாந்தமான மனநிலையில் அந்த சிறுகதையை வாசித்ததும் உபகாரணமாக இருக்கலாம் என யூகிக்கிறேன்.

சுரேஷ்குமார் இந்திரஜித் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் நிறைய எழுதுகிறார். சில எழுத்தாளர்கள் இவ்வாறான மீள்வரவின் போது முன்பு உச்சத்தில் இருந்த மீதமான வாசனையோடு வாசகனை சலித்துக் கொள்ள வைப்பார்கள். ஆனால் அவ்வாறில்லாமல் நன்றாகவே எழுதுகிறார் சுரேஷ்குமார்.

குறிப்பிட்ட இந்தச் சிறுகதையை (பின்நவீனத்துவவாதியின் மனைவி) நண்பர்களுக்கு அழுத்தமாக பரிந்துரைக்கிறேன். நீங்களும் அந்த அலைவரிசையை  ஒரு வேளை அடையக்கூடும்.

                                                                 *       *     *    * 

Jackie Chan retires as action hero after 100th film

- செய்தி

அய்யா சாக்கி சான், ஒங்களுக்கு விவரம் போதலீங்கய்யா. ஆக்சன் ஹீரோன்னா நீங்களேதான் உருண்டு டைவ் அடிச்சு சண்டை போடணும்னு நெனச்சீட்டு இருக்கீங்க. உடம்பெல்லாம் ரத்த காயமா நெறய இடத்துல தையல் போட்டுட்டு திரியறீங்க. எங்க ஊரு சூப்பர் நடிகருங்க கிட்ட இருந்து கத்துக்கங்க.. எழுபது வயசாயி சுகருக்காக இன்சுலின் ஊசி போட்டுக்கற ரேஞ்சுல இருந்தாலும் கழுத்துல இருந்து காலு வரைக்கும் மொச்சு மொச்சு முத்தா கொடுக்கற டூயட் பாட்டுல மாத்திரம் தானே மோந்து பார்த்துட்டு, உஷ் உஷ்னு பேக்ரவுண்டு மீயூஜிக் வர்ற கைய கால அசைக்கற காட்சிக்கு கூட டூப் போட்டுட்டு "நாங்க வேணாம்னு சொல்லியும் நெறைய சீன்ல.............. சாரே ரிஸ்க் எடுத்து பைட் செஞ்சிருக்காரு" ன்னு இண்டர்வியூங்கல டேரடக்கருங்க அளந்து விட வெக்கற சாமர்த்தியம் உங்களுக்கு ஏங்க வரலை? இந்த பயபுள்ளைங்க நம்பி கட்அவுட்டுக்கு பால்,பீர் ஊத்தருதுல இருந்து ஆட்சிப் பொறுப்பையே ஒப்படைக்கற அளவுக்கு ஒணர்ச்சி வசப்படற ஆடுங்க எல்லாம் ஒங்க ஊர்ல கெடையாதா, இல்ல அந்த சாமர்த்தியம் ஒங்களுக்கு இல்லையா...

அதான் சொன்னேனே... ஒங்களுக்கு வெவரம் பத்தலை. இன்னும் கொற காலத்துக்கு எப்படி பொழைக்கப் போறீங்களோ... என்னமோ போங்க...

                                                                 *       *     *    * 


சாவகாசமாக கிடைத்ததொரு தருணத்தில் (அதுக்காக மத்த நேரத்துல பிசி -ன்னு தப்பா நெனக்கப்படாது) கைபேசியில் தேவை / உபயோகமில்லாத தொடர்பு எண்களை அழித்து விடலாம் என்று ஏனோ மூளையில் தோன்றி அதை செயலாக்க முனைந்ததில் பின்வரும் அபத்த நகைச்சுவைகள் கிடைத்தன.

1) 'அந்நியன்' திரைப்படத்தில் விவேக் 'சிக்கன் பகோடாவை' வேறு வேறு பெயர்களாக ஜம்பிள் செய்து பார்ப்பது போல் 'கார்த்திக்' என்ற பெயரில் மாத்திரமே வேறு வேறு ஸ்பெல்லிங்கில் எண் கூட்டணியில் பத்து பதினைந்து இருக்கின்றன. மூத்திரச் சந்தில் பார்த்தாலும் பாதியில் நிறுத்தி விட்டு "உங்க நம்பர் கொடுங்க" என்று அப்போதைய அவசரத்தில் எந்த பெயரையோ உள்ளிட்டு பதிவு செய்ததில் அந்த 'கார்த்திக்' வரிசையில் ஒரிருவரைத் தவிர மற்ற எவருமே யாரென்று தெரியவில்லை.

இதில் பிரச்சினை என்னவெனில் 'ஆள் ஞாபகமில்லை' என்று அழித்து விடவும் முடியாது. முக்கியமான ஆசாமியாக இருக்கலாம். அல்லது 'நீங்கள் யார்?" என்று தத்துவார்த்தமாக அவரிடமே கேள்வி கேட்டு விடவும் முடியாது. அதை விட அபத்தமும் சங்கடமும் வேறு இருக்காது. தினமும் அசட்டு சிரிப்புடன் 'குட்மார்னிங்' சொல்லி ஓசிப் பேப்பர் கேட்கப் போகும் பக்கத்து வீட்டு வழுக்கைத் தலை மாமாவாகவும் இருக்கலாம். பிறகு பேப்பர் கிடைப்பது நின்று விடும்.

2) சில அலுவலக விஷயம் தொடர்பான நபர்கள் யாரென்று அடையாளம் தெரிந்தாலும் அவர்களிடம் (வேண்டா வெறுப்பாக) பேசுவது பொதுத் தேர்தல் மாதிரி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் இருக்கும். அவர்களையும் தேவையில்லை என்று நீக்கி விடவும் மூளை மறுக்கிறது. என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்கிற முன்ஜாக்கிரதை உணர்ச்சி.

3) ஒரே நபருடைய நாலைந்து எண்கள். சம்பந்தப்பட்டவரே மூன்று நான்கு எண்கள் மாற்றி தன்னுடைய முதல் எண்ணை மறந்து விட்ட நிலையில் என்னுடைய கைபேசியில் அது பத்திரமாக பதிவாகி, அது உபயோகத்தில் இருக்கிறதா இல்லையா என்கிற குழப்பத்திலேயே நீக்க முடியாமல் தவிப்பது.

4) சிலருடைய எண்கள் அவர்களின் தொழில் சார்ந்து பதிவு செய்து விட்டு (Electrician, Carpenter) பின்னர் 'யாரு, எலெகட்ரியசனா, என்று பெயரிட்டு அழைக்காமல் பொதுவாக அழைக்கும் சங்கடத்தை எப்படி தவிர்க்க? இதிலும் நாலைந்து எலெகட்ரியசன்கள், கார்ப்பெண்ட்கள். (உண்மையில் இவர்களின் எண்கள்தான் இருப்பதிலேயே அதி முக்கியம்).

5) பிறகு....... இம்சை சார்ந்த அழைப்புகளை பிரத்யேக அடையாளங்களுடன் பதிவு செய்து விட்டு பிறகு அதை நீக்கவும் முடியாமல் தவிப்பது. அதே இம்சைகள் சிறிது இடைவெளியில் பேசினால் அடையாளம் தெரியாமல் பேசி நாக்கைக் கடித்துக் கொள்ள வேண்டும்.

6) சிலருக்கு (அவர்கள் அறியாமல்) செல்லமாக அல்லது அவமரியாதையாக பெயர் பதிவு செய்து விட்டு மற்றவர்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ நம்முடைய கைபேசியை பார்வையிட நேரிட்டால் வயிற்றுக் கோளாறுடன் கையைப் பிசைந்து தவிக்கும் அவஸ்தையை எப்படி தவிர்ப்பது?

இறுதியாக... 'அடங்காப்பிடாரி... என்று யாருக்கோ பெயர் வைத்து விட்டு பிறகு மறந்தே விட்டேன். இப்போது அந்த 'அடங்காப்பிடாரி' யாரென்று தெரியாமல் தலையைத் தின்று கொண்டிருக்கிறேன்.

                                                                 *       *     *    * 

நித்யானந்தா ஆசிரமத்தில் கஞ்சா, மது பாட்டில்கள்: ரகசிய அறையில் இருந்து 50 சிறுவர்-சிறுமிகள் மீட்பு - செய்தி

இந்தச் செய்தியிலுள்ள நம்பகத்தன்மை ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு செய்தியை பொதுப்புத்தியின் அரிப்புக்கேற்றவாறு கிளுகிளுப்பாக கட்டமைத்துத் தருவதில் வணிக ஊடகங்களின் திறமையை நாம் பல வருடங்களாக பார்த்து வருகிறோம். இப்படியாக செய்தியேதும் 'உருவாக்கப்பட்டு' வராவிட்டால்தான் நாம் ஏமாந்து விடுவோம் என்று தோன்றுகிறது. இம்மாதிரியாக கிளுகிளுப்பு ஊடகங்களைத்தான் நாம் அதிகம் ஆதரிக்கிறோம் என்பதும் துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்.

                                                                 *       *     *    * 

'அரை மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவழிக்க இதில் ஏதுமில்லை'

என்று இணையத்தைப் பற்றி முன்பொரு முறை சுஜாதா சொன்னதை மனப்பூர்வமாக ஏற்கும் மனநிலைக்கு வந்து விட்டேன் என்று தோன்றுகிறது.

                                                                 *       *     *    * 

கிரேக்க அல்லது ஹீப்ரு மொழியில் மருத்துவ பெயரிடப்பட்ட உடம்பின் உதிரிபாகங்களில் ஒன்றோ அல்லது பலவோ அல்லது எதுவோ ஒத்துழைக்க மறுத்ததின் விளைவாக ஆயாசமாக இருக்க இன்று அலுவலகத்திற்கு மட்டமடித்து விட்டேன். போனஸாக கிடைத்த இந்த சாவகாசத்தை எப்படி கரைக்க என்று மலைப்பாக இருக்கிறது. செய்ய நிறைய வேலைகள் இருப்பது போலவும் எதுவுமே இல்லாதது போலவும் இருக்கிறது. என்னென்ன வேலைகள் (?!) இருக்கின்றன என்று பட்டியலிட்டுப் பார்த்தேன்.

1) 1939-ல் வெளிவந்த அல்பேனிய திரைப்படத்தை இன்று புரியாமலேயே பார்த்துவிட்டு "இருபது வருடங்களுக்கு முன்பு தில்லி சர்வதேச திரைவிழாவில் பத்து கிலோமீட்டர் நடந்து சென்று குளிரில் நடுங்கிக் கொண்டே பார்த்தேன்" என்று ஒரு ஜல்லியடி பதிவு எழுதிப் பார்க்கலாம்.

2) மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை ஒரு முறை பிரித்து வாசனை பார்த்து விட்டு குறைந்த பட்சம் ஒழுங்காக அடுக்கியாவது  வைக்கலாம்.

3) அடுத்த நாள் அலுவலகத்திற்கு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்கிற பிரக்ஞை ஆழ்மனதில் நெருடிக் கொண்டேயிருக்கிற வழக்கமான குற்றவுணர்வின்றி சாவகாசமாக மனைவியுடன் கூடிப் பார்க்கலாம்.

4) சில தருணங்களில் கவனித்திருந்த, மிகச்சரியாக மாலை 05.00 மணிக்கு வந்து 05.30 வரை பூனை நடை பழகும் எதிர் மாடி ஆண்ட்டி இன்றும் நேரத்திற்கு வந்து உடல் நலத்தை சரியாக பராமரிக்கிறாரா  என்று அவரின் உடல் ஆரோக்கியம் குறித்த மனிதநேயத்துடன் காத்திருந்து பார்க்கலாம்.

5) வழக்கமாக சென்று அழைத்து வருகிற மனைவி்க்குப் பதிலாக குழந்தைகளை பள்ளிக்குச் சென்று அழைத்துவந்து ஆனந்த அதிர்ச்சி தரலாம். (அய்யோ லீவு போட்டீடிங்களா! அப்ப நாங்க இன்னிக்கு டிவி பார்க்க முடியாதா?)

6) ஜன்னல் கம்பி துடைப்பது, கழிவறை கழுவுவது, மின்கட்டணம் செலுத்துவது, என்று முடிவில்லாமல் நீளும் லெளகீகக் கடமைகளில் ஏதாவது ஒன்றையாவது முணுமுணுக்காமல் செய்து விட்டு வரலாம்.

