தி.மு.க.ராஜ்யத்தில் மகாராஜாவின் பிரியமான இளவரசருக்கு நடந்த முடிசூட்டுவிழா கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் பாக்கியத்தைப் பெற்றேன். நான் முன்பே சொல்லியிருப்பதைப் போல 'காமெடி திரை' என்றெல்லாம் தனி சானல் தொடங்காமல் எல்லா கட்சிகளின் அரசியல் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்புகிறாற் போல் ஒரு சானல் ஆரம்பித்தால் வடிவேலு, விவேக் எல்லாம் எடுபடாமலே போய்விடுவார்கள். அவ்வளவு காமெடியாக இருக்கும். அதை நிரூபிக்கிறாற் போல்தான் இருந்தது இந்த நிகழ்வுகளும்.
சந்தைக்கடை மாதிரி ஒலித்த கூச்சலின் பின்னணியில் கழக உடன்பிறப்புகளின் மத்தியில் பரிதாபமான தோற்றத்தில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவர் விரும்பியோ விரும்பாமலோ மாலைகளும் பொன்னாடைகளும் மேலே விழுந்து கொண்டே இருந்தன. இதே மாதிரியானதொரு காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தேன். காஞ்சி மட சீனியரின் நூற்றாண்டு விழாவிலும் இதே போல் அவர் மலங்க மலங்க விழித்து அமர்ந்திருக்க மாலைகளும் தங்க நாணயங்களும் அவர் தலை மேல் கொட்டப்பட்டது நினைவுக்கு வந்தது.
ஸ்டாலினை வாழ்த்த வந்தவர்கள் (அதாவது அட்டெண்டென்ஸ் போட வந்தவர்கள்) தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை எப்படியாவது நிறுவ முயற்சி செய்தது காமெடியாக இருந்தது. ஸ்டாலினுக்கு மற்ற நிறங்களில் பொன்னாடை போர்த்தியவர்கள் கருணாநிதிக்கு மாத்திரம் ஞாபகமாக மஞ்சள் நிற பொன்னாடைகளை சமர்ப்பித்து காலில் விழுந்து அவரின் ஆசிகளைப் பெற்றனர். நேரம் ஆக ஆக பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு செக்யூரிட்டிகளால் பிடுங்கி பின்னால் வீசப்பட்டன. ரோஜாப்பூவாக இருந்தாலும் தொடர்ந்து அடித்தால் வலிக்காதா என்ன?. இலவு காத்த கிளி போல் எழவு காத்த கிளியாக அமர்ந்திருந்த 'அன்பழகனை' பாவம், கண்டு கொள்ள ஆளே இல்லை. மூக்கை நெருடியவாறு அமர்ந்திருந்தார். கருணாநிதியின் நிழல் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு பதிலாக அமர்ந்து வந்த சண்முகநாதனை காணவில்லை. அதற்குப்பதிலாக ஒருவர் பெரியவாளிடம் பேசும் சிஷ்யகேடிகள் மாதிரி.. மன்னிக்கவும் சிஷ்யகோடி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு கருணாநிதியிடம் பேசினார்.
இனி அரசு விழாக்களில் பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கு பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கருணாநிதி எப்பவோ கூறிய நினைவு. காந்தி சொன்னதை அவர் இருக்கும் போதே பின்பற்றாதது மாதிரி உடன்பிறப்புகளும் கருணாநிதி சொல்லியிருந்ததை ஞாபகமாக பின்பற்ற விரும்பவில்லை. (காந்தியுடன் கருணாநிதியை ஒப்பிட்டது குறித்து திமுக காரர்கள், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் என்னை பாராட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு காந்தியை திட்டினாலும் பரவாயில்லை. சோனியா காந்தியை திட்டக்கூடாது).
