Wednesday, December 31, 2008

கற்பிதங்கள் உடைந்த சிரிப்பு

மாறுதலாக, இம்மாதிரியான தருணங்களில் சாருநிவேதிதாவை ரொம்பவே பிடித்துப் போய் விடுகிறது.

()

நேற்று ஒரு வாடிக்கையாளரின் விளம்பர வடிவமைப்பு ஒப்புதலுக்காக நிறையவே களைத்துப் போயிருந்தேன். பொறுமையை இழக்க வேண்டியிருந்த தருணங்களை பல்லைக்கடித்துக் கொண்டு சகிக்க வேண்டியதாயிருந்தது. இறுதிக் கட்ட ஒப்புதலின் போது ஒரு மிகச்சிறிய திருத்தத்திற்காக அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நொந்து போயிருந்த கணத்தில் கிடைத்த இடைவெளியில் இணையத்தில் மேயும் போது சாருவின் வலைத்தளத்தில் அவரின் பத்து புத்தகங்களுக்கான அறிவிப்பில் இருந்த இந்த வரிகளை படித்த போது எல்லா உளைச்சலும் மறைந்து போய் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

இந்த உலகில் எந்த விஷயத்தையுமே நாம் ஓசியில் வாங்க முடியாது. (அம்மாவின் அன்பு என்றெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ணாதீர்கள்).

படித்து முடித்து விட்டு வேறு சில பதிவுகளை படித்த பிறகும் குறிப்பிட்ட வரிகள் நினைவில் வந்து சிரிப்பை வாரியடித்துக் கொண்டே இருந்தன. கணினி முன் அமர்ந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருந்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் மனநல மருத்துவனைக்கு தொலைபேசும் அபாயம் இருந்ததால் தேநீர் அருந்தும் சாக்கில் வெளியே சென்றேன். கடலலை போல் அப்போதும் சிரிப்பு தேநீருடன் வழிந்து கொண்டே இருந்தது. உறங்கப் போகும் வரை இந்த மனநிலையே நீடித்தது.

மறுநாள் பல் துலக்கிக் கொண்டிருந்த கணத்தில் எங்கிருந்தோ நினைவகத்தில் இருந்து பாய்ந்து வந்த வரிகள் குபீர் சிரிப்பை மூட்டின. பற்பசையை உடனே துப்ப வேண்டியதாயிருந்தது.

()

தேசபக்தி, தாயன்பு, தெய்வீகக் காதல், விழாக்கள், பிறந்த நாட்கள் போன்ற மாதிரியான கற்பிதங்களையும் புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் வைத்துக் கொண்டு நாம் படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா! எவ்வளவு போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லவேளையாக செய்தித்தாள்களில் குற்றவியல் சார்ந்த உண்மை நிகழ்வுகள் இந்தக் கற்பிதங்களை நாம் உணராமலேயே அவ்வப்போது சேதப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நம்முன்னேயே உலவிக் கொண்டிருக்கும் உண்மையின் யதார்த்தத்தின் வெளிச்சத்தை கண்கொண்டு காண முடியாத கூச்சத்துடன் போலி இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும், முன்னோர்களும், வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அமைத்துக் கொடுத்த கடிவாளங்கள் வேறு.

இன்னும் விரித்து எழுத ஆசைதான்... ஆனால்..

சாருவின் பதிவை முழுக்கப்படித்துப் பாருங்கள். பதிவின் இறுதியிலும் சில சிரிப்பு வெடிகள் உள்ளன.

[பின்குறிப்பு: புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லாமலிருக்கப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள். :-) ]

suresh kannan

8 comments:

ஹரன்பிரசன்னா said...

//புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லாமலிருக்கப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள். :-) //

புத்தாண்டு வாழ்த்துகள்! கற்பிதங்களுக்கு எதிராக நிலைபெற்றுவிட்ட கற்பிதங்களை உடைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. :))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தேசபக்தி, தாயன்பு, தெய்வீகக் காதல், விழாக்கள், பிறந்த நாட்கள் போன்ற மாதிரியான கற்பிதங்களையும் புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் வைத்துக் கொண்டு நாம் படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா! எவ்வளவு போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லவேளையாக செய்தித்தாள்களில் குற்றவியல் சார்ந்த உண்மை நிகழ்வுகள் இந்தக் கற்பிதங்களை நாம் உணராமலேயே அவ்வப்போது சேதப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நம்முன்னேயே உலவிக் கொண்டிருக்கும் உண்மையின் யதார்த்தத்தின் வெளிச்சத்தை கண்கொண்டு காண முடியாத கூச்சத்துடன் போலி இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும், முன்னோர்களும், வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அமைத்துக் கொடுத்த கடிவாளங்கள் வேறு.//

அனுபவித்து ,உணர்ந்து எழுதிய வார்த்தைகள். நமது கலாச்சாரத்தில் இது தூக்கலாக உள்ளது.
என்பது என் அபிப்பிராயம்.
நானும் சாருவைப் படித்து விட்டு பல தடவை சபாஷ் சொல்லியுள்ளேன்.

Ramesh said...

Happy New Year 2009!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Unknown said...

இன்னும் விரித்து எழுத ஆசைதான்... ஆனால்..

எவனாவது படிக்கனுமே ?

மயிலாடுதுறை சிவா said...

என்ன சுரேஷ்

சாருவைப் பற்றி அடிக்கடி எழுதுகீறீர்கள்! சாருவின் எழுத்தில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது, மறுப்பதற்க்கில்லை!

புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-))

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

>>சாருவைப் பற்றி அடிக்கடி எழுதுகீறீர்கள்! சாருவின் எழுத்தில் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது, மறுப்பதற்க்கில்லை!
>>

ஆம்.
ரகசியாவின் ஆட்டத்தில் கூடத்தான் ஏதோ இருக்கிறது,மறுப்பதற்கில்லை!

Krishnan said...

சுரேஷ் புத்தாண்டு வாழ்த்துகள்!

Anonymous said...

சாருவின் எழுத்தில் இருக்கும் செண்டிமெண்டால்லிட்டியை எந்த வகையில் சேர்ப்பது. தமிழில் மிகவும்
தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள
பல சொற்களில் கற்பிதம் என்பதும்
ஒன்று.