Saturday, January 24, 2009

கோடீஸ்வர சேரிநாய்

இந்திய இசையமைப்பாளர் ஒருவர் சர்வதேச விருதான Golden Globe Award பெற்றிருக்கிற ஒரு சாதனை அடையாளமாக இந்தப் படத்தை சுட்டிக் காட்டினால் எளிதில் இனங்காணலாம். Slumdog Millionaire. இப்போது அகாதமி விருதுக்கும் 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது, இந்திய சினிமா ரசிகர்கள் நீண்டகாலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் ஆஸ்கர் விருதின் தாகத்தை ஒருவேளை தீர்த்து வைக்கலாம். (கமல் இப்போது கொஞ்சம் பெருமூச்சும் வயிற்றெரிச்சலும் பட்டுக் கொள்ளலாம்). விகாஸ் ஸ்வரூப்பின் நாவலான Q & A-ஐஅடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் Danny Boyle.

Photobucket

மும்பை சேரியைச் சேர்ந்த ஒருவன் காவல் துறையினரால் நையப் புடைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறான். அவன் செய்த குற்றம்? கோன் பனேகா குரோர்பதி போன்றதொரு விளையாட்டில் உச்சப்புள்ளியை அடைந்து ஜெயித்தது. குறுக்கு வழியில் இந்த வெற்றியை அடைந்திருப்பானோ என்று போட்டியை நடத்துபவர்களுக்கே சந்தேகம் ஏற்படுகிறது. அதானே? சேரியில் சுற்றித் திரியும், கால் சென்டரில் டீ சப்ளை செய்யும் ஒரு நாயால் மன்னிக்கவும்....இளைஞனால் எப்படி இவர்கள் ஏசி அறையில் மண்டையை உடைத்துக் கொண்டு உருவாக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்? நியாயமான சந்தேகம்.

ஆனால் இந்தப் படத்தின் ஆதாரமான கதையோட்டம் இந்திய திரைப்பட ரசிக மனங்களுக்கு மிகவும் பரிச்சயமானதொன்றுதான். தனது பால்ய வயதில் நேசிக்கும் பெண்ணை ஒரு இளைஞன் பல இன்னல்களுக்கிடையிலும் பல வருடங்களுக்குப் பிறகும் - அவள் கற்பு எனச் சொல்லப்படுகிற சமாச்சாரத்தை இழந்திருந்தாலும் - அடைய நினைப்பதுதான். ('கற்றது தமிழ்' நினைவு வருகிறதா?).

()

விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலின் மையத்தை ஒரு நூல் அளவு எடுத்துக் கொண்டு Simon Beaufoy எழுதியிருக்கும் மிகத் திறமையான திரைக்கதை இந்தப்படத்தின் மிகப் பெரிய பலம். (திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இந்தப்படத்திற்கு கிடைக்கலாமென எதிர்பார்க்கிறேன்). எடிட்டர் Chris Dickens-ம் இதற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்.

இந்திய ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியைக் கூட அடையாளம் காணமுடியாத ஜமாலுக்கு அமெரிக்க டாலரில் பிரசுரமாகியிருக்கும் நபரை எளிதில் அடையாளங்காண முடிகிறது. அதிர்ஷ்டவசமாக குரோர்பதி விளையாட்டிலும் இது தொடர்பான கேள்வி கேட்கப்பட எளிதாக இதற்கு பதில்கூற முடிகிறது. 'பள்ளிப் புத்தகங்களை விட வாழ்க்கை அனுபவங்கள் ஒரு சிறந்த ஆசிரியன்' என்பதை இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன. தனது வாழ்க்கையில் வன்முறையாலும் ஏழ்மையினாலும் கலவரத்தினாலும் எதிர்கொண்ட விஷயங்களே மிக தற்செயலாக குரோர்பதி விளையாட்டிலும் கேள்விகளாக முன்வைக்கப்படும் போது அந்த இளைஞனுக்கு பதிலளிப்பதில் சிரமேதும் இருக்கவில்லை. உதாரணமாக "கடவுள் ராமர் தன் வலதுகையில் வைத்திருப்பது என்ன?" என்பது விளையாட்டின் ஒரு ஆரம்ப கேள்வி. இந்து மத வெறியர்கள் ஏற்படுத்தும் கலவரத்தில் கண் முன்னாலேயே தன் தாயை இழக்கும் ஜமாலுக்கு ராமர் வேடம் பூண்டிருக்கும் ஒரு சிறுவனை காண நேர்கிற போது கையில் வைத்திருக்கும் ஆயுதம் அவன் விரும்பாமலேயே மனதில் கசப்பான ஆழமாக பதிந்து பதிலை இயல்பாக சொல்ல முடிகிறது. இவ்வாறு கேள்வியின் பின்னாலிருக்கும் பதில்களின் மூலமாகவே ஜமாலின் வாழ்க்கைச் சம்பவங்களை நகர்த்திச் சென்றிருப்பது சுவாரசியமான திரைக்கதை உருவாக்கம்.