ஒரு ஆச்சரியமும் நடந்தது. யாரோ ஒரு கலகவாதி பொன்னாடைக்கு பதில் புத்தகத்தை அளிக்க அதுவரை அசையாமல் அமாந்திருந்த கருணாநிதி சலனமடைந்து அந்தப் பரபரப்பிற்கிடையிலும் 'அது என்ன புத்தகம்?' என்று மெனக்கெட்டு கவனித்ததை புத்தகப்பிரியனான நான் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.
கூச்சலின் இடையே யாரோ ஒருவர் பலத்த சத்தத்துடன் சண்டையிடும் குரல் கேட்டது. கலைஞர் டிவியில் உடனே ஒலியை அமுக்கி பின்னணி இசையை ஓடவிட்டனர். ஆனால் சன்டிவியில் இதை தொடர்ந்து கேட்டு ரசிக்க முடிந்தது.
பத்திரிகையாளர்கள்தான் பாவம். ஒவ்வொரு முக்கியமான தலைவர்கள் பொன்னாடை அணிவிக்கும் போதெல்லாம் இலவச தொலைக்காட்சி பெட்டி வாங்க வந்தவர்கள் போல் முண்டியடித்துக் கொண்டு "அண்ணே, அண்ணே... சார்... சார்.... " என்று புகைப்படம் எடுக்க இறைஞ்சிக் கொண்டிருந்ததைக் காண பரிதாபமாக இருந்தது.
'இந்தப் பதவியை யாரும் என்னிடமிருந்து பிடுங்கவில்லை. நானாகத்தான் முன்வந்து தம்பி ஸ்டாலினை பொருளாளராக ஆக்கும் யோசனையை தலைவருக்கு அளித்தேன்' என்று ஆற்காடு வீராசாமி ஒரு பரிதாப சுயவாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார். 'நான் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்' என்று திராவிட தலைவர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆக்கப்பூர்வமான தொண்டர்களுக்கு தெரியாதா? அதே போன்ற அர்த்தத்தில்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
எப்படியோ கருணாதிக்குப் பின் ஸ்டாலின் என்று நெடுங்காலமாக உலவிக் கொண்டிருந்த உண்மையான வதந்தி, அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டு விட்டது.
மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை நடப்பதுதான் ஜனநாயகம் என்று ஐந்தாங் கிளாஸ் வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்போது இந்திராகாந்தி பிரதமர் என்றும் ஞாபகம். என் மகள் படிக்கும் போது ராகுல் காந்தி பிரதமராக இருக்கலாம்.
ஜெய்ஹிந்த்.
சொல்ல மறந்தது: கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் சன்னே முதலில் ஒளிபரப்பியது. என்ன இருந்தாலும் சீனியரல்லவா! ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக அரசு.... என்று லட்சத்தி பன்னிரெண்டாயிரத்தி முந்நூற்று ஐந்தாவது தடவையாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க பரிதாபமாக இருந்தது. 2011-ல் முதல்வராகும் வரிசையில் நிற்கும் விஜய்காந்த்,சரத்குமார் போன்றவர்கள் கதி என்னவாகும் என்று யூகிக்க முடியவில்லை.
ஸ்டாலினின் blog
suresh kannan
16 comments:
அருமையான, அழகான, நக்கலான அலசல்.
அசத்துங்க
மிகவும் ரசித்தேன்.நன்றி
சுரேஷ் சமீபத்தில் மிகவும் எரிச்சல் மூட்டிய நிகழ்ச்சி இது.தி.மு.க வின் தலைவராக கருணாநிதி ஏகமனதாக தேர்வு என நூறு முறை சொன்னார்கள் கலைஞர் தொலைகாட்சியில்.ஏதோ அந்த பதவிக்கு பத்து பேர் போட்டி போட்டதுபோல..
மேலும் முதல்வரின் உதவியாளர் சண்முகநாதன் கடந்த மாதம் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்,தற்பொழுதைய உதவியாளர் முன்னாள் IAS என என் தந்தை சொல்லி அறிந்தேன்.
சுரெஷ்,
நல்ல சட்டையர் எழுத்து. வரிக்கு வரி ரசிச்சேன். வேறென்ன செய்ய?
ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது போலத்தான். யாருக்கு, என்ன நடக்கும் என்பதெல்லாம் முன்கூட்டியே நமக்குத் தெரிந்தது, இப்பொழுது மேடையேற்றப் பட்டிருக்கிறது.
//இனி அரசு விழாக்களில் பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கு பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கருணாநிதி எப்பவோ கூறிய நினைவு.//
நடந்தது அரசு விழாவா கட்சி விழாவா
நல்ல பதிவு & அருமையான கருத்துக்கள்!
வாழ்த்துக்கள்!!
எல்லாத்தையும் பிச்சு உதறிட்டிங்க. நன்றி
//விரும்பியோ விரும்பாமலோ//
’இன்னுமாடா நம்மள நம்புறாய்ங்க’ என்ற வடிவேலு காமெடி நினைவுக்கு வருகிறது.
//மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை நடப்பதுதான் ஜனநாயகம் என்று ஐந்தாங் கிளாஸ் வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்போது இந்திராகாந்தி பிரதமர் என்றும் ஞாபகம். என் மகள் படிக்கும் போது ராகுல் காந்தி பிரதமராக இருக்கலாம்.//
அன்பு சுரேஷ்,
ராஜிவ் காந்தி இறந்த மறுநாளே சோனியா காந்தி தலைவர் ஆகிவிடவில்லை. காங்கிரஸின் தலைமை ஆட்டம் கண்ட நிலையில் நல்ல தலைவர்கள் வழிநடத்த இல்லாமல் காங்கிரஸ் தறிகெட்டு ஓடிய சமயத்தில் தான் பலராலும் முன்மொழியப்பட்டு சோனியா தலைவர் ஆனார்.
வாரிசாக இருக்கும் ஒரே காரணத்தால் மட்டுமே தலைவர் ஆகிவிட முடியாது, தலைமையேற்று நடத்திச் செல்லக்கூடிய திறன் வேண்டும். எம்ஜியாருக்கு பிறகு ஜானகி தலைமையில் சென்ற அதிமுக நிலை என்ன என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்திரா காந்திக்கு பிறகு வந்த ராஜிவ் ஒரு சில குற்றச்சாட்டுகள் தவிர்த்து காங்கிரஸை நல்ல முறையிலேயே வழிநடத்திச் சென்றார். ஆகவே, என்ன தான் தலைவர்கள் அடுத்தத் தலைவராக முன்னிறுத்தினாலும், ஜால்ராக்கள் முன்மொழிந்தாலும் அவரவரது தலைமை பண்பே அவர்களை நிலைத்து நிற்கச் செய்யும். அது ஸ்டாலின், ராகுல், அன்புமணி எல்லோருக்குமே பொருந்தும்.
ஸ்டாலின் படிப்படியாக தானே முன்னேறி வருகிறார், அவருக்கு பொருளாளர் பதவி கொடுத்தால் என்ன தவறு தல?
//இதே மாதிரியானதொரு காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தேன். காஞ்சி மட சீனியரின் நூற்றாண்டு விழாவிலும் இதே போல் அவர் மலங்க மலங்க விழித்து அமர்ந்திருக்க மாலைகளும் தங்க நாணயங்களும் அவர் தலை மேல் கொட்டப்பட்டது நினைவுக்கு வந்தது.
//
நச் கமெண்ட்.
இருங்க மத்ததைப் படிச்சுட்டு வரேன்.
SUPERB POLITICAL SATIRE ARTICLE...AS MENTIONED BY Mr VADAKARAI VELAN....REALLY ENJOYED READING THIS ARTICLE...
தற்செயலாக இந்தக் கூத்துப் பார்க்கக் கிடைத்தது.
இவர்கள் அடிக்கும் கூத்து பரிதாபமாக இருந்தது. எல்லோருமே நல்லா நடிக்கிறாங்க..
"இந்த மாலைகள் வாழ்த்தப் போடுகிறார்களா??? எழுந்திரக் கூடாதென அமுக்கப் போடுகிறார்களா?