7) எப்போதும் சுமையாக அழுத்திக் கொண்டிருக்கும் இருத்தயியல் கேள்விகளுக்கு விடைகாணும் முயற்சியில் மூலையில் அமர்ந்து மோட்டுவளையைப் பார்த்து மோனத்தவத்தில் ஈடுபடலாம்.

8) இரண்டு தலைகாணிகளுடன், பில்லா - 2 திரைப்பட போஸ்டரில் அஜித் பக்கத்தில் மந்தகாசமாக சிரித்து மனதை விட்டு அகல மறுக்கும் ஏதோவொரு நாட்டு நடன அழகியை பெருமூச்சுடன் நினைவு கூர்ந்து குப்புறப்படுத்து தூங்கிக் கழிக்கலாம்.

எனக்கென்னவோ கடைசி காரியத்தைத்தான் கச்சிதமாக செய்து முடிப்பேன் என்று தோன்றுகிறது.

                                                                 *       *     *    * 

http://newindianexpress.com/entertainment/reviews/article547004.ece

'கலியுகம்' ஆடியோ ரிலீஸில் நடந்த சர்ச்சை தொடர்பான செய்தியை வாசிக்க எரிச்சலாக இருந்தது. தமிழ் சினிமாக்காரர்கள் தங்களைப் பற்றி எந்தமாதிரியான சுயமதிப்பீடு வைத்திருக்கிறார்கள் மற்றும் எப்படியெல்லாம் அந்த போலி மதிப்பீடுகளைக் கட்டியமைத்து அதை மற்றவர்கள் போற்றி வணங்க வைக்க பாடுபடுகிறார்கள் என்பதையெல்லாம் அறிவதற்கான ஒரு சிறு வெளிச்சக் கீற்று இச்சம்பவம் என்பதாகப் படுகிறது.

'தமிழி்ல் சினிமா குறித்தான விமர்சனக்கலை என்பது இன்னமும் வளரவில்லை. வணிக இதழ்கள் தங்களின் பிரத்யேக சலிப்பூட்டும் வணிக நோக்கு சட்டகங்களுக்கு உட்பட்டு எழுதுகின்றன என்றால் மாற்று இதழ்கள் தங்களின் அரசியலுக்கு உட்பட்டு எழுதுகின்றன' என்கிற கருத்தை (நினைவிலிருந்து எழுதுகிறேன) முன்வைத்தவர் வேறு யாருமல்ல. 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம். அதுவும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சையில் மையமாக இருந்த அதே திரைப்படத்தைப் பற்றி (வழக்கு எண்.18/9) திரைப்பட இயக்குநர்கள் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் இவ்வாறு பேசினார். அந்த நிகழ்ச்சியில் ஓரளவிற்காவது உருப்படியாக பேசியவர் இவர் மாத்திரமே.

நிலைமை இவ்வாறிருக்க 'உங்களது விமர்சனங்களை வெளிப்படையாக எழுதாதீர்கள். எங்களின் வணிகம் பாதிக்கப்படும்' என்று சினிமாக்காரர்கள், எழுத்தாளர்களிடம் தெரிவிப்பது சமூகம் குறித்த எவ்வித அக்கறையுமல்லாத அப்பட்டமான சுயநலம் சார்ந்த கூச்சல். 'எதிர்மறை விமர்சனங்களை இயக்குநர்களிடம் தனியாக சொல்லலாமே?'' என்று ஆதங்கப்பட்டிருக்கிறாராம் ஒரு தயாரிப்பாளர். அய்யா, இது என்ன தொடையில் வந்திருக்கும் கட்டியா, மருத்துவரிடம் தனியாக சென்று ஆலோசனை கேட்க... மோசமான கலைப்படைப்புகள் வெளியாவது ஒரு மோசமான சமூகத்தின் நோயக்கூற்று அடையாளம். அதை பொது மேடையில் வைத்துததான் அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும்.

வழக்கு எண்ணை மோசமான தமிழ்வணிக சினிமா சூழலில் வைத்து மதிப்பிடும் போது ஓர் ஆரோக்கியமான குறிப்பிடத்தகுந்த முயற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்களே போட்டுக் கொள்ளும் விளம்பரங்களைப் போலவும் ஒருவரையொருவர் சொறிந்து கொண்டு பிரகடனப்படுத்திக் கொள்வதைப் போலவும்  'உலகத்தரமான சினிமா' 'அபூர்வமான கலைப்படைப்பு' 'குறிஞ்சி மலர்" என்கிற அடைமொழிகளுக்கெல்லாம் நிச்சயம் தகுதியில்லாதது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். இந்த சுயசொரிதல்களின் போதுதான் பார்வையாளர்களுக்கு இந்த ஆபாச அரசியலின் மீது நிச்சயம் கோபமும் எரிச்சலும் எழுகிறது.

நல்ல இலக்கியமும் சினிமாவும் ஒன்றையொன்று நெருங்குவது நல்ல சினிமா உருவாவதற்கான ஆரோக்கியமான அடையாளம் என்பது பல காலமாக கூறப்படுவது. அது தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சற்று சாத்தியப்பட்டுக கெர்ணடிருப்பது குறித்து மகிழ்ச்சியே. அவ்வாறு தமிழ் சினிமாவில் புகும் இலக்கியவாதிகளும் மோசமான சினிமாக்கள் குறித்தோ அல்லது சுமாரான முயற்சிகள் வானுலக புகழப்படுவது குறித்தோ (குறைந்தபட்சம் தங்களின் சுதந்திரமான வெளியில்) எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் கள்ள மெளனம் சாதிப்பது சங்கடத்தையும் எரிச்சலையும் தருகிறது. இதையும் மீறி எழும் குரல்களையும் அதன் ஆரமப நிலையிலேயே சினிமாக்காரர்கள் வணிக காரணங்களினால் அழுத்திக் கொன்று விட நினைப்பது சினிமாவிற்கும் சமூகத்திற்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம்.

வழக்கு எண் திரைப்படம் குறித்து நீண்ட நாட்களாக எழுத நினைத்து தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அதை உடனே எழுதுவற்கான உத்வேகத்தை இச்சம்பவம் அளித்திருக்கிறது. பார்ப்போம்.

                                                                 *       *     *    * 

லீலை என்றொரு தமிழ்த் திரைப்படம் பார்த்தேன்.

சிறியமுடிச்சை வைத்துக் கொண்டு நேர்த்தியான திரைக்கதையினால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் (எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக இருந்தவராமே?). திரைப்படம் 2008-லேயே தொடங்கப்பட்டும் வணிகக்காரணங்களினால் தாமதமாகி சமீபத்தில் வெளியாகி போதுமான விளம்பரமில்லாமல் பரவலாக வெளிப்படாமலேயே சுருங்கி விட்டது துரதிர்ஷ்டம்.

ஹீரோ ஷிவ் பண்டிட் விளம்பர மாடல் போல. அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பல காட்சிகளில் இளமையாகத் தோன்றினாலும் சில காட்சிகளில் முத்தலாகத் தெரிகிறார். ஆரம்ப கால ரகுவரனை நினைவுப்படுத்துகிறார். ஒரு சாயலில் எஸ்.ஜே. சூர்யாவைப் போலவே தோன்றுபவரை பிரதான பாத்திரத்திற்கு இயக்குநர் தேர்ந்தெடுத்தற்கு இடிபஸ்ஸொ இடியாப்ப காம்ப்ளக்ஸோ காரணமாக இருந்திருக்கலாம். ஹீரோயின் மனசி பரேக் மனசில் ஒட்டவேயில்லை. சகிகத்துக் கொண்டு பார்த்தேன்.

சந்தானமும் படத்தில் இருக்கிறார். அவர் வரும் காமெடி டிராக்குகளைத் தவிர படத்துடன் தொடர்புடைய காட்சிகளில் வழக்கத்திற்கு மாறாக அடக்கி வாசித்திருக்கிறார். தொடர வேண்டும். பட்ஜெட் காரணத்தினாலோ என்னவோ பெரும்பான்மையான காட்சிகள் சாப்ட்வேர் கம்பெனியையே சுற்றி வருகிறது. இருந்தாலும் போரடிக்காமல் இருந்ததற்கு முன்னர் சொன்னது போல் இயக்குநரின் சுவாரசியமான திரைக்கதை காரணம்.

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் 'ஜில்லென்று ஒரு கலவரம்' 'பொன்மாலைப் பொழுது' போன்ற பாடல்கள் நன்றாக வந்துள்ளன. முதல் பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.  பின்னணி இசையைப் பொறுத்தவரை ராஜாவின் சாயலைத் தொடுவதற்கு கூட இனிமேல் இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும் போல.

நல்லதொரு ஃபீல்குட் திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது. நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.


                                                                 *       *     *    * 



இணையத்தில் 'பைத்தியக்காரன்' என்ற பெயரில் எழுதி வந்த நண்பர் சிவராமன், தினகரன் சப்ளிமெண்ட் இதழ்களில் அசத்தலான மொழியில் எழுதும் சினிமா கட்டுரைகள் குறித்து பலர் அறிந்திருக்கலாம். அறியாதவர்களுக்காக:

பொதுவாக இந்த மாதிரி சப்ளிமெண்ட்ரிகளை 'நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து' மாதிரி தூக்கிப் போட்டு விடுவதே என் வழக்கம். அல்லது பளபளவென்று ஜிகினா தொடையுடன் இருக்கும் ப்ளோ -அப் களை சற்று நேரம் வெறித்து பார்த்து விட்டு அதில் வரும் trivia-க்களை சற்று கொறித்து விட்டு எறிந்து விடுவது வழக்கம். அதாவது இந்த இதழ்களை தேடி வாசிக்க சற்றும் மெனக்கெடுவதில்லை.

ஆனால் என்னுடைய இந்த வழக்கத்தை மாற்றி இவருடைய கட்டுரைகளுக்காகவே  இந்த துணையிதழ்களை தேடி வாசிக்கும் நிலைமைக்கு என்னை மாற்றியதில் சிவராமனின் சிநேகமான எழுத்துக்கு பெரும் பங்குண்டு.

தென்னிந்திய சினிமாவின் லேட்டஸ்ட் படங்களின் நிலவரங்கள், அதிலுள்ள அரசியல்கள், காமெடிகள், நடிக, நடிகையர்களின் விவரங்கள் போன்றவைகளை பறவைப் பார்வையில் ஒருவர் எளிதாக அறிந்து கொள்ள சிவராமனின் கட்டுரைகளை வாசித்தாலே போதும். அதிலும் சில குறிப்புகளின் இறுதியில் அவர் தரும் ஆங்கில one liner-கள் அட்டகாசம். மேலோட்டமாய்ப் பார்த்தால் எவரும் எழுதிவிடும் பாவனையில் இருந்தாலும் அந்த விவரங்களைத் திரட்டுவதற்கும் அதை 'அஜால்குஜாலான' மொழியில் உருமாற்றி சுவாரசியமான தகவல்களாக தருவதற்கும் எத்தனை உழைப்பு வேண்டியிருக்கும் என்பதை ஒரு கட்டுரையையாவது எழுதிப் பார்த்தால்தான் தெரியும்.

இணையத்தில் (சிதைவுகள்) சிவராமன் எழுதி வந்தது ஏறக்குறைய நின்று விட்ட நிலையில் இந்த இன்னொரு 'சிவராமனின்' எழுத்துக்கள் அந்த ஆதங்கத்தை சற்று மட்டுப்படுத்தினாலும் அசல் சிவராமனின் சுயம் வெளிப்படும் அந்த ஆவேச எழுத்தை மிஸ் செய்யும் ஆதங்கம் சற்றும் குறையவில்லை.

கடந்த வெள்ளி மலரில் இயக்குநர் அனுராக் காஷ்யப் பற்றி 'இந்தி சினிமாவின் பாலா' என்று சிவராமன் எழுதியிருக்கும் இந்த கட்டுரை இதுவரை வந்தவற்றின் உச்சம் எனலாம். வாசித்து மகிழுங்கள். (பக்கம் 22,23,24)

http://www.dinakaran.com/E_Book.asp?id=24&showfrom=6/22/2012&cat=22
 
 
                                                                 *       *     *    *
 
 
http://www.jeyamohan.in/?p=28150

காலையில் என்னை நெகிழ வைத்த கட்டுரை. இயக்குநர் துரை மற்றும் நடிகர் ஷாமின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. ஒரு சினிமா உருவாவதின் பின்னாலுள்ள ரத்தத்தையும கண்ணீரையும் யூகிக்கத்தான் முடிகிறது.

