Wednesday, January 07, 2009

கெளதம் மேனனின் auto biography

அனுபவமில்லாமல் காமா சோமாவென்று ஏதோவொரு திரைப்படத்தை உருவாக்குபவர்களைப் பற்றி எம்.ஆர்.ராதா ஒரு முறை சொன்னார்: "ஆமாடா...! கொஞ்சம் பணம் வெச்சுருக்கறவன் தன்ன போட்டோ எடுத்து பாக்கெட்ல வெச்சுக்கறான். நெறைய வெச்சுருக்கறவன் சினிமாப்படம் எடுத்து ரீலா வுட்றான்".

இயக்குநர் கெளதமும் இதே போல் அழகிரியின் 'கோடியை' வைத்து தன்னுடைய சுயசரிதையை திரைப்படமாக 'தோரணம் ஆயிரம்' கட்டியிருக்கிறார் போலிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல்களில் விஸ்கி வாசனையுடன் 'செய்யப்படாமல்' திரைப்படம் என்பது யதார்த்தமான அனுபவங்களிலிருந்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் அது வெறுமனே நிகழ்வுகளாக அல்லாமல் ஒரு வலுவான கதைத்துளியை சுவாரசியமான திரைக்கதையில் கலந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால் கெளதமின் சமீபத்திய திரைப்படம் நிகழ்வுகளின் தோரணங்களாக மாத்திரமே அமைந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது.

Photobucket

தமிழ்ச்சினிமாக்களில் அதிகமாக கவனிக்கப்படாத தந்தை-மகன் உலகத்தை பிரதானப்படுத்துவதுதான் கெளதமின் நோக்கம் எனில் அவர் தோற்றுப் போயிருக்கிறார் என்றே சொல்வேன். நாடகத்தனமாக இருந்தாலும் சேரனின் 'தவமாய் தவமிருந்து' திரைப்படம் இந்த வகையில் முந்தியிருக்கிறது எனலாம். அதுவும் 'வாரணம் ஆயிரம்' போன்றே தந்தையின் மரணத்தின் வாசனையுடன் தொடங்கி சேரனின் நினைவலைகள் மூலமாக பார்வையாளர்களுக்கு எல்லா நிகழ்வுகளும் விவரிக்கப்படுகின்றன. பரதனின்... மன்னிக்கவும்.. கமலின் 'தேவர் மகனிலும்' ஒரளவிற்கு இது சிறப்பாக வெளிப்பட்டிருப்பதை காண முடியும்.

சூர்யாவின் சிக்ஸ்-பேக், சமீரா ரெட்டியின் இளமை, ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தவிர ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பட்டது போன்ற மேலோட்ட பூச்சுக் காரணிகளே இந்தப்படத்தைப் பற்றி பார்வையாளனிடையே ஓர் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன. ஆழமான நோக்கில் பார்த்தால் இது அவனுக்கோர் ஏமாற்றத்தையே அளித்திருப்பதை உணர முடியும்.

()

'மின்னலே' தொடங்கி கெளதமின் படங்களில் தொடர்ச்சியாக வந்து கிளிஷேவாகவே மாறிவிட்ட சமாச்சாரங்கள் இதிலும் உள்ளன. நாயகியை கண்டவுடன் நாயகன் கொள்கிற instant காதல், நாயகனின் mind voice மூலமாக கதை கூறுதல், நாயகி செத்துப் போதல், மறுகாதல்... என்று இதைச் சொல்லாம். [மாறுதலான முயற்சியாக derailed நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த 'பச்சைக்கிளி முத்துச்சரம்' ஏன் அதிகமாக பேசப்படவில்லை என்று தெரியவில்லை]. இந்த கிளிஷேக்களிலிருந்து கெளதம் வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. படத்தின் நிகழ்வுகள் பல நம்பகத்தன்மையை இழந்து பல்லை இளிக்கின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலத்தில் உரையாடுவது, ஆங்கிலத்தில் கடிதம் எழுதும் தந்தை, ரயிலில் சந்தித்த காதலிக்காக சூர்யா அமெரிக்கா வரை செல்வது, நடுவில் பொறுப்பு வந்து சொந்தவீட்டை கட்டுவது, கடத்தப்பட்ட சிறுவனை சினிமா பாணியில் மீட்பது, ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் போன்றவை அனைத்துமே 'நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தமிழ் சினிமா' என்பதை மீண்டும் மீண்டும் பார்வையாளனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