Photobucket

குரோர்பதி விளையாட்டின் அரங்கமும் இசையும் அனில் கபூரின் உடல் மொழியும் நிஜமான விளையாட்டை அட்சரம் பிசகாமல் பாவனை செய்திருக்கின்றன. விளையாட்டை நடத்தும் பிரேம்குமாராக அனில் கபூர் நடித்திருக்கிறார். ஜமால் ஆரம்ப தொகையை அடைந்தவுடனேயே "இத்தோடு நீ வீட்டுக்குப் போய்விடுவது நல்லது" என்று ரகசியமாக அறிவரை கூறி அவன் தன்னம்பிக்கையை குலைக்க முயல்கிறார். உச்சபட்ச தொகையை அடைவதற்கு சில படிகள் இருக்கும் போது தவறான பதிலை ஜமாலுக்கு குறிப்பால் உணர்த்தி அவனை திசை திருப்ப முயல்கிறார். தேநீர் சப்ளை செய்யும் பையன் சரியான பதில்களாக கூறிக் கொண்டு வருவதை அவரால் சகிக்க முடியவில்லை. எனவேதான் அவனை காவல்துறையினரிடம் ஒப்படைத்து விசாரிக்க சொல்கிறார். நாம் தொலைக்காட்சிகளில் பளபளப்பான அரங்குகளில் ஆர்வமும் பரவசமும் பதட்டமுமாய் பார்க்கும் நிகழ்ச்சிகளின் பின்னே இருக்கும் அரசியலை இந்தக் காட்சிகள் எதிரொலிக்கின்றன.

இந்தப்படத்தின் ஆரம்பக் காட்சி ஒன்றில் வெகுஜன சினிமாவின் இந்திய ரசிகர்களை கிண்டலடித்திருக்கிறார் இயக்குநர். சேரியின் அருகே படப்பிடிப்பிற்கு வரும் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை பார்ப்பதற்கும் அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்கும் அலைபாயும் சிறுவன் ஜமால் அதற்காக மலம் நிறைந்திருக்கும் ஒரு குழியில் விழுவதற்கும் தயங்காமல் உடலெங்கும் மலம் அப்பியிருக்க நடிகரைப் பார்க்க ஓடுகிறான். வெகுஜனப் படங்களின் நடிகர்களை வெறும் நடிகர்களாகப் பார்க்காமல் அவர்களை ஏதோ தங்களை ரட்சிக்க வந்த மெஸைய்யாவைப் போல் ஆராதிக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைப் பார்த்தாலாவது திருந்துவார்களா என்று தெரியவில்லை.

படத்தை மிகுந்த அழகியல் உணர்வுடன் கூடிய ரசனையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கும் Anthony Dod Mantle-ம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