ஆனால் ஒரு கறாரான விமர்சகன், இந்த சென்டிமென்டிடுகளை, உழைப்பை, அர்ப்பணிப்பை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை அணுக முடியாது, சலுகை காட்ட முடியாது. அதனுடைய ஒட்டு மொத்த இறுதி் வடிவம்தான் ஒரு பார்வையாளனாக அவனுக்கு முக்கியம். எவ்வித அரசியலும் மனச்சாய்வுமின்றி, அற்புதமாக இருந்தால் அந்த சினிமாவை தூக்கி வைத்துக் கொண்டாடவும் மோசமாக இருந்தால் தூக்கிப் போட்டு மிதிக்கவும் அவன் தயங்க மாட்டான்.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டுமென்று மனப்பூர்வமாக விழைகிறேன். படம் வெளிவந்தவுடன் திரையரங்கில்தான் சென்று நிச்சயம் காண வேண்டுமென்று உறுதியெடுத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.


suresh kannan

Wednesday, August 03, 2011

விசித்திர நிறப் பிரச்சினை



புதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.

ஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை? அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன்? சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா?. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா? மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா?

குறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொருத்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.

இருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது?

மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)

suresh kannan

Monday, December 29, 2008

திமுக: இளவரசருக்கு முடிசூட்டு விழா

தி.மு.க.ராஜ்யத்தில் மகாராஜாவின் பிரியமான இளவரசருக்கு நடந்த முடிசூட்டுவிழா கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் பாக்கியத்தைப் பெற்றேன். நான் முன்பே சொல்லியிருப்பதைப் போல 'காமெடி திரை' என்றெல்லாம் தனி சானல் தொடங்காமல் எல்லா கட்சிகளின் அரசியல் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்புகிறாற் போல் ஒரு சானல் ஆரம்பித்தால் வடிவேலு, விவேக் எல்லாம் எடுபடாமலே போய்விடுவார்கள். அவ்வளவு காமெடியாக இருக்கும். அதை நிரூபிக்கிறாற் போல்தான் இருந்தது இந்த நிகழ்வுகளும்.

சந்தைக்கடை மாதிரி ஒலித்த கூச்சலின் பின்னணியில் கழக உடன்பிறப்புகளின் மத்தியில் பரிதாபமான தோற்றத்தில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவர் விரும்பியோ விரும்பாமலோ மாலைகளும் பொன்னாடைகளும் மேலே விழுந்து கொண்டே இருந்தன. இதே மாதிரியானதொரு காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தேன். காஞ்சி மட சீனியரின் நூற்றாண்டு விழாவிலும் இதே போல் அவர் மலங்க மலங்க விழித்து அமர்ந்திருக்க மாலைகளும் தங்க நாணயங்களும் அவர் தலை மேல் கொட்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

Photobucket

ஸ்டாலினை வாழ்த்த வந்தவர்கள் (அதாவது அட்டெண்டென்ஸ் போட வந்தவர்கள்) தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை எப்படியாவது நிறுவ முயற்சி செய்தது காமெடியாக இருந்தது. ஸ்டாலினுக்கு மற்ற நிறங்களில் பொன்னாடை போர்த்தியவர்கள் கருணாநிதிக்கு மாத்திரம் ஞாபகமாக மஞ்சள் நிற பொன்னாடைகளை சமர்ப்பித்து காலில் விழுந்து அவரின் ஆசிகளைப் பெற்றனர். நேரம் ஆக ஆக பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு செக்யூரிட்டிகளால் பிடுங்கி பின்னால் வீசப்பட்டன. ரோஜாப்பூவாக இருந்தாலும் தொடர்ந்து அடித்தால் வலிக்காதா என்ன?. இலவு காத்த கிளி போல் எழவு காத்த கிளியாக அமர்ந்திருந்த 'அன்பழகனை' பாவம், கண்டு கொள்ள ஆளே இல்லை. மூக்கை நெருடியவாறு அமர்ந்திருந்தார். கருணாநிதியின் நிழல் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு பதிலாக அமர்ந்து வந்த சண்முகநாதனை காணவில்லை. அதற்குப்பதிலாக ஒருவர் பெரியவாளிடம் பேசும் சிஷ்யகேடிகள் மாதிரி.. மன்னிக்கவும் சிஷ்யகோடி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு கருணாநிதியிடம் பேசினார்.

இனி அரசு விழாக்களில் பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கு பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கருணாநிதி எப்பவோ கூறிய நினைவு. காந்தி சொன்னதை அவர் இருக்கும் போதே பின்பற்றாதது மாதிரி உடன்பிறப்புகளும் கருணாநிதி சொல்லியிருந்ததை ஞாபகமாக பின்பற்ற விரும்பவில்லை. (காந்தியுடன் கருணாநிதியை ஒப்பிட்டது குறித்து திமுக காரர்கள், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் என்னை பாராட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு காந்தியை திட்டினாலும் பரவாயில்லை. சோனியா காந்தியை திட்டக்கூடாது).

ஒரு ஆச்சரியமும் நடந்தது. யாரோ ஒரு கலகவாதி பொன்னாடைக்கு பதில் புத்தகத்தை அளிக்க அதுவரை அசையாமல் அமாந்திருந்த கருணாநிதி சலனமடைந்து அந்தப் பரபரப்பிற்கிடையிலும் 'அது என்ன புத்தகம்?' என்று மெனக்கெட்டு கவனித்ததை புத்தகப்பிரியனான நான் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.

கூச்சலின் இடையே யாரோ ஒருவர் பலத்த சத்தத்துடன் சண்டையிடும் குரல் கேட்டது. கலைஞர் டிவியில் உடனே ஒலியை அமுக்கி பின்னணி இசையை ஓடவிட்டனர். ஆனால் சன்டிவியில் இதை தொடர்ந்து கேட்டு ரசிக்க முடிந்தது.

பத்திரிகையாளர்கள்தான் பாவம். ஒவ்வொரு முக்கியமான தலைவர்கள் பொன்னாடை அணிவிக்கும் போதெல்லாம் இலவச தொலைக்காட்சி பெட்டி வாங்க வந்தவர்கள் போல் முண்டியடித்துக் கொண்டு "அண்ணே, அண்ணே... சார்... சார்.... " என்று புகைப்படம் எடுக்க இறைஞ்சிக் கொண்டிருந்ததைக் காண பரிதாபமாக இருந்தது.

'இந்தப் பதவியை யாரும் என்னிடமிருந்து பிடுங்கவில்லை. நானாகத்தான் முன்வந்து தம்பி ஸ்டாலினை பொருளாளராக ஆக்கும் யோசனையை தலைவருக்கு அளித்தேன்' என்று ஆற்காடு வீராசாமி ஒரு பரிதாப சுயவாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார். 'நான் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்' என்று திராவிட தலைவர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆக்கப்பூர்வமான தொண்டர்களுக்கு தெரியாதா? அதே போன்ற அர்த்தத்தில்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எப்படியோ கருணாதிக்குப் பின் ஸ்டாலின் என்று நெடுங்காலமாக உலவிக் கொண்டிருந்த உண்மையான வதந்தி, அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டு விட்டது.

மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை நடப்பதுதான் ஜனநாயகம் என்று ஐந்தாங் கிளாஸ் வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்போது இந்திராகாந்தி பிரதமர் என்றும் ஞாபகம். என் மகள் படிக்கும் போது ராகுல் காந்தி பிரதமராக இருக்கலாம்.

ஜெய்ஹிந்த்.

சொல்ல மறந்தது: கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் சன்னே முதலில் ஒளிபரப்பியது. என்ன இருந்தாலும் சீனியரல்லவா! ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக அரசு.... என்று லட்சத்தி பன்னிரெண்டாயிரத்தி முந்நூற்று ஐந்தாவது தடவையாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க பரிதாபமாக இருந்தது. 2011-ல் முதல்வராகும் வரிசையில் நிற்கும் விஜய்காந்த்,சரத்குமார் போன்றவர்கள் கதி என்னவாகும் என்று யூகிக்க முடியவில்லை.

ஸ்டாலினின் blog

suresh kannan

Friday, December 12, 2008

சாரு வீட்டு கழிவறை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன தீண்டாமை' என்கிற புதிய சொல்லாடலை முன்வைத்து கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். திரைத்துறையினர், அரவாணிகள், திருமண/நில தரகர்கள், மதுக்கடை பணியாளர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள்/ அரசியல்வாதிகள், காவல்துறையினர் போன்றவர்களை நம் சமூகம் எந்தவித காரணங்களுமின்றி கற்பிதங்கள் காரணமாக முன்தீர்மானத்துடன் தேவையற்ற வெறுப்பை/அருவெறுப்பை/ஒதுக்குதலை அவர்கள் மீது காட்டுகிறது. இவ்வாறாக ஒதுக்கப்படுபவர்கள் ஒரு குழுவாக தங்களின் கசப்பான அனுபவங்களை தங்கள் முன் வைத்தனர். சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருந்த எதிர்க்குழுவினர் எந்த காரணங்களுக்காக தாங்கள் அவர்களை ஒதுக்குகிறோம் அல்லது ஒதுங்குகிறோம் என்பதை கூறினர்.

ஒதுக்கப்படுபவர்களின் குரல்கள் சில:

(1) நான் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். இதனாலேயே என்னை "ஊத்திக்குடுக்கற வேலைய செய்யறவன்" என்கிற அருவெறுப்போடும் கிண்டலோடும் என் பணியை நோக்குகின்றனர்.

(2) நான் ஒரு துணை நடிகை. இதனாலேயே எனக்கு பலர் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் வெயிலாக இருக்கிறதே என்று அருகிலிருந்த வீட்டில் நிழலுக்காக ஒதுங்கப் போகும் போது அந்த வீட்டினர் அருவெறுப்புடன் என்னை துரத்தியடித்தனர். நான் செய்த பாவம் என்ன?

(3) நான் ஒரு அரசியல்வாதி (கவுன்சிலர்). இந்த காரணத்திற்காகவே எனக்கு பெண் தர மறுத்தனர்.

(4) நான் ஒரு விவாகரத்து பெற்ற பெண். இதனால் என் பிறந்த வீட்டிலேயே என்னை துரத்தியடித்தனர். அலுவலகத்தில் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் நோக்கில் அணுகினர். உறவினர்கள் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு என்னை கூப்பிடுவதில்லை.

(5) நான் ஒரு உதவி இயக்குனன். திரைத்துறையை சேர்ந்தவன் என்ற காரணத்தினாலேயே எனக்கு வீடு தர மறுக்கின்றனர்.

(6) நான் ஒரு திருமண அமைப்பாளர். சுமார் 300 திருமணங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எங்களை புரோக்கர் என்கிற இழிவான நோக்கிலேயே பார்க்கின்றனர்.

(7) நான் gay, lesbian, transgender போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவன். ஆனால் என்னையும் ஒரு gayவாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது.

பொதுச் சமூகத்தின் குரல்கள் சில:

(1) திரைத்துறையினர் அனைவரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிற பெரும்பான்மையான செய்திகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டோம்.

(2) திருமண தரகர் சொன்ன பொய்யால் என் திருமண வாழ்க்கையே பாதித்து மிகவும் சிரமப்பட்டேன்.

(3) பொது இடங்களில் அரவாணிகளின் அடாவடித்தனத்தால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும், அருவெறுப்பும் வருகிறது. ஒருபால் உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருவெறுப்பாக இருக்கிறது.

(4) போலீஸ்காரர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. பின்னால் அவர்களால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறோம்.

(5) அசைவம் சாப்பிடுபவர்களை, மது குடிப்பவர்களை பிடிப்பதில்லை. அவர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை. நாங்கள் 'ஒதுங்கிப் போகிறோம்'. அவ்வளவுதான் விஷயம்.

()

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறாக சமூகத்தின் சில பிரிவினரை பொதுச் சமூகம் ஒதுக்குவதை cultural fascism என்று வர்ணித்தார்.

.." பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ள மக்களே இவ்வாறான புறக்கணிப்பை சந்திக்க நேரிடுகிறது. திரைத்துறையில் இருக்கும் டைரக்டர் ஷங்கரையோ, ரஜினிகாந்த்தையோ இச்சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் துணை நடிகர் என்றால் ஒதுக்குகிறோம். ஒரு அரவாணியை நம்மால் ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பிருந்தே என்னுடைய நண்பர். அவருடன் நண்பராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்த அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம். ரோஸ் கிளம்பும் போது அவரிடம் 'rest room உபயோகித்து விட்டுப் போங்கள்' என்று நான் சொன்னதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார். இதுவரை தன்னிடம் யாரும் அவ்வாறு கேட்டதில்லை என்று'

... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.