இவற்றையும் மீறி சூர்யா-சமீரா ரெட்டி சம்பந்தப்பட்ட முதல் சந்திப்புக் காட்சிகள் மிக இயல்பாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும் யாவருமே தங்கள் பதின்ம வயது நினைவுகளை மிக நெருக்கமாக மீட்டுக் கொள்ள முடியும். அவளைப் பார்த்த கணத்திலேயே பிரமிப்படைந்து 'இதோ இவள்தான் என் மனைவி' என்று உள்ளுணர்வு தீர்மானிப்பது அந்த வயதுக்குரியே அபத்தங்களில் ஒன்று. [கண்டவுடனே காதல் என்கிற சமாச்சாரம் பெண்களுக்கும் உண்டென்றாலும் இதை சட்டென்று வெளிப்படுத்த விடாதபடி அவர்களின் இயல்பான ஜாக்கிரதை உணர்ச்சி தடுக்கிறது.] இந்தப் பதட்டத்தை சூர்யா மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். [இதற்கு மாறாக தந்தை சூர்யாவும் 'இளமைப்படுத்தப்பட்ட' சிம்ரன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் எரிச்சலையே ஏற்படுத்துகின்றன]. படத்தின் இறுதிக்காட்சியில் பழைய திரைப்படங்களின் பாணியில் படத்தின் தலைப்பு செயற்கையாக வருமாறு வசனம் அமைத்திருப்பது ஒரு காமெடி.

இன்னும் எத்தனை படங்களில்தான் பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் என்றாலே அவர்கள் இசுலாமியர்கள் என்பதை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்களோ, தெரியவில்லை. பழைய நம்பியார் திரைப்படங்களில் வில்லன்களின் பெயர் 'கபாலி, மாயாண்டி' போன்றவைகளாக இருக்கும். அவை கூட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த இந்துக்களின் பெயர்கள்தான் என்பதையும் கவனிக்க வேண்டும். அது இன்று வேறொரு பரிணாமத்தில் திசை திரும்பியிருக்கிறது. 'இசுலாமியத் தீவிரவாதிகள்' என்பதே ஏதோ அங்கீகரிக்கப்பட்ட வார்த்தை போல் மாறிவிட்ட சூழ்நிலையில் சிறுபான்மையினரின் சிக்கல்களை கவனத்தில் கொண்டு தம்முடைய ஆழ்மனதில் பதிந்திருக்கும் சிந்தனைகளை உதறிவிட்டு பொறுப்புடன் காட்சிகளை அமைக்க வேண்டும் என்பது இன்றைய திரைப்பட இயக்குநர்கள் கற்க வேண்டிய பாடங்களில் ஒன்று. பெரும்பான்மையான படங்களில் இவ்வாறாக சிறுபான்மைமயினர் சித்தரிக்கப்படுவதால்தான் இதை சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

()