இசை ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கர் விருது பற்றி நாம் மிகவும் அலட்டிக் கொள்கிறோம்தான் என்றாலும் சர்வதேச திரைப்படப் பரப்பில் இந்தியர்களின் மீதான கவனம் குவிய காரணமாக இருக்கிற ரஹ்மான் நிச்சயம் போற்றுதலுக்குரியவர். இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர். இசைக்கருவிகளின் ஒலியை மிகுந்த நவீனத்துடன் பயன்படுத்தி பாடல்களின் கேட்பனுபவத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் சென்றதில் இவரின் பங்கு முக்கியமானது. இந்தப்படத்தின் ஆரம்பப் பாடலும் (O Saya) இறுதிப் பாடலும் (Jai ho) மேற்கத்தியர்களுக்கு வித்தியாசமான அனுபவமாயிருக்கும். (இந்த இரண்டு பாடல்களும் ஆஸ்கர் விருதின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது). அதைத்தவிர அல்கா யாஹ்னிக்கும் இலா அருணும் பாடிய 'ரிங்கா ரிங்கா' பாடலும் குறிப்பிடத்தகுந்ததாய் இருககிறது. ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் அது நிச்சயம் நல்லதொரு தொடக்கமாய் இருக்கும். (இதற்கு முன்னால் இரண்டு இந்தியர்கள் இதை சாதித்திருக்கிறார்கள். 'காந்தி' திரைப்படத்தின் சிறந்த ஆடைவடிவமைப்பிற்காக பானு ஆதித்யாவும் 'வாழ்நாள் சாதனை'க்காக சத்யஜித்ரேவும் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார்கள்.). ஆனால் இதை விடவும் சிறந்த பாடல்களை ரஹ்மான் இந்தியத் திரைப்படங்களில் அளித்திருக்கிறார்.

()

இந்தப்படத்தில் சில நெருடல்களும் இருக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான ஊடகங்களின் ஆரவாரங்களில் இவை எடுபடுமா என்றாலும் அவற்றை சொல்ல வேண்டிய கடமை நமக்குண்டு. எப்படி மேற்கத்தியர்கள் "யாருடனும் படுத்துக் கொள்வார்கள்" என்ற அபத்தமான பிம்பத்தை நாம் நம்புகிறோமோ அப்படியே நம்மைப் பற்றிய பிம்பமும் மேற்கத்தியர்களுக்கு உண்டு. இந்தியா என்பது சாமியார்களும் பாம்பாட்டிகளும் நிறைந்த நாடு என்பதுதான் அது. இன்று தகவல் தொழில்நுட்ப துறையில் பல இந்தியர்கள் சர்வதேச அளவில் உயர்நிலைகளில் இருந்தாலும் (இப்போதும் இதை சொல்லலாமா?) பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் இந்தியர்களைப் பற்றிய பிம்பத்தை மாற்றியமைப்பது மிகக் கடினம்.

நிலைமை இவ்வாறிருக்க சர்வதேச அளவில் கவனம் பெறும் இந்தியப்படங்கள் இந்தியாவின் ஏழ்மையையும் இந்தியக்குடிமகன்கள் வெளிநாட்டினரை ஏமாற்றுவதற்கென்றே பிறந்திருக்கின்ற பிரகஸ்பதிகள் போலவும் சித்தரிப்பது இந்தியாவை தவறான கோணத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ என்கிற நெருடல் ஏற்படுகிறது. எனக்கு தேசபக்தி போன்றவற்றில் நம்பிக்கையில்லையெனினும் நான் வாழ்கின்ற நிலப்பகுதியின் அருகாமை குறித்த நேசம் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

மிருகத்தனமான காவல்துறையினர், குழந்தைகளின் கண்களை குருடாக்கி பிச்சையெடுக்க வைத்து சம்பாதிக்கும் கும்பல், வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் பறிக்கும் சிறுவர்கள், பாலியல் தொழிலுக்கென்றே தயாரிக்கப்பட்டு வளர்க்கப்படும் சிறுமிகள், அழுக்கான சேரி மனிதர்கள், தன் இளைய சகோதரன் விரும்பும் பெண்ணுடன் படுக்க அவனுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கும் பதிமூன்று வயதுச் சிறுவன் ... என்று இந்த படத்தின் மனிதர்கள் பெரும்பாலும் எதிர்மறைக் குணங்களை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள், குரோர்பதி விளையாட்டை நடத்தும் 'பெரிய மனிதர்' உட்பட. இந்தியர்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற பிம்பத்தை இந்தப்படம் சர்வதேச பார்வையாளர்களிடையே ஏற்படுத்துவதில் குறிப்பிட்ட சதவீத அளவில் செயலாற்றக்கூடும். ஒரு திரைப்படத்தைக் கொண்டு ஒரு நாட்டைப் பற்றின பிம்பத்தை விருதுப் படங்களை பார்க்குமளவிற்கு தகுதி கொண்ட பார்வையாளர்கள் ஏற்படுத்திக் கொள்வார்களா என்கிற கேள்வி உள்ளூர எழலாம்தான் என்றாலும் இந்த பிம்பங்கள் ஆழ்மனதில் பதிந்து தேவையான நேரத்தில் எதிரொலிக்கலாம்.