...இவ்வாறான சில மனத்தடைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த சமூகம் வெளிவர வேண்டும்.

()

சமூகக் குரல்களின் சார்பில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் (பெயரைக் கவனிக்கவில்லை. கோயில் குருக்கள் தோற்றத்தில் இருந்தார்) கூறியது.

.. திரைத்துறையினர் தாங்கள் செய்யும் தொழில் குறித்து அவர்களுக்கே ஒரு பெருமிதமும் பெருமையும் இருக்க வேண்டும். அவர்களே அவர்களின் தொழிலை இழிவாக பார்க்கக்கூடாது. (நான் என் தொழில் குறித்து பெருமையே கொள்கிறேன் என்று துணை நடிகை தொழில் புரிபவர் பதிலளித்தது உரையாடலின் கூச்சலில் பெரும்பாலோரின் கவனத்திற்கு வராமல் போய் விட்டது). மதுக்கடைகளில் பெரும்பாலும் கெட்டவர்களின் நடமாட்டமும் அதிர்வுகளும் இருக்கும். எனவே அவர்களுக்கு வீடு தர மறுப்பதில் தவறில்லை.

ஒதுக்கப்படுபவர்களின் குழுவில் இருந்த அரவாணி ஒருவர் "எங்களை இந்தச் சமூகம் எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கிறது. வீட்டிலிருந்தும் துரத்துகிறார்கள். இந்தச் சமூகமும் எங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது. எந்த வேலை வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது. இப்படி எல்லா இடங்களிலும் ஒதுக்கப்படும் அரவாணிகள் செய்யக்கூடியது பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் புரிவதும்தான். சமயங்களில் வன்முறையையும் அடாவடித்தனத்தையும் சில அரவாணிகள் கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் போகிறது. அதற்கு இந்தச் சமூகம்தான் காரணம் என்றார்.

நிகழ்வின் உச்சமாக, அரவாணிகளைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொண்டிருந்த பெண், நல்ல பண்புகளுடன் உள்ள ஒரு அரவாணியை நண்பராக ஏற்றுக் கொள்ள தமக்கு ஏதும் தடையில்லை என்று கூறி எதிர் குழுவில் இருந்த அரவாணியை கட்டித்தழுவிக் கொண்டார். இந்தச் செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடத்துநர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு சபையை standing ovation அளிக்கச் செய்தார்.

()

எல்லா முற்போக்கு பாசாங்கு முகமூடிகளையும் கழற்றி விட்டு இந்தத் தலைப்பினுள் என்னை நான் பொறுத்திப் பார்த்தேன். நிச்சயம் காவல்துறையினர் என்றால் எனக்கு அலர்ஜி. நான் சந்தித்தவர்களில் பெரும்பான்மையோர் தன்னிடமிருந்த அதிகார மமதையோடுதான் இருந்தார்கள். தன் கடமையை உணர்ந்து பொறுப்புடனும் மிருதுவாகவும் அணுகியவர்கள் சொற்பமானவர்களே. நிலத்தரகர்களில் பெரும்பான்மையோர் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள். brokers excuse. திருமண தரகர்கள் பற்றிய அனுபவமில்லை.

குடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை. ஆனால் அளவுக்கதிகமாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள், மற்றவர்களுடன் தகராறு செய்பவர்கள் போன்றவர்களைக் கண்டால் நிச்சயம் எரிச்சலாக இருக்கும். அதற்காக மதுக்கடைகளில் பணிபுரிபவர்களையும் குடிகாரர்களாக நினைத்து அருவெறுப்பது முட்டாள்தனம். அதே போல்தான் விவாகரத்து பெற்றவர்களையும், திரைத் துறையில் பணிபுரிபவர்களையும் ஒதுக்குவது.

ஒருபால் உறவு கொள்பவர்கள் குறித்து ஒரு காலத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பும் அருவெறுப்பும் இருந்தது. ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் குறித்து ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் என்னுடைய அருவெறுப்பை வெளிப்படுத்திய போது 'அவர்களின் பார்வையில் நீங்கள் அருவெறுப்பாய் தெரியக்கூடும் அல்லவா?' என்று எழுதினார் பத்ரி. விரல்கள் அழுகிக் கிடக்கும் தொழுநோயாளிக்கு ஆரோக்கியமானவனின் விரல்கள் அருவெறுப்பைத்தான் தரும் என்று நாகூர் ரூமி அதற்கு எதிர்வினையாக எழுதியது ஞாபகமிருக்கிறது.

ஆனால் நாளடைவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் போக்கில் புரிதலின் பேரில் இன்று அது மட்டுப்பட்டிருக்கிறது எனலாம். இடது கை பழக்கம் போல் ஒருபால் உணர்வும் ஒருவகையான இயற்கை உணர்வே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் எரிச்சலான பேருந்து பயணங்களில் எப்பவாவது ஆண்குறிகள் மேலே உரசும் போது 'அட நாய்களா, இதில் விருப்பமுள்ளவர்களுடன் கூடித் தொலைங்களேன். ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று கத்தத் தோன்றுகிறது.

அரவாணிகள் குறித்து பார்க்கும் போது விளிம்பு நிலையிலும் உள்ள அவர்களிடம் பொதுச்சமூகம் எல்லாக் கதவுகளையும் அடைத்து அவ்வாறு ஒதுக்குவது தவறுதான் என்று தோன்றினாலும் சிந்தனை ரீதியில்சில நடைமுறை அனுபவங்களின் போது நாம் அறிவைத் துறந்து அவற்றை உணர்ச்சியின் வழிதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பார்த்தவரை எங்கள் அலுவலகத்தில் வரும் அரவாணிகள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆண்களில் சிலரும் எளியவழியில் காசுபெற பெண் வேடமிட்டு வந்து தகராறு செய்து அரவாணிகளின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கின்றனர் என்று அரவாணிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுகிறது. என்றாலும் அவர்களின் உள்ளார்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாட்டை பொதுச் சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் வரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை).

suresh kannan

Wednesday, December 03, 2008

மலத்தின் நாற்றம் வீசும் கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய சமீபத்திய பதிவில் தமிழ் நவீன இலக்கியத்தில் பரவலாக அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானும் இதே போன்றதொரு முயற்சியை ஜுன் 2006-ல் 'அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில்...' என்றொரு தொடராக எழுத ஆரம்பித்தேன். ஆனால் அதை தொடர இயலவில்லை. எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, சிறிது காலமே பரிமளித்த திரைப்பாடகர்கள், நடிகர்கள், (குணா படத்தின் நாயகி எங்கே போனார்?), இயக்குநர்கள் (ருத்ரைய்யா) போன்றவர்களைப் பற்றி எழுதும் விருப்பமுண்டு.

ராமகிருஷ்ணன் தன்னுடைய பதிவில் எக்பர்ட் சச்சிதானந்தம் என்கிற சிறுகதை எழுத்தாளரைப் பற்றியும் அவருடைய சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நானும் அந்த சிறுகதைத் தொகுதியைப் பற்றி முன்னர் மரத்தடிக் குழுமத்தில் எழுதியிருக்கிறேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். (பாதுகாத்து வைத்திருந்த மரத்தடி.காம்.-க்கு நன்றி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"நுகம்" சிறுகதைகள்- அ.எக்பர்ட் சச்சிதானந்தம்
- தமிழினி பதிப்பகம், சென்னை-14. விலை ரூ.60
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எக்பர்டின் கதைகள் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களுக்கு அவ்வளவு பரிச்சயமல்லாத சர்ச் என்னும் கிறிஸ்துவ தேவாலயங்களைச் சுற்றியே வருகிறது. ஆனால் மதப்பிரசாரக் கதைகள் அல்ல. மாறாக அங்கே நடக்கும் அரசியல்களையும், போதர்களின் சுயநலத்தின் அசிங்கங்களையும், ஆலயப் பணம் வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செலவழிக்கப்படுவதையும், கோயில் ஊழியர்களின் குறைகள் கவனிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதையும் எந்தவித பிரசாரக் குரலுமின்றி இயல்பான தொனியில் சொல்லிக் கொண்டு போகிறார் ஆசிரியர்.

மூச்சுத்திணறும் வார்த்தைக் கட்டமைப்புகளால் வாசகனைத் திணற வைக்காமல், ஓடும் பேருந்தில் தன் நண்பனுடன் முந்தாநாள் நடந்த சம்பவத்தைப் பற்றி சுவையாக விவாதித்துக் கொண்டு போகும் சிநேகமான எழுத்து இவருடையது. இவர் ஒர் பள்ளி ஆசிரியராக இருப்பதால், அவர்களுக்குள் இருக்கும் போட்டிப் பொறாமைகளையும் இயல்பாக எழுத முடிகிறது.

சில கதைகளைப் படிக்கும் போது, 'பரலோகத்திருக்கிற எங்கள் பிதாவே' என் நான் ஜெபித்து மறந்து போன என் சிறுவயது பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வருகிறது.

தேவாலயக் கல்லறையில் பணிபுரியும் ஏழை ஊழியரின் மகன் இறந்து போகும் போது அவனே சோகத்துடன் அந்தக் காரியங்களைச் செய்யும் சம்பவங்களை ஆசிரியர் விவாதிக்கும் போது வாசகர்களும் கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது. இன்னொரு கதையில் தன் மகளுக்காக கிறிஸ்துவப் பள்ளியில் ஆசிரியை வேலைக்காக சேர்க்க அந்தத் தந்தை எல்லா வழிகளையும் முயன்று பார்ப்பதும், இறுதியில் அங்கு நடக்கும் அரசியல் காரணமாக வேறு ஒருவருக்கு அந்த வேலை அளிக்கப்படும் போது, தன் தோழி உதவியுடன் தானே ஒரு சிறிய பள்ளியை ஆரம்பிக்க அந்த மகள் முடிவெடுக்கும் அந்த கணத்தில் இளைய தலைமுறையினரை சோர்வடைய விடாமல் ஒரு புது வழியை காண்பிக்கிறார் ஆசிரியர்.

=o=

இந்தச் சூழலைத் தாண்டியும் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் என்னை கவனிக்க வைத்தது, 'மலம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கதை.

மலம் அள்ளுபவளாக இருந்தாலும், திடகாத்திரமாக, கவர்ச்சியாக இருப்பதால் அவளுடன் உறவு கொள்ள ஆசைப்படும் அவன், மனைவி ஊருக்குப் போயிருக்கும் இதை அவளிடம் வெளிப்படுத்த, அவள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். ஒரு நாள் தனக்குப் பதிலாக அவனை எல்லா வீட்டு மலங்களையும் அள்ளச் சொல்கிறாள். அவள் மீதுள்ள வெறியால் இதற்கு சம்மதிக்கும் அவன் மிகுந்த அருவருப்புடன் மலம் அள்ளுவதும் ஒரு நிலையில் தாக்குபிடிக்க முடியாமல் மூச்சடைத்து, வாந்தியெடுத்து நீரெடுத்து கழுவப் போக எல்லா இடமும் மலமாக அவனுக்குள் தெரிகிறது. 'இப்ப என்னா சொல்ற' என்கிறவளை 'வெளியே போ' என்று அவன் கத்துவதுடன் கதை நிறைகிறது.

அவன் மலம் அள்ளும் போது தமக்குள் பேசிக் கொள்வதை இரக்கமே இல்லாமல் வர்ணிக்கிறார் ஆசிரியர்.

.................. 'கட்டி கட்டியா இருந்தாலும் பரவா இல்ல. களி மாதிரி இப்படியா. எந்த குண்டியோ. பயங்கர நாற்றம். என்ன இது வெள்ளைப்புழுவா தொ¢யுது. ஆஸ்கரிஸ், டீனியா... என்ன எளவோ.. சனியன் பூச்சி மாத்திரை சாப்பிட்டா என்ன? என்னத்தை தின்னாளுகளோ இவ்ளோ கெடக்கு. கடவுளே கைல ஏறிடுச்சே புழு.... தரைல தேய்ச்சா கூட இன்னும் நெளியுது. தலைதான் நசுங்கி கிடக்கு. கட்டை விரல் நகத்துல மஞ்சளா எப்போ ஒட்டிச்சி? நக இடுக்குல வேற.' ...................