இப்படியொரு சொதப்பலான படத்திற்கு சூர்யா அளித்திருக்கும் வீணாகிப் போன உழைப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பதின்ம வயது இளைஞன் தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டிருப்பதும் தந்தை -மகன் ஆகிய வேடங்களை குறிப்பிடும் அளவிலான உடல் மொழியுடன் வித்தியாசப்படுத்தியிருப்பதும் பாராட்ட வைக்கிறது. இயக்குநரின் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளும், தன்னுடைய பாத்திரங்களின் இயல்பிற்காக மிகவும் மெனக்கெட்டிருப்பதுமான நடிகர்களில் சூர்யாவும் முக்கியமானவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இயக்குநர் இத்தனை உழைப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் முன்னமே ஒரு பதிவில் குறிப்பிட்டது போன்று தந்தை பாத்திரத்திற்கு வேறொரு திறமையான நடிகரை பயன்படுத்தியிருந்தால் திரைப்படத்தின் உருவாக்கம் இன்னும் சிறப்பாக வந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு இடையூறாக நிற்கும் பாடல்களே இந்தப் படத்திற்கு பிரதான சுவாரசிய காரணியாய் அமைந்துவிட்டது. ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசையமைப்புடன் அமைந்துள்ள பாடல்கள் இல்லாவிட்டால் இந்தத் திரைப்படம் இன்னும் சீக்கிரமாகவே திரையரங்குகளை விட்டு ஓடியிருக்கும். பீய்ச்சியடிக்கப்பட்ட ஷாம்பெயின் போல உற்சாகமான பாடல்கள் திரைப்படங்களின் நடுவே பொங்கி வழிந்து கொண்டேயிருக்கின்றன. குறிப்பாக 'முன்தினம் பார்த்தேனே' பாடலை நான் இதுவரை குறைந்தது ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன். நரேஷ் ஐயரின் குரல் பாறை இடுக்குகளின் வழியே வழிந்தோடும் நதியலை போல எதிர்பாராத இடங்களில் திரும்பி திரும்பி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டின் சிறந்த திரைப்பட ஆல்பமாக இந்தப்படத்தின் பாடல்களைச் சொல்லலாம். பாடலாசிரியர் தாமரையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வாத்திய சப்தங்களுக்கிடையே காணமாற் போய் பல வருடங்களாகி விட்ட பாடல்வரிகள், 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்று தெளிவாக கவித்துவத்துடன் ஒலிக்கும் போது கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. டோரா புஜ்ஜிக்கு அடுத்தபடியான என்னுடைய மகளின் பிடித்தமானவைகளின் பட்டியலில் இருப்பது 'அஞ்சலை' பாட்டு.

கடத்தப்பட்ட பெண்ணை ராணுவம் மீட்டும் இறுதிக் காட்சிகளின் செழுமை, பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்ப்படம்தானா என்கிற மயக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு ரத்னவேலுவின் காமிரா திறமையாக பதிந்திருக்கிறது. இரண்டு சூர்யாக்களும் வரும் காட்சிகளில் எந்தவிதமான தொழில்நுட்ப பிசிறும் தெரியாத அளவிற்கு முன்கூட்டியே காட்சிகளை மிகுந்த தீர்மானத்துடன் யோசித்திருப்பது பாராட்ட வைக்கிறது.

()

எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் போன்ற மசாலாப்பட மன்னர்கள் பின்னியெடுத்துக் கொண்டு தமிழ்ப்படங்களின் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் பார்வையாளர்களை அதிலிருந்த மீட்டெடுக்கும் விதமாக திரைக்கதை உருவாக்கத்திலும் காட்சியமைப்பிலும் ஒரு புதிய காற்று போல் நுழைந்து அந்தக் கலாசாரத்தையே ஒரு காலத்தில் மாற்றியமைத்தார் மணிரத்னம். விக்ரமன்களும், ரவிகுமார்களும் மீண்டும் மாசுபடுத்த முனையும் வேளையில் மணியின் நீட்சியாக வந்தவர் கெளதம் என்றே நான் கருதுகிறேன். வெறும் தொழில்நுட்பமும் சந்தைப்படுத்தும் உத்திகளுக்காக செய்யப்படும் கோணங்கித்தனங்களுமே வெற்றிப் படத்தை உருவாக்க முடியாது. உலக சினிமாவின் தாக்கத்தில் பார்வையாளர்கள் விழிப்பாக இருக்கும் இவ்வேளையில் அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதை தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
suresh kannan

15 comments:

உண்மைத்தமிழன் said...