சத்யஜித்ரே தனது முதல் படமான 'பதேர் பாஞ்சாலியில்' ஒரு இந்தியக் கிராமத்தின் வறுமையை காட்டியதாக அப்போது குற்றஞ்சாட்டப்பட்டாலும் அது குரூரமான முறையில் இல்லாமல் மிகுந்த கலையுணர்ச்சியுடனும் மிகைப்படுத்தப்படாத தன்மையுடனும் வெளிப்பட்டிருந்தது. மீரா நாயரின் 'சலாம் பாம்பேவும்' மும்பை சேரிச் சிறுவர்களைப் பற்றின படமாக அமைந்திருந்தது. (இந்தப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களின் பிரிவில் அப்போதைய ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்தது.) இந்தியப் படம் என்றாலே உடனே சேரிகளையும் ஏழ்மையில் உழலும் சிறுவர்களையும் காண்பிக்கும் திட்டத்தோடு வெளிநாட்டு இயக்குநர்கள் யோசிப்பதின் மர்மம் தெரியவில்லை. மூன்றாம் உலக நாடுகளின் நிலைமையை பொதுமைப்படுத்தி யோசிக்கும் இந்தச் சிந்தனை தவிர்க்க வேண்டியது.

ஒரு பக்கம் டைட்டல் பார்க்குகளும் பிட்சா கார்னர்களுமாக இருக்க மறுபுறம் சிக்னலில் நின்று பிச்சையெடுக்கும் அழுக்குச் சிறுவர்களும் இருப்பதை யாரும் மறுக்க முடியாதுதான். இங்கேதான் தடுப்பூசிக்காக போடப்படும் மருந்தின் பாதிப்பில் குழந்தைகள் இறந்து போகின்றனர். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு கண்டுகொள்வதில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவற்றையே பிரதானப்படுத்தி 'இதுதான் இந்தியா' என்று கவனகுவிப்பாக சர்வதேச மேடையில் முன்நிறுத்துவது விரும்பத்தகாதது.

சேரிச் சிறுவர்கள் முதற்கொண்டு போலீஸ் கான்ஸ்டெபிள் வரை நிகழ்த்தும் ஆங்கில உரையாடல்கள் சர்வதேச பார்வையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் காட்சிகளின் நம்பகத்தன்மையோடு ஒப்பிடும் போது மிக மோசமான விளைவைத் தருகிறது. இதற்குப் பதில் அவர்களை இந்தியிலேயே பேசவிட்டு முழுப்படத்திற்கும் ஆங்கில சப்-டைட்டில்களை போட்டிருக்கலாம். அப்படியென்றால் இது இந்தியத் திரைப்படமாயிருக்கும். ஆங்கிலத் திரைப்படமாக இருந்திருக்காது. ரொம்பவும் புத்திசாலிகள்தான்.

()

இந்தப்படத்தைக் குறித்த சர்ச்சைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டன. அமிதாப்பச்சன் இந்தப்படத்தைப் பற்றின தன் குற்றச்சாட்டை வைத்திருந்ததாக செய்திகள் முதலில் வெளியாயின. ஆனால் இதை அமிதாப் பிறகு மறுத்திருக்கிறார். Slumdog என்று படத்தின் பெயரை வைத்ததற்காக சேரிவாழ்குடியிருப்பு சங்கம் ஒன்று அனில்கபூர் மீதும் ரஹ்மான் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.

சிறந்த தொழில்நுட்ப சமாச்சாரங்களைக் கொண்டிருக்கிற இந்தப்படத்தை ஊடகங்கள் ஆரவாரம் செய்கிற அளவிற்கு அப்படியொன்றும் சிறந்த படமாக என்னால் கருத முடியவில்லை.

Photobucket

இந்த ஆரவாரங்களுக்கிடையில் ஆஸ்கரின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இன்னொரு இந்திய பங்களிப்பு பரவலான கவனம் பெறவில்லை. Megan Mylan இயக்கியிருக்கும் 'Smile Pinky' என்கிற ஆவணப்படம் குறும்படங்களுக்கான போட்டிப் பிரிவில் தேர்வு பெற்றுள்ளது. இந்த 39 நிமிடப் படம் உதட்டுப் பிளவு குறைபாட்டைப் பற்றியது.

suresh kannan

24 comments:

shanmughapriyan.sai@gmail.com said...