படிக்கும் நமக்கே குமட்டுகிற போது இதையே வேலையாய் வைத்துள்ள அந்தத் தொழிலாளர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

=o=

பள்ளி ஆசிரியரரான எக்பர்ட் சச்சிதானந்தம் தற்போது காஞ்சிபுரத்தில் வசிப்பதாகக் குறிப்பு இருக்கிறது


suresh kannan

Monday, December 01, 2008

பா.ராகவனும் காக்டெய்ல் பரோட்டாவும்

தமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு நவீன அச்சு நுட்பத்தின் உதவியோடு பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு சிறுகதைக்காக எங்கெங்கோ அலைந்து தேடியிருக்கிறேன். புதையல் போன்று காக்கும் நண்பரிடமிருந்து சிரமப்பட்டு அதனுடைய பிரதியை எடுத்து வந்திருக்கிறேன். ஆனால் இன்று அந்த எழுத்தாளரின் அனைத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'உரித்த வாழைப்பழம்' போல் வாசகர்களுக்கு கிடைக்கும் செளகரியம் வாய்த்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தி பற்றிய தலைப்பில் தேடினால் குறுக்கும் நெடுக்குமாக முன்பெல்லாம் பல வகைகளில் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் கோட்சேவைப் பற்றி? கஷ்டம். காக்கி அரை நிஜார் போட்டுக் கொண்டு RSS முகாம்களில் தேடினால் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனும் புனித பிம்பாகி விட்ட இன்றைய நிலைமை வேறு. எதிர்மறையான ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்களும் சுலபமாக நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்டதோர் எதிர்மறை ஆளுமையான கொலம்பிய போதைக் கடத்தலின் முன்னோடியாக இருந்த Pablo Emilio Escobar Gaviria (1949 - 1993) என்பவரைப் பற்றின புத்தகம் பா.ராகவன் எழுதிய 'என் பெயர் எஸ்கோபர்'. (தில் திகில் திடுக்கிடல்)

Photobucket

ஒரு நாட்டின் அதிபயங்கர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறவரே தான் கைது செய்து நடத்தப்படும் விதம் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியுமா?

கொலம்பியாவில் இது நடந்திருக்கிறது. பெரிய மனது வைத்து 5 வருடங்கள் மாத்திரமே சிறைப்பட 'விரும்பிய' அவருக்கென்றே நவீன வசதிகளுடன் ஒரு சிறையைக் கட்டி அதில் அவரை 'தங்க' வைத்திருக்கிறது கொலம்பிய அரசு. விருப்பப்பட்ட நேரத்தில் அவர் வெளியே போய் தனக்கு பிடித்தமான கால்பந்து விளையாட்டை ரசித்து திரும்பலாம். (ஒரு முன்னாள் முதல்வரின் மீதுள்ள வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென்றே தனி நீதிமன்றங்கள் சென்னையில் கட்டப்பட்டதை இச் சமயத்தில் பெருமையுடன் நினைவு கூரலாம்). கொலம்பியாவின் அப்படிப்பட்ட சிறப்பு வி.ஐ.பி. குடிமகனைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தினுள் பயணம் செய்வது அவசியம்.

பல வருடங்கள் காலனியாதிக்கத்தின் சுரண்டலில் அவதிப்பட்ட நாடு கொலம்பியா. பல்வேறு புரட்சி இயக்கங்களின் முயற்சி மூலம் சுதந்திரம் அடைந்தாலும் உள்நாட்டு அரசியல் கலவரங்களாலும் போர்களாலும் மக்களுக்கு நிம்மதியில்லை. இரு வல்லரசுகளின் போட்டியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஏற்படுத்தும் குழப்பங்கள் வேறு. இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும். என்ன வழியென்று யோசித்தில் கோகெய்ன் என்ற போதைப் பொருளை தயாரிக்க உதவும் கோகோ பயிர் தென்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொலம்பிய சரக்கு என்றால் நிச்சயம் உன்னதமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருந்ததால் பணம் டாலர்களில் கொட்டுகிறது. கொலம்பியாவின் குடிசைத் தொழிலாக இந்த போதைப் பொருள் தயாரிப்பு இருந்ததால் பல்வேறு சிறு குழுக்கள் இந்த சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

()

சில்லறை கார் திருடராக இருந்த எஸ்கோபர், (அதற்கு முன் கல்லறைகளில் உள்ள நினைவுக்கற்களை திருடி விற்றவர் என்று சொல்லப்படுகிறது) தன்னுடைய பணக்காரக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். சாதுர்யத்தாலும் தைரியத்தாலும் குறுகிய காலத்திலேயே தன்னுடைய தொழிலில் முன்னேறுகிறார். ஒரு முறை காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு நீதிபதியை மிரட்டியும் பலனளிக்காமல் சிறிது காலம் சிறையில் இருந்த எரிச்சலில் அவருக்கு தோன்றுவதுதான் 'தன்னைப் போன்ற போதை வியாபாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துவது (மெடேலின் கார்ட்டல்); அதன் மூலம் இந்த தொழிலை ஒழுங்குபடுத்துவது'; அரசியலில் இணைந்து தனக்கொரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

இதற்கு முன்னால் இதை யாரும் யோசிக்கவோ முயற்சிக்கவோ இல்லாமலிருந்ததால் எஸ்கோபர் போட்டுக் கொடுத்த தார் ரோட்டின் மேலே போதைப் பொருள் வியாபாரம் தள்ளாடாமல் சுகமாக பயணித்தது.

சினிமாப்படங்களின் தலைப்புகளின் கீழொரு tag line போடுவது போல எஸ்கோபரின் வியாபாரத்தின் தாரக மந்திரம் 'செய் அல்லது செத்துமடி'. தன்னுடைய போதைப் பொருள் விற்பனைக்கு உதவுகிற அத்தனை அரசு இயந்திர நட்டு போல்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக பணம் தரப்படும்; அதே சமயம் தடையாக நிற்கிற எதுவும் உடனே அப்புறப்படுத்தப்படும். பணத்திற்கு ஆசைப்பட்டு உதவியவர்கள் தவிர உயிருக்கு பயந்து உதவியவர்களும் அதிகம். உதவ மறுத்த அனைவருமே எஸ்கோபரின் ஆட்களால் கொல்லப்படுகின்றனர். எனவே எஸ்கோபரின் போதை வியாபாரம் flag கட்டிப் பறந்தது. 1989-ம் ஆண்டில் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று forbes பத்திரிகை எஸ்கோபர் குறித்து எழுதுமளவிற்கு பெரிய flag. இந்தப் பணம் அத்தனையையும் சுவிஸ் பேங்கில் போட்டு பதுக்காமல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தான் வாழும் மெடேலின் நகரின் அடித்தட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மையை பூர்த்தி செய்ததில் ராபின் ஹ¥ட் இமேஜூம் கிடைத்தது. ஆனால்....

அந்தப் பயணம் இப்படியே சுகமாய் இருக்கவில்லை.

()

எஸ்கோபருக்கு போட்டியாய் தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பான காலி கார்ட்டல், கெடுபிடிகளை தாங்க முடியாமல் கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக எஸ்கோபர் அறிவிக்கிற யுத்தம், சட்ட அமைச்சர் படுகொலை, விமான வெடிப்பு, M-19 என்கிற புரட்சிக்குழுவை உபயோகப்படுத்தி நாட்டின் தலைமை நீதிபதிகளை நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம், அமெரிக்கா தந்த அழுத்தத்தில் மிகவும் கடுப்படைந்த கொலம்பிய அரசாங்கம் கொலை வெறியுடன் தேடியவுடன் சரணடைவதாக சொல்கிற எஸ்கோபரின் நாடகம், பிறகு...

அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் படிப்பதின் மூலம் அதை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.

()

பா.ராகவன் எஸ்கோபரின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மிகத் தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறார். க்ரைம் நாவலின் தொடக்கம் போல ஒரு கடத்தல் சம்பவம், கொலம்பியாவின் வரலாறு குறித்த சுருக் அறிமுகம், கொகேய்னின் சுவை, எஸ்கோபரின் ஆரம்ப சாகசங்கள், மெடேலின் கார்ட்டல் உருவான விதம், அதன் அசுரத்தனமான வளர்ச்சி, அரசாங்கத்துடனான யுத்தம் என்று எஸ்கோபரைப் பற்றின ஒரு சித்திரத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால்..

"இல்ல மச்சான்.. இன்னா மேட்டர்னா"... என்கிற தொனியில் அவரது மொழி வாசகரது தோள் மீது கை போட்டுப் பேசுகிறது. ராணி, குமுதம் படிப்பவர்கள்தான் தன்னுடைய வாசகர்கள் என்பதை பா.ராகவன் முன்னதாக தீர்மானித்துக் கொண்டதைப் போல் எல்லாவற்றையும் மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறார். இது தவறில்லை என்றாலும் இந்த தொனி அதீதமாகிப் போகும் போது இந்தப் புத்தகம் "பொழுது போக்கு நாவல்' தரத்திற்கு இறங்கிப் போகிற சங்கடம் நேர்கிறது. 'சூப்பர் கில்லாடிய்யா இவன்' என்று எஸ்கோபரின் ஆளுமை மீது வாசகன் பிரமிப்பும் கிளர்ச்சியும் அடைவதோடு இந்தப் புத்தகம் முடிந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. சுருங்கக் கூறின் இண்டர்நேஷனல் கொலம்பியா மைதாமாவில் லோக்கல் நாமக்கல் முட்டையை ஊற்றி அடித்து ஒரு காக்கெடயில் பரோட்டாவை தந்திருக்கிறார் ராகவன். உதாரணத்திற்கு சில (பாரா)க்களை பார்ப்போம்.

... எந்த கோயிந்து தன் சொந்தப் பெயரில் ரூம் எடுக்கும்? ஆகவே கொலம்பியப் பெயர்களில் யார் யார் அறை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். ம்ஹ¥ம். ஒருத்தர் கூட இல்லை. எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எ·ப்.எம். ரேடியாக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்தார்கள்... (பக்கம் 40)

.. அது ஒரு ரகசிய ஆலோசனைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இடம். வெளியே இருந்து பார்த்தால் தரைக்கடியில் அப்படியொரு ரகசியப் பதுங்குதளம் இருப்பதே தெரியாது. மேலுக்கு ஒரு வேலு மிலிட்டரி ஹோட்டல். அந்த ஹோட்டலும் எஸ்கோபரின் அடியாள் ஒருவனுடையதுதான். அவன் தன்னுடைய சகலபாடியை கல்லாவில் உட்கார வைத்துவிட்டு வாசலில் காவலுக்கு நின்றபடி எப்போதும் முட்டை பரோட்டா தட்டிப் போட்டுக் கொண்டிருப்பான். .. (பக்கம் 101).

என்றாலும் ராகவனின் இந்த மொழிக்குப் பழகி விட்டால் மிகச்சுலபமாக புத்தகத்திற்குள் இறங்கி விட முடிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த 220 பக்க நாவலை.. மன்னிக்கவும் புத்தகத்தை படித்து முடித்து விட முடிந்தது. ராகவனின் பிரத்யேகமான நகைச்சுவை கலந்த மொழி நம்மை பல இடங்களில் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது. எஸ்கோபர் அரசாங்கத்தின் முன் வைக்கும் ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் பதில் சொல்வதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை 'ராகவன்' மொழியில் கவனியுங்கள்.

.. அன்புடையீர் வணக்கம், வந்தனம். சுஸ்வாகதம். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். இன்னும் பத்து நிபந்தனைகளைப் பின் இணைப்பாக அனுப்ப மறந்திருப்பீர்களானால் அதையும் காலக்ரமத்தில் அனுப்பி வையுங்கள். சேர்த்துக் கேட்கிறோம். ஆனால் கைதாகச் சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்லி வயிற்றில் பீர் வார்த்தீர்களே, அது! அந்த அந்த சொல்லுக்காக உங்களுக்குக் கோயிலே கட்டுகிறோம் என்று விழுந்து சேவித்தார்கள்... (பக்கம் 174).

'போய் விட்டான்! (பக்கம் 55)' என்கிற இரண்டு வார்த்தைகளுக்கு முன்னால் இருக்கிற ஒரு அதிரடியான பத்தியை நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.

()

பொதுவாக உலக வரலாற்றையும், சரித்திரத்தின் முக்கியமான முந்தைய, சமகால நிகழ்வுகளையும் பிற நாட்டுக் கலாசாரங்களையும், உணவுகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேரமும் நம்மில் பெரும்பான்மையவர்க்கு இல்லை. பல பேருக்கு தினத்தந்தியில் ஆரம்பிக்கும் நாளின் தொடக்கம் இரவில் 'அரசி' தொலைக்காட்சி சீரியலோடு முடிந்து போய்விடுகிறது.

