அரசின் பொது நூலகத்துறையின் அலட்சியத்தையும் பதிப்பகங்களின் பிரச்சினைகளையும் பற்றி பிரசன்னா சில விஷயங்களை வெளிப்படையானதொரு பதிவாக எழுதியிருக்கிறார். (காலச்சுவடு கட்டுரையை இன்னும் நான் படிக்கவில்லை).
அரசின் எல்லாத்துறைகளையும் போலவே பொது நூலகத்துறையிலும் ஊழலும் பொறுப்பின்மையும் நிறைந்துள்ளது என்று இதை பொருட்படுத்தாமல் விட்டு விட முடியாது. பொறுப்பான சமூகத்தின் உருவாக்கத்திற்கு புத்தகங்களின் பங்கு என்ன என்பதை யாரும் விரிவாக சொல்லத் தேவையில்லையாமலே அதை நாம் புரிந்து கொள்ள முடியும். கல்விக்கூடங்களில் சிலபஸ் தாண்டியும் அறிந்து கொள்ள விஷயங்களை நூலகங்களின மூலம்தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் புத்தகங்களை காசு கொடுத்து வாங்க இயலாத, நூலகங்களை நம்பியிருப்பவர்களின் கதி என்ன? என் அனுபவத்தைச் சொல்கிறேன்.
பெரும்பாலான பள்ளிகளில் உள்ள நூலகர்கள் புத்தகங்களை மாணவர்களுக்குத் தராமல் பூட்டியே வைத்திருப்பர். (கிழியாமல் பத்திரமாக இருக்குமாம்). அதை மீறியும் தரப்படும் புத்தகங்கள் சிறுவர் நீதிக் கதைகளாக இருக்கும்.
இது இப்படியென்றால் தனியார் நூலகங்கள் வேறு மாதிரி. ஆராய்ச்சியாளர்களை மாத்திரமே அனுமதிக்கும் ரோஜா முத்தையா நூலகங்களில் உள்ளே நுழைவதற்கான விதிமுறைகள் புழல் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடச் செல்வதற்கான விதிமுறைகளை ஒத்தது என்கிறார்கள். சிறுவயதில் நான் முதன்முதலாக மறைமலையடிகள் நூலகத்திற்கு சென்றபோது உயரம் குறைவான ஒருவர் என்னை அகதி போல வெறுப்புடன் பார்த்து 'என்ன வேண்டும்?' என எரிச்சலுடன் கேட்டார். 'கத்தரிக்காய் கால் கிலோ' என்று மனதிற்குள் சொல்லிவிட்டு பயந்து போய் ஓடியே வந்து விட்டேன். என்றாலும் விடாப்பிடியாக மீண்டும் ஒருவாரம் கழித்து சென்றேன். நல்லவேளையாக இன்னொரு பொறுமையான மனிதர் இருந்தார். வாசிப்பின் மீதான என்னுடைய ஆர்வத்தைக் கண்டு சில கேள்விகள் கேட்டுவிட்டு உறுப்பினராக அனுமதித்தார். முதல் புத்தகமாக பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' தேர்ந்தெடுத்த ஞாபகம். வீட்டிற்குச் சென்று உடனே படித்துவிட்டு மதியமே போய் இன்னொரு புத்தகத்திற்காக நின்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்தவர், ஒரு நாளைக்கு ஒரு புத்தகம்தான் அனுமதிக்கப்படும். இன்று போய் நாளை வா என அனுப்பவி்ட்டார். பின்பு அரிதான சமயங்களில் நூலகத்திலேயே அமர்ந்து படித்திருக்கிறேன். யுனெஸ்கோ போன்ற அறிவியல் இதழ்களை அங்கேதான் பார்த்தேன். தடிமனான புத்தகங்களை வைத்து சிலர் குறிப்பேடுகளுடன் வேறு உலகத்தில் ஆழந்திருப்பர். நான் கவிதைப் புத்தகத்தை படித்து பிரமித்துப் போய் 'வாலி, நீங்கள் கவிதைகளை அள்ளி அள்ளித் தரும் வாளி' என்று பின்னட்டையில் எழுதிக் கொண்டிருப்பேன். (இப்போதென்றால் வேறு மாதிரியாக எழுதக்கூடும்). அந்த நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து அப்போது நான் அறியவில்லை. (இப்போது இது கன்னிமரா நூலகத்துடன் இணைக்கப்பட்டு விட்டது).
அரசு நூலகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பெரும்பாலான பொது நூலகங்களில் முனைவர் பட்டத்திற்காக எழுதப்பட்ட நூற்களும் (குப்பைகளே) பாலகுமாரன், ரமணிசந்திரன் போன்றவைகளும் பொத்தாம் பொதுவாக தலைப்புகளில் உள்ளடக்கம் முறையாக பதிப்பிக்கப்படாத புத்தகங்களே நிறைந்திருக்கும். பிரத்யேகமான தலைப்பில், பொருளில் ஆழமாக எழுதப்பட்ட புத்தகங்கள் சொற்பமானவையே. அவ்வாறான புத்தகங்களும் பொதுவாக நூலகத்தில் கிடைக்காது. அப்படியே இருந்தாலும் நமக்குத் தேவையான நூலை பொறுமையாக எல்லா அடுக்குகளிலும் தேட வேண்டுமென்றால் குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அதிர்ஷ்டமிருந்தால் அது நமக்கு கிடைக்கக்கூடும். நூலகர்களுக்கே புத்தகங்களைப் பற்றின அறிவு சுத்தமாக இருக்காது.