தங்கள் திரைப் பட விமர்சனம் மிக, மிக நேர்த்தியாக இருந்தது.
ஆனால் அதன் பின்பகுதியில் காணப் படும் இந்திய பிம்பம் குறித்த கவலைகளைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தை அதனுடைய உண்ர்வுகளின் பினனணியொடு ஒன்றித்தான் படத்தை ரசிக்கிறார்களே ஒழிய யாரும் அந்தக் கதாபத்திரத்தின் நாடு,மொழி, கலாசாரம் என்று அறி வுப் பூர்வமான பின்னணியை யோசித்துக் கொண்டிருப்பதில்லை.படம் பார்க்கும் பொது மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றாலே படம் தோற்று விட்டது என்று அர்த்தம்.
ANYWAY YOUR COMMENT ON THE FILM IS DETAILED AND BEAUTIFUL.

shanmughapriyan.sai@gmail.com said...

தங்கள் திரைப் பட விமர்சனம் மிக மிக நேர்த்தியாக இருந்தது.
ஆனால் அதன் பின்பகுதியில் காணப் படும் இன்திய பிம்பம் குரித்த கவலைகளைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தை அதனுடைய உண்ர்வுகளின் பினனணியொடு ஒன்றித்தான் படத்தை ரசிக்கிறார்களே ஒழிய யாரும் அந்தக் கதாபத்திரத்தின் நாடு,மொழி, கலாசாரம் என்று அறி வுப் பூர்வமாக யோசித்துக் கொன்டிருப்பதில்லை.படம் பார்க்கும் பொது மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றாலே படம் தோற்ரு விட்டது என்று அர்த்தம்.
ANYWAY YOUR COMMENT ON THE FILM IS DETAILED AND BEAUTIFUL.

TBCD said...

இப்ப பாருங்க..நீங்களும் "Smile pinky"யயைப் பற்றி ஒரு வரி தான் எழுதியிருக்கீங்க..

கூவத்துநாய் கோடிசுவரனைப் பற்றி பத்தி பத்தியா எழுதுறீங்க..

அப்பறம், வெகுசன ஊடகத்தை குறை சொல்லுறீங்க.. :P

ரமேஷ் வைத்யா said...

அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தின் மீதுமான உங்கள் பார்வையோடு நான் நெருக்கமாக உணர்கிறேன்.
//எனக்கு தேசபக்தி போன்றவற்றில் நம்பிக்கையில்லையெனினும் நான் வாழ்கின்ற நிலப்பகுதியின் அருகாமை குறித்த நேசம் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.//

narsim said...

நல்லா எழுதியிருக்கீங்க..

ஹரிணி அம்மா said...

கோடீஸ்வர சேரி நாய்!!
இப்படி தலைப்பை
தமிழில் வைத்து படம்
எடுத்தால் என்னவாகும்
என்று யோசித்துக்கொண்டு
இருந்தேன்!!!!

தேவா....

ஷங்கர் Shankar said...

Super Ma!

Anonymous said...

சுரேஷ்,

சரியான விதத்தில் அனுகி நேர்மையாக எழுதப்பட்ட விமர்சனம்.

vinoth gowtham said...

நீங்கள் சொல்வது போல இந்தியா நாடு என்றாலே இப்படி தான் என்பதை மற்றவர்கள் மனதில் இப்படம் பதிய வாய்ப்பு நிறையவே உள்ளது..ஏன் இவர்களை போன்றோர் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த சமூகத்தின் அவலங்களை அலசி ஆராய்ந்து படம் எடுக்க கூடாது. கண்டிப்பாக அதே மாதரி எடுத்தாலும் விருது கிடைக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றல் அவர்களை பொறுத்தவரை இந்தியா எப்பொழதுமே ஏழை நாடு தான்.. நம் நாட்டில் இதே மாதரி சமூகமும் உண்டு..ஆனால் அது மட்டுமே இந்தியா அல்ல..இதை அவர்கள் உணர வேண்டும்.. குறிப்பாக இப்படம் உருவாக காரணமாக இருந்த இந்தியாவின் எழ்மையை துகில் உரித்து காட்டுவதை நினைத்து கொண்டு செயல்படும் தேசபக்தி மிகுந்த அயல்நாட்டில் படித்து வளர்ந்து வேலை செய்யும் அறிவுகளஞ்சிய எழுத்தாளர்கள் கொஞ்சம் குறைந்தபட்ச நேர்மையோடு சிந்திக்க வேண்டும்..