.. என்செபொலேடோ என்று ஒருவித கடல் பாசியையும் நாலைந்து ரக மீன்களையும் பட்டாணியையும் சேர்த்துப் போட்டு அண்டாவில் சூப் காய்ச்சி நாளெல்லாம் குடிப்பார்கள். ·ப்ரிட்டாடா என்று ஒரு பதார்த்தம் அங்கே இன்னும் ·பேமஸ். வெண்பன்றிக் கறியுடன் புதினாவைச் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவு மாதிரி பதத்துக்குக் கொண்டுவந்து, இரண்டு பன்களுக்கு நடுவே வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் கொஞ்சம் போல் வேகவைத்து எடுத்து தேனில் தோய்த்துச் சாப்பிடுவார்கள்.

இங்கே இதெல்லாம் என்னத்துக்கு என்று அந்தராத்மா கேள்வி கேட்டால் அடக்கி வைக்கவும். வேறு எந்த ஜென்மத்தில் நாம் ஈக்வடாரையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்? .. (பக்கம் 38)

என்று நூலாசிரியரே இதை ஓரிடத்தில் கிண்டலடிக்கிறார்.

பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் எஸ்கோபரின் ஆளுமை ஒரு கதாபாத்திரமாக குறுக்காக நடந்திருக்கிறது. எஸ்போரைப் பற்றின பிரத்யேக முழுத்திரைப்படம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எஸ்கோபரைப் பற்றின பல நூற்கள், வீடியோக்கள் உள்ளன. Mark Bowden-ன் Killing Pablo என்கிற நூல் எஸ்கோபர் கொல்லப்பட்டதை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
()
..காலி கார்ட்டலின் போதைப் பணத்தை வெளுக்கும் விதம் குறித்த சார்ட் ஒன்று இந்தப் பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. பொழுது போகாத நேரத்தில் பூதக் கண்ணாடி வைத்து கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள். கண்டிப்பாக ராத்திரி தூக்கம் வராது! (பக்கம் 85).

வருங்காலத்தில் ஒருவேளை உதவுமோ என்று இந்த சார்ட்டை முழுப் புத்தகத்திலும் நான் தேடிப் பார்த்தேன். காணோம். வாசகர்கள் ராத்திரிகளில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற பதிப்பகத்தினரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

'கொலம்பியாவில் போதை அடிமைகள் கிடையாது' என்று ஒரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கொகேய்ன் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டாலும் போதைப் பொருள் தயாரிப்பின் தாயகத்திலேயே அதற்கு வாடிக்கையாளர்கள் கிடையாது என்பது முரணாக இருக்கிறது. இந்த நூல் எந்த பத்திரிகையிலாவது தொடராக வந்ததா என்பதைப் பற்றின குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வமூட்டும் பரபரப்புடன் முடிவதை வைத்து யூகித்துத்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

()

இந்த நூல் ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் கொலம்பியாவைப் பற்றியும் அங்குள்ள போதை உலகத்தைப் பற்றியும் ஒரு சுவாரசியமான அறிமுகத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அதன் கலாசாரம் பற்றி மேலும் அறிய ஆர்வம் கொள்கிற வாசகனுக்கு இந்நூல் நிச்சயம் ஒர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

என் பெயர் எஸ்கோபர் (பா.ராகவன்)
224 பக்கங்கள், விலை ரூ.90/-
கிழக்கு பதிப்பகம், சென்னை-18.
ISBN 978-81-8368-579-5
கிழக்கு பதிப்பகத்தின் சம்பந்தப்பட்ட சுட்டி

suresh kannan

Monday, November 24, 2008

முற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்

என்னுடைய பதிவுகளின் இயல்பிற்கு மாறாக தமிழ்மண பரிந்துரை பட்டியலில் பரமபதம் மாதிரி மேலும் கீழும் ஏறி இறங்கி பிறகு பெரிய பாம்பு வழியாக ஒரேடியாக கீழே இறங்கிய என்னுடய முந்தைய பதிவின் உள்ளடக்கம் குறித்து சில நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; எரிச்சல் பட்டார்கள்; கோபப்பட்டார்கள்; தங்கள் எண்ணங்களை எதிரொலிப்பதாக பாராட்டினார்கள். இணையப் பரப்பில் இந்தப் பதிவு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதுவல்ல என் நோக்கம். இது குறித்து இன்னும் உங்களுடன் நிறைய பேச வேண்டிய சூழலை பின்னூட்டங்களில் உள்ள சில கேள்விகள் எழுப்பியிருக்கின்றன. கோர்வையாகவோ இல்லாமலோ இருக்கும் இந்தப் பதிவை பொறுமையும் சாவகாசமான மனநிலையும் உள்ளவர்கள் மாத்திரம் வாசிக்கத் தொடர வேண்டுகிறேன். இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களின் கனவுகளில் நமீதாவும் ஜெயமாலினியும் இணைந்து நடனமாடும் வண்ணக்காட்சிகள் வர வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்.

()

நாகரிகத்தின் உச்சியை நாம் அடைந்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் காலகட்டத்திலும் பல விதமான மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும், கொலைகளும், மனித உயிர் மீதுள்ள அலட்சியத்தின் காரணமாக பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் அவற்றை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவற்றில் சில நிகழ்வுகள்தான் நம் மனதிற்கு மிக நெருக்கமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை விளக்க தெளிவான பிரத்யேகமான காரணங்கள் எதையும் கூற முடியாது என்றே நம்புகிறேன். அவ்வாறு என்னுள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமாக சில வருடங்களுக்கு முன் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்து போன கொடூரமான சம்பவத்தைச் சொல்லுவேன். மனித உடல்கள் போலன்றி ஏதோ தீயில் கருக்கப்பட்ட மரக்கட்டைகள் மாதிரி கிடந்த அந்தக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களை செய்தித் தாள்களில் காண நேர்ந்த போது மனம் 'ஒ'வென்று கதறியது. நம் தோல் பரப்பின் மீது விழும் எரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றைத் துளியே நம்மை சிறிது விநாடிகளாவது துடிக்க வைக்கும் போது முழு உடலும் நெருப்பினுள் நனையும் கொடூரக் கணங்களை அந்த பிஞ்சுக் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் என்பதை கையாலாகத்தனமான கற்பனையுடன் யூகித்துப் பார்த்த போது அழுகைதான் வெடித்துச் சிதறியது.

அதற்கு அடுத்த சம்பவமாக சட்டக்கல்லூரியில் நிகழ்ந்த வன்முறையைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் மிக அலட்சியமாக பார்க்கத் துவங்கின அந்தக் கணங்கள் என்னுள் மிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அந்த வன்முறையின் பின்னணி குறித்தெல்லாம் அப்போது 'அறிவுஜீவித்தனமாக' என்னால் யோசிக்க முடியவில்லை. யாராவது அந்த வன்முறையை உடனடியாக தடுக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் என்னை முழுதாக அப்போது ஆக்ரமித்தது. அந்த பதட்டத்தின் வெளிப்பாடுதான் 'சட்டம் பயிலும் மிருகங்கள்' என்றெழுதிய அந்தப் பதிவு. (கண்ணுக்கே தெரியாத சாதி என்கிற ஒரு விஷயத்திற்காக ஒரு சகமனிதனை சாகடிக்கத் துடிக்கும் கேவலமான மனிதர்களோடு இயற்கையின் விதியின் ஒழுங்குப்படி இயங்கும் மிருகங்களை ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தியது தலைப்பிட்டது தவறுதான்).

ஆனால் இணையத்தில் அந்த வன்முறையைச் சம்பவத்தின் சாதிய பின்னணிகளை விளக்கி 'இந்தச் சம்பவம் நிகழ்ந்தது நியாயமானதும் இயல்பானதும் ஆகும்' என்ற தொனியில் வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட சில ' போலி அறிவுஜீவித்தனமான' பதிவுகளை வாசிக்க நேர்ந்த போது மகா எரிச்சல் ஏற்பட்டது. அபத்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்முடைய அடுக்கடுக்கான சாதிய அமைப்பு காரணமாக அடுத்தடுத்த அடுக்கில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மீது பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்களும், மனரீதியான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கச் சாதியினரால் பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் காரணம் சொல்லி இந்த வன்முறையை நியாயப்படுத்தி எழுதுவதை அடிப்படை மனச்சாட்சி உள்ளவர்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவ்வாறான உடனடியான எண்ணங்களை வெளிப்படுத்தியவர்களை 'பொதுப்புத்தியினர்' என்று கிண்டலடித்தும் அவர்களை ஆதிக்க சாதியினர் என்ற வட்டத்திற்குள் தள்ள முயன்றும் எழுதப்பட்ட பதிவுகள் முறையற்ற செயலாக எனக்குத் தோன்றியது. 'வெற்று மனிதாபிமானக் கூச்சல்' என்று இந்த உணர்வை இடது கையால் தள்ளின ஒரு பதிவின் வரி எனக்குள் கடுப்பை ஏற்படுத்தியது.

இந்த போலி அறிவுஜீவிகளை நான் கேட்க விரும்புபவதெல்லாம் ஒன்றுதான்: "சம்பந்தப்பட்ட வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது உங்களின் சாதிய கற்பிதங்கள் கழன்று போய் சக மனிதனின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டு ஒரு கணமாவது உங்கள் மனம் பதறவில்லையா?" அப்படி பதறியதாக ஒப்புக்கொண்டால் இன்னும் நாம் இழந்திருக்காத மனிதத்தின் மீது நம்பிக்கை வருகிறது என்று ஆறுதல் கொள்ளலாம்.

()

நவீன அறிவின் குறியீடான கணினி நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் கலந்து விட்டிருந்தாலும் கூடவே ஆதிகால மூடநம்பிக்கைகளும் 'கம்ப்யூட்டர் ஜோசியம்' என்ற பரிணாமத்தில் நம்முடன் தொடர்வது எவ்வாறு அபத்தமானதாக இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கிறது இணையத்தில் சாதிய/மத/இன உணர்வுடன் மற்ற பிரிவுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படும் பெரும்பாலான பதிவுகளும் உரையாடல்களும். அரசாங்க கழிவறைகளுக்கு நிகரான வாசனையுடன் பின்னூட்டப் பெட்டிகளில் உமிழப்படும் ஆபாசமான வார்த்தைகளும் தாக்குதல்களும் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன. நன்றாக கல்வி கற்று சுயசிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாகரிக மனிதர்களாக உலவும் நம்மாலேயே இன்னமும் நம்முள் புதைந்திருக்கும் சாதிய உணர்வுகளை கைவிட முடியவில்லையெனில், கல்வியறிவு பெறாத ஒரு வட்டத்திற்கு மேல் சிந்திக்க இயலாமல் அருவாளை தூக்கி ஓடும் ஒரு கிராமத்தானின் செயலை ஆட்சேபிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆனால் இவ்வாறான சாதியக் கூச்சல்கள்தான் இணையத்தில் பரபரப்பாகவும் அதிகமாகவும் கவனிக்கப்படுகிறது. இவர்கள்தான் 'முற்போக்காளர்' என்ற அடையாளத்துடன் பலரால் சிலாகிக்கப்படுகின்றனர். இவர்களை ஆதரிக்கும் கும்பலால் எழுதப்படும் பின்னூட்டங்கள் இவர்களை இன்னமும் உற்சாகப்படுத்தி ஆவேசமாக கூச்சலிட வைக்கின்றன. மாறாக ஆக்கப்பூர்வமாக எழுதுகிறவர்களின் - சாதியப்பிரச்சினைகள் உட்பட்ட - பதிவுகள் சொற்பானமானவர்களாலேயே வாசிக்கப்படுகிறது. இவ்வாறான பாசாங்குத்தனமான முற்போக்காளர்களின் கூச்சல்களை வெகுநாட்களாகவே அருவருப்புடன் கவனித்து வருகிறேன். அவ்வாறான அருவருப்பை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பான ஒரு பக்கச் சார்பான பதிவுகள்.

மேற் குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தை கண்டிக்கும் போது இந்த 'அறிவுஜீவிகள்' அதை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் மீதான வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிட்டு பட்டியலிட்டு "ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவன் தாக்கப்படும் போது மாத்திரம் கூவுகிறார்கள். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்கள்' என்றதொரு செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உணர்ச்சி உருண்டையை மேலே எறிகின்றனர். அய்யா சாமிகளா! ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை மாத்திரம் யார் ஆதரித்தது? வன்முறை எந்த ரூபத்தில் நிகழ்ந்தாலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்ப்பதும் கண்டிப்பதும்தான் 'ஒரு மனிதனின்' இயல்பான செயலாக இருக்க முடியும். சட்டக்கல்லூரி வன்முறையில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் அதையும் கண்டித்துதான் இணையத்தில் நடுநிலையானவர்களின் பதிவுகள் வெளிப்பட்டிருக்கும். மாறாக இந்த போலி முற்போக்குவாதிகள் முன்வைக்கிற மாதிரி அது கண்டுகொள்ளாமலோ நியாயப்படுத்தப்பட்டோ இருந்திருக்காது.