பல கிளை நூலகங்களில் புத்தகங்களில் இருட்டான அடுக்குகளில் துசிபடிந்து தொல்பொருள் ஆராய்ச்சியினருக்காக காத்திருப்பதை வேதனையுடன் பார்த்திருக்கிறேன். பிரபல வாரப்பத்திரிகைகள் எதையும் நூலகத்தினுள் நீங்கள் பார்க்க முடியாது. அவை நூலகத்தினரின் வீட்டில் பத்திரமாக இருக்குமோ என்னவோ. அரசு நூலகங்களில் உறுப்பினராக ஆவது கவுன்சிலர் சீட் மாதிரி மிகக்கடினம். அவர்கள் வேலைப்பளுவினை குறைக்க பெரும்பாலும் தவிர்க்கவே பார்ப்பர். காவல்துறை மாதிரி ஏரியா பிரச்சினைகளும் உண்டு. எனது அலுவலத்திற்கு அருகில் உள்ள நூலகத்தில் உறுப்பினராக விரும்பியபோது எனது வீடு எங்கே இருக்கிறது? எனக்கேட்ட அலுவலர் அப்போது அங்கேயே உறுப்பினராகிக் கொள்ளுங்கள்' என்றார். நீங்கள் செல்லும் தினத்தன்று நூலகர் இருந்தால் அன்று உங்கள் அதிர்ஷ்ட தினம்.
மக்களின் வரிப்பணத்தில் நூலகங்களுக்காக வாங்கப்படும் புத்தகங்கள் சிறிது காலத்திற்குள்ளாகவே பழைய புத்தகக்கடைகளில் நூலக முத்திரையுடனேயே விற்பதையும் நாம் பார்க்க முடியும்.
நகரத்தில் செயல்படும் நூலகங்களிலேயே இவ்வாறான நிலைமை என்றால் கிராமங்களில் செயல்படும் நூலகங்களைப் பற்றி கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறித்தான் ஒரு வாசகன் தன்னுடைய சிந்தனையை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
()
அரசின் அலட்சியமான செயல்பாடுகள் தவிர பதிப்பகங்கள் செயல்படும் விதமும் நம்பிக்கை தருவதாக இல்லை.பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே தம்முடைய பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. நூற்கள் தயாரிப்பதில் பல முறைகேடுகளும் நடப்பதாக தெரிகிறது. பழைய பதிப்புகளை நூலாசிரியரின் கவனத்திற்கு கொண்டுவராமல் மாற்றி அச்சடிப்பது, பழைய நூற்களை முறையான அனுமதி பெறாமல் தயாரிப்பது, (எழுத்தாளர் பெருமாள் முருகன் இவ்வாறான பல தகிடுதத்தங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார்) எழுத்தாளர்களுக்கு விற்பனை பற்றிய முறையான கணக்குகளை காட்டாமல் ராயல்டி தராமல் அவர்களை ஏதோ நன்கொடை பெற வந்தவர்கள் போல் நடத்துவது, புத்தகங்களின் உள்ளடக்கம் பற்றிய அறிவு பதிப்பகத்தார்க்கே இல்லாமலிருப்பது, நூலக ஆர்டரை பெற எந்த வழிமுறையையும் பின்பற்றுவது, கவர்ச்சியான தலைப்புகளின் மூலம் வாசகர்களை ஏமாற்றுவது போன்றவைகளிலேயே அவர்களின் பெரும்பாலான கவனமும் சக்தியும் செலவாவதால் வாசகர்களுக்கு கிடைப்பது புத்தகங்கள் என்ற பெயரில் காகிதக் குப்பைகளே. சுருங்கக்கூறின் மற்ற சேவைத்துறைகளைப் போலவே பதிப்பகத் துறையும் முற்றிலும் வணிக சிந்தனையோடு யோசிக்கத் தொடங்கி பல வருடங்களாயிருப்பது கவலையை அளிக்கிறது.
மிகச் சொற்பமான பதிப்பகங்களே அரசாங்கத்தின் தயவை எதிர்பார்க்காமல் நல்ல விஷயங்களை வாசகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற கொள்கைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நூற்களின் அருமை தெரிந்தவர் முதல்வராய் இருக்கும் போதே இந்த லட்சணம் என்றால் ...
suresh kannan
4 comments:
பல நூலகங்களில் புத்தகங்களை வைக்கவே இடம் இல்லை. தரையில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள் - நடக்கக்கூட இடமில்லாமல். இதில் மேற்கொண்டு தொடர்ந்து வரும் புத்தகங்களை அவர்கள் எங்கே வைப்பார்கள்? இவ்விஷயத்தில் நூலகர்கள் படும்பாடு... :(
எங்கள் ஊரில் நிறைய இடம் உள்ளது. ஆனால் புத்தகங்கள் தொண்ணூரு சதவீதம் பழசு. பெயர் தான் மாநிலத் தலைநகர், ஆனால் நூலகங்கள் மோசம்.
தனியார் நூலகங்கள் பொது மக்களுக்கு ஜனரஞ்சகமான புத்தகங்களை தான் அதிகம் வைத்திருக்கிறார்கள். நல்ல புத்தகங்கள் வேண்டும் என்றால் மிகவும் விலை!
புத்தகம் எடுக்க வருபவர்களை கீழ்நிலை உதவியாளர்கள்கூட மிரட்ட்ம் தொனியில் பேசுவது மிகக் கொடுமை.
துறைவாரியாக அடுக்கி வைக்கத்தான் அவர்களுக்குச் சம்பளம் எனினும் அது குறித்த அலட்சியத்துடன்தான் இருப்பர்.
"A NATION THAT READS IS A NATION THAT LEADS" என்று எங்கள் பள்ளி நூலகத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.
ஆனால் நூலகத்திலும் பள்ளி பாடப் புத்தகங்களேப் படிக்க கிடைக்கும்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் நூலகம் என்றாலே முரண்பாடு தான் போலிருக்கிறது
Post a Comment