//வெறும் தொழில்நுட்பமும் சந்தைப்படுத்தும் உத்திகளுக்காக செய்யப்படும் கோணங்கித்தனங்களுமே வெற்றிப் படத்தை உருவாக்க முடியாது. உலக சினிமாவின் தாக்கத்தில் பார்வையாளர்கள் விழிப்பாக இருக்கும் இவ்வேளையில் அவர்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்பதை தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.//

இதுதான் ஹைலைட்.

'நச்' என்று சொல்லியிருக்கிறீர்கள் சுரேஷ்..

Anonymous said...

Forget Surya looking like a million bucks - he actually looks like Gautam Menon; that is how self-indulgent this movie gets. The ode-to-everyday-dad is about the son and the Dad that we never really come to know or relate to, barring his endless smoking and deep love for his wife, Simran. It’s strange that the son goes ga-ga over dad, while we’re supposed to empathize with the no good son. Still, the episode with Sameera is vintage late 80s Maniratnam material. Harris’ music towers above the meandering screenplay, while the laboriously created 80s set pieces are meticulously conjured, but as cardboard’ish as the emotions the film holds, complete with seemingly-natural ‘kiddo’ and ‘sonna’ callouts. The film drags mercilessly from one non-event to another and even the so-called events forced into the screenplay are, well…forced! Despite the assorted stages of body packs and facial hair, Surya’s characters are so poorly etched that he almost seems like a misfit in this grueling film. But, the worst joke here was forcing the film’s title right in the end, with an absurd, pointless explanation! I wish Gautam looks up to his family members in private and not exhaust 3 hours of his audiences’ time.

வஜ்ரா said...

//
இன்னும் எத்தனை படங்களில்தான் பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் என்றாலே அவர்கள் இசுலாமியர்கள் என்பதை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்களோ, தெரியவில்லை. பழைய நம்பியார் திரைப்படங்களில் வில்லன்களின் பெயர் 'கபாலி, மாயாண்டி' போன்றவைகளாக இருக்கும். அவை கூட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த இந்துக்களின் பெயர்கள்தான் என்பதையும் கவனிக்க வேண்டும். அது இன்று வேறொரு பரிணாமத்தில் திசை திரும்பியிருக்கிறது. 'இசுலாமியத் தீவிரவாதிகள்' என்பதே ஏதோ அங்கீகரிக்கப்பட்ட வார்த்தை போல் மாறிவிட்ட சூழ்நிலையில் சிறுபான்மையினரின் சிக்கல்களை கவனத்தில் கொண்டு தம்முடைய ஆழ்மனதில் பதிந்திருக்கும் சிந்தனைகளை உதறிவிட்டு பொறுப்புடன் காட்சிகளை அமைக்க வேண்டும் என்பது இன்றைய திரைப்பட இயக்குநர்கள் கற்க வேண்டிய பாடங்களில் ஒன்று. பெரும்பான்மையான படங்களில் இவ்வாறாக சிறுபான்மைமயினர் சித்தரிக்கப்படுவதால்தான் இதை சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
//

இது தேவையில்லாத கமெண்ட். பழைய தில்லியின் பல பகுதிகளில் பீட்சா டெலிவரி கூட கொடுக்க விரும்ப மாட்டார்கள் பீட்சா டெலிவரி செய்யும் காலேஜ் பையன்கள். ஏன் என்று தெரியாமல் இப்படி செகுலர்த்தனமாக நடுநிலமை எடுத்துக் கொள்ளுதல் முறையே அல்ல.

பழைய படங்களில் கபாலி என்றால் கபாலீஸ்வரன் பெயரைத்தானே அப்படிச் சொன்னார்கள். கபாலீஸ்வரன் என்று முற்பட்ட சமூகத்தில் பெயர் வைப்பதில்லையா ? ஏன் தேவையில்லாமல் குழப்பமடைகிறீர்கள் ?

Anonymous said...