வன்முறை என்பது இயற்கையானது; அதை நாம் மறுதலிக்க முடியாது என்பதுதான் என்னுடைய தீர்மானமான எண்ணமாக இதுவரை இருந்தது. முன்னர் எழுதிய ஒரு பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

"...........என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."


ஆங்கிலேயர்களிடம் போரிட்டுதான் நாம் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அந்த காரணத்தினால்தான் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் எல்லாத் துறைகளிலும் நாம் பொறுப்பின்றியும் நமது தேசத்தின் மீதான பற்றுமின்றி இருக்கிறோமோ என்ற கேள்வி எனக்குண்டு. ஆனால் சட்டக் கல்லூரி சம்பவத்தை பார்த்த கணத்தில் வன்முறை என்கிற அம்சம் மனித நாகரிகத்தின் அடிப்படைக்கு எதிரானதோ என்று தோன்றுமளவிற்கு அந்தச் சம்பவம் என்னை அசைத்துப் போட்டது. நாடகத்தனமாக தோன்றினாலும் அதுதான் உண்மை. அபூர்வமான சமயங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் என்னுடைய பழக்கத்தை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தோன்றியிருக்கிறது.

என்றாலும் மிக அவசியமான சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள முடியும் என்பதும் நடைமுறையான உண்மை என்பதை மறுக்க முடியாது.

()

யாருமே தன்னுடைய மதத்தை/ஜாதியைக் கடந்து வரமுடியாது என்பது இவர்களின் தீர்மானமான அபிப்ராயம். சொல்லப்படும் கருத்தை விட அதை யார் சொல்கிறார்கள் என்றுதான் ஆராய்கிறார்கள். இதனால் நடக்கும் விவாதங்கள் கருத்து மோதல்களுடன் நின்றுவிடாமல் தனிப்பட்ட வகையிலும் அதையும் தாண்டி இதைப்பற்றி எதுவுமே அறியாத பதிவருடைய அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் மீதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சி பாய்கிறது. கருணாநிதியின் இறப்பைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு பதிவில் எரிச்சலோடு குறிப்பிட்ட போது அதற்கு பழிவாங்கும் விதமாக என்னுடைய குழந்தைகளின் மரணத்தோடு அதை ஒப்பிட்டு ஒரு பின்னூட்டம் வந்தது. அடிப்படை மனித உணர்ச்சியைக் கூட இழக்குமளவிற்கு இவர்களின் மதமும் சாதிய உணர்வும், அரசியல் பக்தியும் கல்வி கற்ற இவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமுமே வருகிறது.

அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் நான் மனதளவில் மத/ஜாதிய உணர்வுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை ஆத்மசுத்தியோடு என்னால் சொல்ல முடியும்.

நகரத்தில் பிறந்த நான் சாதியக் கொடுமைகளை என்னுடைய அனுபவத்தில் துளி கூட அனுபவத்ததில்லை. ஆனால் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்துவதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் என்னுடைய தாயார் முக்கியமான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்த கல்வியறிவு இல்லாத அவருக்கு பார்ப்பனியர்களின் செயல்பாடுகள் குறித்து பிரமிப்பான மயக்கம் இருக்கும். தொலைக்காட்சியில் யாராவது ஒரு சிவப்பான சிறுமி நன்றாகப் பாடிக் கொண்டிருந்தால் " நிச்சயம் அது பாப்பாரப் பொண்ணாத்தான் இருக்கும்" என்பார். வறுமையான பிராமணர்கள் கூட நன்றாக படித்து நல்ல வேலைகளில் சேர்ந்துக் கொண்டிருப்பதை பாராட்டி பேசுவார். ஆனால் தலித்கள் குறித்து அவருக்கு நேர்மாறான அபிப்ராயம் இருந்தது. அவர்களின் சுத்தமில்லாத நடவடிக்கையும் வாழ்வுச் சூழலும் பேச்சும் அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தும். நான் இதை ஆட்சேபித்து, சமூகத்தின் பெரும்பாலான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழ்வுச் சூழலை விளக்கி, அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை போல் செயல்பட முடியும் என்று விளக்க முற்படும் போதெல்லாம் அவர் சொல்வது 'அட போடா! நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்'.. என்கிற சொற்றொடரைத்தான். நான் வளர்ந்த வீடு சேரிக்கு அருகே அமர்ந்திருந்ததினால் எனக்கு அப்போது பல தலித் நண்பர்கள் இருந்தார்கள். உண்மையாகவும் பாசாங்கின்றி பழகும் விதத்தில் மற்ற பிரிவு நண்பர்களை விட தலித் நண்பர்களே சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம். அவை எனக்கு நடைமுறை உண்மையை உணர்த்தியது.

என் தாயார், யாரென்றே தெரியாத ஒரு தொலைக்காட்சி சிறுமியை பாராட்டத் துணிவதும் அதே போல் இன்னொரு பிரிவினரை இகழத் துணிவதற்கும் 'சாதி' என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு நச்சுக்கிருமி காரணமாக இருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை விளக்கினாலும் அவருக்கு புரியாததற்கு அவர்கள் வளர்க்கப்பட்ட முறையும் கல்வி இல்லாத சூழலும் காரணமாயிருப்பதை கண்டு பரிதாபமாக இருந்தது. ஆனால் முறையாக கல்வி பெற்ற நம் சமகாலத்து மனிதர்களே சாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராததைக் காணும் போது கல்விக்கும் சிந்தனைக்கும் பெரும்பாலும் சம்பந்தேமேயில்லையோ என்றும் தோன்றுகிறது. கணினி படித்தவர்கள் எல்லாம் தேவலோகத்திலிருந்து இறங்கியவர்கள் என்கிற மனோபாவம் பாமரர்களிடம் இருக்கிறது. ஆனால் கணினி படித்தவர்களும் இணையத்தில் பாமரர்களை விடவும் மோசமாக சாதிய உணர்வோடு மோதிக் கொள்வதை காணும் போது அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முற்போக்கான பார்வை என்றாலே அது ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவாக பேசுவதுதான் என்றிருக்கும் இவர்களது புரிதல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் ஆதிக்கச் சாதி என்றாலே அது பார்ப்பனர்கள் மாத்திரம்தான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதி குறித்த எந்தவொரு பதிவுமே பார்ப்பனர்களைச் சாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் நம் சாதிய அமைப்பை மிக வசதியாக அப்போது இவர்கள் மறந்து விடுகிறார்கள். எந்த வன்முறைச் சம்பவம் என்றாலும் அதனை நியாயமாக அணுகுவதை விட்டு விட்டு 'முயலுக்கு மூன்று கால்' என்பது போல தன்னுடைய வசதிக்கேற்ற சார்புப் பார்வையோடு வெளிப்படுத்துகிறார்கள். தலித் பிரிவினர் அனைவருமே அப்பாவிகள் போலவும் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற பிம்பத்தை கட்டமைப்பதில் இவர்கள் காட்டும் அவசரம் நேர்மையானது அல்ல.

ஆதிக்க சாதி என்று குறிப்பிட்டு அந்தப் பிரிவில் உள்ள அனைத்து மனிதர்களையும் காழ்ப்புணர்ச்சியோடு பார்ப்பதும் அணுகுவதும் முறையானதல்ல. தலித் பிரிவிலும் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். இதையும் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்ல முடியும்.

()

எல்லா சாதி மனிதர்களும் புழங்கும் ஒண்டுக்குடித்தனத்தில் அதிலுள்ள சங்கடங்களோடும் சண்டைகளோடும் மகிழ்ச்சிகளுடனும் இடையூறுகளுடன் வாழ்ந்தவன் நான். அப்போதைய உரிமையாளரிடமிருந்து நாங்கள் குடியிருந்த வீட்டை புதிதாக விலைக்கு வாங்கியவர் தலித் பிரிவைச் சார்ந்தவர். அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர் அந்த வட்ட அளவில் அதிகாரம் பொருந்திய பதவியில் இருந்தார். தொழிற்சங்கத்திலும் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டை வாங்கியவுடன் அவர் செய்த முதல் பணி எல்லோரையும் காலி செய்யச் சொல்லி மறைமுகமாகவும் நேரடியாகவும் தந்த கொடுமைகள். இவருடைய மிரட்டலுக்குப் பயந்த சில வீட்டினர் காலி செய்து விட்டனர். ஆனால் மிகுந்த வறுமையில் வாழ்ந்த என்னுடைய குடும்பத்தினரைப் போன்றவர்கள் மாத்திரம் உடனே வேறிடத்திற்கு செல்ல முடியாமல் அந்தக் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை அந்த வீட்டுக் கட்டிடத்திற்குள் எதற்கோ அவசரமாய் நுழைந்த போது எதிரே வந்த அவரைக் கவனியாமல் முட்டிக் கொண்டேன். "எதிரே வருகிற என்னைக் கண்டு மரியாதையாக ஒதுங்கி நிற்காமல் இடிக்கிறாற் போல் வருகிறாயே" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது சுமார் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்த எனக்கு 'என்ன தப்பு செய்தேன்' என்று அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் ஒரு முறை குடியிருந்தவர்கள் அனைவரையும் எதையும் விளக்காமல் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார். என்னுடைய வீட்டின் சார்பில் நான் ஒரளவிற்கு படித்தவன் என்பதால் என்னை அழைத்து கையெழுத்திடச் சொன்னார்கள். எதற்கென்று நான் தயக்கத்துடன் கேட்க முயன்ற போது கையில் பெரிய கல் ஒன்றை தூக்கி கொலை வெறியுடன் எறிய வந்தார். நான் பயந்து ஓடி வந்துவிட்டேன்.

நிற்க. தலித்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இதைச் சொல்ல வரவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு பிரிவினரையே அபத்தமாக நான் பொதுமைப்படுத்த மாட்டேன். எல்லாப்பிரிவுகளிலும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்களை கொடுமைப்படுத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. அதிகாரம் கையில் வரும் போது எந்தவொரு மனிதர்களுக்கும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யும் மனோபாவம் வந்துவிடுவதை குறிப்பிடுவதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே தலித்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்ல என்பதையும் மற்ற பிரிவுகளில் உள்ள அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல என்பதையும் (அவ்வாறான பிம்பத்தைத்தான் இணையத்தில் காண முடிகிறது) அழுத்திச் சொல்வதற்காகத்தான் என்னுடைய முந்தைய பதிவில் சில விஷயங்களை கிண்டலான தொனியில் சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இந்தப் பதிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 'வந்தாயா வழிக்கு' என்ற தொனியில் சிலர் எழுதும் பின்னூட்டமிட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இது அவர்களின் பிரச்சினைதானே ஒழிய, என்னுடையதில்லை. எவனொருவன் தன்னுடைய சாதிய/மத/இன கற்பிதங்களை பெருமிதமாக சொல்லிக் கொள்கிறானோ, அதன் காரணமாகவே மற்ற பிரிவினரை இகழ்வாக நோக்குகிறானோ அவன் என் கண்ணுக்கு மலத்தில் நெளியும் புழுவாகவே தெரிகிறான். (இது எல்லாப்பிரிவினருக்கும் பொருந்தும்).

()

மற்றபடி....

குறிப்பிட்ட சில பதிவர்களை நான் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே சிலர் பின்னூட்டமிட்டிருக்கின்றனர். அதில் ஒரளவிற்குத்தான் உண்மையிருக்கிறது. செயற்கையான ஆவேசத்துடனும் மற்றவர்களை கவனத்தை கவர உபயோகப்படும் இகழ்வான உத்திகளுடன் அவர்களின் பதிவில் குறிப்பிடப்படும் ஆபாச வார்த்தைகளைப் பற்றின எரிச்சல் என்னிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அதைத்தான் சுட்ட விரும்பினேன். ஆனால் அவர்களைச் சுட்டிக்காட்டி என்னை ஏதோ ஒரு புனிதன் என்று காட்டிக் கொள்வது அல்ல என் நோக்கம். என்னுடைய பதிவிலும் அவ்வாறான வார்த்தைகள் சில சமயங்களில் இடம் பெற்றிருக்க்கூடும். இதைத் தவிர்த்து மற்ற சில விவாதங்களுக்காகவும் மாற்று எழுத்துக்களாகவும் அவர்களின் பதிவை தொடர்ந்து படித்துக் கொண்டுதானிருக்கிறேன். சினிமா பற்றிய வரிகளில் நான் குறிப்பிட்டது போல பிடிக்காவிடில் ஏன் தொடர்ந்து படிக்கிறாய் என்று அவர்களும் கேள்வி எழுப்ப முடியும்தானே?