ஆற்காட்டார்...ஒப்புதல்..முகமது பின் துக்ளக் "அந்த தொண்டரை எரித்து விடாதீர்கள்" எனும்
வசனத்தையும் ஞாபகப் படுத்தியது.
தேர்தல்;தெரிவு எல்லாம் ஜனநாயக முறையில் ;நடந்ததாம்...பால் குடிகள் கூட சிரிக்கும்.
உங்கள் தொகுப்பு அருமை.
முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் இருந்த ஒருவர் கலைஞர் கருணாநிதியின் மகனாக பிறந்துவிட்ட காரணத்தினாலேயே அரசியலில் இருக்கக்கூடாது, அரை டவுசரை போட்டுக்கொண்டு விவசாயம் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று நினைக்கும் உங்கள் குறுகிய தட்டையான பார்வையை என்னவென்று சொல்வது ?
வரலாற்றின் பக்கங்களை திரும்பி பாருங்கள்...மிசாவில் அவர் சிறையில் இருந்தபோது சிட்டிபாபு என்ற த்9தொண்டர் இல்லை என்றால் இன்றைக்கு ஸ்டாலின் என்ற ஒருவரே இல்லை என்பதை வசதியாக மறந்துவிட்டீர்கள்...
ஸ்டாலின் மேயராக இருந்தபோது சிறப்பாக ஆற்றிய பணிகளின் விளைவாக விளைந்த மேம்பாலம் ஒன்றின்மீது தினமும் பயணம் செய்து வீடு திரும்பி ஸ்டாலினை திட்டி பதிவு எழுதுவதற்கு பெயர் செலக்டிவ் அம்னீஷியா என்றுகூட சொல்லலாம்..
வாரிசு அரசியல் என்ற ஓட்டையான செல்லரித்துப்போன புளித்துப்போன வாதம் ஒன்றை வைத்து இன்னும் எத்தனை நாள் காலம்தள்ளுவது ? சீனியர் புஷ்ஷுக்கு பிறகு ஏன் ஜூனியர் புஷ் தேர்தலில் நின்றார் ஜனாதிபதியானார், ஏன் ஹிலாரி கவர்னர், வேட்பாளர் என்றெல்லாம் ஏன் இன்னும் கேள்வி எழுப்பவில்லை ?
தயாநிதி மாறனை சொல்வீர்களாயின் அதில் ஒரு அடிப்படை நியாயம் இருக்கிறது, ஆனால் ஸ்டாலின் 100 சதவீதம் அந்த பதவிக்கு தகுதியானவரே...அண்ணன் அழகிரியைப்போல் அதிரடியாக அரசியல் செய்யும் குணமில்லாத, அமைதியை, சாத்வீகத்தை விரும்புகிற, அடுத்த தலைமுறைக்கான தலைவன் ஸ்டாலின்...
எங்களைப்போன்ற மாற்றுக்கட்சியினரும் மதிக்கும் பண்புடையவர். உங்களுக்கு எழும் "காண்டு" எதனால் என்பதை தாமரை இலை தண்ணீரைப்போல புரிந்துகொள்ளமுடிகிறது...
பதிவை ஸ்டாலினுக்கு அஞ்சல் அனுப்பியுள்ளேன்...
பின்னூட்டம் எல்லாம் போடுவாரா என்று தெரியவில்லை :)))
சுரேஷ்
அடிபொலி..கழக கண்மணிகளிடமிருந்து ஆட்டோ லாரி புல்டோசர்கள் வர வாய்ப்புகள் அதிகம் :)
//அதற்குப்பதிலாக ஒருவர் பெரியவாளிடம் பேசும் சிஷ்யகேடிகள் மாதிரி.. மன்னிக்கவும் சிஷ்யகோடி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு கருணாநிதியிடம் பேசினார்.
//
மேற்படி உதவியாளர் சற்று முன்னதாக சிக்கன் பிரியாணி சாப்பிட்டிருப்பாரோ?
Post a Comment