பிரகாஷ் said...

வினோத் கௌதம் சொல்வதை அப்படியே வழி மொழிகிறேன். தென் அமெரிக்க, அப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு தனித்தனியே ஒரு லேபில் வைத்திருக்கிறான் வெள்ளைக்காரன். அதை மீறி அவர்களால் சிந்திக்க முடியாது. ஒரு சாம்பிள் இந்த படம். பார்க்க பர பர வென நன்றாக உள்ளது, மற்றபடி ஆஸ்கர் அளவுக்கு ஒன்றும் இல்லை, இசை உட்பட! ரஹ்மான் இந்திய படங்களில் இதை விட மிக அருமையான இசை அனுபவத்தை கொடுத்துள்ளார்.

mathi said...

இந்தியாவில் வெளியாகிற 90% திரைபடங்கள் வளர்ச்சியடைந்த சமுகத்தின்
பிரதிபலிப்பாகதான் இருக்கிறது.
ஏதோ ஒன்றிறன்று படங்கள் அடிதட்டு மக்களையும் கண்டு கொள்கிறதே என்று
சந்தோசமாய் இருக்கிறது.

Krishnan said...

நல்ல பதிவு. ஒரு சின்ன திருத்தம், டைரக்டர் பெயர் Danny Boyle

சுரேஷ் கண்ணன் said...

Krishnan,

Sorry for the error. I corrected it. thank you for pointing out.

Anonymous said...

\\. இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர். \\

What a stupid statement. Could you please list a name of movies copied here during Ilayaraja period of music. I am also ARR fan, but don't degrate others. There are like his ladders MSV Period - Even though he gave good music, Hindi music was dominat during that period. Ilayaraja - Made a big revolution in Tamil music and everybody knows well and Hindi film world started copying from us. ARR - take Tamil music to next step and journey continues..

So inorder to praise ARR, don't say we are copy cat of Hindi music, people will laugh. (somebody may do this kind of here and there. it is applicable to Hindi music also)

r.selvakkumar said...

26/11 தாக்குதலில் விக்டோரியா டெர்மினலில் இறந்து போன மக்களை மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை. மாறாக டாடாக்களின் ஹோட்டல் வாசலில் படுத்துக்கொண்டு மும்பையே ஸ்தம்பித்துவிட்டதாக ஒரு பொய் பிம்பம் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதே வேளையில் விக்டோரியா டெர்மினலில் அடுத்த நாளிலிருந்து மக்கள் தங்கள் வழக்கமான தினசரி அவசரங்களில் நுழைந்துவிட்டிருந்தார்கள். ரயில்கள் ஓடிக்கொண்டுதானிருந்தன.

இது போல இந்தியாவின் இருட்டு மனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அது ஒரு படத்தில் வந்தவுடன் பலருக்கு பார்க்க சகிக்கவில்லை. அடடா நம்மை ஒரு பகிரங்கப்படுத்துகின்றானே என்ற குறுகுறுப்பை அடக்கிக்கொண்டு, தேசபக்தி போர்வையில் மறைந்து கொண்டு ஏன் என் தேசத்தை அவமதிக்கிறாய் என்று கூக்குரலிடுகிறார்கள்.

ஸ்லம்டாக் படத்தில் வரும் அனைத்தும் பொய் என்றால் நானும் சண்டைக்கு வரத்தயார். அது உண்மை என்று நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். அவற்றை எப்படிக் களைவது என்று சிந்திக்கவும் செயலாற்றவும் துணிவதுதான் இது போன்ற படங்களை வரவிடாமல் தடுக்க வழி.

மற்றபடி, நீங்களே குறிப்பிட்டிருப்பது போல இரகுமான் இதைவிட சிறந்த பாடல்களை ஏற்கனவே கொடுத்திருக்கிறார். ஆனால் அது இந்தவருடத்தில் வெளியாகவில்லை, மேலும் இந்தப்படத்தில் வெளியாகவில்லை என்பதால் அதைப் பற்றி பேசிப் பயனில்லை.

Anonymous said...