//
இன்னும் எத்தனை படங்களில்தான் பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள் என்றாலே அவர்கள் இசுலாமியர்கள் என்பதை திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்களோ, தெரியவில்லை//
அது சரி...!! பாகிஸ்தான்காரன் எத்தனை தடவை சுட்டாலும் வாங்கும் முட்டாள்கள் நாம்...! ஏன்? எல்லாம் எல்லாத்தையும் பெரிது படுத்துகிறிர்கள்...!! அண்ணனுக்கு ரெண்டு குல்லா குடுங்க்கப்பா (வாழ்க்கையில் ஒரு தடவையாவது கல்கத்தா இந்து கிட பேசி பாருங்கள் இது போல...!!)

Anonymous said...

சுரேஷ் உங்களுக்கும் கௌதம்கும் என்ன பிரச்சனை இப்படி போட்டு தாக்குறேங்க...
any this is your point of view.......

பரிசல்காரன் said...

நல்ல விமர்சனம். ஒரு படத்தை எப்படி இப்படி பல கோணங்களில் பார்க்க முடிகிறது உங்களால் என்று பிரமிப்பாய் இருக்கிறது!

நன்றி!

ers said...

நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.

http://india.nellaitamil.com/

மயிலாடுதுறை சிவா said...

விமர்சனம் அருமை வழக்கம் போல்!

ஆனால் சாரு இந்த படத்தை ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து இருக்கிறாரே? பார்த்தீர்களா?

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

//பெரும்பான்மையான படங்களில் இவ்வாறாக சிறுபான்மைமயினர் சித்தரிக்கப்படுவதால்தான் இதை சொல்ல வேண்டியதாயிருக்கிறது//

குண்டு வைக்கும் சாமியாரிணியை எல்லாம் சினிமாவில் எப்போ காட்டுவாங்களோ

SPIDEY said...

ENGLISH படத்தில கூட இந்த அளவுக்கு ENGLISH பேசிப் பாத்தது இல்ல. கஜினில அப்பர் கிளாஸ் அமீர் கான் பேசற அளவுக்கு கூட இந்த படத்தில இருக்கிறவங்க தங்கள் சொந்த மொழியில் பேசுவதில்லை. அட அத விடுங்க சார் TITLE CARD ல பட பெயர் மட்டும் தான் தமிழ்ல வருது மத்தது எல்லாம் ENGLISH தான். இதை எல்லாம் பாத்தா FORIEGN FILM FESTIVALல AWARD வாங்கணும் அப்படிங்க்ரதுக்க்காகவே எடுத்த படம் மாதிரி இருக்குது. டப்பிங் பண்ணி RE-RELEASE பண்ணா இன்னும் கொஞ்ச நாள் ஓடும் அப்படின்னு நினைக்கிறேன்

SPIDEY said...

//wish Gautam looks up to his family members in private and not exhaust 3 hours of his audiences’ time.//

HA HA HA HA

அத்திரி said...

மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமான விமர்சனம்..

Anonymous said...

//ஏன் என்று தெரியாமல் இப்படி செகுலர்த்தனமாக நடுநிலமை எடுத்துக் கொள்ளுதல் முறையே அல்ல.//

வேண்டாம் சுரேஷ், மதத்தை பற்றி எந்தப் விவாதமும் இங்கு எடுபடாது. இவர்கள் மதத்தை பின்பற்றுபவர்கள் அல்ல, மதம்பிடித்தவர்கள். இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல. நான் நம்புகிறேன் உண்மையான எந்த ஆன்மீகவாதியும் கடவுளை விவாத பொருளாக்கமாட்டான்.

சாணக்கியன் said...

முன்பே வேறொரு பதிவில் இணைப்பு கொடுத்திருந்தேன் என்னுடைய விமர்சனத்திற்கு...

http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html

படித்தீர்களா என்று தெரியவில்லை... சற்றே வித்தியாசமாக படத்திலுள்ள நல்ல விசயங்களை தூக்கி எழுதியிருந்தேன். இல்லை, ‘ஒரு பீர் அடித்த ஏகாந்த மன நிலை’-யில் படம் பார்த்ததால் பிடித்ததா என்று தெரியவில்லை :-)

karthi said...

sir,

started to read your posts very recently.
if time permits, check the below link.
http://skpnathan.blogspot.com/2008/11/thought-process.html