()

(முந்தைய) பதிவின் ஆரம்பத்தில் கழிசடைகள், பன்றிக்குட்டிகள் என்று சக பதிவர்களைப் பற்றி எழுதியிருந்ததாக அதிஷா உள்ளிட்ட சில நண்பர்கள் பின்னூட்டத்தில் மறைமுகமாக வருத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதிவு முழுதுமே ஒரு போலி முற்போக்காளனின் குரல். அவன் பார்வையில் மற்ற பதிவர்களின் தோற்றம் பற்றித்தான் எழுத முயன்றிருந்தேன். அதை என்னுடைய பார்வை என்பது போல அவர்கள் புரிந்து கொண்டதற்கு நான் தெளிவற்ற முறையில் எழுதியதும் காரணமாக இருந்திருக்கலாம். பதிவின் இடையில் என்னைப் பற்றிய சுய எள்ளல் சார்ந்த தடங்களையும் அவர்கள் கண்டிருக்கக்கூடும். எந்தவொரு தனி மனிதரையும் நான் தாழ்ச்சியாக நினைப்பதில்லை. இதையும் மீறி அவர்கள் புண்பட்டிருந்தால் அதற்காக என் மன்னிப்பை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அந்தப் பதிவு பல பதிவர்களின் நடுநிலை சார்ந்த மனோநிலையை, எண்ணங்களை எதிரொலித்திருக்கின்றது என்பதை பல பின்னூட்டங்களின் மூலம் உணரும் போது 'நான் தனியனல்ல' என்கிற சந்தோஷம் ஏற்படுகிறது.

என்னுடைய அலைவரிசையில் இயங்குகிற நண்பர்களின் தோழமை கிடைக்காமல் நான் பல வருடங்கள் அவஸ்தைப் பட்ட போது அதைத் தீர்த்தது இணையம்தான் என்ற வகையில் இந்த ஊடகத்தின் மீது எனக்கு மிக நன்றியுண்டு. சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதில் ஏற்படும் சந்தோஷமும் அதனால் கிடைக்கும் பாராட்டின் காரணமாக இன்னும் நிறைய விஷயங்களை தேடிக் கண்டடைந்து பகிர வேண்டும் என்கிற உணர்வை ஊட்டி என்னுடைய தேடல் விரிவாக ஊக்கமளித்தது இணையம்தான்.

என்னுடைய பதிவை சராசரியாக தினமும் குறைந்தது முந்நூறு நபர்களிலிருந்து ஐந்நூறு நபர்களாவது வாசிக்கிறார்கள் என்பதை google analytics மூலம் அறிய முடிகிறது. ஒரு சிற்றிதழோ அல்லது இடைநிலை இதழுக்கோ சாத்தியப்படாத வாசக வட்டமிது. மேலும் எந்தவிதமான அரசியல் தலையீடோ, இடப்பிரச்சினையோ இல்லாமல் மிகச்சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை இங்கே பகிர முடிகிறது. இணையத்தின் ஆக மிகப் பெரிய பலம் அது. அதுவே என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. என்னுடைய பதிவுகளில் ஒரு சதவீத உருப்படியான விஷயத்தையாவது வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.

இந்த சக்தியை சாதிய/மத/இன உணர்வு சார்ந்த மோதல்களுடான சார்பு நிலை சார்ந்த விவாதங்களின்/வாசிப்புகளின் மூலம் வீணாக்க நான் விரும்பவில்லை. அவ்வளவுதான்.

suresh kannan

Thursday, November 13, 2008

சட்டம் பயிலும் மிருகங்கள்

'இளகிய மனதுடையவர்கள் இதைப் பார்க்க வேண்டாம்' என்ற முன்னெச்சரிக்கையுடனே அந்த செய்தித் துணுக்கு சன் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டாலும் 'என்ன இப்படி பயமுறுத்துகிறார்கள்' என்ற அலட்சியத்துடன்தான் தொடர்ந்து கவனித்தேன். ஆனால் அந்தக் காட்சிகளை பார்த்த கணத்தில் உடம்பெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது. சற்று நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் அமர்ந்தேன்.

Photobucket

சென்னை சட்டக்கல்லூரியில் இருபிரிவு மாணவர்களிடையே இருந்த விரோதப் போக்கு நேற்று கலவரமாக வெடித்தது. மாணவன் ஒருவனை இன்னொரு மாணவர்கள் குழு தாக்கிக் கொண்டிருந்தது. அவனை மீட்க கத்தியுடன் வந்த இன்னொரு மாணவன் அந்தக் குழுவை தாக்க முயன்றான். அந்தக் குழு தனியாக மாட்டிக் கொண்ட அந்த மாணவனை உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக அடித்தனர். அவன் விழுந்த அடியை தாங்க முடியாமல் கல்லூரியின் கேட்டிற்கு அருகாமையில் கீழே சாய்ந்த போதும் கூட மிருகவெறி கொண்ட அவர்கள் பிரக்ஞையின்றி கிடந்த அவனை ஓங்கி ஓங்கி உருட்டுக்கட்டையால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர். அருகாமையிலேயே இருந்த காவல்துறையினர் இதை ஒதுங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களே ஒழிய ஒருவன் உயிரிழக்கும் அபாயம் நேரக்கூடிய அந்தச் செயலை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

பதைபதைத்துப்போன பொதுமக்களும் பத்திரிகையாளர்களும்தான் காவல்துறையின் இந்த அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்தனர்.

விடுதியில் தங்கியிருக்கும் தலித் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் பெயர் போடாததற்காக விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கலவரம் ஏற்படக்கூடிய சூழல் குறித்து காவல்துறையினருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் முன்னமே தெரியும் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் இந்தக் கொடூரத்தை முன்னமே தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் யாரும் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் உலவிக் கொண்டிருந்த மாணவர்களையும் ஏன் காவல்துறை முன்னமே கைது செய்யவில்லை என்பதும் புரியவில்லை.

செய்தகளில் பதிவாகாமல் போன இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் எத்தனையோ?


()

சென்னையில் இருக்கும் கல்லூரிகளில் வன்முறை கலாச்சாரத்திற்கு பெரிதும் பெயர் போனவை பச்சையப்பன் கல்லூரியும், மாநிலக் கல்லூரியும், சட்டக் கல்லூரியும். எந்தவொரு சிறுபிரச்சினைக்கும் சாலையை மறிப்பது, பேருந்துகளை சேதப்படுத்துவது, குழுவாக அடித்துக் கொள்வது, பெண்களை கிண்டல் செய்வது, பொதுமக்களுக்கு இடையுறான காரியங்களை செய்வது போன்ற செயல்களில் காலங்காலமாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர். இவை அனைவருக்கும் தெரிந்த செய்திதான். சாதாரணனாக இருக்கும் தனியொருவன் வன்முறைக் கூட்டத்துடன் இணையும் போது அவனும் அந்தக் கூட்டத்தின் ஒரு துளியாக உருமாறுவது mob psychologyயின் அடிப்படை.

ஆனால் நேற்றைய சம்பவத்தை தொலைக்காட்சியிலும் நேரிலும் பார்த்தவர்கள் கல்மனதுடையவர்களாக இருந்தாலும் நிச்சயம் பதறிப் போயிருப்பவர். வருங்காலத்தில் வழக்குறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வரப்போகிறவர்களின் மனதில் இவ்வளவு வன்மமும் வன்முறையும் வெறுப்பும் கலந்திருப்பதைக் காணும் போது வருங்காலத்தில் பொதுமக்களுக்கு நீதி என்கிற சமாச்சாரம் கொஞ்சமேனும் கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. சட்டம் பயிற்றுவிக்க்ப்படுபவர்களே சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருப்பது நகைமுரணானது மாத்திரமல்ல கொடூரமாக செயலும் கூட.

காவல்துறையினர் தலையிடாமல் ஒதுங்கி நின்ற அரசியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்பவும் குழுவாக இணைந்து கலாட்டா செய்து தலைவலியாக இருக்கின்ற மாணவர்கள் எப்படியாவது தங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று நினைத்தார்களா? எப்படியாவது இருக்கட்டும். கண்ணெதிரே நடக்கின்ற - அதிலும் தடுத்திருக்கக்கூடிய ஒரு கொடுமையை - தடுக்க காவல்துறையினரைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. மனச்சாட்சி உள்ள ஒரு மனிதராக இருந்தால் கூட போதும். மிருகத்தனமாக அடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் மீது கல்லையாவது விட்டெறிந்து அவன் கவனத்தை கலைக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தோன்றியது. ஆனால் நேரில் பார்த்திருந்தால் கையாலாகாதனமாக பார்த்துக் கொண்டிருப்பேனோ என்றும் தோன்றுகிறது.

()

இந்த விபரீதமான செயலுக்கு கருணாநிதி தலையிமலான திமுக அரசு நிச்சயம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வீடியோவில் பதிவான காட்சிகளின் மூலம் வன்முறை கொலைவெறித்தாக்குதலை நடத்திய மாணவர்களை அடையாளங்கண்டு பயங்கரவாதிகள் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினரையும் முன்னமே தடுக்கத்தவறிய கல்லூரி நிர்வாகத்தினரையும் பதவிநீக்கம் செய்து கடமையை முறையாக செய்ய தவறியதற்காக வழக்குப்போட்டு சிறையில் தள்ள வேண்டும்.

வருங்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க அனுமதி விண்ணப்பத்தில் இதுகுறித்து கடுமையான விதிமுறைகளை ஏற்படுத்தி மாணவர்களை முன்னரே எச்சரிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் போல மாணவர்களின் இளம்பருவத்திலேயே இவ்வளவு வன்முறை சார்ந்த எண்ணங்கள் கொண்டிருப்பதும் அதை சிறிதும் மனச்சாட்சியின்றி செயல்படுத்துவதும் வருங்கால தேசம் குறித்தான கவலையை அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை முன்னரே யூகித்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

இம்மாதிரியான வன்முறை கலாச்சாரத்திற்கு திரைப்பட ஊடகங்களின் பங்கும் பிரதானமாக இருக்கிறது. கல்லூரியில் பத்து பேரை அடித்து வீழ்த்தும் மாணவனை நாயகனாக சித்தரிப்பது, இயல்பான காட்சியமைப்பு என்ற பெயரில் அடிப்பதையும் குருதி வழிவதையும் குரூரமாக அமைப்பது போன்ற காட்சிகள் இள நெஞ்சங்களில் நஞ்சைக் கலக்கின்றன.

ஆனால் இந்த அரசு கடுமையானதொரு நடவடிக்கையை எடுக்கப் போகிறதா அல்லது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி இதை மழுப்பப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

()

போகிற போக்கில் செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் பார்க்காமல் புறக்கணிப்பதே மனநிலையை பாதிக்காமல் வைத்திருக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் பிரதானமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் படித்தவொரு காலை நேரத்தையே கலைத்துப் போட்டது. ஆர்.கே. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பைண்டிங் பிரஸ் தொழிலாளி ஒருவரை வாகனம் ஒன்று இடித்து தள்ளியிருக்கிறது. பலத்த அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்ததும் தள்ளியிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ சூழ்ந்து பாய்ந்து வந்திருக்கிறார்கள். வாகனத்தில் இருந்தவர்கள் 'நாங்களே இவரை மருத்துவனையில் சேர்த்து விடுகிறோம்' என்று கூறி ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் பயந்து போய் எங்கோ ஒரு பிளாட்பார்மில் கிடத்தி விட்டுச் சென்று விட்டார்கள். 'உடனே கொண்டு வந்திருந்தால் உயிர் பிழைக்க வைத்திருந்திருக்கலாம்' என்று கூறுகின்றனர் அவர் உடலை பிற்பாடு பரிசோதித்த மருத்துவர்கள்.

21-ம் நூற்றாண்டில் நாகரிகத்தின் உச்சியில் சென்று கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் நம்மிடம் இன்று நுட்பத்தின் எல்லா வசதிகளும் உண்டு. அடிப்படையான மனிதம்தான் இல்லை.

image courtesy: www.dailythanthi.com

suresh kannan