//இந்தியர்கள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற பிம்பத்தை இந்தப்படம் சர்வதேச பார்வையாளர்களிடையே ஏற்படுத்துவதில் குறிப்பிட்ட சதவீத அளவில் செயலாற்றக்கூடும். //

athuthan unmai... indraya nilayil, india-vil peru nagarangalil ithu sarva saatharnam...

apparum ippothan "satyam" raju namma naatu nalla naraadichitaare... ithaivida padam evvalavo mel.. :-)

Balakumar said...

well writeen...

viji said...

நேர்த்தியான் விமர்சனம். தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

சுரேஷ் கண்ணன் said...

//இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர்//

நண்பருக்கு,

இந்த வரிகள் தெளிவாக எழுதப்படாததின் குறையை இப்போதுதான் உணர்கிறேன். தமிழ் கலாசாரத்துடன் இயைந்த ராஜாவின் இசையை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் இசையை பார்ப்பது போன்ற அபத்தம் எதுவும் இருக்க முடியாது. ரகுமானை விட ராஜாவின் இசையில்தான் அதனின் ஆன்மாவை என்னால் உணர முடிகிறது. எனவே ராஜாவை குறைகூறும் நோக்கம் நிச்சயம் என்னிடம் கிடையாது. நான் சொல்ல வந்தது வேதா, தேவா போன்ற நகல் செய்யும் இசையமைப்பாளர்களைப் பற்றி. தெளிவாக எழுதாமைக்கு வருந்துகிறேன்.

சாணக்கியன் said...

எந்தத் திரைப்படத்திலும் சுரேஷ் கண்ணன் தினசரி எழுந்து பல்தேய்த்து குளித்து அலுவலகம் செல்வதைக் காட்டமாட்டார்கள் ! அவர்களுக்கு வேண்டியது வித்தியாசமான சுவாரசியமான சம்பவங்கள். டைடல் பார்க்குகளும் ஆறுவழிச்சாலைகளும் முன்னேறிய நாட்டினருக்கு சுவாரசியம் இல்லை. பிச்சைக்காரர்களும் சாக்கடைகளும் வெளி நாட்டினரிடம் அதிக கட்டணம் (மாமல்லபுரம் போன்ற இடங்களில் அரசாங்கமே) வசூலிப்பதும்தான் அவர்களது கவனத்தை ஈர்ப்பவை. அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ‘outsourced' படத்தைப் பாருங்கள். அதில் BPO-call center சம்பவங்களை உள்ளடக்கிய வெளி நாட்டுக்காரர் ஒருவரின் அனுபவங்கள் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளன.

/*இந்தி சினிமா பாடல்களிலிருந்து தமக்கான இசையை திருடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் நிலையை தலைகீழாக மாற்றிக் காட்டியவர். */

இதை நானும் வன்மையாக கண்டிக்க நினைத்திருந்தேன். உங்கள் தன்னிலை விளக்கத்தை பின்னர் பார்த்தேன். பதிவைப் படிப்பவர்கள் அனைவரும் பின்னூட்டங்களையும் படிப்பார்கள் என்று சொல்லவியலாது. எனவே பதிவில் இவ்வரிகளை திருத்தி வெளியிடுவதே நீங்கள் செய்யக்கூடிய சரியான செயலாக இருக்கும் என்பது என் கருத்து!.

Anonymous said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

இராம்/Raam said...

அருமையான‌ விமர்சனம்...

ஷாஜி said...

அருமையான‌ விமர்சனம்...

அப்பு சிவா said...

பலர் சொன்னது போல், இந்தியா என்றாலே வெளிநாட்டவர்க்கு அதன் அவல நிலை தான் தெரிகிறது அதையே பெரிதாக காட்டி சம்பாதித்து கொள்கிறார்கள். இதை செய்வது வெளிநாட்டவர் மட்டுமல்ல. நம் நாட்டு சினிமாக்காரர்களும் தான்.

வறுமை, விபச்சாரம், அண்டர்வேல்ட் இது சம்மந்தமாக எடுக்கும் படங்கள் தான் நம் நாட்டு தேசிய விருதை பெறுகின்றன.

இதை மட்டுமே காட்டாமல், அதை களைய என்ன வழி என்றும் காட்டினால் அது ஒரு நல்ல விஷயமாக இருக்கும்.